Saturday, April 28, 2012

இன்றும் ஒரு தகவல் - சினிமாவில் இந்தியாவில் முதலிடம்

இந்தியாவையும் சினிமாவையும் அத்தனை சாதரணமாக நினைத்துவிட முடியாது. உலகிலேயே சினிமா தாயாரிப்பில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். இந்தியாவில் கடந்த 2007 -ம் ஆண்டு 1,132 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதே வருடம் அமெரிக்காவில் 520ம் ஜப்பானில் 418 -ம் சீனாவில் 400 ம் தயாராயின.

சினிமா தயாரிப்பில் இந்தியா ஏன் முதலிடம் பெறுகிறது? இங்கு சினிமா என்பது தவிர்க்க முடியாத பொழுது போக்கு. மற்ற நாடுகளை விட இந்தியாவில் டிக்கெட் விளையும் குறைவு. இந்தியாவில் இன்றைக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலையாக ரூ.22 உள்ளது. இதுவே அமேரிக்கா 2.2 டாலராகவும், சீனாவில் 11.7 டாலராகவும் உள்ளது. இந்தியாவில் சினிமா மூலம் மட்டும் வருடத்திற்கு 950 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஜப்பானும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில் நிறைய மொழிகள் இருக்கின்றன. அந்த மொழிகள் அனைத்திலும் படங்கள் தயாரிக்கப்படுவதால் அதன் வருவாய் கூடுகிறது.

இந்தியாவிற்குள் எடுத்துக் கொண்டால் சினிமா தாயாரிப்பில் பாலிவுட் என்ற இந்தி திரையுலகம் முதலிடம் பிடிக்கிறது. அதற்கடுத்து கோலிவுட் என்கிற தமிழ் திரையுலகம் இரண்டாம் இடத்தையும், மூன்றாவது இடத்தை டோலிவுட் என்கிற தெலுங்கு திரையுலகமும் பெறுகின்றன.

சினிமா பற்றிய சில தகவல்கள்

வசந்த மாளிகை படம் ரிலீசான சமயத்தில் ரிசல்ட் சற்று டல்தான். அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறப்பதாக கதை அமைத்திருக்கிறார்கள். அவசர அவசரமாக முடிவை மாற்றி "இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தால் செத்திருப்பார்" என்று டாக்டர் சொல்வதாக எடுத்து சிவாஜியை பிழைக்கவைதார்கள். படம் சூப்பர் ஹிட் ஆனது. திமிழகத்தில் வெள்ளிவிழா கண்ட இப்படம், இலங்கையிலும் மாபெரும் வெற்றி கண்டது. 
 
 
ஒரு படத்தின் முடிவு அந்த படத்தை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டே இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அமெரிக்காவில் உள்ள தியேட்டர் ஒன்றில் 1975 -ல் இருந்து ஓடிக் கொண்டிருக்கிறது "ராக்கி" என்ற பேய்ப்படம். மனிதனை பேய்கள் எவ்வாறு எல்லாம் கொடுமைப்படுத்துகின்றன என்பதுதான் கதை. உறைய வைக்கும் க்ளைமாக்ஸ். இப்போதும் நிற்காமல் ஒரே தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது, அந்தப்படம்.

இந்தியாவிலும் அப்படி ஒரு படம் உண்டு. ஷாருக்கான், காஜோல் நடித்த "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" படம் 1995 -ம் வருடம் அக்டோபர் 20ந் தேதி ரிலீஸ் ஆனது. பிரிந்து போன ஷாருக்கும், கஜோலும் ரயில்வே ஸ்டேஷனில் இணைகிற கிளைமாக்ஸ், ரசிகர்களை கலங்கி அழ வைத்தது. அன்று ரிலீஸ் ஆனா இந்தப்படம் இன்று வரை மும்பையில் உள்ள மராட்டா மந்திர் என்ற தியேட்டரில் ஒரு ஷோவாக ஓடிக் கொண்டே இருக்கிறது.

இந்தக் கனவு தொழிற்சாலையின் வசீகரம் இன்றைக்கும் குறையாமல் இருப்பதுதான் ஆச்சர்யம்.              

Thursday, April 26, 2012

கவிதைச்சரம்

உயில்மொழி

ன்னுயிர்
பிரியும் வேளையில்
தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
நின்றவர்கள்
நீங்கள்தானா?

இமைகளை
மூடிவிட்டது
எந்த விரல்கள்?

நாடிக் கட்டுக்காய்
கிழிக்கப்பட்ட துணி
எவருடையது?

அசுத்தங்கள் நீக்கி
என் பிரேதத்தைக்
குளிப்பாட்டி
கபன்* பொதித்தவர்கள்
யாரெல்லாம்?

வியர்வை சிந்த
எனக்காக
கபர் குழியை*
வெட்டியவர்கள் எவர்?

என் ஜனாஸாவைச்*
சுமந்து சென்ற
தோள்கள்
எவருடையவை?

என் பிரிவிற்காய்
கண்ணீர் வழிந்த
கன்னங்கள் எத்தனை?

என் வாழ்காலத்தில்
உங்களைக் கடக்க நேர்ந்த
பொழுதுகளில்
உங்களுக்காகப்
புன்னகைத்திருக்கின்றேனா
நான்?

வி.எஸ்.முஹம்மது அமீன் 


**********************************************

நாராய்.... நாராய் !
செங்கால் நாராய் !


நாராய்.... நாராய் ! செங்கால் நாராய் !
பனங்கிழங்குகளைப் பிளந்தென்ன
அழகுடையாய் ! நாராய் !

அந்திவேளையில் தென்திசை நோக்கி
நீ செல்லும் வழியில் குன்றம் தாண்டியதும்
இலைகள் உதிர்ந்த
பூவரச மரமிருக்கும்;
அதனருகே -
கூரைகள் பிரிந்த குடிசை வாசலில்
அரசாங்கம் தந்த
இலவசச் சேலையுடுத்தி
பாலுக்கு அழுதிடும்
பச்சைக் குழந்தையை
இடுப்பில் ஏந்திக்கொண்டு நிற்பாள்
பூவேராத கார்குழலி ஒருத்தி.

கரைதேடும் கட்டுமரம்போல
அழுதிடும் குழந்தையிடம்
"இந்தோ அப்பா வந்திடுவார்" என்று
ஆறுதல் சொல்லியபடி
கணவன் வரும் வழிபார்த்து நிற்பாள்.
அவளிடம் போய்ச் சொல்வாய்;
"உனது கணவன் டாஸ்மார்க் சரக்கை
மிதமிஞ்சிக் குடித்துவிட்டு
மண்ணோடு புரண்டு
மாரியம்மன் தெப்பக்குளம் அருகே
மயங்கிகிடக்கிறான்" என்று

முத்து நாடன்  

**********************************************
 
அந்த நாட்கள்

அந்த மூன்று நாட்களில்
கோயிலுக்குள் செல்வது
தீட்டாகவே இருக்கட்டும்...
எந்த மூன்று நாட்களில்
பெண் தெய்வங்கள்
கோயிலுக்குள் இருக்காதெனக்
கொஞ்சம் சொல்லுங்களேன்?

க.பொன்ராஜ்

**********************************************

எப்படி இருந்திருக்கக் கூடும்?

ன்னலோரப் புறாக்களின்
சிறகடிப்போடு
புலர்ந்த அந்தக் காலைப் பொழுது.

முதல் அழைப்பிலேயே கண் விழித்து
முகம் பார்த்துச் சிரித்த மகன்.

பையனை ஏற்றிவிட்டுவந்த
பள்ளிகூடப் பேருந்தில்
சிரித்த முகங்களோடு
சீருடைச் செல்லங்கள்.

எப்போதும்போலன்றி இவளும்
இன்முகம்கொண்டாரு சிரிப்புடன்.

வழியெங்கும் நெரிசலின்றி வரவேற்ற
வழக்கமான சாலை.

அவனது அலுவலக
அடுக்குமாடிக் கட்டிடத்தின்
அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த
இவன் வயது இளைஞன் ஒருவனின்
மாரடைப்புபற்றிய செய்தி
வந்து சேர்ந்ததும்
அந்த ஒரு காலைப்பொழுதில்தான்.

எப்படி இருந்திருக்கக் கூடும்
அவனின் காலைப்பொழுது?

செல்வராஜ் ஜெகதீசன்

* கபன் - இறந்தவர்கள் மீது போர்த்தப்பட்டு துணி  * கபர் குழி - அடக்கம் செய்யப்படும் குழி * ஜனாஸா - பிரேதம்    

Friday, April 20, 2012

சோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள்

தன் துணையை இழந்த மறு வினாடியே உயிர் துறந்து இறந்துபோகுமாம் அன்றில் பறவை! இது ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் உள்ளார்ந்த அன்பு அல்லது காதல் எவ்வளவு உண்மையானது, வலிமையானது என்பதை உணர்த்த சுட்டிக் காட்டப்படும் உதாரணங்களில் ஒன்று. இந்த உன்னதமான பண்பு பறவை இனத்துக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் உரியது.

உதாரணமாக, காதலர்களில் ஒருவர் இறந்த துக்கம் தாளாமல் மற்றொருவர் இறந்துபோவது அல்லது கணவன்மனைவி இருவரில் ஒருவர் இறந்தால் மற்றொருவர் இறந்துபோவது குறித்த செய்திகளையும், சினிமாக் காட்சிகளையும் நாம் பார்த்திருப்போம்.

இந்தக் கூற்று எவ்வளவு உண்மையானது, இதற்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் என்ன, ஒருவரின் இழப்பு மற்றொருவரின் உயிரை பறிக்கக்கூடிய அளவிற்கு வலிமையானதா போன்ற பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் நம்மில் பலருக்கும் இருக்கக்கூடும். ஆனால் அவற்றுக்கான விடைகள் மட்டும் இதுவரை தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ஆனால், இதேபோன்ற கேள்விகளுக்கான விடையைத் தேடி ஆய்வுகளை மேற்கொண்ட இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு ஆச்சரியமான ஆனால் ஆதாரப்பூர்வமான ஒரு மருத்துவ உண்மை தெரியவந்திருக்கிறது.

அது என்னவென்றால், அன்புக்குரிய ஒருவரை இழப்பதால் ஏற்படும் துக்கமானது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் குறிப்பிட்ட பாகங்களை செயலிழக்கச் செய்து விடுகிறது. இதனால் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்து போராடும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து விடுகிறது. விளைவு, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு உடல் நலிந்து மரணம் நிகழ்கிறது என்று விளக்குகிறார் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் ஜேனட் லார்டு.

குறிப்பிட்டுச் சொல்வதானால், ரத்தத்தில் உள்ள நியூட்ரோபில் எனப்படும் ஒருவகை வெள்ளை ரத்த அணுக்கள் பாக்டீரியா தொற்றுகளான நிமோனியா போன்றவற்றை எதிர்க்கும் வேலையைச் செய்கின்றன. ஆனால் ஒருவருடைய இழப்பினால் உண்டாகும் துக்கம் ஏற்படுத்தும் மன உளைச்சலும், மனச்சோர்வும் நிïட்ரோபில்களின் செயல்பாட்டினை பாதிக்கின்றன. இதனாலேயே பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, இந்த வகையான துக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் வயதானவர்களை அதிகப்படியாக பாதிக்கிறதாம். ஏனென்றால், பொதுவாக துக்கத்தினால் உண்டாகும் விளைவுகளைச் சரிசெய்யும் திறனுள்ள ஒரு ஹார்மோனை உடல் உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்த ஹார்மோனை உற்பத்தி செய்யும் திறன் வயதாக வயதாக குறைந்து போகிறது. இதனாலேயே வயதானவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும்கூட துக்கத்தின் விளைவுகள் அவர்களை மிகவும் அதிகப்படியாக பாதிக்கிறது என்கிறார் பேராசிரியர் லார்டு.

இந்த ஆய்வுக்காக, 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய 48 ஆரோக்கியமான மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஹார்மோன் அளவுகள் பரிசோதிக்கப்பட்டன. இவர்களில் பாதிப் பேர் ஆய்வுக்கு முந்தைய 12 மாதங்களில் தங்களின் ஆருயிர் துணைகளை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வின் முடிவில் ஆரோக்கியமானவர்களுடன் ஒப்பிடுகையில், துணையை இழந்தவர்களின் ரத்தத்தில் உள்ள நிïட்ரோபில்களின் பாக்டீரியா எதிர்ப்பு திறன் வெகுவாக குறைந்திருந்தது தெரியவந்தது. மேலும், மன உளைச்சலுக்கு காரணமான கார்ட்டிசோல் எனப்படும் ஹார்மோன் அளவுகள் அதிகரித்திருந்ததும் கண்டறியப்பட்டது.

கார்ட்டிசோல் ஹார்மோன் நியூட்ரோபில்களின் செயல்பாடுகளைப் பாதித்து அவற்றின் செயல்திறனைக் குறைத்துவிடும் என்பது இதற்கு முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும்பாலான இளைஞர்களின் உடலில் கார்ட்டிசோலுக்கு எதிராக செயல்படும் ஞிபிணிகி எனும் மற்றுமொரு ஹார்மோன் சுரப்பதால், இழந்த எதிர்ப்புச் சக்தியை அவர்கள் மீண்டும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால், வயதாக வயதாக ஞிபிணிகி ஹார்மோன் உற்பத்தி குறைந்து போவதால், துக்கத்தால் இழந்த எதிர்ப்புச் சக்தியை வயதானவர்களால் மீண்டும் பெற முடிவதில்லை. இதனால் நோய்வாய்ப்பட்டு அதிகப்படியாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது உயிரியல்.

இது ஒருபுறமிருக்க, இடுப்பு முறிவினாலும் இம்மாதிரியான ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், 80 வயதுக்கு மேலானவர்கள் இடுப்பு முறிவினால் பாதிக்கப்பட்ட ஒரு வருடத்துக்குள் இறந்துபோவதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முனைவர் பத்மஹரி

கோடையில் 'கூல்' ஆகலாம்!

கோடை காலம் வந்தாலும்தான் வந்தது, எல்லா இடங்களிலும் அக்னி நட்சத்திர தகிப்பு மக்களை பாடாய்படுத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்படியென்றால், தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். கோடையை கூல் ஆக்கிவிடலாம்.

தர்பூசணி : தாகத்தைத் தணிக்கும் தர்ப்பூசணிக்கு பசியை போக்கும் சக்தியும் உண்டு. வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும்.

ஆரஞ்சு : பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் உதவுவது இது. ஒருவர் தொடர்ந்து ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் அவரது வாய் சுத்தமாகிறது. காய்ச்சலுக்கும் இது அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.

காய்ச்சலின்போது ஆரஞ்சு ஜுஸ் குடித்தால் உடலுக்குத் தெம்பு அதிகரிக்கும். அதோடு, செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டலுக்கு ஆரஞ்சு சிறந்த மருந்து. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும். ஜலதோஷம் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிப்பது நல்லது.

சாத்துக்குடி : குளிர்ச்சியான இனிப்பு சுவை கொண்ட சாத்துக்குடி தாகத்தைத் தணிக்கக் கூடியது. வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு இது உதவுகிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப் படுத்துகிறது. நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஆற்றல் இதில் நிறைய உள்ளது.

சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடி பழச்சாற்றை வெந்நீரில் கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது.

வெள்ளரிக்காய் : வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகை உண்டு. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியை தருகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் அதிகப் பலன்கள் கிட்டும். நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களும் இதை சாப்பிடுவது நல்லது.

Monday, April 9, 2012

நன்றி மறப்பது நன்றன்று

வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.

'கொ... கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள்.

உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?'

`கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்...', அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

'ரொம்ப ரொம்ப நன்றி...' சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள்.

அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.' அவளுடைய கண்கள் கசிந்தன.

மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி சொல்லுதல்.

அமெரிக்காவில் நீங்கள் காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் உங்களை முந்திச் செல்ல நீங்கள் அவருக்கு வழிவிட்டால் அவர் உங்களுக்கு 'நன்றி' சொல்லி விட்டுத்தான் போவார். சாலையில் ஒருவர் கடக்க நீங்கள் வண்டியை நிறுத்தினால் அவர் 'நன்றி' சொல்வார். கடையில் ஒரு பொருள் வாங்கும் போது கூட கடைக்காரருக்கு `நன்றி' சொல்வார்கள்.

நன்றி சொல்லும் வழக்கம் அவர்களிடம் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. நல்லவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், தப்பில்லை.

நன்றி என்பது ஒரு சின்ன வார்த்தைதான். ஆனால் அது மனதளவில் தரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. அது ஒரு வார்த்தையாய் நின்று விடாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

சின்னச் சின்ன விஷயங்களில் நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய விஷயங்களிலும் நன்றி சொல்ல முடியாது என்கிறது எஸ்தோனிய பழமொழி ஒன்று.

நன்றியைச் சொல்ல இந்த நவீன யுகத்தில் ஏகப்பட்ட வழிகள் உண்டு. ஓர் எஸ்.எம்.எஸ், ஒரு சின்ன மின்னஞ்சல் வரி கூட உங்கள் நன்றியை எடுத்துச் செல்லலாம்.

எதிர்பாராத நேரத்தில் ஒருவரை ஒரு `நன்றி' மூலம் மகிழச் செய்வது அற்புதமான விஷயம். அந்த நபர் செய்த நல்ல பத்து விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்காக உங்களுடைய மனமார்ந்த நன்றியையோ, பரிசையோ அளித்துப் பாருங்கள். அது அந்த நபருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நாம் செய்யும் மிகப்பெரிய தப்பு என்ன தெரியுமா? கூட இருப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவதுதான். கூடவே இருப்பதால் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லக் கூடாது என நினைத்து விடுகிறோம். நன்றி என்பது அலுவல் சமாச்சாரங்களுக்கு மட்டுமானது என தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, தம்பி என எல்லோருக்கும் நன்றி சொல்வதே நல்ல பழக்கம்.

'தினமும் எனக்கு நீங்க தானே காபி போட்டு தர்றீங்க, இன்னிக்கு அதுக்கு ஒரு சின்ன நன்றியா, நானே காபி போட்டு உங்களை எழுப்பறேம்மா' என அம்மாவை ஒரு நாள் நெகிழச் செய்யுங்கள்.

அப்பாவுடைய ஆடைகளை எல்லாம் இஸ்திரி போட்டு வைத்து அப்பாவுக்கு ஒரு நாள் நன்றி சொல்லுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டைப் பெருக்கி மனைவிக்கு ஒரு நாள் நன்றி சொல்லுங்கள். இப்படி சின்னச் சின்ன அன்பின் செயல்களால் நன்றி சொல்வது வார்த்தைகளால் நன்றி சொல்வதை விட ரொம்ப வலிமையானது.

இன்னும் ஒரு படி மேலே போய் சிந்தியுங்கள். உங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணுக்கோ, தோட்டக்காரருக்கோ, காவல்காரருக்கோ என்றைக்காவது மனசார நன்றி சொல்லியிருக்கிறீர்களா?

ஒரு பாராட்டு, ஒரு பரிசு, ஒரு மனமார்ந்த நன்றி என அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சிப் பக்கத்தை எழுதியிருக்கிறீர்களா? எல்லா மனிதரும் கடவுளின் பிம்பங்கள் என்கிறோம், அதில் பலவீனர்களை எப்போதுமே ஒதுக் கியே வைக்கிறோமே, தப்பில்லையா ?

சொல்லப்படாத நன்றி எப்படிப்பட்டது தெரியுமா?

'ஒருவருக்கு அழகான ஒரு பரிசுப் பொருளை வாங்கி, அதை அருமையாக கிப்ட் கவரில் போட்டு அப்படியே வீட்டில் வைத்திருப்பது போன்றது' என்கிறார் வில்லியம் ஆர்தர் வேர்ட்.

யாராவது நமக்கு ஒரு கெடுதல் செய்தால் நாள் கிழமை குறித்து மனசுக்குள் கல்வெட்டாய் வைப்பதும், அவர் நமக்குச் செய்த நன்மைகளை காற்றில் எழுதி காணாமல் செய்வதும் நமது பழக்கம். அதை அப்படியே உல்டாவாகப் பண்ணிப் பழக வேண்டும். தீயது செய்தால் காற்றில் எழுது, நல்லதெனில் மனதில் எழுது.

வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் 'நன்றி' சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் நமது செயல்களைப் பார்த்து வளரும். எனவே நாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டியது அடிப்படைத் தேவையாகி விடுகிறது.

நன்றி சொல்ல வேண்டும் எனும் மனம் இருந்தால் உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். நல்லவற்றுக்கு மட்டுமல்லாமல் சோதனைகள், பலவீனங்கள், தோல்விகள் இவற்றுக்குக் கூட நீங்கள் நன்றி செலுத்தலாம்.

ஓர் அழகான ஆங்கிலப் பாடல் உண்டு. அந்தப் பாடலின் சில வரிகளை இப்படித் தமிழில் மொழிபெயர்க்கலாம்.

என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி, அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.

என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி, அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.

எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி, அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.

எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.

எனது பிழைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.

எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.

எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு ஹம்பேக் திமிங்கலம் வலையில் சிக்கிக் கொண்டது. உடல் முழுதும் கயிறுகள் சிக்கிக் கொள்ள திமிங்கலத்தால் நீந்த முடியவில்லை. அந்த 50 அடி நீள திமிங்கலத்தின் கட்டுகளை அறுக்க பாதுகாப்பாளர்கள் திட்டமிட்டார் கள்.

திமிங்கலம் மெல்ல வாலை அசைத்தாலே ஆள் காலியாகிவிடலாம். கட்டறுத்தபின் கோபத்தில் அது குதித்தாலும் காலி எனும் திகில் நிமிடங்களுடன் ஆட்கள் போராடினார்கள். கயிறுகளை அறுத்தார்கள். திமிங்கலம் கண்களை உருட்டி எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்தது. கட்டுகள் அவிழ்த்து முடித்ததும் ஆனந்தத்தில் கடலுக்குள் நீச்சலடித்தது.

பின் எல்லோரும் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் நடந்தது. அந்த பிரம்மண்டமான திமிங்கலம் திரும்ப வந்தது. வந்து, கட்டுகளை அவிழ்த்த ஒவ்வொரு நபர் முன்னாலும் சென்று தன் முகத்தினால் அவர்களை மெல்ல முட்டித் தள்ளி தன் நன்றியைச் சொன்னது. எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது எனும் வள்ளுவர் வரிகள் திமிங்கலத்தின் செயலில் வெளிப்பட்டன. நன்றி அறிவித்தல் திமிங்கலத்திடம் கூட இருக்கிறது என்பதை அமெரிக்கப் பத்திரிகைகள் அப்போது வியப்புடன் வெளியிட்டன.

பிடிவாதப் பார்ட்டிகளுக்காக, நன்றி சொல்வதில் உள்ள மருத்துவத் தகவல்களையும் கையோடு சொல்லி விடுகிறேன்.

2007-ல் நடத்தப்பட்ட டாக்டர் எம்மோஸ் ஆய்வு ஒன்று, 'நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள் மன அழுத்தமற்றவர்களாகவும், நிம்மதியான தூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள்' என்றது. இதனால் அவர்களுடைய உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது.

'நன்றி தெரிவிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை நிலையாகவும், வலிமையாகவும் இருக்கும்' என 2010-ல் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு தெரிவித்தது.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று, 'நன்றி தெரிவித்து வாழ்பவர்கள் ரொம்பவே ஆனந்தமாய் இருப்பார்கள்' என தனது கண்டுபிடிப்பை வெளியிட்டது.

வாழ்க்கை ரொம்பவே அழகானது. நமது ஐம்புலன்களும் நம்மை வினாடி தோறும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவோ அழகான விஷயங்களை, மனிதர்களைக் காண்கிறோம். பேச்சுகளை, இசையைக் கேட்கிறோம். பலவற்றை உணர்கிறோம். சுவைகளை ரசிக்கிறோம். நமது புலன்களின் பரிசளிப்புக்கு நன்றி சொன்னதுண்டா? இல்லாத விஷயம் கிடைக்கும்போதுதான் நன்றி சொல்ல வேண்டுமென்பதில்லை. இருக்கின்ற விஷயத்துக்காகவே நன்றி சொல்லலாம்.

விடைபெறுதல் என்பது முடிவுரையல்ல. இன்னோர் இடத்தில் சந்திப்போம் என்பதன் உத்தரவாதம்.

நன்றி சொன்னால் பேரழகு!
நன்றி செய்தால் பாரழகு !


சேவியர்