Wednesday, December 28, 2011

இன்றும் ஒரு தகவல்

மொஸாட் உளவு நிறுவனம்

உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. அதில் நம்பர் ஒன இடத்தை பிடிப்பது சாதாரண விஷயமல்ல. அதை செய்திருக்கிறது இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனமான 'மொஸாட்'. அமெரிக்க நியூயார்க் நகரின் இரட்டைக் கோபுர தகர்ப்பை பற்றி ஒரு மாதத்திற்கு முன்பே அமெரிக்காவிற்கு தகவல் சொல்லி எச்சரிக்கை செய்தது மொஸாட்டின் திறமைக்கு ஒரு சாட்சி.

1951ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு உலகம் முழுவதும் செய்திருக்கும் கொலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதில் சேருவதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணபிக்கலாம். அந்த ஒன்று மட்டும் தான் வெளிப்படை. மற்றபடி எல்லா விஷயங்களுமே படுரகசியம். ஒரு சின்ன விஷயம் கூட வெளியே வராது.

மொஸாட்டின் தலைமையகத்தில் சம்பளம் வாங்குபவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத மொஸாட்டின் ஏஜென்ட்டுகள் பல்லாயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் இருக்கிறது. இஸ்ரேல், பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மொசாட்டுக்காக ஒதுக்கி வருகிறது.

1960-ல் ரஷ்யா கண்டுபிடித்த போர் விமானம் உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. திடீர் திடீரென வந்து குண்டு போட்டுவிட்டு போய்விடும். இது மற்ற எல்லா நாடுகளுக்குமே சவாலாக இருந்தது. மிக்21 என்ற இந்த ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தையே தனது திறமையான ஒற்று வேலையால் கடத்தியது, மொஸாட். அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அதேபோன்ற விமானங்களை தானும் உருவாக்கியது. அந்த தொழில்நுட்பத்தை தனக்கு ஆரம்ப காலங்களில் மிகவும் முன்னேற டிப்ஸ் கொடுத்த சிஐஏ -வுக்கே பணத்துக்கு விற்று விட்டது மொஸாட்.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அதிரடி சாதனைபுரிந்த மொஸாட் உலகின் நம்பர் ஒன உளவு நிறுவனம் என்ற பெயரை தக்க வைத்திருக்கிறது.

'மொஸாட்டுக்கு தெரியாமல் ஓர் அணுவும் அசையாது'.

Tuesday, December 27, 2011

புத்தாண்டுக்கான 'பொருளாதாரத் தீர்மானங்கள்'!

கைக்கெட்டும் தூரத்தில் '2012'. எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் மாதக் கடைசியில் கையைக் கடிக்கிறதே என்று புலம்பும் ஆசாமியா நீங்கள்? நீங்கள் கொஞ்சம் மனது வைத்தால் அந்தக் கவலையில் இருந்து விடுதலை பெற முடியும். புத்தாண்டில் இந்த விஷயங்களைப் பின்பற்றிப் பாருங்கள். மாயாஜாலம் நிகழும்...

1. புகைப் பழக்கம் உடையவராக இருந்தால் அதை உடனே உதறுங்கள். அது உங்கள் உடல்நலம், பர்ஸ் இரண்டுக்குமே நல்லது.

2. குடும்பத்துடன் வாரம் ஒருதடவையாவது வெளியே சென்று ஓட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் எளிதாக 500 ரூபாய் பறந்துவிடுமே? மாதம் ஒரு தடவை வெளியே செல்வதைக் குறைத்தாலே ரூ. 500-க்கு மேல் மிச்சமாகும்.

3. சாதாரண குண்டு பல்புகளுடன் ஒப்பிடும்போது 'சி.எப்.எல்.' விளக்குகள் கொஞ்சம் செலவு பிடிக்கும்தான். ஆனால் நீண்டகால அடிப்படையில் இவை நன்மை செய்யும். ஒரு சாதாரண குண்டு பல்பு உபயோகிக்கும் மின்சாரத்தில் 22 சதவீதத்தையே 'சி.எப்.எல்.' விளக்கு பயன்படுத்துகிறது. வீடு மட்டுமின்றி, உங்களின் பொருளாதாரமும் பிரகாசமாக 'சி.எப்.எல்.' விளக்குகள் உதவும்.

4. வீட்டு மின்சாதனங்களை அவ்வப்போது முறையாகப் பராமரித்து, குறைகளை நீக்கினால் 15 சதவீதம் வரை மின்சாரச் செலவு குறையும். உதாரணமாக உங்கள் வீட்டில் ஏ.சி. இருக்கிறது என்றால், அதற்கான வெளி 'யூனிட்' நிழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள், பில்டர்கள் சுத்தமாக இருக்கிறதா, ஜன்னலில் இடைவெளி இல்லாமல் இருக்கிறதா, கண்ணாடிகளில் 'டார்க் பிலிம்' ஒட்டப்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள்.

5. ஆரோக்கியமே உண்மையான செல்வம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக 'ஜிம்'மில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டு இரண்டொரு நாட்களுக்குப் பின் அப்பக்கம் தலைவைக்காமல் இருப்பதால் என்ன பிரயோஜனம்? அதற்குப் பதிலாக, அருகில் உள்ள பூங்காவில் அதிகாலையில் மெல்லோட்டம் (ஜாகிங்) ஓடுவது நன்மை பயக்கும்.

6. சூப்பர் மார்கெட்டுகளுக்குச் செல்லும்போதும், சிலவேளைகளில் விளம்பரங்களிலும் தள்ளுபடிக் கூப்பன் இணைந்துவரும். அவற்றால் என்ன பெரிதாக மிச்சமாகிவிடப் போகிறது என்று எண்ணாமல் சேகரித்துப் பயன்படுத்துங்கள். இந்த விஷயத்தில் தொடர் பழக்கம் பலன் தரும்.

7. வீட்டில் தொல்லைப்படுத்தும் குழந்தையை 'ட்யூஷன் கிளாஸ்' பக்கம் தள்ளிவிடுவது எளிதாகத்தான் இருக்கும். ஆனால் மாலையில் நீங்களே உட்கார்ந்து குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்துப் பாருங்களேன், குழந்தையுடனான பிணைப்பு வளரும், அவனது கல்விநிலை புரியும். மாதாந்திரச் செலவில் ஒரு தொகையும் குறையும்.

Saturday, December 24, 2011

தன்னலம் தவிர்!

எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறு வயதுத் தங்கைக்கு லூகேமியா நோய். ரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுவனுடைய ரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது.

'தங்கைக்கு ரத்தம் கொடுக்க சம்மதமா?' மருத்துவர்கள் கேட்டார்கள்.

கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன், 'சரி' என்றான்.

அவனிடமிருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நர்சை அழைத்த சிறுவன் கேட்டான், `நான் எப்போது சாகத் துவங்குவேன்?'

நர்ஸ் அதிர்ச்சியடைந்தாள்.

தனது ரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள். ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இதுதான் தன்னலமற்ற அன்பின் வடிவம்!

இன்றைய இளைஞர்கள் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். தொழில்நுட்பங்களில் அவர்களுடைய கை ஓங்கியிருக்கிறது. திரை கடலோடி திரவியங்களை அள்ளி வருகிறார்கள். சவால்களின் முதுகில் ஏறி சாதனைச் சந்திரனையே கிள்ளி வருகிறார்கள். ஆனால் வாழ்க்கையில் சுயநலத்தை ஓட்டுக்குள் முடங்கி விடுகிறார்கள்!

எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் அது நமக்கு எப்படிப் பயனளிக்கப் போகிறது என்பதைத்தானே நாம் பார்க்கிறோம்? அந்த சிந்தனையிலிருந்து விலகி, அடுத்த நபருக்கு அது என்ன பயன் தரும் என்பதைப் பார்ப்பது தான் சுயநலமற்ற மனதின் வெளிப்பாடு. இந்த செயல் அடுத்த நபரை காயப்படுத்துமா? பலவீனப்படுத்துமா? என பிறரை மையப்படுத்தி எழுகின்ற சிந்தனைகள் மகத்துவமானவை!

'சுயநலமற்ற அன்பு' என்றதும் நம் கண்ணுக்கு முன்னால் என்ன வருகிறது? பிறருக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்வது தானே? பெரும்பாலான மக்கள் இப்படித் தான் நினைக்கிறார்கள். 'இருந்தா குடுத்திருக்கலாம்... இல்லையே' என தங்களையே தேற்றிக் கொள்கிறார்கள். உண்மை அதுவல்ல. பிறருக்கு பயன்படக் கூடிய எந்த விஷயத்தையும் 'நமக்காக மட்டுமே' பயன்படுத்துவது சுயநலமே!

ஒரு சின்ன உதாரணம், 'நேரம்'.

'கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்' என தொலைக்காட்சி முன்னால் வீணடிக்கும் நேரம் கணக்கில் அடங்குமா? அல்லது அலங்காரம் செய்கிறேன் பேர்வழி என கண்ணாடி முன்னால் வீணடிக்கும் நேரம் தான் கொஞ்ச நஞ்சமா? இந்த நேரங்களையெல்லாம் பிறருக்காய் பயன்படுத்தலாமே என எப்போதாவது யோசித்ததுண்டா? இதுவரை யோசிக்காவிட்டால் இப்போது யோசிக்கலாமே?

உதவி தேவைப்படும் ஒரு நண்பருக்காக அந்த நேரத்தைப் பயன்படுத்தலாம். ஒரு மருத்துவமனைக்குச் சென்று ஒருவருக்கு ஆறுதல் சொல்லலாம். ஒரு அனாதை விடுதியில் உங்கள் மாலை வேளையைச் செலவிடலாம். முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு பேசிக் கொண்டிருக்கலாம்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். நம்மைச் சுற்றி ஆயிரம் ஆயிரம் தேவைக் கரங்கள் நிமிடம் தோறும் நீண்டு கொண்டே இருக்கின்றன. சுயநலத்தின் இமைகளை விரித்து அன்பின் அகக்கண்ணால் உலகத்தைப் பார்க்கத் தெரிய வேண்டும் அவ்வளவுதான்.

சுயநலம் உறவுகளுக்கிடையே உருவாகும்போது வாழ்வின் அடிப்படையான அன்பே சிதிலமடைகிறது. அன்பும் சுயநலமும் ஒன்றில் ஒன்று கலப்பதில்லை. கணவனோ, மனைவியோ சுயநலவாதியாய் இருக்கும் போது அந்தக் குடும்பம் பலவீனமடைந்து விடும். பிள்ளைகள் சுயநலவாதிகளாய் இருந்தால் பாசப் பிணைப்பு பலவீனமடையும். நண்பர்களுக்கிடையே எழுகையில் நட்பே உடைந்து விடும்.

'நான்' என்பதை பின்னால் நிறுத்தி `நீ, உனது விருப்பம்' என்பதை முன்னில் நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் துவங்குகின்றன. ஒரு குடும்பத்தில் அனைவரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின் சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.

மாட மாளிகைகள் அல்ல பாக்கியம் செய்தவை. எந்த குடும்பத்தில் சுயநலமற்ற அன்பு உலவுகிறதோ, அது தான் பாக்கியம் செய்த குடும்பம். அது குடிசையாகவும் இருக்கலாம், மாடி வீடாகவும் இருக்கலாம் அல்லது சாலையோர கோணிக் கூடாரமாகவும் இருக்கலாம்.

நான் எனும் சுயநலத்தின் அடுத்த வட்டமாக, `எனக்கு, என் குடும்பத்துக்கு, என் பிள்ளைகளுக்கு' என சுயநலம் தனது எல்லைகளை அமைக்கிறது. தனது வட்டத்தைத் தாண்டிய சக மனிதன் மீதான கரிசனை காணாமல் போய்விடுகிறது.

சுயநல சிந்தனைகளை விட்டு வெளியே வர முதல் தேவை, `நாம் சுயநலவாதி' என்பதை ஒத்துக் கொள்வது தான். பலவேளைகளில் 'நான் சுயநலவாதியல்ல' என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

உதாரணமாக, நீங்கள் பொறாமை குணம் படைத்தவர் என வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் சுயநலம் ஒளிந்திருக்கிறது என்று அர்த்தம். உங்கள் நண்பரோ, விரோதியோ, சக பணியாளரோ உங்களை விடப் பெரிய பதவிகளை சட்டென அடைந்தால் உங்கள் மனதில் பொறாமை எழுகிறதா? அவர்களுடைய தகுதியை தரக் குறைவாய் விமர்சிக்கத் தோன்றுகிறதா? உஷாராகி விடுங்கள். இவையெல்லாம் சுயநலத்தின் வெளிப்பாடுகள்!

அதே போல, கோபம், எரிச்சல், வெறுப்பு எல்லாமே சுயநலத்தின் வேறு வேறு வடிவங்களே. நாம் சக மனித கரிசனையில் நடக்கும் போது நம்மைத் தாண்டிய உலகமும் நமக்கு முன்னால் அழகாகத் தெரிகிறது.

ஒவ்வொரு நாளும், சுயநலமற்ற ஒரு நல்ல செயலையாவது புதிதாய்ச் செய்ய வேண்டும் என நினைத்துப் பாருங்கள். வழியில் லிப்ட் கேட்கும் நபராய் இருந்தாலும் சரி, பாரம் சுமக்கும் மனிதராய் இருந்தாலும் சரி, வெறுமனே தனிமையில் இருக்கும் முதியவராய் இருந்தாலும் சரி. எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத ஒரு துளி அன்பை அவர்களுக்கும் அளித்துப் பாருங்கள். அதன் ஆனந்தம் அளவிட முடியாதது!

'தனக்கென மட்டுமாய் வாழ்பவன் இறக்கும்போதுதான் உலகம் பயனடைகிறது' என்கிறார் தெர்தூலியன்.

மன மகிழ்வுடன் கொடுப்பது நல்ல மனதின் பண்பு. பிறருக்குக் கொடுக்கும் போது உங்களுடைய வாழ்க்கை செல்வச் செழிப்பால் நிறைவடைகிறது.

பிறருடைய பார்வையில் நல்லவனாய்த் தெரியவேண்டும் என்பதற்காக சிலர் நல்ல செயல்களைச் செய்வார்கள். அது தவறு. செயலும், அதன் பின்னணியில் இருக்கும் சிந்தனையும் தூய்மையாய் இருக்க வேண்டியது அவசியம்.

சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு சுயநலமற்ற பண்பை கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு அது பழகிப் போய்விடுகிறது. பெற்றோரைப் பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் எனும் பால பாடத்தை மறக்க வேண்டாம்.

விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வரும்போது ஏகப்பட்ட பணம் செலவழிக்கிறோம். பெரும்பாலும் நம் குடும்பம், நமது நண்பர்கள், நமது உறவினர்கள் இவ்வளவுதான் நமது எல்லை! இந்த எல்லையை விட்டு வெளியே வந்து ஒரு முறை விழா கொண்டாடிப் பார்க்க நினைத்ததுண்டா? முதியோர் இல்லங்கள், எதிர் தெரு ஏழைகள், அருகில் வாழும் எளியவர்கள், நோயாளிகள் இவர்களோடு சேர்ந்து ஒரு விழாவைக் கொண்டாடிப் பாருங்களேன். சுயநலமற்ற அன்பின் உண்மை விஸ்வரூபத்தை அப்போது கண்டடைவீர்கள்.

'பிறருக்குக் கொடுத்து வாழ்பவர்களை ஆனந்தம் நிழல் போல தொடரும், எப்போதுமே நீங்காது' என்கிறார் புத்தர். சுயநலம் துறந்தால் கர்வம் நம்மை விட்டுக் கடந்து போய்விடுகிறது!

சுயநலமற்ற அன்பு தாயன்பு போல தூய்மையானது!

உணவு பற்றாத போது 'என்னமோ தெரியலை இன்னிக்குப் பசிக்கல' என பொய் சொல்லிவிட்டுப் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் அன்பு தாயன்பு!

தனக்குக் கிடைக்கும் ஒரே ஒரு சாக்லேட்டையும் குழந்தைக்குக் கொடுத்து மகிழும் அன்பு தாயன்பு!

தன்னிடமிருக்கும் கடைசிச் சொட்டு வலிமையையும், வசதியையும் பிள்ளைகளுக்குத் தாரை வார்க்கும் தாயன்பு.

இதைவிட புனிதமான ஒரு உதாரணத்தை சுயநலமற்ற அன்புக்காய் காட்ட முடியுமா?

'அடுத்தவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என நாம் நினைக்கும் எதுவும் நமக்குக் கிடைக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது' என்கிறார் ஸ்பினோஸா.

சுயநலமற்ற ஒவ்வோர் செயலும் இன்னொரு நபருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வரும். அந்த செயல் பல்கிப் பெருகி பூமியை நிரப்பும்.

ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும், 'இது எனது சுயநல எண்ணத்தின் வெளிப்பாடா?' எனும் ஒரு கேள்வியைக் கேட்டாலே போதும். உங்களுடைய செயல்களிலிருந்து சுயநலம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறத் துவங்கும்.

ஒரு குட்டி கதை:

பார்வையிழந்த ஒரு பெண் இருந்தாள்.

அவளுக்கு தன் மீதே வெறுப்பு. உலகத்தைப் பார்க்க முடியாதே எனும் ஆதங்கம்.

அவளுடைய ஒரே ஆறுதல் அவளுடைய காதலன் தான். உயிருக்கு உயிரான காதலன். எப்போதும் அவளுடைய கரம் பிடித்து நடக்கும் காதலன்.

'எனக்கு மட்டும் பார்வை கிடைத்தால் அடுத்த நிமிடமே உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன்' என அடிக்கடி அவள் நெகிழ்வாள்.

ஒருநாள் அவளுக்கு இரண்டு கண்கள் தானமாகக் கிடைக்கப் போகும் செய்தி வந்தது. ஆனந்தத்தில் குதித்தாள். காதலனைக் கட்டியணைத்து சிலிர்த்தாள். அறுவை சிகிச்சை முடிந்தது. பார்வை கிடைத்தது.

பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் முதன் முறையாக தனதுக் காதலனைப் பார்த்தாள்!

அதிர்ந்து போனாள்.

அவன் ஒரு பார்வையிழந்த மனிதன்.

'என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?' ஆனந்தப் பிரவாகத்துடன் கேட்டான் காதலன்.

காதலியோ வழக்கத்துக்கு மாறாக மௌனமானாள்.

'மன்னித்து விடு காதலா! உலகம் அழகானது. பார்வையிழந்த உன்னைத் திருமணம் செய்ய எனக்கு விரும்பமில்லை. உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சொல். செய்கிறேன்' என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள்.

சில நாட்களுக்குப் பின் அவளுக்கு காதலனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

'அன்பே உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்'.

சுயநலமற்ற அன்பு, பிறருடைய ஆனந்தத்துக்காய் எதையும் இழக்கத் தயாராகிறது. தனது கண்களையே காதலிக்குப் பரிசளித்த காதலனைப் போல!

அன்பைக் கெடுக்கும் சுயநலம்- அதை
விட்டு விலகுதல் வெகுநலம்!

சேவியர்

Tuesday, December 20, 2011

கவிதைச்சரம்


குரைப்பின் மொழி 


வெளியே கூட்டிப் போக
ஒரு குரல்.

தனியே விட்டு
ஊர் போய்த் திரும்பினால்
தவிப்பாய்
வேறொரு குரல்.

பேப்பர் போட
வருபவருக்கு ஒருவிதம்.

கொய்யா மரத்தில்
அணிலும் காக்கையும்
விரட்டிப் பிடிக்க முடியாக்
கோபத்தில் ஒருவிதம்.

மேயும் மாடுகளின்
நடமாட்டத்துக்குத்
தொடர் குரைப்பு.

மாதமொருமுறை வரும்
சிலிண்டருக்கோ
பயத்தோடு ஒரு குரைப்பு.

ஓரெழுத்துக் கூடினாலும்
பால்காருக்கும்
தபால்காரருக்கும்
வெவ்வேருவிதம்.

பாம்புக்கு வன்குரல்.

சிறுநீர் கழிக்கவும்
இனம் பெருக்கவும்
வெவ்வேறு தொனிகளில்.

குட்டிகளுடன்
விளையாடுகையில்
செல்லமாய் ஒரு குரல்.

யாருமற்ற இரவுகளில்
தொலைதூரக்
குரைப்புக்கு
பதில் குரைப்பாய்
சில நேரம்.

எதுவுமில்லா அலுப்பூட்டும்
பொழுதுகளில்
ஆயாசமாய் ஒரு குரல்.

திடிக்கிடும் கனவுகள்
கலைகையில்
குழப்பமாய் ஒரு குரல்.

எஜமானன்
இறந்துபோனால்
தேற்ற முடியாத
உயிரின் துயரம்
சொட்டும் குரலென

நாயின் குரல்
நாற்பது விதம்.
 என் கவிதைக்குக்
 கூட இல்லை
 இத்தனை விதம்.

சுந்தர்ஜி

*************************************

பரிதாபம் 

அந்தப் புத்தகத்தைப்
பாதி வரை படிக்கிறீர்கள்
சுவாரஸ்யமாக இல்லை
என்கிறீர்கள்
புரியவில்லை எனச்
சலித்துக்கொள்கிறீர்கள்
வார்த்தைகளின்
தெளிபென்கிறீர்கள்
அவசர வேலையெனக்
குப்புறக்கவிழ்த்துச் செல்கிறீர்கள்
அல்லது அட்டை ஒன்றைப்
பக்கங்களுக்கு இடையில்
செருகி வைக்கிறீர்கள்
அல்லது தேவையே இல்லையென
அடுக்கில் கடாசுகிறீர்கள்
நீங்கள் திரும்ப வந்து
படிக்கப்போவதில்லையென
தெரிந்தே இருக்கிறது
புத்தகத்திற்கும்.
புறக்கணித்தலுக்கு உள்ளான
பக்கங்களில்தான் இருக்கிறது
நீங்கள் அதுவரை
தேடிக்கொண்டிருந்த
கதையின் சாரமென
மௌனமாய் பரிதாபப்படுகிறது
புத்தகம்
உங்களுக்காகவும்
கொஞ்சம் தனக்காகவும்.

சந்தியா

Saturday, December 17, 2011

கேரள மாநிலத்திலிருந்து தமிழர்கள் விரட்டப்படும் அவலம்

 
கேரள மாநிலத்திலிருந்து  தமிழர்கள் விரட்டப்படும் அவலம்
தடுத்து நிறுத்தக் கோரி பிரதமருக்கு இந்திய கலாசார நட்புறவு கழகம் அவசர தந்தி

இந்திய கலாச்சார நட்புறவுக்  கழகம் (இஸ்கப்) அமைப்பின் சென்னை  மாவட்ட செயலாளர் ரதன் சந்திரசேகர் இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள தந்தியில் கூறியிருப்பதாவது-

முல்லைப் பெரியாறு விவகாரம் எதிர்பாராத நிலைமையை  நோக்கி திசை திரும்பியுள்ளது. பிரச்னை தீர்வதற்கு பதிலாக சிக்கல் பெரிதாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

கேரளத்தில் தோட்டப் பணிகளுக்குச் சென்று, வயிற்றைக் கழுவி வரும் ஏழைத் தமிழ்மக்கள் குடும்பம்  குடும்பமாக அங்கிருந்து விரட்டியடிக்கப்படும்  அவலம் எதிர்பாராதது; அதிர்ச்சிகரமானது. இந்திய நாட்டிற்குள் ஓர் இந்தியக் குடிமகன் வாழமுடியாமல் விரட்டியடிக்கப்படுகிற நிலைமை இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சூழலுக்கு வழிவகுத்துவிடும் என்பதில் தங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை.

எனவே, மிக மிக அவசர அணுகுமுறையோடு இப்பிரச்சனையை மத்திய அரசு எதிர்கொண்டு, கேரள மாநிலத்தில் வாழ்கிற தமிழர்களின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க முன்வரவேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது ஒன்றே இரு மாநில மக்களின் அமைதி வாழ்வுக்கு உறுதியளிக்கும் தொலைநோக்கு நடவடிக்கையாக அமையும். இதற்கு தங்கள் தலைமையிலான அரசு செய்து முடிக்கும் என நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம்.

உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு!

சாதனையாளர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையேயான மிக முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா?

சாதனையாளர்கள் தங்கள் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள். அது வெற்றியில் முடிந்தாலும் சரி, தோல்வியில் முடிந்தாலும் சரி, இரண்டையுமே தங்களுடைய தோளில் ஏந்திக் கொள்கிறார்கள்.

சாமானியர்கள் வெற்றிகள் வந்தால் ஏந்திக் கொள்ள தங்கள் தோள்களைத் தயாராக்குகிறார்கள். தோல்வி நெருங்கும் போதோ சுண்டுவிரலைத் தயாராக்குகிறார்கள், அடுத்தவர் மீது பழியைப் போட!

நமது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் நாமே எடுத்துக் கொள்வது என்பது கடினமான வேலை. அதற்கு தளராத மன உறுதியும், தைரியமும், தன் மீது வைக்கும் அழுத்தமான நம்பிக்கையும் வேண்டும்.

நமது செயல்களுக்கான விளைவுகளின் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ளும்போது தான் வாழ்க்கை சுவாரசியமாகிறது. ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனும் வேட்கையும், தவறி விழுந்தால் உடனே எழவேண்டும் எனும் உந்துதலும் அப்போதுதான் உருவாகும்.

இதுதான் வெற்றியாளர்களை உருவாக்குகிறது!
இதுதான் சாதனையாளர்களைச் சம்பாதிக்கிறது!

கொஞ்ச நேரம் உங்கள் அலுவல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு உறவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்குமிடையே இணக்கம் இல்லாததற்கு யார் காரணம்? உங்கள் பெற்றோருடன் பிணைப்பு இல்லாததற்கு யார் காரணம்? நண்பர்களுடன் நட்பு இல்லாததற்கு யார் காரணம்?

அடுத்தவர்களை குறை கூறும் முன், 'நானும் இதற்கு ஒரு காரணமா?' என ஒரு நிமிடம் நிதானித்துப் பாருங்கள்.

இதுவரை உங்கள் மனதிற்குத் தெரியாத ஏகப்பட்ட விஷயங்கள் தெரியவரும்! உங்கள் மனதின் கண் சட்டென இமை விரிக்கும்.

பொதுவாக நாம் நமது தோல்விகளுக்கான காரணங்களை வெளியேதான் தேடுவோம். நமது சோகத்துக்குக் காரணம் நண்பன் என்போம், கோபத்துக்குக் காரணம் தோழி என்போம், ஏமாற்றத்துக்குக் காரணம் மேலாளர் என்போம்.

நமக்கு வெளியே இருப்பவைதான் நம்மை இயக்குகின்றன, நமது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன என்று நாம் கருதிக் கொள்வதே இதன் காரணம்.

நமக்குள்ளே நாம் மூழ்கி நமது தோல்விகளுக்கான காரணங்களை ஆராயத் துவங்கினால் விடைகள் வித்தியாசமாக வரும். நமது ஈகோவோ, பொறுமையின்மையோ, திறமையின்மையோ ஏதோ ஒன்று இதன் காரணமாக இருக்கும்.

காரணங்கள் நமக்குள்ளேயே இருப்பது நல்லது. நமக்குள் இருக்கும் பிழைகளைத் தானே நாம் சரி செய்ய முடியும்! பிறரிடமோ, சூழ்நிலையிடமோ நமது வெற்றி தோல்விக்கான சுக்கான் இருக்கிறது என நாம் கருதிக் கொள்ளும் காலம் வரை நமது வெற்றியை நாம் உருவாக்க முடியாது.

'டைமே இல்லை... இருந்திருந்தா நல்லா எக்ஸர்சைஸ் பண்ணி உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பேன்' என பலரும் சொல்வதுண்டு. உடற்பயிற்சி செய்யாத சோம்பேறித் தனத்தையும், ஆரோக்கியமான உணவைச் சாப்பிடாத கட்டுப்பாடற்ற மனதையும் தப்ப வைப்பதற்காகச் சொல்லப்படும் பொய்- `டைம் இல்லை'.

அந்த சிந்தனையை மாற்றி, 'நாம்தான் அதன் காரணம்' என யோசித்துப் பாருங்களேன்! அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது, வேலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, நடப்பது, ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவது... என செயல்பாடுகளுக்கான வாய்ப்புகள் தோன்றும்.

'நானே பிரச்சினை' என புரிந்து கொள்பவர்கள் 'என்னால்தான் தீர்வு' என்பதையும் அறிந்து கொள்வார்கள்.

தோல்விகளில் மட்டுமல்ல, வெற்றிகளிலும் இப்படியே நடந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஒரு வெற்றி வந்தால் அதற்குக் காரணமும் நீங்களே என உங்கள் மனதைப் பாராட்டுங்கள். உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் வரும். வெற்றிகளில் கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டியது முக்கியம். அதே நேரம் வெற்றிக்குக் காரணமான உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டியதும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

உங்கள் செயல்களுக்கும், முடிவுகளுக்கும் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்வதென்பது நீங்கள் உங்களுக்கு எஜமானன் என்பதைப் போல. 'என்னால் முடியும்' எனும் தன்னம்பிக்கையின் வேர் அது. அது உங்களுக்கு நீங்களே தரும் சுதந்திரம். உங்களுக்கு நீங்களே சூட்டிக் கொள்ளும் கிரீடம்.

'என் செயல்களுக்கு நான் காரணம் அல்ல' என்பவர்கள் அடிமை மனநிலையினர். எப்போதுமே ஏதோ ஒன்றின் அடிமையாய் இருப்பதிலேயே பழகிப் போகின்ற மனநிலைமை. இவர்கள் எக்காலத்திலும் உயரிய இருக்கைகளுக்கு வந்தமர முடியாது.

சிலர் என்ன சொல்வார்கள் தெரியுமா? 'நானும் காரணம்தான், ஆனா நானே முழுக் காரணமல்ல'. இது நம்முடைய வெற்றி தோல்விக்கு இன்னொருவனையும் கூட இழுத்துக் கொள்வது.

'இருட்டில் நடக்கப் பயமாய் இருந்தால் கூடவே ஒரு நண்பனையும் இழுத்துக் கொண்டு போவது போல'. இது தன்னம்பிக்கைக் குறைவின் வெளிப்பாடு, அச்சத்தின் வெளிப்பாடு, தோற்றுப் போய்விடுவோமோ எனும் தடுமாற்றத்தின் விளைவு.

நீங்களே உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம். இதுவரை நீங்கள் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தைக் கொண்டிருக்காவிட்டால், இதுவே தருணம். இப்போது அந்த சிந்தனைக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் நுழையுங்கள்.

'உங்கள் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவற்றை அரவணையுங்கள். உங்கள் தோல்விகளுக்கான பொறுப்பையும் நீங்களே எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வெற்றி சர்வ நிச்சயம்' என்கிறார் ரால்ப் மார்ஸ்டன்.

தோல்விகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போதுதான் உங்களுடைய மன அழுத்தமும் குறையும். வெற்றியை நோக்கிப் பயணிக்க உங்களுக்கு ஊக்கமும் கிடைக்கும். இல்லையேல் `யாரைக் குறை சொல்லலாம்' என தேடுவதிலேயே ஒட்டு மொத்த சக்தியும் வீணாகிவிடும்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், வெற்றிகளில் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள், தோல்விகளில்தான் கற்றுக் கொள்வீர்கள்.

கூடைப்பந்து விளையாட்டுப் பிரியர்களுக்கெல்லாம் பிரமிப்பைத் தரும் பெயர் மைக்கேல் ஜோர்டன். அவர் தனது வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், 'இருபத்து ஆறு விளையாட்டுகளில் என்னிடம் தரப்பட்ட கடைசி வாய்ப்பில் தோல்வியடைந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருந்ததால் தான் என்னால் வெற்றியாளனாய் மாற முடிந்தது. காரணம் எனது தோல்விக்கான காரணம் நான் என்பதை அறிந்திருக்கிறேன்' என்கிறார்.

தங்கள் செயலுக்குத் தாங்களே பொறுப்பேற்பவர்கள் பாசிடிவ் மனநிலையினர். வாழ்க்கையை எதிர்மறையாய் அணுகுபவர்களே அடுத்தவர்களை நோக்கிக் குறை சொல்கிறார்கள் என்கிறது தெற்கு கலிபோர்னியாவில் நடந்த ஆராய்ச்சி ஒன்று.

அடுத்தவர்கள் மேல் பழி போட்டு ஹாயாக பொய்களின் மேல் படுத்துறங்குபவர்களின் பட்டியலில் மேலதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு. தங்களுடைய 'இமேஜ்' போய் விடக் கூடாது என்பதற்காக பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் போட்டு விடுகிறார்கள்.

ஆனால் தைரியமான தலைவர்களோ தங்களுடைய தவறுக்கு தாங்களே பொறுப்பேற்று அதை நிவர்த்தி செய்யும் வழியை யோசிப்பார்கள். பிறர் மேல் பழி போடாத தலைவர்களைக் கொண்ட நிறுவனம் உயரங்களைச் சந்திக்கும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், 'இப்படித் தான் நீ சிந்திக்க வேண்டும்', 'உன்னுடைய உணர்வுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் யாராச்சும் உங்களைக் கட்டாயப்படுத்த முடியுமா?

உங்களுடைய சிந்தனைகளும், உணர்வுகளும் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் போது, செயல்கள் மட்டும் உங்களிடம் இல்லை என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எந்த ஒரு செயலையும் நமது மனம்தான் தீர்மானிக்கிறது. சிரிக்க வேண்டுமா, அழ வேண்டுமா என்பதைக் கூட நாமேதான் தீர்மானிக்கிறோம். ஒருவரை திட்ட வேண்டுமா, பாராட்ட வேண்டுமா என்பதையும் நாமேதான் தீர்மானிக்கிறோம்.

காலையில் அவசரமாக காரோட்டிக் கொண்டிருக்கும் போது எதிரே ஒருவன் வந்தால் திட்டுகிறோம். `டிராபிக்கில் சட்டென குறுக்கே வந்ததால் திட்டிட்டேன்' என பழியைத் தூக்கி வெளியே போடுகிறோம்.

எப்போதாவது 'என்னோட கோபத்தால் திட்டிட்டேன்' என்று சொன்னதுண்டா?

சின்னச் சின்ன செயல்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதானே பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதன் முதல் படி?

உங்களுடைய திறமைகளின் மீது நீங்கள் நம்பிக்கை வைக்காதபோது தான் அடுத்தவர் களையோ, விதியையோ, சூழலையோ குற்றம் சுமத்த முயல்கிறீர்கள். 'தனது செயல்களுக்கான பொறுப்பை ஏற்காதவர்கள் மரியாதை குறைவானவர்களாகவும், அதிகம் கற்க முடியாதவர்களாகவும், பிறரை போல திறமையாக செயல்படாதவர்களாகவும் மாறிவிடுவார்கள்' என்கிறது ஆராய்ச்சி ஒன்று.

பயத்தைப் புறந்தள்ளி, தன்னம்பிக்கையைக் கையில் எடுத்து, தன்னையே நேசித்து, தாழ்மையைக் கைக்கொண்டு, தனது செயல்களுக்கான பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது வெற்றிக்கான ரகசியம்.

உனது செயல்களுக்கு நீயே பொறுப்பு
உணரும் பொழுதில் வெற்றிகள் உனக்கு!

சேவியர்

Tuesday, December 13, 2011

அச்சமில்லை அச்சமில்லை...

''உங்களுக்குத் தண்ணீர் தருகிறோம் எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்'' - கேரளா அரசு

"முல்லைப் பெரியார் அணை மூலம் நாம் பெறும் நீரை விட அதிகமாகக் கண்ணுக்கு புலனாகாத நீரைக் கேரளத்துக்கு அளிக்கிறோம்" -
தமிழக அரசு

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக முல்லை பெரியாறுப் பிரச்சனை முறுக்கேறிக் கொண்டு செல்வதைப் பார்த்தால் தமிழகம் இன்னொரு உணர்ச்சி மயமான பிரச்சனையைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறதோ என அஞ்சத் தோன்றுகிறது.


பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு ஜீவன் போகிறதென்ற பிரச்சனை - என்னதான் நடக்கிறது இங்கே? வீடியோவைப் பாருங்கள்...Monday, December 12, 2011

தோழர் L.G கீதானந்தனுக்கு அஞ்சலி

இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் கம்யூனிச பேரியக்கத்தின் தூண்களில் ஒன்று இன்று சரிந்துவிட்டது. ஆம்! சிறந்த மேடை பேச்சாளரும், மார்க்சிச தத்துவ ஞானியுமான தோழர் L.G என அன்போடு அழைக்கப்படும் L.G கீதானந்தன் அவர்கள் கோவையில் இன்று காலமானார். கடந்த சில வருடங்களாக சிறு நீரக கோளாறு என்னும் கொடிய நோயினால் தோழர் பாதிக்கப்பட்டிருந்தார்.

1967களில் M.L. இயக்கத்தின் பிதாமகன்களில் ஒருவராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய தோழர் L.G, 70ன் பிற்பகுதியில் தோழர் கல்யாண சுந்தரத்தின் முயற்சியால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் தொண்டாற்றினார். தோழர் அவர்களின் கடின உழைப்பும் அரசியல் ஞானமும் அவரைக் கட்சியில் கோவை மாவட்டச் செயலாளராகவும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் உயர்ந்த பொறுப்புகளில் அமர்ந்து சேவையாற்ற காலம் பணித்தது.

இலங்கையில் ஈழ விடுதலை போராட்டம் முனைப்படைந்திருந்த சமயங்களில் அந்த போராட்டம் பற்றிய தெளிவான பார்வையை கொண்டிருந்த தமிழக தலைவர்களில் தோழர் L.G முக்கியமானவர். தோழர் பத்மநாபாவை ஈழத்தின் சரியான அரசியல் தலைமையாக ஏற்றுக்கொண்ட தமிழக தோழர்களில் ஒருவர் L.G என்ற பெருமை எமக்கு எப்போதும் உண்டு. தோழர்.பத்மநாபாவின் நினைவு மலரில் '20 ஆண்டு காலம் ஈழ விடுதலை போரில் தன்னை அர்பணித்து கொண்ட தோழர் நாபாவின் வரலாறு நம் இதயத்தில் நிரம்பி வழிகிறது. ஒரு புரட்சிகர தலைமைக்கேற்ற கொள்கையும், நடைமுறையும் கொண்டிருந்தார் அவர்' என்று L.G. அவர்கள் கூறியிருந்தார்.  

1987 களில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போதும், அதன் தொடர்ச்சியாக ஈபிஆர்எல்எப் தோற்றுவித்த வடக்கு கிழக்கு மாகாண அரசாங்கம் அமைந்த போதும் அதற்கு ஆதரவாக பல்வேறு அரங்கங்களில் அவர் ஆற்றிய சொற்பொழிவு வரலாற்று முக்கியத்துவம் உடையது. தோழர் நாபாவின் படுகொலை தமிழகத்தில் நடந்த போது அந்த நிகழ்வையும், புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் கடுமையாக விமர்சித்த தமிழக தலைவர்களில் தோழர் L.G. மிக முக்கியமானவர்.

தோழர் L.G.யின் அரசியல் வகுப்புகள், அவர் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் எல்லாம் மானுட விடுதலையை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாகும். தோழர் பத்மநாபாவின் மறைவின் பின் மனச்சோர்வடைந்திருந்த எமது தோழர்களுக்கு L.G. யின் தோழமை நிறைந்த ஆதரவு எம்மால் காலத்தாலும் மறக்கப்பட முடியாதது. 

ஒரு மகத்தான அரசியல் ஞானியை, நல்ல தோழனை இழந்து வாடும் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஈழ மக்கள் சார்பில் எமது அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம். 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - சென்னை

Saturday, December 10, 2011

பேசுங்கள், வெற்றிகள் வசமாகும்

'வாயுள்ள புள்ளை பொழைக்கும்' என்பது கிராமங்களில் நிலவும் பழமொழிகளில் ஒன்று.

அதே போல 'நுணலும் தன் வாயால் கெடும்' எனும் பழமொழியும் நமக்குத் தெரிந்ததே.

நமது பேச்சே நம்மை வாழவும் வைக்கும், அழிக்கவும் செய்யும் என்பதே இவை சொல்லும் சேதி.

பேச்சைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.

சிலர் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். 'எப்படா நிறுத்துவான்' என நாம் காத்துக் கொண்டிருப்போம்.

சிலர் பேசவே மாட்டார்கள். 'பேசறதுக்குக் காசு கேப்பான் இவன்' என ஒரு கமெண்ட் அடிப்போம்.

சிலர் கனகச்சிதமாய்ப் பேசுவார்கள். 'பேசினா கேட்டுட்டே இருக்கலாம்பா' என வியந்து போவோம்.

'உங்கள் பேச்சைக் கொஞ்சம் கவனிக்காவிட்டால், விளைவுகளை ரொம்பவே கவனிக்க வேண்டியிருக்கும்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.

ஒரு மனிதனுடைய பேச்சு அவனை வெற்றியாளனாகவோ, தோல்வியாளனாகவோ உருமாற்ற முடியும். 'எப்படிப் பேசவேண்டும், எங்கே பேசவேண்டும், எதைப் பேசவேண்டும்' எனும் மூன்று விஷயங்களைத் தெரிந்து கொண்டால் போதும்.

நண்பர்களுக்கு இடையேயான பேச்சு நன்றாய் இருக்கும்போது நட்பு வலுவடைகிறது. குடும்பத்தில் பேச்சு ஆரோக்கியமாக இருக்கும்போது குடும்ப வாழ்க்கை சிறப்பாகிறது. அலுவல் சூழலில் பேச்சு கச்சிதமாய் அமையும் போது அலுவலில் வெற்றிகள் வந்து சூழ்ந்து கொள்கின்றன.

ஒரு பேச்சு வெற்றிகரமாய் அமைய சில அடிப்படை விஷயங்களை நாம் கவனத்தில் கொண்டாலே போதும்.

பேச வேண்டுமெனும் ஆர்வமும், சுவாரசியமும் மனதில் இல்லையெனில் பேசாதீர்கள். மனதின் வார்த்தையையே உதடு பேசும். உற்சாகமாய் பேசுங்கள். உங்கள் பேச்சிலுள்ள உற்சாகம் அடுத்த நபரையும் தொற்றிக் கொள்ளும்போது ஓர் உரையாடல் அழகாகி விடுகிறது.

பேச்சில் உண்மை உலவ வேண்டியது அடிப்படை விஷயம். சொல்லப்படாத உண்மையும், சொல்லப்படும் பொய்யும் பலவேளைகளில் ஒரே பணியைச் செய்து விடுகின்றன. எதையாவது பேசவேண்டுமே என பொய்யான விஷயங்களையோ, இட்டுக் கட்டிய, ஜோடித்த சமாச்சாரங்களையோ அவிழ்த்து விடவே விடாதீர்கள். உங்கள் நம்பகத் தன்மையை ஒருமுறை இழந்து விட்டால் பின் அதை மீண்டெடுப்பது குதிரைக் கொம்பு என்பதை மறக்க வேண்டாம்.

எப்படிப் பேசவேண்டும் என்பது பேச்சின் அடிநாதம். எந்த ஒரு சுவாரசியமான விஷயத்தையும் போரடிக்கும் விதமாகவும் சொல்லலாம். எந்த ஒரு போரடிக்கும் சமாச்சாரத்தையும் சுவாரசியமாகவும் சொல்லலாம். சொல்ல வேண்டிய விஷயத்தை எப்படிச் சொல்வது என்பது ஒரு கலை. சொல்ல வரும் விஷயத்தை நிறுத்தி நிதானமாய் பேசுவதும், எல்லோருக்கும் கேட்கும் விதமாக தெளிவாக சத்தமாகப் பேசுவதும் நல்ல உரையாடலுக்கான பால பாடங்கள்.

பேச்சை விஷயத்துக்குத் தக்கபடி உணர்வு கலந்து பேசவேண்டியது இன்னொரு விஷயம். தெளிவான பேச்சில் உணர்வு கலக்கும் போது அது வலிமையாகிறது. அத்துடன் கூடவே உங்கள் உடல்மொழியும் இணையும் போது அது அற்புதமான உரையாடலாய் அமைந்து விடுகிறது.

சரியான உடல்மொழி, ஒரு உரையாடலை எப்போதுமே மிகவும் `பவர்புல்' ஆக்கும். நேரடியான உரையாடலுக்கும், தொலைபேசி உரையாடலுக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமே இந்த உடல்மொழி தான். ஒரு சின்னப் புன்னகை, ஒரு கண்சிமிட்டல் கூட ஒரு உரையாடலின் தன்மையை தலைகீழாய்ப் புரட்டிப் போடும்! எனவே உடல் மொழியில் கவனம் செலுத்துங்கள்.

பேசும்போது கண்களைப் பார்த்துப் பேசுவது உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். கண்களைப் பார்த்துப் பேசும்போது எதிர் நபரின் கவனிப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கும். உங்களுடைய உரையாடலின் சாரம்சத்தை நீங்கள் மிகத் தெளிவாக உங்கள் பார்வையின் இயல்பின் மூலமாய் வெளிப்படுத்தவும் முடியும்.

'நான் பேசுவதுதான் சரி, மற்றவர்கள் பேசுவதெல்லாம் தவறு' என நிறுவ முயன்றீர்களென்றால் எந்த உரையாடலும் தோற்று விடும். ஆரோக்கியமான உரையாடலுக்கு முக்கியத் தேவை 'செவிமடுப்பது'. பிறருடைய கருத்துகளைக் கேட்பதும், அவற்றில் சரியானவற்றை ஈகோ இன்றி ஏற்றுக் கொள்வதும் சிறந்த உரையாடலுக்கான அம்சங்கள்.

பேசும் போது நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்க வேண்டுமென நினைப்பதும், யாராவது சுவாரசியமாய் ஒரு விஷயத்தைப் பேசும்போது நடுவிலேயே கட் பண்ணி சொந்தக் கதையைப் பேசுவதும் தப்பு. அது அவரை அவமானப்படுத்தும் செயல் என்பதை மனதில் எழுதுங்கள்.

பழம் பெருமை பேசிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் எரிச்சல் பார்ட்டிகளே. 'அப்பல்லாம்..', 'நான் அங்கே இருந்தப்போ...' என இழுக்கும் மக்கள் உரையாடலை அழுக்காக்கி விடுவதுண்டு. பேசும்போது கடந்தகால விஷயங்களைச் சேர்ப்பது தப்பில்லை. ஆனால் அது சமையலில் கலக்கும் உப்பு போல இருப்பதே சிறப்பானது. மற்றபடி நிகழ்காலத்தில் நின்று பேசுவதே நல்லது!

பேச்சில் சுவாரசியம் இருக்க வேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கையும் சுவாரசியமாய் இருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கையை சுவாரசியமே இல்லாமல் அணுகுபவர்களால் தங்கள் பேச்சை மட்டும் சுவாரசியமாய் அமைத்துக் கொள்வது கடினம். பாசிடிவ் சிந்தனையும், உற்சாகமும் மிளிரும் பேச்சுகள் ரசனைக்குரியவை!

உங்கள் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர வேண்டியது வெற்றிக்குத் தேவை. அதற்கு நீங்கள் உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்களோ, அதில் உங்களுக்கு அறிவோ, அனுபவமோ, திறமையோ இருக்கும் போது உரையாடல் வெற்றியடையும். தன்னம்பிக்கையான பேச்சும் அப்போதுதான் உருவாகும்.

கொஞ்சம் நகைச்சுவை உணர்வு உங்கள் பேச்சில் இருந்தால் நீங்கள் ரொம்பவே வரவேற்கப்படுவீர்கள். சுவாரசியமான மனிதர்கள் நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள். நகைச்சுவையை ரசிப்பார்கள். பேச்சில் நகைச்சுவை உணர்வு இருந்தால் குடும்ப வாழ்க்கை ஆரோக்கியமாய் இருக்கும், நட்பு வட்டாரம் சிறப்பாய் இருக்கும் என்பது ஆய்வுகள் சொல்லும் சேதி!

குட்டிக் குட்டி வாக்கியங்களால் பெரிய பெரிய விஷயங்களைச் சொல்வது உரையாடலில் இருக்க வேண்டிய வசீகர அம்சம். நீண்ட வாக்கியங்களைப் பேச ஆரம்பித்தால் முடிவு வரும் போது துவக்கம் தொலைந்து போய்விடக் கூடும். சின்னச் சின்ன வாக்கியங்களே கேட்பவர்களுக்கு எளிதானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒரு விஷயத்தை நாம் சொல்லும் போது அடுத்தவருக்கு ரசிக்குமா? என்பதை பிறருடைய மனநிலையில் நின்று பார்ப்பது ஓர் உயரிய வழி. உங்கள் உரையாடலை தரமானதாகவும், உயர்வானதாகவும் மாற்றும் நல்ல வழி அது.

எதையும் நீங்களாகவே யூகித்துக் கொண்டு பேசாதீர்கள். புரியாதவற்றைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வது முக்கியம். உங்களுக்குப் பிடித்தமான வகையில் எதையும் அர்த்தம் புரிந்து கொண்டு பேசாதீர்கள்.

அதேபோல நீங்கள் சொன்ன விஷயம் அடுத்த நபருக்குப் புரிந்ததா என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எளிது என தோன்றும் விஷயங்கள் இன்னொருவருக்குப் புரிந்து கொள்ளக் கடினமாய் இருக்கலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எப்போதுமே நிலை தடுமாறிப் பேசுவதோ, கத்துவதோ, எரிச்சலைக் காட்டுவதோ ஒரு நல்ல உரையாடலை உடைக்கும் விஷயங்கள். அத்தகைய உரையாடல்கள் உங்கள் வெற்றியின் கதவுகளை இறுகச் சாத்திப் பூட்டிவிடும். எனவே எச்சரிக்கை தேவை.

அடுத்தவருடைய பிழையைக் கண்ணியமாய்க் கோடிட்டுக் காட்டுவதில் தவறில்லை. ஆனால் அதையே பேசி அடுத்த நபரைச் சின்னதாக்கும் முயற்சி கூடவே கூடாது. அது உறவுகளையே பலவீனப்படுத்தும்.

அடுத்தவர்களைக் காயப்படுத்தும் எந்த உரையாடலுமே தோல்விதான். அது குடும்ப உறவுகள் சார்ந்ததானாலும் சரி, அலுவலக உரையாடலானாலும் சரி. பிறரை மதிப்பதும், அவர்களுடைய உணர்வுகளை மதிப்பதும் நமக்கு இருக்க வேண்டிய அடிப்படை மனித குணங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

ஓர் உரையாடலுக்கு சிறப்பான தயாரிப்பு இருக்க வேண்டியது அவசியம். யாரிடம் பேசப் போகிறீர்களோ அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பதும், அது சம்பந்தமான உரையாடலை ஆர்வமுடன் அணுகுவதும் உரையாடலை அர்த்தமுள்ளதாக்கும்.

யாராவது நல்ல கருத்தைச் சொன்னால் பாராட்டத் தயங்காதீர்கள். சரியான நேரத்தில் வழங்கப்படும் ஒரு பாராட்டு கூட சிறப்பானதொரு உரையாடலின் அம்சமே. குறிப்பாக அவர்கள் சொல்லும் விஷயங்களில் சிறப்பான ஒரு விஷயத்தைக் கோடிட்டுப் பாராட்டுதல் வெகு சிறப்பு.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உரையாடலின் வெற்றி என்பது நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை, சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி விட்டீர்களா? அது அடுத்த நபரைச் சென்று சேர்ந்ததா என்பது மட்டும்தான். அதை அடுத்த நபர் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவருடைய ரசனையையோ, தேவையையோ பொறுத்தது. எனவே அடுத்தவர் ஒத்துக் கொண்டால்தான் உங்கள் உரையாடல் வெற்றி எனும் தப்பான அபிப்பிராயத்திலிருந்து வெளியே வாருங்கள்.

மனதின் நாவால் பேசுங்கள்!
வெற்றித் திலகம் பூசுங்கள்!

சேவியர்

Friday, December 9, 2011

கவிதைச்சரம்

ஆறு ஆறாய் இருந்ததில்லை

ழு வயதில்
தத்தனேரி சுடுகாட்டில்
அம்மாச்சியை எரித்துவிட்டுத்
திரும்பும்போது
கறுப்பாய், பம்புசெட் வழி
அறிமுகமானது ஆறு.

மதுரைக்குச் சாமான்கள் வாங்க
நெல்பேட்டைப் பட்டறைகளின்
இரும்புச் சத்தம்
அதிரக் கரையிலிருந்து வரவேற்க
ஆழ்வார்புரம் வழி
ஒபூலா படித்துறை ஏறுவாள்
தங்கபாப்பு அத்தை.

ஒரு வாரம் காய்ச்சலில் கிடந்தார்கள்
மல்லிகா சித்தியும் பிரபா சித்தியும்
கல்பனா தியேட்டருக்கு
குறுக்கு வழியில் போவோமென
கால் வழுக்கி

நல்ல தண்ணீர் ஊத்துகுழியில்
விழுந்து.

மடப்புரத்துக்கு
சாமி கும்பிடப் போனபோது
ஆற்று மணலின்
சூடு பொறுக்காமல்
அழுத என்னைத்
தூக்கிக்கொண்டு ஓடியவள்
சுந்தரவல்லி பெரியம்மா.

சின்ன அம்மாச்சி மகன்
நாகரத்தினம் செத்துக்கிடந்தது
நடுத்திட்டு லிங்கத்தின் கீழே.

எட்டாவது பி செக்ஷன் சூரிய நாராயணன்
சலவைத் துறையில்
மண்ணெண்ணெய் பாட்டிலை
தேடித் தேடி உடைப்பான்.

ராமேஸ்வரத்தில் பிடிபட்டவர்களை
ரகசியமாக இங்குவைத்தே எரித்தார்கள்.
அப்பாவைத் தகனம் செய்துவிட்டு
சத்குரு சங்கீதக் கல்லூரிக்கும்
டாஸ்மாக்குக்கும் இடையிலிருக்கும்
மாநகராட்சிக் குளியலறையில்
முடித்துக்கொண்டோம் காரியங்களை.

எக்காலத்திலும் எவருக்கும்
ஆறு ஆறாக இல்லை
தனக்கும்!

சாம்ராஜ்


****************************

பச்சை நிறத் துரோகம்

கிளிக்குஞ்சு
மரப்பொந்திலிருந்து எடுத்துவரப்படுகிறது
குழந்தை
வீட்டிலிருந்து கூட்டிவரப்படுகிறது

கிளிக்குஞ்சு கூண்டில் அடைக்கப்படுகிறது
குழந்தை அழத் துவங்குகிறது

பழம் கொடுக்கப்படுகிறது கிளிக்கு
அழுகையை நிறுத்திவிடுகிறது குழந்தை

கிளி பழத்துக்கு அடிமைப்படுகிறது
குழந்தை பாடல்களைக் கற்றுக்கொள்கிறது

சீட்டுக்களைக் கலைத்து
நெல்மணியைப் பெற்றுக்கொள்கிறது கிளி
புத்தகங்களை அடுக்கி
பாராட்டுப் பெறுகிறது குழந்தை

தனியாகப் பள்ளி செல்லப்
பழகிவிட்டது குழந்தை
கவனமாக வெட்டிவிடப்படுகின்றன
கிளியின் சிறகுகள்

வெளிச்சமாயிருப்பதாகச்
சொல்லப்படுகிறது
குழந்தையின் எதிர்காலம்
நல்ல காலம் பிறக்குமென
எழுதப்பட்டிருக்கிறது கிளிச் சீட்டில் ! 

இளையநிலா ஜான்சுந்தர்

****************************

நிராகரிப்பின் சுவை

ரே ஒரு வார்த்தையிலிருந்தே
துவங்குகிறது
நிராகரிப்பின் வேதனை.

அதன் சுவை
கசப்பென்று சொல்வதுகூட
ஓர் ஒப்பீட்டுகாகத்தான்.
அதை உணர்வது
நாவுகள் மட்டுமல்ல என்பது
மேலும் வேதனை தரக்கூடியது.

எல்லையைத்
தாண்டிகொண்டிருக்கும் ஏதிலி
காதலியின் திருமண அழைப்பிதழை
அஞ்சலில் பெற்றவன்
மேல்முறையீடு
கிடைக்கப் பெறாத குற்றவாளி
திருமண விருந்திலிருந்து
வெளியேற்றப்படுபவன்
நாளிதழில் தன் தேர்வு எண்ணைக்
காணப் பெறாதவன் என
நிராகரிப்பின் முகவரிகள் நீள்கின்றன.

நிராகரிப்புக்கு உள்ளானோர்
நீட்டும் சுட்டுவிரலின் முன்
குற்றவாளியாக
அடையாளம் காணப்படுகின்றன
அன்னை மார்பு முதல்
அணு மின் உலை வரை.

மதச் சொற்பொழிவில்
தவறாது இடம் பிடிக்கும்
நரகம்குறித்த சொல்லாடல்களைப்
புன்னகையுடனே
எதிர்கொள்கின்றனர்
நிராகரிப்பின் சுவை உணர்ந்தோர்.

மானசீகன் 
 

****************************

எதிர்வினை

முதல் தளத்திலிருந்த
என் வீட்டுக்கு ஏறினேன்
என் கால்களுக்குக் கீழே
இறங்கிச் சென்றன
படிக்கட்டுகள்.

நா.அருள்ஜோதியன் 
 
 

Monday, December 5, 2011

உடலைப் பேணினால், மனமும் வலுவாகும்!

'நமது உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க வேண்டியது நமது முதன்மையான வேலை. இல்லையேல் நமது மனம் வலுவாகவும், தெளிவாகவும் இருக்காது' என்கிறார் புத்தர். உடலும் மனமும் எதிரெதிர் துருவங்களல்ல, ஒன்றின் ஆரோக்கியமும், பலவீனமும் அடுத்ததைப் பாதிக்கும் என்பதே புத்தர் சொல்லும் அறிவியல் உண்மையாகும்.

உலக அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும், இந்திய அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும் அச்சத்துடன் தெரிவிக்கும் விஷயம் `இன்றைய இளம் தலைமுறையினர் ஆரோக்கியமில்லாமல் இருக்கிறார்கள்' என்பதுதான். அதற்குக் காரணம் இளம் வயதினரின் ஏனோதானோ மனநிலை என்று சொல்வதில் தப்பில்லை என நினைக்கிறேன். 'ஒபிசிடி' எனப்படும் அதீத உடல் பருமன் பிரச்சினை இன்று பரவலாய் எல்லா இடங்களிலும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.

பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் புட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை பலரும் ஆர்வத்துடன் அரவணைத்துக் கொள்கிறார்கள். ஊடகங்கள் கூவி விற்கும், சிப்ஸ், குளிர்பானங்கள் போன்றவையும் அவற்றுடன் சேர்ந்து கொள்ள... அதீத உடல் பருமன் பிரச்சினை ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறது.

'டெய்லி நினைப்பேன், ஆனா உடற்பயிற்சி செய்ய நேரமே கிடைக்கிறதில்லை' என புலம்பும் பலரையும் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறோம். அவசர உலகில் நமக்கு எதற்குமே நேரமில்லை. அந்தப் பட்டியலின் கடைசி யில்தான் உடற்பயிற்சி எப்போதும் வந்து தொற்றிக் கொள்கிறது.

உண்மையில் உடற்பயிற்சி நமது பட்டியலின் கடைசி இடத்துக்கானதுதானா?

'நமக்கு நோய் ஏதும் வந்ததில்லை என்பதற்காக நாம் ஆரோக்கியமாய் இருக்கிறோம் என்றும் அர்த்தமில்லை' என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்துக்காக நாம் பென்ஷன் பிளான், இன்சூரன்ஸ் பாலிசி, நீண்ட கால சேமிப்பு அது இது என ஏகப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். உண்மையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான சேமிப்பு உடல் ஆரோக்கியம்தான். இளமையில் ஆரோக்கியமாய் இருந்தால் முதுமையில் நல்ல நினைவு சக்தியுடன் வாழலாம் என்கிறது மருத்துவம்.

இன்றைய இளைஞர்கள் முன்னால் பல லட்சியங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போட்டி மிகுந்த உலகில் எப்படியேனும் முன்னுக்கு வரவேண்டும் எனும் ஆர்வமும், கட்டாயமும் அவர்களுக்கு உண்டு. வேலை கிடைக்கும் வரை புத்தகப் பூச்சிகளாகவும், வேலை கிடைத்தபின் இரவிலும் வேலை செய்யும் ஆந்தைகளாகவும் இருக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு.

இதனாலேயே உடற்பயிற்சி எண்ணத்தைக் கட்டிப் பரணில் போட்டுவிடுகின்றனர்.

ஆனால் ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன தெரியுமா?

சீரான உடற்பயிற்சி செய்பவர்களுக்குதான் மூளை சுறுசுறுப்பாக இருக்குமாம். மூளையில் புதிய செல்கள் உருவாக உடற்பயிற்சி தூண்டுதலாய் இருக்கும். இதனால் நினைவாற்றல், படிப்பு, முடிவெடுக்கும் திறன் என பல விஷயங்களிலும் அதிக திறமை இருக்கும் என்கின்றனர்.

குறிப்பாக தைவானிலுள்ள தேசிய செங் குங் மருத்துவக் கல்லூரி இதை விரிவான ஒரு ஆய்வு மூலம் சமீபத்தில் உறுதி செய்திருக்கிறது.

'ஆரோக்கியமான உடல் என்பது மனம் தங்கும் மாளிகை. பலவீனமான உடல் என்பது மனம் அடைபடும் சிறை' என்கிறார் பிரான்சிஸ் பேகான்.

நமது உற்சாகமான மனதுக்கு ஆரோக்கியமான உடல் உறுதுணையாய் இருக்கிறது. உடலில் உயிர்வளி அதிகமாய் உலவவும், சீரான ரத்த ஓட்டம் இருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது என்பது நமக்குத் தெரிந்ததே. அதெல்லாம் நமது மனதுக்கும் ரொம்பவே நல்லது என்பதுதான் சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமெனில், உடற்பயிற்சியின் போது உடலின் என்டோர்பின்கள் அதிகமாகச் சுரக்கின்றன. என்டோர்பின்கள் நமக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் வல்லமை கொண்டவை. நீங்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் உங்களுடைய மன இறுக்கம், கோபம், சோகம் எல்லாம் காணாமல் போவதன் காரணம் இதுதான்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது, உங்களுடைய ஆயுள் காலத்தை நீட்டிக்கவும் உதவுகிறது. சுவீடனிலுள்ள ஒஸ்ட்ரா பல்கலைக்கழக இருபதாண்டு ஆய்வு இதை தெரிவித்திருந்தது. திடீரென நோய் வந்தோ, மாரடைப்பு வந்தோ பொசுக்கென போய்விடாமல் இருக்க சீரான உடற்பயிற்சி உதவுகிறது.

பலரும் உடல் ஆரோக்கியத்திற்கும், மனதுக்கும் தொடர்பு இல்லை என நினைக்கிறார்கள். அது ரொம்பத் தப்பான அபிப்பிராயம். உடலின் ஆரோக்கியமே மனதின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. அதேபோல மனம் உற்சாகமாய் இருக்கும் போது உடலும் ஆரோக்கியமாய் நடைபோடுகிறது.

எனவே உடலைப் பராமரிக்க வேண்டியது அதி முக்கியமானதாகிப் போகிறது. மன அழுத்தத்தையும் ஆரோக்கியமான உடல் விரட்டி அடிக்கிறது! இதை பல்வேறு ஆராய்ச்சிகள் உறுதி செய்திருக்கின்றன.

குறிப்பாக அமெரிக்காவின் தர்ஹம் பல்கலைக்கழகம் இது குறித்து சிறப்பான சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அதில் உடல் ஆரோக்கியம் மன அழுத்தத்தை எதிர்க்கிறது எனும் அழுத்தமான முடிவு கிடைத்தது. மன அழுத்தம் பல்வேறு நோய்களையும் தன்னோடு இழுத்து வரும்.

அழுத்தமற்ற மனம் இருந்தால் நோயற்ற உடல் சாத்தியமாகிறது. அது நமது இலக்கை நோக்கிப் பயணிக்கும் உத்வேகத்தையும், வலிமையையும் நமக்குத் தருகிறது. அதனால் தான் `சேமிக்க வேண்டியது பொன்னையோ வெள்ளியையோ அல்ல. உடல் ஆரோக்கியத்தையே' என்றார் மகாத்மா காந்தி.

உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மருத்துவம் சில எளிய வழிகளை மருத்துவக் காரணங்களோடு சொல்கிறது. முதலாவது, சரியான உணவுகளைச் சாப்பிடுவது. நாவின் சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சகட்டு மேனிக்கு எதையாவது உள்ளே தள்ளினால், நடுவயதுக்குப் பின் ஆரோக்கியம் படு பலவீனமாகிவிடும்.

இளமைக் காலத்திலேயே காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என சரியான உணவுகளைப் பயன்படுத்த வேண்டும். 80 சதவீதம் ஆரோக்கியமான உணவு 20 சதவீதம் குறைந்த ஆரோக்கிய உணவு எனும் 80-20 பாலிசியைக் கடைபிடிக்க மருத்துவம் அறிவுறுத்துகிறது.

'நான் பிரேக் ஃபாஸ்டே சாப்பிடறதில்லை, அதுக்கெல்லாம் ஏது நேரம்' என சலித்துக் கொள்பவர்களுக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள். காலை உணவு சாப்பிடாமல் ஓடுபவர்கள் உடலில் அதிக கொழுப்பு சேரும் என்கின்றனர் அவர்கள்.

மிக எளிதாக கிடைக்கும் விஷயங்களை நாம் பொருட்படுத்துவதில்லை என்பது துயரமான உண்மை. அதில் மிக மிக முக்கியமானது தண்ணீர். நமது உடல் 60 சதவீதம் தண்ணீரால் ஆனது. நமது உடலின் சீரான ஆரோக்கியத்துக்கும், இயக்கத்துக்கும் தண்ணீர் மிக மிக முக்கியம். இருபது கிலோ உடல் எடைக்கு ஒரு லிட்டர் எனுமளவில் தினமும் தண்ணீர் குடிப்பது ரொம்ப நல்லது என்கிறது மருத்துவம்.

இன்றைய இளைஞர்கள் கவனக்குறைவாக விட்டு விடும் இன்னொரு விஷயம் `தூக்கம்'.

இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும், மிக தாமதமாகத் தூங்குவதும் உடல்நலத்தின் மிகப்பெரிய எதிரிகள். மறு நாள் முழுவதும் சோர்வாகவும், உற்சாகமின்றியும் உடல் தடுமாறும். மூளைக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வும், உயிர் வழியும் கிடைக்காமல் மூளை உற்சாகமிழக்கும். எனவே தூக்கம் என்பது முக்கியமான ஒரு வேலையே எனும் சிந்தனையில் அணுகுங்கள்.

புகை, மது போன்ற பழக்கங்களை முற்றிலுமாக விட்டு விட வேண்டியது ரொம்ப முக்கியம் என்பதை நான் சொல்லத்தேவையில்லை. புகை பிடித்தலினால் வரும் நோய்களையும், உடல் பலவீனங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருக்கலாம். அது குறித்த ஆய்வுகள் பல நூறு வந்திருக்கின்றன.

புகையை விட்டு விட்டாலே உடலின் ஆரோக்கியம் சீரான முன்னேற்றத்தை அடையும் என்பது சர்வ நிச்சயம். `மனிதனுடைய நோய் அவனுடைய தனிப்பட்ட சொத்து' என்கிறார் அலொன்சோ கிளார்க். ஒருவருடைய நோயை இன்னொருவர் சுமக்க முடியாது என்பதே அவர் சொல்லும் செய்தி.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை நமது உடலின் ஆக்சிஜன் அளவைக் குறைத்து விடும். நமது மூச்சுக்காற்றிலுள்ள ஆக்சிஜனில் 80 சதவீதம் நமது மூளைக்குச் செல்கிறது. நாம் எவ்வளவு சுத்தமான, தூய்மையான காற்றை உள்ளிழுக்கிறோமோ அதில் 80 சதவீதம் பிராண வாயுவை மூளை தனக்காய்ப் பயன்படுத்திக் கொள்கிறது.

அதனால் தான் மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றை அனுபவசாலிகள் முன்மொழிகிறார்கள். எதுவும் தெரியாவிட்டாலும் கூட மூச்சை அடிக்கடி ஆழமாய், மெதுவாய் உள்ளிழுத்து வெளிவிடுவதே கூட உங்கள் மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்க உதவும்.

முக்கியமாக, உங்கள் மனதை இலகுவாக வைத்திருங்கள். மன்னிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருங்கள். கோபம், எரிச்சல், பொறாமை, குறை சொல்லிக் கொண்டே இருப்பது போன்றவையெல்லாம் நமக்கெதற்கு. வாழ்க்கை அழகானது. அதை ஆனந்தமாய் எதிர்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உடல் தன்னம்பிக்கையின் அச்சாணி! நமக்கும் நம் உடலுக்கும் இடையேயான பந்தத்தைச் சொல்வது தான் உடல்நலம். அந்த பந்தம் நீண்டகால பந்தமாய் நிலைக்கட்டும்.

இளமையைப் பேணுவோம், வளமையைக் காணுவோம்!