Tuesday, April 23, 2013

அத்தமனமாக ஆதித்தன் அவன்

தாய்ப்பால் போல் சுத்தமனம்;
தமிழ்மொழி பால் பித்தமனம்;
தமிழர்க்கான யுத்த மனம்; இத்தகு
தமிழனுக்கேது அத்தமனம் ?

அத்தமனமாக
அவனொன்றும்.
சிவப்பு ஆதித்தனல்ல;
சிவந்தி ஆதித்தன் !

சிவந்தி ஆதித்தன்
சிரஞ்சீவியாக வாழ்வன்...
அன்றாடம்
அதிகாலையில்
அச்சடிக்கும் இதழ்களிலும் - அவற்றை
உச்சரிக்கும் இதழ்களிலும் !

கலைத்தாயின்
காலில் கட்டிய நூபுரம்; அவன்
தன் காசில்
தென்காசியில் கட்டிய கோபுரம் !

அவனது
அழகிய
உள்ளங்கை ரேகைகள்
உட்கார்ந்திருக்கின்றன
ஓர் இடத்தில்; திருச்செந்தூர்
தேர் வடத்தில் !

அவன்-
அவியாது-
ஒளிரும்
ஒலிம்பிக் சுடர்; அதற்கு
வாயு தேவனால்
வாராது இடர் !

ஓரைந்து
ஒலிம்பிக் வளையங்களில்
அவனும் ஒன்று; வாழ்ந்திருப்பான்.
ஆயிரம் காலம் நின்று !

எவருக்கும் தெரியாது
எங்களுக் கிடையே இருந்த...
நாற்பதாண்டு கால
நட்பு; அது
பேசுதற் கரிய
பெட்பு !

எமன்
எடுத்துச் சென்றது
அவனது
ஆக்கையை; ஆனால்
வரலாறு
வாசிக்கட்டு மென்று
விட்டுச் சென்றான் அவன்
வாழ்க்கையை !

கொடையால்;
கோவில் பணியால்...
சிவந்தி ஆதித்தன்
சாவாப் புகழை ஏற்றான்;
அந்தகன்
அந்த விஷயத்தில் தோற்றான் !   


தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மறைவையொட்டி கவிஞர் வாலி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் கவிதையை உளறுவாயன் வாசகர்களோடு பகிர்வதனூடு உங்கள் அஞ்சலியையும் எங்கள் இதய அஞ்சலியையும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் தினத்தந்தி குடும்பத்தினர்க்கும் வாசகர்களுக்கும் காணிக்கையாக்குகின்றோம்.      

Friday, April 19, 2013

லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்...  

அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.

அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள்.

இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்... இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

Monday, April 15, 2013

காலத்தால் அழியாத இசை உலகின் இமயம் P.B.S

இசை உலகின் இமயம் சரிந்து விட்ட துயரம் நெஞ்சை நெருடுகிறது.
P.B.S என்ற அந்த மூன்றெழுத்துக்குள் எத்தனை இனிமை கொட்டிக் கிடந்தது.
P.B.S என்றால் Play Back Singer என்றும் விரிவுப்படுத்தக்கூடிய விந்தை அவருக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
P.B.S க்குள் ஒளிந்திருந்த கவிஞனை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவின் முக்கியமான மொழிகளை எல்லாம் அவர் குரலின் இனிமை அலங்கரித்து சிறப்பித்தது.
மெல்லெனப் பேசி அனைவரையும் அரவணைத்த அற்புத மனிதன்,
இறைவன் திருச்சபையில் இசை பணிக்காய் பதவி ஏற்க புறப்பட்டான்.
மீண்டும் அவர் வருவார், நல்லிசை தருவார் என நம்புவோம்.

"  வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்,
வாசல் தோறும் வேதனை இருக்கும்,
வந்த துன்பம் எதுவென்றாலும்,
வாடி நின்றால் ஓடுவதில்லை,
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்,
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"  .  
 
  

Wednesday, April 10, 2013

இன்றும் ஒரு தகவல் - ஹனிமூன்

திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர். எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம். ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடுவார்கள்.

புகுந்தவீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம். போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள். பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ளமரபு. ஒரு கோப்பையில் தேனை வைத்துக்கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம். இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக்கொண்டே உருவாக்கியுள்ளார்கள். எல்லா நாடுகளிலுமே திருமணமான தம்பதிகளுக்கு தேனை கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான், புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்.