Friday, February 25, 2011

இன்றும் ஒரு தகவல்

உளவாளியின் மொழி

உளவாளியாக எதிரியின் இடத்துக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்று உளவறிவதைவிட, ரகசியமாக தெரிந்த தகவலை பத்திரமாக கொண்டு சேர்ப்பது தான் மிகவும் கடினமான வேலை. இடையில் யாராவது ஒட்டுக் கேட்டாலும், செய்தி வேறு ஒருவர் கையில் கிடைத்துவிட்டாலும் என்ன தகவல் என்று தெரிந்து கொள்ள முடியாத மொழியில் அது இருக்கும். தகவல் தருபவர், தகவல் பெறுபவர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய மொழி. இத்தகைய மொழிக்குத்தான் 'கிரிப்டோகிராப்பி' என்று பெயர்.

இந்த மொழி கி.மு. 1900 ம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் இருந்திருக்கிறது. எகிப்தில் உள்ள பிரமிடுகள் ஒன்றில் செதுக்கப்பட்டிருந்த ஒரு வாக்கியம்தான் கிரிப்டோகிராப்பியின் ஆரம்பம். முன்பெல்லாம் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் மிகமிக குறைவு. அதனால் ரகசிய தகவல்களை கூட எல்லோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் நேரடியாகவே எழுதி அனுப்பினர்.

படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபின் விடுகதைகள், கவிதைகள் போன்றவற்றின் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டன. அதன்பின் எழுத்துக்களை முன் -பின்னுமாக மாற்றி அமைத்து தகவல் அனுப்பினார்கள். உதாரணமாக DE-VI என்ற பெயரை EF-WJ என்று அனுப்புவார்கள். இது வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் தகவல் பெறுபவர்களுக்கு தெரியும். எல்லா எழுத்துகளுக்கும் முந்தைய எழுத்துகளை எழுதிக் கொண்டே வந்தால் அவர்கள் சொல்லும் தகவல் விளங்கிவிடும்.

ஜூலியஸ் சீசர் அந்த காலத்திலேயே ஒரு முறையை வைத்திருந்தார். அதற்கு 'சீசர் சைபர்' என்று பெயர். போர்க்களத்தில் இருக்கும் தளபதிகளுக்கு வார்த்தைகளை களைத்துப் போட்டு கடிதம் அனுப்புவார். இன்னொரு காவலாளி மூலம் அதை எப்படி படிக்க வேண்டும் என்ற குறிப்பை கொடுத்து அனுப்புவார். இரண்டு பேரும் எதிரிகள் கையில் ஒரே நேரத்தில் சிக்கினால் மட்டுமே எதிரியால் சீசர் என்ன செய்தி கொடுத்து அனுப்பினார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஹெரோ டோட்டஸ் என்பவர் வேறு ஒரு முறையை பயன்படுத்தினார். இவர் சொல்ல விரும்பும் செய்தியை ஓர் அடிமையின் தலையில் பச்சை குத்திவிடுவார். முடி வளர்ந்தபின்தான் அந்த செய்தியை சொல்லக் கிளம்புவான். தகவலை பெறுபவர் அடிமையை மொட்டை அடித்து தகவலை படித்துக் கொள்ள வேண்டும்.

நவீன காலத்தில் கம்ப்யூட்டர் வந்தபின் தகவல்களை மறைப்பதும், கடத்துவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. சரியான பாஸ்வேர்ட், அல்லது கீ வேர்ட் இருந்தால்தான் தகவலை திறக்கவே முடியும். இப்போதெல்லாம் டிஜிட்டல் கையெழுத்து, கண்ணுக்கு தெரியாத இன்விசிபில் இங்க் என்று எவ்வளவோ வந்துவிட்டன.

இதே கிரிப்டோகிராபி முறையில்தான் ஏ.டி.எம். மெஷின்கள், இ-மெயில் பாஸ்வேர்டுகள் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு ஏ.டி.எம். கார்டோ, இ-மெயில் அக்கவுண்டோ வைத்திருந்தால் நாமும் ஓர் உளவாளிதான். நமது ரகசியங்களை பாதுகாக்கும் உளவாளி. அவ்வளவுதான்.    
நன்றி தினத்தந்தி 
                 

ஹாலிவுட் டிரெய்லர்

கரையும் மனிதர்கள்

தூக்க கலக்கத்தில் கதை கேட்கும் தயாரிப்பாளரை அசத்த வேண்டுமென்றால் அவரது உறக்கம் கலையும் அளவுக்கு ஒரு ஒன் லைனை சொல்ல வேண்டும். அப்படித்தான் கதாசிரியர் அந்தோனி ஜாஸ் வின்ஸ்கி ஒரு லைனை சொன்னார். துள்ளிக் குதித்த நார்டன், டோவ், செலினி ஆகிய மூவரும் ஆன் தி ஸ்பாட் படம் தயாரிக்க முன்வந்தார்கள். 'வேனிஷிங் ஆன் செவன்த் ஸ்ட்ரீட்' ஹாலிவுட் படம் உருவான விதம் இதுதான்.

தயாரிப்பாளரான மூவரும் நயா பைசா பாக்கியில்லாமல் சுரண்டி கொடுத்த தொகை வெறும் 10 மில்லியன் டாலர் மட்டுமே. வெறும் டிபனுக்குக்காக மட்டுமே பெரும் பாலான ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் செலவிடும் இந்தத் தொகையை வைத்துதான் மொத்த படத்தையும் இயக்குனர் பிராட் ஆன்டர்சன் எடுத்திருக்கிறார். படப்பிடிப்பு நடந்ததும் 20 நாட்கள்தான். நான்கே நான்கு கதாபாத்திரங்கள் தான் படம் முழுக்க வருகிறார்கள். இப்படி ஷூட்டிங்கில் ஏகப்பட்ட சிக்கனத்தை கடைபிடித்தவர்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்கு மட்டும் பணத்தை தண்ணீராக செலவழித்திருக்கிறார்கள்.

காரணம் இந்தக் கதைக்கு கதாபாத்திரங்கள் அவசியமில்லை. ஊறுகாய் அளவுக்கு இருந்தால் போதும். மெயின் டிஷ், ஒன் அண்ட் ஒன்லி சிஜி ஒர்க்.

ரைட்.... அப்படியென்ன பிரமாதமான கதை?

இரவு வரக் கூடாது. வரவே கூடாது. அப்படி வந்தால் மனிதர்கள் கரைந்து விடுகிறார்கள். அவர்கள் அணிதிருக்கும் உடை மட்டும் அந்தந்த இடத்தில் அப்படி அப்படியே குவியல் குவியலாக இருக்கிறது. பயணித்த கார்கள், இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை ஆங்காங்கே சாலையில் அப்படி அப்படியே நின்றுவிடுகின்றன.

வெளிச்சம்... சிறிது வெளிச்சம் மட்டுமே மனிதர்களை கரையாமல் தடுக்கும். ஆனால், இரவில் மின்சாரம் இல்லை. பேட்டரி வேலை செய்யவில்லை. பகல் பொழுது சுருங்கிக் கொண்டே வருகிறது.

இதுதான் உலகம் முழுக்க நடக்கிறது. எதனால் மனிதர்கள் இரவில் இப்படி கரைகிறார்கள்? தெரியவில்லை. யார் இப்படி செய்கிறார்கள்? தெரியவில்லை. கண்டறிய முடியவில்லை. இதை தடுப்பது எப்படி? நோ ஐடியா...

கெட் ஐடியா, என மூளையை கசக்கி நான்கு கதாபாத்திரங்கள் கண்டறியும் உண்மைதான் படம். அதில் ஒருவர் தொலைகாட்சி நிருபர். அடுத்தவர் தியேட்டர் ஆபரேட்டர். மூன்றாவது ஓர் இளம் பெண். நான்காவது, ஓர் இளைஞன். தாய், தந்தையை இயற்கைப் பேரழிவில் பறிகொடுத்து விட்டு தன் வயிற்றுப்பாட்டுக்காக பார் ஒன்றில் வேலைப் பார்ப்பவன்.

இருட்டுதான் மனிதர்கள் கரைய காரணம் என வெவ்வேறு திக்கில் அனுபவபூர்வமாக உணரும் மூவர், ஜெனரேட்டர் உதவியுடன் டெடராய்ட் நகரின் 7 வது தெருவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாரில் அடைக்கலமாகிறார்கள். அந்த பாரில் சர்வீஸ் பாயாக இருக்கும் இளைஞன் அவர்களுடன் இணைகிறான். இந்த நால்வரும் தொலைக்காட்சி நிருபரின் தலைமையில் எப்படி தப்பிக்கிறார்கள், உலகை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை தடதடக்கும் திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

ஹேடன் கிறிஸ்டன்சென், ஜான் லேக்யூ செமோ, தன்டி நியூட்டன், ஜேக்கப் லேடிமோர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் 'தி ஐ' 'ப்ளாஷ் ஷேட்ஸ்' ஆகிய முந்தைய சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களின் சாயல் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். என்றாலும் 'தி மெஷினிஸ்ட்' என்ற பம்பர் ஹிட் படத்தின் இயக்குனரான பிராட் ஆன்டர்சன், இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் என்பதால், பார்த்த மாதிரி இருந்தாலும் பார்க்கும் படி இப்படம் இருக்கும் என நம்பலாம்.

யார் கண்டது, சின்ன பட்ஜெட்டில் கட்டிப்போடும் சயின்ஸ் பிக்ஷன் திர்ல்லரை எப்படி எடுப்பது என்பதற்கும் ஒருவேளை இந்த 'வேனிஷிங் ஆன் செவன்த் ஸ்ட்ரீட்' பாடமாக அமையலாம்.                              

Tuesday, February 22, 2011

'மேரியிடம் ஒரு ஆட்டுக்குட்டி...' பாடல்!

மழலையர் பள்ளிப் பாடல்களில் பிரபலமான ஒன்று, 'மேரியிடம் ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது' ('மேரி ஹாட் எ லிட்டில் லாம்ப்'). 'கோடீஸ் லேடீஸ் மேகஸின்' என்ற பத்திரிகையின் ஆசிரியையாக இருந்தவர் சாரா ஹேல். அவர்தான் 1830-ம் ஆண்டு இப்பாடலை எழுதினார்.

மேரி டைலர் என்ற சிறுமியின் வளர்ப்புப் பிராணியான ஆட்டுக்குட்டி அவளைப் பின்தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதைக் கண்ட சாரா ஹேல் இப்பாட்டை எழுதினார். அக்காலத்தில் வளர்ப்புப் பிராணியை பள்ளிக்குக் கொண்டு செல்வது சட்டதிட்டத்துக்கு எதிரானது.

இப்பாடல் உருவான 50 ஆண்டுகளுக்குப் பின் தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுபிடித்த 'போனோகிராப்'பில் பேசும்போது முதலில் கூறியது இப்பாட்டைத்தான். எடிசன் பதிவு செய்த பிறகு இந்தப் பாட்டு மிகவும் பிரபலமாகி விட்டது.

Monday, February 21, 2011

மாவீரர்களும்… மாமனிதர்களும்… மக்கள் பாடழிவும்

இறந்தவர்களைப் பற்றி உயர்வாகப் பேசுவதும், அவர்களது நல்ல பக்கங்களைப் பற்றி மட்டுமே நினைவுபடுத்திக் கொண்டிருப்பதும் நாம் மரபாய்க் கடைப்பிடித்து வரும் பழக்கங்களிலொன்று. இதைப் பயன்படுத்தி, மாண்ட ‘மாவீரர்கள்’ பற்றி உணர்ச்சிகரமாக நாலு வார்த்தை பேசி மக்களை ‘உச்சு’க் கொட்ட வைத்து வாக்குகளை அள்ளிவிட்டால் போதும் என்ற முயற்சியில் இப்போதும் சிலர் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது.

கங்கை கொண்டு கடாரம் வெல்லவும் கடல் கடந்து புலிக்கொடி பறக்கவும் ஆயிரமாயிரமாய் மக்களை மடியவிட்டு வளம்நிறை ஊர்களை எரியவிட்ட அதே நினைப்புகளிலேயே இப்போதும் வாழ்வை மறந்துவிட்டு மக்களைப் பொங்கியழியச் சொல்வது தவிர வேறு வழி தெரியவில்லை இவர்களுக்கு. இன்றைய உலகை ஒட்டி ஒரு வாழ்வுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. உணர்ச்சிகரக் கிறக்கத்தில் எதார்த்தம் மறக்கடித்த மக்களின் கழுத்துக்கு ‘தமிழ்ப் பெருமை’ நுகத்தடியை மாட்டிவிடுவதிலேயே இருக்கிறார்கள். இவ்வளவு கஷ்டங்களைச் சுமத்தி நம்மைப் பாடுகேடாய் வீழ்த்திய பிறகும் ‘மாவீர’ ஏமாற்றை விடுவதாயில்லை இவர்கள்.

எதிர்த்தரப்பு மீதான வெறுப்பையும் ஆக்ரோசத்தையும் பகையுணர்ச்சியையும் வற்ற விடாமல் பார்த்துக் கொள்வதன் மூலம், நம்முடைய எந்தத் தவறுகளால் சமூகத்திற்கு இந்தப் பாடழிவு உண்டானது என்பதைப் பார்க்கவோ பேசவோ விடாமல் தந்திரமாகத் தடுத்து வருகிறார்கள். நாம் விட்ட பிழைகளையும், நம்மை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற முட்டாள்த்தனமான பாசிச வழிமுறைகளையும் பற்றி எந்தச் சுயவிமர்சனமும் செய்துகொள்ளாமல், இப்போதும் மக்களைக் கருக்கும் பகைவெறுப்பு நெருப்பை மூட்டி மூட்டியே குளிர்காய்ந்து வருகிறார்கள்.

நாம் நீதியும் நியாயமுமான, பயங்கரவாதத்தையும் பாசிசத்தையும் நமக்குள் அண்ட விடாத போராட்ட வழிமுறைகளையேதான் கடைசிவரை பின்பற்றினோமா? மக்களை அழித்து முடித்ததில் எதிரிக்கு மட்டுமே பொறுப்பிருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் முழுக்க முழுக்க உண்மையேதான் சொல்கிறார்களா? அப்படியானால் எதிரிகளாகப் பார்த்துத் திருந்தாத வரை (அல்லது யாரும் வந்து திருத்தாத வரை) நாம் தொடர்ந்து அழிந்து கொண்டும், சமூகத்தை முன்னகர விடாமல் தடுத்துக் கொண்டும் இருக்க வேண்டியதுதானா? எதிரிகளைப் பிரமாண்டப்படுத்திக் கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பதைத் தவிர, நம் வாழ்க்கையைச் செப்பனிடவும் மேம்படச் செய்யவும் நமக்கு வழிகளே இல்லையா?

Thursday, February 17, 2011

என்ன மாதிரியான ஒரு சமூகம் இது!


மொழி, அரசியல் ஆகியனவற்றுக்கு அடுத்தபடியாக தமிழர்களின் உணர்வுகளைத் தீர்மானிக்கின்ற ஒன்றாக சினிமாவைச் சொல்ல முடியும் போலிருக்கிறது. காட்சிப் பிம்பங்களால் பரந்துபட்ட மக்களையும் இலகுவாக வசீகரித்துவிடுகிற சக்தியுடன் திகழ்கிறது சினிமா. கேளிக்கை தந்து கவருவதாகத் தோன்றும் அது, தனது மாயத்தன்மையோடு மனங்களினுள் புகுந்து அவற்றைக் கூர்மைப்படுத்தவோ மழுங்கடிக்கவோ செய்கிறது. இவ்வாறு மக்கள் மனங்களைக் கட்டமைப்பதிலும் சினிமா வலுவான பங்காற்றுகிறது என்றே தோன்றுகிறது.

தமிழ்மக்கள் என்றில்லை, எல்லா சமூக மனிதர்களுக்கும் இந்தத் தாக்கம் உண்டு. இலங்கையிலும் கூட நடிகர் விஜயகுமாரணதுங்க கொல்லப்படாமலிருந்தால் அவர் மிக எளிதாக இந்த நாட்டின் சக்திமிக்க தலைவராகியிருக்க முடியும் என்பதில் ஐயமில்லை. கடந்த தேர்தலிலும் கம்பஹா மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் பழுத்த தலைவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு சினிமாத்துறை சார்ந்த ஒருவரே மக்களின் பேராதரவைப் பெற்றிருப்பதையும் கவனிக்கலாம். வெகுமக்களிடம் சினிமா செலுத்துகிற தாக்கம் புறக்கணிக்கக்கூடியது அல்ல.

“அது ஒரு விபத்தைப் போல நம்மைத் தாக்குகிறது. நம்மைச் சூழ்ந்திருக்கும் அமைதியை அது குலைத்து நமது நிலையை உணர வைக்கிறது. ஊடுருவி நம்மை மாற்றுகிறது” என்று ஒரு நல்ல புத்தகத்துக்கு காஃப்கா சொன்ன வரைவிலக்கணம் சினிமாவுக்கும் பொருந்துகிறது. புத்தகங்களைப் போலவே சினிமாவும் நம்முடைய கருத்துக்களை வடிவமைத்து வருவதாகத் தோன்றுகிறது. தமிழ் வெகுஜன சிந்தனை என்பது தமிழ் சினிமாவின் தாக்கத்தில் உருவாகியிருப்பதற்கான கூறுகளை அவ்வப்போது கண்டு ஆச்சரியப்பட்டுக் கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.

Wednesday, February 16, 2011

இன்றும் ஒரு தகவல்

நிறம் தரும் பலன்

காதலர் தினத்தில் ஒவ்வொருவரும் அணியும் உடைக்கு ஒரு சங்கேத மொழி இருக்கிறது. தங்கள் உடை மூலம் அதை தெரியப்படுத்துவார்கள். அதேபோல் உங்களுக்கு பிடித்த கலரை சொன்னால் அதை வைத்து ஒரு ஜோதிடமே சொல்கிறார்கள்.

வெள்ளை
நிறத்தை விரும்புகிறவர்கள், இளமை விரும்பிகள். எல்லா செயலிலும் முழுமையாக எதிர்பார்பார்கள். ஆனால் அது நடக்காது. ஆழம் பார்த்து காலை விடுபவர்கள். அதனால் சாமான்யத்தில் ஏமாற மாட்டார்கள்.

சிவப்பு நிற விரும்பிகள் எப்போதும் ஆக்டீவாகவே இருப்பார்கள். வேகமாக செயல்படுவார்கள். இந்த கலர் பிடித்தவர்களுக்கு ஒரே வித வாழ்க்கை என்றால் கசப்பு. அதனால் துணைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இவர்களுக்கு அதிகமான மனவலிமை இருக்கும். அதுதான் இவர்களின் பலமும் பலவீனமும்.

பிங்க் நிறம் பிடித்தவர்கள் சரியான சுயநலவாதிகள். எப்போதும் தன்னை யாரவது கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்பவர்கள். இதற்காக பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பரிதாபமாக நடிப்பார்கள்.

மெரூன் நிறம் பிடித்தவர்கள் மெச்சூரிட்டி தெரிந்தவர்கள், வாழ்க்கையில் அடிபட்டு, படிக்கட்டில் ஏறி வந்தவர்களுக்கு மெரூன் பிடிக்கும். தனக்கு உதவி கிடைக்காததால் அனுபவித்த கஷ்டங்களை மற்றவர்களும் படக்கூடாது என்பதற்காக சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள்.

ஆரஞ்சு நிறம் விரும்பிகள் சுகவாசிகள். அவர்களுக்கு எப்போதும் சந்தோசம் வேண்டும். சந்தோஷத்துக்காக நிலை இல்லாமல் அலைவார்கள்.

மஞ்சள் நிறம் பிடித்தவர்கள் புத்திசாலிகளாகவும் கற்பனை வளம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சுதந்திரமாக செயல்பட்டால் சாதனை புரிவார்கள்.

பச்சை நிறம் பிடித்தவர்கள் மென்மையானவர்கள். அதே வேளையில் எப்போதும் நேர்மை தவற மாட்டார்கள். அன்பு தான் இவர்களின் ஆயுதம். அன்பு தான் இவர்களின் சாய்ஸ். அதனால் சுற்றிலும் இருப்பவர்கள் எப்போதும் துரோகம் செய்து கொண்டே இருப்பார்கள்.

கறுப்பு நிறம் பிடித்தவர்கள் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவார்கள். மற்றவர்களை சுலபமாக நண்பர்கள் ஆக்கிக் கொள்வார்கள். மரியாதை என்பது இவர்களுக்கு மரணம் போல அவர்கள் விரும்பாவிட்டாலும் தேடி வரும்.

லேவண்டர் நிறம் பிடித்தவர்கள் கலாச்சாரக் காவலர்கள். பழமை விரும்பிகள். புதுமையை ரசிக்க முடியாதவர்கள். ஏற்றுக் கொள்ள முடியாமல் தயங்குபவர்கள். கட்டம் போட்ட பேண்ட் இவர்களுக்கு அலர்ஜி. எண்ணம் எல்லாமே உயர்வாக இருக்கும். ஆனால் வேலை என்று வந்து விட்டால் விழுந்தடித்து ஓடுவார்கள். ஓடிப்போய் குறட்டை விட்டு தூங்குவார்கள். வேலைக்கும் இவர்களுக்கும் ஆகாது

இப்படி நிறங்களை வைத்து ஒருவரின் கேரக்டரை சொல்லி விட முடியும். கேரக்டருக்கு ஏற்றார் போல் மனித மனம் அந்த கலரை விரும்பும். வாழ்க்கை முழுவதும் ஒரே கலர்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அவ்வபோது பிடித்த கலர்களின் பட்டியல் மாறும். அதற்கு ஏற்றாற்போல் அவர்களின் கேரக்டர்களும் மாறும் என்று அடித்துச் சொல்கிறார்கள், நிற ஜோதிடர்கள்.                   

Tuesday, February 15, 2011

ரியல் ஜோடி நம்பர் 1


மானாட மயிலாட, ஜோடி நம்பர் 1யில் இப்படி ஆடுனா TRP எங்கையோ போய்டும். ஆடுவாங்களா?

Saturday, February 12, 2011

மொபைல் மூலம் கம்ப்யூடரை இயக்கலாம்

தற்போதைய மொபைல் போன்கள் அனைத்திலும் ப்ளு-டூத் வசதி இருப்பதாக விளம்பரம் செய்திருப்பார்கள். அதென்ன ப்ளு-டூத்?

முன்னொரு காலத்தில் ப்ளு-டூத் என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு பற்கள் நீலக்கலரில் இருந்தன. இதனால் தான் அந்த பெயர். அந்தக்காலத்தில் சிதறிக்கிடந்த ஸ்காண்டி நேவிய நாடுகளையெல்லாம் அவன் ஒன்றாக சேர்த்து, ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தானாம். அதனால் தான் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையெல்லாம் அவன் மன்னனின் பெயரை வைத்து விட்டனர். பெயர் வித்தியாசமாக இருந்ததும் ஒரு காரணம்.

தற்போதைய மொபைலை மூன்று தலைமுறையாக பிரிக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் அமெரிக்கா கண்டுபிடித்த மொபைல் போன் அனலாக் முறையில் வேலை செய்தது. இது முதல் தலை முறை தொழில் நுட்பம். அதாவது 1ஜி. (முதல் ஜெனரேஷன்). இப்போது நாம் பயன்படுத்துவது 2ஜி என்ற இரண்டாம் தலை முறை தொழில் நுட்பம். இது டிஜிட்டல் இணைப்பு முறையாகும். இதன்மூலம் பேச்சு மட்டுமின்றி பாடல்கள், படங்கள் போன்றவற்றை அனுப்பி பெற முடிகிறது. இதற்கு அடுத்தடுத்து 3ஜி எனப்படும் 3ம் தலைமுறை தொழில்நுட்பம். இதன்மூலம் முகம்பார்த்து பேசுவது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.

ப்ளு-டூத் என்பது 2.4 கிலோ ஹெர்ட்ஸ் ரேடியோ அலைகளை பயன்படுத்தி 720 கிலோ பிட் வேகத்தில் பரிமாற்றம் நடக்கிறது. தற்போது பரவலாக மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் இந்த ப்ளு-டூத் வசதி மூலம் கம்ப்யூட்டர்கள், கீ போர்டுகள், பிரிண்டர்கள், மியுசிக் சிஸ்டம், வாசிங் மெஷின்கள், மைக்ரோ வேவ் ஓவன் உள்ளிட்ட எந்த பொருளையும் ப்ளு-டூத் வசதி மூலம் எங்கிருந்தும் இயக்க முடியும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு டெக்னிக்கல் முகவரி அதாவது ஐ.டி. கொடுக்க வேண்டும். இவற்றை இயக்குவதில் ரகசியமும், பாதுகாப்பும் கொடுக்கப்படும். இந்த தொழில் நுட்பத்தை முதன்முதலாக பயன்படுத்தியது, எரிக்சன் என்ற ஐரோப்பிய நிறுவனம்.

பின்னர் ஐ.பி.எம்., இன்டெல், மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து கொண்டன. ப்ளு-டூத் தொழில் நுட்பத்தால் எதிர்காலத்தில் கேபிளே இல்லாமல் அனைத்தும் காற்றில் இயங்கும் நிலை வரலாம்.                       

Friday, February 11, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

சுண்டல் பொட்டலத்திலிருந்த செய்தி துணுக்கை கதாசிரியர் கிறிஸ்டோபர் பெர்டோலினி பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் வசிப்பது அமெரிக்காவில், அங்கு சுண்டல் விற்கப்படுகிறதா... அப்படியே விற்கப்பட்டாலும் பழைய பேப்பரில் பொட்டலம் கட்டி விற்கப்படுகிறதா... அதுவும் 1942ம் வருடத்து செய்தித்தாள் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறதா...? என்றெல்லாம் நமக்கு சர்வ நிச்சயமாக தெரியாது. சரி பார்க்க ப்ளைட் பிடித்து அமேரிக்கா செல்லவும் நமக்கு வசதியில்லை.

எனவே இந்த சாத்தியத்தை ஓரம் கட்டி விடுவோம். பதிலாக இணையத்தில் பொழுது போகாமல் கிறிஸ்டோபர் மேய்ந்தபோது, அவர் கண்களில் 1942ம் வருடத்து செய்தி தட்டுப்பட்டிருக்கலாம் என்பதற்கு சாத்தியமிருக்கிறது.

இந்த சாத்தியம்தான் 'பேட்டல்; லாஸ் ஏஞ்சல்ஸ்' திரைப்படம் உருவாகக் காரணம். இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில், அமெரிக்காவிலுள்ள பேர்ல் ஹார்பர் (துறைமுகம்), ஜப்பானிய குண்டுவீச்சுக்கு இலக்கானது. இந்த குண்டுவீச்சு ஜப்பானிய நீர்மூழ்கி கப்பலால் நிகழ்த்தப்பட்டது என்பதை கண்டறிய அமெரிக்க அரசுக்கு சில நாட்கள் பிடித்தது. அந்த சில நாட்களுக்குள் வெளியான செய்திதாள்களில் குண்டு போட்டது யார் என்பது குறித்து ஏராளமான - தாராளமான கதைகள் உலா வந்தன.

அவற்றில் ஒன்றுதான், 'வேற்று கிரக மனிதர்கள் இக்காரியத்தை செய்திருக்கிறார்களா?' என்ற செய்தித் துணுக்கு. எதேச்சையாக படுத்தப்படி இதை வாசித்த கிறிஸ்டோபர், சட்டென எழுந்து அமர்ந்தார். மடமடவென ஒரு கதையை எழுதினர். அதுதான் இந்த மாதம் வெளியாகப் போகும் 'பேட்டல்; லாஸ் ஏஞ்சல்ஸ்' திரைப்படம்.

பியூனஸ் அயர்ஸ், பிரான்ஸ், சியோல் மற்றும் ஜெர்மனி, சீனாவிலுள்ள பல நகரங்கள் அடுத்தடுத்து அழிகின்றன. என்ன காரணம்? யாருக்கும் தெரியவில்லை. ஏன் அழிகிறது? விடை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நகரங்களுமே சீட்டுக் கட்டு உதிர்வதுபோல் உதிர்ந்து உருத்தெரியாமல் அழிந்துவிடுகின்றன. எஞ்சி இருப்பது லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமே. விரைவில் இந்நகரமும் தாக்கப்படலாம், அழியலாம் என அனைவருக்குமே புரிகிறது.

எப்பாடு பட்டாவது லாஸ் எஞ்சலெஸ்ஸையாவது காப்பாற்றலாம் என முடிவு செய்கிறார்கள். அதற்கு முதலில் யார், எப்படி, ஏன் தாக்குகிறார்கள் என கண்டறிய வேண்டும். அப்பொழுதுதான் அழிவை தடுக்கவும், அழிப்பவர்களை தகர்க்கவும் முடியும்.

இந்த அசைன்மெண்டை கப்பல் படைத்தளபதி ஒருவரிடம் ஒப்படைக்கிறார்கள். நீர் மூழ்கி கப்பலின் துணையுடனும், தனது குழுவினரின் ஒத்துழைப்புடனும், அவர் எப்படி அந்த வேற்றுகிரக மனிதர்களை வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை காப்பாற்றுகிறார் என்பதுதான் மிச்ச சொச்ச கதை.

படித்ததுமே படத்தில் கிராபிக்ஸ், ஜுகல்பந்தியை நடத்தியிருக்குமே என்ற ஆர்வம் ஏற்படும். சந்தேகமே வேண்டாம். படத்தின் முக்காலே மூன்று சதவீத பட்ஜெட், கிராபிக்ஸ் வேலைக்காகத்தான் செலவளிக்கப்பட்டிருக்கிறது.

இயக்கியிருப்பவர், தென்னப்பிரிக்காவில் பிறந்த ஜொனார்த்தன் லீபெஸ்மேன். நடிப்புக்காக கோல்டன் க்ளோப் விருதை பெற்றிருக்கும் ஆரோன் என்கார்ட், இப்படத்தில் கப்பல் படைத்தளபதியாக நடித்திருக்கிறார்.

சுவாரஸ்யமான விஷயம் ஒன்று இருக்கிறது. எந்த செய்தித் துணுக்கு கதாசிரியர் கிறிஸ்டோபரை ஈர்த்ததோ, அதே செய்தித் துணுக்கு 1979ல் இன்னொருவரையும் வசீகரித்தது. அச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு '1941' என்ற பெயரில் ஒரு காமெடி படத்தை இயக்கவும் செய்தார். ஆனால், படம் ஊத்திக்கொண்டது. இந்த விஷயம் கிறிஸ்டோபருக்கு தெரியும். என்றாலும் துநிந்துபோன 'பேட்டல்; லாஸ் ஏஞ்சல்ஸ்' படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.

கிறிஸ்டோபர் கதை எழுதியிருக்கும் இப்படம் வெற்றி பெற்றால், '1941' என்ற டப்பா படத்தை தந்தவரை விட இவர் பெரிய ஆளாக ஹாலிவுட்டில் மதிக்கப்படுகிறார்.

காரணம், 1979ம் ஆண்டு, '1941' என்ற படத்தை இயக்கியவர் வேறு யாருமில்லை... உலக கமர்ஷியல் படங்களில் பிதாமகனாக ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்!

கே.ஏன்.சிவராமன்

Thursday, February 10, 2011

'கறுப்புப் பெட்டி'யின் நிறம் ஆரஞ்சு!

விமான விபத்து நடைபெற்றால் முதலில் 'கறுப்புப் பெட்டி'யைத்தான் தேடுவார்கள். 'கறுப்புப் பெட்டி' என்றால் என்ன? அதற்கும் விமானத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒவ்வொரு விமானத்திலும் இந்தக் 'கறுப்புப் பெட்டி' கட்டாயம் இருக்கும். ஆனால் இந்தப் பெட்டிக்கும், விமானம் பறப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததால் இதற்கு 'கறுப்புப் பெட்டி' (Black Box) என்று பெயர்.

இந்தப் பெட்டியை விமானிகள் இருக்கும் 'காக் பிட்' பகுதியில் பொருத்தியிருப்பார்கள். இதில் இருக்கும் ரெக்கார்டரில், விமானிகள் பேசுவது எல்லாம் பதிவாகும். அது தவிர விமானம் பறக்கும் வேகம், எந்தத் திசையில் பறந்துகொண்டிருக்கிறது என்பன போன்ற முக்கியமான விவரங்கள் பதிவாகும்.

'கறுப்புப் பெட்டி'யில் பதிவாகும் விஷயங்களைக் கொண்டு, விமான விபத்து எப்படி ஏற்பட்டது என்று கண்டுபிடித்துவிடலாம் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

எனக்குச் சரி என்று பட்டதை நான் செய்யலாமா?

சமுதாயத்தில் வாழும் தனிப்பட்ட ஒருவன் தனக்குச் சரி என்று பட்டதைச் செய்ய உரிமை உண்டா?

இந்தக் கேள்விக்கு விடை தருவது கடினம். எந்தத் தனிப்பட்ட மனிதனும் தான் வாழும் சமுதாயத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே வாழ வேண்டியுள்ளது. அப்படியானால், தனிமனிதன் ஒருவனின் உரிமை, சுதந்திரம் என்பதெல்லாம் எந்தளவுக்கு இருக்கலாம்? யார் அதைத் தீர்மானிப்பது?

ஒருவர் தனது உரிமை என்று நினைப்பதை மற்றொருவர் தனது சுதந்திரத்தைப் பறிப்பதாய் உணரலாம். அதுமட்டுமல்ல, சரி பிழை என்பதெல்லாம் காலத்திற்குக் காலம், சமுதாயத்திற்குச் சமுதாயம், பண்பாட்டுக்குப் பண்பாடு கூட வேறுபடலாம். இந்நிலையில், சமுதாய மரபிலிருந்து மீறி வாழ, தன் விருப்பம் போல் செயல்களைச் செய்ய ஒரு தனிமனிதனுக்கு உரிமை உண்டா என்பதற்குப் பதில் சொல்வது சிரமம்.

தமிழிலக்கியப் பரப்பில் இப்படிச் செயற்பட்டவர்களாக நாம் சித்தர்களைச் சொல்லலாம். தமிழின் முதல் கலகக்காரர்கள் என்ற வகையில், சித்தர்களை நாம் ஏற்றுக்கொண்டு கூட இருக்கிறோம். சாத்திரங்கள் ஏதுக்கடி என்றும், நட்ட கல்லுப் பேசுமோ? என்றும் கேட்கிற போது சினம் கொள்ளாத சமூகம், ‘கடவுளை நம்புகிறவன் முட்டாள் - காட்டுமிராண்டி’ என்று பேசுகிறபோது எதிர்ப்பைக் காட்டுகிறது.

கொலை மட்டுமல்ல தற்கொலை கூட சட்டப்படி குற்றம் என்று வைத்துக் கொண்டிருக்கிற நாடுகள் எல்லாம், அந்நிய நாட்டின்மீது படையெடுப்பு என்று வந்துவிட்டால் அல்லது உள்நாட்டுக் கலகத்தை அடக்குதல் என்று வந்துவிட்டால் எத்தனை ஆயிரம் கொலைகளையும் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொண்டு விடுகிறது.

சமூகத்தின் மனநிலை என்று பார்த்தாலும், தனிப்பட்ட ஒருவன்மீது செலுத்தப்படும் அத்துமீறலை வன்முறை என்று பார்க்கும் சமூகம், கொலை கொள்ளை அட்டூழியங்கள் செய்யும் ஒருவன் கொல்லப்படுவதை அங்கீகரித்துக் கொள்கிறது. திரைப்படங்களில் வில்லன் மற்றும் அடியாட்கள் மீதெல்லாம் மிகுந்த வன்முறை செலுத்திக் கொல்லப்படுவதைப் பார்த்துத் திருப்பதிப்பட்டுக் கொள்கிறது பார்வையாளன் மனம்.

மனித உரிமை என்பதை ஒரு தனித்த கருத்துருவாக வரையறுத்துவிட முடியாது என்றே தெரிகிறது. இடம், காலம் ஆகியவற்றோடு பொருத்தித்தான் சொல்லமுடியும். ஒரு இடத்தில் ஒரு காலத்தில் மனித உரிமையாக இருப்பது இன்னொரு காலத்தில் இன்னொரு இடத்தில் எதிராகவும் கூட இருக்கலாம். பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கு என்று சொல்வதைப் போலத்தான்!

திருத்தொண்டர் புராணத்தில், உலகியல் சட்ட திட்டங்களுக்குப் புறம்பானவர் என்ற கருத்தில், இயற்பகையார் எனக் காரணப்பெயர் பெற்றுவிட்ட நாயனார் ஒருவர் வருகிறார். அடியார்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வேண்டும் யாவையும் இல்லை என்னாது கொடுக்கும் இயல்பினைக் கொள்கையாக குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். ஒருநாள் அடியார் வேடத்துடன் ஒருவர் வருகிறார். “கொன்றை வார்சடை யாரடியார்கள் / குறித்து வேண்டின குணமெனக் கொண்டே / ஒன்றும் நீர் எதிர்மாறாது உவந்தளிக்கும் / உண்மைகேட்டு நும்பால் ஒன்று வேண்டி / இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு / இசையலாம் எனில் இயம்பலாம்” என்று, வந்தவர் கேட்கிறார்.

அவர் கேட்டது ஒன்றும் பொருள் பண்டமல்ல; இயற்பகையாரின் மனைவியை. “உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு” என்று அந்த வேஷக்காரர் சொன்னதும், தன்னிடம் இல்லாத ஒன்றைக் கேட்டுவிடாமல் உள்ளதைக் கேட்டாரே என்று உளம்மகிழ்ந்து போகிறாராம் இயற்பகையார். கேட்டவரிடம் தன் மனைவியைக் கொடுத்தும் விடுகிறாராம்.

அடுத்தவன் கூட்டிச் செல்கையில் ஊரவர் கொதித்தெழுகிறார்கள். “நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணார்@ இன்று ஃ பாடவம் உரைப்ப துன்றன் மனைவியைப் பனவற் கீந்தோ? ஃ கூடவே மடிவதன்றிக் கொடுக்க யாம் ஒட்டோம்….” என்று சூளுரைத்துத் தடுக்கிறார்கள் சுற்றத்தவர்.

இங்கே இயற்பகையாரின் உரிமை என்பது, ஊரவரின் நோக்கில் ஏன் மனைவியின் நோக்கிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டனத்துக்குரியதுமாகும்.

மனித உரிமை மட்டுமல்ல அறம், நியாயம், உண்மை, சரி என்பவையும் கூட காலம் இடம் சந்தர்ப்பத்தைப் பொறுத்து மாறக்கூடியவையே. முற்றுண்மை முழுச் சரி என்றெல்லாம் எதுவும் கிடையாது. இந்தப் பிரச்சினை குறித்து, சிந்தனையாளர் உம்பர்ட்டோ எக்கோ கூறுவது இது:
“நரமாமிசம் உண்பதை வழக்கமாகக் கொண்ட கலாசாரம் ஒன்றை நான் ஆய்வு செய்ய நேர்ந்தால், நான் ஒரு சமூகவியலாளனின் நோக்கிலிருந்தே அதைப் பார்ப்பேன். நரமாமிசம் உண்பதை எப்படி அந்தக் கலாசாரம் அங்கீகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பேன். ஆனால் என்னுடைய சொந்த விருப்பத்தைப் பொறுத்தமட்டில் எனக்குள்ளிருக்கும் ஒழுக்கவாதி நரமாமிசம் உண்பது தவறு என்றே சொல்லுவான். ஒருவேளை நரமாமிசம் உண்ணும் ஆதிவாசிகள் சிலர் நகரத்துக்கு வந்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். நாம் அவர்களது கலாசாரத்தை மதிப்பதாக நினைத்து இங்கேயுள்ள மனிதர்களையும் அடித்துத் தின்பதற்கு அவர்களை அனுமதிப்போமா? அல்லது இங்குள்ள சட்டங்களுக்கு எதிரானதாக உள்ளது எனத் தடுப்போமா?

இத்தகைய சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு, சகிப்புத் தன்மையின் எல்லை எது என்பதைத் தீர்மானிப்பதன் மூலமே விடை காண முடியும். பெண்கள் பர்தா அணிவதை ஒரு கலாசாரம் அவசியம் என்று கருதுமானால், அதைத் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அது என்னுடைய அறவியல் கொள்கைகளை மீறுவதாக இல்லை. சில மதக் குழுக்களில் நடப்பது போல ஒரு கலாசாரம், நோயுற்ற குழந்தைகளுக்கு ரத்தம் செலுத்துவதைத் தடை செய்யுமானால் அது பிரச்சினைதான். ஏனென்றால், இந்த நாட்டின் சட்டம் ஒருவர் ஆபத்திலிருக்கும் போது உதவி செய்தாக வேண்டும் எனக் கூறுகிறது.

நரமாமிசம் உண்பதைத் தடை செய்தாக வேண்டும். ஏனென்றால் அது நமது மதிப்பீடுகளை மீறுவதாக இருக்கிறது. நரமாமிசம் உண்போரைப் பார்த்து, ‘இங்கே நீங்கள் வந்துவிட்ட பிறகு, இந்த சமூகத்தின் சில நியதிகளைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும்’ என நாம் கூறவேண்டும். சகித்துக்கொள்ளக் கூடியது எது என்பதற்கான வரையறை வகுக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், சகித்துக் கொள்ளவே முடியாத சில விஷயங்களும் இருக்கவே செய்கின்றன - இனவெறி, நரமாமிசம் உண்பது, கொலை செய்வது போன்ற சில விஷயங்கள். மனித உயிர்களைப் பலியிடுவதை எனது நாட்டில் நான் அனுமதிக்கவே முடியாது. ஆனால், மனிதர்களைப் பலியிடும் ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதை அடிமைப்படுத்தி, அந்தப் பழக்கத்தை நிறுத்தும்படி என்னிடம் கூறப்பட்டால், எனது நிலை இக்கட்டானதாகி விடும்.

காலனி ஆதிக்கத்தை நியாயப்படுத்தக் கூறப்படும் காரணம் இதுதான்: “நாம் மற்ற நாடுகளுக்குச் சென்று அந்த மக்களுக்கு நல்லது கெட்டது பற்றித் தெளிவுபடுத்த வேண்டும்” என்ற காரணத்தைத்தான் கூறுகிறார்கள். இதற்கு, இப்படி இப்படித்தான் என்பது போன்ற பதில்கள் கிடையாது. அப்படி முடிவுபண்ண ஆரம்பித்தால், நம்முடைய வாழ்க்கைத் தரத்தின் அளவுக்கு இல்லை என்பதனாலேயே உலகிலுள்ள ஒவ்வொரு குழுவையும் நாம் அடிமைப்படுத்த வேண்டி வரும்.

சிரமமாக இருந்தாலும் கூட இத்தகைய பிரச்சினைகளை, நாம் ஒவ்வொன்றையும் தனித்தனியே பரிசீலித்துத்தான் தீர்த்தாக வேண்டும்.”

Tuesday, February 8, 2011

மக்கள் தொழிலுக்குச் செல்லும் வரை நிவாரணம் வழங்கப்பட வேண்டும்


வன்னி மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையினால் பல்வேறு குளங்கள் தமது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன் மேலதிக நீர்வரத்தினால் அவை உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளதுடன் சிலகுளங்கள் உடைப்பெடுத்தும் உள்ளன. பெரும் சேதத்தைக் குறைப்பதற்காக குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன்; வெட்டிவிடப்பட்டுமுள்ளன. வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட இந்த அனர்த்தத்திற்கு அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக வவுனியாவில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து பாடசாலை, பொதுநோக்கு மண்டபங்கள், தேவாலயங்கள் போன்ற பல்வேறு இடங்களில் தங்கியுள்ள மக்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது குறைகளையும், சேதவிவரங்களையும், தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

சுமார் 100ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகத் தமது குடும்ப மூத்த உறுப்பினர்கள் சொல்லக்கேள்விப்பட்டுள்ளதாகவும் இன்று நேரிடையாக அனுபவிப்பதாகவும் நொச்சிமோட்டையைச் சேர்ந்த ஒரு பெரியவர் தெரிவித்தார்.

கடந்த 5,6 மற்றும் 7ஆம் திகதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளான கருப்பணிச்சங்குளம், சமனங்குளம், ஆச்சிபுரம், சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயம், கற்குளம் பொதுநோக்கு மண்டபம், புளியங்குளம் இந்துக்கல்லூரி, பழையவாடி பாடசாலை, பம்மைமடு பொதுநோக்கு மண்டபம், புளித்தரித்த புளியங்குளம் (அரபாத் நகர்) செல்வா நகர், செக்கடிப்புலவு, கற்பகபுரம் பாடசாலை, பறன்நட்டகல் பாடசாலை, அந்தோனியார்கோயில், சிறீராமபரம், சிவபுரம், புதிய கோயில்குளம் ஆகிய இடங்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட்டார்.

பம்பைமடு குளத்திற்கு அருகாமையிலுள்ள ராசையன்குளம் கட்டு உடைந்துள்ளது, நெல், உளுந்து உட்பட அனைத்துப் பயிர்களும் சேதமடைந்துள்ளன. உளுந்து பயிரிடப்பட்ட அனைத்து காணிகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் உளுந்துகள் அனைத்தும் முளைகட்டியுள்ளன.

அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள்; வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதுடன், சில காணிகளில் கதிர்வைக்கும் பருவத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நீர்ச்சாவியடித்துவிட்டது. மொத்தத்தில் இவ்வருடம் விவசாயத்தை மேற்கொண்ட அனைவரும் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். வன்னி மக்கள் அனைவரும் யுத்த சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்து வாழ்வாதாரத்தை இழந்திருந்து மீள்குடியேறியதும் அனைத்து விவசாயப் பெருமக்களும் தங்களது உளக்குமுறல்கள், மனத்தாக்கங்கள், இழந்த இழப்புக்களினால் ஏற்பட்ட மன அழுத்தங்கள் ஆகிய அனைத்தையும் தங்களது காணிகளில் உழைப்பைச் செலுத்துவதினூடாக இறக்கிவைக்க முயற்சித்தனர். பயிர்வகைகளும் அவர்களது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நன்கு செழித்து வளர்ந்தது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல் இயற்கை தனது திருவிளையாடல்களை நடத்திவருகின்றது. மீண்டும் கையேந்தும் நிலைக்கு எமது மக்களைத் தள்ளியுள்ளது.
வவுனியாவில் மட்டும் 15,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல்லும் 14,000ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்தும் அடியோடு அழுகிவிட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான கால்நடைகள் இறந்துள்ளன. வெள்ளத்தினால் வீடுகளின் தரை ஊறியுள்ளதால் தரைவிரிப்பின்றி வீடுகளில் தங்க முடியாமையினாலேயே பெரும்பாலான மக்கள் வெளியேறியுள்ளனர். தினக்கூலியை நம்பி அன்றாடம் பிழைப்பு நடத்தும் மக்கள் தாங்கள் எப்பொழுது வேலைக்குப் போவோம் என்று தெரியாததினால் உணவிற்கு என்ன செய்யப்போகின்றோம் என்ற கவலையுடன் இருக்கின்றனர். அவர்களது பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, வன்னியிலுள்ள அனைத்து மக்களுக்கும் அவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ளும்வரை உலர் உணர்வுப் பொருட்கள் வழங்கப்படவேண்டிய தேவையுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினாலும் ஆறுகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தினாலும் மக்கள் இடம்பெயர்ந்து பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இங்கு உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் பட்டினிச்சாவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தவிர்ப்பதற்கு மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களின் விபரங்களைக் கீழே குறிப்பிட்டுள்ளேன். தாங்கள் இதனைத் தங்களது கவனத்தில்;கொண்டு ஆவன செய்யுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அரிசி, அத்தியாவசிய உப உணவுப்பொருட்கள் (சீனி, மா, பருப்பு, காய்கறி போன்றவை), தரைவிரிப்பு (தரப்பாள்), எரிபொருள்

மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் கிராமம் மல்வத்துஓயாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கான நிவாரணப்பொருட்களை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கையினைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதனால், அவற்றினை உலங்கு வானூர்தியினூடாகவே வழங்க வேண்டியுள்ளது. அதனைப்போன்றே கொழும்பிலிருந்து வவுனியா வருவதற்கான ஏ9 வீதியும், வவுனியா-மன்னார் போக்குவரத்தும், மதவாச்சி – மன்னார் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தொடருந்து மூலமாகவோ அல்லது உலங்கு வானூர்தி மூலமாகவோ இங்கும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்குமாறும் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

புதிய சினிமா மென்பொருள் அறிமுகம்

சங்கபூரைச் சேர்ந்த இந்தியன் சாஃபட்வேர் கம்பெனி ஒரு புதிய மென்பொருளை வெளியிட்டிருக்கிறது. இதில் சினிமா நடிகர்களின் கால்ஷீட், கால அட்டவணை (Schedule), நாள்தோறும் செய்கிற வேலைகள் (Day by Day Process) போன்றவற்றை பராமரித்து கொள்ளலாம். அத்துடன் திரைக்கதை எழுதப் பயன்படக்கூடிய மென்பொருளை இணைத்தும், தனிப்பிரதியாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். விரைவில் இலவசமாக Download செய்யும் வசதியும் வரவிருக்கிறது.

இணையத்தள முகவரி :

www.micromediasys.com
email: micromediasys@yahoo.com        

Saturday, February 5, 2011

இளமையில் வேண்டும் இலக்கணம்!


லக்கணம் என்றாலே பல மாணவர்களுக்குக் கணக்குப் பாடம் போல் கசக்கிறது. வேம்பு கசக்கும். கசப்பாக இருந்தாலும் அதுதான் அனேக நோய்களைத் தீர்க்கும் மருந்தாக இருக்கிறது.

இலக்கணமும் அது போலத்தான். படிப்பதற்குக் கடினமாக இருந்தாலும், அதுதான் மொழியின் அடிப்படையான எழுத்து முதல் வாழ்க்கை வரை எப்படி இருக்க வேண்டும் என்கிற விதிகளை கற்றுத் தருகிறது.

இலக்கணம் என்பதற்கு, 'மொழியின் ஒலி, எழுத்து, சொல், வாக்கியம் முதலியவற்றின் அமைப்பை வழக்குகளின் அடிப்படையில் விவரிக்கும் விதிகள். அந்த விதிகளைக் கூறும் நூல்' என்று பொருள் தருகிறது தமிழ் அகராதி.
சிலரைப் பார்த்து, 'அவர் இலக்கணப் பிழையில்லாமல் எழுதுவார், பேசுவார்' என்று சொல்வதைக் கேட்கிறோம். 'அப்படியா!' என்று அவரை ஒரு புறம் புருவங்களை உயர்த்தியும், இன்னொரு புறம் உள்ளுக்குள் அன்பு பொங்கவும் பார்க்கிறோம். அப்படிப் பார்ப்பதற்கு என்ன காரணம்? அவரிடம், விதிகளைக் கடைப்பிடித்துக் கட்டுப்பாடோடு வாழ்கின்ற வாழ்க்கை இருக்கிறது. அந்தக் கட்டுப்பாடுகளைக் கற்றுத் தருவதுதான் இலக்கணம்.

தமிழ் மொழி மட்டும்தான் மொழியின் இலக் கணத்தோடு, வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்திருக்கிற உன்னத மொழி. அதனால்தான் `செம்மொழி' என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்விலும், வாழ்வதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது. இளமை மிக அற்புதமானது. எதிர்காலத் திட்டங்களுடன் வாழ்பவர்கள் என்றைக்கும் இளமையுடன் இருக்கிறார்கள்.

அத்தகைய இளமைக் குள் இருக்கும் இனிய இளையோரே... உங்களின் இந்தப் பருவம் பெரும்பாலும் மாணவப் பருவமாகவே இருக்கும். அதுவும் கல்வி கற்கும் பருவமாக இருக்கும்.

ஊதியம் பெற விரும்பும் கல்வியை விட, உயிர் வாழ உதவும் கல்வியே உயர்ந்தது. அத்தகைய கல்வியைப் பெறுகிறபோது இலக் கணத்தைப் போல கட்டுப்பாடுகளையும் வரையறை செய்து கொள்ள வேண்டும். இலக்கணத்துக்குள் வரும் எடுத்துக்காட்டுகளைப் போல சிலரை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார், 'எப்படி வாழ வேண்டும் என்று அறிய விரும்பினால் காந்தியடிகள் எழுதிய சத்தியசோதனையைப் படியுங்கள். எப்படி வாழக் கூடாது என்று அறிய விரும்பினால் நான் எழுதிய வனவாசத்தைப் படியுங்கள்.'

காந்தியடிகள் வாழ்ந்த வாழ்க்கை இலக்கண வாழ்க்கை.
கண்ணதாசன் வாழ்ந்த வாழ்க்கை இலக்கணம் மீறிய வாழ்க்கை.


கண்ணதாசனே ஒரு கவிதையில்...
முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டு சத்தமிட்டு
ரத்தம் கெட்டுப் போனதொரு காலம்
ரத்தம் கெட்டுப் போன பிறகு
வந்தது இந்த ஞானம்

என்பார். நீங்களும் பின்னர் வருந்தக்கூடாது என்பதற்குத்தான் இளமையில் கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன்.

அன்பான இளையோரே! கைவிளக்கைப் போன்றது கல்வி. கல்விதான் அகல் விளக்கு, வாழ்க்கைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம். அதைக் கொண்டு வெற்றியின் விலாசத்தைத் தேடலாம். அதற்குத் தேவை, அனுசரித்துப் போவதுதான். சூழ்நிலைக்குத் தகுந்தபடி நீங்கள் அனுசரித்துப் போகும்போது சமுதாயத்தில் வரவேற்கத்தக்க மனிதராவீர்கள். அனுசரித்தல் என்பது அடங்கியிருத்தல்தான். அடிமை அல்ல. அதனால்தான் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி சொன்ன வள்ளுவரும், 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்றார். அதாவது உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் என்கிறார்.

உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்துபவர்கள் ஆசிரியர்கள். அதனால் அவர்கள் ஏணிப்படிகள். அந்த ஆசிரியர்கள் தங்களின் ஞானதீபத்தால் மாணவர்கள் அனைவருக்கும் வழிகாட்டுகின்றனர். அதில் பலர் வெற்றி பெறுகிறார்கள். சிலரோ தடுமாறி, தடம் மாறி விடுகிறார்கள். என்ன காரணம்? மாணவர்களின் இலக்கணத்தைக் கற்காததும், கற்ற பின்னர் கடைப்பிடிக்காததும்தான். அது என்ன மாணவர் இலக்கணம் என்கிறீர்களா?

Friday, February 4, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

இது சண்டை படம்தான். மார்ஷியல் ஆர்ட்ஸ்தான் பிரதானம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இப்படம் தயாராகியிருக்கிறது. என்றாலும் முதல் பாகத்தை பார்க்காதவர்களும் இப்படத்தை பார்க்கலாம். ரசிக்கலாம். படத்தின் மையமாக வெளிப்படும் கருத்தில் நெகிழ்ந்து போகலாம்.

அப்படிதான் சென்ற ஆண்டு இப்படம் சீனாவில் வெளியானதும் அம்மக்கள் நெகிழ்ந்து போனார்கள். மாபெரும் வெற்றிப் படமாக மாற்றினார்கள். வழிந்த கல்லாவை தயாரிப்பாளர் ஆள் போட்டு அள்ளினார். பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், படத்தை ஆங்கிலப்படுத்தி, இதோ உலகம் முழுக்க திரையிட ஆயத்தமாகி விட்டார்கள்.

'ஐபி மேன் 2; தி லெஜென்ட் ஆஃப் கிரான்ட் மாஸ்டர்' ஹாலிவுட் படத்தின் முன்கதை சுருக்கம் இதுதான். ஐபி மேன் உண்மையில் சீனாவில் வாழ்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர். 1940களின் இறுதியில், ஜப்பானின் ஆதிக்கத்தில் சீனா இருந்தபோது அவர் எதிர் கொண்ட சவால்களை முதல் பாகம் விவரித்தது என்றால் - மனைவி நிறைமாத கர்ப்பமாக இருக்கும்போது குடும்பத்துடன் அவர் ஹாங்காங் வந்து சேர்வதிலிருந்து இரண்டாம் பாகம் தொடங்குகிறது. அப்போது அந்தத் தீவு ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு உட்பட பகுதியாக இருந்தது. ஒதுக்குபுறமாக குடியேறியவர், வருமானத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளியை தொடங்குகிறார்.

ஆனால். கற்றுக்கொள்ள எந்த மாணவரும் வரவில்லை. பதிலாக வம்புச்சண்டைகள் தேடி வருகின்றன. அதில் முக்கியமானவர், இன்னொரு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்பவர். உண்மையில், அந்த நபருக்கு எந்த வித்தையும் தெரியாது. ஆனால், எல்லாம் தெரிந்தவர் போல் மக்களை ஏமாற்றி வருகிறார். எங்கே ஐபி மேனால் தனது திறமையின்மை வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சும் அந்த நபர், ஐபி மேனை வலுச்சண்டைக்கு அழைக்கிறார். இச்சண்டையில் வெற்றி பெருபவர்தான் உண்மையான மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் என்பது பந்தயம்.

இதற்கு ஐபி மேன் ஒப்புக்கொள்கிறார். ஆனால், போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாள் காவல்துறை கைது செய்து, நகர வாழ்க்கையை குலைக்க முயற்சித்ததாக இருவர் மீதும் வழக்கு போடுகிறது. சில நாட்களுக்கு பின் பிணையில் ஐபி மேன் வெளியே வருகிறார்.

அவரிடம் ஓர் இளைஞன் தகராறு செய்கிறான். அவனை கண்டித்து அனுப்புகிறார். சென்றவன் தன் நண்பர்களுடன் திரும்பி வருகிறான். அவர்கள் அனைவரையும் ஐபி மேன் வீழ்த்துகிறார். அப்போது வெளிப்பட்ட அவரது திறமையில் மயங்கிய அந்த இளைஞர்கள், அவரிடமே மாணவர்களாக சேருகிறார்கள்.

இடையில் அந்த போலி மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞரை வீழ்த்தும் படலம் அரங்கேறுகிறது. இதைப் பார்த்த ஓர்  ஆங்கிலேயர், 'எங்கள் பாக்ஸிங் சண்டைக்கு முன்னாள் உங்கள் கலை தூசு' என ஏளனம் செய்கிறார். தங்கள் நாட்டை - தங்கள் கலாசார அடையாளத்தை கிண்டல் செய்த ஆங்கிலேயருக்கு பாடம் புகட்ட முடிவு செய்யும் ஐபி மேன், பாக்ஸிங்கை கற்று ஹாங்காங்கின் புகழ்பெற்ற பாக்ஸருடன் மோதி வெற்றி பெறுகிறார். 'இனத்தை காரணமாக வைத்து எந்த நாட்டு கலையையும் அவமதிக்காதீர்கள்' என்று சொல்லிவிட்டு வீடு திரும்புகிறார். அவர் மனைவிக்கும் சுகப் பிரசவம் நிகழ்கிறது...

சீன சூப்பர் ஸ்டாரான டோனி யென், சம்மோ ஹங், லைன் ஹங் உட்பட பலர் நடித்திர்க்கும் இப்படத்தை 'ஐபி மேன்' முதல் பாகத்தை இயக்கிய வில்சன் ஹிப் இயக்கியிருக்கிறார்.

படத்தின் இறுதிக்காட்சிதான் ஹைலைட். வீடு திரும்பி பிறந்த குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழும் ஐபி மேனை ஒரு சிறுவன் சந்திக்கிறான். தனக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் வித்தை கற்றுத் தரும்படி கேட்கிறான். அவனது கண்களையே உற்றுப் பார்த்தவர், அவன் கன்னத்தை தட்டி உரிய வயது வந்ததும் வரும்படி சொல்லி அனுப்புகிறார். கனவுடன் விடைப்பெற்றுச் செல்லும் அந்தச் சிறுவன்தான் புரூஸ் லீ.

யெஸ், புரூஸ் லீயின் குருதான் ஐபி மேன்.

கே.என்.சிவராமன்

Thursday, February 3, 2011

எதிர்கால வாழ்வை இன்னும் என்ன செய்யக் கருதி இருக்கிறோம் நாம்?

தங்கள் பாதுகாப்பையும், உரிமைகளுடனான விடுதலை வாழ்வையும் பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் ஒரு சமூகம், ஒற்றுமைப்பட்டுக் கோரிக்கைகளை வைக்க வேண்டுமென்பதில் யாருக்கும் மறுகருத்து இருக்க முடியாது. அதுவே வெற்றியளிக்கும் என்பதும் யாவருமறிந்ததே.

ஆனால், தமிழ்க்கட்சிகள் ஒரு நீடித்த ஒற்றுமைக்குத் தயாராகிவிடுவார்கள் என்று நம்புவது, அமெரிக்காவோ ஐ.நா. சபையோ வந்து நமக்குத் தீர்வைப் பெற்றுத் தந்துவிடாதா என்று ஆசைப்படுவதற்கு ஒப்பானதாகும். நம்மில் பெரும்பாலோர் இத்தகைய எளிய நம்பிக்கைகளுக்கு மேலதிகமாகச் சிந்திக்கும் சிரமத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பப்படாதவர்கள் என்பதும் உண்மையே.

தேர்தலுக்கும், தமிழ்மக்களின் உணர்ச்சிகர ஆதரவைத் தூண்டி வைத்திருப்பதற்கும் ஒற்றுமைக் கோஷத்தை எடுத்து விடுவதல்லால், அதன் அரசியல் தேவை-முக்கியத்துவம் குறித்துச் சிந்திக்க மனப்படாதவர்களாகவே நம் பிரதிநிதிகள் உள்ளார்கள். ஏனைய கட்சிகளெல்லாம் நம் கொள்கைகளை ஒப்புக்கொண்டு நம்மோடு வந்து இணைந்துவிடுவதே தமிழொற்றுமை ஆகும் என்பதே பெரும்பாலானவர்களின் ஒற்றுமை குறித்த எண்ணமாக உள்ளது.

வௌ;வேறு கட்சிகளின் தோற்றம் என்பதே கொள்கை வேறுபாடுகளினாலும், வழிமுறைகள் அணுகுமுறைகள் பற்றிய மாற்று யோசனைகளாலும் உருவானவைதான். கட்சிகள் மட்டும் என்றில்லை. ஒவ்வொரு தனி மனிதருமே சிறிய சிறிய அளவிலேனும் மற்றவர்களோடு ஒத்துப்போக முடியாத அபிப்பிராய விலகல்களோடு உள்ளவர்தான். வௌ;வேறு கருத்துகளைக் கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்குள் ஒன்றுபடுகின்ற புள்ளிகளை இனங்கண்டே அவர்கள் இணைந்து ஒரு கட்சி உருவாகின்றது. அதுபோல, தனித்தனியாகப் பல்வேறு கொள்கைகளையும் உடைய கட்சிகள், ஒன்றுபடுகின்ற ஒருசில நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவைகளுக்கிடையிலான ஐக்கியத்தை உருவாக்க முடியும்.

இந்த யதார்த்தத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத பிரதிநிதிகளை நாம் தெரிவுசெய்து விட்டிருக்கிறோம். தங்கள் கட்சியின் நிலைப்பாடுகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர்களுடனேயே ஒற்றுமைப்பட முடியும் என்பது முட்டாள்த்தனமான கருத்து மட்டுமல்ல உள்ளார்ந்த பாசிஸத்தன்மை கொண்டதுமாகும்.
ஐக்கியம் என்பது வேற்றுமைகளிடையே காணும் ஒற்றுமை மூலம் உருவாவதுதான். அவரவர் கட்சி நலன்களுக்கு சுயலாபங்களுக்கு மேலாக சமூக நலனையும் மக்கள் நலனையும் முன்னிறுத்தி யோசிக்கும்போதே ஐக்கியம் சாத்தியமாக முடியும். மக்களுக்கு மேலாக அவரவர் கட்சி நலனையும், அடுத்த தேர்தலுக்கான வாக்குகளையும் மனதிலிருத்திக்கொண்டு ஒற்றுமை பற்றி யோசித்தால் அச்சமும் மடமையும் விசாலமடையா மனதின் காழ்ப்புமே வெளிப்பட்டு நிற்கும்.
வெறும் படைபல வீரம் குறித்த உசார்மடத்தனப் பீத்தல்கள், மற்ற சமூகங்களையும் மக்களையும் கூட விலக்கி நம்மைத் தனிமைப்படுத்திய பயங்கரவாத செயற்பாடுகள், நமக்கு அப்பால் ‘சரி’ ஏதுமில்லை என்கிற பாசிஸ தற்குறித்தனம், ஆயுதங்களுக்குக் கீழ்ப்படுத்தி மக்களை நிறுத்திய ராணுவ வாதம் மூலம் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தான்தோன்றித்தனமாக இழுத்துச் சென்று கவிழ்த்துக் கொட்டிவிட்டுத் தாமும் அழிந்துபட்டார்கள் புலிகள். பாடழிவு, அகதிமுகாம், கையேந்தல் வாழ்வு என்று சமூகத்தின் மனோபலத்தையே சிதைத்துவிட்டுச் சென்றார்கள். நாற்புறமும் சிதைந்து கிடக்கும் சந்தியில் நாம் நிற்கிறோம். திரும்ப நம்மை மீள்விக்கப் பாதை அமைத்துக் கொள்ள வேண்டிய தருணமிது. விவேகமும் நிதானமும் அர்ப்பணமும் விட்டுக்கொடுப்பும் கூடிய தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்தித் தமிழ்வாழ்வை மீட்டுக்கொள்ளும் பாரிய சவால் முன்னாலிருக்கிறது.

நமக்குள் வளர்ந்த பாசிஸத்திற்கும் ராணுவவாதத்திற்கும் இடம்விட்டு சமூக முதுகெலும்பை முறிக்கத் துணைபோனவர்களாக நம்மில் பலர் இருந்தோம். பிழையை வளர விட்டுப் பீழையுண்டாக்கிய தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு இப்போது யுத்தத்தில் வென்றுவிட்டவர்களைக் கரித்துக்கொட்டி என்ன ஆகப்போகிறது? இப்போதேனும் விவேகமான நகர்வுகளுக்கு நாம் யோசிக்க வேண்டாமா?

உடனடித் தேவையாக ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்று எல்லாத் தமிழ்மக்களினதும் பொது எதிர்பார்ப்பல்லவா? இதற்கு ஆவேசப்பட்டு விரோதத்தைக் கக்கும் அதே பழைய வீரப்பேச்சுக்களால் ஆகுவது என்ன என்று இனியும் நாம் சிந்திக்க வேண்டாமா? வாக்குகளுக்கும், வாய்சாலகத்தைக் காட்டவும் என வெறுமனே குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கும் இனரோசப் பேச்சுக்களால், இன்னுமின்னும் நாம் இருந்த இடத்தை விட்டுக் கீழே கீழே வழுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே யதார்த்தமல்லவா? பிடிக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டுச் சும்மா பீற்றிக் கொண்டிருக்கும் அரசியலால் மக்கள் அடைந்தது என்ன? இப்போதேனும் ஒன்றுகூடி யோசிக்க வேண்டாமா?

இதற்கு மேலும் கற்பனை ரதங்களில் மக்களை ஏமாற்றி அழைத்துச் செல்லாமல், சாத்தியமான ஒரு தீர்வுக்கு தமிழ்க்கட்சிகள் முதலில் ஒன்றுபட்ட முடிவுக்கு வரப் பேசுதல் வேண்டும். அனைவரும் ஒன்றுபடும் புள்ளிகளை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் தங்களுக்குள்ள சமூக அக்கறை மற்றும் மக்கள் நலனுக்காக ஒவ்வொருவரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பது என்ன என்பதை உணர்த்தியாக வேண்டும். இன்றைய சூழ்நிலையைக் கடக்க இதன் உடனடி அவசியம் உணரப்படா விட்டால், நாம் இன்னும் கீழே போய் நின்றுதான் வீரமுழக்கம் இடவேண்டி வரும்.

நடந்துகொண்டிருப்பவற்றைத் தடுக்க அல்லது அதன் தீவிரத்தைக் குறைத்து அடுத்த கட்டத்திற்கு நகர, முதலில் இன்று தமிழ்க்கட்சிகள் ஒன்றுபடக் கூடிய விடயங்களையேனும் கண்டு தொடங்குதல், நாம் இன்னும் பாடுகேடான நிலைமைக்குப் போய்ப் பின் அரற்றுதலைத் தவிர்க்க உதவும். அரச தரப்பை தீர்வுக்கு வலியுறுத்துவதற்கும், தமிழ் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பையேனும் பூர்த்தி செய்யும் விதமாக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும், தமிழ்க்கட்சிகளிடம் உள்ள இணக்கப்புள்ளிகளை அவர்கள் தம்மிடையே கலந்துபேசிக் கண்டுகொள்வதே இன்றைய முதல்படி.

ஒன்றுபட்ட கோரிக்கைகள் எவையெவையாக இருக்க முடியும் எனத் தமக்குள் ஒரு முடிவுக்கு வருவதும், அதில் உறுதியை வெளிப்படுத்தி நிற்பதும், அரச தரப்பிற்கு குறைந்தபட்சம் அதிலிருந்தே பேச்சைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அளிக்கும். அதைவிடுத்து, வேறு யாரேனும் மூலம் அரசுக்கு நிர்ப்பந்தத்தை அளித்து நாம் தமிழீழத்திற்குச் சென்றுவிடலாம் என்ற கனவையே இன்னமும் காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்க முனைந்தால், “உள்ளதும் போச்சுதடா” அனுபவமே தொடராகும்.

ஒன்றுபடக் கூடிய புள்ளிகளை விட்டுவிட்டு கொள்கை வேறுபாடுகளிலேயே தொங்கிக்கொண்டு, தத்தம் பிரமுகத்தனத்தையும் பதவிகளையும் பாதுகாக்க பராதிப்படுகிறவர்களின் அரசியல் ஞானத்தையும் சமூக அக்கறையையும் நாம் இனங்கண்டுகொள்ள வேண்டும். நம் வாழ்வை இன்னுமின்னும் என்ன செய்யக் கருதி இருக்கிறார்கள் என்பதைக் கேட்டாக வேண்டும்.

இன்றும் ஒரு தகவல்

மனிதனின் தோழன் டால்பின்

நமக்கு வீடு போல் டால்பிங்கலாகளுக்கு கடல்தான் வீடு. வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் உபசரிப்பதுபோல் கடலுக்குள் செல்லும் மனிதனை உபசரித்து உதவிபுரிகின்றன டால்பின்கள்.

சுயநலம் மிக்க மனிதர்கள் தொடர்ந்து டால்பின்களை தொந்தரவு செய்து துரோகம் செய்தாலும் மீண்டும் மீண்டும் மனிதனை நாடி நட்பு கொள்ளும் ஒரு உயிரினம் டால்பின். நிலத்தில் மனிதனின் நண்பனாக இருப்பவை நாய்கள். நாய்களுக்கு கூட மனிதனை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மனிதனால் டால்பிங்களுக்கு சிறு பயன்கூட கிடையாது. மாறாக தொல்லைகள்தான் அதிகம். ஆனாலும் டால்பின்கள் மனிதனுக்கு உதவுகின்றன.

கடலில் திசைமாறிப்போகும் படகுகள் மற்றும் கப்பல்களுக்கு வழிகாட்டுவது, நீரில் மூழ்கிய மனிதர்களை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு கரை சேர்ப்பது. திமிங்கலம், சுறா போன்ற ஆபத்தான உயிரினங்கள் வந்தால் மனிதர்களுக்கு சிக்னல் கொடுப்பது போன்று ஏராளமான நன்மைகளை மனிதர்களுக்கு செய்கிறது.

திமிங்கலம் மற்றும் சுராவிடம் மாட்டிக்கொள்ளும் மனிதனை மீட்பதற்காக அதனுடன் சண்டையிட்டு இறந்துபோன டால்பின்களும் நிறைய உண்டு. மனிதனுக்கு இப்படி மாய்ந்து மாய்ந்து உதவி செய்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மனிதனை பார்த்ததுமே டால்பின்கள் மகிழ்ச்சியில் தண்ணீருக்கு மேல் துள்ளிக்குதித்து விளையாட தொடங்கும். ஆனால் இந்த செயலே டால்பினை வேட்டையாடுபவர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. ஜப்பானில் டாய்ஜி என்ற கடல் பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான டால்பின்களை வீர விளையாட்டு என்ற பெயரில் கொன்று குவிக்கின்றனர்.

கடந்த 15 வருடங்களில் மட்டும் உலகம் எங்கும் கொல்லப்பட்ட டால்பின்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்துக்கு மேல். மனிதர்கள் என்றைக்குமே நமக்கு கெடுதல் செய்பவர்கள்தான் என்பதை புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் டால்பினுக்கு உண்டுதான். ஆனாலும் தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம் மனம் கோணாமல் நடந்து மரியாதை செலுத்துகின்றன. ஆனால் தற்போது டால்பின்களின் மனநிலையிலும் மாறுதல் தெரிகிறது. முன்பெல்லாம் நியூசிலாந்து கடற்பகுதியில் நீந்துபவர்களை சுற்றி சுற்றி வளைய வந்து டால்பின்கள் விளையாட்டு காட்டும். இப்போது சுற்றுலா படகுகளை பார்த்தாலே நீருக்குள் சென்று மறைந்து கொள்கின்றன.

மனிதன் டால்பின்களை படுத்தும் பாட்டுக்கு அது திருப்பி தாக்கதவரை மனிதன் பிழைத்தான். திருப்பி தாக்க தொடங்கினால் அவ்வளவுதான் என்று எச்சரிக்கிறார் டால்பின்களை பற்றி ஆராய்ந்து வரும் கேத்லீன். மேலும் அவர் "கடல் நமக்கு வீடல்ல. அங்கே நாம் விருந்தாளிகள்தான். இன்னொருவர் வீட்டுக்கு செல்லும் விருந்தாளிக்கென இருக்கும் எல்லைகளை புரிந்து கொள்ள வேண்டும். டால்பிங்களுக்கு நாம் நட்பை பரிசளிப்பதன் மூலம் அவற்றை மீண்டும் கடல் மேல் கொண்டு வர முடியும்!" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். உண்மையும் அதுதான்! மனிதர்கள் அதை செய்வார்களா?      
 
நன்றி தினத்தந்தி 

Wednesday, February 2, 2011

இலங்கை செய்திகள்


மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசசபை வேட்பாளர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்குப் பிரதேசசபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02.02.2011)பகல் கலந்துரையாடல்களை நடத்தினர். இதன் பொழுது வேட்பாளர்கள் எத்தகைய உத்திகளைக் கையாளவேண்டும் என்பது குறித்தும் ஒழுக்கமாக நடந்துகொள்வது குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவுரைகளை வழங்கியதுடன் அனைவரும் ஒற்றுமையாகவும் தேர்தல்சட்ட விதிமுறைகளை மதித்துச் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டனர்.

கலந்துரையாடலில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது தேர்தல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்டப் பொறுப்பாளரும் மன்னார் நகரசபை வேட்பாளருமான ரட்ணசிங்கம் (குமரேஸ்), இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மாந்தை மேற்கு பிரதேச சபைக்குப் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 வேட்பாளர்களின் விபரம் வருமாறு:
சிவபாலன், கணேஸ்றமணன், சந்தாம்பிள்ளை பத்திநாதன், இறம்பிகோல் யக்கேவுசேரம், வரப்பிராகசம், சுதாகரன், சீமான்பிள்ளை சவுந்திரநாயகம், மகாலிங்கம் நடேசு, நடராசா ஜனகதீபன், சந்திரசேகரம் இராசசிங்கம், அந்தோனிப்பிள்ளை ஜோசப்பீற்றர், திருச்செல்வம் இருதயநேசன், சோ.பாக்கியநாதன், மெரின் சுதர்சன், செ.பஸ்தியன், பெ.ஜெகதீஸ்வரன் ஆகியோர்.

Tuesday, February 1, 2011

வவுனியாவிலும் வெள்ளம்

 
வவுனியாவில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்தும் நீர்நிரம்பி வான்கதவுகள் திறந்துவிடப்பட்டு தண்ணீர் வழிந்தோடுவதால் பெரும்பாலான கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களின்  வீடுகளினுள்ளும் தண்ணீர்புகுந்துள்ளது. இப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு இடப்பெயர்வைச் சந்தித்துள்ளனர். சிலகுளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான பூந்தோட்டம், திருநாவற்குளம், தாண்டிகுளம் போன்ற பகுதிகளை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.


வவுனியா மாவட்டத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான வயல்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேட்டுநிலப் பயிர்களான உளுந்து, கௌபி, பயிறு போன்ற பயிர்கள் முற்றாக அழிந்துள்ளன. ஏற்கனவே நெற்பயிர்கள் நோயினாலும் வெள்ளத்தினாலும் அழிந்துள்ளன. இதனைப்போன்றே வாழைப்பயிர்ச் செய்கையும் அழிந்து விவசாயிகளுக்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பாவற்குளம் வானிலிருந்து ஒரு அடிதண்ணீர் நிரம்பிவழிவதால் நான்கு கதவுகளிலும் 20அங்குலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் நெளுக்குளம் நேரியகுளம் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இன்றுடன் மழை நின்றால் இன்னமும் மூன்றுதினங்களில் வெள்ளம் வடிந்துவிடும் என்று நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்தார்.

திருநாவற்குளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மழைநீர், கிணற்றுநீர், மலசலக்கூட நீர் ஆகியவை ஒன்றாகக் கலந்துள்ளதால் தொற்றுநொய் பரவும் அபாயம் உள்ளது. திருநாவற்குளத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 800 பொதுமக்கள் திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளனர். இப்பபகுதியைப் பார்வையிட்டபொழுது வவுனியா நகரசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் குமாரசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

மக்கள் கைக்குழந்தைகளுடன் உணவின்றி பெரும் துன்பப்படுகின்றனர். இவர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரும் சேவாலங்கா தொண்டு நிறுவனத்தினரும் சமைத்த உணவு மற்றும் ஏனைய உதவிகளைச் செய்கின்றனர்.

இதேபோல் பத்தினியார் மகிழங்குளம், பெரியார்குளம் மற்றும் தாண்டிக்குளம் பகுதிகளிலும் வீடுகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.
வெள்ளநிலைமைகள் தொடர்பாக அரச அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.