Monday, November 19, 2012

இன்றும் ஒரு தகவல் - ரெமி ஸ்லீப் மாஸ்க்

கனவு காணாதவர்கள் யாருமே இருக்க முடியாது. தாங்கள் காணும் நல்ல கனவுகள் நனவாக வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் நல்ல கனவுகள் மட்டுமே எப்போதும் வருவதில்லை. கெட்ட கனவுகளும் வந்து மனதை சஞ்சலப்படுத்துகின்றன. பொதுவாக கனவு என்பது நம்கையில் இல்லை. அது தூக்கத்தில் எப்போது வரும், எப்போது மறையும் என்பது யாருக்கும் தெரியாது. கனவுகளில் பகல்கனவு, அதிகாலை கனவு, இரவு கனவு என பிரிக்கின்றனர். பகல்கனவு பலிக்காது என்றும், அதிகாலை காணும் கனவு பலிக்கும் என்பதும் நம்பிக்கை. இப்போது விரும்யபிதை கனவாக காண்பதற்காக புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'ரெமி ஸ்லீப் மாஸ்க்' எனப்படும் இந்த கருவி ஒரு முகமூடி. இதை தூங்கும்போது முகத்தில் அணிந்து கொண்டால் போதுமாம். விரும்பிய கனவை காணலாமாம். இந்த கருவியில் 6 சிவப்பு, எல்.இ.டி. விளக்குகள் உள்ளன. இவை தூங்கும் போது மூளையை பார்த்துக்கொண்டே இருக்கும். ஆனால் உங்களின் தூக்கம் கெட்டுப்போகாது. இந்த விளக்குகள் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நீங்கள் காண நினைக்கும் கனவுகள் பற்றிய பதிவுகளை மூளைக்கு பிரதிபலிக்கும். அப்போது நீங்கள் விரும்பும் கனவு உங்கள் மனக்கண்ணில் தெரியும்.

கெட்ட கனவுகள் வருவதை தடுக்கவும், பயத்தை போக்கவும் இந்த கருவி மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று இந்த கருவியை கண்டுபிடித்துள்ள டுன்கன்பிராசியர், ஸ்டீர் மெக்கூய்கன் என்ற இரு விஞ்ஞானிகளும் உறுதியளித்துள்ளனர். தினமும் 15-20 வினாடிகளுக்கு ஒருமுறை உங்களது விருப்பம் இந்த கருவி மூலம் மூளைக்கு செலுத்தப்பட்டு அதன் அடிப்படையில் நீங்கள் விரும்பிய கனவு மனக்கண்ணில் தோன்றும் என்று இதை கண்டுபிடித்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த கனவு எப்போது  நிறைவேறும் என்று தெரியவில்லை. காரணம் இந்த கருவி இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

Saturday, November 17, 2012

கவிதைச்சரம்

அலுவல் 

பவழமல்லியை ரசிக்காமல்
நான் அலுவகத்தில் அடங்கியதாய்
ஆதங்கப்படுகிறாய்

மூழ்கி எழ
உனக்கு நைல் நதி
எனக்கு ஃபைல் நதி

பார்க்க
உனக்குப் பூவனங்கள்
எனக்கு ஆவணங்கள்

கோப்புகள் வெறும்
காகிதங்கள் அல்ல
உதிரமும் உணர்வும் பொங்கும்
மானுட இதய நகல்கள்

விரைவில் இவற்றைத்
தீர்வுக்கு அனுப்புவது
விண்ணப்பித்தோர் வாழ்வில்
விளக்கை ஏற்றுவது

ரசிப்பதை அலுவல்போல்
செய்பவன் நீ
அலுவலை ரசித்துச்
செய்பவன் நான்!

-வல்லம் தாஜூபால்


**************************************************

இரங்கல் அறிவிப்பு


குச்சி நட்டுப்
பந்தல் போடவில்லை
கொட்டுச் சத்தமும் கேட்கவில்லை
கண்ணீர் அஞ்சலியைக்
காணிக்கையாக்கும்
நட்பு வட்டாரத்தில்
இரங்கல் சுவரொட்டிகளும்
கண்ணீர் அஞ்சலியைக்
காணிக்கையாக்கும்
நட்பு வட்டாரத்தில்
இரங்கல் சுவரொட்டிகளும்
கண்ணில் தென்படவில்லை
இன்னாரது தகப்பனாரும்
இன்னாரது கனவருமாகிய
இன்னார் இயற்கை எய்தினார்
என்று ஏற்ற இறக்கத்துடன்
கூறிச் செல்லும்
இரங்கல் அறிவிப்பவனின்
இறுதி ஊர்வலம்
சென்றுகொண்டிருந்தது
எவ்வித அறிவிப்புமின்றி !

-திறுமாளம் புவனாநித்திஷ் 


**************************************************

இரவு

வந்தனா குட்டி
கீழுதட்டைக் கடித்துக்கொண்டு
ஒரு ஆறு, ஒரு தென்னை,
ஒரு வீடு வரைந்து
நிலையிட்டு, விண்மீன்களிட்டு
வெள்ளைத் தாளை எப்படி
இரவாக்குவது எனப் புரியாமல்
'சூரியன் மறைஞ்சோன்னா    
ராத்திரியாயிரும்' என்றாள்!

-சு.இராஜேந்திரன் 


**************************************************

இலைமறைவு

இலை விற்கும் அஞ்சலை
கையாலாகாத மாமனோடு
வாழாததையும் சேர்த்து
கூவிச் கூவிச் சொலிறாள்
'வாழலே... வாழலே!'

-நா கிருஷ்ணமூர்த்தி


**************************************************

அவசர உலகம்


பிரஷரா, ஷுகரா
அன்றி டாஸ்மாக்கா
சாலையோரச் சாக்கடைக்குள்
மயங்கிக் கிடப்பவனைத்
தீர்மானிப்பதற்குள்
எனக்கான 17D  பேருந்து
வந்துவிடுகிறது !

-அ.யாழினி பர்வதம் 


**************************************************
 
முத்துச் சொல்

ஊமைத் தகப்பன்
தன் குழந்தையிடத்து
பேச முடியாத
வார்த்தைகளெல்லாம்
பேசிவிடுகிறான்
தன் ஒற்றை
முத்தச் சொல்லில்!

-பெ .பாண்டியன்