Tuesday, September 28, 2010

உயிரைக் காக்கும் உதவி

திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்.

மாரடைப்பு

மாரடைப்பிற்கான அறிகுறிகள்

நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல்.

இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல்.

கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.

படபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல்.காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு.

முதல் உதவி சிகிச்சை

மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வரவழையுங்கள்.

ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் குடிக்கச் செய்யுங்கள். நாக்குக்கு அடியிலும் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வையுங்கள்.

பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக்கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள்.

நாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைவதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை சுவாசம் கொடுங்கள்.பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் தொடங்கும் வரை இப்படி தொடர்ந்து கொடுங்கள்.

தீக்காயத்திற்கான முதல் உதவி

சாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.

தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.

பாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்கமுடியாத ஜ×ரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, விரைத்து குளிர்ந்துபோனால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

வெட்டுக்காயம்

சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால் காயத்திலுள்ள தூசித் துகள்களை அப்புறப்படுத்திவிட்டு அன்ட்டிபயாட்டிக் களிம்பினைக் காயத்தின்மீது போடலாம். காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தினமும் புது பேண்டேஜ் துணிகொண்டு கட்டுப் போடுங்கள்.

வெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல், மற்றும் ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

கண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள் முயற்சி செய்யவேண்டாம்.

எலும்பு முறிவு:

கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம் பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.

டாக்டர் பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.

Monday, September 27, 2010

உலக சுற்றுலா நாள்

World Tourism Day உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம்  ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள்  உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர், 1997இல் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனத்தின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும்  ஒவ்வொரு நாடு இந்நிகழ்வை நடத்த அழைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 2003இல் பீஜிங்கில் இடம்பெற்ற கூட்டத்தில் பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது: 2006இல் ஐரோப்பா, 2007இல் தெற்காசியா, 2008இல் அமெரிக்கா, 2009இல் ஆப்ரிக்கா. 2010இல் சீனா.  2007இல் இலங்கையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. இதன் கருப்பொருள்: "சுற்றுலாக் கதவுகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன" (Tourism opens doors for women).

Saturday, September 25, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

மாங்கா மடையர்களா அல்லது கிறுக்கர்களா என்ற விவாதத்துக்குள் செல்ல வேண்டாம். மொத்தத்தில் சபிக்கப்பட்ட பிறவிகளாகத்தான் ஆண்கள் இருக்கிறார்கள். எந்த கண்டத்தில் வசித்தால் என்ன... அல்லது எந்த கிரகத்தில் வாழ்ந்தால்தான் என்ன? ஆண்களின் அவஸ்தைகள் பிரபஞ்சம் தழுவியது.

காதலிக்க ஆண்களுக்கு பிடிக்கும். தனக்கே தனக்கு என்று ஒரு கேர்ள் ப்ரெண்ட் வேண்டும். அவளுடன்  பொழுதன்மைக்கும் சுற்ற வேண்டும். ஆட வேண்டும். பாட வேண்டும். கொஞ்ச வேண்டும். இந்த ஆசையில்லாத ஆண்களே ஈரேழு உலகங்களிலும் இல்லை. ஆனால், இந்த ஆசை நிறைவேறிய, கனவு பலித்த ஆண்கள் படும் திண்டாட்டத்தை விளக்க எந்த மொழியிலும் ஒரேயொரு சொல் கூட இல்லை.
சாதரணமாக 'சாப்பிட்டாயா?' என ஒரு பெண் கேட்டால், அதற்கு அர்த்தம் கேட்கப்பட்ட ஆண் சாப்பிட்டானா என்பதல்ல. 'நான் சாப்பிடவில்லை. என்னை 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஏதேனும் வாங்கிக் கொடு' என்பதுதான். இதை புரிந்து கொள்ளாமல் 'ஓ... சாப்பிட்டேனே' என்று தப்பித் தவறி ஒரு ஆண் பதில் சொல்லிவிட்டால், செத்தான். அடுத்த பிரச்னை தலைதூக்கும் வரை சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து டின் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்படியாக பெண்கள் உச்சரிக்கும் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்துக்களுக்கு அர்த்தம் கண்டுப்பிடிப்பதற்குள் ஆண்களுக்கு தாவு தீர்ந்துவிடும்.

கேர்ரெட் அனுபவிக்கும் சிக்கல் இதேதான். நியூயார்க்கில் வசிக்கும் இவனுக்கு கேர்ள் ப்ரெண்ட்டாக தம்மாதுண்டு உயிர் கூட கிடைக்கவில்லை. அப்படியே கஷ்டப்பட்டு யாரையாவது கரெக்ட் செய்தாலும் அவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியாக விடையளிக்காமல் சொதப்பி விடுவான். இப்படியாக நொந்து நூடுல்ஸான ஒரு தருணத்தில் நண்பர்களுடன் இரவு விருந்துக்கு செல்கிறான். அங்கே இவனுக்காகவே பிறவி எடுத்தது போல் புஷ்டியாக வளர்ந்திருக்கும் எரினை சந்திக்கிறான். கப்பென இவனுக்குள் பல்பு எரிகிறது. சேரை இழுத்துப் போடுவது முதல் சாப்பிட்ட கையை அவள் கழுவ வரும்போது குழாயை திறப்பது வரை சின்னச் சின்னதாக அவளுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறான். அதாவது வழிகிறான் ! முதலில் புருவத்தை உயர்த்தியவன், பிறகு புன்னகையை உதிர்க்கிறாள். இதுபோதாதா? கேர்ரெட் அவளிடம் டோட்டல் சரண்டர். இருவரும் கைகோர்த்தபடி 'நட்பாக' சுற்ற ஆரம்பிக்கிறார்கள்.

Friday, September 24, 2010

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்தது..!

1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்ப்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

பல ஆண்கள் பெண்களின் உடல் அமைப்பை கிண்டல் செய்வதையும், அவர்களின் மாதவிடாய் பற்றி ஜோக் அடித்து சிரிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவைகளை பெண்கள் அறவே விரும்புவதில்லை.

2. சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் நெஞ்சில் சுமப்பார்கள். உதாரணமாக, மனைவி தன் கணவனிடம் கேட்கிறாள், நான் குண்டாக இருக்கிறேனா? என்று! அதற்கு `நீ என்னைவிட அழகாகவே இருக்கிறாய். இதற்காக நீ வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. உன்னை நான் எப்போதும் நேசிக்கிறேன். உனக்கு உடல் பருமனாக இருப்பதாக தெரிந்தால் உடற்பயிற்சி செய் டார்லிங்' என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

3. பெண்ணுக்கான உரிமையை பெற்றுத் தருபவராக இல்லாவிட்டாலும் பெண்ணை பெண்ணாக நடத்தும் பெருந்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யும் அளவுக்கு பெண்களுக்கும் உடல்பலம் - மனோபலம் இருக்கிறது என்பதை புரிந்து நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Thursday, September 23, 2010

கவிதைச்சரம்

ரு காதல் பிறக்கும்போது
மற்றொன்று மரித்து விடுகிறதா?
அண்மைக்கால என்மனக் கேள்வி
அவள்;
காதலுக்குப்பின் தாரமானவள்
தாரமாகித் தாயுமானவள்.
என் வாழ்வுக்கே
ஆதாரமாகிப் போன
அவள் சொல்கிறாள்...
முன் போல நானில்லையாம்  
ஏன்? எதற்கு? என்று
அவளிடம் கேட்பதைவிட
என்னிடம் கேட்பதே சரி.
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்
கேள்வியே பதிலாகி நிற்கிறது.

சிவா
*******************************

வன்
கோபால கிருஷ்ணமூர்த்தி.
பள்ளியில் வருகைப் பதிவின்போதே
இவ்விதம் விளிக்கப்படுவான்.
மற்றபடி நண்பர்களுக்கு
கோபால்.
வீட்டிலோ கிட்டா.
மாணிக்கபுரம் மாமா வீட்டில்
இன்னொரு கிட்டா இருந்ததால்
அங்கு மட்டும் மூர்த்தி.
கல்லூரி மலர்களில்
கவிதை எழுதிய நாட்களில்
அவன் தனக்குத்தானே இட்டுக்கொண்டது
அபிராமிதாசன்.
அலுவலகம் சென்று
மாதச் சம்பளக்காரனாய் உழன்ற காலத்தில்
கடுவன் பூனை என்றழைத்தனர்
சக ஊழியர்கள்.
தவிர,
ஹரிகிருஷ்ணன் அப்பா
பெருசு
சாவுகிராக்கி
செவிட்டுக் கிழம் என்றெல்லாம்
காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப
அழைக்கப்பட்டவன்
ஒரு மழை நாளில்
மரணித்துப்போனான்
வீட்டு வாசலில் காத்திருந்த
உறவினர் கேட்டார்
'பாடி எப்ப வருதாம்?'

ஆர்.எஸ்.பாலமுருகன்

*******************************

தாஜ்மகாலை வடிவமைத்தவர்
உஸ்தாத் இசா
ராஜராஜ சோழனின் இயற்பெயர்
அருள்மொழி வர்மன்
காமராஜரின் அரசியல் குரு
தீரர் சத்தியமூர்த்தி
பைந்தமிழ்த் தேர்ப் பாகன்
என்றழைக்கப்பட்டவர் பாரதியார்
தமிழ் உரைநடையின் தந்தை
வீரமா முனிவர்
யாதும் ஊரே; யாவரும் கேளிர்
என்றவர் கணியன் பூங்குன்றனார்
ஆசியாவிலேயே முதன்முதலில்
விற்பனை வரியை அறிமுகப்படுத்தியவர்
ராஜாஜி
டாம் - ஜெர்ரி கார்டூன்
கதாப்பாத்திரங்களைப் படைத்தவர்கள்
வில்லியம் ஹென்னா, ஜோ பார்பெரா
எல்லாம் தெரிந்து என்ன செய்ய?

முகமுடித் திருடன்
எங்கள் பகுதியில் நுழைந்தபோது
அவசர உதவிக்கு அழைக்க
பக்கத்து வீடுகளில் உள்ளவர்களின்
செல்போன் எண் இல்லை.
அதுகூடப் பரவாயில்லை
அவர்களின் பெயர்..?

ஆர்.எஸ்.நாதன்      

Tuesday, September 21, 2010

கொஞ்சம் சிரிப்போமா?


'மல்லாக்கப் படுத்துக்கிட்டு யோசிப்போர் சங்கம்' (இப்படியும் ஒரு சங்கம்!) வழங்கியுள்ள கடி ஜோக்குகள் சிலவற்றை இங்கே தந்துள்ளேன்.

செருப்பு இல்லாமல் நாம் நடக்கலாம். ஆனால் நாம் இல்லாமல் செருப்பு நடக்காது.

என்னதான் மனுஷனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ரயிலேறணும்னா பிளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும். இதுதான் வாழ்க்கை.

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆயிடாது. அதே மாதிரிப் பசங்க என்னதான் வெண்டைக்காய் சாப்பிட்டாலும் லேடிஸ் ஃபிங்கர் ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆகாது.

டிசம்பர் 31க்கும் ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால் ஜனவரி 1க்கும் டிசம்பர் 31க்கும் ஒரு வருஷம் வித்தியாசம். இதுதான் உலகம்.

பஸ் ஸ்டாண்டிலே பஸ் நிற்கும். ஆட்டோ ஸ்டாண்டிலே ஆட்டோ நிற்கும். ஆனா கொசுவத்தி ஸ்டாண்டிலே கொசு நிற்குமா?
இஞ்சினியரிங் காலேஜிலே படிச்சா இஞ்சினியரா வரலாம். ஆனால் பிரசிடென்சி காலேஜிலே படிச்சா பிரசிடென்ட்டா வர முடியுமா?

தூக்க மருந்து சாப்பிட்டால் தூக்கம் வரும். ஆனால் இருமல் மருந்து சாப்பிட்டால் இருமல் வராது. (என்ன கொடுமை சார் இது!)

வாழை மரம் தார் போடும். ஆனால் அதை வெச்சு ரோடு போடா முடியாது.

பாக்கு மரத்தில் பாக்கு இருக்கும். தேக்கு மரத்தில் தேக்கு இருக்கும். ஆனா பண மரத்தில் பணம் இருக்குமா?  

என்னதான் நாய் நன்றியுள்ளதா இருந்தாலும் அதால தேங்க்ஸ் சொல்ல முடியுமா?

பல் வலி வந்தால் பல்லைப் பிடுங்கலாம். ஆனால் கால் வலி வந்தால் காலைப் பிடுங்க முடியுமா? இல்லை, தலைவலி வந்தால் தலையைத்தான் பிடுங்க முடியுமா? (இருங்க இருங்க. அதுக்குள்ளே எங்கே ஓடறீங்க?)

சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும். அதுக்காக மண்டே அன்னிக்கு மண்டையைப் போட முடியுமா?

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் கழித்தல் கணக்கைப் போடும்போது கடன் வாங்கித்தான் ஆகணும்.

பேக் வில் எவ்வளவு ஸ்பீடாகப் போனாலும் ஃப்ரன்ட் வீலை முந்த முடியாது.

தி.நகர் போனால் டீ வாங்கலாம். விருதுநகர் போனால் விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரிய வீரனாக இருந்தாலும் வெயில் அடிச்சால் திருப்பி அடிக்க முடியாது.

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ஒரு செல்லில் கூட சிம் கார்டைப் போட்டுப் பேச முடியாது.

ஓடுற எலியின் வாலைப் பிடிச்சால் நீ கிங்கு. ஆனால் தூங்குற புலியின் வாலை மிதிச்சால் உனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாலே ஓடலாம். ஆனால் ஓடுற பஸ்ஸுக்கு முன்னாலே நிக்க முடியாது.

TEA க்கும் COFFEE க்கும் என்ன வித்தியாசம்? TEAயில் ஒரு ஈ இருக்கும். COFFEEயில் இரண்டு ஈ இருக்கும்.  

ரா.கி.ரங்கராஜன்          

Monday, September 20, 2010

நட்பின் மூலதனம்!


கார்ல் மார்க்ஸ்(right) - ஃப்ரடெரிக் ஏங்கல்ஸ்(left)... நட்புக்கு எந்நாளும் உதாரணம் இவர்களே. மார்க்ஸ் இறந்தபோது ஏங்கல்ஸ் உதாரணம் இவர்களே. மார்க்ஸ் இறந்தபோது ஏங்கல்ஸ் ஆற்றிய உரையே அதற்குச் சாட்சி...

'இதோ இந்த மார்ச் 14-ம் தேதி மதியம் மூன்று மணிக்கு இவன் சிந்தனையில் மூழ்கிக்கொண்டு இருந்தான். அவனை நாங்கள் இரண்டு நிமிடங்கள் தனிமையில் விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் அவன் நாற்காலியில் உறங்கிப் போயிருந்தான். இனி, விழிப்பே இல்லாத தூக்கத்தில்! ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பாட்டாளி மக்கள் புரட்சி வரலாற்றில் இம்மனிதனின் இறப்பு மதிப்பிட முடியாதது!

டார்வின் எவ்வாறு பரிணாம வளர்ச்சி விதியைக் கண்டடைந்தாரோ அவ்வாறே மார்க்ஸும் மனித வரலாற்றின் வளர்ச்சி விதியைக் கண்டடைந்தான். 'அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன் உண்ண உணவு, அருந்த நீர், இருக்க இடம், உடுத்த உடை ஆகியவற்றை மானுடம் பெற வேண்டும்!' என்று இவன் உலகுக்குச் சொன்னது எளிய உண்மைதான். ஆனால், அதோடு முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தி முறையும், அது யாருக்குப் பணிந்து செல்கிறது என்ற உண்மையும் வெளிச்சம் போட்டுக் காட்டினான்.

தன்னைப் புரட்சிக்காரன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்தான் இவனுக்கு விருப்பம். முதலாளித்துவ சர்வாதிகாரத்தைத் தூக்கிஎறிந்துவிட்டு, பாட்டாளி வர்க்கத்தை அரியநையுஇல் அமரவைக்க அரும்பாடுப்பட்டவன். போராட்டம் எனும் ஆயுதம்கொண்டு தன் இறுதி மூச்சு வரை உழைத்தவன்.

எத்தனை பேர் வேடுமானாலும் இவன் மீது குற்றம் சுமத்தலாம். பழி போடலாம். ஆனால், அவன் பாட்டாளிகளை நேசித்தான். உழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்தான். மார்க்ஸ் பிறக்கும்போது யூதனாகப் பிறந்தான்... புரட்சிக்காரனாக வளர்ந்தான்... போராளியாக வாழ்ந்தான்... மனிதனாக இறந்தான்! காலம் கடந்தும் இவன் பெயர் நிலைத்திருக்கும். அப்படியே அவன் எழுத்துக்களும்!"
தனது நண்பனுக்காக இப்படி ஓர் உணர்ச்சி பூர்வ உரையாற்றினார் ஏங்கெல்ஸ். உலகப் பொருளாதாரத்தின் சூத்திரம் சொல்லும் புகழ்பெற்ற 'தாஸ் கேப்பிட்டல்' புத்தகம் (தமிழில் 'மூலதனம்') இன்றும் பல பதிப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்தப் புத்தகத்தைத் தன் உயிரினும் மேலான நண்பன் ஏங்கெல்ஸூக்கு அர்ப்பணித்தார் மார்க்ஸ்!

ந. வினோத்குமார்  

2012 - சூரியசக்திப் புயல்

ஓர் அதிசக்தி வாய்ந்த 'சூரிய சக்திப் புயல்' 2012-ம் ஆண்டுவாக்கில் பூமியைத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள், விண்ணியல் ஆய்வாளர்கள்.

பூமியில் சாதாரணமாக வாண வேடிக்கை நிகழ்த்திக் காட்டும் 'எரிகல் மழை'யைப் போல பல மடங்கு பலமானதாக அந்த சூரியசக்திப் புயல் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, அப்புயலின் சக்தி, 10 கோடி ஹைட்ரஜன் குண்டுகளின் சக்திக்கு இணையானதாக இருக்குமாம்.
  
சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பெரிய 'எரிகல் மழை' பொழிந்தது. அது, சூரியசக்திப் புயலின் முன்னோட்டம்தான் என்று புளியைக் கரைக்கிறார்கள் 'நாசா' விஞ்ஞானிகள். வீசப் போகும் சூரிய சக்திப் புயல் பூமியின் ஒட்டுமொத்த மின் தொடர்பையே துடைத்தெறிந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

இந்த சூரியசக்திப் புயல் தொடர்பாக 2006-ம் ஆண்டு முதலே கவனமாகக் கண்காணித்து வருகிறது `நாசா'. இதேபோல விண்ணிலிருந்து 1859, 1921-ம் ஆண்டுகளில் பாய்ந்த சூரியசக்திப் புயலால் உலகில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. தந்தித் தொடர்பு வயர்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. 2012-ம் ஆண்டு சூரிய சக்திப் புயல் அவற்றை விடப் பலமானதாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.

"பொது விண்ணியல் நிபுணர்கள் மத்தியில் நிலவும் கருத்து, 2012 அல்லது 2013-ம் ஆண்டின் ஆரம்பத்தில் வீசும் சூரியசக்திப் புயல், 100 ஆண்டுகளிலேயே மிக மோசமானதாக இருக்கக்கூடும்'' என்று விண்ணியல் பேராசிரியரும், கட்டுரையாசிரியருமான டேவ் ரெனேக்கே கூறுகிறார்.

இன்றைய 'டிஜிட்டல்' உலகத்தில் சூரியசக்திப் புயல் ஏற்படுத்தப்போகும் உண்மையான தாக்கம் என்னவென்று ஒருவருக்கும் தெரியவில்லை. எனவே சூரியசக்திப் புயல் வருமுன் காப்பது அல்லது அதைத் தடுப்பது குறித்து விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

Friday, September 17, 2010

சென்னை பல்கலைக்கழகத்திற்கு பழைய மாணவர் ரூ.18 கோடி நன்கொடை

இறந்த பிறகு தனது சொத்தில் பாதித்தொகையை தான் படித்த சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்குமாறு உயில் எழுதி வைத்திருந்த அமெரிக்க டாக்டரின் விருப்பம் நிறைவேறியுள்ளது.

அவர் விரும்பியவாறே சொத்தில் பாதித்தொகை ரூ.18 கோடி சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.

45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. ரேடியாலஜி படித்த தமிழக மாணவர் ராஜசேகர் ஷாம். படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் கதிர்வீச்சு பிரிவு டாக்டராக பணியாற்றி வந்தார். தனது மனைவி லூசில்லாவுடன் அமெரிக்காவிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். இவரது மனைவி புற்றுநோயால் இறந்து போனார்.

கடந்த 2008-ம் ஆண்டு ராஜசேகர் ஷாம் (வயது 68) மரணம் அடைந்தார். அவர் உயிருடன் இருந்தபோது ஓர் உயில் எழுதி வைத்திருந்தார். அதில், தான் இறந்தபிறகு தனது சொத்தில் பாதியை தான் படித்த சென்னை பல்கலைக்கழகத்திற்கும் எஞ்சிய பாதியை அமெரிக்காவில் உள்ள 'நேச்சர் கன்செர்விங் சவுத் போல்க்' என்ற தொண்டு நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த உயிலை நிறைவேற்றுவதற்காக தாமஸ் ஆஸ்போன் என்பவர் நியமிக்கப்பட்டு ஷாமின் சொத்தை விற்று மொத்தம் ரூ.36 கோடி திரட்டப்பட்டது.

Thursday, September 16, 2010

ஒபாமாவின் சிறுவருக்கான புத்தகம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறுவர்களுக்காக ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தை அவர் ஜனாதிபதியாவதற்கு முன்பு எழுதியது ஆகும். புத்தகத்துக்கு 'ஆப் தீ ஐ சிங்- ஏ லெட்டர் டு மை டாட்டர்ஸ்' என்று பெயர் சூட்டி இருக்கிறார். இந்த புத்தகம் நவம்பர் மாதம் 16-ந் தேதி வெளியிடப்படுகிறது.

படங்கள் நிறைந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கும் படங்களை லொரென் லாங் வரைந்து இருக்கிறார்.

13 செல்வாக்கு மிக்க அமெரிக்கர்களுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக இந்த புத்தகம் எழுதப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த புத்தகம் 3 தொகுதிகளை கொண்டது. முதல் பதிப்பில் 5 லட்சம் பிரதிகள் வெளியிடப்படுகின்றன.

இந்த புத்தகத்தில் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன், முதல் கறுப்பர் இன பேஸ்பால் வீரர் ஜாக்கி ராபின்சன் உள்ளிட்ட 13 அமெரிக்கர்களை பற்றி ஒபாமா எழுதி இருக்கிறார்.

ஒபாமா ஏற்கனவே 'டிரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர்', 'தி அடாசிட்டி ஆஃப் ஹோப் ' என்று 2 புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

Wednesday, September 15, 2010

கவிதைச்சரம்

அதிகாலையின் அமைதியில்...
 
"கல்யாணம் பண்ணி
பிள்ளையும் பிறந்தாச்சு
கொஞ்சங்கூட பொறுப்பில்லை
எழுந்திருங்க...!

அனுதினம் காலையில் நடக்கும்
அனிதாவின் அர்ச்சனை


அவளது தாலாட்டில்
உறங்கும் என் குழந்தையும்
உறங்காத என் இரவும்
தந்த தூக்க சுகம்
இதுவென்று அறிவாளா அவள்?


அதிகாலைத் தூக்கத்தின்
சுகம் அறியா சம்சாரி உண்டோ?
அர்ச்சனைக்கு மயங்காத
சாமிகளும் உண்டோ?


"போடி ! என் பேதைப் பெண்ணே?
செல்லமாய் வையத்தோன்றுகிறது
என் செல்லமாவை

**********************************

விளையாட்டு மைதானக் கொலுசு

ல்லாரும் கடந்து போகிற
பள்ளி மாதாக் குறுக்கு வழியைக்
கடக்கிறபோது
கேட்பாரற்றுக்கிடந்த
ஒற்றைக் கொலுசை
என்ன செய்வதென்று யோசித்து
தன் கைப்பையில் திணித்துக்கொண்டான்.

ஒற்றைக் கொலுசோடு
தன் அம்மாவிடம் அடி வாங்கும் சிறுமியும்
தொலையும் தன் காதலின்
அபசகுனம் எனப் புலம்பும் விடலைப் பெண்ணும்
பிரியம் முற்றிய நாளொன்றில்
தன் கால்களைத் தொட்டுணர்ந்த
இப்போதில்லாத கணவனை
நினைத்தேங்கும் பெண்ணும்
சிலம்பைப்போல விற்பனைக்கு எடுத்துச் சென்ற
குடிகாரனை மணந்த பெண்ணின்
கடைசி நிராசையுமாக
இம்சிக்கத் துவங்கின
அன்றிரவு கனவில்!
க.அம்சப்ரியா 


**********************************


பார்வை

திர் இருக்கைப் பயணி
சே குவேரா பனியன் அணிந்து
சப்பாத்தி சாப்பிட்டு
கோக் குடித்தான்

ஆங்கிலத்தில் உரையாடி
அதிகாலை எழுப்பிவிடக்
கேட்டுக்கொண்டான்

பாதி உறக்கத்தில்
கண் விழித்த நான்
பத்திரமாக இருக்கிறதா
எனப் பார்த்துக்கொண்டேன்
என் சூட்கேசையும்
எதிர் இருக்கைப் பயணியையும்

அவனது கண்களும்
பாதி திறந்திருந்தன
என் மீதும் - அவன்
சூட்கேஸ் மீதும்!

பாப்பு

Monday, September 13, 2010

பாடிப் பறந்த குயில்போறாளே பொன்னுத்தாயி
போகிற போக்கில் மனசை தொட்டு....
போறாளே பொன்னுத்தாயி
பொல பொல என்று கண்ணீர் விட்டு....
போவாமா ஊர்கோலம்....

என்று பாடிப் பாடி போகிற போக்கிலேயே எங்கள் மனசைத் தொட்ட இசைக்குயில், பொல பொல என கண்ணீர் விடவைத்துவிட்டு சொர்க்கத்துக்கு ஊர்கோலம் போனதோ? தில்லானா தில்லானா... பாடிய ஸ்வர்ணலதா என்கின்ற இசைத்தேவதையின் வாய் மூடிக்கொண்டதேன். இறைவன் மீது சந்தேகப்பட வேண்டிய தருணம் இது.

முரளி என்கிற மாபெரும் கலைஞனை எம்மிடமிருந்து பிரித்து அந்த பிரிவாற்றாமை அடங்கும் முன் வேகமாக இன்னொரு சோகத்தையும் கொடுத்து விட்டானே!

ஒ ! இறைவா !
உன் எண்ணம் புரிகிறது. உனது ராச்சியத்தில் உன்னை மகிழ்விக்க தகுதியான கலைஞர்கள் இல்லைப்போலும். இறைவா உனது தேவைக்கு நீயே தேடிக்கொள் எம்மிடம் பறிக்க முயற்சிக்காதே.

ஒன்றுமட்டும்... நம்புகிறோம்
அவர்கள் உனது பாதகமலத்தில் இளைப்பாறுதல் அடைந்திருப்பர்.     

ஹாலிவுட் டிரெய்லர்

படமா இது? தப்பித்தவறி கூட இந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம் மழைக்காகக் கூட ஒதுங்கி விடாதீர்கள்.

ஒரு கார் சேசிங் இல்லை. ஆங்காங்கே பாம் வெடிக்கவில்லை. வேற்றுகிரக மனிதர்கள் வரவில்லை. பொறி பறக்கும் டமால் டுமீல் இல்லை. நாடி நரம்பை உசுப்பேற்றும் ஆக்ஷன் காட்சிகள் இல்லை... தடதடக்கும் பின்னணி இசையில்... 

இப்படி க்ளிஷேவாகிப் போன எந்த காட்சிகளும்  இல்லை. எனவே இதையெல்லாம் விரும்பும் ரசிகர்கள் தப்பித் தவறி கூட இந்தப் படம் ஓடும் தியேட்டர் பக்கம் சென்றுவிடாதீர்கள்.

ஆனால், இவையெல்லாம் இடம் பெறாத, அமைதியான த்ரில்லர் படத்தை ரசிக்க விரும்புகிறவர்கள் உடனடியாக 'தி அமெரிக்கன்' படத்தை காணச் செல்லுங்கள். புத்தம் புது உலகம் உங்கள் முன்னாள் விரியும்.

கொலை செய்வதற்கு விதவிதமான ஆயுதங்களை தயாரித்து தருவதில் ஜேக் கில்லாடி. அவனது பாஸ், பாவெல். யாரை சந்திக்க பாவெல் சொல்கிறானோ அவர்களை ஜேக் சந்திப்பான். அவர்கள் விரும்பும் ஆயுதத்தை தயாரித்து தருவான்.

கதவுகளைத் திறக்கும் 'கடிதச் சாவிகள்'!

கடிதம்...

இது வெறும் காகிதம் அல்ல. நினைவுகளைச் சுமந்து வரும் நினைவுச் சுரங்கம். உறவுகளையும், நட்புகளையும் இணைக்கும் இணைப்புப் பாலம். சிறகுகள் இல்லாமல் பறக்கும் பறவை.

கடிதம் விரல்கள் விடும் தூது. ஓர் இதயத் துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணங்களை இன்னொரு இதயத் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப் பயன்படும் காகிதக் கப்பல்.

சிவப்புக் கூடுகளுக்குள் இருக்கின்றபோது இது சிறகடிக்கத் துடிக்கும். துடிப்பை உணர்ந்து கொண்ட தபால்காரர்கள் தட்டிக் கொடுத்து வழி அனுப்பி வைக்கின்றார்கள். பறந்து வரும் காகிதப் பறவையை வரவேற்க வாசலில் விழி வைத்துக் காத்திருக்கின்றார்கள் மக்கள்.

Saturday, September 11, 2010

எங்கள் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

கவிதைச்சரம்

மாயைகள் இன்பம் !

வ்வொரு நாள் இரவும்
ஒரு கோப்பை நிறையக் குடிக்க வேண்டும்
குழந்தையின் அறியாமை

ஒவ்வொரு அதிகாலையும்
குளியறைக் குழாய் திறந்தால்
உடல் உரச வேண்டும்
காதல் முத்தங்கள்

மழைப் பாதை ஆடுகளோடு
ஊர்வலம் போகும்போது
அணிந்துகொள்ள சால்வை வேண்டும்
புல்லாங்குழலின் இசையால் நெய்து

ரயில் பெட்டி இருக்கைகள் ஏறி
பயணியர் கண்களைப் பரவசப்படுத்த வேண்டும்
நடைமேடை நாய்க்குட்டியின் ஆச்சர்யங்கள்

காலச் சாட்டை காயங்கள் தரும்போது
மஞ்சள் பூக்களாகி உள்ளங்கை நிரப்ப வேண்டும்
மறுமலர்ச்சித் தத்துவங்கள்

அழுக்காறு, சூழ்ச்சிகள் உமிழும் அதிர்வுகளால்
வாழ்நாள் ஒன்று அசைவற்றுப்போகையில்
பொழுதின் புருவங்களில் அரங்கேற வேண்டும்
ஆனந்த அபிநயங்கள்

படியேறி இல்லம் புகும் நொடி
ஓடி வந்து சுண்டுவிரல் பற்ற வேண்டும்
வெள்ளையாய் ஒரு விட்டுக்கொடுத்தல்

போக்குவரத்து நெரிசலில் ஆவி கரையும்போது
அருகில் வந்து அமர வேண்டும்
வளமானதொரு வயல்வெளித் தனிமை

கடைசிப் படுக்கையில் காட்சிகள் துடிக்கையில்
உறுப்புகளின் துன்பங்களைத் தூர்வார வேண்டும்
உள்ளங்களின் நன்றி !

*********************

எழுச்சி!

விதவிதமான வருகிறது மெழுகுவத்தி
மழலை பானைகள்
மஞ்சள் அகல்
தேவதைப் பாவாடை
தாமரைத் திரட்சி
கொழுத்த தீக்குச்சி
வெள்ளை வெதுப்பகம்
நாணும் நாயனம்
கணினி எலிகள்
கிரிக்கெட் மட்டைகள்
கவிழ்ந்த கருங்குடை
திறந்த விண்மீன்
மெழுகுவத்திகள் மேனி - திரி மாறினாலும்
நம்பிக்கை இருக்கிறது
நெருப்புக்கு என்றும்
சிவக்கத் தெரியுமென்று !

*********************

கனவுகள் ஒரு மறு ஆய்வு !

'எனைப் பயன்படுத்ங்துகள்
நிறை குறை சொல்லுங்கள்' வாசகத்தோடு
ஒரு குழந்தை விஞ்ஞானிகள் வீட்டு வாசலில்
கேட்பாரற்றுகிடக்கிறது அது

அந்த வட்டமான நீர்த் தொட்டியின்
பயன்பாடு போற்றத்தக்கது

காலை எழுந்தவுடன்
தொட்டியின் நீர் அள்ளி
கண்கள் கழுவுகிறேன்

கண்கள் நனைத்து மீண்டும்
தொட்டியில் விழும் நீரில்
அன்றைய கனவும் கலைந்துவிடுகிறது

தண்ணீர்த் தொட்டிக்குள் தீப்பிடித்ததுபோல
ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு நிறம்

வீணாய்ப் போகும் கனவு வெளியேறும்போது
நீரில் காட்சிகள் உருவாகும்

ஒரு கனவு ஒரு காட்சி
புரிந்துகொள்வதற்குள்
உருவங்கள் யாவும் உடைந்துவிடும்

மீன் பிடித்து ஆராய்வோமென
வலை இறக்கிப் பார்த்ததில்
மீன்கள் எதுவும் சிக்கவில்லை

வலையின் குழியில்
வண்ணக் குழம்புகள்

வெள்ளைக் காகிதத்தில் சிந்தியபோது
காதலின் கண்கள் ஓவியமாய் எழுந்தன
என்றைய கனவோ தெரியவில்லை

வலையில் நீர் பிடித்து
காகிதத்தில் தெளிந்து
கடந்த வாரக் கனவுகளை
ஓவியமாகப் பெற்றேன்

எல்லா ஓவியங்களும் எழுந்த பின்
எல்லா மீன்களும் குமிழிகளாயின

ஓவியத் தாள்களை உலரவைத்து
வீடு முழுக்கத் தோரணம் கட்டினேன்
ஓரிரு தாள்களை ஒளித்துவைத்தேன்

ஒவ்வோர் இரவிலும்
கண்ணாடித் தொட்டியில்
புது நீர் மாற்றி பன்னீர் தெயளிக்கிறேன்
அதிகாலை மீனும்
அதன் வழி ஓவியரும்
ஆனந்தமாய் உயிர்த்தெழ !


      

Wednesday, September 8, 2010

நடிகர் முரளி மரணம்

தமிழ் மக்களின் இதயங்களை கவர்ந்த நடிகர் முரளி (வயது 46). 60-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முரளிக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முரளி இன்று காலை மரணம் அடைந்தார். முரளியின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதய(ம்) நாயகனுக்கு வருத்தத்துடன் எங்கள் அஞ்சலியை செலுத்துகிறோம்.


Monday, September 6, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

'அட' என புருவத்தை உயர்த்தினாலும் சரி, 'சபாஷ்' என கைத்தட்டினாலும் சரி, 'கலக்கிட்டான்டா...' என தேநீர் அருந்தியபடி நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாலும் சரி, விஷயம் ஒன்றை குறிப்பதாகத்தான் இருக்கும். அது 'கேஸ் 39' ஹாலிவுட் படம். 2006ம்  ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, 2008ல் வெளிவரும் என்று அறிவித்து பின்னர் 2009 ஏப்ரல் என தள்ளி வைக்கப்பட்டு, அதுவும் சரிப்படாமல் இந்தாண்டு ஜனவரி மாதம் நிச்சயம் என கற்பூரம் அடித்து சத்தியம் செய்த பின்னரும் மார்ச் 5ம் தேதி இங்கிலாந்தில் மட்டுமே இப்படம் ரிலீசானது. மே மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை பகுதி பகுதியாக டிவியில் ஒளிபரப்பினார்கள். இப்படி ரிலீசில் கொத்து பரோட்டா போட்ட இப்படம், அக்டோபர் மாதம் அமேரிக்கா உட்பட உலகம் முழுக்க திரையரங்குகளில் (ரீ?) ரிலீசாகப் போகிறது.

பொதுவாக இப்படியான பட வெளியீட்டு துர்பாக்கியம் எந்த ஹாலிவுட் படத்துக்கும் நேர்ந்ததில்லை. ஆனால், 'கேஸ் 39' விஷயத்தில் நடக்காது என்று நினைத்ததெல்லாம் நடக்கிறது. என்றாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக உலகம் முழுக்கவே ஹரார் பட ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். காரணம், கதை.

Wednesday, September 1, 2010

வரம் வாங்கலையோ....! வரம்.

"நோயற்ற வாழ்வு
குறைவற்ற செல்வம்
வற்றாத பேரன்பு"

காலையில் எழுந்ததும்
படுக்கையிலிருந்தபடியே
கண்மூடி
பரமனிடம் கேட்கும் வரமிது

வரம் தரும் நம்பிக்கையினூடே
காலங்கள் நகரும்...

காரணங்கள் கடந்தும்,
காரியங்கள் நடந்தேறும்

வாட்டியெடுக்கும் வயிற்றுப்பொருமலும்
வாங்கிச்சேர்த்த வங்கிக் கடனும்
வாழ்க்கை மீதே வெறுப்பை உமிழும்

குபீரென கிளம்பும் கோபக் கணைகள்
என் இருப்பையே காலி செய்யும்

அர்த்தமில்லா வரிகளாய்
வாசிக்கப்படுகிறது வாழ்க்கை

அன்பான கணவன்
அறிவான அப்பன்
பண்பான நண்பன்
எனும் தற்செருக்கும்
மரித்துப்போக
மீண்டும் மீண்டும்
வரம் தரும் நம்பிக்கையோடு
நான்.....?

கேசவன்

பத்திரிகைச் செய்திகள்

இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களுடன் இந்திய சிறப்பு தூதர் சந்திப்பு

ந்தியாவின் சிறப்பு தூதராக இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவு செயலாளர் நிரூபமாராவ், நேற்று வன்னிப்பகுதி ராணுவ தலைமையகத்துக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து வவுனியாவில் உள்ள செட்டிகுளம் மெனிக் பார்ம் முகாமுக்கு காரில் சென்றார்.

அந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை நிரூபமாராவ் சந்தித்து பேசினார். முகாமில் உள்ள வசதிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரம் குறித்து கேட்டறிந்தார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு, இந்தியாவால் இயன்ற அளவுக்கு எல்லாவகையான உதவிகளும் அளிக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.

பின்னர், வவுனியாவுக்கான அரசு ஏஜெண்டை நிரூபமாராவ் சந்தித்துப் பேசினார். தமிழர் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியையும் அவர் பார்வையிட்டார்.

கிளிநொச்சிக்கு சென்ற நிரூபமாராவ், அங்கு மறுகுடியமர்த்தப்பட்டு உள்ள தமிழர்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு, உபகரணங்கள், சிமெண்ட் மூட்டைகள், மேற்கூரை ஷீட்கள் ஆகியவற்றை வழங்கினார். ஓமந்தையிலும் அவர் உபகரணங்கள் வழங்கினார். பின்னர், நிரூபமாராவ், யாழ்ப்பாணத்துக்கு சென்றார். பொதுநல அமைப்புகளின் தலைவர்களை சந்தித்த அவர், போருக்கு பிந்தைய நிலவரத்தை கேட்டறிந்தார். சவால்களை சமாளிக்க இலங்கை அரசுடன் இந்தியா துணைநிற்கும் என்று கூறினார்.

யாழ்ப்பாணத்தில், விடுதலைப்புலிகளால் கட்டப்பட்ட 3 பதுங்கு குழிகளையும் நிரூபமாராவ் பார்த்தார். அவருடன், இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் காந்தா, துணை தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை உயரதிகாரிகளும் சென்றனர்.

நிரூபமாராவ், இன்று, முல்லைத்தீவுக்கும், திரிகோணமலைக்கும் செல்கிறார். பிற்பகலில், அவர் கொழும்பு திரும்புகிறார்.

***********************************

அன்னை தெரசா தபால் தலை, அமெரிக்கா வெளியிடுகிறது

ன்னை தெரசாவின் உருவம் பொறித்த தபால்தலையை வருகிற 5-ந்தேதி வெளியிடப்போவதாக அமெரிக்க தபால் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொல்கத்தா நகரில் மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து ஏழை எளியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் தொண்டு செய்தவர் அன்னை தெரசா.

"மனிதாபிமான சேவைகளுக்காக நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட இருக்கிறோம்'' என்றும் அமெரிக்க தபால் துறை அறிவித்துள்ளது.

கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமெரிக்க கவுரவ குடிமகளுமான அன்னை தெரசா, 50 ஆண்டுகாலமாக ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவை செய்தவர். இவரது தபால் தலை வாஷிங்டனில் நடக்கும் ஒரு விழாவில் வெளியிடப்படுகிறது என்றும் அந்த அமெரிக்க தபால் துறை அறிவித்தது.