Thursday, June 19, 2014

தொடரும் வரலாறு...

தீயின் நாக்குகள் வானைத் தொட்டன .
அந்த வீரனை எரித்த
தீயின் நாக்குகள் எம்மையும் சுட்டன.

எங்கள் யுகத்தின்
லட்சிய வீரனே, பத்மநாபா
ஈழம் நோக்கியிருந்த வேழமே!

உன்னைப் பறித்தது
காலமா இல்லை கயமையா?

வரலாறு தொடரும் தோழனே
புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவனே
நீயும் வரலாற்றைத் தொடர்வாய் - அதன்
பக்கங்களில் படர்வாய்.

சப்புக் கொட்டிக் கொண்டு
ரத்த நாக்கைச் சுழற்றும்
கோழைகள் அதோ....

அவையும் ஒருநாள் மடியும்
அநாகரிகத்தையும் அவமானத்தையும் சுமந்து.
அன்று
அவற்றின் சடலங்களின்மேல்
காறியுமிழும் மக்களின் எச்சில்!

அதன் முன்....

பாம்புக்குப் பால் வார்த்தவர்களே,
அது உங்களையும்
பதம் பார்க்காமலா விட்டுவிடும்?
1990 ஜூன் 19
(பத்மநாபாவும் தோழர்களும் எரியூட்டப்பட்ட வினாடிகளில் அந்தச் சடலங்கள் கருகிய வெம்மையினூடே சுடுகாட்டில் கசங்கிய தாளில் வெதும்பிய கவிதை!)

தோழர் பத்மநாபா நினைவுதினம் இன்று....


நன்றி முகநூல் - ரதன் சந்திரசேகர் பக்கங்கள் 

யூன் 19 தியாகிகள் தினம்

காலம்.....
பல வரலாற்று நாயகர்களை இந்த உலகிற்கு தந்துமிருக்கிறது, தந்துகொண்டுமிருக்கிறது.

அந்த வரிசையில் ஈழமண்ணில் இருந்து பத்மநாபா எனும் மாமனிதனை நல்ல தலைவனாகவும், வழிகாட்டியாகவும் அது  அடையாளம் காட்டியது.ஆனால்...  

அகாலம் ,

அந்த மனிதநேயமிக்க மானுடனை, அவன் நேசித்த மக்களின் விடுதலை நெருங்கிவரும் வேளையில், அவர்களை அவன் தலைமையேற்று வழி நடத்திய பாதி தூரத்திலேயே  கள்ளத்தனமாகக் கவர்ந்து சென்றுவிட்டது.

நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெடப் புழுதியில் எறிந்துவிட்ட மூடர்களுக்கு துணையாகிப் போனோமோ என்று புலம்பினர் மக்கள்.

காதகன் காலனையும் நோவதைத் தவிர அவர்களால் வேறு எதுவுமே செய்திருக்க முடியவில்லை அப்போ.ஆனாலும்:


காலமானது,காலகாலமாய் ஒன்றைமட்டும் உலகத்திற்கு சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது

."தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் , தர்மம் மறுபடி வெல்லும்."எனும் சத்தியம் .

ஈழமக்களின் எதிர்கால வாழ்வுக்கான தர்மத்தினைச் சரியாகவும் தெளிவாகவும் புரிந்து செயல் பட்டவர் தோழர் பத்மநாபா.


அன்று, அதர்மிகளின் அறியாமை, நாபாவைக்  கொன்று எதையோ சாதித்துவிட்டதாக  எக்காளமிட்டது .

ஈழமக்களும் அவரது தோழர்களும் சற்று நிலை குலைந்துதான் போனார்கள் .

வாழும்போது அவனைப் புரிந்துகொள்ள மறுத்தவர்கள் ,அவனின் இருப்பின் அவசியத்தை இன்று உணரத் தொடங்கியுள்ளனர். கண் கெட்டதன் பின்னான ஞானம் எனினும் வரலாறு மீண்டும் திரும்புவது.மக்களுக்கான நல்லதோர் வெளிச்சமே.

அன்று ஈழமண்ணில் பத்மநாபா போன்ற எத்தனையோ மகாவிருட்சங்கள் வெட்டிச் சாய்க்கப் பட்டன,'ஆனால் அந்த விருட்சங்கள் பலகிளை நீட்டி மீண்டும் துளிர்த்து சிலிர்த்து எழுந்து கனிகளைக் கொடுக்கும் என்று வெட்டிய மூடர்கள் நம்பியிருக்க வாய்ப்பில்லைத்தான்.

இன்று அதற்கான காலம் தொடங்கி விட்டதாகவே நம்பலாம்.

'மனிதநேயம் எனும் அடித்தளத்தில் ஐக்கியம் - ஜனநாயகம்- சமாதான சகவாழ்வு எனும் கற்கள் கொண்டு கட்டப்படுகின்ற ஒருதேசம் அந்த நாயகர்களைக் கொண்டாடக் காத்துக் கொண்டுதான் இருக்கிறது.

அந்தவகையில் எங்கள் வரலாற்று நாயகன் பத்மநாபாவின் நினைவு நாளான யூன் 19ம்' தியாகிகள் தினமாக' நாடெங்கும்  போற்றப்படும். 


ஆம்! தர்மம் மறுபடியும் மறுபடியும் வென்றுகொண்டே இருக்கும்.