Friday, May 25, 2012

போர்க்கள புகைப்படக்கலைஞர் ராபர்ட் கபே

1938ம் ஆண்டு பிக்சர் போஸ்ட் என்ற உலகப்புகழ் பெற்ற பத்திரிகை பின் வருமாறு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் ராபர்ட் கபே எடுத்த வியட்நாம் போர்க்களகாட்சிகள் நாளை முதல் பிரசுரமாகிறது என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு புகைப்படக்கலைஞருக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்து வெளியான இந்த அறிவிப்பு, யார் அந்த புகைப்படக்கலைஞன் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலை அவரை அறியாதவர்களுக்கு ஏற்படுத்தியது.
யார் அந்த ராபர்ட் கபே; வாழ்வையும், சாவையும் போர்க்களமாக்கிக்கொண்ட புகைப்படக் கலைஞர். உலகை உலுக்கிய போர்ப்புகைப்படங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர். நாற்பது வயதில் மரணத்தை தொட்டவர். அந்த நாற்பதாவது வயதிலும் கேமிராவுடன் போர்களத்தில் நின்றவர். இதனால் உலகம் முழுவதும் உள்ள புகைப்பட ஆர்வலர்களின் மனதை வென்றவர். 

ஹங்கேரியில் பிறந்த இவரது இயற்பெயர் என்ட்ரி ப்ரைடுமேன். பட்டப்படிப்பு முடிப்பதற்கு முன்பே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சந்தர்ப்பம் இவரை புகைப்படக் கலைஞராக்கியது. எழுத்தில் வார்க்க நினைத்த உணர்வுகளை புகைப்படங்களில் கொண்டுவர முடிவு செய்தார்.புகைப்படக்கலைக்கு தீவிரமானதொரு முகத்தை தருவது போர் புகைப்படங்களே என்பதை உணர்ந்து போர் புகைப்படங்களை எடுக்க துணிந்தார். போர் வீரர்களுக்கு இணையான வீரமும், துணிச்சசலும், சாகசமும் இருந்தால் மட்டுமே போர்க்கள புகைப்பட கலைஞனாக இருப்பது சாத்தியம். இதெல்லாம் கூடுதலாகவே கொண்டிருந்த என்ட்ரி ப்ரைடுமேன், ராபர்ட் கபே என்ற புனைப்பெயருடன் போர்ப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார்.

போர்க்கள புகைப்படங்கள் என்றாலே வீரர்கள் அணிவகுப்பு, பீரங்கிகளின் முன்னேற்றம், குண்டு துளைத்த கட்டிடங்கள், பிணக்குவியல்தான் காட்சி படுத்தப்படும். அந்த மாதிரியான சூழலில் ஸ்பானிஷ் போரின் போது ஸ்பானிஷ் வீரர் ஒருவர் குண்டடிபட்டு சாய்ந்து விழும் படம் ஓன்றை ராபர்ட் கபே எடுத்தார். சாவின் எஞ்சியிருந்த கடைசி நொடியினை பதிவு செய்த அந்த படம் வு என்ற பிரெஞ்சு பத்திரிகையில் முதலில் வெளிவந்தது. அப்போது கூட அந்த படம் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் அதற்கு பிறகு அந்த படத்தை லைப் பத்திரிகை உணர்ச்சிகரமான குறிப்புகளுடன் சரியும் போர்வீரன் என்று தலைப்பிட்டு பெரிதாக வெளியிட்டதும் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது. உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகள் தத்தம் கண்ணோட்டத்துடன் அந்த படத்தை மறுபிரசுரம் செய்தன.

இதன் பிறகு ராபர்ட் கபேயின் பெயர் உச்சத்திற்கு சென்றது. இவரை ஒப்பந்தம் செய்து போர்க்களத்திற்கு புகைப்படம் எடுக்க அனுப்புவதற்கு புகழ் பெற்ற செய்தி ஸ்தாபனங்கள் போட்டியிட்டன. அவரும் இரண்டாம் உலகப்போர், ஜப்பானியப் போர், அரபு- இஸ்ரேல் உள்ளிட்ட ஐந்து போர்களங்களில் புகைப்படக்கலைஞராக பணியாற்றி ஆயிரக்கணக்கான சாகவரம் பெற்ற படங்களை பதிவு செய்தார். இவர் போர்க்களத்தில் பெற்றதைவிட இழந்தது அதிகம். தான் உயிருக்கு உயிராய் காதலித்த ஹெரா டேராவையும் போர்க்களத்திற்கு கூட்டிச் சென்று காதலையும், புகைப்படக்கலையும் ஒரு சேரக் கற்றுக் கொடுத்தார். இரண்டிலுமே பிரமாதமாக பரிணமிக்கும் நேரத்தில் குண்டுக்கு பலியாகி காதலி டேரா அநியாயமாக செத்துப்போனார்.

ரொம்பவே மனது பாதிக்கப்பட்டாலும் விரைவில் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட ராபர்ட் கபே தனது நண்பர் துணையுடன் மேக்னம் போட்டோஸ் என்ற ப்ரீலென்ஸ் புகைப்பட அமைப்பை ஏற்படுத்தினார். இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறை புகைப்படக்கலைஞர்களின் வாழ்விற்கு, வளர்ச்சிக்கு அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நிறுவனம்தான் மேக்னம் போட்டோஸ் நிறுவனம். 

ஜார்ஜ் ஆக்ஸல், எர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற பிரபல எழுத்தாளர்களுடனும், நோபல் பரிசு பெற்ற ஜான் ஸ்டெப்பெக்கருடனும் இணைந்து போர்க்களங்களில் பணியாற்றினார். இவர்களின் எழுத்தும், வர்ணனைகளும் ராபர்ட் கபேயின் படங்களுக்கு மிகவும் உணர்ச்சியூட்டி மிகுந்த உயிரோட்டத்தை உண்டாக்கியது.

பிரபல டைம் பத்திரிகைக்காக இந்தோசீனா போரை படமெடுக்க களமிறங்கியவர், 1954ம் வருடம் மே மாதம் 25 ம்தேதி ராணுவ வீரர்களுக்கு முன்பாக வேகமாக ஒடிச்சென்று படமெடுக்கும் போது கண்ணிவெடியில் சிக்கி தூக்கியெறியப்பட்டார். அலறியடித்து அனைவரும் ஒடிச்சென்று பார்த்த போது அவரது கால்கள் சிதறி சி்னாபின்னமாகியிருந்தது. மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஒடினார்கள். ஆனால் அங்கே அனைவரது கண்முன்னாலும் அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்தது. கடைசிவரை பிரியாமல் இருந்தது அவரது கையில் இருந்த கேமிரா மட்டுமே.

இன்று அவரது நினைவு தினமாகும்.

எல்.முருகராஜ்

Friday, May 18, 2012

தோழன் உதயனின் மறைவு

உதயன்!
எங்கள் உயிர் தோழன்.
உடல் நலம் குன்றியிருந்த போதும்,
 நம்பிக்கை ஒன்றையே மூலதனமாக்கி
வாழ்ந்து காட்டியவன்.
மரணம் அவனை பலதடவை நெருங்க முயன்று தோற்றுப்போனது.
ஆனாலும்,
விதி வலியதோ என்னும் வண்ணம் ஆகிப்போனது அவன் முடிவு.
ஏ விதியே!
எமது தோழனை ஜெயித்துவிட்டதாக நீயும் இறுமாந்துவிடாதே.
உனக்கும் ஒரு விதி செய்யும் ஆற்றல்
எம் தோழனின் மறைவுக்கு உண்டு, ஏனெனில்,
'மரணம் வாழ்வின் முடிவல்ல'  என்றுரைத்த 
மாபெரும் தோழன் நாபாவின்
அசல் வாரிசுகளில் ஒருவன் எங்கள் உதயன்.
உதயமே எம் சூரியனே...
உன் அஸ்தமன பொழுது சற்று கலக்கமானதுதான்,
இருந்தாலும், மீண்டும் உன் உதயம் வரும் எனும் நம்பிக்கையோடு விடை தந்தோம்.
'இன்று போய் நாளை வா தோழனே...!'

காத்திருக்கும் உனது உறவுகள்     

Wednesday, May 16, 2012

கவிதைச்சரம்

உரிமை
 
புது வீடு குடியேறியவுடன்
வழக்கமான சம்பாஷணைகளை
ஆரம்பித்திருந்தேன்.
அண்டை வீட்டாரிடம்
அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கையில்
அங்கு நின்றிருந்த குழந்தையிடம்
'உங்க பேரு என்ன?' என்றேன்.
'தமிழ்... அரசி' என்கிறாள்
கன்னக் குழி விழ.
வழக்கம்போலவே
வம்பிழுக்கும் தொனியில்
'இனிமே இது எங்க அம்மா'
என்கிறேன்.
'ம்ஹூம்... எங்க அம்மா.' என்கிறாள்.
'சரி, இது எங்க அப்பா.'
இப்படியாக
தாத்தா, பாட்டி என நீள்கையில்
வாசலில் விளையாடும்
குழந்தைகளின் குரல் கேட்டு
வெளியே ஓடுகிறாள்.
விளையாட்டு முடிந்து
திரும்பிச் செல்கையில்
பக்கத்தில் நிற்கும் குழந்தைகளிடம்
கண்களை அகல விரித்து
மார்பின் மேல் கை வைத்து
என்னைக் காட்டி
'இது எங்க மாமா' என்கிறாள்
உரிமையுடன் தமிழரசி.
இல்லை,
எங்க தமிழ்க் குட்டி!

கு.விநாயகமூர்த்தி 

*******************************************************


டைரி மலர்

லரொன்றை
சிறுமி தன் புத்தகப் பையினுள் மறைக்கிறாள்.
சிறு தெய்வமொன்றின் சிலைக்கு முன்
வைக்கிறாள் அம்மா.
தன் பழைய டைரிக்குள் அடிக்கிறார்
அப்பா.
மலரைக் கண்டுபிடிக்கும் போட்டி
துவங்கும் தருணம் மின்சாரம் திரும்புகிறது.
அத்துடன் நின்றுபோகிறது விளையாட்டு.
ஒரே செடியில் பூத்த மூன்ற மலர்கள்
வெவ்வேறு புலத்தில்
வசிக்க ஆரம்பிக்கின்றன.
விதவிதமான புத்தகங்களுடன் உரையாடி
நல்லதொரு நட்பை வளர்த்துக்கொள்கிறது
புத்தகப் பை மலர்.
தெய்வத்தின் காலடியில்
நாளெல்லாம்கிடப்பதால்
தன்னைப் புனித மலரென்று எண்ணுகிறது
இரண்டாம் மலர்.
கலைக்கப்பட்ட கனவுகளுடனும்
ரகசியத் தவறுகளுடனும்
இந்தக் கவிதையின் வரிகளுடனும்
வாழப் பழகுகிறது
காய்ந்துவிட்ட கடைசி மலர் !

நிலா ரசிகன் 


*******************************************************

விளிம்பு

'விளிம்புகளுக்கு அப்பால்
தொடுவானம்தானா?' என்றொரு
கண்டுணர முடியாத வியப்பு
எப்போதும் இருக்கிறது.

சர மழை பொழியும்
தனிமை ராத்திரிகளில்
சில்வண்டுகளோடு
ரீங்காரப் பழக்கம் தொடங்கியது.

மோகன மயக்கம் தரும் அந்தியில்
மந்தகாச வெயிலில்
தூரலில் நனைந்தபடி
தனிமையோடு பேசிக்கொண்டு
மலை விளிம்புகளுக்கு நடந்தேன்.

திரும்பி வருகையில்
தொடுவானம்
மனசுக்குள் இருந்தது.

நீ.ஸத்யநாராயணன்


*******************************************************
 
இறுதி வார்த்தை

கா
லத்தின் புழுதியை அப்பியபடி
நெடுநாட்களாக
நின்றுகொண்டிருக்கிறது
அந்த கார்.

துவக்கத்தில் ஒரு நாள்
தீவிறவாதிவொருவனின்
வெடிகுண்டைப்
பதுக்கியபடி நிற்பதாக
எல்லோரும் சந்தேகப்பட்டதுண்டு.

போகப்போக
கல்லெறிக்கோ வெயிலுக்கோ
நாய்கள் மறைந்துகொள்ளவோ
அதற்குப் பின்
அவசரத்துக்கோ ஆடவர் நின்று
சிறுநீர் கழிக்கவோ
வரும் போகும் விடலைகள்
தங்கள் பெயரைக் கிறுக்கிப் பார்க்கவோ

வழி தொலைத்தவர்களுக்கு
அடையாளம் காட்டவோ
என மாறிப்போனாலும்

நிறுத்தப்பட்ட கடைசி நாளில்
'நாளை பார்க்கலாம்'
என அதை ஒட்டியவன்
சொல்லிச் சென்றதை
இன்னமும் நம்பிக் காத்திருக்கிறது
அந்த கார்!

சுந்தர்ஜி

     
     

Saturday, May 5, 2012

தூக்கம் நம்மைத் தழுவுவது எப்படி?

தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.

நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.

இன்னும் சில விஞ்ஞானிகளோ, நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சிïட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.

நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியே தூக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிரூபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.

மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதிக நேரம் தூங்க வேண்டும். மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்.

***

நல்ல தூக்கத்துக்கு...

'அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கி ரொம்ப நாளாச்சு' என்பது பலரின் புலம்பல். ஆனால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமின்மைக்கு நாம்தான் காரணம். நல்ல தூக்கத்துக்கு நிபுணர்கள் வலியுறுத்தும் விஷயங்கள்...

தினமும் இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தை உறங்கச் செல்லும் நேரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

எளிதில் ஜீரணமாகும் மிதமான உணவே இரவில் நல்லது. மாறாக, வயிறு முட்ட அடைத்தாலோ, ஒவ்வாத உணவைச் சாப்பிட்டாலோ, வயிறு 'கடமுடா' பண்ணும். தூக்கம் தொலையும்.

டி.வி., கணினி, மடிக்கணினி, செல்போன் என்று மின்னணுத் திரைகளின் முன் அதிக நேரத்தைக் கழிக்கக் கூடாது. அவை தூக்கத்தைப் பாதிக்கும். தூங்கப் போகும் சில மணி நேரத்துக்கு முன்பே இவற்றுக்கு விடை கொடுத்துவிட வேண்டும்.

படுக்கையறை, படுக்கைச் சுத்தம் முக்கியம். அமைதியும் அவசியம். மின்விசிறி கூட சற்று அதிகம் சத்தம் போட்டால் தூக்கம் கெடும்.

எல்லாவற்றிலும் முக்கியம், 'நாளைய கவலைகளை நாளை பார்த்துக்கொள்வோம்' என்ற எண்ணம். தேவையற்ற குழப்பமான எண்ணங்கள், தூக்கத்தைத் துரத்தும்.

Friday, May 4, 2012

இன்றும் ஒரு தகவல் - தீப்பிடித்தால் தானாக தகவல் தரும்

வீடோ, கட்டிடமோ தீப்பிடித்தால், அதில் இருந்து வெளிவரும் புகையை வைத்து 'ஸ்மோக் அலாரம்' என்ற கருவி சத்தம் கொடுத்து எச்சரிக்கை செய்யும். ஆனால், அந்த வீட்டில் வசிப்பவர் வீட்டில் இல்லாவிட்டால், அக்கம்பக்கத்தவர்கள் தகவல் கொடுத்தால் தான் தெரியும்.

இந்த குறையை போக்கும் வகையில் நாம் எங்கே இருந்தாலும் நமது மொபைலுக்கு தகவல் கொடுக்கும் ஒரு புதிய கருவி இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கருவிக்கு 'பயர் டெக்ஸ்ட் ஸ்மோக் அலாரம்' என்று பெயர்.

வீட்டிலோ, நிறுவனத்திலோ புகை கிளம்பினால், உடனே அதுபற்றிய தகவலை இந்த நவீன கருவி செல்போனுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் தகவல் அனுப்பிவிடும். இதற்காக முன்பே 4 செல்போன் எண்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். வீட்டில் நாலு பேர் இருந்தால், அவர்களின் செல்போனுக்கு ஒரே நேரத்தில் இந்த டெக்ஸ்ட் மெசேஜ் போய் சேர்ந்துவிடும்.

இந்த கருவியில் 'மோட்டோ எலெக்ட்ரிக் ஸ்மோக் டிடெக்டர்' என்ற சாதனம் இருக்கிறது. இதுதான் வீட்டில் தீயினால் புகை கிளம்புகிறது என்ற தகவலை செல்போனுக்கு வழங்கும். இது பேட்டரியால் இயங்க முடியாது. இதில் ஒரு சிம் கார்ட் ஸ்லாட் இருக்கிறது. ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் ஸ்மோக் அலாரம் தொழில்நுட்பம் மூலம் தான் இந்த கருவியும் இயங்குகிறது.

9 வோல்ட் லித்தியம் பெட்டிரியால் இயங்குகிறது. இந்த பேட்டரி பயன்பாட்டை பொறுத்து 5 ஆண்டுகள் வரை கூட நீடித்து உழைக்கும். இந்த கருவியை வாரம் ஒருமுறை எடுத்து செயல்படுகிறதா என்று சோதனை செய்து கொள்ள வேண்டும். சரிவர வேலை செய்யவில்லைஎன்றால், பேட்டரியை மாற்ற வேண்டும்.

இந்த கருவியின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. தீ குறித்து எச்சரிக்கை செய்யும் இதுபோன்ற கருவிகளின் வரவால், நெருப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பது மறுக்க முடியாத உண்மை.