Thursday, September 29, 2011

மாற்றுச் சிந்தனை!சிலர், தாம் கூறும் கருத்துகளை மற்றவர்கள் உடனுக்குடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் அறிவியல்ரீதியான, நூறு சதவீதம் உண்மையான கருத்துகளைக் கூட உலகை ஏற்றுக்கொள்ள வைக்க எத்தனை அறிஞர்கள் எவ்வளவு போராடினார்கள், தியாகங்கள் புரிந்தார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது.

மனம் நினைக்கிறது. உடம்பு செயல்படுகிறது. செயல் அதற்குரிய பலனை அளிக்கிறது. இந்த வகையில் மனிதன் ஆரம்பகாலங்களில் நாகரீகத்தைத் தோற்றுவிக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித குலத்துக்குச் சிந்திக்கும் ஆற்றல் சற்று குறைவு. அவர்கள் ஒரு செயலில் ஈடுபடும் போதுதான் செயலின் தன்மையை உணர்ந்து அறிந்தனர். முதலிலேயே சிந்தித்துப் பின்னர் செயல்படும் மனப்பக்குவம் அப்போது இல்லை. நெருப்பு சுடும் என்பதை தொட்டு உணர்ந்துதான் தெரிந்துகொண்டனர். ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஏற்படும் அனுபவம், அதன்மூலம் அறிந்துகொள்ள முயல்வது என்ற வகையிலேயே பழங்காலத்தில் மனிதகுலம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டது.

நூற்றாண்டுகள் செல்லச் செல்ல விழிப்புணர்வுடன் செயல்படும் உளப்பாங்கு தோன்ற ஆரம்பித்தது. சிந்திக்கும் ஆற்றல் வளர்ந்தது. விழிப்புணர்வுடன் சிந்திக்கத் தொடங்கிய மனம், தனது சிந்தனை ஆற்றலைத் தானே உணர்ந்து தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டது. ஆரம்பகாலத்தில் பலர் ஒவ்வொன்றையும் தங்களது அனுபவத்தின் மூலமே அறிந்தனர். சிந்தனை என்பதும் பலருக்கும் ஒரே மாதிரியாகவே இருந்து வந்தது.

இத்தகைய சூழலில் யாராவது ஒரு மனிதன் சற்று வித்தியாசமாகச் சிந்தித்துத் தனது கருத்தைக் கூறினால் உலகம் அதை ஏற்க மறுத்தது. பொதுவாக ஒரு நிலைப்பாடு நடைமுறையில் இருந்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வது அல்லது அதை நியாயப்படுத்தி ஏற்றுக் கொள்வது என்ற வகையிலேயே பல நூறாண்டுகளாக நடைமுறை இருந்தது. பலர் ஒரே நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு வாழும் அத்தகைய சூழலில் ஒருவர் புதிய கோணத்தில் சிந்தித்துத் தனது கருத்தை வெளியிட்டால் அவரையும், அவரது கருத்துக்களையும் உலகம் நிராகரித்தது.

'உன்னையே நீ அறிவாய்' என்று கூறிய சாக்ரடீஸ், பகலில் விளக்கை ஏற்றிக் கொண்டு உண்மையான மனிதன் எங்கே என்று தேடியதை நாம் வரலாற்றின் மூலம் அறிவோம். சாக்ரடீஸ் தனது அறிவில் நின்று உணர்ந்த உண்மைகளை பிறருக்குக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றபோது பல எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததை அறிகிறோம். அவரது சுயசிந்தனைக்குப் பரிசு, கொடிய விஷத்தை அருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதுதான். சாக்ரடீஸ் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால் அவரது சிந்தனையைச் சிறைப்படுத்த முடியாமல் இன்று வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

பூமியைச் சுற்றியே சூரியனும், பிற கோள்களும் வலம் வருகின்றன என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் ஒருவர் அந்த நிலைப்பாடு தவறு என்று கூறி, சூரியனைச் சுற்றிதான் பூமி வலம் வருகின்றது என்று எடுத்துச் சொன்னபோது அந்தக் கருத்து தவறானது என்று பெரும்பான்மையானவர்கள் மறுத்தனர். அதோடு, அத்தகைய அறிவியல்ரீதியான புதுக்கருத்துகளைக் கூறுபவர்கள் பல்வேறு இடர்பாடுகளையும் சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது. நமது நாட்டில் வான சாஸ்திரம், ஜோதிடம், மருத்துவம், கணிதம் போன்ற பல்வேறு துறைகளில் வல்லுனர்களும், ஞானிகளும், அறிஞர்களும் வெளிப்படுத்திய உண்மைகள் மனதில் முதலில் உணரப்பட்டு பின்னர் நடைமுறை படுத்தப்பட்டவையே ஆகும். அவை இன்றும் பயனளிப்பவையாகவும், அறிவியல் அம்சங்களை தன்னகத்தே கொண்டவையாகவும் உள்ளன.

ஒரு தட்டச்சர் பல ஆண்டுகால அனுபவம் உடையவராக இருந்தால், தட்டச்சுக் கருவியைப் பார்க்காமலே சரியாகவும், வேகமாகவும் தட்டச்சு செய்ய முடிவதை காண்கின்றோம். அதேபோல சைக்கிள் ஓட்டுபவர், தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு ஆடும் கலைஞர்கள் என்று பலரும் மனதிற்குள் தங்கள் செயல்பாடுகளுக்குத் தேவையான விதிமுறைகளை அறிந்து கொண்டு செயல்படும்போது அவர்களது செயல்பாடுகள் நிறைவாக அமைகின்றன. இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் இதன் சூட்சுமமோ, இவற்றில் அடங்கியுள்ள அறிவியல் தத்துவம் சார்ந்த உண்மையோ புரியாது. அதனால்தான் பலர் புதிய கருத்துகளை ஏற்க முன்வருவதில்லை.

உடம்பு எதையும் அனுபவரீதியாக அறியவில்லை என்றால், செயல்பட முடியாமல் தவிக்கின்றது. ஆனால் ஒருமுறை அனுபவரீதியாக உணர்ந்து கொண்டால், செயல்படுவது சுலபமாகிறது. மனம் ஒரே நேரத்தில் பல்வேறு கோணங்களில் சிந்திக்கிறது. ஒவ்வொரு செயலையும் செயல்படுத்தும் முன்பு காரண காரியங்கள், அதன் அடிப்படையில் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைக் கணிக்க முயல்கிறது. மனம் ஒரு கருத்தை முழுமையாகவும் சிந்திக்கலாம். ஆனால் அவ்வாறு சிந்திக்க முடியாமல் போகும்போது ஓரளவு புரிந்து கொண்ட உண்மைகளின் அடிப்படையில் செயல்பட முனைகிறது. மனம் முழுமையாகச் சிந்தித்துச் செயல்பட்டால் செயல்விளைவும் முழுமையான பலனை அளிக்கிறது. ஓரளவு புரிந்துகொண்டதன் அடிப்படையில் செயல்பட்டால் முடிவுகளும் ஓரளவுதான் சரியாக அமைகின்றன.

இத்தகைய நிலை உடம்புக்குக் கிடையாது. ஏனென்றால் அது ஒன்றை முழுமையாகப் புரிந்து கொண்ட பின்பே செயல்படுகிறது. ஒரு நியாயவிலைக் கடையில் பணிபுரிபவர் ஒரு கிலோ சர்க்கரையை எடை போடும்போது சாதாரணமாக அவர் தோராயமாக தராசில் எடுக்கும் சர்க்கரை ஒரு கிலோ அளவு என்றால், எத்தனை முறை என்றாலும் அதே அளவைச் சரியாக எடுக்கும் பழக்கம் அவருக்கு கைவந்த கலையாகி விடுகிறது. அதே போலத்தான் சமைக்கும்போது போடும் உப்பின் அளவும்.

இத்தகைய வெளிப்பாடுகள் உடம்பின் இயக்கங்கள் சார்ந்தவை. ஆகவே அனைவரும் இவற்றை பார்க்கமுடியும். இதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் மனதில் தோன்றும் சிந்தனைகள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவை. இது மிகவும் சூட்சுமமான நிலையில் செயல்படுகிறது. எனவே இதை அதே பரிமாணத்தில் பலரும் புரிந்துகொள்வது இயலாமல் போகின்றது. அதனால் மனதில் தோன்றிய புது சிந்தனைகள் பலனளிப்பவைகளாக இருந்தாலும், அத்தகைய சிந்தனை யார் மனதில் தோன்றியதோ அவர் புரிந்த உண்மையை மற்றவர்கள் புரிந்து ஏற்றுக்கொள்வது சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது.

அதனால்தான் புதிய கருத்துகளுக்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருப்பதில்லை. காலப்போக்கில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் பலனை அடையும் போது மனதும், உடம்பும் இணைந்து செயல்படுவதில் லயம் ஏற்படுகிறது. உடம்பு, மனம், பகுத்தறியும் ஆற்றல், இறை உணர்வு ஆகிய பல்வேறு அம்சங்களையும் அதனதன் இயல்பான அளவில் புரிந்து கொண்டு செயல்பட இளைஞர்கள் பழகிக்கொண்டால் இசைவான சமுதாயத்தை உருவாக்குவது எளிது.

ப. சுரேஷ்குமார்

Monday, September 26, 2011

கர்வம் தவிர்!

'கர்வமுடையவர்கள் எப்போதும் மற்றவர்களைக் குனிந்தே பார்ப்பதால், தமக்கு மேல் இருக்கும் உயரிய விஷயங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்' என்கிறார், கடந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய அயர்லாந்து நாட்டு எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ்.

தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து, மற்றவர்களை மதிப்புக் குறைந்தவர்களாய்ப் பார்க்க வைப்பது கர்வத்தின் முதல் வேலை.

மனிதனுடைய வளர்ச்சிப்படியில் கர்வம் கால்நீட்டிப் படுத்திருக்கும். இதுதான் கடைசிப் படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாறத் துவங்கும்போது, வெற்றிகளின் கதவுகள் துருப்பிடிக்கத் துவங்கும்.

கர்வம் மனிதனின் வேகக்கால்களை வெட்டி வீழ்த்தும் கண்ணுக்குத் தெரியாத ஆயுதம்.

கொஞ்சம் நடுநிலைமையோடு கர்வத்தின் முகங்களைக் கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தால், கர்வம் நமது தனி வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது எனும் கோரமான உண்மை புரியும்.

'எனக்கு எல்லாம் தெரியும்' என்பது கர்வக் கிரீடத்தின் குரல்.

ஆழ்மனதின் ஆழத்தை எட்டிப் பார்த்தால் வெற்றிடங்களின் விலாசமே தெரியும்.

எல்லாம் தெரியும் எனும் கர்வம், தனது குடத்தை மூடி வைத்து விடுகிறது. தண்ணீர் நிரம்பாத நிலை அதன் நிரந்தரமாகி விடுகிறது.

'நீ எனக்கு மரியாதை செலுத்த வேண்டும்' என கர்வத்தின் வேர்கள் கூக்குரலிடும்.

பிறருடைய மரியாதை மழையில் நனைய நினைக்கும் தாவரமாய் கர்வம் மனிதனை நடுவழியில் இறக்கிவிடும்.

'மரியாதையை எதிர்பார்க்கும் மனம், பிறரை மரியாதை செய்ய மறுத்தும் விடும்' என்பதுதான் நிதர்சனத்தின் இன்னோர் பக்கம்.

'நான் எல்லோரையும் விட பெரியவன்' என கர்வம் தனது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும்.

தனது வெற்றுக் கொடியை வேற்றுக் கிரகத்தில் நாட்ட வேண்டுமென நாட்டம் கொள்ளும்.

அடுத்தவனை விட நான் பெரியவன் எனும் சிந்தனையே அவன் மனதிலிருந்து ஒட்டுமொத்தப் பணிவையும் தூக்கி பரணில் போடும்.

'இதோ என் சாதனைகளின் பட்டியல்' என வெற்றிப் பட்டியலை கர்வம் தனது நெஞ்சில் சுமந்து திரியும். தவறுகளின் நிகழ்வுகளை யாரும் காணா எல்லைக்கப்பால் நாடு கடத்தும்.

தனது வெற்றிகளைப் பறைசாற்றவும், சாமான்யன் தனக்குச் சாமரங்கள் வீச வேண்டுமென எதிர்பார்க்கவும் கர்வம் துடிதுடிக்கும்.

'நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன்' என கர்வம் முகமூடியை முகமாக்க முயலும். தவறுகள் செய்யாத மனிதன் இல்லை- என்னைத் தவிர, என்று கர்வம் கொக்கரித்துத் திரியும்.

'என் தகுதிக்குரியவை எனக்குக் கிடைத்திருக்கின்றன. மறுக்கப்பட்ட பலவற்றுக்கும் கூட நான் தகுதியானவனே' என கர்வம் தனக்குக் கிடைத்த பிறர் உதவிகளையோ, இறை வரங்களையோ கூட தனது காலடியில் மண்டியிடச் செய்யும். தன்னால்தான் எல்லாமே நடக்கின்றன எனும் சக்கரவர்த்தியின் மூச்சுக் காற்றாய் முணுமுணுக்கும்.

'என்னைப் பாராட்டுங்கள், நான் அதற்குத் தகுதியானவன்' என கர்வம் தனக்கான பாராட்டு அபிஷேகத்தை எப்போதும் எதிர்பார்க்கும். பாராட்டுவோர் பாக்கியவான்கள் என நினைத்து இன்னும் நாலு மடங்கு கர்வம் கொள்ளும்.

கர்வத்தின் கணக்கற்ற முகங்களின் சில முகங்களே இவை. கர்வம் தனது அலமாரி முழுக்க பல்வேறு முகத்திரைகளை வரிசையாய் வைத்திருக்கிறது. தனது தேவைக்கேற்ப ஒன்றை அது அணிந்து திரிகிறது.

ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டால், அது நல்லபடியாய் முடிந்துவிட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை. பெருமை வந்து விடுகிறது. அது அத்துடன் நின்று போவதில்லை. அதே செயலைச் செய்ய முயன்று தோற்றுப் போன எல்லோரையும் அது இளக்காரமாய்ப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.

ஒரு மனிதனுடைய வெற்றி இன்னொரு மனிதனை வெற்றியை நோக்கி இழுக்க வேண்டுமே தவிர, அவனுடைய தோல்வியை விமர்சிப்பதாய் அமையக் கூடாது. மனிதநேயத்தின் இயல்பே அரவணைத்தலில்தான் இருக்கிறது. இல்லையேல் நீங்கள் அடைந்த வெற்றியே ஒருவகையில் உங்களுடைய இயல்பைச் சிதைப்பதால் தோல்வியாகி விடுகிறது.

பலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதுதான். தன்னம்பிக்கை வேறு, கர்வம் வேறு. தன்னம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைக்கும் மரியாதை. கர்வம் என்பது பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக்கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.

என்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும்தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும், கர்வத்துக்குமான ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

தன்னம்பிக்கையை உளவியல் ரீதியான உந்துதல் என்று கொண்டால், கர்வத்தை மோசமான குணாதிசயம் எனலாம்.

கர்வம் மனிதனை தவறுகளை நோக்கிச் செலுத்தும் சுக்கானாகி விடுகிறது. கர்வம் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனதைத் தருவதில்லை. பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் சுமத்தும் வழியையே தேடச் செய்யும். காரணம், கர்வத்தின் அஸ்திவாரத்தில் ஈகோ உறைந்து கிடக்கும்.

கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டுச் சக மனிதர்களோடு கலந்து வாழும் வாழ்க்கையே ஆனந்தங்களின் இசையை திசையெங்கும் இசைக்கும். அதுவே தனிமைகளின் கூட்டை உடைத்து இனிமைகளின் கூட்டணியை அமைக்கும். கர்வத்தின் கல்வெட்டுகளைத் தாண்டி தாழ்மையின் படிக்கட்டுகளை நோக்கிய பயணமே மனிதகுலத்துக்கு அவசியம்.

தாழ்மை நம்மைப் பற்றிய ஆழமான அறிதலில் இருந்து புறப்படும். உண்மையில் நான் யார்? எனது மனம் மனிதநேயத்தின் தாழ்வாரங்களில்தான் நடக்கிறதா? பிறருக்குத் தெரியாத பலவீனங்கள் எனக்கு என்னென்ன இருக்கின்றன? கோபம், பொறாமை, சுயநலம், வெறுப்புணர்வு இப்படிப்பட்ட ஒவ்வோர் புரிதலும் நமது தாழ்மையைக் கூர்தீட்டும்.

தாழ்மை என்பது பச்சாதாபமல்ல. அது நம்மைக் கனவுப் பல்லக்கிலிருந்து இறங்கி வீதியில் நடக்க வைப்பது மட்டுமே. அது சக மனிதனின் மீதான கரிசனையின் மீது கட்டியெழுப்பப்படும். தன்னைப் பற்றிய மையத்தை விட்டு வெளியே வரும் மனதின் சிறகடிப்பே தாழ்மையின் வாசம்.

ஒரு மன்னனைக் காண ஏழை மனிதன் ஒருவன் வந்தான். நெடுநேரக் காத்திருப்புக்குப் பின் அவனுக்கு மன்னனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சென்றதும் தனது தலைப்பாகையை அவிழ்த்து மன்னனுக்கு முன்னால் குனிந்து வணங்கினான் அவன். மன்னனும் உடனே எழுந்து கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டுக் குனிந்து வணங்கினான்.

அந்த ஏழை சென்றபின் அமைச்சர்கள் மன்னனிடம் கேட்டார்கள், "அவன் ஓர் ஏழை, அவனுக்கு முன்னால் நீங்கள் ஏன் கிரீடம் கழற்றினீர்கள் மன்னரே?''

மன்னன் சொன்னான், "வந்தவன் செல்வத்தால் ஏழை. ஆனால் தாழ்மையில் அவன் மன்னனாக இருந்தான். அவனுக்கு முன்னால் நானும் கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டு தாழ்மையை அணிவதே நல்லதெனப் பட்டது.''

தாழ்மை என்பது கர்வத்தைக் கழற்றுவதுதான். யார் வேண்டுமானாலும் எட்டி மிதிக்கும் மிதியடியாய் மாறுவதல்ல.

பிறரைப் பாராட்டும் குணம் தாழ்மையான மனதின் வெளிப்பாடு. தான் மட்டுமே சிறப்பானவன் எனும் கர்வம் எப்போதுமே பாராட்டுகளை வழங்கத் தயங்கும். எல்லோரையும் சமமாய் நேசிக்கும் மனதில் பாராட்டுகளுக்குப் பஞ்சம் இருக்காது. பிறர் உயர்ந்தவர் என நாம் கருதும் வினாடியில் நாம் புதிய விஷயங்கள் சிலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகிறது என்பதை கவனத்தில் கொள்வோம்.

'விலக்கிவிட மிகவும் கஷ்டமான விஷயம் கர்வம்தான். நான் கர்வத்தை விட்டு விலகி தாழ்மையாய் மாறிவிட்டேன் என்று சொல்லும்போது கூட, 'நான் தாழ்மையின் சின்னம்' என கர்வம் கொள்ள முயல்கிறது மனது' என்கிறார் பெஞ்சமின் பிராங்ளின்.

கர்வம் என்பது எந்த விஷயத்துக்காக வேண்டுமானாலும் எழலாம் என்பதையே அவருடைய வாசகங்கள் படம் பிடிக்கின்றன. 'நான் நல்லவன்', 'நான் பிறரை மதிப்பவன்', 'நான் எளிமையானவன்', 'நான் கடவுள் பக்தி நிறைந்தவன்', 'நான் ஏழைகளுக்கு உதவுபவன்' என எந்த முளையிலிருந்து வேண்டுமானாலும் கர்வத்தின் தரு தழைத்து வளரலாம்.

தாழ்மை உங்களுடைய உறவினர்களோடு ஆழமான, நேர்மையான அன்புறவு கொள்ள வைக்கும். கர்வம் பல வேளைகளில் சண்டைகளுக்கான முதல் சுவடை வைத்து விடும். விட்டுக் கொடுத்தல் தாழ்மையின் அடையாளம். உறவுகளைக் கட்டி எழுப்புகையில் நமது வலக்கரமாய் செயல்படும் விஷயமும் அதுதான்.

தொட்டதுக்கெல்லாம் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு, அவர்களை விட நான் பெரியவன் என நினைப்பதுதான் கர்வத்தின் காட்டுத் தீயில் எண்ணை ஊற்றும் சமாச்சாரம். ஒப்பீடுகளினால் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால்தான் ஆழமான ஆன்மிகவாதிகள் தங்களை இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்குத் தாழ்மையை கற்றுக் கொடுக்கிறது.

சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கும் அழகையும், வியப்பையும் ரசிக்கத் துவங்குங்கள். தாழ்மை உங்களை வந்தடையும். ஆர்வமும், தேடலும் உலகின் அழகிய பக்கங்களை அவிழ்த்து வைக்கும். நமது அறியாமையின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறக்கும். கூடவே நமது கர்வத்தின் திரைச்சீலைகளை ஒவ்வொன்றாய்க் கிழிக்கும்.

பிறர் மீதான உண்மையான கரிசனை அவரையும் நம்மைப் போலவே நேசிப்பதில் துவங்குகிறது. அது நமது தாழ்மையின் பயணத்தில் நிகழ்கிறது.

கர்வப் பிழைகள் அழியட்டும்
தாழ்மை மழையாய் பொழியட்டும்!
சேவியர்

Tuesday, September 20, 2011

ஸ்மார்ட்டா வேலை பாருங்க!

வாழ்க்கை என்பது பாரம் இழுக்கும் பாதையல்ல. சிந்தனைகளைக் கூர் தீட்டி பாரங்களையும் வரங்களாய் மாற்ற வேண்டிய பயணம்.

'ராத்திரி பகல் பார்க்காம கஷ்டப்பட்டு உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்'.

இப்படி ஒரு வாக்கியத்தை நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோருமே கேட்டிருப்போம்.

ஆனால் இன்றைய உலகம் இந்த சிந்தனையை விட்டுக் கொஞ்சம் விலகியிருக்கிறது.

'கடின உழைப்பல்ல, நுணுக்கமான உழைப்பே முக்கியம்' என்கிறது நவீன உலகம்.

'ஸ்மார்ட் ஒர்க்' என இந்த நுண்ணறிவு வேலையைக் குறிப்பிடுகிறார்கள்.

வேலையில் சுட்டித்தனம், திறமை கலப்பது, வித்தியாசமாய்ச் சிந்திப்பது, புதுமையாய்ச் செயல்படுவது இவற்றையே 'ஸ்மார்ட் வேலை' என்கிறார்கள்.

ஒரே மாதிரி ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டே இருக்க நாம் இயந்திரங்கள் இல்லையே.

காலையில் அலுவலகம் சென்றவுடன் ஒரே மாதிரியான வேலையை மாலை வரைச் செய்ய வேண்டுமென நினைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு போரடிக்கும்!

அதே வேலையை பல ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? வேலைக்குப் போவதே ஒரு போரடிக்கும் போராட்டக் களத்துக்குள் போவது போல் இருக்கும் இல்லையா?

'திறமை இல்லாமல் வெறும் கடின உழைப்பு மட்டும் இருப்பது வெட்கக் கேடானது. திறமை இருந்து கடின உழைப்பு இல்லாத நிலையோ துயரமானது' என்கிறார் ராபர்ட் ஹால்ப்.

மனிதனுக்கு கடவுள் வெறும் உடலை மட்டும் தரவில்லை, சிந்திக்கும் மூளையையும் சேர்த்தே தந்திருக்கிறார். எனவே வெறும் கடின உழைப்பு எனும் வட்டத்தை விட்டு விலகி சிந்தனையின் நாற்றுகளை நட வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்டவர்களே உயரிய இருக்கைகளை விரைவில் சென்றடைகிறார்கள்.

மரம் வெட்டும் போட்டி ஒன்று நடந்தது. இரண்டு பலவான்களுக்கு இடையேயான போட்டி. இருவருமே சம பலம் படைத்தவர்கள்.

ஒரு நாள் காலை முதல் மாலை வரை மரங்களை வெட்டி வீழ்த்த வேண்டும். யார் அதிக மரங்களை வெட்டுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள்.

போட்டி ஆரம்பமானது. ஒருவர் கடின உழைப்பாளி. ஓய்வே இல்லாமல் மரங்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டே இருந்தார். மற்றவரோ பதற்றமடையவில்லை. மரங்களை வெட்டினார், ஓய்வெடுத்தார், மதிய உணவு சாப்பிட்டார். மீண்டும் மரங்களை வெட்டினார். கடைசியில் அவரே வெற்றியும் பெற்றார்.

கடின உழைப்பாளிக்கு ஒரே ஆச்சரியம். 'நான் இடைவேளையே இல்லாமல் கடுமையாக உழைத்தேன். என்னோடு ஒப்பிட்டால் நீ கொஞ்சம் குறைவாகத்தான் உழைத்தாய். எப்படி முதல் பரிசு பெற்றாய்?' வியப்பாகக் கேட்டார் அவர்.

வென்றவர் சொன்னார், 'நீ ஓய்வெடுக்காமல் உழைத்தாய். உன்னுடைய கோடரியின் முனை மழுங்கிக் கொண்டே வந்தது. நான் ஓய்வெடுத்தேன். மதிய உணவு சாப்பிட்டேன், அப்போதெல்லாம் எனது கோடரியை கூர் தீட்டினேன். அதனால்தான் வென்றேன்.'

பல வேளைகளில் நாம் நம்முடைய சிந்தனைகளைக் கூர் தீட்ட மறந்து போய் விடுகிறோம். எறும்புகள் போல ஒரே பாதையில் ஒன்றன் பின் ஒன்றாய் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அதை விட நல்ல பாதை, எளிய பாதை இருந்தாலும் நாம் பாதை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. கடினமான அந்தப் பாதையில் ஓடிக் கொண்டே இருந்தால் போதும் என நினைக்கிறோம்.

ஒரு செயலை நாம் முதலில் செய்யும் போது அது நமக்குக் கடினமாக இருக்கிறது. அந்தச் செயலை மீண்டும் மீண்டும் செய்கையில் எளிதாகி விடுகிறது. பிறகு அந்தச் செயல் நமது மூளையில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. அதற்குப் பிறகு நம்மை அறியாமலேயே மூளை நம்மை அந்தச் செயலைச் செய்யப் பணிக்கிறது.

அதனால்தான் பல வேளைகளில் பழக்கமான வழியை விட்டு வேறு வழிக்குச் செல்ல மிகுந்த தயக்கம் எழுகிறது என்கின்றனர் உளவியலார்கள்.

ஸ்மார்ட் வேலை என்பது வழக்கமான வழியை விட்டு புதுமையான வழிக்குத் தாவுவது. ராத்திரி பகலாகக் கண் விழித்துப் படிப்பவர்கள் சில வேளை தோல்வியைச் சந்திப்பதுண்டு. ஆனால் திட்டமிட்டு, குறிப்பெடுத்து, முக்கியமானவற்றை வரிசைப்படுத்திப் படிப்பவர்கள் குறைந்த உழைப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் உண்டு.

ஒரு சூழலை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது உங்கள் வெற்றியும், தோல்வியும். இந்தச் சூழலுக்கு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே மனம் எப்போதும் சொல்லும். அதைத் தாண்டிய வழிகளைச் சிந்திக்க மூளையைப் பழக்கப்படுத்துபவர்களே அறிவாளிகளாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒரு பற்பசை நிறுவனம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எல்லோரும் விற்பனைக்காக ஓடி ஓடி உழைத்தார்கள். ஏன் பற்பசை விற்பனையாகவில்லை என நிறுவனம் யோசித்தது. வாங்கும் பற்பசை மக்களுக்கு ரொம்ப நாளைக்குப் போதுமானதாய் இருப்பதைக் கண்டு பிடித்தது. அதற்கான தீர்வு என்ன என எல்லோரும் யோசித்துத் தளர்ந்தார்கள்.

ஒருவர் சொன்னார், 'இனிமேல் பற்பசையின் வாய்ப் பகுதியைப் பெரிதாக வைப்போம். மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். விரைவில் பற்பசை காலியாகும். வாங்குவார்கள்.'

அந்த ஸ்மார்ட் சிந்தனை, நிறுவனத்தை மீண்டும் உயரத்தில் கொண்டு போய் வைத்தது.

யார் வேண்டுமானாலும் ஸ்மார்ட் வேலைக்காரர் ஆக முடியும். அதற்கு சில அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருந்தாலே போதும்.

முதலாவது, ஒரு வேலையில் வலது காலை வைக்கும் முன் அந்தச் செயலைச் செய்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது பொருளாகவும் இருக்கலாம், தகவலாகவும் இருக்கலாம், அறிவாகவும் இருக்கலாம்.

என்ன செய்யப் போகிறோம் என்பதை வரிசைப்படுத்துங்கள். அப்படித் திட்டமிடும் போது மாற்று வழிகளையும் மனதில் கொள்ளுங்கள். அது உங்களை புதிய செயல்பாடுகளை நோக்கிப் பயணிக்க வைக்கும். ஒரு திட்டத்தை முடிவு செய்த பிறகு அதில் நிலைத்திருங்கள்.

குறிப்பாக, பல வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்வது கற்கால வழிமுறை. ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் செய்ய முடியுமா என்பதை திட்டமிட்டுச் செய்வது ஸ்மார்ட் முறை.

மிக முக்கியமான வேலைகளை, அதிக பயனுள்ள வேலைகளை, அதிக மரியாதை தரும் வேலைகளை முதலில் செய்யத் துவங்குங்கள். அது அடுத்தடுத்த எளிய வேலைகளை சுலபமாய்ச் செய்ய உங்களைப் பக்குவப்படுத்தும்.

ஒரு வேலையை இன்னொரு நபருக்குக் கொடுக்க வேண்டுமென வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று, சரியான நபரிடம் அதைக் கொடுப்பது. இன்னொன்று, சரியான நேரத்தில் அதைக் கொடுப்பது. இதில் ஒன்று தவறினாலும் தேவையற்ற மன அழுத்தத்திற்கு அது உங்களை இட்டுச் செல்லலாம்.

ஸ்மார்ட் வேலை மூன்று முக்கியமான குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டும்

முதலாவது நீங்கள் செய்ய வேண்டிய வேலையை குறைந்த உழைப்பில் செய்ய முடிவதாக இருக்க வேண்டும். இரண்டாவது குறைந்த செலவில் செய்ய முடிவதாக இருக்க வேண்டும். மூன்றாவதாக சரியான நேரத்தில் முடிக்க முடிவதாக இருக்க வேண்டும்.  

இந்த மும்மூர்த்திகளை மனதில் கொண்டே எல்லா செயல்களையும் திட்டமிடுங்கள்.

ஸ்மார்ட் வேலைக்காரர்களிடம் தன்னம்பிக்கையும், 'ரிஸ்க்' எடுக்கத் தயங்காத மனமும் இருக்கும் என்கின்றனர் வல்லுனர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் செய்யும் வேலையை அப்படியே செய்து கொண்டே இருப்பார்கள். தோற்று விடுவோமோ, தவறாகிப் போய்விடுமோ எனும் பயமே அதன் முக்கியக் காரணம். எனவே, சில 'ரிஸ்க்'களை எடுக்கத் தயங்காதீர்கள்.

ஒரு செயலைச் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைப் போல வசீகரிக்கும் விதமாய் அதை முடிப்பது மிக மிக முக்கியம். சரியான வகையில் உங்கள் வேலையை நீங்கள் விளம்பரப்படுத்திக் கொள்ள அது உங்களுக்கு ரொம்பவே கை கொடுக்கும்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம், கற்றுக் கொள்ளத் தயங்காத மனம். நீங்கள் செய்வது போன்ற அதே வேலையை உங்களைச் சுற்றி பலரும் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஏதேனும் நல்ல 'டெக்னிக்' இருந்தால் அதை உள்வாங்கிக் கொள்ளத் தயங்க வேண்டாம். அடுத்தவருடைய ஐடியாவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்னும் வறட்டுப் பிடிவாதங்கள் அர்த்தமற்றவை.

திறமையான உழைப்பாளிகளிடம், கடின உழைப்பும் கை கூடும்போது பயன் பல மடங்கு அதிகமாகி விடுகிறது. ஸ்மார்ட் வேலை என்பது சோம்பேறித்தனத்துக்கான முன்னுரையல்ல. அது கடின உழைப்புடன் கலக்கும் போது உங்களுக்கு வங்கக் கடலும் வணக்கம் சொல்லும், வானமும் வந்து வாழ்த்துப் பாடும்.

பழைய முறைகள் தப்பில்லை- அதில்
புதுமை கலந்தால் ஒப்பில்லை!
சேவியர்

Tuesday, September 13, 2011

ஹாலிவுட் டிரெய்லர்


பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், அந்தக் காய்ச்சல்., இந்தக் காய்ச்சல்... என சமீபகாலமாக திடீர் திடீரென எட்டுத் திசையிலும் பரவும் வைரஸ் கிருமிகளால் உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது. விலை மதிப்பில்லாத மனித உயிர்களை பறி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வககை கிருமிகளை அழிக்கவும் தெரியாமல், தாக்கியவர்களை குணப்படுத்தவும் முடியாமல் மருத்துவ உலகம் விழி பிதுங்கி நிற்பதை மூன்றாம் உலகை சேர்ந்தவர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கலாம்.

இதைத்தான் 105 நிமிடங்கள் ஓடக்கூடிய 'கான்டான்ஜியன்' ஹாலிவுட் படமாக எடுத்திருக்கிறார்கள். இந்த ஆங்கிலப் பெயரை ரஷ்ய மொழியில் எழுதினால் ஷாராசினே (Zarazheni) என்று வரும். ஆங்கில எழுத்தை போலவே இந்த ரஷ்யன் எழுத்தும் மொத்தம் 9தான். அதற்கேற்ப கசான், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, பாரிஸ், ஜெனிவா, லண்டன், டோக்கியோ, பிரம் என ஒன்பது நகரங்களை சுற்றி இப்படத்தின் கதை நடக்கிறது. இதில், கசானும், பிரம்மமும் ரஷ்யாவிலுள்ள நகரங்கள்.

உலகையே ஒருவகை கிருமி தாக்குகிறது. மின்னலைப் போல அதிவிரைவாக பரவும் இக்கிருமியால் மனிதர்கள் கொத்துக் கொத்துகாக இறக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சக மனிதனை தொட்டாலே இறந்து போவோம் என்னும் நிலைக்கு நிலைமை முற்றுகிறது. இதை எதிர்த்து உலகிலுள்ள அனைத்து பிரபல மருத்துவர்களும் அடங்கிய குழு, எப்படி போராடி முறியடிக்கிறது என்பதுதான் ஒன் லைன்.

ஆவணப்படத்தின் கதையை போல் தெரிந்தாலும், இது உண்மையில் சயின்ஸ் பிக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் மூவி. இதில், பிழையோ அல்லது மிகப்படுத்தலோ வந்துவிடக் கூடாது என்பதற்காக உலகின் பிரபலமான மருத்துவ - அறிவியல் தொழில்நுட்பக் குழுவினருடன் சம்மணமிட்டு அமர்ந்து பிசிறின்றி பக்காவாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

அகடமி விருது பெற்ற 'அன் இன்கன்வினீயன்ட் ட்ரூத்' படத்தை தயாரித்த ஸ்காட் இசட்.பேர்ன்ஸ், அடிப்படையில் கதை, திரைக்கதை ஆசிரியர். இவர் கதை, வசனம் எழுதிய 'தி பர்னி அல்டிமேட்டம்',  'தி இன்ஃபார்மட்' ஆகிய இரண்டுமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தவை. அந்த வகையில் இவரது கதை - திரைக்கதையில் உருவாகும் இப்படமும் வெற்றி பெரும் என நம்பலாம். இவர் கதை எழுதிய முந்தைய இரு படங்களையும் இயக்கிய ஸ்டீவன் சூடன் பர்க்கே, இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி, இப்படத்திலும் கெமிஸ்ட்ரி, இப்படத்திலும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதாம்.            

தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், திரைகதை - வசனகர்த்தா என பல முகங்கள் ஸ்டீவன் சூடன்பர்க்குக்கு உண்டு. 'டிராபிக்' படத்தை இயக்கியதற்காக ஆஸ்கர் விருது பெற்றிருக்கும் இவர், 'ஓஷன்ஸ் லெவன்', 'ஓஷன்ஸ் டுவல்', 'ஓஷன்ஸ் தர்டீன்', 'பபுல்', 'சே', 'செக்ஸ், லைஸ் அன்ட் வீடியோடேப்' உட்பட பல படங்களை இயக்கியிருக்கிறார். 'சோலோ ரிஸ்', 'நைட் வாச்', 'கிங் ஆஃப் தி ஹில்' உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவும், 'காப்கா', 'தி கேர்ள் ஃ பிரெண்ட் எக்ஸ்பீரியன்ஸ்' உட்பட 8 படங்களுக்கு எடிட்டராகவும் பனி புரிந்திருக்கிறார். 22 படங்களை தயாரித்திருக்கிறார்.

கேட் வின்ஸ்லெட், மேட் டெமான், மேரியன் கொடிலாட் உட்பட பலர் நடித்திருக்கும் இந்த 'கான்டான்ஜியன்' படத்தை வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது.

எச்சரிக்கை, சக மனிதனை தொட்டால் நீங்கள் இறந்து போவீர்கள் !

கே.என்.சிவராமன்

Saturday, September 10, 2011

நேர்மை பழகு! அதுவே அழகு!

ஆபிரகாம் லிங்கன் தனது இளம் வயதில் ஒரு கடையில் வேலை பார்த்தார். வாடிக்கையாளர்களிடம், அன்பாகவும், பணிவாகவும், நேர்மையாகவும் இருப்பதில் அவர் வல்லவர்.

ஒருமுறை நள்ளிரவில் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்கையில் கணக்கு இடித்தது. ஒரு நபருக்கு பணத்தை குறைவாக கொடுத்திருப்பதைக் கண்டுபிடித்தார். அந்த நபரின் வீடோ வெகு தொலைவில் இருந்தது. அவர் தயங்கவில்லை. அந்த நள்ளிரவிலேயே கடையைப் பூட்டிக் கொண்டு அந்த நபரைத் தேடிப் போய் மிச்ச பணத்தைக் கொடுத்து விட்டு வந்தார். நேர்மையை அவர் எந்த அளவுக்கு நேசித்தார் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

'எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள், பேசும் எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை'. இந்த வலிமை வாய்ந்த வாக்கியம் சொல்லப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சாம் ரேபன் சொன்ன இந்த வாக்கியம் நேர்மையாளர்களின் அடிப்படை இலக்கணமாய் இருக்கிறது.

நமக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தேவையற்ற விஷயங்களைப் பற்றி இரவு பகல் பாராமல் பேசும் நாம், முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயங்களில் ஒன்று நேர்மை.

நமது ஓட்டப்பந்தயம் பெரும்பாலும் செல்வம், புகழ் எனும் மைல் கற்களை நோக்கியே அசுர ஓட்டம் பிடிக்கிறது. கடைசியாய் நேர்மையைப் பற்றி எப்போது படித்தோம்?

ஒரு வேளை ஆரம்பப் பாடசாலையின் நீதிக் கதைகளிலாய் இருக்கலாம்!

அதற்குப் பின்...?

அப்படிச் சின்ன வயதில் கற்றுக் கொண்ட நேர்மை ஏன் காணாமல் போகிறது தெரியுமா?

நம்மைச் சுற்றி இருக்கின்ற மக்கள் காட்டும் தவறான வாழ்க்கை முறை. குழந்தைகளுக்கு நேர்மையைப் பற்றிப் போதித்து விட்டு நாமே நேர்மையற்றவர்களாய் இருந்தால் அந்தப் போதனை வெறும் ஏட்டுச் சுரைக்காயாய், கறிக்கு உதவாமலேயே போய்விடும்.

'ஆட்டோவில் தவற விட்ட பணப் பெட்டியை போலீசிடம் ஒப்படைத்தார் ஆட்டோக்காரர்' என்று ஒரு செய்தி வந்தால் வியக்கிறோம்.

அடடா! இப்படி ஒரு நேர்மையா என ஆச்சரியப்படுகிறோம்.

மனிதர்களிடம் இயல்பாகவே இருக்க வேண்டிய நேர்மை இன்று வியப்பூட்டும் அபூர்வச் செயலாகி விட்டதைத்தானே இது காட்டுகிறது!

அப்படியானால் நேர்மைவாதிகள் அருகி வரும் அபூர்வ இனமாகிவிட்டார்களா?

நேர்மையை விதைப்பவர்கள் மட்டுமே நம்பிக்கையை அறுவடை செய்ய முடியும். ஆனால் நேர்மையாய் இருப்பதும், உண்மையாய் இருப்பதும் எளிதா?

இல்லை என்பதுதான் உடனடிப் பதில்.

இதைப் பின்பற்ற வேண்டுமானால் உறுதியான மனம் ரொம்ப அவசியம்.

அந்த உறுதி பல வேளைகளில், பல காரணங்களுக்காக நம்மை விட்டுப் பறந்து போய் விடுகிறது. குழந்தையின் கையிலிருந்து அறுந்து போன பட்டம் போல அது இலக்கில்லாமல் ஓடி மறைகிறது. பல்வேறு காரணங்களுக்காக நம்முடைய நேர்மையை கை கழுவி விடுகிறோம்.

'நான் தப்பு செய்யவில்லை' என சாதிக்க நினைக்கும் எண்ணம் பல வேளைகளில் நம்மிடமிருக்கும் நேர்மையைப் பறித்து விடுகிறது. நான் நல்லவன் என்பதைப் பிறருக்குக் காட்ட பொய்களின் கைகளைப் பிடிக்கிறோம்.

அல்லது அடுத்தவர்களுடைய தோள்களில் பழியைச் சுமத்த நேர்மையை கைவிடுகிறோம். தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் எளிய வழி நேர்மையைக் கைவிடுவதுதான் என முடிவுகட்டி விடுகிறோம்.

சிலசமயம், பிறருக்கு முன்னால் அவமானப்படக் கூடாதே என்பதற்காகவும் பொய் முகமூடி போடுகிறோம்.

வறட்டுக் கவுரவம் கூட பல வேளைகளில் நம்மைக் குறித்தும், நமது பின்புலத்தைக் குறித்தும் அடுக்குப் பொய்களை வாரி இறைக்க காரணமாகி விடுகிறது.

இன்னும் சில சந்தர்ப்பங்களில், கருத்து வேற்றுமை வரக் கூடாதே என்பதற்காக பொய்க்கு வக்காலத்து வாங்கி மவுனமாய் இருக்கிறோம்.

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டும் என்பதற்காகக் கூட உண்மையை மறைக்கவும், நேர்மையை விலக்கவும் செய்கிறோம்.

இப்படி பல வேளைகளில் நம்முடைய மனதின் உறுதி கொஞ்சம் ஒளிந்து கொள்ள, நேர்மையும் கூடவே காணாமல் போய் விடுகிறது.

மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை பொருளாதாரமல்ல, மனித மதிப்பீடுகளே! நல்ல மதிப்பீடுகளின் மேல் கட்டமைக்கப்படும் வாழ்க்கையே சமூக வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆதாரம்.

நேர்மையாய் இருக்க வேண்டுமென நீங்கள் முடிவெடுத்தால், நேர்மை உங்களை வந்து ஆக்கிரமிக்கும். எந்த ஏரியாவில் நீங்கள் அதிகம் பொய் சொல்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். உங்களுக்கே உங்களுடைய தடுமாற்றத் தளம் புரிந்து விடும். அது ஒரு குறிப்பிட்ட சூழலாய் இருக்கலாம், அல்லது குறிப்பிட்ட நபரிடமாய் இருக்கலாம். எங்கே தடுமாறுகிறீர்கள் என்பதைக் கண்டு பிடிப்பது, அங்கே நேர்மையையும், உண்மையையும் வலுப்படுத்திக் கொள்ள உதவும்.

உதாரணமாக, பண விஷயத்தில்தான் நேர்மையற்று இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை விலக்க என்னென்ன செய்யவேண்டும்? வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றுவது முதல், மனைவியிடம் பொய் சொல்வது வரை எல்லாவற்றையும் பட்டியலிடுங்கள். மன்னிப்புக் கேட்கவோ, உங்களுக்குச் சொந்தமில்லாததை திருப்பிக் கொடுக்கவோ தயங்கவே தயங்காதீர்கள்.

பயத்தின் பிள்ளைதான் பொய்! மிகுந்த தைரியசாலிகளே நேர்மையாளர்களாய் இருக்க முடியும். உங்களுடைய பலவீனத்தை ஏற்றுக் கொள்ளும் தைரியமானாலும் சரி, மேலதிகாரியிடம் உண்மையைச் சொல்லும் கம்பீரமானாலும் சரி, நேர்மையின் பின்னால் தைரியம் இருக்கிறது. அச்சமற்ற மனதில் மட்டுமே நேர்மையும், உண்மையும் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளும். தைரியம் கொள்ளுங்கள்!

உண்மையாய் இருக்க வேண்டுமெனில் உண்மையாய் சிந்திக்கவும் வேண்டும். காதில் கேட்பவற்றுக்கு ஆடைகட்டி அலைய விடுவது நேர்மையின்மையின் சின்னம். கேட்பதையும், பார்ப்பதையும், படிப்பதையும் 'உண்மை'யின் மனம் கொண்டு வாசிக்கப் பழகுங்கள்.

'இப்படியாய் இருக்கலாம்', 'இதுவாக இருக்கலாம்', 'அப்படி நடந்திருக்கலாம்' போன்ற கணிப்புகள் பெரும்பாலும் நேர்மையற்ற உரையாடல்களுக்கான முதல் சுவடு. இந்த தேவையற்ற கணிப்புகளைக் கடலில் கொட்டி விடுங்கள்.

ஒரு பொய் என்பது பொய்தான். அது சின்னதானாலும் சரி, பெரியதானாலும் சரி. சின்னச் சின்ன விஷயங்களில் பொய் சொல்வது தவறில்லை என்பது பலருடைய எண்ணம். பொய் எப்போதும் உண்மையாவதில்லை!

பக்கத்து வீட்டிலிருந்து நீங்கள் பறித்த ரோஜாப்பூவோ, அலுவலகத்தில் திருடிய பென்சிலோ, பொய் என்பது குறையுள்ள மனதில் படிந்த கறை! சிறிய விஷயங்களில் துவங்கும் பொய்கள் பெரிய விஷயங்களை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் என்பதுதான் விபரீதமான உண்மை!

பிறரைக் காயப்படுத்தாமல் சொல்லப்படும் பொய்களை 'வெள்ளைப் பொய்கள்' என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பொய்களைக் கூட சொல்லாமல் இருப்பதே நல்லது என்பேன். 'ஏய்... இந்த டிரஸ் ரொம்ப நல்லாயிருக்கு' என நீங்கள் சொல்லும் பொய்யில் யாரும் காயமடையப் போவதில்லை. ஆனாலும் அது உங்களுடைய மனதை கறைப்படுத்தும்!

பாதி உண்மை என்பது ஒரு முழுப் பொய்! உண்மை என்பது முழுமையானது. அரைகுறையாய் உண்மையைச் சொல்லிவிட்டால் உங்கள் மனசாட்சியின் கேள்வியிலிருந்து தப்பிவிடலாம் என தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள்.

'ஒரு விஷயம் சொல்றேன், யார்கிட்டேயும் சொல்லாதீங்க' என பீடிகையோடு வரும் நபர்களிடம் 'அந்த விஷயத்தை எங்கிட்டேயும் சொல்லாதீங்க' என நீங்கள் ஒதுங்கிக் கொண்டால் நல்லது. வெளியே சொல்லாத உண்மையும், பொய்யின் இன்னொரு வடிவமே.

நேர்மையற்றவராய் இருப்பது நமக்குள் நம்மை அறியாமலேயே ஒரு குற்ற உணர்வை உருவாக்கிவிடும். கூடவே குழப்பத்தையும் தன்னம்பிக்கைச் சிதைவையும் உருவாக்கும். பிறகு 'மனசு ரொம்பக் கனமாய் இருக்கிறது' என்று புலம்ப வேண்டியதுதான்.

நேர்மை முளைவிட வேண்டிய முதல் இடம் குடும்பம். குடும்ப உறவினர்களிடையே பொய் கலக்காத உண்மை உரையாடல்களும், நேசமும் இருக்கும்போது அந்த வாசம் சமூகத்திலும் வீசும். பிரச்சினைகள் வருமோ என நினைத்து போலித்தனமாய் வாழ்வதை விட நேர்மையாய் வாழ்ந்து பிரச்சினைகளைச் சமாளிப்பதே சிறப்பானது.

'ஒரு செயலைச் செய்யும்போது, அந்தச் செயல் உங்களைப் பிறகு பொய் சொல்ல வைக்குமா என்பதை யோசியுங்கள். அப்படிப்பட்ட செயல்களைச் செய்யாதீர்கள்' என்பது சான்றோர் காட்டும் வழி. உங்கள் ஒவ்வொரு செயலையும் இந்த வாசகத்தால் எடைபோடுங்கள். செயல்கள் வாசமாகும், நேர்மை வசமாகும்.

நெஞ்சில் நேர்மை நிறையட்டும்
செயலில் கூர்மை விளையட்டும்!

Friday, September 9, 2011

இன்றும் ஒரு தகவல்

சொகுசு கப்பல் பயணம்

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் விமானப் பயனங்களைத்தான் விரும்புவார்கள் என்று நினைக்கிறோம். உண்மையில் விரைவாக முடிக்கக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளுக்கு மட்டுமே விமானங்களை நாடுகிறார்கள். மற்றபடி அவர்கள் விரும்பிச் செல்லும் பயணம் கப்பல் பயணமே. கப்பலில் பலருடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு மிக எளிதாக அமைந்து விடுகிறது. இப்படி கோடீஸ்வரர்களை ஏற்றிக் கொண்டு கடலில் வலம் வரும் கப்பல்களுக்கு 'யாட்' (Yat) என்று பெயர்.

இந்த யாட்களில் முக்கியமானது ஆக்டோபஸ் என்பது. இந்த கப்பல் மைக்ரோசாப்டின் நிறுவனர்களின் ஒருவரான பால் ஆலனுக்கு சொந்தமானது. இது உலகின் எட்டாவது மிகப்பெரிய உல்லாச கப்பல். இதில் இரண்டு ஹெலிகாப்டர்களும், ஏழு படகுகளும், ஒரு குட்டிநீர்மூழ்கி கப்பலும் உள்ளன. இவற்றையெல்லாம், நடுக்கடலில் கப்பலுக்கு ஏதாவது ஆபத்து என்றால் பயணிகளை காப்பாற்றுவதற்காகவே வைத்திருக்கிறார்கள். ரைசிங் சன் என்றொரு கப்பல் இருக்கிறது. ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர் லோரி எல்லிசனும், பிரபல அமெரிக்க சினிமா தயாரிப்பாளரான டேவிட் கெபனும் இதன் உரிமையாளர்கள். இந்தக் கப்பலின் மதிப்பு 2 ஆயிரம் கோடி டாலர். இதை ஆக்டோபஸ்சுக்கு போட்டியாக வடிவமைத்திருந்தார், லேரிஎல்லிசன்.

கோடீஸ்வரர் நாசர் அல் ரஷீத்தின் கப்பல் மவுரா. இது 344  அடி நீளம் கொண்டது. 2 ,100 கோடி டாலர் செலவில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கப்பலுக்குள் இருக்கும் ரிசார்ட்தான். கப்பலின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் இந்த ரிசார்ட் ஒரிஜினல் ரிசார்ட் போல் வர வேண்டும் என்பதற்காக கப்பலில் நிஜமான பனை மரங்களும், தென்னை மரங்களும் வைத்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் எப்படி தொழில் அதிபர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியை தங்களுக்கு சொந்தமாக வைத்திருக்கிறார்களோ, அதே போல் வெளிநாடுகளில் கால்பந்தாட்டக் குழுவை கோடீஸ்வரர்கள் சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அப்படி செல்சி என்ற கால்பந்தாட்ட குழுவுக்கு சொந்தக்காரராக இருக்கும் ரஷ்ய கோடீஸ்வரர் ரோமன் ஆப்ரோமொவிக் தனக்கு சொந்தமாக கப்பலை வைத்துள்ளார். அதன் பெயர் எக்லிப்ஸ். 1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த கப்பல் பாதுகாப்பு கெடுபிடி அதிகம் உள்ளவர்கள் பயணம் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பிரபலமானவர்களை எப்போதும் துரத்தும் பாப்பராசிகளின் டிஜிட்டல் கேமராக்களை செயலிழக்க வைக்கும் நவீன லேசர் கருவிகள் இந்த கப்பலில் இருக்கின்றன. ஏவுகணைத் தாக்குதல்களை கண்காணிக்கும் கருவிகள், கப்பலில் இருந்து அனுப்பும் தகவல்களை வேறு யாரும் படிக்க முடியாமல் தடுக்கும் கருவிகள் இங்கு உண்டு. அதனால் வெளியில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பெரிய மனிதர்கள் உல்லாசமாக தங்கள் பொழுதை கழிக்க இந்த எக்லிப்சை நாடுகிறார்கள்.       

Tuesday, September 6, 2011

நேர்மை எனும் நெறிமுறை!

'நேர்மை' என்பது இடம், பொருள், ஏவலுக்கு ஏற்பப் பின்பற்ற வேண்டிய ஒன்று, நேர்மையைவிட சாமர்த்தியம்தான் மிகவும் முக்கியமானது என்பது இன்று பலரின் எண்ண ஓட்டம். அதையே பிறருக்கு வலியுறுத்தவும் செய்கிறார்கள். நேர்மையான வாழ்க்கை இன்று சாத்தியமில்லாததா?

நல்லவராக இருக்கவேண்டும். அதேசமயம் வல்லவராகவும் இருக்கவேண்டும். இது சாத்தியமா? நேர்மையாக வாழும் பலரை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று கூறுகின்றார்களே இது சரியா? தமக்குத் தாமே நியாயப்படுத்திக் கொண்டு சாமர்த்தியமாக வாழ்வதுதான் முறையா என்பது போன்ற கேள்விகள் பலரது மனதிலும் அவ்வப்போது எழத்தான் செய்கின்றன.

நேர்மையாகவும் இருந்துகொண்டு விருப்பங்களைக் கடந்து வாழ்க்கை நடத்த முடியுமா? நேர்மைக்குப் பரிசு வறுமைதானா? என்றும் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வாழ்க்கையை வாழ்வதற்கு முக்கியமான உந்துசக்தியாக விளங்குவது, 'புருசார்த்தம்' ஆகும். புருசார்த்தம் என்றால் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கும் சேர்ந்தது. நெருப்பின் தர்மம், சுடுவது. அதுதான் அதன் இயல்பும் கூட.

அதுபோல ஒவ்வொருவரும் தன்திறன் அறிந்து, மனதைரியத் துடனும், விடாமுயற்சி, புத்திசாலித்தனத்துடனும், கடினமுயற்சி மேற்கொண்டால் வெற்றி என்பது எட்டிப்பறிக்கும் தூரம்தான்.

ஒவ்வொரு செயல்பாட்டையும் அதற்குரிய விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு நேர்முறையில் செயல்படுவது அவரவர் கையில்தான் உள்ளது. ஜனகமகராஜன் துறவறம் மேற்கொள்ளாமலேயே முனிவரைப் போல வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியதாக கூறப்படுவதை நாம் அறிகிறோம்.

ரிச்சர்ட் பேக் என்பவர், 'ஜோனதன் விவிங்ஸ்டன் சீகல்' என்ற நூலில் ஜோனதன் என்ற கடல் சார்ந்த உயிரினமான நீர்வாழ் பறவையைப் பற்றி குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ஜோனதன், தன் இனத்தைவிட்டுப் பிரிகிறது.

அது, புருசார்த்தத்துடன் செயல்படும் கூட்டத்தை இனங்கண்டு அதன் மூலம் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு, தான் கற்ற திறமைகளை தனது கூட்டத்துக்கும் கற்றுத் தந்தது. கற்றுத்தரும் முன்பு தனது சீடனிடம், அந்த வித்தையைப் பிறருக்கும் கற்றுத்தரவேண்டும் என்று கூறியது.

இல்லற தர்மம், தொழில் தர்மம், சமூக தர்மம், இறைஉணர்வு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து அறவாழ்க்கை வாழ்வோர் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நியாயமான லாபத்தை ஈட்டும் வியாபாரம் ஏற்புடைய ஒன்றே. நெறிமுறைகளைப் பின்பற்றி லாபம் ஈட்டி, அதில் சமூக வளர்ச்சிக்கும் பங்களிக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன.

நேர்மையுடன் வருவாயைப் பெருக்க முடியும். நேர்மைக்கும் வறுமைக்கும்தான் அதிக நெருக்கம் உண்டு என்று கருதுவது ஒரு குறுகிய கண்ணோட்டமே. பணம் என்பது வெறும் நிழல்தான். அதைப் பயன்படுத்துபவர்கள் அதற்கு அடிமையாகாமல் செயல்பட்டால் நேர்மையுடன் வறுமையைப் போக்கமுடியும்.

வரவுக்குள் செலவு செய்யப் பழகுவது ஒரு வழி. வரவைப் பெருக்கிக் கொண்டு அதாவது, திறமையையும், உழைப்பையும் அதிகப்படுத்திக் கொண்டு வசதியைப் பெருக்கிக் கொள்வது யதார்த்தம்தான். விடுதலை உணர்வுடன் செயல்பட பழகவேண்டும்.

எல்லாவற்றையும் துறந்து இடுப்பில் ஒரு முழம் துணியை கட்டிக்கொண்டு வாழ்வதுதான் துறவு என்று அர்த்தம் கிடையாது. ஆடையின் மேல் தேவையைத் தாண்டி நாட்டம் இல்லாதபோது காந்தியடிகளுக்கு நாலு முழ வேட்டியே போதுமானதாக இருந்தது.

விரதம் என்பது தம்மைத் தாமே வருத்திக்கொள்வதல்ல. அதன் கருத்தை மனதளவில் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால்தான் அது உண்மையான விரதம்.

ஓர் அரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது, தவம் செய்து கொண்டிருந்த ஞானியைப் பார்த்தான். அவரைத் தனது அரண்மனைக்கு அழைத்து வந்து சில மாதங்கள் இருக்கச் செய்து அறிவுரைகளை பெற மன்னன் கருதினான்.

முனிவர் தங்குவதற்கு ஒரு மாளிகையையும் ஏற்பாடு செய்தான். முனிவரும் அறுசுவை உணவை அருந்தி, ஆடம்பரமான துணிகளை அணிந்து மாளிகை வாசத்தைக் கழித்தார். உடனே மற்றவர்களுக்குப் பொறாமை உண்டானது. அரசனைப் பார்த்து, 'எவ்வாறு ஒரு துறவி இவ்வாறு ஆடம்பர வாழ்க்கை வாழலாம்?' என்று கேட்டனர்.

உடனே அரசன் அடுத்த நாளே தனது ஆன்மிக சந்தேகங்கள் தீர்ந்தன என்று கூறி ஞானியைக் காட்டுக்கு அனுப்பி வைத்தான். அப்போதும் அதே மன உணர்வுடன் ஞானி தனது துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார். வசதி, கஷ்டம் என்பது அவரவரின் மனோ பாவத்தைப் பொறுத்ததுதான். காடும், நாடும் ஒன்று என்று கருதிச் செயல்படும் மனோபாவம்தான் கவனிக்க வேண்டிய ஒன்று.

கிரேக்க நாட்டைச் சார்ந்த ஹெலனை மோகத்தின் காரணமாக பேரிஸ் என்ற இளவரசன் வாழ்க்கைத் தணையாகத் தேர்ந்தெடுக்கிறாான்.

அவனுக்கு அழகும், அறிவும் உடைய ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு மாறாக நடந்த இளவரசன் பேரிசின் செயல், நாட்டுக்கு பெரிய அழிவையே ஏற்படுத்தியது. அதேசமயம், ஹெர்குலிஸ் என்ற வீரனின் முன் இரண்டு தேவதைகள் தோன்றினர். அத்தேவதைகளில் ஒன்று, உழைப்பைக் கொண்டு உயரும் பாதையைக் காட்டியது. மற்றொன்று, உழைப்பே இல்லாமல் வாழும் வழியை காண்பித்தது. ஆனால் ஹெர்குலிஸ் உழைத்து முன்னேறும் பாதையை தேர்வு செய்ததாக அறிகிறோம்.

அந்தோணி கிரெய்லிங் என்பவர் தனது 'சாய்ஸ் ஆப் ஹெர்குலிஸ்' என்னும் நூலில், உழைப்பு, சுகமான வாழ்க்கை ஆகிய இரண்டு அம்சங்களும் இணைந்த வாழ்க்கைதான் இயல்பான ஒன்று என்று குறிப்பிடுகிறார். துன்பத்தையும் நடுநிலையுடன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறுகிறார்.

உழைப்பது, பொருளீட்டுவது, ஓய்வெடுப்பது, விரும்பிய உணவை உண்பது, கலை உணர்வுடன் செயல்படுவது ஆகிய அனைத்துமே வாழ்க்கைக்கோ, நேர்மைக்கோ புறம்பானவை கிடையாது. ஆனால் நமது சுதந்திரம் பிறரைப் பாதிக்கக் கூடாது.

அனைவரும் ஒருவரையொருவர் ஏமாற்ற முயற்சிக்காமல் நியாயமாக நடந்து கொண்டால் நேர்மை என்பது அனைவரின் இயல்பாக மாறிவிடும்.

எந்த ஒரு குணத்தையும் தனித்துப் பிரித்து எடுத்து மனதில் கொண்டு செயல்படாமல் ஒட்டுமொத்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திச் செயல்பட பழக வேண்டும்.

அர்ச்சுணனுக்கு ஏற்பட்ட சந்தேகமும் இதைப் போன்றதுதான். ஆனால் கிருஷ்ண பகவானின் கீத உபதேசம் அவனுக்குத் தெளிவை ஏற்படுத்தியவுடன் தனது கடமையை உறுதியோடு மேற்கொண்டான்.

இயேசுபிரான், நபிகள் நாயகம், குரு நானக் போன்ற எண்ணற்ற இறைத் தூதர்கள் அறிவுறுத்திய, வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு இளைஞர்கள் இசைவோடு வாழப் பழக வேண்டும்.
ப. சுரேஷ்குமார்.

Monday, September 5, 2011

மன்னிப்பு மகத்துவமானது!

வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட்.

இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம்.

2003-ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போதுதான் அந்தத் துயரம் நடந்தது.

ஒரு நாள் கேய் தனது சகோதரியுடன் உற்சாகமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தபோது மூன்று இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவளுடைய முதுகெலும்பை உடைத்தன. உற்சாகப் பறவைக்கு வீல் சேர் வாழ்க்கையானது.

நீதிமன்றத்தில் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான் இருபத்து ஒன்பது வயதான ஆண்டனி வாரன். நீதிமன்றம் அவனைக் குற்றவாளி என தீர்ப்பிட்டது.

சிறுமி கேய் அவனருகில் சென்றாள். திடீரென தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். பார்த்தவர்களெல்லாம் கலங்கினார்கள். பின் சிறுமி அவனிடம் சொன்னாள், 'நீங்கள் செய்தது தவறு. ஆனாலும் உங்களை நான் மன்னிக்கிறேன்.'

ஐந்து வயதுச் சிறுமியின் அச்செயல் அந்த நீதிமன்றத்தையே நிலைகுலைய வைத்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் நெகிழ்ந்தார்கள். அதுவரை சுட்டவன் மீது கொடும் பகையுடன் இருந்த அவளுடைய தாயும் உடனடியாக அந்த நபரை மன்னித்தார்!

இந்த நிகழ்வு அமெரிக்காவின் அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி பலரையும் தொட்டது.

மன்னிப்பு எனும் வார்த்தை மனிதகுலத்துக்கே உரிய மகத்துவமானது. மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய இந்தச் செயலைச் செய்வதில்தான் இன்று பலருக்கும் உலக மகா தயக்கம். அதனால்தான் நமது வாழ்க்கை சண்டை, அடிதடி, வெறுப்பு, கோபம், நோய்கள் என துயரத்தின் தெருக்களில் நொண்டியடிக்கிறது.

ஒருவர் உங்களைப் பற்றி ஏதோ தவறாகச் சொல்லி விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் மீது நீங்கள் கோபம் கொள்ளும் போது உங்களுடைய மனதில் ஒரு கல்லை வைக்கிறீர்கள். அது கனக்கிறது. அந்தக் கோபத்தை மீண்டும் மீண்டும் நினைக்க நினைக்க ஒவ்வொரு கல்லாய் அடுக்குகிறீர்கள். பாரம் கூடுகிறது, உடல் நிலை பாதிக்கிறது. ரத்த அழுத்தம் எகிறுகிறது. எல்லை மீறினால் மாரடைப்பே வந்து விடுகிறது.

ஆனால் இந்த நிகழ்வின் துவக்கத்திலேயே நீங்கள் அந்த நபரை மன்னித்துவிட்டால் அத்துடன் சிக்கல்கள் எல்லாம் முடிந்து விடும்.

மன்னிக்கத் தெரிந்த மனிதர்கள் ஈகோ எனும் எல்லைக்கு வெளியே நின்று வாழ்க்கையை அதன் அழகியலில் லயிப்பவர்கள். மனிதத்தின் புனிதமான பாதைகளில் பயணிக்கும் பாதங்கள் அவர்களுடையவை.

மன்னிப்பது கோழைகளின் செயல் என பலரும் நினைக்கிறார்கள். 'எதிரி நாட்டு மன்னனைப் போரிட்டு அழிக்கும் பரம்பரை நாம்' என மீசை முறுக்குகிறார்கள். உண்மையில் மன்னிப்பது தான் போரை விட வீரமானது. போர் உடல்களைத்தான் வெற்றி கொள்ளும், மன்னிப்பு மனதையே வெற்றி கொள்ளும். இதைத்தான் மகாத்மா சொன்னார், 'மன்னிப்பு பலவான்களின் செயல், பலவீனர்களால் மன்னிக்க முடியாது.'

நீங்கள் ஒரு நபரைப் பார்த்துக் கத்தியால் குத்தினால் அவருக்குக் காயம் ஏற்படும். ஆனால் ஒரு நபர் மீது கோபமாய் இருக்கிறீர்களென்றால் அவருக்கு எதுவும் நேராது. மாறாக அந்தக் கோபம் உங்களுக்குத்தான் கெடுதல் உண்டாக்கும். நீங்கள் யார் மீது கோபமாய் இருக்கிறீர்களோ அவர் இதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே மன்னிப்பு என்பது முதலில் உங்களுக்கு நீங்கள் செய்யும் நல்ல செயல் என்பதை உணருங்கள்.

பல வேளைகளில் தவறிழைக்கும் நபர்கள் தவறை உணர்ந்து தட்டுத் தடுமாறி மன்னிப்புக் கேட்பதுண்டு. அப்படிப்பட்டவர்களை நிபந்தனையற்று மன்னியுங்கள். 'சே... இதுல மன்னிப்பு கேக்க என்ன இருக்கு' என்பது போன்ற வார்த்தைகள் நட்பையும், உறவையும் பலமடங்கு இறுக்கமாக்கும்.

சிலர் மன்னிப்புக் கேட்க தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுடன் பழகும்போது எந்த வித்தியாசமும் இல்லாமல் பழகுங்கள். அவர்களை மனதார மன்னித்துவிட்டதைச் செயல்களில் காட்டுங்கள். மன்னிப்புக் கேட்கும் முன்னாலேயே மன்னிப்பது உயர்ந்த நிலை!

இன்றைய மனித உறவின் பலவீனங்கள் பலவேளைகளில் திடுக்கிட வைக்கின்றன. பெற்றோரை மன்னிக்க மறுக்கும் பிள்ளைகள், பிள்ளைகள் மீது வெறுப்பு வளர்க்கும் பெற்றோர், அரிவாளுடன் அலையும் சகோதரர்கள், வன்மத்துடன் திரியும் தம்பதியர்!

இவை எல்லாவற்றுக்குமான சர்வ ரோக நிவாரணி மன்னிப்பு என்பதை உணர்கிறீர்களா?

தவறே செய்யாத மனிதர்கள் இருந்தால், அவர்கள் மன்னிப்பு வழங்கத் தேவையில்லை. நாம் தவறும் இயல்புடையவர்கள் எனும் உணர்வு நமக்கு இருந்தால் மன்னிப்பு வழங்க மறுப்பதில் அர்த்தமில்லை!

மன்னிப்புக் கேட்கும் போதும் அடுத்தவரைக் குற்றம் சாட்டும் மனநிலையுடனோ, பழி போடும் மனநிலையுடனோ, ரொம்பவே தற்காப்பு மனநிலையுடனோ பேசாதீர்கள். 'செய்தது தவறு... வருந்துகிறேன்...' எனும் நேர்மையுடன் பேசுங்கள். உடனடியாக மன்னிப்புக் கிடைக்கவில்லையேல் பதட்டப்படாதீர்கள். சில ஈகோ பார்ட்டிகள் மன்னிப்பு வழங்க நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பதை மனதில் இருத்துங்கள்.

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது கதிகலங்க வைக்கிறது. 'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. `ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

விடை தெரிய வேண்டுமெனில் தினசரியைப் புரட்டினாலே போதும்!

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.

உயிரில் உலவும் உள்ளன்பு
மலர்ந்து வருதல் மன்னிப்பு!

சேவியர்

Saturday, September 3, 2011

இன்றும் ஒரு தகவல்

உளவு நிறுவனங்கள்
இந்தியாவின் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக 2 நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, இன்டெலிஜென்ஸ் பீரோ. சுருக்கமாக ஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று 'ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்'. இதனை சுருக்கமாக 'ரா' என்று அழைக்கிறார்கள்.

உல் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு மூலம் கண்டுபிடித்து அரசுக்கு தகவல் தரும் வேலையை செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகிலேயே மிகப்பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்பு படை பிரிவுகளுக்கு தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.

அடுத்த உளவு அமைப்பான ரா, 1968 -ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு பணியை சமாளிப்பதே இதன் வேலையாக இருக்கிறது. உலக நாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு அமைப்புகளுமே உதவின. பாகிஸ்தானில் இருந்து நேரடியாக தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க முடியாது என்பதால் பாதுகாப்பு குறைவாக உள்ள நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளை அனுப்பி பயிற்சி அளித்து வைக்கிறது. என்பதை உலகுக்கு முதலில் அறிவித்ததும் 'ரா'தான்.

நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999 -ம் ஆண்டு கடத்தப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த 'ரா' அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளில் பாகிஸ்தானில் ஆதிக்கம் பெரும் அளவு குறைந்ததற்கு 'ரா' வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.

இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள். பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும், என்கிறது அரசாங்கம். உண்மைதானே. 

Thursday, September 1, 2011

கவிதைச்சரம்

விடாமல் விழும் அருவியை
ஆச்சர்யமாக பார்க்கிறாள்
ஒருநாள் விட்டு ஒருநாள்
குழாயில் தண்ணீர் வரும்
நகரத்திலிருந்து வந்த
குடும்பத் தலைவி.
குளித்துவிட்டுத்
திரும்பும்போது
குழாயை மூடாமல்
கிளம்புவதைப்போல்
தோன்றுகிறது அவளுக்கு.
ஆளே இல்லாதபோதும்
கொட்டிகொண்டிருக்கும்
நீரின் ஓசை அவளைப்
பைத்தியமாக அடிக்கிறது!

முகுந்த் நாகராஜன் 

**********************************

ட்டமாய் ஓடிக்கொண்டிருந்த
முயலுக்கு
ஆமையின் வேகத்தை நினைத்தவுடன்
பொத்துக்கொண்டது சிரிப்பு

பக்தியை பகிர்ந்துகொள்ள
பக்கத்தில் நண்பர்களும் இல்லை

தனிமை துரத்த முயல் ஓடுகிறது
ஆமையை நோக்கி

சிநேகத்தைப் பாடி நடந்தன
இரண்டும்

ஆமை கழற்றிக் கொடுத்த ஓட்டை
சுமந்து பார்த்த முயலுக்கு
பொத்துக்கொண்டது அழுகை

பண்பட்ட ஆமையின்
பாதச் சுவடுகளைப்
பணிந்து தொழுதபடி
பின் தொடர்கிறது முயல்!

இளையநிலா ஜான்சுந்தர் 

**********************************

ழையில் நனைந்தபடி
செல்லும் ஆட்டோக்கள்
அடம்பிடித்து குளிக்குமொரு
குழந்தையின் சத்தங்களை
எழுப்புகின்றன!

பிரதீப்குமார்

**********************************

வீதியில் வரையப்பட்ட
கடவுளின் மீது
வீசிப் போகின்றனர்
நாணயங்களை
ஏதேனும் ஒரு நாணயம்
யதார்த்தமாய்
விழுந்துவிடுகிறது
கடவுளின் நெற்றியிலும்
விழுந்த நாணயங்களை
ஒவ்வொன்றாய்
பொருக்கி எடுத்து
ஓவியன் நகர்ந்துவிட
இப்போது
எடுக்க யாருமின்றிக்
கிடக்கிறார்
அந்த எல்லாம் வல்ல இறைவன்!

வே.விநாயகமூர்த்தி 

**********************************

வேலை தர
முதன்முதலில்
முதலாளி கோரியது
என் சிறகுகளில் இருந்து
சில இறகுகளை.

வேலைக்குச் சேர்ந்த
சில நாட்களில்
என்னைப் பாராட்டி
இரண்டு இறகுகளை
வாங்கிக்கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு
சில சூழ்நிலைகளை
முன்வைத்து
மூன்று சிறகுகளைப்
பெற்றுக்கொண்டார்.

சிறகுகளற்ற நான்
உயரத்தில் பறக்கும்
முதலாளியைப் பார்க்கிறேன்
என் இரகோன்றால்
தன் காது குடைந்தபடி அவர்
இரகேதும் முளைத்துள்ளதா
எனக் குனிந்து
என்னைப் பார்க்கிறார்!

வீ.விஷ்ணுகுமார்