Tuesday, January 31, 2012

கவிதைச்சரம்

மறைமுறை

அன்பு தெரிவிக்கும் பொருட்டு
நீட்டப்படும் கைகளை
நன்றாகவே பற்றிக்
குலுக்கலாம் நீங்கள்.
மலர்ந்த முகத்தோடு பிரியும்
மற்றொரு சந்திப்பு
மறுமுறை வைக்காமலே
மருதலிக்கப்படலாம் இங்கு.

செல்வராஜ் ஜெகதீசன்


**********************************

மௌனத்தின் அர்த்தங்கள்

புது இடம்ல அதான்
என்கிறீர்கள்
அவளின் இயல்பே அப்படித்தான்
என்கிறீர்கள்
ஒரு போது அவளின்
மௌனம் உங்களுக்குப்
புரிந்திடப் போவதில்லை
மௌனம் என்பது
வார்த்தைகளின்றி இருப்பது மட்டுமல்ல
வார்த்தைகள் அடக்கப்பட்டதும்கூட.

ச.சிவசங்கரன்
**********************************
 
மழை வகை

நேற்று பெய்த மழை
ஸ்ருதியினுடையது.
'தண்ணி நூல்' என்று
பெயர் வைத்திருந்தாள்.
இன்றைய மழை
அமுதா பாப்பவினுடையது.
'டம் டம்' என்பது
அதன் பெயர்.
நாளைய மழைக்கு
'ரெயின்' எனப் பெயர்வைத்துக்
காத்திருக்கிறான்
டிச்சாங்கா எனப்படும்
த்ரிஷாங்கன்.
காலங்காலமாக
கனகோடி நூற்றாண்டாக
வையத்தை வாழ்விக்க
பெய்யெனப் பெய்யும்
இந்தப் பெருமழை
புன்னகையோடு
பிள்ளைகள் வைக்கும்
பெயருக்காகவும்
பெய்யுமோ!

சந்த்யா ஸ்வரூபன்


**********************************

வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை

தனித்தலையும் பூனைகளை
மட்டுமே சந்திக்கிறேன்
ஒவ்வொரு முறையும்

தனக்கான புண்களுடன்
தனிக் க்ரூரக் கண்களுடன்
குட்டியை மட்டும் மென்மையாகக்
கவ்வும் கூர் பற்களுடன்

பிறர் முன் பிரசவிக்கச் சீறும்
தனிக் கோபத்துடன்
தலையில் சுமந்தலையும்
சொந்த சிம்மாசனத்துடன்

கூடவே
பாலுக்கு கால் ஈஷும்
நாடகத்தில் தோன்றிவிடுகிறது
எந்தப் பூனையும் பூனை
மட்டுமில்லையென!

லதாமகன் 

Saturday, January 28, 2012

இணைந்து செயல்படு!வாழ்க்கை என்பது ஒரு சங்கமம். இணைந்து வாழ்தலிலும், இணைந்து செயல்படுதலிலும்தான் அதன் முழுமையான அர்த்தம் அடங்கியிருக்கிறது. எந்த ஒரு சின்ன விஷயத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், அது ஒரு கூட்டு விளைவாகவே இருக்கும்.

கூட்டு முயற்சி இல்லாத ஒரு வெற்றியையோ, ஒரு சாதனையையோ கண்டுபிடிப்பது இயலாத காரியம். தனி மனிதச் சாதனைக்குப் பின்னணியில் கூட பலருடைய பங்களிப்பு உண்டு என்பதே நிஜம்.

நாம் சாப்பிடும் சாப்பாடானாலும் சரி, பயன்படுத்தும் வாகனமானாலும் சரி, ஏன் நமது உடல் ஆனாலும் சரி ஒன்றாய் இணைந்த பல விஷயங்கள் அதில் உண்டு. அதனால்தான் 'தனிமரம் தோப்பாகாதுப்பா, சேர்ந்து வாழக் கத்துக்கணும்' என்பார்கள் பெரியவர்கள்.

முன்பெல்லாம் இணைந்து வாழ்வது நமது சமூக வாழ்க்கை முறையாகவே இருந்தது. வீடுகள் கூட்டுக் குடும்பங்களாக இருந்தன. ஏகப்பட்ட உறவுகளோடு இணைந்து வாழும் ஆனந்தமும், வலிமையும் நிறைந்த வாழ்க்கையாய் நமது வாழ்க்கைக் கலாசாரம் இருந்தது.

வேலைகள் கூட கூட்டம் கூட்டமாக வயலிலோ, விளைநிலங்களிலோ இணைந்து வாழும் சூழலையே உருவாக்கியிருந்தன. எனவே இயல்பாகவே மக்களிடம் இணைந்து வாழும் தன்மையும், திறமையும் மிகுந்திருந்தது.

இன்றைக்கு கூட்டு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துக் கொண்டே வருகிறது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுடைய குடும்பத்திலேயே நீங்கள் அதை உணர முடியும். சந்தேகம் இருந்தால் உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என ஓர் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்று பாருங்கள், புரிந்து கொள்வீர்கள்.

இணைந்து வாழ்தல் என்பது தவிர்க்க முடியாதது. தவிர்க்கக் கூடாதது. அலுவலகத்திலும் சரி, குடும்பத்திலும் சரி, நண்பர்களிடையேயானாலும் சரி, அதுவே மனதை வளமாக்கும், வெற்றிகளை வசமாக்கும்.

வாழ்வில் வெற்றிகளை அடைவதற்கு எந்த அளவுக்கு நமது தனிப்பட்ட திறமைகள் முக்கியமோ, அந்த அளவுக்கு நாம் எப்படி ஒரு குழுவாக இயங்குகிறோம் என்பதும் ரொம்ப முக்கியம். எவ்வளவுதான் சிறப்புத் தகுதிகள் உடையவராக இருந்தாலும் குழுவாய் இயங்கத் தெரியாவிட்டால் அவர் நிராகரிக்கப்படுவார்.

அலுவலகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அங்கே வெற்றி என்பது எல்லா ஊழியர்களும் ஒன்றுபட்டு உழைப்பதில்தான் இருக்கிறது. தனிநபர் சாதனைகள் தேவைதான். ஆனால் அவை பிறருடன் இணைந்து ஒட்டுமொத்த வெற்றியாய் மாற வேண்டியது அவசியம்.

சச்சின் தெண்டுல்கரின் சதம் ஒரு சாதனையெனில், அந்த சாதனையோடு மற்ற வீரர்களின் இணைந்த பங்களிப்பே அணியின் வெற்றியாக மாற முடியும்.

லட்சியம்...

ஒரு குழுவாக செயல்படும்போது எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் எனும் புரிதல் மிக மிக முக்கியம். லட்சியமற்ற குழுக்கள் வெற்றிகளை குவிப்பதில்லை. குழுவிலுள்ள அனைவருமே குழுவின் நோக்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியதும், அதை நோக்கிப் பயணிப்பதும்

அவசியம்.இதில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. ஒரு ஒற்றைக் குச்சியை சட்டென உடைத்து விட முடியும். அதே நேரம் ஒரு 'கட்டு'க் குச்சிகளை அவ்வளவு எளிதில் உடைத்து விட முடியாது. குட்டிக் குட்டி மீன்கள் ஒன்றாக இணையும் போது ஒரு பெரிய கப்பலையே புரட்டிப் போடும் என்பார்கள்.

ஆங்கிலத்தில் இதை 'டீம் ஒர்க்' என்று அழைப்பார்கள். நிறுவனங்கள் இத்தகைய டீம் ஒர்க் சூழலை எப்படி மேம்படுத்தலாம் என தலையைப் பிய்த்துக் கொள்வார்கள். அதற்காக ஆண்டுதோறும் பயிற்சிகள், முயற்சிகள் என பல மில்லியன் டாலர்களை அள்ளி வீசுவார்கள். இந்த டீம் ஒர்க் எனும் ஒரு சிந்தனையை முன்வைத்தே ஏகப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன.

அத்தகைய பயிற்சிகளோ, செலவுகளோ இல்லாமல் நீங்கள் டீம் ஒர்க்கில் கில்லாடியாகலாம். சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.

முதலாவது விஷயம் தகவல் பரிமாற்றம். கம்யூனிகேஷன் வலுவாக இருக்கும் இடத்தில்தான் குழுவாக இணைந்து செயல்பட முடியும். ஒரு குழுவில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இடையே முழுமையான தகவல் பரிமாற்றமும், உரையாடல்களும் இருக்க வேண்டியது அவசியம். இது அடிப்படையான விஷயம். இதில் பலவீனம் நேர்ந்தால் குழுப்பணி படுதோல்வியில் முடியும்.

எனவே உங்கள் குழுவினரோடு தங்கு தடையில்லாத, ஒளிவு மறைவில்லாத உரையாடலை வைத்துக் கொள்ளுங்கள். புரியும் விதத்தில் பேசுங்கள். பிறர் பேசுகையில் அது உங்களுக்கு புரிகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கேளுங்கள்...

கவனமாய்க் கேட்பது குழு உரையாடலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. அடுத்த நபருடைய ஐடியாக்களைக் கேட்பதும், அவர்களுடைய கருத்துக்களைக் கேட்பதும் குழு உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகள்.

கருத்து வேற்றுமைகளை களைவது அடுத்த முக்கியமான விஷயம். கருத்து வேற்றுமைகள் இல்லாத ஒரு குழு இருக்க முடியாது. கருத்து வேற்றுமைகளை திறமையாகக் கையாளும் குழுவே வெற்றிகரமான குழு. நீங்கள் ஒரு குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கான மிக முக்கியமான குணமும் அதுதான். ஈகோவை களைந்து விட்டு கருத்து வேற்றுமைகளை சரிசெய்யும் வழியை உருவாக்குங்கள்.

ஒரு குழுவின் வெற்றியே வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்கும் அதன் நுணுக்கத்தில்தான் இருக்கிறது. பல வடிவங்களில் இருக்கும் விரல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கரமாக வலிமை பெறுவது போல, பல இசைக்கருவிகள் சேர்ந்து ஒரு சிம்பொனியை உருவாக்குவது போல் வேற்றுமைகள் ஒன்றாகும்போது ஒரு குழு வலிமை பெறுகிறது.

ஒருவருக்கொருவர் ஊக்கமூட்ட வேண்டியது குழுவாய் பயணிக்க வேண்டியதன் இன்னொரு முக்கியத் தேவை. மறைந்து கிடக்கும் திறமைகளை தோண்டி எடுக்கவும், அவற்றைக் கொண்டு குழுவின் வலிமையை அதிகரிக்கச் செய்யவும் ஊக்கமூட்டுதல் உதவும்.

அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்குவதும், உள்ளுக்குள்ளே பாரபட்சமின்றி செயல்பட வேண்டியதும் அடிப்படை விஷயங்கள். அதில் தவறினால் வெற்றியின் கதவுகள் இறுக்கமாய் அடையும்.

வானத்தில் பறவைகள் கூட்டமாகப் பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? குழுவாக இணைந்து பணியாற்றுவதன் அட்டகாசமான உதாரணமாக அதைச் சொல்கின்றனர் வல்லுனர் கள்.

மேலை நாடுகளில் 'கூஸ்' எனப்படும் வாத்து போன்ற பறவைகள் உண்டு. அவை குழுவாய்ப் பறக்கும் நிகழ்வைக் கொண்டு 'டீம் ஒர்க்'குக்கான பல்வேறு பாடங்களை இவர்கள் வடிவமைத்திருக்கின்றனர்.

இவை வானத்தில் குழுவாகப் பறக்கும் போது 'ய' வடிவத்தில் பறக்கும். தனித் தனியே பறப்பதை விட 71 சதவீதம் அதிக தூரத்தை ஒரு குழுவாகப் பறக்கும்போது அவை கடக்கின்றன!

முன்னால் செல்லும் பறவை சோர்வடையும்போது இன்னொரு பறவை சட்டென அந்த முதல் இடத்துக்கு வந்து விடுகிறது. சோர்வடையும் பறவை பின்னால் செல்கிறது. இதனால் அதிக வீரியமாய் சிறகசைக்க வேண்டிய தேவையில்லாமல் போகிறது. குழுவின் முன்னேற்றமும் தடைபடுவதில்லை.

ஒரு பறவை நழுவி விழுகின்றபோது மற்ற பறவைகளின் சிறகசைக்கும் வேகத்தில் அந்தப் பறவை மேலிழுக்கப்படுகிறது.

குழுவாகப் பறக்கும் பறவைகள் தலைமையேற்கும் பறவையை பாராட்டி, தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் பறக்க தூண்டுகின்றன.

ஒருவேளை ஒரு பறவை காயமடைந்தோ, சோர்வடைந்தோ கீழே விழுந்தால் அந்த குழுவிலிருந்து மேலும் இரண்டு பறவைகள் பிரிந்து அதற்கு உதவ முயல்கின்றன. கீழே விழுந்த பறவை திரும்பவும் பறக்கும் வரை அவை கூடவே இருக்கின்றன. பறக்கும் வலிமை வந்ததும் ஒரு புதிய ய வடிவ குழுவாய் பறந்து போகின்றன அல்லது பழைய குழுவை அடைகின்றன. ஒருவேளை விழுந்த பறவையால் பறக்க முடியாமல் போனால் அந்தப் பறவை இறக்கும் வரை இரண்டு பறவைகளும் கூடவே இருக்கின்றன!

இந்த பறத்தலின் ஒவ்வொரு நிகழ்வும் குழுவாய்ச் செயல்படுவதற்கான சூட்சுமங்களை நமக்குக் கற்றுத் தருகின்றன. குழுவாய் இணைகையில் அதிக வெற்றி எனும் பாடமும், குழு உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் எனும் வழிகாட்டுதலும் இதன் மூலம் கற்பிக்கப்படுகிறது.

தனியாக இருக்கும் போது நாம் ஒரு துளி, ஒன்றாய் இணைந்தால் கடல்! எல்லோருமே இணைந்து ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது, வெற்றி தானே வந்து சேர்கிறது என்கிறார் ஹென்றி போர்டு.

குழுவிலுள்ள ஒவ்வொருவருடைய தனி விருப்பமும், குழுவின் விருப்பமும் இணைந்தே பயணிக்க வேண்டும். தனி மனிதனுடைய வளர்ச்சியை கவனிக்காத குழு தனிமனிதர்களுடைய ஆர்வத்தைக் குறைத்து விடும். ஆர்வம் குறைந்த உறுப்பினர்கள் நல்ல குழுவை அமைப்பதில்லை.

தனி மனிதத் திறமைகளை வளர்த்துக் கொள்வதும், பின்னர் குழுவாக இணைந்து அந்தத் திறமைகளைப் பயன்படுத்துவதுமே வாழ்வின் வெற்றிக்கான இரண்டு மந்திரங்கள்.

வண்ணங்களின் இணைதலே
வானவில்லின் வசீகரம்!

சேவியர்

Saturday, January 7, 2012

தாழ்மையே வெல்லும்

இன்றைக்கு உலகத்தில் நிலவுகின்ற பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு மூன்றெழுத்து மந்திரம் உண்டு.

அந்த மந்திரம்- 'தாழ்மை'.

தாழ்மை என்பதைப் பற்றி பலரும் பலவிதமாக நினைக்கிறார்கள். தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது சுய பச்சாதாபம் அல்ல. தாழ்மை என்பது சுய கல்லறையும் அல்ல.

அப்படின்னா தாழ்மைதான் என்ன?

தாழ்மை என்பது 'பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்' என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது.

நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவதே தாழ்மை என சிலர் தவறாகக் கருதிக் கொள்கிறார்கள்.

தாழ்மை என்பது நமது திறமைகளை அடக்குவதல்ல. 'நான்' என்கின்ற சிந்தனையை அடக்குவதே.

'நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டுமெனில், தாழ்மையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்' என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.

தாழ்மையைப் பற்றிப் போதிக்காத தலைவர்களோ, மதங்களோ இல்லை. ஆனால் தாழ்மை என்றதும் நமக்கு நிறைய பெயர்கள் நினைவில் வரவில்லையே ஏன்?

உண்மையான தாழ்மை விளம்பரங்களை விரும்பாது. உண்மையாய் தாழ்மை உடையவன், தான் தாழ்மையாய் இருக்கிறோம் எனும் உணர்வே இல்லாமல் இருப்பான். அதை தனது இயல்பாக ஆக்கிக் கொள்வான். அதனால் தான் தாழ்மையில் சிறந்தவர்கள் எனும் பட்டியல் பெரிதாக இல்லை.

இரண்டு வகையான தாழ்மை மனிதர்கள் உண்டு. விட்டு விடுதலையாகிய தாழ்மை நிலை ஒன்று. மலைகளில் துறவிகளாகவோ, கோவில் வாசலில் பரதேசிகளாகவோ இருப்பவர்கள் ஒரு வகை. இவர்கள் பற்றற்ற நிலையில் தாழ்மையை உடுத்தி தன்னையே வெறுத்து நடப்பவர்கள்.

இன்னொரு வகை, தினசரி வாழ்க்கையின் பரபரப்புக்கு இடையில், தினசரிக் கடமைகளை ஆற்றிக் கொண்டு தாழ்மை மனதுடன் நடப்பவர்கள். இதுவே மிகவும் கடினமானது. இதில்தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.

நமக்கு மதங்களோடு இருக்கும் பரிச்சயத்தைப் போல உலகத்தில் வேறு யாருக்காவது இருக்குமா என்பது சந்தேகமே. அந்த மதங்கள் எல்லாமே தாழ்மையை ஆழமாய்ப் போதிக்கின்றன என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

'தங்களது பிரார்த்தனையில் தாழ்மையாய் இருக்கும் மக்களையே வெற்றிகள் வந்து சேரும்' என்கிறது இஸ்லாம்.

'கடவுளுக்கு முன்பாக தனது ஒன்றுமில்லாமையைக் குறித்து அழுது புலம்பி வேண்டினால் கடவுளைக் காணலாம்' என்கிறது அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் மதம்.

'தாழ்மையாய் இருங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள், நேர்மையாய் இருங்கள், குருவுக்கு முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள், தன்னலத்தை விட்டொழியுங்கள்' என உயரிய கோட்பாடுகளைக் காட்டுகிறது பகவத் கீதை.

'கர்வத்தைத் தாழ்மையால் வெல்லுங்கள்' என்கிறது சமண மதம்.


இயேசுவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி வரும். தனது மரணத்துக்கு முந்தைய நாள் இரவில் தனது பன்னிரண்டு சீடர்களுடன் இயேசு உணவு அருந்த வருகிறார். பந்தியில் வந்ததும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, இடுப்பிலே ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு சீடர்களுடைய பாதங்களைத் தண்ணீரால் கழுவி, துண்டால் துடைத்தார்.

சீடர்கள் பதற்றப்பட்டார்கள். அந்தக் காலத்தில் பாதங்களைக் கழுவுவதோ, பாதங்களைக் கழுவத் தண்ணீர் ஊற்றுவதோ அடிமைகளின் பணி. அந்த பணியைப் பணிவுடன் செய்தார் இயேசு. அந்த பன்னிரண்டு பேரில் யூதாஸும் ஒருவன். தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பதை அறிந்திருந்தும் இயேசு அவனுடைய பாதங்களையும் கழுவினார்.

தாழ்மை என்பது அடுத்தவர்களை உயர்வாய் கருதுவதில் வருகிறது. தனது வாழ்நாள் முழுதும் பணிவைப் போதித்த இயேசு, பணிவு என்பது செயல்களில் வெளிப்பட வேண்டும் என செயல்களிலும் அதைச் செய்து காட்டினார்.

இப்படி எல்லா மதங்களும் போட்டி போட்டுக் கொண்டு கற்பிக்கும் தாழ்மை மட்டும் நமது மனதில் இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற ஏறக் குறைய எல்லா பிரச்சினைகளையும் சுலபமாய் வென்று விடலாம் என்பதே உண்மை.

சந்தேகமாய் இருந்தால் கொஞ்சம் ஆற அமர கடந்த வாரம் நடந்த பிரச்சினைகள், சண்டைகள், மன வருத்தங்கள் போன்றவற்றை அசை போடுங்கள். அந்த சூழலில் நீங்கள் இன்னும் கொஞ்சம் தாழ்மையாய் இருந்திருந்தால் விளைவு எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

நாம் நம்மை மையப்படுத்தியே அனைத்தையும் செய்வோம். அல்லது நமது பார்வையிலிருந்தே அனைத்தையும் எடை போடுவோம். அதைக் கொஞ்சம் மாற்றி பிறருடைய பார்வையிலிருந்து அனைத்தையும் எடைபோடுவதில் தாழ்மை தழைக்கிறது.

குறிப்பாக குடும்ப உறவுகளிடையே தாழ்மையுடன் இருப்பது வலுவான குடும்ப வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும். குடும்ப உறவினர்களின் சின்னச் சின்ன வெற்றிகளிலும், நிகழ்வுகளிலும் மகிழ்ச்சி அடைவதும், அவர்களுக்கு எதிர்பார்ப்பற்ற அன்பை வழங்குவதும் தாழ்மையின் பக்கங்கள்.

தாழ்மையினால் பலவற்றை இழந்து விடுவோமோ எனும் அச்சம் பலருக்கும் உண்டு. உண்மையில் தாழ்மையினால் எதையும் நாம் இழப்பதில்லை. ஒரு பாறையைச் செதுக்கி சிற்பமாக்கும் போது பாறைத் துணுக்குகள் உடைந்து சிதறும். அந்தச் சிதைவுகள் பாறைக்கு இழப்பல்ல. சிற்பமாய் உருமாறுவதற்கான முதல் படி அது. நம்மைப் பற்றி நாமே உருவாக்கி வைத்திருக்கும் மாயையை உடைப்பதில் இருக்கிறது தாழ்மையின் வருகை.

உதாரணமாக ஓர் ஏழை நண்பருடைய கல்யாண விருந்துக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். எங்கே உங்களுடைய நேரத்தைச் செலவிடுவீர்கள்? மணமகனுடனா? நண்பர்களுடனா? அல்லது பணியாளர்களிடமா? அங்கே ஏதாவது வேலை இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள், எந்த வேலையை சட்டென எடுத்துக் கொள்வீர்கள்? சாப்பிட்ட இலையை எடுத்து, டேபிளைத் துடைக்கும் வேலையையா? அல்லது மணமக்கள் அருகே நிற்கும் சுத்தமான வேலையையா? உங்கள் மனதில் எழும் எண்ண ஓட்டங்கள் உண்மையில் உங்கள் தாழ்மையை உங்களுக்கே சொல்லித் தரும்.

தாழ்மையான மனம் என்பது பலவீனர்களின் இயல்பு என சிலர் தவறாக நினைப்பதுண்டு. ஆனால் வரலாற்றையே புரட்டிப் போட்ட புத்தர், காந்தி, அன்னை தெரசா, சாக்ரடீஸ் என பலரும் தாழ்மையில் சிறந்து விளங்கியவர்களே.

பிறருக்கு உதவுதல் தாழ்மையின் முக்கியமான அம்சம். மேலதிகாரியுடன் மட்டுமல்லாமல், வேலைக்காரர்களிடமும் பணிவுடன் இருப்பது தாழ்மையின் இலக்கணம். தங்களிடம் இருக்கும் திறமைகளெல்லாம் கடவுளின் பரிசு என தாழ்மைவாதிகள் நினைத்து பணிவு கொள்வார்கள். எல்லாம் தங்கள் திறமை என நினைத்து கர்வம் கொள்வதில்லை.

தாழ்மை, நமது பலவீனங்களை மறைத்தலில் அல்ல, அவற்றை அறிதலில் ஆரம்பமாகும். நமது பலவீனத்தைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தாழ்மையின் இயல்பு. 'நாம மட்டும்தான் கில்லாடி, நம்மால் தனியாக எதையும் சாதிக்க முடியும்' போன்ற மாயைகளை சுய அறிதல் உடைக்கும்.

'அலுவலகத்தில் தாழ்மையாய் இருப்பவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாகிறார்கள்' என சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று முடிவு வெளியிட்டது.

தலைவர்களிடம் தாழ்மை இருப்பது ரொம்பவே அரிது. இந்த சூழலை நினைத்துப் பாருங்கள். உங்கள் தலைவர் ஒரு புது ஐடியாவோடு வருகிறார், அதைக் குறித்து சிலாகித்துப் பேசுகிறார். அப்போது குழுவிலுள்ள ஒருவர் அந்த ஐடியாவிலுள்ள ஓட்டைகளைச் சுட்டிக் காட்டினால் தலைவருடைய செயல்பாடு எப்படி இருக்கும்? இன்னும் ஒரு படி மேலே போய், அதைவிடச் சிறந்த ஐடியாவை அந்த நபர் பரிந்துரை செய்தால் தலைவரின் பதில் என்னவாய் இருக்கும்? புது ஐடியாவை சொல்லும் நபர் தலைவரை விட வயதில் ரொம்ப ரொம்பச் சின்னவனாய் இருந்தால் தலைவரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?

வாவ், சூப்பர் ஐடியா! பாராட்டுகள்! என மனம் திறந்து சபையிலேயே பாராட்டி, ஊக்கமும் கொடுத்தால் அவர் தாழ்மையுடைய தலைவர். 'இதெல்லாம் ஒத்து வராது' என தடாலடி தற்காப்பில் இறங்கினால் ஈகோ பார்ட்டி என்று அர்த்தம்.

நீங்கள் தலைவராகவோ, மேலதிகாரியாகவோ இருந்தால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தாழ்மை உங்களை மேலும் மேலும் உயர்வான இடத்துக்கு அழைத்துச் செல்லும். உங்களை விடச் சிறந்த சிந்தனை உங்கள் ஊழியரிடம் இருக்கலாம் எனும் நினைப்பை எப்போதும் மனதில் கொண்டிருங்கள்.

இதே சிந்தனையை அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்து வீட்டிலும் நடைமுறைப்படுத்திப் பாருங்கள். உங்களை விட சிறப்பான ஒரு விஷயத்தை உங்கள் வாழ்க்கைத் துணையோ, மாமனாரோ, மாமியாரோ, சகோதரரோ, பிள்ளைகளோ சொல்லலாம் எனும் தாழ்மையை மனதில் ஏற்றுப் பாருங்கள். பல்வேறு சண்டைகள் முளைக்காமலேயே கருகிவிடும்.

பொதுவான மனித சிந்தனைக்கு ஒரு பாதை உண்டு. அது தன்னிடம் என்ன நல்ல விஷயம் இருக்கிறது என்பதைப் பார்க்கும். அப்புறம் அடுத்தவர்களிடம் என்ன குறை இருக்கிறது என்பதைப் பார்க்கும். நம்முடைய நல்ல விஷயங்கள், அடுத்தவர்களின் பலவீனங்கள் இவற்றின் கலவையே பெரும்பாலான நமது உரையாடல்கள்.

தாழ்மையான மனது கொஞ்சம் வித்தியாசப்படும். அது தனது பலத்தையும் பலவீனத்தையும் பேசும். அடுத்தவர்களுடைய பலத்தையே பிரதானப்படுத்திப் பேசும். ஓர் உரையாடல் நன்மையை நோக்கி நடக்க வேண்டும் என்பதையே தாழ்மையான மனம் விரும்பும். இதை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.

வெற்றிகளையும் தோல்விகளையும் இயல்பாய் எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை தாழ்மை தரும். காரணம், தவறுதலும் வாழ்வின் பாகமே என்பதை அது அறியும்.

மன்னிக்கும் குணமும் தாழ்மையின் பிள்ளையே. பிறருக்கு எதிரான வன்மத்தையும், பழி வாங்கும் எண்ணத்தையும் தாழ்மையான மனம் கொண்டிருக்காது.

தாழ்மை மன வலிமையின் அடையாளம். அந்த வலிமையை நீங்கள் உடுத்திக் கொண்டால் வாழ்க்கை மிக அழகானதாக மாறும். குழந்தைகளுக்கும் இந்தத் தாழ்மையைக் கற்பியுங்கள். உங்களுடைய செயல்களில் தாழ்மை வெளிப்படும்போது குழந்தைகளும் அவற்றைக் கற்றுக் கொள்வார்கள். பிறருக்கு உதவுவது, மரியாதை செலுத்துவது, நன்றி சொல்வது, மன்னிப்பு கேட்பது என தாழ்மையின் சின்னச் சின்ன கிளைகளை அவர்களுக்கு பரிச்சயப்படுத்துங்கள். நாளைய சமூகம் தாழ்மையில் தளைத்து வளரும்.

தாழ்மையை மனதில் கொள்வோம்
பெரும் மேன்மையை வாழ்வில் கொள்வோம்!
சேவியர்

Thursday, January 5, 2012

கவிதைச்சரம்

இடைவெளி

தூக்கு என்பதற்கு
கூகூ என்கிறாய்
மிட்டாய் என்பதற்கு
கொன்னாயி என்கிறாய்
சோறு என்பதற்கு
புவ்வா என்கிறாய்
தேங்கியு என்பதற்கு
கொகியூ என்கிறாய்
மயில் என்பதற்கு
மீள் என்கிறாய்
எனக்கு என்பதற்கு
நானுக்கு என்கிறாய்
பிழைகளால்
பிரியம் வளர்கிறாய்
எனக்கு என்பதை
எனக்கு எனச் சொல்லும் வரை.

ஆதி.சரவணன்

************************************************************

ஏற்கனவே...

காற்றுக்காக ஜன்னல் திறந்து
உட்காரும்போது
தாழ்வார விட்டத்துக் கூட்டில்
விளையாடும்
ஊடல் குருவிகள்

தென்றலின் பாடலுக்குத்
தப்பாமல் தலையாட்டும்
தொட்டிப் பூக்கள்

வாசல் வரை வந்து
வாலாட்டி வழியனுப்பும்
எதிர் வீட்டு நாய்க்குட்டி

கட்டுமான இருக்கன்களைப் பிளந்து
வேர்விட்டு முளைத்திருக்கும்  
பக்கத்து வீட்டு சுவர் மரக்கன்று

நேற்றைய உழைப்பின் கூலிக்காக
முதலாளி வீட்டு வாசலில்
காத்துக்கிடக்கும் தொழிலாளி

தட்டில் விழுந்த ஒற்றை நாணயத்தை
திரும்பித் திரும்பித் தடவிப் பார்க்கும்
பிச்சைக்காரன்

எல்லாப் பரப்பிலும்
சிதறிக்கிடக்கின்றன
காலம் ஏற்கனவே எழுதிய
கவிதைகள்.

நேசன்

************************************************************


யார் முதலில்

ரு விடுமுறை நாளின்
மழை ஓய்ந்த மாலைப் பொழுது

நகர வாழ்வின்
நரக ஓட்டங்களற்ற ஓய்வு

சிரிப்பும் களிப்புமாக
சிற்றுண்டி இடையே சிறு சர்ச்சை
'யார் முதலில் சாப்பிட்டது?'

நாட்டாமை செய்ய
நயமாக முன் வந்தது
நான்கு வயதுப் பெண் குழந்தை.

அப்பாவின் காதருகே
தளிர்க்கரம் குவித்து
செவ்விதழ் விரித்து
திருவாய் மலர்ந்தது
'அப்பா நீதான் ஃபர்ஸ்ட்'

அதேபோல் அம்மாவிடமும்
'அம்மா நீதான் ஃபர்ஸ்ட்'

அண்ணாவிடமும்கூட
'அண்ணா நீதான் ஃபர்ஸ்ட்'

இறுதியாக
தன் காதருகே
தளிர்க்கரம் குவித்து
தீர்ப்பைத் திருத்திச் சொன்னது
'நான்தான் ஃபர்ஸ்ட்'

எஸ்.பிரேமலதா

************************************************************

நீர்த்துவம்

தாமிரபரணியும்
குறுக்குத்துறையும்
உனக்குப் புரியாது.

காவிரியும்
கொள்ளிடமும்
எனக்குத் தெரியாது.

பாலாறு வந்தாலும்
வாராதே போனாலும்
அதுபோல வாராது.

வெட்டாறும்
சங்கராபரணியும்
அவனுக்குப் புரியாது.

நதியில்லாதவனுக்கு
சிறுவாணிபோல் அமையாது.

குளத்தின் சாகசங்கள்
ஏரிகள் அறியாது.

ஏரியின் படகுக்குகோ
வேறெதுவும் ஆகாது.

கடலின் சூட்சுமங்கள்
கிணறுகள் உணராது.

கிணற்று மீனின்
ரகசியங்களை
கடல் மீன் அறியாது.

அருவியின்
உன்மத்தத்தைச்
சுனை நீர் தாங்காது.

இருந்தால் மட்டும் வரும்
குழாய் நீர் போல
ஒரு நீரும் கிடையாது.

அக்வாஃபினா பக்கத்தில்
பிஸ்லெரி நெருங்காது.

நீரெல்லாம் ஒன்றானாலும்
நீரெல்லாம் ஒன்றாகாது.

சுந்தர்ஜி
 

Wednesday, January 4, 2012

இலங்கை இந்திய மீனவர் - ஒரே தீர்வு

மீனவர் பிரச்னை என்பது கடலும் கடல் சார்ந்ததுமாகப் பார்க்கப்படாமல், நாடும் நாடுகள் கடந்ததுமாகப் பார்க்கப்படுகிறது. எனவேதான் அது தீர்க்க முடியாத சிக்கலாகவும் இருக்கிறது. மொழியால், இனத்தால், நிலப்பரப்பால் வேறுபட்டு இருந்தாலும், இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்கள்தான். அவர்களுக்குக் கடல்பற்றிய புரிதல் உண்டு. மீன் பிடித்தொழிலில் உள்ள நுட்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் குறித்த அறிதல் உண்டு.

கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் கட்டித் தழுவி அன்பு பாராட்டும் காட்சிகளைக் காணலாம். ஆனால், இந்த மீனவர்களின் வாழ்க்கையையே அறியாத சிங்களக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், இரு நாட்டு அரசுகள்தான் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறார்கள். வட மேற்கு இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட பூங்கொடித்தீவு, நெடுந்தீவு போன்ற பகுதிகளில்தான் மீன்வளம் அதிகம். தமிழகக் கடல் எல்லைக்குள் நீர்பரப்பு உண்டே தவிர, மீன்வளம் இல்லை. மீன் பிடிக்க வேண்டும் என்றால், கச்சத்தீவைத் தாண்டுவதைத் தவிர, தமிழக மீனவர்களுக்கு வேறு வழி இல்லை.

கடல் பரப்பை எல்லை போட்டுப் பிரிப்பதைவிட, மீன் வளத்தை எப்படி இரு நாட்டு மீனவர்களும் பங்கிட்டுக்கொள்வது என்பதுதான் முக்கியம். ராமேஸ்வரத்தில் நாட்டுப் படகு மீனவர்களுக்கும் விசைப் படகு மீனவர்களுக்கும் இடையில் எந்தெந்த நாட்களில் மீன் பிடிக்கச் செல்லலாம் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. அதைப் போல இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் புரிதலும் ஒப்பந்தமும் ஏற்பட வேண்டியது அவசியம். ஆனால், விடுதலைப் புலிகள் இருந்த காலம் வரை, தமிழக மீனவர்களைக் கடற்புலிகளாகவே கருதி தாக்குதல் தொடுத்தது இலங்கை அரசு. இப்போது புலிகள் இல்லாத காலத்திலும் அவர்களுக்குப் புலி அச்சம் போகவில்லை. பிழைப்புக்காக கடலில் பாடெடுத்துச் செல்லும் அப்பாவிகளைக் கண்மூடித்தனமாக தாக்குவதும் சுட்டுத்தள்ளுவதும் எந்தத் தார்மிக நெறிகளிலும் சேர்த்தி இல்லை. மீன் என்பது எப்போதும் வலையில் வந்து விழாது. இரவில் வலை போட்டுக் கண் அசந்துவிடுவார்கள் மீனவர்கள். காலையில் படகு இந்திய எல்லையைத் தாண்டிவிடும். படகு திசைமாறிப் போவது என்பது காற்று, தட்ப வெப்ப நிலை, நீரோட்டங்கள் எல்லாவற்றையும் பொறுத்தது. இதை எல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஒருவர் மீனவர் வாழ்க்கைப்பற்றிப் புரிந்தவராக இருக்க வேண்டும் என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துகிறேன்!

ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளாதவர்கள் அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள். ஏதோ சிங்களக் கடற்படை மட்டும்தான் அநியாயம் செய்கிறது என்று இல்லை, இந்தியக் கடற்படை செய்யும் அட்டூழியம் அதைவிட அதிகம். கொலை செய்வது இல்லையே தவிர, மீனவர்களைத் தாக்குவது, மீன்பிடிப் பொருட்களைச் சேதப்படுத்துவது என எல்லா அட்டூழியங்களையும் இந்தியக் கடற்படையும் செய்கிறது. ஒரு தமிழக மீனவருக்கு எப்படி சிங்களம் பேசும் இலங்கைக் கடற்படை அதிகாரி அன்னியரோ, இந்திய கடலோரப் படை அதிகாரியும் அன்னியராகத்தான் இருக்கிறார்.

சமீபத்தில் கச்சத்தீவைச் சுற்றிலும் என்ணெய் வளங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்து உள்ளனர். ஏற்கனவே எண்ணெய் அரசியலால் அரபுலகு நாடுகள் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கின்றன என்பது நமக்குத் தெரியும். கச்சத்தீவிலும் அப்படி ஒரு ஆதிக்கப் போட்டி வரும். அந்தப் போட்டி எத்தகைய அழிவைக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை. அதற்கு முன், தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், இந்திய அரசு, இலங்கை அரசு என நான்கு தரப்பினரும் அமர்ந்து பேசி பரஸ்பர புரிதலுக்கு வருவதுதான் ஒரே தீர்வு!"  
 
ஜோ.டி.குருஸ்
எழுத்தாளர்

Monday, January 2, 2012

பெற்றோர்களைப் போற்றுவோம்!

ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது.

ஒரு குழந்தை அந்த மரத்தின் மீது கொஞ்சிக் குலாவி விளையாடி வந்தது. மரம் ஆனந்தத்தில் திளைத்தது. குழந்தை வளர்ந்தது. மரத்துடன் உள்ள அதன் நெருக்கம் குறைந்தது.

சில ஆண்டுகளுக்குப் பின் அந்த மரத்தைக் காண இளம் வயதில் அவன் சென்றான். மரம் ஆனந்தத்தில் குதித்தது.
'என்னோடு விளையாட வா' என அழைத்தது.
'இப்போது எனக்கு நேரமில்லை.. கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது' என்றான் இளைஞன்.

மரம் தன்னிடமிருந்த பழங்களை எல்லாம் அவனுக்குக் கொடுத்தது.

அவன் அதை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போனான்.

மரத்தை மீண்டும் தனிமை சூழ்ந்தது.

சில வருடங்களுக்குப் பின் அந்த இளைஞன் மரத்திடம் போனான். மரம் மகிழ்ந்தது. 'வா என்னுடன் விளையாடு' என்றது.
'எனக்கு நேரமில்லை. வீடுகட்டப் போகிறேன்' என்றான்.
'சரி என்னுடைய கிளைகளை எல்லாம் வெட்டிக் கொள்' என்றது மரம்.

அவன் வெட்டிச் சென்றான்.

மீண்டும் மரம் தனிமையில் விழுந்தது.

நடுத்தர வயதில் அவன் மீண்டும் வந்தான். மரம் குதூகலித்தது.
'வா என்னுடன் விளையாடு' என்றது.

`இல்லை... எனக்கு ஒரு படகு செய்ய வேண்டும், விளையாட நேரமில்லை' என்றான் அவன்.
'என்னை வெட்டிக் கொள்' என்றது மரம் தாமதிக்காமல்.

மரம் வெட்டப்பட்டது. வேர்களும், மூடும் மட்டும் மௌனத்தில் அழுதன.

மீண்டும் வழக்கம் போல தனிமை!

பல வருடங்களுக்குப் பிறகு முதுமையின் பிடியில் அவன் வந்தான். மரம் கண்ணீர் விட்டது. 'இப்போது என்னிடம் பழங்கள் இல்லை, கிளைகள் இல்லை, எதுவுமே இல்லை. வேர்கள் மட்டும்தான் இருக்கின்றன. அவையும் காய்ந்து கொண்டிருக்கின்றன. என்னால் விளையாட முடியாது, என்னருகில் அமர்வாயா?' ஏக்கத்துடன் கேட்டது மரம். அவன் அமர்ந்தான்.

மரம் அவன் மீது காட்டிய அன்பு அவனுடைய கண்களில் ஈரமாய் வழிந்தது.

நமது வாழ்க்கையில் `பெற்றோர்' எனும் மரம் இப்படித் தான். மழலைப் பருவத்தில் அவர்களோடு சேர்ந்து விளையாடினோம். பின்னர் அவர்கள் நமக்கு பழங்களைத் தரும் மரமாகிப் போனார்கள். அது நமக்குத் திருப்தியாகவில்லை. அவர்கள் தங்களையே கொஞ்சம் கொஞ்சமாய் தியாகம் செய்தார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் நமது அன்பை மட்டுமே. நம்முடைய அருகாமையை மட்டுமே. ஆனால் நாம் அவர்களுக்கு அதைக் கூடத் தரத் தயாராய் இல்லை!

எத்துணை பெரிய சுயநலம்? எவ்வளவு பெரிய துயரம்!

தினசரிகளில் அவ்வப்போது வரும் செய்திகள் உயிரை உலுக்குகின்றன. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவில் 85 வயதான தாயை ரோட்டில் போட்டு பலமுறை காரை அவர் மீது ஏற்றிக் கொலை செய்த மகனின் கொடூர செயல் அதிர்ச்சியாய் பேசப்பட்டது.

இதெல்லாம் அமெரிக்காவில் மட்டும்தான் நடக்கும் என நாம் சொல்லவும் முடியாது. காரணம் தாயின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த மனிதர்கள் நம்மிடையேதான் வாழ்கிறார்கள்.
'என் பையன் அடிக்கிறான், சாப்பாடு போட மாட்டேங் கறான்' எனக் கதறும் முதிய வயது பெற்றோர்கள் நம்மிடையேதான் உலவுகின்றனர். முதியோர் இல்லங்களின் வாசல்களில் நமது பெற்றோர்தான் ஏக்கத்தோடு வாசல் களைப் பார்த்தபடி தவமிருக்கின்றனர்.

பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்வதொன்றும் கடினமல்ல. கொஞ்ச நேரம் கண்களை மூடி பெற்றோரின் அன்பையும், அவர்களுடைய தியாகங்களையும் மனதில் அசைபோடுபவர்களுக்குத் தெரியும் அன்பின் ஆழமும், பெற்றோரின் மகத்துவமும்.

ஒருவேளை உங்களுடைய விருப்பங்களை பெற்றோர் எதிர்க்கலாம். உங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிரே நிற்கலாம். எல்லாவற்றுக்கும் பின்னால் உலவுவது உங்கள் மீதான அன்பு மட்டுமே!

அவர்கள் இல்லையேல் நாம் இல்லை. இந்த வறட்டுப் பிடிவாதம், கவுரவம், ஈகோ எதுவுமே இல்லை. இந்த வாழ்க்கையை வாழும் ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது பெற்றோர்தான் என்பது நமது
மனதுக்குள் எழவேண்டும்.

உங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு அவர்களுக்குப் பிடித்தமான இடங்களுக்குச் செல்லுங்கள். அவர்களோடு நேரம் செலவிடுங்கள். 'இது எனது அன்புக்குரிய பெற்றோர்' என்று எந்த சூழலிலும் கர்வத்தோடும், அன்போடும் அறிக்கையிடுங்கள். நம்முடைய நூற்றுக் கணக்கான சிறுவயதுப் பிழைகளை மன்னித்து அரவணைத்தவர்கள் அவர்கள். அவர்களுடைய சிறிய பிழைகளைக் கூட மன்னிக்க மறுக்கும் மனம் நம்மிடம் இருப்பது தவறல்லவா?

பெற்றோருடைய பழைய கதைகளைக் கேட்பதைப் போல சுவாரசியம் வேறொன்றும் இல்லை. அந்தக் கதைகள் அவர்களுடைய நினைவுகளின் மீட்சியாகவும், நம் மீதான அன்பின் ஆட்சியாகவும் மலரும். அவர்கள் மீது நாம் வைக்கும் அன்புக்கு அடையாளமாய் அந்த செவிமடுத்தல் அமையும்.

எண்பது வயதான தந்தை தனது இளம் வயது மகனுடன் பால்கனியில் அமர்ந்திருந்தார். சற்றுத் தொலைவில் ஒரு காகம் வந்தமர்ந்தது.
'அது என்ன மகனே?' என்று கேட்டார் தந்தை.
'அப்பா, அது காகம்' என்றான் மகன்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை 'அது என்ன?' என்றார்.
'அது காகம்' என்றான் மகன்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை 'அது என்ன?' என்றார்.

மகனுக்கு கொஞ்சம் எரிச்சல். 'காகம்!' என்றான்.

நான்காவது முறையாக மீண்டும் தந்தை மகனிடம் `அது என்ன மகனே?' என்று கேட்டார்.

மகனின் கோபம் எல்லை கடந்தது. 'காகம்... காகம்... காகம்... வயசாச்சுன்னா சும்மா இருக்க வேண்டியதுதானே' என்று கோபத்தில் எரிந்து விழுந்தான்.

தந்தையின் கண்கள் பனித்தன. எதுவும் பேசவில்லை. மெதுவாக எழுந்து உள்ளே போனார். ஒரு பழைய டைரியை எடுத்து வந்தார். அதில் ஒரு பக்கத்தைப் புரட்டி மகனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.
'இன்று என் செல்ல மகன் என்னிடம் ஜன்னலில் வந்தமர்ந்த ஒரு பறவையைக் காட்டி அது என்ன? என்று கேட்டான்.

காகம் என்று புன்னகையுடன் சொன்னேன்.

அவனுக்குப் புரியவில்லை போல! மீண்டும் மீண்டுமாய் இருபத்து மூன்று முறை என்னிடம் அது என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தான். நான் ஒவ்வொரு முறையும் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே அது காகம் என்று சொன்னேன்.

இன்று நான் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்' என்று எழுதி யிருந்தது.

மகனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. இருபத்து மூன்று முறை தன் கேள்விக்கு அன்புடன் பதில் சொன்ன தந்தையையா நான்காவது முறை கோபத்தில் திட்டினேன் என மனம் வருந்தி தந்தையின் கரம் பிடித்தான்.

பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் பெற்றோராய் மாற வேண்டும் என்பார்கள். கண்ணின் கருவிழி போல நமது குழந்தைகளை பதட்டத்துடனும், பாதுகாப்புடனும், அன்புடனும் பாதுகாப்பதைப் போலத்தான் நமது பெற்றோரும் நம்மைப் பாதுகாத்திருப்பார்கள் எனும் புரிதல் நமக்கு இருக்க வேண்டியது முக்கியம்.

ஒரு கெட்ட கனவு கண்டால் கூட தூரதேசத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு போன் செய்து பத்திரமாய் இருக்கச் சொல்லிப் பட படப்பதுதானே அன்னையின் அன்பு! பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவோ, படிப்புக்காகவோ கிழிந்த வேட்டியையே தலைப்பு மாற்றிக் கட்டி நடப்பது தானே தந்தையின் பேரன்பு. பிள்ளைகளுக்காய் யோசிக்காமல் செலவு செய்யும் பெற்றோர், தங்களுக்காக என்று வரும்போது செலவு செய்யாமல் வெறுமனே யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதானே யதார்த்தம்?

நம்முன் உலவும் தெய்வங்களான பெற்றோருக்கு நாம் என்ன அன்பைத் திருப்பிக் கொடுக்கிறோம்?

கடைசியாக எப்போது `கடவுளே என்னோட அம்மா அப்பா ரொம்ப அருமையானவங்க. அவர்களைத் தந்ததற்காக நன்றி!' என மனமுருகிப் பிரார்த்தித்தீர்கள்?

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய் 'அப்பா, அம்மா, உங்களுக்குப் பிள்ளையாய்ப் பிறந்ததுல நான் ரொம்பவே சந்தோசப்படுகிறேன்' என்று சொன்னீர்கள்?

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோருக்கு 'சர்ப்ரைஸ் பரிசு' வாங்கிக் கொடுத்தீர்கள்? அவர்களுடைய பிறந்த நாள், திருமண நாள் உங்கள் நினைவில் இருக்கிறதா?

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய், 'உங்களுக்கு ரொம்ப மன வருத்தத்தையும், இடைஞ்சலும் தந்துட்டேன். மன்னிச்சுடுங்க' என்று சொல்லி கட்டியணைத்தீர்கள்?

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரின் முன்னால் போய் நின்று, `சும்மா பாக்கணும்னு தோணுச்சும்மா அதான் வந்தேன். இன்னிக்கு முழுசும் உங்க கூடதான் இருக்கப் போறேன்' என்று சொன்னீர்கள்?

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய், 'இன்னைக்கு நீங்க ரெஸ்ட் எடுங்க. சமையல், வீடு சுத்தம் செய்வது, தோட்ட வேலை, தண்ணீர் இறைப்பது என சர்வத்தையும் நானே பார்த்துக்கறேன்' என்று சொன்னீர்கள்?

இப்படி சில 'எப்போது?' எனும் கேள்விகளை உங்களுடைய மனதில் எழுப்பினாலே போதும். நீங்கள் உங்கள் பெற்றோரை நேசிக்கும் அளவு உங்களுக்குப் புரிந்து விடும். அந்தக் கேள்விகள் உங்களை குற்ற உணர்வில் ஆழ்த்தினால் தாமதிக்காதீர்கள், உங்கள் தொலைபேசியை எடுத்து உங்கள் பெற்றோரை அழையுங்கள். 'உங்களிடம் பேசவேண்டும் போல் இருந்தது அதான் போன் பண்ணினேன்' என்று சொல்லுங்கள்!

வாழ்வின் சில தருணங்கள் தொலைந்தால் திரும்பக் கிடைப்பதில்லை. பெற்றோருடனான அன்பும் அப்படியே!

உயிராய் உலவும் காற்று
பெற்றோர் அவரைப் போற்று!


 சேவியர்