Tuesday, April 26, 2011

வரலாற்றில் இந்தியாவின் இடம் எது?

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட போதோ,சோவியத் ஒன்றியம் சிதறுண்ட போதோ,உங்களால் என்ன செய்திருக்க முடியும்?ஒன்றுமே செய்திருக்க முடியாது போயிருக்கலாம்.ஆனால்,நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும்,என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம்.காலம் அதைக்   குறித்து வைத்திருக்கும்.

வரலாறு என்பது எப்போதுமே இப்படித்தான்.அரபு உலகில் இப்போது அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா?.

துனிசியாவின் சயின் அல் எபிடையின் பென் அலி ; எகிப்தின் ஹோஸ்னி முபராக்; லிபியாவின் மம்மர் கடாபி;.... இவர்கள் எவருமே மேற்கு உலகின் எதிரிகள் அல்ல..குறிப்பாக அமெரிக்காவுக்கு.!

உலகின் பெட்ரோலியச் சுரங்கமான அரபு உலகின் இத்தகைய சர்வாதிகாரிகளே - மக்கள் நலனுக்கு எதிரானவர்களே-தங்களுடைய பதவியைத் தக்க வைத்துக்கொள்ள, மேற்கு உலகின் அடி வருடிகளாக இருப்பவர்களே- அமெரிக்க,ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் நெருக்கமான நண்பர்கள். ஆகையால்,மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாய் மேற்கு உலகம் ஆடும் ஆட்டம் ,ஒரு முற்போக்கு நடவடிக்கையோ,தன்னெழுச்சி  நடவடிக்கையோ அல்ல; அது ஒரு நிர்ப்பந்தம்.அரபு மக்களின் வெறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கும்  எண்ணெய்  அரசியல் தங்கள் பிடியில் இருந்து கைநழுவி விடாமல் இருக்க்கவுமான கடைசி வழி அது .அதே சமயம்,மனிதாபிமான அடிப்படையிலும் ,ஜனநாயக அடிப்படையிலும்,பார்த்தால் ..காலதாமதமான நடவடிக்கை!

இத்தகைய சூழலில் இந்திய என்ன செய்யலாம்? சர்வாதிகாரத்துக்கும் அடக்குமுறைக்குமெதிராக குரலாவது கொடுக்க வேண்டாமா? அனால்,நாம் தொடர்ந்து எதிர்மறையாக மௌனத்தையே பதிலாக தந்துகொண்டிருக்கிறோம்.

எகிப்து புரட்ச்சியின் போது, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து,நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா இப்படிச் சொன்னார்: "இத்தகைய சூழல்களின் போது நாம் நிலைப்பாடு எடுப்பதில்லை !"

எண்ணிப்பாருங்கள், சுதந்திர எகிப்தியர்கள்,இந்தியர்களை வரலாற்றில் எந்த இடத்தில் வைப்பார்கள்?
ஐ.நா. சபை , லிபிய வான் வெளியில் விமானங்கள் பறக்க தடை விரிக்கும் தீர்மானம் கொண்டு வந்தபோது,அந்த தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்த இந்தியாவின் தூதர் ஹர்தீப் சிங்  இப்படிச்சொன்னார்: " இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதர்க்கான போதிய காரணங்கள் சொல்லப்படவில்லை!"

எண்ணிப்பாருங்கள், எதிர் வரும் சுதந்திர லிபியா இந்தியாவை வரலாற்றில் எந்த இடத்தில் வைக்கும்?

இப்போது சீனாவில் சானியா நகரில் நடைபெற்ற 'பிரிக்ஸ்' (பிரேசில்,ரஷ்ய,சீனா, தென்னாபிரிக்க கூட்டமைப்பு.) மாநாட்டிலும் பிரதமர் மன்மோகன் சிங் வழக்கம் போல மௌனத்தை உதிர்த்து வந்திருக்கிறார்.

இதோ ஏமனிலும்,சிரியாவிலும்,யோர்டானிலும்,படுகொலைகள் தொடங்கிவிட்டன. அங்கே இருந்து வரும் மரண ஓலத்திற்கும் நாம் எதிர்க்குரல் கொடுக்கப்போவதில்லை

அன்று சோவியத் ஒன்றியம் ஆப்க்கானை ஆக்கிரமித்த போதும் ....நேற்று ஈழத்தில் தமிழினம் அளிக்கப்பட்டபோதும்...இன்று ஏமனிலும், சிரியாவிலும்,நடக்கும் படுகொலைகளின் போதும் ...இந்தியாவின் நிலைப்பாடு மௌனம்தான் என்றால் ,வரலாற்றில் நம்முடைய இடமெது? கைகட்டி, வாய்பொத்தி,வேடிக்கை பார்ப்பதுதான் நம்முடைய நிலைப்பாடு என்றால்,ஐ.நா.சபையின் பாதுகாப்பு அவையில் நமக்கு எதற்கு நிரந்தர இடம் ?

Sunday, April 24, 2011

நானிருக்கும் இவ்வுலகில் வேறுபடும் நீ வாழ நியாயமில்லை“நான் ஒரு மாபெருங் கடல். என்னுள் எத்தனையோ முரண்பாடுகள் அமைந்திருக்கின்றன” என்றார் வோல்ட் விட்மன். “நான் முரண்பாடுகளின் மூட்டை” என்று சொன்னார் ஜெயகாந்தன். முரண்படுவது ஒன்றும் விரும்பத் தகாத இயல்பல்ல. பாவத்துக்குரியதோ வெறுத்தொதுக்கப்பட வேண்டியதோ அல்ல.

முரண்களும் அவற்றின் மோதலும்தான் ‘புதிய’ ஒன்றைத் தோற்றுவிக்கிறது. முரண்பாடுகளே வளர்ச்சியைக் கொண்டுவருகின்றன. முரண்பாடுகளினால், அவற்றின் இடைவிடாத, ஒன்றையொன்று எதிர்த்த போராட்டத்தினால்தான் சமுதாயம் இயங்கி வந்திருக்கிறது. முரண்பட்ட அம்சங்களே இயக்கத்தை நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவை

ஒளி என்பதே இருளினால் அறியப்படுவதுதான். அன்பும் துவேசமும் ஒரு நுட்பமான கண்ணுக்குப் புலப்படாத, மிக மெல்லிய இழையில் ஒன்றுக்கொன்று வேறாக மாறிவிடக் கூடியவை. மிக நெருக்கமாக, உயிருக்குயிராய் பழகும் இருவர் பின்னர் ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் கொன்று தீர்த்துக்கொள்ள வெறியுடன் அலைவதை நாம் பார்த்திருக்கிறோம். அவ்வளவு ஏன்? நம் இயக்கங்களிலும், கூட இருந்து முரண்பட்டுப் பிரிந்து போனவர்களே எதிரியை விடப் பயங்கர விரோதத்துக்குரியவர்களாக ஆகியதையும், முதலில் அவர்களையே தீர்த்துக்கட்டி விடும் ‘ஜனநாயக’ உணர்வில் நாம் தழைத்தோங்கியிருந்ததையும் அறிவோம்.

முரண்கள் இயல்பானவை. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. விவாதித்து முன்னகரத் துணைபுரிபவை. விலகல்களையும் வித்தியாசங்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனமே படுகொலைகளுக்கும் போர்களுக்கும் வித்தாகிறது. பாசிசத்தின் தோற்றுவாய் ஆகிறது. மதம், இனம், மொழி, கலாசாரம் என்பவற்றில் தீவிர பற்றும் தற்பாதுகாப்புணர்வும் மேலோங்குகையில் அது மற்றவற்றின் மீதான வெறுப்பாக மாறிவிடும் அபாயம் எப்போதுமிருக்கிறது. இதுபற்றி விரிந்த பார்வை ஏற்படாமல் அதாவது மற்றைய இன, மொழி, மத, கலாசாரங்களைக் கணக்கிலெடுக்காமல், அவைபற்றி ஏதும் அறிந்துகொள்ளாமல் அவற்றை மறுத்து எங்களுடையதை நாம் உயர்த்திப் பிடிக்கையில் அது அடிப்படைவாதமாகிறது.

 உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு புள்ளி அளவில் இருந்துகொண்டு நம்முடைய மொழியும் நம்முடைய கலாசாரமுமே, சிறந்த மொழியும் கலாசாரமும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அறியாமை – சிறுபிள்ளைத்தனம் ஏற்பட்டுவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக அதிகாரமும் கிடைத்துவிட்டால் அடுத்த மொழியையும் கலாசாரத்தையும் அழித்தொழிக்கும் முனைப்பும் நம்மிடம் வந்துவிடுகிறது.

தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகையில் முற்போக்கானதாகத் தோற்றப்பாடு கொள்ளும் ஒரு இனக்குழு, தமக்குள்ளேயே இருக்கும் ஏனைய வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது விரும்பாத போது, அதுவும் ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் ஆதிக்க சக்தியாகவே மாறுகிறது.

அந்நிய காலனித்துவத்துக்கெதிராகப் போராடிய நாடு அல்ஜீரியா. பிறகு, அந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கபீலியா என்ற பகுதியில் மக்கள் தங்களுடைய சொந்த மொழியான கபீலிய மொழியைப் பேசினால் அபராதம் விதிக்கப்பட்டது. அல்ஜீரியாவின் ஆட்சிமொழியான அரபி மொழியே பேச வேண்டும் என்று கபீலியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தங்கள் மொழிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் அவர்கள் போராடும்படி ஆகியது. அல்ஜீரிய அரசு ஒடுக்குமுறையரசாகியது. அதுபோலவே, கடும் அடக்குமுறைக்கும் இன ஒடுக்குதலுக்கும் உள்ளான யூதர்கள் பின்பு பிறர்மீது அடக்குமுறையை ஏவ சற்றும் தயங்காத நாடாக உருப்பெற்றிருக்கிறார்கள்
.
மற்றவர்களை, அவர்களது இயல்புகளோடும், நம்மிடமிருந்து மாறுபடும் வித்தியாசங்களோடும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதே நாம் பாசிஸ்டுகள் ஆவதன் ஆரம்பப் புள்ளி. நம்மிடமிருந்து வேறுபடுகிறவர்கள் நாமிருக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு நியாயமில்லை என்று கருதத் தொடங்கி விடுகிறோம்.

நம்மோடு முரண்படுபவர்களையும் ஒத்துப்போகாதவர்களையும் மிக அதிகளவில் கொண்டதுதான் இந்த உலகம். அந்தக் கடவுளிலிருந்து ஆரம்பித்து நம் மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், அயலவர்கள் என்று யாரோடும் எதனோடும் நம்மால் முழுமையாக ஒத்துப்போக முடிகிறதா என்ன? ஒத்துப்போகாதவர்களோடுதான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தனாயிருக்க வேண்டும்…. சொன்னார்: “ஒன்றுக்கொன்று மாறுபட்ட ஒழுக்கங்களை ஒழுக்கக்கேடு என்று புரிந்துகொள்வது ஒருவகை தீயொழுக்கம்” என்பதாக. நமக்கு அப்பாலான எதையும் விரோதமாகப் பார்ப்பதும், அங்கீகரிக்க இயலாமல் அல்லற்படுவதும் நமது சிறுபிள்ளைத்தனமாகுமே தவிர வேறல்ல. நம்மைப் பற்றியே கூட முழுமையாகத் தெரிந்துகொண்டுவிட முடியாத, நம்முடைய இந்த மிகக் குறைந்த அறிவை வைத்துக்கொண்டு, நம்மைப் பற்றிப் பெருமையாகவும் மற்றவற்றை இழிவாகவும் எண்ணிக்கொள்வதில் என்ன பொருளிருக்கிறது?

நம்மிடமிருக்கும் அறிவே நாம் பெருமைப்படவும் பாராட்டிக்கொள்ளவும் தக்கதுதானா? நம் அறிவால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எதை முழுமையாக அறிந்திருக்கிறோம்? எந்த ஒரு சின்னஞ்சிறு துகளையும் பற்றி என்ன தெரியும் நமக்கு? மறுபக்கத்தில், இந்த அறிவு என்பது அதிகாரமாகவும், மனித சமத்துவத்துக்கு எதிரானதாகவும், அழிவுக்குரிய கருவிகளைத் தேடிக் கொள்வதாகவும், இவற்றின் காரணமாகவே மனிதகுல அழிவுக்கு வழிவகுப்பதாகவும் இருப்பதைக் கண்டுகொண்டிருக்கிறோம்
.
அறிவும் அதன் விளைவான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுமே பல தேசங்களையும் பல இனங்களையும் அடிமைப்படுத்திய வரலாறு நமக்குத் தெரியும். ஐரோப்பியர்கள் தென்னமெரிக்கா முழுவதையும் அடிமை கொண்டது அறிவினால்தான் நிகழ்ந்தது. ஆபிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அமெரிக்கக் கண்டத்திற்குக் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக்கப்பட்டது அறிவினால்தான். மேற்கத்தியர்களிடம் இருந்த நவீன கருவிகளுக்கான அறிவு கீழைத் தேசத்தவனிடம் இல்லாததால்தான் இவன் எளிதில் அவர்களிடம் அடிமைப்பட நேர்ந்தது. அதேபோல, வேதத்தையும் உபநிஷதங்களையும் மனப்பாடமாக்கி வியாக்கியானம் செய்ய அறிந்துகொண்ட குழு, அந்த அறிவைப் பெற்றுக் கொள்ளாதவர்களை அடிமைகளாக்கியதும் அறிவோம்.

ஆயின், எளிதில் தோற்றுப்போய், எதிர்காலத்திற்காக யாரையோ எதையோ எதிர்பார்த்திருக்கும் நாம் எப்படி நம்மைப் புத்திசாலிச் சமூகம் என்று சொல்லிக் கொள்வது? நம் பாடழிவைத் தடுத்துக் கொள்ளத் தெரியாத நாம் எப்படி நம்மை அறிவுச்சமூகம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்? நடந்து முடிந்த வரலாற்றில் அறிவும் அதனூடான செயற்பாடுகளும் நம் தரப்பில் இல்லாமல் போனதுதானே அவலமுடிவாக அம்பலப்பட்டது!

அதுமட்டுமல்ல, உணர்ச்சிகரமான ஆவேசத்தில் கூட்டப்படும் மக்கள் திரளிடமிருந்து அறிவு பறிக்கப்பட்டு விடுகிறது. உணர்ச்சிகரமாகக் குறுக்கித் தரப்பட்ட நியாயங்களுக்கப்பால் எதையும் யோசிக்க விடாமல் செய்யப்படுகிறார்கள். அவர்களைத் திரள வைத்த சக்திகளிடம் தம்மை ஒப்படைத்து கோஷங்களினூடாக பகையுணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள். 1984ல் டெல்லியில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொல்லப்பட்டமை, 2002ல் குஜராத் படுகொலைகள், 1983ல் ஜூலைப் படுகொலைகளுக்கெல்லாம் பயன்பட்டது இந்தக் கும்பல் எழுச்சி மனோபாவமே. கூட்டமாகத் திரண்டிருக்கையில் உயிரழிவு பற்றியோ மனித அறங்கள் நீதிகள் பற்றியோ சிந்திக்க முடிவதில்லை.

இதற்கு வெளியே இவர்களை மீறிச் சென்று நன்மை தீமைகளை அலசிப் பார்க்க, மனிதாபிமானத்துடன் சிந்திக்க முயலும் எவரும் இந்தத் திரளுக்கு எதிரான துரோகிகள் எனவே காட்டப்படுவார்கள். இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜெர்மானிய மக்கள் காட்டியதும், கடந்த இரு தசாப்தங்களாக நம்மவர்கள் காட்டியதும் இதையே என்பதை இன்று யாரும் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியும்
.
வரலாற்றின் அந்தக் குரூர நாடகத்தையே நாங்களும் திரும்ப நடித்தோம். நாடகம் முடிந்துவிட்டது. இனி நாம் அதுபற்றிப் பேச வேண்டும். வீழ்ச்சி ஏன் என்று விமர்சனம் செய்து அறிந்து மீள வேண்டும். அதைவிடுத்து தொடர்ந்தும் அந்த நாடகத்தையே நடத்தும் பாவனைகளைப் பண்ணிக் கொண்டிருப்பது, நம்மை மீளவிடாமலடிக்கும் அறியாமையும் வஞ்சனையுமே ஆகும்.

Saturday, April 23, 2011

தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள்!

'ஆணும், பெண்ணும் சமமெனும் வாதங்கள் எதற்கு? பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றவா?' என பெண்கள் உற்சாகக் குரல் கொடுக்கும் காலம் இது. வாழ்வில் உயரவேண்டும் எனும் வேட்கை பெண்களை அலுவலகங்களுக்குள் நுழைய வைக்கிறது. அதே பெண்கள் தன்னம்பிக்கை உடையவர் களாகவும் இருந்துவிட்டால் அலுவலகத்திலுள்ள உயரிய இருக்கைகள் எல்லாம் அவர்களுக்காகக் காத்திருக்கும்.
 
தன்னம்பிக்கைக்கும், வாழ்க்கைச் சூழலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வீட்டில் மதிக்கப்படும் ஒருவர் அலுவலகத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் வாய்ப்பு அதிகம். வீட்டிலோ, நண்பர்களாலோ நிராகரிக்கப்படும் நபர், அலுவலக சூழலில் தன்னம்பிக்கை இல்லாமல் அவஸ்தைப்படவும் வாய்ப்பு அதிகம் என்கின்றன உளவியல் ஆய்வுகள்.
 
நமது வாழ்க்கைச் சூழல் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்களை மையப்படுத்தியே அமைந்து விட்டது. ஆண்களை விடப் பெண்களுக்குத் தன்னம்பிக்கையும், அதைத் தேடும் வேட்கையும் அதிகமாய்த் தேவைப்பட அதுதான் காரணம்.
 
அலுவலக ஆண்கள் சக பெண் பணியாளரைக் கொஞ்சம் இளக்காரமாய்ப் பார்ப்பதும், பெண் உயரதிகாரிகளைக் கொஞ்சம் பொறாமையாய்ப் பார்ப்பதும் வெகு சகஜம். இந்த உளவியல் எதிர்ப்புகளுக்கு பலியாகாமல் இருக்க வேண்டியது பெண்களின் தேவை. தன்னுடைய பலங்களின் மேல் வைக்கும் நம்பிக்கையும், தனது பலவீனங்களை ஏற்றுக் கொள்ளும் திடமும் பெண்களை அலுவலகத்தில் திரும்பிப் பார்க்க வைக்கும்.
 

Thursday, April 21, 2011

மனம் மாறினால் வாழ்வு மலரும்!

ஒருவர் தனது மனோபாவத்தை மாற்றிக்கொள்வதன் மூலம், தமது வாழ்க்கையையே மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான் மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பு என்பார்கள். ஆனால் நம்மில் பலரும் அதன் அருமையை உணர்வதில்லை. எல்லாம் மாறிவிடும், நல்லது நடந்துவிடும் என்று நினைப்பதால் மட்டும் நன்மை நடந்துவிடுமா என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். உடலும், மனமும் ஒன்றையொன்று சார்ந்தவை. மனதில் நம்பிக்கை பூக்கும்போது நம் செயல்பாடுகளிலும் உற்சாகம் பிறக்கிறது. அப்போது வெற்றியும் எளிதாக வருகிறது.
 
மைக்கேலும், ஜான்சனும் நண்பர்கள். தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார் மைக்கேல். கடவுளை வணங்கும்போது புகைபிடிப்பது சரியா, தவறா என்று அறிய நினைத்தார் அவர். எனவே அவர் தனது நண்பர் ஜான்சனையும் அழைத்துக் கொண்டு ஓரு பாதிரியாரைப் பார்க்கச் சென்றார். பாதிரியாரிடம், 'வழிபடும்போது புகைபிடிக்கலாமா?' என்று கேள்வி எழுப்பினார். உடனே பாதிரியார், 'அவ்வாறு செய்வது தவறு' என்று பதில் அளித்தார். பாதிரியாரின் அறையை விட்டு வெளியே வந்த மைக்கேல், வெளியே நின்று கொண்டிருந்த ஜான்சனிடம் நடந்த விவரத்தைக் கூறினார். உடனே ஜான்சன், 'பாதிரியார் கூறியது சரிதான்' என்றார். அத்துடன், `கேள்வி தவறாக இருந்தால் பதில் எதிர்பார்த்தவிதத்தில் அமையாது' என்று கூறினார். மேலும் அவரே பாதிரியாரிடம் சென்று, 'புகைபிடிக்கும்போது வழிபடலாமா?' என்று கேட்க, 'எப்போது வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம்' என்றார் பாதிரியார். கேட்கும் கேள்வியைப் பொறுத்துதான் பதில் அமையும் என்பதை இதிலிருந்து உணரலாம்.
 

Monday, April 11, 2011

போராடிப் போராடிப் போட்டுடைத்த வாழ்வு!

உலகின் நான்காவது பெரிய ராணுவத்தைத் துரத்திய, இந்தப் பிராந்தியத்தையே அச்சுறுத்தும் விதமாக முப்படைகளையும் வைத்திருந்த, குறுக்கிடுவதை எல்லாம் அகற்றுவதில் ஈவிரக்கமற்ற, குற்றங்களை மன்னிக்காத, பழிக்குப் பழிவாங்கியே தீரும், தன் மக்களுக்காகக் கண்ணுறக்கமில்லாமல் திட்டமிடும் ஒரு தலைவரையும் கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட புலிகள் இயக்கம் –
புத்தி குறைந்ததும்(!) வீர மரபில் வந்திராததுமான ஒரு ராணுவத்திடம் ரியூப்பில் காத்துப் போனது போல ஒரேயடியாகத் தோற்று, அதாவது கடைசிவரை மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் மனோபாவத்தைக் காட்டாமல் பாசிஸ விறைப்புடனேயே படார் முடிவெய்தி இரண்டு வருடங்களாகின்றன.

இன்னமும் அந்தத் தோல்வியின் காரணங்களை சுயவிமர்சனமாக நமக்குள் பரிசீலித்து ஒப்புக்கொள்ள நாம் தயாராகவில்லை. ‘மக்களை மேய்த்த’ கொலைமாவீரப் பிரலாபங்களின் மாயை, நம்மிடையே ‘படித்தவர்கள்’ என நம்பப்பட்டு இருந்தவர்களும் மக்களுக்குக் காட்டிய ‘ஃபிலிம்’ அல்லது ராணுவவாதப் புல்லரிப்பு, நீதியை மனித அறத்தைக் காலின் கீழ் மிதித்துவிட்டு அவர்கள் பேசிய ‘விடுதலை’ நியாயம், உலகையே நிராகரித்துவிட்டு உருவாக்கிக் கொண்ட ‘தமிழ்ஞாயம்’, சாத்தியமில்லை எனத் தெரிந்த பிறகும் தனிநாட்டைச் சொல்லி உயிர்களை அழித்ததும், கடைசிவரை மக்களின் கண்களைப் பொத்தியபடியே கூட்டிச்சென்று கவிழ்த்ததும், வைகோ-சீமான்-உலகத்தமிழ் வகையறாக் கோமாளித்தன மோட்டுத்தனங்களோடு சமூக முதுகுநாணை முறித்து இந்தக் கதியில் கொண்டுவந்து விட்டிருப்பதும்…. ஏன்? எதனால்? நம் தவறுகள் என்ன? நம்மை இனி மாற்றிக் கொள்வதாயின் எங்ஙனம்? என்ற சுயவிமர்சனங்களை நம்மவர்களிடமிருந்து காணமுடியவில்லை. அதுகுறித்த பிரக்ஞையும் வந்ததாகத் தெரியவில்லை.

இப்போதும் கூட, இந்தியா ஏமாற்றி விட்டது, உலகநாடுகளும் கூட இலங்கையரசுக்கு சார்பாக நின்று நம்மைத் தோற்கடித்து விட்டன, ச்சாய்…நம் மக்கள் இன்னும் கொஞ்சம் கூடச் செத்திருந்தால் ஒருவேளை ஐநாவோ அமெரிக்காவோ வந்து இலங்கைப்படைகள் மீது குண்டு போட்டிருக்காதா என்றெல்லாம்தான் சிந்திக்க முடிகிறதே தவிர, நாம் நமக்குக் கிடைத்த எந்தெந்த சந்தர்ப்பங்களையெல்லாம் கோட்டை விட்டு வீணாய்க் கொத்துக் கொத்தாக அழிந்தோம் என்ற திசைக்கே நம் எண்ணத்தைத் திருப்ப முடியவில்லை. நாம் ‘வாழ’ வேண்டுமானால், விட்டுவிட வேண்டிய வீம்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய எதார்த்தமும் பற்றி நிதானிக்க நம்மால் முடியவில்லை. பழம்பெருமை, இன்றைய காலத்திற்குப் பொருந்தாத வீரப்புளுகுகள், ஏட்டுக்கல்வியில் மட்டும் முன்னேறிவிட்டு நம்மை புத்திச்சமூகமாய் எண்ணிக்கொண்ட மாயை, மற்றவர்களை எல்லாம் மூடர்களாயும் இழிவாயும் நினைத்துக்கொண்டிருக்கும் கொழுப்பு, இதனால் மனங்களில் நிறையும் வன்மம்…. என இந்தச் சுமைகளே நம்மை மீள்வதற்கு விடுவதாயில்லை. என்ன மாதிரி ஒரு ‘நாம் தமிழர்’ எண்ணம்!

நம் வெடிவீரர்களைப் பற்றி அளவுக்கதிகம் புகழ்ந்தும், நம்ப வைத்தும், உள்ளுக்குள் உளுத்தபடியே பெருமிதங்களைப் போர்த்து மூடிக்கொண்டும், மற்றவர்களுடன் உரையாட முடியாதவர்களாய் வாழ்வை வென்றெடுக்க முடியாதவர்களாய் முழுமுட்டாள்களாயடிக்கப்பட்டோம். முள்ளிவாய்க்கால் வரைக்கும் அள்ளுண்ட மந்தைகளாயிருந்தோம். சமூகத்தைப் பலவருடங்களுக்குப் பின்னோக்கி முடக்க அனுமதித்தோம். இப்போதும் நமது சண்டித்தனங்களே சரியானவை@ நம் பீடுக்கும் பெருமைக்கும் நாம் யாருடனும் பேச வேண்டிய தேவையே இல்லை என்கிற தற்புகழ் போதையிலேயே வழிகளைத் தொலைத்து மக்களை வதைபட விட்டுக் கொண்டிருக்கிறோம்.

மகாபாரதத்தில் ஒரு சம்பவம்:
சூதாட்டத்தில் திரௌபதியைத் தோற்றது குறித்துக் கோபப்படும் அருச்சுனன், தருமனை சுடுசொற்களால் திட்டிவிடுகிறான். பாண்டவர்களிடையே ஒரு கட்டுப்பாடு உண்டு. அதாவது, யார் தருமனை திட்டினாலும் அவன் கொல்லப்பட்டுவிட வேண்டும் என்பதே அது. அதன்படி இப்போது அருச்சுனன் கொல்லப்பட வேண்டும் என்கிறான் பீமன். அருச்சுனன் கொல்லப்பட்டால் பாரதமே இல்லை. அப்போது அங்கு வரும் கிருஷ்ணன், அவர்களது பதற்றத்தைக் கண்டு விஷயத்தைக் கேள்வியுற்று, ‘அட, இவ்வளவுதானா? கொன்றுவிடலாம் அருச்சுனனை’ என்கிறான். எல்லோரும் திகைக்க, ‘ஒரு பெரிய சபையின் முன்னே நீ தொடர்ந்து உன்னையே புகழ்ந்து பேசிக்கொள்ள வேண்டும். அதுவே உனக்கு மரண தண்டனை’ என்கிறான். அதன்படி அருச்சுனன் தன் வில்வித்தையைப் பற்றியும், தன் அழகைப் பற்றியும், வீரதீர பராக்கிரமத்தைப் பற்றியும் வாய் ஓயாமல் பேசுகிறான். கேட்பவர்கள் கெக்கலி கொட்டிச் சிரிக்க, அவனுக்கு அது மரணத்தைவிட மோசமாகத் தோன்றுகிறது.

இப்படி ஒரு தற்புகழ்ச்சியிலும், யதார்த்தத்தைப் புறக்கணித்த நிலைமறந்த வீர நினைப்புகளாலும்தான் நாமும் மரண அடி வாங்கினோம் என்பதொன்றும் இப்போது ரகசியமல்ல. நிதானமாக யோசித்தால் இதுபோல நம்மிடமிருந்த பல பல தவறுகள் பிடிபடக்கூடும். அவற்றைக் கண்டுகொள்ளாமல் நமக்கு மீட்சி கிடையாது. பரணி பாடிப் பாடியே அப்பாவி வாழ்வைப் போட்டுடைக்கக் காரணமாக இருந்தவர்கள், வெளிப்படையாக அந்தக் காரணங்களை விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம் சமூகமும் மக்கள் வாழ்வும் மீள்வதற்கான காலத்தைப் பின்போட்டுக் கொண்டே செல்லும் அதே தவறைத் தொடர்ந்தும் செய்வதாகவே இருக்கும். அதாவது, மற்றவர்கள் திருந்தாமல் நமது துன்பங்களுக்கு முடிவில்லை என்று புலம்பியபடியே வாழ்வைத் தொலைத்துக்கொண்டிருக்கும் அபத்தம் தொடரும்.

பிழை செய்தவர்கள் புலிகள் மட்டுமா? ஒவ்வொருவரும் நம் மனதை உரசிப் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்தெந்தப் பிழைகளுக்கெல்லாம் நாமும் துதிபாடிகளாயிருந்தோம் என்ற சுயவிமர்சனத்துக்கு இன்று அவசியம் இருக்கிறது. ரஷ்யாவின் மாபெரும் எழுத்தாளர் லியோ ரோல்ஸ்ரோயின் கடைசி நாவல் ‘ஹட்ஜி மூரத்’தில் ரஷ்ய மன்னன் சார் நிக்கலஸைப் பற்றிய வர்ணனை இது: “தினந்தோறும் துதி பாட வேண்டுமென்பதற்கே அவன் தன்னைச் சுற்றி அறிவாளிகளை அமர்த்திக் கொண்டான். அவன் எது செய்தாலும் – அவன் செய்தது எதுவுமே தன்னலம் நோக்கியதுதான் – அது மக்கள் நலனுக்காக என்று அவர்கள் ஓயாமல் சொல்லி வந்தார்கள். இதனால் அவன் எதேச்சாதிகாரம் அதிகரித்தது. எல்லாவற்றையும் விடக் கொடுமை, துதிபாடிகள் சொல்வதை அவன் மெய் மெய்யாக நம்பத் தொடங்கியதுதான்.” தவறுகளை எடுத்துச் சொல்லாத துதிபாடிகளால் சூழப்பட்ட மன்னனும் தேசமும் வேறு கெடுப்பாரில்லாமல் கெடும் என்பதுதான் வள்ளுவர் சொல்லியிருப்பதும்.

உயிர்ப்பயம் காரணமாகவும், மாற்று இனங்கள் மீது வளர்க்கப்பட்ட துவேசம் காரணமாகவும், உலகையே எதிர்த்துத் தனிமைப்பட்டதன் காரணமாகவும், தமிழ்ப் பெருமிதங்களுக்கொப்ப நம்மைத் தனியே பிரித்துக் கொண்டுவிடலாம் என்ற ஆசையின் காரணமாகவும், ஆயுத அதிகாரத்தில் பங்குபெற்றுத் திளைக்கும் நடப்புக்காகவும், ஆண்டபரம்பரை மேலாதிக்க மோகத் தற்திருப்திகளுக்காகவும், மற்றுமற்றும் வௌ;வேறு அந்தரங்க ஆசைகளுக்காகவும் தவறுகளை அமுக்கிப் புலிகளைத் துதிபாடி வந்தவர்கள், இன்றைய தோல்விக்கு சுயவிமர்சனம் செய்யாமல் நழுவியபடி உள்ளார்கள். இதைவிடவும் மோசமாக, எதிரியையும் ஏதேதோ வெளிசக்திகளையும் திட்டும் பகைவெறுப்பு முழக்கங்களைத் தீவிரப்படுத்துவதன் மூலம் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள வேறு செய்கிறார்கள்.

Saturday, April 9, 2011

பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்

தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை.

முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி.

'வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.

தோல்வியும் வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது! தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான முதல் கதவைத் திறந்து விட்டோம் என்று தான் பொருள்.

அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த ஆபிரகாம் லிங்கன் ஆறுமுறை தோல்வியைச் சந்தித்தபின் அரசியல் வெற்றியை ஆதாயமாக்கிக் கொண்டவர். தோல்வி என்பது வெற்றியை நோக்கிய பாதை என்பதில் அவருக்கு உறுதி இருந்தது. எனவே அவர் வெற்றியாளரானார்.

வெற்றிகளில் சிலவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். தோல்விகளில் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், தோல்வி குறித்த பயத்தில் முயற்சி செய்யாமல் இருப்பதோ... எதையுமே, எப்போதுமே நமக்குத் தருவதில்லை என்பது தான் நிஜம்.

ஜுராசிக் பார்க் என்றால் நமது நினைவுக்கு சட்டென வரும் விஷயங்கள் இரண்டு. ஒன்று டைனோசர். இரண்டாவது இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க். அவர் தெற்கு கலிபோர்னிய திரைப்படக் கல்லூரியான யு.எஸ்.சி. யில் சேர இரண்டு முறை விண்ணப்பித்தார். இரண்டு முறையும் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

தோல்வியால் தளர்ந்து விடாமல் ஸ்பீல் பெர்க் வளர்ந்தார், உலகெங்கும் அவர் புகழ் பரவியது. எந்தக் கல்லூரி அவரை நிராகரித்ததோ, அதே கல்லூரி 1994-ம் ஆண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்தது! தோல்விகளால் ஒரு வெற்றியாளனைப் புதைக்க முடியாது என்பதை உலகம் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொண்டது.

விழிப்புணர்வு என்பது வேறு, பயம் என்பது வேறு. தோல்விகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம். ஆனால், அதுவே ஆளை விழுங்கும் பயமாக மாறி விடக் கூடாது என்பதை நாம் கவனிக்க வேண்டும். தோல்வி குறிந்த சிந்தனைகள் எச்சரிக்கை உணர்வைத் தருபவையாக இருக்கும் வரை அவை நமக்கு நன்மை தரும்.

வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து குறித்த பயத்தில் `சீட் பெல்ட்' போட்டுக் கொள்வது எச்சரிக்கை உணர்வு. விபத்து குறித்த பயத்தில் வாகனத்தையே புறக்கணிப்பது கோழைத்தனமானது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை, பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்து விடக் கூடாது. அதாவது பயம் நமக்கு அதைத் தாண்டிச் செல்கின்ற தகுதியை உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்து விடக் கூடாது.

தோல்வி குறித்த பயத்திலிருந்து வெளியே வர தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை, கடைகளில் விற்பனையாவதில்லை. உங்களுக்கு வேறு யாரும் வந்து தன்னம்பிக்கை எனும் ஆடையைப் போர்த்தி விடவும் முடியாது. தன்னம்பிக்கை என்பதை நமக்கு நாமே தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும். தனக்கான கூட்டைத் தானே உருவாக்கும் ஒரு சிட்டுக் குருவியைப் போல!

Friday, April 8, 2011

ஐந்து வழிகளில் ஆரோக்கியம்!

நோயின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள நமது உடலை பராமரிப்பது அவசியம். முக்கியமாக நாம் உண்ணும் உணவையே மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், ஐஸ்கிரீம், பாஸ்ட் புட் என்ற பெயரில் வேகாத உணவுகளை சாப்பிடக்கூடாது. உடலை பராமரிக்கவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும் ஐந்து வழிகளை இங்கே பார்ப்போம்.

எடை

மாதம் ஒரு முறை உங்களது எடையை சரிபாருங்கள். சென்ற மாதத்தை விட உங்களின் எடை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்று கவனியுங்கள். அதிகரித்தால் நீங்கள் எத்தகைய உணவுகளை சாப்பிட்டீர்கள் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள். எடை குறைவிற்கு காரணமான உணவு வகைகள் என்ன என்பதையும் கவனியுங்கள். எடையை எப்போதும் சமவிகிதத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

கொழுப்புச் சத்து
உடலில் கொழுப்புச் சத்து எவ்வளவு உள்ளது? இனிப்பு மற்றும் பொரித்த உணவுவகைகளை சாப்பிடும்போது எந்த அளவிற்கு கொழுப்புச்சத்து அதிகரிக்கிறது? என்று அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். தொப்பை வைத்தால், அத்தகைய உணவைக் கட்டாயமாகத் தவிர்த்து விடுங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்து வந்தால் உடலின் எடை அதிகரிக்கிறதா? கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறதா? என்பதை சோதித்து வாருங்கள். உங்களுக்கு பலன்தரும் பட்சத்தில் தவறாமல் தினமும் உடற்பயிற்சிக்கென்று ஒருமணி நேரத்தை ஒதுக்குங்கள்.

உடற்பயிற்சி செய்வதால், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரி எரிக்கப்பட்டு நமக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. மேலும், உடல் எடையை அதிகரிக்கும் வகையில் உள்ள கொழுப்புச்சத்து கரைகிறது. மதிய உணவிற்கு பிறகு இனிப்பு சாப்பிடுவதால் உடலின் எடையை ஒரே சீராக வைத்துக்கொள்ளலாம்.

பரிசோதனை
உடலில் உள்ள சர்க்கரைச்சத்து மற்றும் ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதனால், நாம் உணவுக்கட்டுப்பாட்டை நமக்கு தேவையான அளவிற்கு கடைபிடிக்கலாம். இடுப்பில் சதை போடுதல், உடலில் கொழுப்புச்சத்து அதிகரிப்பது என்று கவலைப்பட வேண்டிய தேவையும் இல்லை.

மனஅழுத்தம்

பெரும்பாலும், இனிப்புகள் மற்றும் பொரித்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதைத் தவிருங்கள். அதேநேரம் எப்போதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம். அதனால், எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்பட்டு விடுமோ என்று பயப்பட வேண்டாம். ஆரோக்கியம் தரும் சத்தான உணவுவகைகளை தவறாமல் சாப்பிடுங்கள். தேவையில்லாமல் உண்டாகும் மன அழுத்தத்திற்கு விடைகொடுங்கள்.

Tuesday, April 5, 2011

வாழ்வைத் தொலைத்து விட்டு வதைபடுதல் என்ன ரோசம்?

 

மிகத் தூய்மையான எல்லாம் நிறைந்த ஒரு தீர்வுக்காக கடைசி உயிர்வரை அழிக்கும் திட்டத்தில் சிலர் இன்னும் விடாப்பிடியாக உள்ளார்கள் என்றறிய நடுக்கமே உண்டாகிறது. “வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வையே நாம் கேட்கிறோம். அதை அவர்கள் தரப்போவதில்லை. அதை அம்பலப்படுத்தவே பேச்சுவார்த்தைக்குப் போகிறோம்” என்பதை இப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது எவ்வளவு தூரம் சரி? இதையே தமிழ்வீரம் என்று நம்பிக் கொண்டிருக்கும் சூழல் இன்னும் இங்குள்ளதென்றால் என்ன மாதிரியான ஒரு சமூகம் நாம்?

அரசாங்கம் தர முடியாததைக் கேட்பது; அதன்மூலம் எதிர்ப்புணர்ச்சியைப் பெருக்குவது@ முறுகல் நிலைமை தணியவிடாமல் பார்த்துக் கொள்வது@ கொள்கை-இலட்சியம்-இனக்குழுப்பெருமை-தனித்துவத்திற்காக எதையும் இழக்கலாம் என்ற உணர்ச்சிகரத்தில் கொந்தளிக்கும் திரளாக மக்களை வைத்திருப்பது@ எதிர்ப்பு வீரவசனங்களால் தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளை வேட்டையாடிக் கொள்வது…. அத்துடன் எல்லாம் (தலைவர்களுக்கு) இனிதாய் முடிந்துவிடுகிறது. மக்களின் கஷ்டங்களோ தொடர்கிறது.

புலிகள் முடிந்து இரண்டு வருசமான பிறகும் இந்த நாடகத்தையே இவர்கள் வெற்றிகரமாகத் தொடர்வதற்கு இயலுகின்ற நம் அறிவுச்(!)சமூக நிலையை என்ன சொல்ல?

சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள இந்தத் தீவில் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அரசாங்கத்துடன் அவர்கள் பேசவேண்டும் என்பது யதார்த்தம். பேசி அவர்களிடம் தீர்வைப் பெறமுடியாது என்று கண்டுகொண்டவர்கள் என்றால் அவர்கள் என்ன செய்யலாம்? ஏனைய உலக நாடுகள் அரசாங்கங்களிடம் நம் பிரச்சினையை எடுத்துப்போகும் முயற்சிக்குச் சமாந்தரமாக இந்தத் தீவிலுள்ள அனைத்துத் தரப்பு மக்கள் மனங்களுடனும் பேசுவது முக்கியமல்லவா? அப்போதுதானே நம் கோரிக்கைகளின் நியாயத்தன்மை துலங்கவும் எடுபடவும் வாய்ப்பிருக்கிறது? யுத்தம் முடிந்த சூழலிலும் அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? முஸ்லிம், மலையக மக்களிடமும் பிறகு சிங்கள பொது மக்களிடமும் நம் நியாயத்தை விளங்கப்படுத்தாமல், அவர்களின் கணிசமான ஆதரவை பெற்றுக்கொண்டு முன்செல்ல முற்படாமல் அரசாங்கத்தை – உலகத்தைச் சாடிக்கொண்டிருந்து ஆகப்போவதென்ன? தனிநாடு, சமஷ்டி, முழு அதிகாரம் என்று உதார் விட்டுக்கொண்டே இருப்பதுதான் அரசாங்கத்தையும் ஏனைய தரப்பு மக்களையும் இணக்கத்திற்கு நகர்த்தும் வழியா?

Saturday, April 2, 2011

சாதனைக்கு எதுவும் தடையில்லை

ஆஸ்திரேலியாவிலிருந்த அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் பதட்டத்துடன் காத்திருந்தார் தந்தை. உள்ளே அவருடைய மனைவிக்குப் பிரசவம். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அப்பாவுக்கு பதட்டம் நீங்கி பரவசம் எட்டிப்பார்த்தது.

கொஞ்ச நேரத்திலேயே மகனைக் கொண்டு வந்து காட்டினார்கள். ஆர்வத்துடன் மகனைப் பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை. நிக் வாயிச்சஸ் பிறந்த 1982-ம் ஆண்டு டிசம்பர் 4, பெற்றோருக்கு துயர நாளாய் ஆகிவிட்டது.

ஐயோ! இவன் என்ன செய்வான்? இவனால் நடக்க முடியாதே, கையால் செய்ய வேண்டிய வேலைகள் எதையும் செய்ய முடியாதே. இவன் எப்படி வாழ்க்கை நடத்துவான்? என பெற்றோர்கள் பதறித் துடித்தார்கள்.

குழந்தை சிறுவன் ஆனான். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். அங்கு அவமானப் பார்வையும், பரிதாபப் பார்வையும் அவனைப் புரட்டிப் போட்டன.

எல்லோரைப் போலவும் தான் இல்லையே என அழுத அவனுடைய ஒரே பிரார்த்தனை என்ன தெரியுமா...?

"கடவுளே முடி வளர்வது போல, என்னோட கை கால்களும் வளரட்டுமே'' என்பது தான்.

முடியைப் போல கை கால்கள் வளராது எனப் புரிந்த வயதில் தற்கொலை செய்ய முயன்றான் சிறுவன் நிக். அதிலும் அவனுக்கு வெற்றியில்லை. தற்கொலை செய்யக் கூட ஒருவருடைய உதவி வேண்டும் எனும் சூழல் அவனுக்கு.

எல்லோருக்கும் இடது கால் இருக்கும் இடத்தின் இவருக்கு ஒரு சின்ன வால் போன்ற பகுதி ஒன்று உண்டு. அது தான் இவருடைய கை, கால் சர்வமும்.

ஒரு நாள் மாற்றுத் திறனாளி ஒருவர் தனது கழுத்தையும் நாடியையும் பயன்படுத்தி கோல்ப் விளையாடுவதைப் பார்த்தார். உள்ளுக்குள் மின்னல் வெட்டியது. ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றெடுத்தது. ஓடிப்போய் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தார். முதன் முதலாக அவருக்கு அழகிய இரண்டு கண்கள் தெரிந்தன.

Friday, April 1, 2011

இந்திய மக்கள் தொகை

ந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. உலக மக்கள்தொகையில் இது 17.5 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 18 கோடி அதிகரித்துள்ளது.

புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது. இதில், அனைத்துவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று வெளியிட்டார்.

இதன் விவரம் வருமாறு: கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011)மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது. அது, 2011ம் ஆண்டு, 17.64 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும் போது தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடி. இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக நமது நாட்டின் மக்கள்தொகை உள்ளது.

ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.

ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் விகிதம் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக்குறைவான விகிதமாகும்.

படித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு: 
மக்கள்தொகையில், ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களில் படித்தவர்கள் எண்ணிக்கை 74 சதவீதம். படிக்காதவர்கள் 26 சதவீதம்.

2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதமாக இருந்தது, 2011ம் ஆண்டில் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மட்டும் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண் கல்வி உயர்வு:
2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர். இது, 2011ம் ஆண்டு 65.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு எழுத, படிக்க தெரிந்த ஆண்களின் எண்ணிக்கை 75.26 சதவீதமாக இருந்தது. இது, 2011ம் ஆண்டு, 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

மாநிலங்களில் அதிகம் எழுத, படிக்க தெரிந்தவர்கள் கேரளாவில் உள்ளனர். இங்கு 93.91 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். குறைவான எண்ணிக்கை உள்ள மாநிலம் பீகார். இங்கு 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.

மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.

உ.பி.இ மகாராஷ்டிரா மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.

அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.

மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சல பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.

உ.பி.இக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராஷ்டிரா- 11 கோடியே 23 லட்சம், பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.

27 லட்சம் பேர் பங்கேற்பு: சென்சஸ் 2011, இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும், இரண்டு கட்டமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வீடுகள் வாரியாக கணக்கெடுப்பு கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது. பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தாண்டு பிப், 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கு செலவான தொகை 2,200 கோடி ரூபாய். கணக்கெடுக்கும்பணியில் மொத்தம் 27 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக மொத்தம் 8,000 டன் பேப்பர் செலவிடப்பட்டுள்ளது.