Wednesday, November 2, 2016

No shave November - ஏன் ஃபாலோ பண்றோம் தெரியுமா?


வம்பர் மாதம்னு சொன்னாலே நமக்கு தீபாவளி நினைவுக்கு வரும், சாயங்காலம் ஆனாலே மழை பெய்யும்ங்கிறதுக்கு அடுத்தபடியா நினைவுக்கு வர்ற விஷயம் 'நோ ஷேவ் நவம்பர்'. ஆனால் இதை ஏன் ஆரம்பிச்சாய்ங்க.. எதுக்கு ஆரம்பிச்சாய்ங்கனு புரியாமலேயே பல நவம்பர்களைக் கடந்திருப்போம். இப்போவாச்சும் தெரிஞ்சிக்கலாம் வாங்க...
'நோ ஷேவ் நவம்பர்' ன்னா என்ன?
உலகம் முழுவதிலும் இருக்கும் ஆண்கள் தங்கள் குழுக்களுக்குள் முடிவு செய்து இந்த நவம்பர் மாதம் முழுக்க ஷேவிங் ரேஸரைக் கையில் தொடாமல் இருக்கவேண்டும். சிலர் இதை ஒரு போட்டியாகவும் நடத்தி, இந்த மாதத்தின் முடிவில் தங்கள் குழுவில் யாருக்கு அதிகமாக தாடி வளர்ந்திருக்கிறது எனப் பார்த்து வெற்றியாளரை முடிவு செய்வார்கள்.
எங்கே தொடங்கியது இந்தப் பழக்கம்?
சிகாகோவில் வசித்த சகோதரர்கள் தங்களின் தந்தை 2009-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்ததையொட்டி இந்த ஷேவ் செய்யாமல் இருக்கும் விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்களாம். அப்போது முதல் மெதுவாகப் பரவ ஆரம்பித்த இந்த ட்ரெண்ட் இப்போது பல நாடுகளிலும் காரணம் தெரியாமலேயே பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிறகு இதற்கென ஒரு மாதத்தையும் முடிவு செய்து கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்.
எதற்காகத் தொடங்கப்பட்டது?
பலரும் நினைப்பதைப் போல 'நோ ஷேவ் நவம்பர்' என்பது ஆண்கள் ஸ்டைலாக தாடி வளர்த்து ரசித்துக்கொள்வதற்காகவும், கவன ஈர்ப்பிற்காகவும் அல்ல. ப்ரோஸ்டேட் கேன்சர் குறித்த விழிப்புஉணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகத்தானாம். இதன் குறிக்கோள், பொதுவாக ஆண்கள் கட்டிங், ஷேவிங்குக்கு ஒருமாதம் முழுக்கப் பயன்படுத்தும் தொகையைச் சேமித்துவைத்துப் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களுக்கு நன்கொடையாக அளிப்பதற்குத்தான். புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் சிறிதுசிறிதாக முடியை இழக்கத் தொடங்குவார்கள். அதைக் கனெக்ட் செய்யும்விதமாகவே புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக ஷேவ் செய்யாமல், முடி வெட்டாமல் இருப்பது கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், பலர் இதன் உண்மையான நோக்கத்தை அறியாமல் விளையாட்டாக ஹேஷ்டேக்கோடு போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து மகிழ்கிறார்கள்.
நாம் என்ன செய்யலாம்?
'நோ ஷேவ் நவம்பர்' யுத்திக்காக தாடியோடு இருக்கும் போட்டோவை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றி லைக்ஸ் வருதான்னு குத்தவெச்சு எண்ணிக் கொண்டிருக்காமல், நம்மால் முடிந்தவரை பலவகைப் புற்றுநோய்களைப் பற்றிப் பொதுமக்களிடத்தில் விழிப்புஉணர்வையும் ஏற்படுத்தலாம்.

Thursday, March 31, 2016

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்.


மழை வந்தபோதும்.. வெயில் அடித்த போதும்.. புயல் வீசியபோதும்... மறக்க முடியாத நபர் ரமணன்!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர் ரமணன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்.
வானிலை என்றால் தமிழர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் ரமணன் என்றால் மிகையல்ல, ஒருசிலரைத் தவிர பெரும்பாலும் திரைப் பிரபலங்களைப் போல, அரசு ஊழியர்கள் யாரும் ஊடகங்களிலோ, மக்கள் மத்தியிலோ பிரபலமடைவது இல்லை. ஆனால், அவர்களில் இருந்து விதிவிலக்காக மழை என்றாலும், வெயில் என்றாலும் உடனே மக்களின் நினைவுக்கு வருபவராக, மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இந்த ரமணன்.
பள்ளி கல்லூரிகளில் அதிகம் கிண்டலுக்கு ஆளனவரும் இவர்தான். ஆனால் சென்னையை புரட்டி போட்ட வெள்ளத்தை முன்கூட்டியே சரியா கணித்து எச்சரிக்கை விடுத்தவரும் ரமணன் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான பணியை வானிலை மையத்துக்கு வழங்கி அடுத்தகட்டமாக மேலும் சிறப்பான பணிகள் செய்ய காத்திருக்கும் ரமணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

Thursday, March 24, 2016

ஹோலி பண்டிகையின் வரலாறு


ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து, நிறைந்த மனத்துடன் இதை கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.

கிருஷ்ண பகவான் தன் குழந்தை பருவத்திலும், பால்ய பருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.

ஹோலி பண்டிகையின் வரலாறு 

இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன், அதை எதிர்த்தான். பிரகலாதன் மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். 

ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.

வண்ணமயமான ஹோலி  நல் வாழ்த்துகள்

Tuesday, March 8, 2016

மகளிர் தின வாழ்த்துகள்...


பெண்!!!

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்துஉடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.
“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.

“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.
“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.

அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.

“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.
ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.

“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.