Monday, October 31, 2011

மனம் திறந்து பாராட்டுங்க !

'மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது' என்கிறார் வில்லியம் ஜேம்ஸ்.

தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப்படவேண்டும், பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி வேர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

'இப்போதெல்லாம் பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டது' என்று சொன்னால் உடனே எல்லோரும் தலையாட்டுவீர்கள்.

'ஆமாம். யாருமே யாரையும் பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோ' என சட்டென பதில் வரும்.

அந்த பேச்சை அப்படியே ஒரு நிமிடம் நிறுத்தி விட்டுக் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.

'நேற்றைய தினம் நாம் எத்தனை பேரைப் பாராட்டினோம்?'

ஏதேனும் நினைவுக்கு வருகிறதா?

சரி, போன வாரத்தில்...? போன மாதத்தில்...?

ஒவ்வொரு படியாக பின்னோக்கிப் போய் சிந்தித்துப் பார்த்தால், நாம் யாரையும் பாராட்டவில்லை எனும் உண்மை உறைக்கும்.

'பாராட்டு என்பது நம்மைத் தவிர மற்ற எல்லோரும் செய்ய வேண்டிய விஷயம்' என ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்கிறோம்.

மனதாரப் பாராட்டுவது மனிதனுக்கு இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான பண்பு. எந்தச் செலவும் இல்லாத விஷயம் இது. ஆனால் பணத்தினால் உருவாக்க முடியாத ஓர் ஆரோக்கியமான சூழலை பாராட்டுவதன் மூலமாய் உருவாக்கிவிட முடியும்.

நமது தினசரி வாழ்க்கையில் நாம் எத்தனையோ நபர்களைச் சந்திக்கிறோம். காலையில் காபி குடிப்பது முதல், அலுவலகம் சென்று, வேலை முடித்து, வீடு வந்து சேர்வது வரை ஏராளமான நபர்களோடு நாம் உரையாடுகிறோம். அவர்களில் பலர் பாராட்டுக்கு உரியவர்களாய் இருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

பலரும் செய்யும் ஒரு தவறு, 'பாராட்டு என்பது அலுவலக சமாச்சாரம்' என நினைப்பதுதான்.

பாராட்டு என்பது நல்ல எந்த ஒரு செயலுக்குமே உரியது. எந்த இடத்திலும் வழங்கப்படக் கூடியது. எந்த நபருக்கும் கொடுக்கக் கூடியது.

சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள். சில ஆண்டுகளுக்குப் பின், நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, நீங்கள் விதைத்த அந்த சின்னச்சின்ன பாராட்டுகள் பூஞ்சோலையாய் வளர்ந்து புன்சிரிக்கக் காண்பீர்கள்.

'பணம் வாங்கறாங்க, வேலை பாக்கறாங்க' எனும் மனநிலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டியது முதல் தேவை. உதாரணமாக உங்கள் வீட்டை அழகாகத் துடைத்து வைக்கும் வேலைக் காரப் பெண்ணுக்குக் கொடுக்கலாம் ஒரு பாராட்டு. வீட்டில் தோட்ட வேலை செய்யும் ஒருவருக்கும் வழங்கலாம் பாராட்டு.

பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்பவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் அல்ல எனில், நம்மில் பலரும் பாராட்டுக்கு உரியவர் களாக இருக்க மாட்டோம் இல்லையா?

ஏன் பாராட்ட வேண்டும் என்று கேட்கும் பலருக்கும் பாராட்டுகள் செய்யும் மாயாஜாலங்கள் புரிவதில்லை. பாராட்டு, ஒருவருடைய தன்னம்பிக்கையை வளர்க்கிறது. பாராட்டு, வேலை சரியான பாதையில் செல்கிறது என்பதை ஒருவர் சரிபார்க்க உதவுகிறது. பாராட்டு, ஒரு நபர் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டு பயணிக்க உதவுகிறது.

பாராட்டில் இருக்க வேண்டிய ஒரே விஷயம், அது ஆத்மார்த்தமானதாய் இருக்க வேண்டும் என்பது தான். போலித்தனமான பாராட்டுகளைத் தோண்டிப் பார்த்தால் உள்ளே சுயநலமே ஒளிந்திருக்கும்.

பாராட்டுவதற்கு பாசிடிவ் மனநிலை வேண்டும். வாழ்க்கையை இனிமையாகவும், ஆனந்தமாகவும், உற்சாகமாகவும் எதிர்கொள்பவர்களே பாராட்டுவதில் தயக்கம் காட்டுவதில்லை.

சிடுமூஞ்சிகள் பாராட்டுவதற்குக் காசு கேட்கும் பார்ட்டிகள். இதில் நீங்கள் எந்த வகை? தப்பான பக்கம் நிற்கிறீர்களெனில் உடனே நேர் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ... என புலம்புபவர்கள் ஒரு வகை. எந்தப் பூவில் எந்தத் தேன் இருக்குமோ என்று பார்ப்பவர்கள் இன்னொரு வகை. நேர் சிந்தனை உள்ளவர்கள் பிறரிடம் இருக்கும் நல்ல விஷயங்களைத் தேடுவார்கள். அப்போது அவர்களுக்குப் பாராட்ட நிறைய விஷயம் கிடைக்கிறது. குறை சொல்பவர்கள் எல்லா செயலுக்கும் `உள்நோக்கம்' கற்பிப்பதிலேயே காலத்தைச் செலவிடுவார்கள். அவர்களுக்குப் பாராட்டும் மனமே வருவதில்லை.

சந்திரனுக்கு ராக்கெட் விடுவது போன்ற சாதனை செய்தால்தான் பாராட்ட வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக் கொள்வதுண்டு. அது தப்பு! சின்னச் சின்ன செயல்களில் உங்கள் அன்பான பாராட்டு வெளிப்படவேண்டும்.

உங்கள் பையன் பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தால் மட்டுமா பாராட்டுவீர்கள்? எல்.கே.ஜி.யில் ஹோம் ஒர்க் செய்யும் போதே பாராட்டுவீர்கள் அல்லவா? அதே உற்சாகத்தைப் பிறரிடமும் காட்டுங்கள்.

நல்ல விஷயத்தைப் பாராட்டுவதில் முதல் ஆளாய் நில்லுங்கள். உங்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயமும் பிறரிடம் உருவாகும். பாராட்ட வேண்டும் என முடிவெடுத்துப் பாருங்கள், உங்கள் கண்ணுக்கு பிறருடைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு பாராட்டும் ஒருவகையில் தனிமனித முன்னேற்றத்துக்கு உதவு கிறது. தனிமனித வளர்ச்சிதானே சமூக வளர்ச்சியின் ஆதாரம்!

ஒரு கூட்டத்தில் ஒருவர் பாராட்டும் பண்பு உடையவராக இருந்தாலே போதும். பூவோடு சேர்ந்த பூக்கூடையும் மணப்பது போல, கூட இருப்பவர்களுக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டு விடும். எனவே அத்தகைய நண்பர்களோடு நீங்கள் இணைந்து இருப்பதே சிறப்பானது.

பாராட்டு அடுத்தவர்களுடைய மனதில் மகிழ்ச்சியை வரவழைக்கும். மகிழ்ச்சி என்பது அருவி போல அது அருகில் இருப்பவர்களையும் நனைக்கும். அந்த மகிழ்ச்சி உங்களையும் ஈரமாக்கும். உங்களுடைய மனமும் உற்சாகமடையும். உற்சாகமான மனம் ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் என்பதையே மருத்துவம் சொல்கிறது.

ஒரு சூழல் எப்படி மோசமாய் இருக்கிறது என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது ஒரு வகையான மனநிலை. அந்த சூழலை என்ன செய்தால் சீர்செய்யலாம் என யோசிப்பது இன்னொரு மனநிலை. பாராட்டும் குணமுடையவர்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்.

அன்பு... அதுவே பாராட்டும் மனதுக்கான அஸ்திவாரம்.

மனதளவில் அன்பு இருந்தால் பாராட்டு தானாகவே ஊற்றெடுக்கும்.

பலருக்கு இந்த அஸ்திவாரம் வலுவற்றதாக இருப்பதுதான் துயரம். ஆரம்பத்தில் பாராட்டுபவர்கள் கூட பாராட்டப்பட்ட நபர் வளர்ச்சியடைந்தால் பிறகு பாராட்ட மாட்டார்கள். அடுத்தவர்களின் வளர்ச்சியில் பொறாமை படும் குணம் பாராட்டை அனுமதிப்பதில்லை.

ஒருவரைப் பாராட்டும் போது அவருடைய திறமையை அளவுகோலாய் வைத்தே பாராட்டுங்கள். உங்களுடைய திறமையை வைத்தல்ல. அப்போது தான் பலவீனமான மனிதனும் பாராட்டுக்குரியவனாய் தெரிவான். ஒவ்வோர் சூழலுக்கும் ஒவ்வொரு விஷயம் தேவையானதாய் இருக்கும்.

மிருதங்கத்தில் துளைகள் இருந்தால் அது வீண்.

புல்லாங்குழலில் துளைகள் இல்லையேல் அது வீண்.

சூழலோடு பொருந்தி பாராட்டுகள் வெளிப்படுவது நல்லது.

'என்னதான் செய்தாலும் அவனைப் பாராட்டவே முடியாது' என ஒருவரைப்பற்றி நீங்கள் முடிவெடுத்தால் கூட அவரிடம் இருக்கும் நல்ல செயல்கள் என்னென்ன என பட்டியலிடுங்கள். அந்தப் பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைவதைப் பார்க்க உங்களுக்கே வியப்பாக இருக்கும். அதன் பின் அவரைப் பாராட்ட காரணங்கள் உங்கள் கையிலேயே இருக்கும்.

நம்பிக்கை வையுங்கள். ஒரு நபர் மீது நீங்கள் நம்பிக்கை வைக்கும்போது அவருடைய வளர்ச்சி உங்களுக்கு பிரியமானதாய் மாறுகிறது. அவர் மீதான நம்பிக்கை அவரைப் பாராட்டச் செய்கிறது. அந்தப் பாராட்டு அவரை வெற்றியை நோக்கி நகர்த்தும். எனவே மனிதர்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

மிக முக்கியமாக, பாராட்டும் பழக்கம் வீடுகளிலிருந்து துவங்க வேண்டும். வீடுகளில் விதைப்பது, வீதிகளில் முளைவிடும். பாராட்டு தனது முதல் சுவடை வீட்டில் வைக்கும்போது அதன் பயணச் சாலைகள் நாட்டில் விரிவடையும்.

கணவனோ, மனைவியோ பாராட்டுக்கு அப்பாற்பட்டவர் களல்ல. பெற்றோரையும் பாராட்டுங்கள். பிள்ளைகளையும் பாராட்டுங்கள். முதியவர்கள் மனதளவில் குழந்தைகள். அவர்களுக்கும் உங்கள் பாராட்டு ரொம்பவே அவசியம்.

நேரடியாகப் பாராட்டுகையில் உடல் மொழி ரொம்பவே முக்கியம். உடல் மொழி உற்சாகமாக இருந்தால்தான் பாராட்டின் முழுப் பரிமாணமும் பாராட்டப்படுபவரைப் போய்ச் சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

யாரையேனும் விமர்சித்தால் கூட, சகட்டுமேனிக்கு குறைகளை மட்டுமே அடுக்காதீர்கள். அவர்களுடைய ஒரு நல்ல பண்பையாவது பாராட்டுங்கள். விமர்சனங்கள் பக்குவமாகப் பரிமாறப்படவேண்டியவை, பாராட்டுகள் மறைக்காமல் பகிர்ந்து கொள்ளப்படவேண்டியவை.

வெறும் வார்த்தைகளிலான பாராட்டுகளைத் தாண்டி அடுத்த நிலையில் சின்னச் சின்னப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டுவது ரொம்பவே சிறப்பானது. அந்தப் பரிசு அவர்களுக்கு உங்கள் பாராட்டை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அது அபரிமிதமான உற்சாகத்தையும்

ஊட்டும்.பாராட்டு என்பது அன்பின் விதைகளில் முளைத்தெழும் அழகிய கொடி. அது பின்னிப் படரும் சமூகம் ஆனந்தத்தின் கானகமாய் வசீகரிக்கும்.

மனம்தரும் எந்தப் பாராட்டும்
வெற்றியின் வீதியில் தேரோட்டும்!

சேவியர்

Tuesday, October 25, 2011

சர்வாதிகாரிகளின் கடைசி காலம்

சர்வாதிகாரிகளின் கடைசி காலம் மிகவும் கொடூரமானதாகவே இருக்கும். இதற்கு சமீபத்திய உதாரணம் லிபிய அதிபர் கடாபி. சர்வாதிகாரி என்றாலே அதில் ஹிட்லர், முசோலினி இல்லாமல் முழுமை பெறாது. அவர்களின் இறுதிக்காலம் எப்படி இருந்தது?

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தோளோடு தோள் நின்று உதவிய தோழன் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி. போரில் தோற்றபிறகு ஒரு வேனில் ஏறி எல்லையை கடந்து தப்பிக்க முசோலினி முயன்றார். கூடவே தனது இணை பிரியா காதலி கிளாரா பெட்டாசியையும் அழைத்துச் சென்றார்.

1945, ஏப்ரல் 26 அதிகாலையில் எல்லையை கடக்க முயன்றபோது அவர்களை புரட்சிப்படை தடுத்து நிறுத்தியது. முசோலினியை அடையாளம் கண்டுகொண்டு காதலியோடு சேர்த்து அவரை கீழே இறக்கினார்கள். "இவனை கைது செய்து நேச நாடுகளிடம் ஒப்படைத்து விடலாம்" என்று பலரும் கூறினார்கள். முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்த முசோலினி அவர்கள் முன் மண்டியிட்டு, "என்னை கொள்ளாதீர்கள்..." என்று கெஞ்சினார். எப்படிப்பட்ட சர்வாதிகாரிக்கும் உயிர் பயம் இருக்கும் போல... முசோலினியின் பேண்ட் சிறுநீரால் நனைந்திருந்தது.

எதிரே நின்ற இளைஞர்கள் முசோலினியையும், அவர் காதலியையும் சல்லடையாக துளைத்தெடுத்தார்கள். அவர்கள் உடலை மிலான் நகரின் நடுவீதியில் போட்டார்கள். ஒரு சாமானியப்பெண் முசோலினியின் முகத்தில் காரித்துப்பினாள். பிறகு நிறைய பெண்கள் வந்து துப்பினார்கள். இளைஞர்கள் சிலர் சுற்றிலும் நின்று முசோலினியின் உடல் மீது சிறுநீர் கழித்தார்கள். பின் ஒரு பெட்ரோல் பங்க் வாயிலில் தலை கீழாக தொங்கவிட்டு போய் விட்டார்கள். முசோலினியின் கொடூரமான முடிவு ஹிட்லருக்கு தெரியவந்தது. அப்போதே அவர் உடல் நடுங்கியது. "இந்த கொடூர முடிவு எனக்கு வரக்கூடாது. நான் இறந்தவுடன் என் உடலை எரித்து விடுங்கள். என் சாம்பல் கூட எதிரிகள் கையில் கிடைத்து விடக்கூடாது. "சத்தியம் செய்து கொடுங்கள்" என்று தன் உதவியாளர்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். அப்போதே அவரது இறுதி நேரம் நெருங்கி இருந்தது. ஹிட்லர் ஏதாவது ஒரு அரபு நாட்டுக்கு தப்பித்துப் போயிருக்கலாம். யூதர்களை கொன்றதால் அரபு நாடுகள் இவரை வரவேற்று இருக்கும். ஆனால், ஹிட்லருக்கு கடைசி வரை அந்த எண்ணம் இல்லை.

"எந்த விளைவுகளையும் சந்திக்கும் துணிவு ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டும். நான் வாழ்ந்த இடம் இது. இங்கிருந்தபடியே என் முடிவை சந்தித்துக்கப் போகிறேன். நாளை... கோடிக்கணக்கான மக்கள் என்னை சபிக்கப்போகிரார்கள் என்பது எனக்கு தெரியும். விதி அப்படியொரு நிலையை எனக்கு தந்து விட்டது" என்று சொன்னார் ஹிட்லர். தனது காதலி ஈவாபிரானுடன் கைகோர்த்தவாறு மெல்ல உல் அறைக்கு நடந்தார். இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.

ஈவா முதலில் சயனைட் விழுங்கி தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் ஹிட்லர் தன் கைத்துப்பாக்கியை எடுத்து வலது நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டு தற்கொலை செய்து செய்து கொண்டார். ஹிட்லர் விருப்பபடி அவர்களின் உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. உடலின் சாம்பலை சிறு கோணிப்பையில் சேகரித்து, மண்ணை ஆழமாக தோண்டிப் புதைத்தார்கள். சாம்பல் கூட எதிரிகளுக்கு கிடைக்கவில்லை. ஹிட்லரின் விருப்பப்படிதான் அவரது மரணமும் நிகழ்ந்தது.

'முடியாண்ட மன்னரும் இறுதியில் பிடிசாம்பல் ஆவர்".  

பிரபலங்களின் கடைசி வார்த்தை

உலகில் பிறப்புகளும், இறப்புகளும் சாதரனமானவை தான். எந்த உயிரினமும் மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை. அதை இயற்கையாக ஏற்றுக்கொள்கின்றன. மனிதன் மட்டும் தான் மரணம் இல்லாத வாழ்க்கை வாழ விரும்புகிறான். ஆனால் இயற்கை எல்லா உயிர்களையும் போலவே மனித உயிரையும் குறித்த நேரத்தில் எடுத்துக் கொள்கிறது.
மனிதன் மரணிக்கும் பொது அவன் உதிர்க்கும் வார்த்தைகள் மதிப்பு மிக்கவை. அவற்றில் பொய் ஒளிந்திருக்காது என்பது உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கை. இங்கு சில பிரபலங்கள் இறக்கும் பொது சொன்ன வார்த்தைகள் கொடுக்கப்படுகின்றன.

ஜூலியஸ் சீசர், தான் சாகும் பொது துரோகம் செய்த நண்பனைப் பார்த்து, 'யூ டூ புரூடஸ்?' என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும் இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும் பொது கூறிய 'ஹே ராம்' அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை.

பெருந்தலைவர் காமராஜர் தனது இறுதி நிமிடங்களில் தன் உதவியாளரிடம் கூறியது, ''வைரவா விளக்கை அனைத்து விடு'' என்பது தான்.

ஆனால் தாமஸ் ஆல்வா எடிசனோ விளக்கை எரிய விடச் சொன்னார். அவரது கடைசி வார்த்தை "விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் பொது வெளிச்சம் இருக்கட்டும்".

ரோம் சாம்ராஜ்யத்தின் அதிபயங்கர கொடுங்கோல் மன்னனான காலிகுலா, கடைசியில் தன்னை பாதுகாக்க வேண்டிய பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களாலேயே குத்திக் கொல்லப்படுகிறார். அந்த கொடுங்கோலனின் கடைசி வார்த்தையும் திமிராகத் தான் இருந்தது. "நான் இன்னும் இறக்கவில்லை."

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ சொன்ன கடைசி வார்த்தை, "இறைவா... நான் ஒரு குற்றமும் செய்யாதவன்".

உலகையே தனது அழகால் கவர்ந்த டயானாவின் இறுதி வார்த்தை, "கடவுளே என்ன நடந்தது எனக்கு?''

அழகுக்கு உவமையாக திகழும் கிளியோபாட்ரா தனது கையில் பூநாகத்தை பிடித்துக் கொண்டு, "ஆஹா... இதோ... என் முடிவு இங்கே இருக்கிறது" என்றார், கடைசியாக.

இசை ஜாம்பவான் பீத்தோவன் இறக்கும் பொது "நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது" என்றார்.

விஞ்ஞானி மேரிக்யூரி சாகும் தருவாயில் சொன்ன வார்த்தை "என்னை தனிமையில் இருக்க விடுங்கள்."

பொருளாதார விஞ்ஞானியாகவும், அமெரிக்க அதிபராகவும் இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின், "இறக்கும் மனிதனால் எதையும் எதிதாகச் செய்ய முடியாது" என்றார்.

இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் இறுதிவார்த்தை ''இந்தியாவில் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே" என்பது தான். இதை தன் மகன் ஹுமாயுனிடம் சொல்லி முடித்தவுடன் உயிர்பிர்ந்தது.

மரணம் அடைவதற்கு முன்பு ஒன்பது நாட்களாக கோமாவில் இருந்தார், வின்ஸ்டன் சர்ச்சில். கோமாவில் விழுவதற்கு முன் பேசிய கடைசி வார்த்தை "எனக்கு எல்லாமே போர் அடிக்குது" என்பது தான். எல்லா பெரிய மனிதர்களுமே இறக்கும்போது எதோ ஒன்றை உலகுக்கு சொல்லி விட்டுதான் போய் இருக்கிறார்கள்.

 'நமது கடைசி வார்த்தை, நமக்கே தெரியாது' - அது தான் விதி.                   

Monday, October 24, 2011

வீண் செலவு வேண்டாமே!

'நாலு ஏக்கர் தென்னந்தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே...' என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது.

இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் 'பேஷன்' என்றோ 'டிரண்ட்' என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகி யிருக்கிறது.

உங்களுக்கு எதிரே செல்லும் இளைஞனின் கையிலிருக்கும் செல்போனின் விலை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்பதுதான் பதறடிக்கும் உண்மை! நண்பனிடம் ஒரு ஐபோன் இருந்தால் தானும் ஒரு ஐபோன் வாங்கிவிட வேண்டும் என பலர் துடிக்கிறார்கள். புதிதாக என்ன மாடலில் செல் போன் வந்தாலும் அதை வாங்கிவிடவேண்டும் என்ற துடிப்பு இன்றைய இளைஞனிடம் காணப்படுகிறது.

`தாங்கள் பட்ட கஷ்டத்தைத் தங்கள் பிள்ளைகள் படக் கூடாது' என பெற்றோர் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். வரப்பில் படுத்து வேலை செய்தாலும் பிள்ளைகளுக்கு வியர்வை அரும்பக் கூடாது என சாமரம் வீசுவார்கள். புழுதியில் புழங்கினாலும் பிள்ளை ஏசியில் உறங்க வேண்டுமென விரும்புவார்கள்.பணத்தின் அருமை பிள்ளைகளுக்குப் புரியாமல் போவதற்கு இதுவே கூட காரணமாகிவிடுகிறது.

இளம்பெண்களிடம் இருக்கும் ஒரு பழக்கம், ஏகப்பட்ட மேக்கப் பொருட்களை வாங்கிக் குவிப்பது. மேக்கப் பொருட்களை அதிகமாய்ப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது, தோலுக்குத் துரோகம் இழைப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் கரடியாய்க் கத்தினாலும் பலரும் பொருட்படுத்துவதில்லை.

அழகு என்பது மேக்கப் பொருட்களால் வருவதல்ல, ஒரு சின்ன புன்னகையின் மின்னலில் மிளிர்வது என்பதை இளம்பெண்கள் உணர்ந்தாலே போதும். குறைந்தபட்ச மேக்கப் பொருட்களே போதும் உங்கள் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள.

'ஹேய்... என்னோட சட்டை எப்படி இருக்கு? பிரபல கம்பெனியின் தயாரிப்பு... விலை இரண்டாயிரம் ரூபாய்...' என பந்தா விடுவதில் பல இளைஞர்களுக்கு சில வினாடி சுகம் கிடைக்கிறது. இது தன்னம்பிக்கைக் குறைபாடின் வெளிப்பாடு என்கிறது உளவியல்.

பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கொண்டே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் மனம் இவர் களுடையது. தனது பணத்தை வீணாக பிறருடைய 'அபிப்பிராயத்துக்காக' செலவிடும் அப்பாவிகள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். நமது பணம் அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த அல்ல எனும் அடிப்படை உண்மை உணர்தல் முக்கியம்.

பலர் அலுவலகங்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவதையே கவுரவக் குறைச்சலாக நினைத்து விடுகிறார்கள். நண்பர்களுடன் உயர்தர ஹோட்டல்களில் உணவருந்துவதுதான் உயர்ந்தது என கருதிக் கொள்கிறார்கள். சில நேரங்களில் வார இறுதிக் கொண்டாட்டங்களுக்காக கடற்கரை ஓரங்களிலோ, ஹோட்டல்களிலோ அவர்கள் செலவு செய்யும் பணத்தில் பல ஏழைகளின் பட்டினியை பல வாரங்களுக்கு விரட்டலாம். வீட்டில் சாப்பிடுவது உங்கள் பர்ஸை மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்தையும், குடும்ப உறவையும் வலுவாக்கும்.

சில சமயங்களில் வீட்டுப் பெரியவர்களிடமிருந்து இந்தப் பழக்கம் இளம் வயதினருக்குத் தொற்றுவதுண்டு. பல அம்மாக்களும், ஐயாக்களும் விளம்பரங்களைக் கண்டால் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். இலவசமாய்க் கிடைக்கும் கரண்டிக்காக பட்டு சேலை வாங்க முண்டியடிப்பார்கள்.

'சூப்பர் ஆபர்' என அடித்துப் பிடித்து வாங்கிய பொருட் களில் எத்தனை பொருட்கள் நமக்குத் தேவையானவை? 'கண்டிப்பாக வேண்டும்' என வாங்கிக் குவித்த பொருட்களை எவ்வளவு பயன்படுத்தியிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். ஒரு ஆண்டில் எத்தனை முறை அது பயன்பட்டது? அதை வாங்காமல் இருந்திருந்தால் என்னென்ன இழப்புகள் நேரிட்டிருக்கும்? வாங்கியதால் என்னென்ன நன்மைகள் வந்திருக்கின்றன? என கொஞ்சம் யோசியுங்கள்!

பாதிக்கு மேலான பொருட்கள் 'ஏண்டா வாங்கினோம்?' என நம்மை யோசிக்க வைக்கும் என்பது சர்வ நிச்சயம்.

தேவையான அளவு செலவு செய்வதும், சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதும் இளைஞர்களிடம் இருக்க வேண்டிய சில சிறப்பும் பண்புகளாகும். குடும்பத்தை வலுவாக்கவும், அதன் மூலம் வலுவான சமூகத்தைக் கட்டியெழுப்பவும் இது ரொம்பவே அவசியம்.

ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ரூபாய் செலவு செய்யப் போகிறேன் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். உதாரணமாக வீட்டு வாடகை, பயணச் செலவு, உணவு, போன் பில், இத்யாதி என பட்டியலிடுங்கள். அந்த பட்ஜெட்டுக்குள் உங்கள் செலவுகளை கச்சிதமாக நிறுத்துங்கள். `எது ரொம்ப முக்கியம்' என ஒவ்வொரு விஷயத்தையும் வரிசைப்படுத்தி அந்த வரிசைப்படி பொருட்களை வாங்க முயலுங்கள். மாத இறுதியில் நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டிருக்கிறீர்களா என்று பாருங்கள்.

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பேன் என முடிவெடுங்கள். அது எவ்வளவு என்பதை நீங்களே முடிவெடுங்கள். சின்ன வயதில் உண்டியலில் சேமிப்பதைப் போல, சட்டென எடுக்க முடியாத ஒரு வங்கியில் அந்த சேமிப்பு இருப்பது நல்லது.

புத்திசாலித்தனமான இளைஞர்கள் வேலை கிடைத்த உடனேயே தங்கள் ரிட்டையர்மெண்ட்டுக்காக சேமிக்கத் துவங்குவார்கள். சின்னத் தொகையாக இருந்தாலும், பணி வாழ்க்கை முடிந்தபின் அந்தப் பணம் நமக்கான பொருளாதார ஊன்று கோலாய் உருமாறும்.

இளைஞர்கள் சிக்கிக் கொள்ளும் இன்னொரு இடம் கிரெடிட் கார்ட். கிரெடிட் கார்ட் இருபுறமும் கூரான வாள் போன்றது. சரியாகக் கையாளவில்லையேல் காயம் நிச்சயம். சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கான ஒரே அட்வைஸ், 'என்ன செலவு செய்தாலும் பணப்பரிமாற்றமே வைத்துக் கொள்ளுங்கள்' என்பதுதான். செலவு குறையும் என்பது சர்வ நிச்சயம்.

பிரியத்துக்குரியவர்களுக்கு 'கிப்ட்' கொடுப்பதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுங்கள். பரிசுப் பொருட்கள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை அன்பில் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். பல வேளைகளில் கையால் நாம் உருவாக்கும் கடிதங்களோ, கை வினைப் பொருட்களோ தரும் ஆத்ம திருப்தி, போகும் வழியில் வாங்கிச் செல்லும் விலையுயர்ந்த பொருட்களுக்கு இருப்பதில்லை!

அப்படியே ஏதேனும் வாங்க வேண்டுமெனும் கட்டாயமெனில் முன்னமே திட்டமிடுங்கள். கடைசி நேரத்தில் அலைபாயும்போது செலவு அதிகமாகும். சில மாதங்களுக்கு முன்பே யோசித்தால் நல்ல விலைக்குப் பொருட்கள் கிடைக்கக் கூடும்.

இன்றைக்கு உங்கள் பின்னால் ஓடி ஓடி வரும் 'பர்சனல் லோன்' புதைகுழியில் மறந்தும் விழுந்து விடாதீர்கள். கால் வைத்து விட்டால் அப்படியே உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும். முதலில் வசீகரமாய்ப் பேசி பின் கோரமாய்ப் பல்லிளிக்கும். அதீத எச்சரிக்கை தேவை! பலரும் நண்பர்களை இம்ப்ரஸ் செய்கிறேன் பேர்வழி என லோன் வாங்கிக் குவிக்கும் பொருட்கள் அவர்களுடைய பொருளாதாரத்தை டைனோசர் மாதிரிக் கடித்துக் குதறிவிடும்.

பல இளைஞர்கள் நண்பர்கள் செய்கிறார்களே என்பதற்காக ஜிம், டென்னிஸ் கிளப், கிரிக்கெட் கிளப், நீச்சல் கிளப் என ஒரு பந்தாவுக்காக எல்லாவற்றிலும் உறுப்பினர் ஆகி விடுவார்கள். ஆனால் எதிலும் உருப்படியாகப் போவதில்லை. தேவையற்ற இடங்களில் உறுப்பினராய் இருப்பதைத் தவிர்த்தாலே கணிசமான பணம் சேமிக்கலாம்.

உங்களிடம் உறைந்து கிடக்கக்கூடிய ஏதோ ஒரு திறமையைக் கூர்தீட்டினால் கிடைக்கக்கூடிய மரியாதை அலாதியானது. எழுத்தோ, ஓவியமோ, கணிதமோ, தையலோ ஏதோ ஒன்றில் உங்கள் ஸ்பெஷாலிட்டி இருக்கலாம். உங்களிடம் கார் இருக்கிறது என்பதை விடப் பெரிய கவுரவம் நீங்கள் நல்ல ஓவியர் என்பது! இந்த உண்மையை உணர்ந்தாலே நீங்கள் பணத்தின் மூலம் அடுத்தவர்களை ஈர்க்கும் குணாதிசயத்திலிருந்து வெளியே வந்து விடுவீர்கள்.

* உங்களிடம் என்ன இல்லை என்பதை நினைத்துக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். என்ன இருக்கிறது என்பதை நினைத்து தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

* அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் கவலை விடுங்கள். அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் அபிப்பிராயம் சொல்வதையும் தவிருங்கள்.

* என்ன செலவு செய்தாலும் அதன் நீண்டகாலப் பயன்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு துளிப் பணமும் பலகோடி மக்களுக்கு எட்டாக் கனி என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

* சூதாட்டம், மது, போதை போன்ற தவறான வழிகளுக்கு நிரந்தரப் பூட்டு போடுங்கள். உங்கள் வருமானத்தின் கடைசித் துளியையும் உறிஞ்சும் வேகமான வாய் அவற்றுக்கு உண்டு.

* பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டிருங்கள். நீங்கள் ஒரு நேரம் ஹோட்டலில் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. அதற்காகச் செலவிடும் பணத்தை ஒரு ஏழைக்குக் கொடுங்கள். கொடுப்பதில் இருக்கும் சுகம், வாங்கிக் குவிப்பதில் இருப்பதில்லை எனும் உண்மை உணர்வீர்கள்.

* பொருட்கள் எப்போதுமே நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை. ஆழமான நட்பும், அன்புமே நிரந்தர மகிழ்வைத் தருபவை என்பதைக் கவனத்தில் இருத்துங்கள்.


வீணான செலவுகளை விலக்கு,
அன்பே உலகத்தின் விளக்கு!

சேவியர்

வாழ்வில் இனிமை சேர...

நமது நேற்றைய சிந்தனை, அதன் அடிப்படையில் எடுத்த முடிவுகள் ஆகியவற்றின் தாக்கமே நமது இன்றைய வாழ்க்கை. இன்று நாம் சிந்தித்து எடுக்கும் முடிவு நாளைய நமது வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகிறது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பாரபட்சமின்றி சமமாக வழங்கப்பட்ட ஒன்று, 24 மணிநேரம் கொண்ட ஒருநாள். எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பதே நம் வாழ்க்கையின் நிலையைத் தீர்மானிக்கிறது.

இதைப் பற்றி ஒரு தத்துவப் பேராசிரியர் கூறும் விளக்கத்தைக் காண்போம்...

அவர் தனது வகுப்பில் மாணவர்கள் முன்பு ஒரு கண்ணாடி ஜாடியை வைத்து அதில் தலா இரண்டு அங்குலம் அளவுடைய கற்பாறைத் துண்டுகளைப் போட்டார். அதன்பின்னர் மாணவர்களைப் பார்த்து, 'ஜாடி நிரம்பிவிட்டதா?' என்று கேட்டார். உடனே மாணவர்கள், `நிரம்பவில்லை' என்று கூறினர்.

அடுத்து பேராசிரியர் சிறிய ஜல்லிக்கற்களை எடுத்து ஜாடியில் போடத் தொடங்கினார். கடைசியில், ஜாடி முழுவதும் நிரம்பிவிட்டதா என்று கேட்டார். இப்போதும் நிரம்பவில்லை என்றனர் மாணவர்கள். உடனே பேராசிரியர் மணலை அள்ளிக் குடுவையில் போடத் தொடங்கினார். சிறிதுநேரத்தில் எந்த இடைவெளியும் இல்லாமல் ஜாடி நிரம்பியது. மாணவர்களும் ஜாடி நிரம்பிவிட்டது என்று கூறினர்.

உடனே பேராசிரியர் மாணவ, மாணவியரைப் பார்த்து, 'இந்த ஜாடி போன்றதே உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கை. இதில் முதலில் நிரப்பிய கற்கள் சற்று பெரியதாக இருந்தன. அவைதான் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் முக்கியமாகக் கருதும் குடும்பம், உடல்நலம், குழந்தைகள், வேலை போன்றவை. சிறிய ஜல்லிக்கற்கள் என்பது உங்களது வீடு, நீங்கள் பயன்படுத்தும் வாகனம், உடமைகளைக் குறிக்கும். மணல் துகள்கள் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சிறிய நிகழ்வுகள்' என்றார்.

நமது வாழ்க்கையில் எதை முதலில் நிரப்புவது என்று முக்கியத்துவம் அளிக்கத் தெரியாதபோது சிறிய செயல்களுக்கு மதிப்பளித்தால் மணலை நிரப்புவது போல முக்கியமானவற்றைச் செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். மணலை நிரப்பிவிட்டுக் கற்களை நிரப்பினால் அது சரியாக அமையாது. வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்ந்து, உரிய செயல்பாடுகளுக்கும், அனுபவங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வாழப் பழகிக்கொண்டால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்.

சிறிய வேலை பார்த்த ஒரு குடும்பத்தலைவர் தனது மனைவியையும், மூன்று குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தார். மாலை வேளையில் சில வகுப்புகளில் சேர்ந்து படித்து அதன் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று சம்பளத்தைக் கூட்டிக்கொண்டார். அதனால் தனது குடும்பத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அவரால் அளிக்க முடிந்தது.

மீண்டும் அதைவிட உயர் பதவிக்கு போக வேண்டுமென்றால் மேலும் படிக்க வேண்டும் என்று அறிந்து மீண்டும் மாலை நேரங்களில் கல்வி பயின்று தேர்வெழுதி வெற்றிபெற்று தனது பதவியை உயர்த்திக் கொண்டார்.

ஆனால் அவரால் குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் அதிகநேரத்தைச் செலவிட முடியவில்லை. ஞாயிற்றுக் கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் கடினமாக உழைத்து வருவாயை பெருக்குவதையே முக்கியமாகக் கருதினார். ஒரு புதிய வீட்டைக் கட்டி அதில் குடிபுகுந்த பின்பு கடினமாக உழைக்கப் போவதில்லை என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் ஒருநாள் இரவு உறங்கப் போனவர், காலையில் எழுந்திருக்கவே இல்லை. பதவி, வருமானம் என்று தமது நிலையை உயர்த்திக் கொள்வது தவறல்ல. ஆனால் அவர் தனது உடல்நலம், குடும்பத்தாருடன் பேசி மகிழ்வது போன்றவற்றையும் முக்கியமாகக் கருதியிருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா விஷயங் களும் அடங்கியதுதான் வாழ்க்கை.

மாமியார், மருமகள் இடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள் ஏற்படுவதை நாம் பரவலாக அறிந்திருக்கிறோம். ஆனால் முற்றிலும் வித்தியாசமான மருமகள் ஒருவர் தனது கணவனைப் பார்த்து ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது அவர், குழந்தைகளையும் தன்னையும் நன்றாக கவனித்துக் கொள்வதாக கூறினார். ஆனால் அவர் தனது விதவைத் தாயார் மீது அதிக அன்பு கொண்டவராக விளங்கியபோதும், அவர் வசிக்கும் பூர்வீக வீட்டுக்குச் சென்று அவருடன் மனம் விட்டு பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சுட்டிக்காட்டினார்.

தான் தாயின் மீது அன்பு காட்டிய போதும் அவருடன் நேரம் செலவழித்து உரையாடவில்லை, வெளியில் அழைத்துச் செல்வது போன்ற காரியங்களைச் செய்யவில்லை என்று உணர்ந்து வருந்தினார் அந்தக் குடும்பத்தலைவர். உடனே தனது தாயின் வீட்டுக்குச் சென்றார். தாய்க்கு ஒரே ஆச்சரியம். தனது தாயை மாலை வந்து அழைத்துச் சென்று ஓட்டலில் உணவருந்திவிட்டு, பூங்காவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மாலையில் தயாராக இருக்கும்படி கூறினார்.

தாய்க்கு மகிழ்ச்சி தாளவில்லை. அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரிடமும் தன் மகன் தன்னை வெளியே அழைத்துச் செல்வதைப் பற்றி கூறி மனம் மகிழ்ந்தார். மாலையில் மகன் வந்து தாயை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு செல்லும்போது மிக்க மனமகிழ்ச்சியுடன் தன்னிடமுள்ள விலை உயர்ந்த சேலையை அணிந்து சென்றார். உணவுப் பண்டங்களின் விலைப்பட்டியலைப் பார்த்து மகன் தனது தாயின் விருப்பம் அறிந்து உணவுவகைகளை வரவழைத்து அவரை உண்ணச் சொல்லி வேண்டினார். தாயும் நேரம் போவது தெரியாமல் தனது மகனிடம் பேசிக் கொண்டே இருந்ததால் பூங்காவுக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் தாய், மகன் ஆகிய இருவர் மனதிலும் ஒரே திருப்தியும், மகிழ்ச்சியும் நிலவின.

வீட்டிற்கு திரும்பியவுடன் தன் மனைவியை பாராட்டிய அவர், தாயுடன் கழித்த பொழுது மனநிறைவை அளித்தது என்று கூறினார். சில நாட்கள் கழித்து ஒருநாள் அந்தத் தாய் மாரடைப்பால் இறந்து போனார். அவர் இறந்த சில நாட்களுக்குப் பின், தாயும், மகனும் உணவருந்திய ஹோட்டலில் இருந்து ஒரு ரசீதும், தகவலும் வந்தன. தனது மகனும், மருமகளும் ஓட்டலில் சென்று பொழுதை கழிக்க அந்தத் தாய் முன்பதிவு செய்த ரசீதுதான் அது. அத்துடன் இணைக்கப்பட்ட கடிதத்தில் தனது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தனது மகனும், மருமகளும் சிறப்பாக வாழவேண்டும் என்று தனது வாழ்த்தையும் எழுதி அனுப்பி இருந்தார் அந்தத் தாய்.

வாழ்க்கை என்பது நிலையற்றது என்று அலட்சியமாக இருக்கமுடியாது. அதேசமயம் நிலையான ஒன்று என்று பெரிதாக மனக்கோட்டையும் கட்ட முடியாது. நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டு, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பின்னர் மற்ற செயல்பாடுகளுக்கும் உரிய இடம் அளிக்க வேண்டும். இவ்வாறு வாழ்க்கையை, வாழும்முறையை இனிதாக மாற்றிக் கொள்வது அவரவர் கைகளில்தான் உள்ளது.
ப. சுரேஷ்குமார்

Saturday, October 22, 2011

வாட்டர் கேட் ஊழல்

 
அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த விஷயம், வாட்டர் கேட் ஊழல். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாக இருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் 1968ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்பிறகு 1972ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி) தலைமையகம் இயங்கும் 'வாட்டர் கேட்' மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தி, அந்த கட்சியினரின் உரையாடல்களைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்தல் வியூகம் பற்றி தெரிந்து கொண்டார் என்பதே நிக்சன் மீதான குற்றச்சாட்டு ஆகும்.

வெள்ளை மாளிகையில் இருக்கும் ஊழல் பேர்வழிகளைப் பற்றி 'வாஷிங்டன் போஸ்ட்' எனும் பத்திரிகை தொடராக எழுதி வந்தது. 'இவர்களுக்கு மட்டும் இந்த ஊழல் விஷயம் எப்படி தெரிகிறது? என்று அரசியல்வாதிகள் பயந்து போய் நிற்க, மற்ற பத்திரிகைகள் தலையை பிய்த்துக் கொண்டன.

இதற்கெல்லாம் காரணம். 'டீப் த்ரோட்' என்பவர் தான். ஒருநாள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையை தொடர்பு கொண்டு 'டீப் த்ரோட்'என்ற புனை பெயரை கொண்டவர் 'வெள்ளை மாளிகையில் நடக்கக் கூடிய முக்கிய ஊழல்களைப் பற்றி துப்பு கிடைத்திருக்கிறது. நான் அதை உங்களுக்கு தருகிறேன். ஆனால், நான் இறந்தபின் தான் என்னைப் பற்றி அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

நிபந்தனைக்கு பத்திரிகை ஒப்புக்கொண்டது. அவர் சொன்ன துப்புகளை வைத்து வாஷிங்டன் போஸ்டின் இரண்டு நிருபர்கள் மொத்த வாட்டர் கேட் ஊழலையும் அம்பலப்படுத்தினார்கள். 'டீப் த்ரோட்' யார் என்று ஒட்டு மொத்த அமெரிக்காவே தேடியது.

ஊழல் விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. அதிபர் நிக்சன் பதவி விலக வேண்டிய நிலை. 'யார் அந்த 'டீப் த்ரோட்' உயிரோடு இருக்கிறாரா, இறந்து விட்டாரா? என்ற விவரங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனால் அவர் அமெரிக்காவின் ஹீரோ' என்று எழுதியது.

நச்சரிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில், 'அவர் அமெரிக்க அதிபர் நிக்சனின் நிர்வாகத்தில் வேலை செய்யக்கூடிய ஓர் ஆண். அவர் அதிகமாக சிகரெட் பிடிப்பார். நிறைய ஸ்காட்ச் குடிப்பார்' இப்படி ஒரு க்ளுவை வைத்து அமெரிக்காவில் யாரை கண்டுபிடிக்க முடியும்?

இப்படியே 33 வருடங்கள் கடந்தன. அமெரிக்க எப்.பி.. ஏஜென்ட் வில்லியம் மார்க் பெல்ட் 'நான் தான் அந்த டீப் த்ரோட்' என்று அறிவித்தார். அப்போது வாஷிங்டன் போஸ்ட் எதுவும் சொல்லவில்லை. 2005 -ம் ஆண்டு 95-வது வயதில் வில்லியம் இறந்த பின் தான் 'ஆம் இவர் தான் டீப் த்ரோட்' என்று அறிவித்தது. கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியது வாஷிங்டன் போஸ்ட்.

'சத்தியத்திற்கு அமெரிக்கர்களும் விலக்கல்ல'      

Tuesday, October 18, 2011

நம்பிக்கைச் சுடர் ஒளிரட்டும்!

தன்னுடைய திறமையை ஒருவரால் எவ்வாறு முழுமையாக உணரமுடியும்? ஜோன் ஆப் ஆர்க் என்ற வீரப் பெண்மணிக்குத் தன்னால் பிரிட்டனுக்கு எதிராக பிரெஞ்சுப் படையைத் தலைமைதாங்கி வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை எப்படி வந்தது? அண்ணல் காந்தியடிகளுக்கு சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம் என்று மார்தட்டித் திரிந்தவர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை எப்படிப் பிறந்தது?

சிலர் தாங்களாக முன்வந்து சவால்களை எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்க முயல்கிறார்கள். வாழ்க்கை நம்மை நோக்கிச் சந்தர்ப்பத்தை அனுப்பி வைத்தால்தான் நமது திறமையை வெளிப்படுத்த முடியும் என்பது கிடையாது.

சாதனையாளர்கள் சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்பதில்லை. எதிர்காலத்தை உருவாக்குவது என்பது அதை தோற்றுவிப்பதே ஆகும்.

ஒருவர் தனது சுயநலத்தை மையமாகக் கொண்டு செயல்படாமல் பொதுநலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படும் போது விசாலமான சிந்தனை உருவாகும். செயலைத் தொடங்கும் முன்பே விளைவைப் பற்றி நினைக்கத் தொடங்குவதால் மனம் சலனமடைகிறது.

சலனப்படும் மனம், சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுகிறது. சிந்திக்கும் ஆற்றல் இல்லாதபோது செயல்படுவதும் குறைந்துவிடுகிறது.

தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களில் சிலர் தங்களுக்குத் தெரிந்த விடையைக்கூட கோர்வையாக எழுத முடியாமல் போகிறது. கவனக் குறைவாகச் செயல்பட நேர்கிறது. அதற்குக் காரணம், தேர்வு பற்றிய பய உணர்வு ஏற்படுத்திய மனச் சஞ்சலமே ஆகும்.

விளையாட்டுப் போட்டிகளின்போதும் இத்தகைய நிகழ்வுகளைக் காணமுடியும். கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ச்சியாக அவுட்டாவது ஒரு வகை அச்ச உணர்வின் வெளிப்பாடே.

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்ற கூற்றின்படி மனதைச் சுதந்திரமாக வைத்துக்கொண்டு செயல்படும்போது அதற்கான பலன் தானாக கிடைக்கத்தான் செய்யும். ஆனால் செயல்படும்போதே விளைவை எண்ணுவதால்தான் கவனக் குறைவு ஏற்படுகிறது.

ஓர் இளைஞன் எப்போதுமே வாழ்க்கையைத் தனக்குக் கிடைத்த பரிசாக எண்ணி எப்போதும், எந்தச் சூழலிலும் இன்முகத்துடனே இருந்தான். யாராவது, எப்படி இருக்கிறாய் என்று கேட்டால் தனக்கு எந்தக் குறையும் கிடையாது என்று உற்சாகத்துடன் கூறுவான்.

அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவன் அவர்களை ஊக்கப்படுத்தி, வாழ்க்கையை எதிர்மறையாகக் கருதாமல் ஆக்கப்பூர்வமாகப் பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவான். பிறரை உற்சாகப்படுத்தி செயல்படச் செய்வது அந்த இளைஞனின் இயல்பாகவே இருந்தது.

எவ்வாறு எப்போதுமே நம்பிக்கையுடனும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படமுடியும் என்று ஒருவர் அந்த இளைஞனைக் கேட்டார். அது சாத்தியமா என்று சந்தேகப்பட்டார். அதற்கு அந்த இளைஞன் விடையளிக்கும்போது, அன்றாடம் தனக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறினான்.

ஒன்று, எப்போதும் சந்தோஷமாகச் செயல்படுவது. மற்றொன்று, கவலையுடன் செயல்படுவது. தான் தினமும் சந்தோஷமாகச் செயல்படுவதையே தேர்ந்து எடுப்பதாகக் கூறினான்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டால் அதிலும் இரண்டு வாய்ப்புக்கள் உள்ளன. ஒன்று, பாதிக்கப்படுவது. மற்றொன்று, அந்த அனுபவத்திலிருந்து எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று அறிந்து கொள்வது.

இவையிரண்டில், பாடம் கற்றுக் கொள்வதையே தான் எப்போதும் தேர்வு செய்வதாகக் கூறினான் இளைஞன். எப்போதாவது யாராவது ஒருவர் அந்த இளைஞனை அணுகி வாழ்க்கையில் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கூறினால், அவர்களுக்கு வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை சுட்டிக் காட்டி நம்பிக்கையுடன் செயல்பட தூண்டுவதாகவும் அவன் தெரிவித்தான்.

ஒருமுறை அந்த இளைஞன் தான் பணியாற்றும் ஹோட்டலின் பின்பக்க கதவை பூட்ட மறந்து விட்டதால் பின்புறக் கதவின் வழியாக மூன்று திருடர்கள் உள்ளே திடீரென்று நுழைந்தபோது அந்த அதிர்ச்சியில் கையிலிருந்த பொருளைத் தவறவிட்டான். அந்த ஓசையைக் கேட்ட திருடர்கள், இளைஞனை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.

அதற்குள் சத்தத்தை கேட்டு பலரும் ஓடிவந்து இளைஞனை மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றனர். 8 மணி நேரத்திற்கு மேல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவனைக் காப்பாற்றினர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து நன்கு கவனித்து வந்தனர்.

அப்போதும் புல்லட்டின் சிறிய துகள்கள் இளைஞனின் உடம்பில் இருக்கத்தான் செய்தன. ஆறு மாதங்கள் கழித்து அந்த இளைஞனிடம் எப்படி இருக்கிறாய் என்று கேட்டவர்களிடம், தான் நன்றாக இருப்பதாக விடையளித்தான். மேலும் தனக்கு ஏற்பட்ட காயம் முற்றிலும் குணமடைந்த பின்பு அது ஏற்படுத்திய வடுவை பார்க்க ஆவலாக இருப்பதாகக் கூறினான்.

திருடர்கள் உள்ளே நுழைந்தபோது அவன் மனதில் என்ன தோன்றியது என்று கேட்டபோது, கதவைப் பூட்டாமல் விட்டது தனது தவறு என்று உணர்ந்ததாகக் கூறினான். மேலும் திருடர்கள் தாக்கித் தரையில் விழுந்தபோது இரண்டு வாய்ப்புக்கள் இருப்பதை உணர்ந்ததாகக் கூறினான்.

ஒன்று, உயிர் பிழைக்கும் வாய்ப்பு. மற்றொன்று உயிரைவிடும் வாய்ப்பு. ஆனால் தான் உயிர் பிழைக்கும் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினான்.

மேலும் தன்னிடம் மனஉறுதி இருப்பதாகவும், ஆகவே தனக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது உயிர் வாழப்போகும் இளைஞனுக்கு சிகிச்சை செய்வதாக நினைத்துக் கொண்டு டாக்டர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்டதாகக் கூறினான். டாக்டர்களின் ஈடுபாட்டுடன் கூடிய சிகிச்சையும், இளைஞனின் மனஉறுதியும் சாவின் பிடியில் இருந்து தப்பிக்க உதவியது என்பதை அனைவராலும் உணர முடிந்தது.

மனோபாவம்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஒரு பணியை மேற்கொள்ளும்போது அதை முழுமையான ஈடுபாட்டுடன் செய்யப் பழக வேண்டும். அன்புடன் செயல்படும்போது அது யாரையும் காயப்படுத்தாது. வாழ்க்கையைக் கொண்டாடப் பழகிக்கொண்டால் கறுப்பு மேகங்கள் கண்ணுக்குத் தெரியாது. ஒளிக்கீற்றுதான் கண்ணுக்குத் தெரியும். ஆகவே சரியான மனோபாவத்துடன் முயற்சியை தொடர்வோம்.
பா.சுரேஷ்குமார்

Saturday, October 15, 2011

கவிதைச்சரம்

சொல்வளம் ஒரு தவளையின் கதை

திக் கரையோரம்
நீரோடும் மணலோடும்
பிறந்த வளர்ந்த தவளையொன்று
ஒரு நாள்
மணல் அள்ளும் எந்திரத்தில்
மணலோடு மணலாக வந்துவிட்டது

அது எங்கேயோ
எடுத்துச் செல்லப்படுகையில்
நாம் மணலோடுதானே இருக்கிறோம்
என்பதைத் தவிர
அது வேறு எதையும்
யோசிக்கவே இல்லை

அது மணல் லாரியில் இருந்தபடி
நகரும் ஆகாயத்தை
வேடிக்கை பார்த்தபடியே வந்தது
ஆகாயம் நகர்வது நின்றதும்
நாம் தண்ணீருக்குள் சென்றுவிடலாம்
என்று அது சமாதானப்படுத்திக் கொண்டது

நகரத்தின் இரைச்சல் மிகுந்த
ஒரு தெருவின் 
வளர்ந்துவரும்
அடுக்கு மாடிக் குடியிருப்பிற்கு
அது வந்து சேர்ந்தபோதுகூட
தாம் வேறு உலகத்திற்கு வந்துவிட்டோம்
என்பதை அது அறியவே இல்லை
மணலுக்குள்ளேயே
விளையாடிக்கொண்டிருந்தது

மறுநாள் காலை
ராட்சதக் கலவை எந்திரத்தில்
மணலை வாரிக் கொட்டியபோதுதான்
அது திடுக்கிட்டு விழித்தது
தனக்கு அதிக அவகாசம் இல்லை
என அறிந்த கணத்தில்
அது தாவிக் குதித்து வெளியேறியது
அப்போதுதான்
தன்னுடைய மாறிவிட்ட
உலகத்தைப் பார்த்தது

ஒரு சிறிய தவளை
அதற்கு எங்கே போக வேண்டும்
என்று தெரியவில்லை
அப்படி எந்த முடிவும் எடுத்து
அதற்குப் பழக்கமே இல்லை
இருக்கிற இடமே
வாழ்கிற இடம் என்பதற்கு மேல்
அதற்கு எதுவுமே தெரியாது
கிணற்றுத் தவளைகள்
கிணற்றோடு இருந்துவிடுகின்றன
ஆற்றுத் தவளைகள்
ஆற்றோடு இருந்துவிடுகின்றன

அது ஒரு சித்தாளின் குழந்தையின் மீது
தாவி அமர்கிறது
அந்தக் குழந்தை பயந்து வீறிடுகிறது
தான் என்ன செய்தோம் என்று
தவளைக்குப் புரியவே இல்லை
அது அச்சத்துடன்
மரச் சாமான்களுக்கு நடுவே
பதுங்கிக்கொள்கிறது

தவளைக்கு அந்த இடம்
பாதுகாப்பானதல்ல
என்று தோன்றுகிறது
இன்னும் கட்டி முடிக்கப்படாத
அந்தக் குடியிருப்பின் ஒவ்வோர்
அறையாகத் தவளை செல்கிறது
மறைவிடங்களற்ற காலி அறைகள்
அதைத் தனிமையை உணரச் செய்கிறது
அது மணலுக்காக
அப்படி ஏங்குகிறது
தவளைக்குத் தாகமாக இருந்தது
அது வாழ்நாளில் முதல் முறையாகத்
தண்ணீருக்கு தவிக்கிறது

மெள்ள வெளியேறி
அது மனிதர்கள் வாழும்
ஒரு வீட்டிற்குள் நுழைகிறது
ஒரு தவளை புத்தகத்தில் வாழக் கூடியது
அல்லது டிஸ்கவரி சேனலில்
வாழக்கூடியது
ஒரு நிஜ தவளை
எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்துகிறது

அவர்கள் ஒரு தவளையை
அப்போதுதான் வாழ்வில்
முதல் முறையாகப்
பார்ப்பதுபோலப் பார்த்தார்கள்
தவளை விஷமுள்ளதா என்று
அவர்களுக்குச் சந்தேகமாக இருந்தது
அது எங்காவது மறைந்துகொண்டால்
என்ன செய்வது என்று
அவர்களுக்குப் பதற்றமாக இருந்தது
ஒரு தவளையைக் கொல்வதைப் பற்றி
முடிவுகள் எடுப்பது கொஞ்சம் கடினமானது
ஒரு தவளையை வளர்க்க
விரும்புகிறவர்கள்
இந்த உலகில் யாருமே இல்லை

இது இங்கிருந்துதான்
எங்கோ பாதாள சாக்கடையிலிருந்து
வந்திருக்க வேண்டும் என்று யாரோ
சொன்னபோது
தவளை மனமுடைந்துபோனது
சாக்கடைகளிலும்
தம்மைப் போலவே தவளைகள் வாழ்கின்றன
என்பதை அது அப்போதுதான்
அறிந்துகொண்டது

தன் கஷ்டங்கள் எல்லாம்
எங்கிருந்து தொடங்கின என்று
தவளை யோசிக்கலாயிற்று
தான் ஊர்வனவாகவும் இல்லாமல்
பறப்பனவாகவும் இல்லாமல் போனதுதான்
எல்லாவற்றிற்கும் காரணம் என்று புரிந்தபோது
அது அழத் தொடங்குகிறது
திடீரென
மழைக் காலம் வந்துவிட்டதுபோல
அப்படிக் கேட்கிறது அதன் துயரக் குரல்! 

நன்றி: ஆ.வி.

Wednesday, October 12, 2011

நடிகர் பார்த்திபன் பாடினார்

 பார்த்திபனுடன் இசையமைப்பாளர் தஷி
 
திருநல்லான் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'என் பெயர் குமாரசாமி' திரைப்படத்தில் வி.தஷி இசையமைப்பில் இயக்குனர் ரதன் சந்திரசேகர் எழுதிய 'வனப்புடை மகளிர் சொல்லும்..' என்று தொடங்கும் பாடலை நடிகரும் இயக்குனருமான R.பார்த்திபன் பாட, இசையமைப்பாளர் வி.தஷி தனது ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்தார்.

பார்த்திபனுடன் கதாநாயகன் ராம்

இந்த படத்தில் மும்பையைச் சார்ந்த அந்தரா பிஸ்வாஸ் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். புதிய நாயகன் ராம், யுவா, பப்லூ, ரிஷா ஆகியோருடன் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கவிதைச்சரம்

கோகுலாஷ்டமி

கி
ருஷ்ணன் ராதையாக
உடையணிந்திருந்த
குழந்தைகளில்
ஒரு கிருஷ்ணன்
ராதையாகத் தனியாக
விட்டுவிட்டு
அம்மாவிடம் ஓடிப்போனான்
இன்னொருத்தன்
ராதையின் பின்னலை
இழுத்துக்கொண்டிருந்தான்
ஹரே ராமா ராம ஹரே
பாடிய பெண்ணுக்கு
இடையிடையே
சிரிப்பு வருகிறது
ராதைகள் கோலாட்டம்
ஆடாமல்
புதிதான பட்டுப்
பாவாடைகளின்
வண்ணம்
பார்த்துக்கொண்டிருந்தனர்
சிலர் சிரிக்க... சிலர் அழுது
அடம்பிடிக்க
சிலர் தண்ணீர் கேட்க
சிலர் வீட்டுக்குப்
போகலாமெனச் சொல்ல
இத்தனைக்கு நடுவிலும்
பெற்றோர்தான் பாவம்
அதட்டியும் கொஞ்சியும்
அவர்களைக்
கடவுளாக்கிக்கொண்டிருந்தனர்
அவர்கள் மட்டும்
கடைசி வரையில்
குழந்தைகளாகவே
இருந்தார்கள்!

ப.ராமச்சந்திரன்

*************************************

மாமழை !

ரு கோடை மழை நாளில்
பாட்டியின் இறப்பு நிகழ்ந்தது.

மழை கொட்டிய அவ்வேளையில்
ஊருக்கு வரும் பேருந்து
கிடைக்காமல் போகவே

மின்னல்கள் சரமாரியாக
எதிரே இறங்கியபடி
மழையோடு மழையாக
நானும் அம்மாவும் நடந்தோம்.

எங்களிருவரின் வருகைக்காகவும்
மற்றபடி
மழை நிற்க வேண்டியும்
பாட்டியும் மற்றவர்களும் காத்திருந்தார்கள்.

வாழ்நாளில்
குடையே பிடித்திடாத பாட்டிக்கு
சுடுகாட்டின் கடைசி வரைக்கும்
குடை பிடித்து வந்தார் மாமா.

இறுதிவரைக்கும்
கண்ணீர் வரவில்லை அம்மாவுக்கு.

எந்தவித சலனத்தையும் காட்டாமல்
மற்றவர்களும் நடந்துகொண்டார்கள்.

மழைக் காலங்களில் யாவரும்
ஏன் சத்தமிட்டு அழுவதில்லையென்று
அதிகப்பிரசங்கித்தனமாய்
தோன்றியது எனக்கு.

பாட்டிக்கு எப்போது பிடித்தது
அம்மா கலக்கும் டிகாஷன் காப்பி.

மழை நின்ற அதிகாலையில்
யாவரும் அவரவர் போர்வையில்
சுருண்டுகிடக்க
கவனக் குறைவாகப்
பாட்டிக்கும் சேர்ந்து
காப்பி கலந்துவிட்டாள் அம்மா.

கட்டிலை நோக்கி
ஓரடி வைத்துவிட்டு
ஞாபகம் வந்தவளாய்த்
திகைத்து நின்றவனின்
கண்களில் தெரிந்தது
முதன் முதலாக
பாட்டியின் மரணம்!

சுமதி ராம்
*************************************

 ஒற்றைச் செருப்பு

வாகனங்கள்
அதிவேகமாக
விரையும் சாலையில்
சிறுவனின் ஒற்றைச் செருப்பு
தவறி விழுந்து கிடக்கிறது

அம்மாவிடம்
அடிவாங்கும்
ஒவ்வொரு வேளையும்
அச்செருப்பின் மீது
வாகனங்கள்
ஏறி இறங்கிச் செல்லும்!

கிருஷ்ணகொபால்

*************************************
 
வன்மக் கையுறை

த்தப் பொத்தல்களோ
துப்பாக்கிச் சத்தமோ
இல்லாமல்
வராண்டாவில் விழுவதில்லை
நியூஸ் பேப்பர்

காலிங் பெல் இசைக்கு
பயந்து பறந்துவிடுகிறது
உணவு கொத்த வரும் குருவி

டியுப் லைட்டுக்கு அருகே
தொங்கும்
பிளாஸ்டிக் குருவியின்
அலகில் வலை பின்னுகிறது
சிலந்தி

வால் அசையாமல்
ரீங்கரிக்கும் தும்பிக்குக்
காத்திருக்கிறது
சுவர்ப் பல்லி

கசகசவென பஸ்ஸிலிருந்து
பதுங்கி
மெட்ரோ ரயிலேறி
கிடைக்கும் சொற்ப இடத்தில்
ஒன்டியமயர்ந்து
நியூஸ் பேப்பர் பிரித்தால்

ரத்தப் பொத்தல்களோ
துப்பாக்கிச் சத்தமோ
கேட்காமலிருப்பதில்லை!

இளங்கோ      

Saturday, October 8, 2011

மரியாதை பூக்க∙ மலரட்டும்!

ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு முன்னால் அமர்வதற்கே இளம் வயதினர் ஆயுள்காலத் தயக்கம் காட்டுவார்கள். அப்பாவை 'ஐயா' என பணிந்து கைகட்டி மதிக்கும் பழக்கம் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வ சாதாரணம்.

இப்போதைய ஹைடெக் யுகம் மரியாதையைத் தூக்கி வெளியே வீசிவிட்டதோ எனும் கவலை எழுகிறது. கிராமத்துப் பெரியவர்களுக்கும், முதியவர்களுக்கும் தலைமுறை தலைமுறையாகத் தரப்பட்டுக் கொண்டிருந்த மரியாதையிலும் விரிசல் விழுந்திருக்கிறது. அவர்கள் வேண்டாத சுமைகளாகப் பார்க்கப்படும் துயரமான நிலையும் உருவாகிவிட்டது.

மீண்டும் ஒரு களங்கமற்ற, அன்பிலும் மரியாதையிலும் பிணைக்கப்பட்ட ஒரு கலாசாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் எனும் ஆதங்கம் நமக்குள் எழாமலில்லை.

பிறருக்கான மரியாதை நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து துவங்க வேண்டும். வெற்று வார்த்தைகளால் வரும் மரியாதைப் பூக்கள், தொட்டால் சிணுங்கியைப் போன்றவை. சட்டென வாடி விடும். உள்ளத்தில் வேர்விடும் மரியாதையின் வாடாமல்லிகள் விழிகளில் பூக்கும்போது இதயத்தையே வசீகரிக்கும். ஒரு புன்னகையில் முதல் சுவடில் இருந்தும் துவங்கலாம் பிறருக்கான நமது மரியாதை.

யாருக்கு மரியாதை செலுத்த வேண்டும்? எனும் கேள்விக்கு, 'எல்லோருக்கும்' என பதில் சொன்னால் முறைப்பீர்கள். உண்மையில் அதுதான் சரியானது. நம்மை விட உயர்ந்தவர்களை மதிக்க வேண்டும் என்பது சமூகம் கற்பித்த தவறான பாடம். குறைந்தவர்களாய் கருதப்படும் நபர்களுக்கும் அதே மரியாதையை வழங்க வேண்டும். வயதிலோ, பெருமையிலோ, பொருளாதாரத்திலோ, எதில் வேண்டுமானாலும் அவர்கள் குறைந்திருக்கலாம். ஒரு இரவலரோ, மனநோயாளியோ, சிறுவனோ எல்லோருமே மரியாதைக்குரியவர்களே!

தனது குழந்தை சமூகத்தில் மரியாதை கொடுப்பவனாகவும், மரியாதை பெறுபவனாகவும் இருக்க வேண்டும் என்பது எல்லா பெற்றோருக்குமான கனவு. ஆனால் உண்மை என்ன தெரியுமா? மரியாதை செலுத்தத் தெரிந்த பெற்றோருடன் வளரும் குழந்தைகள் மட்டுமே மரியாதையைக் கற்றுக் கொள்ளும்.

வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணுக்கோ, வீட்டு வேலைக்கு வரும் நபருக்கோ பெற்றோர் எப்படி மரியாதை செலுத்துகிறார்கள் என்பதைக் குழந்தை பார்த்துப் படிக்கும். குழந்தைகள் வார்த்தைகளிலிருந்தல்ல, வாழ்க்கையிலிருந்தே பாடங்களைப் பெற்றுக் கொள்ளும்.

உங்களிடம் ஒரு பேப்பரை கொடுத்து, உங்கள் வீட்டுக்குத் தினமும் கீரை கொண்டு வரும் பாட்டியின் பெயரையோ, அல்லது அலுவலகத்தில் கழிவறை சுத்தம் செய்யும் பெண்மணியின் பெயரையோ எழுதச் சொன்னால் எத்தனை பேர் சரியான விடை எழுதுவீர்கள்? மிக எளிய கேள்வி. ஆனால் நாம் மனிதனை, மனித நேயத்தை எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்பதற்கான விடை அந்தக் கேள்வியில் இருக்கிறது!

'ஒருவரைத் தூக்கி விடுவதற்காக அல்லாமல் வேறு எதற்காகவும் அந்த நபரைக் குனிந்து பார்க்கக் கூடாது' என்றார் ஜெஸி ஜேக்ஸன். மரியாதைக்கு உரியவர்கள் யார் யார் என்பதை இந்த வாசகம் நமக்கு விளக்குகிறது.

குழந்தைகளுக்கான கல்வி எப்போதுமே வழிகாட்டுதல், பாராட்டுதல் எனும் தொடர்ந்த இரண்டு செயல்களின் மூலமாகவே நடக்கும். சரியானதைச் செய்ய வழிகாட்டுவதும், சரியானதைச் செய்யும்போது பாராட்டுவதும் அவர்களை மரியாதைக்காரர்களாக வளர உதவும்.

பிறரிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் எனும் அடிப்படை இயல்பை அவர்களுக்குப் போதியுங்கள், மரியாதை செயல்கள் என்பவை அன்பின் மையத்திலிருந்து வெளிவரும் கிளைகளே. மரியாதை என்பது சின்னச்சின்ன செயல்களிலும் வெளிப்பட வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக பிறருடைய பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அனுமதி கேட்பது கூட மரியாதையின் ஒரு வடிவமே.

ஒருவேளை நீங்கள் மரியாதைக் குறைவாக நடப்பதைக் குழந்தை உங்களிடம் சுட்டிக் காட்டினால் எந்தக் காரணம் கொண்டும் சாக்குப்போக்கு சொல்லாதீர்கள். 'சாரி.. தப்பு தான்' என ஒத்துக் கொண்டு அதை விலக்கி விடுங்கள்.

மரியாதை என்பது கைகட்டி, 'ஏனுங்க? வெட்டணுமுங்களா?' எனக் கேட்கும் சினிமா டயலாக் அல்ல. அதற்குப் பல்வேறு முகங்களும், அகங்களும் உண்டு.

பிறர் சொல்லும் விஷயங்களைக் கவனமுடன் கேட்பது அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதைகளில் ஒன்று. நாம் பேசுவதை அடுத்தவர் கவனிக்க வேண்டுமென விரும்புகிறோம் இல்லையா? அதே போலதான் பிறருடைய மனநிலையும் இருக்கும். அவர்களுடைய பேச்சை ஈடுபாட்டுடன் கேட்கும் போது அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துபவர்கள் ஆகிறோம்.

'எனக்கு நாக்கு ஒண்ணுதான், வாக்கும் ஒண்ணுதான்' என்று சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அடுத்த நபருக்கு நீங்கள் கொடுக்கும் உயரிய மரியாதை இது. உதாரணமாக, நீங்கள் குறைந்த விலைக்கு ஒரு பொருளை விற்க வாக்குக் கொடுத்தாலும் சரி, அல்லது அதிக விலைக்கு ஒரு பொருளை வாங்குவதாய் வாக்குக் கொடுத்தாலும் சரி. அதைக் காப்பாற்றுங்கள். நீங்கள் அடுத்த நபரை மதிக்கிறீர்கள் என்பதன் அடையாளமே இது!

உங்கள் மரியாதையை அடுத்தவருடைய நேரத்தை மதிப்பதிலும் வெளிப்படுத்தலாம். குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பதானாலும் சரி, குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடித்துக் கொள்வதானாலும் சரி. அடுத்தவருடைய நேரத்தை மதிப்பதன் மூலம் அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள்!

சின்னச் சின்ன விஷயங்களில் உங்களுடைய கரிசனையைக் காட்டுங்கள். 'நன்றி', 'சாரி.. மன்னியுங்கள்' எனும் ஆத்மார்த்த வார்த்தைகள் மரியாதை கலந்த அன்பின் வெளிப்பாடுகளே.

உரையாடல்களில் அடுத்த நபரைப் பேச விடாமல் இடைமறிப்பது அவரை அவமானப்படுத்துவது போன்றது. பிறருடைய கருத்தை மதிப்பதும், அவர்களுடைய ஐடியாக்களை வரவேற்பதும், அதுகுறித்து விவாதிப்பதெல்லாம் அவர்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதற்கான அடையாளங்கள்.

சின்னச் சின்ன விஷயங்களை வைத்து விமர்சிப்பது, பொதுவில் தவறைச் சுட்டிக் காட்டி அவமானப்படுத்துவது, அடுத்தவர்களைக் குறித்து கிசுகிசுக்கள் பரப்புவது போன்றவையெல்லாம் மரியாதையைத் தூக்கி ஓடையில் போடுவதைப் போன்ற விஷயங்கள். நிறம், குணம், உடல் எடை, மதம் என எதை வைத்தும் பிறரைக் கிண்டலடிக்காமல் இருக்க வேண்டியது அவசியம். பிறரை அவருடைய இயல்போடே ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது நாம் அவருக்கு வழங்கும் மரியாதை.

பிறருடைய தோற்றத்தைக் கண்டு கிண்டலடிக்கும் கொடூர முன்மாதிரியை பல திரைப்படங்கள் தங்களை அறியாமலேயே செய்து கொண்டிருக்கின்றன. அத்தகைய பலவீனமான மனநிலையிலிருந்து நமது சமூகத்தைக் காப்பாற்ற வேண்டியதும் நமது
கடமையாகும்.

வயதில் பெரியவர்கள் நம்மிடம் எதையாவது சொல்லும்போது மரியாதையுடன் அவர்களை அணுக வேண்டும். உங்கள் அறிவை எல்லாம் கழற்றி வைத்து விட்டு, `ஒரு சின்ன மழலையாய் மாறி' அவர்களுடைய அறிவுரைகளைக் கேளுங்கள். அவர்களுடைய வாழ்த்து உங்களை வளர்க்கும்.

உங்களைப் போல பெரியவர்கள் எல்லோருமே `ஷார்ப்' ஆக இருக்க வேண்டுமென நினைக்காதீர்கள். மழலையாய் இருந்தபோது நீங்கள் உங்கள் தந்தையிடம் ஒரே கேள்வியை ஆயிரம் முறை கேட்டிருப்பீர்கள். இப்போது அவர்களுடைய முதுமையில் அவர்கள் ஒரே கேள்வியைப் பலமுறை கேட்டால் எரிச்சல்படாதீர்கள். அவர்கள் உங்களை எப்படி அணுகினார் களோ அதே ஆனந்தத்தோடும், விருப்பத்தோடும் அணுகுங்கள்.

ஒவ்வொருவருடைய விருப்பமும், வெறுப்பும் தனித்தனியானவை. அவை குறித்த விமர்சனங்களைத் தவிருங்கள்.

புறம் பேசுவது பிறரை மரியாதைக் குறைவாய் நடத்துவதன் அப்பட்டமான வெளிப்பாடு. அவரவர் எல்லைக்குள் அவரவர் மரங்கள் பூக்கள் பூக்கட்டும். எங்கும் உங்கள் பூக்களே விளைய வேண்டுமென பிரியப்படுவதே தவறுதான்.

பிறருக்காக கொஞ்சம் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளும் மனம் இருந்தால் நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அன்பினால் நிறைந்தவர் என்று பொருள். நடுவழியில் 'லிப்ட்' கேட்கும் நபரை ஏற்றிக் கொள்வது கூட அவரை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள், அவருக்காக கரிசனை காட்டுகிறீர்கள் என்பதையே காட்டும்.

போகும் வழியில் அவரை இறக்கி விடுவதற்குப் பதில் இன்னும் கொஞ்சம் சிரமம் தாங்கி, அவருக்கு வசதியான ஒரு இடத்தில் இறக்கி விட்டால் நீங்கள் உங்கள் மரியாதைத் தன்மையில் இரண்டு படி மேலேறிவிட்டீர்கள் என்று பொருள். அன்பு சின்னச் சின்ன விஷயங்களில் வெளிப்படட்டும் என்கிறார் அன்னை தெரேசா.

இரண்டு நபர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இறுக்கிக் கட்டும் ஒரு அழகிய மந்திரம் மரியாதை. இந்த மரியாதை என்பது வீட்டுக்கு வெளியே மட்டும் செலுத்த வேண்டிய சமாச்சாரமல்ல, வீட்டுக்கு உள்ளேயும் பரிமாறப்பட வேண்டிய விஷயம் என்பதை மறக்காதீர்கள்.

'பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டுமென விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களை நடத்துங்கள்!' இந்த வாக்கியம் எப்போதும் மனதில் இருந்தால் உங்கள் செயல்களில் வாசம் வீசும்.

மதியாப் பிழைகள் அழியட்டும்
மரியாதை மழையாய்ப் பொழியட்டும்!

சேவியர்

Friday, October 7, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் ஹாலிவுட்டின் சாராயத்தை திரும்பவும் கண்டக்காய்ச்சி டெக்னிக்கல் ஆக புதிய கோப்பையில் தர முடிவு செய்திருக்கிறார்கள்.

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என ஹாலிவுட்டில் வெளியாகும் பாக்சிங் கதைகளை சொல்லலாம். எந்தவொரு இயக்குநரும், தன்னை கமர்ஷியல் பிரண்ட் ஆக நிலை நிறுத்திக் கொள்ள இக்கதையையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார். சொல்லப் போனால் அனைத்து மாஸ் ஹீரோக்களும் தலா ஒரு பாக்சிங் படத்திலாவது நடித்திருப்பார்கள். அதனாலேயே புகழின் உச்சியை தொட்டிருப்பார்கள்.

அந்தவகையில் வெளியாக இருக்கும் 'ரியல் ஸ்டீல்' ஹாலிவுட் படமும் பாக்சிங்கை மையமாகக் கொண்டதுதான். என்ன, மனிதர்களுக்கு பதில் இந்தப் படத்தில் ரோபோக்கள் பாக்சிங் போடுகின்றன!

சார்லி கென்டன், புகழ்பெற்ற ஒரு பாக்ஸர். தொடர்ந்து அவன் போட்டியில் பங்கேற்று ஜெயிப்பதால், பணம் கொட்டுகிறது. வாழ்க்கை இனிக்கிறது. ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு அவனது புகழ் மங்க ஆரம்பிக்கிறது. சேமிப்பு வற்றுகிறது. அவனது திறமையை, பாக்சிங் ஆற்றலை, அனைவரும் ஜஸ்ட் லைக் தட் ஆக புறம் தள்ளுகிறார்கள்.

காரணம், மனிதர்கள் போட்டியிடும் பாக்சிங்கை இப்போது யாரும் விரும்புவதில்லை. பதிலாக, ரோபோக்கள் ஆக்ரோஷத்துடன் சண்டையிடுவதை பார்க்கவே அலை கடலென திரள்கிறார்கள். இதனால் வாழ்க்கை நடத்துவதே சார்லி கென்டனுக்கு சிரமமாகிறது.

இந்நிலையில் தனக்கொரு மகன் இருப்பதையும். இனி வரும் காலங்களில் தன் பிள்ளையை தானே பராமரிக்க வேண்டும் என்பதையும் அவன் அறிகிறான். மனைவி இறந்துவிட்டாள். அடைக்கலம் தேடி வரும் மகனிடம் பாச மழை பொழிகிறான். ஆனால், வருமானம்? ப்பூவா?


இதற்காக ரோபோ தயாரிப்பில் ஆர்வம் காட்டும் மகனின் உதவியுடன் ஒரு ரோபோவை தயார் செய்கிறான். தனக்கு தெரிந்த அனைத்து பாக்சிங் வித்தைகளும் அந்த ரோபோவுக்கு கற்றுத் தருகிறான். நடக்கவிருக்கும் போட்டியில் அந்த ரோபோ வெற்றி பெற்றால் பொது வாழ்க்கையை குறைவின்றி நடத்தலாம்.

ஆனால், போட்டி நாளில் எதிர்பாராத சிக்கல்கள் எழுகின்றன. சார்லி கென்டன் தயாரித்த ரோபோ, எதிரணி ரோபோவிடம் அடி மேல் அடி வாங்குகிறது. ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என அனைவருமே உணருகிறார்கள். இனி எதிர்காலம் சூன்யம்தான் என்ற முடிவுக்கு சார்லி கென்டன் வருகிறான்.

இதற்கு பிறகு முடிவு என்ன என்பது இந்தக் கதையை கேட்டுக் கொண்டிருக்கும் கருவிலுள்ள சிசுவுக்கும் தெரியும். இந்த 'ராக்கி'டைப் கதையைத்தான் பக்கா சிஜி ஒர்க் உடன் 127 நிமிடங்கள் ஓடக் கூடிய திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

1956 ல் ரிச்சர்ட் மேக்திசன் என்பவரால் எழுதப்பட்ட 'ஸ்டீல்' சிறுகதையின் திரை வடிவமே இப்படம். இயக்கியிருப்பவர், ஷான் லேவி. நைட் அட் மியூசியம்' என்ற சூப்பர் ஹிட் படத்தின் டைரக்டர். ஹீரோவாக நடித்திருப்பவர், ஹக் ஜேக்மேன். 'எக்ஸ்-மென்'  சீரிசில் வோல்விரின் ஆக நடித்திருப்பவரே... அவரேதான்.

பேராமவுண்ட் பிக்சர்ஸ் பல வருடங்களாக இப்படத்தை எடுக்க வேண்டும் என்று முயற்சித்து வந்தது. ஆனால், இந்நிறுவனத்தை ஆரம்பித்தபோது, பேராமவுண்ட் பிக்சர்ஸ்டமிருந்து 17 திரைக்கதைகளையும் தங்களுக்கான பங்காக எடுத்துக் கொண்டார்கள். அதில் ஒன்று 'ரியல் ஸ்டீல்' படத்தின் ஸ்க்ரிப்ட்.

ஒரு சுபயோக சுபதினத்தில் இப்படத்தின் திரைக்கதையை ஒருவர் வாசித்தார். அவருடைய நாசி துடிக்க ஆரம்பித்தது. தந்தைக்கும் மகனுக்குமான பாசம் இழையோடும் இக்கதையில், ரோபோவும் இருப்பதால் கல்லா நிரம்பும் என அவர் அக்கணமே நுகர்ந்த்தார். உடனடடியாக படப்பிடிப்பு தொடங்கும்படி உத்தரவிட்டார்.

அவர், ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ஸ்பீல்பெர்க்!

கே.என்.சிவராமன்

Saturday, October 1, 2011

நுனிப்புல் மேயாதீங்க!

சகலகலா வல்லவனாக வேண்டும் எனும் ஆர்வம் இன்று பலரிடம் காணப்படுகிறது. ஒரு விஷயத்தைக் கற்க ஆரம்பிப்பார்கள். நண்பனிடம் இன்னொரு திறமை இருக்கும், அதை நோக்கி மனம் தாவும். அதைக் கற்க ஆரம்பிக்கும்போது இன்னொன்றில் மனம் லயிக்கும். அதன்பின் வேறொன்றுக்குத் தாவும். கடைசியில் நமது 'ஸ்பெஷாலிட்டி' எது என்பது பிரித்தறிய முடியாக் கூட்டாஞ்சோறாகிப் போகும்.

கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து உங்களுடைய 'பெஸ்ட்' திறமை எதில் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சட்டென ஒரு விஷயம் உங்களுக்குத் தோன்றினால், உண்மையிலேயே உங்களுடைய திறமையை நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அந்தத் திறமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதை எழுதுவதாகவோ, காபி போடுவதாகவோ... எதுவாகவும் இருக்கலாம்.

ஒருவேளை நீங்கள் யோசிக்கும்போது ஒரு விஷயமும் உங்களுக்குப் பிடிபடாமல் போனால் விழித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் திறமைகளை எல்லாம் பட்டியலிட்டு எதில் நீங்கள் வல்லவர், எதில் நீங்கள் சுமார், எது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம் என வரிசைப்படுத்துங்கள். அந்தப் பட்டியலைப் பார்க்கும்போது 'இதுதான் என்னோட ஸ்பெஷாலிட்டி' என உங்களுக்கே ஒரு விஷயம் நிச்சயம் பிடிபடும்.

உங்களுடைய உண்மையாக விருப்பம் இருக்கும் விஷயத்தில் உங்களுக்கு இயல்பாகவே திறமையும் இருக்கும். அந்த ஏரியாவில் நீங்கள் மூச்சடக்கி, முக்குளித்து முத்தெடுக்க வேண்டும். அது நிச்சயம் உங்களை வெற்றிகளின் உச்சியில் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் தேர்வு செய்யும் விஷயம் குறித்த தகவல்களையும், விஷயங்களையும் தேடித் தேடிப் படிப்பது அடுத்த கட்டம். வெறுமனே வாசிப்பது மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனைகளிலும் அதிகம் ஈடுபடுங்கள். குறிப்பாக ஒரு பாடகராக மாறுவது உங்கள் லட்சியம் என்றால் அது குறித்த நூல்களைப் படியுங்கள். பாடகர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். அவை உங்களுக்குத் தூண்டுதலாய் மாறும்.

அதே துறையில் விருப்பமுடைய நண்பர்களைக் கொண்டிருப்பது அடுத்த தேவை. அந்தத் துறையில் திறமை மிக்கவர்கள் நண்பர்களாகக் கிடைத்தால் நல்லது. யாராவது ஒரு நல்ல நபர் வழிகாட்டியாய்க் கிடைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. நல்ல உற்சாகமூட்டக்கூடிய வழிகாட்டி, லட்சியப் பாதையில் உங்களைச் சுமந்து செல்லும் ஒரு குதிரையைப் போன்றவர்.

இன்றைக்கு இணையம் பல்வேறு குழுக்களையும், சமூக வலைத்தளங்களையும் நமக்கு முன்னால் நீட்டுகிறது. இசைப் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம், தையல் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம். இங்கே அரட்டைகளைத் தவிர்த்த உருப்படியான பல விஷயங்கள் பரிமாறப்படும்.

'உங்களுக்குப் பிடித்தமான விஷயமே வேலையாகிப் போனால் வாழ்க்கையில் ஒருநாள் கூட வேலை செய்யும் உணர்வே வராது' என்கிறார் கன்பூஷியஸ்.

எதை அபரிமிதமாக நேசிக்கிறோமோ அது நமது உணர்வுகளில் பின்னிப் பிணைந்து நம்மை மாபெரும் வெற்றியாளராய் கொண்டு சேர்க்கும். வின்சென்ட் வான்கா எல்லாவற்றையும் விட அதிகமாய் ஓவியத்தை நேசித்தார். ஓவியம் வரைய அமர்ந்தால் சாப்பிடவே மறந்து போய் விடுவாராம். தனது தூரிகையிலிருந்து விழும் ஒவ்வொரு துளியையும் நேசித்ததால்தான் இன்று ஓவிய உலகம் அவரை கொண்டாடுகிறது.

உங்களுக்குப் பிரியமான வேலையை கண்டுபிடிப்பது ஒன்றும் கம்ப சூத்திரமில்லை. எந்த வேலை உங்களை மெய்மறக்க வைக்கிறதோ, எந்த வேலை செய்யும் போது சோர்வே ஏற்படவில்லையோ, எந்த வேலை உங்களை உற்சாகம் கொள்ள வைக்கிறதோ அதுவே உங்களுடைய கனவு வேலையாய் இருக்கலாம்.

கனவு வேலைக்குள் காலெடுத்து வைத்தபின் உடனடியாகப் பயன் கிடைக்கவில்லையே எனும் கவலையே இருக்கக் கூடாது. விதைகள் உடனடியாக மரமாகி விடுவதில்லை. முளை விட்டதும் கனிகளைத் தேடுவதிலும் நியாயமில்லை. ஒவ்வொரு வளர்ச்சியையும் கவனமுடன் கவனித்து, முன்னேறிச் செல்கிறோம் எனும் நிலையை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டாலே போதுமானது.

யோ அலை என அலைந்தார். ஏகப்பட்ட உணவகங்களில் அதை நிராகரித்தார்கள். ஆனால் அவரோ சிக்கன் தயாரிப்பில் சாதனையாளராய் மாற வேண்டும் எஹார்லண்ட் டேவிட் சாண்டர்ஸ் என்றொருவர் இருந்தார். சிக்கன் சமைப்பதில் கில்லாடி. தனது சிக்கன் செய்முறையை எடுத்துக்கொண்டு அலைனும் ஒரே பிடிவாதத்தோடு முயன்றார். கடைசியில் வென்றார். அதுதான் இன்று உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கும் கே.எப்.சி. (KFC ) சிக்கனின் வரலாறு!

'எதில் இருக்கிறாயோ, அதில் சிறப்பானவனாய் இரு' என்கிறார் ஆபிரகாம் லிங்கன். பிரபல எழுத்தாளர் மால்கெம் கிளாட்வெல் தனது தியரியில் சொல்லும் விஷயம் கவனிக்கத்தக்கது. ஒரு மனிதன் ஒரு துறையில் வல்லவனாக விளங்க நிறையப் பயிற்சி தேவைப்படுகிறது. 10 ஆயிரம் மணி நேரம் ஒரு மனிதன் ஒரு செயலுக்காக அர்ப்பணிக்கும் போது அவன் அதில் உச்சத்தைத் தொட்டு விடுகிறான் என்கிறார் அவர்.

அதென்ன 10 ஆயிரம் மணி நேரம்? வாரம் 20 மணி நேரம் வீதம் பத்து ஆண்டுகள். அதுதான் அவரது கணக்கு. ஒரு கால்வாசி உயரத்தை எட்டிப் பிடிக்க இதில் கால்வாசி நேரம் ஆகும், அதாவது 2 ஆயிரத்து 500 மணி நேரம். உச்சத்தை எட்டிப் பிடிப்பதொன்றும் எளிய வேலையல்ல, அதற்கு ஏகப்பட்ட உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஒரு துறையில் நிபுணர் ஆகி விட்டால் அந்தத் துறையில் உங்களுடைய இருப்பை பலப் படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக பளீரடிக்கும் வைரமானாலும் அதைப் பத்தாயத்தில் போட்டு வைத்தால் யாருக்குமே தெரியாமல் போய்விடும். எனவே இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை வரவேற்கவேண்டும்.

ஒரு விஷயத்தில் கில்லாடியானதும் உங்களுடைய உழைப்பு அத்துடன் முடிந்துபோய் விடுவதில்லை. அந்த இடத்தைத் தக்க வைக்கத் உங்கள் கவனத்தை அதன் மீது தொடர்ந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

ஒருவர் பல விஷயங்களில் கில்லாடியாய் இருக்கலாம் என பலர் சொல்வதுண்டு. உண்மையில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒருவர் பல விஷயங்களில் திறமைசாலியாய் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை ஆழமாகக் கற்கும்போதுதான் அவர் சாதனையாளராய் மாறுகிறார். சாதாரண வெற்றிக்கும், சாதனை வெற்றிக்கும் இடையேயான வேறுபாடு அங்கே உண்டு.

குவிலென்ஸ் ஒரு புள்ளியில் தனது சக்தி அனைத்தையும் குவிக்கும்போது எரிக்கும் தன்மையைப் பெறுகிறது. அது போலத்தான் இதுவும். நமது சக்தியெல்லாம் ஒரே லட்சியத்தில் குவிக்கப்படும் போது அதன் தாக்கம் வீரியமானதாக இருக்கும். பரந்துபட்ட சிந்தனை பல விஷயங்கள் மீது பரிச்சயத்தைத் தரும், ஆனால் ஒன்றிலும் உங்களை உச்சத்தில் வைக்காது.

நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் அசைக்க முடியாத நபராய் இருப்பதுதான் உங்களை அலுவலகத்திலும் வெற்றியாளராக்கும். 'இந்த துறையில் இவனை விட்டால் ஆளே கிடையாது' எனப் பெயர் வாங்கியவர்களே சடசடவென முன்னேறிக் கொண்டிருப்பார்கள் மதிக்கப்படுவார்கள். 'அவனுக்கு எல்லாம் தெரியும், ஆனா எதிலும் ஸ்ட்ராங் கிடையாது' எனப்படுபவர்கள் சறுக்கிக் கொண்டிருப்பார்கள்.

நமது சமகால வாழ்க்கையில் சச்சின் தெண்டுல்கர், மைக்கேல் ஜோர்டான், பில் கேட்ஸ், டைகர் உட்ஸ், ஸ்பீல்பெர்க், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என யாரை எடுத்தாலும் அவர்கள் ஒரு துறையைத்தேர்ந்து எடுத்து பிடித்துக்கொண்டு அதில் முழுக் கவனத்தையும் செலுத்தி சாதித்துக் காட்டியவர்கள் தான். பல படகுகளில் கால் வைத்து தவறி விழுந்தவர்களல்ல.

கடைசியாக ஒன்று. ஒரு துறையில் உச்சத்தில் போக வேண்டுமென்பதன் பொருள் மற்ற எல்லா துறைகளிலும் முட்டாளாய் இருக்க வேண்டுமென்பதல்ல. ஒரு துறையில் கில்லாடியாய் இருப்பவர்கள் வேறு சில துறைகளிலும் பரிச்சயமும், அறிவும், திறமையும் பெற்றிருக்க வேண்டும். அது கூடுதல் பலன் தான். ஆனால் முதல் கவனம் எங்கே இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியா உறுதி வேண்டும்.

அறிவின் ஆழம் புரியட்டும்
சிகரம் கண்ணில் தெரியட்டும்!

சேவியர்