Wednesday, February 29, 2012

அறிமுகம் ஆகிறது, 'மின் காசோலை'!

நாம் இன்று பயன்படுத்திவரும் காசோலைகள் விரைவில் வழக்கொழிந்துவிடப் போகின்றன. அவற்றின் இடத்தை 'ஈ- செக்' (E - Cheque) எனப்படும் மின் காசோலை பிடிக்கப் போகிறது.

ஓர் இங்கிலாந்து ஆய்வுக் குழு, இந்த மின் காசோலையை உருவாக்கியிருக்கிறது. இதில், வழக்கமான காசோலை முறையின் அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஆனால் வங்கிகளுக்கு ஆகும் செயல்முறை மற்றும் அனுப்புதல் செலவுகள் குறையும் என்கிறார்கள்.

இந்த `ஹை-டெக் செக்', பல தலைமுறைகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வழக்கமான செக் போலவே உள்ளது. ஆனால் இதில் எழுதுவதற்கு ஒருவருக்கு டிஜிட்டல் பேனா தேவை. அந்தப் பேனாவில் உள்ள நுண்ணிய காமிரா, பல லட்சம் புள்ளிகளால் ஆன எந்தக் கையெழுத்தையும் பதிவு செய்துவிடுகிறது.

அந்தப் பதிவை, வயர்லெஸ் தொடர்பு மூலம் டிஜிட்டல் பேனா நேரடியாக வங்கிக்கு அனுப்புகிறது.

இந்த மின் காசோலையும், டிஜிட்டல் பேனாவும் வாடிக்கையாளருக்கு மட்டுமே உரிய பாதுகாப்பான முறையில் செயல்படும் என்பதால் ஏமாற்று வேலைகளுக்கு இங்கு இடமில்லை என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.

வரட்டும் பார்க்கலாம்!

Monday, February 27, 2012

அவசர உதவிக்கு உலகம் முழுவது ஒரே எண்

எப்போது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்குவேண்டுமானாலும் நடந்துவிடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம்.

இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எங்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோக ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை.

அவசர போலிஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டிற்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 1093, விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் உண்டு. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான அவசர உதவி எண்கள் பயன்படாது.

இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சாதரணமானதாக உள்ளது. அங்கு நாம் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண் 911, 112.

இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவிமயத்திற்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள். நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்.

செல்போன்களில் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட்லாக் ஆகியிருந்தால் கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் கார்டே இல்லாமலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்ய முடியும். எனவே உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக் கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது.   

Saturday, February 25, 2012

நிபந்தனையற்ற அன்பு!

ரோஸ் பிறக்கும்போதே பெரும் குறைபாடுடன் பிறந்தாள். அவளுடைய கால்கள் இரண்டும் செயலிழந்து போன நிலையில் இருந்தன. அவளுக்கு இரண்டு வயதானபோது மருத்துவர்களின் ஆலோசனைப்படி இரண்டு கால்களையும் வெட்டியெடுத்தார்கள். அதன்பின் இடுப்பு வரை மட்டுமே உள்ள அரை மனுஷியானாள் ரோஸ்.

பட்ட காலிலே படும் என்பது போல பட்டுப் போன காலுடன் பிறந்தவளுடைய சகோதரன் மனநலம் பாதிக்கப்பட்டவன். தந்தை அல்சீமர் நோயாளி! வாழ்க்கை தனக்கு முன்னால் வெறுமையின் சாலையாய் நீண்டிருப்பதைக் கண்டார் ரோஸ். எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லையே எனும் அழுத்தம் மனதை அழ வைத்தது.

1997-ம் ஆண்டு ரோஸ், ஆட்டோமொபைல் கடை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த டேவ் எனும் இளைஞனைச் சந்தித்தாள். எல்லோரும் அவளை பரிதாபமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தபோது டேவ் அவளை சாதாரணமான ஒரு பெண்ணாகப் பார்த்தான். அவளிடம் பரிதாபமாய்ப் பேசாமல் நகைச்சுவையாய்ப் பேசினான். அவளுடைய மனம் மயங்கியது! ஆனால் கால்கள் இல்லாத பெண்ணைத் திருமணம் செய்வானா எனும் கேள்வி அவளுடைய நாட்களைப் பதட்டத்துடன் நகர்த்தியது.

ஆனால் டேவ் அவள் மீது நிபந்தனைகள் ஏதுமற்ற அன்பை வைத்திருந்தார். எதையும் எதிர்பார்க்காத அன்பு அது. 1999-ம் ஆண்டு டேவ் ரோசியைத் திருமணம் செய்தார். ரோசியின் மனம் நெகிழ்ந்தது. ரோசிக்கு ஒரு மனநலம் பாதித்த சகோதரன் உண்டு என்பதும், அவருடைய தந்தை நோயாளி என்பதும் டேவின் காதலைக் குறைக்கவில்லை.

கால்கள் இல்லாத ஒரு பெண், குழந்தை பெற முடியுமா எனும் மருத்துவ சிக்கல்களையும் மீறி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார் ரோஸ். அவருடைய கணவர் இன்றும் அமெரிக்காவில் கடைகளுக்கு ஷாப்பிங் செல்லும்போது, தவறாமல் அவரை அழைத்துச் செல்கிறார். மனைவியை முதுகில் சுமந்து சுற்றி வருகிறார். பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடுகிறார். பூங்காவின் மரங்கள் கூட அந்த அன்பின் செயல்களில் புன்னகை பூக்கின்றன!

நிபந்தனைகளற்ற அன்பு மிகவும் கடினமானது. அது எந்தவிதமான எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் முளைக்கும். அப்படிப்பட்ட அன்பு நிலவுகின்ற குடும்ப வாழ்க்கை மிகவும் அற்புதமானது.

அத்தகைய அன்பு மிகவும் அபூர்வமாகிவிட்டது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் பெரும்பாலானவர்களின் அன்பு நிர்ணயிக்கப்படுகிறது. 'பணம் கிடைத்தால் பாசம். பணம் இல்லாத இடத்தில் அன்பாவது, நட்பாவது' என்பதே பலருடைய சிந்தனையாக இருக்கிறது.

'எதிர்காலத்தில் தங்களுக்குச் சாப்பாடு போட வேண்டும்' எனும் எதிர்பார்ப்புடன் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது கூட ஒருவகையில் எதிர்பார்ப்புடைய அன்பே!

எந்தக் குழந்தையாய் இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி என அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் நிபந்தனையற்ற அன்பின் உதாரணங்கள்.

என்னதான் தப்புகள் செய்தாலும் மனுக்குலத்தின் மீது அன்பு செலுத்தும் கடவுள் நிபந்தனையற்ற அன்பின் நிரந்தர உதாரணம்!

'நீ இதைச் செய்தால், உன்னை அன்பு செய்வேன்' எனும் அன்பும் நட்பும் உண்மையில் எதிர்பார்ப்புகளின் பாதையில்தான் நடை போடுகின்றன.

கேரளாவின் சமீபத்தில் ஒரு நிகழ்வு. மகன் வெளிநாட்டில் இருக்கிறான். அன்னை கேரளாவில் இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வருவதாய் சொல்கிறான் மகன். அன்னையின் உள்ளம் குதிக்கிறது. ஆனந்தக் கூத்தாடினாள் தாய். ஊருக்கு வந்த மகன் அன்னையையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாய்க் கூற அவளுடைய ஆனந்தம் இரண்டு மடங்காகிவிட்டது.

மகன் வந்தான். மகிழ்வின் உச்சாணிக் கொம்பில் இருந்தாள் அன்னை. அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. அன்னை எதையும் பாக்கி வைக்காமல் எல்லா சொத்துகளையும் விற்று மகனிடம் கொடுத்தாள்.

அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. அம்மாவையும் அழைத்துக் கொண்டு விமான நிலையம் சென்றான் மகன். அங்கே ஓர் இருக்கையில் அம்மாவை அமர வைத்துவிட்டு எங்கோ சென்றான். பின் அவன் திரும்பி வரவேயில்லை.

விசாரித்தபோதுதான் தெரிந்தது, அம்மாவின் சொத்துகளைப் பிடுங்க மகன் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம். தாயை அங்கேயே விட்டுவிட்டு விமானம் ஏறி அவன் சென்றது பல மணி நேரங்களுக்குப் பின்புதான் தெரியவந்தது. அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் வேண்டும் என்பது கூட அறியாத ஓர் அப்பாவி அம்மாவை விமான நிலையத்தில் குப்பையைப் போல வீசிவிட்டுச் சென்ற மகன், அன்பு காய்ந்து போன பாலைவன மனதுக்காரன்.

நிபந்தனையற்ற அன்பு நிலவும் இடங்கள், பூமியின் சுவர்க்கங்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலுக்காக உங்கள் மனதையும், செயல்களையும் பக்குவப்படுத்தினால் விண்ணகம் மண்ணகத்தில் வந்தமரும்.

நீங்கள் ஒரு செயலைச் செய்யும்போது அந்தச் செயல் உங்களை எப்படிப் பாதிக்கும் என்பதை மனதுக்குள் நினைத்துப் பாருங்கள். அந்தச் செயலில் ஏதோ எதிர்பார்ப்பு ஒளிந்திருக்கிறதா என்பதை அலசுங்கள்.

'அவனுக்கு நான் எவ்வளவோ செய்திருக்கேன், அவன் எனக்காக ஒரு நயா பைசா செலவு செஞ்சிருப்பானா?' எனும் உள்மனப் புலம்பல்கள் இருந்தால் உங்கள் அன்பு எதிர்பார்ப்புடன் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எதையும் பதிலுக்குத் தர இயலாத மனிதர்களிடம் அன்பு செலுத்தும்போது அந்த அன்பு வலிமையாகிறது. அப்போதும், 'நான் ரொம்ப நல்லவனாக்கும்' எனும் சிந்தனையைத் தலையில் தூக்கி விடாதீர்கள்!

'இப்படித்தான் இருக்க வேண்டும்' எனும் எதிர்பார்ப்புடன் ஒரு நபரை அணுகும்போது நமது செயல்களும் ஒரு அட்டவணைக்குள் விழுந்து விடுகின்றன. ஒவ்வொருவரையும் அவருடைய இயல்புடனே அணுகுவதுதான் இயல்பான அன்புக்கு உத்தரவாதம் தரும்.

ஒவ்வொரு சூழலிலும், 'இந்த நபருக்கு என்னால் செய்ய முடிந்த அதிகபட்ச அன்பான செயல் என்ன?' என்பதை நினைத்துப் பாருங்கள். அதன் விளைவுகளோ, பலன்களோ உங்கள் மனதில் எழாமல் இருக்கட்டும். அப்போது உங்கள் அன்பு புனிதமடையும்.

'உள்ளங்கையில் இருக்கும் தண்ணீரைப் போன்றது அன்பு. விரிந்த நிலையில் உங்கள் கை இருக்கும் வரை தண்ணீர் கையிலேயே தங்கும். அதைப் பொத்திக் கொள்ள ஆசைப்பட்டால், விரல்களுக்கிடையே வழிந்து வெளியேறும்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சட்டங்களுக்குள்ளும், விதிமுறைகளுக்குள்ளும் நிலவும் அன்பு நிச்சயமாக நிபந்தனையற்ற அன்பல்ல. அது ஒரு கணித சூத்திரம் போல. சரியான மதிப்புகளைப் போட்டால் விடை கிடைக்கும். நிபந்தனையற்ற அன்பு என்பது அப்படியல்ல. அது நல்லோர் மேலும், தீயோர் மேலும் பெய்யெனப் பெய்யும் மழையைப் போன்றது!

நிபந்தனையற்ற அன்பு வழங்க மிக மிக முக்கியமான தேவை 'ஈகோ'வை விரட்டுதல். ஈகோ நிலவும் இடத்தில் அன்பின் காற்று மூச்சுத் திணறும். ஈகோவை விரட்டிப் பாருங்கள், இதமான அன்பு எதிர்பார்ப்பின்றி உலவத் துவங்கும்.

ஒரு வயதான தம்பதியர் இருந்தனர். மனைவிக்கு நோய். யாரையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அல்சீமர் எனும் நோய். தாத்தா தினமும் காலையில் மருத்துவமனைக்கு வருவார். மனைவியுடன் அமர்ந்து காலை உணவு அருந்துவார். நிறைய பேசுவார். மனைவியுடன் நிறைய நேரம் செலவிடுவார். ஆனால் அவர் யார் என்பதே மனைவிக்குத் தெரியாது. காரணம் அல்சீமர் நோய்!

எத்தனை மழையாய் இருந்தாலும், எத்தனை வெயிலாய் இருந்தாலும் என்ன பிரச்சினை வந்தாலும் மனைவியைப் பார்க்க அவர் வராமல் இருந்ததே இல்லை!

தினமும் இதைக் கவனித்து வந்த டாக்டர் ஒருநாள் கேட்டார், "இந்த தள்ளாத வயசுல நீங்க வரணுமா? நீங்க யாருன்னே உங்க மனைவிக்குத் தெரியாதே?''

தாத்தா சொன்னார், "அவளுக்கு என்னைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அவளைத் தெரியும். அவளை அன்பு செய்யாமல் என்னால் இருக்க முடியாது!''

டாக்டரின் கண்களின் கண்ணீர். நிபந்தனையற்ற அன்பு இப்படி இருக்க வேண்டும். எதையுமே எதிர்பார்க்காமல் உள்ளிருந்து ஊற்றாய் பெருகும் அன்பு.

அன்பு கிடைக்குமிடத்தில் அன்பு செய்வது சாதாரண அன்பு.
அன்பு கிடைக்காத இடத்திலும் அன்பு செய்வது புனிதமான அன்பு!
வெறுப்பைத் தருபவர்களைக் கூட அன்பு செய்வது தெய்வீகமான அன்பு!


நிபந்தனையின்றி அன்பு செய்
அன்பினாலே அவனி செய்!

சேவியர்

Wednesday, February 22, 2012

கண்ணிவெடி பயங்கரம்

போரைவிட கொடுமையானது கண்ணிவெடி. போர் கூட ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், கண்ணிவெடிகள் தாக்குதல் வருடக்கணக்கில் மக்களை தொடர்ந்து பழிவாங்கிக்கொண்டே இருக்கும். யார் எங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. விளைவு... எந்த வகையிலும் போருடன் சிறிதும் சம்பந்தம் இல்லாத சாமானிய மக்கள் உயிடையும் உடல் உறுப்புக்களையும் இழக்கிறார்கள்.

கண்ணிவெடியில் கதிகலங்கி போய் இருக்கும் ஒரு நாடு எகிப்து. சுமார் 2 கோடியே 30 லட்சம் கண்ணிவெடிகள் அந்த நாடு முழுக்க உள்ளதாம். 1956, 1967 மற்றும் 1973களில் நடந்த எகிப்து - இஸ்ரேல் போர்தான் நாட்டை இப்படி கண்ணிவெடி தேசமாக மாற்றிவிட்டது. எதிரி நாட்டு டாங்கிகள் முன்னேறி வந்தால் அவைகள் சின்னாப்பின்னமாக வேண்டும் என்று வைத்த கண்ணிவெடிகள் அவ்வப்போது வெடித்து மக்களை கொன்று கொண்டே இருப்பதுதான் வேதனை.

இவற்றை அகற்றுவதற்காக 15 வருடங்கள் கடுமையாக போராடிய எகிப்து, கடைசியில் மேற்கு பாலைவனத்தில் 70 லட்சம் கண்ணிவெடிகளையும் சீனாய் பாலைவனத்தில் 30 லட்சம் கண்ணி வெடிகள் மண்ணுக்குள் புதைந்தபடி வெடிக்க காத்திருக்கின்றன. தொட்ட இடமெல்லாம் கண்ணிவெடியாக காட்சி தருவதால் இதை சாத்தானின் தோட்டம் என்கிறார்கள்.

இதைப்போலவே தென்மேற்கு ஈரானும் கண்ணிவெடிகளால் சூழப்பட்டு இருக்கிறது. ஈரான், ஈராக் போரே இந்த கண்ணிவெடி புதைப்புக்கு காரணம். 1980களில் ஈரான் அரசு புதைத்து வைத்த கண்ணிவெடிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 60 லட்சம். எல்லைப்பகுதியில் சுமார் 42 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இவை புதைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியே எந்த வளர்ச்சியும் இல்லாமல் கட்டாந்தரையாக கிடக்கிறது.

அங்கோலாவின் மொத்த மக்கள் தொகையைவிட அங்கு புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளின் எண்ணிக்கை அதிகம். விவசாயம் செய்ய நிலத்தை தோண்டினால் வெடிக்கிறது. ரோடுபோட குழிதோன்டினால் வெடிக்கிறது. இந்த வெடிக்கு மறைந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 70 ஆயிரம் என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை. இரண்டு கோடி கண்ணிவெடிகள் இங்கு புதைக்கப்பட்டுள்ளன. இதை எப்படி அகற்றுவது என்று விழி பிதுங்கி நிற்கிறது அங்கோலா அரசு.

ஆப்கானிஸ்தானில் தினமும் 10 முதல் 12 பேர் வரை கண்ணிவெடியை மிதித்து காலியாகிறார்கள். 1979 முதல் 1992 வரை அங்கு புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளின் எண்ணிக்கை ஒரு கோடிக்கு மேல். ஈராக்கிலும் அதே அளவுக்கு கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. எதிரிக்கு வைத்த கண்ணிவெடியில், அவற்றை வைத்தவர்களே சிக்கிக்கொள்கிறார்கள். நாட்டில் சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் கண்ணிவெடிகளினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர். ஈராக்கில் 3,500 இடங்கள் இப்படி கண்ணிவெடிகளினால் நிரம்பி வழிகின்றன. உலகம் முழுவதும் கண்ணிவெடியால் ஒரு காலை இழந்தவர்கள் மட்டும் 2 .5 கோடிக்கும் அதிகம்.

இந்த கொடுமையின் தொடர்ச்சியாக இன்று ஈழ மண்ணிலும் கண்ணிவெடி பயங்கரம் அரங்கேறிவிட்ட கொடுமையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் முடிவு எப்போது வருமென்று சர்வேதேச சமூகம் கலங்கி கொண்டிருக்கிறது.

Monday, February 20, 2012

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி மறைவு!

மூன்று தலைமுறைகளாக தமிழ் திரையுலகில் கால் பதித்து, ஐநூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி, நேற்று இரவு சென்னையில் மரணம் அடைந்தார். தனது இளம் வயதிலேயே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அம்மாவாக நடித்து புகழ் பெற்றவர். கமலின் ஃ பேவரைட் நடிகை என்ற பாராட்டை பெற்ற இவர், விருமாண்டி, தேவர் மகன், மகாநதி  என்று கமலின் பல படங்களில் நடித்திருக்கிறார். 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் ஊர்வசியின் பாட்டியாக வந்த லட்சுமி, கமலுடன் போட்டி போட்டு பிரமாதமாக நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். இந்த வயதிலும் நாடகங்களிலும் முத்திரையை பதித்து வந்த லட்சுமி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'தென்றல்' சீரியலில் பாட்டியாக தன் திறமையை தொடர்ந்து நிருபித்துக் கொண்டிருந்தார்.


சென்னையிலுள்ள சாலிக்கிராமத்தில் அமைந்த அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது பூத உடல் வைக்கப்பட்டு அவரின் சொந்த ஊரான விருது நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படுகிறது. திரையுலக - சின்னத்திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்

ஹாலிவுட் டிரெய்லர்

எதிர்பார்த்தது போலவே நடந்திருக்கிறது. சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 'கோஸ்ட் ரைடர்' ஹாலிவுட் படத்தின் இரண்டாம் பாகமான 'கோஸ்ட் ரைடர்: ஸ்பிரிட் ஆஃப் வென்ஜென்ஸ்' வெளிவருகிறது. மார்வெல் காமிக்ஸின் கதைதான். என்றாலும் ஆங்காங்கே சினிமாவுக்கு ஏற்றபடி டிங்கரிங் செய்திருக்கிறார்கள்.

நரகத்திலிருந்து தப்பி வந்த சாத்தான்களை அழிப்பது, கோஸ்ட் ரைடரின் வேலை. எத்தனை பாகங்கள் எடுக்கப்பட்டாலும், அத்தனை பாகங்களின் ஒன லைன் இதுதான். 'கோஸ்ட் ரைடர்: ஸ்பிரிட் ஆஃப் வென்ஜென்ஸ்' ஹாலிவுட் படமும் இம்மிபிசகாமல் இந்த விதிமுறையையே கடைபிடிக்கிறது.

படத்தை குறித்து பார்பதற்கு முன்னால், சில அடிப்படைகளை தெரிந்து கொள்வோம். முதல் விஷயம், ஹீரோவுக்கும், ஆன்டி ஹீரோவுக்குமான வித்தியாசம். அசாதாரணமான நிலைமைகளை, சாதார மனிதன் எதிர்கொண்டு வெற்றி பெறுவது, ஹீரோயிசம். சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத சாதனைகளை, சர்வசாதாரணமாக நிகழ்த்துபவன், ஹீரோ. சூப்பர் ஹீரோவோ, இன்னும் மேலானவன். காற்றில் பரப்பான், மலைகளை தூக்குவான். கடல் நீரை, குடிநீராக பருகுவான். அதீத கற்பனைகளின் மொத்த வடிவம் சூப்பர் ஹீரோ என சுருக்கமாக சொல்லி விடலாம்.

ஏறக்குறைய இதே குணநலன்களை கொண்டன்தான் ஆண்டி ஹீரோ. என்ன... சமூக நலனுக்காக தீயவர்களை வீழ்த்துவான், ஹீரோ. ஆன்டி ஹீரோவோ, தனிப்பட்ட தனது பழிவாங்கும் என்னத்துக்காக கொடியவனை அழிப்பான். வில்லனுக்குரிய 'கலர்' ஆன்டி ஹீரோவுக்கு இருக்கும். ஆனால், ஆன்டி ஹீரோ, வில்லன் அல்ல.

இத்தனையும் விளக்குவதற்கு காரணம், 'கோஸ்ட் ரைடர்', ஆன்டி ஹீரோ வகையறாவை சேர்ந்தது என்று சொல்லத்தான். இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், இது சூப்பர் ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட்.

டிசி காமிக்ஸை வீழ்த்துவற்காக மார்வெல் காமிக்ஸ், தலைகீழாக நின்று உழைத்து ஏராளமான சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியது. அப்போது கூடவே ஜனித்ததுதான், 'நேமர் த சப் மேரனைனர்'. ஒருவகையில் சூப்பர் ஆன்டி ஹீரோவின் முதல் காமிக்ஸ் கதாப்பாத்திரம் என இதைச் சொல்லலாம். 1939ல், பிறவி எடுத்த இந்த கேரக்டர், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழு பரிணாமத்தை அடைந்தது, கோஸ்ட் ரைடரில். பிறகு ஃபான்டம் ரைடர் என நாமகரணம் சூட்டினார்கள். 1983 வரை பாகம், பாகமாக கோஸ்ட் ரைடர் காமிக்ஸ் விற்பனைக்கு வந்து சக்கைப் போடி போட்டது.

மார்வெல் காமிக்ஸின் அங்கமான, மார்வெல் ஸ்டுடியோ தொடங்கப்பட்ட பிறகு, காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்கள் திரையில் சாகசங்கள் நிகழ்த்த ஆரம்பித்தார்கள். ரசிகர்களும் கைதட்டி ஆரவாரத்துடன் இவர்களை வரவேற்றார்கள். அந்த வகையில், 2007 பிப்ரவரி 16 அன்று திரைக்கு வந்து மொத்தமாக கல்லாவை நிரப்பியது, 'கோஸ்ட் ரைடர்'.

இதோ இப்போது 2012, பிரவரி 17 அன்று பிரபஞ்சம் எங்கும் கலக்க வருகிறது 'கோஸ்ட் ரைடர்: ஸ்பிரிட் ஆஃப் வென்ஜென்ஸ்'. முந்தைய பாகத்தில் நடித்த ஆஸ்கர் விருது பெற்ற நிகோலஸ் கேஜ், இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார். காமிக்ஸ் கதைகளை எழுதுவதில் புகழ்பெற்று விளங்கும் ஸ்காட்ச் கிம்பில், சேத் ஹாஃப்மேன், டேவிட் எஸ்.கோயர் ஆகிய மூவரும் சேர்ந்து இப்படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறார்கள். 'கராங்க்' புகழ் நெவல்டின் -டைலர், இரட்டையர்கள் இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

புரட்சி எண்ணம் கொண்ட பாதிரிகள் உதவியோடு, நரகத்திலிருந்து வந்த சாத்தான்களை நிக்கோலஸ் கேஜ் அழிப்பதுதான் கதை. இதிலும் தீப்பிழம்பை கக்கும் முகமும், சூப்பர் ஃபாஸ்ட் புல்லட்டும் உண்டு.
கே.என்.சிவராமன்   

Saturday, February 18, 2012

பூமியை நேசிப்போம்!

ஒரு பிரபலமான ஜென் கதை உண்டு. இரண்டு துறவிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். போகும் வழியில் ஒரு தேள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு துறவி அதைத் தூக்கிக் கரையில் போட முயன்றார், தேள் அவரைக் கொட்டியது.

அவர் மீண்டும் மீண்டும் முயல, தேள் அவரைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது.

இரண்டாவது துறவி கேட்டார், 'கொட்டுவது தேளின் இயல்பு. விட்டு விட வேண்டியது தானே?'

முதல் துறவி பதிலளித்தார், 'கொட்டுவது தேளின் இயல்பு. அதே போல காப்பாற்றுவது மனிதனின் இயல்பு அல்லவா?'

அழகான இந்தக் கதை, இயல்புகளைப் பற்றிப் பேசுகிறது. நாம் பெரும்பாலும் அடுத்தவர்களுடைய இயல்பைப் பற்றிப் பேசுகிறோம். நம்முடைய இயல்புகளைப் பற்றி சிந்திப்பதில்லை. கடைசியில் அடுத்தவருடைய இயல்புகளே நம்முடைய இயல்பை நிர்ணயம் செய்யும் காரணிகளாகி விடுகின்றன.

நாம்! நமது இயல்பு! நமது பணி! எனுமளவில் ஆழமாகச் சிந்தித்தால் பல சிக் கல்களுக்கான தீர்வுகள் வெளிப்படும். அன்பைக் குறித்தும், தன்னம்பிக்கை குறித்தும், உறவுகளைக் குறித்தும் பேசும்போது இயற்கையைக் குறித்தும் பேசுவதும் அவசியமாகிறது. காரணம், இயற்கை இல்லையேல் வாழ்க்கையே இல்லை.

அடிக்கடி நாம் இயற்கையை நேசிப்பதைப் பற்றியும், ஓசோனில் விழும் ஓட்டையைப் பற்றியும், 'குளோபல் வார்மிங்' எனும் புவி வெப்பமாதலைப் பற்றியும் படிக்கிறோம். படித்துவிட்டு, அது ஏதோ உலகத் தலைவர்களுக்கான சமாச்சாரம் என அடுத்த செய்திக்குத் தாவி விடுகிறோம்.

உண்மையிலேயே அது நமக்குச் சம்பந்தமில்லாததா? தேவையில்லாததா?

ஆம் என்று சொல்கிறீர்களெனில் ஒன்று, உங்களுக்கு விஷயம் தெரியாது! அல்லது அதன் வீரியம் தெரியாது!

குளோபல் வார்மிங் பற்றி கடந்த பத்து ஆண்டுகளில் அலசப்பட்டதைப் போல எப்போதுமே அலசப்பட்டதில்லை. காரணம் அதன் அச்சுறுத்தல் அப்படி. புவி வெப்பமயமாதல் என்றால், 'ஆமா அதான் இப்போ வெயில் ரொம்ப சூடா அடிக்குது' என சீரியஸாய் சொல்லிவிட்டுக் கடந்து போகும் அறியாமை மனிதர்கள் உண்டு. அவ்ளோதானா குளோபல் வார்மிங்?

விஞ்ஞானம் பயப்படுவதைப் போல குளோபல் வார்மிங் தனது வேலையைக் காண்பித்தால் என்ன நடக்கும் தெரியுமா? கடல் மட்டம் உயரும். பல நாடுகள் தண்ணீருக்குள் மூழ்கிப் போகும். வெள்ளப்பெருக்கு, சுனாமி, சூறாவளி, வெப்ப அலைகள் என வரிசையாய் பல இயற்கைச் சீற்றங்கள் நிகழும். தொற்று நோய்கள் காட்டுத் தீயைப் போலப் பரவும்!

பூமியின் வெப்பம் அப்படியே கடலுக்கும் பரவும். கடலின் வெப்பம் பனியை உருக்கும், நீர்மட்டம் உயரும், வெப்பம் மீண்டும் அதிகரிக்கும். இது ஒரு மோசமான சங்கிலித் தொடர்போல நடந்து ஒரு நாள் நமது பூமி தண்ணீருக்குள் மூழ்கிப் போய்விடும் எனும் அச்சம் விஞ்ஞானத்துக்கு உண்டு!

அவர்கள் எடுத்து நீட்டும் புள்ளிவிவரம்படி, கடந்த 20 ஆண்டுகளாக பூமியின் வெப்பம் பெருமளவு அதிகரித்திருக்கிறது. நீராவி, கரியமில வாயு, ஓசோன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு என ஏகப்பட்ட வேதியியல் சமாச்சாரங்கள் பூமியில் சகட்டு மேனிக்கு அதிகரித்திருக்கின்றன. இது புவியை சூடேற்றும் சங்கதிகளில் ஒன்று!

'மரம் நடுவோம்' எனும் கோஷம் எப்போதாவது உங்களை உஷார் படுத்தியதுண்டா? மரங்களின் குறைபாடு பூமியில் கரியமில வாயுவை நிரப்பி விடுகிறது. அது பூமியின் வெப்பத்தை சடசடவென உயர்த்தி விடுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களுக்கு மரம் நடுவதன் தேவை புரிந்திருந்தது. சாலையோரங்களில் மரங்களை நட்ட மன்னர்களின் வரலாறு நமக்குத் தெரியும். மரங்களை வெட்டிய குற்றத்துக்காக ராஜஸ்தான் பஷானியர்களுக்கு மன்னர்கள் மரண தண்டனை விதித்த கதைகள் நானூறு ஆண்டு பழசு!

இளைஞர்கள் மனது வைத்தால் பூமி அழகாகும் என்பதில் சந்தேகமில்லை. 'நான் மட்டும் நினைத்தால் என்ன நடக்கப் போவுது' அல்லது 'என்னைத் தவிர எல்லோரும் அப்படி நடக்கட்டும்' என்பது இன்றைக்கு இளம் வயதினரிடையே பரவலாய்க் காணப்படும் சிந்தனை என்பது வருந்த வைக்கிறது.

கடற்கரையில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். கரையில் கொட்டிக் கிடந்த நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கிக் கடலில் எறிந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த ஒருவர் கேட்டார், 'என்ன தம்பி, இங்கே ஆயிரக்கணக்கான மீன்கள் கிடக்குது... நீ ஒண்ணோ ரெண்டோ எடுத்து தண்ணியில போடறதால என்ன ஆயிடப் போவுது?'

பையன் சொன்னான், 'அந்த ரெண்டு மீனுக்கும் வாழ்வு கிடைக்கும். என்னால் காப்பாற்ற முடியாத ஆயிரம் மீன்களை விட காப்பாற்ற முடிந்த இரண்டு மீன்களே என் கவனத்தில் இருக்கும்'.

பெரியவர் அசந்து போனார்.

நம்மால் சரி செய்ய முடியாத ஆயிரம் சிக்கல்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதை விட, நம்மால் செய்ய முடிந்த வேலைகளைச் செய்வதே சிறப்பானது!

சின்னச் சின்ன வேலைகளின் சங்கமமே பெரிய பெரிய சாதனைகள் என்பது நமக்குப் பல நேரங்களில் புரிவதில்லை. சாலைகளில்கிடக்கும் குப்பைகளைப் பற்றி விமர்சித்துத் திரியும் நாம் வீட்டில் இருக்கும் குப்பையை சரியாய் கையாள்கிறோமா?

நாடு சுத்தமாய் இருக்க வேண்டுமெனில், வீடு தூய்மையாய் இருக்க வேண்டும்.

சின்னச் சின்னப் பிழைகளின் தொகுப்பே அவலட்சணங்களின் பேரணி!

பஞ்ச பூதங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது மனிதன் நலமாக இருக்கிறான். நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் ஐந்து பூதங்களும் தனது தூய்மையை இழக்கும்போது மனிதனின் வாழ்க்கையும் பொலிவிழக்கிறது. வாகனப் புகைகள், கரியமிலவாயு என பல விஷயங்கள் காற்றைக் கறையாக்குகின்றன. ஆலைக் கழிவுகள், குப்பைகள், மருத்துவக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் எல்லாம் தண்ணீரை தரமிழக்க வைக்கின்றன. பிளாஸ்டிக், அமிலங்கள், ரசாயனங்கள் போன்றவை நிலத்தை அழிக்கின்றன. உலகில் மொத்தம் இரண்டு கோடி ரசாயனங்கள் இருக்கின்றன. 27 வினாடிகளுக்கு ஒரு புது ரசாயனம் கண்டுபிடிக்கப்படுகிறது.

இவையெல்லாம் நேரடியாக நமது ஆரோக்கியத்தின் குரல்வளையைத்தான் இறுகப் பிடிக்கின்றன. நிலம் பாழ்பட்டுக் கொண்டே போகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது பூமியைக் காப்பாற்ற நம்மால் என்ன செய்ய முடியும் என யோசிப்பதுதான்.

தள்ளுபடிக் கடைகளில் தள்ளுமுள்ளுக்கிடையில் கையில் அள்ளி வரும் பிளாஸ்டிக் பைகள் தூக்கி வீசப்பட்டபின் என்னவாகும்? குடியரசுத் தினத்துக்காய் கைகளில் அசையும் பிளாஸ்டிக் கொடி, மாலையில் என்னவாகும்? சகட்டுமேனிக்கு குடித்து வீசி எறியும் தண்ணீர் பாட்டில்களின் நிலை என்ன? ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் மண்ணை மாசுபடுத்திக் கொண்டே இருக்கும் என்பதுதான் பதில்! பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது, இல்லையேல் மறு சுழற்சிக்கு உட்படுத்துவது மட்டுமே தீர்வு!

தூங்கும்போது புதிதாய் இருக்கும் தொழில்நுட்பம் காலையில் பழசாகி விடுகிறது. நான்கு மாதத்துக்கு முன் வாங்கிய செல்போன் ஓல்டு பேஷனாகி விடுகிறது. கடந்த வருட கணினி கயலான் கடைக்குப் போகிறது. சிடி, வயர்கள், பிளேயர்கள் என ஆண்டு தோறும் குவியும் எலக்ட்ரானிக் குப்பைகள் சுமார் பத்து கோடி டன்! ஆயிரக்கணக்கான நச்சுப் புகைகளுடன் இருக்கும் இந்த இ வேஸ்ட் களையும் மறு சுழற்சிக்குள் அனுப்புவது மட்டுமே சரியான தீர்வு!

தங்கத்தை விட அதிகமாய் நாம் பாதுகாக்க வேண்டிய பொருள் தண்ணீர். தங்கம் இல்லாமல் வாழலாம், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவதே இதன் தீர்வு. இல்லையேல் இன்னும் சில பத்தாண்டுகளில் தண்ணீர் இல்லாமல் மானுடம் தவிக்க வேண்டியதுதான் என்கிறார் உலக தண்ணீர் மேலாண்மை நிறுவன இயக்குனர் பிராங்க் ரிஜர்ஸ்பன்.

மின் தேவையைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இருப்பதை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா? இல்லை என்பதே தீர்க்கமான பதில்!

'பாந்தம் லோடு' கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மின் உபகரணங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் நேரத்தில் செலவாகும் மின்சாரத்தை அப்படி அழைக்கிறார்கள்.

உதாரணமாக டிவி, செல்போன் சார்ஜர், ரேடியோ, டி.வி.டி. பிளேயர் போன்றவை. அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? ஒட்டு மொத்த மின் செலவில் 6 சதவீதம் இப்படி வீணாகிறதாம். இதைத் தவிர்ப்பது எப்படி? ரொம்ப சிம்பிள்! தேவையில்லாத போது பிளக்கை உருவி வையுங்கள், சுவிட்சை ஆப் செய்யுங்கள். தேவையில்லாமல் காரை எடுத்துக் கொண்டோ, பைக்கை எடுத்துக் கொண்டோ சுற்றாமல் முடிந்தவரை பயணத்துக்கு நடையையோ, சைக்கிளையோ, பஸ்ஸையோ, ரெயிலையோ வழக்கமாக்கினால் காற்றில் மாசு குறையும்! நடப்பதால் உடலுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்!

நவீன உலகில் இணையம் நமக்கு ஒரு வரப்பிரசாதம். வீட்டில் இருந்தபடியே வங்கி, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் போன்றவற்றைக் கையாண்டால் பயணமும் மிச்சம், காற்றில் கலக்கும் மாசும் குறையும்.

'பயன்பாட்டைக் குறை, மீண்டும் பயன்படுத்து, மறு சுழற்சிக்கு உட்படுத்து' (Reduce, Reuse, Recycle) எனும் இயக்கம் இன்று வலுவாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. தேவையற்ற பொருட்களை வாங்கிச் சேகரிக்காமல் இருப்பது முதல் தேவை.

பழைய பொருட்களை நீண்ட நாள் பயன்படுத்துவது, பின் அதை தேவையானவர்களுக்குக் கொடுப்பது அல்லது பழையவற்றை வாங்கிப் பயன்படுத்துவது இவை இரண்டாவது தேவை.

குப்பையான பின் மறு சுழற்சிக்கு உட்படுத்தி மண்ணை மாசு படாமல் தடுப்பது மூன்றாவது!


நாம் கீழ்க்கண்ட விஷயங்களை  ஒவ்வொருவரும் சரியாகப் பயன்படுத்தினாலே பூமியின் மாசு பரவலை பெருமளவு தடுக்க முடியும்.நேசிப்போம் நம் மண்ணை
அவளும் நமக்கோர் அன்னை!

சேவியர்

Friday, February 17, 2012

தெரிந்துகொள்ள சில...

'ஹாலோகிராம்'

வாக்காளர் அடையாள அட்டை, வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் போன்றவற்றில் வட்டமான சில்வர் காகிதத்தில் உள்ள முத்திரையை பார்த்திருப்பீர்கள். இது எதற்காக பதிக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா?

சூரிய வெளிச்சத்தில் பார்க்கும்போது 3 அடுக்குகளாகத் தெரியும். 3 அடிப்படை வண்ணங்களைப் பயன்படுத்தி, லேசர் மூலம் இம்முத்திரைகள் பதிக்கப்படுகிறது. இதைப் போன்றே போலியாக உருவாக்க முடியாது. மேலும் நகல்களும் எடுக்க முடியாது. இதனால் தான் இந்த பாதுகாப்பான ஹாலோகிராம் உத்தி கையாளப்படுகிறது. எழுத்துக்கள், லோகோ டிசைன்கள் தனித்தனியாக 3 அடுக்குகளாக தெரிவதுதான் இதன் சிறப்பம்சம்.

ஹாலோகிராம் 3 அடுக்குகளாக லேசரில் பதிக்கப்படுகிறது. இன்று சர்வதேச அளவில் இதுபோன்ற செக்ïரிட்டி ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

***

கடல் மிதவை

கடலில் மிதந்து கொண்டே தட்ப வெப்ப நிலையை 24 மணிநேரமும் தெரிவிக்கும் கருவி, கப்பல்கள், விமானம் மற்றும் புயல், மழை போன்றவற்றையும் தெரிவிக்கிறது. இது முற்றிலும் சூரிய ஒளியால் செயல்படுகிறது.

இதில் உள்ள சிறு ரேடியோ அலைவரிசை மூலம் கட்டுப்பாடு அறைக்கு செய்தியை அனுப்புகிறது. இந்த கருவி கடலில் மிதந்து கொண்டிருப்பதால், இதற்கு 'கடல் மிதவை' (Buoys) என்று பெயர்.

இங்கு காணப்படும் மிதவையின் குறுக்களவு 10 அடி. இதேபோல் கண்காணிப்புகள் வானில் பலூன்களாக பறக்க விடுவதும் உண்டு.

தட்பவெப்பநிலையை பற்றி ஆராய்பவர்கள் 'மெலியோரோலஜிஸ்ட்' என்று அழைக்கப்படுகின்றனர்.

***

மோனாலிசா ஓவியம்

உலகப்புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை அனைவரும் பார்த்திருக்கலாம். அதைப்பற்றிய அதிசய தகவல்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

அழகும், செல்வமும் இணைய 'லிஸாகொர்மினி' என்ற பெண்ணின் உருவம் தான் மோனாலிசா ஓவியமானது.

இதை வரைந்தவர், ஓவியர் லியானார்டோ டாவின்சி. இதை வரைய இவர் எடுத்துக் கொண்ட காலம், 6 ஆண்டுகள். இந்தப் படம் வரைய ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு லிசாவின் குழந்தை இறந்து போனது. அதற்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில் அவள் அப்படத்தில் கறுப்பு உடையில் காணப்படுகிறாள். இந்த படத்தைப் பொக்கிஷம் போல் காப்பாற்றி வந்த டாவின்சி, சில வருடங்களுக்குப் பின், பிரான்ஸ் மன்னருக்கு 12 ஆயிரம் பிராங்கிற்கு விற்றார்.

Saturday, February 11, 2012

பொழுது போக்கும், பொழுதை ஆக்கும்!

எப்படா ஸ்கூல் மணி அடிக்கும், ஓடியாடி விளையாடலாம் என மணி மேல் விழிவைத்துக் காத்துக் கிடந்த பால்ய காலம் ஞாபகம் இருக்கிறதா?

அதன் பின் படிப்பு, வேலை என வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவியபோது நழுவிப் போன ஒரு விஷயம்தான் பொழுதுபோக்கு. ஆங்கிலத்தில் சொன்னால் ஹாபி.

பொழுதுபோக்கு என்றால் இயல்பாகவே ஒரு சின்ன உற்சாகம் மனதுக்குள் ஓட வேண்டும். சிலரோ, `அதுக்கெல்லாம் ஏதுங்க நேரம்... வேலையைப் பார்க்கவே டைம் இல்லை' என சலித்துக் கொள்வார்கள்.

ஒருவேளை நீங்களே கூட அப்படி புலம்பும் பார்ட்டியாய் இருக்கலாம்.

ஹாபி என்றாலே ஏதோ மிச்ச மீதி இருக்கும் நேரத்தைச் செலவிடும் வெட்டி விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. அதுவும் நமது வாழ்வின் ஒரு பாகமே.

நமது அலுவலக வேலை நமது பொருளாதாரத் தேவைக்கான ஓட்டம்.

பொழுது போக்கு, நாம் இழந்த விருப்பங்களுக்கான ஓட்டம்!

'இதுல என்னய்யா இருக்கு...' என சலிப்படைபவர்கள் ஒரு தனி ரகம். அவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே பொருளாதார ஸ்கேல் கொண்டு அளப்பவர்கள். வாழ்க்கை அதைத் தாண்டியும் உள்ளது.

உற்சாகம், இனிமை, ஆனந்தம், நேர் சிந்தனை எல்லாவற்றின் கூட்டுத்தொகைதான் வாழ்க்கை.

நமக்கு என்ன பிடிக்குமோ, அதுவேதான் வேலையாகவும் இருந்தால் ஹாபியே தேவையில்லை. ஆனால் நமக்கு அப்படியா அமைகிறது? கவிதை எழுத ஆர்வம் உடையவர் வக்கீல் வேலையில் இருப்பார். அவருக்கு கேஸ் கட்டுகளுடன் குடும்பம் நடத்தவே நேரம் சரியாக இருக்கும். இதுல கவிதைக் கட்டுக்கு எங்கே போறது?

நடனம் ஆட வேண்டும் எனும் ஆர்வமுடையவர் மென்பொருள் துறையில் இருப்பார். மேலதிகாரியின் கட்டளைகளுக்கு ஆட்டம் போட்டுப் போட்டே அவருடைய பொழுதுகளெல்லாம் அழிந்து போய்விடும். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவர் பொட்டலம் கட்டிக்கொண்டு பெட்டிக் கடையில் நிற்பார். இப்படி பெரும்பாலும் நமக்கு அமையும் வேலை நம் மனதுக்குப் பிடித்ததாக அமைவதில்லை.

வெகு சிலர் மட்டுமே விதிவிலக்கு! 'ஊர்ல விவசாயம் பண்றதுதான் எனக்கு பிடிக்குது' என பிடிவாதமாய் வாழும் மனிதர்கள் உண்டு. ஹாரி பாட்டர் நாவல் புகழ் ஜே.கே. ரவுலிங் எழுத்து மீது சின்ன வயதிலேயே அதீத காதல் உடையவர். அவருக்கு இப்போது எழுத்தே வாழ்க்கையாகி விட்டது. வெகு சிலருக்கே இப்படிப்பட்ட வாழ்க்கை அமைகிறது!

சரி, வேலைதான் இப்படி ஆயிடுச்சு, அதுக்காக நம்மோட விருப்பங்களையெல்லாம் விட்டுடணுமா என்ன? முழு நேரமும் அதையே செய்றதுக்குப் பதிலா, நமக்குக் கிடைக்கும் நேரத்துல அதைச் செய்யலாமே! அதன் மூலம் நமது விருப்பமும் நிறைவேறும், மனமும் ரிலாக்ஸ் ஆகும்! அதுதான் பொழுதுபோக்கின் அடிப்படை!

இன்றைக்கு வாழ்க்கையில் எல்லாமே அவசரம். இதனால் அலுவல் வேலை நேரமும் சகட்டு மேனிக்கு உயர்ந்து விட்டது. அதிலும் குறிப்பாக மென்பொருள் போன்ற துறையில் வேலை பார்ப்பவர்கள் ராத்திரி பகல் என உழைக்க வேண்டிய கட்டாயம். இதனால் பலரும் மன அழுத்தம் எனும் கொடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மன அழுத்தத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால் ஏதேனும் ஒரு டாக்டரிடம் கேட்டுப் பாருங்கள். பட்டியல் போட்டு அதன் பிரச்சினைகளைச் சொல்வார்கள். மன அழுத்தம் மனதைப் பாதித்து, மனதின் நிம்மதியைக் குலைத்து, அமைதியைச் சிதைத்து ஏகப்பட்ட டென்ஷனைத் தரும். அந்த மன மாறுதல்கள் அப்படியே உடலுக்கும் பரவி ஏகப்பட்ட நோய்களையும் தந்து செல்லும்.

மன அழுத்தத்தை விரட்ட ஓர் எளிய வழி நல்லதொரு ஹாபியை கொண்டிருப்பது தான் என்கின்றனர் மருத்துவர்கள். பொழுதுபோக்கிற்காய் செலவிடும் கொஞ்சம் நேரமே போதுமாம் வேலை அழுத்தத்தைக் குறைத்து, மனதைச் சமநிலைப்படுத்த!

மடோனா தனது மன அழுத்தத்தைக் குறைக்க எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். பிறகு அந்த ஹாபியில் அவருடைய ஈடுபாடு அதிகமாகிப் போய் விட்டது. குழந்தைகளுக்கான பல புத்தகங்களை அவர் பிற்காலத்தில் வெளியிட்டார் என்பது சுவாரசியத் தகவல்!

பொழுதுபோக்கில் ரொம்ப ஆர்வமாய் ஈடுபடும் பலர் பிற்காலத்தில் அதையே முதன்மைத் தொழிலாக ஆக்கிக் கொள்வதுண்டு. இல்லாவிட்டால் அதன் மூலம் தங்கள் வேலையை வெற்றிகரமாய் மாற்றுவதும் உண்டு.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜூராசிக் பார்க் இயக்குனர். அவருடைய ஹாபி, ஏலியன்ஸ் அதாவது வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றி தேடித் தேடி வாசிப்பது. அந்தப் பொழுதுபோக்கு அவருக்கு ரொம்பவே கை கொடுத்தது. ஏலியன் படங்களை எடுத்து உலகப் புகழையும் பெற்றார். ஈ.டி. எனும் மாபெரும் வெற்றிப் படத்தை மறக்க முடியுமா என்ன?

பணிகள் பெரும்பாலும் நமக்கு வெளியேயான விஷயங்களைத் தேடி ஓடுவதில்தான் இருக்கும். படிப்பு, வேலை, குழந்தைகள், பெற்றோர் இப்படி! பொழுதுபோக்கு நம்மையே நாம் தேடிக் கொள்ளும் விஷயம். நம்மைப் பற்றி, நம்முடைய திறமைகளைப் பற்றி, நமது இயல்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் இடம் இது.

எதையேனும் செய்து முடிக்கும் போது, 'அட! நானா இதைச் செஞ்சேன்' என மனதை வருடும் இதமான ஒரு உணர்வு நமது உற்சாக நரம்புகளையெல்லாம் மீட்டி விடும். மீண்டும் மீண்டும் தொடர்ந்து செயல்பட அது ஊக்கம் தரும். நமக்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்காத வாழ்க்கை நமக்கான வாழ்க்கையா?

பலருக்கும் ஹாபி என்பது வேலையாகிப் போய், பின்னர் வாழ்க்கையே அதுவாகிப் போவதுண்டு. குறிப்பாக சமையல் கலையில் ஆர்வம் உடைய பலர் பிற்காலத்தில் மிகப்பெரிய உணவகங்கள் அமைத்திருக்கிறார்கள். பொம்மைகள் செய்வதில் ஆர்வமுடையவர்கள் பெரிய பிஸினஸ் தலைகள் ஆகியிருக்கிறார்கள்.

ஏன்? பேஸ்புக்கை வடிவமைத்த மார்க் ஷுக்கர் பெர்க் கூட அதை பொழுதுபோக்காகத்தான் ஆரம்பித்தார். மென்பொருள் புரோக்ராமிங் செய்வது அவருடைய பொழுது போக்கு. அவர் உருவாக்கிய 'ஷக்நெட்' எனும் 'சேட்டிங்' மென்பொருள் உண்மையில் இன்றைய பிரபல சேட்டிங் மென்பொருள்களின் முன்னோடி.

கல்லூரிக்கான ஒரு சின்ன இணைய தளமாக அவர் உருவாக்கிய பேஸ் புக் இன்று 80 கோடி பேர் பயன்படுத்தும் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது! உலகின் மிக இளம் வயதுக் கோடீஸ்வரரான இவருக்கு வயது வெறும் 27 தான்! சொத்து சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய்கள்! இப்போது சொல்லுங்கள், ஹாபி நல்லதா, கெட்டதா?

பொழுதுபோக்கையெல்லாம் வயசானப்புறம் பாத்துக்கலாம்பா என பலர் நினைப்பதுண்டு. ஆனால் சிறு வயதிலேயே ஒரு நல்ல ஹாபியை உருவாக்கினால்தான் அது முதிய வயதில் கை கொடுக்கும். கதை எழுதுவது உங்கள் ஹாபி என வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வயதிலேயே அந்த கலையை ஆர்வமாய் தொடர்ந்தால் முதுமையில் அட்டகாசமாய் எழுதித் தள்ளலாம்.

இன்னும் சொல்லப் போனால் குழந்தைப் பருவத்திலேயே ஒரு பிடித்தமான ஹாபி கை வரப் பெற்றால் அந்த ஹாபி காலம் முழுதும் பயனளிக்கும். எனவேதான், ஒரு நல்ல பொழுதுபோக்கைப் பிடித்துக் கொள்ள குழந்தைகளை உற்சாகமூட்டுவது தேவையாகிறது.

'உங்க பொழுதுபோக்கு என்ன?' ன்னு கேட்டா நிறைய பேர், `டிவி பாக்கறது, நண்பர்களோட சுத்தறது' என அடுக்குவார்கள். பொழுதுபோக்கு உங்களுடைய சொந்த திறமை, விருப்பம் சார்ந்து இருப்பதுதான் எப்போதுமே நல்லது. சினிமாதான் உங்க பொழுதுபோக்கு என்றால், அந்த பொழுதுபோக்குக்காய் சினிமா எனும் ஒரு விஷயத்தை நீங்கள் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் வருகிறது இல்லையா?

பொழுதுபோக்கு நட்பையும், உறவையும் வளர்க்கும்! ஒரு பொழுதுபோக்கு இருந்தால், அதே போன்ற பொழுதுபோக்குடைய பலருடன் நட்பு கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இணையம் அந்த வசதியை மிக எளிமையாக்கியிருக்கிறது.

எழுதும் விருப்பம் உடையவர்களுக்கு இலவசமாய் கிடைக்கின்றன பிளாக் எனப்படும் வலைப்பூக்கள். பாட விருப்பம் உடையவர்களுக்கும், ஆல்பம் தயாரிக்கும் ஆர்வம் உடையவர்களுக்கும் ïடிïப் போன்ற வலைத்தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. ஓவியம், சமையல் போன்ற கலைகள் பிடித்திருந்தால் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் குழுக்கள் வைத்து உங்களை ஊக்கமூட்டுகின்றன. இங்கெல்லாம் ஒத்த சிந்தனையுடைய நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

வெளி நபர் அறிமுகம் கிடைப்பது இருக்கட்டும், பல வேளைகளில் நமது குடும்பத்திலுள்ள நபர் களோடு இணைந்து நேரம் செலவிடவும், இனிமையாய் மாலை நேரங்களைப் பயனுள்ளதாக்கவும் கூட நமது ஹாபி கைகொடுக்கும். உதாரணமாய் தோட்ட வேலை, சமையல் போன்றவை கூட்டாய் கும்மாளமடிக்க ஏற்ற பொழுதுபோக்குகள் இல்லையா?

பொழுதுபோக்கு மூளைக்கு ரொம்ப நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். பொழுதுபோக்கு மூளையின் ஆனந்த அணுக்களைத் தூண்டி உற்சாகமூட்டுகிறது. அதனால் உடலும், உள்ளமும் உற்சாகமடைகின்றன. வேலையின் சோர்வைக் கழுவிக் களையும் சக்தி பொழுதுபோக்கிற்கு உண்டு.

நல்ல பொழுதுபோக்கு உங்கள் பொழுதுகளை ஆக்கும். உடலுக்கும், மனதுக்கும் ஒரு சேர உற்சாகம் தரும். வாழ்வை அர்த்தப்படுத்தும், ஆனந்தப்படுத்தும்! அப்புறமென்ன? ஒரு நல்ல பொழுதுபோக்கைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆனந்தமாய் வாழுங்கள்.

மனதில் நிலவும் ஏக்கம் அதை
நீக்கும் பொழுதுபோக்கும்!
சேவியர்

Wednesday, February 8, 2012

கறுப்பு தாஜ்மஹால்


தாஜ்மஹால் என்றாலே அதன் வெண்ணிறம்தான் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால் கறுப்பு நிற தாஜ்மஹால் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஷாஜகான் நினைத்தார்.

தாஜ்மகாலை இந்திய மற்றும் ஆசிய தொழிலாளர்கள் 20 ஆயிரம் பேர் சேர்த்து உருவாக்கினார்கள். தாஜ்மஹாலின் அழகு வேலைகளை அஸ்டின் டி போர்க்டெக் என்ற பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவரும், வெரோனியா என்ற வெனிஸ் நகரை சேர்ந்தவரும் செய்தனர். தாஜ் மஹாலின் உயரம் 137 அடி. இதில் குர்-ஆனின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

பேரரசர் ஷாஜஹானுக்கு நிறைவேறாத ஆசை ஒன்றும் இருந்தது. அது தனது மனைவி மும்தாஜுக்கு வெள்ளை பளிங்கு கல்லில் சமாதி எழுப்பியதுபோல் தான் இறந்தபின் தனகென்று ஒரு சமாதி கட்ட நினைத்தார். யமுனை நதியின் மறுகரையில் தாஜ்மஹாலின் அச்சு அசலாக கறுப்பு பளிங்கு கற்களை கொண்டு அது கட்டப்பட வேண்டும், மேலும் அந்த இரு சமாதிகளையும் ஆற்றின் குறுக்கே வெள்ளியால் ஒரு பாலம் கட்டி இணைக்க வேண்டும் என்றும் நினைத்தார்.

அது மட்டுமல்லாமல் வெண் பளிங்கு கல்லால் ஆன தாஜ்மகாலின் உருவம் கரும் பளிங்கு கல்லால் ஆன தனது சாமாதியில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் விரும்பினார். ஆனால் இதற்கான ஆரம்ப கட்ட   பணிகளை தொடங்கும் முன்னே ஷாஜகான் காலமானார். அவர் நினைத்தபடி கருப்பு தாஜ்மஹால் கட்டப்பட்டிருந்தால் இதன் புகழ் இன்னும் பல மடங்கு கூடியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினார்கள்.

தாஜ்மஹாலுக்கு ஒருமுறை யுத்தபயம் வந்தது. 1971-ல் இந்தியா, பாகிஸ்தான் போரின்போது தாஜ்மகால் மூடப்பட்டது. என்னதான் இஸ்லாமியர்களின் புனித குர்-ஆனின் வாசகங்கள் தாஜ்மஹாலில் பொறிக்கப்பட்டிருந்தாலும், அதை தாக்கப்போவதாக தகவல் வந்ததும் இந்திய ராணுவம் விரைந்து செயல்பட்டது. தாஜ்மஹாலில் இருந்து பிரதிபலிக்கப்படும் ஒளி பாகிஸ்தானிய போர்விமானங்களை தாஜ்மஹால் பக்கம் திருப்பிவிடும் என்பதால், பிரம்மாண்டமான அந்த தாஜ்மஹாலை செடி, கோடி, மலர்கள் கொண்டு வெண்மை நிறம் சிறிதும் தெரியாதபடி மூடிவிட்டார்கள். போர் முடியும்வரை எதிரிகளின் பார்வையில் பட்டுவிடாதபடி தாஜ்மஹாலை மறைத்து வைத்திருந்து காப்பாற்றினார்கள். இப்படி சூழ்நிலைக்கு ஏற்ப கட்டிடத்தின் தோற்றத்தை மாற்றுவதை 'காமொபிலேஜ்' என்று கூறுவார்கள்.

 பீபிகா மாக்பெர்ரா

தாஜ்மஹாலில் கூட போலி தாஜ்மஹால் உண்டு. அவுரங்காபாத்தில் அவுரங்கசீப் ஒரு கட்டடத்தை கட்டினார். அது தாஜ்மஹாலின் ஜெராக்ஸ் போல் அப்படியே இருந்தது. அந்த கட்டடத்திற்கு பெயர் 'பீபிகா மாக்பெர்ரா' என்பது. ஆனால், யாரும் அந்த பெயரை சொல்லி அழைப்பதில்லை. இதை டூப்ளிகெட் தாஜ்மஹால் என்றே சொல்லுகிறார்கள். 'உலகை ஆண்ட மன்னனுக்கும் நிறைவேறாத ஆசைகள் உண்டு'.

Saturday, February 4, 2012

பகிர்தல் பழகு!

அன்னை தெரசாவின் வீட்டுக்கு அருகே ஏழைக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அவர்கள் சாப்பிட்டே பல நாட்கள் ஆகியிருந்தன. இளகிய மனம் கொண்ட அன்னை தெரசா அவர்களுடைய வறுமையை அறிந்தபோது மனம் வருந்தினார். கொஞ்சம் அரிசியை எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்கு விரைந்தார்.

அந்த வீட்டுப் பெண்மணியிடம் அரிசியைக் கொடுத்து பசியாற்றிக் கொள்ளச் சொன்னார். அந்தப் பெண்மணியின் கண்களில் ஆனந்த மின்னல். அடுத்த வினாடியே அந்த அரிசியில் பாதியை இன்னொரு பையில் அள்ளிக் கொண்டு வெளியே ஓடினார் அந்தப் பெண்மணி. சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அந்தப் பெண்மணியிடம் தெரசா கேட்டார்.

'அத்தனை அவசரமாய் எங்கே போனீர்கள்?'

அந்தப் பெண்மணி மூச்சிரைத்துக் கொண்டே சொன்னார், 'பக்கத்தில் இன்னொரு வீடு இருக்கிறது. அவர்களும் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அவர்களும் சாப்பிடட்டுமே என்று அந்த அரிசியைக் கொண்டு போய் கொடுத்தேன்'.

அன்னை தெரசா நெகிழ்ந்தார், அந்தப் பெண்மணியின் இளகிய மனதைக் கண்டு வியந்தார்.

பகிர்தல் ஓர் அற்புதமான மனித நேயப் பண்பு. மனதில் ஒளிந்திருக்கும் அன்பின் வெளிப்பாடு பகிர்தலில் வெளிப்படும். ஆனால் அந்த பண்பை ஊட்டி வளர்ப்பதில் பெரும்பாலானவர்கள் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் சோகம்.

'தனக்கு மிஞ்சியதுதான் தானம்', 'ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்' என்றெல்லாம் உலவுகின்ற பழமொழிகள் உண்மையில் பகிர்தலின் அர்த்தத்தையே அழித்து விடுகின்றன. தனது தேவைக்கும் அதிகமாக, உபரியாய் இருப்பதை மட்டுமே பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஒரு தவறான பாடத்தை இத்தகைய 'கிழமொழிகள்' நமக்குச் சொல்லித் தருகின்றன.

முதலாவது, பகிர்தல் என்பது பொருள் சார்ந்த விஷயமே கிடையாது. அது நமது மனம் சார்ந்த விஷயம். பட்டினியின் விளிம்பில் கிடந்தாலும் பகிரும் மனப்பான்மையுடன் இருக்கலாம் அல்லது சுவிஸ் பேங்கில் பணத்தைப் போட்டும் சுயநலத்துடன் திரியலாம். எல்லாம் நமது மனதில்தான் இருக்கிறது.

அழிந்து வரும் உயிரினங்களைப் போல இன்றைக்கு பகிர்தலைப் பேணும் மனிதர்கள் அருகிவிட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக காணக்கிடைக்கும் மனிதர்களைத் தவிர்த்துப் பார்த்தால் பலர் தங்களுக்காகவும், தங்கள் குடும்பம் அல்லது உறவுகளுக்காகவும் மட்டுமே வாழ்கிறார்கள். சொல்லப் போனால் பாதிப் பேர் தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளையே கூட கண்டுகொள்வதில்லை என்பது துயரத்தின் உச்சம்.

அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சிறு வயதில் தரப்படும் போதனைகள் அதில் ஒன்று. ஒரு குழந்தையின் மனதில் உருவாக்கப்படுகின்ற மதிப்பீடுகளுக்கு ரொம்பவே வலிமை அதிகம். பெரும்பாலும் நாம் பிள்ளைகளை டாக்டர் ஆக்க வேண்டும் என்றே ஆர்வம் காட்டுவோம். அந்த ஆர்வத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியைக் கூட அவனை ஓர் இளகிய மனம் படைத்த மனிதனாக்க வேண்டும் என்பதில் காட்டுவதில்லை.

'சேச்சே.. நான் அப்படியில்லேப்பா!' என நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு சின்ன சோதனை!

உங்கள் குழந்தையிடம் பத்து ரூபாய் கொடுத்து ஒரு பொருள் வாங்கி வரச் சொல்கிறீர்கள். போகும் வழியில் எதிர்ப்படும் ஏழைக்கு அந்த பத்து ரூபாயை அவன் கொடுக்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அந்தக் குழந்தையின் ஈகைக் குணத்தைப் பாராட்டுவீர்களா? அல்லது இதெல்லாம் தப்பு என கண்டிப்பீர்களா?

முல்லைக்குத் தேர்கொடுக்கும் பாரியும், மயிலுக்கு போர்வை கொடுக்கும் பேகனும் நமக்கு வெறும் வரலாற்றுக் கதைகள் மட்டும்தானா? உங்கள் மகன் தன்னிடமிருக்கும் ஒரு விலையுயர்ந்த பொருளை நண்பனின் தேவைக்காய் கொடுத்தால் பாராட்டுவீர்களா? இப்போது சொல்லுங்கள்!

பகிர்தல் பதியம் போடப்பட வேண்டிய பருவம்- பால்யம்! சின்னச் சின்ன விளையாட்டுப் பொருட்களை பிறரோடு பகிர்ந்து கொள்வதிலேயே இது ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் எப்போதெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களை மனம் திறந்து பாராட்ட வேண்டும்.

குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என்றெல்லாம் பேசுவதை விட, பகிர்தல், அன்பு, உறவுகள் போன்ற உயரிய கொள்கைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். டோராவும், பவர் ரேஞ்சர்களும் கொஞ்சம் ஒதுங்கியே இருக்கட்டும். சின்ன வயதில் விதைக்கும் பகிர்தல் விதை, முதுமை வயதில் கூட தழைத்து வளரும்.


கனடாவில் ஆலன்- வயலட் லார்ஜ் என்ற ஒரு முதிய தம்பதியர் வசிக்கிறார்கள். சமீபத்தில் அவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது! நிஜமாகவே ஜாக்பாட். லாட்டரியில் 11.2 மில்லியன் டாலர்கள். தோராயமாய் கணக்குப் போட்டுப் பார்த்தால் 55 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். விஷயத்தைக் கேள்விப்பட்டபோது அவர்கள் சிலிர்த்தார்கள்.

ஆனால் அவர்களுடைய மனம் அந்த லாட்டரிப் பணத்தை விட வெகு விசாலமாய் இருந்தது. 'இந்த பரிசுத் தொகையை முழுமையாய் ஏழைகளுக்கே அளிக்கிறோம்' என்று அவர்கள் அறிவித்தனர். உலகமே வியந்தது. மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை, காப்பகங்கள் என பல இடங்களுக்கு இந்தப் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது!

ஆனந்தம் என்பது தனக்காக வைத்துக் கொள்வதிலல்ல, பகிர்தலில் என்பதைப் புரிந்து கொண்டதுதான் அந்த தம்பதியரின் வெற்றி. அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் ஆனந்தத்தின் வீதிகளில் இளைப்பாறும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

பகிர்தல் எப்போதும் பொருளாதாரம் சார்ந்ததாய் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு நல்ல ஆலோசனை, ஓர் ஆறுதலான வார்த்தை என எதுவாகவும் இருக்கலாம். ரொம்ப சோர்வாக இருக்கும் உங்கள் நண்பருக்கு ஒரு சின்ன புன்னகையை அளிப்பதில் கூட பகிர்தலின் சுகம் இருக்கிறது.

பகிர்தல் என்பது பூமராங் போல! அதை நாம் செய்யச் செய்ய அது நம்மைத் தேடி வந்து கொண்டே இருக்கும். ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி பகிர்தலை மனதுக்குள் எழுதிக் கொள்ள வேண்டும். பகிர்தல் அன்பின் வெளிப்படாக இருக்க வேண்டுமே தவிர அது ஒரு கட்டாய நிகழ்வாய் இருக்கக் கூடாது. பகிர்தலை பழகிக் கொண்டவர்கள் மன அழுத்தம் அடைவதில்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

அமெரிக்காவின் ஆரிகன் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி நடத்தினார்கள். ஹார்வர்டு பேராசிரியர் மைக்கேன் நார்டன், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக எலிசபெத் டன் மற்றும் லாரா அக்கின் இதை நடத்தினார்கள். `பிறருக்குக் கொடுக்கும்போது நமது உடலில் ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. மூளை சுறுசுறுப்பாகிறது. மனம் ஆனந்தமடைகிறது' என இந்த ஆராய்ச்சி முடிவு வெளியிட்டது.

வெல்லெஸ்லி பல்கலைக்கழக பால் விங்க் தனது ஆராய்ச்சியில் `பரந்த மனப்பான்மை உடையவர்கள் உடலளவிலும், மனதளவிலும் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் இருப்பார்கள்' என்கிறார்.

இப்போது சொல்லுங்கள், கொடுப்பதால் பயன் பெறுவது கொடுப்பவர்களும்தானே?

பகிர வேண்டும் எனும் மனம் நமக்குள் இருக்கும் போது வாய்ப்புகள் எப்போதும் நமது கண்களுக்கு முன்னால் தெரியும். பேருந்தில் பயணம் செய்யும் போது உங்கள் இருக்கையை இன்னொருவருக்குக் கொடுப்பதில் ஆகலாம். உங்கள் வாகனத்தை இன்னொருவரின் தேவைக்கு பகிர்வதில் ஆகலாம். இப்படி, நீங்கள் வாய்ப்புகளைக் கண்டறிந்துப் பயன்படுத்தப் பயன்படுத்த உங்களுக்குள் பகிர்தல் இயல்பு வேர்விட்டு வளரும்.

அவ்வப்போது ஏதேனும் கசப்பான நிகழ்வுகள் நேரலாம். அதை ஒரு தடைக்கல்லாக வைத்துக் கொண்டு பகிர்தல் குணத்தை மூட்டை கட்டி மூலையில் போடாதீர்கள்.

வீண் செலவு செய்யும் ஓட்டைக் கை ஆசாமிகள் வீணாய் செலவிடும் பணத்தை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்திப் பாருங்கள். கொடுப்பதில் கிடைக்கும் ஆனந்தம், சும்மா செலவிடுவதில் இல்லை என்பதை உணர்வீர்கள். அதிக பணம் கொடுத்து வாங்கி வீட்டில் சும்மா இருக்கும் ஒரு பொருள் உங்களை மன அழுத்தத்தில் தள்ளும். ஆனால் ஒருவருடைய தேவைக்கு அளிக்கும் பணம் எப்போதுமே மனதை உற்சாகப்படுத்தும்!

இளைஞர்கள் நாட்டின் குருதிக் குழாய்கள். உங்களிடையே பகிர்தல் வேகம் பரவுகையில் ஒரு தேசமே வளம் பெறும். உங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பகிர்தல் சிந்தனையை உருவாக்க முயலுங்கள். சமூக மாற்றத்துக்கான உங்களுடைய பங்களிப்பாகவும் அது அமையும்.

ஒரே ஒரு தீக்குச்சியின் உரசலில் உருவாகும் நெருப்பு, ஒரு மெழுகுவர்த்திக்குத் தாவி, பின் இன்னொன்றுக்குத் தாவி, ஆயிரக்கணக்கான வெளிச்சப் புள்ளிகளுக்கு விதையாகும். நல்ல செயல்களும் அப்படியே! அவை நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும்!

'உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க முடியா விட்டால் பரவாயில்லை, ஒருவருக்குக் கொடு' என்கிறார் அன்னை தெரசா!

கொடுங்கள்! எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல. எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம். ஒவ்வோர் பகிர்தலிலும் அடி நாதமாய் அன்பு இருக்க வேண்டும். நம்முடைய மகிழ்ச்சியை விட அடுத்தவருடைய மகிழ்ச்சி நமக்கு முக்கியமானதாய் தோன்றும்போது நமக்குள் பகிர்தல் பெருங்கடலாய் விரியும்.

பல நேரங்களில் நமக்கு அந்த மனநிலை வருவதில்லை. 'இந்த நிலமைக்குக் காரணம் நீதான்', 'அப்பவே சொன்னேன் நீதான் கேக்கல', 'உனக்கு அந்தத் தகுதி இல்லை' இப்படி ஏதாவது ஒரு சாக்குப் போக்குக்குப் பின்னால் நம்முடைய கல் மனதை ஒளித்து வைக்கிறோம்! 'அருகதையற்ற நபர்' என ஒருவரை நாம் எந்த சூழலிலும் தீர்ப்பிடவே கூடாது! பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டிய அவசியம் இல்லை. தேவை அறிந்து உதவினால் போதும்!

இருப்பதில் கொடுப்பது பகிர்தலின் துவக்கம்.. இருப்பதெல்லாம் கொடுப்பது பகிர்தலின் சிகரம். இல்லாததைக் கூட கொடுக்கலாம் என்பது பகிர்தலின் மகத்துவம்! பகிர்தலில் நாம் உலகிற்கு முன்னோடி! வயலில் விதைத்த விதை நெல்லையே பொறுக்கி வந்து, அடைக்கலமாய் வந்தவருக்கு உண்ணக் கொடுத்த பகிர்தலின் வரலாறு நமக்கு இருக்கிறது!

பகிர்வோம், வளர்வோம்!

அன்பே பகிர்தலின் அச்சாணி
அதுவே வாழ்வின் உச்சாணி!

ஒரு மனிதனின் மரணம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தோழர்களில் ஒருவரான தோழர்.எஸ்.ராஜகோபால் (வயது 60) இலங்கையிலுள்ள பண்டாரவளையில் மாரடைப்பால் காலமானார். தோழர் ராஜகோபால் அவர்கள் எம்.ஜி.ஆர்.நகரின் வளர்ச்சியிலும் அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கும் தொடர்ந்து உழைத்தவர். எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் பயணிகள் நிழற்குடைகள் முழுக்க முழுக்க ராஜாகோபால் அவர்களின் முயற்சியால் உருவானது. திருவள்ளுவர் பெயயரில் அச்சகம் நடத்தி பல பயனுள்ள வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்த வேளைகளில் அரசியல் ரீதியான கலந்துரையாடல்களில் கலந்துக் கொண்டு பல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதுடன், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.  2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 130 வது வார்டில் வேட்பாளாராகப் போட்டியிட்ட தோழர் ராஜகோபால்,  இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF), இந்தியப் பெருங்கடல் அமைதிப் பேரியக்கம் (IMPIO), திருவள்ளுவர் நற்பணி மன்றம் போன்ற அமைப்புகளில் பொறுப்புத் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர். 2003 ஆம் ஆண்டு தன் மனைவி அன்பரசியின் சொந்த நாடான இலங்கைக்குப் புலம்பெயர்ந்து  இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாழுகின்ற  பண்டாரவளையில் வாழ்ந்து வந்ததுடன், இந்திய வம்சாவழித் தமிழர்களின் மேம்பாட்டிற்காக உழைத்தும் வந்தார். அங்கு இலங்கை தங்க நகைத் தொழிலாளர்கள் நல உரிமைச் சங்கத்தின் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். தோழரின் மறைவிற்கு உளறுவாயன் குடும்பம் தனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறது.

இனிய தோழனே
உனது உழைப்பு உயர்ந்தது
உனது சிந்தனை சிறந்தது
உனது நியாயம் நிஜமானது
அதனால்...
உனது வாழ்க்கை தொடர்கதையானது !

Wednesday, February 1, 2012

தெரிந்துகொள்ள சில...

ராஜாஜியின் உத்தி!

ஒரு தடவை ராஜாஜியும், அவருடைய நண்பரான கே.ஜி. வெங்கட சுப்பையரும் ஒரு சமூக சீர்திருத்தக் கூட்டத்துக்குப் போயிருந்தனர்.

வெங்கட சுப்பையர் சேலத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர். அத்துறைக்கு வருவதற்கு முன் கிறிஸ்தவக் கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அவர் அப்பதவியில் இருந்து விலகும்போது மாணவர்கள் அவருக்கு ஒரு தேநீர் விருந்து அளித்து நினைவுப் பரிசாக ஒரு கைக்கடிகாரத்தை வழங்கினர்.

அந்தக் கடிகாரத்தை அவர் மிகுந்த கவனத்தோடு பாதுகாத்து வந்தார். அதன் மீது வெங்கட சுப்பையருக்கு ஒரு தனிப் பாசமே உண்டு.

சமூக சீர்திருத்தக் கூட்டம் முடிந்து ராஜாஜியும், வெங்கட சுப்பையரும் ரெயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரவு நேரம். சுப்பையரின் கையில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரம் தவறி, ரெயில் பெட்டிக்கு வெளியே தண்டவாளத்தின் அருகில் விழுந்து விட்டது.

"ஐயய்யோ... கடிகாரம் வெளியே விழுந்துவிட்டதே!'' என்று சுப்பையர் பதறினார். கடிகாரத்தின் மீது அவருக்கு அவ்வளவு பற்றுதல்.

உடனே ராஜாஜி பெட்டியிலிருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து ரெயில் பாதையின் அருகே உள்ள தந்திக் கம்பங்களை எண்ணிக் கொண்டே வந்தார்.

ராஜாஜி வெளியே பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

அடுத்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றதும் ராஜாஜி ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்தார்.

'இத்தனை தந்திக் கம்பங்களுக்கு அப்பால் எங்களில் ஒருவருடைய கைக் கடிகாரம் தவறி தண்டவாளத்தின் அருகே விழுந்துவிட்டது. உங்கள் ஆட்களில் யாரையாவது அனுப்பி தேடிக் கண்டுபிடித்து நான் சொல்லும் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அனுப்பியதற்கான செலவுடன் ஒரு நல்ல தொகையை அன்பளிப்பாக அனுப்புகிறோம்' என்று கூறினார்.

அதே மாதிரி சில நாட்கள் கழித்து ஒருநாள் வெங்கட சுப்பையருக்கு கடிகாரம் வந்து சேர்ந்தது.

அவர் பெருமகிழ்ச்சி அடைந்ததுடன், ராஜாஜியின் மதிநுட்பத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.
 
******************************************
 
படுத்தபடி எழுதியவர்!

புகழ்பெற்ற கவிஞரான மில்டன் படுத்துக்கொண்டேதான் எழுதுவார். கடைசிக் காலத்தில் அவருக்கு வயதாகி, கண் பார்வை குறைந்த நிலையில் 'பாரடைஸ் லாஸ்ட்' என்ற ஒப்பற்ற காவியத்தை மில்டன் சொல்லச் சொல்ல, அவரது மகள் எழுதி முடித்தார்.

******************************************
 
திருமண கேக்!

பல திருமணச் சடங்குகளின் பின்னணியாக, குலத்தைத் தழைக்கச் செய்வது என்ற கருத்து உள்ளது. திருமண கேக்குக்கும் அது பொருந்தும். கோதுமை, பார்லியில் செய்த சிறு கேக்குகளை ரோமாபுரியினர் மணப்பெண்ணின் தலையில் உடைப்பதில் இருந்து இவை தொடங்கியுள்ளன. (நம்மூர் திருமணங்களில் மணமக்கள் தலையில் அப்பளம் உடைக்கப்படுவது போல!).

இன்று நாம் உபயோகிக்கும் வெண்ணிற 'ஐசிங்'கோடு கூடிய மூன்றடுக்கு கேக், இரண்டாம் சார்லஸ் காலத்தில் அறிமுகமானது. லண்டனில் உள்ள செயின்ட் பினாட் சர்ச்சின் கூரான கோபுரத்தின் வடிவில் கேக்குகள் செய்யப்படுகின்றன.

மணமக்கள் இணைந்து கேக்கின் முதல் துண்டை வெட்டுகிறார்கள். எதிர்காலம் எதைக் கொடுத்தாலும் இருவருமாகச் சேர்ந்து அதைப் பகிர்ந்துகொள்வது என்பதை இது குறிக்கிறது.

******************************************

சேணம் பூட்டிய ஆளற்ற குதிரை!

போர் வீரரின் இறுதி யாத்திரையில் ஆளற்ற குதிரை பங்கேற்பது ரோமாபுரி மக்களின் மிகப் பழமையான பழக்கம். ஒரு போர் வீரனுக்கும், அவனுடைய குதிரைக்கும் ஒன்றாகவே யுத்தப் பயிற்சி அளிக்கப்படும். அந்த வீரனைத் தவிர வேறு யாரையும் அந்தக் குதிரை தனது எஜமானனாக ஏற்காது.

ஓய்வெடுப்பதற்காக ஒரு போர் வீரன் படையிலிருந்து விலகினால், அவனுடைய குதிரையும் நீங்கிவிடும். அதேபோல, போரில் அந்த வீரன் இறந்தால், இடுகாடு வரைக்கும் அந்தக் குதிரை சவப்பெட்டியைத் தொடர்ந்து செல்லும். எஜமானனுடன் அந்தக் குதிரையும் புதைக்கப்படும்.

மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கையை நோக்கி இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். காலியான பூட்ஸை கால் வைக்கும் வளையத்தில் வைப்பது பின்னாளில் வந்த வழக்கம். அந்தக் குதிரையின் மீது வேறு யாரும் ஏறிச் சவாரி செய்ய முடியாது என்பதை அது குறிக்கிறது. தற்போது இது வெறும் சடங்காக மட்டும் உள்ளது. இறந்தவருடன், குதிரையைப் புதைப்பதில்லை.