Thursday, January 10, 2013

இன்றும் ஓர் தகவல் - கேசினோக்களில் தில்லாலங்கடி

வெளிநாடுகளில் சூதாடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் தான் கேசினோக்கள். கோடிகள் சர்வசாதாரணமாக புரளும் இந்த இடத்தில் தில்லுமுல்லு செய்ய ஏகப்பட்ட தில் வேண்டும். மாட்டிக்கொண்டால் தோலை உரித்து தொங்கவிட்டு விடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட இடத்திலும் தில்லாலங்கடி வேலை காட்டுவதிலும் கில்லாடி ரிச்சர்டு மார்கஸ். கண் இமைக்கக் கூட காத்திராமல் டோக்கன் மாற்றுவது ரிச்சர்டு மார்கசின் டெக்னிக். கேசினோக்களில் பணத்தை கவுண்டரில் கொடுத்து டோக்கன்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு டாலர் முதல் பல ஆயிரம் டாலர்கள் வரை பணத்தின் மதிப்புக்கு ஏற்ப கலர்கலராக டோக்கன்கள் கொடுப்பார்கள். மார்கஸ் வெறும் 3 டோக்கன்களோடுதான் தனது ஆட்டத்தை ஆரம்பிப்பார்.

அவரிடம் ஒரு 100 டாலர், இரண்டு 5 ஆயிரம் டாலர் டோக்கன்கள் மட்டும்தான் இருக்கும். ஒருவேளை தோற்றுவிட்டால் 5 ஆயிரம் டாலர் டோக்கன்களுக்கு பதிலாக மைக்ரோ செகண்டுகளில் 100 டாலர் டோக்கன்களாக மாற்றிவிடுவார். இதனால் மார்கசிற்கு 300 டாலர் மட்டுமே நஷ்டம். ஜெயித்துவிட்டால் டோக்கன்களை மாற்ற மாட்டார்கள். இவருக்கு 10 ஆயிரத்து 100 டாலர்கள் லாபம். இதனால் 33 முறை தோற்றாலும் கூட ஒருமுறை ஜெயித்தாலே லாபம் பார்த்துவிடலாம். மார்கஸ், கேசினோ, கேசினோவாக மாறிமாறி ஏறி ஏமாற்றினார். 25 ஆண்டுகளாக குறைந்தபட்சம் 5 மில்லியன் டாலர்கள் வரை இப்படி ஏமாற்றி சம்பாதித்துவிட்டார்.

ஆனால் அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அவரே பொறுமை இழந்து தி கிரேட் கேசினா ஹெயிஸ்ட் என்ற நூலை எழுதி அதில் தனது தில்லாலங்கடி வேலைகளை பற்றி சொன்னார். கேசினோ உலகம் அதிர்ந்து போனது. கேசினோக்கள் எப்போதும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கும். நாம் பரபரப்பின்றி பதற்றமின்றி செயல்பட்டால் சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்பது மார்கசின் டிப்ஸ். கேசினோ பார்ட்டிகள் மத்தியில் இந்த புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றது.

Monday, January 7, 2013

பீட்சா

பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது . ஆனால் உண்மையில் பிட்சா ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.

1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார். தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா. பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்.

அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார். சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல பிட்சாவை உருமாற்றி விட்டார்.

போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா பிட்சா என ராணியின் பெயரையும் வைத்து ராணிக்கு ஐஸ் வைத்துவிட்டார். இப்படி உள்ளூரில் பிரபலமான பிட்சா, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்களை பிட்சா சிறைபிடித்து விட்டது. ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள். பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர். அவ்வளவுதான் சர்வதேச தரத்திற்கு பிட்சா உயர்ந்துவிட்டது.

விளைவு இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் பிட்சா ஹட், பிட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன. பிட்சா பிரியர்கள், பிப்ரவரி 9ஆம் தேதியை உலக பிட்சா தினமாக கொண்டாடும் அளவுக்கு பிட்சா சர்வதேச சூப்பர் ஸ்டாராகிவிட்டது.

அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும்

சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுபவர்களுக்கு இது கசப்பான தகவல் தான். அதிகம் சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மந்த புத்தி என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மை தான் என்கிறது, இந்த ஆய்வு.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டார்கள். 600 முதல் 1526 கலோரிகள், 1526 முதல் 2143 கலோரிகள், 2143 முதல் 6000 கலோரிகள் உணவு உட்கொள்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 3 பிரிவினரிடமும் ஒரு வினா- விடை கொடுக்கப்பட்டது. இதில் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு விடையை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். 2வது வகையினர் அதை விட சற்று குறைவான பதிலையே கொடுத்துள்ளனர். 3வது வகையினர் மிக மிகக்குறைவான கேள்விகளுக்கே பதில் கூறியுள்ளனர். அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படலாம். இந்த வரிசையில் ஞாபக சக்தி குறைவு, மனச்சிதைவு போன்ற நோய்களும் ஏற்படும் என்று புதிய ஆய்வு சொல்கிறது. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்பது தான் முக்கியம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆகி விட்டால் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்த்து உணவு சாப்பிடும் வேளைகளை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து. சாப்பிடாமல் இருந்தாலும் ஆபத்து. எனவே மிதமான உணவை தினசரி 5 முறைகள் சாப்பிட்டால் நல்லது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவான சாப்பாடே ஆரோக்கியமான வாழ்வு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது உடலுக்கும் தீங்கு ஏற்படாது. ஞாபக சக்தியும் குறையாது.

Saturday, January 5, 2013

அழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்


பண்டைய தமிழர்கள் எத்த‍னை விதமான ஆடற்கலைகள் நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் தெரியுமா? ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு பெண், பேசும்போது எங்கே சார்! நாங்க இருக்கிற இந்த சின்ன‍ ஃபிளாட்டில் எப்படி சார்! நம்ம‍ ஆடிப்பாடுவது, என்று கேட்க அதற்கு கோபிநாத்தோ, சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே!? நமது பாரம் பரிய கலைகளை ஆடுவது வெட்கமல்ல‍, இதுபோன்ற கலைகளை ஆடமாட்டோம் என்று கூறுவதுதான் வெட்கக்கேடானது என்று சம் ம‍ட்டியால் அடித்தாற்போல் உரைத்தார்.

ந‌மது பழம்பெரும் தமிழர்கள் நமக்காக விட்டுச்சென்ற, (நம்மால் அழிந்துகொண்டிருக்கும்) ஆடற்கலைகளை விதை2விருட்சம் இணையம் வாயிலாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

01) அம்மன் கூத்து
02) அன்னக்கொடி விழாக்கூத்து
03) அனுமன் ஆட்டம்
04) ஆலி ஆட்டம்
05) இருளர் இனமக்களின் ஆட்டம்
06) இலாவணி
07) எக்காளக் கூத்து
08) ஒயிலாட்டம்
09) கரகாட்டம்
10) கரடியாட்டம்
11) கழியலாட்டம்
12) கணியான் கூத்து
13) காவடியாட்டம்
14) குறவன் குறத்தி ஆட்டம்
15) குரவை, துணங்கை, தழூஉ – ஆட்டங்கள்
16) கோணங்கியாட்டம்
17) கொக்கலிக்கட்டை ஆட்டம்
18) கோலாட்டம்
19) கும்மியாட்டம்
20) சக்கை குச்சி ஆட்டம்
21) சக்கையாட்டம்
22) சலங்கையாட்டம்
23) சிலம்பாட்டம்
24) சேவயாட்டம்
25) துடும்பாட்டம்
26) தெருக்கூத்து
27) தேவராட்டம்
28) பரதநாட்டியம்
29) பறைமேளக் கூத்து
30) பறையாட்டம்
31) பாவைக்கூத்து
32) பாம்பாட்டம்
33) பெரியமேளம்
34) புலி ஆட்டம்
35) பொம்மலாட்டம்
36) பொய்க்கால் குதிரை ஆட்டம்
37) மகுடிக் கூத்து
38) மயில் ஆட்டம்
39) மரக்காலாட்டம்
40) மாடாட்டம்
41) ராஜா ராணி ஆட்டம்
42) ஜிக்காட்டம்