Saturday, July 30, 2011

நீங்களும் தலைவர் ஆகலாம்!

'கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளாதவர், சிறந்த தலைவராய் இருக்க முடியாது' என்கிறார் அரிஸ்டாட்டில்.

நமது வரலாற்றையோ, வாழ்க்கையையோ புரட்டிப் பார்த்தாலே பல தலைவர்கள் சட்டென நமது கண்ணுக்குப் புலப்படுவார்கள்.

நெல்சன் மண்டேலா நமது மனக்கண்ணில் புன்னகையுடன் வருவார். அடுத்த வினாடியே இறுகிய கண்களுடன் ஹிட்லரும் வரலாம்.

அன்னை தெரசா மனதில் சிரிக்கும் அடுத்த வினாடியில் ராஜபக்சேவும் எட்டிப் பார்க்கலாம்.

சிலர் அவர்களுடைய நல்ல பண்புகளுக்காகவும், சிலர் அவர்களுடைய கொடூர பண்புகளுக்காகவும் நமது மனக்கண்ணில் நிழலாடுவார்கள்.

தலைவர்கள் எந்த நிறத்திலோ, எந்த வடிவத்திலோ இருக்கலாம். ஒல்லிப்பிச்சானாய், ஆறடி உயரத்தில் மனதில் தோன்றும் ஆபிரகாம் லிங்கனாகவும் இருக்கலாம், சக்கர நாற்காலியில் வலம் வரும் ரூஸ்வெல்டாகவும் இருக்கலாம்.

முதுமையின் சுருக்கம் முகமெங்கும் கூடாரமிட்டிருக்கும் கிருஷ்ணாம்பாளாகவும் இருக்கலாம், பளிச் ஆடையுடன் வலம் வரும் பில்கேட்ஸ் ஆகவும் இருக்கலாம்.

தலைவர்கள் யாரும் ரெடிமேடாய் செய்யப்படுபவர்கள் அல்ல. மக்களிடையே இருந்து புறப்பட்டு வருபவர்கள் தான்.

ஒரு குழுவில் பத்து பேர் இருப்பார்கள். ஒருவர் தலைவராகிவிடுவார். ஒரு நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். ஒரு சிலர் தலைவர்களாகி விடுவார்கள். அந்த குறிப்பிட்ட மனிதர்களை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அவர்களிடம் ஏதோ ஒரு 'ஸ்பெஷாலிட்டி' இருப்பது புரியும்.

தலைவர்களாக வேண்டும் என்ற விருப்பம் நம்மிடம் இருந்தால், இந்த சிறப்புத் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்த்துக் கொண்டாலே போதுமானது!

மனதளவில் உற்சாகமாக இருக்க வேண்டியது தலைவருடைய முதல் பண்பு. உற்சாகமாக இல்லாத ஒரு தலைவரால் தனது குழுவையும் உற்சாகமாக வைத்திருக்க முடியாது. ஏகப்பட்ட எரிச்சல்கள், கஷ்டங்கள், மன அழுத்தம் இவையெல்லாம் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி மனதை உற்சாகமாய் வைத்திருக்க வேண்டியது தலைவருக்கான முக்கியமான தகுதிகளில் ஒன்று.

'கற்காலத்தில் தலைவர்கள் உடல் பலத்தால் நிர்ணயிக்கப்பட்டனர். தற்காலத்திலோ, மக்களோடு இரண்டறக் கலக்க முடிபவர்களே நல்ல தலைவர்கள்' என்கிறார் மகாத்மா காந்தி.

தலைவர் என்பவர் மக்களோடு கலந்து அவர்களுக்கு முன்னால் செல்லும் ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். தான் எல்லோருக்கும் பணியாளன் எனும் மனநிலை உடையவனே மிகச் சிறந்த தலைவன்.

'சாரி... மறந்துட்டேன்' என நாம் சகஜமாகச் சொல்லும் வார்த்தை தலைவருடைய அகராதியிலேயே இருக்கக் கூடாது.

ரொம்ப நேர்த்தியாக எல்லா செயல்களையும் ஒழுங்குபடுத்திச் செய்ய வேண்டியது அவருடைய மிக முக்கியமான பணி. எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எனும் சிறப்பான திட்டமிடல் ரொம்ப அவசியம்.

தலைவர் என்பவர் எல்லா வேலைகளையும் செய்பவர் அல்ல! எல்லா வேலைகளையும் செய்ய வைப்பவர்.

யாரிடம் எந்த வேலையைக் கொடுக்கலாம், எந்த வேலையைக் கொடுக்கக் கூடாது, அவர்களிடம் நாசூக்காய் வேலை வாங்குவது எப்படி எனும் சூத்திரங்களெல்லாம் ஒரு நல்ல தலைவனின் அடையாளங்கள்.

ஜெய் தீசன் என்பவர் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர். காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உழைப்பவர். நல்ல தலைமைப் பண்புகள் கொண்ட அவரிடம் யாராவது பைல் கொண்டு வந்து கையொப்பமிடச் சொன்னாலோ, மெயில் வாசித்து பதில் போடச் சொன்னாலோ 'நேரமில்லை, அப்புறம் பார்க்கலாம்' என்று ஒதுக்கி வைப்பார்.

அன்று இரவு அந்த வேலைகளையெல்லாம் வீட்டில் வைத்து முடித்துவிட்டு அலுவலகத்துக்கு வருவார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் அவர் ஒரு ரகசியத்தை வெளியிட்டார்- 'எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது!'.

உடன் பணிசெய்தவர்களெல்லாம் அதிர்ந்தனர். இப்படி ஒரு குறையை வெளியே தெரியாமல் எப்படி மறைத்தார் என ரொம்பவே வியந்தனர்.

தனது 56வது வயதில்தான் கொஞ்சம் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார் அவர்.

'மக்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், எப்படிச் செய்ய வேண்டுமென சொல்லாதீர்கள். அப்போதுதான் வியப்பூட்டும் வகையில் வேலை சிறப்பாக நடக்கும்' என்கிறார் ஜார்ஜ் எஸ் பேட்டன்.

இது மக்களுடைய உண்மையான திறமைகளை வெளிக்கொணரும் நல்ல முயற்சி என்பதைத் தலைவர்கள் அறிவார்கள்.

தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு குணம் தைரியம்.

சில முடிவுகள் எடுக்கும் போது மன திடம் ரொம்பவே தேவைப்படும். தோல்வியை நேர்மையாய் ஏற்றுக் கொள்வதும் தைரியத்தின் ஒரு பாகமே!

சொல்லப்படாத ஒரு விஷயம் எப்போதும் கேட்கப்படுவதில்லை. தேவையான விஷயங்களை பகிர்ந்து கொண்டே இருப்பது முக்கியமான தலைமைப் பண்பு. அதே போல, பிறர் பேசுவதைக் பொறுமையுடன் கேட்பதும் தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதி. அப்படிக் கேட்கும்போது தான் பல்வேறு விதமான ஐடியாக்கள் தலைவருக்குக் கிடைக்கும். மக்களும் உற்சாகமடைவார்கள்.

தனது மக்களைப் பற்றித் தெரியாதவர் நல்ல தலைவராய் இருக்க முடியாது. வெறும் அலுவலக விஷயங்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களையும் தெரிந்திருப்பது தலைவருக்கும், அவருடைய குழுவுக்கும் இடையேயான பிணைப்பை அதிகரிக்கும்.

தன்னம்பிக்கையும், பாசிட்டிவ் சிந்தனையும் தலைவருக்குத் தேவையான இரண்டு விஷயங்கள். தலைவருக்கே தன்னம்பிக்கை இல்லையேல் குழுவும் தன்னம்பிக்கை இல்லாமல் தான் இருக்கும்.

குழப்பமான வேளையில் வழிகாட்ட வேண்டியது தலைவருடைய இன்னொரு பணி. மற்றவர்களை உற்சாகப்படுத்தி அந்த சூழலை எதிர்கொள்ள வைப்பது அவருடைய சிறப்புத் தகுதி. வேலையைச் சரியாய் செய்வது மட்டுமல்ல, சரியான வேலையைச் செய்வதும் ஒரு தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் கடமையாகும்.

தலைவர் என்பவர் நம்பிக்கைக்குரியவராய் இருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குழுவினருடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பவராக இல்லாமல் போனால் ஒருவர் நல்ல தலைவராகப் பரிமளிக்க முடியாது.

எல்லோருமே ஒரு திறமைசாலியைத் தலைவராகக் கொண்டிருக்கவே விரும்புவார்கள். எனவே தலைவருக்கு நல்ல திறமைகள் இருக்க வேண்டியது அவசியம். தனக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதும், அந்தத் திறமைகளைப் பயன்படுத்துவதும், புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்களாகும்.

பல தலைவர்கள், திட்டுவதற்குக் காட்டும் ஆர்வத்தைப் பாராட்டுவதற்குக் காட்டுவதில்லை. தனது குழுவினர் சிறப்பாகச் செயல்படத் தூண்டுதலாய் இருக்க வேண்டியதும், அப்படிச் செயல்படும்போது மனம் திறந்து பாராட்ட வேண்டியதும் தலைமைப் பண்பின் அம்சங்களாகும். தனது குழுவின் செயல்பாடை வைத்துத் தான் தம்முடைய மதிப்பு கணக்கிடப்படும் எனும் எண்ணம் எப்போதும் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டும்.

நிறுவனத்தில் லட்சியத்தை நோக்கிச் செல்பவராக ஒரு தலைவர் இருக்க வேண்டும். எங்கே இருக்கிறோம், எங்கே செல்ல வேண்டியிருக்கிறது, அதற்கு என்ன செய்ய வேண்டும் எனும் மூன்று அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருக்க வேண்டும். இந்த லட்சியத்தை அடைய புதுமையான திட்டங்கள், வித்தியாசமான சிந்தனை போன்றவற்றைப் பயன்படுத்தினால் சிறந்த தலைவராகலாம்.

ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ கடந்த பத்து ஆண்டின் சிறந்த சி.இ.ஓ ஆக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு ஜாம்பவான் நிறுவனங்கள் எலக்ட்ரானிக் பிளேயர்களைத் தயாரித்து இசை உலகை ஆக்கிரமித்திருந்த சமயம் அது. தனது புதுமையான திட்டங்களால் இசை, சினிமா, மொபைல் என மூன்று ஏரியாவிலும் புகுந்து பட்டையைக் கிளப்பி, நிறுவனத்தை சரேலென உச்சியில் கொண்டு போய் நிறுத்தினார் இவர்.

காரணம் இவரிடமிருந்த தனித்துவமான வித்தியாசமான சிந்தனைகள்.

ரிஸ்க் எடுக்கத் தயங்காதவராகவும் தலைவர் இருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் 'கால்குலேட்டட் ரிஸ்க்' எனப்படும் கணிக்கப்பட்ட ஆபத்துகளை எடுக்கத் தயங்காதவர்தான் தடைகளைத் தாண்டி முன்னேற முடியும். 'எல்லோரையும், எப்போதும் திருப்திப்படுத்துவது தலைவருடைய வேலையல்ல. எல்லோரையும் எப்போதும் கூடவே வைத்துக் கொள்வதும் தலைவருடைய பணியல்ல' என்பதை ஒரு தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொண்டிருங்கள். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தத் திறமைகளை உங்களுடைய அலுவலகத்தில் வெளிப்படச் செய்யுங்கள். விரைவிலேயே தலைமைப் பதவிகள் உங்களை வந்தடையும்!

துணிவும், பணிவும் தலைமைக்கு
இருந்தால் வாழ்க்கை வளமைக்கு!


சேவியர்

Friday, July 29, 2011

தினம் ஒரு குறள்

ஊதிய மென்ப தொருவதற்குப் பேதையார்
கேண்மை
யொ
ரீஇ விடல்.
குறள் 797

It is a godsend to be rid
Of friendship with fools.


அறிவிலாருடன் கொண்ட நட்பினைக்கைவிட்டு அவரின் நீங்கப் பெறுவானாயின், அஃது ஒருவனுக்கு கிடைத்த ஊதியம் - இலாபம் என்று கருதப்படும். 

Thursday, July 28, 2011

தினம் ஒரு குறள்

அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.
குறள் 625
The man who can defy ceaseless trouble
Troubles it.


விளக்கம் : 
ஒன்றன்மேல் ஒன்றாய்த் துன்பங்கள் அடுக்கி வரினும் அது கண்டு நெஞ்சம் அழியாதானை அடைந்த துன்பம் தான் துன்பப்படும்.

Wednesday, July 27, 2011

கவிதைச்சரம்

முளைப் பயிர் காலம்

பிரதியெடுக்கும் பணியிலிருந்த நாளொன்றில்
அவனைச் சந்தித்தேன்
காபிக் கோப்பைகளைக்
காலி செய்தோம்

தற்செயலென்ற பாவனையுடன் வரும்
தாழ் பார்வையை
இன்னும் எரிச்சலுடன்
சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டேன்

ஒருவரையொருவர்
தெரிந்துகொள்வதாகப் பேசத் தொடங்கி
வித்தியாசங்களை
உணர்ந்துகொண்டோம்

நீண்ட இரவின்
தொடர் அலைப் பேச்சில்
விதிமீறல்களைக்
கவனிக்காததுபோல் கடக்கத் தொடங்கினேன்

இதே காரணங்களால்
காதல் நிராகரிக்கப்பட்ட
முன்னாள் நண்பர்கள்
சங்கடப் புன்னகையுடன்
பத்திரிகைகளைப்
பெற்றுக்கொள்கிறான்

இப்படித்தான் முளைவிடத்
தொடங்க வேண்டுமா
இந்த ஆயிரங்காலத்துப் பயிர் ?

லதாமகன்

*************************************

தேவதைகளின் உலகம்

திராட்சை செடியை
விதையோடு விழுங்கியதால்
வயிற்றுக்குள் செடி முளைக்கும் என
அச்சத்தோடு வியக்கிறாள்
ஒரு சிறுமி

ஒற்றைச் சடை போடச்
சம்மதிக்காத ஒரு சிறுமி
தன் ரெட்டைச் சடையில்
தேவதைகள்
ஊஞ்சல் கட்டி விளையாடுவதாக
உறுதி கூறுகிறாள்.

ஒரு மழைத் துளியைப் போல
குதித்து விளையாடும் என் மகள்
காகிதக் கப்பல்கள் மட்டுமே
கரை சேரும் என்கிறாள்.

மருத்துவர்களைப் பூச்சாண்டிகளாகப்
பார்க்கும் குழந்தைகள்
பூச்சாண்டிகளைத் தன் நண்பர்களாகக்
கொண்டாடி மகிழ்கின்றன.

நறுக்கிய மாம்பழத் துண்டை
தன் சின்னஞ்சிறு கைகளின்
உள்ளங்கை வியர்வையால்
இனிப்பூரச் செய்து
எனக்கு ஊட்டுகிறாள்
அன்பு மகள்!

குழந்தைகளின் உலகுக்குள்
அனுமதிக்கப்படாத அந்நியர்கள்
தங்களைப் பெரிய மனிதர்களாக
எண்ணிக்கொள்வது பிழையல்ல
பேதைமை !

அமீர் அப்பாஸ்      

Saturday, July 23, 2011

பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்!

காலை முதல் மாலை வரையிலான ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள்.

எத்தனை விவாதங்கள், எத்தனை பேரங்கள், எத்தனை கருத்து மோதல்கள்!

காலையில் காய்கறி வாங்குவதில் துவங்கி, அலுவலகத்தில் சம்பள உயர்வுக்கு வாதிடுவது வரையில் எத்தனை விதமான உரையாடல்கள்?

இதில் எத்தனை சதவீதம் பேச்சுகளில் வெற்றி நமக்குக் கிடைத்திருக்கும்?

நமது வாழ்க்கையின் ஒவ்வோர் படியிலும் ஏதோ ஒரு பேரமும், விவாதமும் காத்திருக்கிறது.

அப்பாவிடம் அடம்பிடிக்கும் குழந்தையும், கணவனிடம் விண்ணப்பிக்கும் மனைவியும், மனைவியிடம் சமாதானம் பேசும் கணவனும் எல்லோருமே எதோ ஒரு விதத்தில் இந்த பேரத்தில் ஈடுபடுகிறார்கள்.

சிலர் இந்த விஷயங்களில் கில்லாடிகள். எந்த விதமான பேச்சிலும் தனது தரப்பு நாசூக்காய் வெற்றி பெறும்படி செய்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு 'பேசியே ஆளை மயக்கிடுவான்' எனும் பட்டம் கிடைத்து விடும்.

இன்னும் சிலருக்கு இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. 'இவனெல்லாம் பேரம் பேசினா தலையில மொளகா அரைச்சுடுவாங்க' எனும் பட்டம்தான் மிஞ்சும்.

இது காய்கறிக் கடையிலோ, சந்தை வீதியிலோ மட்டும் நடக்கும் சங்கதியல்ல. இன்றைக்குக் கொடிகட்டிப் பறக்கும் எல்லா பெரிய பெரிய நிறுவனங்களும் இந்த 'பேச்சுவார்த்தை' நபர்களால்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதிலும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வாடிக்கையாளர்களை கவர 'வடம் இழுக்கும் போட்டி'யை இவர்கள் வசீகர வார்த்தைகளால் நடத்துவார்கள்.

'பேரம் பேசுதல்' என நாம் சொல்லும் இந்தத் திறமையை ஆங்கிலத்தில் 'நெகோஸியேஷன் ஸ்கில்ஸ்' என்கிறார்கள்.

இதைச் சின்ன விஷயமாக நினைத்து விடாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் எந்த இடத்தை அடையப் போகிறீர்கள் என்பதை இந்தத் திறமைதான் நிர்ணயிக்கப் போகிறது!

ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் 'உலகிலேயே சிறந்த நெகோஷியேட்டர் விருது' ஒன்றை வழங்கி வருகிறது. பின்லாந்தின் முன்னாள் பிரதமர் மார்டி அதிஷாரிக்கு கடந்த ஆண்டின் விருது வழங்கப்பட்டது.

இந்தத் திறமை ஏதோ வானத்திலிருந்து விழுகின்ற சமாச்சாரமல்ல, இதை நாமே வளர்த்தெடுக்க முடியும். அதற்கு ஏகப்பட்ட பயிற்சி நிலையங்கள் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கின்றன. உலகெங்கும் கிளை பரப்பியிருக்கும் இத்தகைய பயிற்சி நிலையங்களுக்கு ஏகக் கிராக்கி. செலவும் எக்கச்சக்கம். அவை ஏதும் இல்லாமலேயே சில அடிப்படை விஷயங்கள் தெரிந்திருந்தால் யார் வேண்டுமானாலும் பேரம் பேசுவதில் சாதிக்கலாம் என சத்தியம் செய்கின்றனர் வல்லுனர்கள்.

எல்லா பேரங்களுமே நான்கு நிலைகள் கொண்டவை.

தயாரிப்பு, தகவல் பரிமாற்றம், விவாதம், ஒப்பந்தம்... இவையே அந்த நான்கு நிலைகள்.


எதைக் குறித்து பேசுகிறோம், ஏன் பேசுகிறோம், நமது தேவை என்ன? எனும் மும் மூர்த்திகளைப் பற்றி ரொம்பத் தெளிவான புரிதல் இருக்க வேண்டியது முதல் தேவை.

குறிப்பாக நீங்கள் பேசப் போகும் விஷயத்தின் 'மதிப்பு' எவ்வளவு என்பதைப் பற்றி சரியான தகவல் கையில் இருக்கட்டும்.

பேரம் என்பது மாறி மாறி தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொண்டிருப்பதல்ல. தனது கருத்தை அடுத்தவர் ஏற்கச் செய்வது. அதுவும் அடுத்தவர் மனமுவந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சிறப்பாகத் தயாராகாமல் எந்த ஒரு பேரத்தையும் வெற்றிகரமாக முடிக்க முடியாது. உங்கள் தேவை என்ன என்பதை மட்டும் பார்க்காமல், எதிர் நபருடைய தேவை என்ன என்பதையும் கவனமாய்ப் பார்க்க வேண்டும். அவருடைய தேவைகள் சந்திக்கப்படுவதன் மூலமாக உங்கள் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும். அதுதான் சிறந்த பேச்சு வார்த்தை!

'நேர்மை' இங்கும் பிரதானமாகிறது!

நிறுவன பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை `எது சாத்தியம்' என்று சொல்வதைப் போலவே முக்கியமானது `எது தன்னால் இயலாது' என்பதை வெளிப்படையாய் ஒத்துக் கொள்வது.

நீங்கள் நேர்மையாய் உண்மையாய் இருக்கிறீர்கள் என்பது தெரிந்த பிறகே எதிர் தரப்பும் உண்மையாய் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருமுறை நீங்கள் சொல்லும் கருத்தில் நிலைத்திருங்கள். உங்கள் கருத்தை நீங்களே மறுத்துப் பேசினால் எல்லாம் போச்சு. உங்கள் மீதான நம்பகத்தன்மை அதல பாதாளத்தில் விழுந்து விடும்.

ஒருவேளை மறுத்தே ஆகவேண்டிய சூழல் நேர்ந்தால் கூட 'நாளை தொடர்வோம்' என ஒரு இடைவெளி விடுதல் நலம்.

உங்களுடைய எல்லையை மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருங்கள். குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் எனும் எல்லைகள் தெளிவாய் இருந்தால் உங்களுடைய விவாதம் வலிமையாய் இருக்கும்.

யார் பெரியவன் என்பதைப் பறைசாற்றும் இடமல்ல இத்தகைய விவாத அறைகள். கொடுக்கப்பட்டிருக்கும் மையப் பிரச்சினையை எப்படி இரு தரப்பும் சுமூகமாக, மனநிறைவுடன் முடித்துக் கொள்கிறார்கள் என்பதே முக்கியம்.

பேசுவதை விட முக்கியம் கவனிப்பது. வார்த்தைகளைக் கவனிப்பதை விடக் கவனமாக, பேசுபவரின் உடல் மொழியைக் கவனிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

7 சதவீதம் வார்த்தைகளும், 93 சதவீதம் வார்த்தைகளற்ற அசைவுகளுமே பேசுகின்றன என்கின்றனர் வல்லுனர்கள்.

எனவே மிக நுணுக்கமாய்க் கவனிப்பவர்களே இந்த ஏரியாவில் ஜாம்பவான்கள்!

ஒரு முக்கியமான விஷயம்! புள்ளி விவரங்கள், விலைப்பட்டியல்களை அவிழ்த்து விடும்போது எக்காரணம் கொண்டும் பொய் சொல்லாதீர்கள். உங்கள் குட்டு மிக விரைவிலேயே வெளிப்பட்டு விடும். அதற்குப் பிறகு நீங்கள் எப்போதுமே சந்தேகக் கண்ணோடுதான் கவனிக்கப்படுவீர்கள்.

இலவச இணைப்புக்கு இருக்கும் மரியாதையே தனிதான். ஒரு சேலை வாங்கினால் ஒரு தோசைக்கல் இலவசம் என்பார்கள். சேலை தேவையில்லாவிட்டால் கூட அங்கே கூட்டம் அலை மோதும். நிறுவனங்களும் கிட்டத்தட்ட அப்படியே.

உங்கள் பேரத்தில் சில கூடுதல் பயன்களை இலவசமாகக் கொடுத்தால் உங்கள் `டீல்' நல்லபடியாய் முடிய வாய்ப்பு அதிகம்.

பேரத்தில் உங்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்க வேண்டும் என நினைக்கவே கூடாது. அப்படி ஒரு பேரம் முடிவதும் இல்லை. இரு தரப்புக்குமே வெற்றி என்பதே அடிப்படை நியதி. அதில் யார் அதிக பயன் பெறுகிறார்கள் என்பதே விஷயம்.

தெருவோர பொம்மைக்காரர் ஐநூறு ரூபாய் என ஒரு பொம்மையைக் காட்டுவார். அதன் விலை 100 ரூபாயாக இருக்கும். அதை அவர் 100 ரூபாய்க்குக் கீழே விற்கப் போவதில்லை. நீங்கள் அந்த பொம்மையை நானூறு ரூபாய் என பேரம் பேசுகிறீர்களா? இல்லை நூற்றைம்பது என வாங்கிப் போகிறீர்களா என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.

பேரம் பேசுகையில் மிக வலுவான சில பாயிண்ட்கள் உங்களிடம் இருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். அத்தகைய வலுவான விஷயங்களைச் சுற்றியே உங்கள் பேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தரப்பு விவாதக் கருத்துகளுக்கான தெளிவான காரண காரியங்களையும் கையோடே வைத்திருங்கள். அதே போல ஒரே ஒரு முடிவை நோக்கியே விவாதங்களை அமைக்காமல் இருப்பது நல்லது. அதற்கு உங்களிடம் இரண்டு மூன்று மாறுபட்ட அணுகுமுறைகள் இருப்பதே புத்திசாலித்தனம்.

'நாட்டாமைக்கு ஒரே நாக்கு, ஒரே வாக்கு' என்பதெல்லாம் சினிமாவுக்குத்தான் பொருந்தும். நிறுவனங்களைப் பொறுத்தவரை எழுதிக் கையெழுத்திட்டுத் தராதவரை எதுவும் உத்தரவாதமில்லை. எனவே எந்த ஒரு விவாதத்தின் முடிவிலும் ஒரு ஆதாரம், சாட்சி, எழுத்து வடிவம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பாடு.

எப்பாடுபட்டாவது இந்த பேரத்தை முடிக்க வேண்டும் எனும் உங்கள் மனநிலையைக் வெளிக் காட்டாதீர்கள். ஒருவேளை பேரம் உங்களுக்குச் சாதகமாக இல்லாமல் போனால் கூட நட்புடன் விடைபெறுங்கள்.

பேரத்தில் உணர்ச்சி வசப்படுவது ரொம்பவே தவறு. அது நமது திறமையின்மையை பளிச் என பறை சாற்றி விடும். வெகு இயல்பாய் இருங்கள். எப்போதும் புன்முறுவலையும், நட்பையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக சம்பள உயர்வுக்காக உங்கள் மேலதிகாரியுடன் பேசுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அவரிடம் உங்கள் நிலையை மிகத் தெளிவாக விளக்குங்கள். உங்கள் தேவைகள், எதிர்பார்ப்புகள், மனக்கசப்பு எல்லாவற்றையும் சொல்லுங்கள். ஆனால் அந்த விவாதம் முடிந்ததும் மீண்டும் நட்புடன் நடமாடுங்கள்.

பேரத்தை முடிப்பது ஒரு கலை. சரியான நேரத்தில் முடிக்காமல் வளவளவென இழுத்துக் கொண்டிருந்தால் முடிய வேண்டிய டீல்கள் கூட முடியாமல் போய்விடும் என்பதே உண்மை.

இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் நிறுவனத்திலோ, சமூகத்திலோ நடக்கும் பேச்சு வார்த்தைகளில் வெற்றியுடன் திரும்பி வாருங்கள்.
சேவியர்

Tuesday, July 19, 2011

ரத்ததானம் சில தகவல்கள்

விபத்துகள் அதிகரித்துவிட்டன. அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களும் பெருகிவிட்டனர். எனவே மருத்துவ துறையில் ரத்தத்தின் தேவை அதிகரித்துவிட்டது. ரத்ததானம் செய்வது என்பது மிகமிக உன்னதமான உயிர்காக்கும் சேவை. ரத்தம் கொடுப்பதனால் நமக்கு இழப்புகள் ஒன்றும் ஏற்படுவதில்லை. அக்டோபர் 1-ந்தேதி தேசிய ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது.
  • ரத்ததானம் செய்வதால் உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கும் என்ற தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த அச்சம் தேவையற்றது. உண்மையில் ரத்ததானம் செய்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. ஏனெனில் உடலுக்கு பாதிப்பு தராத அதிகப்படியான ரத்தமே தானமாக செய்யப்படுகிறது. தானம் செய்தவுடன் புதுரத்தம் தானாகவே ஊறத் தொடங்கிவிடுவதால் விரைவில் ஈடுகட்டப்பட்டுவிடும்.
  • எந்த விதமான நோய் பாதிப்பையும் ஏற்படுத்தாத ரத்தமே பாதுகாப்பான ரத்தம் எனப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான ரத்தமே வழங்கப்படுகிறது. எனவே தானம் செய்பவர்களின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டு பெறப்படுகிறது. இது தானம் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் பாதுகாப்பை தருகிறது. உயிரைக் காக்கிறது. பாதுகாப்பற்ற ரத்தம் உயிருக்கு கூட உலை வைக்கலாம்.
  • மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு ரத்ததானம் செய்யக்கூடாது. பால்வினை நோய், மஞ்சள்காமாலை பாதிக்கப்பட்டவர்கள் ஓராண்டு காலமும், காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற 5 ஆண்டுகள் வரையும் ரத்ததானம் செய்யக்கூடாது. ரத்தம் ஏற்றிக்கொண்டவர்கள் ஓராண்டும், எய்ட்ஸ், இதயநோய், சிறுநீரக நோய், தைராய்டு, வலிப்பு நோய் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் ரத்ததானம் செய்யக்கூடாது.
  • பாதுகாப்பற்ற ரத்தத்தின் மூலமாக எச்.ஐ.வி., ஹெப்படிடிஸ் பி, சி வகை மஞ்சள் காமாலை நோய்கள், பால்வினை நோய், மலேரியா நோய்கள் பரவுகின்றன. எனவே சரியான பரிசோதனை இல்லாமல் ரத்ததானம் செய்யவோ, ரத்தம் பெறவோ கூடாது. இதனால்தான் நோய் பாதிப்புள்ளவர்கள் தானம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு சரிவர இல்லாததால் அவர்களும் ரத்ததானம் செய்ய முடியாது.
  • அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ரத்ததானம் அளிக்கலாம். அங்கு ரத்ததானம் வழங்குபவர்களுக்கு முதலில் ஆலோசனை வழங்குவார்கள். பிறகு விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும். எடை, ஹீமோகுளோபின் அளவிடுதல், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு சோதனை, கல்லீரல், நுரையீரல் நிலை ஆகிய பரிசோதனைக்குப் பின் ரத்ததானம் பெற்றுக் கொள்ளப்படும்.
  • ரத்ததானம் பெறும்போது ஒருவரிடம் இருந்து 350 மில்லி ரத்தம் எடுக்கப்படும். இது மீண்டும் ஒரு மாதத்தில் உற்பத்தியாகிவிடும். 90 நாட்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். 30 நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம். சுத்திகரிக்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்துவதால் தொற்று நோய் ஏற்படாது. ரத்ததானம் செய்யும்போது வலி ஏற்படாது. ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் அன்றாட பணிகளை தொடங்கிவிடலாம்.
  • ஒருவரின் உயிர் காக்கப்படுவதாலும், நமக்கு அதனால் இழப்பு இல்லை என்பதாலும் ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம். இந்தியாவில் ஆண்டுக்கு 60 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் பாதி அளவே ரத்தம் கிடைக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரத்த தேவையை சமாளிக்க முடியாமல் மருத்துவதுறை திணறி வருகிறது. தகுதியானவர்களில் 10 சதவீதம் பேர் தானம் செய்தாலே ரத்த தட்டுப்பாடு வராது.

Monday, July 18, 2011

இன்றும் ஒரு தகவல்காட்டுக்குள் படப்பிடிப்பு

அனிமல் பிளானட், டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியாகிரபிக் சேனல் போன்றவற்றில் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மாதக்கணக்கில் அடர்ந்த காட்டுக்குள் தவம் இருந்து படம் எடுக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது.

இந்த காட்டுக்குள் விலங்குகளைப் படம் எடுக்கும் வேலை உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வேலை. ஆனால் பணமழை பொழியும் வேலை. ஸ்டீவ் இரவின் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஸ்டோர். இவரின் குரோக்டைல் ஹன்ட் என்ற நிகழ்ச்சி அனிமல் பிளானட் சேனலில் சூப்பர் டூப்பர் ஹிட். இர்வின் தனது உயிரை பணயம் வைத்து எடுத்த டாக்குமென்ட்டரிகள் ஒவ்வொன்றும் இன்று பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொட்டுகின்றன.

இப்படி காடுகளை படமாக்கும் வேலையில் இந்தியர்கள் எவரும் இல்லையா? என்றால் இருக்கிறார்கள். சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த சித்தார்த்தா ராணா என்பவர் சிறந்த வைல்ட் லைப் மேன் என்ற விருதை பெற்றவர்.

'ஒருமுறை தென் ஆப்ரிக்க காட்டில் சிங்கம் வேட்டையாடும் காட்சியை ஷூட் செய்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று பின்னால் இருந்து சிங்கம் ஒன்று பாய்ந்து வந்து தாக்கியது. சிங்கத்துடன் போராடி அருகில் இருந்த மரத்தில் ஏறியதில் உயிர் பிழைத்தேன். அப்படியிருந்தும் என் இரண்டு விரல்களை சிங்கம் கடித்து துப்பியது' என்று கூறி சிரிக்கிறார் சித்தார்த்தா.

சென்னைத் தமிழரான அல்போன்ஸ் ராய் என்பவர் தனது வைல்ட் லைப் என்ற டாக்குமென்ரிக்காக ஆஸ்கருக்கு இணையான எம்மி விருதைப் பெற்றவர். இவர் "கஷ்டமான வேலை தான். உணவு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும். புலியின் ஒரே ஒரு க்ளோஸ் அப் முறைப்புக்காக மூன்று மாதங்கள் காட்டுக்குள் காத்திருக்கிறேன்.

மான் ஒன்றை புலி வேட்டையாடும் காட்சியை படம் பிடிக்க நான்கு நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் தவித்தது உண்டு. என்னுடன் சேர்ந்து என் உதவியாளர்கள் பல முறை விலங்குகளிடம் காயம் பட்டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கைக்கு அசாத்திய பொறுமை வேண்டும். என் வாழ்க்கையில் எத்தனையோ முறை ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் 10 மணி நேரம் வெறித்துப்பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன் தெரியுமா?" என்று கூறி சிரிக்கிறார் ராய். இவர்கள் கூறுவதைப்பார்த்தால் காட்டு வாழ்க்கை என்பது சுலபமல்ல.       

இருட்டும், வெளிச்சமும்!


நினைத்தது பலிக்கும்போது, மகிழ்ச்சி யூட்டும் விஷயங்கள் நடக்கும்போது சந்தோஷத்தில் களிக்கும் மனது, கஷ்டங்களில், இடர்பாடுகளில் துவண்டு போகிறது. நல்ல மனநிலையில் நமக்குள் வெளிச்சம் நிரம்பியிருக்கிறது. சோர்ந்து போகும்போதோ மனம் இருண்டுவிடு கிறது. இந்த நிலையை எப்படிச் சமாளிப்பது.

வாழ்க்கையில் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறோம். உடல் நலக்குறைவால் அவதிப்படலாம். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கலாம். மற்றவர்களுடன் உறவை மேம்படுத்திக் கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். ஓர் இருண்ட பாதையில் பயணம் செய்வது போலத் தோன்றலாம்.

ஆனால் கண்கள் பார்க்கும் சக்தியை இழந்து விடவில்லை என்பதை உணரவேண்டும். கைவிளக்கு வெளிச்சத்தில் பயணத்தைத் தொடர முடியும். கண்கள் பார்க்கும் சக்தியை இழந்தாலும் உள்ளொளியின் துணையுடன் பயணத்தைத் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்துபவர்களைக் காணமுடிகிறது.பெரும்பாலும் குகை என்றாலே வெளிச்சத்தைக் காண்பது அரிது. ஒரு குகை, பூமிக்கடியில் தனது முழு வாழ்க்கையையும் இருட்டிலேயே கழித்து வந்தது. அதனால், வெளிச்சம் என்றால் என்னவென்றே அதற்குத் தெரியவில்லை. ஒருநாள் எங்கிருந்தோ ஒரு குரல் குகையை நோக்கி வந்து, சூரியனின் கிரணங்களையும் வெளிச்சத்தையும் கண்டுகளிக்க அழைத்தது. வெளிச்சம் என்றாலே என்னவென்று எனக்குத் தெரியாது என்ற குகை கூறியது.

பின்னர், மனதில் தைரியத்தை வளர்த்துக் கொண்டு பூமிக்கு அடியிலிருந்து குகை மேல்நோக்கி வந்தது. மேல்பரப்பில் சூரிய வெளிச்சத்தை பார்த்தவுடன் குகைக்கு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. சிறிதுநேரம் வெளிச்சத்தை அனுபவித்த குகை, சூரிய வெளிச்சத்தைத் தனது வீட்டுக்கு அழைத்தது. தனது வீடு மிகவும் இருட்டாக இருக்கும் என்று குகை கூறியது. சூரிய ஒளிக்கு இருட்டென்றால் என்னவென்று புரியவில்லை. ஏனென்றால் சூரிய ஒளி இருட்டை அதுவரை பார்த்ததே இல்லை. சூரிய ஒளி, குகையின் அழைப்பை ஏற்று அதன் வீட்டிற்கு சென்றது. உள்ளே சென்றவுடன் எங்கே இருட்டு என்று குகையிடம் கேட்டது. ஒளியின் முன்பு இருட்டுக்கு வேலை இல்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருட்டையே அனுபவித்துப் பழகிய குகைக்கு சூரிய ஒளி அறிமுகமானபின்பு வெளிச்சத்தைப் பெறுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆவதில்லை. உடனடியாக வெளிச்சம் இருட்டை அகற்றுகிறது. இதை நாம் நன்கு உணர வேண்டும். அறியாமை என்னும் இருட்டை நிரந்தரமாக அகற்றுவதற்கு அறிவு வெளிச்சமே தேவைப்படுகிறது.

சில நேரங்களில் இடர்பாடுகள் அல்லது பிரச்சினைகளைச் சந்திக்கும்போது நமது மனம் சோர்வடைகிறது. அப்போது இருட்டே நமது இயற்கையான அடையாளம் என்று கருதக் கூடாது. நமக்குள் இருக்கும் உள்ளொளி, நற்செயல்களை மேற்கொள்ள நமக்கு வழிகாட்டியாக அமையும் என்பதை உணரவேண்டும்.

அண்ணல் காந்தியடிகள் தென்ஆப்பிரிக்காவில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தபோது ஒரு ஆங்கிலேயரால் ரெயிலிலிருந்து இறக்கி விடப்பட்டார். அப்போது அவர் சோர்வடையவில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் எது என்று ஆராய்ந்து, சத்தியாக்கிரகியாக தன்னை அடையாளம் கண்டு ஆதிக்க மனப்பான்மை, நிறவெறியை எதிர்த்து அறவழியில் போராடி வெற்றிபெற்றதை நாம் அறிவோம். இன்னல்களையும், தடைகளையும் சந்திக்கும்போது அவற்றைத் தனிநபராக எதிர்கொண்டு வெற்றி பெறுவோர் ஒரு ரகம். தங்கள் அளவில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு, பிறர் நலம் பற்றிக் கருதாமல் வாழ்வோர் இன்னொரு ரகம்.

நாம் ஒவ்வொருவரிடமும் உள்ள அபரிமிதமான ஆற்றலை நன்கு உணர வேண்டும். அனைவருக்கும் ஒளிவெள்ளத்தை வாரி வழங்கும் சூரியன், கிரகணத்தின்போது நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அப்போது சூரியன் தனது ஆற்றலின் மேல் உள்ள நம்பிக்கையை இழப்பதில்லை. உள்ளொளி என்பது கருப்பொருள். அது எப்போதும் அழிவதில்லை. நம்மைச் சுற்றி நாம் காணும் தடைகள் இருளைப் போன்று தோன்றினாலும் அவற்றை செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் நம் மனதுக்கு உண்டு என்பதை உணருங்கள்.

நாகார்ஜுனா என்ற தத்துவ அறிஞர் பல்வேறு வகை மாம்பழங்களை உவமையாகச் சொல்லி அதுபோல பலரகப்பட்ட மனிதர்கள் இருப்பதாகக் கூறுகிறார். சிலவகை மாம்பழங்கள் பழுக்காமல் இருக்கும். ஆனால் பார்ப்பதற்குப் பழுத்தது போல தோற்றமளிக்கும். இது முதல் வகை மாம்பழம். இரண்டாவது வகை மாம்பழம் உண்மையிலேயே நன்றாகக் கனிந்து சாப்பிடுவதற்கு ஏற்ற பக்குவமடைந்திருக்கும். ஆனால் அது தோற்றத்தில் காய் போலத் தோற்றமளிக்கும். சில மாம்பழங்கள் பழுக்காமல் இருக்கும், பார்ப்பதற்கும் காயாகவே தோற்றமளிக்கும். இவை மூன்றாவது வகையைச் சார்ந்தவை. நான்காம் வகை மாம்பழம் பார்ப்பதற்கும் பழுத்துக் காணப்படும். உண்மையிலேயே சுவைக்கும்போதும் பக்குவமாக இருக்கும்.

நாம் நான்காவது வகை மாம்பழத்தைப் போன்றவர்களாக இருப்போம். அவ்வாறு இருக்கும் பிறரிடம் உறவு பாராட்டுவோம். அடுத்து மூன்றாவது ரக மாம்பழத்தை தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் அது தனது உண்மை நிலையை அப்படியே ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகின்றது. யாரையும் ஏமாற்ற முயற்சிப்பதில்லை. இரண்டாவது வகை மாம்பழம் நன்கு பழுத்துப் பக்குவமாக இருந்தாலும், காயாகத் தோற்றமளிக்கிறது. இத்தகையவர்கள் தங்களது உண்மை நிலையை உணர்ந்தால் திறமையை வெளிப்படுத்தி தானும் பயன்பெற்று, பிறரும் பயன்பெற உதவலாம்.

ஆனால் முதல்வகை மாம்பழம், காகிதப் பூவைப்போல தோற்றத்தில் நன்றாகக் காட்சியளிக்கும். ஆனால் யாருக்கும் பயன்படும் வகையில் பழுக்காமல், வெறும் தோற்றத்தையே கொண்டு இருக்கும். இப்படி பலர் இருப்பதை நாம் அறிவோம். ஆகவே நீங்கள் நான்காவது வகை மாம்பழமாக இருக்காதீர்கள்.

உங்களுக்குள் இருக்கும் உள்ளொளி என்பதற்கு 'பவர்கட்' கிடையாது. அக இருள் அகலட்டும். அறிவொளி வீசட்டும். நம்பிக்கை ஒளியால் உங்கள் மனதை நிரப்பிக் கொண்டு பிறருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாக இளைஞர்களாகிய நீங்கள் திகழ வேண்டும்.
ப. சுரேஷ்குமார்

Saturday, July 16, 2011

ஹாலிவுட் டிரெய்லர்


முந்தைய பாகங்களை பார்த்திருக்கலாம் அல்லது பார்க்கத் தவறியிருக்கலாம். பரவாயில்லை. ஆனால், 'ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோவ்ஸ் - 2' ஹாலிவுட் படத்தை மட்டும் அவசியம் பார்த்து விடுங்கள். ஹாரி பாட்டரின் கடைசி பாகம் என்பதால் மட்டும் இதை சொல்லவில்லை. குழந்தையுள்ளமும், குதூகல கற்பனையும் கொண்ட ஒரு படைப்பின் முற்றுப் புள்ளியே இப்படம் என்பதாலும்தான்.

அதனால்தான் இப்பட வெளியீட்டுக்காக பிரபஞ்சமே காத்திருக்கிறது. இத்தனைக்கும் இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். முந்தைய பாகங்கள் போலவே இந்த இறுதி வடிவமும் முன்பே அச்சில் வந்த நாவலின் செல்லூலாயிட் பிரதிதான். ஆனாலும் எழுத்தில் வாசித்ததை, காட்சியாக ரசிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்.

மொத்தம் ஏழு பாகங்களாக, தனித்தனி நாவலாக, குறிப்பிட்ட இடைவெளியில் வெளிவந்த ஹாரி பாட்டர், உலகையே குலுக்கியது. 1997ல் முதல் பாகமாக 'ஹாரி பாட்டர் அண்ட் தி பிளாசபர்ஸ் ஸ்டோன்' வெளியானபோது இந்தளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்நாவலை எழுதிய ஜே.கே.ரவுலிங் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இப்புதினம் கொளுத்தி விட்ட பொறி, கடைசி பாகமான 'ஹாரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோவ்ஸ்' வெளியாகும் வரை கொழுந்துவிட்டு எரிந்தது. 2007, ஜூலை 21 அன்று இந்த இறுதி பாகம் வெளியாவதாக பதிப்பகத்தார் அறிவித்ததும் உலகம் முழுக்க வசித்த ஹாரி பாட்டர் ரசிகர்கள் முந்தைய தினம் இரவிலிருந்தே புத்தகக் கடை முன் க்யூவில் நின்றார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம் 15 மில்லியன் பிரதிகள் 24 மணிநேரத்துக்குள் விற்றுத் தீர்ந்தது. இது உலக சாதனை.

எப்போதுமே வெற்றி பெற்ற நாவல்களை திரைப்படமாக எடுப்பது ஹாலிவுட் ஸ்டைல். அந்தவகையில்தான் ஹாரி பாட்டர் நாவலையும் ஹாடே பிலிம்ஸ் தயாரித்தது. வார்னர் பிரதர்ஸ் விநியோகித்தது. ஒவ்வொரு பாகமும் முதலில் அச்சில் வரும். சில ஆண்டுகள் பொறுத்து அதே பாகம், திரையில் மின்னும்.

அந்தவகையில் 2007ல் வந்த நாவலின் இறுதி பாகத்தை ஒரே படமாக தயாரிக்காமல், நின்று, நிதானமாக பார்த்து ரசிக்கும்படி இரு பாகங்களாக எடுத்தார்கள். ஃபர்ஸ்ட் பார்ட் சென்ற ஆண்டு ரிலீசாகி சக்கைப் போடு போட்டது. இப்போது செகண்ட் பார்ட் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

மந்திர தந்திரங்களால் புகழ்பெற்று விளங்கிய தன் பெற்றோரை அழித்த வோடோமார்(ட்) என்னும் தீய சக்தியை, ஹாரி பாட்டர் எப்படி வீழ்த்தினான் என்பதுதான் ஒன லைன். இந்த இறுதி யுத்தத்தை நோக்கித்தான் முந்தைய அனைத்து பாகங்களும் நகர்ந்தது. 

கடைசி இரு பாகங்களையும், இந்த இறுதி பாகத்தின் முதல் பார்ட்டையும் இயக்கிய டேவிட் யேட்ஸ், இந்த ஃபைனல் பார்ட்டையும் இயக்கியிருக்கிறார். நாவல்களையும் திரைக்கதையாக மாற்றுவதில் வல்லவரான ஸ்டீவ் கிளோவ்ஸ், இப்படத்துக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார். இவர்தான் ஹாரி பாட்டரின் ஐந்தாம் பாகத்தை தவிர மற்ற அனைத்து பாகங்களுக்கும் திரை வடிவம் கொடுத்தவர். முந்தைய சீரிஸில் யார் யார் எந்த எந்த கதாபத்திரங்களில் நடித்தார்களோ, அவர்களே அந்தந்த கேரக்டர்களில் இப்படத்திலும் நடித்திருக்கிறார்கள்.

130 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை, 3டியிலும் ரசிக்கலாம். 2டியிலும் பார்க்கலாம். அடுத்து ஹாரி பாட்டரின் இடத்தை எந்தக் கதாப்பாத்திரம் பிடிக்க போகிறதோ... என்ற ஆதங்கமும், எதிர்பார்ப்பும், கேள்வியும் இப்படத்துக்கான வசூல் சுனாமியை நிச்சயத்திருக்கிறது.

கற்பனை உலகின் இளவரசனாக வளம் வந்த ஹாரி பாட்டர், இப்படத்துடன் விடை பெறுகிறார்.  

'டேக் கேர் அண்ட் குட் பை'  ஹாரி பாட்டர்.

கே.என்.சிவராமன்

இந்த வயசுலயா?

'இந்த வயசுல இதெல்லாம் முடியாது...' எனும் வாக்கியத்தை எல்லா இடங்களிலும் வெகு சகஜமாய்க் கேட்கலாம்.

பல சந்தர்ப்பங்களில் நாமே கூட இதைப் பயன்படுத்தி இருப்போம். நமது பிள்ளைகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது நாம் சந்திக்கும் யாரோ ஒரு நபரிடமோ போகிறபோக்கில் சொல்லி விட்டுப் போயிருப்போம்.

இந்தச் சின்ன வாக்கியம் மனதில் உருவாக்குகின்ற பாதிப்பு எவ்வளவு என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. நாம் 'ஜஸ்ட் லைக் தட்' சொல்லிவிட்டுப் போகும் இந்த வாக்கியம் ரொம்பவே ஆக்ரோஷமானது. இதைப் பெற்றுக் கொள்ளும் நபருடைய தன்னம்பிக்கையின் மீதும், லட்சியங்களின் மீதும் ஓர் இடியாக இறங்கவும் வாய்ப்பு உண்டு.

பல குழந்தைகளுடைய ஆர்வமும், வேட்கையும் இத்தகைய வாக்கியங்களால் அணைந்து விடுவதுண்டு. பல இளைஞர்களுடைய லட்சியங்கள் இதனால் சோர்வடைவதுண்டு. பல முதியவர்களுடைய இனிமையான பொழுதுகள் இதனால் சிதிலமடைவதும் உண்டு.

பெரும்பாலான மக்கள் என்ன செய்கிறார்களோ அதுவே சரியானது எனும் முடிவுக்கு நாம் சீக்கிரமே வந்து விடுகிறோம். ஒரு செயலைச் செய்வதற்கு இதுதான் சரியான வயது என்பதை மற்றவர்களுடைய வாழ்க்கையில் இருந்துதான் பொறுக்கி எடுக்கிறோம். அந்த வயதுக்கு முன்போ, அந்த வயதைத் தாண்டியோ அந்த செயலைச் செய்வது நிச்சயம் தோல்வியில்தான் முடியும் என்று பிள்ளையார் சுழி போடும் போதே முடிவு கட்டி விடுகிறோம்.

இது சரிதானா?

சாதனையாளர்களுடைய பட்டியலைப் புரட்டிப் பார்த்தால் அவர்களுடைய சாதனைக்கு வயது எப்போதுமே ஒரு தடையாய் இருந்ததில்லை எனும் உண்மை புரியும். எதை அடைய வேண்டும் எனும் தெளிவான லட்சியமும் அதை நோக்கிய பார்வையுமே அவர்களிடம் இருக்கும். அர்ஜுனரின் கண்ணுக்குத் தெரிந்த பறவையின் ஒற்றைக் கண்ணைப் போல நேர்த்தியான, கூர்மையான லட்சியப் பார்வை அவசியம்.

ஒருவர், ஒரு நூலை எழுதிப் பதிப்பிக்க வேண்டுமெனில் எத்தனை வயதாக வேண்டும் என்பதைப் பற்றி எல்லோருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கும். அடாவ்டோ கோவால்ஸ்கி டா சில்வா எனும் பிரேசில் நாட்டு எழுத்தாளர் 'அப்ரெண்டே லே' எனும் நூலை எழுதியபோது அவருடைய வயது என்ன தெரியுமா?

ஐந்தரை!

பால் குடிக்கும் வயதில் நூல் வடித்திருக்கிறார் அவர்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள எமிலி ரோஸாவுக்கு மருத்துவம் மற்றும் அறிவியல் மீது அலாதி பிரியம். சின்ன வயதிலேயே அவை குறித்த நூல்கள், ஆய்வுகளை எல்லாம் படிக்க ஆரம்பித்தார். அவருடைய முக்கியமான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியானது. அப்போது அவருக்கு வயது வெறும் 11.

பதினொரு வயதிலேயே ஆராய்ச்சியா என கின்னஸ் புத்தகம் அவசர அவசரமாய் அவரது பெயரை சாதனைப் பட்டியலில் பதிவு செய்து வைத்தது. அவர் நிறுத்தவில்லை. உளவியலில் தனது முதுநிலைப் பட்டத்தை டென்வரிலுள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் முடித்தபோது வயது 22.

ஐந்து வயதென்றால் ஒன்றாம் வகுப்பில் படிக்க வேண்டும் என்பதுதான் உலக வழக்கம். அந்த வயதில் ஒரு நூலை எழுதுவதென்பது யாரும் நினைத்துப் பார்க்காத ஒன்று.

'இந்த வயசுல உனக்கெதுக்கு இந்த வேலை, நாலு ரைம்ஸ் சொல்லு' என்று யாரேனும் சொல்லியிருந்தால் அந்த நூல் அரங்கேறியிருக்காது.

எமிலி ரோஸாவிடம் 'முதல்ல நீ ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடி, அப்புறம் ஆராய்ச்சி பற்றிப் பேசலாம்' என பெற்றோர் சொல்லியிருந்தால் அவருடைய சாதனை நிகழ்ந்திருக்காது!

நியதிகளை மீறிய செயல்களே சாதனைகளாய்ப் பதிவாகின்றன. வயதைக் காரணம் காட்டி செயல்களைத் தாமதப்படுத்தும் போது அவை சாதாரண வெற்றியாய்க் கூட மாறாமல் போய்விடுகின்றன. இந்தியாவின் கிஷன் ஸ்ரீகாந்த் தன்னுடைய முதல் படத்தை இயக்கிய போது அவருக்கு வயது வெறும் ஒன்பது!

இயக்குனராய் வெற்றிக் கொடி கட்ட வயது ஒரு தடையல்ல என்பதை அவருடைய சாதனைப் படம் நிரூபித்துக் காட்டியது.

இளைஞர்களால் மட்டுமே செய்ய முடியும் எனும் சாதனைகளைச் சிறுவர்களாலும் செய்ய முடியும். சிறுவயதினரால் செய்ய முடிகின்ற விஷயங்களை முதியவர்களாலும் செய்ய முடியும். எதைச் செய்வதற்கும் வயது ஒரு தடையல்ல எனும் அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டாலே

போதுமானது!ஜப்பானிலுள்ள டாமே வாட்டன் பே எனும் பெண்ணுக்கு எவரெஸ்டின் உச்சியை எட்டிப் பிடிக்க வேண்டும் எனும் ஆர்வம். தளராத முயற்சியின் முடிவில் அவர் எவரெஸ்டை எட்டிப் பிடித்தார்.

ஆனந்தத்தில் அவர் தனது கரங்களை உயர்த்திய போது அவருக்கு வயது 63.

வெற்றி பெறுவதற்கான முதல் தேவை, வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை தான். அந்த வேட்கையும் தேடலும் இருப்பவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை.

எங்கே வாய்ப்புக் கிடைக்கிறது என்பதை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பயணத்தில் ரிஸ்க் எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. இயங்கிக் கொண்டே, தேடிக்கொண்டே, பயணித்துக் கொண்டே இருப்பவர்கள்தான் வெற்றியடைகிறார்கள்.

ஓய்ந்துவிட்டால் நம்மைச் சுற்றி தோல்வியின் கரையான்கள் கூடு கட்டி விடும். தலைக்கு மேல் வேதனையின் வல்லூறுகள் வட்டமிடவும் துவங்கும்.

நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டியது வெற்றிக்கான தேடலின் இன்னொரு தேவை. நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் நமக்கான உற்சாகத்தை பல வேளைகளில் வழங்குவதில்லை. பெரும்பாலும் நமது உயர்வுகளுக்குக் குறுக்கே மதில் சுவர் கட்ட முடியுமா என்றே பார்ப்பார்கள்.

எனவே நம்மிடம் இருக்கும் தெளிவான இலக்கும், அதை நோக்கிய பயணத்தில் நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்வதும் ரொம்பவே அவசியம்.'வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம் என்பதை உணராமல் பலர் தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். இதுவே மிகப்பெரிய தோல்வி' என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.

பலரும் வெற்றி பாஸ்ட் புட் போல சட்டென கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதனால்தான் ஏழே நாட்களில் வெள்ளையாகலாம், முப்பதே நாட்களில் ஒல்லியாகலாம், மூன்றே மாதத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் எனும் கூக்குரல்களுக்குப் பயங்கர கிராக்கி.

பல்லாயிரம் முறை தோல்வியடைந்தாலும் வெற்றியடையும் வரை ஓடும் வேட்கையே சாதனைகளுக்குத் தேவை. தாமஸ் ஆல்வா எடிசன் அதையே செய்தார்!

கான்ஸ்டண்டைன் காலியாஸ் எனும் கிரீஸ் நாட்டு எழுத்தாளர் 'எ கிளான்ஸ் ஆப் மை லைப்' எனும் நூலைக் கடைசியாக எழுதினார். 169 பக்கங்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட அந்த நூலை அவர் எழுதி வெளியிட்டபோது அவருக்கு வயது 101.

2003-ம் ஆண்டு அவர் இந்த நூலை வெளியிட்டார். அப்போது உலகின் மிக முதிய நூலாசிரியர் இவர் தான்.

ஒருவருடைய வயது, அவருடைய விருப்பத்துக்கும், லட்சியத்துக்கும் இடையே நிற்க முடியாது என்பதை அவருடைய சாதனை எடுத்துக்காட்டுகிறது.

சாதனையாளர்கள் எல்லாம் வெற்றியை ஏதோ சகஜமாக எட்டிப் பிடிக்கவில்லை. அதன் பின்னால் அயராத உழைப்பு உறைந்து கிடக்கிறது. 'செயல்படக் கூடிய சின்ன அறிவு, செயல்படாமல் கிடக்கும் கடலளவு அறிவை விடப் பெரியது' என்கிறார் கலீல் ஜிப்ரான்.

ஐடியாக்களை மனதில் போட்டுப் புதைத்து வைப்பது பயனளிக்காது. அதை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதையே அவருடைய கருத்து படம் பிடிக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த சுவாமிநாத ஐயருக்கு படிப்பின் மீது அதீத ஆர்வம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் அவர் எம்.பில் பட்டம் பெற்றபோது வயது 84.

உலகிலேயே வயது முதிர்ந்த பின்னர் தத்துவ இயலில் முதுகலைப் பட்டம் பெற்றவரும் இவரே. தனது 83 வது வயதில் அந்த பட்டத்தை அவர் பெற்றார். கல்விக்கும், ஆர்வத்துக்கும், லட்சியத்துக்கும் வயது எப்போதுமே தடையாய் இருப்பதில்லை என்பதையே அவருடைய பட்டங்கள் நமக்கு சத்தியம் பண்ணிச் சொல்கின்றன.

துணிச்சலும் ஆர்வமும் கொண்டவர்களை வெற்றி ஏமாற்றுவதில்லை. தங்கள் சொகுசு வளையத்தை விட்டு வெளியே வருபவர்கள் மட்டுமே அதை விட உன்னதமான இடங்களை அடைய முடியும்.

'வெற்றி என்பது நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு' என்கிறார் எழுத்தாளர் ஹென்ரிக் எட்பர்க். வெற்றி பெற வேண்டும் எனும் முடிவை நீங்கள் எடுத்து விட்டால் உங்களை யாரும் தோல்வியடையச் செய்ய முடியாது என்கிறார் அவர்.

கடைசியாக ஒன்று...

வெற்றிக்கான தேடுதல் ஓட்டத்தில் நேர்மை, உண்மை, நம்பகத்தன்மை போன்றவற்றை தவற விடாதீர்கள். இல்லையேல் நீங்கள் அடையும் வெற்றி உண்மையான வெற்றியாய் இருப்பதில்லை.

வெற்றிக்கு வயதொன்றும்
தடையல்ல
முயலாமல் முடங்குதல்
விடையல்ல!
சேவியர்

Monday, July 11, 2011

இன்றும் ஒரு தகவல்

அணு ஆயுதப்போர்

பாகிஸ்தான் தீவிரவாதிகளோ அல்லது ராணுவமோ இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும்போது பலரும் சொல்லும் ஒரு வாக்கியம் இதுதான். 'பேசாமல் ஒரு அணு குண்டை வீசினால் போதும், எல்லா கொட்டமும் அடங்கிவிடும்' என்பது தான். உண்மையில் அணுகுண்டு அவ்வளவு சாதரணமாக வீசக்கூடியதா? இல்லவே இல்லை.

அமெரிக்கா, ரஷ்யா இடையேயான பனிப்போர் முடிந்ததும் வளர்ந்த நாடுகள் ஒன்று சேர்ந்து மற்ற நாடுகளில் அணு ஆயுதம் பரவாமல் தடுக்க முயன்றன. 2ம் உலகப்போரின்போது அமெரிக்கா ஹிரோஷிமா மீது வீசியது 15 டன் டி.என்.டிக்கு சமமானது அந்த குண்டு. அது வெடித்தபோது அதிலிருந்து வெளிவந்த வெப்பம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த அனைவரையும் கருக்கி கரிகட்டையாக மாற்றியது. அதற்கு அப்பால் பல கிலோமீட்டர் இருந்தவர்களையும் கதிரியக்கம் பாதித்தது. அதனால் உயிரிழப்புகளும், புற்றுநோய்களும் ஏற்பட்டன. இரண்டு அணுகுண்டினால் 2ம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

ஆனால் இன்றைய நிலையே வேறு. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுத யுத்தம் ஏற்பட்டால் அது இந்த இரு நாடுகளை மட்டுமல்லாது உலகத்தையே பெரிதாக பாதிக்கும். இருநாடுகளும் தங்களிடமுள்ள அணு ஆயுதங்களை போரில் பயன்படுத்தினால், அது இந்த இரு நாடுகளை மட்டுமல்லாது, உலகத்தையே பாதிக்கும். கிட்டத்தட்ட 100 ஹிரோஷிமாவுக்கு சமமாக இருக்கும்.

சுமார் 2 கோடி மனிதர்கள் அணுகுண்டு வெடித்ததும் இறந்து போவார்கள். அதுபோக தொலைவில் உள்ள மக்களில் பலர் குணப்படுத்தமுடியாத நோய்கள் வந்து உயிரிழக்க நேரிடும். மேலும், உடல் ஊனங்கள் பரம்பரையாக தொடரும்.

அணுகுண்டு வெடிப்பால் ஏற்படும் புகை மற்றும் தூசு 50 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும். இந்த தூசுபடலம் காற்றில் கலந்து பரவும். ஒரு வாரத்திற்குள் இது உலகம் முழுவதும் பரவிவிடும். அடுத்த ஒரு மாதத்தில் ஒரு போர்வையை போட்டு பூமியை மூடியது போன்று தூசுபடலம் ஏற்படும்.

அதனால் சூரிய ஒளி பூமியை வந்தடையும் அளவு குறையும். அது உணவுக்கான சங்கிலி தொடர்பை பாதிக்கும். ஏற்கனவே உணவுக்காக பரிதவித்து நிற்கும் 100 கோடி பேர் பட்டினியால் இறந்து போவார்கள். இப்படி பிரம்மாண்ட பிரச்சினைகள் இருப்பதால் தான், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் உலகம் உற்றுக்கவனிக்கிறது.      

Saturday, July 9, 2011

அன்பின்றி அமையாது உலகு

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த மற்ற நண்பர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை.

'குமார் இப்போ நல்லா இருக்கான். நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி ஒரு கார் வாங்கினான். போன வருஷம் தான் வீடு வாங்கினான். ஒரு இருபத்தைஞ்சு முப்பது சம்பளம் வாங்குவான்னு நினைக்கிறேன். அப்படியே லைஃப்ல செட்டில் ஆயிட்டான்'.

'அருள் பாவம்டா, இன்னும் சரியான வேலை கிடைக்காம கஷ்டப்படறான். வாடகை வீட்லதான் இருக்கான்.'

இப்படிப்பட்ட கதைகளைக் கொஞ்சம் அலசி ஆராய்ந்து பாருங்கள். நமது ஒப்பீடுகளும், அளவீடுகளும், மகிழ்ச்சிக்கான எல்லைகளும் பெரும்பாலும் பொருளாதாரம் சார்ந்தே இருக்கின்றன என்பது புரியும்.

ஒரு வீடு, கார் வாங்கி ஒரு நல்ல வேலையில் இருந்தால் அவன் பாக்கியசாலி! இதில் ஏதாவது குறை இருந்தால் அவன் அனுதாபத்துக்கு உரியவன். இந்த மதிப்பீடுகள் சரியா என்பதைப்பற்றி நாம் எப்போதாவது ஆற அமர யோசித்ததுண்டா?

ஆனந்தமும், வாழ்வின் உன்னதமும் பொருளாதாரத்தால் அமைவதல்ல என்பதைப் புரிந்து கொள்ளும்போது நமது வாழ்வில் சட்டென ஒரு திருப்பம் உண்டாகும். பொருளாதாரம் ஒரு மனிதனுக்கு வசதிகளைத் தர முடியும். ஆனால் ஆழமான அன்பு குடும்பத்தில் நிலவும் போது மட்டுமே அவனுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆகிறது.

ஈகோவும், பிணக்குகளும், பொறுமையின்மையும், விட்டுக் கொடுத்தல் இல்லாமையும் இன்றைய தம்பதியரிடையே மிக அதிகம். விவாகரத்து எண்ணிக்கைகள் கிடுகிடுவென உயர இவை எல்லாம் முக்கியமான காரணிகள். குறிப்பாக இளம் தம்பதியினர் உப்பு சப்பில்லாத காரணத்துக்கு எல்லாம் விவாகரத்து செய்வது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.

சிலி நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அபார்க்காவுக்கு மனைவி எரிகா சோடிலோ மீது மிகுந்த அன்பு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய கருப்பையில் நோய் வந்தது. எனவே கருப்பையை நீக்க வேண்டிய நிலை. ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்தார்கள். அது ஏடாகூடமாகி அவருடைய மூளையைப் பாதிக்க, எதிர்பாராத விதமாக கோமா நிலைக்குப் போனார்.

கார்லோஸ் துடித்துப் போனார். மனைவி சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டுமே என பிரார்த்தித்தார். மனைவியின் அருகிலேயே எதிர்பார்ப்புகளோடு அமர்ந்திருந்தார். நாட்கள் ஓடின, மாதங்கள் ஓடின, வருடங்களும் ஓடிவிட்டன. நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்கள் எல்லோருமே நம்பிக்கை இழந்து விட்டார்கள். இவர் இனிமேல் உயிரை மட்டும் கொண்டிருக்கும் 'வெஜிடபிள்' நிலை தான் என்றார்கள்.

இதுபோன்ற பேச்சுக்கள் எதுவும் கணவனுக்கு மனைவி மீது இருந்த காதலைக் குறைக்கவில்லை. கடந்த பதினைந்து வருடங்களாக கார்லோஸ் தினமும் மூன்று நேரம் தனது மனைவியின் அருகே சென்று அமர்கிறார். அவருடைய கரங்களைப் பற்றி, அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சொல்கிறார். மனைவி ஒருவேளை தான் பேசுவதை எல்லாம் கேட்கக் கூடும் எனும் நம்பிக்கையில் கண்கள் பனிக்க அன்பைச் சொல்கிறார்.

'இனிமேல் நம்பிக்கையில்லை.. இன்னும் ஏன்...?' என அவரிடம் கேட்பவர்களுக்கு அவர் சொல்லும் பதில், குடும்ப வாழ்வின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது.

'என் வாழ்வில் என் மனைவியைத் தொடர்ந்து நேசிப்பதை விட வேறு முக்கியமான பணி ஏதும் இல்லை' என்பதே அவருடைய பதில்.

'குறட்டை விடுகிறார்...' என்ற காரணத்துக்கெல்லாம் கோர்ட் படியேறும் தம்பதியர் இருக்கும் நாட்டில் கார்லோஸ் போன்ற மனிதர்களும் இருப்பது குடும்ப உறவுகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

சின்னச்சின்ன மலர்களால் அமைவதுதான் மாலை. சின்னச் சின்ன வரிகளால் அமைவதுதான் கவிதை. சின்னச் சின்ன துளிகளால் அமைவதுதான் பெருமழை. சின்னச் சின்ன ஆனந்தங்களால் அமைவதுதான் வாழ்க்கை. இந்த சின்ன விஷயத்தைப் புரிந்து கொண்டாலே வாழ்க்கையை இனிமையாக வாழ முடியும்.

என்னுடைய அப்பாவுக்கு ஒரு வழக்கம் இருந்தது. தினமும் மாலை வேளையில் குடும்பத்திலுள்ள ஏழு பிள்ளைகளையும் அம்மாவையும் அமர வைத்து எதையாவது பேசி கலகலப்பாய் நேரம் செலவிடுவார். படிப்பு, வேலை எல்லாவற்றையும் மறந்து செலவிடும் அந்த நேரம் எத்துணை தூரம் குடும்ப உறவை வலுப்படுத்தியிருக் கிறது என்பதை கால் நூற்றாண்டு கடந்தபின் என்னால் உணர முடிகிறது.

'வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்பது அன்பு செலுத்தும் குடும்பத்தில் அங்கமாய் இருப்பது தான்' என்கிறார் தாமஸ் ஜெபர்சன். உங்களுடைய வாழ்வின் ஆனந்தமான தருணங்களை நினைத்துப் பாருங்கள். அது பெரும்பாலும் குடும்ப உறவுகளோடு ஆனந்தமாய் செலவிட்ட பொழுதுகளாய்த்தான் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு ஆனந்தமான குடும்பத்தைக் கட்டியெழுப்புவதில்தான் நம்முடைய வாழ்க்கையின் அர்த்தம் நிறைந்திருக்கிறது. ஒரு மனிதனுடைய வெற்றியும் தோல்வியும் அவனுடைய குடும்பத்தின் மகிழ்ச்சியிலும், சோகத்திலும் இருக்கிறது.

ஆனந்தமான குடும்ப வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதொன்றும் குதிரைக் கொம்பல்ல. ஆத்மார்த்தமான சின்னச் சின்ன கவனிப்புகள் மட்டுமே போதுமானது.

1. பேசுங்கள். கணவன் மனைவியரிடையே நல்ல ஆரோக்கியமான உரையாடல் இருந்தால் குடும்பங்களில் ஆனந்தம் தங்கும். எதிர்பார்ப்புகள், நிகழ்வுகள், தேவைகள் என எல்லாவற்றையும் பேசுங்கள். பொறுமையாய்க் கேட்பதும் பேசுவதன் ஒரு பாகம் என்பதை உணருங்கள். முக்கியமாக அவ்வப்போது கணவன் மனைவி இருவருமாக தனியே எங்காவது சென்று நேரம் செலவிடுங்கள். சேர்ந்து உணவருந்துவது, சேர்ந்து பீச் போவது இப்படி.

2. வாழ்க்கையின் ஆனந்தம் சின்னச் சின்ன அன்புப் பரிமாற்றங்களில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அன்பை வார்த்தைகளாலும், சின்னச் சின்ன பரிசுகளாலும் அவ்வப்போது தெரிவிப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்கள் அல்லாமல் ஒரு சாதாரண நாளில் எதிர்பாராமல் தரப்படும் சின்னப் பரிசுக்கு மதிப்பு அதிகம்! திடீரென ஒரு நாள் ஒரு காதல் வாழ்த்து அட்டை வாங்கிப் பரிசளித்துப் பாருங்கள்! அந்த மகிழ்ச்சியே அலாதியானது.

3. தவறுகளை ஒத்துக் கொள்ளுங்கள். யார் பெரியவன் எனும் விவாதங்கள் நடத்த குடும்பம் ஒன்றும் வழக்காடு மன்றங்களல்ல. தவறுகள் செய்ததாய் உணரும்போது மனம் திறந்து மன்னிப்புக் கேளுங்கள். அடுத்த நபர் மன்னிப்புக் கேட்கும் முன்பாகவே மன்னித்து, மறக்கும் மனதைக் கொண்டிருங்கள்.

4. உம்மணாமூஞ்சியாய் அமைதியாய் இருப்பது தீர்வல்ல. விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ரொம்ப சகஜம். விவாதியுங்கள். ஆனால் விவாதம் தடம் மாறிப் போகிறது என்பதை உணரும் வினாடியில் அதை வளர்த்துக் கொண்டே போகாதீர்கள். தீர்வுகளை நோக்கிய உரையாடல்களே முக்கியம், தனிநபர் நோக்கிய குற்றச்சாட்டுகளல்ல.

5. இணைந்து திட்டமிடுங்கள். குடும்பம், குழந்தைகள், பொருளாதாரம், எதிர்காலம் என எதுவாய் இருந்தாலும் இருவருமாய் இணைந்து திட்டமிடும் குடும்பங்கள் வலுவாக இருக்கும்.

6. ஊரோடு ஒத்து வாழுங்கள். உறவினர்கள், நண்பர்கள், அயலார் போன்றவர்களுடன் நல்ல ஆரோக்கியமான நட்புறவும், அன்பும் கொண்டிருப்பது உங்கள் குடும்ப வாழ்க்கையை வலுப்படுத்தும். குறிப்பாக பெற்றோரின் அன்னியோனியத்தையும், அன்பையும் காணும் குழந்தைகள் அதை தங்கள் வாழ்க்கையிலும் பிரதிபலிப்பார்கள்.

7. உங்கள் வாழ்க்கைத் துணையின் நம்பிக்கையைச் சம்பாதிப்பது நீண்டகால பந்தத்தின் முக்கிய அம்சம். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு சரியான மரியாதையைத் தரவும் மறக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கைத் துணை எதிர்பார்ப்பதற்கு மேலாகவே குடும்பத்தில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.

8. நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். நடக்கும் எல்லாவற்றையும் 'உர்' எனும் முகத்தோடு கவனிப்பதும், பேசுவதும் வாழ்க்கையை சுவாரசியமாய் நடத்த உதவாது. தோல்விகள், ஏமாற்றங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடு எதிர்கொள்ளப் பழகினால் குடும்பத்திலுள்ள இறுக்கமான சூழல் விலகி விடும். எந்தக் காரணம் கொண்டும் ஒரு நாளைய கோபத்தை மறுநாள் வரை கொண்டு செல்லாதீர்கள்.

9. கணவன் மனைவியிடையேயான தாம்பத்திய உறவை எப்போதும் விட்டு விடாதீர்கள். குழந்தைகள் பிறந்தபின் பலரும் செய்யும் இந்தத் தவறு தம்பதியரிடையேயான பிணைப்பை வலுவிழக்கச் செய்து விடுகிறது. ஆண்டுகள் செல்லச் செல்ல உங்கள் நெருக்கமும், அன்பும் அதிகரிக்கட்டும். பழைய காதல் நினைவுகளை அவ்வப்போது அசைபோட்டுப் பேசி அன்பைப் புதுப்பியுங்கள்.

10. பாராட்டுங்கள். வாழ்க்கைத் துணை செய்யும் நல்ல விஷயத்தையெல்லாம் பாராட்டுங்கள். அது ஒரு சின்ன ஒத்தாசையாய் இருக்கலாம், அல்லது பெரிய சாதனையாய் இருக்கலாம். எல்லா நல்ல விஷயங்களையும் பாராட்டுங்கள்.

இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கடைபிடித்தாலே குடும்ப வாழ்க்கை தொடர்ச்சியாய் பூக்கள் நல்கும் பூந்தோட்டமாய் மலரும் என்பதில் ஐயமில்லை.

இல்லத்தில் நேசங்கள் வளரட்டும்
அகமெங்கும் ஆனந்தம் மலரட்டும்!
சேவியர்

Friday, July 8, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

 
இங்கு வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை உற்றுப் பாருங்கள். எங்கோ பார்த்தது போல் இருக்கிறதா?

மிக்க நல்லது. இந்தப் படத்தின் மொத்தக் கதையும் அதுதான். அதேதான். அதுவும்தான். யெஸ், யார் ஒரிஜினல் என்று தெரியாமல் குழம்புவதுதான் இப்படத்தின் ஆணிவேர். ஒருவகையில் இது உண்மைக் கதை. மறுவகையில் இது சரித்திரம். மொத்தத்தில் இதுவோர் வரலாற்று ஆவணம்.

அமெரிக்க நாட்டுப் படைகளில் இருந்தும், சொந்த நாட்டு புரட்சிகர சக்திகளிடம் இருந்தும் தப்பிக்க தன்னைப் போன்று உருவம் கொண்ட பலரை பொது இடங்களில் சதாம் உலவ விட்டிருக்கிறார். இந்த இடத்தில் சதாம் தேநீர் அருந்திக் கொண்டிருப்பதாக நாசாவுக்கு தகவல் கிடைக்கும்போதே இன்னொரு இடத்தில் சதாம் உணவருந்திக் கொண்டிருப்பதாக ஃபேக்ஸ் வரும். அதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே வேறொரு இடத்தில் சதாம் பேசிக் கொண்டிருப்பதாக மெசேஜ் வரும். இதில் யார் உண்மையான சதாம் என்று தெரியாமல் அமெரிக்க ராணுவம் சட்டையை கிழித்துக் கொண்டு அலைந்திருக்கிறது.

இப்படி அமெரிக்காவுக்கு தண்ணீர் காட்டிதான் பல ஆண்டுகள் சதாம் உயிர் வாழ்ந்தார். இதே வழிமுறையைத்தான் அவரது வாரிசு உதய் ஹூசேனும் பின் பற்றினார். காமக் கொடூரன், மன நோயாளி, சாடிஸ்ட், சாத்தானின் மறுபிறவி... என உலகிலுள்ள அனைத்து கெட்ட விஷயங்களையும் ஒன்று சேர்ந்தால் என்ன உருவம் கிடைக்குமோ அதுதான் உதய் ஹூசேனின் உருவம். சரித்திரத்தில் இப்படித்தான் இந்த ஈராக் இளவரசர் பதிவாகியிருக்கிறார்.

பாக்தாத் நகரின் அரக்கனாக கருதப்படும் இந்த உதய் ஹூசேனின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை கோர்த்துத்தான் இந்த 'தி டெவில்ஸ் டபுள்' - The Devil's Double ஹாலிவுட் படத்தை தயாரிக்கிறார்கள்.

அச்சு அசல் தன்னைப் போன்றே உருவமுள்ள ஒரு ராணுவத் தளபதியை பார்த்ததும் உதய் ஹூசேனுக்கு தன் அப்பாவின் நினைவு வருகிறது. அப்பாவை போலவே தானும் தனக்கொரு டூப்ளிகேட்டை உருவாக்கினால் என்ன? இந்தக் கேள்வி எழுந்ததுமே அந்த ராணுவத் தளபதி கடத்தப்படுகிறான். கடுமையான சித்ரவதைகளுக்குப் பின் உதய் ஹூசேனாக வளம் வர அந்த ராணுவத் தளபதி ஒப்புக் கொள்கிறான். இதற்காக உதய் ஹூசேனே முன்னின்று தன்னைப் போல் நடக்கவும், சுருட்டு பிடிக்கவும், பேசவும் கற்றுத் தருகிறான்.

அனைத்தையும் கற்றுக் கொண்ட அந்த ராணுவத் தளபதியால் ஒரேயொரு விஷயத்தை மட்டும் கற்க முடியவில்லை. அது, சாடிசம். ஈவு, இறக்கம் இல்லாமல் ஒரிஜினல் உதய் போல், இந்த டூப்ளிகேட்டால் யாரையும் கொல்லவும் முடியவில்லை; சித்திரவதை செய்யவும் முடியவில்லை. ஒரு கட்டத்தில் உதய் ஹூசேனாக நடிக்கும் ராணுவத் தளபதி போங்கி எழுகிறான். அதனால் நடக்கும் சம்பவங்களே க்ளைமாக்ஸ்.

ஒரிஜினல் மற்றும்  டூப்ளிகேட் உதய் ஹூசேனாக டபுள் ஆக்ஷனில் நடித்திருப்பவர், டொமினிக் கூப்பர். 'த எக்ஸ்கேபிஸ்ட்', 'த ஹிஸ்டரி பாய்ஸ்' போன்ற படங்களில் பட்டையை கிளப்பியிருன்தவர், இப்படத்திலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார். இயக்கியிருப்பவர், லீ டமஹோரி. ஜேம்ஸ் பாண்ட் படமான 'டை அனதர் டே' படத்தின் இயக்குனர் சாட்சாத் இவரே தான்.

நிகழ்கால வரலாற்றின் நிழல்தான் இந்த 'த டெவில்ஸ் டபுள்' என்று சொல்லலாம். தப்பில்லை.           

கே.என்.சிவராமன்   

Thursday, July 7, 2011

கிரிடிட் கார்டுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்

உங்கள் கிரிடிட் கார்டுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள் மற்றும் மோசடிகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?

மாதம்தோறும் வரும் கிரிடிட் கார்டு ஸ்டேட்மெண்டுகளை நம்மில் எத்தனை பேர் படிக்கிறோம்? அல்லது எத்தனை பேருக்கு படித்துப்பார்க்க தெரியும்?

பதிலென்னவோ நெகடிவ் தான்.

காரணம்?

அதை படிப்பதில் ஆர்வமின்மை; அல்லது அதில் சொல்லப்பட்டுள்ள அர்த்தம் புரியாத வார்த்தைகள்.

வெகு சிலரே கிரிடிட் கார்டு ஸ்டேட்மெண்டுகளை முழுவதும் படிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

கிரிடிட் கார்டுகளைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால், பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இதோ கிரிடிட் கார்டுகளைப்பற்றி உங்களுக்காக!

கிரிடிட் கார்டு எண் (Credit card Number):

இது உங்களது பிரத்தியேக எண். இந்த 16 இலக்க எண் கிரிடிட் கார்டின் முகப்பில் சூப்பர் இம்போஸிங் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்டின் அனைத்து பயன்பாடுகளுக்கும் இந்த எண்ணே பிரதானம் என்பதால், இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பது அவசியம்.

கார்டு தொலைந்து போனால் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் செய்ய, கார்டு எண்ணைத்தான் நீங்கள் முதலில் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, கிரிடிட் கார்டு எண் உடனடியாக நினைவுக்கு வரவில்லை எனில், இது கிரிடிட் கார்டு ஸ்டேட்மென்டிலிருந்து உங்களுக்கு கிடைக்கும். ஸ்டேட்மென்டில், பளிச்சென்று தெரியும் வகையில் ஒரு பிரதான இடத்தில் இந்த எண் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும்.

கிரிடிட் லிமிட் (Credit limit ):
இது தான் உங்களது கடன் பெறும் திறன் எனப்படுவது. அதாவது, கார்டை வழங்குகிற வங்கி அல்லது நிறுவனம் எந்த அளவுக்கு உங்களுக்கு கடன் தர இயலும் என்பதைத்தான் இது குறிப்பிடுகிறது. இந்த அளவை அவர்கள் எவ்வாறு வரையறை அல்லது நிர்ணயம் செய்கிறார்கள்? அதற்கான அளவுகோல்கள் என்னென்ன?

உங்களது மாத வருமானம்

கடனை திரும்ப செலுத்தும் திறன்

இதற்கு முன் கடன் பெற்ற இடங்களில் தடையின்றி சரியாக திரும்பச் செலுத்தியிருக்கிறீர்களா?

இந்த மூன்று விஷயங்களின் அடிப்படையில் தான் உங்களது கடன் பெறும் தகுதியை வங்கிகள் நிர்ணயம் செய்கின்றன.

மேற்சொன்ன மூன்றும், உங்களது கிரிடிட் லிமிட்டை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும் தன்மை படைத்தவை.

வங்கிகள், உங்களுக்கு அனுமதிக்கும் இந்த கிரிடிட் லிமிட்டை இரண்டு பிரிவாக பிரிக்கின்றன.

அதாவது, உங்களது மொத்த கிரிடிட் லிமிட்டில் 70 சதவீதத்தை பொருட்கள் வாங்குவதற்கும் மீதமுள்ள 30 சதவீதத்தை வங்கிகளின் ஏ.டி.எம்.களிலிருந்து ரொக்க பணமாக பெற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரொக்கமாக பணம் பெறும் பிரிவில், பெறுகிற பணத்திற்கு 2.50 முதல் 3.00 சதவீதம் வரை டிரான்ஸாக்ஷன் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்த வசதிக்கு வட்டி வீதமும் அதிகமென்பதால் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொள்வது நல்லது.

வங்கிகள், தங்களது கிரிடிட் கார்டு ஸ்டேட்மென்டுகளில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட கிரிடிட் லிமிட், அதில் 'பொருட்களாக வாங்குவதற்கு எவ்வளவு? ரொக்கக்கடனாக பெறுவதற்கு எவ்வளவு?' என்கின்ற தகவல்களையும்; ஒவ்வொரு பிரிவிலும் ஸ்டேட்மெண்ட் தேதிப்படி எவ்வளவு பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதைனையும், இன்னும் பயன்பாட்டிற்கு எவ்வளவு மீதமுள்ளது என்பது குறித்த தகவல்களையும் தெளிவாக கூறுகின்றன.

ஒருவேளை, இந்த கிரிடிட் லிமிட்டை தாண்டி உங்கள் பயன்பாடு இருக்குமானால், இது போன்ற அதிகப்படியான பயன்பாட்டிற்கு வங்கிகள் அதிக வீதத்தில் வட்டி வசூல் செய்யலாம்.

சரி, கிரிடிட் லிமிட்டை கடந்து எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்றால், அதற்கும் வங்கிகள் ஒரு எல்லையை வைத்திருக்கிறன.

அந்த எல்லை எது என்பதனை வங்கிகள் பெரும்பாலும் உங்களுக்கு தெரிவிப்பதில்லை.

இந்த எல்லை மீறுதலை அனுமதிக்க மறுக்கும் உரிமையையும் வங்கிகள் தங்கள் வசமே வைத்துள்ளன.

அவைலபிள் கிரிடிட் லிமிட் (Available credit limit):

அனுமதிக்கப்பட்ட கிரிடிட் லிமிட்டில் இதுவரை பயன்படுத்தியுள்ளது போக தற்போது மீதியுள்ளது என்று பொருள்.

உதாரணமாக, உங்களது கிரிடிட் லிமிட் ரூ 1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இதுவரையிலும் ரூ 80 ஆயிரம் செலவு செய்திருந்தால் தற்போது மீதமிருக்கும் ரூ 20 ஆயிரம் தான் 'அவைலபிள் கிரிடிட் லிமிட்' என்று குறிப்பிடப்படுகிறது.

பேமென்ட் டியூ டேட் (Payment Due Date ):

ஒவ்வொரு மாதமும், நீங்கள் கிரிடிட் கார்டுக்கான தவணையை செலுத்த வேண்டிய தேதி இது. அதாவது, இந்தத்தேதியில் வங்கிக்கு உங்கள் காசோலை அல்ல, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பணம் சென்று சேர்ந்திருக்க வேண்டிய தேதி. உங்களது காசோலை வங்கியால் பணமாக்கப்படுகின்ற தேதி தான் இந்த பேமென்ட் டியூ டேட் என்பதனால், இந்த தேதியில் பணமாக்கத்தக்க வகையில் உங்களது காசோலை முன்னதாகவே வங்கியை சென்றடையும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேட்மெண்ட் டேட் (Statement Date)

நீங்கள் கடந்த ஒரு மாதமாக வாங்கிய பொருட்களின் பில்களுக்கான பட்டியல் இது. இதில் உங்களது பயன்பாடு தேதி வாரியாக பட்டியலிடப்படுகிறது. எங்கெங்கெல்லாம் எப்போதெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

அது மட்டுமல்ல, வட்டி; கிரிடிட் கார்டுக்கான ஆண்டு கட்டணம்; தாமதத்திற்கான அபராத வட்டி இவையெல்லாமே கூட இந்த பட்டியலில் இடம் பெறுகிறது. இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து தகவல்களுமே சரியானவையா என்பதனை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

ஏதேனும், தவறான கட்டணங்களோ, பயன்பாடு பில்களோ காணப்படுமானால், அது குறித்து உடனடியாக புகார் செய்ய வேண்டும்.

மொத்த நிலுவை தொகை (Total amount Due):

மொத்த நிலுவை தொகை என்பது குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பெற்றுள்ள மொத்த கடன், அதன் மீதான வட்டி, அபராத வட்டி (பொருந்துமெனில்) இன்னும் என்னென்ன கட்டணங்கள் உண்டோ அனைத்தும் சேர்ந்தது.

குறைந்தபட்சம் செலுத்த வேண்டிய தொகை (Minimum Amount Due ):

ஒவ்வொரு மாதமும், மொத்த கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் திரும்ப செலுத்தலாம். அந்த குறைந்த பட்சம் செலுத்த வேண்டிய தொகை என்பது, மொத்த கடன் தொகையில் 5 சதவீதம். இந்த குறைந்தபட்ச தொகையை மேலே சொன்னபடி சரியான தேதியில் கட்டத்தவறினால், வங்கிகள் தாமதத்திற்கென அபராத வட்டி வசூல் செய்கின்றன. நீங்கள் குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்துகிறீர்கள் என்றால் மீதமுள்ள நிலுவைத்தொகைக்கு வங்கி வட்டி வசூல் செய்கிறது. இந்த வட்டி வீதம் மிகவும் அதிகமென்பது நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அப்படி ஒவ்வொரு மாதமும் வட்டி மேல் வட்டி என்பது உங்கள் மீது பெரும் சுமையாக வளர்ந்து கொண்டே போகலாம்.

எப்படி தெரியுமா?

நீங்கள் குறைந்த பட்ச தொகையை மட்டுமே செலுத்துகிறீர்களென்றால், இந்த வங்கிகள் மறுபடியும் வட்டியை மொத்த நிலுவைத்தொகைக்கே கணக்கிடுகின்றன.

உதாரணமாக, ஒரு மாதம் நீங்கள் மொத்த நிலுவை தொகையில் 60 சதவீதத்தை திரும்ப செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் கடந்த முறை கட்டாமல் விடப்பட்ட 40 சதவீதத்துக்கு மட்டும் தானே வட்டியை கணக்கிட வேண்டும். ஆனால், மாறாக 100 சதவீதத்துக்குமே வட்டி கணக்கிடப்படுகிறது. இந்த வகையில், கடந்த மாதம் நீங்கள் செலுத்திய குறைந்த பட்ச தொகைக்கும் சேர்த்து மீண்டும் வட்டி செலுத்த வேண்டியவராகிறீர்கள்.

இதைத்தான் 'கடன் சுமையாக வளர்ந்து கொண்டே போகலாம்' என்று மேலே குறிப்பிட்டிருந்தோம்.

ரிவார்டு பாய்ண்டுகள் (Reward Points):

கிரிடிட் கார்டுகளை அதிக அளவில் நீங்கள் பயன்படுத்தும்படி உங்களை தூண்டுவதற்காக வங்கிகள் கையாளும் வியாபார யுக்தி தான் இந்த ரிவார்டு பாய்ண்டுகள். ஒவ்வொரு முறையும் நீங்கள் கார்டை பயன்படுத்துகிற அளவை பொறுத்து இந்த ரிவார்டு பாய்ண்டுகள் கணக்கிடப்படுகின்றன. உங்களிடம் சேர்ந்துள்ள ரிவார்டு பாய்ண்டுகளை, நீங்கள் அவர்கள் தருகிற ஏதேனும் பொருள்களுக்கு மாற்றிக்கொள்ளலாம். எவ்வளவு பாய்ண்டுக்கு என்ன பொருளை நீங்கள் பெறலாம் என்று அவர்கள் ஒரு பட்டியலை வைத்துள்ளனர். ஸ்டேட்மென்டில், கடந்த மாதம் எவ்வளவு பாய்ண்டுகள் இருந்தன தற்போது எவ்வளவு பாய்ண்டுகள் பெற்றுள்ளீர்கள்? எவ்வளவு பாய்ண்டுகளை நீங்கள் பொருட்களாக மாற்றிக்கொண்டுள்ளீர்கள்? மீதமுள்ள பாய்ண்டுகள் எவ்வளவு?' என்ற தகவல்களும் கார்டு ஸ்டேட்மெண்ட்டில் தவறாமல் இடம் பெறுகின்றன.

ஆகவே, அடுத்த முறை கார்டு ஸ்டேட்மெண்ட் வந்ததும் அனைத்தையும் படித்துப்பாருங்கள். மோசடிகளை தடுக்கவும் தவறுகளை கண்டுபிடித்து சரி செய்யவும் ஆபத்துக்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளவும் இது உதவும்.

நன்றி தினத்தந்தி

Monday, July 4, 2011

உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் தேரோட்டம்


உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் நேற்று தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் 7 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உலக அளவில் புகழ் பெற்ற 12-ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகன்நாதர் கோவில், ஒரிசா மாநிலம் பூரி நகரில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்ட திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேரோட்ட திருவிழா நேற்று பிற்பகலில் தொடங்கியது. இந்த விழாவில், உலகம் முழுவதும் இருந்து 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேராட்ட திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். மேலும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய மற்றொரு தேரில் அவருடைய சகோதரர் பாலபத்ரர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவி அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

கோவிலில் உள்ள சிங்க வாசல் அருகே மூன்று தேர்களும் தயார் நிலையில் இருந்தன. முன்னதாக, ஜெகன்நாதர், பாலபத்ரர், சுபத்ரா தேவி ஆகிய கடவுளர்களின் சிலைகளை கோவில் ஊழியர்கள் தோளில் சுமந்து வந்து தேர்களில் வைத்தனர். அப்போது, பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த விழாவில் ஒரிசா கவர்னர் எம்.சி.பந்த்ரா உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யை தங்க துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கி சுத்தம் செய்தார். அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணி அளவில் தேரோட்ட விழா தொடங்கியது. முதலில் பாலபத்ரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி உள்ளிட்ட மற்ற சிறு தேர்களும் புறப்பட்டன. கடைசியாக ஜெகன்நாதர் தேர் புறப்பட்டது.

குண்டிச்சா கோவில் நோக்கி செல்லும் இந்த தேரோட்டத்தின் ஒரு அங்கமாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு பெறுவது வழக்கம். அதன் பிறகு, தேரோட்டம் தொடங்கி வருகிற 11-ந் தேதி அன்று நிறைவடையும்.

Saturday, July 2, 2011

வந்தாச்சு இ-சிகரெட் இனி, வராது கேன்சர்!

புகை பிடிப்பவர்கள், புகையை சுவாசிப்பவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் வகையில் இ-சிகரெட் விற்பனைக்கு வந்துள் ளது. குர்கானை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஜாய் 510’ என்ற அதன் விலை 1 ,650 ரூபாய். கடந்த ஆண்டில் ரிலீசான ஹாலி வுட் படம் ‘தி டூரிஸ்ட்’. ஜான் டெப் அதில் ஹீரோ. ஏஞ்சலினா ஜூலி ஹீரோயின். ரயிலில் எதிரெதிரே அமர்ந்து பயணம் செய்யும் காட்சி. அதில் சிகரெட்டை இழுத்து புகை விட்டுக் கொண்டே இருப்பார் டெப். முகத்தில் புகை படர்ந்தாலும் அமைதி காப்பார் ஏஞ்சலினா.

‘‘நான் புகை பிடிப்பது உன்னை பாதிக்கவில்லையா... என்று கேட்கும் டெப், இது எலக்டிரானிக் சிகரெட், பாதிக்காது’’ என்பார். ஏஞ்சலினா ஆச்சரியமாக பார்க்க, ‘‘நம்பவில்லையா..’’ என்றபடி அதன் தீ நாக்கை கையில் தேய்த்தபடி... இது எல்இடி லைட் என்று கூறுவார். ஆம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட இ-சிகரெட், இந்தியாவில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளது. குர்கானை சேர்ந்த இணைய தள நிறுவனமான விண்ட்பைட் டாட் இன் இதை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து ‘ஜாய் 510’ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பவுண்டன் பேனா வடிவில் இருக்கும் அதில், அழுத்தி இங்க் நிரப்ப இருக்கும் பகுதியும் உண்டு. பேனாவில் இங்க், இ-சிகரெட்டில் நிகோடின் திரவம். ஆம். இந்த நிகோடின்தான் சிகரெட் பிடிப்பவர்களை திருப்திபடுத்துகிறது. திரவத்தை சூடாக்க பேட்டரி, முனையில் எல்இடி விளக்கு. ‘ஜாய் 510’ சிகரெட்டின் ஒரு விசையை அழுத்தினால் பேட்டரி இயங்கி திரவம் சூடாகி புகை வரும். சிகரெட் முனையில் தீ நாக்கு போலவே விளக்கு எரியும்.

பிறகு வாயில் வைத்து இழுத்து வட்ட வட்டமாக புகை விடலாம். அந்த புகையால் யாருக்கும் பகையில்லை. இந்த இ-சிகரெட் சிலமுறை பயன்படுத்தி தூக்கி எறிவது ரூ. 300 , நீண்ட காலம் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது ரூ. 1 ,650 என 2 விலையில் கிடைக்கிறது. சிகரெட் பழக்கத்தை விட முடியாதவர்கள் இதற்கு மாறலாம், கேன்சரின் ஆபத்து இல்லாமல்!

வெற்றியின் குறுக்கே கோபம்

'கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்' என்கிறார் ரால்ப் வால்டோ.

ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.

'எனக்குக் கோபமே வராதுங்க' என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.

கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம் 'நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?' என்று கேட்டால் கூட 'எவண்டா அப்படிச் சொன்னது?' என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. 'வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காத' கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக் கோபம் எழும். அந்த கோபம் கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும்போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.

'மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்' என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.

ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை.

கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாகமாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். `நீ... எப்படிய்யா என் மனைவியைப் பற்றி பற்றி தப்பாப் பேசலாம்' என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம். இதை `எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர்' என்பார்கள்.

இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எதிராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். இதை `இம்ப்ளோசிவ் ஆங்கர்' என்பார்கள்.

எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒரு கை பார்க்காமல் விடாது என்பது தான் உண்மை. சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பலவீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே பதுங்கிக் கிடக்கிறது.

மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு என பல நோய்களுக்கும் கோபமே அடிப்படையாய் இருப்பதாய் மருத்துவம் நீட்டும் பட்டியல் எச்சரிக்கிறது.

அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒரு படி மேலே போய், நோய்கள், காயங்கள் போன்றவை குணம் அடையாமல் இருப்பதன் காரணமும் கோபமே என்கிறது.

கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக் கைதிகளின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டோ பலரும் சிறைச்சாலைக்கு வந்து விடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோபம் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.

இருபத்து ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டு வெளியே வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அதிகாரிகளின் மீது கடுமையான கோபம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, `சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்' என வெளிச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவக் குறிப்புகள் பேசுகின்றன.

உறவுகளுக்கு இடையே வரும் பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. `கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்' என்றோ, 'கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்' என்றோதான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன.

கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது.... என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்.

அலுவலகத்தில் வெற்றியைத் தட்டிப் பறிப்பதும், புரமோஷனைக் கெடுப்பதும் பல வேளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமேதான். `கொஞ்சம் கோபப்படாம இருந்திருக்கலாம்...', `மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்...' என்பது போன்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் உலவித் திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.

மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின் கணக்குகள் எண்ணிலடங்காதவை.

கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. நான் செய்வதும் சொல்வதும் சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான கோபங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை. மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.

'அவரு 'வள் வள்'ன்னு எரிஞ்சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல...' என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை. அடுத்தடுத்த இடங் களில் அது தொடர்ந்து, அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிறது என்பதே அது!

நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், `இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே. நான் நினைத்தால் இந்தக் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்' எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்
ஆனந்தத்தை அள்ளி வைப்போம்!


***************************************************

கோபத்தைக் கட்டுப்படுத்த...

கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை பலரும் பரிந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கிடைக்கும் சில பரிந்துரைகள் இவை...

1. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின்படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.

2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். 'இன்னா செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் செய்தலும்' உறவுகளுக்கிடையே நீண்டகால பந்தத்தை உருவாக்கும். `அடுத்தவர்கள் என்ன செய்யவில்லை' எனும் பார்வையிலிருந்து, `நான் என்ன செய்தேன்' என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.

3. கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.

4. கோபம் வந்தவுடன் அதை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.

5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களின் சகவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

6. நமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள்.

7. சிரிக்கப் பழகுங்கள். நகைச்சுவைத் திரைப்படங்கள், கார்ட்டூன் படங்கள் பாருங்கள். நகைச்சுவை நூல்களை வாசியுங்கள். மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.

8. இப்போது கோபத்தைத் தூண்டிய இந்தச் செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா என யோசியுங்கள். டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால் எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.

9. இந்தச் செயல் உங்கள் மீது திட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள். பெரும்பாலான கோபங்கள் காணாமல் போய்விடும்.

10. மனதார மன்னியுங்கள். இந்த ஒரே ஒரு பண்பு உங்களிடம் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும்.
சேவியர்

Friday, July 1, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

பிரபஞ்சத்திலுள்ள சகல மொழி திரைப்பட கதாசிரியர்களும் வெளிவர இருக்கும் 'லேரி க்ரவுன்'(larry crowne) ஹாலிவுட் படத்துக்காக காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அத்தனை மொழி எழுத்தாளர்களும் அந்தந்த மொழியிலுள்ள கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பார்கள். சூடம் ஏற்றி அவரவர் குலதெய்வத்தின் முன்னாள் 'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...' என சத்தியம் செய்வார்கள். ஆனால், நம்பத்தான் ஈ, எறும்பு கூட தயாரில்லை.

காரணம், 'லேரி க்ரவுன்' படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஜூலியா ராபட்ஸ். இத்தனைக்கும் 44 வயதாகும் இந்த அமெரிக்க நடிகர், கவர்ச்சிக் கன்னியுமல்ல. செக்ஸ் பாமும் அல்ல. அகடமி விருது பெற்ற நடிகை. இவரது கதை அறிவுதான் காரணமா அல்லது இவருக்கு அமைந்த ஏஜென்ட் திறமை சாலியா...?  ஒரு எழவும் புரியவில்லை. ஆனால், ஜூலியா ராபட்ஸ் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் ஒரு கதை இருக்கும். அந்த 'நாட்'டை எந்த மொழி கதாசிரியரும் அவரவர் கலாச்சாரத்துக்கு ஏற்ப கையாள முடியும். காமெடி ஒன்லைனை ஆக்ஷன் படமாக மாற்றலாம். ஆக்ஷன் கருவை, நகைச்சுவை ஜூகல் பந்தியாக பரிமாறலாம். சுருக்கமாக சொல்வதென்றால் குறைந்தபட்சம் ஒரு சீனையாவது நிச்சயம் சுட முடியும்.

1990 'பிரட்டி வுமன்' படத்தில் ஹீரோயினாக நடித்ததையடுத்து டாப் நடிகைகளில் ஒருவரானார். அப்போது அடிக்க ஆரம்பித்த ஜாக்பாட், இன்றுவரை கதாசிரியர்களுக்கு அடித்துக் கொண்டேயிருக்கிறது. 'மை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் வெட்டிங்', 'மிஸ்டிக் பீஸா', 'ரன் அவே ப்ரைட்', 'வேலன்டைன்ஸ் டே', 'தி பெலிகன் ப்ரீஃப்', 'ஓஷன்ஸ் லெவன்', 'டூவெல்', 'ஸ்லீப்பிங்  வித் எனிமி', 'ஸ்டெப் மாம்', 'தி மெக்சிகன்', 'டூப்ளிசிட்டி' என இவர் நடித்தப் பல படங்கள், உருவாய், மருவாய், இளதாய், ஒளியாய் தமிழ் உட்பட பல மொழிப் படங்களில் ஒழி வீசிக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் இந்த லிஸ்டில், 'லேரி க்ரவுன்' படமும் இடம்பெறும் என்று திடமாக கதாசிரியர்கள் நம்புகிறார்கள். அதற்காகவே இப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கவும் செய்கிறார்கள்.

நடுத்தர வயதுள்ள லேரி க்ரவுன், பிக் பாக்ஸ் ஸ்டோரில் பல்லாண்டுகளாக பணிபுரிபவர். பிக் பாக்ஸ் ஸ்டோர் என்றதும் அது ஏதோவொரு ஸ்டோர் போல என நினைத்துவிட வேண்டாம். பல கிளைகள் கொண்ட, பிரமாண்டமான பரப்பில் விரிந்திருக்கும் சூப்பர் மார்கெட்டைத்தான் இப்படி அழைக்கிறார்கள்.

இதில் டீம் லீடர் அளவுக்கு உயர்ந்த லேரி க்ரவுனுக்கு சுபயோக சுபதினத்தில் வேலை பறிபோகிறது. காரணம், அந்த ஆண்டு அவருக்கு நிர்வாகம் பதவி உயர்வு அளிக்க வேண்டும். அதற்கு அவர் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆனால், லேரி க்ரவுன், பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர். எனவே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

இதனால் மனமுடையும் லேரி க்ரவுன், டிகிரி படிக்க முடிவு செய்கிறார். ஒரு கல்லூரியிலும் அவருக்கு இடம் கிடைக்கிறது. மாணவராக சேருகிறார். உடன் படிப்பவர்கள் அனைவருமே இளைஞர்கள். லேரி மட்டுமே அரை கிழம். சக மாணவர்களை பார்த்து தனது டிரெஸ்ஸிங் ஸ்டைல், ஹேர் ஸ்டைலை மாற்றுகிறார். பழைய ஸ்கூட்டரில் விர்ர்ர்ரென பறக்கிறார். பாடம் நடத்த வரும் ஜூலியா ராபட்ஸை  காதலிக்கிறார். ஜூலியாவுக்கு லேரி மீது ஈர்ப்பு வருகிறது. இருவரும் கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுகிறார்கள்.

முடிவு என்ன என்பதை 'லேரி க்ரவுன்' படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அல்லது இக்கதையின் சாயலில் அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கும் தமிழ்ப் படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

'சேவிங் ப்ரைவேட் ரியான்', 'யூ காட் எ மெயில்', 'டாய் ஸ்டோரி' படத்தின் மூன்று பாகங்கள் 'டாவின்சி கோட்' ஆகிய படங்களில் நடித்த டாம் ஹாங்க்ஸ், இப்படத்தை எழுதி, இயக்கி தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

என்றாலும் இது ஜூலியா ராபட்ஸின் படம் தான், இல்லையா?

    கே.என்.சிவராமன்