Thursday, August 30, 2012

கூலி வேலை செய்தவரின் சாதனை

ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7 ம் தேதி அன்று ஒரு ஆண் குழந்தை கொழு கொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான், சமையல்காரர். தாய் லீ - லீ, வீட்டு வேலை செய்யும் பெண். பிரசவம் பார்த்த டாக்டர், குடும்பத்தின் நிலையையையும், குழந்தையின் அழகையும் பார்த்து தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால், ஏழை பெற்றோர்கள் மறுத்து விட்டனர்.

அந்த குழந்தைக்கு சான் காங் - காங் என்று பெயர் வைத்தனர். அதற்கு 'ஹாங்காங்கில் பிறந்தவன்' என்று அர்த்தம். இந்நிலையில் பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. சாசனா என்ற நாடக பள்ளியில் காங் - காங் சேர்ந்தான். தனது ஏழாவது வயதிலேயே கராத்தே குங்பூ என மார்ஷியல் கலைகள் அனைத்தையும் கற்றான். தினமும் 18 மணி நேரம் பயிற்சி எடுத்தான். 8 வயதில் 'பிக் அன்ட் லிட்டில் வாங்க்ஷன்' என்ற படத்தில் முதன் முதலாக நடித்தான்.

அவனின் 18 வயதில் புருஸ்லீ நடித்த 'என்டர் தி டிராகன்' படத்தில் சிறு வேடம் கிடைத்தது. உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் மற்ற ஸ்டான்ட் நடிகர்கள் தயக்கம் காட்ட காங் - காங் உடனே ஓடி வந்து குதித்து புருஸ்லீயை கவர்ந்தார்.

அதன் வாய்ப்புகள் கிடைக்காததால் கட்டிட வேலைகளில் உதவியாளராக கூலி வேலை செய்தார். தினக்கூலியாக வேலை பார்த்தாலும் இவரது துறுதுறுப்பையும், துள்ளலையும், உருவத்தையும் பார்த்து சக தொழிலாளர்கள் ஒருவர் 'லிட்டில் ஜாக்' என்று அழைத்தார். இதுவே பின்னர் 'ஜாக்கி' ஆனது. ஹாங்காங்கில் இருந்து உடனே தந்தி வர ஜாக்கி சான் என்ற புதிய பெயருடன் புறப்பட்ட இவர் 'பிஸ்ட் ஆப் ப்யூரி' என்ற படத்தில் நடித்தார். அப்போது அவர் வயது 21. அன்று அவரது வெற்றிப்பயணம் தொடர்ந்தது. அந்த சாதனையாளரின் பெயர் தான் ஜாக்கி சான்     

Tuesday, August 28, 2012

தமிழகத்துடன் தொடர்புடைய 'லைப் ஆஃப் பை'

யான் மார்டேல் எழுதிய 'லைப் ஆப் பை' என்கிற பிரபல புத்தகம் தமிழகத்துடன் தொடர்புடைய கதையாக இருக்கிறது.பாண்டிச்சேரியில் வசிக்கின்ற குடும்பம். அப்பா மிருகாட்சி சாலை நடத்துகிறார். இரு மகன்கள். கும்பத்துடன் கனடாவிற்கு செல்ல முடிவெடுக்கின்றனர். ஒரு சரக்குக் கப்பலில் மிருகங்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கின்றனர். கப்பல் விபத்துக்குள்ளாகி விடுகிறது. பயணித்த கும்பத்தார், மாலுமிகள், விலங்குகள் என அனைவரும் பலியாகிவிட, அதிர்ஷ்டவசமாக கதையின் நாயகன் இளைய மகன் பிசிங் படேல் படகில் ஏறி தப்பி விடுகிறார். என்ன சிக்கல் என்றால் அவர் ஏறியுள்ள அவசர கால படகில் ( எமர்ஜென்சி படகு ) ஒரு கழுதைப்புலி, ஒரு ஒராங்குட்டான் குரங்கு , ஒரு வரிக்குதிரை மற்றும் ஒரு வங்கப் புலியும் சேர்ந்து தப்பி விடுகிறது.முதல் வாரத்திலேயே கழுதைப்புலி குரங்கையும் வரிக்குதிரையையும் கொன்று விடுகிறது. பின் கழுதைப்புலியை புலி கொன்றுவிடுகிறது. எஞ்சியுள்ள படேல் , வங்கத்து வரிப் புலியுடன் நடுக்கடலில் தத்தளிக்கிறார். ஒரு நாள் இருநாள் அல்ல , இருநூறு நாட்களுக்கும் மேல். நடுக்கடலில் சிறிய படகில் ஒரு காட்டுப் புலியுடன் ஒவ்வொரு நொடியையும் கழிக்கிறார் பதினாறு வயது நிரம்பிய படேல்.

புலியுடன் அவரது திகில் நிரம்பிய பயணம், உயிர்வாழ அன்றாடம் அவர் என்ன செய்தார்? பிழைத்தாரா இல்லையா? என்பதுதான் கதை. கதை மட்டுமின்றி , கதையின் போக்கில் பல சுவாரசியாமான தத்துவங்களை அவருக்கே உரிய தத்துவார்த்த நடையில் வெளிப்படுத்துகிறார் யான் மார்டேல். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரில்லை, சிறிது காலம் தமிழகத்தில் வசித்திருப்பார் போலும், இருப்பினும் தமிழகத்தைப் பற்றி அவர் குறிப்பிடும் செய்திகள் அனைத்தும் ஒரு தமிழனின் அனுபவம் போன்றே உள்ளது.

கதையின் முன் பகுதியில் தமிழகத்தின் வீடுகள், பள்ளி நடைமுறைகள், மத நம்பிக்கைகள் என பல செய்திகள் இடம்பெறுகின்றன. ஓரிடத்தில் இந்திரா காந்தி பற்றியும், கருணாநிதி பற்றியும் குறிப்பு உள்ளது. மற்றொரு இடத்தில் 'எப்போது தமிழகம் திரைப்பட நடிகர்களை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுப்பதை நிறுத்துமோ அப்போதுதான் தமிழகம் உருப்படும்' என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது. நடுக்கடலில் உணவின்றி சாகும் தருவாயில் உள்ள படேல் தனக்குப் பிடித்த உணவுகளை எண்ணத் திரையில் பட்டியலிடும் பொழுது அனைத்தும் நமது உணவுகளாகவே உள்ளன.

இந்த புத்தகம் 3D திரைப்படமாகவும் இந்த வருட இறுதியில் வர இருக்கிறது. அதன் Trailer கீழே..


Saturday, August 25, 2012

மூன்றெழுத்து மந்திரம்

ரோஜா மலரை எந்தப் பெயரில் அழைத்தாலும் அதன் வாசனை ஒன்றுதான் என்றார் ஷேக்ஸ்பியர். அதைப் போலத்தான் அன்பு என்ற சொல்லும். எந்த நாட்டில், எந்த மொழியில், எந்த நேரத்தில், எப்படி அழைத்தாலும் அதன் அர்த்தம் ஒன்றே; அது மாறாதது. அன்பின் அர்த்தம் அன்பே.

தமிழில் உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகிய மூன்றையும் தன்னகத்தே கொண்டது அன்பு. இந்த அன்பு என்ற மூன்றெழுத்து மந்திரம் ஒருவரிடத்தில் இருந்தால் அது அவரையும், அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்கும் அகிம்சை ஆயுதமாகிறது.

அன்னை தெரசாவும் தம் மக்களின் நோயையும், பசியையும், பட்டினியையும் வெல்ல இதைத்தான் நாடினார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த இயேசு கிறிஸ்து அன்பை அன்பால் போதித்தார். 'கண்ணுக்குக் கண்', 'பல்லுக்குப் பல்' என்ற நியதியை மாற்றி, 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்று புது நீதி வழங்கினார்.

நாம் வாழும் பூமி சூரியன் மீதும், நிலா பூமி மீதும் காட்டும் அன்பால்தானே நமது சூரிய குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பமாக இயங்குகிறது? இயற்கையே அன்பாக இயங்கும் போது, இயற்கையின் குழந்தைகளும் அன்பாகத்தானே இருக்க வேண்டும்?

ஒரு காந்தத்தின் எதிரெதிர் துருவங்களைப் போல இருவர் இருப்பார்கள். ஆனாலும் உடனே ஒட்டிக்கொள்வர். வேறிருவரோ, ஒரே துருவத்தைப் போல எல்லாம் ஒற்றுமையாக இருப்பர். ஆனால் அவர்களுக்குள் எப்போதும் சண்டைதான். மனித மனங்களைப் புரிந்து கொள்ள மனித மனங்களுக்கு சக்தி இல்லை.

குழந்தைகளில் கூட, சில குழந்தைகள் பள்ளிக்குப் போன முதல் நாளிலேயே சில நண்பர்களைப் பெறுவார்கள். வேறு சிலரோ, பத்து ஆண்டுகள் ஒன்றாகப் படித்தாலும் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களைப் போல்தான் நடந்து கொள்வார்கள்.

அவன் வீட்டுக்கு மூன்றாவது குழந்தை. சின்ன வயதிலேயே அப்பாவுக்கு உதவுவதற்காக அண்ணன் தன் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தினார். அக்காள் கல்யாணத்துக்கு வாங்கிய கடன் வேறு. கல்லூரியில் படிக்கும் தம்பி.

இதற்கிடையில் தந்தையின் அகால மரணம். இப்படிப்பட்ட சூழலில் அவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அமெரிக்கா சென்றான்.

நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த மறு வருடமே அம்மாவுக்குப் புற்றுநோய் என்னும் அதிர்ச்சி செய்தி. குடியுரிமை கிடைக்கும் வரை நாட்டை விட்டு வெளியே போகமுடியாத ஆயிரம் விதிகள்.

தன்னை நம்பி பலர் இருப்பதை உணர்ந்த அவன் ஊருக்கு வருவதைத் தள்ளிப் போட்டான். அம்மாவும் மகன் வரும் நாட்களை எண்ணி, மாதங்களை எண்ணி, பின் வருடத்தை எண்ண ஆரம்பித்தாள்.

ஒருவழியாக அம்மா உயிரோடு இருக்கும் போதே நிரந்தரக் குடியுரிமை கிடைத்தது. மறுநாளே அம்மாவைப் பார்க்கப் பறந்தோடி வந்தான்.

எலும்பும் தோலுமாக இருந்த அம்மாவைப் பார்க்க அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. அவன் அடக்கிக் கொண்டான்.

பள்ளிக்குச் சென்று கூட்டல் கழித்தல் படிக்காத அம்மா ஒவ்வொரு நாளையும் எண்ணி, `என்னைப் பார்க்காமல் எப்படி நாலு வருஷம் இருந்தாய் மகனே?' என்றாள்.

நிறைய நேரங்களில் கண்ணீர்தானே விடையில்லாக் கேள்விகளுக்குப் பதிலாய் வருகிறது. அவனும் அதைத்தான் செய்தான்.

தன் குழந்தை அழுவதை எந்தத் தாயாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவளும் படுக்கையில் இருந்து எழுந்து அவன் கண்ணீரைத் துடைத்தாள். அவன் உச்சி முகர்ந்தாள். புதுத் தெம்பு கிடைத்ததைப் போல உணர்ந்தாள்.

அம்மா பல மாதங்களுக்குப் பின் எழுந்து நடந்ததால், தம்பியின் வருகை அம்மாவைக் குணப்படுத்திவிடும் என அண்ணனும் நம்பினான்.

தம்பி கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் அம்மாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார்கள்.

ஒரு வாரம் அம்மா கூட இருந்து பார்த்தான். என்றாலும் அவளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிப் போய்க்கொண்டிருந்தது.

'டாக்டர், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் அம்மா எனக்கு வேண்டும், ப்ளீஸ்' என்றான்.

'உன் அம்மாவுக்குக் கருப்பையில் கேன்சர். அவர்கள் வாழ்ந்தது கிராமம் என்பதால் பிறரிடம் சொல்வதற்கு வெட்கப்பட்டு நோய் முற்றும் வரை விட்டுவிட்டார்கள். நோய் உடலின் பிற பாகங்களுக்கும் பரவி விட்டது. இன்றோ, நாளையோ, அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ' என்றார் டாக்டர்.

எத்தனை படித்தாலும் தனக்கு என வரும்போது அறிவியல் விதிகளெல்லாம் மாறி விடாதா என நினைக்கத் தோன்றும். அவனும் விதி விலக்கல்ல. அப்படியே நினைத்தான்.

படித்து முடித்தவுடன் வெளிநாடு சென்றதால் அம்மாவின் அருகில் இருந்து அம்மாவுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்று அவனுக்குக் கவலை.

'அம்மா, உங்களுக்கு ஏதாவது வேண்டுமா அம்மா? நான் போய் வாங்கி வருகிறேன்' என்றான்.

பெற்றோர் தன் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டும், கேட்காமலும் வாங்கிக் கொடுப்பதை விட, தன் குழந்தைகள் பெற்றோருக்கு என்ன வேண்டும் எனக் கேட்பதை காதால் கேட்பதே ஆனந்தம்.

'எனக்கு என்னப்பா வேணும். ஆண்டவன் அருளால், அண்ணன் என்னை நல்லா பாத்துக்கிட்டான். நீயும் உண்ணாமல், உறங்காமல் உழைத்து நம் குடும்பத்தையே பார்த்துக் கொண்டாய். உன் அப்பா இருந்திருந்தால் உன்னை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்' என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அவன் மீண்டும் மீண்டும் என்ன வேண்டும் எனக் கேட்க, 'பக்கத்து அறையில் இருக்கும் பாட்டிக்கும் புற்றுநோய் தான். அவளின் பையன் சாதாரண வேலைதான் செய்கிறான். கரண்ட் பிடிப்பதற்குக் கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாள். உன்கிட்ட பணம் இருந்தால் கொஞ்சம் அவர்களுக்குக் கொடுப்பாயா?' என்றாள் அம்மா.

'பெற்ற அம்மாவுக்கு நோய் என அறிந்தும் உடனே வரமுடியாத நான் எங்கே? சில நாளே பழகினாலும் கூட, சக நோயாளியிடம் அன்பாகப் பழகி அவளுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் அம்மா எங்கே?'

'எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொடுங்கள் அம்மா. இது உங்கள் பணம்' என்று அம்மாவின் கையில் தன் பணப்பையைக் கொடுத்தான்.

இறக்கும் தருவாயிலும் கூட ஈகை செய்த கர்ணனாக அம்மாவைக் கண்டு வணங்கினான்.

இந்த அம்மாவைப் போல நாமும் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும். தன்னால் முடிந்த அளவு எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும்.

உதவி செய்வதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனப் பார்க்காமல் யாருக்கு உண்மையாக உதவி தேவைப்படு கிறதோ அவர்களுக்குச் செய்ய வேண்டும். அன்பைத் தருவது கூட மிக உயர்ந்த உதவியே.

நாம் எல்லோரும் இந்த இயற்கையின் குழந்தைகள். உலகில் உள்ள எல்லா உயிர் களும் அவளின் குழந்தைகள் என்றால் தாவரங்கள், விலங்குகள் எல்லோரும் நமக்கும் உறவுதானே?

மனிதனின் தகாத செயல்களால் பல உயிரினங்கள் இந்த பூமியை விட்டே விரட்டப்பட்டது கொடுமையானது.

பலவிதமான உயிரினங்களைப் பிடித்து அவற்றைச் சுதந்திரமின்றி மிருகக் காட்சி சாலை என்ற பெயரில் அடைத்து வைப்பது கூட தவறானதுதான்.

கறுப்பர், வெள்ளையர், இந்தியர், இந்தோனேசியர், சைபீரியர், சைனீஸ் எனப் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களை மனிதக் காட்சி சாலை என அடைத்து வைத்து வேடிக்கை பார்த்தால் எப்படி இருக்கும்?

அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இன்று நாமே அவை வாழும் இடங்களில் சென்று பார்க்கலாம். அல்லது காணொளியில் பதித்து நேரில் பார்ப்பதை விடத் தத்ரூபமாகப் பார்த்து மகிழலாமே.

தான் வேட்டையாடி சுயமாக உண்ணும் புலிக்கும் சிங்கத்துக்கும், கொன்ற மாமிசத்தைத் தின்னச் சொல்லலாமா? வேட்டையாடி உண்பதுதானே அதன் உடற்பயிற்சியும் கூட.

ஆராய்ச்சி என்ற பெயரில் சுண்டெலி முதல் மனிதக் குரங்கு வரை தெரிந்தே நோயை உண்டாக்குவதும், தெரியாத மருந்தைக் கொடுப்பதும் அன்பின் இலக்கணமா?

உயிருள்ள பொருளை மட்டும் அல்லாமல், தனக்குப் பிடித்த உயிரில்லா பொருளின் மீது கூட அன்பைக் காட்ட வேண்டும்.

அந்த வீட்டில் அப்பா கொஞ்சம் கொள்கைவாதி. 'இயற்கை வளங்களை வீணாக்கக் கூடாது, அடுத்த சந்ததியினருக்கு விட்டு வைக்க வேண்டும், நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக வாங்கி வீணாக்குவது குற்றம்' என்பார்.

அன்று அவர் தன் அலுவலகத்திலிருந்து எட்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தார். வீட்டில் ஓர் அறையில் யாரும் இல்லை; ஆனால் காற்றாடி வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்தது; மின் விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவருக்குக் கொஞ்சம் கோபம் வந்தது.

`எத்தனை நாள் உங்களிடம் சொல்வது? மின்சாரம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில் கிடைக்கும் மின்சாரத்தையும் ஏன் இப்படி வீணாக்கு கிறீர்கள்' எனக் கத்தினார்.

அப்பாவின் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரின் ஆறு வயது மகள், 'உஷ், டாடி, சத்தம் போடாதீங்க. என் பொம்மை தூங்குது. அதுக்குக் காற்று வேணும்னு நான் தான் காற்றாடி போட்டேன்' என்றாள்.

தன் மகளின் அன்பை எண்ணி அவளை அப்படியே வாரி அணைத்தார். ஒரு பொம்மையிடம் கூட அன்பு காட்டும் அவளின் குணத்தை எண்ணி வியந்தார்.

தன் பொம்மையின் மேல் வைத்திருக்கும் குழந்தையின் அன்பு ஒரு விதம் என்றால், தான் வைத்திருக்கும் பொருளின் மதிப்பிற்கேற்பத் தன் உயிரையே வைத்திருப்பதாக நினைக்கும் பெரியவர்களின் அன்பு இன்னொரு விதம்.

புதிதாகக் கார் வாங்கியவர் தன் காரில் சவாரி செய்தார். முன்னால் சைக்கிளில் மெதுவாகச் சென்ற வனைத் தன் கவனக் குறைவால் இடித்து விட்டார்.

சைக்கிளில் சென்றவன் எதுவும் சொல்வதற்குள் 'ஐயோ... ஐயோ... பத்து லட்சம் கொடுத்து வாங்கின என் புதுக் காரை, பத்து ரூபாய் பெறாத ஓட்டை சைக்கிளை வைத்துக் கோடு போட்டு விட்டியே' எனக் கத்தினார். அவனை அடிக்காத குறைதான்.

அவரின் புதுக் கார் அந்த ஏழையின் ஒரே சொத்தான பழைய சைக்கிளைக் கொன்று விட்டது என்பதை அந்தப் பணக்காரர் அறிவாரா?

அன்புக்கு இலக்கணம் அன்பே.
அன்புக்கு இலட்சியமும் அன்பே!

குமார் கணேசன்

Saturday, August 18, 2012

வெட்டிப் பேச்சா? வெற்றிப் பேச்சா?

பள்ளிக்கூடத்தின் அருகே இருந்த அந்தப் பூங்காவில் பள்ளி மாணவன் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். அங்கு உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைப் பற்றியோ, குரைக்கின்ற நாய்களைப் பற்றியோ, தெருவில் ஓடும் வண்டிகளின் சத்தத்தைப் பற்றியோ கவலைப்படாமல் புத்தகமே கண்ணாய் இருந்தான், அவனின் நண்பன் அங்கு வரும் வரை.

படிப்பதை நிறுத்தி விட்டு இருவரும் பேச ஆரம்பித்தனர். பொதுவாக இருவர் இருந்தால் ஒரு விஷயத்தில் இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்; அல்லது நேர் எதிராக இருப்பார்கள். அதுதான் அங்கும் நடந்தது.

இன்னும் கொஞ்ச நேரத்துக்குப் பின் மூன்றாவது நண்பனும் வந்தான். கொஞ்சம் கலகலப்பானார்கள். பின்னர் சலசலப்பானார்கள். எதை எடுத்தாலும், இருவர் ஒன்று சேர்வார்கள், மூன்றாமவன் தனிமையாவான். பின் வேறு ஏதாவது ஒரு விஷயம் பேசும்போது வேறொரு கூட்டணி உருவாகும்.

இப்படி மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் பேசும்போது பல நேரங்களில் நாலாவது ஒருத்தனைப் பற்றிப் பேசுவதுதான் அதிகம். அவன் நண்பனாக இருந்தாலும் அங்கே அப்பொழுது அவன் இல்லை என்றால் அவனைப் பற்றி வேண்டாததைப் பேசுவார்கள்.

ஒரு வாரம் கழித்து இவர்களுக்குள்ளே ஏதாவது பிரச்சினை என்றால், ஒருவன் அவனோடு சேர்ந்து கொண்டு யார் என்ன பேசினார்கள் எனச் சொல்வதுடன், மற்ற இருவரைப் பற்றிப் பேசுவார்கள். இந்த நட்பும் பகையும் மாறிக் கொண்டே இருக்கும்.

ஒருவரைப் பற்றிய குறையைப் பேச வேண்டும் என்றால் அவர் முன்னிலையில் பேச வேண்டும். ஆனால், நல்லதைப் பேச வேண்டும் என்றால் எப்பொழுது, எங்கு வேண்டுமானாலும் பேசலாம்.

அது பிற மாணவர்களாக இருந்தாலும் சரி, ஆசிரியர்களாக இருந்தாலும் சரி, வீட்டிலுள்ளவர்களாக இருந்தாலும் சரி, மிகக் கவனம் தேவை.

பேசும்போது நல்லதைப் பேசினால் நேர்மறை அதிர்வு (Positive Vibration) ஏற்படும். எதிர்மறைப் பேச்சு ஒரு துளி வந்தாலும் அது காட்டுத் தீ போல பரவி விடும். எதிர்மறையாகப் பேச ஆரம்பித்தால், மனம் நல்லதை வடிகட்டி விட்டுக் கெட்டதை மட்டுமே தேட ஆரம்பித்து விடும்.

இப்படித்தான் பள்ளிகளிலும், பஸ் நிறுத்தத்திலும், கல்லூரிகளிலும், கடை வீதிகளிலும், கடற்கரையிலும், வீட்டிலும், வேலையிடங்களிலும், இணையத்திலும் வெட்டிப் பேச்சு நம் நேரத்தை வீணாக்குகிறது. அது நண்பர்களைப் பகைவர்களாகவும், பகைவர்களை நண்பர்களாகவும் சில வார்த்தைகளால் மாற்றுகிறது.

இரண்டு தலைவர்கள் அன்பாக இருப்பார்கள். அவர்களின் தொண்டர்கள் அடித்துக் கொள்வார்கள். இரு கலைஞர்கள் ஒன்றாக இருப்பார்கள். அவர்களின் ரசிகர்கள் சண்டை போடுவார்கள். வேலை செய்யும் நேரத்தைவிட வெட்டியாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

வெட்டிப் பேச்சு, பேசுபவர்களுக்கு மட்டுமின்றி, பிறருக்கும் வினையாக முடிவதைக் காணலாம்.

கண்ணனின் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. டெல்லியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவன் அப்பாவைப் பார்க்க ஊருக்கு வந்திருந்தான். அப்பாவைப் பார்த்து விட்டு தன் அண்ணனிடம் அப்பாவைப் பற்றியும் டாக்டர் என்ன சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்க்க உறவினர்கள் சிலர் வந்தனர். வந்தவர்களில் ஒருவர் கண்ணனைப் பற்றிக் கொஞ்சம் விசாரித்து விட்டு, 'அப்பாவைப் பற்றிக் கவலைப்படாதே. போக வேண்டிய நேரம் வந்து விட்டது. என் அப்பாவும் இப்படித்தான் இருந்தார். சாப்பாடு குறைந்தது. உடலில் கொஞ்சம் தளர்ச்சி. அடிக்கடி யாரோ கூப்பிடுவதைப் போல மேலே எட்டி எட்டிப் பார்த்தார். இரண்டு வாரத்தில் எங்களை விட்டுப் போய்விட்டார்' என்றார் சிறிதும் யோசிக்காமல்.

இத்தனைக்கும் அவர் அதிகம் படித்ததில்லை; ஆனால் டாக்டர் என்ற நினைப்பு. நோயாளி அருகில் இருக்கிறாரே அல்லது அவரின் குழந்தைகளும், பிற உறவினர்களும் இருக்கிறார்களே, அவர்கள் என்ன நினைப்பார்கள், எப்படி கவலைப்படுவார்கள் என யோசிப்பதே இல்லை.

நோயாளிகளிடம் பேசும் போது மருத்துவர்கள் கூட மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பார்கள். நம் நாட்டில் எந்த நோயாக இருந்தாலும், நோயாளியின் உடல்நிலை மிக மோசமாக இருந்தாலும், 'ஒன்றும் செய்யாது, ஆண்டவன் இருக்கிறான், வேண்டிக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்' என்பார்கள். நோயாளியின் நம்பிக்கையும் சேர்ந்து விரைவில் குணமாவதும் உண்டு.

ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த மேலை நாடுகளில், உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக டாக்டர்கள், நோயின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஓர் ஆங்கில ஆசிரியர் இலக்கண வகுப்பு எடுப்பதைப் போல ஒன்று விடாமல் சொல்லி விடுவார்கள்.

இப்படி உண்மையைச் சொல்வதால், சூழ்நிலைக்கேற்ப நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. இது வெட்டிப் பேச்சு இல்லை என்றாலும், நோயாளிக்குத் தேவையில்லாததாகக் கூட இருக்கலாம்.

ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுப்பது வழக்கம். அப்படி கொடுத்தாலும், ஆழ்மனம் விழித்துக் கொண்டிருக்கும் என்கிறார்கள். எனவே, சிகிச்சையின் போதும், நோயாளி விழித்துக் கொண்டிருப்பதாக எண்ணி சிகிச்சை அளிக்க வேண்டும்.

மாறாக, தேவையில்லாமல் ஏதாவது பேசினால் அது அந்த நோயாளியைப் பாதிக்கும். அதுவும் நோயைப் பற்றியும், நோயாளியைப் பற்றியும் பேசினால், அவனின் ஆழ்மனம் அறிந்து அபாயத்தில் முடியலாம்.

எனவே, எதிர்மறையைத் தவிர்த்து நல்லதாகப் பேசலாமே. இதைத்தானே திருவள்ளுவரும் 'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்றார்.

நாம் சொல்லும் சொல்லில் ஏதாவது தவறு இருந்தால் அதைக் கேட்டவர் மன்னிக்கலாமே தவிர மறக்க முடியாது. எனவே ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துப் பேச வேண்டும்.

எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களும் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். அவர்கள் தம் வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அது நாளிதழ், நூல் போன்றவற்றில் பதிவாகிவிடும். எனவே மாற்றிப் பேசுதல் கூடாது.

செல்லும் இடங்களில் அங்கிருப்பவர்களுக்குப் பிடிக்கும் என்பதற்காகத் தனக்குப் பிடிக்காத, உண்மைக்குப் புறம்பான எதையும் பேசக்கூடாது. உண்மையைப் பேசினால் என்ன பேசினோம் என மனதில் ஞாபகம் வைக்க வேண்டிய தேவையில்லை.

வெட்டிப் பேச்சில் யாரிடம் பேசுகிறோம், யார் யார் எல்லாம் கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்து பேச்சு மாறிக்கொண்டே இருக்கும்.

'எப்பொழுது எதைச் சொல்லவேண்டும் எனத் தெரிந்து அதைச் சொல்பவன் புத்திசாலி. எப்பொழுது எதைச் சொல்லக்கூடாது எனப் புரிந்து பேசாமல் இருப்பவன் மிக மிகப் புத்திசாலி' என்பர். எனவே, நன்றாகப் பேசினாலும் அளவோடு பேசினால் நல்லது.

அவர் ஒரு சிறந்த தன்முனைப்பாற்றல் பேச்சாளர். ஆனால் அவருடைய கூட்டம் எல்லாம் குறைந்தது ஐந்து மணி நேரம் இருக்கும்.

பொதுவாக ஒருவருடைய கவனம் மூன்று நிமிடங்கள்தான் இருக்கும். எனவே ஐந்து மணி நேரக் கூட்டம் என்றால் நிழற்படங்கள், காணொளிகள், செயல் முறைகள், நகைச்சுவைகள், வரலாற்று நிகழ்ச்சிகள், தலைவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், கேள்வி பதில்கள் எனப் பல இருந்தால்தான் அரங்கத்தினர் அமைதியாக இருப்பர்.

அந்தப் பேச்சாளரும் நன்றாகத்தான் பேசினார். ஆனால் கடைசி அரை மணி நேரம் இருக்கும் போது இன்னும் இருபதுக்கும் மேற்பட்ட பட வில்லைகள் (Slides) இருந்தன. அனைத்தையும் காட்டி விட வேண்டும் என்ற முனைப்பில் வேக வேகமாகக் காட்டியது யாருக்கும் புரியவில்லை. ஒரு சொற்பொழிவின் ஆரம்பம் எப்படி முக்கியமோ அதைவிட முடிவு மிக முக்கியம்.

தேவையான கருத்துகளாக இருப்பினும் குறைந்த நேரத்தில் திணிப்பதாக இருந்தால் அது பயன் தராது. ஒரு பேச்சாளர் எத்தனை கருத்துக்களைச் சொன்னார் என்பதை விட, அதைக் கேட்பவர் எத்தனை கருத்துக்களைப் புரிந்து கொண்டார் என்பதே மிக முக்கியம். அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும் என்பது உண்மையே.


உலகில் உள்ள எல்லா உயிர்களும் ஒன்றுக்கொன்று தகவலைப் பகிர்ந்து கொண்டாலும் மனிதனுக்கு மட்டும் தான் பேச்சுத் திறமையும் அதைக் கேட்கும் திறனும் அதிகம்.

உலகில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காகப் பல மொழிகள் உருவானாலும், புரிதலைத் தவிர எல்லாம் நடக்கிறது.

சில மொழிகளில் கெட்ட சொற்கள் கிடையாது என்பார்கள். ஆனால், நம் நாட்டில் சிலர் பேசும் போது கெட்ட சொற்களைத் தவிர வேறெதுவும் அவர்கள் வாயில் வருவதில்லை. அவர்கள் தப்பித் தவறி நல்ல சொற்களைப் பேசினாலும் அதுவும் கெட்டதாகவே ஒலிக்கும்.

வெட்டிப் பேச்சில் வேறொரு வகையும் உண்டு. பார்த்த சில நிமிடங்களில் நண்பர்களைப் போலப் பேசுவார்கள். பின் 'உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? எத்தனைப் பிள்ளைகள்? ஆணா, பெண்ணா? என்ன வயது? அவர்கள் என்ன படிக்கிறார்கள்?' என முதல் கேள்விக்கு பதில் கிடைக்கும் முன்னே ஒன்பதாவது கேள்வியையும் கேட்டு விடுவார்கள்.

பின் குழந்தை இல்லை என அறிந்தால் 'ஐயோ, அப்படியா? டாக்டரைப் பார்த்தீர்களா? மருந்து ஏதாவது சாப்பிட்டீங்களா? இல்லை என்றால் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளக் கூடாதா?' என ஆயிரம் அறிவுரைகள் தருவார்கள்.

முன்பின் அறியாதவர்களின் கொடுமை இப்படி என்றால், தெரிந்த நட்பும் உறவும் தரும் கொடுமையோ கொடுமையிலும் கொடுமை.

கணவன் மனைவியாக இருந்தாலும் கூட 'என் இடம், உன் இடம், நம் இடம்' என உணர்ந்து வாழ்ந்தால் வெற்றி உங்களிடம்.

வெட்டிப் பேச்சை வெட்டிப் போடு.
வெற்றிப் பேச்சை பற்றித் தேடு!

குமார் கணேசன்

Saturday, August 11, 2012

இன்று ஒரு தகவல் - பொன்னகை வெல்லும் புன்னகை

அழுது கொண்டிருந்த தன் தங்கையின் குழந்தையை வாரி அணைத்த ஆனந்தன், 'கண்ணா, உனக்கு ஒரு விளையாட்டு சொல்லித்தரவா?' என்றான்.

குழந்தை அழுகையை நிறுத்தாமல் `சரி' எனத் தலையை மட்டும் ஆட்டினான்.

'உன் கையைக் கொடு' எனச் சொல்லி, குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு விரலையும் மெதுவாகத் தொட்டு, 'இது சோறு, இது பருப்பு, இது கூட்டு, இது ரசம், இது மோர்' எனச் சொல்லவும் குழந்தையின் அழுகை கொஞ்சம் குறைந்தது.

பின் மீண்டும் ஒவ்வொரு விரலையும் தொட்டு, `இது தாத்தாவுக்கு, இது பாட்டிக்கு, இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு, இது உனக்கு' என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் ஊட்டி விடுவதைப் போலக் காட்டினான்.

அழுகையைக் குறைத்த குழந்தை இப்போது அதை அறவே நிறுத்தியது.

'எனக்கு வேண்டாம் மாமா, இது உனக்கு' என்றான் தன் சுண்டு விரலைத் தொட்டுக் கொண்டே.

ஆனந்தும் இலேசாக சிரித்துக் கொண்டான்.

இந்த விளையாட்டு நம் குழந்தைகளுக்கு தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுப்பதோடு, உறவு முறைகளையும் கூறி, பிறருக்கும் கொடுத்து உண்ண வேண்டும் என்ற நல்ல பழக்கத்தையும் சொல்கிறது.

ஒவ்வொருவருக்கும் உணவு கொடுத்த பின் குழந்தைக்குக் கிச்சுக் கிச்சு மூட்டினான் ஆனந்தன். இதுதான் விளையாட்டின் உச்சகட்டமே. பிறருக்குக் கொடுக் கும் போது சிரித்துக் கொண்டு கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

குழந்தைகளின் விளையாட்டில் கூடப் புன்னகையைப் புகுத்தி வாழ்க்கைக்கு வழிகாட்டிய நம் முன்னோர்கள், முன்னோர்களே.

சிறுவயதில் குழந்தைகளுக்கு நல்லதைச் சொன்னாலும் அவர்கள் வளரும் போது பெற்றோர்களே அவர்கள் கற்றதை மறக்கச் செய்து மற்றதை கற்கச் செய்கிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு, `சாலையைக் கடக்கும் போது சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால், பச்சை விளக்கு வரும் வரை காத்திருந்து பின் செல்ல வேண்டும்' எனக் குழந்தையிடம் சொல்லிவிட்டு, இரண்டு பக்கங்களும் பார்த்து விட்டு வண்டி எதுவும் வரவில்லை என்றால் பெற்றோர்கள் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு கடகடவென கடந்து செல்லும் போது `எப்படி சாலை விதிகளை உடைப்பது' என்பதையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்பார்கள். அது குழந்தைகளின் களங்கமில்லா சிரிப்புக்காகத்தான். அடித்து விரட்டினாலும் நாய்க்குட்டி வாலை ஆட்டிக்கொண்டு நம்மிடமே வருவதைப் போல, பெற்றோர்கள் திட்டினாலும், கொஞ்சம் தட்டினாலும், அதை உடனே மறந்து மீண்டும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பார்கள் குழந்தைகள்.

குழந்தைப் பருவத்தில் தெய்வமாக வாழ்ந்த குழந்தை, வளர வளர பெற்றோரைப் போல மாறி விடுகிறது. வளர வளர நல்லவை தேய்ந்து கெட்டவை வளர்வது ஏனோ?

'கடைசியாக ஒருமுறை சிரியுங்கள்' எனப் புகைப்படக்காரர்கள் புதுமணத் தம்பதிகளிடம் சொல்வதாக ஒரு நகைச்சுவை உண்டு.

கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ தலைவலியாய் அமைவார்கள் என்பதில்லை இது. கல்வி, வேலை, குடும்பம் என ஒவ்வொரு நிலையும் வித்தியாசமானது; குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும் என்பதைக் குறிக்கத்தான் இது எனத் தோன்றுகிறது.

இன்றைய திருமணங்களில் புன்னகை இருக்க வேண்டிய இடங்களில் பொன்னகை இடம் பிடித்துள்ளதை நாம் அறிவோம். தன் திருமணத்துக்காகப் பெற்றோர்கள் கஷ்டப்படும்போது எந்தப் பெண்ணுக்குத்தான் புன்னகை வரும்?

இப்போது பலருடைய வாழ்க்கையும் இப்படித்தான் மகிழ்ச்சியைத் தொலைத்து மயக்கத்தில் நடக்கிறது. ஒருவருக்கு ஒருவர் உதவாவிட்டாலும் ஒரு புன்னகையையாவது கொடுக்கலாமே.

வெளிநாடுகளில் எதிரெதிர் ஒருவரைப் பார்க்கும் போது புன்னகையோடு 'குட் மார்னிங்', 'குட் ஈவினிங்' எனச் சொல்லி மகிழ்வர். நாமும் இப்படிச் சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொண்டோம். ஆனால் ஏன் சொல்கிறோம் என அறியோம்.

பயந்து பயந்து மாணவர்கள் தம் ஆசிரியர்களுக்குச் சொல்வதையும், பதிலுக்கு அவர்களை வாழ்த்தாமல், புன்னகை கூடத் தராமல், 'சொல்ல வேண்டியது உன் கடமை' என எண்ணி விலகிச் செல்வதையும் நாம் பார்க்கிறோம். இதே மாதிரித்தான் முதலாளிகளும், தொழிலாளிகளும்.

இன்று கல்லூரிக்குச் சென்றாலும் கடைக்குச் சென்றாலும் சிரித்த முகத்தோடு வாடிக்கையாளர்களை வரவேற்பது மிகமிகக் குறைவே.

துணிக் கடைக்குச் சென்றால் நான்கு சேலைகளை எடுத்துக் காட்டியவுடன் முகம் சுளிக்கும் விற்பனையாளர்கள், உணவுக் கூடத்தில் உண்ணும் போது 'சாப்பாடு எப்படி இருக்கிறது?' என்று கூடக் கேட்காத பரிமாறுபவர்கள்... எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இறைவனின் படைப்பாக இருந்தாலும் இயற்கையின் பரிணாம வளர்ச்சியாக இருந்தாலும் நாமெல்லாம் உறவுதானே. ஒருவரை ஒருவர் புன்னகையோடு வாழ்த்தினால் என்ன தவறு?

புன்னகையோடு 'முடியாது' என்று சொல்வது அழுது கொண்டே ஆம் சொல்வதை விட மேலானது. சிரித்த முகத்தோடு மட்டுமல்ல, கர்ணன் தன் கையைத் தாழ்த்தி பிறர் எடுத்துக் கொள்ளுமாறு கொடுத்ததாக மகாபாரதம் சொல்கிறது.

அமெரிக்காவில் பல ஆண்டுகள் வாழ்ந்து குடியுரிமை பெற்ற பின்னும் தாய் மண்ணின் வாசனையால் இந்தியா திரும்பிய விக்னேஷ் தொழில் நிமித்தமாக அடிக்கடி அமெரிக்க சென்று வந்தான்.

ஒரு முறை செல்லும் போது ஜி.பி.எஸ். என்னும் போக்குவரத்து வழிகாட்டும் கருவியை எடுத்துச் செல்ல மறந்து விட்டான்.

விமான நிலையத்தில் வாடகைக்கு வண்டியொன்றை எடுத்தான். சாலை சீரமைப்பினால் பல தெருக்கள் மூடப்பட்டு வழிமாற்றம் செய்யப்பட்டிருந்தன.

தெருக்களில் வழி தெரியாமல் அங்கும் இங்கும் ஓட்ட, போலீஸ் காரின் சிவப்பு நீல விளக்கும், சைரன் சத்தமும் அவனை நிறுத்தின.

அருகில் வந்த போலீஸ் புன்னகையோடு மாலை வணக்கம் கூற, அவனும் புன்னகையுடன் பதில் வணக்கம் கூறி, தன் ஓட்டுனர் உரிமத்தைக் கொடுத்தான். சோதித்து விட்டுத் திருப்பி போலீஸ் அதைக் கொடுத்துவிட்டு `சிரமத்துக்கு மன்னிக்கவும்' என்றார்.

பல தெருக்கள் மூடியிருப்பதைப் பற்றி விக்னேஷ் குறிப்பிட, ஏற்றுக்கொண்ட போலீஸ், `சாலை வேலை நடக்கிறது, மன்னிக்கவும்' என்றார்.

'நான் உங்கள் வண்டியை நிறுத்தச் சொன்னதற்குக் காரணம், நீங்கள் உங்கள் வண்டியின் ஹெட் லைட் ஆன் செய்ய மறந்து விட்டீர்கள்' என்றார்.

'சூரியன் மறைந்ததும் தானாக ஹெட் லைட் ஆன் ஆகும் என நம்பியதால் ஆன் செய்யவில்லை' என அவன் கூறியதை ஏற்றுக்கொண்ட போலீஸ் அதை ஆன் செய்யச் சொல்லி அது வேலை செய்கிறதா என சரி பார்த்துக் கொண்டார்.

பின், 'நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?' எனக்கேட்டு அறிந்து, விக்னேஷ் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு போகும் வழியில் பல தெருக்கள் மூடி இருப்பதால், பதினைந்து மைல் தூரத்தையும் தன்னைத் தொடர்ந்து வருமாறு கேட்டுக் கொண்டார்.

விக்னேஷ் தொடர ஓட்டலை அடைந்ததும், முன்பதிவு இருக்கிறது என்பதையும் உறுதி செய்தபின் மீண்டும் ஒரு புன்னகை தந்துவிட்டு 'இரவு வணக்கம்' சொல்லிவிட்டு இன்முகத்தோடு சென்றார்.

விக்னேஷின் பயணமும் வெற்றியில் முடிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

நம் நாட்டிலும் இப்படி இன்முகத்தோடு பிறருக்கு உதவியவர்கள் நம் பாட்டனும் பூட்டனும். அப்படி அவர்கள் இருக்க இன்று ஒவ்வொருவரும் சுயநலம் ஒன்றே குறிக்கோளாக வாழ்வதேன்?

உலகில் உள்ள எல்லா உயிர்களிலும் மனிதன் மட்டும் தான் அழவும், சிரிக்கவும், இன்னும் பல உணர்வுகளை வெளிப்படுத்தவும் தெரிந்திருக்கிறான்.

ஆனால் சிரிப்பதில் கூட பல வகைகளை மனிதன் கண்டு பிடித்து விட்டான். தான் மகிழ்ந்தாலும் சிரிக்கிறான். பிறர் தாழ்ந்தாலும் சிரிக்கிறான். சிரிப்பின் விளைவு நன்மையில் மட்டுமே இருக்க வேண்டும்.

கண்ணாடியின் முன் நின்று அவள் பேசிக்கொண்டிருந்தாள். 'அப்பா, நான் கட்டுரைப் போட்டியிலே முதல் பரிசு வாங்கியிருக்கேன்.'

பின் அடுத்த பக்கம் போய் குரலை மாற்றி அப்பாவாக 'ம்ம்ம்ம்... அதுக்கு என்ன இப்போ?' என்றாள்.

மீண்டும் முதலாவது இடத்தில் போய், 'அப்பா நான் இன்றைக்கு கணக்கில் 98 மார்க் எடுத்திருக்கிறேன்'.

பின் அடுத்த பக்கம் போய் அப்பாவாக, 'என்ன? என்ன? ரெண்டு மார்க் எங்க போச்சி? உனக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாதா?' என்றாள்.

பின் அவளே சிரித்துக் கொண்டாள்.

இதை வாசலில் நின்று கவனித்த அப்பா தன் தவறை உணர்ந்தார்.

இப்படித்தான் பலரும். கெட்டது நடந்தால், கேட்டது நடக்காவிட்டால் மேலும் கீழும் துயரத்தால் துள்ளுவார்கள். நல்லது நடந்தால் அதை அங்கீகரிக்கும் வகையில் ஒரு புன்சிரிப்பைக் கூட உதிர்க்க மாட்டார்கள்.

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை விட, வாய் விட்டுச் சிரித்தால் நோய் வராமல் போகும் என்பதே உண்மை.

சிரிப்போம்... சிரிக்க வைப்போம்!


குமார் கணேசன்

Wednesday, August 8, 2012

கவிதைச்சரம்

கண்ணி

டைக்கப்பட்ட கதவுக்குள்ளோ
திறந்தவெளிப் பொட்டலிலோ
அலுவலக உணவு இடைவேளையிலோ
மதுக் கடையின்
முட்டை வீச்சத்துக்கு நடுவிலோ
பழியுணர்வு பிதுங்கும்
இத்யாதி சூழல்களிலோ
வஞ்சகமும் சூழ்ச்சியும் குழைக்கப்பட்டு
பின்னப்படுகிறது ஒரு கண்ணி
ஓர் அசம்பாவிதத்தை அரங்கேற்ற !

பாசு.ஓவியச் செல்வன்

******************************

ஆறுதல்


குழந்தைகளின்
கூட்ஸ் ரயில்...
தடம் கவிழ்ந்து எழுந்த
ஒரு பெட்டிக்கு
முழங்காலெல்லாம் சிராய்ப்பு
ஆறுதல் சொல்கின்றன
மற்ற பெட்டிகள்

பெ.பாண்டியன்


******************************
 
சிக்னல்

ச்சை விளக்கைப்
பிச்சை எடுக்கின்றன
சிக்னலில்
வாகனங்கள்

கே.வி.முத்து


******************************
 
நல்லவர்

ல்லோரும்
எல்லோருக்கும் நல்லவரில்லை

யாரோ ஒருவர்
யாருக்காகவோ
வேண்டுதல் செய்கிறார்
சபிக்கவும் செய்கிறார்

கொலைகாரனுக்கும்
கொல்லப்பட்டவனுக்கும்
இருவேறு நியாங்கள்

எடுக்கப்பட்டதற்கும்
கொடுக்கப்பட்டதற்கும்
ஏதோ ஒரு காரணம்

எல்லாத் தீர்ப்புகளிலும்
ஒருவர் சிரிக்கிறார்
மற்றொருவர் அழுகிறார்

நீங்கள்
மலையை ரசித்த தருணங்களில்
குடிசை இல்லாதவர்கள்
குளிரில் நடுங்குகிறார்கள்

விற்கிறவனுக்கும்
வாங்குகிறவனுக்கும்
ஏதோ ஒரு தேவை

உடம்பை விற்ற பணத்தில்
உடைகளும் வாங்கப்படுகின்றன

சொல்லப்படாமலும்
ஏற்கப்படாமலும் - சில
மன்னித்தல்கள்
மனதிலே விக்கி நிற்கின்றன

கர்ணனின் பார்வையில்
துரியோதனன்...
திரௌபதிக்கு...?

எல்லோருக்கும்
எல்லோரும் நல்லவரில்லை.

தஞ்சை சூர்யா****************************** 
 
சாசனம்

ழக்கமற்ற பாதையில் நடக்கின்றேன்
போகும் இடந்தோறும் பின்தொடர்கிறது அலை
குறட்டைச் சத்தம்போலோ
தண்டவாளத்தில் ரயில் தடதடப்பதைப் போலோ
அந்த அலை என்னைப் பின்தொடர்கிறது

ஒழுங்குபடுத்தப்பட்டதுபோலும்
வளர்ச்சி குன்றியும் எடுப்பாய்த் தோன்றும்
போன்சாயின் கிளைகளாக
ஏங்கிக் குமையும் என் பருவ உணர்வுகளும்
விரகதாபத்தின் மழையையும்
கருமை கவிந்த இரவின் பனியையும் அறியாமலே
என்னை நகர்த்திச் செல்கிறது

இதுவரை தொலைவாகப் பின்தொடர்ந்து அலை
கண்ணுக்கெட்டும் தூரத்தை நெருங்கியிருக்கிறது
மரங்களை வளர்க்கும்
பூக்களை இதழ் விரிக்கும்
குஞ்சுகளை அடைக்காக்கும்
என் கனவுகளைப் பறித்துச் செல்லும் தாபம்
அலையின் கண்களில் நிறைந்திருந்தது
இறுகப் பூட்டிய என் சரீரத்தின் சாவியை
இடையில் செருகியிருப்பதை ஓரக்கண்ணால்
காண்பித்தது எனக்கு

எந்த நேரத்திலும் அலை என்னை
அடித்துச் செல்லலாம்
சாவியை என்னுள் திருகி
ஆலிங்கனம் செய்யலாம்.

என் மரக்கன்றுகளுக்கு நீர் வார்க்க
மலையைத் தேடி அலைகிறேன்

என் பூக்களை இதழ் விரிக்க
ஓர் விடியலை அழைக்கிறேன்

என் குஞ்சுகளை அடைக்காக்க
ஒரு பறவையைக் கோருகிறேன்

மிக உயர்ந்த மலையடிவாரத்தில்
முடிவுறாது ஓடும் நதியில்
நீராடுவதுதான் என் இறுதி ஆசை

பின்தொடர்ந்த அலை
கரையில் குந்தி இளைப்பாறுகிறது
நீராடி முடிந்ததும்
எனை அணைத்துச் செல்லும் திண்ணமாய் !

சர்மிளா செய்யித்    
 

Saturday, August 4, 2012

இலக்கணமா? இலக்கியமா?

பச்சைப் பசேல் என்ற நெல் வயல்கள் சூழ்ந்த அந்த கிராமத்தின் நடுவே இருக்கும் உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டினை, பள்ளியின் மாணவர்களும், பழைய மாணவர்களும் இணைந்து நடத்தினர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக `தமிழ் மொழியின் சிறப்பு அதன் இலக்கணமா? அல்லது இலக்கியமா?' என்ற பட்டிமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இலக்கணம் என்ற அணியில் இப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூவரும், இலக்கியம் என்ற எதிரணியில் பழைய மாணவர்கள் மூவரும் பங்கு கொண்டனர். பள்ளியின் முன்னாள் மாணவரும், புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றின் இந்நாள் தமிழ்த் துறைத் தலைவருமான முனைவர் குகன் பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்கினார்.

'பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்ற இலக்கண நூலைத் தந்தது தமிழ்' என்றனர் ஓர் அணியினர். 'உலகமே வியக்கும் ஒன்றே முக்கால் அடி கொண்ட திருக்குறள் ஒவ்வொன்றும் ஓர் இலக்கியம்' என்றனர் இன்னோர் அணியினர். `எதுகையும், மோனையும், சீரும், அணியும் என நல்ல இலக்கணத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதே திருக்குறளின் சிறப்பு' என்றனர் பதிலுக்கு.

இலக்கிய அணியும் விடுவார்களா என்ன? `திருக்குறளின் இலக்கணத்தை உலக மொழிகளில் மொழி மாற்றம் செய்யவில்லை. மாறாக, அதன் இலக்கியத்தை, கருத்துக்களை மட்டுமே மொழி பெயர்த்தனர்' என்றனர். பட்டிமன்றத்தின் இறுதிக் கட்டமும் வந்தது. நடுவர் என்ன முடிவு சொல்வார், எந்த அணி வெற்றி பெறும் என அரங்கத்தில் இருந்தவர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.

இரண்டு அணிகளின் வாதங்களையும், விவாதங்களையும் அழகாகத் தொகுத்து வழங்கிய நடுவர் தொடர்ந்து பேசினார்.

'வடமொழிப் பெயர்களைத் தமிழில் குறிப்பிடுவதற்காக சில வடமொழி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. உதாரணத்துக்கு லக்ஷ்மணன், லக்ஷ்மி. அதன்பின் அவை வடமொழி எழுத்துக்கள் இன்றி லட்சுமணன், லட்சுமி என எழுதப்பட்டன. பின்னால் இலக்குமணன் என்றும், இலக்குமி என்றும் எழுதப்படுவதும் உண்மை.

இலக்கணம் என்பதும் லக்ஷணம், லட்சணம் என்ற அழகையும், இலக்கியம் என்பதும் லக்ஷியம், லட்சியம் என்ற குறிக்கோளையும் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். தமிழின் சிறப்பு வெறும் அழகா அல்லது அழகில்லாக் குறிக்கோளா என்ற கேள்விக்கு இடமில்லை.

இலக்கணம் என்ற காற்றையும், இலக் கியம் என்ற உணவையும் ஒவ்வொரு செல்லுக்கும் எடுத்துச் செல்லும் ரத்தம் தமிழ் மொழி ஆகும். இரண்டும் இணையும் போதுதான் சக்தி என்ற ஆற்றல் பிறக்கிறது. ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை. அழகைப் பார்ப்பவர்களுக்கு அது லட்சணமாகத் தோன்றும். அறிவாக உணர்பவர்களுக்கு அது லட்சியமாகத் தோன்றும்.

நாமிருக்கும் காலமும், இடமும் ஒவ்வொரு நொடியும் மாறுவதைப் போல, இலக்கணமும் இலக்கியமும் கவிதைக்குக் கவிதை, கவிஞனுக்குக் கவிஞன் மாறுபடும். தமிழின் எல்லாப் படைப்புகளும், படைப்பாளிகளும் அவளின் குழந்தைகளே. நான் உட்பட. அதுவே என் முடிவும்...' என்றார்.

அவரின் பேச்சைப் புரிந்தவர்களும், புரியாதவர்களும், புரிய முயன்றவர்களும், முயலாதவர்களும் கைகளைத் தட்ட மட்டும் மறக்கவில்லை.

இப்படித்தான் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், அவர்களின் ஒவ்வொரு சிந்தனையிலும், செயலிலும் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. தனக்கு என்ன வேண்டும் என்ற முடிவில் அல்லது அதை எப்படி அடைய வேண்டும் என்ற வழியில் குழப்பம் ஏற்படுகிறது.

வேண்டிய முடிவைக் குறுக்கு வழியில் அடைந்து வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும் அது உண்மையான வெற்றி ஆகாது. மாறாக, நல்வழியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காவிட்டாலும் எதிர்பார்த்ததைவிட அது அதிக மன நிறைவைத் தரும்.

நம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது.

ஒரு மாணவனுக்கு என்ன தேவை என்பதை ஓர் ஆசிரியர் அறிந்து, அவனுக்கு எப்படிக் கற்பிப்பது என்பதை உணர்ந்து, அவரே கற்பித்து, எப்படிக் கற்றிருக்கிறான் என்பதையும் அவரே தெரிந்து பின் அவனை ஒரு வல்லுனராக உலகுக்கு அறிவிக்கும் பொறுப்பையும் அந்த ஆசிரியருக்கே வழங்கினால் நன்றாக இருக்கும்.

அப்படிப்பட்ட இலக்குகளைக் கொண்ட நல்ல ஆசிரியரை இலக்கண முறைப்படித் தெரிவு செய்து மாணவர்களுக்குக் கொடுத்தால் கல்வித் தரம் உயரும். பல வளர்ந்த மேலை நாடுகளில் அப்படித்தான் இருக்கிறது.

ஆனால், ஒருவர் பாடத் திட்டத்தைத் தயார் செய்து, இன்னொருவர் கற்பித்து, வேறொருவர் கேள்வித்தாள்களை உருவாக்கி, கடைசியில் யாரோ ஒருவர் மாணவனின் விடைகளைத் திருத்தி அதன் பின் வரும் தேர்வின் முடிவுகள் உண்மையான முடிவுகளா?

தினமும் கற்றுக் கொள்ளாமல் தேர்வுக்கு முன் படிப்பதற்காக விடும் சில விடுமுறை நாட்களில் கொஞ்சம் மனனம் செய்து குறைந்த மதிப்பெண்ணில் தேர்வு பெற்று, பெயருக்குப் பின்னால் ஆங்கில எழுத்துக்களை மாற்றி மாற்றி அடுக்கிக் கொள்வதில் என்ன இருக் கிறது?

பட்டதாரி ஆகவேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சிலர் துண்டு சீட்டுகளை தேர்வுத் தாள்களாக மாற்றுவதையும் நாம் அறிகிறோம்.

சில நேரங்களில் ரூபாய் நோட்டுகள் கூடப் பட்டங்களாக உருவாகும் செய்திகளையும் காண்கிறோம்.

லட்சணம் இல்லா இந்த வெற்றியில் மெய்யில்லை; பட்டம் வாங்க வேண்டும் என்ற வெறி மட்டுமே இருக்கிறது.

போக்குவரத்து நெருக்கடியில் ஆறு மாதக் குழந்தையைக் காட்டி பிச்சை கேட்பதை விட, வெயில் என்றும், மழை என்றும் பாராமல் அங்கே பொம்மைகளையும், புத்தகங்களையும் விற்பது மேலானது. ஒரு சாண் வயிற்றுக் காக இருவரும் உழைத்தாலும் ஒன்று வலி, மற்றொன்று வழி.

காலை முதல் மாலை வரை உடல் வியர்க்க உழைத்துப் பெறும் நூறு ரூபாய் சம்பளத்தில், இரவு ஒருவேளை மட்டுமே உண்டு உறங்குபவன் கூட நிம்மதியாகத் தூங்குகிறான்.

உழைக்காமல் பிறரை ஏமாற்றி ஆயிரமென சம்பாத்தியம் பண்ணுகிறவன் குளிர் அறையில் உறங்கினாலும் உடல் கொதிப்பதாக உணர்கிறான். அவனின் உள்மனமும் ஆழ்மனமும் அவனை உறங்க விடுவதில்லை.

அமெரிக்காவில் குலுக்கல் பரிசுச் சீட்டில் லட்சாதிபதி, கோடீஸ்வரன் ஆன அதிர்ஷ்டசாலிகளைப் பற்றி ஒரு கருத்தாய்வு நடத்தினார்கள்.

பரிசு பெற்றவர்களில் பலர், பரிசு பெற்ற சில காலத்துக்குள்ளேயே மீண்டும் முன்பிருந்த பொருளாதார நிலைக்கு அல்லது அதைவிட மோசமான நிலைக்கே அவர்கள் போனதாக அது தெரிவிக்கிறது. அதிர்ஷ்டம் கூட அவர்களுக்கு நிரந்தரம் இல்லை.

அரங்கத்தின் கைதட்டல் நின்றவுடன் நடுவர் பட்டிமன்ற முடிவைத் தொடர்ந்தார். மாணவர்களைக் கொஞ்சம் குழப்பி, குழம்பிய நீரில் மீனைப் பிடிப்பது எளிது என்ற எண்ணத்தில் கொஞ்சம் விட்டு விட்டு மீண்டும் ஒரு சிறுகதையைச் சொன்னார்.

'அந்த மலைக்கு மேலேயும் கீழேயும் இரண்டு ஊர்கள் இருந்தன. எதற்கெடுத்தாலும் அவர்களுக்குள் சண்டை.

அப்படித்தான் ஒரு சண்டையின் போது மேல் ஊரிலிருந்தவர்கள் கீழ் ஊரில் இருந்த ஒரு குழந்தையைக் கடத்திச் சென்று விட்டனர்.

குழந்தையை விட, அதைக் கடத்திச் சென்றவர்கள் எதிரிகள் என்பதால் அது ஒரு மானப் பிரச்சினையாக ஆனது கீழ் ஊரில் உள்ளவர்களுக்கு. பெற்ற தாயும் கண்ணீர் விட்டு அழுதாள். முடிவில் அவர்களில் சிலர் மலை ஏறி குழந்தையை மீட்பது என முடிவு செய்தனர்.

அனுபவம் இல்லாத அவர்கள் மலையேறத் துவங்கினர். ஆனால் அவர்களால் முன்னேற முடியவில்லை. பத்து நாட்களாகியும் பாதி தூரத்தைக் கூடக் கடக்க முடியாமல் தவித்தனர்.

கூடாரம் ஒன்று அமைத்து ஓய்வெடுத்தனர். அப்போது கையில் ஒரு குழந்தையுடன் ஒரு பெண் மேலிருந்து கீழே வேகமாக இறங்கிக் கொண்டிருந்தாள். எட்டிப் பார்த்தால் கடத்தப்பட்ட குழந்தையுடன் அதன் தாய்.

'ஏம்மா, நீ இங்கே எப்படி?' என்றனர்.

'குழந்தையை மேலிருந்து மீட்டுக் கொண்டு வந்துகொண்டிருக்கிறேன்' என்றாள்.

அனைவரும் திகைத்து நிற்க, ஒருவன் 'இத்தனை நாட்கள் முயன்றும் எங்களால் மேலே ஏற முடியவில்லை. உன்னால் மட்டும் எப்படி முடிந்தது?' என்றான்.

தயங்கியபடி அந்தத் தாய் சொன்னாள்: 'ஏன்னா... ஏன்னா... இது உன் குழந்தை இல்லை'.

இந்தக் கதையைக் கேட்ட மாணவர்களும் மற்றவர்களும் புரிந்து கொண்டு பலமான கரவொலி எழுப்பினர்.

'நோக்கம் நல்லதாக இருந்தால் வழியும் நல்லதாகவே அமையும். தமிழின் இலக்கு நல்லது. அதனால் இலக்கை அடையும் வழியும் நல்லதாகவே அமையும்.

தமிழ் மொழியின் சிறப்பு நல்ல இலக்கியமாக இருப்பதால் இலக்கணமும் நன்றாகவே இருக்கிறது. இலக்கியமின்றி இலக்கணம் இல்லை. எனவே இலக்கணத்துக்கு ஒரு புள்ளி அதிகம் தந்து முதலிடத்தைத் தருகிறேன்' என்றார் நடுவர்.

புரிந்து கொண்ட கூட்டமும், வைர விழாவை எப்படி இதைவிட அழகாகக் கொண்டாடுவது என்று யோசிக்கத் தொடங்கியது.

இலக்கணம் தொடுத்து இலக்கியம் படைப்போம்!

குமார் கணேசன்