Monday, January 31, 2011

உள்ளுராட்சித் தேர்தல் எமது கட்சி பங்குபற்றாது

பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிக்கை தமிழர்களின் அரசியற் கட்சிகளிற்கிடையிலான ஐக்கியத்தையும் எமது கட்சியின் யதார்த்த நிலையையும் கருத்தில் கொண்டு இம்முறை உள்ளுராட்சித்; தேர்தலில் நாம் பங்கு பற்றுவதில்லை என தீர்மானித்துள்ளோம. இதனை எமது கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் அறியத் தருவது காலத்தின் தேவை என்பதைக் கருத்திற் கொண்டே இவ்வறிக்கையை வெளியிடுகின்றோம்.

தமிழ்மக்களுக்கான ஓர் அரசியல் அதிகார விடுதலையைப் பெறல், சமூக அடிமைத் தளைகள் ஒடுக்குமுறைகளை ஒழித்தல், பொருளாதார சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டல், முற்போக்கான சர்வதேச உறவுகளை வலுப்படுத்துதல் என்ற அடிப்படையில் தோழர் நாபாவின் வழிகாட்டலில் ஒரு புரட்சிகர இயக்கமாகச் செயற்பட்ட நாம் காலப்போக்கில் தேர்தல்களில் பங்குபெறுவதற்கும் முக்கியத்துவமளிக்க வேண்டியவர்களானோம். புலிகள் வல்லமை கொண்டவர்களாக இருந்த போது மக்களோடு உறவுகளைப் பேணுவதற்கும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியல் தக்க வைப்பதற்காகவும் நாம் தேர்தல்களில் பங்குபற்றினோம். இன்று மக்களோடு நெருங்கிப் பழகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் தேர்தல்களில் எமது கட்சி வெற்றிகரமான ஒன்றாக இருப்பதற்கான மக்கள் பலம் இப்போது எம்மிடம் இல்லை. அதனை வெற்றிகரமாக ஆக்குவதற்கான கட்சிக் கட்டமைப்புப் பலத்தையும் நாம் இன்னமும் அடையவில்லை, தேர்தல்களைச் சந்திக்கும் பணபலமும் எம்மிடமில்லை. 

இந்நிலையில் தேர்தல் ஒன்றைச் சந்திப்பதானால் தமிழர்களிடையேயுள்ள கட்சிகளுக்கிடையில் ஓர் ஐக்கியம் ஏற்படும் பட்சத்தில் நாமும் பங்குபற்றலாம் என முடிவு செய்திருந்தோம். ஆனால் அதற்கான நிலைரமைகள்; ஏற்படவில்லை. இந்நிலையில் எமது கட்சியானது எதிர்வரும் தேர்தலில் எந்த வகையிலும் பங்கு பற்றுவது சாத்தியமுமில்ல சரியானதுமல்ல என முடிவு செய்துள்ளோம்.. தேர்தல்களில் எமது கட்சி மீண்டும் எப்போது பங்குபற்றும் என்பதைத் தீர்மானிப்பதற்கு முதலில் எமது கட்சியை அதன் புரட்சிகர முற்போக்குக் குணாம்சங்களிலிருந்து பிசகாது இயங்கும் நிலையை உறுதிப்படுத்துவோம்! ஒரு புரட்சிகரக் கட்சிக்குரிய அடிப்படைகளில் முறைப்படுத்தப்பட்ட கட்சிக்கட்டமைப்பை பரந்துபட்டதாக கட்டியெழுப்புவோம்! பரந்துபட்ட பொதுமக்கள் மத்தியில் காத்திரமான தாக்கமுடைய சக்திகொண்ட கட்சியாக எமது கட்சியை வளர்ச்சியடையச் செய்வோம்! இந்த அரசியல் வேலைத்திட்டங்களையே எமது கட்சியின் அடுத்துவரும் காலகட்டத்து;கான செயற்திட்டமாகக் கொண்டு செயற்படுவோம் என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறோம்.; எமது கட்சி எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது மேலும் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு மக்களை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக வளர்ச்சியடைந்திருக்கிறோம். என்பதைப் பொறுத்து நாம் பின்னொரு தடவை மீண்டும் தேர்தலில் பங்குபற்றுவது பற்றி தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு தேர்தல்களில் பங்குபற்றும் விவகாரங்களை நாம் பின்தள்ளிப் போட்டிருக்கிறோம். 

இன்னும் இன்னும் எதிரிகள் வேண்டும்

உள்ளுராட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழினத்தின் ஒற்றுமை பற்றியும், ஒன்றுபட்டு வாக்களிப்பதால் தமிழர்கள் அடையக் கூடிய வீறு பற்றியும், எதிரிகளுக்குக் காட்டக் கூடிய பயப்பீதி பற்றியும் மீண்டும் ஒரு சுற்று பிரலாபங்களைக் கேட்டு சில வாரங்களுக்கு நம் தலையில் கிறுகிறுப்பை ஏற்றிக் கொண்டு உலாவரக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் போகிறது.

இதுவரை காலமும் வாக்களிப்பில் ஒற்றுமையை சரிவரக் காட்டாததன் காரணமாகவே இன்னும் அவலங்கள் தொடர்கின்றன. இம்முறை மூச்சுப்பிடித்து அந்தப் பிழையை சரிசெய்துவிட வேண்டும். உலக எதிரிகளை வீராவேசத்துடன் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருக்கக் கூடிய யாருக்காவது ஏகப்பிரதிநிதித்துவத்தைக் கொடுத்து விட்டால், நம் கவலை எல்லாம் தீர்ந்துவிடும். இந்தத் தேர்தலிலாவது அதைச் சாதித்துவிட வேண்டும். இல்லையேல் அடுத்த தேர்தலுக்கும் தமிழர்தம் ஒற்றுமையின்மை பற்றிய கவலையையே நம் மற்றெல்லாக் கவலைகளையும் விடப் பெருத்த கவலையாகப் பட வேண்டியிருக்கும் என்ற பதகளிப்பு நமக்கு உருவாகப் போகிறது.

தலைவர்களும் பத்திரிகைகளும், நம்மை நாமே நொந்து கொள்ளுமளவுக்கு, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வின் மகத்துவத்தை, அதே மாறாத ஞாயங்களோடு எடுத்தோதப் போகிறார்கள். இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையே கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது மட்டும்தான் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ‘இந்தியன்’ உணர்வு ஏற்படுவதாகச் சொல்லப்படுவதுண்டு. அதுபோல, இங்கே இப்படி ஏதாவது தேர்தல் வரும்போதுதான் நாமும் தன்மானத் தமிழர்களாய் உணர்ந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கிறது.

இன்றும் ஒரு தகவல்


உறவால் முன்னேறிய தேசம்

தமிழ் சினிமாவில் ஹீரோ 5 நிமிட பாடலிலே வாழ்வின் அடிமட்டத்திலிருந்து மிகப்பெரிய கோடீஸ்வரனாக முன்னேறியதாக காட்டுவார்வகள். நிஜவாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அத்தனை சுலபமில்லை. தனி மனிதனுக்கே இத்தனை சிரமம் என்றால் ஒரு நாட்டின் முன்னேற்றம் எவ்வளவு கடினமானதாக இருக்கும். ஆனால் ஒரு தேசத்தின் முன்னேற்றம் மற்ற எல்லா நாடுகளையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது என்றால், அது ஜப்பான் தான். ஜப்பானின் முன்னேற்றம் மற்ற நாடுகளுக்கெல்லாம் படிப்பினை சொல்லும் முன்னேற்றம்.

நவீன தொழில்நுட்பத்தின் தாயகம் ஜப்பான்தான். தொழில் நுட்பம், எந்திரங்கள், பயோமெடிகல்ஸ் போன்ற துறைகளில் மற்ற நாடுகள் ஜப்பானை நெருங்ககூட முடியாது. 13 கோடி மக்கள் தொகை கொண்ட ஜப்பானில் 7 லட்சம் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆராய்ச்சிக்காக 13 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஜப்பான் செலவழிக்கிறது. இதுவரை ஜப்பானில் 13 விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்று இருக்கிறார்கள்.

ரோபோக்களை தயாரிப்பதில் ஜப்பானுக்கு இணையாக எந்த ஒரு நாட்டையும் பார்க்க முடியாது. உலகில் இருக்கும் பல தொழிற்சாலைகளில் இன்றைக்கு ரோபோ பயன்ப்படுத்தப்படுகிறது. இப்படி பயன்படுத்தும் ரோபோக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 7 லட்சம். அதில் 4 லட்சம் ரோபோக்கள் ஜப்பானின் கைவண்ணத்தில் உருவானவை.

எலக்ட்ரானிக் துறையில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஜப்பானுக்கு ஆட்டோமொபைல் துறையும் பெருமைமிக்கதுதான். உலக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து வாகனகள் எல்லாமே ஜப்பானின் தயாரிப்புதான். இந்தியாவிலும் அம்பாசிடர், பியட்டுக்கு அடுத்து களம் இறங்கிய மாருதி சுசுகி, ஜப்பானின் கூட்டு முயற்சியில் உருவானது தான்.      

உலகின் முக்கியமான அட்டோமொபைல் நிறுவனங்களில் ஜப்பானில்தான் 15 நிறுவனங்கள் உள்ளன. கார், டூவீலர்கள் தயாரிப்பில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது. 60 வருடங்களுக்கு முன்பு அணுகுண்டு தாக்குதலில் சீர்குலைந்துபோன இந்த குட்டி நாடான ஜப்பான் எப்படி இவ்வளவு பிரமாண்டமான அசுர வளர்ச்சியை எட்டியது என்று உலக நாடுகள் பலவும் ஜப்பானை உற்று நோக்கத் தொடங்கின. ஜப்பானின் முன்னேற்றம் குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆராய்ச்சியின் முடிவில் இரண்டு காரணங்கள் அவர்களுக்கு கிடைத்தன. 

அதன்படி ஜப்பானின் முன்னேற்றத்திற்கு முதல் காரணம் கடினமான உழைப்பு. இரண்டாவது காரணம் உறவு. ஆமாம். ஜப்பானில் ஒரு தொழிற்சாலை அல்லது நிறுவனத்தின் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே உள்ள உறவு ஒரு குடும்பம் போலவே இருக்கிறது.

நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் கூட அதிகாரிகளை, விஞ்ஞானிகளை, முதலாளியை எப்போது வேண்டுமானாலும் சாதரணமாக பார்த்து பேசலாம். தனக்கு தோன்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். நிறுவனம் குறித்த கருத்து என்றால் எப்படிப்பட்ட வேலையையும் ஒதுக்கி வைத்து விட்டு தொழிலாளி கூறும் கருத்தை செவி கொடுத்து கேட்பார். இந்த உறவு முறையால்தான் ஜப்பானில் எல்லோரும் நிறுவனத்தை தங்கள் குடும்பமாகவே நினைக்கிறார்கள். இந்த நேசிப்புதான் நிறுவனத்தை மட்டுமல்ல; நாட்டையும் முன்னேற்றி இருக்கிறது.   

Saturday, January 29, 2011

வாழும்போதே வானைத் தொடு!

வானம்... உயரங்களின் உதாரணம். காரணம், தொட முடியாத தொலைவு.

வானம்... பறந்து செல்லும் பறவைகளின் சுதந்திர பூமி. நட்சத்திரப் பூக்கள் கண் சிமிட்டும் அழகிய நந்தவனம்.

வண்ணங்களின் ஏழடுக்காம் வானவில்லின் பிறப்பிடம். வெண்மையும், கருமையுமாய் வளர்ந்து செல்லும் மேகக் கூட்டங்கள், கவிஞர்களுக்குக் கற்பனைச் சுரங்கம்.

அண்ணாந்து பார்க்கிறேன். போதிமரமாய் வானம் புதுப்புதுச் சிந்தனைகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது.

மில்டன் ஆஸ்லன், பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர். 'கூஸ்' என்ற வாத்து இனத்தைச் சார்ந்த பறவையைப் பற்றி அதிகம் ஆராய்ந்தவர். இந்தப் பறவை 'முட்டாள் பறவை' என்று அழைக்கப்படுகிறது. எதற்காக இப்படி அழைத்தார்கள் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

இந்தப் பறவைகள் கூட்டமாகப் பறக்கும்போது எப்போதும் ஆங்கில 'வி' வடிவத்தில்தான் பறக்கும். ஏனென்றால் தனித்தனியாகப் பறப்பதை விட 'வி ' வடிவத்தில் பறக்கிறபோது பறவைக் கூட்டத்தின் பறப்பு எல்லை அதிகமாகிறது.

பறக்கும்போது ஒரு பறவை தவறுதலாக வடிவமைப்பிலிருந்து விலகிவிட்டால் அப்பறவை உடனடியாகத் தன்னுடைய பழைய இடத்துக்கு வராது. வடிவமைப்பின் பின்னால் போய் விடும். முன்னால் பறக்கும் பறவைகளின் உந்துசக்தியால் ஈர்க்கப்பட்டு இப்பறவையும் விரைவிலேயே வரிசைக்கு வந்து விடும்.

தலைவனாக முன்வரிசையில் பறக்கும் 'கூஸ்', எப்போதாவது சோர் வடைந்தால் கடைசி வரிசைக்கு வந்துவிடும். உடனே இன்னொரு பறவை தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். கடைசி வரிசையில் பறக்கும் பறவைகள் அடிக்கடி ஆரவாரக் குரல் எழுப்பி மற்ற பறவைகளுக்கு உற்சாகம் ஊட்டும்.

கூட்டத்தில் ஒரு பறவைக்குத் திடீரென உடல்நலம் கெட்டுவிட்டாலோ அல்லது வேட்டையாடுபவர்களால் குண்டடி பட்டுவிட்டாலோ அது வடிவமைப்பை விட்டுத் தன்னையறியாமலேயே விலக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

உடனே என்ன நடக்கும் தெரியுமா? யாராலும் நம்ப முடியாத ஆச்சரியம் அது. இரண்டு பறவைகள் அந்த உடல்நலமற்ற குண்டடி பட்ட பறவையைப் பத்திரமாகக் கீழே தரைக்குக் கூட்டிக் கொண்டு வரும். அதனுடனேயே இருந்து அதற்கு உணவு அளித்து அந்த நோயாளியைப் பாதுகாக்கும். அந்தப் பறவையின் உடல்நிலை தேறும் வரை காத்திருந்து அதைத் தங்களுடன் கூட்டிக் கொண்டு போகும். அப்பறவை உடல் நலம் தேறாமல் இறந்து போனால் மறுபடியும் கூட்டத்துடன் அந்த இரண்டு பறவைகளும் வந்து சேர்ந்து கொள்ளும். இப்படி வானத்திலிருந்தும், வானத்தில் பறந்து செல்லும் பறவைகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்வதற்குக் கணக்கற்ற பாடங்கள் உள்ளன.

மீண்டும் அண்ணாந்து பார்க்கிறேன். வானம் அளவு உயர்ந்தவர்களின் வாழ்க்கை கண்களில் காட்சியாய்த் தெரிகிறது.

அப்துல் கலாம்... இந்தியாவின் மேல் கூரையில் விஞ்ஞானக் கொடி ஏற்றியவர். உலகம் இந்தியாவைப் பார்த்து முதல் முறையாக மிரண்டது, அக்னி ஏவுகணை ஆகாயத்தைக் கிழித்தபோது. உலகம் இந்தியாவை மரியாதையுடன் பார்த்தது, பொக்ரானில் ஒரு பேரொலி கேட்டபோது.

இந்த வெற்றிகளின் பிறப்பிடம்தான் அப்துல்கலாம். அவருக்கு எப்படி இந்தச் சாதனை சாத்தியமாயிற்று? அவரே சொல்கிறார்-

'நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே வானத்து மாயாஜாலங்கள், வானவீதியில் வட்டமடிக்கும் பறவைக் கூட்டங்களைப் பார்த்துப் பார்த்துப் பரவச மடைவேன். உச்சியில் பறக்கும் கொக்குகளையும், சீகல் பறவைகளையும் அடிக்கடி கவனித்துப் பார்ப்பேன். நாமும் அதைப் போலப் பறந்தால் நன்றாயிருக் குமே என்று ஏக்கமாக இருக்கும்.

சாதாரண நாட்டுப்புறத்துப் பையனாக இருந்தாலும் நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன் என்று எனக்குள்ளே திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்வேன். ஆகாயத்தில் பறந்த ராமேஸ்வரத்தின் முதல் குழந்தை நானாகத்தான் இருப்பேன்...' என்று தன் சுயசரிதைப் புத்தகமான அக்னிச் சிறகுகளில் அச்சில் நேர்த்தியாகத் தன் வாழ்வியலைப் பதிவு செய்துள்ளார் கலாம்.

'வாழும் போதே வானைத் தொடு' என்பதற்கு முன்னுதாரணம் அப்துல்கலாம்தான். ஆம்! இன்று அவரது புகழ் வானளவு உயர்ந்திருக்கிறது. காரணம், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே வானைத் தொட வேண்டும் என்ற அவரின் இலட்சியக் கனவுதான். அதுதான் விமானப் பொறியியல் படிப்பில் அவரை ஈடுபடச் செய்தது.

இனிய இளையோரே! இந்த இடத்தில் ஒன்றை உங்களிடம் பதிவு செய்தாக வேண்டும். அப்துல் கலாம் படித்து முடிந்தவுடன் அவருக்கு வேலை கிடைத்திருக்கும். அதனால் அவர் உயரத்திற்குச் சென்றிருக்கிறார் என்றுதான் உங்களது மனம் நினைத்திருக்கும். உண்மையில், என்ன நடந்தது தெரியுமா? அதையும் கலாம் பதிவு செய்திருக்கிறார் தனது நூலில்.

'ஒரு நேர்முகத் தேர்வுக்காக விண்ணப்பித்து அதற்கான அழைப்புக் கடிதமும் கிடைக்கப் பெற்றேன். டேராடூனில் நடைபெற்ற மிகக் கடுமையான நேர் முகத் தேர்வு அது. உடல் அறிவுத் திறன் போன்ற அம்சங்களை அப்போட்டியில் சோதித்தார்கள். பனிரெண்டு பேர் போட்டியாளர்கள். அவர்களில் பதினொரு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீக்கப்பட்ட துரதிஷ்டசாலி நான்தான்' என்கிறார்.

அடடா... இவருக்கா அந்தச் சோதனை என்று நீங்களும் வியப்படைகின்றீர்களா? தேர்வில் தோற்றுப்போன அவர், வானத்தில் வலம் வந்தது எப்படி?

போர்க் களத்தில் கலங்கியிருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தமது விசுவரூப தரிசனத்தைக் காட்டி வழங்கிய அருளாணை, 'தோல்வி மனப்பான்மையைத் தோற்கடி' என்பதுதான்.

சிந்திய வியர்வையும், ஆற்றலும்தான் அப்துல்கலாமை தோல்வி மனப்பான்மையைத் தோற்கடிக்கச் செய்து வானவீதியில் வலம் வரச் செய்தன. இளையோரே! மண்ணில் கால் பதித்து விண்ணில் தன் புகழை எட்டச் செய்த அந்த மாமனிதர் அப்துல்கலாமுக்குச் சலாம் செய்யுங்கள்.

அன்பானவர்களே!

'நீங்களும் வானத்தைத் தொட நினைக்கின்றீர்களா? வெற்றியை எட்டும் நோக்கம் இருந்தால் ஒற்றைச் சிறகிலும் பறக்கலாம்' என்பார் கவிஞர் தாராபாரதி. அந்த வெற்றியை எட்ட ஆறு வகையான பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நேர்மை, நாணயம், நம்பிக்கை, கண்ணியம், அன்பு, விசுவாசம் இவைதான் அந்தப் பண்புகள். இந்த ஆறு படிகளை உங்கள் வாழ்க்கையிலும் எடுத்து வைத்துப் பாருங்கள். வாழும்போதே வானைத் தொடுவீர்கள். ஒரு வேண்டுகோள். சிகரத்தைத் தொட படிக்கட்டுகளில் பயணத்தைத் தொடங்குங்கள். அதுவும் ஒரு சமயத்தில் ஒரு படிக்கட்டு என்ற விகிதாச்சாரத்தில் இருக்கட்டும். ஆறு படிக்கட்டுகள் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. முயற்சிகளைத் தொடருங்கள். தொடங்கிவிட்டீர்களா? இதோ கவிஞர் மு. மேத்தா எழுதிய திரைப்படப் பாடல் என் செவிகளில் வந்து ஒரு சேதி சொல்லுகிறது-

நட்சத்திர ஜன்னலில்
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் - நம்
உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப் போடு புது
வாழ்வில் கீதம் பாடு.

இந்தப் பாடல் வரிகள் உங்களுக்குள்ளும் தன்னம்பிக்கையை விதைக்கும். வானளவு வெற்றியை எட்ட வாழ்த்துகள்.
பேராசிரியர்
க. ராமச்சந்திரன்

Friday, January 28, 2011

மன்னர் காலத்து ஆவேசங்களுடன் மடிந்து சிதையும் தமிழர்கள்தானா இன்னும் நாம்?

நம்மைப் பற்றிய அதீத நினைப்புகளோடு மற்றெல்லோரையும் விலக்கி எதிரிகளாக்கியபடியும், பகைவெறுப்பை மிகைப்படுத்தும் உணர்ச்சி வேகங்களை ஏத்திவிட்டபடியும் நம் வளங்களையும் சமூகமனோபலத்தையும் சிதைப்பதற்கு நாமும் உடந்தையாக இருந்துவிட்டோம். யதார்த்தத்திற்கோ, உலகச் சூழ்நிலைமைக்கோ, சமூகப் பொது விவேகத்திற்கோ எப்பனும் இடம்கொடாது வெறும் மோட்டு எழுப்பத் துள்ளுகைகளால் பாடுகேடாய் அடிவாங்கிக் கொண்டதெல்லாம் முடிந்த கதை.

நம்மைத் தவிர்த்துப் பிற சமூகங்களெல்லாம் மோட்டுச் சமூகங்களே என்னுமொரு கிணற்றுத்தவளை நினைப்பை வளர்த்து, அதையே ஒரே பிடியாய் நம்பவும் செய்து, நம் பிரச்சினைக்கான மாற்று அணுகுமுறைகளையெல்லாம் ஒதுக்கிச் சண்டியர்களை வாய்பார்த்திருக்கும் சமூகமானோம். அழித்து முடிக்கும்வரை அவர்களுக்கு எதையும் சொல்ல முடியாதவர்களாக இருந்தோம்.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை வாய்ப்பையும் குழப்பினோம். சந்திரிகா அரசாங்கம் பிரேரித்த தீர்வையும் துவக்கு முனையால் தள்ளிவிட்டுத் துள்ளினோம்.

நாம் செய்ய வேண்டியவை பற்றி நாமே சிந்திக்கும் பொறுப்பைத் தட்டிக்கழித்து, யாரையேனும் நம்பிப் பார்த்துக்கொண்டிருத்தலே சுகம் என்று நம்மை நாம் பழக்கப்படுத்திப் பலகாலமாகிவிட்டது. இந்தியாவைப் பார்த்திருந்து, பிறகு புலிகளைப் பார்த்திருந்து பழக்கப்பட்டதன் பலனாக, இப்போது என்ன செய்யப் போகிறார் என்று மகிந்தவைப் பார்த்துக்கொண்டிருப்போம் என்றாகிவிட்டது.
“நீங்கள் தனியாக இருக்கும்போது ஒரு புலி எதிரே வந்தால் என்ன செய்வீர்கள்?” என்றொருத்தர் கேட்டதற்கு, “நான் என்ன செய்வது எது செய்தாலும் புலிதான் செய்ய வேண்டும்” என்று மற்றவர் பதிலளித்த கதை கேட்டிருக்கிறோமல்லவா? அதுதானே நம் கதையும்!

சரி, மகிந்த என்ன செய்யப் போகிறார் என்பதை நாம் சேர்ந்தொன்றாய்க் கேட்போமே என்று சிலருக்கேனும் புத்தி வந்திருப்பதை மெச்சத்தான் வேண்டும். இன்னும் பலருக்கு, வழமைபோலக் குற்றச்சாட்டுகளையும் குறைகளையும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தால், வெளியில் இருந்து எவரேனும் வந்து எல்லாவற்றையும் சரிபண்ணிவிட்டுப் போவார்கள் என்ற கனவு கலையாமலே இருக்கிறது.

நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது, குடியேற்றம் நடக்கிறது, ராணுவத்தினர் பிடி இளகுவதாக இல்லை, ராணுவப் பின்பலத்துடன் பெரும்பான்மை இனத்தவர் தமிழ்ப்பிரதேசங்களுக்கு வருதலும் வர்த்தகம் செய்தலும் நடப்புடன் உலவுதலும் நடக்கிறது, மீள்குடியேறியோர் தொடர்பாய் அரசின் அக்கறைக் குறைவு, தீர்வுப் பேச்சில் மெத்தனம் எனப் பிரச்சினைகளை எல்லாம் வாய்ப்புலம்பல் அளவிலேயே வைத்தபடி இருக்கின்றனர். திட்டம் ஏதுமின்றி அரற்றுதல், வெளியாரிடம் முறையிடுதல், உள்ளுக்குள் தீர்க்க வழியேதுமில்லை என்று மக்களுக்குத் தொடர்ந்து உணர்ச்சி ஊசியடித்தல் போன்றவற்றையே இவர்கள் செய்துவருகின்றனர். பத்திரிகைகள், ஊடகங்கள், புத்திஜீவிகள் எனப்படுவோரும் இதற்குமேல் சொல்ல எதுவுமில்லாத வெற்றுப் புலம்பலுடனேயே நின்றுவிடுகிறார்கள்.

கையாலாகாத்தனப் புலம்பல்களையும், விவேகமற்ற உசார்மடத்தன இனமான வீரப்பேச்சுக்களையும் அள்ளிவிட்டுக் கொண்டே வெற்று ரோசமூட்டி, படுகுழிப் பயண வழிகாட்டும் ஆரவாரப் பிரமுகர்களை நிறுத்திக் கேள்விகள் கேட்டு விலக்க வேண்டிய தருணம் இது. நிலைமையை மாற்றுவதற்கான எங்கள் தரப்பு முயற்சிகளைப் பேசுகிறவர்களை, திட்டமிட்டுச் செயற்படுகிறவர்களை நாம் இனங்கண்டாக வேண்டும்.

இன்றைய நிலைமை வரவேற்புக்குரியது என்றோ அல்லது வருத்தத்துக்குரியது என்றோ வெறுமனே விளக்கமளித்துக் கொண்டிருப்பதால் மக்களுக்கு எந்த மாற்றமும் கிட்டப் போவதில்லை. இன்றைய சூழலை எதிர்கொள்ளுதலுக்கான திட்டமிடலும் அதுகுறித்த தயாரிப்பு நிலையும் நமக்குத் தேவை. குற்றச்சாட்டுகள் குறைகள் பற்றிய நம் எதிர்ப்புணர்வை விரோதபாவத்துடன் அணுகிக் காரியத்தைக் கெடுக்கும் ‘பொப்பியுலிச அரசியல்’ ஏமாற்றை இனியும் செய்துகொண்டிருக்கக் கூடாது. மக்கள் சிறிது சிறிதாகவேனும் பழைய நிலைக்கு மீண்டாக வேண்டும். அதற்கான குறைந்தபட்ச அதிகாரங்களையேனும் பெற்று படிப்படியாக முன்னகரும் விவேகமே உடனடித் தேவை. மோட்டுப் பிடிவாதங்களால் எதிர்த்தரப்புக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து மேலும் மேலும் மோசமான நிலைமைக்கு நம்மைத் தள்ளிச்செல்ல அனுமதித்துவிடக் கூடாது.
 
சாதாரண மக்களைப் பொறுத்தவரை, நேரடியான பாதிப்புகளைத் தருகிற உடனடி எதிரிகளே அவர்களுக்குப் பூதாகரமாகத் தெரிவர். தூரநோக்கில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய, நேரிடையாகப் புலப்படாமல் நிதானமாகச் சிந்திக்கும்போது மட்டுமே தெரிந்துகொள்ளக் கூடிய ஆபத்தான எதிரிகளை அவர்கள் உடனடியாக இனங்காண மறுப்பர். அந்த எதிரிகளை நண்பர்களாகவும் ஆபத்பாந்தவர்களாகவும் கருதும் போக்கும் அவர்களிடம் காணப்படும். அன்டோனியோ கிராம்சி போன்றவர்கள் இந்த சாதாரணமக்கள் மனநிலை குறித்து விளக்கியுள்ளனர்.

நாமும் இப்படித்தான் இன்னமும் உள்ளோம். நமக்கு அழிவுகளையும் வாழ்விழப்பையும் ஏற்படுத்தக் கூடிய கூறுகளை இனங்கண்டு கொள்ளாமல், எதையெதையோ நம்பி உணர்ச்சிகர எதிர்ப்பையே பிரதானப்படுத்திச் சீரழிந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைக் காப்பாற்றக்கூடிய உரிமைகளையும் அதிகாரங்களையும் மெல்ல மெல்லப் பெற்று விரிவாக்கி முன்னேறும் விவேகத்தைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக நம்மையுமழித்துப் பிறரைப் பழிவாங்கித் திருப்திகொள்ளும் குகைமனிதர் காலத்து வன்முறையையே உன்னதத் தமிழ்வீரமெனக் கொண்டாடுகிறோம். இப்போதும் வெற்று உணர்ச்சியேற்றல்களுக்கு வசமிழந்து குமுறிக் கொண்டிருப்பதேயல்லாமல் வேறு புத்திசாதுரிய நகர்வுகள் குறித்துக் கேள்விகள் கேட்கும் நிலைக்கு வரக்காணோம்.

வன்முறை நப்பாசைகளெல்லாம் மீண்டும் முள்ளிவாய்க்கால் பயணத்திற்கான அடுக்குகளே தவிர வேறெந்த வாழ்வுமல்ல என்பதை, வீரச்சவடால்களை நிறுத்தி நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம் உரிமைகளையும் அதிகாரப்பகிர்வையும் சாதித்துக் கொள்வதற்கு, வன்முறை தவிர்த்த புத்திசாதுரியமான வழிமுறைகளைத் தேடிக் கைக்கொள்ளும் திராணி பெற வேண்டும். சினங்கொண்டு சீறிப் பூச்சாண்டி காட்டுவது, பழிக்குப் பழியாவேசத்தில் விவேகமற்றுத் துடிப்பது, திருப்பித் தாக்குவதொன்றே உயிர்வாழ்வதற்கான நியதி என்றெல்லாம் இனியும் நடித்துக்கொண்டும் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டும் இருக்க முடியாது. மேலும் மேலும் மக்களை மன்னர்கால ஆவேசத்திற்கு மடிய விடமுடியாது.

காந்தி, மண்டேலா, கிழக்குத் திமோரியர்களிடமிருந்தெல்லாம் நாம் கற்றுக்கொள்ள இருப்பவைகளைப் பார்க்க வேண்டும். 

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி சொன்னார்:
“சமூகம் அகிம்சையை உள்வாங்கினால், மக்கள் வன்முறையின்மைக்குப் பழகிவிடுவார்கள். இதனால் இராணுவ அதிகாரத்திற்குப் பதில் சிவில் அதிகாரம் முதன்மை பெறும். ஆகவே அகிம்சை வழியில் சுயராஜ்யமென்பது குழப்பத்துக்கும் அராஜகத்துக்குமான இடைவெளி என்ற அர்த்தமுடையதல்ல. அகிம்சை மூலமான சுயராஜ்யம் ஒரு முற்போக்கான அமைதிப் புரட்சியாகும். மூடிய அமைப்பிலிருந்து இயல்பாகவே மக்களின் கைக்கு அதிகாரம் மாறும் நிகழ்வாகும். பழுத்த பழம் மரத்திலிருந்து தானாக உதிர்வது போன்ற நிகழ்வாகும். அத்தகைய நிகழ்வு அடைய முடியாத ஒன்றாக இருக்கலாம் என்று நான் மீண்டும் சொல்கிறேன். ஆனால், அகிம்சையை சம்பந்தப்படுத்துவதை விட வேறு எனக்குத் தெரியாது. இன்றைய தொண்டர்கள் வன்முறையற்ற சூழல் உருவாகும் என்பதை நம்பாவிடில், அவர்கள் அகிம்சைப் போராட்டத்தை முற்றாகக் கைவிட்டு, வேறு வழியைப் பின்பற்ற வேண்டும். பிரிட்டிஷாரிடம் இருந்து வன்முறை மூலமே சுதந்திரம் பெறலாம் என்று மனதினுள் நினைத்துக்கொண்டு, அகிம்சையைப் பின்பற்றினால் நாங்கள் உண்மையற்றவர்களாவோம். எமது அகிம்சை நாம் நம்பும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்துக்கு விட்டுக்கொடுப்பது போல், பிரிட்டிஷ் மக்கள் அன்பு என்ற சக்திக்கும் இணங்கி நடப்பார்கள் என்று நாம் நம்ப வேண்டும். இதை நம்பாதவர்களுக்கு பல தலைமுறையாக, நீடித்துச் செல்லக்கூடிய இரத்தக்களரியுடனான, முன் எப்போதும் கண்டிராத புரட்சியே அனுபவமாகும். அத்தகைய புரட்சியில் பங்கேற்க எனக்கு விருப்பமில்லை. நான் அதை தூண்டும் கருவியாகவும் இருக்க விரும்பேன்.”

காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளவும் நமக்கு நிறைய உண்டு.

எத்தனுக்கு எத்தன்!

ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம்தான். 1922-ல் லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் ஆர்தர் பெர்குசன் என்பவர் உலவிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் அமெரிக்கர், அங்குள்ள நெல்சன் நினைவுத் தூணை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார். தன்னை ஒரு வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக் கொண்டார் ஆர்தர்.

போரில் பட்ட கடனைத் தீர்க்க புராதனப் பொருட்களை இங்கிலாந்து விற்று வருவதாகவும், அந்த வேலையை ரகசியமாகத் தன்னிடம் ஒப்படைத்திருப்பதாகவும் ஆர்தர் கூறினார். தொடர்ந்து பேசி அந்த அமெரிக்க நாட்டவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய ஆர்தர், நெல்சன் தூணை விலை பேசி அதற்குரிய தொகையை யும் வாங்கிக் கொண்டுவிட்டார்.

தூணை வாங்கியவர் அதைப் பிரித்து எடுப்பதற்கு ஒரு காண்டிராக்டரை அணுகியபோதுதான் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.

அதேபோல, புகழ்பெற்ற பிக்பென் கடிகாரத்தையும் மற்றொரு அமெரிக்கரிடம் ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்றுவிட்டார் ஆர்தர். பக்கிங்காம் அரண்மனையை மற்றொருவரிடம் விலை பேசி 2 ஆயிரம் பவுண்டு முன்பணம் பெற்றார். அத்துடன் நிற்கவில்லை.

அமெரிக்க வெள்ளை மாளிகையை ஆண்டுக்கு லட்சம் டாலர் வீதம் 99 வருடக் குத்தகைக்கு விட்டு, முதல் வருடத் தொகையை முன்பணமாகப் பெற்றார்.

அடுத்து ஆஸ்திரேலியர் ஒருவரிடம் நியூயார்க் சுதந்திரதேவி சிலையை விலை பேசினார். பேரம் முடிந்ததும் இருவரும் சிலை முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் பின்னர், ஆஸ்திரேலியாவில் இருந்து தொகை வந்து சேரத் தாமதமானது. ஆர்தர் பெர்குசனோ அவசரப்பட்டார்.

ஆஸ்திரேலியருக்கு சந்தேகம் வரவே, போலீசை அணுகினார். ஆர்தர் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

1930-ம் ஆண்டு விடுதலையான ஆர்தர் பெர் குசன், லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார். தான் சம்பாதித்த பெருந்தொகையைக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து, 1938-ல் காலமானார்.

Thursday, January 27, 2011

இளமைக்குள் இன்னொரு இமயம்!

இளமைக்குள் இருப்பவர்கள் இளைஞர்கள்.

நானும் இளைஞன்தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர். திரும்பக் கிடைக்காத அந்த தெய்வீக நாட்களை இப்போது நினைத்தாலும் இளமை துளிர்க்கிறது.

இளமை, வாழ்வின் வசந்தகாலம். எழுதும் கவிதையில் காதல் ததும்பும். எழுத்திலும், பேச்சிலும், ஏன் நடையிலும் கூட நளினம் இருக்கும். பிறர் தன்னைப் பார்க்க வேண்டும் என்கிற ஏக்கம் பிறக்கும். பார்த்துவிட்டால் சிறகுகள் முளைக்கும்.

பள்ளி, கல்லூரி நாட்கள் கவலையின் சுவடுகளே பதியாத மகரந்த நாட்கள். போரடிக்கும் வகுப்புகளை `கட்' அடித்துவிட்டு கட்டுப்பாடின்றித் திரிந்த காளைப்பருவம், இரவுகளைப் பகலாக்கிக் கனவுகளில் மிதந்த கனாக்காலம். அதுதான் இளமைக் காலம். நினைக்க நினைக்கப் பசுமை நினைவுகள் மனசெல்லாம் படர்கின்றன.

கடந்து சென்ற ஜனவரி 12 - இளைஞர் தினம்.

வாழ்நாள் முழுவதும் இளைஞர்களுக்காக எழுச்சிக்குரல் கொடுத்த வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்த நாள். இந்த நாள் தேசிய இளையோர் தினமாக தேசமெங்கும் கொண்டாடப்படுகிறது.

'நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்' என்றார் விவேகானந்தர். இளைஞர்களிடம் உள்ள மகத்தான ஆற்றலைத்தான் இவரின் இந்த வைர வரிகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

'ஓர் இளைஞனால் எட்டிப் பிடிக்க முடியாத உயரம் என்று எதுவுமில்லை. அந்த உயரத்தை அடைவதற்கு வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. எல்லாம் உனக்குள்ளே தான் இருக்கின்றன. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன' என்றார் விவேகானந்தர்.
எதிர்காலத்தின் இரும்புத்தூண்களாம் இளைஞர்கள் துருப்பிடித்துத் தேய்ந்துபோய் விடக் கூடாது என்பதற்காக உரத்த சிந்தனைகளை இளைஞர்களுக்கு வாழ்நாளெல்லாம் வழங்கியவர், நம்பிக்கையோடு இளையோரை நடைபயில வைத்தவர், விவேகானந்தர்.

இனிய இளையோரே... நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்பதைத் திடமாகத் தீர்மானிக்க வேண்டிய பருவம் இதுதான். விவேகானந்தரே சொல்வார், 'அடுத்தவனுடைய பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை. உன்னுடைய பாதையை நீ கண்டுபிடி' என்று. ஆம்! நீங்கள் போகவேண்டிய பாதை எது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதுவும் இந்தப்பருவத்தில்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், சாதிப்பதற்கு ஏற்ற வயது இதுதான்.

சரித்திரத்தின் பக்கங்களில் இடம்பெற்ற சிலரை உங்களுக்கு நினைவு
படுத்துகிறேன்...

Wednesday, January 26, 2011

உயிர்த்தெழ வகை தெரியாதவர்கள் சிலுவையில் விரும்பி ஏறக்கூடாது

பூவுலகில் அடர்த்தி மிகுந்து வாழ்கிற மனித இனம் இன்று உள்ளீடான ஒரு நஞ்சை அருந்திக் கொண்டிருக்கிறது என்று லெவி-ஸ்ட்ராஸ் சொன்னார்.

நம்மையே அழித்துக் கொள்ளும் விதமாக மனிதர்கள் நாம் அருந்திக் கொண்டிருக்கும் நஞ்சு எதுவாக இருக்க முடியும்? பகையும் வெறுப்பும்தான். மனிதர்கள் போரையும் வன்முறையையும் உயிரழிவுகளையும் தொடர்ந்து பெருக்கிக் கொண்டிருப்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்ள?

அப்பாவி மக்களின் வாழ்வு அல்லல்களுக்குள் சிக்குப்பட்டுக் கிழிந்து கொண்டிருப்பதை, அநீதிகளும் அநியாயங்களும் நடந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவை எதிர்க்கப்பட வேண்டும் என்பதும் உண்மையே. ஆனால், அநியாயங்களை எல்லாம் ஆவேசமாய் எதிர்த்தபடி செல்வது என்ற ஒற்றைவழிப் போக்கில் இன்றைய சிக்கல்களை விடுவித்துவிட முடியாது. அப்பாவி ஒருவனின் காலடி கூட அவனறியாமல் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்டுவிடும் அமைப்பில் நாம் வாழ்ந்து வருகிறோம். உயிரழிவுகள் தவிர்த்த ஒரு எதிர்ப்பு வழிமுறையையே நாம் கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, மீண்டும் உயிர்த்தெழுவதற்கான வாய்ப்புகளைத் தெரிந்திராதவர்கள், தாமே விரும்பிச் சிலுவையில் ஏறக்கூடாது என்பதையே இந்த முப்பது வருடப் பாடமாக நாம் பெற்றிருக்கிறோம்.

நம் எதிர்பார்ப்புகளை மட்டுமல்ல எதிர்ப்புகளையும் சரிவர அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு வெறுப்பும், வீம்பும், ரோசமும், நம்மிடம் மட்டுமே நியாயம் என்கிற பிடிவாத லட்சியக் கோபங்களும் உதவப் போவதில்லை. மற்றவர்களுடனான இணக்கத்தையும், எதிர்காலம் நோக்கிய பேச்சையும் நிகழ்த்துவதற்கான ஏகுவழியாகவே நமது நீதிக்கான குரலெழுப்புதல்கள் அமைய வேண்டியிருக்கிறது.

சூரியனுக்குக் கீழே உள்ள விஷயங்களிலே மிகவும் குழப்பமானதும் புரிந்துகொள்ள முடியாததுமான ஒரே விஷயம் உண்மை மட்டுமே என்று ஹெர்மன் மெல்வில் சொன்னது சரிதான். ஆவேசங்கள், கும்பல்லோ கோவிந்தா ஆர்ப்பாட்டங்களின் இடையே அது காணாமலடிக்கப்பட்டு விடுகிறது. நமது பத்திரிகைகள் ஊடகங்களும் இதற்குப் பெரும் பங்களித்து வருகின்றன. உண்மையைச் சொல்லிவிடாமல், வெகுமக்களுக்கு உவப்பான கிறுகிறுப்பை ஏத்தும் போட்டியில் விற்பனைக்கு முந்துவதையே அவை தர்மமாய்க் கொண்டுள்ளன போல் தெரிகிறது. பத்திரிகைச் சுதந்திரத்தை விடப் பத்திரிகைகளிடமிருந்து சுதந்திரம்தான் இன்று மக்களுக்குத் தேவை என்று சொல்லப்படுவதை ஒப்புக்கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது நிலைமை. இதுகுறித்தும் நாம் கேள்விகளை வைக்க வேண்டும். பத்திரிகைகள் ஒரு தொழிற்சாலை அல்ல. அது நீதியின் குரலை வெளிப்படுத்துவதாகவே மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்குப் பாதகமாய் பொறுப்பற்ற விதத்தில் அவர்களை வெறுமனே உணர்ச்சிச் சுழலில் உருட்டிக்கொண்டிருக்க கூடாது. அவர்கள் வாழ்வதற்கான வழியை அது மறித்து நிற்பதாகி விடும். இப்படி நம்பகத்தன்மையை இழந்துவிடும் ஒரு ஊடகம் மலக்கழிவு போலவே அருவருக்கப்படும்.

குடியரசு தின வாழ்த்துக்கள்

 
28 மாநிலங்கள்
7 யூனியன் பிரதேசங்கள்
1652 ற்கும் மேற்பட்ட மொழிகள்
6400 க்கும் மேற்பட்ட சாதிகள்
6 க்கும் மேற்பட்ட மதங்கள்
இவையனைத்தையும் தாண்டி
இந்தியன் என்று
ஒன்றிணைவதில்
பெருமைக் கொள்வோம்

Saturday, January 22, 2011

இன்றும் ஒரு தகவல்

பார்வையில்லாதவருக்கும் கனவு வரும்

னவுகள் என்றுமே மகிழ்வை தருபவை. நமக்கு  வரும் கனவுகள் பெரும்பாலானவை நமது மனதுக்கு பிடித்தபடிதான் வருகின்றன. சில கனவுகள் நம்மை பயமுறுத்தும் மற்றபடி சுகமான கனவுகள் தான் அதிகம்.

கனவுகள் மட்டுமல்ல... அதுபற்றிய செய்தியும் சுவாரஸ்யம் மிக்கவைதான். என்னதான் தமன்னாவும், நமீதாவும் போட்டி போட்டுக்கொண்டு கனவில் வந்து ஆடினாலும், கண் விழித்த 5 நிமிடத்தில் பாதிக்கும் மேற்பட்ட கனவுகள் மறந்து விடுகின்றன. 10 நிமிடத்தில் 90 சதவீத கனவுகள் காணாமல் போகின்றன.

கண்பார்வை இழந்தவருக்கு கனவு வரும். அவர்களுக்கு கனவில் வரும் உருவம், தங்கள் மனதில் ஒரு பொருளை எப்படி கற்பனை செய்து வைத்துளார்களோ அதுபோல் வரும். இது பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களுக்குதான். இடையில் பார்வை போனது என்றால் அவர்களுக்கு மற்றவர்களை போல் எல்லா உருவங்களும் முன்பு பார்த்த உருவிலேயே வரும்.

ஆண்களின் கனவில் ஆண்கள்தான் அதிகம் வருவார்கள். பெண்களின் கனவில் ஆண்களும் பெண்களும் சம அளவில் வருவார்கள். குழந்தைகளின் கனவில் அம்மா, அப்பா, ஆசிரியை போன்றவர்கள் தான் அதிகம் வருவார்கள்.

சினிமாவில் வரும் கவர்ச்சிக்கன்னிகள் வருவதெல்லாம் ஆண்களுக்குத்தான் என்று நினைக்க வேண்டாம். பெண்கள் கனவிலும் கவர்ச்சிக்கண்ணன்கள் வருவார்கள். பிறந்தது முதல் இப்போது வரை நம்மை கடந்து சென்ற, நாம் பார்த்த உருவங்கள், முகங்கள் மட்டுமே கனவில் வரும். புதிதாக எதுவும் வருவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கேட்கும் சப்தம் நமது கனவுக்குள்ளும் மென்மையாக புகுந்துவிடும். மார்கழி மாதம் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கோவிலில் இருந்து கேட்கும் பத்திப்பாட்டில் நமது கனவில் புகுந்து கனவை கோவில் பக்கம் திருப்பிவிடும்.

தூங்கும் போது ஆம்புலன்சு வண்டி சத்தத்துடன் சென்றால் அந்த சத்தம் கனவுக்குள் புகுந்துவிடும். ஆம்புலன்சு, ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி வருவது, பரபரப்பாக ஓடுவது போன்ற கனவுகள் வரும். காலையில் எழுந்ததும் நடந்தது தெரியும் போது, நடக்கப்போவது நமக்கு முதலிலேயே தெரிந்துவிட்டது என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை திடீரென்று நிறுத்தினால், அது கனவாக வந்துவிடும். யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக செய்து மாட்டிக்கொள்வது போன்று கனவு வந்து கொண்டே இருக்கும்.                 

Friday, January 21, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

ரேடியோ டிராமா, காமிக்ஸ், டி.வி.தொடர், புரூஸ் லீ, ஆக்ஷன் காமெடி... இந்த ஐந்தில் ஒன்றை மறந்தாலும் பஞ்ச பூதங்களையும் கடந்து பஞ்சமா பாதகங்கள் நம்மை பின்தொடர்ந்து பஞ்சராகிவிடும். காரணம், வெளிவர இருக்கும் 'தி கிரீன் ஹார்னட்' ஹாலிவுட் திரைப்படம் அந்தளவுக்கு சக்தி படைத்தது.

அப்பாவை கொன்றவனை தேடிப்பிடித்து பழி வாங்கும் மகனின் செயல்தான் படத்தின் கதை. 60 நொடிகளுக்குள் படித்துவிடக் கூடிய இந்த ஒன்லைனை தான் 60 நிமிடங்களுக்கும் மேலாக படமாக எடுத்திருக்கிறார்கள். என்ன... வினாடிக்கு வினாடி சிரிக்க வைக்கப் போகிறார்களாம். யெஸ், சிரிப்பு போலீஸ் மாதிரி இது சிரிப்பு ஆக்ஷன் படம்.

ஆனால், படத்தின் ஆணிவேர் இயக்குநர் மைக்கேல் கான்ட்ரியோ அல்லது திரைக்கதை அமைத்து ஹீரோவாகவும் நடித்திருக்கும் சேத் ரோகனோ அல்ல. பதிலாக ஜார்ஜ் டபிள்யூ டிரெண்டிஸ். பற்களை கடித்து உச்சரிக்க வேண்டிய பெயருக்கு சொந்தக்காரரான ஜார்ஜ்தான் இந்த சிரிப்புக்  கதைக்கு சொந்தகாரர்.

1930களின் ஒரு முன்மாலைப் பொழுதில் 'தி கிரீன் ஹார்னட்' கதையை எழுதி முடித்தார். அது ரேடியோவில் நாடகமாக ஒளிபரப்பாகி எட்டு திசையிலும் முரசு கொட்டியது. பிறகென்ன... எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் பொழுது போக்கு பிரியர்களை மகிழ்விப்பதற்காக இதே கதையை பல மாதிரியாக காலம் தோறும் கொத்து பரோட்டா போட ஆரம்பித்தார்கள். எந்த தொழில்நுட்பத்தின் விதிகளுக்கு ஏற்ப சட்டென்று இந்தக் கதையை பொருத்தி விடுவார்கள். கல்லா கட்டுவார்கள். அப்படித்தான் ரேடியோ நாடகம், காமிக்ஸ் புத்தகமாக வெளிவந்தது. இன்றும் இந்த காமிக்ஸ் கதைக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியாக உருவாய், மருவாய், ஒளியாய், விளக்காய் உலா வந்த 'தி கிரீன் ஹார்னட்', 1960களில் ஒளியானது. அதாவது சின்னத்திரை தொடரானது. அத்தொடரில் இரண்டாவது ஹீரோவாக நடித்தவர்தான் ப்ரூஸ் லீ. உண்மையில், செகண்ட் ஹீரோவுக்குதான் கதைப்படி அடிதடி காட்சிகள் உண்டு. அப்படியானால் முதல் ஹீரோ? அவர் டம்மி பீஸ். ரசிகர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டுவதுடன் அவரது வேலை முடிந்துவிடும்.

இந்தத் தொடருக்கு பிறகே புரூஸ் லீ பெரிய திரையில் என்டர் ஆகி டிராகனானார். இப்படி தலைமுறையாக பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கதியாய் திரைப்படமாக்க வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அதை நினைவக்கியிருப்பவர் சேத் ரோகன்தான். ரேடியோ நாடகமாக உலா வந்த காலம் தொட்டு 'தி கிரீன் ஹார்னட்' கதையின் வரலாறு இவருக்கு தெரியும். தன் தலையணைக்கு அடியில் இக்கதையின் காமிக்ஸ் வடிவத்தை வைத்திருக்கிறாராம். அப்போதுதான் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை எடுத்து படிக்க முடியுமாம். பத்திரிக்கை பெட்டியில் இந்த அதிமுக்கிய தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இவான் கோல்ட் பெர்க்குடன் இணைந்து சேத் ரோகன் உருவாக்கிய திரைக்கதையை படித்துப் பார்த்து அசந்து போன கோலம் பியா பிக்சர்ஸ், ரோகனையே படத்தில் ஹீரோவாக நடிக்கும்படி சொல்லிவிட்டது. இயக்குநர் மைக்கேல் கான்ட்ரியும் அதை ஆமோதித்து பச்சைக் கொடி காட்டிவிட்டார். கதைப்படி சாகஸ காட்சிகள், இரண்டாவது ஹீரோவுக்குதான் சொந்தம். எனவே கிச்சுகிச்சு மூட்ட சம்மதித்து சேத்ரோகன் கதாநாயகனாகிவிட்டார்.

3 டி படம் என்பதால் குழந்தைகளுடன் திரையரங்கு வாருங்கள் என வெற்றிலை பக்கு வைத்து அழைக்கிறார் தயாரிப்பாளர். வாங்க மொய் வைத்துவிட்டு சிரிக்கலாம்.

கே.என்.சிவராமன்                          

Tuesday, January 18, 2011

பாரதரத்னா எம்.ஜி.ஆர்.

'மக்கள் திலகம்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நேர்மை, நாணயம், நம்பிக்கை, கட்டுப்பாடு, நற்பண்பு ஆகியவற்றின் மொத்த உருவமாக திகழ்ந்தவர். மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற பெயரின் சுருக்கமே 'எம்.ஜி.ஆர்'. அறிஞர் அண்ணாவின் அன்பு தம்பியான இவரைப் பற்றி பார்ப்போம்.

இளம்பருவம்

எம்.ஜி.ஆர். இலங்கையில் உள்ள கண்ணாடியில் 17.1.1917 -ம் தேதியன்று கோபாலமேனன் - சத்யபாமா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கும்பகோணத்தில் உள்ள ஆணையடிப் பள்ளியில் 3-ம் வகுப்பு வரை படித்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக, எம்.ஜிஆரும் அவரது தமையனாரும் சிறுவயதிலேயே நாடகத்துறையில் ஈடுபட்டு நடிகரானார்கள்.

அரசியல்

எம்.ஜி.ஆர். காந்தியடிகள் மீது பற்று கொண்டு கதர் ஆடை அணிந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கையை பிரச்சாரம் செய்தார். பின்னர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். நாளடைவில், அந்த கட்சியில் பொருளாளராக உயர்ந்தார். எம்.ஜி.ஆர். 1953 முதல் 1972 வரை தி.மு.காவில் இருந்தார். அதன்பின்பு, 17.10.1972-ல் அ.தி.மு.க வைத் தொடங்கினார். 1977 முதல் 1987 வரை தமிழக முதல் அமைச்சராக பதவியில் இருந்தார்.

திரையுலக வாழ்க்கை

7 வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார், எம்.ஜி.ஆர். திரையுலகில் 1934 முதல் 1977 வரை சுமார் 44 ஆண்டுகள் முடிசூடா மன்னராக இருந்தார். மனிதராக பிறந்தவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை தனது திரைப்பட பாடல்களின் மூலம் மக்களுக்கு உணர்த்தினார்.

தொண்டுகள்

பள்ளிகளில் பயிலும் ஏழைக்குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார். அவர்களுக்கு தேவையான உணவு, உடை, புத்தகம், காலணி போன்றவற்றை இலவசமாக வழங்கினார். தன்னிறைவுத் திட்டம், உழவர்களின் கடன் தள்ளுபடி திட்டம், ஆதரவற்ற மகளிருக்கான நலத்திட்டம் என்று பல நல்ல திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்தினார் அதனால், அவரை மக்கள், 'பொன்மனச் செம்மல்', 'புரட்சித்தலைவர்' என்று அழைத்தனர்.

மக்களின் நல்வாழ்விற்காகப் பாடுபட்ட எம்.ஜி.ஆர், 24.12.1987 -ம் தேதியன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பின், 1988-ல், இந்திய அரசு இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கி கவுரவித்தது. தமிழக அரசின் சார்பாக, சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆருக்கு என்று தனியாக நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.  
மா.சவுந்தர்யா, 8-ம் வகுப்பு 
புனித தெரசாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி 
பல்லாவரம், சென்னை - 73.            

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.             

இங்கே நாம் தனியாக இல்லை

எத்தனை தத்துவங்கள், விஞ்ஞானங்கள், வளர்ச்சிகள் இருந்தென்ன? மனிதர்கள் நாகரிகமடைந்திருக்கிறார்கள் என்று இன்னும் தயக்கமின்றிச் சொல்லிக் கொள்வதற்கு முடியவில்லை. உலகம் ரத்தப்பசியோடுதான் இன்னும் அலைகிறது. மனிதர்கள் சரியானதைத் தேர்வு செய்வதில்லை, விருப்பப்படுவதைத்தான் தேர்வு செய்வார்கள் என்றார் ரொஸ்ரோயெவ்ஸ்கி. அந்த விருப்பாவேசங்களால் வில்லங்கங்களை வருவித்துக் கொண்டே அதற்காக அழுது புலம்பிக்கொண்டும் இருக்கும் விவஸ்தையை அல்லது விவஸ்தையின்மையைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அழுதபடியே குறைகளைப் பெருங்குரலெடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தால் யாரவது வந்து கவனிப்பார்கள்தானே என்பதற்கப்பால் வேறு யோசனைகளோ முயற்சிகளோ தேவையில்லை என்றே நம்மில் பெரும்பாலோர் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். “தீர்வை நாம் வலியுறுத்த மாட்டோம்; அது இலங்கை அரசாங்கமும் தமிழ்க்கட்சிகளும் பேசிக் கண்டுகொள்ள வேண்டியது” என்று சிவ்சங்கர் மேனன் சொன்னால், ஒருமுறை திடுக்கிட்டுவிட்டுப் பழையபடி அதற்கும் சேர்த்து எல்லோரையும் ஒருபாட்டம் திட்டிக் கொண்டிருப்பதாகவே இன்னுமிருக்கிறது நம் சூழல்.

நம்மைப் பற்றி நம்மிடமிருக்கும் நல்லபிப்பிராய நினைவிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வது கஷ்டமாகவே இருக்கிறது. எல்லாத் தரப்பும் எல்லா மனிதர்களும் தாம் சரியானவர்கள் என்றே நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால், நாம் மட்டுமே சரி என்று முறுக்கிக் கொண்டு நிற்பது ஒருபோதும் பிரச்சினை தீரப் போதுமானதில்லை. மற்றவர்களின் சரி என்ன என்பது பற்றிய கவனிப்பும் கணிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது. வெறுமனே குறை கண்டுபிடிக்கும் வாதங்களினால் வாழ்க்கையை சீர்செய்துகொள்ள முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான உண்மைகளைச் சொல்லியபடியே தவறான முடிவுக்குச் சென்று சேர்வதில் யாருக்கு நன்மை?

உலகில் கறுப்பு அல்லது வெள்ளையைத் தவிர வேறு வண்ணங்கள் இல்லையென்பது பார்வையிலுள்ள கோளாறுதான். குறைகள் இருக்கலாம். யாரிடம்தான் குறைகள் இல்லை? அல்லது எங்குதான் குறைகள் இல்லை?

பலநூறு பாத்திரங்களோடும் கிளைக் கதைகளோடும் விரிந்து பரந்து கிடப்பது மகாபாரதக் கதை. அதில் எந்த ஒரு பாத்திரமும் குறைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கவில்லை என்பதைப் பார்க்கிறோம். மிக உயர்ந்தவராக வர்ணிக்கப்படுகிற தர்மபுத்திரரின் பாத்திரமே குறைகளும் சறுக்கல்களும் கொண்டதுதான்.

சூதாடியபோது, துரோணர் வகுத்த வியூகத்தை உடைக்க அபிமன்யுவை ஏவியபோது, துரோணரைக் கொல்ல அஸ்வத்தாமன் இறந்தான் என்பது போல் கூறியபோது, கர்ணனிடம் தோல்வியுற்று யுத்தகளத்தை விட்டு விலகியபோது எல்லாம் அவர் தாழ்ந்தார். கர்ணனிடம் அவருக்கிருந்த அச்சம்@ அவனைத் தன்னால் வெல்ல முடியாது என்று புரிந்துகொண்டு அவர் பட்ட துன்பம்@ அவனை அர்ஜூனன் வீழ்த்தி விட்டான் என்று நினைத்து முதலில் மகிழ்ந்து, பின்னர் அப்படி நடக்கவில்லை என்பதறிந்து மனம் குமுறி, அர்ஜூனன் மீது சுடுசொற்களை வாரியிறைத்தமை எல்லாமே அவர் குறைகள்தான்.

ஓரளவிற்கு குறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நின்றவர் என்று கூறத்தக்க விதுரரும், சூதாட்டத்திற்கு அழைக்கச் சென்றபோது தர்மனிடம் சில செய்திகளை ஒற்றன் போலவே தெரிவித்தார். துருபதன் அவமானப்படுத்தினான் என்பதற்காக அவனை வஞ்சம் தீர்த்துக் கொண்டவர் துரோணர். சீடனுக்காக ஏகலைவனையும். அம்பைக்குச் செய்த அநீதிக்காகவே அழிந்தவர் பீஷ்மர். மேலும் இவர்களெல்லாம் திரௌபதியின் மானபங்க நிகழ்ச்சியின் போது வாய்புதைத்து இருந்தவர்களும் கூட.

அவதார புருஷன் ராமனின் குறைகள் பட்டிமண்டபங்கள் முதல் மணிரத்னத்தின் ராவணன் படம் வரை பேசப்பட்டு விட்டது.

தவறுகளையும் சேர்த்துத்தான் நாம் மனிதர்கள். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதும் உண்மையே. “தோட்டத்தில் உன் மூலையை நீ கவனித்துக் கொண்டால் போதும்” என்றார் ரூஸோ. நாங்களோ அடுத்தவன் மூலையில் உள்ள கோளாறுகளைப் பார்ப்பதிலேயே நேரத்தையும் வாழ்வையும் வீணடித்துக் கொள்கிறோம். அநியாயங்கள், அடங்காப் போர்கள், பஞ்சங்கள், பாதகங்களினாலும் மனித உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலகில், எவரும் நாம் முழுக்க முழுக்கச் சரியாக இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ள முடியாது. அப்படி நெஞ்சை நிமிர்த்திக் கொள்பவர்களையே மேலும் ஆபத்தானவர்களாய்க் கருத வேண்டியிருக்கிறது.

“கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல்” என்ற குறளுக்கு, பரிமேலழகர் உரை சொல்வது போல, வடிவத்தில் அம்பு நேரானதும் செம்மையானதுமாக இருந்தாலும் செயலால் அது கொடியது@ யாழ் வளைந்திருந்தாலும் செயலால் மேன்மையானது.

பலரை மகிழ்ச்சிப்படுத்தவும் வாழ்வை அர்த்தப்படுத்தவும் வளைந்து கொள்வது ஒன்றும் இழிவானதில்லை. நம் தவறுகளைக் கண்டுகொள்ள மறுத்து மற்றவர் தவறுகளுக்காய் முறுக்கிக்கொண்டு நேராய் நிற்பதில் நாம் பெருமைப்பட முடியாது. அப்படி நிற்பவர்களிடமும், நாம் தணிந்து அவர்களையும் தளர்த்தி வழிக்குக் கொண்டுவர முயல்வதில் இழிவெதுவுமில்லை. பலருக்குமான வாழ்வைச் செய்துதரும் மேன்மைச் செயலே அது.

மக்களிடமும் மனிதத்திடமும் நாம் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் எவரிடமும் பேச நமக்குத் தடை இல்லை. எல்லாத் தரப்புடனும் எல்லாச் சமூகங்களுடனும் நாம் பேச முடியும். அயோத்தியில் வீரமும் இறுமாப்பும் இல்லை ஏனென்றால் அங்கு போரும் வன்முறையும் இல்லை என்று கம்பன் சொன்னதை நாம் புரிந்துகொள்ள முடியும். நம்மிடம் மட்டுமே முழுச் சரியும் இருப்பதாக நினைத்துக் கொள்வதால்தான் இணக்கத்தைப் புறந்தள்ளும் இறுமாப்பு வெல்கிறது. வாழ்வு தோற்றுப் போகிறது. எங்கள் பக்கத்தில் நியாயமும் சரியும் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருப்பது ஒன்றும் தவறல்ல. நாங்கள் நினைத்துக் கொண்டிருப்பது மட்டுமே நியாயமும் சரியும் என்பதுதான் தவறு. எதிர்த்தரப்பின் சந்தேகங்களைப் புறக்கணித்துவிட்டு எமது தீர்வை நாம் கோர முடியாது, பெற்றுவிடவும் முடியாது.

ஒரு மனிதனை அளக்கும் அளவுகோல், அவன் மனதில் மற்றவர்களுக்கு என்ன இடம் என்பதைக் காண்பதாகத்தான் இருக்கும். “அயலானின் கண்களுள் ஆழ்ந்து நோக்கு. அவனுள் இயங்கும் வாழ்வு நீயே எனக் காண்பாய்” என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வதும் இதையே. மற்றவர்களை அவர்களின் வித்தியாசங்களுடன் ஏற்றுக் கொள்ளும் கலையை நமது இன, மொழி உணர்வுகளோ சமய நன்னெறி காட்டல்களோ மட்டும் தந்துவிடாது. மற்றவர்களுடன் வாழ்வதை நாமே முயன்றுதான் கற்றுக்கொண்டாக வேண்டும். வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்கு, இந்தக் கற்றலே நமக்கு உதவ முடியும். ஏனெனில், இந்த உலகில் நாம் தனியாக இல்லை.

இந்தக் கவிதை ஆர்.ராஜகோபாலன் என்ற கவிஞருடையது.

“என்னை நான் மறந்துவிட்டு
மற்றவர்க்காய் காரியங்கள்
செய்யவேண்டும் என
நீ சொல்கிறாய்.
படுத்துக்கொண்டு யோசிக்கும் போதும்
தனியாக நடந்து போகும் போதும்
என்னைச் சுற்றியே என்
பிரக்ஞை உழலுகிறது.
ஏன், நான் இறந்து போகும்போது கூட
என்னைப் பற்றியே என்
நினைவுகள் இருக்கும்.
ஆக, எப்படியும் என்னை
முதலில் சரிசெய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை அதுதான்
நான் மற்றவர்க்காய் செய்யும் காரியமோ!”

ஐ -போனில் எடுக்கப்பட்ட திரைப்படம்

திரைப்படம் எடுக்க பல்வேறு நவீன வசதிகள் கொண்ட 'கேமாரா' க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியில், தொழில் நுட்பச் சாதனங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், செல்போன் உலகத்தின் உச்சமாகக் கருதப்படும் 'ஐ-போனில்', ஒரு திரைப்படத்தையே எடுத்து புதுமை செய்துள்ளார் இயக்குனர் ஒருவர். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்.

தென்கொரியாவைச் சேர்ந்தவர் திரைப்பட இயக்குநரான பார்க் சான். 'ஓல்ட் பாய்', 'லேடி வென்கேயன்ஸ்', 'திர்ஸ்ட்' போன்ற கொரிய மொழிப்படங்களை இயக்கியவர். ஐவரும், மற்றொரு இயக்குநரான இவருடைய சகோதரரும் இணைந்து 'பாரன்மஞ்சாங்' என்ற 'திகில்' படத்தை ஐ-போனில் எடுத்து புதுமை படைத்துள்ளார். 30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படம், முழுவதும் ஐ-போனிலேயே எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. "சரிபாதி ரசிகர்கள் ஐ-போன் பயன்படுத்துவதால், இந்தத் தொழில்நுட்பம் வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும்" என்கிறார் பார்க்.            

Friday, January 14, 2011

கொலைகளை ஆதரித்த கூட்டுமனதுக்குள் இருந்தோமா?

இரகசியமாய் நம்மிடையே புழங்கிய ஜோக்குகளை இப்போது பயமின்றிப் பரிமாறிக்கொள்ளக் கூடிய ஒரு சூழல் உருவாகியிருப்பதைக் கொண்டாடியபடியே ஆரம்பிக்கலாம்.

ஒரு தலைவர் ஒரு பைத்தியக்கார விடுதியைப் பார்வையிடச் சென்றார். பைத்தியங்கள் எல்லாம் ஒழுங்காக உடை உடுத்தப்பட்டு வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்தனர். தலைவருக்கு, ஒழுங்கும் வரிசை குலையாத கீழ்ப்படிவும்தான் உயிர் போன்றவை என்பதால் மருத்துவமனை நிர்வாகம் கடும் சிரத்தை எடுத்துக்கொண்டு அவர்களை ஒழுங்குபடுத்தி நிற்க வைத்திருந்தது. தலைவர் அவர்களைப் பார்வையிட வந்தபோது, ஒரே நேரத்தில் அனைவரும் கையுயர்த்தி அவருக்கு வணக்கம் சொன்னார்கள். பெருமிதத்தோடு பார்வையிட்டு வந்த தலைவர், ஒரு நபர் மட்டும் வணக்கம் சொல்லாமல் நிற்பதைப் பார்த்து எரிச்சலுற்றார். அருகாக வந்துகொண்டிருந்த தன் தளபதிகளை ஒரு முழி முழித்துவிட்டு, அந்த நபரைப் பார்த்து “ஏன் வணக்கம் சொல்லவில்லை?” என்று உறுமினார். நடுங்கி வெலவெலத்துப் போன அந்த நபர் சொன்னார்: “மக...த்துவமி...க்க தேசியத் தலைவரே, நான் ஒரு நர்ஸ். பைத்தியமல்ல.”

சரி, விஷயத்திற்கு வருவோம். அந்தமாதிரி மருத்துவமனைகளுக்கு வெளியே மட்டும் என்ன வாழுகிறதாம்? “கடவுள் எப்படிச் செத்திருக்க முடியும்? தலைவர் மீண்டும் வருவார்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வெளியேதானே நிறையப் பேர் உலவி வருகிறார்கள்! பிரமாண்டமாய்க் கட்டியெழுப்பிக் காட்டப்பட்ட நம்பிக்கைகள் இடிந்துவிட்ட அதிர்ச்சியில் அப்பாவித்தனமாக உளறிக்கொண்டிருப்பவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். விஷயமறிந்தவர்கள் என்று கருதப்படும் எழுத்தாளர் கலைஞர்களும் அதுபோல உளறுவதை என்ன சொல்ல? தாங்கள் நம்பிப் பரப்புரை செய்துவந்த ஒன்றிலிருந்து மீண்டுவிட முடியாமல் தவிக்கிறார்கள் என்பதுதானா?

இவர்கள், பிரபாகரன் இல்லாமல் போய்விட்டதை ஒப்புக்கொண்டாலும், அந்த வெற்றிடத்தில் எந்தப் பேராளுமை கொண்டு நிரப்புவது என்ற கவலையில் மூழ்கியிருக்கிறார்கள். (“வாசலில் பிள்ளை அசிங்கம் பண்ணி வைச்சிருக்கு, அதை அள்ளித் தூர எறி என்று சொன்னால்... அதை எடுத்துட்டு அந்த இடத்தில எதை வைக்கிறதுன்னு கேட்டுட்டு நிக்கிறியே!” – கடவுளுக்குப் பதிலாக அந்த இடத்தில் எதை வைப்பது? என்ற கேள்விக்கு ஈ.வெ.ரா.பெரியார் சொல்லிய பதில்.)

அவர்களது, கவலைப்படும் தனிப்பட்ட உரிமையை நாம் கேள்வி கேட்க வேண்டியதில்லை. ஆனால், இவ்வளவு மக்களையும் அழித்து, தன்னைச் சார்ந்தவர்களையும் அழித்து, தன்னையும் அழித்துக் கொண்டவருக்காக மக்கள் எப்படிக் கவலைப்பட முடியும்? அப்படிக் கவலைப்படுவதற்கு வேண்டிய புனைவுகளை மீண்டும் தயாரித்து உலவவிட முனைவது, அந்த மக்களை மீண்டும் ஏமாற்றுவதாகுமல்லவா?

தேசியத் தலைவர், வல்லவர், மக்களைக் காக்க கண் உறங்காமல் திட்டமிடுபவர், சிங்கள வெறியரின் சிம்ம சொப்பனம், குண்டுகளை வீணாக்காது குரங்குகள் ஒரே வரிசையில் வந்தபிறகு ஒரே குண்டால் மூன்றையும் வீழ்த்தும் வெடிவீரர், அவருக்குப் பிடித்த கௌபோய் நடிகர்போல் ‘ஏகே’யை ஒருகையால் சுழற்றிச் சுடுபவர், தற்கொலைப் படையாளிகளுடன் கடைசி விருந்துண்டு அவர்களைச் சந்தோஷப்படுத்தி அனுப்பிவைப்பவர், உலகத்தமிழரின் ஒப்பற்ற கவர்ச்சித் திலகம் (இதைச் சொல்லித்தான் ஆறு கோடிக்கும் தலைவர் என்றிருந்த கருணாநிதியைக் கவலைப்பட வைத்தார்கள்), பெரும்பான்மைத் தமிழ்மனங்களின் ஓருருவமாய்த் திரண்ட தலைவர் என்றெல்லாம் புனைவுகளைப் பெருக்கியபடியேதான் போராட்டப் பிழை எதையும் தட்டிக்கேட்க விடாமல் பஜனை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் பண்ணிய பஜனையில் மதிமயங்கி, “நாங்கள் பயந்து மூச்சடக்கி மரணத்துள் வாழ்வது எங்கள் பெடியள் பலமடையத்தானே! எல்லாத்தையும் வெண்டு தரும் விண்ணர் எண்டுதானே அவங்களை எல்லாரும் சொல்லுகினம்” என்று மக்களும் வாய்மூடிக் கொடுமை சகித்து, எதிரியிடம் அடித்தெடுத்த ஆயுதக் குவியலின் ‘ஷோ’க்களைப் பார்த்துப் புல்லரிப்பதொன்றே செய்துகொண்டிருந்தார்கள்.

மக்களை மதியாத, மானுடத்தின் அடிப்படை உரிமைகளை உணர்வுகளை மதியாத, மனித உயிர்களையும் மதியாத ஒரு போராட்ட வீறுநடைக்குப் பரணி பாடிக்கொண்டிருந்ததன் பலனல்லவா கடைசியிலே நாம் கண்டது?

சிங்கள இனம் மீதும், அரசு மீதும் பிரமாண்டமாக்கப்பட்ட வெறுப்பும் பகையும் விவேகமற்ற ரோசமுமல்லவா 25 வருடங்களாக நமக்குள்ளேயே வளர்ந்த கொலைக்கலாசாரத்தை, “போராட்டப் பாதையின் சிறு சறுக்கல்கள்” என்று பூசி மெழுகி மக்கள் மயங்கும் வீறுப்பிரச்சார நஞ்சூட்டியது?

பொதுமக்கள் மீதெல்லாம் பாய்ந்த தலைவரின் வீரத்தைப் போற்றிப் பாடியதும், தமிழர்களின் காவலனாகக் கதையளந்ததும் அல்லது அவற்றை மறுக்காதிருந்ததும், மாவீரம் - தற்கொடைத் தியாகம் பற்றியெல்லாம் பரணிகளைப் பாடிப் பரவிவிட்டு, “என்ன செய்ய... சரியோ தப்போ பெரும்பான்மைத் தமிழர்கள் அவர்களை ஆதரிக்கும்போது அதை ஏற்றுக் கொள்வதுதானே ஜனநாயகக் கடப்பாடு” என்று மக்கள் மீது பழியைப் போட்டு நழுவுவது படித்தோர்க்குரிய ஞாயம்தானா?
அப்படியானால், மக்கள் உணர்வுகளைப் பிரதிநிதித்துவம் செய்த வரலாற்றுப்பாத்திரம் ஹிட்லருக்கும் இருந்தது எனலாமா? ஓ... அந்தப் பாத்திரம் நிரம்ப எவ்வளவு ரத்தம்!

 
பாசிஸத்திற்கு ஆதரவாக மக்கள் மனநிலையை உருவாக்குவதற்கான வழிமுறைகள் பற்றி, ஜெர்மானிய தேசியத் தலைவர் ஹிட்லர் தனது ‘மெய்ன் காம்ப்’ நூலில் விரிவாக எழுதிவைத்திருக்கிறார். அதைச் சும்மா புரட்டிப் பார்த்தாலே போதும். கடந்த 25 வருடமாக நாங்கள் செய்துகொண்டிருந்தவை என்னவென்பது புரிந்துவிடும்.

புலிகள் ஆரம்பத்திலிருந்தே பாசிஸ்ட்டுகளாகத்தான் வளர்ந்தார்கள். பாசிஸ்ட்டுகளாகத்தான் நடந்துகொண்டார்கள். பாசிஸ்ட்டுகளாகத்தான் மக்களையும் அழித்து முடிவை எய்தினார்கள் என்பதைக் காண மறுத்துச் சக்கரவட்டமடிப்பது, நாமே நம்பி வளர்த்த ஒன்றின் வீழ்ச்சியை நம்மால் ஒப்புக்கொள்ள முடியாமல் இருப்பதால் அல்லவா?

2009 ஏப்ரல் முதல் மே வரை, கடைசி ஒரு மாதம்தான் மக்களைப் புலிகள் அழித்தார்கள் - அழிய விட்டார்கள் என்று சொல்வது, இப்போதும் பழைய ஏமாற்றைத் தொடர்வதாகாதா?

ஆரம்பத்திலிருந்தே அவர்கள் வளர்த்த – நம்மில் பலரின் ஊக்குவிப்பு மற்றும் மௌன அங்கீகாரத்துடன் வளர்க்கப்பட்டதுமான – போராட்ட நடவடிக்கைகளில் மக்களை, சமூகத்தை அழிப்பதற்கான கூறுகளே இருந்தன என்பதைக் கண்டுகொள்ளாமல் போனது குற்றமில்லையா? அவர்களது கடைசி நடவடிக்கைகள் வரை அவர்களிடமிருந்த மக்கள் விரோதத்தை, ஆபத்தான போக்குகளைக் காண முடியாமல் போய் கடைசி அழிவு வரை அவர்களை அனுமதித்திருந்தவர்களுக்கு குற்றத்தில் பங்கில்லையா?

நமக்குள் வளர்ந்த பாசிஸ எழுச்சிக்கு ஆதரவாக மக்கள் மனநிலையை உருவாக்கிவிட்டு, பிறகு அந்த மக்களின் கூட்டு மனதுக்குள் நாமும் இருந்தோம் என்பது ஒன்றும் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டிய குற்றம் இல்லை, அப்படியா? ஆனால், ஆரம்பத்திலிருந்தே இந்த பாசிஸ வளர்ச்சியை எதிர்த்துக் கொண்டிருந்த எல்லோரும், மறுதரப்பில் புலிகளுக்குச் சமமான தப்பைச் செய்துகொண்டிருந்தவர்கள், அப்படித்தானா? சமூகத்தின் கூட்டுமனதை பாசிஸமே கையாளும்போது அதை அங்கீகரித்து நின்றவர்கள் கையில்தான் அந்த முற்போக்குப் பாத்திரமா? அதைத் தூர எறிந்துவிட்டுச் சுயவிமர்சனம் செய்துகொள்ளாமல் இன்னும் என்ன தடுக்கிறது உங்களை?

தை மகளே வா !

வாடீ!  என் 'தை' மகளே.
தை...! தை...! எனத் துள்ளி குதித்து
என் சித்தத்'தை' குளிர வைத்தாய்

நீ பிறந்த'தை'
நான் அறிந்த'தை'
மனம் மகிழ்ந்த'தை'
'தை'யலே! என் சொல்ல...?

வா! வந்தென் தமிழர் வாழ்வில்
வசந்தத்'தை' வீசிவிடு
வெந்த'தை' தின்று
விதி வந்தால் சாவ'தை'
விரட்டி அடித்துவிடு

பாசத்'தை' நல் நேசத்'தை'
தேசமெங்கும் வி'தை'த்திடு
தேவ'தை'யே 'தை' மகளே
பா'தை'யை காட்டிவிடு
தமிழ் தேசத்'தை'
நாட்டிவிடு.

பொங்கல் வாழ்த்துகளுடன் உளறுவாயன்   
   

Thursday, January 13, 2011

நடைப்பயணம் தமிழர் வாழ்வுரிமையை மீட்குமா?

"இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்".
"1948 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழரின் பூர்வீக பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும்".

என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஈ.என்.டி.எல்.எப் அமைப்பினர் டெல்லி வரை நடைப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை எப்படியும் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று சிங்கள அரசு ஒரு புறமும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறிகொள்ளும் ஒரு சிலர் மறுபுறமும் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பதாக ஈ.என்.டி.எல்.எப் குற்றம் சாட்டியுள்ளது.

அண்மையில் 26.10.2010 பத்து தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வந்த கட்டுரையும் நேற்றைய தினம் வை.கோவின் கடுப்பான அறிக்கையும் இதற்கு சான்றாக கூறப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ன கூறுகிறது என்பதை உங்களின் கவனத்திற்கு தருவதிலும் அது எவ்வாறு சீர்குலைக்கப்பட்டது என்பதையும் அறிக்கையில் விளக்கி உள்ளது அந்த அமைப்பு.

இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போது இந்த ஒப்பந்தம் ஏமாற்று என்றும், அதை ஆதரித்தவர்கள் துரோகிகள் என்றும் புலிகளின் குரலாக இயங்கியவர்கள் அன்று தூற்றி திரிந்ததை நாம் மறந்து விடவில்லை. அந்தக் குழுக்களில் இருந்து ஒரு சிலர் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு அரிய வாய்ப்பினை தவற விட்டதாக கூறிக் கொள்வதும் நடை முறையில் உள்ளது.
இந்த ஒப்பந்தம் கூறுவதாவது;
1. ஒப்பந்தம் கையெழுத்தானதும் இலங்கை ராணுவம் முகாம்களுக்கு சென்று விட வேண்டும்.
2. வடக்கு கிழக்கில் கடமையாற்றும் உரிமை சிங்கள ராணுவத்திற்கு கிடையாது.
3. சிங்கள ராணுவம் மற்றும் காவல் துறையினர் தமிழர்கள் எவரையும் கைது செய்ய முடியாது.   
4. சிறையிலிருந்த அனைத்து தமிழ் இளைஞர்களும் இயக்க பாகுபாடில்லாமல் விடுவிக்க பட வேண்டும்.
5. வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து இடைக்கால நிர்வாகம் தமிழர்களை கொண்டு அமைக்கப்படும்.
6. நிலம், கல்வி, காவல்துறை ஆகியவை மாகாண அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும்.
இவ்வாறான சட்ட ரீதியான பலம் கொண்ட ஒரு மாகாண அரசைத்தான் விடுதலைப் புலிகள், தமிழர்களின் எதிரியான பிரேமதாசாவுடன் இணைந்து முறியடித்தனர்.


அந்த மாகாண அரசையும் தமிழர்களையும் பாதுகாக்க என்று சி.வி.எப் (Citizen Volunteer Force) என்ற முழுக்க முழுக்க தமிழர்களை கொண்ட ராணுவப்படையை, சட்ட பூர்வமாக ஒரு படை அமைந்ததை விரும்பாத சிங்கள தலைவர்கள் புலிகளை பயன்படுத்தி முறியடித்தனர். பின்னாளில் சிங்கள அரசு தனது தந்திரத்தை மாற்றி புலிகளை தாக்க தொடங்கி இன்றைய நிலைக்கு தமிழினத்தை கொண்டு வந்து விட்டனர். நடந்து முடிந்த இந்த பாரிய தவறுகளை புலிகளின் அனுதாபிகள் புரிந்து கொள்ளாமல் இன்றும் வாய் வீரம் பேசிக் கொண்டிருப்பது வேதனையை தருகிறது.

நாங்கள் எண்ணற்ற துரோகங்களை செய்ததாக வைகோ கூறியுள்ளார். ஒரு துரோகத்தை அவர் சொல்லியிருந்தால் நாங்கள் தெளிவான விளக்கத்தை சொல்லியிருப்போம்.

"எங்களை துரோகிகள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் உங்கள் இனத்துக்கே துரோகம் செய்கிறீர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். உங்களுக்கு ஒன்று தெரிவித்துக்கொள்கிறோம் ஈழத்தமிழர் பிரச்சனையில் முதன் முதலில் நேரடியாக தலையிட்டவர் இந்திரா காந்தி. முதன் முதலில் தலையிட்ட கட்சி காங்கிரஸ். தாயின் கனவை நிறைவேற்றத்தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் ராஜீவ் தலையிட்டார். அவரை உங்களது வீர மறவர்கள் சுட்டுக் கொன்றார்கள். அதனால்தான் அழிவை சந்தித்தது ஈழ தமிழ் இனம். ஈழத்தமிழரது பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று எங்களுக்கு தெரியும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.        

எது எப்படியிருப்பினும் இந்திய இலங்கை ஒப்பந்தம் முறைப்படி நிறைவேற்றப்பட்டிருந்தால் ஈழத் தமிழர்களது வாழ்வுரிமை பாதுக்காக்கப்பட்டிருகும் என்றே தோன்றுகிறது. அந்த வகையில் ஈ.என்.டி.எல்.எப்பின் பாத யாத்திரை வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம். 


Wednesday, January 12, 2011

இன்றும் ஒரு தகவல்

கம்ப்யூடர் வைரஸ்

என்னதான் கம்ப்யூடரை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி கண்காணித்துத்தாலும் அத்தனையும் மீறி கம்ப்யூட்டருக்குள் வைரஸ் புகுந்துவிடுகிறது. இப்படி அத்துமீறி நுழையும் வைரஸ்களில் பிரதானமானது, 'ட்ரோஜன் வைரஸ்' என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.

டிரோஜன் என்றால் என்ன? ட்ராய் என்ற நகருக்கு எதிராக இருந்தது கிரேக்க நாடான ஸ்பார்ட்டா. இரண்டு நகரங்களுமே எலியும் பூனையுமாக எப்போதும் மோதிக்கொண்டே இருக்கும். டிராய் நகரை கைப்பற்றுவதற்காக சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது, ஸ்பார்ட்டா. இதனை அறிந்த ட்ராய் மக்கள் ஸ்பார்ட்டா படையை தடுப்பதற்காக நகரை மக்கள் ஸ்பார்ட்டா படையை தடுப்பதற்காக நகரை சுற்றி 20 அடி உயரத்தில் பலமான சுற்றுச்சுவர் எழுப்பினர்.

அந்த சுவர் மிகவும் பலம் வாய்ந்தது. மூடி இருக்கும் ஒரு இரும்புக்கதவை திறந்தால்தான் ட்ராய் நகருக்குள் நுழைய முடியும். ஸ்பார்ட்டா மன்னன் ஓடி யசியஸ்  சூழ்ச்சி செய்து, ட்ராய் நகரை கைப்பற்ற நினைத்தான். அதன்படி ஒரு போரை நடத்தினான். அதில் வேண்டுமென்றே தோற்றான். பின்னர், உங்களோடு சண்டைபோடும் அளவிற்கு எங்களுக்கு பலம் இல்லை. எங்கள் தோல்வியை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உங்களின் வீரத்திற்கு பரிசளிக்க நினைக்கிறோம்' என்று ட்ராய் மன்னனுக்கு தூது அனுப்பினான். சூழ்ச்சி தெரியாமல் பரிசை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டார்.

ஸ்பார்ட்டா வீரர்கள் மரத்தினால் பெரிய குதிரை பொம்மையை வடிவமைத்தார்கள். அதன் உட்பகுதியில் 30 பலம் வாய்ந்த வீரர்கள் பதுங்கிக் கொண்டார்கள். அந்த குதிரைக்கு 'ட்ரோஜன் ஹார்ஸ்' என்று பெயர் வைத்தார்கள்.

அந்த குதிரையை டிராய் கோட்டைக்கு கொண்டு வந்தார்கள். வாசலில் நிறுத்திவிட்டு மன்னனை வணங்கினர். ட்ராய் மக்கள் உற்சாகமாக பரிசை ஏற்றுக்கொண்டனர். இரும்புக் கதவை திறந்து கொண்டு குதிரையை உள்ளே இழுத்துச் சென்றனர். ட்ராய் அமைச்சர்கள் அந்த குதிரையை எரித்து விடலாம் என்று யோசனை சொன்னார்கள். ஆனால், இது நம் வீரத்துக்கான பரிசு, ஆண்டாண்டுகாலமாக இதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று கூறி மன்னர் மறுத்துவிட்டார்.

அன்றிரவு ட்ராய் நகரமே வெற்றி விழா கொண்டாடியது. கேளிக்கை முடிந்தபின்னர் மக்களும் படை வீரர்களும் உறங்கச் சென்றுவிட்டனர். ஏறக்குறைய அனைவரும் மது போதையில் வேறு இருந்தனர். இந்த சமயம் பார்த்து குதிரைக்குள் இருந்த ஸ்பார்ட்டா வீரர்கள் குதிரையில் இருந்து வெளியே வந்தனர். காவலுக்கு நின்றிருந்த ஒரு சில வீரர்களை குத்திக் கொன்றனர். இரும்புக்கதவை திறந்துவிட்டனர். வெளியே காத்திருந்த ஸ்பார்ட்டா வீரர்கள் கோட்டைக்குள் நுழைந்தனர். முரட்டுத்தனமாக தாக்கல் நடத்தி ட்ராய் நகரத்தை கைப்பற்றினர்.

அத்து மீறி திருட்டுத்தனமாக தந்திரமாக நுழைந்த இந்த ட்ரோஜன் ஹார்ஸ் போல வைரஸ்களும் எதிர்பாராமல் கம்ப்யூட்டரை தாக்குதல், கம்ப்யூடர் வைரஸ்களுக்கு 'ட்ரோஜன் வைரஸ்' என்று பெயரிட்டனர்.                 

தேசிய இளைஞர் தினம் - இன்று

"என் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் போகமும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில்நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள். குட்டிநாய்களின் குரைப்புக்கும், வானத்தில் முழங்கும் இடியோசை கேட்டும் நடுங்காதீர்கள். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். இந்த தேசத்தில் பிறந்த புழு கூட உண்மைக்காகவே உயிர்விட வேண்டும்,'' என்று முழக்கமிட்டவர்வீரத்துறவி விவேகானந்தர்.

கோல்கட்டாவில்,விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். நரேந்திரன் என பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று ஆன்மிக ஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். துறவியான பிறகு அவருக்கு வந்த பெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் பெயர் மூலம் இந்த உலகுக்கு சுட்டிக்காட்டினார்.இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து, ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் போதித்தார். இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட, சிகாகோவில் நடந்த சர்வமத மகாசபை மாநாட்டில் பங்கேற்று, அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். மற்றவர்களெல்லாம் அங்குவந்திருந்தவர்களை "லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்' என அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் "டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்' என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.

"கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும் குப்பை,'' என்று முழங்கினார்.ஒருநாள், அவர் தற்செயலாகக் கைகட்டி கம்பீரமாக கூட்ட அரங்கின் முன் நின்றதை ஒரு போட்டோகிராபர் படமெடுத்தார். அதை சிகாகோவிலுள்ள 'கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி' போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டது. அந்தப் படம் தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

விவேகானந்தர் எல்லா உயிர்களையும் தமதாகவே கருதினார். அதற்கு காரணம் அவர் குருவிடம் கற்ற பாடம் தான். குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார்."நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்,'' என்றார் விவேகானந்தர்."கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்,'' என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு வந்தார்."அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?'' என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே,"இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!'' என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன்,'' என்றார்.மற்றவர்கள் சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப் பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது. ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனைக்கு வந்தார் விவேகானந்தர். அங்கே இசைநிகழ்ச்சி நடந்தது. துறவி என்பதால் அதைக்காண செல்லாமல், தன் அறையில் இருந்தார். அப்போது, ஒரு பெண் பாடிய பாடல் அவருக்கு கேட்டது.

அதில் சோகம் இழையோடியது. அதைக் கேட்டு மனம் இளகிய அவர் இசைநிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்றார்."இவள் நடனப்பெண். இழிந்த தொழில் செய்பவள். மற்றவர்கள் பார்வையில் இவள் இழிந்தவளாக இருக்கலாம். ஆனால், இவளது பாடல் எனக்கு புதிய பாடத்தைத் தந்தது. தன் வாழ்க்கை சிரமத்தை அவள் பாடலாகப் பாடினாள். அதைக் கேட்டுஉள்ளம் உருகினேன்,'' என்றார். அவளை அம்பாளாக பார்த்தார். அவரது உருக்கமான பேச்சைக்கேட்ட அவள், அவரது வருகை தன்னை ஆசிர்வதித்ததாகச் சொன்னாள். இழிந்த தொழில் செய்தவர்களையும் தெய்வமாகப் பார்த்தவர் விவேகானந்தர். அலைகள் சீறும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச் சென்று நடுப்பாறையில் அமர்ந்து தியானம் செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத்தரட்டும். அந்தத் துணிவு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.

இன்று தேசிய இளைஞர் தினம்: இன்றைய இளைஞர்கள் கையில் தான் நாட்டின் எதிர்காலமே உள்ளது. இளைஞர்களின் முன்னேற்றத்தை பொறுத்து தான் நாட்டின் முன்னேற்றமும் அமைகிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவரும், ஆன்மிகவாதியுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை, கவிதை, யோகா, சொற்பொழிவு, கருத்தரங்கு, விளையாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, ஊர்வலம் ஆகியவை நடைபெறுகின்றன.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் விவேகானந்தனர். "நூறு இளைஞர்களை தாருங்கள், இந்த நாட்டையே மாற்றிக்காட்டுகிறேன் '' என்று அவர் கூறினார். இது இளைஞர்கள் மேல் அவர் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. இளைஞர்கள் முன்மாதிரியாக ஒருவரைப் பின்பற்றும்போது முழுவதும் அவர்களாகவே மாறிவிடாமல், அவர்களிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்துகிறார்.

இளைஞர்களின் பொறுப்பு: நாட்டில் 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி 13 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 42 கோடி பேருக்கு மேல் உள்ளது. இளைஞர்கள் டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல அரசியலிலும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். எனவே நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இளைஞரிடமும் உள்ளது. இளைஞர்களின் சக்தியை முழுமையாக நல்வழியில் பயன்படுத்தினால் இந்தியாவின் வல்லரசு கனவு எளிதில் நிறைவேறலாம். இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

Tuesday, January 11, 2011

தேதி சொல்லும் சேதி

 என்றும் நான் முதலிடத்தில் தான் இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. அந்த வகையில், பலரும் எண் "ஒன்றை" மிகவும் விரும்புவர். அப்படி ஒன்றை விரும்புபவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்.

நூறு ஆண்டுகளுக்கு பிறகு (11.1.11) 1911 நாட்காட்டியில் இன்றைய தினம் 11.1.11 என்று உள்ளது.  இதை பலரும் அதிர்ஷ்ட எண்ணாகவே கருதுகின்றனர். இந்த வருடம் ஒன்றாம் எண்ணின் படையெடுப்பு சற்று அதிகமாகவே உள்ளது என்று கூறலாம்.

புதுவருடம் ஆரம்பிக்கும் போதே ஒன்றாம் எண்ணின் அணிவகுப்பும் ஆரம்பித்து விட்டது. இந்த ஆண்டு நான்கு ஒன்றுடன் (1.1.11) தொடங்கியது.  பத்து நாட்கள் கழித்து இன்று அது 5 ஒன்றுகளாகி இருக்கிறது.

இதையடுத்து, நவம்பர் 1ம் திகதி(1.11.11) ஆகவும் மற்றும் 11ம் தேதி இது 6 ஆக போகிறது (11.11.11). ஒரே ஆண்டில் நான்கு முறை அதுவும் வரிசையாக 4,5 மற்றும் 6 முறை ஒரே என் தேதியாக வருவது எப்போதும் இல்லாத அதிசயம்.

11ம் எண் ஆனது நேர்மை, உள்ளுணர்வு, இறைப்பண்பு ஆகியன மிகுந்தது என்று கூறப்படுகிறது. இந்த தேதிக்குரியவர்களின் வாழ்க்கைப் பாதை மற்றும் அவர்களது போதனைகள், மற்றவர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று எண் ஜோதிடர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தினங்கள், எண்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதால், இத்தேதிதியை மிகக் கவனமாக குறிப்பிட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


மீண்டும், இது போன்ற எண்கள் எல்லாம் 2111ம் ஆண்டு தான் வருமாம்!

Monday, January 10, 2011

இன்றும் ஒரு தகவல்

காமசூத்திரம் போன்ற புத்தகங்களை ஆபாச புத்தகம் என்று கருதி அட்டை போட்டு, மறைத்து வைத்து ரகசியமாக படிக்கும் பழக்கம் இப்போதும் இருக்கிறது. நாகரீக வளர்ச்சி பெற்ற இந்த காலத்திலேயே இப்படி என்றால் நிறைய இறை நம்பிக்கையும், ஒழுக்கமும் போதிக்கப்பட்ட வேத காலங்களில் காமத்தை எப்படி பார்த்தார்கள்?

வேதங்கள் காமத்தை மதித்தான. வாழ்க்கை ரகசியங்களை அக்குவேறு, ஆணிவேராக புட்டுவைக்கும் வேதங்கள் எல்லாம் காமத்துக்கு மரியாதை கொடுத்தன. வேதங்களில் முதன்மையானது என்று சொல்லப்படுகிற ரிக் வேதத்தில் 10-வது மண்டலத்தில் 129-வது பகுதியில் வரும் நான்காவது மந்திரம் இப்படி சொல்கிறது. 'காமம்தான் உலகில் முதலில் பிறந்தது. காமம்தான் மனதுக்கு முதல் வித்து. அந்த மனதை வைத்து ரிஷிகள் தவத்தின் மூலமாக இருத்தலுக்கும், இல்லாமல் இருத்தலுக்கும், இடையே இணைப்பை ஏற்படுத்தினார்' என்கிறது அந்த மந்திரம்.

அதர்வன வேதமும் 'உலகில் முதலில் பிறந்தது காமம்தான்' என்று அடித்துச்சொல்கிறது. ஒன்பதாவது காண்டம் இரண்டாவது சூக்தம் 19-வது, 21-வது மந்திரங்கள் இதைச்சொல்கின்றன. 'உலகத்தில் முதலில் தோன்றிய காமம் சக்தி வாய்ந்தது; கடவுளே, முன்னோர்களோ, மனிதர்களோ அதற்கு நிகர் கிடையாது; ஓ காமமே! எல்லையற்ற பேரளவு கொண்டவன் நீ... எல்லா உயிர்களிலும் நீ நிறைந்திருக்கிறாய்... சூரியன், சந்திரன், காற்று, அக்னி ஆகிய எல்லா கடவுள்களையும் விட நீ மேலானவன்; எப்போதுமே நீ முதன்மையானவன்' என்று காமத்தை வணங்குகின்றன மந்திரங்கள். காமசூத்திரத்தில் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் இன்றைக்கும் பொருந்தும். தேவதாசிகளுக்கு அவர் சொன்ன பல அறிவுரைகள் எல்லோருக்குமே பயன்படும் விதத்தில் இருக்கின்றன. காலத்தை கடந்து நிற்பதுதான் இதன் வெற்றி.

சகல சாஸ்திரங்களையும் படைத்த மேற்கத்திய நாடுகளிலும் கூட காமசூத்திரம் போன்ற துல்லியமாக ஒரு செக்ஸ் நூல் 18-ம் நூற்றாண்டு வரை கூட எழுதப்படவில்லை. சூத்திரம் என்றால் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக, தெளிவாக சொல்வது என்று அர்த்தம். வாத்சாயனர் இதை சரியாக செய்திருக்கிறார். அதனால்தான் உலக செக்ஸ் நிபுணர்கள் இந்தியர்களை இன்றைக்கும் பொறுமையோடு பார்கிறார்கள்.

செக்ஸில் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்ந்து சொல்லியிருக்கும் அவர் ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார். எந்த மாதிரியான உறவுகள் சரி? எந்த மாதிரியான செக்ஸ் தவறு என்று எந்த இடத்திலும் நீதிபதி போல் நின்று தீர்ப்பு அளிக்கவில்லை.

இப்படி எல்லாம் நடக்கிறது? உலகில் இதுபோன்ற விஷயங்களும் இருக்கின்றன என்று ஒரு பயணக்கட்டுரை எழுதுவதுபோல் எழுதிக் கொண்டு போகிறார். எது சரி? எது தவறு என்ற தீர்மானத்தை, படிக்கும் வாசகர்களின் பார்வைக்கே விட்டு விட்கிறார்.

இத்தனை விஷயங்களையும் சொன்ன வாத்சாயனர் பெண் வாசனையே அறியாத பிரம்மச்சாரி என்று பலர் சொல்கிறார்கள். இல்லை. அவர் பிரம்மச்சாரியாக இருந்தால் எப்படி உடலுறவின் உணர்வுகளை துல்லியமாக விவரித்து எழுத முடியும். அனுபவிக்காமல் அவரால் எழுதியிருக்க முடியாது என்கிறார்கள் சிலர். அவர் அனுபவித்து எழுதினாரா அல்லது அந்தக்கால ரிஷிகள் போல ஞாப்பார்வையில் ஞானம் வரப்பெற்று எழுதினாரா என்பது இன்னமும் விடை கிடைக்காத கேள்விதான்.                       

உயிரோடு உலவுகின்ற சாவு

அரசு மீதான எதிர்ப்பை விசிறி விட்டபடியே “உவங்கள் ஒண்டுந் தராங்கள்” என்ற அரிய கண்டுபிடிப்பையே பல காலமாகத் திருப்பித் திருப்பிச் சொல்லிவரும் தமிழ்ரோசத் திண்ணைப் பேச்சுக்காரர்களின் வெற்றாவேசங்களை, மக்கள் சிறிது சிறிதாக விளங்கிக்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

மக்களின் வாழ்வுக்கான எந்த ஒரு சிறு அடிவைப்போ அறிகுறியோ காட்டாமல், அவலங்களைச் சொல்லியபடியே நீலிக் கண்ணீர் உகுத்தபடி இருப்பதும், ஆட்சியாளர்கள் மீது கோப உணர்ச்சி வற்றிவிடாமலிருப்பதே கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதற்கான மருந்து என்பதாகவும், குற்றப்பட்டியல்களை வாசித்தபடியே நொந்த மக்களை விற்றுத் தாம் வாழ்ந்து கொள்ளும் வெற்றுத் தமிழ் வீறாப்புகளை இனங்கண்டு தமிழ்மக்கள் எச்சரிக்கையடைந்து வருவதற்கான சமிக்ஞைகள் தெரியத் தொடங்குகின்றன.

மக்கள் துன்பம் பற்றிப் பேசுபவர்களும் ஆவேசப்படுபவர்களும் அவர்களின் துன்பத்தை மாற்றச் செய்துகொண்டிருப்பதென்ன? மீண்டும் மீண்டும் குற்றப் பட்டோலை வாசிப்பு தவிர வேறு???

Friday, January 7, 2011

இன்றும் ஒரு தகவல்

உலக அளவில் சென்டிமென்ட்

நம் நாடு மட்டுமல்ல உலகில் பல நாடுகளிலும் ஏகப்பட்ட சென்டிமென்டும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. நம் நாட்டில் எல்லாமே வலது மயம்தான். எதை கொடுப்பதாக இருந்தாலும் வலது கையால்தான் கொடுக்க வேண்டும். முதல் அடியை வலது காலால்தான் எடுத்து வைக்க வேண்டும் என்கிறார்கள். ரோமானியர்களுக்கும் இந்த சென்டிமென்ட் உண்டு. எப்போது வீட்டுக்குள் நுழைவதாக இருந்தாலும் வலது காலை முதலில் எடுத்து வைத்துதான் நுழைவார்கள். இங்கிலாந்து நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் செருப்பு போடும்போதுகூட முதலில் வலது காலைத்தான் உள்ளே நுழைப்பார்கள். இப்படி செய்வதால் ஆயுள் அதிகரிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை. வீட்டுக்குள் செருப்பு போட்டு நடப்பது நம்மூரில் புனிதமில்லாத விஷயம். அதோடு சுத்தத்துக்கும் எதிரி. இதனால் நம்மவர்கள் யாரும் வீட்டுக்குள் செருப்பு போடுவதில்லை. இந்த சென்டிமென்ட் தாய்லாந்திலும் உண்டு. அங்கு செருப்புக் காலுடன் வீட்டுக்குள் நுழைந்தால் அந்த வீட்டில் இருப்பவர்களை அவமானப்படுத்துவதாக அர்த்தம். அவர்களுக்கு வரவேற்பும் இருக்காது. நாம் எப்படி மற்றவர்களுக்கு பொருளை கொடுப்பதாக இருந்தால் வலது கையால் கொடுக்கிறோமோ அதே போல் தாய்லாந்திலும் வலது கை சென்டிமென்ட் உண்டு. அங்கே வலது உள்ளங்கையில் பொருளை வைத்து நீட்ட வேண்டும். அப்போது இடது கை, வலது கையின் மணிக்கட்டைப் பிடித்து இருக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் பலன் உண்டாம்.

உள்ளங்கை அரித்தால் வருமானம் வரும் என்ற சென்டிமென்ட் வெளிநாடுகளிலும் உள்ளது. துருக்கியில் இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும். வலது உள்ளங்கை அரித்தால் பணம் போய் விடும் என்பது நம்பிக்கை.       

பூனை குறுக்கே போனால் காரியம் உருப்படாது என்கிற சென்டிமென்ட் அமெரிக்காவிலும் உண்டு. அதிலும் கருப்பு பூனை என்றால் கேட்கவே வேண்டாம். உடனே, வீட்டுக்கு திரும்பி போய் சோபாவில் படுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் அங்கு கருப்பு பூனை சாத்தானின் குறியீடு. தரையில் படுத்திருப்பவர்களை தாண்டிப் போகக்கூடாது என்பது நமது பழக்கம். இது அமெரிக்காவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் குழந்தைகள் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் தாண்டக்கூடாது.

நாம் இரவில் நகம் வெட்ட மாட்டோம். கோரிய நாட்டினரும் அப்படித்தான். நகம் உடலின் ஒரு பாகம், அதை இரவில் வெட்டினால் எலிகள் தின்றுவிடுமாம், அதனால் நமது ஆன்மாவின் அளவு குறைந்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கை.

பல்லி கத்துவது நல்லது நடக்கும் என்பதற்கான அறிகுறி என்று சொல்கிறார்கள். இந்தோனேஷியாவில் கெய்கோ என்ற சிறுபல்லி சத்தம் கேட்டால் மக்கள் சந்தோஷப்படுவர். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை கொள்வார்கள். பிரசவ வலி ஏற்படும்போது இந்த பல்லி கத்தினால் சுகப்பிரவசமாக இருக்கும் என்பது ஐதீகம்.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் நம்மைப்போல சென்டிமென்ட் உண்டு.  

ஹாலிவுட் டிரெய்லர்

'திரும்புமா' என்று யாரும் கேட்பதில்லை. அதனாலேயே திரும்பத் திரும்ப இதிகாசங்களும்  பன்மொழி வித்தகர்களின் நாக்குகளால் காலத்துக்கு தகுந்தபடி எடிட் செய்யப்பட்டு காலம்தோறும் உச்சரிக்கப்பட்டு வருகின்றன. தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் போல கடத்தவும்படுகின்றன.

அந்தவகையில் நாம் வாழும் இக்காலக்கட்டம் எந்தத் தலைமுறையை சேர்ந்தது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

எப்படியாக இருந்தாலும் பாரசீக படைப்பான 'ஆயிரத்தோரு இரவுகள்' தமிழக குக்கிராம மக்களுக்கும் அத்துப்படி என்பது நிஜம்.

அப்படி இருக்க அமெரிக்காவுக்கு மட்டும் இப்படைப்பு போய் சேராமலா இருக்கும்?

1706 ல் ஆங்கிலத்தில் இப்படைப்பு மொழியாக்கம் செய்யப்பட்டபோதே போய்ச் சேர்ந்துவிட்டது. அன்றுமுதல் மேற்கத்திய நாடுகள் தொழில் நுட்பத்தில் வளர்ந்தவண்ணம் இருக்கிறது. எறும்பாக ஊரும் எழுத்தாக, படங்களாக விரியும் காமிக்ஸாக, கண்முன்னால் ஓடும் சினிமாவாக... இத்யாதி... இத்யாதி.

இப்படி இத்யாதியாக நீளும் ரயில் பெட்டியில் சமீபத்தில் இணைந்திருக்கும் கடைசி பெட்டிதான் வெளிவர இருக்கும் 'சிந்(து)பாத் தி ஃபிப்த் வோயேஜ்' ஹாலிவுட் திரைப்படம். பெரும்படைப்பான 'ஆயிரத்தோரு இரவுகளின்' கிளைதான் சிந்துபாத் கதை. இந்தக் கிளையை தனி ஆலமரமாக இப்படத்தில் ஃபோகஸ் செய்திருப்பவர் ஷாஹின் சியான் சாலிமோன். எழுத்தாளரும், இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான இவர், சிந்துபாத் கதையை கம்ப்யூடர் கிராபிக்ஸுடன் திரைப்படமாக எடுக்க காரணமாயிருக்கிறது.

'ஆயிரத்தோரு இரவுகள்' எங்கு பிரவேசித்ததோ அங்குதான் ஷாஹினும் பிறந்தார். யெஸ், ஈரான்தான் இவரது தாய்நாடு. அம்மாவும் அப்பாவும் புகழ் பெற்ற பெர்சியன் இசைக்கலைஞர்கள். ஆனால், 1978ல், ஈரானில் புரட்சி வெடித்ததையடுத்து தங்கள் மகனை மட்டும் காப்பாற்றும் பொருட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டார்கள். அப்போது ஷாஹினுக்கு வயது 6.

மொழி, இனம் தெரியாத ஊரில் தாய், தந்தை இல்லாமல் தனித்துவிடப்பட்ட ஷாஹினை அமெரிக்கரான ஜார்ஜ் தத்தெடுத்துக் கொண்டார். திரைப்படக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து அப்போதுதான் ஜார்ஜ் ஓய்வு பெற்றிருந்தார். எனவே ஷாஹினின் வரவு, அவர் வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வந்தது. தான் அறிந்த தனக்கு தெரிந்த அனைத்து கலைகளையும் ஷாஹினுக்கு கற்றுத் தந்தார்.

பள்ளியில் படித்தபடியே திரைப்பட நுணுக்கங்களையும் கற்று வந்த ஷாஹின், பெற்றவளின் மடியில் தலைசாய வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் 'ஆயிரத்தோரு இரவுகள்' கதையை மனத்திரையில் ஓடவிட்டார். அது தன் தலையை கோதியபடி அம்மா சொன்னக் கதை என்பது ஷாஹினுக்கு மட்டுமே தெரியும். எனவே ஷாஹினை பொறுத்தவரை 'ஆயிரத்தோரு இரவுகள்' என்பது வெறும் கதையல்ல. அம்மா. 
       
இப்படி வளர்ந்த ஷாஹின், தன் அம்மாவை ரத்தமும் சதையுமாக  சந்தித்து கல்லூரியில் படித்த காலத்தில்தான். அதுவரை  'ஆயிரத்தோரு இரவுகள்'தான் இவருக்கு தாய்ப்பாசத்தை கொடுத்தது. எனவேதான் தனது முதல் படைப்பான, 'டிஜின்' திரைப்படத்தை 'ஆயிரத்தோரு இரவுகள்' சாயலில் எடுத்தார். இதோ, இப்போது சாயளில்லாமல் நேரிடையாகவே சிந்துபாத்.

இந்த  ஹாலிவுட் படத்தை தயாரித்திருப்பது, 'ஜெயிண்ட் ஃபளிக் ஃ பிலிம்ஸ்'. இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்கள். ஷாஹினும் அதில் ஒருவர். 'இதுவரை நல்ல கதைகள் எதுவும் எழுதப்படவில்லை அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு விட்டது' என்ற வாசகம்தான் இந்நிறுவனத்தின் தாரக மந்திரம். ஆக்ஷன் ஃ பேன்டஸி, அட்வென்ச்சர் படங்களை தயாரிக்க வேண்டுமென்பதுதான் இவர்களது நோக்கம்.   
       
வாருங்கள், ஷாஹினின் அம்மாவை சிந்துபாத்தின் வடிவில் சந்திக்கலாம்.

கே.என்.சிவராமன்

Thursday, January 6, 2011

குலத்துக்கே பழியுண்டாக்கிய கோபம்

“நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது”

என்றார் வள்ளுவர். வேண்டிய அறிவை, ஆற்றல்களைப் பெற்றிருப்பது மட்டும் ஒரு மனிதனை உயர்ந்தவனாக்கி விடாது. எத்தனை பலமும் திறமைகளும் இருப்பினும், அடக்கமும் அவனிடம் இருந்தால்தான் அவன் பாராட்டத்தகுந்த மனிதனாக இருக்க முடியும்.

பொங்கும் நேரம் அறிந்து ஆக்ரோசமாய்ப் புறப்படுவது போல, அடங்க வேண்டிய இடம் அறிந்து தன்னை அடக்கிக் கொள்ளவும் தெரிந்திருப்பதே வீரம். தன் வலி அறிதலும் மற்றவர் வலி அறிதலும் வெற்றிக்கு ஆசைப்படுபவர்களிடம் இருக்க வேண்டிய விவேகங்களில் முக்கியமானவை. ‘வலி’ என்பது ஆற்றலையும் குறிக்கும் துன்பத்தையும் குறிக்கும்.

நம்மவர் துயரங்களையும் அறிந்து மற்றவர் துயரங்களையும் உணர்ந்து நம் ஆற்றலை வெளிப்படுத்தும் போதே அதற்கு அறம் சார்ந்த நியாயம் கிடைக்கிறது. அதுபோல் எதிர்த்தரப்பு ஆற்றலையும் எடைபோடத் தெரிந்திருந்தால், அடங்கிப் போக வேண்டிய நேரம் எது என்பது பற்றிய அறிவும் கைகூடுகிறது. நம்மை நம்பியவர்களினதும், பொதுவாக மனித உயிர்களினதும் பெறுமதியும் வலியும் தெரிந்திருந்தால், நம் ரோசப் பிடிவாதங்களை விட்டு இறங்கி வருவது ஒன்றும் கேவலமாகிவிடாது என்பதும் விளங்கும்.

காலமல்லாத காலத்தில் வீரத்தைக் காட்டுவது சிறுபிள்ளைத்தனமாகவே அமையும். அனைவரினதும் நலனுக்காக அடங்க வேண்டிய நேரத்தில், ஒன்றும் தெரியாதவனைப் போன்று நடந்துகொள்வதிலேயே புத்திசாலித்தனம் வெளிப்படும். அச்சமயம் நம்மைத் தாழ்த்துவதால் நாம் தாழ்ந்துவிடுவதில்லை. அதேபோல, பொங்கியெழ வேண்டிய நேரத்தில் அடங்கியிருக்கத் தேவையில்லை என்பதும் தெளிவு. இந்த வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டவன்தான் வீரனாக இருக்க முடியும். காலத்தையும் சூழலையும் கணக்கிடத் தெரியாத வீரம், வெறுமனே அழிவுகளை விளைத்துவிட்டே முடிவெய்தும்.

அடக்கம் என்பது ஒரு இயல்பு. அது இயல்பாகவே நமக்குள் கூடிவர வேண்டும்; மற்றவர்களுக்காக நாம் நடந்துகொள்ளும் முறையினால் அல்ல. நான் அடக்கமாகவே நடந்துகொள்கிறேன் என நினைத்துக் கொண்டாலே அது அகந்தையாகி விடும். “நான் மிகவும் அடக்கமானவன்” என்று நினைத்துக் கொள்வதைப் போன்ற வேடிக்கை வேறு கிடையாது. “நீ உறங்குகிறாயா?” என்ற கேள்விக்கு, “ஆமாம்!” என்று பதில் சொல்வதைப் போல.

இராமாயணத்தில் கம்பன் காட்டுகிற அனுமனது ஆற்றல் எல்லாம் அவனது அடக்கத்தினாலேயே பெருமையின் உச்சியைத் தொடுகிறது.

“அடங்கவும் வல்லீர்; காலம் அது அன்றேல், அமர் வந்தால் மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர்” என்று சாம்பன் அதை அனுமனிடமே சொல்கிறான். கடல் கடந்து வந்து சீதையைக் கண்டு, தன் பேருருக் காட்டிவிட்டு அனுமன், என் போல பல லட்சம் படைவீரர்கள் ராமனுக்குத் துணையாக உள்ளனர் “யான் அவர்தம் பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்@ ஏவல் கூவல் பணி செய்வேன்” என்று சாதாரணமாகச் சொல்கிறான்.

ஆனால், இதே அனுமனின் வீரத்தைக் கண்டே விபீடணன் ராமனிடம் சரணடைய வந்ததாகச் சொல்கிறான். “அனுமன் அரக்கரை அழித்த ஆற்றலையும், இலங்கையை எரித்து மீண்டதையும் கண்டுதான் இங்கு வரத் துணிந்தேனே தவிர, உன் வில்லுக்கு வாலியும் கரன் முதலியோரும் வீழ்ந்ததைக் கேட்டு அல்ல” என்று ராமனிடமே சொல்கிறான் விபீடணன். “உன் ஆற்றலையன்று, உன் தொண்டனின் ஆற்றலை வியந்தே வந்தேன்” என்கிறான்.

அனுமன் தன் வீரத்தை எண்ணி இறுமாந்து கொள்பவன் அல்ல. இறுமாந்து இறுமாந்து எல்லாவற்றையும் கவிழ்த்துக் கொட்டிவிட்டு மடிந்தவனும் அல்ல. ‘குடத்துப் பாலில் ஒரு துளி மோர் விழுந்தது’ போல இலங்கையையே தன் தனித்தன்மையால் மாறிப் போய்விடச் செய்த அனுமன், மீண்டு போய் ராமனிடம் சீதையைக் கண்ட செய்தியைச் சொன்னதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறான். அரக்கர்களைத் துவம்சம் செய்து தனியொருவனாக அவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தியதையோ இலங்கையை எரித்தது பற்றியோ ஒன்றும் சொல்லாது விடுகிறான். தன் வெற்றிகளைத் தானே உரைப்பதா என்று நாணுகிறான்.

இந்த அடக்கமே அவனைச் சமநிலை குழம்பாத முடிவுகளை எடுக்கத் துணையாய் நிற்கிறது. கிட்கிந்தைக்கு வரும் ராம லக்குவர்களைத் தூரத்தே கண்டே பகைவர்களாய் கருதிவிடும் சுக்ரீவன் போலல்லாமல், நேச சக்திகளை இனங்காண வைக்கிறது.

அனுமனது வீரம் நம்மைப் பிரமிப்புக்குள்ளாக்குவது, அவனது அடக்கத்தையும் அறிவதால்தான்.

வீரம் என்பது மக்களைப் பயமுறுத்துவதாக அல்ல; ஒவ்வொரு கணத்திலும் அது மக்களைப் பாதுகாப்பதாக நம்மை உணரவைக்க வேண்டும். அப்போதுதான் அது பிரமிப்புக்குரியது. அந்த வீரம் தேவையற்ற சினங்களை நீக்கி விடும். எதிரிகளையும் அவர்கள் தீவிரத்தையும் குறைக்குமே தவிர, எதிரிகளை அதிகரித்தபடி இருக்காது.

எல்லோர் மீதும் சினங்களைப் பாய்ச்சிக் கொண்டிருப்பதல்ல வீரம். அப்படிப் பாயும் சினத்தைப் பார்த்துப் பெருமிதப்பட்டுக் கொண்டிராது, தவறு களைந்து நெறிப்படுத்தப் பேசியிருக்க வேண்டியது கற்றறிந்த பெரியோர் கடன். தனக்கு நேர்ந்த துன்பத்திற்காக உலகையே அழித்துவிட முன்னும் கடுஞ்சின வார்த்தைகளை சடாயு முன்னால் கூறுகிறான் ராமன். “ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை; உள்ளம் ஆறுதி” என்று அவன் பிழையை உணர்த்திப் பேசுகிறான் சடாயு. “ஆராய்ந்து பார்த்தால் இதில் உங்கள் குற்றமும் பெருமளவு இருப்பது தெரியவரும். அதனால், உங்கள் குலத்துக்கே நாசத்தைத் தேடிக்கொள்ளும் கோபத்தைக் கைவிட்டு, நிதானமுடன் அனைவரையும் காப்பாற்றும் வழி காணுங்கள்” என்கிற விதமாக அறிவுரைக்கிறான் அந்தப் பறவையரசன். ராமன் கேட்டுக் கொள்கிறான். ஆனால், கெடுகுடிகள் யார் சொல்லும் கேட்பதில்லை. கேட்கும் நிலையிலும் யாரையும் விடுவதில்லை என்பதெல்லாம் சரிதான். நம்மிடம் விபரமறிந்த சடாயுக்கள் யாரும் இருந்திடவில்லையோ என்று சிந்தித்தால் உண்டாவதே பெருங்கவலை. நடக்கப் போவதைப் புரிந்துகொள்ளவும், மக்களுக்கு அதுபற்றி எச்சரித்து நேர்படுத்தவும் முடியாதளவுக்கு அவ்வளவு மடத்தனம் நிரம்பியதாகவா இருந்தது நம் ‘படித்த’ சமூகம்?

இப்போதேனும் நமக்கு வேண்டிய அடித்தளத்தைப் பெற்றுக்கொண்டு மேலே நகரும் விவேகம் வருமா நமக்கு? இப்போதும் வாய்ப்பைத் தவறவிடுவதால் மீண்டும் நம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஏற்படப்போகும் இழப்பை பற்றி நாம் உணர்ந்து கொண்டுள்ளோமா? வாழ்வை எதிர்பார்த்து வாடியிருக்கும் மக்களுக்கு தமிழ்த் தலைமைகள் காட்டும் வழி என்ன? வீரம் பேசியே வீழ்ந்து கொண்டிருப்பதுதானா?