Wednesday, August 31, 2011

இன்று ஒரு தகவல் - கற்பனை பாத்திரங்கள்

உலகெங்கும் சில கற்பனை பாத்திரங்கள் அந்தந்த நாட்டில் உலா வருகின்றன. இது கற்பனை என்று தெரிந்தும் கூட இவற்றுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.எரிந்து சாம்பலான பின்பும் அந்த சாம்பலில் இருந்து உயிர் பெற்று வரும் பீனிக்ஸ் பறவை ஒரு கற்பனை பாத்திரம் தான். இந்த பறவை அன்னம் பாதி, கழுகு பாதி சேர்ந்து செய்த கலவை. தனது வாழ்வின் இறுதியில் கிழப்பருவம் ஏற்படும் போது தானாகவே எரிந்து சாம்பலாகி விடும். பிறகு எறிந்த சாம்பலில் இருந்து உயிர் பெரும். இது கிரேக்கர்களின் நம்பிக்கை. இதன் கண்ணீருக்கு எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றும் வலிமையுண்டாம்.நம்மூர் கருப்பு போல் சீனர்களின் காவல் தெய்வம் டிராகன். பாம்பு உடலில் கால்களும் இறக்கைகளும் பொருந்திய வித்தியாசமான டிராகன். நமது பிள்ளையார் போன்ற வித்தியாசமான அதே நேரத்தில் குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் உருவம் டிராகன். டிராகன்கள் நல்லது மட்டுமே செய்யும். ஐரோப்பாவிலும் டிராகன்கள் உள்ளன. அவை மோசமான வில்லன்கள்.'ஸ்பிங்க்ஸ்' என்பது எகிப்தின் கற்பனை வடிவம். சிங்க உடலும் மனிதத்தலையும் கொண்டது. எப்போதும் புதிரோடு காத்துக் கொண்டே இருக்கும். புதிருக்கு சரியான விடையை சொன்னால் புதையல் இருக்கும் பாதைக்கு வழிகாட்டும். தவறாக சொன்னால் மாத்திரை விழுங்குவதை போல் சொன்ன ஆளை வாயில் போட்டு விழுங்கி விடும்.

இந்தியாவில் கூட ஸ்பிங்க்ஸ் தோற்றத்தில் ஒரு படைப்பு உள்ளது. அதன் பெயர் யாளி.


அந்த காலத்தில் கடலில் பயணம் செய்யும் ஆண்கள் திடீரென்று காணமல் போவார்கள். பெரும்பாலும் அது தவறுதலாக கடலில் விழுந்து இறந்ததாக தான் இருக்கும். ஆனால் அதற்கும் ஒரு கற்பனையை யோசித்து உருவம் கொடுத்து விட்டார்கள். அது கடல் கன்னி. ஓர் அழகான ராட்சசி. கப்பலில் வரும் அழகான ஆண்களுக்காக காத்திருக்குமாம். அப்படி யாராவது ஒருவரை பார்த்து விட்டால் பாட்டுப்பாடி, வசியப்படுத்தி கடலுக்கு அடியில் இருக்கும் தங்கள் நாட்டுக்கு கொண்டு பொய் விடுமாம். இந்த கடல் கன்னியின் பாட்டு சம்பந்தப்பட்ட அழகான ஆணைத்தவிர உடன் இருக்கும் மற்றவர்களுக்கு கேட்காதாம்.


கிரேக்கம் மற்றும் லத்தீன் புராணங்களில் வரும் ஒரு கற்பனை வடிவம் யூனிகார்ன். இது ஒரு வெள்ளை குதிரை. நீண்ட பிடரி மயிரும் நெற்றியில் கூர்மையான ஒற்றைக் கொம்பும் இருக்கும். யூனிகார்ன் தனது ஒற்றைக்கொம்பில் எந்த சாதனையையும் சுலபமாக செய்து விடுமாம். இது ஒரு தனிமை விரும்பி. அதனால் அது எப்போதும் மனித மற்றும் விலங்குகள் சஞ்சாரமற்ற தனிமையான பகுதியிலேயே இருக்குமாம்.       

Tuesday, August 30, 2011

'பிங்க்' நிறத்தின் தாக்கம்

மிகவும் முரட்டுத்தனமாக முரண்டு பிடிப்பவர்களை அகிம்சைவாதிகளாக மாற்ற வேண்டுமா? அவர்களை அடித்து உதைத்து, சித்ரவதை செய்து மாற்ற முடியுமா? அல்லது தியானம் பயன்படுமா? என்று கேட்டால்... இதில் எதுவும் பயன்படாது? அவர் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ். வாஷிங்டன் ஜெயில்களில் பல அடாவடி பார்டிகள் அறையில் பிங்க் பூசிய பொது அவர்கள் சில மாதங்களிலேயே அகிம்சைவாதிகளாக மாறி விட்டார்கள்.

" பொதுவாக பிங்க் நிறம் மென்மை மற்றும் பெண்மையை குறிக்கும். இயல்பாகவே பெரும்பாலான ஆண்களுக்கு பிங்க் பிடிப்பதில்லை. கோபத்தில் கொந்தளிக்கும் போது ஒருவரால் முழுதாக கோபத்தைக் காட்ட முடியாது. ஏனெனில் இதயதசைகள் வேகமாக செயல்படாது. பிங்க் நிறம் ஒருவருடைய ஆற்றலை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும். இதனால் கோபம் குறைந்து சாந்தமாக மாறி விடுவார்கள். சாதாரண நிலையில் ஒருவர் இருந்தால் பிங்க் நிறம் லேசான சோம்பலை ஏற்படுத்தும். நிறக்குருடு பாதிப்பு கொண்டவர்களும் பிங்க் நிறத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது" என்கிறார் ஸ்காஸ்.

ஹவாய் பல்கலைக்கழகத்தில் வெளியில் இருந்து விளையாட வரும் விளையாட்டு வீரர்களின் தங்கும் அறைகள் பிங்க் அல்லாத வேறு நிறத்தில் இருக்க வேண்டும் என்ற விதியே இருக்கிறது. காரணம் எதிரணி பிளேயர்களின் அறைகள் பிங்க் நிறத்தில் இருக்க அவர்கள் சோம்பேறிகளாகி பல ஆண்டுகள் தொற்றுக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான பாரிஸ் ஹில்டன் ஒரு பிங்க் பைத்தியம். ஒருகோடி ரூபாய் பென்ட்லி காரை விலைக்கு வாங்கி அதை அப்படியே பிங்க் நிறத்துக்கு மாற்றிவிட்டார். எந்த விழாவாக இருந்தாலும் பிங்க் நிறத்தில்தான் ஆடை அணிந்து வருவார். 'நான் அமெரிக்க அதிபரானால், வெள்ளை மாளிகையை பிங்க் மாளிகையாக மாற்றி விடுவேன்' என்று தைரியமாக சொல்லும் அளவுக்கு 'பிங்க்' பைத்தியமாக ஹில்டன் இருந்தார்.                 

Monday, August 29, 2011

குறை சொல்தல் வேண்டாமே!

முழுக்க முழுக்க தங்கத்தால் உருவாக்கப்பட்ட தங்க தேசத்தில் வாழ நேர்ந்தால் கூட, 'சே... எங்கே பாத்தாலும் மஞ்சளா இருக்கே' என குறை சொல்லும் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் லார்ட் ஜெஃப்ரி. குறை சொல்தல் சர்வதேசக் கெட்ட குணம்.

சிலர் மனிதர்களைக் குறிவைத்து குறை சொல்வார்கள். சிலர் மனிதர்கள் என்றில்லை, விலங்குகள், தெய்வங்கள், அஃறிணைப் பொருட்கள் என எல்லாவற்றையும் குறை சொல்வார்கள். இது இன்று நேற்று தோன்றிய சமாச்சாரமல்ல. ஆதி மனிதன் ஆதாமே பழத்தைச் சாப்பிட்டுவிட்டு `நீர் தந்த இந்த ஏவாள்தான் பழத்தைக் கொடுத்து சாப்பிடச் சொன்னாள்' என்றுதானே கடவுளிடம் சொன்னார்!

நம்முடைய ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். காலையில் எழுந்து அலுவலகத்துக்குப் புறப்படும் அந்த சின்ன இடைவெளியிலேயே குற்றம் சொல்ல ஆரம்பிக்கிறோம். பின் அலுவலகம், போகும் வழி, வரும் வழி என எல்லா இடங்களிலும் அந்த குறை சொல்தல் தொடர்கதையாகிறது.

'குறை சொல்வதால் மனதுக்கு ஓர் இனம்புரியாத திருப்தி கிடைக்கிறது. அதனால்தான் பலரும் குறை சொல்கிறார்கள்' என்கிறது உளவியல். குறை சொல்லுதல் மனதுக்கு தற்காலிகமான ஓர் இளைப்பாறுதலைத் தருகிறது. அதேவேளையில் பலரைக் காயப்படுத்துகிறது.

எதையாவது அடைய வேண்டுமென முயல்கிறோம். தொடர்ந்து அதை நோக்கிப் பயணிக்கிறோம். ஆனால் முடியவில்லை. நமது இயலாமையை ஒப்புக்கொள்ள நமது 'ஈகோ' இடம் கொடுக்காது. சட்டென பழியைத் தூக்கி இன்னொருத்தன் தலையிலே போட்டுவிட்டால் வேலை முடிந்தது!

அப்படிச் சொல்வதால் உண்மையான தோல்வியின் காரணங்கள் பிடிபடுவதே இல்லை. தோல்விக்கான காரணமே தெரியாவிடில் வெற்றிக்கான பாதையை எப்படித் தேர்வு செய்வது?

குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு! அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது. ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்த குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.

பிடிக்காதவர்கள் மீதுதான் குறையும், குற்றமும், விமர்சனமும் போர்த்தப்படுகிறது. 'உன் மேல எனக்கு அன்பு ரொம்ப ஜாஸ்தி, அதனால எப்போதும் குறை சொல்வேன்' என்று யாரும் சொல்வதில்லை. அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ, புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள்தான் பெரும்பாலும் குறைகளாய் முளை விடும். தன்னிடம் இல்லாத ஒன்றின் பள்ளத்தாக்கை நிரப்ப முயலும் மனதின் விகார முயற்சிகளில் இதுவும் ஒன்று.

குறை சொல்தல் பயத்தின் வேர்களிலிருந்தும் முளைப்பதுண்டு. குறிப்பாக அலுவலக சூழல்களில் தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்களுடைய புரமோஷன், வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் அடுத்தவர்களை அழிக்கும் விமர்சனங்கள் எழுவதுண்டு.

நம்முடைய பொறுப்புகளை விட்டுத் தட்டிக் கழிக்க விரும்பும்போதும் முன்னே வருவது இந்தக் குறை சொல்தலும், சாக்குப் போக்கும்தான். 'வயிறு வலிக்குது... நான் ஸ்கூலுக்குப் போகல' என சிணுங்கும் சின்ன வயதுப் பையன் ஞாபகத்துக்கு வருகிறானா?

'ஈகோ' எனும் ஆலமரத்தின் கிளைகள் இந்தக் குறை எனும் விழுதுகள். 'ஈகோ' இருக்கும் மனிதர்கள் பிறரிடமுள்ள குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்துத் திரிவார்கள். இல்லாததை இருப்பது போலச் ஜோடித்து மகிழ்வார்கள். ஈகோவை விலக்க வேண்டுமென முடிவெடுத்தால் இந்த கெட்ட பழக்கம் உங்களை விட்டுப் போய்விடும்.

பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவும் சிலர் குற்றம் குறைகளை அள்ளி விடுவதுண்டு. பிறர் தன்னைக் கவனிக்க வேண்டும் எனும் ஆர்வம் அவர்களுக்கு. உளவியல் இதை, தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு என்கிறது.

தன்னை புத்திசாலியாய்க் காட்டிக் கொள்ளவும் சிலர் குறை சொல்வதைக் கையில் எடுப்பதுண்டு. அடுத்தவர்களையோ, அவர்களுடைய செயல்களையோ விமர்சித்து, குறை சொல்லும்போது தன் தலைக்கு மேல் ஒரு ஒளி வட்டம் உருவாவது போல் கர்வம் அவர்களுக்குள் நுழையும்.

இப்படி குறை சொல்வது நமது வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டிருக்கிறது. ஒரு டிராபிக் சிக்னலில் கூட குறை சொல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. ஹோட்டலில் வெயிட்டர் பத்து நிமிடங்கள் நமது டேபிளுக்கு வரவில்லையேல் குறையும், குற்றமும் சொல்ல வாய் துறுதுறுக்கிறது.

வாய்ப்பு வந்து வாசல் கதவைத் தட்டும்போது கூட 'சத்தமா இருக்கே' என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஆஸ்கார் ஒயில்டு.

குறை சொல்வது நமது வளர்ச்சியை நாமே குழி தோண்டிப் புதைக்கும் செயல். குறை சொல்வதை விட்டு வெளியே வரவேண்டுமெனில் முதலில் நாம் குறை சொல்லும் பார்ட்டிகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கேளுங்கள் நீங்கள் குறை சொல்லும் பார்ட்டியா என. உண்மையான பதில் கிடைக்கும். இல்லையேல் நெருங்கிய நண்பர்களிடம் கேளுங்கள்.

குறை சொல்வது உங்களுக்கு எந்த நன்மையையும் தந்து விடப் போவதில்லை. இந்தப் பழக்கத்தால் என்ன நன்மை ஏற்பட்டது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும் உங்களுடைய நேரமும், உங்கள் நண்பர்களுடைய நேரமும் வெட்டியாய் செலவானதுதானே மிச்சம்?

உங்களை யாராவது குறை சொன்னாலோ, நேர்மையற்று விமர்சித்தாலோ நீங்கள் அதைக் கைதட்டி ரசிப்பீர்களா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். `இல்லை' என்பதுதானே உங்கள் பதில்?

அதே மனநிலைதான் உங்களால் கிண்டலடிக்கப்படும் நபருக்கும் இருக்கும் என்பதை உணருங்கள்.

பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் குறை சொல்தல் விலகிவிடும். பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டுமெனில் முதலில் நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே முதலில் உங்களை உங்கள் இயல்புகளோடே ஏற்றுக் கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொண்டிருங்கள்.

குறை சொல்தல் உறவுகள் இடையேயான பிணைப்பை உடைத்து விடும். பல விவாகரத்துகளுக்கே இந்தக் குறை சொல்தல் காரணமாகி விடுகிறது. அன்பு உருவாகும் இடத்தில் குறை சொல்வது இருப்பதில்லை. ஆத்மார்த்தமான அன்பை உள்ளத்தில் தேக்குங்கள், அடுத்தவர்களைக் குறை சொல்லும் பழக்கம் ஓடியே போய்விடும்.

குறையைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பவர்கள் அந்த குறைகளைப் போக்கும் வழியைப் பற்றிச் சிந்திக்க மறந்து போய் விடுகிறார்கள். 'இருட்டைப் பற்றியே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தும் வழியைப் பாருங்கள்' என்கிறார் கன்ஃபூஷியஸ்.

இருப்பதை வைத்து மகிழ்வாக வாழும் மனநிலை உடையவர்கள் பெரும்பாலும் குறை சொல்வதில்லை. அவர்கள் மகிழ்வாக வாழும் வழியை யோசிப்பார்கள். எதைத் தேடுகிறோமோ அதுமட்டுமே நமக்குக் கிடைக்கும்!

கடின உழைப்பாளிகள் குறை சொல்வதில் தங்கள் நேரத்தை வீணடிப்பதில்லை. சோம்பேறிகள், கடின உழைப்பைத் தவிர்ப்பதற்காக குறை சொல்லும் பாணியைக் கையாள்கிறார்கள். குறை சொல்வது எதிர்மறை சக்தி. அதன் விளைவுகள் எதிர் மறையாகவே இருக்கும். தான் சரி என நிரூபிக்க மற்றவை எல்லாம் தவறு என மதிப்பிடும் மனநிலை மனதின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எதிரி.

குறை சொல்வதிலிருந்து வெளியே வர விரும்பினால் பாராட்டப் பழகுங்கள். ஒரு நாளைக்கு ஐந்து பேரையாவது பாராட்டுவேன் என முடிவெடுங்கள். ஒரு நபரிடமிருக்கும் குறைகளைத் தாண்டி நிறைகளைக் கண்டு பிடிப்பீர்கள்.

அதே போல, குறை சொல்லும் நண்பர் கூட்டத்திலிருந்து வெளியே வாருங்கள். குறைந்தபட்சம் குறை சொல்லும் பேச்சை ஆதரிக்காமல் இருங்கள். குறை சொல்வது உங்களுக்குப் பிடிக்காது என்பது உங்கள் நண்பர்களுக்குப் புரிந்து விடும். அது உங்களுக்கு மரியாதையையும் பெற்றுத் தரும்.

எதையும் மாற்ற முடியாது என்று தெரிந்தால் கூட 'என்னய்யா வெயில் மண்டையைப் பொளக்குது, என்னய்யா மழை படுத்துது, இதென்ன ஒரே தூசு மண்டலமா இருக்கு' என எடுத்ததுக்கெல்லாம் சலித்துக் கொள்ளும் மனிதர்கள் வாழ்வின் ஆனந்த தருணங்களை இழந்து விடுகிறார்கள்.

இன்றிலிருந்து ஒரு மாதம் குறையே சொல்ல மாட்டேன், நல்ல விஷயங்களைப் பாராட்டுவேன் என முடிவெடுத்துப் பாருங்கள். இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் உங்களுடைய அடிப்படை இயல்பே மாறிவிடும். ஒரு வேளை தோற்று விட்டால், அந்த நாளிலிருந்து அடுத்த ஒரு மாதம் முயற்சி பண்ணுங்கள்!

குற்றம் சொல்வதை நீங்கள் நிறுத்தும் வினாடியில் உலகம் உங்கள் கண்ணுக்கு முன்பாக அழகாகத் தெரியும். உங்கள் உறவுகள் அழகாகத் தெரிவார்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை ஆனந்தமாக மாறும். செடியில் இருக்கும் முட்களைத் தாண்டி, முட்களிடையே இருக்கும் ரோஜா கண்களில் தெரியும். வாழ்க்கை ஆனந்தமாய் மாறும்.

குறைகள் சொல்தல் இழிவாகும்
உயர்வும் இதனால் அழிவாகும்!

சேவியர்

Friday, August 26, 2011

ஹாலிவுட் டிரெலர்

செக்சியானா இளம் பெண். அனைத்துக் காட்சிகளிலும் ஒன்று உடலுடன் ஒட்டிய உடை அல்லது உடைகள் மறைக்காத உடலுடன் நடமாட்டம். கையில் துப்பாக்கி. கண்களில் போதை. கால்களில் பாய்ச்சல். தாவித் தாவி சண்டை. குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை காய்கறி வெட்டுவது போல் ஆண்களைத் தேடித் தேடி கொலை. இதைக் கண்டு பிடிக்க வரும் துப்பறியும் நிபுணருடன் ஓர் ரொமான்ஸ். இந்தக் கொலைகளுக்கு பின்னால் ஒரு காரணம்...

பார்த்துப் பார்த்துப் பழகிய இந்தக் கதையை எப்போதும் பார்க்கச் சலிக்காதவர்களாக நீங்கள் இருந்தால், வெளிவரவிருக்கும் 'கொலம்பியானா' ஹாலிவுட் திரைப்படம் உங்களுக்கானதுதான். 'ஐயைய... இது பி கிரேடு படம், சி கிரேடு படம்...' என்றெல்லாம் கிரேடு பிரிக்கும் ஆசாமியாக நீங்கள் இருந்தால், இந்தப் படம் நிச்சயம் பிளேடு போலத்தான் உங்களுக்குத் தெரியும்.

ஆனால், கதாநாயகியாக நடித்திருப்பவர் ஸோ சல்டானா என்று சொன்னால், ஒருவேளை ஏ கிரேடு ஆசாமிகளும் இப்படத்தை பார்க்கக் கூடும். 'அவதார்' நாயகியல்லவா இவர்?! 'ஸ்டார் டிரக்', 'பைரேட்ஸ் ஆஃப் த ப்ளாக் ப்யர்ல்' போன்ற படங்களில் ஸோ சல்டானாவின் நடிப்பை - அழகை ரசித்தக் கண்கள் நிச்சயம், 'கொலம்பியானா'வை தேடி வரும்.

இந்த நம்பிக்கை இருப்பதால்தான் ஒரு மணி நேரமும், 45  நிமிடங்களும் ஓடக் கூடிய இந்தப் படத்தை தைரியமாக சோனி பிக்சர்ஸ் சார்பில் த்ரீ ஸ்டார் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. கூடுதல் அட்ராக்ஷனுக்கு 'டிரான்ஸ் போர்டர் 3', 'தி ரெட் சைரன்' புகழ் ஆலிவர் மெகாடன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தவிர, புதிய வெர்ஷன் 'தி கரெத்தே கிட', 'டிரான்ஸ்போர்டர்' படங்களின் சீரிஸ்... அனைத்துக்கும் மேலாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த 'டேக்கன்' (இந்தப் படத்தின் கதை - திரைக்கதையை சுட்டு அல்லது ஜெராக்ஸ் எடுத்து இதுவரை 5 தமிழ்படங்கள் கடந்த 2  ஆண்டுகளில் வந்திருக்கின்றன!) படங்களின் திரைக்கதையாளரான ராபர்ட் மார்க் கேமன், இப்படத்துக்கு கதை - திரைக்கதை எழுதியிருக்கிறார். எனவே குறைந்தபட்ச உத்திரவாதம் 'கோலம்பியானவு'க்கு உண்டு.

என்றாலும் கதை, துவைத்துத் துவைத்து கந்தலாகிப் போன பழைய கஞ்சிதான். அப்பாவும், அம்மாவும் கொலை செய்யப்படுவதை 10  வயது சிறுமி பார்க்கிறாள். வளர்ந்து ஆளாகி, தன் பெற்றோரை கொன்றவர்களை அவள் எப்படி பளைவாங்குகிறாள் என்பதுதான் ஆன்லைன்.

இதைதான் பரபரக்கும் திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள். கையில் கத்தியுடன் ஓடி வரும் சிறுமியிலிருந்து படம் ஆரம்பமாகிறது. எப்படி அவள் சிகாகோ செல்கிறாள், அங்கிருக்கும் தன் மாமாவை எப்படி கண்டுபிடிக்கிறாள், தொழில்முறையில் கொலைகாரனாக இருக்கும் அவரிடம் எப்படி அந்தச் சிறுமி பயிற்சி பெறுகிறாள், வளர்ந்து ஆளாகி அவருக்கு அடியாளாக இருந்தபடியே தன் சபதத்தை எப்படி நிறைவேற்றுகிறாள் என்பதையெல்லாம் ஒன்று படத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது பாப்கார்னை கொறித்தபடியே ரசித்து உணர வேண்டும்.

சிறைச்சாலையில் இருப்பவனை எப்படி ஸோ சல்டானா தீர்த்துக் கட்டுகிறாள் என்பதும், ட்டைலேட்டில் நடைபெறும் டிஷ்யூம் டிஷ்யூமும் ஹைலைட் ஆகா இருக்கும் என்கிறார்கள்.

வாம்மா, ரிவால்வர் ரீட்டா !
கே.என்.சிவராமன்  

Thursday, August 25, 2011

சர்க்கரை நோயாளிகளே கண்களை கவனியுங்கள்...

உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. இது இன்னும் பன்மடங்கு அதிகரிக்கக்கூடும். இன்று ஒரு இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 65 வயது. ஆனால் சர்க்கரை நோய் இந்தியர்களை 30 முதல் 35 வயதிலேயே தாக்கத் தொடங்கி விடுகிறது.

சர்க்கரை நோய் மற்ற நாடுகளிலுள்ளவர்களைக் காட்டிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியர்களுக்கு வருகிறது. எனவே இந்நோய் இந்திய நாட்டிற்கே பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தக்கூடியதாகும்.

சர்க்கரை நோய் உடலில் அனைத்து உறுப்புகளை யும் பாதிக்கும். எனினும் இருதயம், சிறுநீரகம் மற்றும் கண்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த மூன்று உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு அந்த மனிதரின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். கண்ணில் சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்பு 'டயாபடிக் ரெட்டினோபதி' என்று அழைக்கப்படுகிறது.
 
சர்க்கரை நோய் கண்களை பாதிப்பது எப்படி?

உடலில் சர்க்கரையின் அளவு மிக அதிகமானால் கண்ணில் உள்ள ரத்த நாளங்களிலிருந்து நீர் விழித்திரையினுள் கசியும். அதனால் நாளடைவில் விழித்திரையில் வீக்கம் ஏற்பட்டு பார்வைக் குறைவு ஏற்படும். இதை ஆரம்பக் கட்டத்திலேயே சரி செய்யாவிடில் விழித்திரையில் தழும்பு ஏற்பட்டு நிரந்தர பார்வை இழப்பு தோன்றும். சிலருக்கு சர்க்கரை நோயின் விளைவாக கண்ணினுள் ரத்தக்கசிவு ஏற்பட்டு பார்வை பறிபோகும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று தெரியவந்தால் உடனடியாக கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருந்தால் கண்ணில் பாதிப்பு மிக விரைவாக ஏற்படும். சர்க்கரை நோயாளி ஒருவருக்கு சர்க்கரையின் அளவு நீண்டகாலமாக சீரான கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவருக்கும் பார்வை குறைபாடு ஏற்படக்கூடும் என்பது சர்க்கரை நோயின் விசித்திரமான அம்சமாகும்.

டயாபடிக் ரெட்டினோபதியின் அறிகுறிகள் என்ன?

இந்நோய் இருப்பவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான அறிகுறியும் தெரியாது. சிறிது காலம் சென்ற பிறகு பார்வைக்குறைவு ஏற்படும். பார்க்கும் பொருட்கள் எல்லாம் வளைந்தது போல் காணப்படும். சிகிச்சை செய்யாமல் போனால் நிரந்தரப் பார்வைக் குறைபாடு உருவாகக்கூடும்.

டயாபடிக் ரெட்டினோபதியால் கண்களில் ஏற்படும் பாதிப்பை எவ்வாறு கண்டறிய முடியும்?

சர்க்கரை நோய் ஒருவருக்கு உள்ளது என்று தெரிந்தவுடனே அவர், கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். விழித்திரையை ஆப்தல்மோஸ்கோப் (Ophthalmoscope) என்ற கருவியின் உதவியுடன் மிகத் துல்லியமாக பரிசோதனை செய்ய முடியும். விழித்திரையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை புகைப்படங்கள் (Fundus Photograph) மூலமும் பதிவு செய்ய இயலும்.

விழித்திரையில் ஏற்படும் நீர்க்கசிவையும், சோதனை மூலம் கண்டறியலாம். மேலும் விழித்திரையிலுள்ள சகல விதமான பாதிப்புகளையும் 'ஓசிடி' (Oct) என்ற கருவியின் மூலம் கண்டறியலாம். இது கண்ணில் செய்யக்கூடிய ஒருவித ஸ்கேன் ஆகும்.

டயாபடிக் ரெட்டினோபதியை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் பார்வை பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். விழித்திரையில் லேசர் உதவியுடன் நீர்க்கசிவை குறைக்க முடியும். தற்போது லேசர் தவிர புதிய மருந்துகளை கண்களுக்குள் நேரடியாகவே ஊசி மூலம் செலுத்தியும் இந்த நோயை குணப்படுத்த இயலும். பாதிப்பு அதிகமாக இருந்தால் அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும்.

டயாபடிக் ரெட்டினோபதி வராமல் எப்படி தவிர்க்கலாம்?
சர்க்கரை நோய் உள்ள அனைவரும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை தவறாது உட்கொள்ள வேண்டும். சர்க்கரை உள்ளது என்று கண்டறியப்பட்ட உடனே கண்பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.

இதை தவிர்த்து வருடத்திற்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து கண் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். சர்க்கரை நோய் என்பது கட்டுக்குள் இருக்கும் நோயே தவிர நிரந்தரமாக குணமாகாது. எனவே சர்க்கரை நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் (அவ்வப்போது) கண் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை செய்து வர வேண்டும்.

பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும் நோய்களில் மிகவும் கவனிக்கத் தகுந்தது "க்ளோக்கோமா''. இது கண்நீர் அழுத்த நோயாகும். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே மிகக் குறைவாகவே உள்ளது. அதனால் இந்த நோய் மிக மோசமான பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
 
க்ளோக்கோமா பாதிப்பு எப்படி ஏற்படுகிறது?

எல்லோருக்கும் கண்ணில் இயல்பாகவே அழுத்தம் (பிரஷர்) உண்டு. இந்த அழுத்தம் 6-21 மி.மி. இருக்க வேண்டும். கண்ணில் 'ஆக்வஸ்யூமர்' என்ற திரவம் உள்ளது. இது ஓரிடத்தில் உற்பத்தி ஆகி கண்ணினுள் பாய்ந்து பரவி, மற்றொரு பகுதி வழியாக வெளியேறும். இந்த 'ஆக்வஸ்யூமர்' திரவம்தான் கண் அழுத்தத்தை சமச்சீராக்குகிறது. இந்த திரவத்தின் உற்பத்தி அதிகமானாலோ, அது பாய்ந்து வெளியேறும் பகுதிகளில் அடைப்பு அல்லது பழுது ஏற்பட்டாலோ கண்ணில் அழுத்தம் அதிகமாகும். இதுவே க்ளோக்கோமா ஏற்படுவதற்கான காரணமாகும்.

கண்களில் அழுத்தம் அதிகமாகும்போது அது கண்ணிலுள்ள பார்வை நரம்பை பாதிக்கிறது. பார்வை நரம்பு பாதிப்பதானால் பக்க பார்வை(Side Vision) குறைபாடு ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் சிகிச்சை ஆரம்பித்தாலும் முழுமையாக இதனை சரி செய்ய முடியாது. இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் எந்தவித அறிகுறியையும் ஏற்படுத்தாது. நோய் முற்றிய பிறகே அவருக்கு பார்வைக்குறைபாடு தோன்றும்.
 
யாருக்கு, எத்தனை வயதில் இந்த நோய் தோன்றும்?

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கும் கண்களில் அடிபட்டு காயம் ஏற்பட்டவர்களுக்கும், 'ஸ்டெய்ராய்டு' வகை மருந்துகளை உட்கொள்பவர் களுக்கும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் பரம்பரையாகவும் வரும் தன்மை கொண்டது.

இதில் 'ஓபன் ஆங்கிள் க்ளோக்கோமா', 'குளோஸ்டு ஆங்கிள் க்ளோக்கோமா', 'செகண்ட்ரி க்ளோக்கோமா' என்று மூன்று வகை உண்டு.

முதல்வகை க்ளோக்கோமா, நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரலாம். இந்த பாதிப்பு கொண்டவருக்கு 'ஆக்வஸ்யூமர்' திரவம் கண்ணுள் பாய்ந்து வெளியேறும் பாதை திறந்தே காணப்படும். ஆனால் அது செயலிழந்து இருக்கும். இந்த நோய் மிக மெதுவாகவே அதன் பாதிப்பை உணர்த்தும்.

இரண்டாவது வகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணினுள் 'ஆக்வஸ்யூமர்' பாய்ந்து வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்பட்டிருக்கும். இது பெண்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. பெண்களின் குறுகிய கண் அமைப்பே இதற்கு காரணம். கண்ணீர் வெளியேறும் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் கண்ணில் அழுத்தம் மிகவேகமாக உயரும். எனவே இந்தவகை பாதிப்பு கொண்டவர்களுக்கு கண்ணில் வலி, தலைவலி, வாந்தி ஏற்படும். லேசர் செய்து அப்பாதையில் உள்ள அடைப்பை நீக்க வேண்டும். கண்ணில் அடிபட்டால் ஸ்டெய்ராய்டு வகை மருந்துகளை உட்கொண்டால் 'செகண்ட்ரி க்ளோக்கோமா' தோன்றலாம்.

க்ளோக்கோமா வகை நோய்களை வரும்முன் காப்பதே நல்லது. இந்த நோய் உள்ளவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் அறிகுறி எதுவும் தெரியாது. சிலருக்கு தலைவலி, இரவு நேரங்களில் பார்வைக்குறைபாடு ஏற்படும். ஆரம்பத்திலே கண்டுபிடித்து சிகிச்சை பெறுவதே ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

டாக்டர் அருள்மொழிவர்மன், M.S, D.O.,

Saturday, August 20, 2011

நேரம் தவறாமை உயர்வு தரும்!

கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் 'நேரம்'.

உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, 'டைம் செம பாஸ்டா ஓடிடுச்சு', 'நேரம் போகவே மாட்டேங்குது' என காலத்தைக் குறை சொல்கிறோம்.

ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்திற்கு எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள்? ஒன்பது மணிக்கு நடைபெறும் மீட்டிங்கிற்கு எத்தனை பேர் தாமதமின்றி வந்து சேர்கிறார்கள்? 'பத்து நிமிடம் லேட்டா போனா ஒண்ணும் ஆவாது' என்பதுதானே பலருடைய மனநிலை?

'மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்தது' என்கிறார் ஷேக்ஸ்பியர். நேரம் தவறாமையை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதற்கு இந்த ஒரு வரியே சாட்சி.

'பங்சுவாலிடி' என்பது ஏதோ அலுவலக வேலைக்கு மட்டுமானதல்ல. குடும்பத்திலும், சமூகத்திலும் தினம் தினம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயல் தான். சரியான நேரத்துக்கு ஒரு மாத்திரை சாப்பிடுவது கூட இதன் ஒரு பாகம்தான்.

நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு. நேரம் தவறாமல் இருக்கும் நபரை மற்றவர்கள் ரொம்பவே மதிப்பார்கள். தனது வாழ்க்கையை சரியாய் வாழத் தெரிந்தவரே நேரம் தவறாமையைக் கடைபிடிப்பார். அவர் நேர மேலாண்மையில் கில்லாடி என நிர்வாகம் அவரை கண்ணியத்துடன் கவனிக்கும்.

பிறரை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதன் முதல் அடையாளம் காலம் தவறாமை. ஒரு சந்திப்புக்காகவோ, வேலைக்காகவோ சரியான நேரத்தில் நீங்கள் ஆஜராகிறீர்களெனில் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவரையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பது அதன் வெளிப்படையான பொருள்.

உங்களுக்காக யாரும் காத்திருப்பதும் நல்லதல்ல, யாருடைய நேரத்தையும் நீங்கள் வீணடிப்பதும் நல்லதல்ல. காலம் தவறாமை சொல்லும் இன்னொரு விஷயம், 'நீங்கள் அந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்தது' என்று நினைக்கிறீர்கள் என்பதுதான்.

நேரம் தவறாமல் சரியான நேரத்தில் வரும் நபர் எப்போதுமே திறமைசாலியாகவும், தன்னம்பிக்கை உள்ளவராகவும் பரிமளிப்பார். அவருக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும்.

காலம் தவறாமை உங்களை நம்பிக்கைக்குரிய நபராய் அடையாளம் காட்டும். சொன்ன நேரத்தில் வருவது, சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பது, ஒப்புக் கொண்ட நேரத்தை மதிப்பது... இவையெல்லாம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

டயானா டிலோன்சர் எனும் எழுத்தாளர் 'நெவர் பி லேட் எகைன்' எனும் நூலை எழுதினார். இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து மிக சுவாரசியமானது. 'நேரம் தவறாமையை பின்பற்றாத மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் தாமதத்தையே தொடர்கிறார்கள். நல்லதோ கெட்டதோ, எங்குமே அவர்களால் சரியான நேரத்தில் இருக்கவே முடிவதில்லை' என்கிறார் அவர்.

தாமதமாய் வருவது தவறு, அந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும் எனும் சிந்தனை உங்கள் மனதில் முளைக்க வேண்டியது முதல் தேவை. அப்போதுதான் உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை நீங்களே கொஞ்சம் அலசுவீர்கள். காலையில் ஏன் தினமும் லேட்டாகிறது? கொஞ்சம் சீக்கிரம் எழுந்தால் என்ன? போன்ற சிந்தனைகள் உங்களிடம் அப்போதுதான் எழும்.

'சரியான நேரத்தில் கலந்துகொள்ள வேண்டும்' என எப்போதுமே நினைக்காதீர்கள். பத்து நிமிடம் முன்னதாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள். அப்போது தான் சரியான நேரத்திலாவது நீங்கள் அங்கே இருக்க முடியும்.

நேரம் தவறாமை நமது திட்டமிடுதலைச் சார்ந்தே இருக்கிறது. உதாரணமாக, இரண்டு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு ஒரு மணிநேரத்தை ஒதுக்காதீர்கள். முடிக்க முடியாத அளவுக்கு நெருக்கமான கால இடைவெளிகளில் நிகழ்வுகளை வைத்துக் கொள்ளாதீர்கள். அது எப்போதுமே உங்களைச் சிக்கலில் தள்ளி விடும்.

பலருக்கும் உள்ள மிகப்பெரிய கெட்ட பழக்கம் கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு வேலையைச் செய்யத் துவங்குவது. சட்டென ஒருமுறை மின்னஞ்சலைப் பார்த்து விடுவோம், ஒரு நபருக்கு போன் செய்து முடித்து விடுவோம் என கடைசி நிமிட பரபரப்பை உருவாக்குவார்கள். உங்களைத் தாமதப்படுத்தும் மிக முக்கியக் காரணியே இந்தக் கடைசி நிமிட திடீர் வேலைதான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

முக்கியமான ஒரு நிகழ்வுக்கு முன்னும் பின்னும் முக்கியமற்ற செயல்களைத் திட்டமிடுங்கள். அப்போதுதான் முக்கியமான நிகழ்வை எந்தவித பதட்டமும் இல்லாமல் முடிக்க முடியும்.

எதிர்பாராத வேலைகளுக்காக என்று கொஞ்சம் நேரத்தை எப்போதுமே ஒதுக்கி வைத்திருங்கள். போகும் வழியில் போக்குவரத்து நெரிசல் இருக்கலாம், டயர் பஞ்சராகலாம், எதிர்பாராத ஓர் அழைப்பு வரலாம், இப்படி எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து கொஞ்சம் 'கூடுதல்' நேரத்தை ஒதுக்கி வையுங்கள்.

இப்போதைய தொழில் நுட்பம் உங்களுக்கு ஏகப்பட்ட வசதிகளைச் செய்து தருகிறது. செல்போன் அலாரம், ரிமைண்டர்கள், கணினி மென்பொருள்கள் மூலம் பணிகளை திட்டமிடும் வசதி... போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி உங்கள் நேரத்தைத் திட்டமிடலாம். அதே போல வீட்டில் எல்லா அறைகளிலும் ஒவ்வொரு கடிகாரம் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் உங்களுக்கு அது ரொம்பவே உதவும்.

சீக்கிரமே போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் பல வேளைகளில் தாமதத்தை உருவாக்கிவிடும். அந்த காத்திருப்பு நேரங்களில் என்ன செய்யலாம் என யோசித்து வையுங்கள். ஒரு புத்தகம் படிப்பது கூட உங்களை உற்சாகம் அடையச்செய்யும்.

தாமதமாய் வருவது பெரிய ஆட்களுக்கே உரிய தகுதி என்றோ, தாமதமாய் வந்தால் நீங்கள் பெரிய நபராகப் பார்க்கப்படுவீர்கள் என்றோ தயவு செய்து நினைத்து விடாதீர்கள். உண்மையில், நேரம் தவறாமைதான் உங்களை தலைமைப் பண்பு உடையவராய்ச் சித்தரிக்கும். பல வாய்ப்புகளின் கதவுகளையும் அது சத்தமில்லாமல் திறந்து வைக்கும்.

சிலவேளைகளில் தாமதம் தவிர்க்க இயலாததாகி விடும். அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவித்து விடுங்கள். தாமதமாய் நுழையும் போது, மன்னிப்புக் கேட்கவும் மறக்க வேண்டாம். ஒருவேளை கலந்து கொள்ளவே முடியாத சூழல் என்றால் 'சாரி' என முன்னரே மறுத்து விடுதல் நல்லது.

சிலருடைய தாமதத்துக்கான காரணங்கள் சின்னபுள்ளத் தனமானவை. 'குழந்தை அழுதுடுச்சு', 'காபி கொட்டிடுச்சு', 'ஒரு போன் கால் வந்துடுச்சு' என உச்சுக் கொட்டுவார்கள். இவையெல்லாம் காரணங்களல்ல, உங்கள் மீதான மதிப்பைக் குறைக்கும் காரணிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இங்கிலாந்தில் வெளியான ஓர் ஆய்வு முடிவு, 'லேட்டாக வருபவர்களால்' மேலாளர்கள் எரிச்சலடைகிறார்கள் என்று அடித்துச் சொன்னது. லேட்டாக வருபவர்கள் சொல்லும் 'காரணங்கள்' பெரும்பாலும் பொய்களாகவே பார்க்கப்படும் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நேரம் தவறாமையைக் கற்றுக் கொடுங்கள். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துத்தான் எதையும் கற்றுக் கொள்ளும். சரியான நேரத்துக்கு தூங்குவது, சாப்பிடுவது, படிப்பது என எல்லாமே பெற்றோரைப் பின்பற்றியே பிள்ளைகள் நடக்கும். நீங்களே குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு தாமதமாய் கொண்டு விட்டீர்கள் என்றால் குழந்தையும் அதையேதான் கற்றுக் கொள்ளும் என்பதை மறக்காதீர்கள்!

கடைசியாக, நேரம் தவறாமையை நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டால் தேவையற்ற பல மன அழுத்தங்களையும், மன உளைச்சல்களையும் நீங்கள் வென்று விடலாம். சொன்ன வாக்கைக் காப்பாற்றி விட்டோம் எனும் ஆழ்மன நிம்மதியும், மகிழ்வும் உங்களை உற்சாகமாய்ச் செயல்பட வைக்கும்.

காலம் தவறா ஆச்சரியம்
வெற்றிக் கிளையில் பூச்சொரியும்!
சேவியர்

Thursday, August 18, 2011

போலி எஸ்.எம்.எஸ்சை கண்டு ஏமாறாதீர்கள்

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைவதைப்போல பெருநகரங்களில் புதுவிதமான மோசடிகளும், குற்றங்களும் அரங்கேறிக் கொண்டே வருகின்றன. மெட்ரோ சிட்டியான சென்னையில் மோசடிகளுக்கு பஞ்சமே இல்லை என்றே கூறலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரில் “உங்களுக்கு லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் விழுந்து இருக்கிறது’’ என்ற இமெயில் வந்து கொண்டிருந்தது. அதனை நம்பி பல லட்சங்களை சென்னையில் பலர் ஏமாந்து போயினர். போலீசார் விசாரணை நடத்தி நைரீஜியாவை சேர்ந்தவர்களை கையும் களவுமாக பிடித்து சிறையில் தள்ளினர்.

இதன் பிறகு அதுபோன்ற இமெயில் நின்ற மாதிரி தெரிந்தது. ஆனால், தற்போது அதுபோன்ற இமெயில்கள் சகட்டு மேனிக்கு இன் பாக்ஸ்களில் குவியத்தொடங்கி விட்டது. அதை விட தற்போது போலி எஸ்எம்எஸ் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே போலீசார் போலி இமெயிலோ, எஸ்எம்எஸ்ஸோ வந்தால் யாரும் நம்ப வேண்டாம் அது பொய்யானது. என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற வந்த 3 எஸ்எம்எஸ், 4 இமெயில் ஆகியவற்றை நம்பி ஒரு தொழிலதிபர் ரூ.31.65 லட்சத்தை சர்வ சாதாரணமாக ஏமாந்து இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி ஒருவர் கூறியதாவது்;

அவருக்கு ஜனவரி மாதத்தில் ஒரு இமெயில் வந்திருக்கிறது. அதில் “உங்களுக்கு லாட்டரியில் 5 லட்சம் கோடி இங்கிலாந்து பவுண்டு (பணம்) விழுந்திருக்கிறது. அது உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் பிளீஸ் ரிப்ளை’’ என்று கூறப்பட்டிருந்தது. முதலில் இவர் அதை நம்பவில்லை. பின்னர், அடுத்த சில வாரங்களில் தொடர்ந்து 3 இமெயில், 3 எஸ்எம்எஸ் குவிந்தன. இதனால், அவருக்கு லேசாக நம்பிக்கை எட்டிப்பார்த்தது. “ரிப்ளை தான் பண்ணி பார்ப்போமே’’ என நினைத்து அவர் எஸ்எம்எஸ், இமெயில்களுக்கு ரிப்ளை அனுப்பினார். அந்த போலி எஸ்எம்எஸ் மற்றும் இமெயிலில் வந்த செல்போன் நம்பருக்கு பேசியிருக்கிறார்.

மறுமுனையில் பேசிய மோசடி பேர்வழி “உங்களுக்கு லக்கி பிரைஸாக கிடைத்திருக்கும் தொகை இங்கிலாந்து நாட்டு பணம். அதை இந்திய பணமாக ரிசர்வ் வங்கியில் தான் மாற்ற வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகள் சான்றிதழ், சுங்கம் வரி தொடர்பாக சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற வேண்டும். அதனால் நீங்கள் கொஞ்சம் முன்பணம் தர வேண்டி இருக்கும். நாங்கள் தரும் வங்கி கணக்கில் அந்த பணத்தை போடுங்கள்’’ என லாவகமாக பேசியிருக்கிறான்.

இதனையும் நம்பிய அவர், வங்கிக் கணக்கில் முதலில் ரூ.3 ஆயிரம் போட்டிருக்கிறார். பின்னர், அந்த ஆசாமி கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளி வீசியிருக்கிறார். இதேபோல், ஜனவரி முதல் ஜூன் வரை ரூ.31.65 லட்சத்தை மோசடி ஆசாமிக்கு தாரை வார்த்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மோசடி ஆசாமியிடம் இருந்து தகவல் இல்லை.

இதைத்தொடர்ந்து அவர் ரிசர்வ் வங்கியிடம் சென்று நடந்ததை கூறி விசாரித்துள்ளார். “அது போலியானது. அப்படி எதுவும் இங்கு வராது’’ என்று ரிசர்வ் வங்கியில் கூறியுள்ளனர்.

சில மோசடி எஸ்.எம்.எஸ்கள்
 • லண்டன் நேஷனல் லாட்டரியில் உங்களுக்கு லட்சக்கணக்கில் பவுண்டு பரிசு விழுந்திருக்கிறது, பிளீஸ் ரிப்ளை.
 • பிஎம்டபூள்யூ கார் பரிசு விழுந்துள்ளது, அதனை இந்தியாவிற்கு அனுப்ப கப்பலுக்கு பணம் தேவை.
 • வெளிநாட்டில் ஒரு கோடீஸ்வரர் இறந்து விட்டார். அவர் நிறைய பணம் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார். அவருடைய பெயரும் உங்களுடைய பெயரும் ஒத்துள்ளது. அந்த பணத்தை உங்களுக்கு மாற்றித்தர ஆகும் செலவுக்கு பணம் அனுப்புங்கள்.
 • உங்களை லண்டனில் வசிக்கும் ஒரு பெண் தத்து எடுத்துக் கொள்வதாகவும், அதற்குரிய ஆவணங்களான தத்து எடுத்தல் சான்றிதழ், பாஸ்போர்ட், தீவிரவாதி அல்ல சான்றிதழ் ஆகியவற்றை பெற வேண்டும். கோடீஸ்வரரின் வக்கீலை தொடர்பு கொண்டு பணம் அனுப்புங்கள்.
 • வெளிநாட்டில் வேலை. பல லட்சம் சம்பளம். பணம் அனுப்புங்கள்.
 • லண்டனில் உள்ள கம்பெனியின் மேலாளரான நான் நாட்டின் பல பகுதிகளுக்கு பண பரிமாற்றம் செய்து வருகிறேன். உங்கள் வங்கி கணக்கு எண்ணை அனுப்பினால் பல பரிசுகள் கிடைக்கும்.
 • நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து பணம் சம்பாதிக்கலாம். அதற்காக வங்கிகளில் கணக்கு ஆரம்பித்து கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவைகளை கொடுக்குமாறும், உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் பணத்திலிருந்து 10 சதவீதம் கமிஷனை எடுத்துக் கொள்ளுங்கள். மீதம் உள்ளவற்றை நாங்கள் கூறும் வெளிநாட்டு வங்கி கணக்கில் போடுங்கள். நிறைய பரிசுகள் கிடைக்கும். இப்படி பல மோசடி எஸ்எம்எஸ்கள் உலா வருகின்றன.

ரூபாய் குறியீட்டுடன் புதிய நாணயங்கள்


ரூபாய்க்கான புதிய குறியீட்டுடன் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணயக் குறியீட்டை பல நாடுகள் வைத்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009ம் ஆண்டு இந்திய ரூபாய்க்கான நாணய குறியீட்டை உருவாக்க ஒரு போட்டியை வைத்தது.

தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி உதயகுமார் என்பவர், புதிய நாணய குறியீட்டை உருவாக்கினார். இந்த குறியீட்டை ரிசர்வ் வங்கி அங்கீகாரம் செய்து, பரிசும் வழங்கியது. இந்த புதிய குறியீடு தேவநாகரி மொழி எழுத்தில் ‘ர’வையும், ஆங்கில எழுத்தில் Rயும் குறிப்பிடும் படியாக உள்ளது. மேலும், தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களையும் குறிப்பது போல் உள்ளது. தற்போது 1 , 2 , 5 , 10 ரூபாய் நாணயங்களில் இந்த புதிய குறியீடு அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு வந்துள்ளது.

Tuesday, August 16, 2011

தீப்பற்றிக் கொண்டால்...

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்....
 • நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.
 • எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
 • விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் - போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
 • ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
 • சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது `ஆன்டிசெப்டிக்' மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.
 • தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
 • கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
 • தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
 • இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
 • தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
 • தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

Saturday, August 13, 2011

வேலையில் அசத்தலாம் வாங்க!

சிலர் வெற்றி பெறவேண்டுமென கனவு காண்பார்கள். சிலர் விழித்தெழுந்து கடின உழைப்பால் வெற்றியின் பாதையில் நடப்பார்கள்.

வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு! ஆனால் அதைவிடக் கடினமானது, கிடைத்த வேலையில் வெற்றிக் கொடியை உயரப் பறக்க விடுவது!

சிலரைப் பாருங்கள். அலுவலகத்தில் நுழைந்த சில வருடங்களிலேயே வெற்றிப் படிகளில் தடதடவென ஏறிக் கொண்டிருப்பார்கள். சிலரோ முதல்படியிலேயே முடங்கி விடுவார்கள்.

வெற்றி எட்டாக்கனியுமல்ல, கைகளில் கிட்டாக்கனியுமல்ல. சரியான முறையில் வேலையை அணுகினால் உயர் பதவிகள் உங்களுக்கே!

வேலையில் நுழைந்ததும், 'அப்பாடா... எல்லாம் முடிந்து விட்டது' என நினைத்து விடாதீர்கள். இப்போதுதான் கதவு திறந்திருக்கிறது, இனிமேல்தான் உங்கள் பயணம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

புதிதாக அலுவலகத்துக்குள் வரும் நபரை எல்லோரும் கவனிப்பார்கள். கவனமாய் இருக்க வேண்டிய தருணம் இது. உஷாராய் வேலையிலேயே லயித்திருங்கள்.

கேள்வி கேட்காதவர்கள் பதில்களைப் பெற்றுக் கொள்வதில்லை. உங்களுக்குத் தெரியாததைத் தயக்கமின்றிக் கேளுங்கள். புதிதாய் வேலையில் சேர்ந்திருப்பவர்களுக்கு பெரும்பாலும் எல்லோருமே பொறுமையாய்ப் பதில் சொல்வார்கள்.

ஆனால் துவக்கத்தில் தயக்கம் காட்டிவிட்டு நாலு மாதம் கழிந்து கேள்விகள் கேட்டால், `இன்னுமா இதையெல்லாம் கத்துக்கல?' என ஒரு 'வில்லன் லுக்' விடுவார்கள்.

உங்களுக்குக் கொடுக்கப்படும் வேலையைக் கவனமாகச் செய்யுங்கள். வேலையில் சின்ன வேலை, பெரிய வேலை என்றெல்லாம் கிடையாது. ஒரு சின்ன வேலையை எவ்வளவு நேர்த்தியாக, விரைவாக, அழகாகச் செய்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களைப் பெரிய வேலைகள் வந்தடையும். இந்த அடிப்படை விஷயத்தை மறக்கவே மறக்காதீர்கள்.

'புரோ ஆக்டிவ்னெஸ்' எனப்படும் தாமாகவே முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதும், ஐடியாக்கள் சொல்வதும் உங்களைக் கவனிக்க வைக்கும். `சுறுசுறுப்பு பார்ட்டி' எனும் இமேஜ் உங்களுடைய வளர்ச்சிக்கு ரொம்பவே கை கொடுக்கும்.

'காலம் காலமா இப்படித்தான்...' என்று பல வேலைகள் அலுவலகத்தில் நடந்து கொண்டிருக்கும். அதை சீர்திருத்தவோ, புது மாதிரியாக முயற்சி பண்ணவோ பலரும் தயங்குவார்கள். நீங்கள் அந்த விஷயத்தில் தயக்கம் காட்டக் கூடாது.

'இப்படிச் செஞ்சா என்ன?' என்பன போன்ற புதுப் புது ஐடியாக்களை மேலதிகாரியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

'நமக்குத் தோணாம போச்சே' என உங்கள் மேலதிகாரி எப்போதேனும் நினைத்தால் உங்களுக்கு ஜாக்பாட் தான்.

'உங்க வேலைகள், கடமைகள் இவைதான்' என மேலதிகாரி ஒரு லிஸ்ட் கொடுப்பார். ஒருவேளை அப்படி ஏதும் தரப்படவில்லையேல் அமைதியாக இருக்காதீர்கள். நீங்களாகவே ஒரு லிஸ்ட் தயார் செய்து கொண்டு மேலதிகாரியின் கதவைத் தட்டுங்கள். 'சார்... என்னோட பணிகள் இவையென நினைக்கிறேன். சரிதானே? ஏதேனும் விடுபட்டிருக்கிறதா?' என தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள், சபாஷ் பெறுவீர்கள்!

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் மானேஜரிடம் போய் உங்களைப் பற்றிய அவருடைய அபிப்பிராயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எந்தெந்தப் பணிகளில் நீங்கள் சரியாகச் செயல்படுகிறீர்கள், எந்த இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது எனும் இரண்டு பிரிவுகளில் உங்களுடைய உரையாடல் இருப்பது நல்லது.

'உசுரைக் கொடுத்து உழைக்கிறது நான்! பேரெடுக்கிறது அவனா?' என்பது அலுவலகத்தில் உலவும் கற்காலக் கம்ப்ளையிண்ட்.

உங்கள் மேலதிகாரியுடனான இத்தகைய உரையாடல்கள் இப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் ஒரு நல்ல முடிவாக அமையலாம்.

தவறுவது இயல்பு! தவறு செய்தால் அதை மறைக்காத துணிச்சலும் நேர்மையும் உங்களுக்கு இருக்கட்டும். முதலில் நீங்கள் குற்றவுணர்வுக்குள் குறுகி விடாதீர்கள். இரண்டாவது, அதை மேலதிகாரியிடம் வெளிப்படுத்த தயங்காதீர்கள். இதே தவறை அடுத்தவர்களும் செய்யாமல் தடுக்க ஏதேனும் வழிவகை இருந்தால் அதையும் கூடவே யோசியுங்கள். உங்கள் நெகடிவ் விஷயத்தை பாசிடிவ் ஆக்கும் சூட்சுமம் அது!

சின்னச் சின்னப் பிரச்சினைகளை எல்லாம் மேலதிகாரியிடம் கொண்டு போய்ப் புலம்பாதீர்கள். அது உங்களை திறமையற்றவராய்ச் சித்தரிக்கும். ஒரு சிக்கல் வந்தால் அதை நீங்களாகவே தீர்க்க முயலுங்கள். முடியாத பட்சத்தில் மேலதிகாரியிடம் செல்லுங்கள். அப்படிப் போகும்போது கூட, 'இவையெல்லாம் எனக்குத் தெரிந்த தீர்வுகள்' என சில ஐடியாக்களை அவிழ்த்து விட்டால் மதிக்கப்படுவீர்கள்.

கிசுகிசு, கோள் மூட்டுதல், புறணி பேசுதல் இத்யாதிகளெல்லாம் அலுவலகத்தில் வேண்டாம். அதே போல உங்களிடம் மேலதிகாரி ஏதேனும் தனிப்பட்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால் அதை முரசு கொட்டி விளம்பரப்படுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால் உங்கள் மீதான நம்பிக்கை தகர்ந்துவிடும்.

தரம்-நேரம்-விலை... இந்த மூன்றும்தான் எந்த ஒரு வேலைக்கும் அடிப்படை சங்கதிகள். செய்ய வேண்டிய வேலையை அட்சரசுத்தமாய் உயர் தரத்தில் செய்து முடிக்கவேண்டும். செய்வதைக் கொடுக்கப்பட்ட நேரத்தில் செய்து முடிக்கவேண்டும். செலவு அதிகம் ஆகாமல் அதைச் செய்து முடிக்க வேண்டும். இந்த மூன்று சங்கதிகளையும் மனதில் கொண்டிருங்கள். இதுவே சர்வ வேலைகளுக்குமான உலகப் பொது விதி!

உங்கள் வேலைகளை வரிசைப்படுத்துங்கள். 'ரொம்ப அவசரம்', 'கொஞ்சம் அவசரம்', 'அப்புறம் பாத்துக்கலாம்' எனும் மூன்று பிரிவுகளில் உங்கள் வேலைகளை வரிசைப்படுத்துங்கள். ரொம்ப அவசரமான செயல்களிலிருந்து உங்கள் வேலைகளைத் துவங்குங்கள். மிக முக்கியமான வேலையை நழுவ விடாமலிருக்க அது உதவும்.

வேலை சம்பளத்துக்கானது எனும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். வேலையும் வாழ்க்கையின் ஒரு அழகான பகுதி எனும் சிந்தனையை மனதில் கொண்டால் வேலை உங்களுக்கு சுமையற்ற பணியாகி விடும்.

உங்களுக்கென நீங்களே உருவாக்கிய இலட்சியம் ஒன்று இருக்கட்டும். அதை அடைய என்னென்ன செய்யவேண்டுமென பட்டியலிடுங்கள். உங்கள் வேலை அந்த இலட்சியத்தை நோக்கி உங்களை இட்டுச் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

வேலையில் தயக்கம் காட்டுவது உயர்வுக்கு உதவாது. புதிய வேலைகள் வந்தால் அதை சவாலாக எடுத்துச் செய்யுங்கள். கண்ணை மூடிக்கொண்டு கடலில் குதிக்க வேண்டுமென்பதல்ல அதன் அர்த்தம். செய்யப் போகும் வேலைக்கான தயாரிப்புகள் அவசியம். அதையெல்லாம் தாண்டி முதல் சுவடை தைரியமாக எடுத்து வையுங்கள். முதல் சுவடு வைக்காத எந்த ஒரு பயணமும் இலக்கை அடைவதில்லை.

எந்தக் காரணம் கொண்டும், அலுவலகத்திலுள்ள பேனா, பேப்பர், பென்சில் போன்றவற்றை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகாதீர்கள். செலவு விஷயத்தில் பொய்க் கணக்கு காட்டவே காட்டாதீர்கள். நேர்மைக்கு உதாரணமாய் இருங்கள், உயர்வு தேடி வரும்.

அலுவலகத்திலுள்ள எல்லா சட்டதிட்டங்களும் உங்களுக்குப் பிடிக்க வேண்டுமென்றில்லை. ஆனால் நிச்சயம் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்க முடியாது என தீர்க்கமாய்த் தோன்றினால் வேறு வேலை தேடுவது மட்டுமே ஒரே வழி.

நிச்சயமாய்ச் செய்ய முடியாத வேலைகளை, `சாரி... என்னால முடியாது' என சொல்லலாம், தப்பில்லை. ஆனால் `செய்கிறேன்' என ஒத்துக் கொண்டால் உங்கள் முழு திறமை, நேரம் என எல்லாவற்றையும் பயன்படுத்தி அதைச் செய்து முடியுங்கள். உங்கள் பெயர் நிலைக்கும்.

அலுவலகத்தில் சக நண்பர்கள் ஏதேனும் உதவி கேட்டால் தயங்காமல் செய்யுங்கள். சின்ன உதவியை யாரேனும் செய்தால் கூட `நன்றி' சொல்லத் தவற வேண்டாம். அதே போல தவறுகளுக்கு மனப்பூர்வமான மன்னிப்புக் கேட்பதும் சக மனித நட்பை வலுவாக்கும். அலுவலகத்தில் ஆத்மார்த்தமான ஒரு நட்பாவது உங்களுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

உங்களுடைய திறமைகளை நீங்கள் கூர்தீட்டிக் கொண்டே இருங்கள். நீங்கள் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் உங்கள் திறமைகளை துருப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். படித்துக் கொண்டே இருங்கள், பட்டை தீட்டிக் கொண்டே இருங்கள். அப்போதுதான் திடீரென வரும் ஒரு வாய்ப்பில் நீங்கள் வால் நட்சத்திரமாய் மின்ன முடியும்.

கடின உழைப்பு ரொம்ப முக்கியம். அதே நேரத்தில் உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்க மறக்காதீர்கள். சரியான தூக்கம், அளவான உடற்பயிற்சி இவை தாண்டித் தான் அலுவலகம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அலுவலகத்துக்குரிய மரியாதையையும், கண்ணியத்தையும் கொடுக்க எப்போதும் மறக்காதீர்கள். நல்ல நேர்த்தியான, தூய்மையான ஆடை அணிவது, சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்குச் செல்வது, தேவையற்ற அரட்டைகளைத் தவிர்ப்பது, அலுவல் நேரத்தில் சொந்த வேலைகள் செய்வதைத் தவிர்ப்பது, இணையத்தில் உலவாமல் இருப்பது என இந்தப் பட்டியல் நீளும். இவை ஒரு பணியாளனின் அடிப்படை பண்புகள் என்பதை மறக்கவேண்டாம்.

இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டிருந்தால் வெற்றியின் சாவி உங்களுக்கு வசப்படும்.

உள்ளம் வேட்கை கொள்ளட்டும்
துள்ளும் வெற்றி அள்ளட்டும்!

சேவியர்

Friday, August 12, 2011

ஹாலிவுட் டிரெய்லர்
விதியை நம்புபவர்களா நீங்கள்? அப்படியானால், இந்தப் படம் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்தும். விதியை நம்பாதவர்களா நீங்கள்? அப்படியானால் அட்சர சுத்தமான சுவாரஸ்யம் உங்களுக்காக காத்திருக்கிறது. அது தான் 'ஃபைனல் டெஸ்டினேஷன் 5' ஹாலிவுட் படத்தின் பலம்.

இதுவரை  'ஃபைனல் டெஸ்டினேஷன்' என்னும் பெயரில் நான்கு ஹாலிவுட் படங்கள் வந்திருகின்றன. நான்குமே பம்பர் ஹிட். விடுவார்களா தயாரிப்பாளர்கள்? இதோ 5ம் பாகம் ரெடி. அதுவும் 3டியில்!

இது திகில் படம்தான். ஆனால், த்ரில்லிங்குக்கு மைக்ரோ செகண்ட் கூட குறைவிருக்காது என்று அடித்துச் சொல்லலாம். காரணம், முந்தைய பாகங்களின் ரோலர் கோஸ்டர் திரைக்கதைகள். அதை வைத்துப் பார்க்கும்போது இந்தப் படமும் பரபரவென சீரும் என்று நம்பலாம்.

'ஃபைனல் டெஸ்டினேஷன்' படங்களின் சுவாரஸ்யமே வில்லன்தான். யெஸ், முந்தைய நான்கு பாகங்கள் போலவே இந்த 5வது பாகத்திலும் வில்லன் என்று யாரும் இல்லை. எப்பொழுதும் போல் மரணம்தான் வில்லன். அந்த மரணத்தை எப்படி மனிதர்கள் எதிர்கொள்கிறார்கள், கடக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்பதுதான் ஒன்லைன்.

முதல் பாகத்தில் நண்பர்கள் விமானத்தில் கிளம்புகிறார்கள். அசதியில் ஒருவன் மட்டும் லேசாக கண்னயர்கிறான். கனவு. அவர்கள் செல்லும்  விமானம் வெடிக்கப் போகிறது. பயணம் செய்யும் அனைவரும் இறக்கப் போகிறார்கள். சட்டென கண் விளிக்கும் அவன், தன நண்பர்களிடம் அக்கனவை குறித்து சொல்கிறான். நான்கு பேர் மட்டும் அவனை நம்பி விமானத்தில் இருந்து இறங்குகிறார்கள். மற்றவர்கள் அவனை கிண்டல் அடித்துவிட்டு அதே விமானத்தில் புறப்படுகிறார்கள். கனவில் வந்தது போலவே விமானம் டேக் ஆஃப் ஆனதும் வெடித்துச் சிதறுகிறது.

உண்மையில் தப்பித்தவர்களும் அன்றுதான் இறக்க வேண்டும். அதுதான் விதி. ஆனால், எப்படியோ தப்பித்து விட்டார்கள். அதற்காக மரணம் அவர்களை விட்டுவிடுமா என்ன? ஒவ்வொருவராக எப்படி இறக்கிறார்கள் என்பது தடதடக்கும் திரைக்கதை.

2ம் பாகத்தில், சாலை விபத்துதான் களம். இதில், கதாநாயகிக்கு கனவு வருகிறது. அவளும் சிலரும் தப்பிக்கிறார்கள் மற்றவர்கள் விபத்தில் இறக்கிறார்கள். தப்பித்தவர்கள் அடுத்தடுத்து எப்படி பலியாகிறார்கள் என்பதை நகத்தை கடித்தபடி பார்க்க வேண்டும்.

3ம் பாகத்தில் ரோலர் கோஸ்டர்தான் களம். தீம் பார்க் செல்லும் நண்பர்களின் மரணங்கள் ரசிகர்களின் ரத்தத்தை உறைய வைக்கும். 4ம் பாகத்தில் கார் ரேஸ்தான் களம். மற்றபடி முந்தைய பாகங்கள் போலவே கனவு, இறப்பு, தப்பித்தல், மரணம்... என டிட்டோ.

அந்தவகையில் வெளிவர இருக்கும் 5ம் பாகத்தின் களம் என்ன? 'படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...' என்று புன்னகைத்திருக்கிறது வார்னர் பிரதர்ஸின் அங்கமான நியு லைன் சினிமா.

மரணத்திலிருந்து தப்பிக்க முடியாமல் படத்தில் இடம் பெறப்போகும் முக்கிய கதாபாத்திரங்கள் இறக்கத்தான் போகிறார்கள். படம் பார்க்காமலே இது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், எப்படி, எந்த நொடியில் மரணம் நிகழப்போகிறது என்பதை தெரிந்துக் கொள்ளத்தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்தக் காத்திருத்தலை இறுதிக் காட்சி வரை நீட்டித்து வழங்குவதுதான் திரைக்கதையாசிரியர்களின் பணி. அந்த வகையில்,  'ஃபைனல் டெஸ்டினேஷன்' சீரிஸின் நான்கு பாகங்களுமே திரைக்கதைக்கான படங்களாக மதிக்கப்படுகின்றன. இந்த லிஸ்டில் 5ம் பாகம் இடம் பெறுமா என்பது பட ரிசல்ட்டை பொறுத்தது.

நிக்கோலஸ் டி' அகஸ்ட்டோ, எம்மா பெல், மெயில் ஃபிஷ்ஷர் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு எரிக் ஹீசர் திரைக்கதை அமைத்திருக்கிறார். இயக்கம், ஸ்டீவன் க்வாலே.

க்ளிஷேதான் என்றாலும் இதை சொல்லித்தான் ஆக வேண்டும் இளகிய மனம் படைத்தவர்கள் இப்படத்தை பார்க்க வேண்டாம்.
கே.என்.சிவராமன்   

Thursday, August 11, 2011

நண்பன் பாதி + எதிரி பாதி = 'பிரனெமி'

நியூயார்க்கில் பிரபலமான மாடலாக இருந்தவர் லிஸ்குலா கொஹன் என்பவர். இவரை பற்றி திடீரென்று இணையதளத்தில் ஏடாகூட தகவல்கள் வரத்தொடங்கின. ஆபாச புகைப்படங்களும் குவிந்தன. ஆடிப்போய்விட்டார் லிஸ்குலா. தோண்டி துருவி ஒரு வழியாக குற்றவாளியை கண்டுபிடித்து விட்டார்கள். அந்த குற்றவாளி, லிஸ்குலாவின் மிக நெருங்கிய தோழி !

பொதுவாக ஒருவரது இமேஜை 'டேமேஜ்' செய்கிறவர்கள் பெரும்பாலும் அவரது நண்பர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். இப்படிப்பட்ட நண்பர்களை 'பிரனெமி' என்கிறார்கள். இவர்கள் பாதி நண்பர்களாகவும், பாதி எதிரிகளாகவும் செயல்படுவதால் 'பிரெண்ட்' என்ற வார்த்தையின் முதல் பாதியையும் 'எனிமி' என்ற வார்த்தையின் அடுத்த பாதியையும் சேர்த்து பிரனெமியை உருவாக்கி இருக்கிறார்கள்.

பிரனெமிகள் எப்போதும் சுயநலம் மிக்கவர்கள். அவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை சொன்னால் தோள்கொடுக்க மாட்டார்கள். ஓட்டம் எடுப்பார்கள். ஏதாவது ஒரு பொருளை தூக்கிப்போட்டு பிடித்தால்கூட அடுத்த யுவராஜ்சிங் நீங்கள்தான் என்பார்கள். லேசாக ஒரு பாடலை முணுமுணுத்தால் கூட அடுத்த எஸ்.பி.பி. நீங்கள்தான் என்பார்கள். அந்த இடத்தை விட்டு கொஞ்சம் நகர்ந்ததும் 'ஓவரா அலட்டுறான்' என்று குறை சொல்வார்கள். உங்களை அதிகம் புகழும் நண்பர்களிடம் எப்போதும் உஷாராகவே இருங்கள்.

உங்கள் நண்பர்களில் யாரோ ஒருவர் உங்கள் காதலனையோ அல்லது காதலியையோ அடிக்கடி சந்திக்கிறாரா? அவரை சந்தித்தபிறகெல்லாம் உங்கள் காதலன்/ காதலி உங்களோடு சண்டை போடுகிறாரா? அந்த யாரோ ஒருவர்தான் உங்களின் பிரனெமி. இவர்களின் நட்பை கொஞ்சம்கூட யோசிக்காமல் துண்டித்து விட வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 'பிரனெமி' தவிர்க்க முடியாத ஒரு நபராக இருந்தால், அவருக்கு நீங்கள் எந்த விவரமும் தெரியாத 'டம்மி பீஸ்' போல நடிக்க தொடங்குங்கள். இந்த ஆள் சரிப்பட்டு வரமாட்டான் என்று ஒதுக்கிவிட்டு, அடுத்த ஆளை தேடிப்போயவிடுவார்கள்.

எந்த ஒரு நபரை பார்த்தாலும் உங்கள் உள்ளத்தில் தோன்றும் முதல் அபிப்ராயத்தை நம்புங்கள். அது பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் எவ்வளவுதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும் யாரிடமும் உங்கள் ரகசியங்களை சொல்லாதீர்கள். இன்றைய நண்பன் நாளைய எதிரியாகலாம். அப்போது உங்கள் ரகசியங்கள் ஆயுதமாக்கப்படலாம். அதனால் உங்கள் ரகசியம் உங்களிடமே இருக்கட்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

உங்கள் நண்பர்களை அறிந்துகொள்வது போல் உங்களது 'பிரனெமி' களை அறிந்து கொள்வதும் மிக முக்கியம். இன்றைய நவீன உலகில் உண்மையான நண்பர்களைவிட விட 'பிரனெமிகள்' தான் அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை.            
 

Tuesday, August 9, 2011

காரின் கலரும் ஆபத்தும்

கார்களின் நிறத்துக்கும் ஆபத்துக்கும் சம்பந்தம் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். நமது ஊரில் டிராவல்ஸ் கார்கள் எல்லாமே வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். இதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று வெண்மை நிறம் சூரிய ஒளியை கிரகித்துகொள்ளாது. திருப்பி அனுப்பிவிடும். இதனால் வெயிலின் தாக்கம் காருக்குள் குறைவாகவே இருக்கும்.

மற்றொன்று நமது சாலைகள் எல்லாமே கறுப்பு நிறம் தான். அதனால் அந்த சாலையில் வரும் வெள்ளைக்காரரின் நிறம் பளிச்சென்று எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியும். இதனால் வெண்மை கார்கள் பாதுகாப்பானவை. ஆனால் இதே வெள்ளைக்காரர்கள் பனி பெய்து வெண்மை நிறமாக இருப்பதால் வெள்ளைக்கார்கள் வருவது எதிர்வரும் வாகனங்களுக்கு தெரியாது. அதனால் அங்கு கறுப்பு நிற கார்கள்தான் பாதுகாப்பனவையாக உள்ளன. இதன்காரணமாக வெளிநாட்டில் பல கார்கள் கறுப்பு நிறத்தில் இருக்கின்றன.

நமது ஊரில் கறுப்பு மற்றும் கிரே நிற கார்கள் வைத்திருப்பவர்கள் சாலையில் பயணிக்கும்போது மிக எச்சரிக்கையாக பயணம் செய்ய வேண்டும். சாலையின் நிறமும் கறுப்பு என்பதால் இந்த வாகனங்கள் வருவது எதிரில் வரும் வாகன ஓட்டுனருக்கு தெரியாது. மாலை நேரங்களில் இந்த கார்களின் மீது எதிர்வரும் வாகனங்கள் மோதிவிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதனால் அடர் வண்ணங்களில் கார் வைத்திருப்பவர்கள் லேசாக இருட்டியதுமே 'பார்க்லேம்ப்' போட்டுகொள்வது நல்லது.

மேலும் அந்த ஆய்வு சிவப்பு நிற கார்களை விட நீல நிற கார்கள் அதிகம் விபத்துக்கு உள்ளாவதாக தெரிவிக்கிறது. அடர் பச்சை நிறத்தில் இருக்கும் கார்களுக்கு இன்னொருவிதமான பிரச்சனை இருக்கிறது. மேலே பறக்கும் பறவைகள் இவற்றை மரம் என்று நினைத்து வந்து அமர்கின்றன. அதிகமாக எச்சம் போட்டு விடுகின்றன.

மஞ்சள் நிறத்தில் கார் வைத்திருப்பவர்கள் எப்போதும் கார் கண்ணாடிகளை இறக்கிவிடக்கூடாது என்கிறார்கள். பூந்தோட்டம் என்று நினைத்து தேனீக்களும் வண்டுகளும் இந்த கார்களை சூழ்ந்து கொள்கின்றனவாம். காண்ணாடி திறந்திருந்தால் உள்ளே புகுந்து கொட்டிவிடும் என்கிறார்கள். வெளிர் நீல நிற கார்கள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பிரச்சனை உண்டு. பறவையின் கண்களுக்கு இந்த கார் சிறிய நீர்த்தேக்கம்போல தெரியுமாம். அதனால் பறவைகள் இந்த காரை தேடி வந்து மோதி அடிபட வாய்ப்பு உண்டு.

எனவே நம்மூரை பொறுத்தவரை வெள்ளை நிற கார்களே பாதுகாப்பானவை. அடர்நிற கார்களை விட வெள்ளை நிற கார்களில் அழுக்கு குறைவாகவே தெரியும். கீறல் விழுந்தால் கூட பளிச்சென்று தெரியாது. அதனால் நமக்கு ஏற்ற வண்ணம் வெண்மைதான். 

Monday, August 8, 2011

சிறுநீரகத்தின் பெரும்பணி


 


சிறுநீர் மற்றும் சிறுநீரகப் பாதை சம்பந்தப்பட்டவைகளில், சிறுநீரகம்தான் (Kidney) முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும். நமது உடலில் தொப்புளுக்கு சற்றுமேலே வயிற்றின் உள்ளே இரண்டு பக்கமும், பக்கத்திற்கு ஒன்றாக மொத்தம் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன.


இதை மருத்துவ மொழியில் 'கிட்னி' என்று அழைப்பதுண்டு. இதன் உருவம் அவரை விதை போன்ற வடிவத்தில் இருக்கும். சுமார் 11 செ.மீ. நீளமும், சுமார் 6 செ.மீ. அகலமும், சுமார் 4 செ.மீ. தடிமனும் உள்ளதே சிறுநீரகமாகும்.

ஒவ்வொரு சிறுநீரகமும், சுமார் 120 கிராமிலிருந்து 175 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஆண்களைவிட பெண்களின் சிறுநீரகம் சற்று எடை குறைவாக இருக்கும். வலது சிறுநீரகத்தைவிட, இடது சிறுநீரகம் உருவத்தில் சற்று பெரிதாக இருக்கும். நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும், காற்றை உள்ளே இழுக்கும்போது இரண்டு சிறுநீரகங்களும் மேலிருந்து கீழாக கொஞ்சம் நகர்ந்து கொடுக்கும். இது இயற்கையாக ஏற்படுவதுதான்.

இரண்டு சிறுநீரகங்களுக்கும், ரத்த சப்ளை, இருதயத்திலிருந்து நேராக 'அயோர்ட்டா' என்கிற பெரிய இரத்தக் குழாய் மூலமாகக் கிடைக்கிறது. இரண்டு சிறுநீரகங்களுக்கும் 24 மணி நேரமும் அதிக வேலை இருப்பதால் இருதயத்திலிருந்து வெளிவரும் சுத்த ரத்தத்தில், சுமார் 20 சதவீதத்தை இரண்டு சிறுநீரகங்களுமே எடுத்துக் கொள்கின்றன.

மனிதனின் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களையும், விஷப் பொருட்களையும் அவ்வப்பொழுது உடலிலிருந்து வெளியேற்றுவது இந்த இரண்டு சிறுநீரகங்களும்தான். விலங்குகளுக்கும் சரி, மனிதனுக்கும் சரி, உடலில் சிறுநீரகங்களின் பங்கு மிகமிக முக்கியமாகும். சிறுநீரகங்கள் இந்த வேலையை ஒழுங்காக செய்ய வில்லை என்றால், வெகு சீக்கிரத்தில் உடலின் நிலை மிக மிக மோசமாகிவிடும்.

ரத்தத்திலிருந்து சிறுநீரைப் பிரிப்பது இதுதான். 'எலெக்ட்ரோலைட்ஸ்' என்று சொல்லக்கூடிய உடலுக்குத் தேவையான பொருளை, உடலில் சமமான நிலையில் எப்பொழுதும் வைத்திருக்க உதவுவதும் இதுதான். உடலின் கார அமிலத்தன்மையை சரிசமமாக வைத்திருக்க உதவுவதும் இதுதான். உடலிலுள்ள உப்பையும், தண்ணீரையும், சரிசமமாக வைத்திருக்க உதவுவதும் இதுதான்.

உடலின் ரத்த அழுத்தத்தை எந்நேரமும் சரியாக வைத்திருக்க உதவுவதும் இதுதான். ரத்தத்தை வடிகட்டி அதிலுள்ள வேண்டாத கழிவுப்பொருட்களை வெளியே அனுப்ப உதவுவதும் இதுதான். யூரியா மற்றும் அம்மோனியா போன்ற கழிவுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவுவதும் இதுதான். உடலுக்கு மிகவும் தேவையான தண்ணீர், சர்க்கரை, அமினோ அமிலங்கள் முதலியவைகளை வடிகட்டியபின் மறுபடியும் அவைகளை உள்ளிழுத்து உடலில் எப்பொழுதும் இவைகள் சரியான அளவில் இருக்க உதவுவதும் இதுதான். கேல்சிட்ரால், ரெனின் போன்ற ஹார்மோன்களை சுரக்கச் செய்வதும் இதுதான். ஆக எல்லாவற்றையுமே சிறுநீரகங்கள்தான் செய்கின்றன.

உடலில் நீர் தேங்க ஆரம்பித்தாலே உடனே கிட்னி கெட்டுவிட்டது என்று சொல்லும் அளவிற்கு சிறுநீரகம் பற்றிய ஒரு விழிப்புணர்வு பொதுமக்களிடம் இருக்கிறது. இது சந்தோஷமான விஷயம்தான். சிறுநீரகத்திற்கும், தண்ணீருக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. இரண்டு கால் பாதங்களும் வீங்குவது, முகம் வீங்குவது, கண்ணின் கீழ்ப்பகுதி வீங்குவது இவைகளெல்லாம் நீண்ட நாட்களாக ஒருவருக்கு இருந்தால் சிறுநீரக சிறப்பு மருத்துவரை உடனடியாகப் பார்க்க வேண்டும்.

சிறுநீரகங்களின் செயல்பாடு மிக சாதாரணமானதுதான் 1. வடிகட்டுவது, 2. வடிகட்டும் பொருளிலிருந்து உடலுக்கு தேவையானவற்றை மறுபடியும் உடலுக்குள்ளே எடுத்துக் கொள்ளுவது, 3. ஹார்மோன்கள் சுரப்பது. இந்த மூன்று வேலைகளையும் இரண்டு சிறுநீரகங்களும், 24 மணி நேரமும், ஆயுள் முழுவதும் செய்து கொண்டே இருக்கின்றன.

அநேகமாக நமது வீட்டிலிருக்கும் வாட்டர் பில்டர், குடி தண்ணீரை எப்படி, பில்டர் பண்ணி சுத்தமாக்கி கொடுக்கிறதோ, அதேமாதிரிதான் சிறுநீரகங்களும் வேலை செய்துகொண்டு இருக்கின்றன. சிறுநீரகத்திலுள்ள பில்டருக்குப் பெயர் நெஃப்ரான் ஆகும்.

இரண்டு சிறுநீரகங்களும் இந்த பிரித்தெடுக்கும் வேலையை தனித்தனியாக செய்கின்றன. சில நேரங்களில் உடலிலுள்ள மற்ற உறுப்புகளுடன் சேர்ந்தும் இந்த வேலையை செய்கின்றன. நாளமில்லாச் சுரப்பிகளின் உதவியையும் சிறுநீரகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

அதோடு நாம் உணவில் சேர்க்கும் உப்பிலுள்ள சோடியம் மற்றும் குளோரைடு பொருள்களை, உடலிலிருந்து வெளியே அனுப்புவதை, சரியாக கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை மறைமுகமாக சிறுநீரகங்கள் கட்டுப்படுத்துகின்றன.

பிரித்தெடுத்தல் மற்றும் வடிகட்டுதல் ஆகிய வேலைகளை சிறுநீரகங்கள் செய்யும்போது உண்டாகும். கால்சியம் சம்பந்தப்பட்ட பொருட்கள், அதிக அளவில் சேர்ந்து, ஒன்றாகி, உருண்டு, கற்களாக மாறிவிடுகின்றன. இதைத்தான் சிறுநீரகக் கற்கள் என்று சொல்வதுண்டு. மில்லிமீட்டர் அளவிலிருந்து சென்டி மீட்டர் அளவு வரை, அதாவது கடுகு அளவிலிருந்து பேரீச்சம் பழம் அளவு வரைக்கும் கூட இந்த சிறுநீரக கற்கள் உண்டாகும்.

இந்தக் கற்கள் ஆபத்தை உண்டு பண்ணாவிட்டாலும்கூட, தாங்க முடியாத வலியையும் தொந்தரவையும் அதிகமாக உண்டு பண்ணக் கூடியவை ஆகும். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத வலி முதுகுப்பக்கம் ஆரம்பித்து, இடுப்பு வழியாக, முன்பக்கம், அதாவது வயிற்றுப் பக்கம் வரை இருக்கும்.

சிறுநீரகங்களில் ஏற்படும் நோய்களினால், சில நேரங்களில் உடல் வீங்குவதற்குப் பதிலாக, சிறுநீரகமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் வீங்கிப்போவது உண்டு. சிறுநீர்க் குழாயில் ஏற்படும் சில நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் அடைப்பு ஆகியவற்றால் சிறுநீரகத்தைச் சுற்றி சிறுநீர் தேங்கி சிறுநீரகம் வீங்க ஆரம்பித்துவிடும். இதற்கு 'ஹைட்ரோ நெஃப்ரோசிஸ்' என்று பெயர்.

சிறுநீரகம் வீங்கி இருக்கிறதா? சிறுநீரகத்துக்குள் கற்கள் உண்டாகி இருக்கிறதா? சிறுநீரகத்தைச் சுற்றி கட்டி, புற்றுநோய்க் கட்டி, வேறு ஏதாவது இருக்கிறதா? சிறுநீரகத்தின் செயல்பாடுகள் ஒழுங்காக இருக்கிறதா? இல்லையா என்பதையெல்லாம் இரத்தம் மற்றும் சிறுநீர் டெஸ்ட்டுகள் மூலம் கண்டுபிடித்து விடலாம். இதுபோக சாதாரண எக்ஸ்ரே, மருந்து செலுத்தி எடுக்கப்படும் எக்ஸ்ரே, அல்ட்ரா ஸோனோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முதலிய பரிசோதனைகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

அதிக நாட்கள் உடல் நலமில்லாமல் இருந்தாலும் சரி, அதிக வீக்கம் உடம்பில் ஏற்பட்டாலும் சரி, அதிகமாக வாந்தி எடுத்தாலும் சரி, ஆபரேஷனுக்குத் தயாரானாலும் சரி, ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவை டெஸ்ட் பண்ணியாச்சா என்றுதான் டாக்டர்கள் முதலில் கேட்பார்கள். ரத்தத்திலுள்ள யூரியா மற்றும் கிரியாட்டினின் அளவை வைத்து சிறுநீரகங்களின் செயல்பாடுகளை உடனே கண்டுபிடித்துவிடலாம்.

Dr.அமுதகுமார்

Saturday, August 6, 2011

தெரிந்து கொள்வோம் - ஆயக்கலைகள் 64

1. எழுத்திலக்கணம் ஃ அட்சரங்கள் ஃ பிற மொழி பயிலல் (அகரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்) ஃ யாப்பறிவு;
3. கணிதம்; பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாஸ்திரம்);
8. கணியம் (ஜோதிட சாஸ்திரம்);
9. அறநூல் (தர்ம சாஸ்திரம்);
10. யோக நூல் (யோக சாஸ்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாஸ்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்);
14. மருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்); உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
15. உறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம் ஃ சாமுத்ரிகா லட்சணம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு (காவியம்);
18. அணிநூல் (அலங்காரம்); ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்); சங்குமுதலியவற்றாற் காதணியமக்கை; மாலைதொடுக்கை; மாலை முதலியன் அணிகை; இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை; அணிகலன் புனைகை; ஆடையுடைபற்களுக்கு வண்ணமமைக்கை; ஓவியம்;
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி)
20. நாடகம் ஃ கூத்து; பிதிர்ப்பா (கவி) விடுக்கை; குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்); நாடகம் உரைநடை (வசனம்); நடம் (நடனம்); நிருத்தம்
21. பாட்டு (கீதம்);
22. ஒலிநுட்ப அறிவு (சப்தப்பிரம்மம்); குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
23. மனைநூல் (வாஸ்து வித்தை); தோட்டவேலை; மரவேலை; பிரம்பு முத்தலியவற்றாற்கட்டில் பின்னுதல்; பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்; பள்ளியறையிலும்குடிப்பறையிலும் மணி பதிக்கை;
24. யாழ் (வீணை); குழல் ஃ புல்லாங்குழல் வாசிப்பு;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை; தையல்வேலை;
26. மதங்கம் (மிருதங்கம்); தாளம் ஃ இன்னியம் (வாத்தியம்); சுவைத்தோன்றப் பண்ணுடன்வாசிக்கை; நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
27. விற்பயிற்சி ஃ ஆயுதப் பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் ஃ தங்கம் பற்றி அறிதல் (கனகப்பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரதப்ப்ரீட்சைஃ ரத சாஸ்திரம்); பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை
30. யானையேற்றம் மற்றும் சாதி அறிதல் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் மற்றும் சாதி அறிதல் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல் ஃ மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி ஃ போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம் (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு ஃ பகைமூட்டுதல் (வித்துவேடணம்); பொறியமைக்கை;
39. காமம் (காம சாஸ்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம் ஃ ஆகரஷனம்);
42. இதளியம் (ரசவாதம்); நெருட்டுச் சொற்றொடரமக்கை; ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; விடுகதை (பிரேளிகை);
43. கந்தரவ ரகசியம்; ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்); இருகாலிற் கொள்கைதுவிசந்தக்கிராகித்வம்)
44. பிறவுயிர் மொழியறிகை ஃ மிருக பாஷை அறிதல் (பைபீல வாதம்); கிளி நாகணங்கட்குப்பேச்சுப் பயிற்றுவகை;
45. மகிழுறுத்தம் ஃ துயரம் மாற்றுதல் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி ஃ நாடி சாஸ்திரம் (தாது வாதம்);
47. கலுழம் ஃ விஷம் நீக்கும் சாஸ்த்திரம் (காருடம்);
48. இழப்பறிகை ஃ களவு (நட்டம்);
49. மறைத்ததையறிதல் ஃ மறைத்துரைத்தல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); வான்செலவு ஃ விண் நடமாட்டம் (ஆகாய கமனம்);
51. உடற் (தேகப்) பயிற்சி;
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக்காத்தல் (அதிருசியம்ஃ அரூபமாதல்);
54. மாயச்செய்கை (இந்திர ஜாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திர ஜாலம்);
56. அழற்கட்டு (அக்னி ஸ்ம்பனம்);
57. நீர்க்கட்டு (ஜல ஸ்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயு ஸ்தம்பனம்);
59. கண்கட்டு (திருஷ்டி ஸ்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்கு ஸ்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கில ஸ்தம்பனம்);
62. புதையற்கட்டு (கன்ன ஸ்தம்பனம்);
63. வாட்கட்டு ஃ வாள்வித்தை (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்) ஃ சூதாட்டம் ஃ சொக்கட்டான் ஃ கைவிரைவு ஃ ஹஸ்தலாவகம்);

இவைதான் அந்த ஆயக்கலைகள் அறுபத்திநாலு 
இதில் உங்களுக்கு எத்தனை தெரியும்

Friday, August 5, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

மனிதக் குரங்குகளின் அட்டகாசம்

ரீமேக் படங்களுக்கும் ரீபூட் படங்களுக்குமான வித்தியாசம் புரிந்தால்தான் வெளிவந்திருக்கும் இருக்கும் 'ரைஸ் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஏப்ஸ்' ஹாலிவுட் படத்தின் சரடை உணர முடியும்.

ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை அப்படியே அல்லது சின்னச் சின்ன மாற்றங்களுடன் பிறிதொரு மொழியில் எடுப்பதை ரீமேக் படங்கள் என்கிறோம். சமயத்தில் ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தையே, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு அதே மொழியில் திரும்ப எடுப்பதையும் இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால், ரீபூட் படங்கள் அப்படியானதல்ல. முந்தைய மைய கதாப்பாத்திரங்கள் மட்டும் புதிய வெர்ஷனில் தொடர்ந்தால் போதும். மற்றபடி புதிய கதையுடன், புத்தம் புது களத்தில் இறங்கி ரவுண்டு கட்டலாம். இது தனியான ஒரு படத்துக்கு மட்டுமல்ல; பாகம் பாகமாக வரும் படத்துக்கும் பொருந்தும். ஹாலிவு ட்டில் ஏற்கனவே ரீபூட் படங்கள் வெளியாகி சக்கைப் போடு போட்டிருக்கின்றன. ஜேம்ஸ் பாண்ட் படமான 'கேசினோ ராயல்' முதலில், 1962 ல் வெளிவந்தது. இதே பெயரில், 2006 ல் வெளிவந்த படம், ரீபூட் வகையறா. அதேபோல், 1989 ல் வெளிவந்த 'பேட்மேன்', 2005 ல் 'பேட்மேன் பிகின்ஸ்' ஆக உருமாறியதும் இந்தப் பிரிவின் கீழ் அடங்குவதுதான்.

அந்தவகையில்தான் 'பிளானட் ஆஃப் த ஏப்ஸ்' சீரிஸின் தொடர்ச்சியாக இந்த மாதம் ரிலீசாகும் 'ரைஸ் ஆஃப் த ப்ளானட் ஆஃப் த ஏப்ஸ்' ஹாலிவுட் படம், ரீபூட் ஆக நிமிர்ந்து நிற்கிறது. மனிதர்களை விட, அறிவிலும் சிந்தனையிலும் மனிதக் குரங்குகள் பன்மடங்கு உயர்ந்ததாக மாறினால் என்ன நடக்கும் என்பதை ஆக்ஷன் த்ரில்லருக்கு உரிய ஸ்பீடுடன் விவரிப்பதுதான் 'ப்ளானட் ஆஃப் த ஏப்ஸ்'நாவல், கதையின் மையம்.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், ப்யூரி ப்யூஸ் என்ற பிரெஞ்சு நாவலாசிரியர். 1963 ல் இவர் எழுதிய 'மங்கி பிளானட்' என்கிற 'ப்ளானட் ஆஃப் த ஏப்ஸ்' நாவல், ஐந்து பாகங்களாக அடுத்தடுத்து வெளிவந்து விற்பனையில் சாதனைப் படைத்தது.

உடனே, 'டுவென்டியத் சென்சுரி ஃபாக்ஸ்' ஸ்டூடியோவின் நிறுவனரான ஆர்தர் பி.ஜேக்கப், இந்த 5 பாகங்களையும் தொடர்ச்சியாக திரைப்படமாக்கினார். 1968 ல் ஆரம்பித்து 1973 க்குள் இந்த 5 திரைப்படங்களும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகின. இதன் பின்னர் யாரும் இக்கதையை திரைப்படமாக்க முன்வரவில்லை.

இந்நிலையில், 2001 ல் இயக்குனர் டிம் பர்டன், 'பிளானட் ஆஃப் த ஏப்ஸ்' திரைப்படத்தை ரீமேக் செய்தார். வசூல் பின்னி பெடல் எடுத்தது.  இதனை உற்று கவனித்த 'டுவென்டியத் சென்சுவரி ஃபாக்ஸ்', இதோ தங்களது அட்சய பாத்திர கதையை ரீபூட் செய்து , 'ரைஸ் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஏப்ஸ்' திரைப்படமாக வெளியிடப் போகிறது.

ஆராய்ச்சியாளரான வில் ராத்மேன், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிக்கிறார். அந்த மருந்தை மனிதக் குரங்கின் உடலினுள் செலுத்தி அவர் ஆராயும்போது, விபரீதம் ஏற்படுகிறது. மனிதர்களை விட அறிவாளியாகவும், பலசாலியாகவும் மாறும் அந்த மனிதக் குரங்கு, தன்னைப் போலவே ஆற்றலுள்ள பல மனிதக் குரங்குகளை உருவாக்கி  உலகையே நாசம் செய்ய புறப்படுகிறது. இதிலிருந்து மனிதர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் மிச்ச சொச்ச கதை.

ஜேம்ஸ் பிராங்கோ, ஃபிரிடா பின்டோ உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ரூபட் வியாட் இயக்கியிருக்கிறார்கள். 'த எக்ஸ்பேசிஸ்ட்' உட்பட பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை இயக்கியிருக்கும் இவர், சிறு வயதிலேயே சூப்பர் 8 கேமரா மூலம் பல டாக்குமென்டிகளை  இயக்கியவர்.

அமெரிக்காவில் இருக்கும் கறுப்பின மனிதர்களுக்கு எதிரான படமே, இந்த ஹாலிவுட் படம் என்ற சர்ச்சையும் எழுதியிருக்கிறது.

கே.என்.சிவராமன்
 

Wednesday, August 3, 2011

மனதை வெல்லும் மந்திரம்!

நம்மில் பலருக்குப் பிரச்சினையாக இருப்பது, வெளிப்புறச் சூழ்நிலையோ, பொருளாதார நிலையோ அல்ல. மனம்தான். மனம் நிறைவுறாதபோது, அதை நல்ல வழியில் செலுத்தமுடியாதபோது, எவ்வளவு செல்வம் இருந்தும், வசதிகள் இருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடிவதில்லை.

உறக்கத்தில் சிந்தனையில்லை. உயர்வு, தாழ்வு, பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை, அறிவாளி, முட்டாள், நல்லவர், கெட்டவர், படித்தவர், படிக்காதவர் என்று ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், பிறரை அடையாளம் காணுவதும் விழிப்பு நிலையில்தான். உறக்கத்தின்போது மனதின் செயல்பாடு வெகுவாகக் குறைந்து விடுவதால் அமைதி ஏற்படுகின்றது. இமைக் கதவுகள் மூடிக் கொள்கின்றன. கண் விழித்தவுடன் மீண்டும் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன.

அவரவரின் மனதுதான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனதை அடக்கியாளத் தெரிந்து கொள்வதே மிகவும் முக்கியமான ஒன்று. இதை அனைவரும் அறிந்து இருந்தாலும் மனதை நெறிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. மனதை அடக்கியாளும் மந்திரம் தெரியாமல்தான் பலர் கடல் அலைகளில் துரும்பைப் போலத் தவிக்கிறார்கள்.

அரசனாக இருந்த ஒருவர் தனது அரண்மனை, உற்றார், உறவினர் ஆகிய அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு காட்டுக்குச் சென்று தியானம் செய்யத் தொடங்கினார். நாளடைவில் ஞானியாக மாறி அறவாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதேசமயம் அந்தப் பகுதியில் மற்றொரு நாட்டின் அரசன் பல நாடு, நகரங்களைப் போரில் வென்று தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி செலுத்தி வந்தான். அவனுக்குக் காட்டில் ஞானியாகத் தவம் செய்பவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை எழுந்தது. சொத்து, அரசாட்சி போன்ற எதுவும் இல்லாத ஒரு ஞானியை வென்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால் அரசருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகின்றது என்று மக்கள் பேசத் தொடங்கினர்.

காட்டில் ஞானியின் தவத்தை கலைக்க அரசன் மேற்கொண்ட முயற்சிகள் எந்தவிதப் பயனையும் அளிக்கவில்லை.

"என்னுடன் போருக்கு வா! ஏன் நாடு, நகரத்தையும், உற்றார், உறவினரையும் உதறித் தள்ளிவிட்டு காட்டில் அடைக்கலம் புகுந்துள்ளாய்?'' என்று தொடங்கினான் அரசன்.

ஞானி அமைதியாகச் சூழ்நிலையை ஆராய்ந்து கருத்தில் கொண்டு அரசனைப் பார்த்து, தன்னுடைய எதிரியை வெல்ல முடியாத காரணத்தால்தான் அனைத்தையும் துறந்து காட்டுக்கு வந்ததாகக் கூறினார்.

"உனது எதிரி என்னைவிட வலிமையானவனா?'' என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினான் அரசன்.

"ஆமாம்!'' என்று அமைதியாகக் கூறினார் ஞானி.

உடனே அரசன், அந்த எதிரி யார் என்று கூறினால் அவனைத் தன்னால் வெல்லமுடியும் என்றும், அவ்வாறு முடியாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும் கூறினான்.

"மனதுதான் நான் கூறும் எதிரி. அதை வெல்ல முடியாமல்தான் நான் தியானம் மேற்கொண்டுள்ளேன்'' என்றார் ஞானி.

உடனே அரசன் தனது மனதை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டான். ஒவ்வொரு முயற்சியின்போதும் மிஞ்சியது தோல்விதான். அரசன் தனக்குத் தெரிந்த அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி மனதை அடக்கி ஆள்வதற்கு முயன்றும் தோல்வியே மிஞ்சியது. தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைதான் அரசனுக்கு ஏற்பட்டது.

காட்டுக்கு வந்த ஞானியும், நாட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் மனம் அவரவருடனே பயணம் செய்கிறது என்பதை உணர்ந்தார். மனதைத் தனியாகக் கழட்டி வைக்க முடியாது. மனது ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ளும் சுபாவம் கொண்டது என்பதை உணர்ந்தார். மனதைக் கொண்டுதான் மனதைத் தாண்டவேண்டும் என்று உணர்ந்து, நல்ல பழக்கங்களை மனதுக்கு அறிமுகப்படுத்திப் பின்னர் படிப்படியாக மனதை நெறிப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம் கண்டார்.

அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் எதிர்கொள்வது மனதில் ஏற்படும் போராட்டத்தையே ஆகும். தன்னிச்சையாக முடிவெடுத்துச் செயல்படுவது, நடுநிலையுடன் முடிவெடுப்பது என்று அவரவரின் மனப்பாங்கின் அடிப்படையிலேயே முயற்சிகளும், செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும் பிரார்த்தனை என்பதுகூட மனதில் நினைப்பதை அடைவதற்கான சடங்காகத்தான் உள்ளது.

ஒரு கப்பலில் பல பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ஒரு வியாபாரியும் அக்கப்பலில் பயணம் செய்தார். ஒரு துறவியும் அதில் பயணம் செய்தார். திடீரென்று புயல் வீசத் தொடங்கியது. உடனே வியாபாரி தான் சேர்த்து வைத்த செல்வத்தை வீடு கொண்டு போய் அனுபவிக்க முடியாதே என்று மனம் வருந்தினார். ஆகவே கடவுளை நோக்கி, புயலின் சீற்றம் குறைந்து கப்பல் கரையைச் சென்றடைந்ததால் தன்னுடைய சொந்த மாளிகையைக் காணிக்கையாகத் தருவதாக வேண்டினார்.

ஆனால், அவர் அருகில் பயணம் செய்த துறவி மனதைப் போட்டு அலட்டிக்கொள்ளவே இல்லை. விளைவு எவ்வாறு இருந்தாலும் அதற்கு எப்படி தயாராவது என்பதிலேயே அவரது முழுக் கவனமும் இருந்தது. திடீரென்று புயல் வீசுவது நின்று கடல் அமைதியானது. அனைவரும் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர். உடனே வியாபாரி மனதில் கவலை தோன்றியது. துறவியைப் போல எதுவும் வேண்டாமல் இருந்திருந்தால் மாளிகையைத் தானமாக அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது என்று வருந்தினார்.

வியாபாரியின் மனதில் ஒரு யோசனை எழுந்தது. தனது மாளிகையையும், அதனுடன் சேர்ந்து ஒரு பூனைக் குட்டியையும் ஏலம் விடப் போவதாக அறிவித்தார். மாளிகையின் விலை ஒரு பொற்காசு என்றும், பூனையின் விலை ஒரு லட்சம் பொற்காசுகள் என்றும் கூறினார். புதிராக இருந்தாலும், அதற்கு ஒப்புக்கொண்டு ஒருவர் மாளிகையையும், பூனைக்குட்டியையும் வாங்கிக் கொண்டார். இப்போது மாளிகையை விற்ற ஒரு பொற்காசை உண்டியலில் போட்டுவிட்டு, பூனையை விற்ற ஒரு லட்சம் பொற்காசுகளைத் தான் எடுத்துக்கொள்ள முடியும் என்று மகிழ்ச்சியடைந்தார் வியாபாரி.

இதுதான் மனம் ஒரு குரங்கு என்பதற்கு அடையாளம். அதைத் தாவ விடவும் கூடாது, தப்பி ஓட விடவும் கூடாது. மனதை நெறிப்படுத்தி, பயனுள்ள கருவியாக வைத்துக்கொள்ளப் பழக வேண்டும்.

இளம் வயதில் எதைப் பார்த்தாலும் அதை அடைய வேண்டும் என்று மனம் அலைபாய்கிறது. ஆனால் நல்ல பழக்கவழக்கங்களை மனதில் நங்கூரமாய் நிலைப்படுத்திக்கொள்ளும்போது மனது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆகவே மனதை அடக்கி ஆளாமல், நெறிப்படுத்திக் கருவியாக பயன்படுத்த இளைஞர்கள் பழகிக் கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
ப. சுரேஷ்குமார்.

Monday, August 1, 2011

இன்றும் ஒரு தகவல்

பரங்கி மலையில் ஆரம்பம்

சென்னையில் இருக்கும் பரங்கிமலைக்கு (தூய தமிழில் 'புனித தோமையர் மலை', ஆங்கிலத்தில் 'செயின்ட் தாமஸ் மவுன்ட்') ஒரு சரித்திரப்புகழ் உண்டு. 134 படிக்கட்டுகளை கொண்ட இந்த மலையில், இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் நினைவாக ஒரு தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. 500 வருடங்களுக்கு மேலாக வழிப்படுதலமாக விளங்குகிறது. 200 வருடங்களுக்கு முன்பு ஆர்மீனிய வணிகர் ஒருவர் தனது சொந்தச் செலவில் இந்த மலைக்கு படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தார்.

இதற்கு இன்னொரு பெருமையும் உண்டு. உலகில் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்று கண்டுபிடிக்கப்பட்ட இந்திய 'சர்வே' பணிகள் இங்கிருந்துதான் தொடங்கின. "தி கிரேட் இந்தியன் ஆர்க்" என்று அழைக்கப்படுகிற நில அளவை வேலையை கர்னல் வில்லியம் லாம்டன் என்பவர் 1802ல் இங்கிருந்துதான் தொடங்கினார். ஆங்கிலேயர்கள் தங்களது வணிக நோக்கத்துக்காக இந்தியாவை அளக்க முற்பட்டார்கள். இந்தியாவின் பரப்பளவு, கடல் மட்டத்தில் இருந்து ஒவ்வொரு ஊரும் எவ்வளவு உயரமானது என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.


இதற்காகவே ராபர்ட் கிளைவ், மேஜர் ஜேம்ஸ்ரென்னல் ஆகியோர் தலைமையில் இந்தியாவில் நிலத்தை சர்வே செய்யத் தொடங்கினார்கள். அப்போதுதான் "சர்வே ஆப் இந்தியா" தொடங்கப்பட்டது. அன்று கம்ப்யூட்டரோ, நவீன சாதனங்களோ கிடையாது. சர்வே வேலையும் சுலபமானது அல்ல. எல்லா குறிப்புகளும் அளவைகளும் காகிதத்தில் பதிவுசெய்யப்பட்ட வேண்டும்.

அப்போது சர்வே பணிக்காக தியோலைட் என்ற கருவி ஒன்று இருந்தது. இதை இந்தியாவில் முதன்முதலில் பயன்படுத்தியவர் லாம்டன்தான். இதன் எடை 500 கிலோ. இதைக் கொண்டுதான் பரங்கிமலையில் இருந்து தனது சர்வே பணியைத் தொடங்கினார். லாம்ப்டன் தனது சர்வே பணியைத் தொடங்கிய அடையாளமாக பரங்கிமலை மீது ஒரு சர்வே கல்லை நட்டு வைத்திருக்கிறார்கள். தேவாலயத்தின் கிழக்கு பகுதியில் இந்திய சர்வே துறையால் லாம்டனக்கு மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அகன்ற பாரதத்தின் நிலத்தை சர்வே செய்யும் பனியின் தொடக்கம் இந்த பரங்கிமலைதான்.

இந்த அளவை வேலை 40 வருடங்களுக்கு மேலாக நடந்தது. அதற்குள் லாம்டன் இறந்துவிட்டார். அதன்பின் தாமஸ் எவரஸ்ட் என்பவர் பணியை தொடர்ந்தார். அவர்தான். இமயமலை இருக்கும் சிகரம்தான் உலகிலேயே உயரமாது என்று உலகுக்கு முதன்முதலாக தெரியப்படுத்தினார். அதற்கு முன்பு வரை ஆண்டிஸ் மலைச் சிகரம்தான் உலகிலேயே உயரமானதாக கருதப்பட்டது. தாமஸ் எவரஸ்ட் இந்த சிகரத்தை கண்டுபிடித்தால்தான் அவரது பெயரையே அந்த சிகரத்துக்கு வைத்து விட்டார்கள்.