Tuesday, December 31, 2013

2013ன் தொல்லை போம்

தொலைந்து போ 2013றே....!
என்னை நோகடித்தாய் விதியே என்றிருந்தேன்
இதுவரை உன்னை யாராவது...?
புகழ்ந்துரைத்தது போல் ஞாபகமும் இல்லை
'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்பர்
நீயோ உன் முடிவிலும்
இயற்கையின் தோழன் 
நம் ஆழ்வானையும் உன்னோடு அழைத்தாய் என்ன திமிர் உனக்கு? இயற்கையோடும் விளையாட
நமக்காக எதையும் செய்யாத நீ தொலைந்தே போ..!
எமக்கே எமக்காய் வருகிறது '2014'
வாழ்ந்து காட்டுகிறோம்.     

Monday, December 16, 2013

போங்கடா....! நீங்களும் உங்க மனசும்.

"மரணம் கூட மகிழ்ச்சி தருமாமே..!" 
நினைக்கவே பயம் தொற்றிக்கொள்ளும் 
இக்கூற்றில் உண்மையும் இருக்குமோ? 
மற்றவர் மரணம்... சில வேளைகளில் சிலருக்கு
உற்றவர் மரணம்... சாத்தியமே இல்லை எனக்கு 
எனது மரணம்... எனக்கு ஒருபோதும் இல்லை 
வேறு யாருக்காவது...? அது மகிழ்ச்சியை தரும் என்றால்
"செத்துதான் தொலையேன்" என்கிறது 
கேடுகெட்ட என் மனம்.

பிற்குறிப்பு: ஒருநாளில் (15.12.2013) மூன்று மரணச் சடங்குகளில் கலந்து கொண்டபின்... ஒரு மனசு.        

Saturday, December 14, 2013

படம் பார் - பாடம் படி

கருமேகமாய்  திரண்டு                                   
அச்சமூட்டும்  எதிர்காலம்
அங்காங்கே விலகி
பேதலிக்கும்   உறவுகள்.
இடையிடை வந்தும்
போகும் பசுமை நினைவுகள்.....

நகரத்து தெருக்களின்
வாகன நகர்த்தலாய்
மெல்லென நகரும்
வாழ்வுப்  பயணத்தில்
பாதையோரத் தனிமரமாய்...
நானும் என் நிழலும்.
எதுவாகிலும்.....
இன்னும் இன்னுமென
எனக்குள்ளே
நின்று  மின்னுமொரு
 நம்பிக்கை  ஒளிக்கீற்று

------+------+-------+--------+----

கருமேகம் பெரும்  மழையாய் பொழியும்.
தனிமரம் பெருந்  தோப்பாய் மாறும்
ஊரெல்லாம் பசுமைக் கோலம் பூக்கும்
வாடி நின்ற  உயிர் யாவும் மீட்சி பெறும்
Friday, December 13, 2013

பிரிய முடியாப் பிரிய மண்

நதிக்கரைப் பாதைகளை துறந்துவிட்டு
கட்டடக் காடுகளுக்குள்
நான் எதைத் தேடிப் போகிறேன்?

எந்த நறுமண வாசங்களாலும்
கொண்டு வந்து தரமுடியா
எனது மண் வாசத்தை
நானெப்படி விட்டுச் செல்ல முடியும்?

ஒரு வேப்பமரத்தைக் காண முடியா
வலியின் பெருநெருப்பில்
மூச்சுமுட்டிச் சாகிற விதிக்காகத் தானா
விமானமேறப் போகிறது எனதுயிர்?

இயற்கை வரைந்த மென்பச்சை ஓவியங்களை
இங்கே வாட விட்டுவிட்டு
செயற்கைப் புல்வெளிகளில் அமர்ந்து
நானெந்தக் கவிதையை எழுதுவேன்?

இதுவரை
என்னைச் சுற்றிப் பறந்த
வண்ணத்துப் பூச்சிகளையும்
எனது காலைகளை
தனது காந்தர்வக் குரலால் நிரப்பிய
கருங்குயிலையும் தொலைத்து விட்டு
நானெந்த முகாரியைப் பாடுவேன்?

வெள்ளைத் தோல் மனிதர்களிடத்தில்
என் கிராமப் பாசத்தை
நானெப்படிக் கடன் கேட்பேன்?
ஆங்கிலக் குரல்களுக்குள்
என்னரும் தமிழைத் தேடித் தேடி
நானெத்தனை நாள் தவமிருப்பேன்?

வேப்பம்பூ வடகத்துக்கும்
பலாப்பழச் சுளைக்கும்
எத்தனை நாள் எச்சில் விழுங்குவேன்?
நிலவு விழும் இரவில்
தென்னங்கீற்றுக்கள் அசைய
முற்றத்து மணலில் எப்போது தூங்குவேன்?

அறுகம்புல் வரம்பில் அமர்ந்திருக்கும்
வெள்ளைப் பாற் கொக்குகளின் வரிசையை
எந்தப் பூங்காவில் தேடுவேன்?
அம்மாவின் மடியை
அப்பாவின் இருமலை
அக்காவின் காற்கொலுசு ஒலியை
அண்ணாவின் அதட்டலை
தம்பி தங்கையின் நேசத்தை
தனித்து விடப்பட்ட தேசத்தில்
எங்கே நான் தேடித் தேடி விம்முவேன்?

என்னால் முடியவேயில்லை.
எனது மண்ணை விட்டு
மனசைப் பெயர்த்துச் செல்வதற்கு.

---xxx----

Wednesday, December 11, 2013

"மெல்லத் தமிழினிச் சாகும்" ...என்று எந்தப் பேதை உரைத்தான் ?

ற்றே கூர்ந்து கவனியுங்கள். திரும்பத் திரும்ப வாசியுங்கள். தமிழ் அழியும், மற்ற மொழிகளும் கலாசாரங்களும் அதை அழிக்கும் என்று பாடினானாம் எங்கள் பாவேந்தன்  பாரதி. 

48 வரிப்பாடலில் இந்த ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு பாடலின் நோக்கத்தையே கிட்டத்தட்ட 88 வருடங்களாக (பாரதி  எமை விட்டு  நீங்கியது செப்டெம்பர் 11, 1921) மானபங்கப்படுத்தி வருகிறோம்.
அவன் சொன்ன கருத்தைத் திரித்து உண்மையிலேயே தமிழைக் கொன்று வருகிறோம்.

  “ மெல்லத்தமிழ் இனி சாகும்' என மகாகவி பாரதி பாடினானே.....என .இன்றைக்குத் தமிழ் வளர்க்கப் பாடுபடும் அத்தனை தமிழ் குடிதாங்கிகள், தமிழன்னையின் மானம் காப்போர், மேடைகளில் புலம்புவதைக் கண்டு நீங்களும் குழம்பியிருக்கக் கூடும்.

 அந்தக் கவியரசன்  பிறந்த நாளான இன்று அவன் எதைத்தான் பாடினான்  என தருகிறோம்.

 படித்து விட்டு வாய்ச்சொல் வீரர்களுக்கு எதிராய்  நீங்கள் எடுக்கும் நடவடிக்கை முடிவுகளுக்கு  நான் பொறுப்பல்ல.ஹி..ஹி...

 உங்களுக்காக  வாய்ச்சொல் வீரர் உட்பட  எல்லாரும் பயன்படுத்தும் அந்த புகழ்பெற்ற வாசகம் அடங்கிய கவிதையின் முக்கிய பகுதி  இதுதான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர் (8)

'புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை (9)

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்' (10)

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! (11)

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். (12)

நன்றி -இன்னாத கூறல்

Saturday, December 7, 2013

வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா


வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா மறைந்து விட்டதாம்!

நுரையீரல் தொற்றின் காரணமாக பல மாதங்கள் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் முதல் வீடு திரும்பி வீட்டில் இருந்தவாறே மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த மண்டேலா மரணமடைந்து விட்டார். குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கின்ற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப்படிக்கத் தெரியாதவர் - ஆயினும் மகனைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வைத்தார். 

1938-ம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால் மண்டேலா; முதலில் "கெல்ட்டவுன்" கல்லூரியிலும்  - பிறகு "போர்ட்ஹேர்" கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். அப்போதுதான் அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத் தொடங்கியது. அங்கே வெளிப்பட்ட இன வேற்றுமைக் கொடுமையை எதிர்த்து இளைஞர் மண்டேலா தலைமையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படவே; கல்லூரி நிர்வாகம் மண்டேலாவை வெளியேற்றியது.        

ஆம் - மண்டேலாவுக்கு அவர் நடத்திய உரிமைப் போரில் கிடைத்த முதல் தண்டனை அது! மன்னிப்பு கேட்டுக் கொண்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டது. அதை மானப்பிரச்சனை என்று கூறி மறுத்துவிட்டார் மண்டேலா. அப்போது மண்டேலா, "எங்களுக்கு சுதந்திர உரிமை இல்லை என்றால், நான் அடைபட்டுள்ள சிறைச்சாலையே திருப்தி அளிக்கக் கூடியது" என்று கூறிவிட்டார். அவர் நடத்திய போராட்டங்களின் தொடர்சியாக நீண்ட கால சிறை வாழ்க்கையைத்தான் அவர் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது.

சிறை கொடுமைகளைப் பற்றி, "சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை. சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்" என்று விவரித்திருக்கிறார். மண்டேலாவின் இந்தத் தியாக வாழ்க்கை தென்னாப்பிரிக்க நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இந்தப் பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டு புத்துலகம் காணத்துடிக்கின்ற ஏறு நடை இளைஞர்களுக்கெல்லாம் இதய கீதமாகும். 

உலகத்தில் விடுதலை இயக்கங்கள் உயிரோடு இருக்கும் வரையில் நெல்சன் மண்டேலாவின் நினைவும் நீடித்திருக்கும். வாழ்க மண்டேலாவின் புகழ்.

Friday, November 8, 2013

இன்றும் ஒரு தகவல் - மிக நீண்ட ஓட்டம்

சீனாவில் கம்யூனிஸம் ஜெயிக்க வேண்டும் என்றால் விவசாயிகளிடம் எழுச்சி வரவேண்டும் என்று மா சே துங் கூறினார். விவசாயிகளை ஒன்றிணைப்பது அவருக்கு பெரிய காரியமாக இல்லை. ஆட்சியாளர்களின் பிடியில் இருந்த விவசாய நிலங்களை விவசாயிகளிடம் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

உடனே விவசாயிகள் அனைவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வந்து இணைய ஆரம்பித்தனர். இவற்றுடன் ‘சிவப்பு ராணுவம்‘ என்ற கொரில்லாப்படையும் உருவானது. இந்த சிவப்பு ராணுவம் விவசாயிகளை வதைத்து வந்த குட்டி கொடூர ஆட்சியாளர்களை எதிர்த்து துவம்சம் செய்தது.

அப்போது சீனாவின் தலைவனாக இருந்த ஷியாங் சிவப்பு ராணுவத்தை அடக்க ஒரு லட்சம் பேர் கொண்ட தனது துருப்புகளை ஏவினான். கம்யூனிஸ்டுகளின் சிவப்பு ராணுவமோ பெரிய அளவில் ஆயுதங்கள் எதுவும் இல்லாத கொரில்லாப்படை. ஆனால், ஷியாங்கின் ராணுவமோ துப்பாக்கி உள்பட சகல ஆயுதங்களையும் வைத்திருந்தது. ஆனால் ஷியாங் ராணுவம், கொரில்லாப் படையிடம் தொடர்ந்து தோற்று வந்தது.

கடைசியாக ஏழு லட்சம் வீரர்களை கொண்ட ராணுவப்படையை ஷியாங் அனுப்பியபோது, மா–சே–துங்கின் கொரில்லாப்படை பின் வாங்கி ஓடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அதிலும் கூடுதல் சோகம் என்னவென்றால், தங்களை ஆதரித்து வந்த விவசாயிகளை ஷியாங் ராணுவத்திடம் சிக்க வைக்காமல், அவர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் அழைத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகளின் கொரில்லாப் படை தப்பியோடியது.

இவ்வாறு ஓடியவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். கொடிய விலங்குகள் நிறைந்த காடுகள், சதுப்பு நிலங்கள், பனிமலை, காட்டாறு என்று ஆபத்தான பாதைகளின் வழியாக ஒரு லட்சம் பேரும் ஓடினார்கள். ஷியாங்கின் ராணுவமும் விடாமல் துரத்தியது. அவர்கள் மேலும் ஓடிவிட முடியாதபடி ஆறுகளின் குறுக்கே இருந்த பாலங்களை தகர்ந்தது; பாதைகளை சிதைத்தது.

விவசாயிகள் தங்களின் குழந்தைகளை இடுப்பிலும், முதியவர்களை தங்கள் முதுகிலும் சுமந்து கொண்டு காடு மேடுகள் வழியாக ஓடினார்கள்... ஓடினார்கள்... கிட்டத்தட்ட 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை அவர்கள் ஓடினார்கள். பசி, வலி, நோய், பனி, வெயில், கொடிய விலங்குகள் போன்றவை தங்கள் பங்கிற்கு துரத்தின.

ஒரு வருட ஓட்டத்துக்குப் பிறகு உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 6 ஆயிரம் பேர் மட்டுமே! இந்த தொடர் ஓட்டத்தினால் பிழைத்தவர்கள் அசுர பலமிக்கவர்களாகவும், மன உறுதிமிக்கவர்களாகவும் மாறியிருந்தனர். இவர்களின் ஓட்டத்தையும், அனுபவித்த சித்ரவதைகளையும், பிழைத்தவர்களின் உறுதியையும் கண்ட சீன மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக மாறினார்கள். இதையடுத்து மா–சே–துங் சீனாவின் மாபெரும் தலைவராக உருவானார்.

Thursday, August 1, 2013

உலகமெங்கும் வாழும் ஈழத்து மக்களுக்கு ஒரு கடிதம்

போர்க்குற்ற விசாரணைகளுக்கு பயந்து - அல்லது சர்வதேச நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து - அல்லது என்ன இழவோ ஏதோ ஒன்றுக்குக் கட்டுப்பட்டு - ராஜபக்சே சில உறுதிமொழிகளை இந்திய அரசுக்கு வழங்கியிருக்கிறார். 

"சரித்திரம் திரும்பும் ; சரித்திரம் திரும்புகிறது " என்றெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பிளிறுவதை கேட்டிருக்கிறேன். இதோ இலங்கையில்  ஒரு  சரித்திரம் திரும்புகிறது : ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம்!

'மாகாண சபை அதிகாரம்' என்கிற முதல் உரிமைப் படிக்கட்டில் ஏற்றி வைத்த இந்த ஒப்பந்தம் யார் யாராலோ அலைக்கழிக்கப்பட்டு - சிதறடிக்கப்பட்டு -பல லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த பிறகு - சாம்பல் மேட்டில் இருந்து மீண்டும் எழுப்பப்படுகிறது : "ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தின்படி...."

பழையதைக் கிண்டி அதில் அரசியல் லாபம்  தேடுகிற அவசியம் இல்லாத எவரும் இந்தக் கட்டுரையில் - விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.

இன்று ஈழத் தமிழருக்கு வேண்டியதெல்லாம் கண்ணீரற்ற வாழ்க்கை... நிம்மதி...நெடுநாள் இழந்துவிட்ட உறக்கம்...ரத்தம் தோயாத பொழுதுகள்! இவை மட்டுமே! ஆம்! இவை மட்டுமே வேறெந்த பெரிய லட்சியத்தயும்விட முன் நிற்கும் முதல் தேவை! இலங்கை மண்ணில் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற நம் தமிழர்களின் வாழ்க்கை கோரிக்கை!

மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்கிற துர்ப்பாக்கிய நிலைமைக்கு தமிழர் போராட்டம் பின்னுக்கு இழுக்கப்பட்ட போக்குக்கு இலங்கையில் இருந்தவர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. தமிழகதிற்கு இதில் மிகப் பெரிய பொறுப்பு - இழிவை தலை சுமக்க வேண்டிய பொறுப்பு உண்டு!

இலங்கையில் போராட்டக் களத்தில் இருந்தவர்களையும், போர்க்களத்தில் இருந்தவர்களையும் தவறாக வழி நடத்தி - அல்லது தவறுகளுக்கு உறுதுணையாக இருந்து ஈழப் போராட்டத்தை சிதைத்த பங்கு தமிழகத் 'தலைவர்'களுக்கு நிச்சயம் உண்டு !

கேவலம் - மிகக் கேவலம்!  'தலை' வெளியே தெரிவதற்காக ஈழத்தை தலையில் சுமந்தவர்கள்  - 'நாற்காலி பசை'க்காக தமிழர்களை பகடைக் காயாக மாற்றியவர்கள் - 'தேர்தல் நேர சுயநலத் 'துக்காக தமிழ்க் குரல் எழுப்பியவர்கள் ...என்று பிரிந்து நிற்கிற இந்தத் தமிழக அரசியல்வாதிகள் சாதித்ததெல்லாம்  தத்தமது பொழுதைப் போக்கியது மட்டுமே! 

 இழந்ததெல்லாம்... இழந்ததெல்லாம்...நீங்கள்தாம்...நீங்கள் மட்டும்தாம்...ஈழத் தமிழர்களே...நீங்கள் மட்டும்தாம்! அவர்களுக்கு எந்த இழப்புமில்லை. ஒரு மயிரிழைகூட இழப்பு இல்லை!

கணவனை இழந்தீர்கள் ஈழத் தாய்மார்களே...பெண்டு பிள்ளையரை இழந்தோம் ஈழத்து ஆண் மக்களே... தாய் தந்தையரை  இழந்தோம் தமிழர்களே...பச்சிளம் பிஞ்சுகளின் சவத்தை அருகில் கிடத்தி உயிர் சீவித்திருந்தோமே தமிழர்களே...இக்கொடுமைகளில் ஆயிரத்தில் ஒரு பங்காவது இந்த தமிழக அரசியல்வாதிகளுக்கு இழப்பு உண்டா?

இல்லை.இல்லவே இல்லை. கிஞ்சிற்றும் இல்லை. ஒரு மயிரளவும் இல்லை.

ஆனால் நீங்கள்...? நீங்கள்...?நாடெங்கே? வீடெங்கே? காலில் நழுவிய பூமிஎங்கே? உறவுகள் எங்கே? குடும்பங்கள் எங்கே? செத்துப்போன நம் பிள்ளைகுட்டி பெண்டுகள் கணவன்மார்கள் எங்கே? எங்கே? தேடுங்கள்...தேடுங்கள்...நாலாபுறங்களிலும் நாற்திசைகளிலும் தேடுங்கள்...இழப்பின் வலியை எந்த ஈனப் பிறவிகளால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்?

ஆனால் இன்னும் அவர்கள் உங்களை விட மாட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழனின் தீக்குளித்த பிணம் எந்தத் தெருவில் விழுகிறது என்று மலர் வளையங்களுடன் திரிந்து - புகைப்படக் கருவிகளின் முன் சோக முகம் காட்டி நிற்கிற இழிந்த அரசியல்வாதிகள் இன்னும் உங்களை விட மாட்டார்கள்.

 இந்த 'பச்சை தமிழன்'கள், 'செந்தமிழன்'கள், 'புரட்சி புயல்'கள் , புதுக் காதல் கொண்டுவிட்ட பொதுவுடைமை சிங்கங்கள்', 'பாட்டாளி சொந்தங்கள்', 'இனமானத்' தலைவர்கள், 'தமிழர் தலைவர்'கள் - இந்தத் தமிழகத்து அரசியல்வாதிகளிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். சிங்கள அரசை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!

உங்கள் ரத்தம் இவர்களுக்கு பானம்! உங்கள் மரணம் இவர்களுக்கு அரசியல்! உங்கள் வாழ்க்கை இவர்களுக்கு பகடை! உங்கள் அரசியலோ இவர்களுக்குத் தேவையற்ற ஒன்று!

ஏதாவது நிகழாதா  என்று குருதியின் மணம் இன்னும் காற்றில் வீசுகிற மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழனுக்கு தமிழச்சிக்கு தேவை வாழுகிற உரிமை! இப்போதைக்கு அதுவே முன்னுரிமை! அதற்குக்கூட விடமாட்டேன் என்று தமிழகத்தில் 'கொள்ளிபோடுகிற' இந்த அரசியல்வாதிகளை ஈழத் தமிழர்களே...புரிந்து கொள்ளுங்கள்! வெளிநாட்டில் வாழும் தமிழர்களே...இவர்களை கூட்டிவந்து கொட்டிக் கொடுப்பதை நிறுத்துங்கள்!

இவர்களுக்கு இங்கே அரசியல் கிடையாது. தனிநபர்த் தாக்குதல்கள் அன்றி வேறு அரசியலும் தெரியாது! குடும்பம் வளர்ப்பவன் - அவனோடு கோபித்துக் கொண்டு வந்தவன் - குறுக்கில் புகுந்து லாபம் சம்பாதிக்க நினைப்பவன் - இவர்களது பதவிப் போட்டியில் - ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் - இவர்களுக்கு இன்னமும் நீங்கள் தேவைப்படுகிறீர்கள்! கழுகுகளுக்கு இரையாக இடம்கொடாதீர்கள்!

உங்கள் புரட்சியை நீங்கள் தீர்மானியுங்கள்! உங்கள் உரிமையை நீங்களே வென்றேடுங்கள் ! உங்கள் வாழ்க்கை இலங்கையில் இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் உயிர் ஈழத்தில் இருக்கிறது! எவர் உதவியும் - எவன் உதவியும் தேவையில்லை உங்களுக்கு! குறிப்பாக, நரிகளின் நாட்டாமை நமக்குத் தேவையே இல்லை!

உங்கள் பிரதிநிதிகள் வாயிலாகவே உங்கள் போராட்டம்  நடைபெறட்டும்! புரட்சியைக் கடன் வாங்குகிற நிலைமை நமக்கு இல்லை! இவர்கள் கற்ப்பிக்கிற போக்கும் நமக்கான அரசியலில்லை! நாம் நாமாயிருப்போம்! தொப்பூழ்க்கொடி சொந்தமென்று அணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு - தமிழ்நாட்டில் சுவரொட்டி அடித்து  அரசியல் பிழைக்கிறவர்களின் சகவாசம்  நமக்கு வேண்டாம்!

நம் வேலையை நாமே பார்க்கப் போகிறோம்! நம் கனவை நாமே அடையப் போகிறோம்! நன்மையுள்ளவன் என்றாலும் நல்ல ஆலோசனை மட்டுமே பெறுவோம்!  நாமே போராடுவோம்! அதில் பிழையிருக்கிறதா தோழர்களே?

சென்னையிலிருந்து அழகிய மணவாளன்.

Thursday, July 25, 2013

மறக்க முடியா மரணங்கள்

தோழர் சுதன்...
அழைப்பினில் சுகம் கூட்டும் அற்புதப் பெயர் 
அவனை நான் பார்த்த முதல் நாள் இன்னும் பசுமையாக என் மனதில்...
கையில் பிஸ்ட்டலோடு - முரட்டுத்தனமான தோற்றம் 
முகத்தில் நீண்டநாள் மழிக்காத தாடி 
இரவெல்லாம் தூங்காத விழிகள் 
தோழர் ரொபர்ட் என்னை அவனுக்கு அறிமுகம் செய்ய லேசான புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு தன் கடமையில் கண்ணானான். 
ஆம் - ஈ.பி.ஆர்.எல்.எப்பின் ஆரம்ப கால தோழர்களில் முக்கியமானவன் அவன்.
மக்கள் விடுதலைப் படையை (PLA ) கட்டுவதில் தோழர் ரொபர்ட்டோடு தோளோடு தோள் நின்று உழைத்த உத்தம தோழன் அவன். 
தோற்றத்தில் முரட்டுத்தனம் தெரியும் ஆனால் பழகுவதற்கு இனிமையானவன்.
எல்லாவற்றுக்கும் அப்பால் அவன் ஒரு சிற்ப கலைஞன் என்பது தனிச் சிறப்பு. 
இலங்கையின் பிரபல கோயில்களில் அவனதும் அவனது சகோதரனதும் கைவண்ணங்களை இன்னும் காணலாம்.
எனக்குத் தெரிந்து இறுதியாக வடபழனி முருகன் ஆலயத்தின் கொடிமரத்தின் சிற்ப வேலைகளில் தோழர் சுதனின் பங்கும் கணிசமானது. 
மக்கள் பணியானாலும், இறைப்பணியானாலும் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய அவனது உழைப்பை அங்கு காண முடியும். 
இத்தகைய தோழன் நேற்றுவரை எம்மோடு இருந்தான். இன்று எம்மோடு இல்லை என்பதை என் மனம் ஒப்ப மறுக்கிறது. 
அவனது இறுதிக்காலங்களில் பெரும்பாலான ஈழ போராளிகளின் நிலைமை போல அவனும் வறுமையோடு போராடியதாகவும், நீரிழிவு நோயின் பாதிப்போடு சிரமப்பட்டான்  என்பதையும் கேள்விப்படும் போது மனம் பேதலிக்கிறது.
அவனது இறுதி நேரத்தில் தோழர்கள் எவரும் அவன் அருகில் இருக்கவில்லை என்பதும் மனதை நெருடுகிறது.
குறிப்பிட்ட காலம் வரை என்னோடு தொலைபேசி வழித் தொடர்போடு இருந்தவன். கடைசி காலங்களில் ஏன் அதை துண்டித்து கொண்டான் என்று இன்று ஏங்குகிறேன். என்னோடு தொடர்பாடி கொண்டிருந்தாள் அவனது மருத்துவத்தின் சிறு தேவையாவது பூர்த்தி செய்திருக்க முடிந்திருகுமே. காலம் இப்படி பல மோசடி விளையாட்டுக்களை என் வாழ்வில் செய்துதான் விடுகிறது. 
எதுவாயினும் தோழர் 'சுதன்' என்ற பெயர் என்றுமே எனக்கும் என் சக தோழர்களுக்கும் சுகமானது.     

Friday, July 19, 2013

வாலி நீ வாழி!

அய்யோ போச்சே !
ஆசையாய் தமிழ் வடிக்கும் 
அற்புதம் போச்சே !
அலட்சியம் மறைத்து நின்ற 
அருங்குணம் போச்சே !
என்னதான் வேண்டும் எதுவென்றால் போதும் 
அதுவெல்லாம் எழுதும் 
வாலி உயிர் போச்சே !
சண்டை என்று வந்துவிட்டால் 
சாத்திரம் பாராதே !
என்று சொன்ன கண்ணன் கதை
காப்பியம் செய்தான் 
பாட்டெழுத வந்துவிட்டால் 
பாத்திரம் பாராதே ! 
என்றுரைத்த ரங்கநாதன் 
சாகசம் செய்தான் 
கூச்சமும் பார்க்கமாட்டான் 
ஏச்சையும் கேட்கமாட்டான் 
காவியம் வடியக் கூடும் 
கச்சையும் அவிழக்கூடும்
திரையில் தெளிப்பதெல்லாம் 
வாசனைத் திரவியந்தான்
அத்தரை விற்க வந்த 
வித்தக வணிகன் நான்   .
காசு கொடுத்தால் போதும் 
கூசிடாது எழுது கோலும் 
குங்குமம் வேண்டுமா, நீ 
வேண்டுதல் போதை தானா?
என்னதான் வேண்டும் எதுவென்றால் போதும்
அதுவெல்லாம் எழுதி தரும்  
வாலி உயிர் போச்சே !
திரையில் வேற்றாள் நான் 
வெளியில் தோற்றால் நான் 
வாழ்ந்ததில் பொருளில்லை என 
காப்பியம் படைக்க வந்தான் 
நீ !
என்னென்ன சொன்னாலும் கவிதை 
நீ ! 
என்னென்ன செய்தாலும் புதுமை 
தமிழுக்கு தொங்கும் அணிகலனே 
நீ !
மறைந்திட மாட்டாய் கவிமகனே 

    

Thursday, July 11, 2013

கவிதைச்சரம்

ருமை மாடு 
எவ்வளவு அப்பிராணி !
அதன் மீதமர்ந்துதான் 
எமதர்மன் வருவானென்று 
படித்ததில்லை நீங்கள்?

எனவே தீர்மானியுங்கள் 
மரணம் அச்சமூட்டக்கூடியதா என்று!

சடலங்களைக் கிடத்திவிட்டு
உயிரைமட்டும் கவர்ந்து செல்கின்றன 
மரணங்கள்.
சடலங்கள் ஒருவேளை அச்சமூட்டக்கூடும்.
அதற்கு 
மரணம் பொறுப்பாளியல்ல. 

மரணம்  
ஒரு நல்ல காதலியை 
அல்லது நல்லதொரு காதலனைப் போல
நமக்காக நெடுங்காலம் காத்திருக்கிறது 
அரவணைக்க.

நீங்கள் என்னதான் சொல்லுங்கள் 
கடைசியில் 
அதன் விருப்பம்தான் நிறைவேற போகிறது.

விலகி ஓடாமல் சிநேகிதமாகிக்  கொள்வது 
புத்திசாலித்தனமென்று சொல்லுகிறேன்.

எனவே தீர்மானியுங்கள்.   

ரதன் சந்திரசேகர்

Tuesday, July 2, 2013

கவிதைச்சரம்

தெய்வங்களைத் தொலைத்த தெரு

பூவரசம் பூவின் 
பீப்பி இசை கேளாமல் 
காகிதக் கப்பல்களை 
மழை நீரில் காணாமல் 
பம்பரம், கோலிகளின்
ஸ்பரிசம் கிடைக்காமல் 
மணல் வெதும்பும் 
தெருக்கள் - 
கரித்துக்கொட்டுமோ 
கார்டூன் சேனலை?

வல்லம் தாஜூபால் 

**********************************************************

மழைச் சிறுமி 

ழைக் கால 
மாலை வேளையில் 
தன் தந்தையின் 
கரங்கல்பற்றி 
குடைக்குள் நடக்கும் சிறுமி 
தந்தைக்குத் 
தெரியாவண்ணம் 
மறு கரம் மட்டும் 
மழையில் நனைந்தபடி 
மழையுடன் விளையாடியபடி 
வந்தாள் 
மனதில் மகிழ்ச்சி ததும்ப.
அந்தி சாய்ந்த கணத்தில் 
சிறுமியின் திசையில் 
மேகங்கள் புடைசூழ 
நகர்ந்துகொண்டிருந்தது 
அன்றைய மழையும்!

மாயாவி 

**********************************************************

சராசரி 

நேற்றைய பிரச்னை 
போலவே இன்றைய 
பிரச்னையையும் 
சதூர்யமாகச் சமாளித்த 
சந்தோஷத்துடன்
தொடர்கிறது அன்றாட 
வாழ்க்கை !

அ.யாழினி பர்வதம் 

**********************************************************

எழுதுதல் 

ரு தலைப்பின் 
கீழ் எழுதலாம் 
- இல்லையேல் 
எழுதியதிற்கேற்ப
ஒரு தலைப்பு இடலாம்...
எழுதத்தா முடியவில்லை 
கவிதை எனப்படுவதை!

ஆர்.சபரிவாசன் 

**********************************************************

அண்ணிமார் கதை 

ண்ணிகள் என்றாலே 
பிரியம் குழைத்த வெட்கமும் 
வெட்கம் குளித்த பிரியமும்தான்
கொழுந்தன்மார்களுக்கு

துவைப்பதற்கு 
எடுக்கும்போது 
நம் சட்டைப் பையில் இருக்கும் 
காதலியின் புகைப்படத்தையும் 
சிகரெட்டையும் 
நம்மிடமே 
திருப்பித் தந்து 
நாணமுறச் செய்கிறார்கள் 

நம் காதல்குறித்தும்
அரியஸ் குறித்தும்
அடிக்கடி 
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள் 

நண்பர்களோடு 
ஊர் சுற்றிவிட்டு 
வீடு திரும்புகையில் 
ஒட்டுமொத்தக் குடும்பமும் 
ஒன்றாக எதிர்க்க 
அண்ணிகள் மட்டும் 
ஆதூரமாய்ப் பேசி 
அமுது படைக்கிறார்கள்

தாயைப் போலவே 
நம் தவறுகளை 
மென்மையாய்க் கண்டிக்கும் 
அண்ணிகள் 
'தாயில்லாதவனின்'
மணிபர்ஸில்
புகைப்படமாய் 
இடம்பிடிக்கிறார்கள் 

ஏதோ ஒரு கோபத்தில் 
அண்ணனுடன் 
தனிக் குடித்தனம் 
போய்விட்ட பிறகு 
ஏனோ நம்மை 
ஒரு பகைவனைப் போல் 
பார்க்கத் தொடங்குகிறார்கள் 

அ.நிலாதரன்                 

Friday, June 7, 2013

கவிதைச்சரம்

காத்திருக்கிறேன் தோழி !

ரு தாயின் வயிற்றில் 
பிறக்கவில்லை !

உறவென்ற பந்தமும் 
நமக்குள் இல்லை !

எங்கிருந்தோ வந்தாய் 
என் அருகில் அமர்ந்தாய் !

இதழ் விரிந்த சிரிப்பில் 
இதயத்தை...
இடமாற்றிக் கொண்டாய் !

வீட்டுப் பாடம் 
எழுதவில்லை என 
ஆசிரியர் என்னை அடிக்க 
அழுது துடித்தாய் நீ !

எனக்காக உன் 
உதடுகள் சிரித்தன...
உனக்காக என் 
கண்கள் அழுதன !

பால்யம் முதல்...
பாவாடை தாவணி 
பருவம் வரை 
பக்கத்தில் இருந்தவளே...

உதயணன் - யூகி 
கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தை 
அதியமான் - அவ்வை 
யார் யார் பெயரையோ 
கூறுகின்றனர் 
உன்னையும் என்னையும் 
விட்டு விட்டு 
என்றாயே...
எங்கே நீ தொலைந்தாய் !

உன் சாயலில் தெரியும் 
ஒவ்வொரு பெண்ணையும் 
ஓடிச் சென்று 
உற்று நோக்குகிறேன் 
நீயாக இருப்பாயோ என்று !

கல்யாணம் முடிந்து 
கனவுகளுடன் 
போனவளே...
கடுதாசி எழுதுகிறேன் 
என்ற உன் கரத்தை 
யார் தடுத்தார் !

நாட்கள் மாதங்களாகி 
மாதங்கள் வருடங்களாகி 
வருடங்கள் உருண்டோடி 
வயோதிகமும் வந்துவிட்டது...
உன் கடிதம் மட்டும் 
வரவேயில்லை !

காத்திருக்கிறேன் தோழி...
காலன் என்னை 
அழைப்பதற்குள் 
காண்பதற்கு 
ஒரு முறை வந்துவிடு !

-திலகவதி முருகதாஸ்-    

Tuesday, April 23, 2013

அத்தமனமாக ஆதித்தன் அவன்

தாய்ப்பால் போல் சுத்தமனம்;
தமிழ்மொழி பால் பித்தமனம்;
தமிழர்க்கான யுத்த மனம்; இத்தகு
தமிழனுக்கேது அத்தமனம் ?

அத்தமனமாக
அவனொன்றும்.
சிவப்பு ஆதித்தனல்ல;
சிவந்தி ஆதித்தன் !

சிவந்தி ஆதித்தன்
சிரஞ்சீவியாக வாழ்வன்...
அன்றாடம்
அதிகாலையில்
அச்சடிக்கும் இதழ்களிலும் - அவற்றை
உச்சரிக்கும் இதழ்களிலும் !

கலைத்தாயின்
காலில் கட்டிய நூபுரம்; அவன்
தன் காசில்
தென்காசியில் கட்டிய கோபுரம் !

அவனது
அழகிய
உள்ளங்கை ரேகைகள்
உட்கார்ந்திருக்கின்றன
ஓர் இடத்தில்; திருச்செந்தூர்
தேர் வடத்தில் !

அவன்-
அவியாது-
ஒளிரும்
ஒலிம்பிக் சுடர்; அதற்கு
வாயு தேவனால்
வாராது இடர் !

ஓரைந்து
ஒலிம்பிக் வளையங்களில்
அவனும் ஒன்று; வாழ்ந்திருப்பான்.
ஆயிரம் காலம் நின்று !

எவருக்கும் தெரியாது
எங்களுக் கிடையே இருந்த...
நாற்பதாண்டு கால
நட்பு; அது
பேசுதற் கரிய
பெட்பு !

எமன்
எடுத்துச் சென்றது
அவனது
ஆக்கையை; ஆனால்
வரலாறு
வாசிக்கட்டு மென்று
விட்டுச் சென்றான் அவன்
வாழ்க்கையை !

கொடையால்;
கோவில் பணியால்...
சிவந்தி ஆதித்தன்
சாவாப் புகழை ஏற்றான்;
அந்தகன்
அந்த விஷயத்தில் தோற்றான் !   


தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் மறைவையொட்டி கவிஞர் வாலி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் கவிதையை உளறுவாயன் வாசகர்களோடு பகிர்வதனூடு உங்கள் அஞ்சலியையும் எங்கள் இதய அஞ்சலியையும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் தினத்தந்தி குடும்பத்தினர்க்கும் வாசகர்களுக்கும் காணிக்கையாக்குகின்றோம்.      

Friday, April 19, 2013

லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்...  

அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.

அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள்.

இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்... இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

Monday, April 15, 2013

காலத்தால் அழியாத இசை உலகின் இமயம் P.B.S

இசை உலகின் இமயம் சரிந்து விட்ட துயரம் நெஞ்சை நெருடுகிறது.
P.B.S என்ற அந்த மூன்றெழுத்துக்குள் எத்தனை இனிமை கொட்டிக் கிடந்தது.
P.B.S என்றால் Play Back Singer என்றும் விரிவுப்படுத்தக்கூடிய விந்தை அவருக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
P.B.S க்குள் ஒளிந்திருந்த கவிஞனை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவின் முக்கியமான மொழிகளை எல்லாம் அவர் குரலின் இனிமை அலங்கரித்து சிறப்பித்தது.
மெல்லெனப் பேசி அனைவரையும் அரவணைத்த அற்புத மனிதன்,
இறைவன் திருச்சபையில் இசை பணிக்காய் பதவி ஏற்க புறப்பட்டான்.
மீண்டும் அவர் வருவார், நல்லிசை தருவார் என நம்புவோம்.

"  வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்,
வாசல் தோறும் வேதனை இருக்கும்,
வந்த துன்பம் எதுவென்றாலும்,
வாடி நின்றால் ஓடுவதில்லை,
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்,
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"  .  
 
  

Wednesday, April 10, 2013

இன்றும் ஒரு தகவல் - ஹனிமூன்

திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர். எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம். ருமேனிய மக்கள் புதுமண பெண்ணின் முகத்திலும், உடலிலும் தேனை தடவிக்கொண்டு முதலிரவை கொண்டாடுவார்கள்.

புகுந்தவீட்டில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கு ஒரு கோப்பை தேனை பருக கொடுப்பது துருக்கியர் வழக்கம். போலந்து நாட்டில் மணப்பெண்ணின் உதட்டில் தேன் தடவி, அதை மணமகனை சுவைக்க வைப்பார்கள். பலகாரங்களை தேனில் தொட்டு மணமக்கள் சாப்பிடுவது பால்கன் நாடுகளில் உள்ளமரபு. ஒரு கோப்பையில் தேனை வைத்துக்கொண்டு மணமகனும் மணமகளும் மாறிமாறி பருகுவது சீனர்கள் வழக்கம். இப்படி புதுப்பெண், மாப்பிள்ளைக்கு பல தரப்பட்ட பழக்கங்களை தேனைக்கொண்டே உருவாக்கியுள்ளார்கள். எல்லா நாடுகளிலுமே திருமணமான தம்பதிகளுக்கு தேனை கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதனால்தான், புதுமண தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவிற்கு ஹனிமூன் என்று தேனின் பெயரையே வைத்து விட்டார்கள்.

Wednesday, March 27, 2013

தினம் ஒரு தகவல் - மாரடைப்புக்கு 'ஸ்டென்ட்' சிகிச்சை

 யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால் நோயாளியை பரிசோதிக்கும் டாக்டர் "ஆஞ்சியோ பண்ணிடலாம்; 'ஸ்டென்ட்' வைத்து விட்டால் போதும்" என்பார்.

'ஸ்டென்ட்' சிகிச்சை உண்மையில் வரப்பிரசாதம் என்றுதான் கூற வேண்டும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க 'ஸ்டென்ட்' சிகிச்சை கைக்கொடுக்கிறது என்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவில் பெரும்பாலும், இதய ரத்த நாளங்களில் அடைப்பை நீக்க 'ஸ்டென்ட்' பயன்படுத்துகின்றனர் டாக்டர்கள். அதில் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அதன்பின் தேவைப்பட்டால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்கின்றனர். பெரும்பாலானோருக்கு 'ஸ்டென்ட்' பொருந்தியபின் மருந்து மாத்திரையில் சீராக்கி விட முடிகிறது.

'ஸ்டென்ட்' என்றால் என்ன? 'ஸ்டென்ட்' என்பது மிகச்சிறிய வலைகுழாய்; உடலில் எந்த பாகத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டாலும், ரத்த ஓட்டத்தை சீராக்க இந்த வகை ட்யூப், ரத்த குழாயில் செருகப்படுகிறது. இதற்காகத்தான் 'ஆஞ்சியோபிளாஸ்டி' என்ற சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆஞ்சியோவின் முக்கிய கட்டம்தான் 'ஸ்டென்ட்' வைப்பது.
ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு மட்டுமின்றி, ரத்தக்குழாய் பலவீனமாக இருந்து, அதனால் அது வெடிப்பதை தடுக்கவும் 'ஸ்டென்ட்' பயன்படுத்தப்படுகிறது. உலோகம், ஒருவகை இழைகள், மூலம் 'ஸ்டென்ட்' தயாரிக்கபடுகிறது. சிலவகை ஸ்டென்ட்கள், மருந்து தடவியதாகவும் இருக்கும். இதயத்துக்கு பாதுகாப்பு அவசியம்.

இதயத்தின் உள்ள இரத்தக்குழாய்கள்  சீராக இருப்பது முக்கியம். அதில் ரத்தம் செலுத்தப்பட்டு, பின்னரே மற்ற உறுப்புகளுக்கு செல்கிறது. இதய ரத்தக்குழாய்கள் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது, நெஞ்சுவலி, அதைத்தொடர்ந்து மாரடைப்பு ஏற்படுகிறது. இதைத்தான் 'ஆஞ்சினோ' என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதைத்தடுக்க ஆன்ஜியோ பிளாஸ்டி செய்யப்படுகிறது. 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டவுடன், ரத்த நாளத்தில் அடைப்பு நீக்கப்படுகிறது. வலைட்யூப் வழியாக ரத்தம் சீராக பாய்கிறது. 'ஸ்டென்ட்' பொருத்தாவிட்டால், மீண்டும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். பக்கவாதத்தை தடுக்கும் வலது, இடது கழுத்தில் 'கரோடிட்' என்ற ரத்தக்குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப்படும் ரத்தம் இந்த ரத்தநாளங்கள் வழியாகத்தான் மூளைக்கு செல்கின்றன. இதிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதைத்தடுக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை பயன்படுத்தபடுகிறது. 'ஸ்டென்ட்' வைத்தவுடன் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி, பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது. இதய ரத்தக்குழாய்களில் பலன் தரும் 'ஸ்டென்ட்', பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கிறது என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நிபுணர்கள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர்.       

Thursday, March 7, 2013

சந்தோசம் எனும் சவாரி போவோம்... சலோ... சலோ...

சந்தோசத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்க மாட்டான்.அதற்காக அவன் அலையப்போவதுமில்லை.

சந்தோசம், சந்தோசமாக இருக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான்  இருக்கிறது.கவலைப் படுவதற்கான காரணிகளைத்  தேடித்தேடி கவலைப் பட்டுக்கொண்டிருக்கிற நீங்கள்தான் அங்கிருக்கும் சந்தோசத்திற்கான வெளியை மறைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

கேவலம் டிபன் பாக்ஸில் இருக்கிற உப்பு மாவிற்கு ..உங்கள் சந்தோசத்தைக் கெடுக்கும் வல்லமை இருக்குமென்றால் உங்களின் சந்தோஷ உணர்வு எவ்வளவு பலவீனமானதாக இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்.

ஏன் இப்படித் தேடித்தேடிக் கவலையை அனுபவிக்க நீங்கள் உங்கள் சக்தியை செலவிடுகிறீர்கள்.காரணம் உங்கள் சந்தோசத்தை நீங்கள் தீர்மானிப்பதில்லை... அதுதான் நிதர்சனமான உண்மை.

சந்தோசத்தை உங்களுக்குள் வைத்திருங்கள்..அப்படி வைத்திருந்தால்  யாராலும் அதை தொந்தரவு செய்ய முடியாது. நீங்களும் சந்தோசத்தை நிறையப் பேருக்குக் கொடுக்கலாம்.

நம் அக்கறை சிரிக்கக் கூடாது என்பதில்இல்லை...உண்மையில் பார்த்தால் அது அழக்கூடாது என்கிற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது.

சிரிப்பு வந்தால் சிரியுங்கள்.நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம்.கொஞ்சமாகச் சிரித்து கொஞ்சமாக அழுவதை விட ...நிறையச் சிரித்து நிறைய அழுங்களேன்

நாம் மகிழ்வோடு இருப்பதற்காக படைக்கப்பட்டவர்களா... இல்லை அழுது  கொண்டு திரியட்டும் என்று சொல்லி படைக்கப்பட்டவர்களா? நிச்சயமாக அழுது புலம்புவதற்காக மட்டும் படைக்கப் பட்டிருக்க மாட்டோம்.

'இங்கே சந்தோசங்கள் நிறைய இருக்கின்றன.அனுபவிக்கத் தான் ஆள் இல்லை' என்கிறது ஒரு சீனப் பழமொழி.

நாளை உலகம் இல்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? அநேகமாய்.. நாளைக்கு உலகம் இருக்காதா ? அய்யய்யோ அப்படி உலகம் இல்லையானால் என்ன செய்வது என்று இப்போதே கவலைப்பட ஆரம்பித்துவிடுவீர்கள்.

நாளை குறித்த எல்லாக் கவலைகளுக்கும் பின்னால் இருப்பது..தோல்வி குறித்த பயம்தான் ஜெயித்துக்கொண்டு இருக்கவேண்டுமானால் நீங்கள் வெற்றியை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும்..  

தோல்வியைப் பற்றியல்ல. தோற்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காக நீங்கள் ஜெயிக்கப் பார்த்தால், தோல்விதான் உங்களுக்குமிஞ்சும்.

வெற்றியை மட்டும் மனதில்வைத்துக்கொண்டுஓடுங்கள்...அதிவேகமாக. 

தோல்வி உங்களைத் துரத்தட்டும்..பரவாயில்லை. ஆனால் தோல்வியை துரத்திக்கொண்டு நீங்கள் ஓடாதீர்கள்....

நன்றி கோபிநாத்

Monday, February 25, 2013

இன்றும் ஒரு தகவல் - மனித உடல்

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன       

Thursday, January 10, 2013

இன்றும் ஓர் தகவல் - கேசினோக்களில் தில்லாலங்கடி

வெளிநாடுகளில் சூதாடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் தான் கேசினோக்கள். கோடிகள் சர்வசாதாரணமாக புரளும் இந்த இடத்தில் தில்லுமுல்லு செய்ய ஏகப்பட்ட தில் வேண்டும். மாட்டிக்கொண்டால் தோலை உரித்து தொங்கவிட்டு விடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட இடத்திலும் தில்லாலங்கடி வேலை காட்டுவதிலும் கில்லாடி ரிச்சர்டு மார்கஸ். கண் இமைக்கக் கூட காத்திராமல் டோக்கன் மாற்றுவது ரிச்சர்டு மார்கசின் டெக்னிக். கேசினோக்களில் பணத்தை கவுண்டரில் கொடுத்து டோக்கன்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு டாலர் முதல் பல ஆயிரம் டாலர்கள் வரை பணத்தின் மதிப்புக்கு ஏற்ப கலர்கலராக டோக்கன்கள் கொடுப்பார்கள். மார்கஸ் வெறும் 3 டோக்கன்களோடுதான் தனது ஆட்டத்தை ஆரம்பிப்பார்.

அவரிடம் ஒரு 100 டாலர், இரண்டு 5 ஆயிரம் டாலர் டோக்கன்கள் மட்டும்தான் இருக்கும். ஒருவேளை தோற்றுவிட்டால் 5 ஆயிரம் டாலர் டோக்கன்களுக்கு பதிலாக மைக்ரோ செகண்டுகளில் 100 டாலர் டோக்கன்களாக மாற்றிவிடுவார். இதனால் மார்கசிற்கு 300 டாலர் மட்டுமே நஷ்டம். ஜெயித்துவிட்டால் டோக்கன்களை மாற்ற மாட்டார்கள். இவருக்கு 10 ஆயிரத்து 100 டாலர்கள் லாபம். இதனால் 33 முறை தோற்றாலும் கூட ஒருமுறை ஜெயித்தாலே லாபம் பார்த்துவிடலாம். மார்கஸ், கேசினோ, கேசினோவாக மாறிமாறி ஏறி ஏமாற்றினார். 25 ஆண்டுகளாக குறைந்தபட்சம் 5 மில்லியன் டாலர்கள் வரை இப்படி ஏமாற்றி சம்பாதித்துவிட்டார்.

ஆனால் அதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அவரே பொறுமை இழந்து தி கிரேட் கேசினா ஹெயிஸ்ட் என்ற நூலை எழுதி அதில் தனது தில்லாலங்கடி வேலைகளை பற்றி சொன்னார். கேசினோ உலகம் அதிர்ந்து போனது. கேசினோக்கள் எப்போதும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கும். நாம் பரபரப்பின்றி பதற்றமின்றி செயல்பட்டால் சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்பது மார்கசின் டிப்ஸ். கேசினோ பார்ட்டிகள் மத்தியில் இந்த புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றது.

Monday, January 7, 2013

பீட்சா

பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது . ஆனால் உண்மையில் பிட்சா ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.

1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார். தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா. பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்.

அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார். சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல பிட்சாவை உருமாற்றி விட்டார்.

போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா பிட்சா என ராணியின் பெயரையும் வைத்து ராணிக்கு ஐஸ் வைத்துவிட்டார். இப்படி உள்ளூரில் பிரபலமான பிட்சா, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்களை பிட்சா சிறைபிடித்து விட்டது. ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள். பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர். அவ்வளவுதான் சர்வதேச தரத்திற்கு பிட்சா உயர்ந்துவிட்டது.

விளைவு இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் பிட்சா ஹட், பிட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன. பிட்சா பிரியர்கள், பிப்ரவரி 9ஆம் தேதியை உலக பிட்சா தினமாக கொண்டாடும் அளவுக்கு பிட்சா சர்வதேச சூப்பர் ஸ்டாராகிவிட்டது.

அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும்

சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுபவர்களுக்கு இது கசப்பான தகவல் தான். அதிகம் சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மந்த புத்தி என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மை தான் என்கிறது, இந்த ஆய்வு.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டார்கள். 600 முதல் 1526 கலோரிகள், 1526 முதல் 2143 கலோரிகள், 2143 முதல் 6000 கலோரிகள் உணவு உட்கொள்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 3 பிரிவினரிடமும் ஒரு வினா- விடை கொடுக்கப்பட்டது. இதில் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு விடையை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். 2வது வகையினர் அதை விட சற்று குறைவான பதிலையே கொடுத்துள்ளனர். 3வது வகையினர் மிக மிகக்குறைவான கேள்விகளுக்கே பதில் கூறியுள்ளனர். அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படலாம். இந்த வரிசையில் ஞாபக சக்தி குறைவு, மனச்சிதைவு போன்ற நோய்களும் ஏற்படும் என்று புதிய ஆய்வு சொல்கிறது. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்பது தான் முக்கியம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆகி விட்டால் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்த்து உணவு சாப்பிடும் வேளைகளை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து. சாப்பிடாமல் இருந்தாலும் ஆபத்து. எனவே மிதமான உணவை தினசரி 5 முறைகள் சாப்பிட்டால் நல்லது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவான சாப்பாடே ஆரோக்கியமான வாழ்வு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது உடலுக்கும் தீங்கு ஏற்படாது. ஞாபக சக்தியும் குறையாது.

Saturday, January 5, 2013

அழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்


பண்டைய தமிழர்கள் எத்த‍னை விதமான ஆடற்கலைகள் நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் தெரியுமா? ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு பெண், பேசும்போது எங்கே சார்! நாங்க இருக்கிற இந்த சின்ன‍ ஃபிளாட்டில் எப்படி சார்! நம்ம‍ ஆடிப்பாடுவது, என்று கேட்க அதற்கு கோபிநாத்தோ, சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே!? நமது பாரம் பரிய கலைகளை ஆடுவது வெட்கமல்ல‍, இதுபோன்ற கலைகளை ஆடமாட்டோம் என்று கூறுவதுதான் வெட்கக்கேடானது என்று சம் ம‍ட்டியால் அடித்தாற்போல் உரைத்தார்.

ந‌மது பழம்பெரும் தமிழர்கள் நமக்காக விட்டுச்சென்ற, (நம்மால் அழிந்துகொண்டிருக்கும்) ஆடற்கலைகளை விதை2விருட்சம் இணையம் வாயிலாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

01) அம்மன் கூத்து
02) அன்னக்கொடி விழாக்கூத்து
03) அனுமன் ஆட்டம்
04) ஆலி ஆட்டம்
05) இருளர் இனமக்களின் ஆட்டம்
06) இலாவணி
07) எக்காளக் கூத்து
08) ஒயிலாட்டம்
09) கரகாட்டம்
10) கரடியாட்டம்
11) கழியலாட்டம்
12) கணியான் கூத்து
13) காவடியாட்டம்
14) குறவன் குறத்தி ஆட்டம்
15) குரவை, துணங்கை, தழூஉ – ஆட்டங்கள்
16) கோணங்கியாட்டம்
17) கொக்கலிக்கட்டை ஆட்டம்
18) கோலாட்டம்
19) கும்மியாட்டம்
20) சக்கை குச்சி ஆட்டம்
21) சக்கையாட்டம்
22) சலங்கையாட்டம்
23) சிலம்பாட்டம்
24) சேவயாட்டம்
25) துடும்பாட்டம்
26) தெருக்கூத்து
27) தேவராட்டம்
28) பரதநாட்டியம்
29) பறைமேளக் கூத்து
30) பறையாட்டம்
31) பாவைக்கூத்து
32) பாம்பாட்டம்
33) பெரியமேளம்
34) புலி ஆட்டம்
35) பொம்மலாட்டம்
36) பொய்க்கால் குதிரை ஆட்டம்
37) மகுடிக் கூத்து
38) மயில் ஆட்டம்
39) மரக்காலாட்டம்
40) மாடாட்டம்
41) ராஜா ராணி ஆட்டம்
42) ஜிக்காட்டம்