Wednesday, December 26, 2012

மீண்டும் வேண்டாம் ஒரு சுனாமி


2004 இதே நாளில் தான், கடல் மாதாவின் ஆக்ரோஷத்தை 'சுனாமி' என்ற பெயரில் தெற்காசிய கண்டம் நேரில் அறிந்தது. அதிர்ச்சியில் விழி இமைக்க மறந்து உறைந்து நின்றது.  ஆழிப் பேரலை, சுனாமி என்ற வார்த்தைகளை கூட அறியாத மக்களுக்கு ராட்சச உருவமாய் அந்த வார்த்தைகள் காட்சி அளித்தன.  அன்று  இதே நாளில் சுமத்திரா தீவு பூகம்பத்தால் குலுங்க, அதனால் உருவான சுனாமி பேரலை வங்கக் கடலை கொந்தளிக்கச் செய்தது. கடலோர நாடுகளான இலங்கை, இந்தோனேசியா என புரட்டிப் போட்டது. இரவோடு இரவாக நூற்றுக் கணக்கான தொலைவு பயணம் செய்து வந்து 26ம் தேதி அதிகாலையில் இந்தியாவையும் உதைத்து எழுப்பின, சுனாமி பேரலைகள். அதன் அகோர பசிக்கு கடலோரப் பகுதிகள் இரையாகின. அய்யோ, காப்பாற்றுங்கள் என்ற அபயக் குரல் எழுப்பக் கூட அவகாசம் இன்றி நீருக்குள்ளேயே ஆயிரக்கணக்கான உயிர்கள் அடங்கின.

தமிழகத்தில் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை கடலோர பகுதிகளை சுனாமி பேரலையின் கோரப்பசிக்கு மனித உயிர்கள் இரையாயின. பிஞ்சு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் கடல் அலைகள் விட்டுவைக்கவில்லை. கடல் தாய் நடத்திய இந்த சதிராட்டத்தில் குடும்பங்கள் மட்டுமல்ல, உறவுகளும் சின்னாபின்னமாகின. பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவனை பறிகொடுத்த மனைவி, குழந்தைகளை பலி கொடுத்த பெற்றோர் என மனதை உருக்கும் பிரிவுகள் நொடியில் நடந்து முடிந்தன. சுனாமியால் சின்னாபின்னமான லட்சக் கணக்கான குடும்பங்களில் இன்றளவும் சோகம் இழையோடுகிறது. காயங்கள் ஆறினாலும் வடுக்கள் இன்னும் மறையவில்லை. இதனால்தான், பவுர்ணமி, அமாவாசை தினங்களில் வழக்கத்துக்கு மாறாக கொந்தளிக்கும் சாதாரண அலைகள்கூட சுனாமி பீதியை உருவாக்கிச் செல்கின்றன. அது அச்சமாகவோ, பீதியாகவோ மட்டுமே இருந்துவிட்டு போகட்டும். மீண்டும் நிஜமாகி விட கூடாது.  இதுவே, நமது பிரார்த்தனை.

Monday, December 24, 2012

உண்மை நாயகர்களின் நினைவு நாள் இன்றுமக்களின் மனசில் நீங்காது நிறைந்து விட்ட மக்கள் திலகம், இந்த மண்ணகம் விட்டு விண்ணகம் புகுந்த நாளின்று. 
இந்தநாளில் தான் புரட்சித் தலைவர், உளமார நேசித்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களும் , 
'மாசிலா உண்மைக்காதலே ....என தனது சொந்தக்குரலில் பாடி புரட்சித்தலைவருடன் இணைந்து நடித்த திரையுலக தேவதை பானுமதி அம்மாவும் விண்ணுலகெய்தினர் . 
இந்தநாளில் அவர்களின் நினைவை நன்றியோடு மனதில் கொள்வோம் . 

அவர்கள் நினைவாக வீடியோ காட்சிகள்:

Monday, December 17, 2012

இன்றும் ஒரு தகவல் - உலகின் அந்திமக் காலம்

உலகின் இறுதிக்காலம் இந்த மாதம் என்று பல யூகங்கள் சொல்கின்றன. ஆனால் அறிவியல்பூர்வமான இறுதிக்காலத்தை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதன்படி சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால், தற்போதைய வெப்ப அளவை விட 40 சதவீதம் அதன் வெப்பம் அதிகரிக்கும். இதனால் சூரியன் தனது நிலைப்புத் தன்மையை இழக்கத் தொடங்கும். அதன் நடுவே கறுப்பு நிறத்தில் பெரிய துளை ஏற்பட்டு வெடித்துச் சிதறும். அதன் மூலம் பூமி உச்சபட்ச வெப்பத்தில் கருகி அழிந்து விடும். இதுதான் உலகுக்கும், சூரியனுக்குமான இறுதிக்காலம் என்கிறார்கள், அவர்கள். இது நிறைவேற இன்னும் பல கோடி ஆண்டுகள் உள்ளன.

உலக வெப்பமயமாதல்தான் மனித இனத்தில் இறுதிக் காலம் என ஒரு கருத்து நிலவுகிறது. உலகின் மூத்த பழங்குடி இனங்களில் ஒன்றான விவா இனத்தை சேர்ந்த ஒரு மனிதரிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள். இங்கு இருக்கும் உறைபனி முற்றிலுமாக மறைந்துபோனால், அதுதான் மனிதனின் கடைசிகாலமாக இருக்கும் என என் மூதாதையர்கள் கூறியுள்ளனர். இப்போது இவை ஏன் மறைந்துகொண்டே வருகின்றன என்று கேட்டு ஆராய்ச்சியாளர்களை அவர் மிரள வைத்திருக்கிறார். உலக வெப்பத்தை அதிகரித்து, பனிப்பாறைகளை உருக வைத்து, அனைத்து உயிரினங்களையும் அழிவின் விளிம்புக்கு கொண்டு வந்து விட்டார்கள், மனிதர்கள். எக்கச்சக்க தொழிற்சாலை புகை, வாகன புகை, தேவைக்கு அதிகமான மின்சாரம் இவையெல்லாம் சேர்ந்து பூமியின் வெப்பத்தை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா? ஒவ்வொரு நாளும் இரண்டு அணுகுண்டு வெடிப்புக்கு சமமான புகை பூமியில் இருந்து வெளியேறுகிறது. இதனால், பூமியில் இருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயு மண்டல பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்துள்ளது. இந்த வெப்பம் அதிகரிப்பால், 13 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கு துருவ பனிப்பாறைகள் உருகியுள்ளன. இதன் விளைவாகவே இயற்கை எழில் கொஞ்சிய பல இடங்கள் மனிதன் வாழவே முடியாத இடங்களாக மாறி வருகின்றன. நியூகினியாவில் பல தீவுகள் கடலுக்கடியில் போய்விட்டன. துவாலு என்ற நாட்டின் பல கடற்கரைகள் அழிவின் விளிம்பில் உள்ளன. கிரீன்லாந்தில்  உள்ள உலகின் மிகப்பெரிய பனி அடுக்குகளும், துருவப்பாறைகளும் உருகினால், ஒட்டுமொத்த மனித இனமும் ஜலசமாதி அடைய வேண்டியதுதான். இந்த பனி அடுக்குகள் பல ஆண்டுகளுக்கு முன்பே உருகத் தொடங்கிவிட்டன.

சூரியனால்தான் பூமி அழியும் என்பது அறிவியல் விதி. ஆனால் வாழுமிடத்தை வெப்பமயமாக்கி, மனிதன்தான் உலகின் இறுதிக்காலத்தை நோக்கி வேகவேகமாக போய்க்கொண்டு இருக்கிறான்.

Tuesday, December 11, 2012

அதிசயப் பிறவி ரஜினிரஜினி !
மூன்றெழுத்தில் மூடிக்கிடக்கும்
முகம் காட்டா மகத்துவம் !

பலரைத் தத்தெடுக்கும் திரையுலகம்
ஒரு சிலரைத்தான்
பிரசவிக்கும் !

இவன்
திரைத்தாயின்
வித்துகளில்
'முத்து' !

உலகம் வியக்கும் உன்னதங்கள்
அத்தனையும் பெற்றும்
மனிதம் மறவா 'தங்கமகன்' !

அதிகாரம் இவனை
வாவென அழைத்தும்
அணைக்க மறுக்கும்
'அதிசயப் பிறவி' !

அரிதாரம் பூசும் இவனுக்கு
அறம் - பொருள் - இன்பம் என்பது
'மூன்று முகம்' !

பொருள் தேடும் உலகில்
அருள் தேடும் 'பாபா' !

'ஆறிலிருந்து அறுபது வரை'
மயங்கிக் கிடக்கும்
'அபூர்வ ராகம்' !

எண்ணும் எழுத்தும்
கண்ணெனும் உலகில்
12-12-12 எனும் பிறப்பெண் கொண்டு  
எண்களையும் எங்களையும்
வசப்படுத்திய 'எந்திரன்' !

ஆயிரம் உண்டு
அவனைச் சொல்ல
அதற்கு வேண்டும்
'ஆயிரம் ஜென்மங்கள்' !

ரஜினி...

பார்வைக்கு எளியன் !
பழகுவதற்குரியன் !
தேசப் பிரியன் !
மானுட நேயன் !
மொத்தத்தில்
'மனிதன்' !

நூறாண்டுக்கொருமுறை பூக்கின்ற பூவல்லவா... இது அனைவரின் இதயம் கவர்ந்த ஒரு திரைப்பாடல் ஆனால் இந்த பூவை தேடியபோது எமக்கு கிடைத்த ஒரே பூ என்றும் வாசம் வீசும் 'ரஜினி' என்னும் மலர்தான் (12-12-12) இது அடுத்த நூறாண்டில் நீங்கள் காணப்போகும் அதிசய எண் வரிசை. அது ரஜினியின் பிறந்த நாள். இந்த நாளை நாமும் கொண்டாடுவோம்.     

குகன்

கேளடா... மானிடா...

'உலகம் அழிந்துவிடும்' என்னும் மூடக்கதைகளில் மூழ்கிக்கிடக்கும் மாந்தர்களுக்கு தமிழ் கவி பாரதியின் பிறந்தநாளான இன்று (11.12.2012) அவன் திருவாய் மலர்ந்த நற்றமிழ் வரிகள் நலம் பயக்கும் என்று நினைந்து நன்றியோடு நவில்கின்றோம். கேளீர் கேளீர் மதியுடை மாந்தரே!     

பராசக்தியின் ஆணை

விரிந்து சுழலும் பூமி பந்தில்
பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல் -
நீர் அந்த சுழற்சியிலே தலை கீழாய்க் கவிழ்ந்து
திசை வெளியில் ஏன் சிதறிப் போய் விடவில்லை?.
அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்து விடாதபடி ஆதரிக்கிறாள்.
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள்.
அது பொருள்களை நிலைப்படுத்துகிறது.
மலை நமது தலை மேலே புரளவில்லை.
கடல் நமது தலை மேலே கவிழவில்லை.
ஊர்கள் கலைந்து போகவில்லை.
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது.
இது பராசக்தியின் ஆணை. 
இதனால்....
அச்சம் தவிர் - ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி - ஈகை திறன்
உடலினை உறுதிசெய் - ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு - ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள் - ஒற்றுமை வலிதுகொள்
ஓய்தல் ஒழி - ஔடதம் குறை
கற்ற தொழுகு - கூடித்தொழில் செய்
நேர்படப் பேசு - போர்த்தொழில் பழகு
பெரிதினும் பெரிது கேள் - சாவதற்கு அஞ்சேல்
புதியன விரும்பு - வையத் தலைமை கொள்.