Tuesday, December 31, 2013

2013ன் தொல்லை போம்

தொலைந்து போ 2013றே....!
என்னை நோகடித்தாய் விதியே என்றிருந்தேன்
இதுவரை உன்னை யாராவது...?
புகழ்ந்துரைத்தது போல் ஞாபகமும் இல்லை
'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்பர்
நீயோ உன் முடிவிலும்
இயற்கையின் தோழன் 
நம் ஆழ்வானையும் உன்னோடு அழைத்தாய் என்ன திமிர் உனக்கு? இயற்கையோடும் விளையாட
நமக்காக எதையும் செய்யாத நீ தொலைந்தே போ..!
எமக்கே எமக்காய் வருகிறது '2014'
வாழ்ந்து காட்டுகிறோம்.     

Monday, December 16, 2013

போங்கடா....! நீங்களும் உங்க மனசும்.

"மரணம் கூட மகிழ்ச்சி தருமாமே..!" 
நினைக்கவே பயம் தொற்றிக்கொள்ளும் 
இக்கூற்றில் உண்மையும் இருக்குமோ? 
மற்றவர் மரணம்... சில வேளைகளில் சிலருக்கு
உற்றவர் மரணம்... சாத்தியமே இல்லை எனக்கு 
எனது மரணம்... எனக்கு ஒருபோதும் இல்லை 
வேறு யாருக்காவது...? அது மகிழ்ச்சியை தரும் என்றால்
"செத்துதான் தொலையேன்" என்கிறது 
கேடுகெட்ட என் மனம்.

பிற்குறிப்பு: ஒருநாளில் (15.12.2013) மூன்று மரணச் சடங்குகளில் கலந்து கொண்டபின்... ஒரு மனசு.        

Saturday, December 14, 2013

படம் பார் - பாடம் படி

கருமேகமாய்  திரண்டு                                   
அச்சமூட்டும்  எதிர்காலம்
அங்காங்கே விலகி
பேதலிக்கும்   உறவுகள்.
இடையிடை வந்தும்
போகும் பசுமை நினைவுகள்.....

நகரத்து தெருக்களின்
வாகன நகர்த்தலாய்
மெல்லென நகரும்
வாழ்வுப்  பயணத்தில்
பாதையோரத் தனிமரமாய்...
நானும் என் நிழலும்.
எதுவாகிலும்.....
இன்னும் இன்னுமென
எனக்குள்ளே
நின்று  மின்னுமொரு
 நம்பிக்கை  ஒளிக்கீற்று

------+------+-------+--------+----

கருமேகம் பெரும்  மழையாய் பொழியும்.
தனிமரம் பெருந்  தோப்பாய் மாறும்
ஊரெல்லாம் பசுமைக் கோலம் பூக்கும்
வாடி நின்ற  உயிர் யாவும் மீட்சி பெறும்
Friday, December 13, 2013

பிரிய முடியாப் பிரிய மண்

நதிக்கரைப் பாதைகளை துறந்துவிட்டு
கட்டடக் காடுகளுக்குள்
நான் எதைத் தேடிப் போகிறேன்?

எந்த நறுமண வாசங்களாலும்
கொண்டு வந்து தரமுடியா
எனது மண் வாசத்தை
நானெப்படி விட்டுச் செல்ல முடியும்?

ஒரு வேப்பமரத்தைக் காண முடியா
வலியின் பெருநெருப்பில்
மூச்சுமுட்டிச் சாகிற விதிக்காகத் தானா
விமானமேறப் போகிறது எனதுயிர்?

இயற்கை வரைந்த மென்பச்சை ஓவியங்களை
இங்கே வாட விட்டுவிட்டு
செயற்கைப் புல்வெளிகளில் அமர்ந்து
நானெந்தக் கவிதையை எழுதுவேன்?

இதுவரை
என்னைச் சுற்றிப் பறந்த
வண்ணத்துப் பூச்சிகளையும்
எனது காலைகளை
தனது காந்தர்வக் குரலால் நிரப்பிய
கருங்குயிலையும் தொலைத்து விட்டு
நானெந்த முகாரியைப் பாடுவேன்?

வெள்ளைத் தோல் மனிதர்களிடத்தில்
என் கிராமப் பாசத்தை
நானெப்படிக் கடன் கேட்பேன்?
ஆங்கிலக் குரல்களுக்குள்
என்னரும் தமிழைத் தேடித் தேடி
நானெத்தனை நாள் தவமிருப்பேன்?

வேப்பம்பூ வடகத்துக்கும்
பலாப்பழச் சுளைக்கும்
எத்தனை நாள் எச்சில் விழுங்குவேன்?
நிலவு விழும் இரவில்
தென்னங்கீற்றுக்கள் அசைய
முற்றத்து மணலில் எப்போது தூங்குவேன்?

அறுகம்புல் வரம்பில் அமர்ந்திருக்கும்
வெள்ளைப் பாற் கொக்குகளின் வரிசையை
எந்தப் பூங்காவில் தேடுவேன்?
அம்மாவின் மடியை
அப்பாவின் இருமலை
அக்காவின் காற்கொலுசு ஒலியை
அண்ணாவின் அதட்டலை
தம்பி தங்கையின் நேசத்தை
தனித்து விடப்பட்ட தேசத்தில்
எங்கே நான் தேடித் தேடி விம்முவேன்?

என்னால் முடியவேயில்லை.
எனது மண்ணை விட்டு
மனசைப் பெயர்த்துச் செல்வதற்கு.

---xxx----

Wednesday, December 11, 2013

"மெல்லத் தமிழினிச் சாகும்" ...என்று எந்தப் பேதை உரைத்தான் ?

ற்றே கூர்ந்து கவனியுங்கள். திரும்பத் திரும்ப வாசியுங்கள். தமிழ் அழியும், மற்ற மொழிகளும் கலாசாரங்களும் அதை அழிக்கும் என்று பாடினானாம் எங்கள் பாவேந்தன்  பாரதி. 

48 வரிப்பாடலில் இந்த ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு பாடலின் நோக்கத்தையே கிட்டத்தட்ட 88 வருடங்களாக (பாரதி  எமை விட்டு  நீங்கியது செப்டெம்பர் 11, 1921) மானபங்கப்படுத்தி வருகிறோம்.
அவன் சொன்ன கருத்தைத் திரித்து உண்மையிலேயே தமிழைக் கொன்று வருகிறோம்.

  “ மெல்லத்தமிழ் இனி சாகும்' என மகாகவி பாரதி பாடினானே.....என .இன்றைக்குத் தமிழ் வளர்க்கப் பாடுபடும் அத்தனை தமிழ் குடிதாங்கிகள், தமிழன்னையின் மானம் காப்போர், மேடைகளில் புலம்புவதைக் கண்டு நீங்களும் குழம்பியிருக்கக் கூடும்.

 அந்தக் கவியரசன்  பிறந்த நாளான இன்று அவன் எதைத்தான் பாடினான்  என தருகிறோம்.

 படித்து விட்டு வாய்ச்சொல் வீரர்களுக்கு எதிராய்  நீங்கள் எடுக்கும் நடவடிக்கை முடிவுகளுக்கு  நான் பொறுப்பல்ல.ஹி..ஹி...

 உங்களுக்காக  வாய்ச்சொல் வீரர் உட்பட  எல்லாரும் பயன்படுத்தும் அந்த புகழ்பெற்ற வாசகம் அடங்கிய கவிதையின் முக்கிய பகுதி  இதுதான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர் (8)

'புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை (9)

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்' (10)

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! (11)

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். (12)

நன்றி -இன்னாத கூறல்

Saturday, December 7, 2013

வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா


வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா மறைந்து விட்டதாம்!

நுரையீரல் தொற்றின் காரணமாக பல மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் முதல் வீடு திரும்பி வீட்டில் இருந்தவாறே மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த மண்டேலா மரணமடைந்து விட்டார். குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கின்ற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப்படிக்கத் தெரியாதவர் - ஆயினும் மகனைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வைத்தார். 

1938-ம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால் மண்டேலா; முதலில் "கெல்ட்டவுன்" கல்லூரியிலும்  - பிறகு "போர்ட்ஹேர்" கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். அப்போதுதான் அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத் தொடங்கியது. அங்கே வெளிப்பட்ட இன வேற்றுமைக் கொடுமையை எதிர்த்து இளைஞர் மண்டேலா தலைமையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படவே; கல்லூரி நிர்வாகம் மண்டேலாவை வெளியேற்றியது.        

ஆம் - மண்டேலாவுக்கு அவர் நடத்திய உரிமைப் போரில் கிடைத்த முதல் தண்டனை அது! மன்னிப்பு கேட்டுக் கொண்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டது. அதை மானப்பிரச்சனை என்று கூறி மறுத்துவிட்டார் மண்டேலா. அப்போது மண்டேலா, "எங்களுக்கு சுதந்திர உரிமை இல்லை என்றால், நான் அடைபட்டுள்ள சிறைச்சாலையே திருப்தி அளிக்கக் கூடியது" என்று கூறிவிட்டார். அவர் நடத்திய போராட்டங்களின் தொடர்சியாக நீண்ட கால சிறை வாழ்க்கையைத்தான் அவர் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது.

சிறை கொடுமைகளைப் பற்றி, "சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை. சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்" என்று விவரித்திருக்கிறார். மண்டேலாவின் இந்தத் தியாக வாழ்க்கை தென்னாப்பிரிக்க நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இந்தப் பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டு புத்துலகம் காணத்துடிக்கின்ற ஏறு நடை இளைஞர்களுக்கெல்லாம் இதய கீதமாகும். 

உலகத்தில் விடுதலை இயக்கங்கள் உயிரோடு இருக்கும் வரையில் நெல்சன் மண்டேலாவின் நினைவும் நீடித்திருக்கும். வாழ்க மண்டேலாவின் புகழ்.