Saturday, November 26, 2011

பிளேட்டானிக் லவ்

டைட்டானிக் லவ்வை பற்றி தெரிந்த நமக்கு 'பிளேட்டானிக் லவ்' பற்றி தெரியாது. ஒருவர் மற்றொருவர் மீது நட்பு கொள்ள எவ்வளவோ காரணம் இருக்கும். அந்த நட்பில் இணக்கவர்ச்சியோ, உடல் கவர்ச்சியோ இல்லாமல் அன்பு, பாசம், நட்பு, மரியாதை கூடிக் கொண்டே இருந்தால் அந்த நட்புக்கு தான் பிளேட்டானிக் லவ்  என்று பெயர்.

இதை காமமும் காதலும் இல்லாத அதற்கு இணையான நட்பு என்று சொல்லலாம். கிரேக்க மேதை சாக்ரடீசுக்கும் அவரது மாணவர் அல்ஸபையடீசுக்கும் அப்படி ஒரு ஈர்ப்பு. இருவரும் ஒரே அலைவரிசையில் யோசித்தார்கள். அந்த காலகட்டத்தில் அவர்களை ஓரினச் சேர்கையாளர்கள் என்று கூட கூறினார்கள். 'ஆனால் அது அப்படி இல்லை. அது காதலை விட புனிதமானது' என்று சாக்ரடீசின் இன்னொரு மாணவர், மக்களுக்கு விளக்கினார். அன்று முதல் அது பிளேட்டானிக் லவ் என்றானது.

அவர்களைப் போல நட்புக்கு நடுவே கொள்கை குறுக்கே வராது என்று நிருபித்தவர்கள் அன்னை தெரசாவும், ஜோதிபாசுவும் தான். அன்னை தெரசாவின் சேவைகளுக்கு மறைமுகமாக உதவி செய்தார் ஜோதிபாசு. அன்னைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட போது, தினமும் வந்து விசாரிப்பார். ஜோதிபாசுவுக்கு உடல் நலம் பாதித்த சமயம் எல்லாம் அவரது வீட்டுக்கு வந்து பிராத்தனைகள் செய்வார் தெரசா. அந்த சமயங்களில் ஜோதிபாசு தனது கடவுள் மறுப்பைக் காட்டிக் கொள்ள மாட்டார். அதிகம் வெளி உலகுக்கு தெரியாத உன்னதமான நட்பு இவர்களுடையது.

இ-மெயில், பேஸ்புக், ட்விட்டர் என டெக்னாலஜி வளர்ச்சியில் வழக்கொழிந்து போன அற்புதங்களில் ஒன்று பேனா நண்பர்கள். சுவீடனை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தான் பேனா நண்பர்கள் ஐடியாவுக்கு சொந்தகாரர்கள். 1962 -ல் சியாட்டில் நகரில் நடந்த உலகத் தொழில் சந்தையில் சர்வதேச பேனா நண்பர்கள் சங்கம் அமைக்கப்பட்டது. பேனா நண்பர்களை பார்க்கப் பேனா நிறுவனம் ஊக்குவித்தது. இதை பின்பற்றி மற்ற நாடுகளிலும் பேனா நண்பர்கள் எழுதித் தள்ளினர். கண்டம் விட்டு கண்டம் கடிதங்களை பறந்து நட்பு வளர்ந்தது. அதெல்லாம் ஒரு காலம்.

'நீ இங்கு நலமே, நான் அங்கு நலமா'  
 

Thursday, November 24, 2011

ஒயினின் தனி ரசனை

ஒயின் ஒன்றுதான் உலகின் பெரும்பாலான மதங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மது பானம். ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, க்ரான், பெர்ரி போன்றவற்றின் பல ரசங்களை நொதிக்க வைத்து ஒயின் தயாரிக்கப்பட்டாலும் திராட்சையில் இருந்து தாயரிக்கப்படும் ஒயினுக்குத் தான் மவுசு அதிகம்.

கி.மு. 6 ஆயிரம் ஆண்டில் ஈரான், ஜார்ஜியா பகுதிகளில் ஒயின் தாயாரிப்பு தொடங்கியது. திராட்சைக் கொடி என்பதற்கு லத்தீன் மொழியில் 'கிரேப் லைன்' என்று பெயர். அதில் இருந்துதான் ஒயின் என்ற பெயரும் வந்தது.

ஏகப்பட்ட திராட்சை வகைகள் இருந்தாலும் 'விடிஸ் வினிபெரா' என்ற ஒரே ஒரு இனத்தின் திராட்சை மட்டும்தான் ஒயின் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து வெவ்வேறு வகை தயாரிப்பு முறைகள் மூலம் 4 ஆயிரம் சுவைகளில் ஒயின் தயாரிக்க முடியும்.

ரெட் ஒயின், ஒயிட் ஒயின், ரோஸ் ஒயின் என நிறங்களின் அடிப்படையில் ஒயின் மூன்றாக பிரிக்கப்படுகிறது. சராசரியாக 10 முதல் 20 வருடங்கள் வரை ஒயினின் சுவை உச்சத்தில் இருக்கும். அதன்பிறகு தன்மை மாறி வினிகராக மாறிவிடும். திராட்சை செடி வளரும் மண்ணில் குறைவான அமிலத்தன்மை இருந்து அதில் கொஞ்சம் ஆல்கஹாலைச் சேர்த்தால் அந்த ஒயின் வருடங்கள் கூட கூட சுவை கூடும்.

1800 களில் வட அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு வகை திராட்சைக் கொடியால் ஐரோப்பிய திராட்சைகள் அழிய ஆரம்பித்தன. ஒயின் தயாரிப்புக்கு அமெரிக்க திராட்சைகளைவிட ஐரோப்பிய திராட்சைகளே உகந்தவை. இதனால் எங்கே நல்ல ஒயினே கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து தாமஸ் முன்சன் என்ற விவசாயி, இரண்டு செடிகளையும் ஒன்று சேர்த்து ஒட்டு திராட்சை செடியை உருவாக்கினார். இதனால்தான் இன்றளவும் ஒயின் தயாரிப்பு பிழைத்துக் கொண்டிருக்கிறது.

இயேசுநாதர் இறுதி விருந்தில் தனது உடலையும், ரத்ததையும் கொடுத்து பாவிகளை ரட்சிக்க நினைத்தார். அதற்கான அடையாளமாக அப்பத்தை உடலாகவும், திராட்சை ரசத்தை ரத்தமாகவும் பாவித்து, அனைவருக்கும் தன் கையாலேயே பரிமாறி சீடர்களை பின்பற்றச் சொன்னார்.

எனவேதான் ஒயின் ஏசுவின் ரத்தமாக கருதப்படுகிறது. கிருஸ்துவர்களால் புனிதமாக போற்றப்படுகிறது. தேவாலயங்களில் திருப்பலி சமயத்தில் கண்டிப்பாக ஒயின் இடம் பெரும். ஒயின் அருந்துவதை மற்ற ஆல்கஹால் பானங்களுடன் சேர்க்கக் கூடாது. அது ஒரு தனி ரசனை, தனி கலாசாரம் என்கிறார்கள், ஒயின் பிரியர்கள்.  

கூடங்குளம் அணு உலையால் ஆபத்து என்பது மக்களை ஏமாற்றும் வெளிநாட்டுச் சதியே!

 
இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் தீர்மானம்

கூடங்குளம்
அணு மின் நிலையம் முழுக்க முழுக்க நாட்டின் நலன் கருதி அமைக்கப்பட்ட ஓன்று. .இதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கிற வதந்தி மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது.ஆனால் இது தேவையற்ற அச்சமே. இதற்கு உதாரணமாக ஜப்பானின்  புகுஷிமா அணு உலை விபத்தை சுட்டிக் காட்டுவது தவறாகும். புகுஷிமாவில் கதிர் இயக்க பாதிப்பால் மரணம் ஏற்படவில்லை என்பதை மறைத்து இந்த பொய்ப்பிரச்சாரம் பரப்பப்படுகிறது என்பதை மக்கள் உணரவேண்டும். இந்திய-ரஷிய நட்புறவை முடக்க நினைக்கும் வெளி நாட்டு சக்திகளின் சதிவேலைக்கு சிலர் விலை போயிருக்கின்றனர். அவர்கள்தான் மக்களிடையே அச்ச உணர்வை தீமூட்டி வளர்த்து வருகின்றனர். அணு மின்சக்திக்கு ஆதரவாக பேசும் மிகப் பெரிய அறிவியலாளர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், அறிவுஜீவிகளும், இந்த நாட்டுக்கு எதிரான நிலையை  ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதை மக்கள் உணரவேண்டும். 

அறியாமையாலும் அச்சத்தாலும் திரளும் மக்கள் கூட்டத்தை அரசியல் லாபத்துக்காக ஏமாற்ற நினைக்கும் சில அரசியல்  கட்சிகளும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது தேசவிரோதச் செயல் என்பதை அவர்கள் உணராதது வருத்தமளிக்கும் செயலாகும்.நாட்டைப் பிளவு படுத்த நினைக்கும் சக்திகளுடன் அறிந்தும் அறியாமலும் இத்தகைய அரசியல் சக்திகள் துணை போவது நாட்டின் எதிர்கால நலனுக்கு ஆபத்தானது என்பதை அவர்கள் உணரட்டும்.

மத்திய மாநில அரசுகளும் மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கையில் இறங்கி தீவிரமாகச் செயல்பட்டு கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் இயங்க ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

இந்தியக் கலாச்சார நட்புறவுக்கழகம் [இஸ்கப்]  கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக மாநிலமெங்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்வதென முடிவு செய்துள்ளது. கருத்தரங்கங்கள், மனிதச் சங்கிலிகள், அறிக்கை வெளியீடுகள்  ஆகிய நடவடிக்கைகள் மூலம் மக்களின் அச்சத்தை போக்கவும் ,பொய்ப் பிரச்சாரம் செய்யும் விஷமிகளின் சதியை முறியடிக்கவும் இஸ்கப் அமைப்பு திட்டமிட்டு வருகிறது.  

Wednesday, November 23, 2011

சமூக வலைத்தளங்கள்

சமூகம் என்பது நான்கு பேர் கொண்டது என்றார், ஜெயகாந்தன். அதிலும் உற்சாகமான இளைஞர்களை ஒன்று சேர்க்கும் புதிய களமாக உள்ளது தான் சோஷியல் நெட்வொர்கிங் வெப்சைட்டுகள்.

ஆர்குட், பேஸ்புக், டிவிட்டர் என இந்த சமூக வலைத்தளங்கள் தான் நவீன இளைஞர்கள் நட்பு கொள்ளும் இடம். உலகின் ஒருமூலையில் இருந்து இன்னொரு மூளை வரை எப்போதும் யாரையும் உங்கள் நண்பர்களாக மாற்ற முடியும். ஒரே ரசனை உள்ளவர்கள், ஒரே கம்யூனிட்டியாக இணைந்து செயல்பட முடியும். தனிமை என்ற கூட்டுக்குள் இருந்து விடுபட்டு நம் அந்தரங்கங்களை உலகின் பார்வைக்கு கடை விரிக்கும் ஒரு ஊடகமாகவும் இந்த சமூக வலைத்தளங்கள் செயல்படுகின்றன. முகம் தெரியா மனிதர்களுடன் நட்பு என்பதால் இதில் பிரச்சனைகளும் அதிகம்.

சமீபத்தில் 'பேஸ்புக்' வலைதளத்தில் உள்ள தங்கள் போட்டோக்கள் 'மார்பிங்' முறை மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. தங்களின் ஒரிஜினல் போட்டோக்களை 'அப்லோட்' செய்து கொண்டாட்டங்களை பகிர்ந்து கொள்ளும் அதேவேளையில் 'மார்பிங்' போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பல இன்னல்களுக்கும் நாமே வழிவகுக்கிறோம். நடந்து செல்லும் வழியில் எதிரே வரும் நண்பருக்கு ஒரு புன்னைகையை கூட உதிர்க்காதவர்கள், கடல் கடந்து இருக்கும் குழுக்களோடு 'சாட்' செய்வதை விரும்புகின்றனர்.

 ஸ்கிராப்புகள், டெஸ்டி மோனியல்கள், கம்யூனிட்டிகள் மூலம் நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறதோ இல்லையோ வெட்டி அரட்டைக்கும், வீண் செயல்களுக்கும் அதை அதிகமாக உபயோகிக்கிறோம் என்று குறிப்பிடுகின்றது பாரஸ்டர் ரிசர்ச் தரும் ஆய்வறிக்கை.

இந்த சமூக வலைதளங்களால் உருவாகும் வைரஸ்கள், ஹேக்கிங், நாம் அப்லோட் செய்யும் போட்டோகளுக்கு வரும் சகிக்க முடியாத கமெண்டுகளால் ஏற்படும் மன உளைச்சல், பெர்சனல் விஷயங்களை ஊர்கூடி விவாதிப்பதால் உண்டாகும் அபாயங்கள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

க்ளோபல் வார்மிங், சுற்றுசூழல், ஓசோன் பாதிப்பு போன்ற ஆரோக்கியமான விவாதங்கள், மருத்துவ தகவல்கள் என நல்ல விஷயங்கள் நடக்கின்றன என்றாலும் அதன் சதவீதம் குறைவு. இன்னொரு புறம் சைபர் குற்றங்கள் அதிகரிக்க இவ்வகையான இணையதளங்களும் முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள்.

'தொழில்நுட்பம்' இருபக்கமும் கூரான கத்தி. சரியாக பயன்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது.'     

கவிழ்ப்புப்புரட்சி கற்றுத்தரும் பாடம்

 
பரந்துவிரிந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தைப் பிடித்து உலுக்கி, சடசடவென 'ஜார்' முறியக் காரணமானதோட உலகைக்குலுக்கி விழித்தெழச்செய்து, "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு" எனும் அற்புத சமூகக் கட்டமைப்பை உருவாக்கி, பாரெங்கும் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் முகிழ்த்தெழ வழிவகுத்து


அரசியல்-சமூக-பொருளாதாரச் சமநீதியைத் தாங்கி நிற்கும் சோஷலிச முகாமை வலிமைபெறச் செய்த அற்புதத்தின் வித்து 1917 நவம்பர் 7ல் நிகழ்ந்தயுகப்புரட்சியெனில், அரும்பாடுபட்டுப் பாட்டாளிவர்க்கமும் அதன் நேச சக்திகளும் உருவாக்கிய சோஷலிஸ்ட் முகாமைத் தகர்த்துத் தரை மட்டமாக்க விஷ வித்துஊன்றப்பட்டதும் அதே ரஷ்ய மண்ணில்தான்!


"சகல அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே!" எனும் தோழர் லெனின் அவர்களின் தாரக மந்திரத்தைச் சிரமேற்கொண்டு, மக்களுக்குச் சகலஅதிகாரங்களையும் அளிக்கும் வகையில், கரடு தட்டிப்போன, தலைமையிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை மீட்டெடுக்கவும், மக்களைசெம்மைப்படுத்தும் மெய்யான சோஷலிச ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், பெரிஸ்த்ரோயகா (மறுகட்டமைப்பு), 'க்ளாஸ்னாஸ்ட்' (வெளிப்படையான அணுகுமுறை) எனும் உத்திகளைத் தீர்க்கமாகச் செயல்படுத்த முற்பட்டவர் சோவியத் ஜனாதிபதியாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராகவுமிருந்த தோழர் மிகையீல் கொர்பச்சேவ்.
சோவியத் யூனியனையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் மீட்கின்ற புனிதப்போரை நடத்துவதாகக் கூறிக் கவிழ்ப்புப்புரட்டைச் செய்தனர் மாற்றத்தை விரும்பாத கட்சி மற்றும் அரசு அதிகார வர்க்கத்தினர்.


விளைவு: "பொக்கென ஓர் கணத்தே யாவும் போகத் தொலைத்துவிட்டோம்!" வீழ்ந்தது சோவியத் யூனியன்; சோஷலிச முகாம்.
உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம், உலக மக்களின் விடுதலை இயக்கம், நடுநிலை நாடுகளின் இயக்கம் கலகலத்துப்போயின.
முன்னேறிச் செல்வதற்கான வழிதெரியாது விழிபிதுங்கி நிற்கிறது உலகில் பல நாடுகளின் முற்போக்கு இயக்கங்கள்.


இந்த வன்கொடுமை எந்தப் பின்னணியில், யாரால், எப்படி நிகழ்த்தப்பட்டது? மறுகட்டமைப்பு இயக்கத்துக்குத் தலைமையேற்ற தானும் மற்ற தன்தோழர்களும் செய்த தவறுகள் என்ன? ரஷ்யாவுக்கு எதிர்காலம் உண்டா?--இத்தனைக் கேள்விகளுக்கும் விடைதரும் வகையில், 'தி வாஷிங்டன்போஸ்ட்' (The Washington Post) பத்திரிகையின் 21.08.2011 இதழில், "கவிழ்ப்புப் புரட்சி கற்றுத்தரும் பாடம்" (Lessons from the USSR coup attempt) என்ற தலைப்பில் கொர்பச்சேவ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே. தமிழில்: விதுரன்.]ருபது ஆண்டுகளுக்கு முன் இதேபோல [1991 ஆகஸ்ட் மாதத்தின்] கடைசிவாரத்தில்தான் அது நிகழ்ந்தது; ஆம், கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர்களையும் சோவியத் அரசின் அதிகாரிகளையும்கொண்ட குழு ஒன்று கவிழ்ப்புப் புரட்சியை நடத்த முயன்ற சம்பவத்தைத்தான் நான் குறிப்பிடுகிறேன்."அவசரநிலைக்கான கமிட்டி" என்னும் சட்டவிரோத அமைப்பை அவர்கள் ஏற்படுத்தினார்கள்; சோவியத் குடியரசின் தலைவரைத் தனிமைப்படுத்தி, பதவிப் பொறுப்பிலிருந்து நீக்கவும் செய்தார்கள். 


சோவியத் யூனியனில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எமது முயற்சிகளின் இறுதிக்கட்டத்தில் நடந்த உக்கிரமான அரசியல் போராட்டத்தின் விளைவுதான் அந்த ஆகஸ்ட் மாத சம்பவங்கள் மறுகட்டமைப்பு (perestroika) நடைபெற்ற ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் எமது நாட்டில் நிகழ்ந்தன. வெளிப்படையான அணுகுமுறை (glasnost) யை; சுதந்திரமான, வேட்பாளர்கள் களம்காண்கிற தேர்தல்களை; சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறிச்செல்வதற்கான தொடக்கத்தை மக்கள் ஆதரித்தார்கள். ஆனால், இத்தகு மாற்றங்களால் தமது பதவிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த அதிகாரவர்க்கம் கலக்கமடைந்தது. 


மிகப்பெரிய, பல இனக்குழுக்களைக் கொண்ட, ராணுவமயமாக்கப்பட்ட, சர்வ அதிகாரங்களும் ஆட்சியாளர்களிடம் குவிந்துகிடந்த நாட்டில் அவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவது எளிதல்ல. மறுகட்டமைப்பு தலைவர்களாகிய நாங்களும் எங்கள் பங்குக்கு சில தவறுகளைச் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியை சீர்திருத்துவதற்கான பணியை நாங்கள் மிகக் காலந்தாழ்ந்து மேற்கொண்டோம். இதன் விளைவாக, மறுசிந்தனையின் என்ஜினாக செயல்பட்டிருக்கவேண்டிய கட்சி, அதற்குத் தடையேற்படுத்தும் 'ப்ரேக்' ஆக மாறிவிட்டது; கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த என்மீது கட்சி அமைப்புகள் தாக்குதல் தொடுத்தன; 1991 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் இது உச்சகட்டத்தை எட்டியது. இந்தக் கொடிய தாக்குதலின் விளைவாக நான் ராஜினாமா செய்வதாக அறிவித்தேன்.
சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டபோது நாங்கள் எதிர்கொண்ட கடுமையான பிரச்சனைளைத் தீர்க்கும்பொருட்டு என்னை நிர்ப்பந்தப்படுத்தி, அவசரகால நடவடிக்கைகளை அங்கீகரிக்கச்செய்துவிடலாம் என்று எனக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டவர்கள் கனவுகண்டு கொண்டிருந்தனரல்லவா, அவர்களுக்கு எனது அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. பலமணிநேரம் விவாதித்த பொலிட்பீரோ, எனது ராஜினாமாவைத் திரும்பப்பெற்றுக்கொண்டு, அமர்வுக்குத்திரும்புமாறு கேட்டுக்கொண்டது. அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது தவறு என்பதை இப்போது உணர்கிறேன். என்னை எப்படியாவது பதவியிறக்கம் செய்துவிட முயற்சிகள் நடந்துகொண்டிருந்த அந்த சூழலில் எனது முடிவில் உறுதியாக இருந்திருக்கவேண்டும். 


ஜூலை மாதம் மற்றொரு சம்பவம் நடந்தது: அன்றைய பிரதமர் வாலன்டின் பாவ்லொவ், பாதுகாப்பு அமைச்சர் திமித்ரி யாசொவ், கே.ஜி.பி. (KGB) அமைப்பின் தலைவர் விளாதிமீர் க்ரியுஷ்கொவ் ஆகியோர்,, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களில் சில பிரதமருக்கு அளிக்கப்பட வேண்டுமென்றும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்கள். இவையனைத்தும் நான் அவையில் இல்லாதபோது நடந்தேறின. அதே நேரத்தில், குடியரசுத்தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில், சோவியத் குடியரசுகளுக்கிடையே ஏற்படவிருந்த புதிய [சோவியத்] ஒன்றியத்துக்கான ஒப்பந்தத்தைத் தயாரிக்கும் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் நான் கலந்துகொண்டிருந்தேன். 


மறுநாள், நாடாளுமன்றத்தில் உரையற்றியபோது, "அவசரத் தீர்வுகளை" நான் எதிர்ப்பதாகக் கூறினேன்; உறுப்பினர்கள் என்னை ஆதரித்தார்கள்.
பகிரங்கமாக நடந்த போராட்டத்தில், மறுசிந்தனையின் எதிர்ப்பாளர்கள் தோற்றுப்போனார்கள்.கடுமையான சூழல் நிலவியபோதிலும், மக்கள், பிரஜைகளாகி மாற்றத்தை ஆதரிக்கலாயினர். பால்டிக் பிரதேசக் குடியரசுகள் உட்பட அனைத்து குடியரசுகளுமே அமல்படுத்தத் தயாராக இருந்த நெருக்கடியைச்சமாளிக்கும் பொருளாதாரத்திட்டத்தை நாங்கள் உருவாக்கியிருந்தோம். அந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் நாள், புதிய [சோவியத்] யூனியன் வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகவிருந்தது. இதனைத்தொடர்ந்து கட்சியின் சிறப்பு மாநாடும் கூட்டப்படவிருந்தது; இது சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்பவர்கள்-எதிர்ப்பவர்கள் எனக் கட்சியில் உள்ளவர்களை இனம்பிரித்துக் காட்டவிருந்தது.

புதிய ஒன்றியத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், தேர்தலை நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம்; சோவியத் நாட்டுத் தலைமையில் பெரிய மாற்றங்களைக் கொணரவும் திட்டமிட்டிருந்தோம். ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், கிரிமியாவுக்குச் சிறு விடுப்பில் செல்வதற்கு முன்னர், ரஷ்யக் குடியரசின் அதிபர் போரிஸ் எல்த்சின் மற்றும் கஜாக்கிஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ் ஆகியோருடன் இதுகுறித்து விவாதித்தேன்.

பலமாதங்களாக நடந்த கடுமையான போராட்டங்களின் விளைவாக நான் மிகவும் களைத்துப்போயிருந்தேன்; ஆனால் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பைக் குறைத்துக் மதிப்பிட்டுவிட்டேன். நான் விடுப்பில் செல்வதைத் தள்ளிபோட்டிருக்க வேண்டும்.
புதிய யூனியன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சிவிபரங்கள் இறுதியாக்கப்படுவது பற்றி எனது உதவியாளர்களிடமும் எல்த்சினிடமும் ஆகஸ்ட் 18-ஆம் நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். ஆகஸ்ட் 19-ஆம் நாள் மாஸ்கோவுக்குப் பறந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பங்கேற்கத்திட்டமிட்டிருந்தேன்; ஆனால், அழையா விருந்தாளிகளாக ஒரு கோஷ்டியினர் என் வீட்டில் அடியெடுத்து வைத்தார்கள். அந்தக் கவிழ்ப்புப் புரட்சியின் நாயகர்கள் அங்கு வந்துசேர்வதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்பதாக நகரில் எனது அனைத்துத் தொலைபேசி லைன்களும், அதிகாரபூர்வத் தொலைபேசிகளும், கேந்திரமான தொடர்பு லைனும் துண்டிக்கப்பட்டன. முற்றிலுமாக நான் தனிமைப்படுத்தப்பட்டேன். பொலிட்பீரோவிலும், அரசாங்கத்திலும் இருந்த எனது எதிரிகள், கவிழ்ப்புப்புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டனர் என்பது தெளிவாகிவிட்டது. 


அன்றைய நிலையில்,எமது நாட்டையும், எங்களையும் பெரும் ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கின்றன; முடிவு என்ன ஆகும் என்றே எனக்குத்தெரியவில்லை என்று எனது குடும்பத்தாரிடம் கூறினேன். இந்த நபர்களுடன் [கவிழ்ப்புப் புரட்சியாளர்களுடன்] சேர்ந்து செயல்பட சம்மதிப்பதில்லை எனும் என் நிலையைத் தெளிவுபடுத்தினேன். எதுவந்தாலும் சரி; நாங்கள் உங்களுக்குத் துணைநிற்போம் என்று என் மனைவி ரெய்சாவும் எனது குடும்பத்தினரும் உறுதி கூறினார்கள்.முடிவுகள் எப்படியிருந்தாலும் பரவாயில்லை; என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற பாணியில் நான் பம்மிக்கொள்ள முற்பட்டதாகச் சிலர் குற்றம் சொன்னார்கள்; ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகள் தவறானவை; சேற்றைவாரி இறைக்கும் தன்மைகொண்டவை. 


கவிழ்ப்புப் புரட்டாளர்களுக்கு நான் சொன்ன பதில், அவர்களது திட்டங்களின்மீது விழுந்த முதல் அடியாகும். அவர்களால் மக்களை அச்சுறுத்திப் பணியவைக்கமுடியவில்லை என்பது இதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. துணிந்து எதிர்கொள்ளவும், எதிர்த்து நிற்கவும், கோரிக்கைகளை எழுப்பவும் எமது சமூகம் கற்றுத் தேறியிருந்தது. ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சியைக் கண்டனம் செய்தும், சதிகாரர்களின் நடவடிக்கைகளைக் கவிழ்ப்புப் புரட்சி என்று சாடியும் உறுதியான நிலையெடுத்தார் ரஷ்ய ஜனாதிபதி எல்த்சின். அந்த நாட்களில் எல்த்சினின் நடவடிக்கைகளுக்காக அவரை நான் பாராட்டினேன்; புகழ்ந்துரைத்தேன்.

எமது [சோவியத்] யூனியனைப் பாதுகாக்கத்தான் இவ்வாறு தாம் செயல்பட்டதாகச் சதியில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்; இன்னும்கூட சிலர் அப்படிச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்ததைப்போல, அவர்களின் நடவடிக்கை, நாட்டை நிர்மூலப்படுத்துவதில்தான் முடிந்தது. கவிழ்ப்புப் புரட்சி மூன்றே நாட்களில் முடிந்துவிட்டதென்னவோ உண்மைதான்; ஆனால், [ஒன்றிணைக்கும்] பொது அரசு என்னும் கோட்பாட்டை அது பாழ்படுத்திவிட்டது. கவிழ்ப்புப்புரட்சிக்கு வெகுகாலத்திற்கு முன்பே ரஷ்யத் தலைவர்கள் தொடங்கிவைத்திருந்த "[சோவியத்] யூனியனிலிருந்து விலகுவது" என்னும் போக்கினை இது விரைவுபடுத்தியது. குடியரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக, சுதந்திரப்பிரகடனம் செய்யலாயின. 


அப்போது நாங்கள் எதிர்கொண்டிருந்த நிலை மிகவும் ஆபத்தானதுதான். இருப்பினும், மக்கள் பிரதிநிதிகளின் மாநாட்டை எங்களால் கூட்டமுடிந்தது; பெரும் சமஷ்டி அரசு என்னும் கருத்தை அடிப்படையாகக்கொண்டு ஒன்றியம் உருவாக்குவதற்கு ஒப்பந்தத்திற்கான புதிய வரைவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணியை அது அங்கீகரித்தது. எல்லாவிதமான பிரச்சனைகளையும் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது; ஆனால் விரைவிலேயே புதிய வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு, குடியரசுகளுக்குச் சமர்ப்பிக்கப்படலாயிற்று.
நெருக்கடிகளை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் நாங்கள் இணைந்து செயல்படமுடியும் என்கிற நம்பிக்கை மீீண்டும் துளிர்விடத்தொடங்கியது. ரஷ்யா, உக்ரைன், பெலாருஸ் ஆகிய குடியரசுகளின் தலைவர்கள் மட்டும் பெலொவெஷ்ஸ்க்யா புஷ்ச்சாவில் கூடிச்சதி செய்திருக்காவிடில், 1991-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும். சுயாதிபத்தியம் கொண்ட அரசுகளின் ஒன்றியம் (Union of Sovereign States) என்னும் பெயரில், புதிய வடிவில், குடியரசுகளுக்கு மேலும் அதிக அதிகாரங்களுடன் [சோவியத்] யூனியன் காப்பாற்றப்பட்டிருக்கும்.


அது மெய்ப்பட்டிருந்தால், பொருளாதார சீர்திருத்தங்களை ஓரளவு கஷ்டங்களுடன் நிறைவேற்றியிருக்கமுடியும்; தொழில் உற்பத்தியின் வீழ்ச்சியைத் தவிர்த்திருக்கலாம்; ரஷ்யாவின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட ஆபத்தான சரிவு நிகழ்ந்திருக்காது என்பது உறுதி.
கடந்த 20 ஆண்டுகளாகப் பற்பல இன்னல்களைத் தாண்டிவந்துள்ளது ரஷ்யா. சுதந்திரத்திற்காக அது கொடுத்த விலை அளப்பரியது; அதை அடைவதற்கான பாதையோ, நாம் அதில் அடியெடுத்து வைத்தபோது அனுமானித்ததைக் காட்டிலும் மிகக்கடுமையானது. இப்போதும்கூட நாம் ஸ்திரமான ஜனநாயகத்தைப் பாதியளவுதான் எட்டியிருக்கிறோம். ஆனால் இந்தப் பாதையைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை.


வருகின்ற ஆண்டுகளில் நாம் விரைந்து முன்னேற வேண்டும். இது நிகழ வேண்டுமானால், ரஷ்யாவில் மென்மேலும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மாற்றங்களை ஆதரிக்கின்ற அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டும். 


இது சாத்தியம்தான் என்று நம்புகிறேன். இதற்கான வாய்ப்பு நம் கைகளில்; இதை நாம் நழுவவிடக்கூடாது.

Monday, November 21, 2011

குறுக்குவழி உதவாது!

நினைத்தவுடன் எல்லாம் நடக்க வேண்டும். நொடியில் சமையல் முடிய வேண்டும், மந்திரத்தில் மாங்காய் காய்க்க வேண்டும், குறுக்கு வழியிலாவது உடனடியாகப் பணக்காரர் ஆகவேண்டும் என்று அவசரகதியில் உலகம் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இத்தகைய சூழலில், திபெத்தைச் சேர்ந்த புத்தமதத் துறவி மிலரேபாவைப் பற்றி அறிந்துகொள்வது பொருத்தமாகவும், பயனளிப்பதாகவும் அமையும்.

மிலரேபா மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். மிலரேபாவின் தந்தை இறந்தவுடன் அவரது சித்தப்பாவும், சித்தியும் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டனர். எனவே மிலரேபா தனது தாயின் வேண்டுகோளின்படி மாந்திரீகம் பயின்றார், அதன் மூலம் இயற்கைச் சீற்றத்தைத் தூண்டி சித்தப்பாவின் வீடு இடியும்படி செய்தார். அந்தச் சம்பவத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கவும் நேர்ந்தது. இவ்வாறு தனது இளமைக் காலத்தில் மிலரேபா தனது மாந்திரீகத்தின் மூலம் பல்வேறு தீயசெயல்களைச் செய்தார்.

ஆனால் அவர் பக்குவமடைந்தபின் தனது இழிவான செயல்களுக்கு வருந்தி அமைதியைத் தேடி அலைந்தார். பழிக்குப் பழி என்பது தவறு என்பதை அவர் உணர்ந்தார். அவர் நாடிச் சென்ற குரு மார்பா, தன்னுடைய சீடர்கள் கடுமையாக உழைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அன்பாக இருக்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக நடந்து கொள்வார். பார்ப்பதற்கு இது சற்று முரண்பாடாக தோன்றும். ஆனால் நன்மை விளைவிப்பதே மார்பாவின் நோக்கம்.

இவர் தன்னிடம் பயிலவந்த மிலரேபாவை பல அடுக்குகளைக் கொண்ட கோபுரங்களை மூன்றுமுறை கட்டச் சொன்னார். அதனால் விரக்தியின் எல்லைக்குச் சென்று விட்டார் மிலரேபா. குருவின் ஆசியையும், வழிகாட்டுதலையும் பெறமுடியவில்லையே என்று மனம் வருந்தினார். உடனே குரு மார்பாவின் துணைவியாரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று மற்றொரு குருவை நாடி தியானப் பயிற்சியை மேற்கொண்டார். ஆனால் அவரால் எந்தவித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை.

தான் முதலில் நாடிச் சென்ற குரு மார்பாவின் ஆசி இருந்தால்தான் தன்னால் அமைதிப் பயணத்தை தொடங்க முடியும் என்று மிலரேபா உளமார உணர்ந்தார்.

மீண்டும் தனது குரு மார்பாவிடம் சென்று 12 ஆண்டுகள் கடுமையாகப் பயிற்சி பெற்று 'வஜ்ரதாரா' என்று சொல்லப்படும் பரிபூரண நிலையை மிலரேபா அடைந்தார். மிலரேபாவின் குரு அவரிடம் கடுமையாக நடந்து கொண்டது அவரைப் புடம் போட்ட தங்கமாக மாற்றுவதற்குத்தான். தனது குரு பலமுறை தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டு வருத்தம் அடையவைத்த போதும் மிலரேபா குருவை ஒருபோதும் வெறுக்கவில்லை. இதை குரு மார்பாவும் நன்கு உணர்ந்திருந்தார்.

அதற்குக் காரணம், முன்னேற்றத்தின் பாதை என்பது ரோஜா மலர்கள் தூவியது கிடையாது. கல்லும், முள்ளும் நிறைந்த ஒன்றுதான். உன்னத நிலையை அடைவது என்பது சாதாரண முயற்சிகளின் விளைவாக இருக்க முடியாது. நெருப்பிலிட்டு உருக்கும்போதுதான் அணிகலன் என்ற கவுரவத்தைப் பெறுகிறது தங்கம்.

எந்தக் கல் தன்னைச் சிற்பி செதுக்கும்போது பொறுமையாக இருக்கிறதோ அதுவே சிலையாக உருவம் பெற்று, மக்கள் வழிபடும் பெருமை பெறுகிறது. பொறுமையில்லாமல் உடையும் கல், தேங்காய் உடைக்கத்தான் பயன்படும். மிலரேபா எப்படி மார்பாவின் ஆசியைப்பெற கடுமையாக உழைக்க வேண்டி இருந்ததோ அதையே அவரது சீடர்களும் செய்ய வேண்டும் என்பதே இயற்கையின் விதி.

கடுமையான சவால்களை எதிர்கொண்டாலே நிர்வாகத் திறனுக்கான மனப்பக்குவம் ஏற்படும் என்று ஹெட்பிட்ஸ், லாரி என்ற இரு வல்லுனர்கள் ஹார்வர்டு மேலாண்மை ஆய்வு இதழில் தெரிவிக்கிறார்கள்.

இளம்வயதிலேயே மேலாண்மைப் படிப்பை பயில்பவர்களை சவால்களை எதிர்கொள்ளும்படி பழக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தமது பணிக்களத்தில் வெற்றியாளர்களாக வலம்வருவது சாத்தியமாகும். இதை மனதில் கொண்டுதான் மேலாண்மைப் படிப்பைப் பயில அனுமதிக்க நேர்முகத்தேர்வு நடத்தும்போதும் சரி, எம்.பி.ஏ படிப்பை முடித்துப் பணிக்கு அமர்த்தத் தேர்வு செய்யும் போதும் சரி, மூத்த வல்லுனர்கள் கடினமான கேள்விகளை கேட்டு ஒவ்வொருவரின் திறமையையும் சோதிக்கிறார்கள். ஆன்மிக குருக்கள் வழி நடத்தும்போது அவர்களுக்குச் சரியான கேள்வியும் கேட்கத் தெரியும். சரியான பதிலும் தெரியும். ஆனால் மேலாண்மைத் துறையில் வழிநடத்தும் தலைவர்கள் எல்லோருக்கும் எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும் அவர்கள் சரியான கேள்விகளை கேட்கத் தெரிந்திருக்கிறார்கள்.

ஹெட்பிட்ஸும், லாரியும், சிறந்த தலைமைப் பண்புக்கு ஆறு அம்சங்கள் அவசியம் என்று கருதுகிறார்கள். தம்மைத் தாமே விட்டு விலகி, பால்கனியில் நின்று பார்ப்பது போல் சூழலை கவனிக்கும்போதுதான் சவால்களை இனங்கண்டு எதிர்கொள்ள தயாராக முடியும் என்கிறார்கள் இவர்கள். சவால்களை எதிர்கொள்ள ஏற்புடைய மாற்றம் தேவை என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் உணர்ச்சிவசப்படாமல் திட்டமிட்டுச் சரியான முடிவெடுத்துச் செயல்பட முடியும். குழப்பங்களைத் தவிர்த்து, பலரது கருத்துகளையும் கேட்டு கவனத்துடன் கூடிய ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறந்த தலைவர்களாக மேலாண்மை பண்புகளுடன் செயல்பட முடியும் என்கிறார்கள் மேற்கண்ட வல்லுநர்கள்.

மேலும் பொறுப்புகளையும், வேலைகளையும் சக பணியாளர்களுக்குப் பகிர்ந்தளித்து அவர்களின் கருத்தே குழுத்தலைவரின் கருத்து என்ற நிலையை உருவாக்கும்போதுதான் சிறந்த நிர்வாகத் திறமை வெளிப்படும். இளைஞர்களுக்குக் கடுமையான பயிற்சி அளித்தால்தான் சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் அனுபவம் அவர்களுக்குக் கிடைக்கும் என்றும் ஹெர்பிட்ஸும் லாரியும் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

விலை மதிக்க முடியாத முத்து ஆழ்கடலில்தான் கிடைக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பூமிக்கடியில் புதையுண்டு கிடந்த நிலக்கரிதான் பக்குவமாகி, வைரமாகச் ஜொலிக்கிறது. வாழ்க்கையில் ஆன்மிகம் என்றாலும் சரி, உயர் நிலை, பதவிகளைப் பெற வேண்டுமென்றாலும் சரி, குறுக்கு வழி ஒரு போதும் உதவாது. திட்டமிட்டு, விடாமுயற்சியுடன் கடுமையாக உழைக்கப் பழகிக் கொண்டால் எல்லோரும் தாம் எண்ணிய இலக்கை அடைவது சாத்தியமே.
பா.சுரேஷ்குமார்

Saturday, November 19, 2011

தோழர் பத்மநாபா பற்றி ராஜீவ் காந்தி


பயங்கரவாத எதிர்ப்பு நாள் - நவம்பர் 19


இந்திய தேசத்தின் இணையற்ற தலைவியும், முன்னாள் பாரதப் பிரதமரும், நேரு போன்ற ஒப்பில்லாத் தலைவரின் தீரமிகு புதல்வியும், ஈழமக்களின் இதயம் நிறைந்த பாசமிகு அன்னை இந்திரா காந்தியின் பிறந்தநாளும், ஈழதேசத்தின் இனிய திருமகன் தோழர் பத்மநாபாவின் பிறந்தநாளும் ஒரே தினத்தில் வருவது தனிச்சிறப்பாகும். (நவம்பர் 19 ) இந்த இரு தலைவர்களும் பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு இரையானவர்கள். அதனால் இந்த நாளை 'பயங்கரவாத எதிர்ப்பு நாள்' என தேசமெங்கும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். எனவே நாமும் இந்தநாளில் பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் துணிவோடு எதிர்த்திடும் சபதம் ஏற்போம்.

தேசத்தை நேசிப்போம்


சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியபோது இரவிலேயே வாண வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டன. வெற்றிக் கொண்டாட்டங்களை தேசம் நிறுத்தவே சில வாரங்களானது.

'இந்தியன் என்பதில் பெருமைப்படு', 'நான் இந்தியன் என்பதில் கர்வமடைகிறேன்' போன்ற வாசகங்கள் நாடு முழுவதும் ஒலித்தன. மக்கள் புளகாங்கிதமடைந்தார்கள்.

எல்லாம் நல்லதுதான். ஆனால் பெரும்பாலான மக்களுடைய தேசப்பற்று விளையாட்டில் ஆரம்பித்து விளையாட்டிலேயே முடிந்து போய்விடுகிறதே என்பதுதான் துயரம். உண்மையில் இதுதான் தேசப்பற்றா?

நாட்டுப் பற்று என்பது நாட்டின் மீது நாம் வைக்கும் பாசம். உதாரணமாக, ஒரு தாய் குழந்தையின் மீது பாசம் வைத்தால் அந்த அன்பு எப்படிப்பட்டதாய் இருக்கும்? அந்த குழந்தை முன்னேற வேண்டும். அதற்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது! அதன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்! அதன் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும்! இப்படித் தானே?...

இதே பாசத்தை தேசத்தின் மீது வைப்பதற்குப் பெயர்தான் தேசப்பற்று.

இப்போது நமது வாழ்க்கையைக் கொஞ்சம் 'ரிவைண்ட்' செய்துப் பார்ப்போம். நமது தேசப்பற்று எப்படி இருக்கிறது? உண்மையிலேயே நாம் தேசத்தின் மீது பாசம் வைத்திருக்கிறோமா? அல்லது அப்படி ஒரு பாசம் இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமா?

இந்திய தேசத்தின் வரலாறைப் புரட்டிப் பார்த்தால் தேசப்பற்றின் வலிகள் புரியும். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் முன் நமது வீதிகளில் வீசிய அடிமைக் காற்றின் குருதி வாசனையை நுகர முடியும். இன்றைய இளைஞர்களுக்கு சுதந்திரம் பிறவிப் பரிசு.

ஆனால் இரு தலைமுறைக்கு முன் அப்படியல்ல. மக்கள் அடிமை முத்திரையுடன் இந்தியாவில் பிறந்தார்கள். அன்றைய தேசப்பற்று சுதந்திரத்தின் மீதான தாகமாய் இருந்தது.

பல தலைவர்களும், கோடிக்கணக்கான மக்களும் சுதந்திரத்தை மீண்டெடுக்க என்ன செய்தார்கள் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வது தேசத்தின் மீதான நேசத்தின் முதல் படி.

'பிரசவ வலியைப் புரிந்து கொள்ளும்போது ஒரு பெண் தனது தாயின் மகத்துவத்தை அறிந்து கொள்கிறாள்'. ஒரு தேசம் கடந்து வந்த வலிகளைப் புரிந்து கொள்ளும்போது ஒருவன் சுதந்திரத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொள்கிறான். எனவேதான் தேச வரலாற்றையும், தேசத் தலைவர்களின் வரலாறுகளையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நம்மைப் பொறுத்தவரையில் அது வெறும் பாடநூலில் வரும் சில பாடங்களாய்ச் சுருங்கி விட்டதுதான் வேதனை.

தேசத்தின் மீது ராணுவ வீரர்கள் வைக்கும் பாசமே நமது தேசத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது. நாம் பல வேளைகளில் பணிகளை வெறும் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து எடை போடும் தவறைச் செய்கிறோம். மேலை நாடுகளில் ராணுவத்தில் பணிபுரிவதை பெரும் கவுரவமாகவும், கடமையாகவும் கருதுகிறார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை வேறு வேலை கிடைக்காதவர்களின் புகலிடமாகவே பலருக்கும் ராணுவ வேலை வாய்க்கிறது.

ஒரு தினம் எப்படிப் புலருமோ, எப்படி முடியுமோ என்பதைக் கணிக்கவே முடியாத ஒரு துறை காவல் துறை. தேசத்தின் பாதுகாப்பையும், அமைதியையும் மட்டுமே மனதில் கொண்டு உழைக்கும் அவர்களுக்கு உரிய மரியாதையைத் தருகிறோமா? பத்திரிகை நகைச்சுவைக் கார்ட்டூன்கள் தொடங்கி, திரைப்பட வில்லன்கள் வரை அவர்கள் நேர்மையற்றவர்களாக வலம் வரக் காரணம் என்ன?

பதில், 'நாம் குறைகளை மட்டுமே கவனிக்கும் வித்தியாசமான அன்னப் பறவைகள்' என்பது தான். நமது கண்ணுக்கு நல்ல விஷயங்கள் பலவும் தெரிவதில்லை. நல்ல விஷயங்களை அதிகம் பேசும்போது நமது சிந்தனைகளும் நல்லவற்றை நோக்கியே நடைபோடும். குறைகளைக் களைய வேண்டியது எவ்வளவு அவசியமோ, அந்தளவு நல்லவற்றைக் கண்டுணர்ந்து அதை வளர்க்க வேண்டியதும் அவசியம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.

தேசப்பற்று என்பது ஒவ்வோர் காலகட்டத்துக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடும். ஆனால் அடிப்படை விஷயம் ஒன்றுதான். `நாட்டை எப்படி அடுத்த நிலைக்கு உயர்த்துவது!'

அடிமை நிலையில் இருந்தால் சுதந்திர நிலை, சுதந்திர நிலையில் இருந்தால் அதன் அடுத்த படியான வளமான நிலை. இதுவே உண்மையான தேசப்பற்றின் வெளிப்பாடு.

குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பதில் பலர் தங்களுடைய தேசப்பற்றை வெளிப்படுத்த முயல்வதுண்டு. ஒரு குழந்தை தவறிப்போய் குழியில் விழுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உடனே குழந்தையையும், பள்ளம் தோண்டியவர் களையும் குறை சொல்லிக் கொண்டு கடந்து போய் விட்டால் என்ன பயன்?

முதல் தேவை அந்தக் குழந்தையைப் பள்ளத்திலிருந்து வெளியே எடுப்பதுதான்! அதைத்தான் எந்த ஒரு வளரும் தேசமும் எதிர்பார்க்கும்.

குறைகளைச் சொல்லும் போதெல்லாம் அதைத் தீர்க்கும் வழிகளை ஆராய்வதும், குறை தீர்க்க நமது பங்களிப்பையும் செலுத்துவதும் அவசியம்.

நாளைய தேசம் இன்றைய இளைஞர்களின் கையில் இருக்கிறது என்பார்கள். தேச அக்கறை என்பது சட்டையில் தேசக் கொடியைக் குத்தி வைப்பதிலோ, ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் தொலைக்காட்சியில் 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படம் பார்ப்பதிலோ முடிந்து போய்விடக் கூடாது.

தேசப்பற்று முதலில் தேசத்தின் சட்டதிட்டங்களைக் கடைபிடிப்பதில் துவங்க வேண்டும். சட்டத்தை மீறும் சூழலைக் காணும்போது தார்மீகக் கோபம் உள்ளுக்குள் உருவாக வேண்டும்.

சமூக, தேச நலனுக்காய் உருவாகும் இயக்கங்கள், முயற்சிகள் போன்றவற்றில் பங்களிப்புகளைச் செலுத்துவது, இன்னொரு நாட்டுக்காரரிடம் பேசும்போது நமது நாட்டின் பெருமைகளையும், உயர்வுகளையும் பேசுவது என சின்னச் சின்ன செயல்களிலும் தேசப்பற்று வெளிப்பட வேண்டும்.

நாம் இன்றைக்குத் தயாராக்கும் தேசமே நமது பிள்ளைகளின் கரங்களில் நாளை இருக்கப் போகிறது. எதிர்கால சந்ததிக்காக மரம் நடுவது போலவே, தேசத்தையும் தயாராக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. நாளைய இந்தியாவின் இளைஞர்கள் முந்தைய தலைமுறையினரை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டுமே தவிர, எரிச்சலுடன் எட்டிப் பார்க்கக் கூடாது!

சமூக விரோதச் செயல்கள் ஒவ்வொன்றும் நமக்கும் தேசத்துக்குமான நட்புறவை உடைக்கின்றன. பொதுச் சொத்துக்களின் மீதான தாக்குதலானாலும் சரி, வன்முறையானாலும் சரி, விதிமீறல்களானாலும் சரி, சட்ட விரோதமானாலும் சரி, எல்லாமே தேசப்பற்று மனதில் இல்லை என்பதன் வெளிப்பாடுகளே.

சிக்னலில் சிவப்பு விளக்கு போட்ட பின்னும் சட்டை செய்யாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டு போவது கூட உங்களுக்கு தேசப்பற்று இல்லை என்பதன் அறிகுறியே!

வரிகளை ஒழுங்காகச் செலுத்துவது, சொத்துக் கணக்குகளைச் சரியாகக் காட்டுவது... இவையெல்லாம் உங்களுடைய தேசப்பற்றின் சில அடையாளங்கள். இவற்றில் தில்லுமுல்லு செய்வது என்பது அப்பாவின் பர்சுக்குள் கையை விட்டுத் திருடுவது போன்றது!

இன்றைக்கு நமது தேசப்பற்று பெரும்பாலும் எமோஷனல் வெளிப்பாடுதான். அது ஜெய்ஹிந்த், ஹெய் ஹோ என்றெல்லாம் வசீகர வார்த்தைகளை வீசுவதில் வெளிப்படுகிறது. அது விரைவிலேயே மங்கிப் போய்விடும். `ஆண்டுக்கு ஒரு முறை நினைத்து விட்டுப் போகும் நினைவுநாள் அல்ல தேசப்பற்று' என்பதை இளைஞர்கள் உணரவேண்டும்.

நான் மட்டும் ஓட்டுப் போடாவிட்டால் என்னவாகப் போகிறது? நான் மட்டும் வண்டியை சிக்னலில் நிறுத்தாவிட்டால் என்னவாகப் போகிறது? நான் மட்டும் லஞ்சம் கொடுக்காமல் இருந்தால் என்னவாகப் போகிறது?... என `நான் மட்டும்...' எனும் வாசகங்கள் நமது தேசத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் முட்டுக் கட்டைகள்.

இத்தகைய 'நான் மட்டும்...' சங்கதிகள் ஒரு சீனப் பெருஞ்சுவராய் இந்திய வளர்ச்சியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது!

தேசம் என்பது எந்த ஒரு சின்ன எல்லைக்குள்ளும் அடைக்க முடியாதது. பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் எனும் சர்வ சங்கதிகளின் கூட்டுத் தொகையாய் தேசத்தைப் பார்ப்பதே முழுமையான பார்வையாகும். அப்போதுதான் சமத்துவ சிந்தனையும், சகோதர உணர்வும் ஊற்றெடுக்கும்.

தேசத்தின் மீதான நம்பிக்கை என்பது தேசத்திலுள்ள மண்ணிலும், கல்லிலும் வைக்கும் நம்பிக்கையல்ல. தேச மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை எனும் உயரிய சிந்தனை உருவாக வேண்டும். அதுதான் நம்மைச் சார்ந்த மக்களை ஒருங்கிணைக்கவும், மனித நேயச் சமூகத்தைக் கட்டியெழுப்பவும் நமக்கு உதவும்.

தேசத்தை நேசிப்போம்
சேதத்தைச் சீர்செய்வோம்!

சேவியர்

இன்று: அன்னை இந்திரா பிறந்த தினம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினம்

Thursday, November 17, 2011

இன்றும் ஒரு தகவல்

ஊடக தாக்குதல்

உலகில் எங்கு எந்த தாக்குதல் நடந்தாலும் அது மக்களுக்கு செய்தி மட்டும்தான். ஆனால் அதை சேகரிக்கும் மீடியாக்களுக்கு உயிர்போய் உயிர் வரும் சங்கதி. இன்று உலகம் முழுவதும் மீடியாக்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கிறது.

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் நிருபர்களை கடந்து இன்று பிரீலான்ஸர் என்று சொல்லப்படுகிற சுதந்திர பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்தவகை நிருபர்களில் 45 சதவீதம் பேரை உலகம் முழுக்க சிறையில் அடைத்து வைத்திருக்கின்றன பல்வேறு நாட்டு அரசுகள்.

இவர்கள் எந்த நிறுவனமும் சாராதவர்கள் என்பதால் பத்திரிக்கையாளர் என்ற பட்டியலிலேயே கொண்டு வராமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 136 நிருபர்கள், பல பத்திரிகை ஆசிரியர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோர் பல்வேறு நாட்டு சிறைகளில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஈரானில் மட்டும் 23 பத்திரிக்கையாளர்கள் சிறையில் உள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்ற அடிப்படை தகவல் கூட பல அரசுகள் வெளியிடுவதில்லை. இலங்கையில் நடந்த படுகொலைகள் பற்றி எழுதியதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திசநாயகம் முதல் ஈரானில் அரசுக்கு எதிராக எழுதியதாக கைது செய்யப்பட்ட பிரீயா பஜூ வரை பத்திரிக்கையாளர்கள் அரசியல் மற்றும் விசாரணை கைதிகளாக முடக்கப்பட்டு உள்ளனர்.

1992 முதல் இன்றுவரை உலகம் முழுவதும் 810 பத்திரிக்கையாளர்கள் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் 31 பேர். யுத்தங்களில் இறந்து போனவர்கள், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்கள், வேறு நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை ஆள் கடத்தல் அல்லது காணாமல் போனவர்கள் என்ற தலைப்புகளில் கீழ் வைத்திருக்கின்றன பல நாட்டு சட்டங்கள். ஊருக்கெல்லாம் செய்தி சொன்னாலும் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் பத்திரிக்கையாளனின் நிலையும் இதுதான். மனித உரிமையை அடகு வைத்துதான் மனித உரிமை பற்றி பேச வேண்டியிருக்கிறது.

'இங்கு செய்தியாளர் செய்தி ஆகிறார்!'  

Wednesday, November 16, 2011

பெட்ரோலுக்கு பதில் பதில் மீத்தேன் ஹைட்ரேட்

"பெட்ரோல் விலை உயர்வை நினைத்து நினைத்து கவலைப்பட்டது போதும்! இனி 'மீத்தேன் ஹைட்ரேட்' டுக்கு மாறுங்கள்" என்று அழைக்கிறது விஞ்ஞான உலகம். மீத்தேன் ஹைட்ரேட் ஒரு நேரடி எரிபொருள். அதை அப்படியே பயன்படுத்தலாம்.

பெட்ரோல் எப்படி கிடைக்கிறது? முதலில் பூமிக்கு அடியில் இருந்து 'க்ரூட் ஆயில்' என்கிற கச்சா எண்ணையை எடுக்கிறார்கள். பின் அதனை பல நிலைகளில் சுத்திகரித்தபின்தான் பெட்ரோலிய பொருட்கள் நமக்கு கிடைக்கிறது.

மீத்தேன் ஹைட்ரேட் விஷயத்தில் இந்த அவஸ்தையெல்லாம் கிடையாது. சுத்திகரிப்பு பிரச்சனையோ, கூடுதல் செலவுகளோ இதில் இல்லை. பார்பதற்கு பனிக்கட்டி போல் தெரியும். இதனை கற்பூரம்போல் அப்படியே எரியவிடலாம்.

அப்புறம் என்ன? பெட்ரோலை ஓரங்கட்டிவிட்டு மீத்தேன் ஹைட்ரேட்டுக்கு மாறிவிட வேண்டியதுதானே என்கிறீர்களா...? அங்கேதான் சிக்கலே இருக்கிறது. இது அத்தனை சுலபத்தில் கிடைப்பதில்லை. மிக மிகக்குறைவான வெப்பநிலையில்தான் இதைப்பார்க்க முடியும். நமது கடலின் அடி ஆழத்தில் உள்ள அடுக்குகளில் 'மீத்தேன் ஹைட்ரேட்' ஏராளமாக புதைந்து கிடக்கிறது.

நமக்குதான் இது புதிய செய்தி. ஆனால் இது குறித்து விஞ்ஞானிகள் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். 2002-ம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியாக இந்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

கடலுக்கு அடியில் உள்ள வண்டல் பதிவுகளில் பாக்டீரியாக்கள் வேதிவினை நிகழ்த்தும்போதுதான் 'மீத்தேன் ஹைட்ரேட்' உருவாவதாக சொல்கிறார்கள். அங்கிருக்கும் வெப்பநிலை, அழுத்தம் இரண்டும் இதை பத்திரமாக பாதுகாத்து வைக்கிறது.

இதை நாம் சட்டென்று கடலுக்கு மேலே தரைக்கு கொண்டு வர முடியாது. மேலே உள்ள வெப்பநிலையில் 'மீத்தேன் ஹைட்ரேட்' நிலையாக இல்லாமல் சிதைந்துவிடும். அதன் பின் அதை எரிபொருளாக பயன்படுத்த முடியாது. அதனால்தான் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாமல் விஞ்ஞானிகள் திணறுகிறார்கள். 'மீத்தேன் ஹைட்ரேட்' டை கடலுக்கு அடியில் கண்டுபிடித்ததே ஒரு சவால். அதன்பின் அதை சிதையாமல் மேலே கொண்டு வந்து எரிபொருளாக பயன்படுத்துவது இரண்டாவது சவால். இதற்காக 100 கோடி ரூபாய் செலவில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

'மீத்தேன் ஹைட்ரேட்' விஷயத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் மிக ஆர்வமாக உள்ளன. காரணம், இந்த நாடுகளின் கடலோர பகுதியில் ஏராளமான 'மீத்தேன் ஹைட்ரேட்'கள் உள்ளதாக சொல்கிறது தகவல். இது உண்மையானால், இந்தியா எரிபொருள் துறையில் உலகின் மிக பெரிய வல்லரசாக ஆதிக்கம் செலுத்தும். கடலுக்கடியில் புதைந்து கிடக்கும் இந்த புதையல் கைக்கு எட்டுமா? பெங்களூரில் நடைபெறும் ஆய்வுகள்தான் முடிவு சொல்ல வேண்டும். அதுவரை பெட்ரோலுக்கு அதிக விலை கொடுத்துதான் ஆக வேண்டும்.

'ஆக்கப்போருத்தவன், ஆறப்போருக்கத்தான் வேண்டும்'
  

Tuesday, November 15, 2011

காயத்ரி மகிமை!

"ஓம் பூர்புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ் ப்ரசோதயாத்''


- ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க நாம் பயன்படுத்தும் மந்திரம் இது.

இதன் பொருள் தெரியுமா?

'எல்லா பாவங்களையும், அறியாமையையும் போக்குகிறவரும், வணங்குவதற்குரியவரும், இவ்வுலகத்தைப் படைத்த கடவுளையும், அவரது புகழையும் தியானிப்போமாக. அவர் நம் புத்தியை வழிநடத்துவாராக' என்பதுதான், இதன் பொருள்.

சரி, யார் இந்த காயத்ரி?

வேதங்களின் தாயே காயத்ரி. பசுவின் பாலை விடச் சிறந்த உணவு கிடையாது. அதுபோல காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்த மந்திரம் வேறில்லை. காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விஸ்வாமித்திரரே ரிஷி. அதிகாலைப் பொழுதில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். நீராடியபின் ஜெபிப்பது சிறப்பு. முடியாவிட்டால் பல்தேய்த்து கால், கைகளை சுத்தம் செய்துவிட்டு சொல்லத் தொடங்கலாம்.

இந்த மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும் உச்சரிப்பது சிறப்பு. முடியாவிட்டால், இதன் பொருளை மனப்பாடமாக்கிக் கொண்டு தொடர்ந்து சொல்லி வரலாம்.

இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் நம் மனத்தூய்மை பெருகும். மனம், வலிமை பெறும். ஞாபக சக்தி அபரிமிதமாகும்.

காயத்ரி சொல்லும்போது எந்தவொரு இஷ்ட தெய்வத்தையும் மனதில் தியானிக்கலாம். காயத்ரி பெண் தேவதை என்பதால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தால் நன்மை பல பெறலாம்.

Monday, November 14, 2011

கலைந்து போன கனவு ராச்சியம் - ஒரு மௌன யுத்தம்

ஈழப் போராட்டம் தந்த வலிகளின் சாட்சியம் இந்தச் சிறுகதை...... இந்த சுட்டியை  திறந்து ஒருதடவை  நீங்கள் படித்துப் பாருங்களேன்.

http://abedheen.wordpress.com/2011/11/08/sivakumar-kanaiyazhi/#comments

Saturday, November 12, 2011

கூடா நட்பு கூடாது!

'நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா' என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.

நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஓர் அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம்.

நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.

வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி நமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டுவிடுகிறது.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். சரியான பாதையில் கப்பலைச் செலுத்தும் ஒரு மாலுமியைப் போல இருக்க வேண்டும் நல்ல நண்பன். 'கூடா நட்பு கேடாய் முடியும்' என வள்ளுவர் அந்தக் காலத்திலேயே அழுத்தமாய்ச் சொன்னதன் காரணம் அதுதான்.

இன்றைய இளைஞர்கள் பலரும் இந்த 'நட்புத் தேர்வு' ஏரியாவில் தவறி விடுகிறார்கள்.

'வாடா... தண்ணியடிக்கலாம்' என்று அழைப்பதுதான் உண்மை நட்பின் அடையாளமென நினைத்து விடுகிறார்கள்.

உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான்... உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான்... உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான்... என்பதை மனதில் அழுத்தமாய் எழுதுங்கள்.

ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அதில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப்படுத்துவது அல்ல.

நல்ல நண்பன் உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் ஆத்மார்த்த நண்பன் அல்ல. நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன். அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள். அதற்காத நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள்.

'நான் தண்ணியடிக்கிற விஷயத்தை அப்பாகிட்டே சொல்லாதே' என்பது போன்ற சத்தியங்களை நல்ல நண்பன் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் சத்தியம் கூட மீறப்படலாம் என்பது உண்மைத் தோழனுக்குத் தெரியும்.

உங்களுடைய லட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய லட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கிறதா? என்பதைப் பாருங்கள். உங்களுடைய லட்சியங்களைக் கிண்டலடிப்பவனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின்போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல.

உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். உதாரணமாக, ஓர் இசைக்கலைஞன் ஆவது உங்கள் லட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாய் அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கிவிட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை.

மற்ற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உஷாராய் இருங்கள். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் எந்த நண்பனுடன் இருக்கும்போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறீர்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின்போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.

'மனசுக்கு கஷ்டமாயிருக்கு, பணக் கஷ்டமாயிருக்கு, உதவி தேவையிருக்கு' என கஷ்டம் என்றால் மட்டுமே உங்களிடம் வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் 'மட்டுமே' உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே.

'தப்பான' ஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம். போதை, திருட்டு, பாலியல், சமூக விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச் செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும். அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். 'எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்' என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.

சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.

கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்!

நட்பில் உண்மை நிலவட்டும்
வாழ்வின் கிழக்கு புலரட்டும்!

சேவியர்

Thursday, November 10, 2011

கவிதைச்சரம்

ஒரு துரோகத்தின் முன்னால்...

ரு துரோகத்தின் முன்னால்
எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்பதைப் பற்றி சில குறிப்புகள்...

சற்றும் எதிர்பாராத நேரத்தில்
வந்து நிற்கும்
அழையா விருந்தாளிபோல
துரோகம் ஒன்று
முன்னே வந்து நிற்கலாம்

ஒருவேளை
வெகு அருகிலேயே
ஒரு திருடனைப் போல
ஓடி ஒளிந்துகொண்டிருக்கலாம்

அதன் முன்பு
கண்ணீர்விட்டோ
அழுது புலம்பியோ
ஒரு துளி இரக்கத்தைப்
பெற்றுவிடலாமென்று
நினைத்துவிடாதீர்கள்

அது
அன்பை... காத்திருப்பை
தியாகத்தை... துயரத்தை
ஒருபோதும்
ஏறிட்டுப் பார்க்காது

மூக்கு நுனியில்
நாற்காலியிட்டு அமர்ந்திருக்கும்
உங்களின் பெருங்கோபம்
நியாயமானதென்றாலும்
மற்றவர் முன்னிலையில் அதனை
அடையாளம் காட்டியோ
சத்தம் போட்டோ
பேசிட வேண்டாம்

உங்களைக் குற்றவாளியாக்கிப் பார்த்திட
ஓராயிரம் பொய்களைப்
புனைந்து வந்திருக்கும் அது 

சற்றும் பொருட்படுத்தாது
விட்டுவிடுங்கள் அல்லது
புன்னகை ஒன்றை ஏற்றி
வாசல் வரை சென்று
வழியனுப்பிப் பாருங்கள்
தலைகுனிந்தவாறு
விடைபெறாமலேயே
சென்றுவிடக்கூடும்

அதிகம் கடினம்
என்றாலும்
பெருங்கருணைகொண்டு
மன்னித்துவிடுங்கள்
அடுத்த நிமிடமே
அது இறந்துவிடும்!

சுமதிராம் 


*********************************************

வேண்டுகோள்

பஞ்சுமிட்டாய்க்காரன்
தேநீர் அருந்தும்
ஒற்றைக் கணத்திற்குள்
தன்னை விடுதலை செய்து
அழைத்துப் போய்விடுமாறு
அநேக குழந்தைகளிடம்
கேட்டுவிட்டிருப்பாள்
பொம்மைப் பொம்மி !

ஆத்மார்த்தி


*********************************************


வேர்கள்

மாமரத்தடி
பேருந்து நிறுத்தம்
என்கிறார்கள்
வேப்பமரத்தடி
பேருந்து நிறுத்தம்
என்கிறார்கள்
புளியமரத்தடி
பேருந்து நிறுத்தம்
என்கிறார்கள்
அந்த நிறுத்தங்களில்
எந்த மரமுமே இல்லை
கொடி மரத்தடி
பேருந்து நிறுத்தம்
என்கிறார்கள்
அந்த நிறுத்தத்தில் மட்டும்
இருக்கின்றன
ஐந்தாறு கொடி மரங்கள் !

மு.பெரியசாமி  

Wednesday, November 9, 2011

இன்றும் ஒரு தகவல்

சிறைக்கு போகவும் லஞ்சம்

சிறை என்றால் அங்கே சித்ரவதையாக கூடங்கள் இருக்கும். ஆனால் சிறையையே சித்ரவதைக் கூடங்களாக மாற்றியவர் ஹிட்லர். 1933-ல் ஜெர்மனியில் ரெய்க்ஸ்டாக் சிறை தீக்கிரையானது. அரசியல் மற்றும் ராணுவ அதிகாரிகளை அடைப்பதற்காக உருவாக்கப்பட்டது நாஜி சிறைச்சாலைகள்.

யூதர்களை தேடிப்பிடித்து கைது செய்து கூட்ஸ் வண்டியில் நிர்வாணமாக அடைத்து சிறைக்கு அனுப்பினார்கள். வழியில் இறந்தவர்கள், கொடுத்து வைத்த அதிர்ஷ்டசாலிகள். அப்படியில்லையென்றால், உயிரோடு இறப்பவர்களுக்கு 'டி4 ஆக்ஷன்' ஆரம்பிக்கும். காற்றுபுகாத அளவுக்கு மூடப்பட்ட அறையின் மந்தை மாதிரி மனிதர்களை அடைத்து விஷ வாயுவை செலுத்துவார்கள். மூச்சுத்திணறி ஒவ்வொருவராக செத்து மடிவதை பார்த்து மகிழ்வார்கள். இதுதான் 'டி4 ஆக்ஷன்'. துப்பாக்கியை பரிசோதிக்க யூதர்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டார்கள். மருத்துவ பரிசோதனை என்கிற பெயரில் ஒவ்வொரு பாகமாக அலற அலற வெட்டி எடுத்தார்கள். தோலை உரித்தார்கள். வென்னீரில் மிதக்க விட்டார்கள்.

1942-ம் ஆண்டு 'ஆஸ்விச் சேம்பர்' என்ற புதிய சிறையை கட்டினார் ஹிட்லர். 15 நாட்களுக்கு மேல் ஒரே ஒரு ரொட்டித்துண்டை மட்டுமே சாப்பிட்டு சாகாமல் இருந்தால் பரீட்சையில் பாஸ். உயிர் பிழைத்த அவர்கள் சாகும்வரை ஜெர்மானியர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்.

இந்த செய்தி தெரிந்ததும் யூதர்கள் பலர் ஜெர்மன் காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆஸ்விச் சேம்பருக்கு வர ஆரம்பித்ததார்கள். உடனடியாக வரக்கூடிய சாவை தள்ளிப்போட்டு உயிர்வாழலாமே அதுதான் அவர்களின் ஆசை.

கைதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதை பார்த்த சிறைக்காவலர்கள் வந்தவர்களுக்கு ரொட்டித்துண்டு கொடுப்பதை நிறுத்திவிட்டு, விஷப்புகை கொடுக்க ஆரம்பித்தார்கள். இரண்டு வருடத்தில் நிம்மதியாக வாழலாம் என்று ஆஸ் விச்சேம்பருக்கு நம்பி வந்து இறந்த யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்துக்கும் மேல்.

'எல்லோரையும் நம்புபவன் புத்திசாலியல்ல'     

Tuesday, November 8, 2011

இன்றும் ஒரு தகவல்

இனி கம்ப்யூட்டர் படையும் உண்டு

மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோக்களின் தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. போகிற போக்கில் குடிநீர் தொட்டியில் விஷத்தைக் கலப்பது. ரெயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது என்று எந்த எல்லைக்கும் அவர்கள் போவார்கள். வங்கியை முடக்குவது, வெப்சைட்டுகளை செயல் இலக்கச் செய்வது போன்ற காரியங்களை ஒரு வேலையாகவே செய்து வருகின்றனர், சிலர். தேடுதல் வலைத்தளமான கூகுல் தொடங்கி டிவிட்டர், பேஸ்புக் வரை அத்தனை ஜாம்பவான்களுமே இப்படிப்பட்ட தாக்குதலை சந்தித்து இருக்கின்றன. 2009-ம் ஆண்டில் இப்படி நடந்த ஒரு தாக்குதலில் இருந்து கூகுல் ஒரு சில நிமிடங்களில் மீண்டுவிட்டது. ஆனால், டிவிட்டரும் பேஸ்புக்கும் இதில் இருந்து மீள ஒரு சில மணி நேரங்கள் ஆனது.

இப்போது சைக்கோக்களின் கையில் இருக்கும் சைபர் அட்டாக் என்ற ஆயுதத்தை வருங்காலத்தில் ஒரு சில அரசாங்கங்களே கையில் எடுக்கும் ஆபத்தும் இருக்கிறது. கடல்படை, விமானப்படை, காலாட்படை போன்று கம்ப்யூட்டர் படையும் தனிபடையாக சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. உதாரணமாக சீனாவில் கூகுல் படும்பாடு, சென்ஸார் என்ற பெயரில் அரசுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட வெளியிடக் கூடாது என்று என்று கட்டுப்பாடு விதித்தது. மனித உரிமை ஆர்வலர்கள் இ - மெயிலை உளவு பார்த்தது, பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தது. ஒரு நாட்டின் அரசாக இருந்தாலும் தங்களின் வாடிக்கையாளர்கள் அனுப்பும் அல்லது பெரும் கடிதங்களை உளவு பார்ப்பது சகித்து கொள்ள முடியாது என்று சொல்லி கூகுல் சீனாவில் இருந்து வெளியேறிவிட்டது. ஆனால், சீனாவில் இருந்து வெளியேறி விட்டாலும், சீன அரசின் கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத ஹாங்காங்கில் இருந்தபடி கூகுல் இப்போது செயல்படுகிறது. ஆனால் சீனாவுக்குள் இப்போது யாரும் கூகுளைப் பார்க்க முடியாதபடி சீன அரசு அதைத் தடுத்து விட்டது. வருங்காலத்தை ஆட்டிப்படைக்கப் போவது இந்த கம்ப்யூட்டர் படைதான்.        

Saturday, November 5, 2011

ஜாக்கி சான் 100வது படம் '1911'

அது, ஏப்ரல் 7ம் தேதி. ஆண்டு 1954 . அன்றைய தினம் பிறந்த அந்தக் குழந்தையை மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்படியாவது அக்குழந்தையை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்பினார். குழந்தையின் பெற்றோரிடம் கற்கவும் செய்தார். ஆனால், சார்லஸ் சானும் சரி, லீ - லீயும் சரி அதற்கு சம்மதிக்கவில்லை.

இத்தனைக்கும் சார்லஸ் சான், ஒரு சமையல்காரர், லீ-லீ, வீட்டு வேலைகளை செய்பவர். போதிய வருமானம் ஒருபோதும் வந்ததில்லை. ஆனாலும் தங்கள் குழந்தையை தாங்களே வளர்க்க விரும்பினார்கள். சான் காங் - காங் என நாமகரணமும் சூட்டினார்கள். 'ஹாங்காங்கில் பிறந்தவன்' என்பதுதான் அப்பெயரின் அர்த்தம்.

சான் காங் - காங், பள்ளியில் சேர்ந்தான். ஆனால், படிப்பு ஏறவில்லை. இந்த நேரத்தில் சார்லஸ் கானுக்கும், லீ - லீக்கும் ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்தது. அதே சமையல் + வீட்டு வேலைதான். எனவே தங்கள் மகனை 'சைனா டிராமா ஸ்கூல்' என்ற போர்டிங் பள்ளியில் சேர்த்துவிட்டு ஆஸ்திரேலியா புறப்பட்டார்கள். அப்போது சான் காங் - காங்குக்கு வயது 7 .

இந்தப் பள்ளியில்தான் சான் காங் - காங், கராத்தே, குங்ஃபூவில் ஆரம்பித்து சகல மார்ஷியல் கலைகளையும் பயின்றான். ஆக்ரோபாடிக்ஸ் உடற்பயிர்களை மேற் கொண்டான். சீனாவில் ஒபரா எனப்படும் மேடை நாட்டிய நிகழ்ச்சிகள் மாறுபட்டவை. நடிப்பு, பாடல்களுடன் ஆக்ரோபாடிக்ஸ் உடற்பயிற்சிகளும் ஒன்று கலந்த ஒரு காக்டெயில் வடிவம். 'பீகிங் ஒபரா' இதில் தலைசிறந்து விளங்கியது. இக்குழுவுக்கு தேவையான நபர்களை பயிற்ருவித்து தருவதுதான் 'சைனா டிராமா ஸ்கூலின்' பணி.

கடமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் பெயர் போன இப்பள்ளியில் சான் காங் - காங், ஒரு நாளைக்கு 18 மணி நேரங்கள் வரை பயிற்சி எடுத்தான். அவனது ஆர்வத்தை பார்த்த பள்ளி, 8 வயதில் 'பிக் அண்ட் லிட்டில் வாங் டின்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. அப்படத்தில் சான் காங்-காங் தன் திறமையை வெளிப்படுத்தினான்.

தொடர்ந்து நடிக்க சான்ஸ் கிடைத்தது. பள்ளியில் பயிற்சி பெற்றபடியே நடித்தான். கூடவே ஸ்டண்ட் மேண் ஆக வித்தை காட்டினான். 19 வயதில் ப்ரூஸ் லீ நடித்த 'என்டர் தி டிராகன்' படத்தில் சிறு வேடம் கிடைத்தது. அதில் முத்திரை பதித்தான்.

ஆனால், அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே அவனை ஆஸ்திரேலியாவுக்கு வரும்படி அவனது பெற்றோர் அழைத்தனர்.

அங்கு சென்று சான் காங் - காங், கட்டிட வேலையில் நாள் கூலி அடிப்படையில் பணிபுரிந்தான். அவனது உருவத்தையும், துள்ளலையும் பார்த்த சக தொழிலாளர், அவனை 'லிட்டில் ஜாக்' என்று அழைத்தார். அதுவே 'ஜாக்கி' என சுருங்கியது.

ஒரு நாள் - வில்லி சான் என்ற தயாரிப்பு நிர்வாகியியிடமிருந்து உடனடியாக ஹாங்காங் புப்பட்டு வரும்படி தந்தி வந்தது. 'ஜாக்கி சான்' ஆக பெயர் மாறிய சான் காங் - காங், நம்பிக்கையுடன் சென்றான். 'ஃபிஸ்ட் ஆஃப் ஃபியுரி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அப்போது சான் காங் - காங் என்கிற ஜாக்கி சானுக்கு வயது 21 .

அதன் பிறகு நடந்தது அனைத்தும் சரித்திரம். ஸ்டண்ட் மாஸ்டர், கதாசிரியர், திரைக்கதையாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என இடைப்பட்ட காலத்தில் பல முகங்களில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் ஜாக்கி சானுக்கு வெளிவர இருக்கும் '1911 ' படம் நூறாவது படம்.

உழைப்புக்கு பொருள்தரும் ஜாக்கி சானின் வாழ்க்கைக்கு ஒரு ராயல் சல்யுட்.

கே.என்.சிவராமன் 

Friday, November 4, 2011

அறிவியல் புரட்சியாளர்

ஆரம்ப பள்ளிப் படிப்பை கூட முறையாக கற்றிராத ஒருவர், பின்னாளில் அரசு பாலிடெக்னிக்கில் முதல்வராக வேலை பார்த்தார் என்றால் அது ஆச்சர்யம்தான். அவர் தான் ஜி.டி.நாயுடு. பல்துறைகளிலும் நூற்றுக்கணக்கான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்திய அவர் ஓர் அறிவியல் புரட்சியாளர் தான்.

கோயமுத்தூருக்கு முதன் முதலில் என்ஜினீயரிங் படிப்பை அறிமுகப்படுத்தியவரும் அவரே. அவர் உருவாக்கிய சர்தார் ஹோப் பாலிடெக்னிக்கில் மாணவர்களை 6 வாரங்களில் ஆட்டோ மொபைல் எஞ்சினீயராகவும், 42 நாட்களில் ரேடியோ எஞ்சினீயராகவும் மாற்றினார்.

சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் இதை ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். ராணுவ அதிகாரிகளுக்கும் நாயுடு இந்த பயிற்சியை அளித்தார். ஒரு குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் சகல துறைகளிலும் தனது ஆளுமையைச் செலுத்தினார்.

வழக்கத்தைவிட நீண்ட பருத்தி இழைகளைத் தரும் பருத்தி விதிகளை கண்டுபிடித்தார். அதன் விதிகளை 10 ரூபாய்க்கு விற்றார். ஜெர்மானியர்கள் இதை வாங்கி கலப்பினத்தை உருவாக்கினார்கள். அதற்கு "நாயுடு காட்டன்" என்றே பெயர் வைத்தனர்.

நாயுடு உருவாக்கிய பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டன. நீரிழிவு, ஆஸ்துமா, வெள்ளைப்போக்கு போன்ற நோய்களுக்கு நாயுடு கண்டுபிடித்த மருந்துகளை அமெரிக்க மருந்து கம்பெனி "ஸ்பைசர்" வாங்கிக் கொண்டது.

ரூ.2 ஆயிரத்து 500க்கு ஒரு சிறிய காரை தயாரிக்க முடியும் என்றார் நாயுடு. அதற்கான புளு பிரிண்டை மத்திய அரசுக்கு அனுப்பினார். அது மட்டும் நடந்திருந்தால், நானோ காருக்கு முன்னோடியாக நாயுடு கார் இருந்திருக்கும்.

குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றையும் நாயுடு தயாரித்தார். அதன்படி 7.11.1967 காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்தநாள் 3.45 மணிக்கு கிரகப்பிரவேஷம் நடத்தப்பட்டது. அவ்வளவு வேகமான தொழில்நுட்பம் அவரிடம் இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் ஷேவிங் மெஷின், மின்சார மோட்டார், சப்பாத்தி, பூந்தி தயாரிக்கும் சமையலறை சாமான்கள், 640 பூட்டுகளை ஒரே சாவியில் திறக்கும் மாஸ்டர் கீ என்று பல்துறை வித்தகராக இருந்தார். தொழில் நுட்பம் என்பதை எட்டாத உயரத்தில் இருந்து இறங்கி, எளிமைப்படுத்தியதுதான் நாயுடுவின் வாழ்நாள் சாதனை.    

Thursday, November 3, 2011

இசையால் வசமாகா இதயமெது ...

அவன் பட்டுத்திறத்தால், விரல்களில் தவழும் தாள லயத்தால்,
முக பாவத்தில் காட்டும் நகைச்சுவைத் தரத்தால் ....சூழ்நிலையையே தனதாக்கிக் கொள்ளும் ஆளுமையால்,
பாடாய் படுத்தும் நோயில் வீழ்ந்தும், மாறாத சமூக அக்கறையால் ,
எம்மையெல்லாம் கொள்ளைகொண்டவன்- எங்கள் தோழன் பாச்சா!(தங்கபாஸ்கரன்)
இன்று அவன் எம்மோடு இல்லை என்பதையே நம்பமுடியவில்லை.
அவனை தனதாக்கிய கடவுளை நோவமோ..காவு கொண்ட நோயினை நோவமோ..
ஏ மரணமே! உன்னைத்தான் நோவமோ..நாம் உறுதியாக நம்புகிறோம் ..
பூமியில் அவன் விதைத்தவை அறுவடையாகும்போது உலகம் அவனைக் கொண்டாடும்.
அதுவரை அமைதியாய் அவன் தூங்க அனுமதிப்போம்..மரணம் வாழ்வின் முடிவல்ல தோழர்களே!

-தோழர்கள்-

Wednesday, November 2, 2011

இன்றும் ஒரு தகவல்

தோல்வியில் முடிந்த புரட்சி

ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றுப் போனால் தீவிரவாதி. இதுதான் உலகம் முழுவதும் புரட்சியாளர்களுக்கு இருக்கும் பெயர். புரட்சிகள் பெரும்பாலும் தோல்வியில் தொடங்குகின்றன அல்லது தோல்வியில் முடிகின்றன. மாவோ, பிடல் காஸ்ட்ரோ போன்ற பலரின் புரட்சிகள் தோல்வியில் தான் தொடங்கின.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் நடந்த சிப்பாய்கலகம், கதர் போராட்டம், கிலாபத் கிளர்ச்சி என்று பல புரட்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. ஆனால், மாணவர்கள் புரட்சியை கையில் எடுத்தால் எப்போதும்மே தோற்றதில்லை. உலகின் மிக அதிக புரட்சிகளை வெற்றி பெற வைத்ததும் அவர்கள் தான். இதனால் மாணவர்கள் களம் இறங்கினால் எந்த புரட்சியும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை 1989 வரை உலகம் முழுவதும் இருந்தது.

இந்த நம்பிக்கையை பீரங்கி ஏற்றி நசுக்கியது சீனா. 1989ல் சீன பொதுவுடைமை கட்சியின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள தியாமென் சதுக்கத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களை மிரட்ட பீரங்கிகளை களம் இறக்கியது, சீன அரசு. நிராயுதபாணியாக நின்ற மாணவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். தியாமென் சதுக்கம் ரத்தகளறி ஆனது. இறந்தது வெறும் 200 பேர்தான் என்று பச்சைப்பொய்யை சொன்னது சீனா. உலகம் முழுவதும் பல நாடுகளும் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதுவரை நடந்த புரட்சிகளில் உலகம் முழுவதும் பெரிதும் கவனிக்கப்பட்டு தோல்வியில் முடிந்த புரட்சி இதுதான்.

புரட்சியாளர்களும் தியாகமும் பிரிக்க முடியாதவை. ஆனால், வாழும் காலத்தில் அவர்கள் பல அவமானங்களை சந்திக்கின்றனர். புரட்சியாளர்களின் ஒருவரான லெனின், ஒருமுறை நொந்துபோன நிலையில் கூறிய வார்த்தைகள் இவை... 'பிரட்சியாளன் வாழும் காலத்தில் அவனை மனிதனாக கூட ஏற்காதவர்கள், மறைந்தபின் மகானாக மாற்றி விடுகிறார்கள்'...

இந்த வார்த்தைகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியதாகவே உள்ளது.