Saturday, October 30, 2010

மனிதனைத் தேடும் மனிதன்!திரும்பும் திசையெங்கும் மனிதர்கள். 'அதோ போறானே... அவனெல்லாம் ஒரு மனுசனா?' என்று கூறுவதை இன்று அடிக்கடி கேட்க முடிகின்றது. மனிதனைப் பார்த்து மனிதன் கேட்கிற கேள்விதான் இது.

டயோஜெனிஸ் என்ற தத்துவஞானி ஒருநாள் பகல் நேரத்தில் எரியும் விளக்குடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் தென்படுகிறவர்களை உற்று உற்றுப் பார்த்தபடி சென்றார். எதிரே வந்தவர்கள், "யாரை இப்படித் தேடுகிறீர்கள்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "நான் மனிதனைத் தேடுகிறேன்'' என்றாராம். கேட்டவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி.

ஓர் உருதுக் கவிஞர்...

வண்ணத்துப்பூச்சிக்கு
பின்னால் போயிருந்தால்
பூங்காவிற்குள்
போயிருப்பேன்
மனிதர் பின்னால்
சென்று விட்டேன்...


என்று வேதனையுடன் பாடுகிறார்.

தத்துவஞானிக்கும், கவிஞருக்கும் என்னவானது? மனிதர்களை அவர்களுக்குப் பிடிக்கவில்லையா, இல்லை மனிதர்கள் யாரும் மனிதர்களாக இல்லையா? அவர்களின் பார்வையில் இந்த இரண்டுமே சரிதான். பார்ப்பதற்குப் பலரும் மனிதர்களைப் போல மனித உருவில்தான் இருக்கிறார்கள். ஆனால் மனிதர்களாக இல்லை என்பதுதான் பொருள்.

கிரேக்கர்கள் எதற்கும் இலக்கணம் வகுப்பதில் வல்லவர்கள். அதிலும் வரைவிலக்கணம் கூறுவதில் வல்லவர்கள். அவர்களுக்குள் ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. 'எல்லாவற்றிற்கும் நாம் வரை விலக்கணம் வகுத்து விட்டோம். மனிதனுக்கு மட்டும்தான் இலக்கணம் வகுக்கவில்லை' என்கிற வருத்தம் இருந்தது. எனவே, மனிதனுக்கு இலக்கணம் வகுத்தே தீர்வது என்று ஒருநாள் அறிஞர்கள் பலரும் கூடி முடிவெடுத்தனர்.

Friday, October 29, 2010

நேருவின் மறைவு பற்றி கருணாநிதி படித்த இரங்கல் கவிதை

சென்னை லயோலா என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தொடக்கவிழா நேற்று முன்தினம் நடந்தது. புதிய கல்லூரியை தொடங்கி வைத்து பேசிய முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் நேருவின் மறைவையொட்டி தான் முன்பு எழுதியிருந்த இரங்கல் கவிதையை நினைவுகூர்ந்தார்.

1970-ம் ஆண்டுக்கு முன்பே எழுதிய கவிதை."புன்னை மரம் நிழல் விரிக்கத் - தமிழ்அன்னை மடி சுகம் அளிக்க
சென்னை நகர் ஒளி தெளிக்க
முன்னை இருள் விலக்குதற்கு
முயல்கின்ற தமிழ் அரசு
முதுபெரியோன் காந்தியாரின்
மூத்த பிள்ளை நேருவுக்கு
முத்தமிழால் கவி தொடுக்கும்;
புவியரங்கில் புகழ்குவித்த பண்டிதர்க்குக்
கவியரங்கில் மாலை சூட்டும்
பூத்திருக்கும் தோட்டத்தில் புகுந்துவிட்ட என்றனுக்குக்
காத்திருந்த காட்சியொன்றைக் கவியாக்கித் தருகின்றேன்.
சிரிக்கின்ற 'மல்லிகை'யின் காதுகளில்
'செண்பகம்'தான்
ஏதோ சேதி தனைச் சொல்ல;
சேர்ந்திருவர் 'மந்தி'யிடம் ஓடி
அவள் செவியில் வாய் வைத்தார்; பின்னர்
மூவருமே 'முல்லை'யிடம் முனகிவிட்டு அவளோடு
நால்வருமே நந்தவனம் முழுவதும்
நடைபோடத் தொடங்கிவிட்டார்.
யாரைத்தான் தேடுகின்றார் பூப்பெண்கள்? கட்டுதற்கு
நாரைத்தான் தேடியலைகின்றாரோ- என எண்ணி, நான் வியந்தேன்.
(அதாவது நேருபிரான் மறைந்த நேரத்தில் அதையொட்டி எழுதப்பட்ட
தலைமைக் கவிதை. நேருவுக்கு ரோஜா மலர் மீது உள்ள அன்பும், அதன் மீது
உள்ள பிரியமும் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். எனவே, மலர்களை வைத்து
இந்தக் கவிதையை எழுதினேன்.)
தென்றலிலே மணம் பரப்பித் தேடுகின்றார் தேடுகின்றார்
தெரியவில்லை யாரை என்று!
"முழங்காலை வலிக்குதடி'' என்றாள் முல்லை.
"சிவந்ததடி என் பாதம்'' எனச் செண்பகம் இளித்தாள் பல்லை!
சாமந்தி மல்லிகை இருவர்க்கும் பெருந்தொல்லை
பூங்காவின் மூலையொன்றில் புலம்பல் ஒலி கேட்டவுடன்
பூப்பெண்கள் "அதோ அதோ!'' எனச் சொல்லி அந்த இடம் பறந்திட்டார்.
(நேருவைப் பார்த்து ரோஜா கேட்கிறது.)
"பூமானே! புகழ்க்குன்றே! போனாயோ என் தலைவா?
கோமானே! கொள்கை வேந்தே! உன்னைக்
கொள்ளையிட்ட கூற்றெங்கே?
எனையெடுத்து முத்தமீந்து இதயத்தில் ஏற்றிக் கொண்டாய்; இன்று,
எனைவிடுத்து நீ மட்டும் நெடுந்தொலைவு போய்விட்டாய் என்ன நியாயம்?
இதழுக்குத் தேன் தருவாய் - பதிலுக்கு
நான் தருவேன் மறந்தா விட்டாய்?
மார்பகத்தில் அணைத்திருப்பாய்
மகிழ்ச்சி வெள்ளம் கரை புரளும்
மங்கையென்னைப் பிரிவதற்கு உன் மனம்தான் கல்லோ?''
எனக் கதறும் ஒலி கேட்டு
இனிய நறும் பூப்பெண்கள் அருகே சென்றார்
மடைதிறந்த வெள்ளம் போல் கண்ணீர் கொட்டி
மயங்கிவிழும் நிலைமையிலே ரோஜா நின்றாள்.
மல்லிகை முல்லை அருகே சென்று
"என்னடி ரோஜா இன்னமும் அழுகை?
நல்லவர் இருந்தார் நானிலம் வாழ
வல்லவர் இருந்தார் வாரி அணைக்க
போனது வருமோ? புலம்பலை நிறுத்து!
பூக்களின் ராணி! புன்னகை காட்டு!''
ஆறுதல் கூறினர்; அழகு ரோஜா
தேறுதல் பெறாமல் தேம்பியழுதாள்!
'இரவு உமிழும் எச்சில் என்பேன் பனித்துளியை - என்
இறைவனது முத்தம் அமுதம் என்பேன்
அன்றமுதம் தந்தெனக்கு ஆசை காட்டி
இன்றென்னை எச்சில் பனித்துளியில் நனைத்துவிட்டார்; என் செய்வேன்?
முடிசூடா மன்னரவர் இனி என்னைச் சூடார்
என நினைக்கும் போதெல்லாம்
முள்ளாகக் குத்துதடி மேனியெல்லாம்!
வாழ்வில் சிரிப்பில்லா எனக்கு இந்தச் சிவப்பெதற்கு?
மனத்தில் மகிழ்வில்லா எனக்கு நறுமணந்தான் எதற்கு?
இந்தியச் சிம்மாசனத்தில் அவர் இருந்தார் - அவர்
இதயச் சிம்மாசனத்தில் நானிருந்தேன்
உறங்குகின்றார் விழித்தெழுவார்; படி
இறங்கி வந்து பாவையெனை அழைப்பதற்குள் அவர் நெஞ்ச
அரங்குதனில் ஆடுதற்குச் சிவப்பாடை
புனைந்து நின்றேன் அதற்குள் காலக்
குரங்கின் கை 'மாலை'யாக ஆகிவிட்டார்;
என் வாழ்வை இரவாக ஆக்கிவிட்டு!
போய்விடுங்கள் எனை விடுத்துத் தனியாக
புனிதனவன் பிறந்த நாளில் கண்புனலை அவன்
காலடிக்குக் காணிக்கை யாக்குதலே என் கடமை''
ரோஜாவின் சொற்கேட்டுச் சோர்ந்து போனேன்; தன்
ராஜாவின் பிரிவாலே வாடுகின்ற அவளையெண்ணிப்
பேசாமல் திரும்பிவிட்டேன்; இன்றென்
மனைவி கூந்தல் மணம் வீசாமல் போகட்டுமென்று
மலர் எதுவும் பறிக்காமல் வந்துவிட்டேன் - இன்று
மலர் பறித்தால்; அது மாவீரன் நேருவுக்கு
மாலை தொடுத்திடவே! நம்
மடி பறித்துச் சுதந்திரத்தை அபகரித்த வெள்ளையரின்
கொடி பறிந்து விடுதலைக் கொடி பிடித்த கொள்கை வீரன்
அடி கொடுத்தால் வாங்கிக்கொண்டு
அடக்குமுறை தாங்கிக்கொள்ள
அண்ணல் வகுத்த வழி
அயராதுழைத்த சிங்கம்!
இளமையின் எழிலை இருட்டுச் சிறையில் கழித்த தியாகி!
எண்ணெயிட்ட கடுகாய் வெடிக்கும் கோபம் எனினும்
எண்ணெயிட்டார் விடுதலை வேள்விக் கென்போம்!
பணமலைக்கிடையே பிறந்தார் எனினும் ஏழையை அணைக்கும்
குணமலையாய்த் திகழ்ந்தார் என்போம்!
பணியின் விரைவைப் பம்பரம் என்பர்.
பண்டிதர் பணியோ பம்பரம் தோற்கும்.
இடி இடிக்கும் பேச்சில் (நேருவின் பேச்சில்) - இளமைத்
துடிதுடிக்கும் எழுத்தில் - தேன் ஒரு
படி இனிக்கும் பண்பில் - அதிர்
வெடி முழக்கும் செயலில் - விடாப்
பிடியிருக்கும் குணத்தில் - விடுதலைக்
கொடியிருக்கும் கையில் - கொஞ்சம்
முடியிருக்கும் தலையில்! (என்னைப் போல)
நீதிக்கு எதிரானவற்றையெல்லாம்
நேர் நின்று எதிர்த்ததாலே நேரு வானார்... இந்திய
நீள் எல்லைக் கோடு தன்னைப் பெரும்பகைவர் கடந்த போது என்ன
நேருமோ என்றேங்கி இருந்த மக்கள்
நெஞ்சின் துயர் துடைத்து, எதுவும்
நேராது நான் இருக்கின்றேன் எனச் சொல்லி நேருவானார்.
துணிவிருந்தால் உள்ளத் தூய்மையிருந்தால்
துன்பம் நேருமா? எனக் கேட்டார் குழந்தையிடம்!
இன்பமே நேரும் மாமா என்றது பிஞ்சும் பூவும் -
இதனால் நேரு மாமாவானார்.
மதம் கடவுள் நம்பிக்கை இவற்றிலே
அவர் கொள்கை தனி. எனினும் பிறர்
மனம் புண்படாமல் நல்வழியில் ஆட்சி செய்தார் - தன்
மரணத்தின் பின்னாலே மதச் சடங்கு வேண்டாவெனத் தக்க
தருணத்தில் உயிலெழுதி உலகிற்கு ஒளி செய்தார்.
நடுநிலைத் தன்மை நலமெனக் கொண்டு
நானிலம் போற்ற நமது பூங்குன்றனார் நவின்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற மொழிக்குத்
தோதாய்க் கொள்கை தொகுத்தே சொன்னார்.
காலத்தின் கோலம் காட்டுக்கு ராஜாவாய்க் கர்த்தபம் ஆகும்
ஏலத்தில் சில பேர் கோபுர உச்சியில் குந்திக் கொள்வர் - இந்திய
ஞாலத்தின் தலைவராய் ஜவகர் ஆனது இவ்விதமன்று! அவர்
சேலத்து மாம்பழம் - சென்னைக் கடற்கரை -
கொற்கை முத்து - கொள்ளேகால் பட்டு -
தஞ்சைக் கோவில் - தண்புனல் காவிரி -
தறியில் காஞ்சி - தடந்தோள் பாண்டியன்.
கருத்தில் மாறுதல் இருந்த போதிலும் -
காலமானார் நேரு என்றதும் கண்ணீர் உகுத்தார்
கலங்கி அழுதார் காராக்கிரகம் கிடந்த அண்ணா!
கண்ணிய அரசியலைப் போற்றிடும் நாட்டில்
கண் நிகர் நேருவைப் புகழ்வோம் பாட்டில்!
படை துள்ளி வரும் - பகை
அள்ளி வரும் - எரி
கொள்ளி வரும் - கரும்
புள்ளி வரும் - சீனக்
கள்ளி வரும் - எனச் சிலர்
எள்ளி வரும் போது - விடி
வெள்ளி வரும் எனப் - பகை
கிள்ளி எறிந்தான் - இன்று திருப்
பள்ளி அயர்ந்தான் - நேரு -
திருப்பள்ளி அயர்ந்தான்! ''

Saturday, October 23, 2010

உலகின் உண்மையான ஹீரோ ஒரு தமிழன்


திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்மையுடனும், துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம், பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி (நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002.  

இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் "நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். கீழே உள்ள CNN linkல் உங்கள் வோட்டை போடுங்கள்.

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

டால்ஸ்டாயின் கேள்வி!

ஒருநாள் காலை நேரம் சிந்தனையாளர் டால்ஸ்டாய் நடந்து போய்க் கொண்டிருந்தார். எதிரே ஒரு இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். உடனே அவர் சென்று அவனைத் தடுத்து நிறுத்தினார்.

"எதற்காக இப்படிச் செய்கிறாய்?'' என்று கேட்டார் டால்ஸ்டாய்.

"ஐயா... நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்கத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு மூலதனமாக என்னிடம் எதுவும் இல்லையே? வறுமை வாட்டுகிறது. தற்கொலை செய்து கொள்வது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை'' என்றான் அந்த இளைஞன்.

உடனே டால்ஸ்டாய், "நான் உனக்கு நூறு ரூபிள் தருகிறேன். ('ரூபிள்', ரஷ்ய நாட்டுப் பணத்தின் பெயர்.) அதற்குப் பதிலாக உனது ஒரு விரலை மட்டும் தருவாயா?'' என்றார் டால்ஸ்டாய்.

"ஒரு விரலா! அது முடியாது.''

"சரி, நூறு ரூபிள் தருகிறேன்... ஒரு கண்ணைத் தருவாயா?''

"ஒரு கண்ணா! இதுவும் முடியாது.''

"அப்படியென்றால் ஆயிரம் ரூபிள் தருகிறேன். இரண்டு கால்களில் ஒன்றை மட்டுமாவது கொடு.''

இளைஞன் கோபத்தோடு சட்டென்று சொன்னான், "எதுவும் என்னால் கொடுக்க முடியாது. உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தான்.

அப்போது டால்ஸ்டாய் சிரித்துக் கொண்டே, "தம்பி... இங்கே வா. உன்னிடம் விலை மதிக்க முடியாத உடல் உறுப்புகள் இருக்கின்றன என்பதை இப்போது நீ புரிந்து கொண்டாயா? இதுதான் மூலதனம். இதை நன்றாகப் பராமரித்துப் பயன்படுத்து. நீ விரைவிலேயே செல்வந்தனாவாய்'' என்றார்.

அப்பொழுதுதான் அந்த இளைஞன் தனது உடம்பின் மதிப்பை உணர்ந்தான். கல்வியின் நோக்கமே உடல், மனம், மூளை, ஆன்மா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கிச் செல்வதே. எனவேதான் உடற்பயிற்சி நமது கல்வி முறையில் ஓர் அங்கமாக இருக்கிறது.

உடலினை உறுதி செய்!

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதி செய்...


மகாகவி பாரதி, புதிய பாரதத்தின் புதல்வர்களுக்குத் தந்த புதிய ஆத்திச்சூடி. இந்த ஒவ்வொரு வரியும் இளைஞர்கள் தடம் புரளாமல் இருக்க உதவும் தன்னம்பிக்கைக் கீற்றுகள். இவற்றுள் ஒன்றுதான், 'உடலினை உறுதி செய்'.

உடலினை எதற்காக உறுதி செய்ய வேண்டும்? சுவரை வைத்துத்தானே சித்திரம் வரைய முடியும்? உடல் நன்றாக இருந்தால்தானே எந்தச் செயலையும் சிறப்பாகச் செய்ய முடியும்? உடல் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா? உடலோடு ஒட்டியிருக்கின்ற மனமும் நன்றாக இருக்க வேண்டும். இந்த இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஒன்று நன்றாக இருந்தால்தான் இன்னொன்று நன்றாக இருக்கும்.

மனம் ஒரு கண்ணாடியைப் போன்றது. கண்ணாடி, முன்னே இருப்பதை அப்படியே காட்டும். அது போல் மனமானது நினைவு, சிந்தனை, உணர்ச்சிகள் இவற்றைச் செயல்படுத்திக் காட்டும்.

கண்ணாடி உடைந்தால் உருவமும் உடையும். அதுபோல்தான் உடல் அழிந்தால் மனமும் அழியும். ஆரோக்கியமான உடலில்தான் தெளிவான மனத்தைக் காணலாம். மனமும் உடலும் கலந்து செயல்படும்போதுதான் மனிதன் சிறப்பாக இயங்க முடியும். எனவேதான் சித்தர்களுள் சிறப்பாகப் போற்றப்படுகின்ற திருமூலர்-

உடம்பால் அழியின் உயிரால் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

என்று உடலைப் பேணுவதின் அவசியத்தை வலியுறுத்துகின்றார். உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்க முடியும். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளை அடைவதற்கு மூலக் கருவியாக இருப்பது உடல்தான். எனவே இந்த உயிர் அழியாது பாதுகாக்க வேண்டுமெனில், உடலையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

'பலமுள்ள தேகத்தில்தான் திடமான மனம் இருக்க முடியும்' என்பார் சிந்தனையாளர் ரூசோ. கடினமான உழைப்பு, உற்சாகம் தரும் விளையாட்டு, பிறரை ஏமாற்றாமை, பொறாமை கொள்ளாமை, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைதல் இவையே உன்னதமான வாழ்க்கை நெறிகள். இந்த நெறிமுறைகளின்படி வாழ்வதற்குத்தான் உடலினை உறுதி செய்தாக வேண்டும்.

ஆற்றல்மிக்க இளைஞர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கவர்ச்சியான தோற்றம் வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறீர்கள். அதைக் கனவாகவும் காண்கிறீர்கள். அந்த அழகிய தேகத்தைத் தீய வழிகளில் சென்று தீக்குத் தின்னக் கொடுக்கச் சம்மதமா?

Thursday, October 21, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

அனைத்துக்கும் காரணம் ஸ்பீல்பெர்க்தான். அவரது 'ஜுராசிக் பார்க்' திரைப்படம் மட்டும் வெளிவந்திருக்காவிட்டால் இம்மாத இறுதியில் சத்தியமாக 'மான்ஸ்டெர்ஸ்' ஹாலிவுட் படம் ரிலீஸாக காத்திருக்காது.

'அரிச்சந்திரன்' நாடகம் பார்த்து மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மாவானது அனைவருக்கும் தெரிந்த கதை. 'ஜூராசிக் பார்க்' படம் பார்த்து இன்ஸ்பையராகி 'மான்ஸ்டெர்ஸ்' திரைப்படத்தின் கதையை எழுதி கரீத் எட்வர்ட்ஸ் இயக்கியிருப்பது புதுக்கதை. படத்தின் கதை?


ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நமது பால்வீதியில் பூமி தவிர வேறொரு கிரகத்தில் உயிரினங்கள் வசிப்பதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கண்டுப்பிடித்ததும் விஞ்ஞானிகள் துள்ளிக் குதித்தார்கள். மூலைமுடுக்கில் உள்ள கல்வெட்டில் எல்லாம் இந்த விஷயத்தை பொறிக்க வேண்டும் என ஏகமனதாக முடிவு செய்தார்கள். சரித்திர சாதனை என சாக்லெட்டை பரிமாறிக் கொண்டார்கள். ஆனால், அது தரித்திர சாதனையாகும் என அவர்கள் எதிர் பார்க்கவேயில்லை.

Tuesday, October 19, 2010

சூரிய குடும்பத்தில் புதிய கிரகம்

 
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்து வருகின்றன. வான்வெளியில் மனிதனின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பவில்லை. புதிதுபுதிதாக கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஆய்வு செய்து அதன் நிலை, அளவு உள்ளிட்ட பல விவரங்களை முழுவதும் அறிந்தபின்னர் அந்த கிரகம் குறித்த தகவலை வெளியிடுகின்றனர்.

அப்படி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம்தான், கோர்ட் - 9பி. இது வெள்ளி அளவிற்கு பெரிய கிரகம் என்கின்றனர். பிரெஞ்ச் வான்வெளி ஆராய்ச்சி அமைப்புதான் இந்த கிரகத்தை கண்டுபிடித்தது. பின்னர், பிரான்ஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், மற்றும் ஐரோப்பிய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ஆராய்ச்சி செய்தன.

உலகம் முழுவதும் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட வான்வெளி அறிஞர்கள் இந்த கண்டுபிடிப்பை அக்குவேறு, ஆணிவேராக பிரித்து ஆராய்ந்தனர். இறுதியில் இது ஒரு கிரகம் என ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த கிரகம் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பியிருக்கிறது என்கின்றனர் அறிஞர்கள். பூமியைப் போன்று 20 பங்கு கடினமாக பொருட்கள் இந்த கிரகத்தில் உள்ளன. குறிப்பாக பாறைகள், உயர் அழுத்தத்தில் தண்ணீர் இருக்கிறது என்பது இவர்களின் கருத்து. அளவில் சனி மற்றும் வெள்ளி கிரகங்களை ஒத்துள்ளது.

கிரகத்தின் நீள அகலத்தை அளப்பது ஒரு சுவாரசியமான விஷயம். கிரகத்தின் மேற்பகுதி மீது ஒரு புள்ளியாக வெளிச்சம் செலுத்தப்படுகிறது. அது ஒரு சுற்று சுற்றி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து சேருவதை வைத்து அதன் தன்மை முடிவு செய்யப்படுகிறது. அப்படி இந்த கொராட் - 9பியை ஒளி சுற்றிவர 95 நாட்கள் ஆனது. இதன் காரணமாகத்தான் இதை வெள்ளிக்கும் சனிக்கும் இணையானது என்று கூறினார்கள்.

பூமியில் இருந்து 1500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள இந்த கிரகம் சூரிய குடும்பத்தில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ளதால் இதுவரை கண்டுபிடிக்கபடாமல் இருந்துள்ளது. வான்வெளி ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல் கல். இதன் தொடர்ச்சியாக பல்வேறு கிரகங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்பது இதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் டிம்லிஸ்டர், ரச்சேல்ஸ்ட்ரீட், மார்டின் ஹைடாஸ் ஆகியோரின் கருத்து.
               

Monday, October 18, 2010

அப்துல் கலாம்டாக்டர் அப்துல் கலாம் அவர்களது பிறந்தநாளை 'உலக மாணவர் தினமாக' ஐ.நா மன்றம் அறிவித்திருப்பது பெருமையளிக்கிறது. நாங்களும் மாணவர்களாகிஅந்த மேதைக்கு எங்களுடைய பிறந்தநாள் (15.10.1931) வாழ்த்துக்களை சமர்ப்பணம் செய்வோம். 

கனவுகள் நனவாகட்டும். பாரதம் உயரட்டும்.

மாற்றம் ஒன்றே மகத்துவமானது

மனிதனின் மகத்துவம் குறித்து எல்லா மதங்களும் பேசியிருக்கின்றன. ஆனால்,  மக்கள் தங்கள் வாழ்வில் உணராத ஒன்றை நம்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு மாறாக, நீங்கள் உண்மையை நோக்கி நகர்வீர்களேயானால் எல்லாருக்கும் ஒரே உண்மைதான். அது கிறிஸ்துவராகயிருந்தாலும், இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் உண்மை ஒன்றுதான். நம்பிக்கை என்று வருகிறபோது, எது உண்மை, எது உண்மையில்லை என்பதைப் பற்றியும் தனித்தனியான ஒரு நம்பிக்கை இருக்கிறது. பார்க்காததையும், அனுபவித்து உணராததையும் நம்புகிறார்கள். எல்லா முரண்பாடுகளுக்கும் இதுதான் அடிப்படைக் காரணம்.

சிலர் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள். சிலர் கடவுள் இல்லையென்று நம்புகிறார்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் ஒரு தேடுதல் உங்களுக்குக் தொடங்கும். தேடுதலுக்கான தேவை ஒருமுறை வந்துவிட்டால், அதற்கான விடை வெகுதூரத்தில் இல்லை. ஒருமுறை நீங்கள் ஏதாவது ஒன்றை நம்பத் துவங்கிவிட்டால், உங்களுக்குள் உள்ள தேடுதல் அழிந்து விடும்.

ஆன்மீகத் தேடல் என்பது நிச்சயமாக தனிமனிதர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஓர் உணர்வு. ஆனால், அது உள்நோக்கிய தேடலாக அமைய வேண்டும். உண்மையான ஆன்மீகத் தேடல், முதலில் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும். எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாது. தான் உள்பட எல்லாவற்றையும் நிராகரிக்கும். ஆனால், எதையும் அலட்சியப்படுத்தாது. விடைகளைப் புத்தகத்தில் தேடாது. அனுபவத்தில் காண முயற்சிக்கும். சுருக்கமாகச் சொன்னால், ஆன்மீகம் என்பது ஓர் அனுபவம்.

Wednesday, October 13, 2010

இன்று ஒரு தகவல்

காரல் மார்க்ஸ்

உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் கம்யூனிசத்தின் செங்கொடி ஆட்சியின் கீழ் இருந்த காலம் உண்டு. இந்த கம்யூனிசம் உருவாக முதல் வித்திட்டவர் கார்ல்மார்க்ஸ்.

உலகில் நடந்த பல புரட்சிகளுக்கு விதையாய் இருந்த கார்ல் மார்க்ஸ், பிறக்கும் போது மென்மையானவர். நடுத்தரவர்கத்தில் வழக்கறிஞரான ஒருவருக்கு மகனாக பிறந்தார். இவர் பிறந்தபோது ஐரோப்பாவில் தொழிற்புரட்சி உச்சத்தில் இருந்தது. பசுமை புரட்சியின் போது விவசாயிகளை எப்படி நிலப்பிரபுக்கள் அடிமைகள் போன்று நடத்தினார்களோ, அப்படியே தொழில் புரட்சியின்போது முதலாளிகள், தொழிலாளிகளுக்கு குறைந்த கூலி கொடுத்து கசக்கிபிழிந்து வேலை வாங்கி கொண்டிருந்தனர்.

மார்க்ஸ் சட்டம் படித்தார். தத்துவயியலில் டாக்டர் பட்டம் பெற்றார். தொழிலாளர்களுக்கு சாதகமான ஒரு நிலை காலப்போக்கில் ஏற்படும் என்ற சோஷலிஸ்ட்களின் கருத்தை மார்க்ஸ் ஏற்கவில்லை. திடீரென்று ஒருநாள் தொழிலாளர்கள் பொங்கி எழுவார்கள், புரட்சி வெடிக்கும், இந்த புரட்சியின் இறுதியில் தொழிலாளர்களின் ஆட்சி மலரும் என்று மார்க்ஸ் உறுதியாக சொன்னார். 'இது ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது' என்றுதான் அன்று மார்க்சின் வார்த்தையை உலகம் நம்பியது. ஆனால் 1917ல் ரஷ்யாவில் ஆகஸ்ட் புரட்சி நடந்து கம்யூனிஸ்டுகள் ஆட்சியை கைப்பற்றியபோது மார்க்சின் வார்த்தைகள் உண்மைதான் என்று உலகம் ஒப்புக்கிண்டது.

மார்க்ஸ் எழுதிய மூலதனம் புத்தகம்தான் கம்யூனிஸ்ட்களின் பகவத்கீதை. 19ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதர் என்று போற்றப்படுகின்ற கார்ல் மார்க்ஸ் தன் வாழ்வில் வருமையைத்தவிர வேறு எதையுமே பார்க்கவில்லை. இதைப் பற்றி மார்க்சின் மனைவி ஜென்னி இப்படி எழுதியிருக்கிறார்.

'அலைக்கழிக்கப்பட்ட நிலையில் நான் அன்று வீடு திரும்பினேன். எங்கள் குட்டி தேவதை பிரான்சிஸ்கா மார்புச்சளியால் மூச்சுவிட திணறிக்கொண்டிருந்தாள். வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே மூன்று நாட்கள் போராடி கடைசியில் அவள் தோற்றுப்போனாள். தாய்ப்பாலோடு என் நெஞ்சின் வேதனையையும், வருத்தத்தையும் சேர்த்து பருகியதால்தான் அவள் இறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன். அவள் பிறந்தபோது தொட்டில் வாங்க கூட எங்களிடம் பணமில்லை. இறந்தபோது சவப்பெட்டி வாங்கக்கூட காசில்லை' மனதை ரணப்படுத்தும் இந்த வார்த்தைகள் அத்தனையும் உருக்கமானவை.

முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தே எழுதிக்கொண்டிருந்தால், மார்க்ஸ் எப்போதும் எவருக்கு கீழும் பனி புரிய தயாராய் இல்லை. தனது குழந்தைகள் வறுமையில் அடுத்தடுத்து இறந்து போவதை சகிக்க முடியாமல் மார்க்ஸ் ரெயில்வே நிறுவனம் ஒன்றில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். சேர்ந்த கொஞ்சநாளிலேயே அவரது கையெழுத்து சரியில்லை என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டது ரெயில்வே நிர்வாகம்.

அந்த அளவிற்கு மோசமான கையெழுத்து கார்ல் மாக்சினுடையது. அவரது மனைவி ஜென்னிதான் பல சமயங்களில் தனது கணவரின் கையெழுத்தை படித்து மார்க்சிற்கு திரும்ப சொல்லுவார்.

1881 ல் ஜென்னி இறந்தார். அடுத்த 2 ஆண்டுகளில் மார்க்சும் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் உலகிற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டார்.

தான் வாழும்போது உலகிற்கு எந்த செய்தியையும் சொல்லாத முட்டாள்தான் இறக்கும்போது ஏதாவது சொல்ல வேண்டும் என்று கூறி முடித்தார், மார்க்ஸ். அவர் தொடங்கிய கம்யூனிசம் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.                   

Tuesday, October 12, 2010

கவிதைச்சரம்

புருஷ லட்சணம்

"ஒன்றே குலம்
ஒருவனே தேவன்"

ஒன்றே என்றால்
எல்லைகள் விரியும்
ஒன்றிற்கு மேலென்றால்
எல்லைகள் சுருங்கும்!

"நாம் இருவர்
நமக்கு ஒருவர்"

வாழ்க்கையின் வசந்த எல்லைகள்
ஒன்றிலன்றி ஒன்றிற்கு மேல் இல்லை
புரிகிறதா?
புருஷ லட்சணம் எதுவென்று 


***************************
 
ஆம்பளை யானை

நான்கு வயது மகன்
கேட்டுக் கொண்டதும்
யானையாகிப் போனார்
என் கணவர்.
ஏறி அமர்ந்த பிள்ளை
உற்சாகமானான்
'யானை யானை..
அம்பாரி யானை...
அறைக்குள் வலம் வந்தது
மகனைச் சுமந்த யானை.
'என்னம்மா யானை
வீட்டுக்குளேயே சுத்துது...?
கேட்டமகனுக்கு சொன்னேன்
'நாமெல்லாம்
ஊருக்கு போயிட்டா
அது வெளியில சுத்தும்டா!

ஆங்கரை பைரவி


***************************

கவிதையும் பெண்களும் நிறைந்த உலகம்!

ழைபற்றிய கவிதையைச்
சொல்லி முடிக்கும்போது
நித்யாவின் முகம்
மலர்ந்திருந்தது.
கயல்விழியின் விழிகள் விரிய
நான் வேறொரு கவிதை
சொல்ல வேண்டியிருந்தது.
கவிதைகள் முடிவில்
மெல்லிய சோகம்
இழையோட வேண்டும்
கவிதாவுக்கு.
மற்றவர் கவிதையை
என் கவிதை என்று சொல்லி
ஏமாற்றிவிட முடியாது
கிருத்திகாவை.
எந்தவொரு கவிதையையும்
மிகச் சுலபமாய்
நிராகரித்துவிடுகிறாள்
சரண்யா.
அவளைக் கவர்வதற்கான
கவிதையை
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நான்
அவளோ
நிராகரிப்பதற்கான காரணத்தை !

தி.அய்யப்பன்
 
***************************
 
குறை ஓவியம்!

யாரோ ஒருவரது
அதட்டலால்தான்
குழந்தைகளின் கிறுக்கல்கள்
கிறுக்கல்களாகவே
நின்றுவிடுகின்றன!

வைகறை


***************************
 
பூவென உதிரும் பெண் நட்புகள் !

98.........
அதே எண்தான்
அதே 1100
ஆதி காலத்துக் கருவிதான்
முன்னிரவில் நெடுநேரம் பேசிய
நெடுநாள் தோழியின் எண்கள்
நண்பகல் உணவு வேளையில்கூட
இப்போது அழைப்பதில்லை
'பனிக்குடத்தில் என் கவிதை வந்திருக்கு
பார்த்தீர்களா சார்'
கவிதை குறித்து அவ்வப்போது
அபிப்பிராயம் விழைத்த புதுத் தோழியின்
குரலும் கேட்பதில்லை
அநேகமாக அவளுக்கு
நிச்சயதார்த்தமோ கல்யாணமோ முடிந்துவிட்டிருக்கலாம்
கொஞ்ச நாட்களாய் குறுஞ்செய்திக் கவிதை
அனுப்பிகொண்டிருந்தவளும் அனுப்புவதில்லை
ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது
நட்பைப் புதுப்பித்துக்கொண்டிருந்த
மதுரகவித் தோழி
இனியொருபோதும் பேசப்போவதில்லை
சமீபத்தில்தான் அவளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
ஆம் நண்பர்களே...
ஆண் நண்பர்கள் பரவாயில்லை
ஒரு பீர் உள்ளிறங்கினால் போதும்!

யாழினி முனுசாமி    


வறுமை...

இந்த வறுமை, எத்தனை குடும்பங்களை வாட்டிஇருக்கின்றது! இதன் பசி, எத்தனை உயிர்களைப் புசித்திருக்கின்றது!

கொடியது எது? என்ற கேள்விக்கு, 'இளமையில் வறுமை கொடியது' என்றுதானே சொல்லி வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் சிறுபாணாற்றுப் படையும் ஒன்று. அதில் வரும் ஒரு காட்சி... சமைத்துப் பல நாட்களான அடுப்பங்கரை. மூங்கில் வேயப்பட்ட அந்த வீட்டின் கூரையை கரையான்கள் அரித்தன. அடுப்பங்கரையில் காளான்கள் முளைத்தன. அதன் அருகே அப்பொழுதுதான் ஈன்ற நாய்க்குட்டிகள். கண் திறக்காத அந்தக் குட்டிகள் பசியெடுக்க, தாயின் மார்பகங்களை வருடுகின்றன. அந்தத் தாய் நாயோ பசியால் துடிக்கின்றது. குட்டிகளின் வருடலைப் பொறுக்க முடியாமல் குரைக்கவும் சக்தி இன்றி வலியால் முணங்குகின்றது.

வீட்டின் இன்னொரு பக்கம், உண்பதற்கு ஒன்றும் இல்லை. இளைத்த தேகத்தை உடைய அந்த வீட்டுப் பெண், குப்பையில் முளைத்த கீரையைக் கிள்ளி வேக வைக்கிறாள். போடுவதற்கு உப்பில்லை. கண்ணீர்த் துளிகளையே உப்பாக்குகிறாள். அதையும் சாப்பிடுவது எதற்குத் தெரியுமா?

'அழி பசி வருத்தும் வீடு' அது. சாதாரணமான பசியில்லையாம், அழிக்கும் பசி. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பார்களே, அது இதுதான். இலக்கியம் காட்டும் பாணர்களின் வறுமை வாழ்க்கை இது.

Monday, October 11, 2010

ஷபனா ஆஸ்மியுடன் ஒரு நேர்காணல்

1973-ல் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷபனா ஆஸ்மி, 1974-ல் ஆங்கூர் என்கிற இந்தி திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் திரையில் தோன்றினார். முதல்படமே இவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

பிரபல திரைக்கதை எழுத்தாளர், பாடலா சிரியரும், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகி விவாகரத்து பெற்றவருமான ஜாவத் அக்தரை 1984-ல் திருமணம் செய்து கொண் டார்.


ஷபனா தனித்து விடப்பட்ட தனிமைப் பெண்ணாக தனது நாத்தனாருடன் காதல் கொள்ளும் கதாபாத்திரமாக நடித்த 'பயர்' திரைப்படம் மிகவும் பரபரப்புடன் பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை கொள்ளும் லெஸ்பியன் உறவு திரையில் காண்பிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து சில சமூக நிறுவனங் களும் அரசியல் கட்சிகளும், ஷபனாவிற்குக் கடுமையான எதிர்ப்புகளும் மிரட்டல்களும் விடுத்தன.


இவர் 1989 முதல் பிரதமர் தலைமையில் இயங்கி வரும் தேசிய ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், இந்திய எய்ட்ஸ் கமிஷனிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.


"உங்களை பெண்ணுரிமைப் போராளி என்று மக்கள் அழைக்கிறார்களே?''
"நான் பெண்ணினத்திற்காகப் போராடும் ஒரு பெண்ணுரிமைப் போராளி தான். ஆண்-பெண் இருபாலரும் சம உரிமையுடன் திகழவேண்டும் என்று நினைப்பவள். ஆண்கள் பெண்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்றாலும், பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்ல. இப்படி நான் கூறுவதை ஆண்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிட்டு பெண்களை மிகைப்படுத்திக் கூறியதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. எங்கள் குடும்பத்தில் எனக்கு ஆண்களுக்கு இணையான சமத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.

பிரபல கவிஞரான எனது தந்தையின் 'அவுரத்' என்ற கவிதை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இக்கவிதை பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசுகிறது. நான் எப்பொழுதும் எனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்ந்தவள். பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசும் அபூர்வமான ஆண்களில் எனது தந்தையும் ஒருவர்.

பெண்களிடமும் கலந்து ஆலோசிக்கும் ஒரு சமதர்மச் சமுதாயம் மலரும்போதுதான் எந்த ஒரு பிரச்சினைக்கும் இந்த உலகம் ஒரு சுமூகமான தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். முக்கியமான கலந்துரையாடல்களிலும், முக்கிய தீர்வு காணவேண்டிய விவாதங்களிலும் பெண்கள் அவசியம் பங்குபெற வேண்டும். பெண்களுக்கு அதிக இடம் வேண்டும் என்று போராடுபவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும். தீர்மானம் நிறைவேற்றும் மன்றங்களில் பெண்களின் பங்கும் வலுவானதாகத் தோன்றக் கூடிய ஒரு மாற்றம் அவசியம் தேவை.

நான் ஒரு மதப்பற்றுள்ள பெண் என்பதை விட, நான் ஒரு மனைவி, ஒரு நடிகை, ஒரு பெண்ணுரிமைப் போராளி என்று சொல்வதையே சிறந்ததாகக் கருதுகிறேன். நம் நாட்டிற்கென தனிப்பட்ட பாரம்பரியமிக்க பண்பாடு உண்டு. காஷ்மீர் இந்து முஸ்லிம் நல்லுறவைப் போல நாம் எல்லா மதத்தினரையும் மதிக்கிறோம்.''

"நீங்கள் அடிக்கடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதால் பொதுமக்கள் மத்தியில் விளம்பரப் பிரியை என்ற கருத்து நிலவுகிறதே?

"நான் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுபவள் அல்ல. என்னைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்பங் களும் சூழ்நிலைகளும் என்னை உருவாக்குகின்றன. எனக்கு எது சரி யெனத் தோன்றுகின்றதோ, அதற்காக நான் போராடுகின்றேன். எனது தந்தை காய்பி ஆஸ்மி ஒரு கம்ïனிஸ்ட் கட்சித்தலைவர். அவருக்கு மாதச் சம்பளம் நாற்பது ரூபாய்தான். எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது நாங்கள் கூட்டுக்குடும்பமாக 225 சதுரஅடி கொண்ட ஒரே அறையுடன் கூடிய வீட்டில்தான் எல்லோருக்கும் பொதுவான ஒரே ஒரு கழிப்பறையுடன் குடித்தனம் செய்தோம். நான் ஒரு கூட்டுக் கலாசாரத்துடன் வளர்ந்தவள். நாங்கள் எல்லா பண்டிகையும் கொண்டாடுவோம். இந்த அனுபவங்கள் தான் என்னை ஒரு பொதுநலம் பேணும் பெண்ணாக வடிவமைத்தது.''

"தீபா மேத்தாவின் 'பயர்' திரைப்பட லெஸ்பியன் காட்சிகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் தோன்றின. ஆனால், தற்போது ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த முரண்பாடு குறித்து உங்கள் கருத்து?''
"நான் எப்போதும் எனக்குப்பிடித்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். ஒருசில பகுதியில் இருந்து வரும் கண்டனக் குரல்கள் எனது திரையுலக வாழ்வை ஒருபோதும் பாதித்ததில்லை. நாம் காணும் சமுதாயம் என்பது ஒருசில செக்ஸ் பிரியர்களையும் சேர்த்துத்தான். நாம் இந்த சிறுபான்மையினரைச் சார்ந்த பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டு தனித்துவம் நிறைந்த தனிமனிதர்களாக வாழமுடியாது''

"பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா 'வளமான நாளைய சமுதாயத்திற்கு முன்னோடி' என்று நீங்கள் கருதுகிறீர்களா?''

"ஆண்களோடு பெண்களும் இணைந்துதான் சுதந்திரத்திற்காகப் போராடினர். அக்காலத்தில் 4 சதவீத பெண்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றனர். தற்போது 63 ஆண்டுகளுக்குப் பின்னர் அதைவிடக் கூடுதலாக 8 அல்லது 10 சதவீத பெண்களே பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். அற்ப காரணங்களுக்காக வேண்டுமென்றே பெண்கள் அரசியலை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் பெண்கள் அரசியலமைப்பு ரீதியானஅங்கம் வகிப்பது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டால்தான் சாத்தியமாகும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதற்காக பாரதப்பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் திட்டம் தீட்டும்போது பெண்களிடமும் கருத்துக்கணிப்பு கோரும் உரிமையைத் தருகிறது, பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா. இது முழுஅளவில் லோக்சபாவிலும் நிறைவேறி வெற்றிபெற நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

தற்காலத் திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

"தற்கால இந்தியத் திரைப்படங்களில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் கிராமப்புற ஏழை மக்கள்தான். இந்த அடிப்படை யதார்த்தம் புறக்கணிக்கப்பட்டு தற்போதைய திரைப்படங்கள் அனைத்திலும், அனைத்து கதாபாத்திரங்களும் நகர்ப்புற மாந்தர்களாகப் பவனி வரும்போது தற்காலத்திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று எவ்வாறு கூறமுடியும்? எனவே தற்காலத்திரையுலகம் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவேண்டியது கட்டாயத் தேவையாகிறது. இந்த அவசியத்தை திரைக்கதை வசனகர்த்தாக்கள் கருத்தூன்றி உணரவேண்டும்.

ஆனால் தற்கால திரையுலக எழுத்தாளர்கள் இதை உணர்ந்து அதற்கேற்ப முன்னேறுவதற்கான சூழ்நிலை இன்னும் அமையவில்லை என்றே கருதுகிறேன்'' (வசீகரிக்கும் புன்னகையுடன்).


இன்று ஒரு தகவல்

வாத்சாயனர் வகுத்த நான்கு கட்டங்கள்  

வ்வொரு குடும்பத்திலும் நல்லவர்கள் உருவாக வேண்டும் என்றால் அவர்களுக்கு ஆரோக்கியமான செக்ஸ் உறவு குறித்த புரிதல் இருக்க வேண்டும். செக்ஸை பயன்படுத்தி தங்கள் உடலையும், அதன் மூலம் நாட்டின் ஆரோகியத்தையும் எப்படி பராமரிப்பது என்று சொல்லித்தரவே காம சாஸ்திரங்கள் ஏற்பட்டன. இப்படி எழுதப்பட்ட பல காம சாஸ்திரங்கள் வாத்சாயனர் எழுதிய காமசாஸ்திரம் சிறந்ததாக கருதப்படுகிறது.

வாத்சாயனர் தனக்கு முன்னால் பலர் எழுதிய அனைத்து நூல்களிலும் என்ன இருந்தது என்பதை தொகுத்து தந்திருந்தார். அவர்கள் சொன்ன கருத்துக்களில் ஏற்ககூடியது எது. ஏற்க முடியாதது எது என்பதையும் இனம் பிரித்துக் கொடுத்தார்.

காமசூத்திரத்தை படிக்கும் போது பல இடங்களில் சந்தேகம் ஏற்படலாம். அதற்கு அவரே கேள்வி கேட்டு பதிலும் சொல்கிறார். இப்போது ஏறக்குறைய அனைத்து இணைய தளங்களிலும் இருக்கும் 'பிரிகுவன்ட்லி ஆஸ்க்டு கொஸ்டின்ஸ்' (எப்.ஏ.க்யூ) போன்றது அது.

ஒரு மனிதனின் வாழ்கையை நான்கு கட்டங்களாக பிரிக்கிறது. காமசூத்திரம். பூமியில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும் இந்த பூமிக்கு வந்த யாத்ரீகர்கள் என்று தான் ரிஷிகள் கருதினார்கள். இதனால் மனிதனின் வாழ்க்கை ஒரு பயணமாகவே கருதப்பட்டது.

இந்த வாழ்வின் முதல் கட்டம் பிரம்மச்சரியம். இதற்கு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது என்று அர்த்தம் அல்ல. இளம் பிராயத்தில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும். மற்ற ஆசைகளை கல்வி முடியும் வரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே பொருள்.

திருமணங்களில் காசியாத்திரை என்று ஒரு சடங்கு உண்டு. அந்தகாலத்தில் உயர்கல்வி காசியில் மட்டுமே இருந்தது. எனவே உள்ளூர் கல்வியை முடித்துவிட்டு மேற்கல்விக்காக பிரம்மச்சாரி காசிக்கு புறப்படுவான். அப்போது தாய் மாமன் வந்து வழிமறித்து 'மாப்பிள்ளை, படித்தது போதும், எனது மகளை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வை மேற்கொள்ளுங்கள்' என்று கேட்டு மகளை திருமணம் செய்து வைப்பார். இந்த பழைய வழக்கம் தற்போதும் நீடிக்கிறது.

இரண்டாவது கட்ட யாத்திரையில் தாம்பத்திய உறவில் சுகம் அனுபவிப்பது. குடும்பத்தை காப்பாற்றுவது என இணைந்து செய்ய வேண்டிய கடமைகள் பல இந்த பருவத்தில் உள்ளன.

மூன்றாவது கட்டம் வான பிரஸ்தம். இதை ஓய்வுக்காலம் எனலாம். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட மகன் வசம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, ஒதுங்கி நின்று அவனுக்கு வழிகாட்டுவது இந்த பருவம். எந்த அதிகாரமும் இல்லாமல், ஆனால் அனைத்துமே தன் கண் அசையும்படியே நடப்பதை பார்த்து பெருமிதமாக வாழும் கால கட்டம்.

லோக யாத்திரையின் நான்காவது கட்டம் சந்நியாசம். எல்லா பொறுப்புகளையும் துறந்துவிட்டு ஓய்வாக பொழுதை கழிப்பது, வீட்டிலோ அல்லது காட்டில் இருக்கும் ரிஷிகளின் ஆசிரமத்திலோ மீதி வாழ்கையை கழிப்பது.

ஒவ்வொரு குடிமகனும் இப்படி முறைப்படி லோக யாத்திரை மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து கொடுப்பது, அரசனின் கடமை என்று காமசூத்திரம் சொல்கிறது.

வெறும் செக்ஸ் உறவு முறைகளை பற்றி மேட்டுமே பட்டியலிடாமல், வாழ்க்கை தத்துவங்களை பற்றியும் தெளிவாக சொல்கிறது. வேறெந்த செக்ஸ் புத்தகத்திலும் கிடையாது என்பது தான் வாத்சாயனரின் சிறப்பு.                   

Saturday, October 9, 2010

தெரிந்துகொள்வோம்.......

 • நாம் காணும் எல்லாப் பொருட்களின் பிம்பமும் நமது விழித்திரையில்தலை கீழாகத் தான் விழும். மூளை தான் இவற்றை நேராக மாற்றுகிறது.

 • புற்றுநோய்க்கு கண்கண்ட மருந்தான மீத்தோடிரெக்சேட்டைக் கண்டறிந்தவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த எல்லப்பிரகத சுப்பாராவ் ஆவார்.

 • இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் இயற்றப்பட்ட பாடல் தான் வங்காளதேசத்தின் நாட்டுப்பண்ணாக உள்ளது.

 • இன்று மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் படிக்கும் பிரபலமான பாடல், 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...' இதை எழுதியவர் இசை மேதை மொஸார்ட். இப்பாடலை எழுதும்போது அவருக்கு ஐந்து வயதுதான். விளையாட்டாய் அவர் எழுதியது உலகம் முழுக்கப் பிரபல மாகிவிட்டது.

 • இந்திய நாழிதல்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி பாரதியார் ஆவார்.

 • 9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன் எண்களைக் கொண்டு விளையாடும் ஒரு புதிர் விளையாட்டான சுடோக்கு யப்பான் நாட்டில் 1986 ஆம் ஆண்டில் அறிமுகமானது.

 • நேபாள நாட்டின் கோடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத கொடியாகும்.

 • ஒரு கடதாசியை 7 முறைக்கு மேல் பாதிபாதியாக மடிக்கமுடியாது என்பதை அறிவீரா?, அது எவ்வளவு மெலிதாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி 7 முறைக்கு மேல் பாதிபாதியாக மடிக்க இயலாது.

 • ஒவ்வொரு மனிதனின் நாக்கின் ரேகைக்கும் வேறுபாடு உண்டு.மலேசியாவின் பட்டுவா குகையில் உள்ள முருகன் சிலை (படம்) தான் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையாகும்.

 • கௌதம புத்தர் ஞானம் பெற்ற போது அமர்ந்ததாகக் கூறப்படும் போதி மரம் உண்மையில் ஓர் அரச மரமாகும்.

 • யூ எஸ் பி (USP) எனப்படும் பல்தொடர் இணைப்பியைக் கண்டுபிடித்தவர் இன்டெல் நிறுவனத்தின் அஜய் பட்.
 
 • லியனார்டோ டா வின்சி ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கையால் வரையும் திறன் கொண்டிருந்தாராம்.

 • சென்னையிலுள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையமே இந்தியாவின் மிகப்பழமையான புத்தக நிலையமாகும்; இது 1844 இல் ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது.

 • சுவர்க்கடிகாரத்தின் டிக்...டிக் ஒலியைக்கூட 40 அடி தூரத்திலிருந்து ஒரு நாயால் கேட்க முடியும். மனிதனால் அது முடியாது. கேட்கும் சக்தியை மனிதனை விட நாய் 100 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது.

 • உலகின் விருப்பமான பழம் தக்காளி. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்

Friday, October 8, 2010

மனைவியை மயக்க...!

என் பொண்டாடியைப் புரிஞ்சுக்கவே முடியல...' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய 'நவீன யுக மனைவி'யின் அன்பைப் பெற 10 விதிகள்...

1. மதியுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்

மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

'ஆண்கள் அழ மாட்டார்கள்' என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்
நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப் பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர் தான் அவர்களைப் பொறுத்தவரை 'முழுமையானவர்'.

7. பேசுங்கள்

பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் 'பங்கு கொள்ளுங்கள்'

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்

அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது 'வழக்கம்போல்' இருங்கள்

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வப்போது, 'நீதான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்' என்று 'பழைய டயலாக்' பேசுவதில் தவறில்லை.