Monday, August 30, 2010

கவிதைச்சரம்

அர்த்தமற்றுப் போகும் அன்பு

''ரும்போது அச்சு முறுக்கு வாங்கியாப்பா''
என்ற மகளின் நினைப்புத்தட்ட
சட்டைப்பைகளில்
துழாவியெடுத்த சில்லறைகளை
உள்ளங்கையில் கொட்டி
மூணு மூணரை என்று எண்ணும்
நேரம்பார்த்து வருகிறது
"சாப்ட்டு ரெண்டு நாளாச்சுண்ணா"
என்கிற ரோட்டோரச் சிறுமியின் குரல்.

காகிதப்பொட்டலத்தைப் பிரித்து 
இரண்டு முறுக்குகளையும் எடுத்து கொண்டு
நடுவாசலில் அமர்ந்துகொண்டு
நாய்க்குப் பழிப்புக் காட்டியபடி
தின்கிறது குழந்தை.

மனசு நிறைந்து
மகிழ்ச்சி உதட்டில் பூக்கும் போது
தற்செயலாய் வந்துபோனது
"இந்த நாளும் கடந்துபோனால்
மூணு நாள் ஆகிப்போகும் அந்த சிறுமிக்கு"
என்கிற நினைப்பு

அப்படியே அர்த்தமற்றுப் போகிறது
என் அன்பு !


*******************************
பிரமச்சரியம்


வியாபாரம்
அலுவல் நிமித்தமான சந்திப்புகள்
அதன் பிந்தைய எரிச்சல்
ஆலோசனை
அடுக்கடுக்காய்ப் பொய்கள்
பணத்துக்காக சீரழியும் தன்மானம்
மானத்துக்காக விலைபோகும் லாபம்
கழிவறை வரை துரத்தும்
கடன்காரர்களின் கேள்விகள்
நேரங்கெட்ட சாப்பாடு
ஆகாரத்துக்கு முன்பின் என
வேளைக்கு ரெண்டுமணிநேர
தொலைப்பேசி உரையாடல்கள்
இவையனைத்துக்கும் இடையே
வரும் அம்மாவின் போன்.

"நம்ம ஊர்தாண்டா
பார்க்கவும் லட்சணமா இருக்கா
காலேஜ் படிச்சிருக்காளாம்..."

அம்மா முடிக்கும் முன்
"இப்ப இது ஒண்ணுதான் குறைச்சல்
போனை வைம்மா"
எனும் கடுமையான வார்த்தைகளில்
தொடர்பற்று போகும்
அம்மாவின் குரல்.

நித்திரையற்ற இரவில்
புரண்டுபடுக்கும் தனிமையில்
இறுகப்பற்றிய தலையணையினூடே
லட்சணமான பெண்ணென்றால்     
எப்படியிருப்பாளென
யோசிக்கத் தொடங்கியிருந்தேன் !
   
முரளிகுமார் பத்மநாதன்

Saturday, August 28, 2010

நோபல் பரிசு வென்ற 'வேலைக்காரி'!

பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண், ஒரு பணக்கார வீட்டில் குழுந்தையைப் பேணுபவளாக வேலைக்குச் சேர்ந்தாள். அவளுக்குப் பதினெட்டு வயது நிரம்பியது. அழகு அப்பெண்ணிடம் அடைக்கலம் புகுந்தது. வீட்டின் மூத்த புதல்வனுக்கு அவள் மீது காதல் அரும்பியது. அவ்வளவுதான்! பணக்கார அப்பாவுக்குக் கோபம் கொப்பளித்தது.

'ஒரு வேலைக்காரி, கோடி கோடியாய் குவிந்து கிடக்கும் வீட்டுக்கு மருமகளா...? வீட்டை விட்டு ஓடிப் போ!' என்று தடித்த வார்த்தைகளால் அப்பெண்ணை அவமானப்படுத்தினார்.

அவள் வீட்டை விட்டு வெளியேறினாள். பாரீஸுக்குப் போனாள். இதயத்துக்குள் அந்த வார்த்தைகள் எரிந்து கொண்டே இருந்தன. சாதிக்கும் வெறி அவளுக்குள் எழுந்தது. உலகமே வியக்கும் யுரேனிய கதிர்வீச்சைக் கண்டுபிடித்தாள். அதற்காக நோபல் பரிசைப் பெற்றாள். நினைத்தபடியே கோடீஸ்வர வாலிபரைக் கைப்பிடித்தாள். அவர் வேறு யாருமல்ல, மேடம் கியூரி அம்மையார்தான்.


ஹாலிவுட் டிரெய்லர்

நியாயமாகப் பார்த்தால் ‘திருடர்கள் போலீஸ்’ என்றுதான் குறிப்பிட வேண்டும். ஒரு வசதிக்காகத்தான் தலைப்பை ஒருமையில் வைத்திருக்கிறோம். இதற்காக இயக்குநர் ஜான் லூசன்ஹாப்இ தலையில் குட்டமாட்டார் என நம்பு வோமாக.அரைடிராயருடன் தெருவில் விளையாட ஆரம்பிக்கும் அனைவருமே திருடன் - போலீஸ் விளையாட்டு வழியேதான் வளரவே ஆரம்பிக்கிறார்கள்.

அவரவரின் புத்திசாலித்தனங்கள் பரிணாம வளர்ச்சி அடைவதும் சுவாரஸ்யமான இதுபோன்ற விளையாட்டுகளால் தான். அதனால்தான் இன்றைய வீடியோ கேம்ஸின் மையப் பொருளாகவும் இந்த ஆடு புலி ஆட்டம் இருக்கிறது. விஸ்தாரமாக திருடர்களின் பராக்கிரமங்கள் - புத்திசாலித்தனங்கள் ஆகியவற்றை விளக்கிவிட்டுஇ இப்படிப்பட்ட திருடர்களை போலீஸ் எப்படி பிடிக்கப் போகிறது என கொக்கி வைப்பது துப்பறியும் நாவல்களின் அரிச்சுவடி.

இந்த அரிச்சுவடியில் பிஎச்டி பட்டம் வாங்கியவர் என ஜெனே ப்ரூவரை சொல்லலாம். 1937ம் ஆண்டில் பிறந்த இவரது கேஃபேக்ஸ் நாவல் வரிசைகளை வாசிக்காதவர்கள், துப்பறியும் நாவல்களின் சுவையை முழுமையாக சுவைக்காதவர்கள் என்று சொல்லலாம். அந்தளவுக்கு பொடி வைத்து கரம் மசாலா கலந்து எழுதுவதில் மனிதர் சமர்த்தர். இப்போது நியூயார்க்கில் கலப்பின நாயை வளர்த்தபடி தன் மனைவியுடன் அமைதியாக வாழ்ந்து வரும் இவரிடமிருந்து அனுமதி பெற்று இவரது ஒரு நாவலை ஹாலிவுட்டில் படமாக்கியிருக்கிறார்கள்.

Thursday, August 26, 2010

பத்திரிக்கைச் செய்திகள்

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக, வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா விரைவில் கொழும்பு செல்ல இருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்ற போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களின் மறு வாழ்வு குறித்து, பாராளுமன்ற மக்களவையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அவர் கூறியதாவது:-

"இதுவரை இலங்கை தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட நிதி மற்றும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேர்ந்ததா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

போர் முடிந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையிலும், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, முகாம்களில் உள்ள தமிழர்களை துன்புறுத்தி வருகிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில், கடந்த 1987-ம் ஆண்டில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா இடையே ஏற்பட்ட அரசியல் தீர்வுக்கான ஒப்பந்தம், இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

Tuesday, August 24, 2010

உண்மையான 'டீ ஷர்ட்'

'டீ ஷர்ட்' எனப்படும் பனியன்கள், நிஜமாகவே தேயிலை இழைநார்களால் தயாரிக்கப்பட இருக்கின்றன. விஞ்ஞானிகளும், பேஷன் டிசைனர்களும் சேர்ந்து புதுவகை துணியை தயாரித்து இருக்கிறார்கள். இந்த துணி தேயிலை சர்க்கரை மற்றும் சத்துப்பொருள்களை கலந்து தயாரித்த கூழில் பாக்டீரியாக்களை சேர்த்தனர். இந்த கூழில் உருவான செல்லுலோஸ் எனப்படும் இழைகளை பிரித்து எடுத்தனர். அதை கொண்டு ஒருவித துணியை தயாரித்து உள்ளனர்.

இந்த துணியை கொண்டு சட்டைகள், ஜாக்கெட்டுகள் மற்றும் ஆடைகள், காலணிகளையும் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளனர். இந்த துணி லேசானதாகவும், உள்ளே உள்ளதை வெளியில் பார்க்கும்படியும் இருக்கும். இதில் சாயம் ஏற்றி, பலவிதமான துணிகளை தயாரிக்க முடியும். என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Saturday, August 21, 2010

கடி....

ரயில் சிநேகிதம் !

ன்றொரு நாள்
ஒரு மாலைவேளை
ரயில்வே ஸ்டேஷனில்
ரயிலின் உள்ளே நானும்
வெளியே நீயும்
நம் இருவரின் கண்களும்
ஒரே நேரத்தில்
சந்தித்துக் கொண்டன
அப்போதுதான் அந்த மூன்று
வார்த்தையை
நீ சொன்னாய்...
'தர்மம் போடுங்க சாமியோவ்...!'


மல்லாந்து படுத்துக்கிட்டு யோசிச்சது மாமு...!

னுஷனுக்கும்
மொபைலுக்கும் ஒரு
ஒற்றுமை இருக்கு...
மனுஷனுக்கு கால்
இல்லேனா பேலன்ஸ்
பண்ண முடியாது.
மொபைலுக்கு பேலன்ஸ்
இல்லேனா கால் பண்ண
முடியாது!
எப்பூடி நம்ம திங்கிங்?!

செய்து பாருங்கள்... மகிழுங்கள்!

டைக்கு பொய் 100 ரோஜாப்பூ
வாங்கிக்கோங்க. ஊசி எடுங்க. நூல் கொத்து
அந்த ரோஜாப்பூவை மாலையாக்கிடுங்க.
அந்த மாலையோட போய் கண்ணாடி முன்னாடி
நின்னா, உங்களுக்கு ஒரு சூப்பர் போட்டோ கிடைக்கும்...
'குரங்கு கையில பூ மாலை!'

மரண மொக்க!
தினமும் ஒரு பொண்ணு
அவளோட வீட்டுக்கு லேட்டா வர்றா.
இதனால டென்ஷன் ஆன அவங்க அப்பா,
தமிழ்ல திட்டுறார்.
அவங்க அம்மா, ஹிந்தியில திட்டுறாங்க.
அண்ணன், மலையாளத்துல திட்டுறார்.
பாட்டி, ஒரியால திட்டுறாங்க.
இதுல இருந்து என்ன தெரியுது...?
ஒரு பொண்ணு வீட்டுக்கு லேட்டா வந்தா
நாலு பேர் நாலு விதமாத்தான் பேசுவாங்க!

தத்துவம் மச்சி தத்துவம்!

விரிக்காதவரை
சிறகுகள் கூட பாரம்தான்.
விரித்துவிட்டால்
வானம்கூட
நீ தொட்டுவிடும்
தூரம்தான்!
(வைரமுத்து சார்
எக்ஸ்க்யூஸ்மீ...)

பீலின் கார்னர் !

ண்களில் படுவதெல்லாம்
இதயத்தில் இடம்
பிடிப்பதில்லை.
இதயத்தில் இடம்
பிடிப்பதெல்லாம் கண்களின்
அருகில் இருப்பதில்லை...
உன்னைப் போல! 
          

Friday, August 20, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

இடப்பக்கமோ, வலப்பக்கமோ, மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ... எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். அப்படியொரு படம் வருமா... என காமெடி ஜுகல்பந்திக்கு ஆசைப்படும் நபராக நீங்கள் இருந்தால்...

'தி ஸ்விட்ச்'
ஹாலிவுட் திரைப்படம் உங்களுக்கானதுதான்.

'விந்து தானம்' தான் இப்படத்தின் அடிநாதம். அதை நகைச்சுவை கொத்து பரோட்டாவாக மசாலா கலந்து பரிமாறியிருக்கிரார்கள்.

கெஸி சிங்கிள்டனுக்கு வயது 40. இன்னமும் திருமணமாகவில்லை. ஒண்டிக்கட்டை. ஆணுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதிலோ, குழந்தையை பெற்றுக் கொள்வதிலோ அவளுக்கு உடன்பாடில்லை. கெஸியை உயிருக்கு காதலிக்கிறான் வெலி. ஆனால், அவனை, நண்பனாக மட்டுமே கெஸி கருதுகிறாள். இந்நிலையில்தான் கெஸியின் அடிமனதில் பூத்த ஆசை, விருட்சமாக வளர்கிறது. வேறொன்றுமில்லை. தான் தாயாக வேண்டுமென விரும்புகிறாள். ஆனால், திருமணம் செய்து கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. எனவே விந்து தானம் மூலம் கற்பமாக முடிவு செய்கிறாள். இதை முடிந்தளவு தடுக்கப் பார்க்கிறாள் வெலி. ம்ஹூம், நண்பனின் பேச்சைக் கேட்க கெஸி தயாராக இல்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் அவள் ரொலாண்ட்டை சந்திக்கிறாள். தனது உயிரணுக்களைதானம் செய்வதையே முழு நேர தொழிலாகக் கொண்ட ரோலான்ட், தனது விந்தை கெஸிக்கு தானமாக வழங்க ஒப்புக் கொள்கிறான். இந்த சந்தோஷமான செய்தியை நண்பர்களுக்கு தெரிவிக்கும் விதமாக கெஸி, பார்ட்டி வைக்கிறாள். அந்தப் பார்ட்டியில் வெலியும் கலந்துக் கொள்கிறான். ஆனால், தவறுதலாக அல்லது வேண்டுமென்றே அல்லது விபத்தாக ரோலாண்ட்டின் உயிரணுக்களுக்குப் பதில், தனது விந்தை குடுவையில் வைத்து விடுகிறான்.

ஏழாண்டுகள் உருண்டோடுகிறது. கெஸி எங்கு சென்றால் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு பொன் மாலைப் பொழுதில் அவளை மகனுடன் சந்திக்கிறான் வெலி. அவனுக்கு மட்டுமே தெரியும்,கெஸியின் கர்ப் பத்திலிருந்து பிறந்தவன் தன் மகன் என்று. ஆனால், ரோலாண்ட்தான் தன் மகனின் அப்பா என கெஸி நம்புகிறாள்.

மெல்ல மெல்ல அச்சிறுவனுடன் நட்பாகிறான் வெலி. மகன் மூலமாக கெஸியின் காதலை அடையலாம் என்பது அவன் திட்டம். பழம் பழுத்து கீழே விழும் நிலையில் ரோலாண்ட் திடீரென்று வருகிறான். தான்தான் அச்சிறுவனின் தந்தை என உரிமை கொண்டாடுகிறான்.
முடிவு என்ன என்பது இன்று (ஆகஸ்ட் 20 ) தெரியும். உலகெங்கும் 'தி ஸ்விட்ச்' ரிலீஸாவது இன்றுதான்.

புலிஸ்டர் விருது பெற்ற அமெரிக்க எழுத்தாளரான ஜெஃப்ரி யூஜினிடெஸ் எழுதிய 'பேஸ்டர்' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கான திரைக்கதையை ஆலன் லோப் எழுதியிருக்கிறார். 'ப்லேட்ஸ் ஆஃப் க்ளோரி' புகழ் இரட்டையர்களான ஜோஷ் கார்டன் - வில் ஸ்பீக் இப்படத்தை இயக்கியிர்க்கிரார்கள்.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கி மே மாதம் பூசணி சுற்றி ஷூட்டிங்கை முடித்துவிட்டார்கள். ஆனால், படத்தை போட்டுப் பார்த்த ஜெனிஃபர் ஆனிஸ்டனுக்கு திருப்தியில்லை. இன்னும் இன்னும் காமெடி வேண்டும். ஸோ ரீ ஷூட். எனவே சென்ற அக்டோபரில் திரும்பவும் காமிராவும் கையுமாக படப்பிடிப்புக்கு சென்றார்கள். இரண்டாவது முறையாக பூசணியை உடைத்தார்கள். நவரசங்களும் சரி விகிதத்தில் வந்ததும் ஜெனிஃபருக்கு பரம திருப்தி.

இப்படத்தை தயாரித்திருக்கும் ஜெனிஃபர் ஆனிஸ்டனே, கெஸியாகவும் நடித்திருக்கிறார். வெலியாக வாழ்ந்திருப்பவர் ஜெசன் பேட்மேன்.

வாங்க, நோய்விட்டு போக சிரித்துவிட்டு வரலாம்.

கே.என்.சிவராமன்                    

Saturday, August 14, 2010

'சும்மா' இருப்பது சுகமா?

சும்மா...
இந்த ஒற்றைச் சொல்லை சிலர் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.

கல்லூரி வளாகத்தில் ஒரு நாள். மணி அடித்ததும் வகுப்பறையை நோக்கி மாணவ, மாணவியர் பட்டாம்பூச்சிகளாய்ப் பறந்து கொண்டிருந்தார்கள்.

சிலர் மரத்தின் அடியில் சாய்வு பெஞ்சில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்கள். 'என்னய்யா... இங்கே உட்கார்ந்திருக்கின்றீர்கள்?' என்று கேட்டேன். `வகுப்பு இல்லை... அதனால் சும்மா உட்கார்ந்திருக்கின்றோம்' என்றார்கள்.

வளாகத்தை விட்டு வெளியே வந்தேன். தெருவொன்றில் பழைய மாணவர் ஒருவரைப் பார்த்தேன். 'என்ன செய்கிறாய்?' என்றேன். 'எம்.ஏ. முடித்துவிட்டு சும்மா இருக்கிறேன்' என்றார்.

இப்படித்தான் பலர் 'சும்மா' என்ற இந்த வார்த்தையை சும்மா சும்மா சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த புண்ணிய பூமியில் சும்மா இருப்பதையே சிலர் சுகமான யோகம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இயக்கம்தான் வாழ்க்கை. ஓடினால்தான் நதி. வீசினால்தான் காற்று. பாடினால்தான் குயில். பாடுபட்டால்தான் மனிதன்.

Friday, August 13, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

'ரெட்' - RED தலைப்பையும், இங்கு அச்சாகியிருக்கும் போஸ்டரையும் பார்த்துவிட்டு, 'சிவப்பு' என நேரடியாக அர்த்தம் கொள்கிறீர்களா? ஃப்ளைட் பிடித்து வந்து ப்ரூஸ் வில்லிஸ் உங்களை அடிப்பார்!

Retired Extremely Dangerous என்பதன் சுருக்கம்தான் 'ரெட்'. அதாவது 'ஓய்வுபெற்றவர் மிகவும் அபாயமானவர்'.

சரியாக சொல்வதென்றால் சென்ற ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, வாரன் எல்லிஸ் தனது வலைத்தளத்தில் (பிளாக்ஸ்பாட்) அச்செய்தியை பகிர்ந்து கொண்டார். 'ரெட்' என்ற தனது காமிக்ஸ் கதை, ஹாலிவுட்டில் திரைப்படமாகிறது.... அவ்வளவுதான். படித்தவர்கள் துள்ளிக் குதித்தார்கள். தங்கள் பால்ய காலத்தில் விழுந்து விழுந்து அவர்கள் படித்த, ரசித்த ஒரு காமிக்ஸ் கதை, அகண்ட திரையில் நவீன தொழில்நுட்பத்துடன் உயிர் பெற்று எழப்போகிறது என்ற செய்தி, அவர்களின் வயதை மடமடவென்று உதிர்த்தது. அனைவரையும் தங்களின் அரை டவுசர் நாட்களுக்கு சென்றுவிட்டார்கள்.

ஆனால், 66 பக்கங்கள் கொண்ட காமிக்ஸ் கதையை திரைப்படமாக்கினால் 40 நிமிடங்கள்தான் படம் ஓடும். இது போதாதே? எனவே ஜோன், எரிக் ஹோபர் ஆகிய திரைக்கதையாசிரியர்கள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தார்கள். 90 நிமிடங்கள் அடங்கிய கதையாக அதை மாற்றினார்கள். 'தி டைம் டிராவலர்ஸ் வைஃப், 'தி ஃபேமிலி ஜுவல்ஸ்' ஆகிய படங்களின் இயக்குனரான ராபர்ட் ஷ்வன்கியிடம் திரைக்கதையை ஒப்படைத்தார்கள். சூட்கேஸ் நிறைய டாலருடன் வந்த லோரன்ஸோ டி பொனவென்சுரா, படத்தின் தயாரிப்பாளரானார்.

Monday, August 9, 2010

இசைப் பயிற்சியால் இனிய நன்மைகள்!


இசை, மனதுக்கு அமைதி சேர்க்கிறது என்று நமக்குத் தெரியும். தற்போது, இசை தரும் மேலும் பல இனிய நன்மைகளை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இசைப் பயிற்சியானது ஒருவரின் மூளை நரம்புத் தொடர்புகளுக்கு நலன் பயக்கிறது. அதன் விளைவாக, மனிதர்களின் தொடர்புத் திறன்களான மொழியறிவு, பேச்சு, ஞாபகம், கவனம், குரலில் வெளிப்படுத்தும் உணர்ச்சி ஆகியவை சிறப்புப் பெறுகின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இது தொடர்பாக இங்கிலாந்தின் வடமேற்குப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இசைப் பயிற்சியானது கற்கும் திறனை ஊக்குவிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூளைக்கு நொடிக்கு நொடி வந்து குவியும் உணர்வுகள், தகவல்களில் தேவையானதை தேர்ந்தெடுக்க மூளை கஷ்டப்படுகிறது. ஆனால் இசைப் பயிற்சி பெறும்போது அது மூளை நரம்புகளை வலுப்படுத்தி, தேவையானவற்றை தேர்ந்தெடுத்து சேகரித்துக் கொள்ளும் திறனை மூளைக்கு அளிக்கிறது.

'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில் ஒத்துக்கொள்' என்பது மாதிரி, 'இசைக் கருவி ஒன்றைக் கற்றுக்கொள், இனிய பயன்கள் விளையும் ஒத்துக்கொள்' என்று புதுமொழி கூறலாம் போலிருக்கிறது!

Saturday, August 7, 2010

வெற்றி தரும் வித்தியாசமான சிந்தனை!

பாரதி...

கூட்டுக்குள் கிடந்து துடித்த தேசப் பறவைக்காகக் குரல் கொடுத்த பாட்டுப் பறவைதான் பாரதி. அவன், கண்கள் என்னும் தீப்பந்தத்தில் கருணை விளக்கேற்றிய கவி நெருப்பு. எளிமை கண்டு இரங்கிய ஏந்தல். சிறுமை கண்டு சீறிய சிறுத்தை.

எழுதுகோல் பலரின் கைகளில் மயிலிறகாய் இருந்தது. பாரதியின் கைகளில் மட்டும்தான் அது துப்பாக்கி முனையாக எதிரிகளைத் துளைத்தது.

அவன் பேனா மகுடம் கழற்றிய போதெல்லாம் ஆங்கிலேயரின் கிரீடம் ஆட்டம் கண்டது.

தங்க மணிமகுடங்களைத் தமிழுக்குத் தந்தான். ஒரு சாதாரணத் தலைப்பாகையை தன் தலையில் கட்டிக் கொண்டான். அந்த முண்டாசுக் கவிஞன்தான் முடங்கிக் கிடந்த தமிழ்ச் சொற்களுக்கு புதிய இரத்த ஓட்டம் தந்தவன்.

இனிய இளைஞர்களே!

இந்தக் கவிஞன்தான் உங்களுக்காகவே 'அச்சம்தவிர், உடலினை உறுதி செய், ஓய்தல் ஒழி, குன்றென நிமிர்ந்து நில், வெடிப்புறப்பேசு, வேதம் புதுமை செய், புதியன விரும்பு' என்று புதிய ஆத்திசூடியில் புதுமைகளைச் சொன்னவன்.

புதியன விரும்பு. அவன் விரும்பிய அந்தப் புதுமையின் கதவுகள் திறக்கப்பட்டு விட்டன. 'அது அந்தக் காலம்'... 'காலம் மாறிப்போச்சு'... இந்த வார்த்தைகளை இன்று அடிக்கடி கேட்க முடிகிறது. காரணம் உலகெங்கும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

Friday, August 6, 2010

ஹாலிவுட் டிரெய்லர்


குத்துமதிப்பாக ஆண்டுக்கு 300 வங்கிக் கொள்ளைகள் பாஸ்டன் நகரில் நிகழ்கின்றன. இக்காரியத்தை செய்பவர்கள் அனைவருமே கொள்ளையடிப்பதில் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள். இந்தக் கொள்ளையர்கள் அனைவரும் குழு குழுவாக வாழ்வது, வசிப்பது சார்லஸ் டவுனில். ரூம் போட்டு பக்காவாக திட்டம் தீட்டி வங்கியை கொள்ளையடிப்பார்கள். அடித்தப் பணத்தை தங்கள் குழுவுக்குள் நயா பைசா பாக்கியில்லாமல் பகிர்ந்துக் கொள்வார்கள். பின்னர் தலைமறைவாகிவிடுவார்கள். பணம் தீர்ந்ததும் மீண்டும் திட்டம். திரும்பவும் கொள்ளை. இதுதான் சார்லஸ் டவுனில் வசிக்கும் கொள்ளை குழுக்களின் ஃபார்முலா.

இப்படியான குழுக்களின் டக் மேக்ரே குழுவும் ஒன்று. இந்தக் குழுவுக்கு அவன்தான் தலைவன். பிறவித் திருடனான டக்மேக்ரே தன் தந்தையிடமிருந்து கசடற கற்றது கற்றது அன்பை மட்டுமல்ல; கொள்ளையையும்தான். அதனால்தான் நிற்க அதற்குத் தக என வாழ்கிறான். வழிப்பறியை விட, வங்கிகளை குறி வைத்து கொள்ளையடிப்பது அவனுக்கு பிடிக்கும். பிடித்ததை செய்வது நிரம்பவும் பிடித்திருப்பதால், பிடித்ததையே பிடித்தபடி செய்து வருகிறான்.

அவனது தளபதி என ஜெம்மை சொல்லலாம். இருவரும் ஓருயிர். இரு உடல். லாலிபாப் சாப்பிட ஆரம்பித்தது முதல் இருவருக்கும் பழக்கம். நட்பு. அது வாலிப வயதிலும் தொடர்கிறது. ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்ததில்லை. பிரிவை குறித்து யோசித்ததுமில்லை. ஆனால், குணத்தில் வட துருவம், தென் துருவம். டக் மேக்ரே நல்லவன். கொள்ளை மட்டுமே அடிப்பான். ஜெம், கொலையும் செய்வான்.

Wednesday, August 4, 2010

9 'சி' இருந்தால் நீங்களும் தலைவராகலாம்

லீடர்ஷிப் (தலைமைக்குணம்) என்கிற வார்த்தையை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கிறோம்.

பெரும்பாலான பொதுமக்களைப் பொறுத்தவரை, 'தலைவர்' என்பது ரொம்பப் பெரிய பதவி, பொறுப்பு, கௌரவம். மிகச் சிலர்மட்டும்மே அதற்குத் தகுதியானவர்கள், மற்றவர்கள் எல்லோரும் கீழே கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கவேண்டியதுதான் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல, எல்லோரிடமும் அந்த குணங்கள் இருக்கின்றன. அவற்றை வளர்த்தால் போதும்.

ஒருவர் எப்படித் திடுதிப்பென்று தலைவராக முடியும்? அதற்கு தேவையான பண்புகளை எப்படி வளர்த்துக்கொள்வது?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுவிதமாக 'வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் கான்?' (Where Have All The Leaders Gone?') என்ற சுவாரஸ்யமான புத்தகம் வெளியாகியிருக்கிறது. இதை எழுதியிருப்பவர்கள், பிரபல மேலாண்மை நிபுணர், உலகப் புகழ்ப் பெற்ற எழுத்தாளர் லீ அயகோக்கா மற்றும் கேதரின் விட்னி.

'அநாவசியமா தலைவர்களைத் தேடித் போய்க்கிட்டிருக்காதீங்க, கொஞ்சம் முயற்சி செஞ்சா நீங்களே தலைவராயிடலாம் என்கிறார்கள். இதற்கு 9 'சி' தேவை என்கிறார்கள். 9 'சி' என்றதும் நம்ம ஊர் ஸ்டைலில் 9 கோடி என்று நினைத்துவிட வேண்டாம். '9சி' என்பது 'சி' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் ஒன்பது முக்கியமான குணங்களைக் குறிக்கிறது.

1. Curiosity - ஆர்வம்
ஒரு தலைவன் எந்தப் புது விஷயத்தையும் கற்றுக்கொள்கிற ஆர்வத்தோடு இருக்கவேண்டும். மற்றவர்கள் செம்மறி ஆடுகளைப்போல் ஒரே பாதையில் நடந்து சென்றால்கூட, நாம் மட்டும் சுற்றியுள்ள மற்ற பாதைகளைக் கண்காணிக்க வேண்டும், 'இந்த பக்கம் போனால் என்ன?' என்று யோசிக்க வேண்டும், அந்த ஆர்வம்தான் நமது முன்னேற்றத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது!

2. Creativity - படைப்புத்திறன் / புதுமைச் சிந்தனை
தலைவர்கள் யாரும் நடக்காத பாதையில் நடந்தால்மட்டும் போதாது, யாரும் செய்யாத ஒன்றைச் செய்கிற திறமையும் படைப்புணர்ச்சியும் வேண்டும். பிறர் கண்ணில் படாத விஷயங்கள் கூட, இவர்களுடைய மனக்கண்ணில் தோன்றவேண்டும், அரைத்த மாவையே அரைக்கிற குணம் பயன்படாது!

3. Communication - தகவல் தொடர்பு
ஒரு விஷயம் கவனித்தீர்களா? பெரிய தலைவர்கள் எல்லாம் பிரமாதமான பேச்சாளர்களாக இருப்பார்கள். அதற்காக நாம் மேடையேறி முழங்கவேண்டும் என்று அவசியம் இல்லை, நமது குடும்ப உறுப்பினர்கள், அலுவலகத் தோழர்கள், நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு எதையும் சரியானமுறையில் தெளிவாக விளக்கிச் சொல்லி அவர்களுடைய ஒத்துழைப்பை பெறுகிற திறன் வேண்டும்.

4. Character - ஒழுக்கம்
கையில் ஒரு பதவி, பொறுப்பு வந்துவிட்டால் நம் இஷ்டம்போல் தப்புச் செய்யலாம் என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால் தலைவர்கள் தப்பு செய்யக்கூடாது.

5. Courage - தைரியம்
சிலர் நன்கு வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால், செயல் என்று வந்துவிட்டால் ஒதுங்கி நிற்பார்கள். அவர்களால் எப்போது தலைவர்களாக முடியாது.

6. Conviction - உறுதி
ஒரு தலைவரின் பாதையில் ஏகப்பட்ட குருக்கிடல்கள் வரும். அப்போதெல்லாம் 'போதுமடா சாமி' என்று திரும்பிச் செல்லாமல் முன்னேறுபவர்கள்தாம்  தலைவர்கள்.

7. Charsima - ஈர்ப்பு / கவர்ச்சிகரமான ஆளுமை
ஈர்ப்பு என்று சொல்வது வெறும் முக அழகுமட்டுமல்ல, அடுத்தவர்கள்மீது வெளிக்காட்டும் அக்கறை, அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் தன்மை, அன்பாகப் பேசும் விதம் போன்றவை எல்லாமாகச் சேர்த்து ஒரு தலைவரைத் தீர்மானிக்கிறது

8. Competence - திறமை / தகுதி
நாம் எந்தத் துறையில் இருக்கிறோமோ, அதுபற்றிய ஞானம் ஒரு தலைவருக்கு மிக அவசியம். அது தெரியாமல் மற்ற குணங்களை மட்டும் வைத்துத் தலைவர்களானவர்கள் ரொம்ப நாள் நீடித்து நிற்கமுடியாது.

9. Common Sense - யதார்த்த அறிவு
எப்பேர்பட்ட தலைவரும், அந்தரத்தில் கொடிகட்டமுடியாது. எத்தனை சிறப்பான லட்சியக் கனவுகளைக் கொண்டிருந்தாலும், எதார்த்தத்தைப் புரிந்து, தரையில் கால் பதித்து நிற்கிற தலைவர்கள்தான் மிகப் பெரிய வெற்றியடைகிறார்கள்.

இந்த 9 சியில் உங்க ஸ்கோர் என்ன? எங்கெல்லாம் முன்னேற்றம் தேவைபடுகிறது? சட்டென்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத் தயாராகிக்கொள்ளுங்கள், நீங்களும் தலைவராகலாம்.   
            

Monday, August 2, 2010

கவிதைச்சரம்

இரு சக்கர வாகனத்தில் விரையும் பெண்

ரு சக்கர வாகனம் ஓட்டுவது
மிகவும் பிடிக்கும் அவளுக்கு
மிக வேகமாக ஓட்டுவாள்
தனக்கு முன்னே செல்லும்
ஆடவர் ஓட்டும் இரு சக்கர வாகனம்
பேருந்து, லாரி, ஆட்டோ என எல்லாம்
முந்திச் செல்கிறாள்
முதலுதவி வாகனமும் தீயணைப்பு வண்டியும்கூட
அவளுக்காக வழிவிட்டு ஒதுங்கிச் செல்கின்றன
நகரின் எல்லாப் பகுதிகளிலும்
லாகவமாக வண்டியோட்டும் அவள்
சிக்னலில் பச்சை விழுந்த மறுகணம்
சீறிப் பாய்கிறாள்.
வாகனத்துக்கு எரிபொருள் போடும் இடத்தில்
புரவி மீது அமர்ந்திருக்கும்
தேவதையாகக் காட்சி தருகிறாள்
அவள் இன்னும்
வேகமாக வண்டியோட்ட வேண்டும்
என்பதற்காகவே
அரசாங்கம்
தேசிய நெடுஞ்சாலைகளை
அமைத்துக் கொடுத்துள்ளது
தன் முன்னே
நீண்டு செல்லும் அந்தச் சாலையை
எப்படியும் முந்திச் சென்றுவிட வேண்டும்
என்பதே அவள் இலக்கு!

தபசி

******************

ஆண் பாவம்

ள்ளதிலேயே
சிறந்த புகைப்படத்தைத்தான்
பெண் வீட்டுக்கு அனுப்பினேன்

வந்ததிலேயே
சிறந்த புகைப்படத்தைத்
தேர்வு செய்திருப்பார்கள்போல
பதில் இல்லை!

பா.ராஜாராம்

******************

சாரதிக்கு ஒரு குறுஞ் செய்தி....

சென்ற மாதத்தின்
கோர விபத்தில்
இறந்துபோனான்
சாரதி - என் நண்பன்

இன்னும் என்
அலைபேசியில்
அழிக்கப்படாமல் இருக்கிறது
99..........................

அவன் அனுப்பிய
வாழ்த்துக்கள், வணக்கங்கள்,
நகைச்சுவைகள், இன்னும்
இருக்கின்றன இன்பாக்ஸில்

காலை வணக்கமும்
இரவு வணக்கமும்
எல்லாருக்கும்
அனுப்பும்போது

சரவணன் எண்ணைக்
கடக்கும்போது
சாரதி
99..........................க்கு
அனுப்பாமல்
கடக்க முடியவில்லை.

கண்களும் மனசும்
தேங்கிவிடுகிறது
அங்கேயே.

ஆகவே...
இன்றும்
அனுப்பிகொண்டிருக்கின்றேன்
அதே எண்ணுக்கு.

நிச்சயம்
காற்றில்
அலைந்து கொண்டிருக்கும்
என் குறுஞ்செய்திகளை
படித்துக்கொண்டிருப்பான்....

பதில் செய்தி
அனுப்ப இயலாத
சாரதி (எ) பார்த்தசாரதி!

இரா.பூபாலன்