Thursday, March 31, 2011

இன்றும் ஒரு தகவல்

 
 
அரவாணிகளிலும் போலிகள்

மனித இனத்தின் மூன்றாவது பாலினம் என்று கூறப்படும் அரவாணிகளுக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சமூக அந்தஸ்து கிடைக்க தொடங்கி உள்ளது. வேலை வாய்ப்பும் தேடி வருகிறது. இவர்களை வடஇந்தியாவில் கின்னர்கள் என்று அழைக்கிறார்கள். அங்கு அவர்களின் நிலை தமிழ்நாட்டை போல இல்லை.

அரவாணிகளுக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன. பல அரவாணிகள் வருமானவரி கட்டி, சொந்த பங்களாவில் குடியிருக்கிறார்கள். அரவாணிகள் அங்கு பணம் கொட்டும் தேவதையாக வலம் வருகிறார்கள். வடஇந்தியாவில் அரவாணிகள் தொட்டால் துலங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. குழந்தை பிறந்த வீட்டில் அரவாணிகள் ஆடிப்பாடி ஆசீர்வாதம் செய்தால் குழந்தையை எந்த நோயும் அண்டாது. ஆரோக்கியமும் கூடும். கடைகளில் கல்லா நிறைய வேண்டும் என்றால் முதல் வியாபாரத்தை அரவாணிகள் ஆரம்பித்து வைக்க வேண்டும். புதுவீடோ, புதுவாகனமோ எதுவாக இருந்தாலும் அதற்கு அரவாணிகள் பூஜை போட்டால்தான் நன்றாக இருக்கும்.

திருவிழா என்றாலே அங்கு வந்து அரவாணிகள் ஆட்டம்போட்டால்தான் பண்டிகை நாட்கள் முழுமையடையும். ஒவொன்றிலும் பணம் ஆயிரக்கணக்கில் வரும். இப்படி பணம் கொட்டுவதால் ஒரிஜினல் அரவாணிகளுடன் அரவாணியாக வேடம் போட்டு கல்லா கட்ட தொடங்கிவிட்டார்கள் 'அல்வா' பார்டிகள்.

வேலைவெட்டி இல்லாத பல ஆண்கள் அரவாணிகள் வேடத்தில் தொழிலில் இறங்கிவிட்டார்கள். மத்தியபிரதேசத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரவாணிகள் உள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொய்யர்கள். ஓடும் ரெயிலில் ஏறும் இந்த போலி அரவாணிகள் பயணிகளை மிரட்டியும், மக்களை அடித்தும் பணம் பிடுங்குகிறார்கள். இதனால் ஒட்டுமொத்தமாக அரவாணிகள் பெயர் கெட்டுப்போயிருக்கிறது.

தங்கள் இனத்தை இப்படி அநியாயத்துக்கு கேவலப்படுத்தும் போலி அரவாணிகளை அடையாளம் காண்பதற்காகவே ஒரிஜினல் அரவாணிகள் மத்திய பிரதேசத்தில் ஒரு பறக்கும் படையையே உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் ரெயில், பஸ்ஸில் பயணம் செய்யும் அரவாணிகளை ஒரிஜினலாக இருந்தால் விட்டுவிடுகிறார்கள். போலி என்று தெரிந்தால், அடி வெளுத்துக்கட்டிவிடுவார்கள். இதனால் போலிகளின் நடமாட்டம் குறைந்திருக்கிறது.             

Tuesday, March 29, 2011

இன்றும் ஒரு தகவல்

மன்னிப்பு - மனிதனின் சிறப்பு குணம்

 
தனி மனிதர்கள் ஒருவருக்கொருவர் பழிவாங்கும் உணர்ச்சியை வளர்த்துக் கொண்டாலே மிகவும் ஆபத்து. அதுவே இரண்டு நாடுகளுக்கு மத்தியில் என்றால், ஒரு நாடு பழிவாங்கும் அரசியலில் இறங்கிவிட்டால், அது தன் முன்னேற்றத்தின் திசையை இழக்கத் தொடங்கிவிடும்.

"எதிரிகளை மன்னிக்காத வரை நமக்கு எதிர்காலம் இல்லை" என்றார் டெஸ்மாண்ட் டூ. "மன்னிப்போம் நாட்டை மறு நிர்மாணம் செய்வோம்" என 27 வருட சிறை வாசத்துக்குப் பிறகும் அவரிடம் பழிவாங்கும் உணர்வு கொஞ்சம் கூட இல்லை.

காந்தியின் அகிம்சை போராட்டம் மன்னிப்பை அடிப்படையாகக் கொண்டது. "பலவீனமானவன் தான் மன்னிப்பது இல்லை. மாறாக பழி வாங்குகிறான். இந்தியர்களே நாம் பலவீனர்கள் இல்லை" என்றார் மகாத்மா காந்தி. கருப்பு இன மக்களின் உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கும் இதையேதான் பின்பற்றினார். லாஸ் ஏஞ்சல்சில் கென்னடியை சுட்டுக் கொன்றான் சர்ஹான் பிஷாரா என்பவன். அவனுக்கு மரண தண்டணை அளிக்கப்பட்டது. ஆனால் கென்னடியின் சகோதரர் டெட் கென்னடி அவனுக்காக நீதிமன்றத்தில் போராடி ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

1996ல் ஸ்ரெப்ரெனிகா என்ற இடத்தில் செர்பிய படைகளால் சுமார் 7 ஆயிரம் இஸ்லாமியர்கள் 2005ல் 10-ம் ஆண்டு நினைவு நாள் நடந்தது. அதில் போஸ்னிய இமாம் முஸ்தபா செரிக் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் "பழிவாங்குதல் நம் மதம் அல்ல." என்றுதான் பேச தொடங்கினார். "எவன் ஒருவன் தன் எதிரிக்கு மன்னிப்பை வழங்குகிறானோ அவனுக்கு அல்லா ஆசி நல்குவான் இது திருக்குர் ஆன் சொல்வது" என்றார்.

பால் போஸ் என்ற டச்சு அறிஞர், "மனிப்பு கடந்த காலத்தை மாற்றுவதில்லை. மாறாக எதிர்காலத்தை விரிவாக்குகிறது" என்றார்.

மொத்தத்தில் மனிதனின் சிறப்பு குணம் மன்னிப்பு. மற்ற எந்த உயிரினத்திடமும் இதை பார்க்க முடியாது.           

Monday, March 28, 2011

நாமே தொடங்குவோம்

 
கேட்ட பொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
கேலி பொறுத்திடுவான்; எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான்; என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான் சொல்லும் முன் உணர்வான்; அன்பர்
கூட்டத்திலே இந்தக் கண்ணனைப் போலன்பு
கொண்டவர் வேறுளரோ?


நட்பின் பிணைப்புக் கயிறாகவும் அன்பைக் காண்கிறது பாரதியின் அந்தப் பாடல். இதுவே இன்னும் சற்று அழுத்தமான பிணைப்பாக, வேற்று நினைவின்றித் தேற்றி விண்ணவனாகப் புரியக் காதலாகிறது. உயிர்த் தோற்றத்திற்கு அத்திவாரமாகவும், வாழ்வுக்கு ஆதாரசுருதியாகவும், எல்லா இன்பங்களுக்கும் மூலமாகவும் அமைந்திருக்கிறது அன்பு.

இல்லறத்தை நடத்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை விடப் பொதுவாக வேறு எந்தப் பிணைப்பும் அத்தனை ஆழமாக இருக்க முடியாதென்பதன் காரணமாக, அந்தப் பிணைப்பு காதல் என்பதால் குறிப்பிடப்படுகிறது. ‘இல்லறம் இனிது நடத்தலும், பிறவுயிர்கள் மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயனாதலின் இது வேண்டப்பட்டது’ என்கிறார் குறளுக்கு உரை சொல்லும் பரிமேலழகர்.

தனக்கு நெருங்கியவர்கள் அனைவரிடத்திலும் எல்லா மனிதருக்கும் இயல்பாக ஊறும் நேசம் அன்பு என்றால், எவர் துயர் கண்டாலும் தோன்றும் இரக்கம் அருளாகிறது. சிலர் வெளிப்படுத்தாது விடினும், எல்லா மனிதர்களுக்குள்ளும் இயல்பாக இருந்துகொண்டிருப்பதுதான் இது. வள்ளலார் சொன்னது போல் ‘வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடும்’ இரக்கம். அன்புக்குப் பிறந்த குழந்தையே இந்த அருள் என்கிறது குறள் - அருள் என்னும் அன்பீன் குழவி!

அன்பின் அழுத்தமான பிணைப்பு காதல் என்றால், அந்தக் காதலைக் கடவுள்பால் செலுத்தி விடுகிற அடியார்களிடம் இன்னும் அழுத்தம் கூடுகிறது. கண்ணை அப்புகிறார்கள்@ கழுத்தை யானையின் காலால் இடறச் சொல்கிறார்கள்@ பிள்ளையைக் கறி சமைத்துக் கொடுக்கிறார்கள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சியாகிறார்கள்; தன்னையே கொல்ல வருபவனை அறிந்தும் கும்பிட்டு உபசரிக்கிறார்கள்…. “விருப்புறும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற்றென” சகலமும் அன்பால் துடிப்புறும் அழுத்த நிலை பக்தியாகிறது. பகைவனுக்கும் அருளும் நெஞ்சு உண்டாகிறது.

பக்தியோ அருளோ நட்போ காதலோ எல்லாமே அன்புதான். அன்பின்றி வாழ்தல் எளிதாவதில்லை. அன்புதான் இன்பத்தின் ஊற்றும். அன்பின் வழியது உயிர்நிலை. வன்முறையையும் பகைநெஞ்சையும் மாற்றும் சக்தி அன்பு ஒன்றுக்குத்தான் உண்டு. கேட்பதற்கு மதபோதகர்களின் தொணதொணப்புப் போல சலிப்பூட்டினாலும் இதை மறுக்க முடியாமலிருக்கிறது.

நம்முள் தவிர்க்க முடியாமல் எழும் கோபமும் விரோதமும், நமக்குத் தீமை செய்கிறவர்களை மட்டும் அழிக்காமல் நம்மையும் அழித்து முடித்து விடுவதையே செய்கிறது. வெறுப்பு ஆவேசத்தை உருவாக்கி அழிவுகளையே கொண்டுவருகிறது. இந்த வெறுப்பு மிக எளிதாக மக்களை இணைக்கிறது. உணர்ச்சிகரமான மனநிலையை உருவாக்கி ஒன்றுபட வைக்கிறது. இவ்வாறு வெறுப்பின் மூலமே எதிரெதிர்த் தரப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு விடுகின்றன. நாம் முழுக்க முழுக்க சரி என்றும் எதிர்த்தரப்பு முழுக்க முழுக்கப் பிழை என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம்.

எதிர்த்தரப்பிலுள்ள எல்லோரையும் ஒரே உறைக்குள் போட்டு, நமக்குப் பிடிக்காத தன்மைகளை மட்டுமே கொண்டவர்களாக அவர்களைக் காட்டி, எதிரி என்ற ஒரே வார்த்தையில் சுருக்கி அடையாளப்படுத்துகிறோம். அதேபோல நம்மையும் ஒரே குடுவைக்குள் அடைத்து எதிர்த்தரப்பில் ஒரேயடியாக இருத்தி விடுகிறோம். இந்த வெறுப்பு மெல்ல மெல்ல வளர்ந்து எதிர்த் தரப்பிலுள்ளோர் நாம் பேசத் தகுந்த மனிதர்கள் அல்ல என்றாகிறது. எதிர்த்தரப்புடன் உரையாடல் என்பதற்கே இடமில்லாத நிலையை ஒரு கட்டத்தில் அடைகிறோம். குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியபடி இருக்கும் மிகையுணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

ரோசமும் விரோதமும் வன்முறையுமாக நிறைந்திருக்கும் நம் மனங்களினுள் சிறிது சிறிதாகவேனும் அன்புக்கு இடமளிப்பதன் மூலமே நாம் அழிவின் பாதையை விட்டுத் திரும்ப முடியும். அன்பைச் சுரக்க அனுமதிப்பதன் மூலம் பகையுணர்ச்சியைத் தணித்து, வாழ்வைப் பற்றிய நமது பார்வையையும் மாற்றிக் கொண்டால் யுத்தங்களைத் தவிர்ப்பது சுலபமாகிவிடும். வெறுப்பும் ஆத்திரமும் சிக்கலானவை. அன்புதான் எளிமையானது.

Saturday, March 26, 2011

அடுத்தவன் என்ன சொல்வானோ ?

"அடுத்தவன் என்ன நினைப்பானோ'' என்ற கவலை இன்று பெரும்பாலான மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவர்களின் மன நிலைக்கு ஏற்ப தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் அமைத்துக் கொள்பவர்களால் வெற்றி பெற முடியாது. அடுத்தவர்கள் உங்களை விமர்சிக்கிறார்களென்றால், அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள். ஒன்று, அவர்களுக்குத் தேவையான ஒன்று உங்களிடம் இருக்கிறது. அல்லது நீங்கள் இருக்கும் இடத்தை அடைய அவர்கள் விரும்புகிறார்கள்.

ஒருவர் ஒரு பத்திரிகையில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை புதுசு புதுசாக ஐடியாக்களை தயாராக்குவது. அவரும் உற்சாகமாக அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். ஆனால், அந்த வேலையிலிருந்து அவரை கொஞ்ச நாளிலேயே துரத்தி விட்டார்கள். "உன்னோட ஐடியாக்களெல்லாம் சின்னபுள்ளத் தனமா இருக்கு'' என்பது தான் அவர்கள் சொன்ன காரணம்.

அந்த நபர் அவர்களுடைய விமர்சனத்தைப் பொருட்படுத்தவில்லை. அந்த சின்னபுள்ளத்தனத்தை வைத்தே மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். அவர் தான் வால்ட் டிஸ்னி.

மிக்கி மவுஸ் குறித்து தெரியாத குழந்தைகளும், பெரியவர்களும் இன்று இல்லை என்பதே நிலை!

சின்னப்புள்ளத்தனம் என விமர்சிக்கப்பட்டவர், வரலாற்றின் சிம்மாசனத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். அடுத்தவர்களுடைய விமர்சனத்தை தலையில் ஏற்றி தன்னுடைய தன்னம்பிக்கையை உடைத்திருந்தாரெனில் இன்று வால்ட் டிஸ்னி எனும் உலகப் பிரம்மாண்டம் இல்லாமலேயே போயிருக்கலாம்.

தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அடுத்தவர்களுடைய விமர்சனங்களுக்கு ஏற்ப ஆடுகிறார்கள் என்பது அறிஞர்களின் கருத்து. அதாவது மகுடி ஊதும் பாம்பாட்டிக்கு முன்னால் தலையாட்டும் பாம்பைப் போல இவர்கள் விமர்சனங்களுக்குத் தக்கபடி தலையாட்டுகிறார்கள். கடைசியில் பாம்பாட்டியின் பெட்டிக்குள் முடங்கிப் போய் விடுகிறார்கள். வாழ்க்கை எனும் வசந்தத்துக்குள் உற்சாகமாய் உலவ இவர்களால் முடிவதில்லை. சுதந்திரச் சிறகுகளை பிறருக்காய் முறித்துக் கொண்டு வானத்தையே தொலைத்து விடுபவர்கள் இவர்கள்.

மைக்கேல் ஜோர்டன் அமெரிக்காவின் கூடைப்பந்து வீரர். அவரைத் தெரியாத விளையாட்டு வீரர்கள் இருப்பார்களா? கிரிக்கெட் உலகின் பிராட்மேன் போல கூடைப்பந்து உலகின் ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன். அவர் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அவரை கூடைப்பந்து அணியில் சேர்க்காமல் விரட்டி விட்டனர். சோகத்தில் வீட்டுக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு அழுதார். ஆனாலும் தனது கனவை அவர் கலைத்து விடவில்லை. தன்னால் நன்றாக விளையாட முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். விளையாடினார். சாதனைகளின் எல்லைகள் வரை சென்றார். இன்று அவருடைய நுணுக்கங்கள் விளையாட்டு வீரர்களுக்குப் பாடமாக இருக்கிறது! பார்வையாளர்களுக்குப் பிரமிப்பாய் இருக்கிறது! காரணம், அவர் விமர்சனங்களைக் கண்டு பயந்து ஓடவில்லை! நத்தை ஓட்டுக்குள் தன்னுடைய திறமையை அடகு வைக்கவும் இல்லை.

"ஐயோ! இவன் ஒரு மக்குப் பையன். இவனுக்கு ஒண்ணுமே சொல்லிக் குடுக்க முடியாது. இப்படி ஒரு மக்குப் பையனை நான் பார்த்ததேயில்லை'' எனும் விமர்
சனத்தை வாங்கியது யார் தெரியுமா?
தாமஸ் ஆல்வா எடிசன்!

"ஒழுங்கா காது கேக்காத இவனெல்லாம் என்னத்தை சாதிக்கப் போறான்'' என்று அவரைப் பற்றிப் பேசினார்கள். அவர் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. இன்று உலகிலேயே அதிக கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருப்பவர் அவர் தான். 1093 பொருட்களுக்கான காப்புரிமை அவரிடம் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள், அடுத்தவர்கள் சொல்வதற்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமா?

விமர்சனங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று, நம்மை ஆக்கப்பூர்வமாய் சிந்திக்க வைக்கும் விமர்சனங்கள். அவை நமக்கு தூண்டுதலாய் இருக்கும். இதைத் தருபவர்களெல்லாம் நமது நலம் விரும்பிகள். பெற்றோர், நெருங்கிய நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களெல்லாம் இந்தப் பட்டியலில் வருவார்கள். இவற்றைக் கவனமுடன் கேட்டு நம்மை சீர் தூக்கிப் பார்ப்பது பயனளிக்கும்.

இன்னொரு வகை, குதர்க்க விமர்சனங்கள். இவை பெரும்பாலும் தன்னம்பிக்கையற்ற மனிதர்களிடம்இருந்தே வரும். அடுத்தவர்களை மட்டம் தட்டி நிம்மதி அடைபவர்கள் இவர்கள். ஒருவகையில் தங்களுடைய இயலாமையை மறைக்க அடுத்தவர்களைக் காயப்படுத்திப் பார்ப்பவர்கள் இந்த வகை மனிதர்கள் என்று சொல்லலாம். இவர்களுடைய விமர்சனங் களை அப்படியே அள்ளி குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள்.

Friday, March 25, 2011

சிதைவும் வலியும் வெளியே இருந்து பார்த்தால் நல்ல சண்டைப் படம்தான்!

பெரும்பாலான தமிழ்ப் படங்கள், தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம், நாமே நம் உணர்வுகளை நாசமாக்கிவிட அனுமதித்த ஒரு சுயபரிதாபமே மிஞ்சுகிறது. இதுபற்றி எத்தனை கிண்டல்களையும் எரிச்சல்களையும் எழுதி, வாசித்து, பதிவு செய்துவிட்டோம்!

போகிறவர் காண்கிறவர்களெல்லாம் எட்டி ஒரு உதை போட்டுவிட்டுப் போகத் தூண்டுவதாக, எப்போதும் வழியில் படுத்துக் கிடக்கும் தெருநாய் போலவே இன்னமும் இவை இருந்துகொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் எல்லை மீறிய அளவில் மிகைப்படுத்துவதாகவும், நாடகத் தன்மையான வசனங்களும், யதார்த்தத்துக்குச் சற்றேனும் ஒத்துவராத ஆர்ப்பாட்டங்களுமாக பேராதரவு பெற்றுத் தமிழ் மனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்டிருக்கின்றன சினிமாவும், தொலைக்காட்சியும்! திணற வைக்கும் மிகைத்தன்மையே இவற்றின் வாய்பாடு. வெறும் வாய்வீச்சுக்களோடு தேய்ந்து சிதைவதற்கு நம்மைத் தயார்படுத்தி வைத்திருக்கின்றன இவை.

சினிமாவின் அடிப்படைப் பண்புகளான காட்சிகளால் சொல்லுதல், சொல்லாமல் சொல்லுதல் என்பவை பற்றி எந்தப் பொருட்படுத்தலுமில்லாமல், பஞ்ச் வசனங்களும் பறந்து பறந்து அடித்தலுமாக… ‘நான் அடிச்சா தாங்க மாட்டாய் நாலு மாசம் தூங்க மாட்டாய்’ என்று அந்தரத்தில் மிதந்து மிரட்டுகிறது நம் சினிமா.

உலகளவில் சினிமா என்பது மனிதருக்குத் தந்த பெரிய மாற்றமானது, சொல்லாமல் விடுபடும் பகுதிகளைக் கொண்டே காட்சிகளையும் கதையையும் நமக்குள் தொகுத்துக் கொள்ளும் தன்மையை நமக்குப் பழக்கப்படுத்தியதுதான். துண்டு துண்டான காட்சிகளிலிருந்து ஒரு கதையை – கருத்தை தொகுத்துப் புரிந்துகொள்ளும் இயல்பு நமக்குள் வளர்ந்திருப்பதென்பது சினிமா கொண்டுவந்த சாதனைதான்.

சொல்லாமல் சொல்வதுதான் அழகு. நாடகம், இசை, ஓவியம், சினிமா எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். செக்கோவின் கதைகளைப் பற்றிச் சொல்லும் போது, வரிகளுக்கு இடையே உள்ள விஷயம்தான் வரிகளில் உள்ளதை விட அழுத்தமானதாக இருக்கும் என்பார்கள். ஒரு நல்ல கவிதையிலும் அதன் வரிகளுக்கு இடையேயுள்ள மௌனம்தான் அதன் தரத்தை உயர்த்துகிறது என்பர். வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லி வெள்ளையாக நிற்கும் கவிதைகள் வெட்கங் கெட்டவை என்றார் சுந்தர ராமசாமி.

இசையிலும் அப்படித்தான். இரு ஸ்வரங்களுக்கிடையே புலப்படாமல் இருக்கும் அதிர்வைத் தேடுவதில்தான் இசை அலாதியான சுவை பெறுகிறது. பிரபல இசைமேதை மோஸார்ட்டின் இசைத்தொகுப்பு வாசிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் முடிவில் விமர்சகரொருவர் இப்படி அறிவிப்பு செய்தார்: “நீங்கள் இதுவரை கேட்ட இசை அமேதியஸ் மோஸார்ட்டினுடையது. அதைத் தொடர்ந்து வந்த நிசப்தமும் மோஸார்ட்டினுடையது.”

இப்படி சொல்லாமல் சொல்லப்படும், பார்க்காமல் பார்க்கப்படும், கேட்காமல் கேட்கப்படும் விஷயங்களுக்கு எப்போதும் அழுத்தமும் தாக்கமும் அதிகம். நாங்களோ எல்லாவற்றையும் ஆர்ப்பாட்டமாக வாய்வலிக்க முழக்கித் தீர்ப்பதிலேயே மற்றவற்றைக் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

பூங்காவில் உறங்கிக் கொண்டிருக்கும் ஒருவனை ஒரு பெண் வந்து தொட்டு எழுப்பினால் அவன் திடுக்கிட்டு எழுவதை சினிமாவில் எந்த வார்த்தையுமின்றியே காண்பித்துவிட முடியும். மாறாக, “நாரீமணியே! யாருமற்ற இந்த உத்தியாவனத்திலே நான் என்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்குங்கால், நீ மெல்ல வந்து, நின்று, எனைத் தொட்டு எழுப்பியதன் காரணம் என்னவோ?” என்பதான எடுப்புகளிலிருந்து இன்றைக்கும் நாம் பெருமளவு மாறிவிடாமலிருப்பது ஒருவகையில் நம்மைப் பற்றித் தெளிவுபடுத்தி விடுகிறது.

நிஜ வாழ்க்கையிலும் அந்தக் கலைஞர்களின் வீர வசனங்களுக்கு நம்மை ஒப்புக் கொடுத்து மயங்குவது வரை இது நீடிக்கிறது. தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி கலைஞர்களின் உணர்ச்சிகர வசனங்கள், உளறல்கள் போலவே நிஜ வாழ்க்கையிலும் அதேமாதிரியான அவர்களது மிகைநாடகங்கள் நிகழ்த்தப் பெறுகின்றன. மக்கள் மோட்டுவளமாகத் தங்களையும் அழித்து மற்றவர்களையும் அழிக்கத் தூண்டுமளவுக்கு இவர்களது முட்டாள்த்தன வீராவேசங்கள் பகட்டாக வீசப்படுகின்றன. நிஜவாழ்க்கையிலும் தேவையற்ற அதே மிகைநடிப்புடன் வலம்வருவது பற்றி இவர்களுக்கு வெட்கமெதுவுமில்லை.

நிஜத்தைக் காண மறுக்கும் பிடிவாதம், கற்பனையில் உள்ள பெருமிதத் திளைப்புகளுக்கே முக்கியத்துவம், ஆர்ப்பாட்டமான துன்ப அரற்றுகையில் திருப்தி, ஐந்து சதத்துக்கும் பிரயோசனமில்லாத வெற்று வீர முழக்கங்கள், உண்மைநிலையை ஆராய முன்வராது தங்களது நம்பிக்கைகள் கனவுகளுக்காக மக்களைப் பகடையாக்குதல் என்று ஒரே படுத்தாகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எதிலும் மிகைத்தனங்களையே வாரிக்கொட்டும் தங்கள் வழக்கத்தால், தங்களுக்குச் சம்பந்தமில்லாத அல்லது தெரியாத இடங்களிலும் மூக்கு நுழைத்துச் சிக்கல்களை உருவாக்கி வருகிறார்கள்.

தமிழகத்தில் இந்தக் கலைஞர்கள் போடும் கூப்பாடுகள் குதியாட்டங்கள் எல்லாம் உண்மைநிலைகள் தகவல்களை அறிந்துகொள்ளாத – அறிய முற்படாத வெறும் முட்டாள்த்தன ஆவேசத்திலிருந்து பிறப்பவை மட்டுமே. இலங்கைக்கு வெளியேயுள்ள தமிழர்களுக்கேயுரிய – எந்த நோவுமற்ற சௌகரியங்கள், கனவுகள், பெருமித மிதப்புகள், போதைகளுக்கு ஏற்ற வகையிலேயே இவர்களது துள்ளுகைகள் அமைகின்றன.

Thursday, March 24, 2011

இன்றும் ஒரு தகவல்

ஒபாமா தினம்
 
பொதுவாக உயிரோடு இருப்பவர்களை சிறப்பித்து அவர்களுக்கான பெருமைகளை சொல்லும் விதமாக எந்த கொண்டாட்டமும் நடத்தப்படுவதில்லை. இறந்த பிறகே ஒருவருக்கு அந்தப் பெருமை கிடைக்கும். ஆனால் உயிருடன் இருக்கும் ஒருவருக்கு அவரின் வாழ்நாளிலேயே அவரின் பெயரால் ஒரு தினம் கொண்டாடபடுவது உலகுக்கே புதுமை மட்டுமல்ல, முதல் முறையும் கூட.

கென்யா நாடு கறுப்பர்களின் பூமி. இந்த நாட்டில்தான் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பெயரால் 'அதிபர் தினம்' என்று கொண்டாடப்படுகிறது. வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவில் முதன் முதலாக கறுப்பரான ஒருவர் வெற்றி பெற்றிருப்பது, அவர்களுக்கு பெருமையான விஷயம். நவம்பர் 6 -ந் தேதி ஒபாமா வெற்றி பெற்ற நாள். அந்த நாளையே அவர்கள் அதிபர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக கென்யாவில் தேசிய விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த நாள் முழுவதும் கொண்டாட்டம்தான்.

இந்த கொண்டாட்டத்திற்கு காரணம் இருக்கிறது. ஒபாமாவின் தந்தை ஒரு கென்யர். அதனால் அவரை தங்கள் நாட்டை சேர்ந்தவராகவே கென்யா மக்கள் பார்க்கிறார்கள்.

ஒபாமா வெற்றி பெற்ற மறுநாளே, "உங்களின் வேர்கள் கென்யாவில் இருந்து தொடங்குவதை நினைத்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம். உங்களின் வெற்றி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கே தூண்டுகோலாக இருக்கும். கென்யாவின் மீது இந்த வெற்றி இன்னும் சிறப்பாக எதிரொலிக்கும்." என்றார் இனம் பெருமிதம் பொங்க கென்யா அதிபர் மவாய் கிபாக்கி. ஒபாமாவின் வெற்றி ஒட்டுமொத்த கென்யா மக்களின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. கென்யாவைப் போலவே அல்பாமா நாடும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 2 வது திங்கட்கிழமையை பராக் ஒபாமா தினம் என்று அறிவித்து கொண்டாடுகிறது.

"இந்த உலகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கனவைக் காண யாரும் அஞ்சக் கூடாது என்பதை உங்கள் வெற்றி தெரிவித்து இருக்கிறது." என்று நல்சன் மண்டேலா கூறினார். என்னதான் இருந்தாலும் உயிருடன் இருப்பவருக்கு ஒருதினம் ஏற்படுத்தி அதை இரண்டு நாடுகள் தேசிய விடுமுறையாக அறிவித்து கொண்டாடி வருவது உலகிலேயே ஒபாமா ஒருவருக்குதான்.      
 
நன்றி தினத்தந்தி

Monday, March 21, 2011

மனம்தான் பகை; அதை வேட்டையாடுவோம் வாருங்கள்!

இணைய வலைப்பக்கமொன்றில் வாசிக்க கிடைத்த ஒரு குட்டிக்கதை:

பிரபஞ்சத்தைப் படைத்துக் கொண்டிருந்தான் கடவுள். வேலை இன்னும் இழுத்துக் கொண்டே கிடந்தது. கோடிக்கணக்கான நட்சத்திரங்களையும் கிரகங்களையும் உருவாக்க வேண்டுமென்றால் சும்மாவா? நெற்றியில் வழிந்த வியர்வையைக் கைவிரல்களால் வழித்து விட்டுக் கொண்டான். சூரிய மண்டலம் சம்பந்தமான வேலைகளும் முடிந்து விட்டன. ஒரு நட்சத்திர மண்டலமும் இன்னொரு நட்சத்திர மண்டலமும் ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாதவாறு, யாராலுமே புரிந்து கொள்ள முடியாத கணித சூத்திரங்களை உருவாக்கி எல்லாவற்றையும் இணைக்க வேண்டும். அதற்குத் தேவை, காலம். காலமும் உருவாக்கப்பட்டு அந்த வேலையும் முடிந்தது. பூமிக்குத் தண்ணீரும் காற்றும் புவியீர்ப்பு விசையும் அளிக்கப்பட்டது. இவ்வளவுக்குப் பிறகும் ஒரு வேலை பாக்கியிருந்தது. இருப்பதிலேயே ஆகக் கடினமான வேலை அதுதான் என்று தோன்றியதால் ஒரு தேவதையைத் துணைக்கு அழைத்தான் கடவுள்.

“சிருஷ்டி முடிந்து விட்டது. ஆனால் ‘இந்த சிருஷ்டியின் காரணம் என்ன? இதன் அர்த்தம் என்ன?’ என்பதன் பதில் மட்டும்தான் எஞ்சியிருக்கிறது. அந்த பதில் ஒரு பொக்கிஷம். விலைமதிக்க முடியாத அந்த பொக்கிஷத்தை நீதான் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். செய்வாயா?” என்று கேட்டான் கடவுள்.

“ஓ நிச்சயமாக. அந்தப் பொக்கிஷத்தை யாராலும் ஏறி வர முடியாத ஒரு மலை உச்சியிலே கொண்டு போய் வைத்து விடுகிறேன், பிரபு.”

“மனிதர்களுக்கு அதெல்லாம் ரொம்ப சுலபம்.”

“அப்படியானால் அதை ஒரு பாலைவனத்தின் மத்தியிலே வைத்து விடுகிறேன். யாராலும் நெருங்க முடியாது.”

“ம்ஹம். ஒட்டகம் என்ற பிராணியைப் படைத்திருக்கிறேன். அதில் ஏறி அங்கேயும் வந்து விடுவார்கள் மனிதர்கள்.”

“அப்படியானால் நிலவில் வைத்து விடுகிறேன். அல்லது, இந்தப் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள நட்சத்திரம் ஒன்றில் வைத்து விடுகிறேன். அங்கே அவர்களால் நிச்சயமாக வர முடியாது.”

“இல்லை. அங்கே வருவதற்கும் அவர்கள் வாகனத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள். அவர்களுக்கு அப்படி ஒரு சக்தி வாய்ந்த திறனை அளித்திருக்கிறேன். மனிதர்கள் மற்ற பிராணிகளைப் போன்றவர்கள் அல்ல.”

சொல்லிவிட்டு சிறிது நேரம் யோசித்தான் இறைவன். “ம்….அந்த ரகசியமான இடம் என்னவென்று தெரிந்து வி;ட்டது. வாழ்வின் சூட்சுமத்தை மனிதனுக்குள்ளேயே வைத்து விடு. அதுதான் ரொம்பவும் பத்திரமான இடம். சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத இடம். அங்கே வைத்தால்தான் அதன் அருமை மனிதனுக்குத் தெரியும்….”

நாம் எளிதில் தேடிக் கண்டு கொள்ள முடியாத இடங்களும் புதையல்களும் நமக்குள்ளேயே இருப்பதை யார் மறுக்க முடியும்? ஒவ்வொரு கணப் பொழுதுகளிலும், எதிர்பார்த்திராத எதையெதையோ வெளிப்படுத்தி நம்மை எப்போதும் வியப்பிலாழ்த்தும் இந்த மனதை புரிந்து கொள்வது சுலபமாக இல்லை. ‘வெயில் நுழைபறியா குயில் நுழை பொதும்பர்’ என்கிற ரகசிய இருட்டாகத்தான் அது இருக்கிறது. மனசையறிய மார்க்கமுண்டா என்றுதான் தத்துவ ஞானிகளும் யோகிகளும் கவிஞர்களும் விஞ்ஞானிகளும் கூட தேடித் தேடிச் சலிக்கிறார்கள்.

“என் மனசுள் குமுறிக் கொண்டிருக்கிறது எரிமலைகள். குறுக்கும் நெடுக்கும் ஓடுகிறது காட்டாறுகள்” என்று விக்ரமாதித்யன் சொல்வது போல களேபரங்களுடனும் கரைகாணா எண்ண ஓட்டங்களுடனும்தான் அது இருக்கிறது. எங்கோ இண்டு இடுக்குகளில் ஒளிந்திருந்து திடீர் திடீரென்று வெளிப்பட்டு, ‘நமக்குள்ளிருந்ததா இது’ என்று நம்மைத் திகைக்க வைப்பவை ஏராளம். ஏன்? எதற்கு? இப்படி நடக்கிறது – நடந்து கொள்கிறோம்? என்று புரிந்து கொள்ளவே முடியாமல் எப்போதும் மனம் ஆடும் கூத்துகள் பலப்பல.

Monday, March 14, 2011

எனில், நாங்கள் வாசிப்பதற்காகவே இருக்கிறோம்!

 
“சொர்க்கம் என்பது ஒரு மாபெரும் நூலகம் என்றே நான் எப்போதும் கற்பனை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார் ஜோர்ஜ் லூயி போர்ஹே. “நூலகம் ஒரு மாயக்கூடம். அங்கு பலவகை வசீகர ஆவிகள் உலவுகின்றன” என்று எமர்சன் சொன்னார். “வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்” என்று நம் வாசிகசாலைகள் அனைத்திலும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கும் செயற்பாடு மனதுக்கு இன்பம் தருவதுடன் நம் வாழ்க்கைக்கும் எதையோ தருகிறது என்றே உணர முடிகிறது.

“வாழ்க்கையில் ஏற்பட்ட சூன்யத்தை புத்தகங்களால் நிரப்புகிறேன்” என்று பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் வரும் பெண் பாத்திரம் கூறுகிறது. சின்ன வயதில் நூல்நிலையத்திற்குப் போனபோது, அங்கே அவ்வளவு புத்தகங்களையும் இலவசமாகவே வாசிக்கலாம், பணம் கொடுக்கத் தேவையில்லை என்பது தனக்கு தாங்கமுடியாத வியப்பும் பரவசமுமாக இருந்தது என்ற கவிஞர் வைரமுத்துவின் உணர்வும் நம்மில் பலர் அனுபவித்திருக்கக் கூடியதே. ஜெயமோகன், “நூல்நிலையங்கள் அன்னையர்கள், பால்நினைந்தூட்டும் கருணைகள்” என்று எழுதினார். வாசிப்பின் மூலம் புதியன அறியும் போதையைப் பழகிக் கொண்டுவிட்ட ஒருவருக்கு புத்தகங்களே வாழ்வின் பெருங்கருணை என்று தோன்றுவதில் விசித்திரமில்லை. “வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் பொழுது” என்கின்ற ஆழ்வாரின் மனநிலை, புத்தகங்களோடு தொடர் பழக்கம் உடைய ஒருவரும் தமக்குக் கிடைப்பதாகச் சொல்லிக் கொள்ளக் கூடும்.

மனிதன் என்பவனை எவ்வளவுதான் அறிய முயன்றாலும், அறிய முடியாத விதத்திலேயே அவன் இருக்கிறான். வாழும் காலத்துக்குள் கொஞ்சமேனும் அறிந்துகொள்ள புத்தகங்கள் உதவ முடியும். மனம் நிகழ்த்தும் பல ஜாலவித்தைகளை புத்தகங்களின் வழியே ஒரு வேடிக்கை போலப் பார்த்துக் கொள்ள முடிகிறது. மனித உள்ளத்தின் மர்மத்தை அறியும் மார்க்கங்களினுள் ஒன்று வாசிப்பு. மர்மத்தின் மந்திர ஒளி சிதறிக் கிடக்கும் மனதின் வீதிகளில் உலவ ஒரு வாய்ப்பு. எல்லாப் புத்தகங்களிலும் அதை எழுதிய மனதும் பதிக்கப்பட்டிருக்கிறது.

“நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன்” என்றார் தெகார்த்தே. கூடவே, வாசிப்பதால் நான் வாழ்கிறேன் என்றும் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. “என்னிடம், உலகில் ஒருவரை மட்டுமே உயிர்ப்பிக்க வைக்க முடியும். நீங்கள் யாரை விரும்புகிறீர்கள் எனக் கடவுள், உலகம் அழியும் நாளில் கேட்டால், நான் ஷேக்ஸ்பியரையே உயிர்ப்பிக்கக் கோருவேன். எனில், ஷேக்ஸ்பியரே பின் இந்த முழு இயக்கத்தையும் உருவாக்கி விடுவாரே!” என்று போர்ஹேயும், “ஒவ்வொரு மனிதனும் ரொஸ்ரோயெவ்ஸ்கியைப் படித்தால் உலகம் இன்னும் சற்று வாழத் தகுந்த இடமாக மாறிவிடும். அதில் சந்தேகம் இல்லை” என்று சாருவும் கூறுவது இதையாகத்தான் இருக்கும்.

இதுபோல மற்றவர்கள் சிலர் கூறுவதையும் இங்கு தொகுத்துக் கொள்ளலாம். கவிஞர் சுகுமாரன் சொல்கிறார்: “பொழுதுபோக்கோ, தோளை உயர்த்திப் பீற்றிக் கொள்வதற்கான வாய்ப்போ அல்ல இலக்கிய வாசிப்பு என்ற ஞானம் பிறந்த பின்னர், நூல்களில் தேர்வு ஏற்பட்டது. வாழ்க்கையைச் செழுமைப்படுத்திக் கொள்ளும் கணங்கள் புத்தகங்களில் மறைந்திருக்கின்றன என்ற தெளிவு வந்தபோது, வாசிப்பின் பொருளே மாறியது. வாழ்க்கையை உணர்வோ அல்லது அறிவோ சந்திக்கும் ஒரு கணத்தையாவது எந்த புத்தகமும் தராமலிருந்ததில்லை. அந்த எழுத்துக்களின் சாரத்திலிருந்து சிறு அணுவாவது என் நாளங்களுக்குள் கரைந்திருக்கிறது. அந்த அணுக்கள் இல்லாமல் சிந்தனையோட்;டம் இல்லை. என் எழுத்தும் இல்லை. வாழ்வின் துடிப்புமில்லை.”

எஸ். ராமகிருஷ்ணன் சொல்கிறார்: “புத்தகங்கள் மீதான நெருக்கம் நண்பர்களின் மீதான நெருக்கத்தை விடவும் வலியது. அதை சொல்லி விளங்க வைக்க முடியாது. கதை, கட்டுரைகள், கவிதைகள் என்று புத்தகத்தின் பொருள் வேறுபட்டு இருந்தாலும் எல்லா புத்தகங்களும் ஒரு நினைவை சுமந்துகொண்டு இருக்கின்றன. பள்ளி நாட்களில் சில்லறை சில்லறையாக சேர்த்து வைத்து வாங்கிய ஆங்கில அகராதி இன்று வெறும் புத்தகமாக மட்டும் தென்படவில்லை. அது என் வளர்ச்சியின், நினைவின் அடையாளம். அதிலிருந்து எனக்கு என்ன கிடைத்தது என்பது நான் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாத அந்தரங்கம்.”

. முத்துலிங்கம்: “மனிதன் அனுபவிக்கக் கிடைத்த எத்தனையோ இன்பங்களில் வாசிப்பு இன்பம் மேலானது. எவ்வளவு வாசித்தாலும் தெவிட்டுவதில்லை. ஒன்றுக்குப் பின் ஒன்றாக பிரமிக்க வைக்கும் புத்தகங்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன…. புத்தகத்தில் உண்மையான பற்று வைக்கும் ஒருவருக்கு வேறு பற்று இருக்காது. ஆயிரம் புத்தகம் படித்தால் ஆயிரத்தியோராவது புத்தகத்தில் வியப்பதற்கு விசயம் குறைந்துகொண்டே வரும். எனக்கோ வியப்பு கூடிக்கொண்டு வருகிறது. இது பொது விதியாக இருக்க முடியாது, எனக்கு மட்டும் சம்பவிக்கிறது என்றே நினைக்கிறேன். ஒருவேளை அனுபவம் கூடக் கூட நல்ல புத்தகங்களைப் படிப்பதற்குத் தெரிவு செய்யும் திறமை என்னிடம் அதிகமாகியிருக்கலாம். முன்னெப்போதும் இல்லாத மாதிரி தரமான புத்தகங்களின் வருகையும் அதிகமாகியிருக்கிறது. அவை தரும் வாசிப்பு இன்பமும் கூடுகிறது. அருமையான சொற்றொடர்கள் வரும்போது, ‘அட, இது எனக்குத் தோன்றாமல் போயிற்றே’ என்று என்னையறியாமல் தலையில் அடிப்பதும் அதிகமாகிறது. என்னுடைய எஞ்சிய வாழ்நாள் மட்டும் குறைந்துகொண்டே வருகிறது.”

ஜெயமோகன்: “நினைவுகூர்கிறேன், நான் இலக்கியத்தைக் கண்டடைந்த நாட்களை! நாஸ்தர்தாம் தேவாலயத்தின் ஒவ்வொரு கூழாங்கல்லும் விக்தர் ஹ்யூகோவை விட எனக்குத் தெரிந்தது. லண்டன் சந்துகளில் எனக்கு சற்று முன்னால் சார்ள்ஸ் டிக்கன்ஸ் நடந்தார். வங்கத்து நீர்நிலைகளில் மென்காற்றின் அலையெழுவதை தாகூருடன் சேர்ந்து கண்டேன். எனக்கு தடையே இல்லை. நான் ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே பேருந்து வரும் ஒரு சிற்றூரில் பிறந்து ஒரு நகரத்தைக் கூட காணாமல் வாழ்ந்த சிறுவன் அல்ல அப்போது. எனக்கு தூந்திரப் பனி தெரியும். அராபிய மணல் தெரியும். எனக்கு காலமில்லை. அக்பரையும் தெரியும் நெப்போலியனையும் தெரியும். ஒரு மந்திரக்கோல் என்னைத் தொட்டது. நான் விரிந்து பரந்து உலகை நிறைத்தேன். ஓர் உடலில் இருந்துகொண்டு ஓராயிரம் வாழ்க்கையை வாழ்ந்தேன். ஆம். அதற்காகவே இலக்கியம்.”

R.P. ராஜநாயகம் தனது வலைத்தளத்தில் சொல்கிறார்: “தி. ஜானகிராமனை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் இன்று கனவில் வந்தார். இதுவரை கனவில் கூட வந்ததே இல்லை. அவரை பார்த்தவுடன் அழுகை வந்தது. என் வாழ்க்கையின் அதிர்ச்சிகள் சோகங்கள் எல்லாவற்றையும் சொல்லி அழுதேன். காலம் கற்பித்த பாடத்தின் அடி தாள முடியாமல் தப்பித்து வந்ததை சொன்னேன். தொலைத்துவிட்ட எல்லாவற்றையுமே அவரிடம் வரிசைப்படுத்தி சொன்னேன். காயங்கள், அவமானங்கள், சிறுமை எல்லாவற்றையுமே சிறு குழந்தை போல விக்கி அழுதுகொண்டே…. அவருடைய ‘சத்தியமா’ கதையில் வருகிற சிறுவன் நான் தான், அந்த ‘பரதேசி வந்தான்’ கதையில் வருகிற பரதேசியும் நான் தான் என்றேன். அந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை இருந்தபோது பூஜை அறையில் பிள்ளையார், முருகன், லிங்கம், விஷ்ணு, ஆண்டாள் இவற்றின் படங்களுடன் தி.ஜா படத்தையும் வைத்து கும்பிட்ட கதையை சொன்னேன். இதை சொன்னவுடன் மட்டும் வேதனையுடன் முகம் சுழித்து, ‘ஏன் அப்படி செய்தீர்கள்?’ என்று பதறி வருத்தப்பட்டார். கனவு எப்போது முடிந்தது. தெரியவில்லை. கனவுக்கு அர்த்தம் என்ன? கடவுளை தூக்கிபோட்டு விட்ட என்னால் தி.ஜா படைப்புகளை புறம் தள்ள முடியவில்லை. தி.ஜா வும் என்னோடு இருக்கிறார். ஒருநாள் என் கனவில் அந்த ரஷ்யனும் வருவான். வெகு துயரங்களை அனுபவித்தவன், கரமசோவ் சகோதரர்களை எழுதிய கலைஞன். இது என் நம்பிக்கை. அவனிடமும் நான் தேம்பி தேம்பி அழுவேன்.”


நாம் அதுவரை அறியாத வாழ்வின் பகுதிகளை புதிது புதிதாக அறியத் தந்துகொண்டிருக்கும் புத்தகங்களை, வாழ்வின் பெருங்கருணைகள் என்றே சொல்ல வேண்டும். அவை நம் வாழ்க்கையை விரிவுபடுத்துகின்றன, விளங்க வைக்கின்றன, வாழும்படியாகச் செய்கின்றன என்பதில் சந்தேகமில்லை. “உலகம் புத்தகமாவதற்காகவே இருக்கிறது” என்றார் மல்லார்மே. எனில், நாங்கள் வாசிப்பதற்காகவே இருக்கிறோம்.

Friday, March 11, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

'டைட்டானிக்' பட ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோவுக்கும் 'ரெட் ரைடிங் வுட்' ஹாலிவுட் படத்துக்கும் என்ன தொடர்பு என்று பார்பதற்கு முன்பு இப்பக்கத்திலுள்ள தலைப்பை படித்ததும், ஒரு கிராமம் அல்லது ஊரில் யார் ஓநாய் மனிதன் என்று கண்டறியும் சஸ்பென்ஸ் விளையாட்டு தென்படுகிறதல்லவா... அதை ஒரு எட்டு பார்த்துவிடுவோம்.

யெஸ், ''ரெட் ரைடிங் வுட்' ஹாலிவுட் படத்தின் கரு இதுதான். ஆனால், இந்தக் கருவுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு. மேற்கத்திய நாடுகளில் பாட்டி சொன்ன கதையாக பல்வேறு இன, மொழி மனிதர்களால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்ட இந்த நாட்டுப்புறக் கதை, இப்போதுதான் திரை வடிவம் பெறுகிறது.

டேவிட் லெஸ்லி ஜான்சன் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியிருந்தாலும் இன்றுவரை 333 பேர் இதற்கு வெவ்வேறு வகையில் தங்கள் நிலம், மரபு, பண்பாடு சார்ந்து கதை வடிவம் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். என்றாலும் 'லிட்டில் ரெட் ரைடிங் வுட்' என்ற புகழ் பெற்ற நாட்டுப்புறக் கதையே இவை அனைத்துக்கும் ஆதி வடிவமாக கருதப்படுகிறது.

உண்மையில் இந்த நாட்டுப்புறக் கதையில் வருபவள் சின்னஞ்சிறு சிறுமி. அவள் சிக்கிக் கொள்வது ஓநாயிடம். ஆனால், காலம் மாற மாற... சிறுமி, டீன் ஏஜ் அழகியானாள். ஓநாய், ஓநாய் மனிதனானான்.

இப்படி இந்தக் கதை பல்வேறு தலைமுறைகளை சேர்ந்தவர்களின் நாக்குகளில் உருண்டு, புரண்டு, தாண்டவமாடி பல கோடி செவிகளை அடைந்த வரலாற்றை சார்லஸ் பேரால்ட் நூலாக தொகுத்திருக்கிறார். அதேபோல், இந்த நாட்டுப்புறக் கதையை உளவியல் ரீதியாக ஃபிராய்டிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் புகழ்பெற்ற குழந்தைகள் நல மனோத்தத்துவ நிபுணரான புரூனோ பெட்டல்ஹம்.

இவையனைத்தையும் கமா, ஃபுல் ஸ்டாப் விடாமல் வாசித்துத்தான் 'ரெட் ரைடிங் வுட்' படத்துக்கு திரைக்கதை எழுதியிருப்பதாக நாட்டுப்புற கதைகளின் அம்மன் மீது கற்பூரம் அடித்து சத்தியம் செய்திருக்கிறார் டேவிட் லெஸ்லி ஜான்சன்.

ரைட், என்ன கதை?

ஒதுக்குபுறமான ஒரு கிராமம், அங்கு வாழும் வெலேரி என்னும் அழகிக்கு பீட்டர் என்னும் இளைஞன் மீது காதல். ஆனால், அவளது பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. பதிலாக தாங்கள் வாங்கிய கடனுக்கு பிராயசித்தமாக கடன் வாங்கியவரின் மகனுக்கு தங்கள் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். எனவே தன் காதலனுடன் ஊரை விட்டு ஓட வெலேரி நாள் குறிக்கிறாள்.

இதற்கிடையில் அந்த கிராமத்தை சேர்ந்த மனிதர்கள், மாதத்துக்கு ஒருவராக ஓநாய் மனிதனுக்கு இறையாக்கிரார்கள். வெலேரியின் சகோதரி கூட இப்படி பலியானவள்தான். இதிலிருந்து தப்பிக்க, கிராமத்து பெரிய மனிதர்கள் சூனியக்காரர்களில் ஆரம்பித்து பலரையும் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால், யாராலும் ஓநாய் மனிதனிடமிருந்து அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

இறுதியாக அந்தக் கிராமத்துக்கு வரும் ஃபாதர் சாலமன், ஓநாய் மனிதனை தான் விரட்டுவதாக சொல்கிறார். அதற்கான வேளைகளில் அவர் இறங்கும்போதுதான் ஓநாய் மனிதன் வெளியில் இல்லை...

அந்தக் கிராமத்தில் வசிப்பவர்களிலேயே ஒருவர்தான் என்பது தெரிய வருகிறது. ஓநாய் மனிதனை கண்டு பிடித்தார்களா... வெலேரி யாரை திருமணம் செய்து கொண்டால்... என்ற கேள்விக்கான விடையே 'ரெட் ரைடிங் வுட்' படம்.

ஐம்பைத்தைந்து வயதாகும் கேதரீன் ஹார்ட்விக்கீ இயக்கியிருக்கும் இப்படத்தில் லியனார்டோ டிகாப்ரியோ நடிக்கவில்லை. ஆனாலும் இப்படத்துக்கும் அவருக்கும் தொடர்பு உண்டு.

யெஸ், இப்படத்தை தயாரித்திருப்பவர், லியனார்டோ டிகாப்ரியோதான்.

கே.என்.சிவராமன் 

Wednesday, March 9, 2011

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

மக்களின் உடனடி வாழ்க்கை, அன்றாடத் தேவைகள், பசி, பிணி, குந்தக் குடிலற்று தொழிலற்று அலைதல், உறவுகள் இன்னும் ஒன்றாய்ச் சேர முடியாத வாழ முடியாத அவலம், கல்வி பொருளாதார சமூக வளப் பின்னடைவு என்று நமது இன்றைய பிரச்சினைகள் பலவாக உள்ளன. இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதில் நமக்கு இன்னும் எவ்வளவோ உதவியும் ஆதரவும் கைதூக்கிவிடலும் வேண்டியிருக்கிறது. இந்நிலையில், பழிக்குப் பழி உணர்ச்சியையே பெருக்குவதிலும், எதிர்த் தரப்பே பெருங் குற்றவாளிகள் என்று நிரூபித்துத் ‘திறுத்தி’ கொள்வதிலும், சேர்ந்து வாழ வகையோ நம்பிக்கையோ கிடையாது என்று கைவிரித்துக் காட்டுவதுமே தம் ஒரே ‘அரசியல்’ என்று நடந்துகொள்பவர்களை நாம் என்னவென்று சொல்வது?

குரலற்ற – சாதாரண மக்களைப் பாதுகாத்தல், அவர்களது துயர் களைந்து வாழ்வுக்கு உதவுதல் என்பதே அவர்களுக்குத் தலைமை தாங்க வருவோரின் பொறுப்பாகிறது. அதற்கான சாத்தியபூர்வ வழிகளைக் கண்டு கொள்ளுதலும், மீள்வதை விரைவுபடுத்தும் வகையிலான பேச்சும் செயல்களுமே நேர்மையைக் காண்பிக்கும். மாறாக, இன்றும் மக்களை நெருக்கடிகளுக்குள்ளும் உணர்ச்சிகர ஆவேசங்களிலும் வைத்திருப்பது மலிவாக வாக்குகளைப் பெறுவதற்கான தந்திரமே. இது, தமது அரசியல் லாபத்திற்காக மக்கள் அவலம் தொடர வேண்டும் என்று உள்ளுர விரும்பும் நிலைக்குச் செல்லவைத்து விடுகிறது. வைகோ வகையறாக்கள் மற்றும் புலம்பெயர் நிழல் அரசாங்க கோமாளிகளின் மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் இதையே உணர்த்துகின்றன.

மக்களை உணர்ச்சிகரப் படுத்தும் கருத்துக்கள் மூலம் போரும் வீரமும் முதன்மைப்படுத்தப்பட்டு அதிகாரப் பதவிகளை தக்கவைத்துக் கொள்ளப் பயன்படுத்தியது தமிழ் வரலாறு நெடுக இருந்து வருவதுதான். சங்ககாலப் பாடல்கள் உயிரழிப்பு வீரத்தை விதந்தோதும் முறையில் இன்றும் நம்மை உணர்ச்சிவசப்படுத்துவதாகவே இருக்கின்றன.

‘களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே’ (புறம். 277) என்றும், போர்க்களத்தில் தப்பி மீளாமல் பிணக்குவியல் நடுவே சிதைந்து கிடந்த மகன் உடலைக் கண்டு பிறந்த போதை விடப் பெரிதாக உவகை கொண்ட தாய் (புறம். 278) என்றும், போருக்கு அழைப்பு வரும்போதும் என் முறை வரட்டும் என்று காத்திருக்க முடியாமல் ‘என்னை முன்னால் அனுப்பு’ (புறம். 292) என்று அவசரப்படும் வீர ஆண்மகன்களை அரசர்களுக்காகப் புலவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

போரில் எதிர்கொண்ட யானையை வீழ்த்தித் தந்தை மாண்ட பின், ஆநிரை கவர்ந்த பகைவரைத் தடுத்து கணவனும் மாண்ட பிறகு, போர்ப் பண் கேட்டு விருப்பத்தோடு மயங்கி தன் ஒரே மகன் கையில் வேல் கொடுத்து வெண்ணிற ஆடை உடுத்தி தலையில் எண்ணெய் தடவிச் சீவி போர்க்களம் நோக்கிச் செல்கெனத் தன் மகனை அனுப்பும் பெண்களும் (புறம். 279), ஈன்று புறம் தருதலை தன் கடனாகவும் போரில் நின்று மடிதல் தன் மகன் கடனாகவும் நம்பும் மறத் தாய்மாரைப் பற்றிய பாடல்கள் (புறம். 312) உண்டு.

ஆனால் இவற்றை ஒரே குரலில் சொல்லிக் கொண்டிருப்பவையாக மட்டுமே அந்தப் பாடல்கள் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கவும் வாழ வைக்கவும் வீரமும் ஆவேசமும் மட்டுமே போதும் என்று சொல்லி அவை நின்றுவிடவில்லை. மாற்றுக்குரல்களும் இருந்திருக்கின்றன. போரும் வீரமும் காதலும் போன்றே மனித நல்வாழ்வுக்கான மாற்றுத் தேவைகள் எண்ணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை என்பதை இடித்துச் சொல்லி, உனக்குத் துன்பம் தருகிறவர்களைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிராமல் உன்னுடைய எந்தத் தன்மைகள் உனது துன்பத்திற்குக் காரணமாய் அமைகின்றன என்று யோசிக்கும்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

Tuesday, March 8, 2011

கறுப்பு சொர்க்கம்


நீங்கள் வீடியோ கேம்ஸ் ஆடுவீர்களா? சாட் செய்வீர்களா? அப்படியானால் நீங்களும் இந்த அபாயத்தில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது!

அவர்கள் பிரான்ஸின் தென்பகுதியில் இருக்கிற இளம் காதலர்கள். அங்கும் இங்குமாகச் சுற்றித் திரியும் அக்காதல் பறவைகள் கையில் ஒரு மொபைல் பொன் சிக்குகிறது. 'யாரோ தவறவிட்டார்கள்... போன் செய்தால் கொடுத்துவிடலாம்' என கையேடு எடுத்து வருகிறார்கள். அங்குதான் விபரீதம் ஆரம்பம்.

போன் மணிக்குப் பதிலாக எஸ்.எம்.எஸ். கீச்.கீச். அடுத்தடுத்து வருவதால் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஒவ்வொன்றும் அவர்களை வியப்பூட்டுகிறது. குறுந்தகவல்களை பின்தொடர்வதால் போன் உரிமையாளரைக் கண்டுபிடித்துவிடலாம் என முடிவெடுக்கிறார்கள். ஊருக்கு வெளியே நிசப்தம் கொஞ்சும் பகுதிக்குப் பொய் சேர்கிறார்கள். அந்த இடமே ரொமான்டிக்காக இருக்கிறது. முத்தத்தில் மூழ்கலாமா என யோசிக்கும் வேளையில் கண்ணில் படுகிறது ஒரு கார். ஏதோ ஆபத்து என மனம் சொன்னாலும், அதை நோக்கி விரைகிறார்கள். காருக்கு உள்ளேயும் ஓர் இளம்ஜோடி. மூடப்பட்ட காருக்குள் காலி மாத்திரை பாட்டில். விஷவாயு கக்கும் ஒரு குழாய் காருக்குள் செல்கிறது. பார்த்ததும் பகீர் ஆகிறார்கள். தற்கொலைக்கு முயற்சித்து, மரணத்தின் விளிம்பில் சரியும் அவர்களை காப்பாற்றப் போராடுகிறார்கள். பெண் மட்டுமே தப்புகிறாள். ஆண் காருக்குள்ளேயே காலி. 'ஆன்' செய்யப்பட்ட நிலையில் காரில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராவை எடுத்துக்கொள்கிறார்கள். அதிர்ச்சியோடு அவரவர் வீட்டுக்குச் செல்கிறார்கள்.

எஸ்.எம்.எஸ். மட்டும் நின்றபாடில்லை. அதை ஆராய்ந்ததில் 'பிளாக் ஹோல்' என்ற வீடியோ கேம் ஆடினால் புதிர்களை விடுவிக்கலாம் எனத் தெரிய வருகிறது. காதலிக்குத் தெரியாமல் ஆட்டத்துக்குள் நுழைகிறான் காதலன். அந்த வெர்சுவல் ரியாலிட்டி விளையாட்டுக்குள் பேரழகி ஒருத்தி வருகிறாள். அவனுக்கு ஆடிப்பார்க்கும் ஆசை அதிகரிக்கிறது. விளையாட்டோடு 'சாட்' வசதியும் உள்ளதால், ஒரு அழகியோடு அரட்டை தொடங்குகிறது. விளையாட்டு அழகியும் சாட் அழகியும் அன்றோரு தினம் காரிலிருந்து காப்பாற்றிய அழகியும் அழகியும் ஒரே பெண்தான்!

அதிரடி, அத்துமீறல், சாகசம் என இரவும் பகலும் ஆட்டம் தொடர்கிறது. ஒருகட்டத்தில் விளையாட்டும் வாழ்க்கையும் ஒன்றாகக் கலக்கிறது. காதலிக்கு இந்த விவரம் தெரியாததால், சில குழப்பங்கள் ஏற்படுகின்றன. விளையாட்டு வினையாகும் ஒருகட்டத்தில் காதலனையும் மரணம் துரத்துகிறது.

இதெல்லாம் எப்படி? புதிர்கள் அவிழும் அபாய நேரத்தில் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும்தானே? நிஜத்திலும் நிழலிலும் வியாபித்திருக்கும் அந்த அழகியின் அண்ணன்தான் அத்தனையையும் ஆட்டுவித்தவன். தங்கையைப் போலவே ஒரு கேரக்டரை விளையாட்டில் உலவவிட்டு, அவளைப் போலவே சாட் செய்து இளைஞர்களுக்குத் தூண்டில் போடுவான். சிக்கியவனோடு தங்கையை நிஜமாகவே பழகவிட்டு, ஜோடியாக தற்கொலை செய்துகொள்ள தூண்டுவான். கடைசி நேரத்தில் தங்கையை மட்டும் காப்பாற்றிவிடுவான். தற்கொலை நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்து ரசிப்பான். அவன் கூறுவதை தங்கை செய்தே தீர வேண்டும். மறுத்தால் என்ன நடக்கும் என யோசிக்ககூட முடியாது. அப்படியொரு சைக்கோ அவன்.

எத்தனையோ பேர் மரணிக்க, எதோ ஒருவிதத்தில் அந்த அழகியும் காரணமாக இருந்திருக்கிறாள். நம் நாயகனையும் சொர்கத்துக்கு வழியனுப்பும் நாள் வருகிறது. ஏனோ அவளுக்கு விருப்பமில்லாமல் அண்ணனோடு மல்லுகட்டுகிறாள். க்ளைமாக்ஸ்!

இப்படியெல்லாம் நடக்குமா என யோசிக்க வைத்தாலும், டிஜிடல் புரட்சி நடக்கிற இந்த வேலைக்கு ஏற்ற விழிப்புணர்வு செய்தி இது. இணையம் எனும் எண்ணற்ற சாத்தியங்கள் நிறைந்த கறுப்பும் கலரும் நிறைந்த உலகில் ஏராளமான நாசக்கார பட்டன்களும் உண்டு. தவறுதலாக எதோ ஒன்றை அழுத்தித் தொலைத்துவிட்டால்? அதுதான் பிரெஞ்சு இயக்குனர் ஜில்ஸ் மர்சந்த் இயக்கிய 'பிளாக் ஹெவன்' படத்தின் திரைக்கதை. கேன் திரைப்பட விழாவில் நள்ளிரவுக் காட்சியாக திரையிடப்பட்டு, பல பேரை சீட் நுனிக்கு வரவைத்த டெக்னோ த்ரில்லர் இது!

வள்ளி    

Saturday, March 5, 2011

இன்றும் ஒரு தகவல்


டி.வி.சானலும், டி.ஆர்.பி. ரேட்டிங்கும்

டி.வி.சானல் எல்லாவற்றுக்குமே சுவாச மந்திரம் எதுவென்றால், அது டி.ஆர்.பி. ரேட்டிங்தான். இதை வைத்துதான் ஒரு சேனலின் வரவும், விளம்பரமும் நிர்ணயிக்கப்படுகின்றன. டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் என்பதன் சுருக்கமே டி.ஆர்.பி. என்பது.

டி.ஆர்.பி. ஏற ஏற விளம்பரக்கட்டணம் எகிறும். உதாரணமாக ஆறரைக் கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட 650 வீடுகள் மட்டும் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகள் எல்லாவற்றிலும் 'டேம் பாக்ஸ்' (Television Audience Measurement - TAM) என்ற ஒரு கருவியை பொருத்திவிடுவார்கள். 

இப்படியொரு கருவி பொருத்தப்பட்டிருப்பது பெரும்பாலும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கே தெரிவதில்லை. அந்த வீட்டில் இருக்கும் டி.வி யை ஆன் செய்தவுடன் 'டேம் பாக்ஸ்' ஆன் ஆகிவிடும். அவர்கள் எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாவற்றையும் விலாவாரியாக பதிந்துவிடும்.

வாரத்துக்கு ஒருமுறை இந்த டேம் பாக்சை எடுத்து பதிவான தகவல்களை எல்லாம் சேகரிப்பார்கள். இந்த 650 டேம் பாக்ஸ்களில் பதிவான தகவல்களை அப்படியே ஆறரை கோடி மக்களுக்கான தகவலாக மாற்றுவார்கள். அதுதான் டி.ஆர்.பி. 

ஒளிபரப்பாகும் நேரத்தைப் பொறுத்து நிகழ்ச்சிகள் இவ்வளவு டி.ஆர்.பி. பெற வேண்டும் என்ற விஷயத்தை எல்லாம் சேனல்கள் ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கும். அந்த ரேட்டிங்கை விட சற்று குறைந்தாலும், சீரியலின் கதை மாறும், டைரக்டர்கள் மாறுவார்கள், கேரக்டர் மாறும். சில சமயம் நிகழ்ச்சியே மாறிவிடும்.

இதனால்தான் சீரியல்களில் திடீர் திடீரென்று கிளைக் கதைகள் தோன்றும். ரியாலிட்டி ஷோக்களுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங் கூடுவதால் எல்லா சேனல்களும் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களை கொடுக்கத் தொடங்கியிருந்தன. கோபம், சண்டை, அழுகை போன்றவை வரும்போது டி.ஆர்.பி சர்ரென்று ஏறும்.

டான்ஸ் ப்ரோகிராமிலும் பாட்டுப்போட்டியிலும் போட்டியாளர்கள் நீக்கப்பட்டதும் ஏங்கி ஏங்கி அழுவார்கள். அவர்கள் குடும்பம் அழும். நண்பர்கள், தோழிகள் என்று எல்லோரும் கண்ணீர் சிந்துவார்கள். இந்த அழுகை எல்லாமே டி.ஆர்.பி. க்காகத்தான்.

தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் ஒளிபரப்பாகும் ரஜினி, கமல் படங்களுக்கும் டி.ஆர்.பி. ரேட்டிங் கூடும். இதை வைத்தே விளம்பர காசை பார்த்துவிடுவார்கள், சேனல்காரர்கள்.

ஆனால் தமிழின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் கூட தொடாத ரேட்டிங் உயரத்தை ஒரு வெளிநாட்டுப்படம் தொட்டது. எல்லா சேனல்களுமே மூக்கின் மீது விரல் வைத்து ஆச்சர்யப்பட வைத்த படம் 'டைட்டானிக்', இது தமிழில் ஒளிபரப்பப்பட்ட போது தமிழக வீடுகள் எல்லாவற்றிலும் அந்த படம்தான் ஓடிக் கொண்டிருந்தது. தமிழக டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயங்களில் இது குறிப்பிடத்தக்கது.                        

Thursday, March 3, 2011

சீ.வீ.கே.சிவஞானத்தின் கருத்திற்கு சுரேஷ் எம்பி விளக்கம்!

தமிழ் மக்களின் விடிவிற்காக ஒரே அணியில் செயற்படுவதே இன்றைய காலத்தின் தேவை. இதனைத் தவற விட்டால், அரச ஆதரவுடனும், பல கோடி பணத்துடனும் இன்னும் பலர் எம் மத்தியில் ஊடுருவுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சி சார்பில் சீ.வீ.கே சிவஞானம் பத்திரிகையாளர் மத்தியில் தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் என்ற வகையிலும், அதன் இணைச் செயலர்களில் ஒருவன் என்ற வகையிலும் திரு.சி.வீ.கே.சிவஞானம் அவர்கள் 27-02-2011 அன்று நிகழ்த்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்த தவறான கருத்துகளுக்கு விளக்கமளிக்க வேண்டியது எனது கடமையெனக் கருதுகிறேன்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியாக மாறினால் அது தமிழரசுக்கட்சியைச் சிறுமைப்படுத்தித் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றையே புதைக்கும் நடவடிக்கையாக அமைந்துவிடும்' என்பது திரு.சி.வீ.கே.சிவஞானத்தின் பேட்டியின் சாராம்சமாக உள்ளது. திரு.சிவஞானம் 2010ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் இணைந்து துணைச் செயலாளராக வருவதற்கு முன்பாக இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழ்க்காங்கிரசின் சார்பாக போட்டி இட்டதோடு, அக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். 2009ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபைத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடுமாறு நாம் வலியுறுத்தியபோது பாதுகாப்புக் காரணங்களை முன்நிறுத்தி அதனை மறுத்தவர். அதன் பின்பு 2010 இல் தமிழரசுக்கட்சியில் இணைந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர். இவர்தான் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்தால் தமிழரசுக்கட்சியின் வரலாறு புதைக்கப்பட்டு விடும் என்று அங்கலாய்க்கிறார். இக்கட்டான நேரத்தில் கட்சியை காப்பாற்ற முன்வராதவர், வரலாறு தொலைந்துவிடும் என்று கூறுவது நகைப்புக்கிடமானது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த தந்தை செல்வா அவர்கள் அக் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால், தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 1976 இல் காலத்தின் கட்டாயம் கருதி தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றை இணைத்துத் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார். அது இனப்பிரச்சினை தொடர்பாகக் கூட்டாகச் செயற்பட்டு முடிவுகளை எடுத்தது. அது ஓர் பதிவு செய்யப்பட்ட கட்சியாகவே செயற்பட்டுவந்தது. சௌமிய மூர்த்தி தொண்டமான் தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு வெளியேறினாலும் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி ஆகியன தமிழர் விடுதலைக் கூட்டணி என்றே செயற்பட்டு வந்தது. 2003 ஆம் ஆண்டு கூட்டணிக்குள் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகளால் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயர், சின்னம் யாவும் திரு.ஆனந்தசங்கரி அவர்களிடம் போனதால்தான் தமிழரசுக்கட்சி மீண்டும் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தந்தை செல்வாவும், தலைவர் அமிர்தலிங்கமும் 25 வருடங்கள் தமிழரசுக்கட்சியின் வரலாற்றைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள் என்று யாராவது கூறமுடியுமா? அது காலத்தின் தேவை, பரிணாம வளர்ச்சி! வரலாறுகளை யாரும் குழி தோண்டிப் புதைத்துவிட முடியாது. உலகத்தின் பல்வேறு மையங்களில் இவை பாதுகாக்கப்படுகின்றன.

Wednesday, March 2, 2011

மற்றவர்க்கு நம் மனதில் என்ன இடம்?

மனித வாழ்க்கை குறித்தும் கௌரவமான உயிர்வாழ்வு குறித்தும் மிகக் கடுமையான சிக்கல்களும், நுண்மையான புரிதல்களும் உலக அளவில் உருவாகியுள்ளன. ஆனால் இவை பற்றிய எந்த அக்கறையுமற்று, வெறுமனே வாயிலும் வயிற்றிலுமடித்துப் பிலாக்கணம் வைப்பதற்கப்பால் எதையும் நகர்த்துவதற்கு வகைதெரியாதவர்களெல்லாம் தலைமைகளாக உலா வருவதை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறோம்.

உணர்ச்சிகரமான முறையில், ‘மற்றவர்களால் நமக்கு எப்போதும் ஆபத்து’ என்கிற அச்சமூட்டுதல் மட்டுமே ஒரே அரசியல் செயற்பாடாக, நம்மை விழுங்கப் பூதம் ஒன்று முன்னால் காத்திருக்கும் கதையைச் சொல்லியபடி கையறுநிலையில் சேர்ந்து கதறுவதையே தங்களது அரசியலுக்கு மூலதனமாக்கிக் கொள்ளும் வெறும் சப்பட்டைகளை நெல்லெனச் சேமித்து வீட்டினுள் வைத்திருக்கிறோம். தமிழ்மக்கள் ஒன்றுபட்டு வாக்களிப்பது ஒன்று போதும், சமூகம் காப்பாற்றப்பட்டுவிடும் என்ற உணர்ச்சிகரப் பொய்யால் திரும்பத் திரும்ப ஏமாறக்கூடிய சமூகமாகவே நாம் இன்னுமிருக்கிறோம்.

மிகப் பிளவுபட்ட ஏற்றத்தாழ்வு காண்பிக்கும் சமூகமாக, சமத்துவம் சகோதரத்துவம் போன்றவற்றை உள்ளே செயற்படுத்த முடியாத சமூகமாக இருந்துகொண்டே வெளியே இவற்றை எதிர்பார்க்கும் வாயளவுப் பிரலாபங்களுடன் திருப்திப்படுவோராக இருக்கிறோம். வெகுமக்களை முன்னிலைப்படுத்துவதை – சமூக உணர்வை தொலைத்துவிட்டு பகைவெறுப்பு அரசியலுக்கும், திட்டுதலும் விரக்திப் புலம்பலுமே விடுதலை நோக்கி நகரப் போதுமானது என்ற மாயைக்கும் பழகிவிட்டோம். மற்றவர்களை நம்பவோ, பிறருடன் ஒட்டவோ ஒழுகவோ பேசவோ முடியாத, விலக்குதலும் சுயபெருமைகளுடன் விலகி உள்சுருங்குதலுமான நோய்த்தன்மை கொண்ட சமூகமாகி விட்டோம்.