Thursday, July 25, 2013

மறக்க முடியா மரணங்கள்

தோழர் சுதன்...
அழைப்பினில் சுகம் கூட்டும் அற்புதப் பெயர் 
அவனை நான் பார்த்த முதல் நாள் இன்னும் பசுமையாக என் மனதில்...
கையில் பிஸ்ட்டலோடு - முரட்டுத்தனமான தோற்றம் 
முகத்தில் நீண்டநாள் மழிக்காத தாடி 
இரவெல்லாம் தூங்காத விழிகள் 
தோழர் ரொபர்ட் என்னை அவனுக்கு அறிமுகம் செய்ய லேசான புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு தன் கடமையில் கண்ணானான். 
ஆம் - ஈ.பி.ஆர்.எல்.எப்பின் ஆரம்ப கால தோழர்களில் முக்கியமானவன் அவன்.
மக்கள் விடுதலைப் படையை (PLA ) கட்டுவதில் தோழர் ரொபர்ட்டோடு தோளோடு தோள் நின்று உழைத்த உத்தம தோழன் அவன். 
தோற்றத்தில் முரட்டுத்தனம் தெரியும் ஆனால் பழகுவதற்கு இனிமையானவன்.
எல்லாவற்றுக்கும் அப்பால் அவன் ஒரு சிற்ப கலைஞன் என்பது தனிச் சிறப்பு. 
இலங்கையின் பிரபல கோயில்களில் அவனதும் அவனது சகோதரனதும் கைவண்ணங்களை இன்னும் காணலாம்.
எனக்குத் தெரிந்து இறுதியாக வடபழனி முருகன் ஆலயத்தின் கொடிமரத்தின் சிற்ப வேலைகளில் தோழர் சுதனின் பங்கும் கணிசமானது. 
மக்கள் பணியானாலும், இறைப்பணியானாலும் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய அவனது உழைப்பை அங்கு காண முடியும். 
இத்தகைய தோழன் நேற்றுவரை எம்மோடு இருந்தான். இன்று எம்மோடு இல்லை என்பதை என் மனம் ஒப்ப மறுக்கிறது. 
அவனது இறுதிக்காலங்களில் பெரும்பாலான ஈழ போராளிகளின் நிலைமை போல அவனும் வறுமையோடு போராடியதாகவும், நீரிழிவு நோயின் பாதிப்போடு சிரமப்பட்டான்  என்பதையும் கேள்விப்படும் போது மனம் பேதலிக்கிறது.
அவனது இறுதி நேரத்தில் தோழர்கள் எவரும் அவன் அருகில் இருக்கவில்லை என்பதும் மனதை நெருடுகிறது.
குறிப்பிட்ட காலம் வரை என்னோடு தொலைபேசி வழித் தொடர்போடு இருந்தவன். கடைசி காலங்களில் ஏன் அதை துண்டித்து கொண்டான் என்று இன்று ஏங்குகிறேன். என்னோடு தொடர்பாடி கொண்டிருந்தாள் அவனது மருத்துவத்தின் சிறு தேவையாவது பூர்த்தி செய்திருக்க முடிந்திருகுமே. காலம் இப்படி பல மோசடி விளையாட்டுக்களை என் வாழ்வில் செய்துதான் விடுகிறது. 
எதுவாயினும் தோழர் 'சுதன்' என்ற பெயர் என்றுமே எனக்கும் என் சக தோழர்களுக்கும் சுகமானது.     

Friday, July 19, 2013

வாலி நீ வாழி!

அய்யோ போச்சே !
ஆசையாய் தமிழ் வடிக்கும் 
அற்புதம் போச்சே !
அலட்சியம் மறைத்து நின்ற 
அருங்குணம் போச்சே !
என்னதான் வேண்டும் எதுவென்றால் போதும் 
அதுவெல்லாம் எழுதும் 
வாலி உயிர் போச்சே !
சண்டை என்று வந்துவிட்டால் 
சாத்திரம் பாராதே !
என்று சொன்ன கண்ணன் கதை
காப்பியம் செய்தான் 
பாட்டெழுத வந்துவிட்டால் 
பாத்திரம் பாராதே ! 
என்றுரைத்த ரங்கநாதன் 
சாகசம் செய்தான் 
கூச்சமும் பார்க்கமாட்டான் 
ஏச்சையும் கேட்கமாட்டான் 
காவியம் வடியக் கூடும் 
கச்சையும் அவிழக்கூடும்
திரையில் தெளிப்பதெல்லாம் 
வாசனைத் திரவியந்தான்
அத்தரை விற்க வந்த 
வித்தக வணிகன் நான்   .
காசு கொடுத்தால் போதும் 
கூசிடாது எழுது கோலும் 
குங்குமம் வேண்டுமா, நீ 
வேண்டுதல் போதை தானா?
என்னதான் வேண்டும் எதுவென்றால் போதும்
அதுவெல்லாம் எழுதி தரும்  
வாலி உயிர் போச்சே !
திரையில் வேற்றாள் நான் 
வெளியில் தோற்றால் நான் 
வாழ்ந்ததில் பொருளில்லை என 
காப்பியம் படைக்க வந்தான் 
நீ !
என்னென்ன சொன்னாலும் கவிதை 
நீ ! 
என்னென்ன செய்தாலும் புதுமை 
தமிழுக்கு தொங்கும் அணிகலனே 
நீ !
மறைந்திட மாட்டாய் கவிமகனே 

    

Thursday, July 11, 2013

கவிதைச்சரம்

ருமை மாடு 
எவ்வளவு அப்பிராணி !
அதன் மீதமர்ந்துதான் 
எமதர்மன் வருவானென்று 
படித்ததில்லை நீங்கள்?

எனவே தீர்மானியுங்கள் 
மரணம் அச்சமூட்டக்கூடியதா என்று!

சடலங்களைக் கிடத்திவிட்டு
உயிரைமட்டும் கவர்ந்து செல்கின்றன 
மரணங்கள்.
சடலங்கள் ஒருவேளை அச்சமூட்டக்கூடும்.
அதற்கு 
மரணம் பொறுப்பாளியல்ல. 

மரணம்  
ஒரு நல்ல காதலியை 
அல்லது நல்லதொரு காதலனைப் போல
நமக்காக நெடுங்காலம் காத்திருக்கிறது 
அரவணைக்க.

நீங்கள் என்னதான் சொல்லுங்கள் 
கடைசியில் 
அதன் விருப்பம்தான் நிறைவேற போகிறது.

விலகி ஓடாமல் சிநேகிதமாகிக்  கொள்வது 
புத்திசாலித்தனமென்று சொல்லுகிறேன்.

எனவே தீர்மானியுங்கள்.   

ரதன் சந்திரசேகர்

Tuesday, July 2, 2013

கவிதைச்சரம்

தெய்வங்களைத் தொலைத்த தெரு

பூவரசம் பூவின் 
பீப்பி இசை கேளாமல் 
காகிதக் கப்பல்களை 
மழை நீரில் காணாமல் 
பம்பரம், கோலிகளின்
ஸ்பரிசம் கிடைக்காமல் 
மணல் வெதும்பும் 
தெருக்கள் - 
கரித்துக்கொட்டுமோ 
கார்டூன் சேனலை?

வல்லம் தாஜூபால் 

**********************************************************

மழைச் சிறுமி 

ழைக் கால 
மாலை வேளையில் 
தன் தந்தையின் 
கரங்கல்பற்றி 
குடைக்குள் நடக்கும் சிறுமி 
தந்தைக்குத் 
தெரியாவண்ணம் 
மறு கரம் மட்டும் 
மழையில் நனைந்தபடி 
மழையுடன் விளையாடியபடி 
வந்தாள் 
மனதில் மகிழ்ச்சி ததும்ப.
அந்தி சாய்ந்த கணத்தில் 
சிறுமியின் திசையில் 
மேகங்கள் புடைசூழ 
நகர்ந்துகொண்டிருந்தது 
அன்றைய மழையும்!

மாயாவி 

**********************************************************

சராசரி 

நேற்றைய பிரச்னை 
போலவே இன்றைய 
பிரச்னையையும் 
சதூர்யமாகச் சமாளித்த 
சந்தோஷத்துடன்
தொடர்கிறது அன்றாட 
வாழ்க்கை !

அ.யாழினி பர்வதம் 

**********************************************************

எழுதுதல் 

ரு தலைப்பின் 
கீழ் எழுதலாம் 
- இல்லையேல் 
எழுதியதிற்கேற்ப
ஒரு தலைப்பு இடலாம்...
எழுதத்தா முடியவில்லை 
கவிதை எனப்படுவதை!

ஆர்.சபரிவாசன் 

**********************************************************

அண்ணிமார் கதை 

ண்ணிகள் என்றாலே 
பிரியம் குழைத்த வெட்கமும் 
வெட்கம் குளித்த பிரியமும்தான்
கொழுந்தன்மார்களுக்கு

துவைப்பதற்கு 
எடுக்கும்போது 
நம் சட்டைப் பையில் இருக்கும் 
காதலியின் புகைப்படத்தையும் 
சிகரெட்டையும் 
நம்மிடமே 
திருப்பித் தந்து 
நாணமுறச் செய்கிறார்கள் 

நம் காதல்குறித்தும்
அரியஸ் குறித்தும்
அடிக்கடி 
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள் 

நண்பர்களோடு 
ஊர் சுற்றிவிட்டு 
வீடு திரும்புகையில் 
ஒட்டுமொத்தக் குடும்பமும் 
ஒன்றாக எதிர்க்க 
அண்ணிகள் மட்டும் 
ஆதூரமாய்ப் பேசி 
அமுது படைக்கிறார்கள்

தாயைப் போலவே 
நம் தவறுகளை 
மென்மையாய்க் கண்டிக்கும் 
அண்ணிகள் 
'தாயில்லாதவனின்'
மணிபர்ஸில்
புகைப்படமாய் 
இடம்பிடிக்கிறார்கள் 

ஏதோ ஒரு கோபத்தில் 
அண்ணனுடன் 
தனிக் குடித்தனம் 
போய்விட்ட பிறகு 
ஏனோ நம்மை 
ஒரு பகைவனைப் போல் 
பார்க்கத் தொடங்குகிறார்கள் 

அ.நிலாதரன்