Thursday, June 28, 2012

கண்ணுக்குள் 'டாட்டூஸ்'

சினிமா நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொள்வதுதான் இப்போது பேஷன். பச்சைக்குத்துவதில் நவீன வடிவம் தான் டாட்டூஸ் என்பது. உடல் முழுக்க டாட்டூஸ் குத்தியவர்கள், வேறு எங்கும் காலி இடம் இருக்கிறதா? என்று பார்த்தார்கள். கண்கள் தான் வெற்றிடமாக இருந்தது. இப்போது அங்கும் டாடூஸ் குத்த தொடங்கி விட்டார்கள்.

ஐபால் டாட்டூஸ் என்பது வெளிநாட்டில் இருந்து வட இந்தியாவிற்கு இறக்குமதியாகி உள்ளது. இந்த டாட்டூஸ் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கண்களில் டாட்டூஸ் குத்திக் கொள்வது நீண்ட  நாட்களாக இருந்து வருகிறது. கண்களில் உள்ள வெண்பகுதி மற்றும் கருவிழி இரண்டிலுமே பச்சைக் குத்தலாம். வெள்ளை படலங்களில் நரம்புகள் அதிகமாக இல்லாததால் அங்கு பச்சைக் குத்தும் போது வலி குறைவாக இருக்கும். அதனால் பெரும்பாலானவர்கள் வெள்ளை படலத்தில் பச்சைக் குத்துவதையே விரும்புகிறார்கள்.

தற்போது வட இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த டாட்டூ கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதில் மெட்டாலிக் கலர் என்ற முறையைத் தான் 'டீன் ஏஜ்' வயதினர் விரும்புகிறார்கள். உடலின் தோல் நிறத்துக்கு ஏற்ப கண் கலரை தேர்வு செய்து பச்சை குத்திக் கொள்கிறார்கள்.

பெரும்பாலும் அமெரிக்கப் பெண்கள் வண்ணத்துப்பூச்சி வடிவ டாட்டூக்களைத் தான் விரும்பிக் குத்திக் கொள்கிறார்கள். வட இந்திய பெண்கள் ஆர்டின் வடிவ டாட்டூக்களைத் தான் விரும்புகிறார்கள்.

ஆனால், அமெரிக்காவில் கண்ணில் டாட்டூ குத்திக் கொள்வது சட்டப்படி குற்றம். நிறையபேருக்கு இதன் மூலம் பார்வை பறிபோயிருக்கிறது. சாதரணமாக கண்ணில் தூசி விழுந்ததை தாங்கி கொள்ள முடியாத கண்கள் எப்படி டாட்டூவை தாங்க முடியும்? அதை எப்படி கண்கள் ஏற்றுக் கொள்ளும்? என்று எச்சரிக்கிறார்கள்.

இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த பேஷன் தென்னித்தியாவுக்கும் வந்து விடும் வாய்ப்பிருக்கிறது. பார்வை பறிபோகும் இந்த பேஷனுக்கு அடிமையாகி விடாமல் விழிப்போடு இருக்க வேண்டியது இன்றைய இளைஞர்களின் அவசியத் தேவை. 

Wednesday, June 27, 2012

கவிதைச்சரம்

நாணய மொழி

'ஓர்ரூபாதாம்பா குடுத்தேன்'
அந்த பாட்டியின் குரல்
அம்பலம் ஏறவில்லை.

'இதோ பார்...
ஒர்ரூபா இல்ல
நீ கொடுத்தது அம்பது பைசாதான்.
இன்னும் அம்பது பைசா தா'
கடுகடுத்தார் கண்டக்டர்.

'அஞ்சு ரூபாயை
அம்பது காசு மாதிரி
அடிச்சிருக்கானுங்க.
ரெண்டு ரூபாய்க்கும்
ஒர்ரூபைக்கும்
வித்தியாசம் தெரியல.
கண்ணு இருக்குற
எனக்கே தடுமாறுது
கண்ணு தெரியாதவங்க
என்ன செய்வாங்க.'
பஸ் முழுக்க
சில்லறையாய் சிதறிக்கிடந்தன
பாட்டியின் முனுமுனுப்பு!

மதிபாரதி


************************************************

அன்பை பற்றிக்கொள்ளுதல்

வசரமாய்
தொலைபேசியில் அழைத்து
அன்புபற்றிய கவிதையொன்று
அச்சில் வந்திருப்பதாகச் சொன்னேன்.

வேலை முடிந்து
வீட்டுக்கு வரும்போது
மகனுக்கு மறக்காமல்
மருந்து மாத்திரைகள்
வாங்கி வா என்றாய்.

எனக்குப் புரிந்தது
அன்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதும்
அன்பையே பற்றிக்கொண்டிருப்பதும் !

செல்வராஜ் ஜெகதீசன்


************************************************


மழை முத்தம்

சொட்டு முத்தங்களால்
வாளியை நிரப்புகிறது
குட்டி மழை !

தேனம்மை லக்ஷ்மணன் 


************************************************

ரகசியங்கள் நிரம்புமிடம்

என்னதான் செய்ய...
நம்மைப் பற்றிய
ரகசியங்காளால்
நிரம்பி வழியும்
குப்பைக் கூடைகளை?

விகடபாரதி


************************************************

எம்மை விழுங்கிய சமையலறைகள்

பெண் வாழ்நாள் முழுக்கச் சுட்டெடுத்த
சப்பாத்திகளைக் கணக்கெடுத்த
அம்பை காட்டிய
மூலைச் சமையலறைதான்
மூளைக்குள் முளைத்த
முதல் சமையலறை.
முதல் பச்சை மிளகாய்
அம்மியில் அரைபட்ட
காரநெடி இன்னும் என் நுகர்வில்.

எத்தனை படித்தாலும் - நீ
எழுதிய கவிதையைத் தின்ன முடியாது.
எண்ணெய்க் கடுகைத்
தாளிக்கத்தான் வேண்டும்
அம்மாவின் தாளிதம் அதட்டியது.
வறண்டுபோன
நகைச்சுவைத் துணுக்குகளில்தான்
சமைத்துக்கொண்டே இருக்கிறார்கள் ஆண்கள்.
தாகூரின் மனைவிக்கும்
இருக்கிறது சமையலறை வரலாற்றில்.
குருவிக்கு அரிசி இறைத்த
பாரதியின் செல்லம்மாவுக்கு
இருக்கிறது வரலாற்றுத் தேம்பல்!

ஜே.மஞ்சுளாதேவி    

Friday, June 22, 2012

வேலையும், உங்கள் உடல்நலமும்

எந்நேரமும் வேலை வேலை என்று அதிலேயே மூழ்கிப் போகிறவரா நீங்கள்? ஜாக்கிரதை, வேலை சார்ந்த வியாதிகள் தற்போது அதிகரித்து வருகின்றன என்கிறது ஓர் ஆய்வு.

சுமார் 2 கோடி இந்தியர்கள் வேலையால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி இருக்கிறார்களாம்.

பணியிட பாதிப்பு என்றால், சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு செய்வோருக்கு ஏற்படும் காயங்கள், கோழிப்பண்ணைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் 'பேரட் பீவர்' என்றில்லை. 'ஒயிட்காலர் ஜாப்' எனப்படும் அலுவலகப் பணிபுரிபவர்களுக்கும் அனேக பாதிப்புகள் ஏற்படலாம்.

உங்களின் இருக்கை முறைப்படி வடிவமைக்கப்படாததாக இருந்தால், நீங்கள் 6 முதல் 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முதுகுவலி, மணிக்கட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் வரிசை கட்டி வரும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதை உணர்வது அரிதே.

1.9 கோடி இந்தியர்கள் பணியிட பாதிப்புக்கு உள்ளாகின்றனர், அவர்களில் 1.20 லட்சம் பேர் ஆயுளை இழக்கின்றனர் என்கிறது, 'பணியிட வியாதிச் சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின்' புள்ளிவிவரம். இது உலக அளவில் 17 சதவீதம். மரணத்தை ஏற்படுத்துவதில் பணியிடப் பாதிப்புகள் 10-வது பெரிய காரணமாக உள்ளன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

"இந்தியர்களில் 43 சதவீதம் பேர் பணிபுரிபவர்கள். எனவே அலுவலக பாதிப்புகளை நாம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார், அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்ïட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் இயக்குநர் பி.கே. நாக்.

நாள் முழுவதும் உட்கார்ந்து செய்யும் வேலை, புகைப் பழக்கத்துக்கு இணையாக மோசமானது என்கிறார்கள் மருத்துவர்கள். அது, 'டைப் 2' சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு இட்டுச் செல்லலாம்.

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, ஓடியாடி வேலை செய்யும் மற்றவர்களை விட அதிக எடை போடும் வாய்ப்பு இரண்டு மடங்காம். மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்பை உடற்பயிற்சி கூட போக்காது என்கிறார்கள்.

மும்பையில் உள்ள புகழ்பெற்ற பிரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் சஞ்சய் போருடே, "என்னிடம் வரும் நோயாளிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இளம் அலுவலர்கள்'' என்கிறார்.

'இருக்கைப் பணி' புரிபவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும், சோம்பல் முறிப்பது போன்ற எளிய பயிற்சிகள் கூட நன்மை பயக்கும் என்று ஆலோசனை கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

Thursday, June 21, 2012

இன்று உலக இசை தினம்

இசை கேட்டால் புவி அசைந்தாடும்
"இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது, அமைதியாகவும் இருந்திட முடியாது' என இசை குறித்து மறைந்த பிரெஞ்ச் கவிஞர் விக்டர் ஹியூகோ குறிப்பிட்டார். இசை இல்லாமல் வாழ்ந்திட முடியுமா? நிச்சயமாக முடியாது. இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசையில், வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

எப்படி தோன்றியது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது, மனிதன் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. பறவைகளின் சத்தம் ஒருவிதமாகவும், விலங்குகளின் சத்தம் ஒரு விதமாகவும் இருக்கும். கைதட்டுதல் உள்ளிட்ட நமது அசைவுகளின் மூலமே இசையின் பயணம் துவங்கியது. இன்றைய இசையின் நிலை, பல பரிமாணங்களை கடந்து தொழில்நுட்பத்தை சார்ந்து புதிய பாதையில் பயணிக்கிறது.

இசைகள் பலவிதம்: பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை, நவீன இசை என பல பரிமாணம் உருவானது. ஒவ்வொரு நாடும் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, தென்னிந்தியாவின் கர்நாடகா இசை பின்பற்றப்படுகிறது.

வரையறை: இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாச்சாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும், வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் ஏற்ற வகையிலும் இருக்க வேண்டும். இதன் பொறுப்பு இசைக் கலைஞர்களுக்கு உள்ளது. இசைக்கும், சமூக பொறுப்பு உள்ளது.

அறிஞர்களின் பார்வையில்...

* இசை அன்பின் உணவாக இருப்பின், விளையாடுங்கள் - ஷேக்ஸ்பியர்
* இசை எனது மதம் - ஜிமி ஹென்றிக்ஸ்
* இசை உன்னை வெளிக்கொண்டு வரவேண்டும் - மிஸி எலியாட்
* இசை உள்ளவரை, நீ இசையாகவே இரு - டி.எஸ்.எலியாட்
* இசை உணர்ச்சியின் சுருக்கெழுத்தாக இருக்க வேண்டும் - லியோ டால்ஸ்டாய்
* கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டமாக இசை இருக்க வேண்டும் - பிளாட்டோ
* இசை உலகை மாற்றும், ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது - போனோ

இன்றும் ஒரு தகவல் - மண்ணை சாப்பிடும் மக்கள்

ஹைதி - அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு. இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகிறார்களாம். ஹைதியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால் அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது. கடைசியாக எப்போது சாப்பிட்டார்கள் என்று கேட்டால் இங்கு யாருக்குமே நினைவு இல்லை.

குழந்தைகளுக்கு முதல்நாள் இந்த மண் கேக்கை ஊட்டுகிறார்கள். மறுநாள் குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும். அடுத்தநாள் பட்டினி. அதற்கு மறுநாள் வயிறு காய்ந்து குழந்தை அலறும். அப்போது மீண்டும் மண் கேக். இப்படி கொடுத்து, கொடுத்து மண் கேக் அந்த குழந்தைக்கு பழகிவிடும். இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது. பணம் இருந்தால் கொஞ்சம் உப்பு வாங்கி, மண்கேக்கிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள். இந்த கேக்கை ஒருவகை களிமண்ணால் செய்கிறார்கள்.


விலைவாசி உயர்வு வேறு எந்த நாட்டையும் விட ஹைதியை கடுமையாக பாதித்து இருக்கிறது. சாப்பிட முடியாமல் இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடுகளையே நம்பி உள்ளனர். உள்நாட்டில் எந்த உற்பத்தியும் இல்லை. விளை நிலங்கள் என்று எதுவும் இல்லை. எல்லாமே பொட்டல் காடுகள் தான். எஞ்சியிருந்த காடுகளையும் விறகிற்காகவும், கரிக்காகவும் அழித்துவிட்டார்கள்.

நிலைமையை மீட்டெடுக்கிறோம் என்று 1980 -ல் ஹைதியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது. எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்தி கொள்ளலாம். அதற்கு வரிகள் கிடையாது. இதன்விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தன. ஆனால் விலை தான் வாங்க முடியாத உச்சத்தில் இருந்தது. போராடத் தொடங்கிய மக்கள் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் பொய், இறுதியில் பிச்சை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் மண் கேக் சாப்பிட்டனர். இளைஞர்கள் பணக்காரர்களை கொள்ளையடித்தனர். இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக ஹைதி மாரிவருவது உலகிற்கு தெரியவந்து, மண்கேக் சாப்பிடும் செய்திகளும் படங்களும் வெளியாகி உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறன.

பொருளாதாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால், இதுபோன்ற பிரச்சினைகள் தவிர்க்க முடியாதவையே.   

Monday, June 11, 2012

பேய்களின் திருவிழா

திருவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். இரவு திருவிழாக்களில் முக்கியமானது 'ஹேலோவீன்' என்பது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31 -ந் தேதி இரவு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

கோடைமுடியும் நேரம், பூமிக்கும் நரகத்துக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து விடும். எனவே பேய் பிசாசுகள் லோக்கல் சிட்டி பஸ்ஸில் பூமிக்கு வந்துவிடும் என்பது பண்டைய செல்டிக் மக்களின் நம்பிக்கை. டவுன் பஸ் ட்ரிப்பில் சொந்தக்காரப் பேய்களும் வந்துவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை. அந்த சொந்தக்காரர்களை தங்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக கூப்பிட்டு விருந்து வைப்பார்கள். கெட்ட ஆவிகளை வாசலிலேயே துரத்தி விடுவார்கள்.

மோசமான பேய்களை போலவே அன்றைக்கு மக்கள் மாறுவேஷம் போட்டுக்கொள்வார்கள். அட இது நம்ம ஆளுப்பா என்று கெட்ட ஆவிகள் ஏமாந்து, மனிதர்களை தேடி அடுத்த வீட்டுக்கு போகும். அங்கும் இப்படியே மனிதர்கள் வேஷம் போட்டிருப்பார்கள். இப்படி ஒவ்வொரு வீடாக அடைந்து ஏமாந்து மீண்டும் நரகத்துக்கே அந்த பேய் போய்விடும்.

அன்று விருந்துக்கு வரும் ஒவ்வொருவரும் டிராகுலா, வேம்பையர் என்று பதறவைக்கும் வேஷத்தில் அலறவைப்பார்கள். பூசணிக்காயில் பேய் உருவங்களை செதுக்கி உள்ளே லைட் போட்டு 'திகில் எபக்ட்' கொடுப்பார்கள். மண்டை ஓடு கேக், எலும்பு சாக்லேட், ரத்தக்கத்தி என்று இரவு சாப்பாடே மிரட்டலாக இருக்கும்.

ஒரு அறை முழுக்க பிளாஸ்டிக் எலும்புக்கூடுகளை அடுக்கி வைத்திருப்பார்கள். செட்டப் கல்லறைகள், நகரும் நிழல் உருவங்கள் என்று ஆவிகளை அலறவைப்பார்கள். விருந்து முடிந்ததும் திகில் படங்களை பார்த்து கூட்டமாக பயப்படுவார்கள். கன்னிப்பெண்கள் 'ஹேலோவீன்' இரவு அன்று தனியறையில் லைட் எதுவும் போடாமல் கண்ணாடியை பார்த்தால் அதில் எதிர்கால கணவனின் முகம் தெரியுமாம். ஒரு வேலை கண்ணாடியில் மண்டை ஓடு தெரிந்தால் அவ்வளவுதானாம். திருமணம் எதுவும் நடக்காமலேயே அந்த பெண் இறந்து விடுவாளாம்.      

Saturday, June 9, 2012

இன்றும் ஒரு தகவல் - உயிரை பதம் பார்க்கும் சூதாட்டம்

சூதாட்டம், இன்று நேற்றல்ல: சரித்திரம் தொடங்காத காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஆதிவாசிகள் மத்தியிலும் சூதாட்டம் இருந்தது. சூதாட்டத்தில் காலை ஆட்டிக் கொண்டு ஜாலியாக உட்கார்ந்து ஆடும் சூதாட்டமும் உண்டு. உயிரைப் பணயம் வைத்து ஆடும் ஆட்டமும் உண்டு.

இரண்டாவது வகை சூதாட்டத்தில் ஒன்று தான் ஹாக்டவ் என்று சொல்லக்கூடிய சிக்கன் விளையாட்டு. இந்த விளையாட்டில் உயிர் போகும் என்று தெரிந்தே கலந்து கொள்கிறார்கள். காரணம் பொத்துக் கொண்டு கொட்டும் பணம்.

இந்த போட்டி நடத்த ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு ரோட்டை தேர்ந்தெடுப்பார்கள். ரோட்டின் நடுவே ஒரு வெள்ளைநிறக் கோட்டை வரைவார்கள். இந்த கோடு தான் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுக்கும். தொலைவில் இருந்து எதிர் எதிரே அனல் பறக்கும் வேகத்தில் காரை ஒட்டி விடுவார்கள். காரின் ஒரு டயர் வெள்ளைக்கொட்டின் மீதே வர வேண்டும். அதை விட்டு விலகக்கூடாது.

கார்கள் மோதிக்கொள்ளும் கடைசி நொடியில் உயிர் பயத்தில் யாருடைய கார் டயர் வெள்ளைக்கொட்டை விட்டு விலகுகிறதோ அந்த காரை ஒட்டி வந்தவரே சிக்கன். கோட்டை விட்டு விலாகாமல் கடைசி வரை காரை யார் ஓட்டுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்ற ஹீரோ. ஹீரோவுக்கு பந்தயத்தில் கட்டப்பட்ட பணம் கிடைக்கும்.

ஒரு வேளை இருவருமே தைரியசாலியாக இருந்து, இரண்டு பேருமே கோட்டை விட்டு விலகாமல் நேருக்கு நேர் வந்து இரண்டு காரும் மோதிக் கொண்டால் அந்த மோதலில் யார் உயிருடன் இருக்கிறார்களோ அவர்கள் தான் ஹீரோ. சில சமயம் இரண்டு பேருமே இறந்து விடுவார்கள். அப்படி இருவரும் இறந்தால் இரு வரையும் ஹீரோக்களாக அறிவித்து விடுவார்கள். அவர்களுக்கான பணத்தை அவர்களை ஸ்பான்சர் செய்த கம்பெனி எடுத்துக் கொள்ளும்.

இந்த விளையாட்டைப் போலவே இன்னொரு சூதாட்ட விளையாட்டும் உண்டு. அதன்பெயர் ஸ்டீர்ட் லூக். இது படுத்துக் கொண்டே ஜெயிக்கிற விளையாட்டு. ஸ்கேட்டிங் போர்டில் படுத்துக் கொள்வார்கள். எந்த பிடிமானமும் இருக்காது. சரியான சாலையில் தள்ளி விடுவார்கள். அதில் இடிக்காமல், உருளாமல் உயிரோடு கீழே போய் சேர்ந்தால் பணம் கைநிறைய கிடைக்கும். ஒரு வேளை கீழே போக முடியாவிட்டால் மேலே சொர்க்கம் கிடைக்கும். இப்படி உயிரை பணயம் வைத்து விளையாடுகிறார்கள், சூதாட்டகாரர்கள்.      

Friday, June 8, 2012

என் பெயர் குமாரசாமி - TEASER

தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிதாகப்பேசப்பட்டு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் 'என் பெயர் குமாரசாமி' இறுதிக்கட்ட பணிகளின்போது படம் சிறப்பாக வந்திருப்பதாக ஸ்டூடியோ வட்டாரங்கள் கிசுகிசுக்கிற இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒரு TEASER இதோ உங்கள் பார்வைக்கு....