Saturday, May 28, 2011

சிரிப்போம் சிந்திப்போம்

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"வருத்தப்படாதே, என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.

"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.

வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை. இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது. இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான். இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான். ஆனால் ஆச்சர்யம்! பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம். அதிலும் டாக்ஸி ஓட்டுனர் பொறுமை இழக்கவில்லை. ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.

இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு. இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.

"எப்படி இவ்வளவு பொறுமையாய், யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிரீகள்?"

அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர், "என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது. வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும் குப்பைகளையெல்லாம் என் மனதில் சேர்த்துக்கொள்ளவில்லை. அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது. 

இலக்குதான் முக்கியம்,
இடையில் வரும் இடைஞ்சல்கள் அல்ல.

இது பொன்மொழி மட்டுமல்ல Winமொழியும் கூடவே.   
ரஞ்சன்

நேரமே கிடைக்கலீங்க!

'சுத்தமா நேரமே இல்லீங்க...' எனும் வாக்கியத்தைப் பேசாமலோ, கேட்காமலோ ஏதாவது ஒரு நாள் முடிந்திருக்கிறதா?

நேரம் போதவில்லை எனும் குற்றச்சாட்டு எல்லோரிடமும் இருக்கிறது. எல்லோரும், எப்போதும் எதையோ செய்து கொண்டே இருக்கிறார்கள். கடைகள் நள்ளிரவு தாண்டியும் விழித்திருக்கின்றன. வீடுகளில் விளக்குகள் ஜாமங்கள் கடந்தும் கூட அணைக்கப்படாமல் இருக்கின்றன.

சூரியனுக்கு முன்பே சாலைகளில் மக்கள் வந்து விடுகிறார்கள். மக்கள் ரொம்பவே பிஸி. எவ்வளவு தான் பிஸியாய் இருந்தாலும் கடைசியில் 'நேரம் கிடைக்கல' எனும் புராணம் தான்.

'நேரம் பறந்து தான் போகும். ஆனால், அதை ஓட்டற பைலட் நீங்க தான்' என்கிறார் மைக்கேல் ஆட்ஷர்.

உங்களோட வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்களேன். உங்களுடைய நேரமெல்லாம் எப்படிப் போகிறது? ஒரு வேலை முடிந்த அதே இடத்தில் அடுத்த வேலை பிள்ளையார் சுழி போடுகிறது.

நிம்மதியாய் ஒரு காபி குடிக்க முடிவதில்லை, அப்போதும் அடுத்த வேலை குறித்த நினைவுகள் தான். வார இறுதி வந்தால் வீட்டிற்காய் செய்ய வேண்டிய ஆயிரத்தெட்டு வேலைகள் வரிசையாய்க் காத்திருக்கும்.

ஆனால், சிலரைப் பாருங்கள். பெரிய பெரிய பதவியில் இருப்பார்கள். வார இறுதியில் ஹாயாக குடும்பத்தோடு பீச் போவார்கள். காலையில் நாயையும் கூட்டிக் கொண்டு ஜாகிங் போவார்கள். அவர்களுக்கும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. ஆனால், அவர்களால் எல்லாவற்றையும் சமாளித்து எப்படி ஜாலியாகச் சுற்ற முடிகிறது?

அதைப்பற்றிப் பேசுவதைத் தான் 'டைம் மேனேஜ்மெண்ட்' என்கிறார்கள். நேர மேலாண்மை என்று தமிழில் அழைக்கப்படும் இந்த விஷயம், சரியான வேலையை, சரியான நேரத்தில் செய்து முடிக்க வழிகாட்டுகிறது. அதில் முக்கியமான சில தகவல்களைப் பார்ப்போம்.

எவ்வளவுதான் ஓடியாடி வேலை செய்தாலும் கடைசியில் 'அடடா... இந்த வேலையைச் செய்யாம விட்டுட்டோமே. அதைச் செஞ்ச நேரத்துல நான் இதைச் செய்திருக்கலாம்' எனும் ஒர் ஏமாற்றம் ஏற்படுவது இயல்பு.

இதைச் சரி செய்ய, அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் ஒன்றைத் தயாராக்க வேண்டும். அடுத்த நாளைக்கான பணிகளின் பட்டியலை முந்தின நாள் இரவிலேயே தயாராக்கி வைப்பது நல்லது.

இப்போது அந்தப் பட்டியலிலுள்ள விஷயங்களை வரிசைப்படுத்த வேண்டும். எது அவசரமான வேலை, எது அவசியமான வேலை, எது முக்கியமற்ற வேலை என அந்த பட்டியல் இருக்க வேண்டும். இதில் கடைசி இடம் முக்கியமற்ற வேலைகளுக்கு என இருக்கட்டும்.

அதையும் முடித்தபின், பட்டியலிலுள்ள விஷயங்களை எல்லாம் 'சின்னச் சின்ன' செயல்களாக மாற்றி எழுத முயலுங்கள். ஒவ்வொரு சின்னச் சின்ன வேலையும் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வருவதாக இருந்தால் நல்லது.

'ஐயாவுக்கு ஞாபக சக்தி கெட்டி' என பந்தா பண்ணாமல், இந்த விஷயங்களையெல்லாம் ஒரு பேப்பரில் எழுதிப் பழகினால், நீங்கள் டைம் மேனேஜ்மெண்டின் முக்கியமான ஒரு விஷயத்தைக் கற்றுத் தேர்ந்தாகி விட்டது என்று பொருள்.

ஒரு வேலையைச் செய்யும்போது, ஒரு வேலையை மட்டும் செய்ய வேண்டும். நாம் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போதே மெயில் வாசிப்போம், இணையத்தில் உரையாடுவோம், ஃபேஸ்புக்கில் புரள்வோம், விரலில் எஸ்.எம்.எஸ் இருக்கும், காதில் போன் இருக்கும், மனதில் சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருக்கும்.

இப்படி, ஒரு வேலை செய்வதாக நாம் சொல்லிக் கொள்ளும் நேரத்தின் பெரும்பகுதியை மற்ற சில்லறை வேலைகளே பிடுங்கித் தின்னும். இதை விட்டு விட்டு, ஒரு நேரத்தில் ஒரே ஒரு வேலையை மட்டும் செய்தால் உண்மையிலேயே அந்த வேலை சீக்கிரம் முடியும், சரியாகவும் முடியும்.

பின்னர் பார்ப்போம் என்று சில வேலைகளைத் தூக்கி ஓரமாகவே போட்டு வைப்போம். அது ஒரு பெரிய தலைவலியாக மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகளை சின்னச் சின்ன பாகங்களாகப் பிரித்து, அதில் ஒரு பாகத்தை முதலில் செய்ய ஆரம்பியுங்கள். அது உங்களை ரொம்பவே ரிலாக்ஸாக வைக்கும்.

யார் என்ன வேலை கொடுத்தாலும் சரிங்கையா... என தலையாட்டிக் கொண்டே வாங்கிக் குவிக்காதீர்கள். உங்கள் நேரமெல்லாம் புதைகுழியில் போய் விடும். உங்களுக்கு நேரமில்லையேல் 'சாரி, டைம் இல்லை' என சிம்பிளாக மறுத்து விடுவது உசிதம்.

அதேபோல செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் ஒரே நேரத்தில் ஆரம்பிப்பதும் ஆபத்தானது. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்தால் இரண்டுமே உங்களைக் கவிழ்த்து விட வாய்ப்பு உண்டு. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது பெரும்பாலும் நேர விரயத்தில் தான் முடியும் என்கின்றன ஆராய்ச்சிகள்.

'உக்காந்தா சீட்டை விட்டு எழும்பவே மாட்டான்' என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். அதெல்லாம் டேஞ்சர். வேலைக்கு நடுவே இடையிடையே ஓய்வு எடுப்பது வேலையில் சுறுசுறுப்பையும், கவனத்தையும், தெளிவையும் தரும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

எல்லா நேரத்திலும் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. காலையில் உங்களுக்கு உற்சாகமாய் இருக்கும் நேரத்தில் முக்கியமான வேலைகளைச் செய்யுங்கள். மூணு மணிக்கு தூக்கம் வரும். அந்த நேரத்தில் அங்கும் இங்கும் நடந்து செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யுங்கள். இது உங்களுடைய எனர்ஜிக்கேற்ப உங்களை இயக்கும்.

'நீங்கள் தாமதமாகலாம். ஆனால், டைம் எப்பவுமே கரெக்டான நேரத்துக்கு வந்து விடும்' என்கிறார் பெஞ்சமின் பிராங்கிளின்.

ஒரு வேலையைத் திட்டமிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு டைம் லிமிட் செட் பண்ணிக்கொள்ளுங்கள். 'வாசிப்பு' ன்னு ஒரு செயல் இருந்தால் அதற்கு ஒன்றோ, இரண்டோ மணி நேரம் என உங்களுடைய வசதிப்படி நேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு வேலையையும் இவ்வளவு நேரத்தில் செய்து முடிப்பேன் என ஒர் எல்லை உருவாக்கி, அந்த நேரத்துக்குள் அந்த வேலையை செய்து முடியுங்கள்.

எப்போதுமே 'பிஸி பிஸி' என சொல்லிக் கொண்டிருக்கும் நபர்களுடைய வேலைகளைக் கொஞ்சம் கவனமாய்ப் பாருங்கள். அரட்டை, சினிமா, பாட்டு, போன், இ மெயில் என ஏகப்பட்ட நேரத்தை தேவையில்லாமல் அழித்துக் கொண்டிருப்பார்கள். நம்மிடம் இருப்பது ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் மட்டுமே. செலவிடாத நிமிடங்கள், சேமிக்கப்படும் நிமிடங்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.

`எல்லாத்தையும் நான் தான் செய்யணும்' என சகலத்தையும் தன் தலையில் அள்ளிப் போடுவது சிலருடைய பழக்கம். அடுத்தவர்களிடம் வேலை வாங்குவது ஒரு கலை. அதைக் கற்றுக் கொள்ளுங்கள். யாரிடம் என்ன வேலை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுங்கள். கொடுத்தபின் அது அவர்களுடைய வேலையாகி விடும். அதில் போய் மூக்கை நுழைத்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

காத்திருக்கும் நேரம் சுத்த வேஸ்ட் என்பது தான் பலருடைய எண்ணம். திட்டமிட்டால் அந்த நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட முடியும். ஒரு ரிப்போர்ட் வாசிக்க வேண்டியிருக்கலாம், ஐடியாக்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கலாம், கணக்கு போட வேண்டியிருக்கலாம். இப்படிப்பட்ட வேலைகளை காத்திருக்கும் நேரங்களில் அமைத்துக் கொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

'அடடா... ஒரு மணி நேர வெயிட்டிங்கா, ஒரு பேப்பரும், பேனாவும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு...' கடைசி கட்டத்துல யோசிக்காதீங்க.

நாம எதையும் ஒழுங்குபடுத்தி வைக்காததால் நிறைய நேரம் வீணாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள். அலுவலகத்தில் ஒரு தகவலாக இருக்கலாம், வீட்டில் ஒரு பொருளாக இருக்கலாம்... எங்கே வெச்சேன்னு தெரியாம குப்பையைக் கிளறுவதில் எக்கச்சக்க நேரம் கரைந்து போவதுண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடம் உண்டு. அது அங்கங்கே இருந்தால் நேரம் ரொம்ப மிச்சமாகும் என்பது சிம்பிள் அட்வைஸ்.

எல்லாத்துலயும் பெர்பெக்டா இருக்கணும்ன்னு எதிர்பார்ப்பது நமக்கு தேவையற்ற டென்ஷனைத் தான் தரும். சிலர் ஷூவுக்கு பாலீஷ் போடவே ஒரு மணி நேரம் எடுத்துப்பாங்க. அப்படியே அது தேவையான்னு யோசிங்க.

அந்த வேலையை அஞ்சு நிமிஷத்துல முடிச்சா உங்களுக்கு எவ்ளோ நேரம் கிடைக்கும்! அந்த நேரத்தில என்னென்ன வேலைகள் செய்யலாம்ன்னு யோசிங்க. குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்தால், அப்படியே உங்கள் கையை வளைத்து உங்கள் முதுகைத் தட்டிக் கொடுங்கள். அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருந்து தேநீர் அருந்தி அந்த இடைவேளையைக் கொண்டாடுங்கள்.

கடைசியாக முக்கியமான ஒரு விஷயம். வேலைகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி வரிசையா செய்யும்போது உங்களோட வாழ்க்கையை மறந்துடாதீங்க. ஓய்வு, உணவு, உடற்பயிற்சி, குடும்பத்தோடு செலவிடும் நேரம், தூக்கம் எல்லாம் நிறைவா இருக்கட்டும்.

மணித்துளி என்பது காலக் கணக்கு
சரியாய் செலவிடு, வெற்றிகள் உனக்கு!
சேவியர்

Wednesday, May 25, 2011

சிரிப்போம் சிந்திப்போம்

'பேசுவது தப்பா குருவே' என்று வேகமாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

'என் கேட்கிறாய்? உனக்கு என்ன பிரச்சனை?' என்றார் குரு.

'நான் ரொம்ப பேசுகிறேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள், பேசுவது தப்பா?'

'பேசுவது தப்பல்ல, ஆனால் அதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும்' என்று சொன்ன குரு அவனுக்கு ஒரு கதையை சொல்ல துவங்கினார்.
'ஒரு குழாய் ரிப்பேர்காரன் இருந்தான்,  வேலையில் கெட்டிக்காரன், நாணயமானவன். ஒருநாள் அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. வழக்கமான வாடிக்கையாளர்தான் பேசினார். அவர் வீட்டுக் குழாயில் ஏதொ பிரச்சனை, உடனே சரி செய்ய வேண்டும் என்றார். ஆனால் அவரது வீட்டில் யாரும் இல்லை. 'நீயே கதவை திறந்துகொண்டு போ. வீட்டு சாவி முன்பக்க ரோஜா தொட்டிக்கு கிழே இருக்கிறது என்றார். அவனுக்கு தயக்கம். காரணம், அவர் வீட்டில் ஒரு பெரிய சைஸ் அல்சேஷன் நாய் இருப்பதை பார்த்திருக்கிறான்.

'சார், உங்க வீட்டிலே ஒரு நாய் இருக்குமே' என்று சந்தேகத்தை கிளப்பினான்.

அதற்கு அவர் 'அது ஒண்ணும் பண்ணாது. அது பாட்டுக்கு வீட்டுக்குள்ளையே இருக்கும். ஆனால் ஒரு விஷயம். வீட்டில ஒரு கிளி இருக்கு. அது பேசும். ஆனா பேச்சு கொடுத்துடாதே . குழாயை மட்டும் ரிப்பேர் பண்ணிட்டு கிளம்பிடு' என்றார்.

அவனுக்கு தயக்கம்தான் இருந்தாலும் வாடிக்கையாளர் வீடே என்று அங்கு போனான். சொன்னது போலவே பூந்தொட்டிக்கு கீழ் சாவி இருந்தது. வீட்டுக்குள் சென்றதும் அல்சேஷன் அவனை முறைத்து பார்த்தது. ஆனால் ஒன்றும் செய்யவில்லை. இவன் ஒழுகி கொண்டிருந்த குழாயை சரி செய்ய தொடங்கினான். எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது. ஆனால் கிளியின் தொல்லைதான் தாங்க முடியவில்லை. அவனை கிண்டலடித்து பேசியது. விதம் விதமாய் திட்டியது. அவனால் தாங்க முடியவில்லை. கிளம்பும்போது பார்த்துகொள்வோம் என்று அமைதி காத்தான். 
 
வேலை முடிந்தது. அப்போதும் கிளி நிறுத்தவில்லை. இவனுக்கு கோபம் தலைக்கேறியது. வாடிக்கையாளர் சொன்ன அறிவுரையையும் மீறி 'அட முட்டாள் கிளியே, அறிவில்லையா உனக்கு? இப்படி தொந்தரவு செய்றியே' என்று கிளியை நோக்கி கத்தினான்.

அதுவரை அவனுடன் பேசிகொண்டிருந்த கிளி சட்டென்று அல்சேஷன் பக்கம் திரும்பி 'டைகர் அவனை விடாதே கடி' என்றது. உடனே அல்சேஷனும் குழாய் ரிபேர்க்காரனை நோக்கி பாய்ந்து கடித்தது. அதனிடமிருந்து தப்பித்து போவதற்கு அவன் பட்ட பாடு அவனுக்குதான் தெரியும்'.

என்று இந்த வேடிக்கை கதையைச் சொன்னதும் தேவையில்லாமல் பேசுவதால் வந்த பிரச்னையை புரிந்து கொண்டான்.

அப்போது குரு அவனுக்குச் சொன்ன பொன்மொழி 'பேசக்கூடாத இடத்தில் பேசுவது அழிவை தரும்'

இது பொன்மொழி மட்டுமல்ல Winமொழியும் கூடவே.  
 

தெரிந்து கொள்வோம்

'வல்க்ரோ' உருவான கதை!காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள 'வல்க்ரோ' என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டு
பிடிப்புக்கு 'வல்க்ரோ' என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் 'வல்க்ரோ'வுக்கு உண்டு.

சோப்
 

குளியலறைகள் கட்டப்படும் முன்பே சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது பல ஆண்டுகாலம் கழித்துத்தான்.

ஆரம்பத்தில், எண்ணை, மணலைக் கலந்து தேய்த்துக் குளித்தனர். சிலர், வேலையாட்களை வைத்து மரக்கிளைகளால் உடலைத் தேய்த்துவிடக் கூறினர்.

சோப்புகளில் குறிப்பிடத்தக்கது, 1789-ல் ஆண்ட்ரு பியர்ஸ் கண்டுபிடித்த, கண்ணாடி போன்ற சோப். அடுத்து, மிதக்கும் சோப் போன்ற பலவித சோப்புகள் வந்துவிட்டன.சக்கரம்

உலகை நகர வைத்த முக்கியக் கண்டுபிடிப்பு, சக்கரம். தற்போது ஈராக் நாடாக உள்ள மெசடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் கி.மு. 3000 ஆண்டுவாக்கில் சக்கரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. சக்கரம் இல்லையேல் இன்றைய உலக இயக்கமே இல்லை.


'டூத் பிரஷ்'
 

1400-ல் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது இது. முதலில் விலங்குகளின் முடியைப் பயன்படுத்தினர். பன்றியின் முடியைக் கூடப் பயன்படுத்தி உள்ளனர். 1938-ல் முதல் நைலான் டூத்பிரஷ் உருவாக்கப்பட்டது.

'பற்பசை' எனப்படும் 'டூத் பேஸ்ட்', நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே புழக்கத்தில் உள்ளது. அதை ஒரு டியூப்பில் அடைத்து விற்கலாம் என்பதை 1892-ல் வாஷிங்டன் ஷெப்பீல்டு என்ற பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.

Monday, May 23, 2011

அன்று நீ பிறந்தபோது...

"மகளே ! மலரில் பூத்த சிறு மலரே !
மருத்துவமனையின் உள்ளே உன் தாய் !
நகம் கடித்து வெளியே நின்ற நான் !
மகன் பிறப்பான் என்றே எங்களது
இரு மூளை மேடையில் ஒரு கற்பனை !
இரு நூலிடையே வேண்டுதல் நெசவு !
கமுக்க ரகசிய அமுக்கல் கனவு !
கதைப் பின்னலில் எதிர்பார்த்த மின்னல் !

மகளே ! நீ பிறந்தாய் என்றதும் மன ஈர
மண்வற்றி பாலைவனக் காற்று !
கண்கள் வானில் அம்பு குத்தின !
கடல் அலை ஆனது உடல் ரத்தம் !
சுவையால் பிறந்தது சுமை ஆகியதே !
தொங்கிய தலை - தோளில் விழுந்தது !

உள்ளே சென்றேன்; உன் தாய் முகம்
ஒளி தொலைந்த விளக்காய்
என்னைப் பார்க்காது எதிர்பக்கம்
ஒரு சொட்டு நீரை ஒளித்து வைத்தது !
'பெண் பிறந்தால் என்ன ? நாட்டுக்குப்
பெயரே - இந்தியத் தாய் !
மொழிக்குப் பெயர் - தமிழ் அன்னை !
நதிக்குப் பெயரும் - தாய் - தேவியே !'
நான் அடுக்கிய பொய்க் கோட்டையை
நகைக்காத நகைப்பால் உடைத்தாள் !

'தேவியர் அவர்களுக்கு எல்லாம்
திருமணம் இல்லையே இதுவரை !
வரதட்சணைக்குப் பயந்தே அவர்கள்
வாழ்கிறார்கள் - கன்னியராய் !'
என்றாள் உன் தாய்; என் மயில் !
ஏட்டுச் சுரக்காயாய் நின்றேன் !"

தொட்டிலில் கிடக்கும் ஒரு
தங்க நிறப் பனிக்கட்டியே !
'குழந்தை பிறந்தது'
என்ற குதூகலச் சொல் எனது !

'ஆணா, பெண்ணா ...?
'ஆணில்லை, பெண்தான் !' 

நண்பர்களின் முகத்தில்
நைந்த மின் கம்பியில்
ஏறிய மின்சாரம்.....
இனிப்பு நீட்டினேன்
எடுக்கும் கைகளில் ஏனோ தயக்கம்...
ஆண்கள் மட்டுமா....? எனது
அம்மா ஆசை - பேரனே
என் துணை மயிலின் அம்மாவுக்கும்
'பிரசவத் தேர்வில்
தன் மகள் தோற்பாம் !

என் அக்கா தங்கை
எதிர், அண்டைவீட்டுத்
தாய்க்குல மனங்களில்
ஒதுக்கல் - உதட்டுப் பிதுக்கல் !

பாட்டிச் சொல் என்ன...?
'ஆணோ, பெண்ணோ
ஆண்டவன் சித்தம் !'
- பக்திச் சொல்லா இது ?
பிறந்ததை என்ன செய்வது எனப்
பெருஞ் சங்கடத்தைச் சலிப்போடு
செரித்துச் சீரணிக்கும் சித்தாந்தம் !

ஆனாலும் ஆடிப் பிறையே !
அழகே !
எத்தனை பேர் வெறுத்தாலும்
'அப்பாக்கள்' மகளை
வெறுப்பதில்லை !
அப்பாவுக்கு மகன் சண்டைச்
சேவல் !
ஆளாகிவிட்டால்
அவன் தோழன் !
ஆனாலும் மகளே ... நீ எனக்கு
எப்போதும் இனிக்கும் வெல்லம் !
அதனால் நீ அப்பாச் செல்லம் !

உள இயல் ரகசியம் ஒன்று;
ஆண் குழந்தைகள்
அம்மா தோளை விடாத
குரங்கு குட்டிகள் !
பெண் குழந்தைகளோ,
அப்பா முகம் விரைவில் அறிந்து
ஆனந்த மின்னலோடு
அம்மா மடியிலிருந்து
அப்பா தோளுக்கு தாவும்
அணில் பிள்ளைகள் ! 

அடியார்
நன்றி ஆ.வி.
 

Wednesday, May 18, 2011

மறுத்தல் உயர்வு தரும்!

தமிழில் நாம் சொல்வதற்குத் தயங்கும் ரொம்பக் கஷ்டமான வார்த்தை என்ன தெரியுமா?

'முடியாது' என்பதுதான்.

இந்தியக் கலாச்சாரத்தில், 'மறுத்துப் பேசுவது' என்பது கொஞ்சம் அநாகரீகமானது.

'பெரியவங்க சொன்னா மறுத்துப் பேசாதே' எனும் பாட்டி அட்வைஸ் முதல், 'ஐயாவோட பேச்சுக்கு மறுப்பு ஏதுங்க' என்று கக்கத்தில் துண்டைச் செருகும் உழைப்பாளியின் பதில் வரை, மறுத்துப் பேசக் கூடாது என்பதையே போதிக்
கிறது.

'முடியாது' என்று சொல்ல விடாமல் நம்மைப் பின்னுக்கு இழுக்கும் காரணிகள் பல உண்டு.

அந்த நபருடனான நட்பு முறிந்து விடுமோ? நம்மை நம்பி வந்து கேட்கிறார், முடியாது என்றால் நல்லாவா இருக்கும்? முடியாதுன்னு சொல்லிட்டா ரொம்ப வருத்தப்படுவாரே? ஒருவேளை கோபப்படுவாரோ? இப்படிப்பட்ட காரணங்கள் தான் `சரி' எனும் தலையாட்டல்களுக்குக் காரணமாகி விடுகின்றன.

மறுத்துப் பேசாமல் இருப்பது நம்முடைய முதுகின் மேல் `விக்கிரமாதித்த வேதாளமாக' சோதனைகள் வந்து அமரக் காரணமாகிவிடும் என்பதை நாம் உணர்வதில்லை.

'சரி' என்று சொல்வது மிகவும் எளிது. `இதை வாங்கித் தருவீங்களா டாடி?' என்று மகள் கொஞ்சுவாள்...

'இந்த வேலையைச் செய்ய முடியுமா?' என்று மேலதிகாரி விண்ணப்பம் வைப்பார்...

'இதைப் பண்ணுடா ப்ளீஸ்' என்று நண்பன் கேட்பான்...

அப்போதெல்லாம், `சரி' எனும் ஒரு வார்த்தைப் பதில் ரொம்பவே எளிது. ஆனால், அந்த ஒரு பதிலுடன் வேலை முடிந்து போவதில்லை. அதன் விளைவால் நடக்கும் நிகழ்ச்சிகள் நமக்குப் பிடிக்காததாகவோ, நம்மால் செய்ய முடியாததாகவோ இருந்து விடுகிறது.

நமக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைச் செய்ய நாம் ஒத்துக்கொள்ளும்போது, நமக்குப் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்யும் வாய்ப்பு தடைபட்டுப் போகிறது.

உதாரணமாக, அலுவலகத்தில் அதிகமான வேலை தரப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். `சாரி... இன்னிக்கு முடியாது' என்று சொல்வது உங்களுடைய தன்னம்பிக்கையின் அடையாளம்.

அதை விட்டு விட்டு, `சரி குடுங்க' என இழுத்துப் போட்டுக்கொண்டால் உங்களுடைய மாலை நேர திட்டங்களெல்லாம் காலி.

குழந்தை ஏதோ ஒரு பொருளை விரும்பிக் கேட்கிறது. அது தேவையற்றது என நீங்கள் நினைக்கும்போது 'முடியாது' என்று சொல்வதே நல்லது.

எல்லாவற்றுக்கும் சரி என்பது குழந்தைகளின் பதின்வயதுக் காலத்தில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

'முடியாது' என சொல்லி மறுத்து, தோல்வியின் முகத்தையும் குழந்தைகளுக்குக் காட்ட வேண்டும். அதுதான், பிற்காலத்தில் தோல்விகள் சகஜம் என்பதைக் குழந்தைகளுக்குப் போதிக்கும்.

அது தெரியாத இளசுகள்தான் `தோல்வி' எனும் வார்த்தையைக் கேட்டதும் தற்கொலைக்குத் தயாராகி விடுகிறார்கள்.

நெருங்கிய நண்பர்களுக்கிடையே `மறுப்பு' இல்லாதபோது பல கெட்ட பழக்கங்கள் வந்து தொற்றிக் கொள்கின்றன.

'ஒரு தம் போடுவோம் மச்சி' எனும்போது, `வேண்டாம், சாரி...' என ஒரு சின்ன மறுப்பைச் சொன்னாலே தப்பித்து விடலாம்.

'முடியாது' என்று சொல்வது நம்மை நாமே மதிப்பதற்குச் சமம் என்கின்றனர் உளவியலாளர்கள்.

தன்னுடைய லட்சியம் என்ன என்பதில் தெளிவாக இருப்பவர்களால் எளிதில் மறுப்பைச் சொல்ல முடிகிறது. அரைவேக்காடு மனநிலை உடையவர்கள் பெரும்பாலும் மறுத்துச் சொல்லத் தயங்குகிறார்கள்.

காரணம், அது சரியா, தவறா என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை!

என்னோட நேரத்தை நான் மதிக்கிறேன் என்பதன் அடையாளம்தான் தேவையற்றவற்றுக்கு `நோ' சொல்வது!

அடுத்தவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால் நீங்கள் அடுத்தவர்களை மதிக்கிறீர்கள், உங்களை மதிக்கவில்லை என்பதுதான் ஒருவரிச் செய்தி!

எல்லாவற்றையும் தலையாட்டிக் கொண்டே ஏற்றுக் கொள்பவர் களுக்கு ஆயுளும் ரொம்பக் கம்மி. காரணம், அவர்களிடம் எப்போதுமே மனஅழுத்தம் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும்.

மறுக்காததற்காக தன் மீதான கோபமும், தன்னை இந்தச் சூழலில் மாட்டிவிட்டதற்காக மற்றவர்களிடம் கோபமும் எப்போதும் இவர்களிடம் இருக்கும்.

கோபம் கொந்தளிக்கும் மனம் நோய்களின் கூடாரம்தானே!

'முடியாது' என்று சொல்வது தவறில்லை எனும் மனநிலை முதல் தேவை. சொல்வதற்கெல்லாம் `சரி' என தலையாட்டிக் கொண்டிருக்க யாராலும் முடியாது.

'சரி' என ஒத்துக் கொண்டால், அதன் தொடர்ச்சியான விளைவுகள் என்னென்ன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

'என்ன, ஒரு அரை மணி நேர வேலைதானே!' என்று முதலில் நாம் நினைப்போம். அந்த அரை மணி நேரம், அதன் பின் வரக்கூடிய எல்லா வேலைகளையும் பின்னுக்குத் தள்ளும்.

இதேபோல நான்கைந்து அரை மணி நேர வேலைகள் வந்தால் நிலைமை என்னவாகும்? பிஸி...பிஸி... என ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நேற்றைக்குத் தொலைத்த பணத்தை இன்று மீட்கலாம். ஆனால், நேற்று தொலைத்த நேரத்தை என்றுமே மீட்க முடியாது!

'சரி' என்று சொல்வதற்கு ஒரு வார்த்தை போதும்.

'சாரி' என்று சொல்வதற்கு ஒரு சின்ன விளக்கமும் தேவைப்படும்.

மன்னியுங்கள், ஒரு முக்கியமான வேலையில இருக்கேன்...

சாரி, இது எனக்குத் தெரியாத விஷயம்...

சாரி, இப்போதைக்கு புதுசா எதையும் ஒத்துக்கொள்ற மாதிரி இல்லை...

எனக்கு டைமே இல்லை...

இப்போதைக்கு என்னோட கவனத்தை இதுல செலுத்துற மனநிலையில் நான் இல்லை...

சாரி, எனக்கு கொஞ்சம் குடும்பம் சார்ந்த வேலைகள் இருக்கு...

இப்படி ஏதாவது ஒரு சின்ன காரணம் சொல்லி விட்டாலே போதுமானது!

மறுக்கும்போது உங்களுக்கு மாற்று வழி ஏதேனும் தோன்றினால் அதைச் சொல்லலாம்.

மாற்று வழி சொல்லவேண்டும் என்பது கட்டாயமில்லை. மனதில் தோன்றினால் மட்டும் சொல்லுங்கள். தேவையில்லாத விஷயங்களைச் சொல்லி அது `பூமராங்' மாதிரி உங்களைத் திரும்பித் தாக்காமல் இருக்க வேண்டும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அகஸ்டின் ஓக் மண்டினோ புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர். அவருடைய பல புத்தகங்கள் விற்பனையில் சாதனை படைத்தவை. அவருடைய `த கிரேட்டஸ்ட் சேல்ஸ்மேன் இன் த வேல்ட்' புத்தகம் ஐந்து கோடிக்கு மேல் விற்றுப் பட்டையைக் கிளப்பியது. அவர் எழுத்தாளராவதற்கு முன் வாழ்வில் பல்வேறு சோதனைகளில் சிக்கினார்.

மிகப்பெரிய குடிகாரராய் மாறினார். கடைசியில் மனதை ஒருமுகப்படுத்தி, குடிக்கு 'நோ' சொல்லி எழுத்துக்கு வரவேற்புக் கம்பளம் விரித்தார். அதுதான் இன்று அவரை உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளர்களின் வரிசையில் அமர வைத்திருக்கிறது.

எனவே, `நோ' சொல்வது மற்றவர்களோடு மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். உங்கள் மனம் உங்களை தவறு செய்யத் தூண்டும் போதெல்லாம் கூட எழும்பட்டும், `நோ'.

உங்களுடைய வேலைகளையெல்லாம் தரம் பிரியுங்கள். எது அதிமுக்கியம் என்பது முதல், எது அவசியமற்றது என்பது வரை தரம் பிரியுங்கள். அதனடிப்படையில் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். எதை மறுக்கவேண்டும் என்பது உங்களுக்கு அப்போது புரியும்.

மறுத்துப் பேசுவது உங்களுக்கு நல்ல பெயரைத்தான் சம்பாதித்துத் தரும் என்பது உண்மைதான். இருப்பினும், எதை, எந்தச் சூழ்நிலையில் மறுக்க வேண்டும் என்பதும் முக்கியம். குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் அளிக்கப்படும் பணியை மறுக்கும்போது, அது உங்கள் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

உதாரணமாக, மேல் அதிகாரி சொல்லும் எல்லா வேலைக்கும் `நோ' சொன்னால் உங்களது எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் நிலை வரலாம். `இந்த ஆள் எந்த வேலை சொன்னாலும் என்னால் முடியாது என்று சொல்கிறார். எனவே, இவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கொடுப்பது சரியல்ல' என்று நிறுவனம் நினைக்கலாம்.

எனவே, எந்த சூழ்நிலையில் 'நோ' சொல்ல வேண்டும் என்பதை புரிந்து நடந்துகொள்வதே புத்திசாலித்தனம்.

'அவரு முடியும்னா முடியும்னு சொல்லுவாரு, சொன்னா முடிச்சிடுவாரு' எனும் டயலாக்கை நீங்கள் ஆங்காங்கே கேட்டிருக்க வாய்ப்பு உண்டு!

உலகின் பணக்காரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வாரன் பபெட் சொல்லும் சேதி சுவாரஸ்ய
மானது.

சாதாரண வெற்றியாளர்களுக்கும், சாதனை வெற்றி
யாளர்களுக்குமிடையே உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

'சாதனை வெற்றியாளர்கள் ஏறக்குறைய எல்லாவற்றுக்கும் 'நோ' சொல்வார்கள்' என்கிறார் இவர்.

முக்கியமானவை தவிர எல்லாவற்றையும் மறுத்துவிட வேண்டும் என்பதே இவரது வெற்றி பார்முலா.

மறுப்புச் சொல்லிட மறக்கவும் வேண்டாம்.

வாழ்வின் இனிமையைத் துறக்கவும் வேண்டாம்!

வீம்பு அரசியலும் வீரப் பாவனைகளும்

புலிகள் வீழ்ந்து இரண்டு வருடமாகி விட்டதே…. மக்களின் அல்லல்களை மேலும் நீடிக்க விடாமல் அவர்கள் மீளும் வழியை விரைவுபடுத்த செய்த முன்முயற்சிகள் என்னென்ன? என்று யோசித்தால், சில வீரவசனங்களும்…. வெளிநாட்டுப் பயணங்களும்…. பழைய பெருங்காய டப்பா எதிர்ப்பறிக்கைகளும்…. சனத்தைப் பொய்யான கனவுகளில் மிதத்திப் போட்டுச் சரித்த ‘தேசத்தந்தை’ முடிந்தார், இனி அவர் தாயை வைத்தாவது உணர்ச்சியேத்தலாமா என்று ஓடிய நாடகமும்தான் ஈராண்டுச் சாதனையாக எஞ்சுகின்றன! பதவி என்று வந்துவிட்டால் முன்னாள் புலியெதிர்ப்புப் போராளிகளுக்கும்தான் திடீரெனப் பார்வதியம்மா மீது எவ்வளவு பாசக்கதறல் வருகிறது!

இன்னல்கள் நீங்கிவிட்டால் மக்கள் அரச எதிர்ப்பை மறந்துவிடுவார்களே என்ற பதற்றமே இன்னமும் இவர்களது ஒரே அரசியலாகத் தொடர்வதை என்னவென்று சொல்ல? மக்கள் படும் கஷ்டங்களை நீக்குவதற்காக, தங்களது எந்தவொரு வீம்பையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லாத மேட்டுக்குடி அரசியலிலேயே இவர்கள் திளைத்து வருகிறார்கள். ஏதாவது விந்தையால் தீர்வு வந்துவிடுமென்று வீரவசனங்களைப் பேசிக் காத்திருக்க இவர்களது இழப்பில்லா நோவில்லா வாழ்நிலை இடமளிக்கலாம். ஆனால், போரினால் இழந்தவைகளை மீளப்பெற்றுத் தங்கள் இயல்பு வாழ்வை அடைந்துவிட முடியுமா என்ற ஏக்கத்துடன் உலைபவர்களுக்கு இவர்களது ‘விந்தை நினைவுகள்’ உணவாகாது; வீடாகாது; தொழிலாகாது; நிம்மதியுமாகாது. அவர்களது கஷ்டங்களினால் உண்டான விரக்தியையும் கோபத்தையும் வெறுப்பையும் தவறான வழியில் அரசியலாக்கிப் பிழைக்கும் கொழுப்பே இதுவாகும்.

சிங்கள அரசுக்குச் சவால் விட்டபடி, அவர்களைப் பணியவைக்கும் காலத்திற்காகக் காத்திருக்க, போருக்குத் தப்பி ‘வாழ்ந்திருக்க’ முடிந்த சிலருக்கு முடியுமாக இருக்கலாம். ஆனால், போருக்குள் சிக்கவைக்கப்பட்டு நொந்தலையும் சாதாரண மக்களுக்கு இன்றைய உடனடித் தேவைகளே பெரும் ஏக்கமாக இருக்கிறது. யாருடைய வாழ்வை அழித்து யார் வீம்பு கொள்வது?

ஒரு ஸென் கதை: பலகாலமாகத் தன்னை வருத்திப் பயிற்சி செய்து தண்ணீரின் மேல் நடக்கும் விந்தையைக் கற்றுக் கொண்டார் ஒரு துறவி. இறுதியில் எப்படியோ தனது இலட்சியம் கைகூடிவிட்ட திருப்தியை வெளிப்படுத்தி நீரின் மேல் நடந்து காட்டி பெருமையடித்துக் கொண்டார். கரையிலிருந்த மற்றொரு துறவியின் சீடன், இந்த விந்தையைப் பார்த்துவிட்டுக் கேட்டான். “குருவே, உங்களிடம் இதுபோல விந்தை ஏதும் இல்லையா?” துறவி சிரித்தார். “ஏன் இல்லை? என்னிடம் ஒன்றல்ல மூன்று விந்தைகள் இருக்கின்றன” என்றார். “அப்படியா?” என்று ஆவல் தாங்கமாட்டாமல் கேட்டான் சீடன். “எனக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடித்தால் அடங்கி விடுகிறது. இது முதல் விந்தை. பசியெடுக்கும்போது சாப்பிட்டால் பசி அடங்கி விடுகிறது. இது இரண்டாம் விந்தை. இதையெல்லாம் விடப் பெரிய விந்தை தூக்கம் வந்தால் படுத்தவுடன் உறக்கம் கூடிவிடுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதேயில்லை.”

அற்புதங்களுக்குக் காத்திருக்கச் சொல்வதை விட அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து அந்த விந்தையைக் கண்டுகொள்ளச் சொல்லும் கதை அது. எதிர்காலத்துக்கான இன்சூரன்ஸ் ஏற்பாடுகளைச் சொல்லிக் கொண்டிருப்பது, நமது இன்றைய வாழ்வை வலிந்து வதைபட விடும் ஏமாற்றாக நீடிக்க அனுமதிக்கக் கூடாது. நாம் மீள்வதற்கான வழிகளை அடைத்தபடியே சுயவிருப்ப வீம்பு அரசியலைத் தொடர்ந்து நடத்தும் வீரப் பாவனைகளை இனி நாம் நிறுத்த வேண்டும்.

நொந்த மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்குள் தள்ளிவிடும் இலகுவான அரசியலையே தேர்தல் வாக்குகளுக்காகச் செய்கிறீர்கள். புண்பட்ட மனங்கள் வெறுப்பை எளிதில் வாங்கிக் கொள்கின்றன. செயற்கையான வீராவேசப் பேச்சுத் துப்பல்களில் மயங்கி சமூகம் பிழையான திசையில் இழுத்துச் செல்லப்பட அனுமதித்தோம். விளைவை அனுபவித்தோம். ஆவேசத்தால் அழிவுகளை உருவாக்கிப் பின் அந்த அழிவுகளால் ஆவேசத்தை வளர்த்து மேலும் மிகையழிவு தேடி…. என்னும் இந்தச் சுழலிலிருந்து இனி நாம் விடுபட வேண்டும்.

வெறுப்பில் இருந்து ஆக்கபூர்வமாக எதுவும் உருவாகாது. அது உடனடியாக வன்முறை அரசியலாளர்களின் கைக்கு ஆயுதமாகச் சென்றுவிடும். பிறகு அதிலிருந்து மீள்வதற்கான போராட்டமே மிகக் கடுமையானதாக மாறிவிடும். அரசியல் தேவைகளுக்காக உருவாக்கி வளர்க்கப்படும் வெறுப்பு, வரலாற்றில் மிகப்பெரிய விலையை நம்மிடம் கோரும் என்பதை நாம் அறிந்துகொண்டு விட்டோம்.

வெறுப்பு, நமது குறைகளை நாம் காணமுடியாதபடி மறைத்துவிடுகிறது. நம் குறைகளை இனங்கண்டு களைவதன் மூலமே நம்மை நீதியுள்ள சமூகமாக்கிக் கொள்ள முடியும்@ உலகின் ஆதரவு பெற்ற சமூகமாக முடியும். அதன்பிறகே அநீதிகளை எதிர்த்து நாம் வெற்றி பெறுவதற்கும் வழி கிடைக்கும்.

சுதந்திரத்திற்காக வன்முறையைக் கைக்கொண்ட சமூகங்கள் மேலும் அடிமைத்தனத்தையே அடைந்ததை வரலாறு காட்டுகின்றது. சுயமரியாதைக்காக வன்முறையைக் கைக்கொண்டவர்கள் மேலும் இழிவையே தேடிக்கொண்டதே பாடமாக இருக்கிறது. வன்முறை நம்மிடம் இருப்பதையும் பறித்துவிடும், எதையுமே அளிக்காது என்பதை இன்று நம்மைவிட உணர்ந்தவர்கள் யாரிருக்க முடியும்? ஆனபோதும், வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் பேச்சுக்களுக்கு அப்பால் எதையும் நகர்த்தத் தெரியாதவர்களையே இன்னும் நம் தலைவர்களாக உலாவர விட்டிருக்கிறோம். ஒட்டுமொத்த சமூகத்தையே பாசிஸ மனநிலைக்குள் அமிழ்த்தும் வெற்று வீம்பு ரோச உரையாடல்களே இன்றும் நம் அரசியல் அபத்தமாகத் தொடர்கிறது.

இந்த பாசிஸ மனஉருவாக்கம் பற்றித் தெரிந்துகொள்ள நாம் மீண்டும் மீண்டும் ஒருகால ஜெர்மானிய தேசத்தந்தை, பெருந்தலைவர் அடோல்ப் ஹிட்லர் அவர்களையே வியந்து நாட வேண்டியிருக்கிறது. என்னமாதிரி ஒரு முன்னோடித் தேசியத் தலைவர் அவர்!

ஹிட்லரை உளவியல் அடிப்படையில் ஆராய்ந்து ‘பாசிஸமும் பொதுமக்கள் உளவியலும்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவரான வில்ஹெல்ம் ரீஷ், ஹிட்லரின் மேடைப்பேச்சு பற்றி குறிப்பிட்டுச் சொல்லும் கருத்துக்கள் இவை: “அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்த்து விடுவது அவர் பாணி. அவை ஒருபோதும் மக்கள் திரளைக் கொந்தளிக்க வைப்பதில்லை. கலாசாரம் சார்ந்த விஷயங்களைப் பேசுபொருளாக எடுத்துக் கொள்வதே அவர்களைக் கவரும். அவற்றைக் கனவும் இலட்சியவாதமும் சார்ந்து உச்சப்படுத்துவார் அவர். பொது எதிரியை உருவாக்குவார். சகல தீமைகளுக்கும் அதுவே காரணம் என்பார். அதன்மீது வெறுப்பை உருவாக்கி தீவிரப்படுத்தியபடியே செல்வார்….

மக்களை உணர்ச்சிவசப்படச் செய்யுமாறு பேசத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உரியதாகும் என்பது ஹிட்லரின் வாதம். தனிமனிதனின் சிந்தனைத் திறன், மனசாட்சி ஆகியவற்றை ஊதித்தள்ளிவிட வேண்டும். தனிமனிதர்கள் ஒரு கூட்டமாக ஒன்றிணையும்போது அவர்களின் தனிப்பட்ட அறிவுத்திறன்கள், தர்க்கநியாயங்கள் அனைத்தையும் இழந்து உணர்ச்சிகளால் ஆட்டுவிக்கப்படும் அறிவற்ற ஒற்றைப் பெருங்கும்பலாக ஆகிவிடுகிறார்கள். இந்தக் கும்பல் மனநிலையைக் கையாள்பவர்களுக்கே அதிகாரம் வாய்க்கிறது என்பதே ஹிட்லரின் வரையறுப்பு.”

மக்கள் போற்றிய மாட்சிமை பொருந்திய விறைப்பும் வீறும் கொண்ட தேசியத் தலைவர் ஹிட்லர் நமது ஆசானல்லாமல் வேறென்ன?

Tuesday, May 17, 2011

தற்கொலைப்படை கேட்கிறதா தமிழும்?

மொழி நமக்கு கிறுகிறுப்பை ஏற்படுத்துகிறது; உணர்ச்சிவசப்பட வைக்கிறது; ஒன்றுபடுத்துகிறது; உயிரை இழக்கவும் கொல்லவுமான ஆவேசத்தையளிக்கிறது; இன்னும் என்னவெல்லாமோ செய்ய வைத்துவிடும் சக்தியைக் கொண்டிருக்கிறது.

மொழியை உயிருக்கு நேராகக் காண்பதும், மொழிக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் செய்துவிடத் துடிப்பதும், பாடையில் ஏறுவதானாலும் சரி ஓடையில் சாம்பலாய்க் கலப்பதானாலும் சரி உவகையுடன் வரவேற்பதும், மொழிக்காக எத்தனை ஆயிரம் உயிர்கள் வேண்டுமானாலும் அழியலாம் என்று துடிப்பதும் எதனால் நேர்கிறது? மொழி வெறும் ஊடகம் என்ற அளவில் நின்றுவிடாமல், மனிதனை இயக்குகிற சக்தியாக, சொல்லப் போனால் மொழியே அவனாக மாறுகிற விந்தை எவ்விதம் நிகழ்ந்தது!

“மொழிதான் நமக்கு உலகத்தை அளிக்கிறது. அதேசமயத்தில் அந்த உலகத்துக்கான எல்லைகளையும் அது வரையறுத்து விடுகிறது…. இன்னொருபுறம் இந்த உலகின் இருப்பை சாத்தியப்படுத்துவதாகவும் மொழி செயற்படுகிறது” என்றார் நீட்ஷே. ஒவ்வொருவரிடமும் உள்ளே ரத்தமாகவே ஓடுமளவுக்கு மொழி உயிராகக் கலந்திருக்கிறது. அதற்காகப் பல்லாயிரம் பலலட்சம் உயிர்களை அழிக்கும் போர்கள் செய்யவும் தயங்காததாக மனிதகுலம் இருக்கிறது.

க.பஞ்சாங்கம் ஒரு கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்: “மொழியைத் தவிர மனிதர்கள் வேறு அல்லர். மனிதர்கள் கடவுளால் அல்ல, மொழியால் வடிவமைக்கப்பட்டவர்கள். மனிதத் தன்னிலையின் நனவிலி மனம் முழுவதும் மொழியின் குறியீடுகளால் நிரம்பி வழிகிறது. மொழியின் ஆவணக் காப்பகமாக ஆழப்பட்டுக் கிடக்கிறது. மொழிதான் மனிதனுக்கான பிரச்சினை என்றுகூடச் சாராம்சப்படுத்திவிட முடியும்போல் தோன்றுகிறது” என்கிறார்.

மொழியின் மூலமாகவே நாம் உருவாகி வருகிறோம். காணும் யாவற்றுக்கும் பெயரிடுதல் என்ற மொழிச் செயற்பாட்டின் மூலமே சூழலை நம் வசப்படுத்திக் கொள்கிறோம். மொழி ஒரு நதி; அது காலத்தைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது என்பார்கள். ஒவ்வொரு பிரதேசத்தினதும் பல்லாயிரம் வருடத்து வாழ்க்கையை அவ்வப் பிரதேசத்துக்குரிய மொழி தனக்குள் கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்துவரும் பண்பாட்டுச் செயற்பாடுகளின் தொடர்ச்சி மொழிவழியாக நிகழ்ந்து வருவதேயாகும். சொல்லப்போனால் அந்தப் பண்பாடே மொழிதான். மனிதர்களை உருவாக்குவதும் மொழிதான்.

“மொழி என்பது வலி. அது நாம் பிறந்ததுமே நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வளர வளர, படிப்படியாக மொழியாலேயே குழந்தை கட்டமைக்கப்படுகிறது. வார்த்தைகள் தொடர்ந்து குறியீடுகளால் குழந்தையை மேலும் மேலும் வடிவமைக்கின்றன. தொடர்ந்து வார்த்தைகள் குழந்தையைச் செப்பனிட்டபடி இருக்கின்றன. நாம் வளர்ந்து ஆளான பிறகும் வார்த்தைகள் நம்மை ஆள்கின்றன” என்றெல்லாம் மொழி பற்றி விவரிக்கிறார் ழாக் லக்கான்.

இதனாலேயே மொழியைக் காரணமாக்கி மனிதர் ரத்தத்தைத் துடிப்புறச் செய்ய முடிகிறது. வன்முறைக்கும் உயிர்க் கொலைகளுக்கும் கூட இந்த மொழி அபிமானம் மனிதரைக் கொண்டுசெல்கிறது.

எழுத்தாளர் மர்க்கி தெ ஸாத் இன் வாழ்க்கையில், அவர் சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்று பற்றி சாரு தன் வலைப்பதிவில் தந்திருக்கிறார். சிறுவன் தன் ஆசிரியரைப் பார்த்துக் கேட்கிறான்: “நாம் மிருகங்களைக் கொல்கிறோம், அது கொலையாகக் கருதப்படுவதில்லை. ஆனால் மனிதர்களைக் கொன்றால் அதைக் கொலை என்கிறோம். நம்மை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது மொழி ஒன்றுதான். ஆக, நாம் பேசும் மொழியை மிருகம் பேசுவதில்லை என்பதாலேயே அதைக் கொன்றால் அது கொலையாகக் கருதப்படுவதில்லை. அப்படியானால் மொழி என்பது எவ்வளவு  பெரிய வன்முறை?”

நமது மொழியைப் பேசாதவன் மீது அந்தரங்கத்தில் நமக்கொரு எதிர்ப்புணர்வு இருந்துகொண்டேயிருக்கிறது. அவனை நம்மிலிருந்து விலக்கிவிட நமது மொழி மீதான அபிமானத்தைக் கவசமாக உயர்த்திப் பிடித்துக் கொள்கிறோம். எந்த பாதகமும் அற்றது இயல்பானது என்று நாம் கருதுகிற மொழிப் பற்றானது, பிறரைச் சகிக்கமுடியா மனநிலைக்கு நம்மைத் தள்ளிச் சென்றுவிடுவது இவ்வாறுதான்.

இதைப் போலவேதான் இனஅபிமானம், தேசஅபிமானம், சாதிஅபிமானம், மதஅபிமானம் எல்லாமே நம்மைப் பிறவற்றிலிருந்து தனிப்படுத்தி வன்முறைக்குத் தயாராக்கி வருவதைக் காண்கிறோம். இவற்றின் காரணமாகவே உலகில் நூற்றுக்கணக்கான போர்கள் காலம் காலமாக நடந்து வருகின்றன என்பதையும், அதன் கரணமாகவே லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மனிதர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் என்பதையும் நாமறிவோம். இதனால்தான், எந்த ஒன்றின் மீதும் கொள்ளும் அபிமானமே உலகின் துக்கங்களுக்கெல்லாம் காரணம் என்று புத்தர் சொல்லியிருக்க வேண்டும்.

உடனேயே, ‘தாய்மொழியைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என்று கிளம்பிவிடக் கூடாது. நமது மொழி நமக்கு இனிமையானதுதான். அதுபோலவேதானே மற்றவர்க்கும் அவரவர் மொழி? நமது மொழிபோல் இனிய மொழி உலகெங்கிலும் இல்லை என்று நம் பாரதியைப் போலவேதான் மற்றைய மொழிக் கவிஞர்களுக்கும் கருத்து இருக்கும். இந்த உணர்ச்சி பொய்யானதில்லை. ஆனால் இந்த நம்பிக்கையிலுள்ள வன்முறையையே நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். இதைச் சொல்லும்போதும், நம்பிக்கையுடன் அறிவிக்கும்போதும் மாற்றானின் இருப்பு முற்றாக மறுக்கப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். மதம், சாதி, நிறம் போன்றவற்றிலும் இதுதான் நடக்கிறது.

‘எனக்கும் தமிழ்தான் மூச்சு; ஆனால் அதைப் பிறர் மேல் விடமாட்டேன்’ என்பது ஞானக்கூத்தனின் பிரபலமான கவிதை வரி. மொழியின் மீது வெறித்தனமான அபிமானம் கொள்ள வேண்டியதில்லை என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டியது. அதேசமயம் அபிமானத்திலிருந்தே பிறவற்றின் மீதான மறுப்பும் வன்முறை உணர்வும் வளர்வது குறித்தும் நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். சமூகம் நம் மூளையில் திணிக்கின்ற அனைத்து விஷயங்களைப் பற்றியும் நாம் வேறோர் கோணத்திலிருந்து பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

தேசம், மதம், மொழி, இனம் போன்ற பல்வேறு எல்லைக்கோடுகளை நமக்குள் போட்டு வைத்துக்கொண்டு அதனுள்ளேயே இருப்பதன் மூலம் நாம் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்கிறோம். ஆனால் உண்மையில் இந்தப் புனித எல்லைக்கோடுகள் யாவும் மனிதகுலத்துக்குத் தீங்கு விளைவிப்பவையாகவே உள்ளன என்றும் நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புரிந்துகொண்டே வருகிறோம்.

அதிகார விருப்பங்களுக்காகவும், குறுகிய லாபங்களுக்காகவும் மக்களைப் பிரித்து பூமிப்பரப்பில் செயற்கையாக வரையப்படும் எல்லைக்கோடுகளால் ஏற்படும் சமூகப் பிளவுகளும், வன்முறையும், மனித அவலமும் பற்றி இலங்கையில் படித்த இந்தியரான அமிட்டவ் கோஷின் நாவல் ‘நிழல் கோடுகள்’(The Shadow Lines)

தேசத்தை உருவாக்குவதற்கான தேசியவாதத்தை முன்னெடுப்பவர்கள் மற்றவர்கள் மீதான வெறுப்பைக் கட்டியெழுப்புவதனூடாகவே தேசியத்துக்கான ஒருங்கிணைவைச் சாதிக்கின்றனர் என்பதை நாவல் விவரிக்கிறது. அச்சமூட்டக்கூடிய தேசியவாத ஒருங்கிணைவு பற்றி ஒரு பாத்திரம் கூறுகிறது: “அந்த மக்கள் அந்த நாட்டைக் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுத்தது. பலநூறு வருடக்கணக்கான போருக்கும் பெருகியோடிய குருதிக்கும் பின்பு அங்கு வாழ்கின்ற ஒவ்வொருவரும் அதற்கான உரிமையைத் தமது இரத்தத்தை, தமது தந்தையர்களது இரத்தத்தை, தமது சகோதரர்களின் இரத்தத்தைக் கொடுத்து பெற்றிருக்கின்றனர். அவர்கள் தமது நாட்டின் எல்லைக்கோட்டை குருதியால் வரைந்திருப்பதால் தாமனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றே எண்ணுகிறார்கள்.”

மற்றவற்றை மறுப்பதன் மூலமும் வெறுப்பதன் மூலமுமே இந்த ஒருங்கிணைவு உண்டாக்கப்படுகிறது. இந்தக் கருத்தியலின் பிரதான குணமே சமூக முரண்பாடுகளையும் எதிர் தரப்புகளையும் மறுப்பதாக இருக்கும். அந்த மறுப்பை வன்முறையினால் நிலைநாட்டுவதில் சென்று முடியும். தேச, இன, மொழி, சாதி, மதம் போன்றவற்றின் மீதான அபிமானமானது பாசிஸமாக வளர்ந்ததே நம் காலத்திய வரலாறாக இருக்கிறது. சமத்துவம், பல்கலாசாரம் போன்றவற்றை மறுக்கும் ஒடுக்குமுறைத்தன்மை கொண்டதாக மாறுகிறது.
எந்த ஒன்றின் மீதும் விமர்சனத்திற்கு அப்பாலான அபிமானம் வேண்டியதில்லை.

Tuesday, May 10, 2011

கவிதைச்சரம்

நதி

தொடரும் பயணங்களில்
நதிகளை
மீண்டும் மீண்டும்
சந்திக்க நேர்கிறது
சில அபூர்வ தருணங்களில்

நதிப் பாலங்களின் மீது
ரயில் நின்றுவிடுகிறது
தூரத்தில் கீழே தெரியும்
நதியின் ஆழத்தில்
மனம் அமிழும் வேளையில்

நதி
தன் ரகசியங்களை
மெள்ள
சொல்லத் தொடங்கும்

அநேகமாக
அதே வேளையில்
ரயிலும் மெள்ள
நகரத் தொடங்கும் !

கோபால் மனோகர்

***********************
 
பட்டாம்பூச்சி

பட்டுப் பூச்சியைப்போல
பட்டுப் பாவாடையில்
பாதம்
பட்டும் படாமலும்
கீழே விழுந்து... எழுந்து
பின் தொடர்ந்து
ஓடி வருகிறது குழந்தை.
கீழே விழுந்து... எழுந்து
அங்கப்பிரதட்சணம் செய்தபடி
முன் தொடர்ந்து செல்கிறது 'பலூன்'!

ச.புகழேந்தி 


***********************

கதவடைத்த வீடு

வெகு கவனமாக
அமைக்கப்படுகிறது
வீட்டுக்குள்
மீன்களுக்கான தொட்டி.

வேறேதும் வழியின்றி
அமைந்துவிடுகிறது
தொட்டிக்குள்
மீன்களுக்கான
வீடு!

சோதனை

நடப்பது போல நடந்து
போவதுபோலப் போய்
'நல்லவங்களா இருக்காங்க
புது வீட்டுக்கு வந்தவங்க'
என்றிவள் வந்து சொன்னாள்.

வருவதுபோல வந்து
நிற்பதுபோல நின்றார்கள்
புது வீட்டிலிருந்தும்

'வாங்க வாங்க
அட, உள்ள வாங்க' என்றோம்
நல்லவங்க போலான நாங்களும்!

 பா.ராஜாராம் 


***********************

பிள்ளையார் எறும்புகள்

யானையின் நிறத்தில்
சுவரின் துதிக்கை பிடித்தேறி
ஒரே நேர்கோட்டில் ஊர்கின்றன
எங்கள் வீட்டு
பிள்ளையார் எறும்புகள்
எண்ணிக்கை குறிப்பெடுத்து வரும்
என் பிள்ளையின் முயற்சி
சுலபமாகக் காலேறிவிடும்
எறும்புகளால் தோற்கடிக்கப்படும்
கொலுசு மணிக்குள் புகுந்த
எறும்பொன்று
இனியும் முகம் காட்டவேயில்லை.
இருந்தாலும் அவை
யாரையும் இம்சிப்பதில்லை.
நானும் பிள்ளையும்
எதிரெதிரே ஊர்ந்தோம்
எறும்புகள் சொல்லித்தரும்
மூக்குரசும் பயிற்சி
இஷ்டமென்றாள் மகள்.
பூஜையறைக்குள் புகும்
பிள்ளையார் எறும்புகள்
மாடி வீட்டில் பதம் பார்த்த
லட்டுத் துகள்களை
விநாயகர் பொம்மையின்
துதிக்கை சேர்ப்பிக்கும்.
'விநாயகர் லட்டுப் பிரியரா?' எனும்
என் மகளின் கேள்விக்கு
அர்த்தம் புரியாமல்
அங்கிருந்து நகர்கிறேன் நான்!

கொ.மா.கோ.இளங்கோ   

Saturday, May 7, 2011

மாற்றங்கள் வெற்றியின் நுழைவு சீட்டுகள்

"விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போல'' என்ற பாரதியார் பாடல் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

சுதந்திரமாய்ப் பறக்கும் சிட்டுக் குருவி சிலிர்ப்பின் அடையாளம். எப்போதேனும் சிட்டுக் குருவியின் கூட்டைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நேரம் கிடைக்கும் போது கவனித்துப் பாருங்கள்.

சிட்டுக்குருவிகளின் கூடுகள் எப்படி இருக்கின்றன? கடந்த ஆண்டு எப்படி இருந்தன? கடந்த நூற்றாண்டில் எப்படி இருந்தன?

இந்த கேள்விக்கு வியப்பூட்டும் பதில் என்னவென்றால், 'நூற்றாண்டுகளாக இவற்றில் ஏதும் மாற்றம் இல்லை' என்பதே!

விலங்குகள், பறவைகள் போன்றவையெல்லாம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை. மனிதனுடைய வாழ்க்கையோ மாற்றங்களால் கட்டமைக்கப்பட்டது.

அந்த மாற்றங்கள் தான் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டு வருகிறது.

சிலருக்கு மாற்றங்கள் எதுவும் பிடிப்பதில்லை. குறிப்பாக, அலுவலக வேலை, பிஸினஸ் போன்றவற்றில் மாற்றம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறார்கள். கிணற்றுத் தவளையைப் போல வட்டமடித்துக் கொண்டே இருப்பதில் தான் அவர்களுக்குத் திருப்தி அதிகம். அட்டவணையை மாற்றி எதுவும் செய்யமாட்டார்கள். வட்டத்துக்குள் ஓடிக் கொண்டிருக்கும் கடிகார முள்போல, அவர்களுடைய வாழ்க்கை, பேட்டரி தீரும் வரை ஓடி முடிகிறது.

ஒரு புதிய ரக செல்போனைப் பார்த்தவுடன் நமது செல்போனை மாற்றி விடலாமா எனத் தோன்றுகிறது. ஒரு எல்.இ.டி. டிவியைப் பார்த்ததும் நமது சின்ன டிவியை மாற்றி விடலாமா என தோன்றுகிறது. புத்தம் புதிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தவுடன் மாற்றத்துக்காக மனம் தயாராகி விடுகிறது. ஆனால், முக்கியமான வேலை சார்ந்த மாற்றங்கள் வரும்போது மட்டும் பயம் வந்து கூடாரமடிக்கிறது.

வெற்றியாளர்கள் மாற்றத்தைக் கண்டு பயந்து ஓடுவதில்லை. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என புன்னகையுடன் எதிர்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சரியான மாற்றத்தை தேடிப் போய் அணைத்துக் கொள்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் பொருளாதார வீழ்ச்சியில் வழுக்கியது. பலர் வேலையிழந்து, பணமிழந்து சிக்கலில் விழுந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். ஆனால், மாற்றங்களைக் கண்டு மிரண்டு போனவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு மடிந்தே போனார்கள்.

மாற்றம் நல்லது என்று பலரும் சொன்னாலும் மாற்றங்களை மக்கள் வெறுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.

என்ன நடக்கப் போகிறதோ, தெரியலையே! எனும் பயம் முதலாவது. ஒரு வட்டத்துக்குள்ளேயே நீந்திக் கொண்டிருப்பவர்கள் சட்டென ஒரு மாற்றத்தைக் காணும் போது நிலை குலைந்து போகிறார்கள். தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனை பிடித்து தரையில் விட்டால் துடிப்பதைப் போல இவர்கள் துடித்து விடுகிறார்கள்.

உண்மையில் விடப்பட்டது தரையில் அல்ல, கடலில் எனும் வாழ்வின் உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

என்னோட வேலை என்ன ஆகும்ன்னு தெரியலையே? என்னோட எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலையே, வாழ்க்கையை ஓட்ட என்ன செய்வேன்னு தெரியலையே என்றெல்லாம் மாற்றம் குறித்த திகில் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.

இரண்டாவது பயம் கட்டுப்பாடு சார்ந்தது. 

நம்ம கையில 'கண்ட்ரோல்' எதுவும் இல்லையே எனும் பயம் அது!

நடக்கும் மாற்றங்களை எல்லாம் வேறு ஏதோ ஒரு நபருடைய கட்டுப்பாட்டில் இருப்பது போல ஒரு எண்ணம் இவர்களுடைய மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். நமது வாழ்வின் கடிவாளம் நம்மிடம் இல்லையேல் இதில் எப்படி வெற்றி பெறுவது எனும் பயம் அவர்களுக்கு மாற்றத்தைக் கண்டு விலகி ஓடும் மனநிலையைத் தந்துவிடும்.

மூன்றாவது பயம் தோல்வி சார்ந்தது. 

சூழல் மாறிவிட்டால் வெற்றி பெற முடியுமா எனும் குழப்பம்.

புதிய இடம் எப்படி இருக்குமோ?, புதிய தலைமை எப்படி இருக்குமோ? தரப்பட்டிருக்கும் புதிய வேலையில் திறமையாய் செயல்பட முடியுமா? ஒருவேளை வெற்றி பெறாவிடில் வேலை நிலைக்குமா? இப்போது இருக்கின்ற நல்ல பெயர் தொடருமா..? என சங்கிலித் தொடர் போலத் தொடரும் பயங்கள் இதில் அடக்கம்.

நான்காவது பயம் சோம்பேறிகளின் பயம்.

இந்த வேலையை நாலு வருஷமாவோ, நாப்பது வருஷமாவோ பண்றேன். இதோட எல்லா நுணுக்கங்களும் எனக்குத் தெரியும். கண்ணை மூடிட்டு கூட இந்த வேலையைச் செய்ய முடியும். இனிமே புதிய வேலையைச் செய்தா எப்படி? இப்போ இருக்கிற இந்த ரிலாக்ஸான சூழல் நிலைக்குமா...? எனும் பயம் அது.

ரொம்பவே சொகுசான வேலைச் சுழற்சியிலிருந்து வெளிவர பயப்படும் மனநிலை இது.

"மாற்றங்களை வெறுப்பவன் அழுகத் துவங்குகிறான், மாற்றங்களை ஏற்காதவர்கள் கல்லறை மனிதர்கள் மட்டுமே'' என்கிறார் இங்கிலாந்தின் ஹேரால்ட் வில்சன்.

பால் ஆலன் என்பவருடன் சேர்ந்து டிராப் ஓடேட்டா எனும் சின்ன நிறுவனத்தை ஆரம்பித்தார் ஒருவர். டிராபிக் சிக்னல் தொடர்பான தகவல்களைப் பெற்று, அவற்றைப் பயனுள்ள அறிக்கைகளாக மாற்றுவது தான் அவர்களுடைய திட்டம்.

ஓரளவு நிறுவனம் வெற்றிகரமாய் இயங்கிக் கொண்டிருந்த போது அவர் அதை உதறி விட்டு மாற்றத்தை நாடினார். அந்த மாற்றம் அவருக்கு உலகப் புகழைக் கொண்டு வந்து சேர்த்தது. அவர் தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்!

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நம்மைச் சந்தித்துக் கொண்டே தான் இருக்கும். மாற்றங்களை எந்த அளவுக்கு எதிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு மாற்றங்களுக்குள் இணைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். திசை மாறித் திசை மாறி ஓடும் நதியின் ஓட்டத்துக்கு ஏற்ப நீந்துவதே எளிதானது. எதிரேறுதல் கடினமானது.

எனவே, மாற்றங்களை மனதளவில் ஏற்றுக் கொள்வதே, மாற்றங்களைப் பழகிக் கொள்வதன் முதல் படியாகும்.

ஒரே பள்ளிக்கூடத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி, பணிமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களின் மன உளைச்சல் கடுமையானது. அவர்கள் பழகிய சூழலை விட்டு வெளியேறுவதை சுமையாகக் கருதுகிறார்கள். புதிய நபர்களுடன் பழகுதல், புதிய சூழலில் நடைபோடுதல், புதியவற்றைச் செய்தல்... என பல்வேறு நல்ல அம்சங்கள் அதில் உள்ளன.

இரண்டு மணிநேர திரைப்படத்துக்கே பல மாற்றங்கள், இனிய ஆச்சரியங்களெல்லாம் எதிர்பார்க்கும் நம்மில் பலரும் வாழ்க்கையில் அத்தகைய ஆச்சரியங்களைச் சந்திக்கப் பயப்படுவது வியப்பளிக்கிறது.

மாற்றமும் அத்தகையதே. ஒரு சின்ன மாற்றம் கூட நம்முடைய பார்வையில் மிகப்பெரிய விஸ்வரூப வேறுபாட்டைக் காட்டக் கூடும். எனவே, மாற்றங்களைக் குறித்து மலையளவு கற்பனைகள் வளர்க்காமல், அதன் இயல்பிலேயே அணுகுவதே சிறந்தது.

"காலங்களைத் தாண்டி வாழ்பவை மிகவும் வலுவான பிராணிகளோ, மிகவும் அறிவார்ந்த பிராணிகளோ அல்ல. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பிராணிகளே தலைமுறை தாண்டியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன'' என்கிறார் டார்வின்! மாற்றங்களை ஏற்றுக் கொள்வதன் தேவையை தனது பாணியில் சொல்கிறது டார்வினின் தத்துவம். குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் எனும் அவருடைய கோட்பாடு கூட மாற்றத்தின் மீதான கட்டமைப்பு தானே!

முன்னேற்றத்துக்கான மாற்றங்களை விரும்பும் மனம் பாசிடிவ் மனநிலையிலிருந்தே புறப்படுகிறது. நான் இந்த மாற்றத்துக்காகப் பயப்படுகிறேனா? பயப்படுகிறேன் எனில், ஏன் பயப்படுகிறேன்? இந்தப் பயம் நியாயமானது தானா? எனும் சில கேள்விகளை நமக்கு நாமே கேட்பதே நமக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அள்ளித் தரும்.

எத்தனை முறை மாற்றத்தைக் குறித்து நேர்மறையாய் சிந்தித்திருக்கிறோம், எத்தனை முறை எதிர்மறையாய் சிந்தித்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். நீங்கள் வெற்றியாளரா, இல்லையா என்பது புரியவரும்.

அமெரிக்காவிலுள்ள மேசிஸ் எனும் மிகப்பெரிய விற்பனை நிலையம் இன்று சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய்கள் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நிறு
வனத்தை ஆரம்பித்த ரவுலண்ட் ஹஸி மேசி என்பவர் அந்தக் கடையை ஆரம்பிக்கும் முன் நான்கு கடைகளை ஆரம்பித்தார். ஒவ்வொன்றாக நான்குமே தோல்வியடைந்தன. ஒவ்வோர் தோல்வியிலும் மாற்றத்தைக் கற்றுக் கொண்டார். அதை விரும்பி ஏற்றுக் கொண்டு அடுத்த நிலைக்குத் தாவினார். கடைசியில் மேசிஸ் அவருக்கு வெற்றி தந்தது. இன்று 800-க்கும் மேற்பட்ட கடைகள் அமெரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

துணிச்சலுக்கும், முட்டாள்தனத்திற்கும் வேறுபாடு உண்டு. விமானத்திலிருந்து பாராசூட்டுடன் குதிப்பதற்கும், எதையும் யோசிக்காமல் குதிப்பதற்குமான வித்தியாசமாக அதைச் சொல்லலாம்.

எனவே, மாற்றத்தை நோக்கி இடம் பெயரும் முன் அது குறித்த புரிதலும், அறிதலும் இருக்க வேண்டியது அவசியம். அதன் பின் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முதல் சுவடை வைக்கும்போதே இதன் முழுப் பொறுப்பும் என்னுடையது என்பதை மனதில் எழுதுங்கள்.

அது மாற்றத்தை வெற்றிகரமாக மாற்றும் உத்வேகத்தை உங்களுக்குத் தரும்.

மாற்றங்களை எதிர்கொள்வோம்,
வாழ்வினிலே இனி வெல்வோம்!
சேவியர்

Friday, May 6, 2011

இரைந்து கெடு இவ்வுலகை!

நம்மை ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்று பிறர் நினைத்தாலும் பரவாயில்லை, வாயைத் திறக்காதிருப்பது நல்லது என்பர். வாயைத் திறந்து அவர்கள் நினைத்ததே சரி என்று உறுதிப்படுத்துவதை விட பேசாதிருப்பது நல்லதுதான்.

நம் முட்டாள்தனம் வெளியே தெரிந்துவிடாமல் இருக்க, வாயை மூடி இருப்பதுதான் சிறந்த வழி. இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், இந்த வழியைத் தெரிந்து வைத்திருப்பவர் முட்டாளாயிருக்க முடியாது என்பதால் இந்த உபாயம் பெருமளவுக்கு உபயோகத்திலிருப்பதில்லை. எனவே சவால்கள், சபதங்கள், முழக்கங்கள், மிரட்டல்கள் என பேச்சுச் சுதந்திரத்தின் ஜிலுஜிலுப்பை பெருமளவுக்கு அனுபவித்து வருகிறோம். நாம்தான் மௌனத்தின் சிறப்புப் பற்றியே மணிக்கணக்கில் பேசக் கூடியவர்களாயிற்றே!

பிறர் பேசுவதைக் கேட்கும் உபத்திரவத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தாமே விடாமல் பேசிக் கொண்டிருப்பதை ஒரு தந்திரமாக வைத்திருப்பவர்களும் உண்டு. மற்றொருபுறம் ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்குவதில் மக்களுக்கிருக்கும் துடிப்பும் அவர்களை சும்மாயிருக்க விடுவதில்லை. எனவே மௌனத்தைக் கிழித்து நார் நாராக்கி உலகம் பேச்சோசையால் விளையும் இரைச்சலில் திளைக்கிறது.

‘மௌனம் என்பது ஒரு அழகிய திரை; சத்தம் என்பது அதில் விழும் பொத்தல்’ என்றொரு கவிஞர் சொன்னார். எனவேதான் சத்தங்களால் சலித்துப் போன ஞானிகளும் துறவிகளும் மனிதசஞ்சாரமில்லாத மலைகளையும் காடுகளையும் சென்று அடைகிறார்கள். விரல்களுக்கிடையில் உலகையே உருட்டிக் கடத்திவிடும் வித்தையை அறிந்துகொண்டு பேசாமல் எங்காவது அமர்ந்துவிடுகிறார்கள் சிலர்.

பேச்சினால் ஒருவர் என்னென்ன விதமாக தொல்லைக்கு ஆளாக நேரும் அல்லது ஆளாக்கலாம் என்பதை நாமெல்லோருமே அறிந்திருக்கிறோம். உலகையே உதறி வெல்லும் ‘வீர’ உணர்வும், மற்றோரெல்லாம் எதிரிகளே என்னும் வெறுப்புணர்வும் நமக்குச் சும்மா வந்துவிடவில்லை. ‘நாம் வேறு அவர்கள் வேறு’ என்று நம் அடிநாளிலிருந்தே பேசிப் பேசி நம்மை ஆக்கி வைத்திருக்கிறார்கள் இப்படி!

ஒரு புலவனால் அறம் பாடிக் கொன்றுவிட முடியும் என்பதும் நம் பழந்தமிழ் நம்பிக்கை. சிலர் தமது நாக்கைக் கடித்துக் கொண்டாலே இறந்துவிடுவார்கள்; அந்தளவுக்கு அவர் நாவில் விஷம் என்று இன்றும் பலர் சொல்லக் கேட்கிறோம். வயது போகப் போக பற்கள் விழுவதை விட நாக்கு விழுந்தால் நலமாக இருக்கும் என்று சொன்னார் கண்ணதாசன்.

‘சொல்லாத சொல்லுக்கு விலை ஏதுமில்லை’ என்று அவரேதான் மௌனத்தின் சிறப்பைச் சொன்னார். ‘நா காக்க’ என்றும் ‘சும்மா இரு சொல் அற’ என்றும் ‘சொல் குறுக நிமிர் கீர்த்தி’ என்றும் முன்னோடிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘சங்கடமான நேரங்களில் நான் மௌனமாக இருக்கிறேன்’ என்று அந்தக் கடவுளரே செல்லியிருக்கிறார்கள். ‘பேசாத வாய் கீழிறங்கி இதயத்திற்குப் போய்விடுகிறது’ என்று பேச்சற்ற நிலையின் பெருமையை விளக்கியிருக்கிறார்கள். ‘நுணலும் தன் வாயால் கெடும்’, ‘கொட்டிய நெல்லை அள்ளிவிடலாம் சொல்லை அள்ள முடியுமா’ என்றெல்லாம் எத்தனையெத்தனை முதுமொழிகள்! ஆனாலும் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பதை நாம்தான் நிறுத்தவில்லை.
விவரங்கள் சொல்லி விவரங்கள் கேட்டுச் சலித்துப் போனவராக ஆத்மாநாம் ஒரு கவிதையில் சொன்னார்: “நீங்கள் யாரானால் என்ன ஃ நான் யாரானால் என்ன ஃ அனாவசியக் கேள்விகள் ஃ அனாவசியப் பதில்கள் ஃ எதையும் நிரூபிக்காமல் ஃ சற்றே சும்மா இருங்கள்!”

வரிகளுக்கு இடையே உள்ள மௌனத்தில்தான் கவிதையின் மேன்மை ஒளிந்திருக்கிறது என்பார்கள். சவடாலில் அல்ல, மௌனம் என்னும் கொக்கியில் தன் ஜீவனைச் சொருகிக் கொண்டிருக்கிறது கவிதை என்று சுந்தர ராமசாமி சொன்னார். இசையிலும் கூட மௌன இடைவெளிகளே அதை உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது. அற்புத உணர்வான காதல்! அது சொற்களில் வெளியாவதில்லை. ஒரு குதூகலமான பார்வை, திருப்தியான புன்னகை, அந்நியோன்யமான பாவனைகள், செய்கைகள், விழியசைப்புகள்…. இந்த மௌன நாடகங்களே காதலைப் பிரகடனப்படுத்துகின்றன. சொல்லின்மை ஏற்படுவதே தரிசன உச்சம் என்பர். பேச மறந்து சிலையாய் நின்றால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி என்று பாடல் சொல்வதும் அதைத்தான்.

மௌனத்தின் மற்றெல்லாச் சிறப்புகளும் இருக்கட்டும், அந்த மொழியில் சண்டை போட்டுக்கொள்ள முடியாது என்பதே பெருஞ் சிறப்பல்லவா? வார்த்தைகளில் இல்லாத மௌனம் பலவற்றைச் சொல்லிவிடுகிறது. சங்கடங்களைத் தவிர்த்து நெருக்கத்தைக் கொண்டுவருகிறது. இரைச்சலை விழுங்கி அமைதியைக் கொண்டுவருகிறது. மறுப்பு வார்த்தைகளைக் கொட்டாமல் சமாதான விருப்பத்தை ஏற்படுத்துகிறது.
“வார்த்தைகள் தத்துவங்களைச் சொல்லலாம். ஆனால் உண்மைகளை விளக்காது” எனச் சொல்கிறது ஸென் பௌத்தம். இதை விளக்கச் சொல்லப்படுகிற கதை இது:

புத்தரின் பிரசங்கத்தைக் கேட்பதற்காக மக்கள் கூடினர். புத்தர் வந்தார். மேடைக்குப் போய் அமர்ந்து கொண்டார். அங்கே இருந்த ஒரு பூவைக் கையில் எடுத்துப் பார்த்தார். பக்கத்தில் இருந்த சீடன் காசியபனைப் பார்த்துச் சிரித்தார். கூட்டத்தைப் பார்த்து முறுவலித்தார். பூவைக் கீழே வைத்துவிட்டு எழுந்து போய்விட்டார். அவ்வளவுதான் பிரசங்கம் முடிந்துவிட்டது. ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எப்படி பிரசங்கம் நடந்ததாகச் சொல்ல முடியும்? அப்படித்தான், ‘முடியும்’ என்கிறது ஸென் சித்தாந்தம். புத்தகங்கள், பாராயணங்கள், உபதேசங்கள் மூலம் உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. உண்மை என்பது மழையைப் போல எளிமையானது. மழையைப் பார்க்கலாம், கேட்கலாம், உணரலாம். ஆனால் அதை விளக்க, மொழிபெயர்க்க முடியாது என்பது ஸென் சித்தாந்தத்தின் அடிப்படை.

கண்டபடி பேசாதிருந்தால் குறைந்தபட்சம் உங்கள் கன்னத்தையாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை உணர்த்துகிற விதமாக ஒரு ஜோக். இதை பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் தன் கட்டுரையொன்றில் தந்திருக்கிறார்.

ஒரு கனவான் ஒரு ரோபோவை விலைக்கு வாங்கினார். அந்த ரோபோவின் விசேஷம் என்னவென்றால், அதற்கு எதிரே யார் பொய் பேசினாலும் பொய் பேசியவரின் கன்னத்தில் அறைந்துவிடும். இது தன் வீட்டுக்கு அவசியம் தேவை என்று கருதினார் கனவான். ஏனென்றால் எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருந்தான் அவர் மகன்.

வீட்டுக்கு ரோபோவை எடுத்துவந்து அதைப் பற்றிய விவரத்தையும் சொன்னார் கனவான். ஒருநாள் பையன் தாமதமாக வந்தான். கேட்டதற்கு, ஸ்பெஷல் கிளாஸ் என்றான். ரோபோ அவன் கன்னத்தில் விட்டது ஒரு அறை. அறை வாங்கிய பிறகுதான் உண்மையைச் சொன்னான் மகன்; நண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றிருந்ததாக.

உடனே கனவான் சொன்னார்: “டேய், உன்னை மாதிரி சிறுவனாக இருக்கும்போது நான் இப்படியெல்லாம் பொய்யே சொன்னதில்லை”
விழுந்தது அவர் கன்னத்திலும் ஒரு பளார்.

இந்த இரண்டையும் பார்த்த கனவானின் மனைவி சொன்னாள்: “பாருங்கள், உங்கள் பையனும் உங்களை மாதிரிதானே இருப்பான்?”
இப்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அவளுடைய கன்னத்திலும் விழுந்தது ஒரு அறை!

பேசத் தெரியாமல் இருப்பது முட்டாள்தனமே ஆனாலும், பேசி அதை அழுத்தமாக நிரூபித்து விடாமலிருப்பதில் சிறிதளவேனும் புத்திசாலித்தனம் இருக்கிறதுதான்!

Thursday, May 5, 2011

அவசரகாலச் சட்டத்தை நீக்கிப் பாருங்கள் ஆறுமாதத்தில் இந்த ஆட்சி கவிழும் - சிவசக்தி ஆனந்தன்

இந்த நாட்டு மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இந்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்கினால் மக்கள் வீதியில் வந்து போராடுவார்கள். அப்பொழுது இந்த அரசாங்கத்தினால் அவைகளைச் சமாளிக்க முடியாமல் போகும். இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். ஆகவே இறந்துபோன புலிகளின் சடலங்களைத் தோண்டியெடுத்தாவது அவசரகாலச்சட்டத்தை நீட்டிக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. அவசரகாலச் சட்டம் இல்லாமல் இவர்களால் ஆட்சி செய்ய முடியாதுள்ளது. என்று 05.05.2011 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால சட்ட நீட்டிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்துவதாலோ ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதினாலோ எதுவிதப் பயனும் கிட்டாது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஐயோ என்று போட்ட மரண ஓலமும்; ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரும் உயிர்த் தியாகமும் தான் ஐ.நா.நிபுணர்குழுவின் அறிக்கையாக வெளிவந்துள்ளது. இந்நாட்டில் அறுபதாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் இப்பொழுதுதான் ஐ.நா.வின் கதவைத் தட்டியுள்ளது. எனவே அரசாங்கம் இனியும் காலம் தாழ்;த்தாது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வினைக் காணவேண்டும். என்று கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வன்னி மாவட்டத்தில் அரசாங்க உயரதிகாரிகள் வன்னி மாவட்ட மக்களின் ஆதரவினால் அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட ஒருவரினால் அரசியல் பழிவாங்கப்படுகின்றனர்.

மன்னார் அரசாங்க அதிபர், மடுவலயக் கல்விப்பணிப்பாளர் ஆகியோரின் இடமாற்றங்களும், மன்னார் பிரதேச செயலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், முசலி பிரதேச செயலாளர் ஆகியோரை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகள் சில  உதாரணங்கள் மட்டுமே.

எனக்கு முன்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கௌரவ சந்திரகுமார் அவர்கள் வவுனியா நகரசபை குறித்து பேசினார். அவர் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு யாழ் மாநகரசபையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. இன்று யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றது? ஆளும் கூட்டணியினுள்ளேயே ஈபிடிபியினர் ஓரணியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் ஓரணியிலும் நிற்கின்றனர். மேயருக்கெதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக அவர் யாழ் மாநகரசபையின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு வரட்டும். வவுனியா நகரசபையின் பிரச்சினைகள் தொடர்பாக நான் இந்தச் சபைக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

சமீபகாலமாக நகரசபை நிர்வாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தாமதங்களால்; நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுகாதாரச் சீர்கேடுகளால் இங்குள்ளோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 28.05.2011 அன்று நகரசபைச் செயலாளர் திரு.வசந்தன் அவர்களால் நகரசபைக்கு வெளியில் வேப்பங்குளம் என்னுமிடத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கான இயந்திர நிர்மாண ஆரம்ப நிகழ்வில், செயலாளருக்கும் நகரசபை உறுப்பினரான திரு.எஸ்.எஸ்.சுரேந்திரன் அவர்களுக்கும் இடையில் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து 03.05.2011 அன்றிலிருந்து நகரசபை உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதுடன் நகரசபை நுழைவுவாயில் பூட்டப்பட்டுள்ளது. மேலும் நகரத்தின் மையத்திலுள்ள பொது மலசலக்கூடங்கள், குளியலறைகள் என்பனவும் பாவனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொதுநூல்நிலையமும் பூட்டப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள குப்பை கூளங்கள் அகற்றப்படாமையினால் வர்த்தக நிலையங்களின் வாயில்களில் அசுத்தங்கள் நிறைந்து துர்நாற்றம் வீசுகின்றது.

இதன் பின்னணியில் உள்ளுராட்சி நிர்வாகத்தை நெறிப்படுத்தும்; பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் செயற்படுவதனையும் காணக்கூடியதாக இருக்கின்றது. நகரசபை உறுப்பினர் திரு.சுரேந்திரன் தவறிழைத்திருந்தால் கட்சி அவர்மீது நடவடிக்கை எடுக்கும். அல்லது நகரசபை நிர்வாகம் குறைந்தபட்சம் பொலிஸ் அல்லது நீதிமன்றத்தையாவது நாடியிருக்க வேண்டும். அதனை விடுத்து தமது கையில் அதிகாரத்தை எடுத்து அதிகாரிகள் செயற்படுவதானது வருந்தத்தக்கது. இவரது தூண்டுதலின் பேரில் ஒருசில ஊழியர்கள் கடைகளைப் பூட்டி ஆதரவு வழங்குமாறு வர்த்தகர்களை வற்புறுத்துகின்றனர். ஏற்கனவே கீழ்காணும் விடயங்கள் தொடர்பாக நகரசபை மற்றும் உள்ளுராட்சி அதிகார சபை அலுவலகத்தால் எதுவித தீர்வும் எட்டப்படாத நிலையில் மேற்குறித்த சம்பவம் இங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வவுனியா நகரசபைக்கு அதிகூடிய வருமானத்தை ஈட்டிக்கொடுத்த ஈட்டிக்கொடுத்துவந்த வவுனியா சந்தை சுற்றுவட்டத்துக்குள் அமைந்துள்ள மாட்டு இறைச்சிக்கடை, ஆட்டு இறைச்சிக்கடைகளை எவ்வித கேள்விப்பத்திரமும் கோராமல் தனிநபர் ஒருவருக்கு 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மிகக்குறைந்த குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் நகரசபைக்கு இலட்சக்கணக்கில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதே வேளையில் குருமன்காடு சந்தையில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக்கடை பகிரங்க கேள்வி விடப்பட்டு வருடாந்தம் 29லட்சம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனைப் போன்றே பூந்தோட்ட சந்தையில் அமைந்துள்ள மாட்டிறைச்சிக்கடை பகிரங்க கேள்விப்பத்திரம் விடப்பட்டு ஆண்டிற்கு 19லட்சம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு இடங்களையும்விட வவுனியா சந்தைக்கு மூன்று முதல் நான்கு மடங்குவரை கூடுதல் வருமானம் கிடைக்கும்.

 டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்திலும் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. இதற்காக ஆளுநரால் நகரசபைக்கு எண்பத்திரண்டு இலட்சம் (82இலட்சம்) நிதிவழங்கப்பட்டுள்ளது. ஆனால் பதினைந்து மாதமாகியும் இதுவரை இதற்கான செலவுக்கணக்கோ அல்லது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தோ சபைக்கு அறிவிக்கப்படவில்லை.
கோவில்குளத்தில் பாலர் பாடசாலை கட்டி முடிக்கப்பட்டதாக சபையில் பணக்கொடுப்பனவுக்கான அனுமதி பெறப்பட்டு கு.து.ஏ என்னும் ஒப்பந்த தாரருக்கு ஒரு லட்சத்து எழுபத்தியேழாயிரத்து நூற்று எண்பது ரூபாய் அறுபத்தியாறு சதம் (177,180.66) வழங்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஆனால் அந்த இடத்தில் பாலர் பாடசாலை கட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வீதிகளில் மின்விளக்கு பொருத்துவதற்கு வடமாகாண ஆளுநரால் ரூ.5.5 மில்லியன் வழங்கப்பட்டது. இதற்கான கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை. வேலை முன்னேற்றம் தொடர்பாகவும் தரவு இல்லை.

வவுனியா குளத்தினை அழகுபடுத்துவதற்கு அரசாங்க அதிபரால் ரூ75இலட்சம் வழங்கப்பட்டது. குளம் அழகுபடுத்தப்படவும் இல்லை. இதற்கான கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.

இவ்விடயங்களை அம்பலப்படுத்தி நீதியான தீர்வைப்பெற்றுக்கொள்வதற்காகவும் நகரசபையின் வளர்ச்சிக்காகவும் சபையில் உள்ள ஏனைய ஏழு அங்கத்தவர்களுடன் தலைமைதாங்கி திரு.எஸ்.எஸ். சுரேந்திரன் செயற்பட்டதால்தான் அவருக்கு எதிராக உயர் அதிகாரிகள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி உண்மையை விளங்கிக்கொண்ட நேர்மையான உண்மையான உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் தங்களின் பிடிக்குள் வைத்துக்கொண்டு பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளுமாறு தூண்டிவிட்டுள்ளனர். இதில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரின் பங்கு முக்கியமானதாகும்.

கடந்த மூன்று தினங்களாக நகரசபையில் இடம்பெற்றுவரும் பணிப்புறக்கணிப்பின் பின்னால் நின்று ஊழியர்களைத் தூண்டிவிடும் சம்பந்தப்பட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவியாணையாளரின் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி, இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான விசாரணைக்குழுவை நியமித்து இது தொடர்பான நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு சிவசக்தி ஆனந்தன் கூறினார்.

Wednesday, May 4, 2011

ஆண் டிரைவர்கள்... அதிக விபத்து!

பெண் வாகன ஓட்டுநர்களை விட ஆண் வாகன ஓட்டுநர்களே அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதை நாம் கூறவில்லை. மேலைநாட்டில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

கவனச் சிதைவு காரணமாக பெண் ஓட்டுநர்களைவிட ஆண் ஓட்டுநர்கள் இரண்டு மடங்கு விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். விபத்தைச் சந்தித்த ஆண்களில் 10 பேரில் ஒருவர், கவனச் சிதைவால் விபத்து ஏற்பட்டது என்று ஒத்துக்கொண்டிருக்கின்றார். ஆனால், 20 பெண்களில் ஒருவர்தான் கவனச் சிதைவால் விபத்தைச் சந்தித்திருக்கின்றார்.

மேலும், வாகனத்தைச் செலுத்தும்போது கவனத்தை இழந்து ஏறக்குறைய விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டதாக மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் ஐந்தில் ஒரு பங்கு பெண்களுக்குத்தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆண்களின் கவனத்தை அதிகமாகச் சிதைக்கும் விஷயம், கார் ஸ்டீரியோவை சரிசெய்வது. இதன் காரணமாகவே சாலையில் இருந்து பார்வையை விலக்க நேர்வதாக 76 சதவீத ஆண்கள் கூறியிருக்கின்றனர்.

மூன்றில் இரண்டு பங்கு பேர், வாகனத்தைச் செலுத்தும்போது பானம் பருகுவது, சாப்பிடுவது போன்றவற்றால் கவனத்தை இழக்கின்றனர். ஆய்வில் பதில் தெரிவித்தவர்களில் பாதிப் பேர் சிடியை எடுப்பது, வைப்பதில் சாலையில் தடுமாறிவிடுவதாகக் கூறியிருக்கின்றனர். கால்வாசிக்கு மேற்பட்டோர், செல்போன் பேசுவதன் மூலம் பிரச்சினையைத் தேடிக்கொள்கின்றனர். வாகனத்தை ஓட்டும்போது எஸ்.எம்.எஸ். அனுப்புவது தங்கள் வழக்கம் என்று பலர் கூறியிருக்கின்றனர்.

வாகனத்தை ஓட்டிக்கொண்டே வழித்தடப் படத்தைப் பார்ப்பது, 'ஷேவிங்' செய்வது, முத்தமிடுவது, செய்தித்தாளில் பார்வையை ஓட்டுவது போன்றவையும் ஆண்களுக்கு விபத்தை ஏற்படுத்துகின்றன.

Tuesday, May 3, 2011

கவிதைச்சரம்

விபரமறியா வயதில்
விரலிரண்டை
துப்பாக்கியாக்கி
நான் சுடும்போது
விழி பிதுக்கலோடு
நாக்கும் நீட்டி
செத்துப்போவதாய்
பாவனை செய்து
பின் சிரிப்பாய்...
என் கையால்
சாவதே
சந்தோஷம் என்பதாய்...

****

போட்டோ புடிச்சா
ஆயுசு குறையும் என
பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கும்
புகைப்படம்
எடுக்க விடாமல்
அடம் பிடித்த அப்பா(வி) நீ

****

விடுதிக்குக் கிளம்பும் நாளில்
வாசலடைத்துக்
கோலம் போடச் சொல்வாய்...
வாரம் கடந்தாலும்
அதைப் பெருக்காமல்
இழைகளுக்குள் சிக்கிய
புள்ளிகளில்
என் முகம் பார்த்து மகிழும்
உன் மனசுக்காகவே
பொய்யெனப் பொய்த்தது
நம்மூர் மழை

****

இருந்தும் என்ன...
ஒற்றை ரோஜாவுக்கும்
ஒரேயொரு வாழ்த்து அட்டைக்கும்
ஓடிவந்துவிட்டேன் நான்...
நீ ஏற்க மறுத்த
என் காதலனோடு...

****

முன்பொரு நாள்
நான் சுவரில் எழுதி வைத்த
என் விடுதி தொலைபேசி எண்ணில்
என்னையே பார்த்து மகிழ்ந்த நீ
எந்தப் பொங்கலுக்கும்
வெள்ளையடிக்கவே
இல்லையாம்...

****

அடைமழை நாளொன்றில்
அச்சுவர் இடிந்து விழ
அடுத்த நாளே
படுக்கையில் விழுந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ செத்துப்போனதை
தண்டட்டி குலுங்க
நெஞ்சிலடித்துக் கொண்டு
அலமேலு ஆச்சி
சொன்னபோது...

****

அப்பாவென
பெருங்குரலெடுத்து
அழத் தொடங்கினேன்....
நீயோ என் பொருட்டு சாவதே
சந்தோஷம் என்பதாய்
சிரித்துக் கொண்டிருக்கிறாய்
விளக்கின் பின்னே உள்ள
புகைப்படத்தில்
அன்று சிரித்தது போலவே...


சுமதிஸ்ரீ


****

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3ஆம் நாளன்று பத்திரீகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்ரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக  1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே "பத்திரிகை சுதந்திர சாசனம்" (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு வருடாவருடம் யுனெஸ்கோ நிறுவனத்தினர் விருது (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது 1986 டிசம்பர் 17 இல் கொல்லப்பட்ட கொலம்பிய] பத்திரிகையாளர் "கில்லெர்மோ இசாசா" (Guillermo Cano Isaza) என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.

Monday, May 2, 2011

கடாபியைக் காக்கும்'கன்னிப் படை


உள்ளூர் கிளர்ச்சியாளர்களையும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் அதிரடியையும் எதிர்த்துப் போராடி வருகிறார், லிபிய அதிபர் மும்மர் கடாபி.

போரில் தோற்றாலும்கூட, சதாம் உசேனுக்கு நேர்ந்தது போன்ற பரிதாப முடிவு கடாபிக்கு நேராது என்கிறார்கள் ராணுவ நிபுணர்கள். கடாபியை நெருங்கவே முடியாது. காரணம் அவரைச் சுற்றி நெருப்பு வளையமாய் நிற்கும் 40 கன்னிப் பெண்கள்!

அந்தப் பெண்கள் உதட்டுச் சாயம் பூசியிருக்கிறார்கள், நகைகள், குதிகால் உயர்ந்த காலணி, நவீன குளிர்கண்ணாடி அணிந்திருக்கிறார்கள், கம்பீரமான ராணுவ உடையில் கவர்ச்சியாய் தோன்றுகிறார்கள்.

ஆனால் இவர்களின் வாழ்வில் இயல்பான எந்தப் பொழுதுபோக்கும், உல்லாசமும் இல்லை. பேச்சு, மூச்சு, உயிர் எல்லாமே கடாபியைப் பாதுகாப்பதில்தான்!

லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள மகளிர் ராணுவ அகாடமியில் கடுமையான பயிற்சியில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் இந்த அதிரடிப் பெண்கள்.

அந்த அகாடமியின் உயர்ந்த கேட்களுக்கு இடையே கசிந்த தகவல்கள்படி, இந்த நாற்பது பெண்களும் அங்கு மூன்றாண்டுகள் மிகக் கடுமையான பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

பயிற்சி என்றால், அது சாதாரணமானவர்களுக்கு சித்ரவதை. அதிகாலை 4.30-க்கெல்லாம் எழ வேண்டும். அடுத்து ஒன்றரை மணி நேரம் `ஜாகிங்' செய்ய வேண்டும். பின்பு பற்பல யுக்திகள் பயிற்றுவிக்கப்படும். அவற்றுள் முக்கியமானது, எதிராளியை எப்படிக் கொல்வது என்பது. இந்தப் பெண்களால் வெறுங்கைகளாலே எதிராளியைத் தாக்கி மூச்சை நìறுத்திவிட முடியும்.

சில பெண்களுக்கு போர் விமானம் ஓட்டும் பயிற்சி கூட அளிக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் அனைவருக்கும் அடிப்படையான இலக்கு ஒன்றுதான். அது, எப்பாடு பட்டேனும், என்ன விலை கொடுத்தேனும் கடாபியின் உயிரைக் காப்பது. அதற்காக, செக்ஸ், திருமணம் எல்லாவற்றையும் துறந்துவிட்டார்கள் இப்பெண்கள்.

இந்தப் பெண்களைப் பற்றி இப்படி கூறுவதற்கு ஒரு சான்று...!

1998-ம் ஆண்டு கடாபியின் வாகன அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தினார்கள் தீவிரவாதிகள். கடாபியை நோக்கியும் புல்லட்கள் சீறி வந்தன. அப்போது ஆயிஷா என்ற மேற்கண்ட `கன்னிப்படை' பெண், கடாபி மீது பாய்ந்தார். தாக்குதலில் ஆயிஷா உயிர் துறந்தார், கடாபி சிறு கீறலும் இல்லாமல் தப்பித்தார்.

கனடாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜேன் கோகன். அவர், கடாபியின் மெய்க்காவலர்கள் குறித்த ஓர் ஆவணப் படம் தயாரிப்பதற்கு லிபியா அரசின் அரிதான அனுமதியை 1995-ல் பெற்றார். அவர் மூலமாகவே கடாபியின் கட்டிளம் பெண்கள் படை பற்றிய தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கின்றன.

டக் சான்டர்ஸ் என்ற மற்றொரு கனடா பத்திரிகையாளரும் லிபிய மகளிர் ராணுவ அகாடமிக்குள் நுழையும் அனுமதியைப் பெற்றார். அவர் தனது வலைப்பூவில், குறிப்பிட்ட பெண்கள் படை, `வி.ஐ.பி.யின் பாதுகாவலர்கள்' என்று அழைக்கப்படுவதாக எழுதியிருக்கிறார். லிபியாவில் இப்படியொரு பெண்கள் படையை உருவாக்கியிருப்பது கடாபியின் வினோதமான, புதிரான மனோபாவத்தை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, கன்னிப்படை, தமது உயிருள்ள வரை கடாபியைக் காப்பாற்றும் என்பதில் ஒரு சதவீதம் கூட சந்தேகமில்லை. அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் விசுவாசமும், `தலைவரை'க் காக்கும் துடிப்பும் தெறிக்கின்றன.

பாதுகாவல் பெண்கள் படையைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணான பாட்டியா கூறுகையில், ``தலைவர் இல்லாமல் லிபியா பெண்கள் ஒன்றுமேயில்லை. அவர்தான் எங்களுக்கு வாழ்வு கொடுத்தார். அவருக்காக நான் உயிரைக் கொடுக்கவும் தயார். அவர் ஒரு நம்பிக்கைக்குரிய தந்தை, சகோதரர், நண்பர். அவர் எவ்வளவு அடக்கமாக இருப்பார் என்று உங்களால் கற்பனை செய்யவே முடியாது.''- என்கிறார்.

இந்தப் பெண்கள் எந்தளவு கடாபி மீது உறுதியான பற்று வைத்திருக்கிறார்களோ, அதே அளவு நம்பிக்கையை அவர் இவர்கள் மீது வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடாபியின் உறவினர்கள் பலரும் கூட இன்று அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டனர். ஆனால் இந்த பெண்கள் படை மட்டும் இறுதிவரை அவருக்கு அரணாக நிற்கும் என்பது நிச்சயம்.

வாழ்க்கையை வாழும்படியாகச் செய்ய….

கலைகளின் பயன் என்ன? இலக்கியங்களைப் படிப்பதால் என்ன பயன்? பொழுதைப் போக்குவதுதானா? வேறு வேலை இல்லாதவர்களின் வேலையா? எதற்காக இந்தக் கலைகள்? இத்தனை இலக்கியங்கள்?

இலக்கியங்களால் என்ன பயன்? என்று கேட்கப்பட்டதற்கு – ‘சரி இந்த வாழ்க்கையினால் என்ன பயன்?’ என்று திருப்பிக் கேட்டார் கண்ணதாசன். எதிலும் ‘உடனடி லாபம் என்ன’ என்று எதிர்பார்க்கிறவர்களுக்கு இப்படி மடக்கடியாகத்தான் கேட்டு யோசிப்பதற்கு நிதானிக்கிறார்களா என்று பார்க்க முடியும்.

கலைகளும் இலக்கியமும் வெறுமனே மனதை இன்புறுத்துவதுடன் முடிந்துவிடுகிறதா என்ன? அதற்கும் அப்பால் நமக்குள் மாற்றங்களை ஏற்படுத்துவதில்ரூபவ் நாமறியாத நம் உருவாக்கத்தில் இவற்றின் பங்கும் பயன்பாடும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கலைகள் இல்லாமல் கதைகள் இல்லாமல் மனிதகுலம் இன்றைய நிலைக்கு வளர்ந்திருக்குமா என்று கேட்டால்ரூபவ் இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆமாம் இலக்கியம் மனித வாழ்வைப் பண்படுத்தியிருக்கிறது; மனிதனை மேம்படுத்தியிருக்கிறது; மனிதனாகச் செய்திருக்கிறது. நிதானமாக யோசித்தால் இதை நாம் ஒவ்வொருவரும் உணர முடியும் – ஒரு பூவிலிருந்து ஒரு வசந்தத்தை அறிய முடிவது போல.

வாழ்க்கையை அறிவதற்கான மெய்காண்முறையே இலக்கியம். குழந்தைகளாய் இருக்கும்போதே கதை கேட்பதன் மூலம் நாம் கற்பனை செய்யப் பழகுகிறோம். இது நம்மைச் சுயமாகச் சிந்திக்கக் கற்றுக் கொடுக்கிறது. இவ்வாறு கதைகளின் மூலம் நம் அனுபவங்களைத் தொகுக்கும் சிந்தனை உருவாகி வருகிறது. பண்பாடு என்பதே நாம் பழகி வந்த கலைகளதும் அழியாத சொற்களதும் தொகுப்புத்தான். மொத்த மானுடக் கலாசாரமே மொத்த மானுட வரலாறே இலக்கியங்களினூடு பகிரப்படுகிறது என்று சொல்லப்படுவதில் மிகையெதுவுமில்லை. இலக்கியம் மனிதனது ஆக்கத்தில் இன்றியமையாத முறையில் உறவு கொண்டுள்ளது. மனிதன் தன்னை மேலும் மனிதனாக்கிக் கொள்வதற்கான ஆக்கத்திறன்களை அவை வழங்குகின்றன.

இன்பமும் துன்பமும் மேலும் விளங்கிக் கொள்ள முடியாத புதிர்களும் கொண்டதாகவே வாழ்க்கை இருக்கிறது. அதிலும் இன்றைய நம் வாழ்வு எண்ணிறந்த அவலங்கள் கொண்டது. நாலாபுறத்திலுமிருந்து தாக்குகிற நெருக்கடிகளுக்குள் நம் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதே சீவியம் என்றிருக்கிறது. இந்தச் சிக்கல்களைக் கடக்கவும், மனிதர்களைக் கற்கவும், மனிதராக வாழவும், நாளைய உலகிற்குள் நாம் பொருந்திக் கொள்வதற்கும் இலக்கியங்கள் உதவ முடியும். பேரியாற்று வெள்ளத்தில் அகப்பட்ட தெப்பம் போல, நமது போக்கை நாமே தீர்மானிக்க முடியாத இந்த அலைவிலிருந்து நிலைப்படுத்திக் கொள்வதற்கு அவை துணைபுரிய முடியும். இந்த வாழ்க்கையை வாழுகிற விதமாகச் செய்து கொள்வதில் அவற்றுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.

அடுத்த மனிதரை எந்தவிதத்திலும் இம்சிக்கக் கூடாது. நமக்கிருக்கும் இன்பங்கள், துன்பங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், சலிப்புகள், சங்கடங்கள் எல்லாமே ஒவ்வொரு மனிதருக்குமானவைதான். பூமியில் வாழவும், சுவாசிக்கவும், கடவுளை வணங்கவும், கஷ்டங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் நம் சக மனிதனுக்கும் இருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டிருப்பவை இலக்கியங்களே. மற்றவர்களுடன் வாழ்வது என்ற கலையையும் இலக்கியங்களே நமக்கு அளிக்கும்.


மானுட வாழ்வு, பிரபஞ்சத் தோற்றம்ரூபவ் மனுக்குலத்தின் அல்லாட்டங்கள், பல்வேறு உயிர்களின் வாதை, சிருஷ்டியின் உள்ளீடாக உறைந்திருக்கும் வன்முறை, பேரழிவு…. இவை பற்றிய ஆய்வுப் பார்வைகளும் வாழ்க்கை வழிகளும் கலை இலக்கியங்கள் நமக்குக் கடத்தித் தந்தவையே. நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரன் பாமுக் சொன்னார்: “மகிழ்வுடன் இருக்க தினமும் குறிப்பிட்டளவு இலக்கியத்தை நான் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வகையில் தினமும் தேக்கரண்டியளவு மருந்து உட்கொள்ளும் நோயாளிக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. என்னளவில் இலக்கியம் ஒரு மருந்து” என்றார். மாபெரும் விஞ்ஞானி அல்பேட் ஐன்ஸ்டீன், இலக்கியங்களிலிருந்து நாம் பெறக் கூடியது பற்றி இன்னொரு பார்வையில் வியந்து சொன்னார்: Dostoevsky gives me more than any scientist, more than Gauss.

நமக்குள்ளிருக்கும் வன்முறை உணர்வை முற்றாக ஒழித்துவிடுவது எளிதல்ல. எல்லோரிடமும் அவ்வப்போது தலைதூக்க முயன்று ஒரு மெலிதான நாகரிகப் போர்வையினால் கீழே தள்ளப்பட்டுக் கொதித்துக் கிடக்கின்றன வன்முறை உணர்வுகள். எவராலும் மிக எளிதாக இதைச் சீண்டி விட்டுவிட முடியும். ஆனால் மறுபாதியில் நமக்குள் அன்பும் நற்குணங்களும் கூடத்தான் இருக்கின்றன. வன்முறைக்கு மாற்றாக இவற்றைச் செயல்பட விடுவதற்கு இலக்கியப் படிப்பு உதவும். இன்றிருக்கும் நமது எதிர்ப்பான, வெறுப்பும் பகையுமான மனநிலையிலிருந்து மனிதத் தன்மைக்கு மாறக்கூடிய, வாழும்படி செய்யக்கூடிய சூழல் உருவாகுவதற்கு அதையே நாம் நம்ப வேண்டியிருக்கிறது.

வாழ்வின் அவலத்தை உரியபடி கண்டு வெளியே சொல்லும் இலக்கியங்கள், மனிதனை உயர்த்துவதையே ஒரு முயற்சியாகச் செய்கின்றன – செய்ய வேண்டும். துயரங்களைத் தணித்து மனிதர்களின் எண்ணத்தை உயர்த்துவதுதான் இலக்கியத்தின் மகத்தான குறிக்கோள். ரஷ்ய எழுத்தாளர் ஜோசஃப் பிராட்ஸ்கி சொன்னார்: “எழுத்தாளர்களைத் தண்டித்தல், எழுதவிடாமல் அடக்குதல், தணிக்கைமுறை, நூல்களை எரித்தல் போன்றன எல்லாம் குற்றங்கள்தான். இந்த அநீதிகளை நாம் கண்டிக்க முடிகிறது. ஆனால் இதையெல்லாம் விட மோசமான குற்றமான – புத்தகங்களைப் படிக்காமை என்று வரும்போது நாம் அதிகாரமின்றி நிற்கிறோம். வாசிப்பு என்பதை அலட்சியப்படுத்துவதே மனித வாழ்வைச் சிதைவுறச் செய்யும் குற்றமாக உள்ளது. அந்தக் குற்றத்திற்கு ஒருவன் தன் வாழ்வையே விலையாகக் கொடுக்கிறான். அதுவே ஒரு சமூகமாக இருந்தால் தன் வரலாற்றையே விலையாகக் கொடுக்கிறது.”

பழங்குடிச் சமூக நிலையிலிருந்து மாறாத, வன்முறை வெறித்தனத்தைக் காட்டிய ‘தேவர் மகன்’ படத்தின் கடைசிக் காட்சியில் “போய்ப் படிங்கடா டே” என்பதும் இந்த அடித்தெளிவுதான்.

இலக்கியம் ஒரு சக்தி. நமக்குள் அது வந்து சேர, வாழும் வழி பிடிபடும். வாழ்க்கையைப் பற்றியும் வாழ்வது பற்றியும் பேசுபவையே கலை இலக்கியம் எல்லாமும். தன்னலத்தைப் பின்தள்ளி விடுவதும், பிறர் துயர் துடைக்க இந்த வாழ்வைப் பயன்படுத்துவதுமே உயர்வென்று இலக்கியங்கள் வலியுறுத்தும். அன்பு, கருணை, அறம் எனப் பல்லாயிரமாண்டுக் கால மரபு உருவாக்கிய விழுமியங்களை நாம் தொடர்ந்து கண்டடைதல் இலக்கியங்கள் மூலமாகவே சாத்தியமாகிறது – படிப்பற்றவர்களிடமும் பாரதமும் இராமாயணமும் சென்று சேர்ந்திருப்பதைப் போல.

மற்றவர்கள் வதைபடும் விதமாகத் தங்கள் இலட்சியப் பிடிப்பை உறுதியாக வைத்துக் கொள்வதில் மனிதாபிமானம் எதுவுமில்லை. சுயநலத்திற்காகப் பிறர் வாழ்வையும் பணயம் வைப்பதே அதுவாகும். பிறரைக் காக்கும் விதமாகத் தாங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வைக் கொண்டுவருபவர்களே பேராண்மையாளர்கள் என்றும் அவர்களால்தான் உலகம் செழிக்கும் என்றும் இரண்டாயிர வருடத்திற்கு முன்பிருந்தே பேசிவந்திருக்கின்றன இலக்கியங்கள்.


“உண்டாலம்ம இவ்வுலகம், இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்ரூபவ்
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி
புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர், அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுனர் உண்மையானே”
                            
என்றிருக்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியார்.

நம் வாழ்க்கையையும் அதேசமயம் மற்றவர் வாழ்க்கையையும் நேசிக்கும் மனப்பாங்குதான் நம்மை மனிதர்களாக உயர்த்தும்.

இந்த ‘வாழும் விருப்பத்தை’ கவிஞர் ஷண்முக சுப்பையா மிக எளிய வரிகளில் சொல்கிறார்:
“அணைக்க ஒரு அன்பில்லா மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்க சற்றும் வசதியில்லா வீடு
உண்ண என்றும் உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு பிடிப்பில்லா தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம் கசக்கவில்லை.”

வாழவும் வாழ வைக்கவுமாகவே கொள்கை கோட்பாடு இயக்கங்கள் எல்லாம். கடைசி உயிர் வரை கஷ்டப்படவும், அழிக்கவும் காரணங்கள் உருவாக்க அல்ல.

காலத்தைப் போற்றுவோம்


நம்மை இயக்கிக்கொண்டிருப்பது காலம்தான். அந்தக் காலத்தின்மதிப்பைப் பலர் உணராமல் வீணடித்துக்கொண்டிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம். காலத்தின் முக்கியத்துவம் என்ன, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அறிய வேண்டும்.

'காலத்தின் அருமையை உணருங்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பித் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்கப் பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப்போடாமல் இன்றே செய்து முடியுங்கள்' என்று செஸ்டர்பீல்டு பிரபு என்பவர் கூறுகிறார்.

ஒவ்வொரு நாளையும் தொடங்கும்போது திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் அதன் பலனை அடைய முடியும். எந்தவித திட்டமும் இல்லாமல் தொடங்கினால் குழப்பம்தான் மிஞ்சும் என்கிறார் விக்டர் ஹியூகோ என்ற அறிஞர்.

ஒவ்வொருவரும் காலையில் எழுந்திருக்கும்போது அவர்களின் பைகளில் 24 மணி நேரம் நிரப்பப்படுகின்றது. அந்தக் காலம், பொன் போன்றது.

சாதாரண எழுத்தராக வறுமையின் பிடியில் தன் வாழ்க்கையை ஆரம்பித்த ஆர்னால்டு பென்னட் என்பவர், தான் ஒரு சிறந்த எழுத்தாளராக ஆகவேண்டும் என்று எண்ணினார். தனக்கு அதற்குரிய தகுதி இருக்கின்றதா என்று ஆராய்ந்தார். காலத்தின் அருமையை உணர்ந்தார். ஒருவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காலம் என்பது இயற்கையால் அவருக்கு வழங்கப்பட்ட வரம். காலத்தைச் சரியாக பயன்படுத்திகொள்வதில்தான் ஒருவரின் உயர்வு, தாழ்வு இருக்கிறது என்பதை ஆர்னால்டு பென்னட் நன்கு உணர்ந்தார். ஆகவே ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, எஞ்சியுள்ள நேரத்தைப் படிப்பதற்கும், எழுதுவதற்கும் பயன்படுத்தத் துவங்கினார் பென்னட். ஒவ்வொரு செயலையும் அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார். திட்டமிட்டபடி தனது செயல்பாடுகளில் முன்னேற்றம் காண்பதையும், அடையவேண்டிய இலக்கை குறிப்பிட்ட காலவரையறைக்குள் அடைவதையும் இயல்பாக்கிக் கொண்டார்.

காலங்கருதிச் செயல்படும் இந்த அணுகுமுறை ஆர்னால்டு பென்னட்டுக்கு பயனளிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு மணி நேரமும் ஒரு சிந்தனையை வெளிப்படுத்த உதவியது. ஒவ்வொரு நாளும் ஒரு கதை அல்லது ஒரு கட்டுரை உருவாகத் தொடங்கியது. அவரது முதல் நாவல் வெளிவந்தது. பலரது கவனத்தையும் கவர்ந்து வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வறுமையுடன் போராட வேண்டியிருந்த எழுத்தர்பணி, காலவெள்ளத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. சரியான நோக்கத்துடன் காலத்தைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன் எழுத்துலகில் பென்னட்டின் முன்னேற்றம் வளர்ந்தது.

24 மணி நேரத்தையும் சரியாகப் பயன்படுத்தப் பழகியதால் எழுதுவதற்கு மட்டுமன்றி பல்வேறு பயனுள்ள பொழுதுபோக்கு களில் நேரத்தை செலவழிக்கவும் பென்னட்டால் முடிந்தது. ஓவியம் வரைவது, இசை ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது, பல நூல்களைப் படிப்பது, நல்ல நண்பர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற அனைத்தும் சாத்தியமாயின. பென்னட்டைச் சந்திக்கும் அனைவரும், எப்படி உங்களால் மட்டும் முடிகின்றது? நேரம் எப்படி கிடைக்கின்றது? என்று கேள்வி கேட்கத் துவங்கினர்.

அந்தக் கேள்விகள் பென்னட்டுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தின. ஏனென்றால், அனைவருக்கும் சமமாகத்தான் 24 மணி நேரம் அளிக்கப்படுகின்றது. பென்னட் நேரத்தைப் பயன்படுத்திய விதம்தான் மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தியது. இதே உணர்வு அதாவது, காலம் பொன் போன்றது என்ற எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் அனைவருமே சிறப்பான முன்னேற்றத்தைக் காணமுடியும் என்பதே உண்மை. ஒவ்வொரு வரும் பணத்தைத் திட்டமிட்டுச் செலவழிப்பதைப் போல நேரத்தையும் திட்டமிட்டு செலவிடப் பழக வேண்டும். ஒருவகையில் பார்த்தால் காலத்திலிருந்து விளைவதே நிதி. காலத்தைச் சரியாக பயன்படுத்தினால்தான் வருவாயைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை நம்மில் பலர் உணரவில்லை.

காலத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்கமாகக் கட்டுரை எழுதினால், தான் பெற்ற மகிழ்ச்சியை பலரும் பெறமுடியும் என்று கருதினார் பென்னட். ஒருநாளில் உள்ள 24 மணி நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி அவர் கட்டுரை எழுதினார்.

ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அடிப்படையாக அமைவது காலம் என்ற மூலதனம். உண்மையிலேயே சரியாக ஆராய்ந்து பார்த்தால் அனைவருக்கும் வியப்பளிக்கக் கூடிய விஷயம், ஏழை, பணக்காரர், அறிவாளி, கல்வியறிவு இல்லாதவர் என்று அனைவருக்கம் சமமாக அளிக்கப்பட்ட ஒன்றே காலம் என்று பென்னட் விவரித்தார். அதை யாரும் ஒருவரிடம் இருந்து எடுக்க முடியாது. திருடவும் முடியாது. யாராலும் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்திற்கு மேல் விலைகொடுத்தும் வாங்க முடியாது.

காலத்தை சரியாக பயன்படுத்துபவருக்கு போனஸாக இன்னும் ஒரு மணி நேரம் என்று அதிகப்படுத்தி கொடுப்பதில்லை. காலத்தை சரியாக பயன்படுத்தாதவர்களுக்கு அதற்கு தகுந்த அளவு அடுத்த நாள் காலத்தை குறைப்பதும் இல்லை. எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்துக்குக் கடன் வாங்க முடியாது. இறந்த காலத்தில் மீதம் வைத்து நிகழ்காலத்துக்கு அதைக் கொண்டு வரவும் முடியாது. கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள்தான் உடல்நலம், மனஅமைதி, பொருள் ஈட்டுதல், மரியாதை போன்ற அனைத்தையும் பெற முயற்சிக்க வேண்டும்.

கொடுக்கப்பட்ட நேரத்துக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளித்து பயன்படுத்துவது என்பது அவரவர் கையில்தான் உள்ளது. வரவுக்குள் செலவு செய்யப் பழகுவது போல காலத்தையும் முழுமையாக, சரியாக பயன்படுத்தப் பழக வேண்டும். பென்னட்டின் இந்தக் கருத்து, பலர் தமது வாழ்க்கைப் பாதையைச் சரிபடுத்திக்கொள்ளப் பெரிதும் உதவியது.

பென்னட்டின் நூல், தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றப் புத்தகங்கள் வரிசையில் முக்கியத்துவம் பெற்றது. வாழ்க்கையை நேசிப்பவர்கள் காலத்தின் அருமை கருதிச் செயல்படத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். காலத்தால் நிரப்பப்பட்டதே வாழ்க்கை.

'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து'

என்ற வான்புகழ் வள்ளுவனின் குறள்படி, காலத்தை எதிர்பார்க்கவேண்டிய பருவத்தில் கொக்கைப் போல காத்து இருந்து, காலம் வாய்த்தபோது கொக்கு மீனைக் கொத்துவதைப் போலத் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு செயலும் ஒரு விதையே. குறிப்பிட்ட காலத்தில் அதை விதைத்தால்தான் உரிய கால அவகாசத்தில் அது முளைத்துப் பயனை அளிக்கும்.

செயற்கரிய செயல்களை செய்தவர்கள் விதைத்த விதை விருட்சமாகி காலத்தையும் தாண்டி நிற்கிறது. இளைஞர்கள் முதலில் காலத்தின் அருமையை உணர்ந்து பயன்படுத்தப் பழக வேண்டும். எண்ணங்களும், செயல் களும் உயரும்போது காலத்தையும் தாண்டி சாதனை படைக்க முடியும். அதை உணர்வோம், உற்சாகமாய் எழுவோம்.

ப. சுரேஷ்குமார்