Saturday, July 31, 2010

வாழ்வை வளமாக்கும் எண்ணங்கள்!


வலிமையான எண்ணங்களே நம் வாழ்வை வழிநடத்திச் செல்கிறது. எது வலிமையான எண்ணம், மற்றவர்களில் இருந்து மாறுபட்ட சிந்தனையுடன் வாழ்ந்து வெற்றி பெறுவது எப்படி?

வரலாற்றின் திசையை மாற்றி அமைக்கும் வல்லமை வலிமையான கருத்துக்களுக்கே உண்டு. 'மனித வரலாறு என்பது எண்ணங்களின் சாரமே' என்கின்றார் எச்.ஜி.வெல்ஸ் என்ற வரலாற்று அறிஞர். 'ஒரு சிறந்த கருத்து என்பது சரியான நேரத்தில் வெளிப்படும்போது அதன் தாக்கம் வலிமையானதாக அமையும்' என்கின்றார் அறிஞர் விக்டர் கியூகோ.
  
பித்தாகோரஸ், கலிலியோ, நியூட்டன், டாவின்சி, ஜான்கூடன்பர்க், லூயி பாஸ்டியர், எடிசன், ஐன்ஸ்டீன், சர்.சி.வி.ராமன், ஹர்கோபிந் குரானா என்று மனித குலத்திற்கு பெருமை சேர்த்தவர்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். இவர்களெல்லாம் பலதுறைகளில் அறிவியல் ஆராய்ச்சி செய்து இறவாப் புகழ் பெற்றவர்கள்.

ஹாலிவுட் டிரெய்லர்

சும்மா சொல்லக் கூடாது. டிரெய்லர் மூலமாகவே ரசிகர்களின் நாடி நரம்பை அதிரச் செய்யும் வித்தையை ஹாலிவுட் பிரம்மாக்கள் கற்று வைத்திருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம், 'ரெசிடென்ட் ஈவில்: ஆஃப்டர் லைப்' (Resident Evil After Life).

பெயரை பார்த்ததுமே சில பழைய படங்களின் நினைவுகள் உங்களுக்கு வந்தால்...? கையை கொடுங்கள். அதேதான். ஏற்கனவே பாகம் பாகமாக வந்து பாக்ஸ் ஆபிசை ஏக்கர் கணக்காக பிரித்து நிரப்பிய அதே 'ரெசிடென்ட் ஈவில்' படங்களின் தொடர்ச்சிதான் இந்த படமும்.

ஒருவகையான உயிர்கொல்லி வைரஸ் நகரத்தையே தாக்குகிறது. அதிலிருந்து தப்பிப் பிழைப்பவர்கள் சிலர்தான். அந்த சிலரையும் பாதுகாப்பாக அழைத்து கொண்டு ஆலிஸ், வேறொரு நகரத்துக்கு வருகிறாள். அதிர்ந்துப் போகிறாள். இந்த புதிய நகரத்தில் இருப்பவர்கள் அனைவருமே அந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பி பிழைத்தவர்கள்தான். ஒட்டு மொத்தமாக இவர்களை குறி வைத்து அழிக்க வேறொரு சக்தி வருகிறது. அந்த சக்தியை எதிர்த்துப் போராடும் ஆலிஸுக்கு முகம் தெரியாத நபர் உதவுகிறார். அவர் யார்? ஆலிஸால் அனைவரையும் காப்பாற்ற முடிந்ததா என்பது கதை.

Wednesday, July 28, 2010

கவிதைச்சரம்

எழில் நகர்

ருக்கு வெளியே
புரோக்கர் பொன்னுசாமி
கை காட்டிய இடத்தில்
மாந்தோப்புகள் இருந்தன

அந்த மாமரத்திலிருந்து
மூன்று கிலோ மீட்டர்
தள்ளிதான்
பொறியியல் கல்லூரி
இருக்கிறதாம்

அந்த மாமரத்திலிருந்து
அரை கிலோ மீட்டரில்
பள்ளிக்கூடம் இருப்பதாகச்
சொன்னான்

அந்த மாமரத்திலிருந்து
அரை கிலோ மீட்டர் தூரத்தில்
ஆஸ்பத்திரி வரப்போவதாகவும்
சொன்னான்

பத்தடியில் சுவையான
குடிநீரென்றான்
பக்கம் பக்கத்தில்
எல்லாமென்றான்

கீச்... கீச் சத்தத்துடன் பறந்த
அந்த மாமரத்துக் கிளிகளுக்கு
இனி இவை யாவும்
பக்கமா,
தூரமா என்றுதான்
தெரியவில்லை!

****************************

பிரார்த்தனை

னமுற்ற ஓவியனின்
சாலையோர ஓவியத்தை
வியந்தபடி
சட்டையில் துழாவினேன்
சில்லறை ஏதுமில்லை
சில நூறுகள் தவிர

ஓவியத்தை ரசித்த நான்
மழை வரக் கூடாதென்று
வேண்ட

நல்லார் ஒருவருக்காக
எல்லாருக்கும் அனுப்பியதில்
பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பில்
உருகி ஓடின அன்பும் பரிவும் !

என்.விநாயக முருகன்****************************

வளையல்களின் வாசம்

மெல்லிய
இளஞ் சிவப்புத் தாளில்
அவன் மடித்துக் கொடுக்கிற
அழகுக்காகவே
இன்னொரு முறை வாங்கலாம்
எனத் தோன்றுகிறது
வளையல்களை

கணிதப் பாடத்தில்
பென்சில்கொண்டு
வட்டம் வரைவதற்காகப்
பயன்படுத்துகிறார்கள்
பள்ளிச் சிறுமிகள்
வளையல்களை
இப்போதெல்லாம்

காதலியின்
உடைந்துபோன
கண்ணாடி வளையல்களின்
சில்லுகளைச்
சேர்த்துவைத்து
அழகு பார்க்கிறார்கள்
காதலர்கள்

நவீனப் பெண்கள்
அணிவதில்லை
நாகரிகம் எனச் சொல்லி

முழங்கை வரை
நீண்டுகிடக்கும்
சந்தனம் மறைத்த
சீமந்த வளையல்களின்
எதிரொளிக்கிறது
சந்தோசம் பொங்கும்
உன் முகம்

புதிய தொழிலின்
முதலீட்டுக்கு
என்ன செய்யலாம் என
யோசிக்கையில்
கண்ணகியின் காற்சிலம்பென
நீ கழட்டிக் கொடுக்கும்போது
மேலும்
அழகு பெறுகின்றன
உன் வளையல்களும்
கைகளும்!

ஆதலையூர் சூரியகுமார்  

Tuesday, July 27, 2010

குறைகிறது தூக்கம்... புலம்புகிறார்கள்....

 
நீங்கள் அதிக நேரம் வேலை செய்பவரா?
அதிகம் உடல் எடை கொண்டவரா?
எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகுபவரா?

அப்படியென்றால், உங்களுக்கு 'ஓ.எஸ்.ஏ' குறைபாடு இருக்கலாம். 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா' என்பதன் சுருக்கம்தான் ஓ.எஸ்.ஏ. இதனால், உறக்கத்தின்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, தூக்கமின்மை உண்டாகும்.

பொதுவாக நகரவாசிகள்தான் மேற்படி கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்பவர்களாக இருக்கிறார்கள். அதனால், இவர்கள்தான் அதிக அளவில் இந்த இரவுநேர நோய் பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள். இந்த நோய் பாதிப்பு தொடரும் பட்சத்தில் நிம்மதியை இழந்து பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாகிவிடுகிறார்கள் என்கிறது, சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு. 35 முதல் 65 வயதுள்ள சுமார் 6 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில், நகர்ப்புறங்களில் வாழும் 93 சதவீதம் பேர் இரவுநேர தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்கள். இவர்களில் 28 சதவீதத்தினர் 5 மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்கள். 71 சதவீதத்தினர் இரவில் மூன்று முறை விழித்து தூக்கம் வராமல் தவிக்கிறார்கள்.

பத்திரிகைச் செய்திகள்

சிறப்பு தூதர் இலங்கை செல்கிறார் - மன்மோகன்சிங் அறிவிப்பு
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைப்பட்டுள்ள தமிழர்களின் நிலை நேரில் அறிந்து வருவதற்காக வெளிவிவகாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்புகிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் நலன் தொடர்பாக கடந்த 17-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருந்ததாவது:-


"இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர் சமுதாயத்தின் நிலையை முன்னெடுத்து செல்வது தொடர்பாக எங்கள் கருத்துக்களை தெரிவிக்க சொல்லி, கடந்த 9-ந் தேதி தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடனும், கவுரவத்துடனும் வாழ்வதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் இயன்றவரையில் மேற்கொள்வதாக தாங்கள் உறுதி அளித்திருப்பதற்கு நன்றி.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஒரு நீண்டகால அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரி வருகிறோம். ஆனால், இந்திய அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தாலும், தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் திருப்தி அளிக்கக்கூடிய தகுந்த நடவடிக்கை இதுவரை அங்கு எடுக்கப்படவில்லை. எனவே, இலங்கை தமிழர்கள் பிரச்சினை பொறுத்தவரை நீண்ட கால மற்றும் குறுகிய கால தீர்வுகள் ஏற்படுத்துவது அவசியமாகிறது.

பிரதிநிதியை அனுப்ப வேண்டும்

தாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை திரும்ப செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், அவசரமாக மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்றுமாகும். அங்குள்ள இடம்பெயர்ந்த தமிழர்கள் முகாம் வாழ்க்கையின் கடுமையை அனுபவித்து வருகிறார்கள்.

எனவே, இந்த தருணத்தில் இந்திய அரசாங்கம், இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தூதரக தொடர்புகள் மூலமாக ஒருவரையோ அல்லது ஒரு சிறப்பு பிரதிநிதியையோ அனுப்பி அங்கு நிலவும் உண்மையான சூழலை மதிப்பிட்டு அறிந்து வரச்செய்யலாம். இதன்மூலம், இலங்கை அரசு இதுவரை மேற்கொண்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளின் முன்னேற்றம் பற்றியும், இலங்கை தமிழர்கள் மீண்டும் அவர்களுக்குரிய இடத்தில் குடியமர்த்துவது தொடர்பான பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.''

இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி கூறி இருக்கிறார்.

பிரதமர் கடிதம்

இந்தநிலையில் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கடிதத்துக்கு பதில் அளித்து, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு காட்டி வரும் ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவும், இதில் இந்தியா காட்டி வரும் ஆர்வத்தின் காரணமாகவும், இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளேன். அவர், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் இலங்கை அதிகாரிகளை சந்தித்து இப்பிரச்சினை பற்றி விவாதிப்பார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு திரும்புவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, July 24, 2010

அவமானம் முன்னேற்றத்தின் மூலதனம்!

சுத்தம் - அசுத்தம், நியாயம் - அநியாயம், நம்பிக்கை - அவநம்பிக்கை, மானம் - அவமானம்

இப்படி ஒன்றிலிருந்துதான் ஒன்று உருவாகிறது. இரண்டுமே நல்லதுதான். என்ன? இரண்டுமே நல்லதா! முரண்பாடு நல்லதா என்கிறீர்களா?

முரண்பாடுதான். ஒப்புக் கொள்கிறேன். அதனால்தான் அது நல்லது என்கிறேன். வாழ்க்கையை அதுதான் அர்த்தமுள்ளதாக, அழகு மிகுந்ததாக மாற்றுகிறது.

மலருக்கு அழகைக் கொடுத்த இயற்கை, முள்ளுக்கு உறுதியைக் கொடுத்திருக்கிறது. அழகு மென்மையானது. அதனாலேயே அது சீக்கிரம் வாடி உதிர்ந்து விடுகிறது. முள் உறுதியானது. அதனாலேயே அது அதிக நாள் வாழ்கிறது. மென்மை, வன்மை இரண்டுமே வாழ்க்கைக்குத் தேவை. அழகான மலர் மகிழ்ச்சியைத் தருகிறது. உறுதியான முள் பாதுகாப்பைத் தருகிறது. அதனால்தான் முரண்கள் நல்லது.

படைப்பே முரண்களால் ஆனதுதான். உலகம், ஆண்- பெண் என்ற இரண்டு முரண்களால் ஆனது. அது போல நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமும் முரண்களாலேயே இயங்குகின்றது. இரவு- பகல், பிறப்பு- இறப்பு, இன்பம்- துன்பம், நன்மை- தீமை இப்படி ஒன்றிலிருந்துதான் ஒன்று உருவாகிறது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பிறப்பு மட்டுமே இருந்தால் இந்த உலகம் எப்படி இருக்கும்? இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தானே வாழ்க்கை மதிப்பு மிக்கதாக இருக்கின்றது?

வாழ்க்கை அங்கும் இங்கும் அலையும் பெண்டுலம் போன்றது. ஒருபக்கம் ஏறிய பெண்டுலம் அதற்கு எதிராக மறுபக்கமும் சென்றே தீரும். மலையின் உச்சிக்குச் சென்றவன் கீழே இறங்கியாக வேண்டும். இப்படித்தான் ஏற்றமும் தாழ்வும் ஏற்படுகிறது.

Friday, July 23, 2010

ரதன் கவிதைகள்

நான்
இறந்த குழந்தையின்
சடலம்.

வெட்டியானின் கருணைப் பார்வை
என் மீது விழுந்து
போகிறது

எனது குற்றங்களை
நானே கழுவிலேற்றுகிறேன்.
நல்லியல்புகளை மட்டுமே
நாற்காலி போட்டு
உட்கார வைக்கிறேன்.

சபிக்கப்பட்டவர்களின் பட்டியலில்
நான் இருக்க
வாய்ப்பே இல்லை.
ஒருக்கால்  
ஊழ்வினை முன்வினை இதுமாதிரி
ஏதும் இருந்தாலொழிய.

இருக்கும் போலிருக்கிறது.
 

ஹாலிவுட் டிரெய்லர்


தலைப்புதான் இந்த 'சென்சூரியன்' ஹாலிவுட் படத்தின் ஒன் லைன். அதைத்தான் 97 நிமிடங்களாகவும் 130 நிமிடங்களாகவும் இரண்டுவகையில் எடிட் செய்திருக்கிறார்கள். அந்தந்த நாட்டின் சென்சார் போர்டுக்கு ஏற்ப 97 அல்லது 130 நிமிடங்களிலோ படம் திரையரங்குகளில் ஓடும். ஓட்டமென்றால் சாதாரண ஓட்டமல்ல. ஒ(ளி)லியை விட வேகமான ஓட்டம். தடதடக்கும் காட்சிகளும் பரபரக்கும் திரைக்கதையும் இப்படத்தின் உயிர்நாடி.

ஏப்ரல் மாதம் கிரீசில் ரிலீசாகி பாக்ஸ் ஆபீசை நிரப்பிவிட்டு இங்கிலாந்தில் வலது காலை எடுத்து வைத்து இப்படம் நுழைந்த தினம், ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருக்க வேண்டும். அங்கும் கல்லா நிரம்பி தெருவில் ஆறாக ஓடியது. காதை குடைந்தபடி இதைப்பார்த்த அமேரிக்கா, வெற்றிலைப் பாக்குடன் அடுத்த பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்க இப்படத்தை இருகரம் கூப்பி அழைத்திருக்கிறது. 

Thursday, July 22, 2010

மேலோட்ட மதிப்பீடு உண்மையை மறைக்கும்!

ஒருவரின் பார்வைக்கு கல்லாகத் தெரிவது, மற்றொருவருக்கு சிலையாகத் தோன்றலாம். எந்த விஷயத்தையும் மேலோட்டமாக மதிப்பிடுவது சரியானதல்ல. வெற்றி பெற ஒன்றை எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்று காண்போம்.

வெற்றி, தோல்வியை தாமதமாக்குகின்றது. தோல்வி, வெற்றியை தாமதமாக்குகின்றது. தோல்விக்குள் வெற்றி குடியிருக்கின்றது. இதை எப்படி உணர்ந்து கொள்வது? சில விஷயங்கள் அறிவினால் உணரும்போது சரியாகத் தோன்றலாம். உணர்வுப்பூர்வமாக அணுகும்போது பிழையாகிப் போகலாம். இதில் எது சரி, எது தவறு?
  
தவறான அணுகுமுறை என்பதை எந்தக் காலத்திலும் சரியானதாகக் கருத முடியாது. ஆனால் ஒரு முயற்சியில் எதிர்கொள்ளும் தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும். அதனால் தோல்விகளைக் கண்டு யாரும் வெட்கப்படத் தேவையில்லை.

சூரிய அஸ்தமனமில்லாமல் சூரியோதயம் நிகழ்வதில்லை. தோற்றத்தில் எதிர்மறையாக இருந்தாலும் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததே. இறப்பில்லாமல் பிறப்பில்லை. தோல்விகளை எதிர்கொள்ளாமல் வெற்றிக்கனியை எட்டிப் பறிப்பது சாத்தியமில்லை. ஒரு முயற்சி முழு வடிவம் பெறுவதற்குச் சற்றுத் தாமதமாகலாம். அதை தடை என்று கருத வேண்டியதில்லை.

Wednesday, July 21, 2010

சிவாஜி கணேசனின் நினைவுநாள்

“இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்பட்ட  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 வது நினைவுநாள் இன்று.

நிலவில் மனிதன் கால் தடம் பதித்த நாள்
இன்று நிலவில் மனிதன் கால் பதித்து 41 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆம் 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி நீல் ஆம்ஸ்ட்ரோங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ 11 விண்கலம் சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, “ஈகிள்” என்று பெயர் கொண்ட சந்திரக் கூறு, “கொலம்பியா”விலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ரோங்கையும், அல்ட்ரினையும் சுமந்துகொண்டு ஈகிள் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கியது. 

நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ரோங் பெற்றுக் கொண்டார். இப் பிரதேசம் பின்னர் “அமைதித் தளம்” (Tranquility Base) என அழைக்கப்பட்டது. சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங் கூறிய கூற்று - "ஒரு மனிதனைப் பொறுத்த அளவில் இது ஒரு சிறிய காலடி, மனித இனத்துக்கு ஒரு பாரிய பாய்ச்சல்".

Tuesday, July 20, 2010

கவலைகள் கைக்குழந்தைகள் அல்ல!


கவலைக்குள் இருக்கின்றது ஒரு வலை. அதுதான் சின்னச் சின்ன நூல் இழைகளால் சிலந்தி கட்டும் வலை. அந்த வலைக்குள் வந்து வண்டுகளும், பூச்சிகளும் வீழ்ந்துவிடுவதைப் போல், கவலை என்னும் வலைக்குள்ளும் பலர் சிக்கி வீழ்ந்து விடுகிறார்கள்.

முன்பு இருந்தது போல் இப்போது இல்லை வாழ்க்கை. உணர்ச்சி, வேகம், பரபரப்பு, பகைமை, மோதல்கள் இப்படி எத்தனை எத்தனையோ பிரச்சினைகள். இதனால் பல கவலைகள். இந்தப் பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி கொள்வதற்குப் பதிலாக, பெரும்பாலானவர்கள் 'கவலை'க்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.

வாழ்க்கை நமக்குக் கணக்கற்ற பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. வாழ்க்கையில் துன்பமும் உண்டுதான். அந்த துன்பமும் இணைந்த வாழ்க்கைப் பயணத்தில் இன்பம் காண்பவரே வாழ்க்கையின் இயல்பை உணர்ந்தவர்.

புரூஸ் லீயின் நினைவுநாள்திரையில் இத்தனை ஆக்ரோஷமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது. 
 
இன்று குங்ஃபூ மன்னனின் 37 வது நினைவுநாள்.

Monday, July 19, 2010

கவிதைச்சரம்

குறுஞ்செய்திகள்

ணிக்கொரு
குறுஞ்செய்தியேனும்
கைபேசியில்
வந்துகொண்டேதான் இருக்கிறது.

ஒன்றுக்கும் மேல் அவை
வரும்போது மாலையோ
அல்லது
இரவு நேரமாகக்கூட
இருக்கலாம்.

சில பெயர் தாங்கியும்
சில எண் மட்டும் தாங்கியும்
சொல்லாமல் வருகின்றன
நீர்க்குமிழிபோல்.

யாரேனும் ஒரு
குறுஞ்செய்தி எழுதி
காற்றில் எறிந்துகொண்டேதான்
இருக்கிறார்கள்.

சிரிப்பும் அழுகையும்
காதலும் நட்பும்கூட
அதில் கலந்திருக்கலாம்.
அவை முகில்களின் நடுவே
பறந்து திரிகின்றன

யாருக்கும் தெரியாமல் 
கடிதத்துடன் எறும்பை
நசுக்கிவிடுவதுபோல்.
குறுஞ்செய்திகளைக் கண்டதும்
எனது கட்டை விரல் அவற்றை
அழித்துவிடுகிறது படிக்காமல்.

அதில் உன்னை
ஞாபகப்படுத்தும்
அழகானதொரு
குறுஞ்செய்தியும்
இருந்திருக்கலாம் !

சாந்த மணிவண்ணன்***********************

வாகனம்

விநாயகர் எலியோடும்
முருகன் மயிலோடும்
சிவன் எருதொடும்
பிரம்மன் அன்னத்தோடும்
ஐயப்பன் புலியோடும்
மன்மதன் கிளியோடும்
சனிபகவான் காகத்தோடும்
எமன் எருமையோடும்
கிருஷ்ணன் பருந்தோடும்
இந்திரன் வெள்ளை யானையோடும்
கள்ளழகர் குதிரையோடும் வந்து
ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில்
எக்ஸ்சேஞ் ஆஃபரில்
பழைய வாகனத்துக்குப்
புதிய வாகனம்
வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.
ஹெல்மெட் அணிந்துகொண்டு
நடுரோட்டில் கிக்கரை
உதைத்துக்கொண்டிருப்பவரையும்
லைசென்ஸ் இல்லாமல்
மாட்டிக்கொண்டு விழிப்பவரையும்
ரெட் சிக்னலை
மதிக்காமல் செல்பரையும்
முன் வாகனத்தின் மீது மோதி
திட்டு வாங்குபவரையும் கண்டால்
அந்தக் கடவுள்களில்
ஒருவராகவே எண்ணுகிறேன்!

கட்டளை ஜெயா

***********************
 
கிருஷ்ண லீலை

டன ஒத்திகை ஒன்றில்
கிருஷ்ண வேடம் அணிந்த
பொடியன்
அழுகொண்டு இருந்தான்

என்னவென்று விசாரிக்கையில்
ராதைக்கும் அவனுக்கும்
கெமிஸ்ட்ரி சரியில்லையாம்

அனுப்பிவிட்டார்களாம்
அழுதபடியே மேடையைக்
காட்டினால்

விடிய விடிய கதை கேட்டவன்
ராமருடன் ஆடிக்கொண்டு இருந்த
ராதையைப் பார்த்து
அதிர்ந்தேன் !

என்.விநாயக முருகன்     
 

Saturday, July 17, 2010

ஹாலிவுட் டிரைலர்

 
ஒருமைக்கும் பன்மைக்குமான இடைவெளி வெறும் 23 ஆண்டுகள்தான். ஆமாம், 'பிரிடேட்டர்' ரிலீஸானது 1987ல். 'ப்ரிடேட்டர்ஸ்' Predators வேட்டைக்கார(ர்கள்)ன்  வெளிவரபோவது 2010ல். அதில் நடித்தவர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர். இதில் அட்ரியன் ப்ராடி. இது மட்டும்தான் வித்தியாசமா? இந்தக் கேள்விக்கு ஆம் என்றும் விடையளிக்கலாம். இல்லையென்றும் மறுக்கலாம். ஆனால், அதில் இருந்த ஆக்ஷன் ரகளையைப் போல் பல மடங்கு சரவெடி இதில் உண்டு.

ராய்ஸ் என்னும் கூலிப்படை வீரன் உச்சியிலிருந்து கீழே விழுகிறான். பாராசூட் வேலை செய்யவில்லை. அதனால் தப்பிக்கவும் வழியில்லை. அடர்ந்த காட்டில், மரங்களை ஊடுருவியபடி கீழே விழும் ராய்ஸ் அதிர்ந்து போகிறான். காரணம், அவனைப் போலவே அடுத்தடுத்து பலரும் பொத் பொத்தென்று விழுகிறார்கள். ரஷ்ய ராணுவ வீரனில் ஆரம்பித்து மெக்சிகோ போதை மருந்து கடத்தல்காரன் வரை சகலரும் இதில் அடக்கம். எதற்காக கீழே விழுந்தோம்.... இது என்ன இடம்... எதற்கும் விடையில்லை. வேறு வழியில்லாமல் பரஸ்பரம் அறிமுகமாகி, அக்காட்டிலிருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள்.

ஆனால், அதற்கும் விழியில்லாமல் போகிறது. காட்டைச் சுற்றிலும் ஏகப்பட்ட பொறிகள். தப்பி தவறி அதில் கால் வைத்தால் அவ்வளவுதான். அம்பேல். அப்போதுதான் அனைவருக்கும் புரிகிறது, தாங்கள் இருப்பது பூமியில் அல்ல. வேறு ஏதோவொரு கிரகத்தில்....

ஒவ்வொருவரின் புத்தியும் கூர்மையடைகிறது. தப்பிக்க வேண்டும். என்ன செய்யலாம்? மூளையை பட்டைத் தீட்டுகிறார்கள். ஒவ்வொரு பொறியிலிருந்தும் தப்பிக்கிறார்கள். கண்ணில் ஒரு ஸ்பேஸ் ஷிப் தென்படுகிறது. அதன் மூலமாக பூமிக்கு செல்லலாம் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த ஸ்பேஸ் ஷிப்பில் வேட்டைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களை வீழ்த்தும்போதுதான் இவர்களுக்கு வேறொரு உண்மை புரிகிறது. பல நூற்றாண்டுகளாகவே பூமி உட்பட பிரபஞ்சத்திலுள்ள பல கிரகங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்டைகாரர்களை இந்த  கிரகத்துக்கு அழைத்து வந்து வேட்டை நாயைப் போல் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல... முகம் தெரியாத யாரோ, இப்படி அழைத்து வரப்பட்ட வேட்டைக்காரர்கள் பரஸ்பரம் வேட்டையாடுவதைப் பார்த்து தங்கள் வேட்டைத் திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.... ஏன் இப்படி செய்கிறார்கள்? யார் அந்த முகம் தெரியாத எக்ஸ்?

தொடரும் கேள்விகளுக்கு விடையாக நிலத்தில் தென்படும் தடங்களை பின்தொடர்ந்து செல்கிறார்கள். அப்போதுதான் ராய்ஸ் அந்த உண்மையை கண்டறிகிறான். தங்களை அகச்சிவப்பு கதிர்கள் வழியே கண்காணிக்கிறார்கள் என்று. உடனே தன் உடல் முழுக்க மணலை பூசிக் கொண்டு அந்த எக்ஸை எதிர்கொள்கிறான். மணல் பூசிக் கொண்டதால் அந்த எக்ஸால் ராய்சை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் புதிர் விலகுகிறது. இவர்களுடனேயே சுற்றும் அந்த மெக்சிகோ போதை கடத்தல் பேர்வழிதான் அனைத்துக்கும் காரணம். அவர்கள் இருக்கும் கிரகவாசிகளை கைக்குள் போட்டு மனிதர்களை வேட்டையாடுகிறான். ஏன் இப்படி செய்கிறான் என்பதற்கு சின்னதாக ஒரு பிளாஷ்பேக் உண்டு.

இறுதியில் எக்ஸ் உட்பட அனைத்து தடைகளையும் ராய்ஸ் தகர்க்கும்போது பொத் பொத்தென்று மீண்டும் மனிதர்கள் விழுகிறார்கள்.

இப்படி 106 நிமிடங்களில் ஏகப்பட்ட திருப்பங்களுடன் ஒரு ஆக்ஷன் மசாலாவை படைத்திருக்கிறார் நீம்ரோட் ஆன்டல். இவர்தான் இப்படத்தின் இயக்குனர். 'கண்ட்ரோல்' படம் மூலம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளிய திறமைசாலி. ஹீரோவாக நடித்திருக்கும் அட்ரியன் ப்ராட் மட்டும் லேசுப்பட்டவரா என்ன? 'தி பியானிஸ்ட்' திரைப்படம் மூலம் ஆஸ்கர் விருது வாங்கிய நடிகரல்லவா?

இப்படி திறமைசாலிகள் ஒன்று சேர்ந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே படமும் வாயைப் பிளக்கும் விதத்தில்தான் இருக்கும் என பலரும் சொல்கிறார்கள். அது உண்மையா? இந்த மாத இறுதியில் தெரிந்துவிடும். இந்தியாவில் அப்போதுதான் ரிலீஸ்.

கே.என்.சிவராமன்       
                                  

இந்திய ரூபாய்க்கு புதிய சின்னம்

இந்திய ரூபாய்க்கு புதிய சின்னத்தை மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்து அறிவித்துள்ளது. டாலர், பவுண்ட், யூரோ வரிசையில் இனி இந்திய ரூபாய் சின்னத்தால் குறிப்பிடப்படும்.

அமெரிக்கா டாலர், ஐரோப்பிய யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பான் யென் என வளர்ந்த நாடுகளின் கரன்சிக்கு சின்னங்கள் உள்ளன. அவை உலக அளவில் பிரபலமாக உள்ளன. அது போல, இந்திய கரன்சியான ரூபாய்க்கும் சின்னம் அறிவிக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார்.

சினத்தை வடிவமைத்து அனுப்ப மக்களுக்கு கடந்த பிப்ரவரியில் வாய்ப்பு தரப்பட்டது. அதற்கு ஏராளமானோர் தங்கள் படைப்பை அனுப்பினர். கடந்த சில மாதங்களாக அவை பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் 5 சின்னங்களை மத்திய அரசு இறுதிச் சுற்றுக்கு தேர்வானதாக கடந்த மாத இறுதியில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்திய கரன்சிக்கான சின்னத்தை மத்திய அமைச்சரவை நேற்று தேர்வு செய்து அறிவித்துள்ளது.

ஐஐடி மும்பை பட்டதாரியான சென்னையை சேர்ந்த உதய் குமார் என்பவர் அனுப்பியது இந்த சின்னம். அவருக்கு சன்மானமாக ரூ. 2.5 லட்சம் அளிக்கப்படுகிறது. இந்த சின்னத்தால் இந்திய ரூபாயின் வலிமை அதிகரிக்கும். சர்வதேச அளவில் பிரபலமாகும். 'ருப்யா' என்ற பெயரையே கொண்டுள்ள அண்டை நாடுகளில் இருந்து இந்திய ரூபாய் தனித்துவம் பெறும் என பொருளாதார நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

"இது நமது கலாசாரம், தனித்தன்மையை காட்டுகிறது. இந்திய, ரோம எழுத்துகளின் கலவை. இது மக்களை கவரும்" என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

தேசிய கொடி போன்றது

சின்னத்தை வடிவமைத்த தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் கூறுகையில், "தேசிய கொடியின் மூன்று வண்ணங்களை மனதில் வைத்து உருவாக்கினேன். மேலே இரண்டு கோடுகளும், நடுவே வெள்ளை நிறத்துக்கான இடைவெளியும் இருக்கும். எனது படைப்பு வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். இவர் சென்னையில் 1978ல் பிறந்தவர். நாட்டின் கரன்சி சின்னமாக உதய குமாரின் வடிவம் தேர்வானதால், அவரை தனது கல்லூரியின் துணை பேராசிரியராக கவுகாத்தி ஐஐடி நியமித்தது.                     

Thursday, July 15, 2010

'ஜெட் லாக்'கை சரிப்படுத்தும் மாத்திரை!


விமானத்தில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், நேர மாற்றத்தால் சரியான தூக்கம், பசி இல்லாமல் இரண்டொரு நாட்களுக்கு அவதிப்படுவார்கள். அது 'ஜெட் லாக்' எனப்படுகிறது. இதுநாள் வரை, 'ஜெட் லாக்' என்பது தவிர்க்க முடியாத அவஸ்தை, அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்றே கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, 'ஜெட் லாக்' பிரச்சினையை மாத்திரையால் தீர்க்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உடம்பில் 24 மணி நேர இடைவேளையில் ஏற்படும் 'சர்க்கேடியன் ரிதம்' பாதிப்படையும்போது 'ஜெட் லாக்' ஏற்படுகிறது. அப்போது உடம்பின் இயற்கைக் கடிகாரம் அதன் சமநிலை யை இழப்பதுதான் பிரச்சினைக்குக் காரணம்.

'ஜெட் லாக்' தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங் இன்ஸ்டிட்ïட் ஆய்வாளர்கள், 'சர்க்கேடியன் ரிதத்தை' சீராக வைத்திருப்பது 'கார்ட்டிசோல் ஹார் மோன்'தான் என்று கண்டுபிடித்திருக் கிறார்கள். 'கார்ட்டிசோல்' அளவானது காலை 8 மணிக்கு உச்சத்தில் இருக்கிறது என்றும், பின்னர் அது சீராகக் குறைந்து வந்து, நண்பகல் 12 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மிகவும் குறைந்தபட்ச நிலையை எட்டிவிடுகிறது என்றும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

'கார்ட்டிசோல் ஹார்மோனின்' உச்சநிலையையும், அது படிப்படியாகக் குறையும் நிலையையும் மாத்திரை மூலம் சரிப்படுத்தலாம். இதன் மூலம், உடம்பு, மனதின் இயற்கைச் சமநிலையைத் தொடர்ந்து பராமரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

'கார்ட்டிசோல் ஹார்மோனை' சீராக வைத்திருக்கும் மாத்திரையை உருவாக்க தற்போது தீவிர ஆய்வு நடக்கிறது. விரைவிலேயே அந்த மாத்திரையைத் தயாரித்து விடுவோம் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

இன்று கர்மவீரர் காமராஜரின் 107 வது பிறந்தநாள்


 
காமராஜ் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்
  • "திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன் - நேரு
  • “சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?"- தந்தை பெரியார்.
  • “காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”- இந்திரா காந்தி
  • "சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."- சிதம்பரம் சுப்ரமண்யம்
  • "காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- எம். ஜி. இராமச்சந்திரன்
  • "தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."- கலைஞர் கருணாநிதி  
  • "காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது." - ஏ.எம்.தாமஸ் 
  • “தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”- காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி  
 

Wednesday, July 14, 2010

'சுனா'வின் மரணம் ஒரு வாசகம்

 
'நாயிற்கடையாய்.........'
மனிதனின் இழிநிலைக்காய்
மணிவாசகன் யாசித்த நீண்ட வரிகளிவை 
அவன் சிவபக்தனாயினும் 
வரிகளில் 'மனிதம்' இல்லை 
என்பது என் வாதம்
'நெற்றிக்கண் திறப்பினும்.......'
கவிஞனின் வாரிசு நான்.
 
'சுனா' 
என் அன்பிற்குரியவளின்
வளர்ப்புச் செல்லம்
நாய் எனும் இனத்தில் 
அவள் ஒரு 'மகாராணி'
எனக்கும் கூடத்தான் !
 
ஆயிரம் கதைபேசும் 
அவள் குரைப்பொலியும் 
ஆட்டும் வாலும்
உருண்டைக் கண்ணை உருட்டி 
கிறங்கடிக்கும் அவள் பார்வை 
 
முதுமை அவளை துரத்தினாலும்
வாழ்வின் முழுமையும்
முடித்த பெருமை அவளுக்கு 
 
'ஆறாம் அறிவு' என பீற்றிக்கொள்ளும்
மனிதனுக்கே புரியாத 
'ஏழாம் அறிவு' உண்டு அவளுக்கு
 
ஞானிகளின் சமாதிநிலையை 
ஒத்திருந்தது அவள் மரணம் 
'மரண வேதனை' யாருக்கும் உண்டு 
அதனால் சற்றுத்துடித்துதான் போனாள் 
 
'சுனா எனக்கு பயமாயிருக்கு
எழுந்திரு செல்லம்'   
இது வளர்த்தவளின் அழுகை 
 
மரணத்திலும் 
வளர்த்தவளின் மனசு உணர்ந்து  
உடற்துடிப்பை நிறுத்தி
அமைதி காத்தவள் 
மெல்லெனத் தன் ஆவி நீத்தாளாம்
 
மணிவாசகனே
புரிந்து கொள்ளும் .....!
நன்றி உணர்வு மட்டுமல்ல
'மனிதநேயம்' மனிதர்களைவிட
சற்று அதிகம் உண்டு அவைக்கு !
இனிப்பாடும் இப்படி.....
 
'நாயிற்கிணையாய் சிறந்த அடியேற்கு 
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே'  
 
குகன் 

Saturday, July 10, 2010

போராடி வென்ற எடிசன்!

விஞ்ஞானிகளிலேயே வியக்க வைப்பவர் எடிசன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் இவர். அவற்றில் முக்கியமானவை, மின்விளக்கு, 'போனோகிராப்' எனப்படும் இசைத்தட்டை ஒலிக்கும் பெட்டி, தந்தி, சினிமா புரொஜெக்டர் போன்றவை. எல்லாமே மக்களுக்கு மிகவும் பயன்படுபவை. பின்னர் அவர்களின் வாழ்வில் ஒன்றாகக் கலந்துபோனவை.

இப்படி எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கிய எடிசன், முறையான பள்ளிப் படிப்பு பயிலாதவர் என்பது ஆச்சரியமான விஷயம். பள்ளிப் படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பதற்கு இவர் ஒரு முக்கியமான சான்று. சுகவாசியாக இல்லாமல் தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டிச் சாதித்தால்தான் வரலாற்றில் நிலைபெற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் எடிசன்.

உலகத்தையே புரட்டிப் போட்ட அறிவுத் திறமை இருந்தபோதும் எண்ணற்ற கஷ்டங்களை, தொந்தரவுகளைச் சந்தித்தார் எடிசன்.

மின்விளக்கைக் கண்டுபிடித்ததற்காக எடிசனை உலகம் பாராட்டவில்லை. மாறாகப் பல வழக்குகளை அவர் சந்திக்க வேண்டி வந்தது. மின்விளக்கு வந்துவிட்டால் வாயுவால் எரியும் விளக்குகளின் வியாபாரம் நொடித்துவிடும் என்று அத்தொழில் முதலாளிகள் பயந்தனர். அவர்களின் பின்னணியில், எடிசன் மீது பல வழக்குகள் போடப்பட்டன. எடிசனிடம் பணிபுரிந்த சிலரே அவரை விட்டு விலகி போட்டியாளர்களிடம் சேர்ந்து கொண்டனர். எடிசனின் ரகசியங்களை அவர்கள் போட்டுக் கொடுக்க, போலியாகப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. அப்படி, கெப்பல்ஸ் என்ற ஜெர்மானியர் போலி மின்விளக்குகளைத் தயாரித்தார். தானே முதலில் மின்விளக்கைக் கண்டுபிடித்ததாகத் தம்பட்டம் அடித்தார். எடிசன் மீது வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கு முடிய 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரலாற்றில் நிலைகொண்டிருப்பவர் எடிசன்தான், கெப்பல்ஸ் அல்ல.

யானையின் மனோபாவம்

ஆற்றலின் அடையாளம். இருந்தாலும் சரி, இறந்தாலும் சரி, யானையின் வாழ்க்கை மதிப்புமிக்கது. மதிப்புமிக்க இந்த யானைக்கு ஒரு மனோபாவம் இருக்கிறது. அதைத்தான் யானையின் மனோபாவம் என்கிறார்கள்.

இது என்ன புதிதாக இருக்கிறது, புரியாத புதிராகவும் இருக்கிறது என்கிறீர்களா?

எல்லாவற்றிற்கும் காரணம் மனம்தான். மனத்தின் பலம்தான்.

"நீ உன்னைப் பலமுள்ளவன் என்று நினைத்தால் பலமுள்ளவன் ஆகிறாய். பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகிறாய்'' என்றார் இளைஞர்களின் விடிவெள்ளி விவேகானந்தர்.

ஆம், பலமும் பலவீனமும் அவரவர் மனதில்தான் இருக்கின்றது. அது சரி, யானையின் மனோபாவம் என்றீர்களே, அது என்ன என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

குட்டியாக இருக்கும் யானையைப் பிடித்து வந்து அதைப் பெரிய இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டுப் பழக்குவார்கள். அப்போது அந்தக் குட்டி யானை தன் பலம் கொண்ட மட்டும் சங்கிலியை இழுத்து இழுத்து தப்பிச் செல்ல முயற்சிக்கும். அந்த முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் சங்கிலி பலமாக இருப்பதால் அதன் முயற்சி பலிக்காது.

குட்டி யானை வளர்ந்து பெரிய யானை ஆனதும் அதை கொஞ்சம் வலுவான கயிற்றால்தான் கட்டியிருப்பார்கள். அப்போது அது நினைத்தால் மெதுவாக இழுத்தாலே கயிறு அறுந்து விடும். ஆனால் அந்த முயற்சியில் யானை இறங்காது. அதற்குக் காரணம் அந்த யானையிடம் ஏற்பட்டிருக்கும் மனோபாவ மாற்றம்தான்.

இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த காலத்தில் யானை அடைந்த தோல்வி அதன் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். 'அந்தக் காலத்தில் செய்யாத முயற்சியா? எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பவே முடியலையே... இப்பவா முடியும்?' என்று அது நினைப்பதால் கயிற்றால் கட்டியிருக்கும்போது கூட இரும்புச்சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதாக நினைத்து அதற்குக் கட்டுப்பட்டு இருக்கும். அங்கேயே நின்று அசைந்து கொண்டிருக்கும். இந்தத் தவறான மனோபாவத்தைத்தான் 'யானையின் மனோபாவம்' என்கிறார்கள்.

இனிய இளைஞனே!

நம்மில் பலரும் திறமைசாலிகளாக இருந்தும் சாதனையாளர்களாக வளராமல் இருப்பதற்கு இந்த 'யானை மனோபாவமும்' ஒரு காரணம். சிலருக்கு எதையாவது செய்ய வேண்டும், சாதனையின் சிகரத்தைத் தொட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நம்மால் முடியாது. இதுவரை செய்யாத முயற்சியா, நமக்கு இது ஒத்து வராது. நேரம் வந்தால் பார்க்கலாம் என்பன போன்ற சாக்குப்போக்குகளைச் சொல்லிச் சொல்லி பல செயல்களைச் செய்யாமலேயே விட்டுவிடுகிறார்கள். இந்த எண்ணத்தை கைவிட்டாலே போதும், முன்னேற்றப் பாதையில் முன்னோக்கிச் செல்ல முடியும்.

முன்னோக்கி நகர்வதே வாழ்வின் வளர்ச்சி. ஓடுகின்ற நதியைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். எந்த நதியாவது தன் பயணத்தில் திரும்பிப் போவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஓய்வெடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நதியின் பயணத்திலும் தடைகள் உண்டு. சோதனைகள் இல்லாமல் சாதனைகள் சாத்தியமில்லை. தடைகளைத் தயக்கமின்றி கடந்து புதுப் புது வழிகளை அது தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. நதி தோன்றிய இடத்திலேயே எப்போதும் தங்கி விடுவதில்லை. அது முன்னோக்கியே நகர்கிறது, அதனால் வளர்கிறது. அந்த வளர்ச்சி, இலக்கை எட்டும் வரை தொடர்கிறது.
பேராசிரியர் க.ராமச்சந்திரன் 

Friday, July 9, 2010

பத்திரிக்கைச் செய்திகள்

கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகம் மூடப்பட்டது தூதரும் திரும்ப பெறப்பட்டார்

லங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய ஒரு விசாரணை குழுவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நியமித்துள்ளார். இந்த குழு இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை மந்திரி விமல் வீரவன்சா ஆதரவாளர்கள் நேற்று 3-வது நாளாக கொழும்பு நகரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும், விமல் வீரவன்சா நேற்று ஐ.நா. அலுவலகம் முன்பு, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை மூடுவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நேற்று இரவு அறிவித்தார். மேலும், கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரை திரும்ப பெறுவதாகவும் கூறினார்.

ஐ.நா. அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்று வரும் போராட்டங்களை இலங்கை அரசு தடுக்க தவறி விட்டதாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பான் கி மூன் கூறினார்.

************************************************************************

ஐ.நா. விசாரணை குழுவை எதிர்த்து இலங்கை மந்திரி, சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்


லங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி மக்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. எனவே அப்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றியும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்து உள்ளார்.

ஆனால் இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஐ.நா. நிபுணர் குழு இலங்கை வந்து விசாரணை நடத்தினால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும் என்று கூறி, ஐ.நா. விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க அதிபர் ராஜபக்சே அரசு மறுத்து வருகிறது.

இந்த நிலையில், ஐ.நா. விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை வீட்டு வசதித்துறை மந்திரி விமல் வீரவன்சா போராட்டத்தில் குதித்து உள்ளார். விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீரவன்சாவின் ஆதரவாளர்கள் கொழும்பு நகரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த முற்றுகை போராட்டம் 3-வது நாளாக நேற்று நீடித்தது.

விசாரணை குழுவுக்கு எதிராக மந்திரி வீரவன்சா நேற்று திடீரென்று ஐ.நா. அலுவலகம் அருகே சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரதத்தை தொடங்கும் முன் புத்த சாமியார்களிடம் அவர் ஆசி பெற்றார்.

அப்போது பேசிய மந்திரி வீரவன்சா கூறுகையில்; ஐ.நா. விசாரணை குழு கலைக்கப்படும் வரை தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்றும், இலங்கைக்கு எதிராக பாகுபாட்டுன் செயல்படுவதில்லை என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இவர், அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆவார்.

பான் கி மூன் கருத்து

இந்த நிலையில், நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், போரின் போது இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதில் உள்ள பொறுப்பு ஆகியவற்றை பற்றி அறிந்து அது தொடர்பான யோசனைகளை தெரிவிக்க நிபுணர் குழுவை தான் அமைத்து இருப்பதாக கூறினார்.

ஐ.நா. செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறுகையில்; கொழும்பு நகரில் உள்ள ஐ.நா. அலுவலக வளாகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று வீரவன்ச உறுதி அளித்து இருப்பதாக தெரிவித்தார்.

ஹாலிவுட் ட்ரெய்லர்

விடுங்கள். எதுவுமே இப்படத்தில் இல்லை. பொறி பறக்கும் வசனங்கள் இல்லை. ப்ரேமுக்கு ப்ரேம் பிதுங்கி வழியும் கம்ப்யூடர் கிராபிக்ஸ் இல்லை. கார்கள் பறக்கவில்லை. விமானத்திலிருந்து தவறி விழும் கதாநாயகியை காப்பாற்ற ஸ்பைடர் மேன் இல்லை. அமெரிக்காவை அழிக்க ரஷ்யா முயற்சி செய்யாததால், ஜேம்ஸ் பாண்டுக்கும் படத்தில் வேலை இல்லை.

இப்படி இல்லையென்று பட்டியலிட 'குரோன் அப்ஸ்'  Grown Ups படத்தில் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. இந்த ஆயிரத்தை குறித்தும் மில்லியன் டாலர் அளவுக்குக் கூட கவலைப்படாமல் ஒரேயொரு 'இருக்கும்' விஷயத்தை ப்ரேம் ப்ரேமாக காண்பித்து நம் கண்களில் நீரை வரவைத்திருக்கிறார் டென்னிஸ் டியூகன். அது நகைச்சுவை.

யெஸ், சிரிக்க வைப்பதையே தனது இம்பிரிண்ட்டாகக் கொண்டிருக்கும் டென்னிஸ் டியூகனின் சமீபத்திய ஹாலிவுட் படம் 'குரோன் அப்ஸ்'. சக்கைப்போடு போட்ட 'ப்ராப்ளம் சைல்ட்', அதகளம் செய்த 'சேவிங் சில்வர்மேன்' படங்களின் பிரம்மா இவரேதான்.

செண்டிமெண்ட் பிழியப் பிழிய சொல்ல வேண்டிய கதையை எடுத்துக் கொண்டு, ஜஸ்ட் லைக் தட் காமெடி கொத்து பரோட்டா போட்டிருக்கிறாகள்.
மத்திய வயதில் ஏகப்பட்ட டென்ஷனுடன் வாழ்கிறான் லெனி. குடும்பம், குழந்தைகள் அது தொடர்பான சிக்கல்கள், போராட்டங்கள், மன அவஸ்தைகள் என நாட்கள் ஊர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்தத் தகவல் வருகிறது. பள்ளி நாட்களில் லெனி, ஒரு பேஸ்கட்பால் ப்ளையர். அப்போது அவனுக்கு பயிற்சியாளராக இருந்தவர் இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள லெனி செல்கிறான். அங்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பள்ளிக்கால நண்பர்கள் சிலரை சந்திக்கிறான். அனைவருமே பேஸ்கட்பால் டீமில் இருந்தவர்கள். இறுதிச் சடங்கு முடிந்ததும் நண்பர்கள் உரையாடுகிறார்கள். வார விடுமுறையில் சந்திக்க முடிவு செய்து அதேபோல் ஒன்றுக் கூடவும் செய்கிறார்கள். அந்த ஒன்றுக்கூடலில் அனைவரது வயதும் உதிர்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் சுருண்டிருக்கும் குழந்தைத்தனம் விழித்துக் கொள்கிறது. விஸ்வரூபம் எடுக்கிறது. குழந்தைகளைப் போல் ஆட்டம், பாட்டம் என விடுமுறையை கொண்டாடுகிறார்கள்.

இந்த ஒன்லைனை எடுத்துக் கொண்டு 102 நிமிடங்களில் ஒரு நகைச்சுவை ஜுகல்பந்தியை நடத்தி இருக்கிறார்கள். முதல் காட்சியின் முதல் ஷாட்டில் ஆரம்பிக்கும் சிரிப்பு, இறுதிக் காட்சியின் இறுதி ஷாட் வரை தொடர்வது ஆச்சர்யம்.
  
இந்த ஆச்சர்யத்தை சாத்தியமாக்கியவர் ஆடம் சான்ட்லர். இவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர் ப்ளஸ் ரைட்டர். அத்துடன் லெனியாக நடித்திருப்பவரும் இவரே. அமெரிக்க நகைச்சுவை நடிகரான இவர் ஏற்கனவே 'பில்லி மேடிசன்', 'ஹேப்பி கில்மோர்'. 'பிக் டேடி', 'மிஸ்டர் டீட்ஸ்' ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தவர். அப்படங்களின் திரைக்கதையை எழுதியவர். ஒரு வசனத்தை கவனிக்க மறந்தாலும் ஒரு நகைச்சுவையை தவறவிடுவோம். அந்தளவுக்கு சுருக்கமாகவும், சுருகென்றும் சிரிக்க வைக்கும் வித்தை ஆடம் சான்ட்லரின் பேனாவுக்கு உண்டு.

4 வயதிலும் பால் குடிக்கும் குழந்தை, தன்னை விட வயதான பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட மசாஜ் தெரபிஸ்ட், வேலையில்லாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழும் மனிதன், மாமியார் டார்ச்சரால் அவதிப்படும் ஆண்... என ஏகப்பட்ட கதாப்பாத்திரங்கள். ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சம்பவங்கள் அக்மார்க் நகைச்சுவை வெடிகள்.

தவிர சல்மா ஹெய்க் இப்படத்தில் நீச்சல் உடையில் வருவது போனஸ்.

ஜாலியாக படம் பார்க்க நினைப்பவர்களுக்கு சரியான ட்ரீட். படத்தில் மெசேஜ் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.....
சாரி இப்படத்தை நீங்கள் பார்க்காமல் இருப்பதே ஆடம் சாண்ட்லர் - டென்னிஸ் டியூகன் கூட்டணிக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும்.

கே.என்.சிவராமன்.                               

Thursday, July 8, 2010

மரங்களின் ரவுடி

தனது சக மனிதர்களை அடித்து உதைத்து அவனிடம் இருக்கும் பொருட்களை பிடுங்கி, தான் மட்டும் சுகமாக வாழும் மனிதனை ரவுடி என்கிறோம். இந்த ரவுடி தன்னைத்தவிர வேறு யாரையும் தலையெடுக்க விடமாட்டான்.

மனிதர்களில் மட்டுமல்ல, தாவரங்களிலும் இப்படிப்பட்ட ரவுடிகள் உண்டு. இதுபோன்ற தாவரங்களைத் தப்பித்தவறிக் கூட வளர்த்துவிடாதீர்கள் என்கிறது அமெரிக்க தாவரவியல் பூங்கா. வளர்க்கக் கூடாத நச்சு மரங்கள் என்று தனிப்பட்டியலே வெளியிட்டுள்ளது. அதில் முன்னணியில் இருப்பது முள்மரம் எனப்படும் காட்டுக்கருவேல மரம் (வேலிக்காத்தான்).

ராமநாதபுரம், விருதுநகர் போன்ற வறட்சியை பிரதானமாக கொண்ட மாவட்டங்களில், இந்த மரங்கள் அதிகமாக இருக்கின்றன. எந்த வறட்சியிலும் இந்த மரங்கள் வாடுவதில்லை. நிலத்தின் அடி ஆழத்தில் இருக்கும் நிலத்தடி நீரே இல்லை என்றால் கூட இது கவலைப்படாது. காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஆற்றல் இந்த மரத்திற்கு உண்டு.

இதனால் காற்று மண்டலம் வறண்டு இந்தமரம் இருக்கும் பகுதிகளில் வறட்சி தாண்டவமாடும். இது வளரும் நிலப்பகுதிகளில் வேறு எந்த தாவரமும் வளராது. நிலத்தடிநீரும் விஷத்தன்மையுடன் மாறிவிடுமாம்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்திற்கும் பயன்படாது. இதில் கால்நடைகளை கட்டிவைத்தால், அது சினைபிடிக்காது. மலடாகிவிடும். அப்படி மீறி கன்று ஈன்றாலும் அது ஊனத்துடன் பிறக்கும். இது வளரும் பகுதியில் வேறு எந்தச் செடியும் வளராது.
 
இந்த வேலிகாத்தான் மரங்கள் மிகவும் குறைவாகவே ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. மாறாக கரியமிலவாயுவை உற்பத்தி செய்து காற்றுமண்டலத்தில் நச்சுத்தன்மையை அதிகமாகக் கலக்கின்றன.

ஆலமரமும், அரசமரமும் மனதுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கும். பல்வேறு உயிரினங்களும், பறவைகளும் அவற்றைச் சார்ந்து வாழும். ஆனால், இந்த கருவேல மரத்தில் எந்த பறவையும் கூடு கட்டாது. பறவைகள் மட்டுமல்ல, மனிதர்களின் மனங்களையும் கூட, இந்த மரம் மாற்றி, வன்முறை எண்ணத்தை உருவாக்கும் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

கேரளாவில் இந்த ரவுடி மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால் கேரளாவில் இந்த மரத்தை எங்குமே பார்க்கமுடியாது. ஆனால் தமிழகத்தில் குறிப்பாக வறட்சி மாவட்டங்களில், இந்த மரம் நீக்கமற நிறைந்திருக்கிறது. பல இடங்களில் அடுப்புகரிக்காக இந்த மரத்தை வளர்க்கின்றனர்.

சுற்றுப்புறத்தில் புல், பூண்டைக் கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள்மரத்தை வெட்டிவீழ்த்துவோம், மண்ணின் மாண்பைக் காப்போம். ரவுடி மரத்திற்கு விடை கொடுப்போம்            

சாதிப்பதும் சறுக்கி விழுவதும்...

கடுமையான மன அழுத்தம் காரணமாகவே மன உளைச்சல் உண்டாகிறது. உயிருக்குயிராக நேசித்தவர்கள் திடீரென பிரியும் போது தான் மனம் அதிகமாக பாதிப்படைகிறது. இதன் பக்க விளைவாக உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது.

காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, பொருளிழப்பு, வேலை இழப்பு, பதவி இழப்பு, கட்டாய ஓய்வு, எதிர்பார்ப்புக்கு மாறான நீதிமன்ற தீர்ப்பு, எதிர்பாராமல் நேரும் விபத்துக்கள், வியாபாரத்தில் நட்டம், அறுவை சிகிச்சைகள் போன்ற நிகழ்வுகள் எல்லாம் மனஉளைச்சலை உண்டாக்குபவை. இவற்றை அனுசரித்து ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

இயற்கையாக நடைபெறும் செயல்களை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் தீர்வு கிடைத்து விடாது. அவற்றால் உண்டாகும் துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனம், உடல் சோர்வடையும் சூழலில் பணிபுரிபவர்கள் அவற்றைப் போக்குவதற்கு தேவையான பிராணாயாமம், தியானம், யோகாசனம் போன்ற பயிற்சி முறைகளில் ஈடுபடலாம்.

பத்திரிக்கைச் செய்திகள்


இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று டெல்லி வந்துள்ள இலங்கை எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இலங்கையை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி.க்கள் சுரேஷ் பிரேமசந்திரன், சேனாபதி ராஜா உள்பட 6 பேர், அதன் தலைவர் சம்பந்தன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை டெல்லி வந்தனர். மத்திய அரசின் அழைப்பின் பேரில் அவர்கள் டெல்லி வந்துள்ளனர்.

மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள், வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோரை அவர்கள் சந்தித்து, இலங்கையில் தற்போதைய தமிழர்களின் நிலவரம் குறித்து விவரித்தனர். உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் அவர்கள் சந்தித்து பேச உள்ளனர்.

நேற்று சம்பந்தன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் வாழும் தமிழர்களின் உண்மை நிலவரம் குறித்தும், இதுவரை இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் மத்திய அரசு எங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளது. இன்று வரை நாங்கள் சந்தித்த மந்திரி பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை செயலாளர், சி.பி.எம், சி.பி.ஐ. கட்சிகளின் தலைவர்களிடம், "இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டோம்.

உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் சந்தித்து எங்கள் கோரிக்கையினை வலியுறுத்த உள்ளோம்.

இலங்கையில், அகதிகள் முகாம்களில் தற்பொழுது 55 ஆயிரம் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரையும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதாக இலங்கை அரசு அழைத்துச் சென்று, தற்காலிக முகாம்களில் தங்க வைத்து உள்ளது. எனவே இந்திய அரசு, இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான வீடு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர இலங்கை அரசு வற்புறுத்த வேண்டும்.

இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை எம்.பி.க்கள் தன்னை சந்தித்தது குறித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

"பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எங்கள் கட்சி இலங்கை தமிழர்களுக்காக போராடும். தமிழர் பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்க்கும்படி இலங்கை அரசை வற்புறுத்துமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்வோம். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி, ஐக்கிய நாட்டு சபை விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, ஐக்கிய நாட்டு சபையில் இந்தியா வற்புறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வற்புறுத்துவோம்''

இவ்வாறு டி.ராஜா கூறினார்.

Wednesday, July 7, 2010

இன்று பிறந்தநாள்


அண்மையில் திருமணம் நடைபெற்ற, இன்று பிறந்தநாள் காணும் இந்திய அணியின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மேலும் பல வெற்றிகளைப் பெற்று சாதனை படைக்க எங்கள் வாழ்த்துக்கள். 

Saturday, July 3, 2010

வாழ்க்கை வெளிச்சம்

'எது உலகில் அதிகம் புரிந்து கொள்ளாமல் போகிறது?'
உலகில் அதிகம் புரிந்துக் கொள்ளபடாமலே போவது திருமணமாகி பத்து வருடங்களான பிறகு பெண்ணுக்குள் உருவாகும் தனிமையும் வெறுமையுமே ஆகும். கணவன், குழந்தைகள், வீடு என்று இருந்த போதும் தான் எதையோ இழந்துவிட்டதை போலவும், தான் நினைத்தது போல வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானது இல்லை என்று பெண்கள் உணரும் தருணம் உருவாகிறது.

அப்போது குழந்தைகளை கவனிப்பது, சமைப்பது, கணவனோடு படுக்கையை பகிர்வது உள்ளிட்ட யாவும் அனிச்சை செயல்களாகிவிடுகின்றன. மனது எதற்கோ ஏங்கத்  தொடங்குகிறது. அன்றாட வாழ்வு அபத்தமானதாகவும், அர்த்தமற்ற செயலொன்றினை தொடர்ந்து செய்து வருவதை போலவும் உணரத்துவங்குகிறது. இதை பற்றி யாரிடமும் பேசிக்கொள்வதும் இல்லை. தன்னை மீறி அந்த மன அவஸ்த்தைகளை வெளிபடுத்தும் போது கூட அது தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுவிடுகிறது.

உண்மையில் திருமணம் தரும் கிளர்ச்சிகளும், கனவுகளும் எளிதில் வடிந்துவிடக் கூடியவை. அதன் பிறகு நீளும் நடைமுறை வாழ்க்கையை உரசலில்லாமல் கொண்டு போவதற்கு சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுத்தலும், வழியின்றி ஏற்றுக் கொள்ளுதலுமே சாத்தியங்களாக உள்ளன. இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.

வழிகாட்டிகளுக்கு வணக்கம் செய்வோம்!

வாழ்க்கை, பயணங்களால் ஆனது...

பயணங்களின்போது பலவிதமான சந்திப்புகள் நிகழ்கின்றன. சில சந்திப்புகள் சுகமானவை. சில சந்திப்புகள் சோகமானவை. சந்திப்புகள் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும், அகலப்படுத்தும்.

நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறபோது பொதுவாக வணக்கம் தெரிவிக்கின்றோம். இந்த வணக்கம் சொல்லும் விதம், இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

ஜப்பானியர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றபோது, "வாழ்க்கை எனும் நதிக்கு வெற்றி'' என்று தொடங்கு கிறார்கள். அதனால்தான் அவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி அடைகிறார்கள்.

கர்நாடகத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கிறபோது வணக்கம் கூறிய உடன், "ஊட்டா ஆயித்தா?'' என்று கேட்பார்கள். 'சாப்பிட்டீர்களா?' என்பதுதான் அதன் அர்த்தம்.

ஆங்கிலேயர்கள், "காலை வணக்கம், உங்கள் உடல் நலம் எப்படி?'' என்பார்கள்.

எகிப்து நாட்டவர்கள், "நீங்கள் எவ்வளவு வியர்வை விடுகிறீர்கள்?'' என்று கேட்பார்கள்.

சீனர்கள், "உங்கள் வயிறு எப்படி இருக்கிறது? உணவு உட்கொண்டீர்களா?'' என்பார்கள்.

இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக நலம் விசாரிக்கப்படுகிறது.

தமிழர்கள் இருகரம் கூப்பி, "வணக்கம், நலமா?'' என்று சந்திப்பைத் தொடங்குகின்றனர். பரபரப்பான வாழ்க்கைப் பயணத்தில் நிற்பதற்கும், பேசுவதற்கும் நேரமில்லை. சட்டென்று நகர்ந்து விடுகின்றனர். இந்த ஓட்டத்தில்தான் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கின்றது.

Friday, July 2, 2010

சுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை


வடக்கிலும், கிழக்கிலும் இராணுவ ஆட்சியை வலுப்படுத்துவதற்கான முனைப்புகள் அதிகரித்து வருகின்றன. இராணுவ ஆட்சியை வலுப்படுத்துவதன் மூலம் தமிழின அழிப்பை வேகப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி புலிகளின் இராணுவ நடவடிக்கைகளைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது.     புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் கடந்த ஆண்டு மே மாதத்தின் இறுதிப்பகுதியில் வடக்குக் கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதிகள் நிர்மூலமாக்கப்பட்டன. 40,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் குரூரமாகக் கொன்றொழிக்கப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான விதவைகளும் பலநூறு அநாதைச் சிறுவர்களும் உருவாக்கப்பட்டனர். பல்லாயிரம் தமிழ் மக்கள் வயது, பால் வேறுபாடின்றி ஊனமாக்கப்பட்டனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டன. பல வைத்தியசாலைகளும் ஏராளமான பாடசாலைகளும் சிதைக்கப்பட்டன.
இவ்வரவு செலவுத் திட்டமானது தென்னிலங்கையைப் பொறுத்தவரை கட்சி ஆதரவுத்தளம் என்ற பாரபட்சத்துடன் தயாரிக்கப்பட்டதாகவும் வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை நிகழ்த்தப்பட்ட மேலதிக பட்டியலிடப்பட்ட அழிவுகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டுவிடக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டுடனும் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எமது தாயகத்திலேயே எமது அரசியல் பொருளாதார கலாசார உரிமைகளைப் பறித்து  எமது தனித்துவத்தை அழித்து  பௌத்த, சிங்கள மேலாதிக்கத்தை அங்கு நிலை நாட்டுவதற்கான வக்கிரப் போக்கை இது வெளிப்படையாகக் காட்டி நிற்கின்றது.
எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும்  இத்தகைய போர் அழிவின் பின்னரான வரவு  செலவுத் திட்டமானது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள், அந்த மக்கள் தமது சொந்த வீடுகளில் மீண்டும் வாழ வைக்கும் திட்டங்கள், அந்த மக்களின் வாழ்வாதாரங்களை மீளுருவாக்கும் திட்டங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீதிகள் மற்றும் அரச நிர்வாகக் கட்டடங்கள் உட்பட்ட உட்கட்டமைப்புகளை மீள நிர்மாணம் செய்தல் ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டிருக்கும்.

உங்கள் நட்பு எந்த பூ?


எல்லாவற்றையும் வகைப்படுத்தி லேபிள் ஓட்டும்போது, ஃ பிரென்ட்ஷிப்பை மட்டும் விட்டுவைக்கலாமா?

'ஆத்மார்த்த நட்புக்கு'க்குத்தான் முதலிடம். 'என் தோழிக்கிட்ட எந்த விஷயத்தையும் ஷேர் பண்ணிக்கலாம். என்னோட எல்லா ரகசியங்களும் அவளுக்குத் தெரியும்' என சொல்லக் கூடாத', சொல்ல 'முடியாத' அனைத்தையும் யாரை நம்பிப் பகிர்ந்துகொள்கிறீர்களோ, அதுவே 'ஆத்மார்த்த நட்பு'!

'அக்கொயின்டன்ஸ் நட்பில்' - பார்டிகளுக்குச் செல்வது, சைட் அடிப்பது எனக் கொண்டாட்டங்கள் மட்டுமே பிரதானம். 'மனசு கஷ்டமா இருக்கு, அப்பாவுக்கு ஹை பிரஷர்!' போன்ற சொந்த சோகங்களைப் பகிர்ந்துகொள்ளாது!

'ஸோல் மேட்' - இதயத்துக்கு நெருக்கமான நட்பு. 'எனக்கு எல்லாம் அவன்(ள்)தான்' என்ற மன தைரியமும்; 'என்ன தில்லாலங்கடி வேலை செஞ்சாலும் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க முடியாது' என்ற நேச இறுக்கமும் இதன் ஸ்பெஷல்!

'காரியவாத நட்பு' - உலகம் முழுவதும் அறியப்பட்ட வார்த்தைதான். உணர்ச்சிகளை, குறிப்பாக பாலியல் தேவைகளைப் பரிமாறிக் கொள்ள மட்டுமே இந்த நட்பு. அதைத் தாண்டிய புரிதலும், அன்பும், பிணைப்பும் இந்த உறவில் அதிகம் இருக்காது!

'பாஸ்டன் மேரேஜ்' - இந்த வார்த்தை 19, 20 -ம் நூற்றாண்டுகளில் உருவானது. உடல் தேவையைத் தவிர்த்து, மற்ற அனைத்துவிதமான பொருளாதார, மாரல் சப்போர்ட்டுக்காக இரு பெண்கள் சேர்ந்து வாழ்வார்கள். ஒரு ஆணின் சப்போர்டைத் தவிர்பதுதான் இவர்களின் நோக்கம்!

'ரூம்மேட்' நட்பு எனப்படுவது காதல், நட்பு எதுவுமில்லாமல் ஓர் அறைக்குள் இருவராகச் சேர்ந்து இருப்பது. இதில் பெரும்பாலும் உணர்வுப் பரிமாற்றங்கள் இருக்காது.

'கற்பனைவாத நட்பு' - குழந்தைகளின் கற்பனையில் அவர்கள் கூடவே எப்போதும் ஒரு நண்பன் வருவான். விளையாடுவான், அடிப்பான், கிள்ளுவான் என அவர்களது மனதுக்கு மட்டுமே தெரிந்த, அவர்கள் அதிகம் ரசிக்கிற நட்பு அது!

'ஆன்மிக நட்பு' - கருத்து வேறுபாடு உடைய இருவர் ஒரு பெரும் ஆன்மிக நோக்கத்துக்காக இணைந்து பணியாற்றுவது. இவர்களை இணைப்பது ஆன்மிகம் மட்டுமே!
           

ஹாலிவுட் டிரெய்லர்

ரே வரியில் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்ல முடியும். 'ரகசிய உளவாளிகளின் உலகம் சுற்றும் சாகசங்கள்'. இந்த ஐந்து வார்த்தைகளின் கலவையைத்தான் 110  நிமிடங்கள் தடதடக்கும் ஹை ஸ்பீட் ரோலர் கோஸ்டர் பயணமாக மாற்றியிருக்கிறார்கள். நண்பர்கள் எதிரிகளாகிரார்கள். எதிரிகள் நண்பர்களாகிறார்கள். உளவாளியாக இருந்தவன் ஆயுதக்கடத்தல் வியாபாரியாகி, குரூர புன்னகையுடன் பேரம் பேசுகிறான். உதவி செய்ய வந்த நண்பன், கொலை செய்யப்படுகிறான். வெகு முக்கியமான ஆயுதத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி கடத்தப்படுகிறான். தன் காதலியை காதலன் கொல்லப் பார்க்கிறானா... காப்பாற்றுகிரானா?

'நைட் அண்ட் டே' (Knight and Day) ஹாலிவுட் படத்தின் கதையும் இதுதான். திரைக்கதையும் இந்தக் கேள்விகளை சுற்றித்தான்.

முதல் காட்சியிலேயே படம் தொடங்கிவிட வேண்டும் என கமர்ஷியல் படங்களுக்கான வெற்றி சூத்திரத்தை கண்டுபிடித்த புண்ணியவான், இப்படத்தை பார்த்தால் சந்தோஷப்படுவான். படம், இப்படித்தான் தொடங்குகிறது.

சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஜூன் ஹேவன்ஸ் விமான நிலையம் செல்கிறாள். அவளுடன் பயணம் செய்யப் போகும் ராய் மில்லர் மீது அவளுக்கு ஈர்ப்பு வருகிறது. விமானத்தில் ஏறி அமர்ந்ததும் ஹேவன்ஸ் ஓய்வறைக்கு செல்கிறாள். திரும்பி வருவதற்குள் அந்த விமானத்தில் இருந்த பைலட் உட்பட அனைவரும் கொல்லப்படுகிறார்கள். எந்த ஆண் மீது ஹெவன்ஸுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதோ, அந்த ராய் மில்லர்தான் இந்தக் காரியத்தை செய்தது. எதற்காகத் தெரியுமா? ஹெவன்சை கடத்த. ஏன் இந்த கடத்தல்? உண்மையில் ராய் மில்லர் யார்?

நகத்தை கடித்தப்படி பர ரவென டேக் ஆஃப் ஆகும் இந்த ஆரம்பம். இறுதிவரை தொடர்வது ஆச்சர்யம். ஜூன் ஹெவன்ஸாக நடித்திருப்பவர் கேமரூன் டயஸ். அவரது காதலன் ராய் மில்லராக, ரகசிய உளவாளியாக அதகளம் செய்திருப்பவர் டாம் க்ரூஸ். 'மிஷன் இம்பாசிபிள்' (எம்.ஐ) பாகங்கள் வழியே ரசிகர்களை தன்பக்கம் வசீகரித்த டாம் க்ரூஸ், இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஆச்சர்யமான விஷயம். 'மிஷன் இம்பாசிபிள்' சாயலில் இருப்பதாலேயே 'சால்ட்' உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடிக்க மறுத்த அவர், இந்த 'நைட் அண்ட் டே' படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியதற்கு காரணம், பரபரக்கும் திரைக்கதைதான். எதிர்பாராத க்ளைமாக்ஸ்தான். பின்னே, 10 ஹாலிவுட் திரைக்கதை ஜாம்பவான்கள் சேர்ந்து உருவாக்கிய ஸ்க்ரிப்ட் ஆயிற்றே?!
'விச்சிட்டா', 'டிரபிள் மேன்' என ஆரம்பத்தில் சூட்டப்பட்ட பெயர்களை பிறகு ரப்பரால் அழித்து 'நைட் அண்ட் டே' என மாற்றியவர் இயக்குனர் ஜேம்ஸ் மேன்கோல்ட். 'வாக் தி லைன்', ' 3:10 டூ யூமா' என பேசப்பட்ட, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் இயக்குநரல்லவா இவர்? சென்ற அக்டோபரில் படப்பிடிப்பை ஆரம்பித்தவர் திட்டமிட்டப்படி படத்தை முடித்துவிட்டார். படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியிருப்பதற்கு காரணம், இயக்குனர் மட்டுமல்ல. 'வெனிலா ஸ்கை' என்ற சக்கைப்போடு போட்ட சைக்காலஜிக்கள் த்ரில்லர் படத்துக்கு பின், டாம் க்ரூஸ் - கேமரூன் டயஸ் இணையும் படம் இது என்பதாலும்தான்.

இந்த விமர்சனத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரம் இப்படம் அமெரிக்காவில் ரிலீசாகியிருக்கும். டாம் க்ரூஸின்  முந்தைய படமான 'வல்க்யூரி' பாக்ஸ் ஆபிசில் வாஷ் அவுட். அதேநிலைமை இப்படத்துக்கும் நிகழ்ந்து விடக்கூடாது என முப்பது முக்கோடி தேவர்களையும் வேண்டி வருகிறார்.
டாம் க்ரூஸின் பிரார்த்தனை நிறைவேறுமா?       
 
கே.என்.சிவராமன்           

Thursday, July 1, 2010

கோடீஸ்வரனாக ஒரு வழிகாட்டி

"I always knew I was going to be rich. I don't think I ever doubted it for a minute"
- Warren Buffett

ஈழம் ஈந்த கலைஞன்


2008 ஐப்பசியில் சிட்னியில் குறுந் திரைப்படவிழா.
அரங்கில் நான் இருந்தேன்.
அருமை நண்பர் நடராசா கருணாகரன் அன்புடன் அழைத்திருந்தார்.
சம காலத்தின் மறுபதிப்பாக ஒரு குறும் படம்.
பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழரான ஒரு முதியவர். பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த அவரது பெயர்த்தி.
தலைமுறை இடைவெளி, புலம்பெயர் சூழலின் வாழ்வுமுறை, மொழி இடைவெளி, வாழ்வியல் நோக்கம், அயலவர் தாக்கம், முதுமை யாவற்றையும் கால்மணி நேரத்தில் உணர்த்தும் குறும்படம்.
தொழினுட்பத்தின் வளர்ச்சியை உள்வாங்கித் தமிழ்ச் சூழலை வெளிக்காட்டும் குறும்படம்.
முதியவராக ஏ. ரகுநாதன்.
நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து என்றார் மணிவாசகர்.
ஏ. ரகுநாதன் முதியவராக அக்குறும் படத்தில் நடிக்கவில்லை. இறைவன் முன் அடியவராக நடிக்கமுடியாததுபோல, படப்பிடிப்புக்கருவிமுன் முதியவராகவே மாறியிருந்தார் ஏ. ரகுநாதன்.
அந்தக் கால்மணி நேரமும் பிரான்சில் அவருடன் இருந்தேன்.
சிட்னியில் இருந்தேனா? பிரான்சில் இருந்தேனா? புலம்பெயர் சூழலில் இருந்தேனா?
நறுந்தேன் சுவையாய் அக்குறும்படச் செய்தியின் தாக்கம் என்னிடமிருந்து நீங்க நாள்கள் பலவாயின.
மீண்டும் மீண்டும் நினைவில், கனவில், வாழும் என் நிகழ்வுகளில் ரகுநாதன்.
கலையரசு சொர்ணலிங்கத்திடம் பயின்றவர், நாடகமே உலகமானவர், நடிப்பே வாழ்வானவர், அறங்களை எடுத்துரைக்க நடிப்புக் கலையை நன்கு பயன்படுத்தியவர்.
கடமையின் எல்லை, நிர்மலா, தெய்வம் தந்த வீடு ஆகிய மூன்று திரைப்படங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன். தமிழகத்தில் அவற்றைத் தயாரித்திருந்தால் ஏ. ரகுநாதனுக்குச் சுவைஞர் மன்றங்கள் எத்தனை அமைந்திருக்கும்? பாலு. மகேந்திரா, வி. சி. குகநாதன், சிலோன் விஜயேந்திரன் போன்று தமிழ்த் திரை உலகில் ஈழத்து முத்திரை பதித்திருப்பார்!
விடாது கலையுலகில் தொடர்கிறார், தொடாத துறைகள் இல்லையென நடிக்கிறார், கொடாத சுவைகளைத் தெரிந்து தருகிறார், படாத பாடு கலைக்காகப் படுகிறார்.
பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்ற வாழ்வு அவருடையதல்ல.
பிறந்தோம், மொழி பயின்றோம், காதல் கொண்டு நடித்தோம், அரங்குகளில் திரைகளில் தடம் பதித்தோம், அளப்பரிய நிகழ்வுகளில் கலைக்கோயில்கள் எழுப்பினோம், வாழ்வு வரலாறாகியது என்றவாறு அமைத்து வாழ்ந்தவர், அமைத்து வாழத் தொடர்பவர், அருமைக் கலைஞர், ஈழம் ஈந்த இன்கலைமாமணி ஏ. ரகுநாதன்.
பொன் விழா, மணி விழா எனத் தொடர்ந்தவர், பவளவிழாக் காண்கிறார்.
உர நெஞ்சுடன், உறுதி உடலுடன் ரகுநாதன் நூறாண்டு நூறாண்டு வாழ்க, அவர் புகழ் கலை உலகு நீளும் வரை நீள்க என நெஞ்சார வாழ்த்துகிறேன்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சிட்னி, (1.7.2010)