Tuesday, September 22, 2015

நெடும் தொடர்கள் சொல்லும் செய்தியென்ன....

நெடும் தொடர்கள் சொல்லும் செய்தியென்ன....என்கிற கேள்விகளுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்த பதில்கள் இவை.

1).அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது?
2).அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது?
3).மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது?
4).மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது?
5).பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு
செய்வது?
6).எந்த தவறை எப்படி மறைப்பது?
7).அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது?
8).மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது?
9).கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது?
10).மனைவியை எப்படி அடிமை படுத்துவது?
11). எப்படி பழிக்குபழி வாங்கலாம்?
12).ஆபாசமாக பேசுவது எப்படி?

எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய் கொலை, கொள்ளை,
ஏமாற்றம், அபகரிப்பு, ஆள் கடத்தல்,வன்முறை, வஞ்சகம்,
கள்ள காதல் ,விபச்சாரம்,அநியாயம்,அக்கிரமம்,பொய்,திருட்டு என
இப்படி எல்லாவற்றையும் ஈவிரக்கமில்லாமல் அழகாகவும் , தெளிவாகவும் காட்சிப்படுத்தலோடு சொல்லி அதை கற்றும் தருவதுதான் பெரும்பாலான நெடும் தொடர்களின் மறைமுக நோக்கமாக தெரிகிறது.

காலையில் இருந்து இரவு 11 மணிவரை இந்த நெடும் தொடர்களுக்கு அடிமையாக பலர் இருக்கிறார்கள் குறிப்பாக "பெண்கள்" குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு 70 % காரணம் இவை என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள் .

பொழுதுபோக்கு என்ற பெயரில் "எதை"வேண்டுமானாலும் பார்ப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்பதுதான் உண்மை!

நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும்தான் ஒரு சிறந்த சமூகத்திற்கான அடையாளம்.

தீமைகளையும்,பாவங்களையும் ரசிப்புக்குரியவையாக நாம் பார்ப்பது அழிவுக்கே வழி வகுக்கும். எனவே நெடும்தொடர் தயாரிப்பாளர்களும், ஒளி பரப்பாளர்களும் சமூகப் பிரக்ஞையோடு சிந்தித்து ஆரோக்கியமான சமூகத்தை கட்டிஎழுப்பவல்ல நெடும் தொடர்களை தயாரித்து ஒளிபரப்புவதே நல்ல மானுடத்திற்கு அழகாகும்.

மக்களும் இதனால் வரும் தீமைகளை புரிந்து கொண்டு இது போன்ற நெடும்தொடர்களைப் புறக்கணித்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும்.
சிறந்த சமூகத்தை உருவாக்குவதே நல்ல மனிதனுக்கு அழகாகும்..

மனைவி அமைவதெல்லாம்...


லகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.

ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான். 
அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும் கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே 
அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்? 
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம். இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! 

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு”

என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.
நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர் 
மனைவியின் பிரிவைத் தாளாமல் 

"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" 

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.
அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா..!!
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். 

அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.  

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில்.

Wednesday, September 16, 2015

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்...


ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். 

ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .

வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது.

ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். 
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். 

ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான். 

உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும். 

சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான். 

களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 

இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். 

கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும். 
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.

ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும். 
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்.

வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும். 

அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான். 

மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.

கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.

பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை. 

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

Friday, September 11, 2015

சிகாகோவில் விவேகானந்தர் எழுச்சியூட்டும் உரை நிகழ்த்திய தினம் இன்று


அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் எழுச்சியூட்டும் உரையை விவேகானந்தர்  இன்று தான் 1893-ல் நிகழ்த்தினார். வழிகாட்டும் அவரின் உன்னத வாசகங்கள் இவை

* வாய்மை எந்தச் சமூகத்துக்கும் மரியாதை செலுத்துவதில்லை. வாய்மையைச் சமூகம் மதிக்க வேண்டும். இல்லையேல் அந்தச் சமூகம் அழிந்துபோகும்.

* இளம் நண்பர்களே! வலிமையோடு இருங்கள் என்பதே என் அறிவுரை. நீங்கள் பகவத் கீதை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும். இவை தைரியமிகுந்த வார்த்தைகள்; இருந்தாலும் உங்களை நேசிப்பதால் இதனைச் சொல்கிறேன். ... தோள்களின் வலிமை கூட்டுங்கள். தசைகளை மேலும் உறுதிப்படுத்துங்கள். 

* முரடர்களை எதிர்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கைக்கான பாடம். கடுமையனவற்றைத் தீரத்தோடு எதிர்கொள்ளுங்கள். குரங்குகளைப் போல வாழ்க்கையின் துயரங்கள் நாம் அஞ்சி ஓடாத பொழுது பின்னோக்கி செல்லும். 

* ஒரு சிந்தனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள். அதைப்பற்றிக் கனவு காணுங்கள், அதனோடு வாழுங்கள். உங்கள் மூளை, தசை,நரம்பு, எல்லாப் பாகங்களும் அந்தச் சிந்தனையால் நிரம்பி வழியட்டும். இதுவே வெற்றிக்கான வழி. 

* உயர்ந்த பொருட்கள் உங்கள் காலடியில் உள்ளன, ஏனெனில், நீங்கள் தேவலோக நட்சத்திரங்கள். எல்லாம் உங்கள் காலடியில் உள்ளன. உங்களில் கைகளில் அள்ளி விண்மீன்களை நீங்கள் விரும்பினால் விழுங்க முடியும். இதுவே உங்களின் உண்மையான பண்பு. வலிமையோடு இருங்கள். எல்லா மூடநம்பிக்கைகளையும் கடந்து விடுதலையுற்று இருங்கள். 

* நாம் 'என்னைத் தீண்டாதே' என்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய மதம் சமையலறையில் இருக்கிறது. நம்முடைய கடவுள் சமையல் சட்டியில் இருக்கிறார், நம்முடைய மதம்,'நான் புனிதமானவன், என்னைத் தீண்டாதே' என்பதாக இருக்கிறது. இது இன்னுமொரு நூறு ஆண்டுகாலம் தொடர்ந்தால் நாம் எல்லாரும் பைத்தியக்கார விடுதியில் தான் இருப்போம். 

* எல்லா விரிவடைதலும் வாழ்க்கை. சுருங்கிக்கொள்ளுவது எல்லாம் மரணம். எல்லா அன்பும் விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிக்கொள்ளுதல். இதுவே வாழ்க்கையின் ஒரே சட்டமாகும். அன்பு செய்கிறவர் வாழ்கிறார், சுயநலத்தோடு இருப்பவன் இறக்கிறான். அன்புக்காக அன்பு செய்யுங்கள், அதுவே வாழ்க்கையின் ஒரே சட்டம் என்பதற்காக அன்பு செய்யுங்கள். சுவாசிப்பதற்காக அன்பு செய்யுங்கள். இதுவே சுயநலமற்ற அன்பு, செயல் அனைத்துக்குமான ரகசியமாகும். 

* ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை, செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை, மறந்து விடாதீர்கள். அவர்களும் ரத்தமமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள். வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். பெருமையோடு, 'நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!' என்று ஆராவரியுங்கள். 

* நீங்கள் சுயநலம் அற்றவரா என்பதே இப்போதைய கேள்வி. ஆமாம் என்றால் எந்த ஒரு மதப்புத்தகத்தையும் படிக்காமலேயே, எந்த ஒரு தேவாலயத்திற்குள்ளோ கோயிலுக்குள்ளோ போகாமலேயே நீங்கள் முழுமையானவர் ஆகிறீர்கள். 

* கோடிக்கணக்கான மக்கள் பசியிலும், அறியாமையிலும் உழல்கிற பொழுது அவர்களின் நசிவில் கற்றுவிட்டு அவர்களின் குறைகளுக்குச் செவிமடுக்காமல் இருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் தேசத்துரோகியாகவே கருதுவேன். 

* வெற்றி பெற உங்களுக்கு அளவில்லாத உத்வேகமும், முனைப்பும் இருக்க வேண்டும். "நான் பெருங்கடலைப் பருகுவேன்' என்று உத்வேகம் மிகுந்த ஆன்மா கூறவேண்டும்; "என் விருப்பத்தில் மலைகள் பொடிப்பொடியாகும்!' அப்படியொரு ஆற்றலோடு இருங்கள்; அப்படியொரு முனைப்போடு முன்னேறுங்கள். ஓயாமல் உழையுங்கள், உங்களின் இலக்கை அடைவீர்கள்.


* பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போராட்டங்களை எதிர்கொள்ள உதவாத கல்வி, அவர்களின் பண்பின் ஆற்றலை வெளிப்படுத்தாத கல்வி, வாரிக்கொடுக்கும் தயாள உள்ளத்தைத் தராத கல்வி, சிங்கத்தின் தீரத்தை தராத கல்வி - கல்வி எனப்படும் தகுதியுடையது அல்ல. தன்னுடைய சொந்தக் கால்களில் ஒருவன் நிற்கச் செய்வதே உண்மையான கல்வியாகும். 

* யாரையும் நிந்தனை செய்யாதீர்கள். உங்களால் முடியுமென்றால் உதவிக்கரம் நீட்டுங்கள். இல்லை என்றால், கைகளைக் கூப்பி உங்கள் சகோதரர்களை வாழ்த்தி அவர்களின் பாதையில் அவர்களைச் செல்ல அனுமதியுங்கள்.

* கோழையும், மூடனுமே 'இது என்னுடைய விதி' என நொந்து கொள்வார்கள். ஆனால், வலிமை மிகுந்தவன் எழுந்து நின்று 'என் விதியை நான் தீர்மானிப்பேன்' என்பான். வயதாகிக்கொண்டிருப்பவர்கள் தான் விதியைப் பற்றிப் பேசுவார்கள். இளைஞர்கள் ஜோதிடத்தை நோக்கி செல்வதில்லை. 

* கண்மூடித்தனமாக எதையும் நம்புவது ஆன்மாவை அழிப்பதாகும். நீங்கள் நாத்திகவாதியாகக் கூட இருங்கள், ஆனால், எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். 

Wednesday, August 19, 2015

நிஜத்தின் பிரதிபலிப்பு !



புகைப்படம் என்பது வெறும் படம் அல்ல. அது ஒரு 'கலை'. புகைப்படம் நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது.

‘ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு செய்தியை ஒரு புகைப்படம் சொல்லும்’ என்ற வாசகமே புகைப்படத்தின் சிறப்பை சொல்லும்.

புகைப்‘படம்’ பிடிக்காதவர்களே இன்று கிடையாது. ஒரு காலத்தில் யாராவது படம் எடுக்க வருகிறார்கள் என்றால் மக்கள் ஓட்டம் பிடித்த காலம் உண்டு. போட்டோ பிடித்தால் ஆயள் குறைந்துவிடும் என்ற ‘நம்பிக்கையும்’ இருந்தது. அதே நேரத்தில் 3 புகைப்பட பிரதிகள் தருவதற்கு முன்பு தரும் ’புரூப் காப்பி’க்காக காத்திருந்த காலங்கள் உண்டு. அது ஸ்டூடியோக்காரர்களின் காலம். அப்படியே அங்கிருந்து போட்டோ கடை(ஸ்டூடியோ அல்ல)க்கு சென்று சட்டம் போட்டு வாங்குவார்கள். அவர்கள் 2, 3 நாட்கள் அலைய விடுவார்கள்.

வாங்கி வந்து வீட்டில் மாட்டிய பிறகு தான் நிம்மதி. குடிசையாக இருந்தாலும் வீட்டுக்கு 4 படம் சுவற்றில் தொங்கும், அரிய பொருளாக பார்க்கப்பட்ட கேமராக்கள், டிஜிட்டல் மயமான பிறகு பல ஸ்டூடியோக்களும் காணாமல் போய் விட்டன.

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது இன்றைய சூழலில் எளிதாகி விட்டது. புகைப்படத்தின், தரம், வேகம், துாரம் என அனைத்து விதங்களிலும் முன்னேற்றமடைந்து விட்டது. செல்போன் வந்த பிறகு நின்றால், உட்கார்ந்தால், நடந்தால் மகிழ்ச்சியில், துயரத்தில் என எல்லா நிகழ்வுகளிலும் தினசரி படங்கள் எடுப்பது அதிகரித்துவிட்டது. குழந்தைகள் கூட புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன.

இன்று புகைப்படங்கள் வெறும் நினைவு சின்னம் மட்டுமல்ல உலகின் வரலாற்றை திருப்பிப் போட்டிருக்கிறது. இன படுகொலைகளை, அடிமைகள் படும் அல்லல்கள், அரசியல் அத்துமீறல்கள், சாதி வெறியாட்டங்கள், அதிகார அட்டகாசங்கள், இயற்கை சீரழிவுகள் என எல்லாவற்றையும் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியிலுமே நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். கேமராவால் இன்று பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. Selfie என்ற பெயரில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. எனவே கேமராவை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Friday, August 7, 2015

மனைவியிடம் பேசுங்கள்...!!! மனம் விட்டுப் பேசுங்கள்....!!!!!



மனைவியிடம் பேசுங்கள்...!!!
மனம் விட்டுப் பேசுங்கள்....!!!!!

மிகவும் உணர்வுப்பூர்வமான பகிர்வு
- திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32ஆண்டுகள் வாழ்ந்து, 49வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள். அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய்விட்டது....

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது.

வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள். பொன்நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு.

அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள். எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள்...
சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள். மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பணி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றிகொண்டு இருந்தபொது சிறிதும் முகம் சுழிக்காதவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி... நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது, ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த, கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக, அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தில் பிள்ளையை காட்டிவிட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை...

விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், என்னைக் காண வருவோர் அத்தனை பேருக்கும் அன்னபூரணி... இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி, புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம்.

தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

பண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை...
இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்ததை ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை...

ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை, இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது. நேரம் இல்லை என்பார்கள், பொய்.... 32ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள்... அப்படி என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்த்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.

காலம் கடந்து பயன்படுத்தினால் பயனற்றுப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே...
சரியான நேரத்தில் வெளிபடுத்தாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , 'காதல்' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது, விலையும் இருக்காது. இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன்.

ஒருநாள், ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே...
ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்து இருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று... வந்து பார்த்தால்..... முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்து அதிசயமாக புருவங்கள் இரண்டும் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்....

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிறவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன்....

ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்.... இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்...
எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படாதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார்...
நான் அவரிடம் கேட்டேன் , "நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூட்டத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குறிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன், உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள், அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்...??

அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமே இல்லையே என சொன்னேன்.
ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்....

தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்...

என் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி, மகிழ வைக்காமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்..
வேண்டி கேட்கிறேன் உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிற போதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கீகாரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!
நான் சந்தித்து கேட்டவர்களில் 95விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள்...
இது மாறட்டும்...

என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.
என் வேதனை, நான்படும் துயரம்... வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம்... அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....

இதனை இப்போது சொல்லும் நான், வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை....

(உணர்வை தொட்ட வரிகள்....)

Wednesday, August 5, 2015

அர்த்த சாஸ்திரம் மதுவும்... டாஸ்மாக் மதுவும்...


ன்றைய டாஸ்மாக்குக்கான வரைபடத்தை உருவாக்கித் தந்தவர் சாணக்கியர் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசும், பேரரசும் எப்போது உருவானதோ, அப்போது அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை மூன்று  சாஸ்திரங்கள் ஏற்றன. ஒன்று, சமூக வாழ்வியலை நிர்ணயிக்கும் மனு தர்ம சாஸ்திரம். இரண்டு, அரச நீதியை வலியுறுத்தும் அர்த்த சாஸ்திரம். மூன்று,  குடும்ப அமைப்பை நெறிப்படுத்தும் காம சாஸ்திரம் என்கிற காம சூத்திரம். இந்த மூன்று நூல்களுமே ஆள்வோருக்கு சாதகமாக எழுதப்பட்டிருப்பதால்தான்  காலம்தோறும் பெரும்பான்மையான மக்கள் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில்தான் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடி வருவதும். குடி என்கிற மது, மக்களை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது  என்பதை சாணக்கியர் எனும் கவுடில்யர் அறிந்திருந்தார். எனவே அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருக்க இதையே ஓர் ஆயுதமாக  பயன்படுத்த முடிவு செய்தார். அதன் விளைவுதான் அவரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம். இந்த நூலின் ஒரு பகுதி குடியை பற்றி விளக்கமாக பேசுகிறது.  அதன் தீமைகளை விரிவாக பட்டியலிடுகிறது. என்றாலும் அரசே குடியை விற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறது.
அதாவது மது நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என அறிவித்துவிட்டு விற்பனை செய்யும்படி அறிவுறுத்துகிறது. இதன் வழியாக அரசு கஜானாவுக்கும் பணம்  கொட்டும்; மக்களும் போதையில் ஆழ்ந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என ஆள்வோருக்கு புரிய வைத்தது. சுருக்கமாக சொல்வதென்றால் குடியை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றியும் நுட்பமாக சிந்தித்து வணிக நடவடிக்கையாக அதை மாற்றியது.
அர்த்த சாஸ்திரம் நூலில் சாணக்கியர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?
* மிகைக் குடியை தடை செய்ய வேண்டும். அது தண்டனைக்குரிய குற்றம். இதை கண்காணிக்க சுராதயக் ஷா என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்கு  கீழ் அதயாக் ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
* மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும்  மது விற்கக் கூடாது. 
* அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ - அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர்  அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
* மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம். 
* மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு  உரியவர்கள்.
* அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை  செய்ய வேண்டும்.
* திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி  பெறாமல் காய்ச்சக் கூடாது...
அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின. விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து  பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன. அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும்,  குடிக்கு உரியதுதான். ஆங்கிலேயர் ஆட்சியில் அப்காரி (Abhari Excise System) சட்டம், 1790ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, மது  வகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அதிக தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள்  வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகை, 1902 - 03ம் ஆண்டுகளில், அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ. 9 லட்சத்து 28  ஆயிரமாக அதிகரித்தது. 1857ம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த  அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளிலும் இறங்கியது.
அப்போது அவர்களுக்கு கைகொடுத்ததும் குடி நிர்வாகம்தான். இதற்கு 1799ம் ஆண்டு அயர்லாந்தில் மேற்கொண்ட முயற்சிகளை முன்னுதாரணமாக  ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர். மையப்படுத்தப்பட்ட மது உற்பத்திசாலைகளை ஏல முறையில் ‘மரியாதையும் மூலதனமும் உள்ள  பெருவியாபாரிகளிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். கூடவே சாராய கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது,  அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது போன்றவற்றை அமல்படுத்தினர். இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லாப்  பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ல் சுற்றறிக்கை அனுப்பினர். இதனை அடுத்து  பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்து பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்து வந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் பம்பாய் மாகாண சாராய உற்பத்தியின்  ஏகபோகத்தை அளித்தார்கள்.
தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலையையே 1951ல் விட்டல் மல்லையா  - விஜய் மல்லையாவின் தந்தை - வாங்கினார். இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் சாராய முதலாளிகள் மாகாண அளவில்  உருவாக்கப்பட்டனர்.1947, ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்தபடியாக குடி மூலமான  வருவாயே இந்தியாவில் இருந்தது.இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல. இன்றைய நிஜமும் கூட. குடி மூலமாக வருவாயை பெருக்குவதும்,  மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணிதிரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வதும்தான்,  டாஸ்மாக்கின் நோக்கம். இதுவேதான் சாணக்கியர் வகுத்த அர்த்த சாஸ்திரத்தின் சாராம்சமும்.

- தினகரன். 

Tuesday, June 30, 2015

இன்று மட்டும் 24 மணி நேரம் + 1 நொடி! பாதிப்பை ஏற்படுத்துமா லீப் செகண்ட் ?



இன்று மட்டும் 24 மணி நேரம் + 1 நொடி! பாதிப்பை ஏற்படுத்துமா லீப் செகண்ட் ?

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று மட்டும் 24 மணி நேரம் + ஒரு நொடி கூடுதலாக இருக்கும். அதை தான் லீப் செகண்ட் என்கிறோம். அதாவது இன்றைய நாளின் கடைசி நிமிடத்துக்கு மட்டும் 61 நொடிகள் என்ற அளவில் கணக்கிடப்படும். இதற்கு காரணம் நாம் ஒரு நாளை 84600 நொடிகள் என்று தான் கணக்கில் எடுத்து கொள்கிறோம். ஆனால் பூமியோ ஒரு நாள் என்பதை 84600.002 நொடியாக தான் ஒரு சுழற்சிக்கு எடுத்து கொள்கிறது. அதனால் இது போன்ற லீப் செகண்டை ஜூன் 30 அல்லது டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு ஆண்டில் சேர்க்கும் முறை 1972ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
1972ம் ஆண்டு முதல் இதுவரை 25 நாட்கள் லீப் செகண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று சேர்க்கப்படுவது 26வது முறையாகும். இதில் ஜூன் 30ம் தேதி 10 முறையும், டிசம்பர் 31ம் தேது 15 முறையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நொடி எப்படி சேர்க்கப்படுகிறது எனில் 23:59:59 என முடிந்து 00:00:00 என துவங்குவதற்கு இடையே ஒரு நொடி அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு மீண்டும் செயல்பாடு துவங்கவதன் மூலம் ஒரு நொடி பூமியின் சுழற்சியோடு ஒத்துப்போக வழிவகை செய்கிறது.
லீப் நொடியால் பாதிப்பா?

1972ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வரும் இந்த லீப் நொடி கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியோடு சேர்க்கப்பட்டது. அந்த நாளில் பல பெரிய பாதிப்புகள் நிகழ்ந்தன. மிகப்பெரிய நிறுவனங்களான மொஸில்லா, ரெடிட், ஃபோர் ஸ்கோயர், யெல்ப், லிங்க்டுஇன் மற்றும் ஸ்டெம்பிள்டன் ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி முடங்கிபோயின. லினெக்ஸ் செயல்பாடுகள் முடங்கிபோனது பாதிப்புக்கு காரணமாகின. மேலும் சில ஜாவாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் முடங்கின.
அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதற்கு காரணம் லீப் நொடியால் குவாண்டாஸ் செக் இன் செயலிழந்து போனது என கூறப்பட்டது.

இந்த வருடம் என்ன ஆகும்?

2015ம் ஆண்டு தற்போது ஜூன் 30ம் தேதி இந்த லீப் செகண்ட் மீண்டு வருவதால் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் இந்த ஒரு நிமிடத்தை கடக்க புதிய திட்டத்தை வைத்துள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் 20 மணி நேரத்துக்கு முன்னதாக கூகுள் அனைத்து சர்வர்களும் இணைய துவங்கும் இந்த செயல்பாடு முடியும் போது லீப் நொடி கடக்கப்பட்டிருக்கும் என கூகுள் கூறியுள்ளது.
அதே போல அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது என்பதால் அமெரிக்க பங்குச் சந்தை இந்த லீப் நொடியை மறுநாள் புதன்கிழமை சந்தை ஆரம்பிக்கும் நேரத்துக்கு முன்னதாக கணக்கில் சேர்த்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்டர்கான்டினென்டல் எக்ஸ்சேஞ்ச் இந்த லீப் நொடி எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் எங்கள் பங்கேற்பாளர்களுக்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறியுள்ளது.

அதனால் இந்த வருடம் சில நிறுவனங்களும் , சில வர்த்தகங்களும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. பூமியின் சுழற்சி சரியாக பிரிக்கப்படாததால் இந்த நொடியை சேர்த்தே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. இல்லையெனில் பூமியின் சுழற்சியில் நாம் ஒரு நொடியை நாம் இழக்க நேரிடும். அதனால் நாம் வாழ்க்கையில் ஒரு நொடி காணமல் போக வாய்ப்புள்ளது என்கின்றனர் அறிவியல்வல்லுனர்கள். இன்று சர்வதேச அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் இந்த லீப் நொடியில் செல்ஃபி எடுக்க தயாராக இருப்பதாக கூறுகிறது இன்னொரு கூட்டம். எப்படியோ இன்று மட்டும் ஒரு நாள் 24 மணி நேரம் இல்லை 24 மணி நேரம் + 1 நொடி.

Thursday, January 22, 2015

நதிகளின் ராணி - அமேசான்


லகில் உள்ள காடுகளிலேயே மிகப்பெரியது அமேசான். அடர்த்தியான காடும் இதுதான். அமேசான் என்றால் உயரமான திடகாத்திரமான பெண் என்று அர்த்தம். அமேசான் நதியை நதிகளின் ராணி என்று அழைக்கிறார்கள். 6 ஆயிரத்து 712 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நதி, ராணி என்றால் அதை சூழ்ந்திருக்கும் காடு ராஜா தானே!. அமேசான் காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட 8 நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது. சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. பூமிப்பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்கு தான் உற்பத்தியாகிறது.

உலகப்பறவை இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்குதான் இருக்கிறது. உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன. 2 ஆயிரத்து 500 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன.

இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகிறார்கள்.

அமேசான் காடுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். வான் தளம் என்பது உயரமான மரங்களை குறிக்கிறது. உயரமான மரத்தில் கழுகு, பருந்து போன்ற பறவை இனங்கள் வாழ்கின்றன. 2–வதாக குரங்கு போன்ற உயிரினங்கள் வாழும் இடமாகும், 3–வதாக பூச்சிகள், ஊர்வன போன்றவை வாழ்கின்றன. 4–வதாக தரைப்பகுதியில் பயங்கர காட்டு விலங்குகள் உள்ளன. அனகோண்டா போன்ற உலகின் மிகப்பெரிய பாம்பு இனம் இருப்பது இங்கு தான்.

இந்த காடு மற்றும் நதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள். அமேசான் நதி பிறக்கும் இடத்தில் இருந்து 1,100 துணை நதிகளை தன்னோடு இணைத்துக்கொண்டு கடலில் சென்று சேருகிறது. இங்கு இருக்கும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்றும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்கு உணர்த்தும்.

- தினத்தந்தி