Friday, December 31, 2010

பிறக்கிறது காடுகளின் ஆண்டு


வருகிற புத்தாண்டில் உலகம் பசுமையாக, வளமாக, செழிப்பாக இருக்கும் என்று நம்பலாம். ஏனெனில், சர்வதேச காடுகள் ஆண்டாக  (Green New Year) 2011, ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்திருக்கிறது. அத்துடன் புத்தாண்டுக்கு பல விசேஷங்கள் இருக்கின்றன. இது 3வது மில்லியனியத்தில் 21வது நூற்றாண்டின் 2வது பத்தாண்டுகளின் தொடக்கம். கொஞ்சம் தலை சுற்றுவது போலத் தெரிந்தாலும், அது விசேஷம்தான்.

9ம் எண்ணுக்கு பிறகு வருவதை இரட்டை இலக்கம் என்கிறோம். அதுபோல, 2000ம் ஆண்டு தொடங்கியதுமே 21வது நூற்றாண்டு என்று அழைக்கிறோம். அந்த வரிசையில் 2000ல் 10 ஆண்டுகள் முடிந்து 2வது பத்தாண்டுகளின் தொடக்கம் 2011 என்பதால் அதற்கு சிறப்பு இருப்பதாக எண்ணியல் வல்லுனர்கள் (நியூமராலஜிஸ்ட்) தெரிவிக்கின்றனர்.

இயற்கை விஷயத்தில் இந்த ஆண்டு வித்தியாசமானதாக இருக்குமாம். சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரித்து வருவதால், அதன் வெப்பக் கதிர்களின் வேகம் சற்று தணியும். அதனால், பனிப் பொழிவுகள், மழை அளவு அதிகரிக்கும். அதற்கேற்ப காடுகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் வனப் பகுதிகளின் பரப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இதனாலும், வெப்பத்தின் தாக்கம் குறையக் கூடும்.

பூமி வெப்பமயமாவதாக காது வலிக்க சத்தம் கேட்பது இந்த ஆண்டில் கொஞ்சம் குறைய வாய்ப்பிருப்பதாக புவியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்ததாக, 2011ம் ஆண்டை சர்வதேச ரசாயன ஆண்டாகவும் ஐ.நா. அறிவித்திருக்கிறது. காடுகள் ஆண்டுக்காக வனப்பகுதிகளை அதிகரிக்கும் அதேநேரத்தில், பூமியை பாதுகாக்க ரசாயனங்களின் பயன்பாட்டை குறைப்பதே இதன் நோக்கம்.

Thursday, December 30, 2010

கடல் கொள்ளையர்களின் தொடக்கம்

 
கடலில் கப்பல் போக தொடங்கிய காலத்தில் இருந்தே கடல் கொள்ளையும் தொடங்கி விட்டது. வேதங்களிலும் புராணங்களிலும் கூட கடல் கொள்ளை பற்றி கூறப்பட்டுள்ளது.

எகிப்தில் கொள்ளையர் தாக்குதல் பற்றிய முதல் செய்தி, கி.மு. 1350 -ல் பேரரசர் அக்னாடென் ஆட்சி காலத்து களிமண் பலகையில் குறிப்பிட்டுள்ளது. கடல் கொள்ளையர்களை கடல் மக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கி, அருகில் உள்ள நாடுகளை தாக்கத் தொடங்கினர். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று இன்னும் உறுதியாக கூறமுடியவில்லை. ஆனாலும் 200 ஆண்டுகளுக்கு எகிப்து, கிரேக்கம், ஹிட்டைட், மைசீனியா, மிட்டானி ஆகிய நாடுகள் இவர்களது தாக்குதலுக்குள்ளானது.

எகிப்து பேரரசர் மூன்றாவது ராம்சேசின் களிமண் வெட்டு ஒன்று அவர்களது (கொல்லையர்களது) ஆயுதங்களுக்கு முன்னாள் அனைத்து நாடுகளும் சிதறிப்போயின. யாராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை' என்று கூறுகிறது.

இந்த கடல் மக்களின் படையெடுப்பால் மத்திய தரைக்கடல், கடல் கொள்ளையரின் கூடாரமாக மாறிப்போனது. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மத்திய தரைக்கடலின் பல தீவுகள் கொள்ளையரின் தலைமையிடங்களாக செயல்பட்டன. எகிப்து பேரரசின் பலம் குறைந்தது அவர்களுக்கு சாதகமாகிப் போனது.

கிரேக்க நாகரீகம் தழைத்து கிரேக்க நாடுகளின் பலம் பெருகிய பின்னரும் மத்திய தரைக்கடல் கொள்ளையர்களின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தது. கிரேக்க நாடுகளிடையே ஒற்றுமை கிடையாது. அவர்களுக்குள் பல கோஷ்டிகளும் கூட்டணிகளும் இருந்தன. கிரேக்கர்களின் உட்பகையும், அடிக்கடி நடந்த போர்களும் மேலும் பல கொள்ளையர்களை ஊக்குவித்தன. போரிடும் கூட்டாளிகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருந்ததால் கொள்ளையர்களுக்கு வேலை எளிதாகி விட்டது.

ஒரு நாட்டின் வர்த்தக கப்பல்களை தாக்கி கொள்ளையடித்துவிட்டு அதன் எதிரிநாட்டு துறைமுகத்தில் பாதுகாப்பாக அவர்களால் பதுங்கிக் கொள்ள முடிந்தது. கிரேக்கத்தில் கடல் கொள்ளை என்பது அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தது. சண்டையிடும் நாடுகள் கொள்ளையர்களை கூலிப்படையாக பயன்படுத்திக் கொண்டன. சில நாடுகளின் கடற்படை தளபதிகள் போரில்லாத காலத்தில் கொள்ளையர்களாக பணிபுரிய தொடங்கினர். கைச் செலவுக்கு காசில்லை என்றால் அரசாங்க அதிகாரிகள் கூட கப்பல்களை கடத்தி, மாமூல் வசூலிப்பது சகஜமானது. இப்படியாக கடற்கொல்லையின் ஆரம்ப காலங்கள் இருந்தன.                   

Monday, December 27, 2010

என்ன செய்யப் போகிறோம் இந்த வாழ்க்கையை?


இந்த ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு வரப்போகிறது. “ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வா” என்று காதலில் விழுந்தவர்கள் வேண்டுமானால் பாடி அவசரப்பட்டுக் கொள்ளலாம். வருடா வருடம் புத்தாண்டுச் சபதமெடுக்கிறவர்களும், அத்தனை தீர்மானங்களையும் வரிசை குலையாமல் அதே தீவிரம் குறையாமல் இந்த வருசத்துக்கும் ஒருமுறை சங்கல்பம் செய்துகொள்ளலாம். சங்கல்பம் எல்லாம் செய்துகொள்ளத் திராணியற்றவர்களும், வருசம் பிறந்தாலாவது புதுசாய் நல்லதொரு வழி பிறக்காதா என்று நம்பப் பழகிக்கொண்டுவிட்ட அந்த வழக்கத்தினடிப்படையில் ஒரு புது எதிர்பார்ப்பின் பூரிப்பை வெளியிட்டுக் கொள்ளலாம்.

ஆனால், அதே மனங்களும், அதே வீம்புகளும், அதே வெறுப்புகளும், பிறரைத் தம் மனதுக்குள் அண்டவிடாத அகந்தையும், பன்மைத்துவ வாழ்வு குறித்து எந்தப் பான்மையற்றவராயும் மனிதர்கள் இருக்கையில் எல்லா ஆண்டும் மற்றொரு ஆண்டே!

மனித குலத்தின் நீண்ட நெடும் பயணத்தில் மேலும் ஒரு ஆண்டு. எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து, எவ்வளவோ அறிவு வளர்ச்சிகளை அடைந்து, எத்தனையெத்தனையோ மாற்றங்களில் வியப்புகளில் பயணித்து மேலே மேலே ஏறி வந்துவிட்டோம். உயர உயரப் பறந்தது எல்லாம் ஒரு பள்ளத்தாக்கின் உள்ளேதானா?

இன்னும் வாழும் வழி தெரியவில்லை. மனிதரை மனிதர் நோகச் செய்யும் வழக்கம் ஒழியவில்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோர்க்கும் ஒரே நீதி, எல்லோர்க்கும் இந்த பூமி என்கிற மனிதகுல லட்சியத்தை எட்ட முடியவில்லை. மனிதப் பொது விருப்பமெல்லாம் இன்னும் கனவாகவே தொடர்கிறது.

இன்றும் ஒரு தகவல்

வேகமாக இயங்கும் இந்த உலகத்தில் குடும்ப உறவுகள் மிகவும் சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவியிடையே புரிதலின் அளவு குறைந்து கொண்டு வருகிறது. விவாகரத்துகளும் அதிகரித்து குடும்ப நல நீதிமன்றம் வழக்குகளை சுமந்து கொண்டிருக்கிறது. பத்திரிகைகளில் தினம்தினம் கள்ளக் காதல் கொலைகளும் செய்திகளாக வர்ணிக்கப்படுகிறது. இவையெல்லாவற்றுக்கும் அடிப்படை காரணமாக உள்ள பால் உறவு குறித்த புரிந்துணர்வு இன்மையும் மோசமான அறியாமையும்தான் என செக்ஸ் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனடிப்படையில்தான் அண்மைகாலமாக செக்ஸ் கல்வி பற்றி விவாதிக்கப்படுகிறது. இவை தொடர்பில் சில தகவல்கள் கீழே தரப்படுகிறது.

உடலுறவில் கிடைக்கும் பரவசமான சுகம் எப்படி இருக்கும்? என்று வர்ணிக்க முயன்றவர்கள் எல்லோருமே தோற்றுப்போய் இருக்கிறார்கள். இதற்கு வாத்ஸாயனரும் விதிவிலக்கு இல்லை. 'அது ஒரு தும்மல் மாதிரி. ஆரம்பித்த பிறகு நிலை கொள்ளாமல்  தவிக்கும். எப்போது வெளிப்படுமோ என்று பதற்ற பட வைக்கும். முடிந்ததும் அமைதியாகிவிடும் என்று கூறும் அவர் 'அப்படியும் கூட திருப்தி அடையவில்லை'. அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அது. அந்த சுகம் எப்படி பட்டதென்றால் யாராலும் சொல்ல முடியாது என்கிறார்.

உறவில் ஆணுக்கு விந்தணு வெளியேறுவதால் சுகம் கிடைக்கிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று பெண்ணுக்கு தெரியாது. பெண்ணுக்கு இதுபோல் எந்த திரவமும் வெளியேறுவதில்லை. ஆனால் அவளும் சுகம் அடைகிறாள். அது எப்படிப்பட்ட பரவச இன்பம் என்பது ஆணுக்கு தெரியாது. இதை எப்படி விவாதிப்பது? எப்படி எழுதுவது? என்று தவித்து போகிறார், வாத்ஸாயனர்.

மேலும் அவர் உறவு எந்த கணத்தில் முழுமை பெறுகிறது என்பதையும் அலசுகிறார். 'பரவசம் கிடைத்ததுமே பெண்ணிடம் இருந்து ஆண் விடுபட முயற்சிப்பான். ஆனால் பெண் விடமாட்டாள். இறுக்கி அணைத்து இன்னும் வேண்டும் என்று செயல்படுவாள்' என்கிறார்.

வாத்ஸாயனர் காலத்தில் செக்ஸ் உறவின் உச்சகட்டத்தில் ஆண்களுக்கு விந்தணு வெளியேறுவது போல் பெண்களுக்கும் எதோ ஒரு திரவம் வெளியேறுகிறது என்று மேற்கத்திய நிபுணர்கள் நம்பினார்கள். செக்ஸ் தொடர்பான ஆய்வுகள் அதிகமான பின் தான் அப்படி எதுவும் பெண்ணிடம் இருந்து வெளிப்படவில்லை என்று நம்பத் தொடங்கினார்கள். ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கு சில சுரப்பிகள் இல்லை. இதனால் பெண்களுக்கு எதுவும் வெளியேறுவது இல்லை என்றும் சொன்னார்கள்.

'உடலுறவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஆண்களுக்கு விந்து வெளியேறிய பிறகு கட்டாயமாக ஓய்வு வேண்டும். மீண்டும் உறவுக்கு முயற்சிக்கும் போது தொடக்கத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. உறவுக்கு முந்தைய விளையாட்டுக்களில் தாமதமாக உணர்ச்சி வசப்பட்டாலும் கூட, உறவில் அவர்களிடமிருந்து திரவமாக எதுவும் வெளியேறுவது நடைபெறாத காரணத்தால் ஒரே நிமிடத்தில் கூட திரும்பவும் இன்னொருமுறை உறவில் உச்சக் கட்டத்தை அடைய அவர்களால் முடியும். இதனால்தான் உறவு முடிந்ததும் விலகு முயற்சிக்கும் ஆணை இறுக்கமாக அனைத்துக் கொள்கிறாள் பெண்' என்று நிபுணர்கள் கண்டுப்பிடித்தார்கள்.

செக்ஸ் உறவை முடித்த அடுத்த நிமிடம் குறட்டை விட்டு தூங்கிவிடும் வழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. இந்தியர்கள் தங்கள் மனைவியை தூக்கமாத்திரையாகதான் பயன்படுத்துகிறார்கள் என்று செக்ஸ் நிபுணர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

வாத்ஸாயனர் 'இது ரொம்ப தப்பு' என்கிறார். 'உறவு முடிந்த களைப்பில் மனைவிக்கு முதுகுகாட்டி திரும்பி படுக்க கூடாது. இரண்டு பேரும் அன்போடு கட்டி தழுவி முத்தத்தை பரிமாறி கொள்ள வேண்டும். பரவசத்தை தூண்டும் வெறித்தனமான முத்தம் தேவை இல்லை. ஒரு குழந்தையை முத்தமிடும் போது காட்டும் களங்கமற்ற அன்புதான் அதில் இருக்க வேண்டும். உடலுறவின் சிகரத்தை தொட்டுவிட்டு ஓய்வெடுக்கும் போது மனம் அமைதியில் மூழ்கி இருக்கும் இது போன்ற சந்தர்பம் வேறு எப்போதும் கிடையாது. அந்த நேரத்தில் கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேச வேண்டும். இப்படி பேசுவதுதான் இருவர் மனதிலும் அன்பை ஊற்றெடுக்க வைக்கும். பாசப்பிணைப்பை அதிகமாக்கும்' என்கிறார் வாத்ஸாயனர்.       
நன்றி தினத்தந்தி                

  

இதயத்துக்கு இதமானது!


அடுத்த ஐந்தாண்டுகளில் இதய நோயாளி களை அதிகமாகக் கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. எனவே வர இருக்கும் இந்த பிரச்சினையைச் சமாளிக்க இப்போது முதற்கொண்டே இந்தியா இன்னும் தீவிர முனைப்புடன் செயல்பட வேண்டும்.

தவறான உணவுப்பழக்கமும், உட்கார்ந்து கொண்டே செயல்படும் வாழ்க்கை முறையுமே இருதய நோய்க்கு முக்கிய காரணி. ஆனாலும் இருதயத்தில் உள்ள தடுப்புச் சுவர்கள், இதழ்கள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறுகளும் இருதய நோய்க்கு வழிவகுக்கும்.

தனி மனிதனின் இருதய ஆரோக்கியத்தை சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கை முறையே தீர்மானிக்கிறது. தவறான உணவு முறைகளால் ஏற்படும் இருதய பாதிப்புகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

இதய ஆரோக்கியத்தை மனிதனின் மூன்று முக்கிய அம்சங்களே தீர்மானிக்கின்றன. முதலாவது உடலுழைப்பு. இருதயத்தை பராமரிக்க வாரத்தில் குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.இரண்டாவதாக மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடுவது. அதாவது பிடித்தமான விஷயங்களை ரசித்தல், குழந்தைகளுடன் விளையாடுதல், சுடோகு விளையாடுதல், இனிமையான இசையை கேட்டல் ஆகியவை அழுத்தத்தை குறைக்கும்.

மேற்கண்ட செயல்பாடுகளுக்கு நீங்கள் ஒதுக்க வேண்டியது ஒவ்வொரு நாளும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே. நீங்கள் உட்கொள்ளும் உணவு வகை இதய ஆரோக்கியத்தை காக்கும் இன்னொரு விஷயமாகும்.

விருப்பமான உணவு ஆரோக்கியமான உணவு இல்லை என்றும், ஆரோக்கிய உணவு சுவையான உணவு இல்லை என்பதும் பொதுவான கருத்து. விருப்பமான, இதயப்பூர்வமான உணவு என்பது வறுத்த உணவோ, அதிக கலோரிகளாலான இனிப்புகளோ, வறுத்தவைகளோ இல்லை.

ஓரிகானோ, ஓமம், எலுமிச்சை. ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றைக் கொண்டு சுவையாக ஒரு கோப்பை சாலட் தயாரித்து சுவைக்கலாம். இதனுடன் கொஞ்சம் ஆலிவ் எண்ணை, வறுத்த வாதுமைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து சுவையை மேலும் அதிகரிக்கலாம்.


தினமும் ஐந்து காய்கள் மற்றும் பழங்கள் சேர்த்துக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கும், ஆரோக்கிய இருதயத்திற்கும் ஏற்றவை. ஆனால் நாளொன்றுக்கு ஒன்றரை காய்கனிகளைக் கூட இந்தியர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இந்தியாவில் காணப்படும் ஏராளமான தாவர வகைகளில் பெரும்பாலானவற்றை நாம் உபயோகப்படுத்தியதே இல்லை. இவற்றைக் கொண்டு எண்ணை இல்லாத சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.

தினசரி காலைப் பொழுதை ஒரு பழத்துடன் ஆரம்பிக்கலாம். காலை உணவிற்கு மீண்டும் ஒரு பழத்தை உட்கொள்ளலாம். ஒவ்வொரு உணவின் போதும் ஒரு கோப்பை காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாலையில் மீண்டும் ஒரு பழம். அதேபோல் இரவு உணவுக்கு காய்கறி அல்லது பழம் சாப்பிடுங்கள்.

ஒரே மாதிரியான காய்கனிகளை உட்கொள்ளாமல் மொச்சை கீரை, சிவப்பு முள்ளங்கி, கோசுக்கீரை, காலிபிளவர், பூசணி, ஆஸ்கார்ட், கத்தரிக்காய் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதவிதமான காய்களை எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளான மீன் மற்றும் கோழி வகைகளை சாறாக, கிரேவியாக உட்கொள்ளலாம். இது சைவ உணவில் சத்து தரும் பருப்பு வகைகளுக்கு ஓரளவு மாற்றாக இருக்கும்.

அதேநேரத்தில் அசைவ உணவுகள் எந்தக் காலத்திலும் சைவ உணவுகளுக்கு மாற்றாக இருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமச்சீரான உணவே இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவு ஆகும்.

தகவல்: டாக்டர் தாரிணி கிருஷ்ணன், உணவுக்கட்டுப்பாடு ஆலோசகர்.

யாரும் இங்கே வீணாகக் கூடாது


உலகில் எத்தனையோ படைப்புகள் உள்ளன. ஒவ்வொரு படைப்பும் உயிர்த் துடிப்பானவை. அதனதன் பிறப்பில் உன்னதமானவை. ஒவ்வொரு படைப்பும் தன் தேடலைத் தேடியே ஜீவிக்கின்றன. ஜீவன் என்றால் உயிர். இந்த உயிர் பயன்படாமல் அழிந்துவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு படைப்பும் கவனமாக இருக்கின்றது. அதனால் அது தன் தேடலைத் தொடங்குகின்றது. ஜீவிப்பதற்காக. ஆம், இந்த உலகில் நல்லவண்ணம் வாழ்வதற்காக.

வாழ்க்கை எப்போதும், எல்லோருக்கும் சொல்வதைப் போல இருப்பதில்லை. இங்கு சோகம்தான் நிரம்பியிருக்கின்றது. போராட்டங்களும், பிரச்சினைகளும்தான் சோகம் நிறைந்த வாழ்வைச் சுகமாக மாற்றுகின்றன. இயல்பாக இருக்கவும் வைக்கிறது.

வாழ்வைப் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்...

ஒரு கடற்கரைக் கிராமம். அங்குள்ள ஒரு மீனவ இளைஞனைப் பார்த்து வேறு ஒருவர் கேட்கிறார், "கடல் ஆபத்தான இடமாயிற்றே... எப்படி நீ துணிச்சலுடன் மீன் பிடிக்கப் போகிறாய்?''

இளைஞன் சொல்கிறான், "என்ன செய்வது... நான் மீன் பிடித்தால்தான் உணவு உண்ண முடியும்.''

கேட்டவர், சட்டென்று கேள்வியின் திசைகளை மாற்றுகின்றார்-

"அது சரி... உன் தந்தை எப்படி இறந்தார்?''

"அவர் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலில் சிக்கி இறந்தார்.''

"உன் தாத்தா?''

"என் தாத்தா ஒருமுறை அலையில் மாட்டிக் கொண்டு கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு அவரும் கடலுக்கு இரையானார்.''

"இவ்வளவு நடந்து முடிந்தபிறகும் எப்படி உன்னால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிகிறது?''

இப்போது அந்த இளைஞன் கேட்டவரைப் பார்த்து, "உங்கள் தந்தை எப்படி இறந்தார்?'' என்று கேட்டான்.

"நோய்வாய்ப்பட்டு இறந்தார்.''

"உங்க தாத்தா..?''

"அவரும் படுக்கையில் நோயில் கிடந்து பாடையாகிப் போனார்.''

"இப்படி உங்கள் பரம்பரையே படுக்கையில் கிடந்து இறந்து போயிருக்கிறார்கள். அப்புறம் எப்படித் தினமும் நீங்கள் தைரியமாகப் படுக்கப் போகிறீர்கள்?'' என்று பதிலுக்குக் கேட்டான்.

பதிலின்றி மவுனமானார் அவர். வாழ்க்கை, ஆபத்துகளும், துக்கங்களும், துயரங்களும் நிறைந்ததுதான். அதை நினைத்துக் கொண்டிருந்தால் வாழ முடியுமா? புறநானூற்றுப் புலவன் சொல்வானே, `நீர் வழிப்படும் புனைபோல' என்று. அதாவது ஆற்றின் ஓட்டத்தில் செல்லும் படகானது அதன் ஓட்டத்தோடு செல்வதைப் போல வாழ்க்கையும் சென்று கொண்டே இருக்க வேண்டும். அந்தப் படகை வழிநடத்திச் செல்கிற ஆற்றைப் போல பிறருக்குப் பயன்படுகிற விதத்தில் இருக்க வேண்டும். யாரும் இங்கே வீணாகி விடக் கூடாது.

டிசம்பர் 25.
இயேசு கிறிஸ்து மனிதகுமாரனாக மாட்டுத் தொழுவத்தில் தோன்றிய நாள். மாடுகள் அடைக்கப்படுகிற தொழுவம், அவர் பிறந்ததால் உயர்த்தப்பட்டிருக்கிறது. தொழுவத்தில் பிறந்த அவரைத்தான் கிறிஸ்தவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

அவர் மனிதகுலம் உயர்வதற்காக எடுத்துரைத்த சிந்தனைகள்தான் பைபிள் என்கிற வேதப்புத்தகம். வாழ்க்கைக்கான, குறிப்பாக இளைஞர்களுக்கான முத்தான மூன்று சிந்தனைகளை உரத்துச் சொன்னவர் இயேசு.

தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், இந்த மூன்றும் வெற்றிக்கான விதைகள். சில விதைகள் பயனில்லாமல் சோடையாகிப் போகும். ஆனால் இது நம்பிக்கைச் செடியை வளர்க்கிற நல்ல விதை. கருத்து நிறைந்த விதை.

அழுகின்றவர்கள் பாக்கியவான்கள் என்கிறார் இயேசு. இது என்ன முரண்பாடு? அழுகிறவர்கள் எப்படி பாக்கியவான்கள் ஆவார்கள் என்று மனது கேட்கலாம். அழுபவன் எப்பொழுதுமே அழுது கொண்டிருக்க மாட்டான். பிறர் அழுவதையும் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சிந்துகின்ற கண்ணீரைத் துடைப்பதற்கு ஏதேனும் இரண்டு ஆதரவுக் கரங்கள் நிச்சயமாக நீளும். அவர்கள் ஆதரவு பெறுவார்கள். எவரும் இங்கே வீணாகி விடுவதில்லை. அதனால்தான், `என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தருவேன்' என்கிறார்.
 
இனிய இளையோரே! இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். சற்றே இளைப்பாறுதல் தருவேன். சற்று நேரம்தான். அதாவது, சிறிதுநேரம்தான். அதற்குப் பிறகு அவரவரின் தேடலைத் தேடியாக வேண்டும். தேடுங்கள், கண்டடைவீர்கள் என்று தெளிந்து சொன்னது இதன் வெளிப்பாடுதான். இதில் நீங்கள் எதை நோக்கித் தேடுகிறீர்களோ அதைக் கண்டடைய முடியும்.

பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. ஆம், அது ஒரு தேடல். குழந்தைக்கான உணவு கிடைத்ததும் அதன் அழுகை நின்று விடுகிறது.

விளக்கைத் தேடி அந்த விளக்கை ஏற்றியவர்கள் வெளிச்சத்தை அனுபவிக்கின்றார்கள்.

27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்து கொண்டே வெள்ளையரின் அரசாங்கக் கதவுகளைத் தட்டினார் நெல்சன் மண்டேலா. தென் ஆப்பிரிக்கா சுதந்திரம் அடைந்தது.

சிந்தனைச் சிறகுகளை விரித்து, வைக்கத்தில் பெரியார் போராட்டத்தைத் துவக்கினார். வைக்கம் ஆலயக் கதவு திறந்தது. சமூகநீதி பிறந்தது.

தேடல்களைத் தொடங்கிய எவரும் வாழ்க்கைப் பயணத்தில் வீணாகிவிடவில்லை. அவர்கள் எல்லோரும் வரலாற்று ஏடுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நல்ல தேடல் வெற்றியைத் தரும்.

பேராசிரியர்.க.ராமச்சந்திரன் 

Friday, December 24, 2010

UCPI மாநில மாநாடு - வாழ்த்துரை

இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சியின் 7வது மாநில மாநாடு ஈரோடு மாநகரில் இன்று 24.12.2010 தொடங்கி 26.12.2010 அன்று முடிவடைகிறது. ந்த மாநாடு மாறி வரும் உலகச் சூழலில் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பிரவேசித்திருக்கும் இந்தியத் திருநாட்டின் தூணாக விளங்கும் தமிழகமும் அதன் மக்களும் ஜனநாயகம், சமூக சமத்துவம், பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு, கல்வி, கலாச்சாரம், பண்பாட்டுத் தளங்களில் மேன்மையடைய தமிழக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வழிக்காட்டிட சபதம் ஏற்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உளறுவாயனும் இந்த மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறான்.     

தலைவர்கள் வாழ்த்துரை


இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சியின் 7வது மாநில மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

மாறிவரும் உலக நடைமுறையில் இந்தியாவின் பங்கு மிகப் பாரியதாகும். உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலகத்தில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய கடமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சீனாவிற்கு இணையான மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக வளர்ந்து வரும் இந்திய நாடு, தனது நலன்களை மாத்திரமல்லாமல் ஏனைய நாடுகளில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிக்கின்றோம் என்ற பெயரில் இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் ஒரு சில நாட்களில் கொன்று குவிக்கப்பட்டார்கள். இன்று யுத்தம் முடிவடைந்துவிட்டதாகவும், புலிகள் அழிக்கப்பட்டதாகவும், இலங்கை அரசு கூறுகின்றது. ஆனால் இலங்கை தமிழ் தேசிய இனம் முன்னரிலும் விட மோசமான அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. யுத்தம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது போக இன்று சிங்களக் குடியேற்றம், சிங்கள இராணுவக் குடியேற்றம், பௌத்த கோயில்கள் என தமிழ் ஈழம் கபளீகரம் செய்யப்படுவதுடன், அவர்களது தனித்துவம் அழிக்கப்படுகிறது. மொத்தத்தில் தமிழ் இனம் இருந்த அடிச் சுவடே இல்லாமல் அழிக்கப்படும் செயற்பாடே இலங்கையில் நடைப்பெறுகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களிற்காக குரல் கொடுக்கும் இந்திய ஐக்கிய பொது உடமைக் கட்சி, இலங்கையின் இன்றைய நிலையை ஆழ்ந்து ஆராயும் என எதிர்பார்க்கின்றேன். தோழர்கள் மொகித் சென், கல்யாண சுந்தரம் ஆகியோர், ஈழத் தமிழரின் விடிவிற்கு முன்னணியில் நின்று உழைத்தார்கள். மிக மோசமான அடக்கு முறைக்குள்ளாக்கப்படிருக்கும் தமிழ் மக்களின் விடிவிற்கு இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சி அவர்களின் வழியில் நின்று தொடர்ந்து பணியாற்றும் என நம்புகின்றேன்.

வாழ்க! இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சி (UCPI)
வாழ்க! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF)

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் உலக சமாதானத்திற்கும் இணைந்து செயற்படுவோம்.

இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சியின் 7 வது மாநில மாநாட்டிற்கு எமது வாழ்த்துக்கள்.

சுரேஷ் க.பிரேமச்சந்திரன் (பா.உ.இலங்கை)
EPRLF செயலாளர் நாயகம்
TNA இணைச்செயலாளர்                   

மூன்றெழுத்தின் மூச்சு

'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது
முடிந்தபின்னால் என் பேச்சிருக்கும்
உண்மை என்றொரு ஊரிருக்கும் - அந்த
ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்'
எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து நாயகன்
உச்சரித்த பாடல் இது

அந்த மூன்றெழுத்து மந்திரச் சொல்
தேசம் கடந்தும் விரிந்து சிறந்து
கட்டிப் போட்டது மனித மனங்களை.

செல்லுலாய்ட் பிம்பங்களின் காட்சிகளை
நிஜ வாழ்வில் சாட்சிகளாய் வடித்தவர்.

ஆட்சியாளர்களுக்கு இவர் ஒரு அரிச்சுவடி
அந்த மூன்றெழுத்தின் மூச்சுக்காய்
இன்னும் ஏங்கும் தமிழகம்

எம் - என்பது மனிதமாய் (Man)
ஜி - என்பது கடவுளாய் (God)
ஆர் - என்பது நிஜமாய் (Real) - ஆன 
'நிஜ மனிதக் கடவுள் இவர்' - என
புது அர்த்தம் கொள்வோம். 
 
இன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தந்தை பெரியார் ஆகிய மாபெரும் தலைவர்களின் நினைவுநாள். அவர்களது நினைவு நாளை உளறுவாயன் போற்றித் துதிக்கின்றான்.  

இதெல்லாம் தற்செயலா?

'அது என்னவோ தற்செயலாக நடந்தது' என்று பல சந்தர்ப்பங்களில் சொல்கிறோம். ஆனால் சில சம்பவங்களைத் தற்செயலாக நடந்தது என்று சொல்ல முடியாது. இறைவனின் திருவிளையாடல் என்று வேண்டுமானால் சொல்லலாம். அத்தகைய நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார் உமா ஜலபதி என்ற வாசகர்.

பெயரில் என்ன இருக்கிறது?

அமெரிக்காவில் பாட்ரீஷியா என்ற பெயர் கொண்ட இரண்டு பெண்களுக்கு அரசாங்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அதில் இருவருக்கும் ஒரே எண் தரப்பட்டிருந்ததால் அந்த பிழையைத் திருத்திக் கொள்வதற்காக இருவரும் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு சென்றார்கள். இரண்டு பெண்களும் சந்தித்த போது -

அவர்கள் இருவருக்கும் முழுப் பெயர் பாட்ரீஷியா ஆன் காட்பெல் என்பதும்; இருவருடைய தந்தையின் பெயர்களும் ராபர்ட் காம்பெல் என்பதும்; இருவருடைய பிறந்த தேதியும் 1941 மார்ச் 13 என்பதும்; 1959 ம் வருடம், பதினொரு நாட்கள் முன்பின்னாகத் திருமணம் நடந்திருக்கிறது என்பதும்; இருவருடைய ஒரு குழந்தை 19 வயது, மற்றது 21 வயது என்பதும்; இருவரும் வண்ண ஓவியங்கள் தீட்டுவார்கள் என்பதும்; இருவரும் அழகுக் கலையைப் பயில்கிறவர்கள் என்பதும்; இருவரும் வர்த்தக நிறுவனங்களில் கணக்காளராக வேலை செய்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

ஒரு தோட்டாவின் வரலாறு

1893ம் ஆண்டு ஹென்றி ஜீக்லண்ட் என்பவர் தன் காதலியை மணக்க மறந்துவிட்டார். அந்தப் பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள். அவளுடைய சகோதரனுக்கு ஹென்றியின் மீது கடும் கோபம் ஏற்பட்டது. அவரைக் கொன்று விடுவது என்ற தீர்மானத்துடன் அவருடைய வீட்டுக்கு சென்றான். ஹென்றி அப்போது ஹென்றி அவருடைய தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரைத் துப்பாக்கியால் சுட முயன்றான். அதிர்ஷ்டவசமாகக் குறி தப்பி, தோட்டா ஹென்றியின் முகத்தை மட்டும் உரசியபடி அருகில் இருந்த ஒரு மரத்தில் பாய்ந்து புதைந்து விட்டது.

1913ம் ஆண்டு ஹென்றி அதே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு மரத்தை வெட்ட முடியாததால் வெடியை வைத்தார். அந்த வெடி ஏற்படுத்திய அதிர்ச்சியில் மரத்தில் புதைந்திருந்த தோட்டா சீறிக் கொண்டு பாய்ந்து ஹென்றியின் தலையில் தாக்கியது. அந்தக் கணமே ஹென்றி உயிரிழந்தார்.

மரணம் ஒன்று சேர்ந்தது

1996ம் ஆண்டு பாரிஸ் நகரில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு கார்கள் பயங்கர வேகத்தில் ஓடி ஒன்றோடொன்று நேருக்கு நேராக மோதிக் கொண்டு அப்பளமாய் (பாரிஸில் அப்பளம் இருக்கிறதா?) நொறுங்கின. போலீசார் விசாரித்த போது ஒரு காரை ஒட்டி வந்தவர் கணவர் என்றும் எதிராகக் காரை ஒட்டி வந்தவர் அவருடைய மனைவி தெரிந்தது. இருவரும் ஏதோ தற்கொலை ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்களோ என்று போலீஸ் முதலில் சந்தேகித்தது. ஆனால் இருவரும் பல மாதங்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள் என்று தெரிய வந்தது. அன்று இரவு கணவன் கார் ஓட்டி வருவான் என்று மனைவிக்குத் தெரியாது; மனைவி கார் ஓட்டி வருவாள் என்று கணவனுக்கு தெரியாது.

காணாமல் போன மகள்

மைகேல் டிக் என்பவர் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்குத் தன் குடும்பத்துடன் வந்தார். அவருடைய நோக்கம் உல்லாசப் பயணம் அல்ல. பத்து வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் காணமல் பொய் விட்ட தன் மகளைத் தேடிக் கண்டுப்பிடிப்பது தான்.

பல ஊர்களில் விசாரித்தும் மகளைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை. நாடு திரும்பும் நேரத்தில் 'ஸஃபோக் ஃப்ரீ ப்ரெஸ்' என்ற பத்திரிகையில் தன் துயரத்தைக் குறித்து ஒரு பேட்டி கொடுத்தார். அவரைப் புகைப்படம் எடுத்துக் கட்டுரையையும் வெளியிட்டது அந்தப் பத்திரிகை.

இந்த செய்தியை மைகேல் டிக்கின் மகள் பார்த்தாள். தந்தை தங்கியிருந்த இடத்துக்கு சென்று அவருடன் சேர்ந்து கொண்டாள்.

இதில் என்ன விசேஷம்? மைகேல் டிக்கை அந்தப் பத்திரிகை படம் பிடித்த போது அவருக்குப் பின்னே பலர் நின்றிருக்கிறார்கள். அவர்களில் அவருடைய மகளும் ஒருவர்! இருவருக்கும் அப்போது அது தெரியாது.

எந்த நேரமும்...

டேனி டி டாயிட் என்ற பிசினஸ் புள்ளி தென் ஆபிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு ஊரில் அவரை சொற்பொழிவாற்ற அழைத்தார்கள்.

தலைப்பு: 'எச்சரிக்கையாக இருங்கள். மரணம் என்பது எந்த நேரத்திலும் நிகழலாம்'.

சொற்பொழிவை முடித்துக் கொண்டு உட்கார்ந்தவர் ஒரு சாக்லேட்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அது தொண்டையில் அடைத்துக் கொண்டது. மூச்சுத் திணறி இறந்து போனார்.

மின்னலுக்கென்மேல் என்னடி கோபம்?

முதலாவது உலகப் போரின் போது மேஜர் ஸம்மர்ஃபோர்ட் என்ற குதிரைப் படை அதிகாரியை ப்ளாண்டர்ஸ் என்னுமிடத்தில் நடந்த போரின் போது ஒரு மின்னல் தாக்கியது. குதிரையிலிருந்து விழுந்தார். பக்கவாதத்தினால் இடுப்புக்குக் கீழே செயலாற்றுப் போனார்.

ஆறு வருடங்கள் கழித்து கனடாவுக்குப் போனார். வான்கூவர் நகரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். மீண்டும் ஒரு மின்னல் தாக்கியது. உடலின் வலது பக்கம் செயலிழந்தது.

இரண்டு வருடங்கள் சிகிச்சை பெற்றபின் ஒரு பூங்காவில் காற்றாட உட்கார்ந்திருந்தார். அது ஒரு கோடை நாள். திடீரென்று ஒரு சூறைக் காற்று அடித்து அவரை வீழ்த்தியது. தேகம் மொத்தமும் செயலிழந்தது. அதன் பின் இரண்டு உயிரோடு இருந்து இறந்து போனார். நாலு ஆண்டுகள் கழித்து அவருடைய கல்லறையின் மீது ஒரு மின்னல் தாக்கி அவருடைய பெயர் பொதித்த நினைவுச் சின்னம் நொறுங்கி விழுந்தது.

உயிருக்கு உயிர்

1965ம் ஆண்டு சலேம் என்ற அமெரிக்க நகரில் ரோஜர் லாஸியர் என்ற நான்கு வயது சிறுவன் கடலில் நீச்சல் பயிற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு அபாயமான இடத்தை அடைந்தவன் முழுகிப் போகவிருந்தான். அலைஸ் ப்ளெய்ஸ் என்ற பெண் அவனைக் காப்பாற்றினாள். 1974ம் ஆண்டு அதே கடற்கரையில் அவன் ஒரு சிறு படகில் உல்லாசப் பயணம் செய்து கொண்டிருந்தான். அப்போது ஒருவர் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவரைக் கை கொடுத்துக் காப்பாற்றிக் கரையில் சேர்த்தான்.

அந்த மனிதர் அலைஸ் ப்ளெய்ஸின் கணவர்.

ரா.கி.ரங்கராஜன்                         

Thursday, December 23, 2010

உடம்பு எப்படி இருக்கிறது ?

எப்பேர்பட்ட ஞானியாக இருந்தாலும் பல்வலியை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஓர் அறிவாளி சொன்னதாக முன்னர் ஒரு முறை எழுதினேன். யோசித்துப் பார்க்கையில் அவர் அப்படி சொன்ன சமயம் அவருக்கு பல்வலி இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

அவரே ஜலதோஷம் ஏற்பட்டு டஜன் கணக்காகக் கைக்குட்டைகளை அசிங்கப்படுத்தி கொண்டிருந்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள், எப்பேர்பட்ட ஞானியாக இருந்தாலும் ஜலதோசத்தை  மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி இருப்பார்.

கடவுள் கிருபையில் உடம்பு நல்லபடியாக (அதாவது கூடுமானவரை நல்லபடியாக) இருக்கும்போது குளிருக்கு அடக்கமாகக் கம்பளியைக் போர்த்திக் கொண்டு ஒரு குட்டித் தூக்கம் போடலாமில்லையா? எனக்கு அப்படித் தோன்றுவதில்லை. இன்டர்நெட்டில் ஆரோக்கியக் குறிப்புகளைப் படிக்கிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காட்டிலும் சுவாரஸ்யமான சங்கதிகள் உண்டென்றால் அவை இவைதான்.

சிலவற்றை இங்கே தருகிறேன்.

  • ஃபோன் மணி அடித்தால் இடது காதில் வைத்துக் கேளுங்கள்.
  • ஒரு நாளில் இரண்டு தடவைகளுக்கு மேல் காப்பி சாப்பிடாதீர்கள்.
  • மாத்திரைகளை விழுங்குவதற்குக் குளிர் நீர் கூடாது. சுடுநீரைக் குடியுங்கள்.
  • மாலை ஐந்து மணிக்குப் பிறகு பலமான சாப்பாட்டை சாப்பிடாதீர்கள்.
  • சாப்பிடும் உணவில் எண்ணையின் அளவைக் குறையுங்கள்.
  • பகல் வேளையில் அதிகமாகவும் இரவு வேளையில் குறைவாகவும் தண்ணீரை அருந்துங்கள்.
  • இரவு பத்து மணிக்குப்படுத்து காலை ஆறு மணிக்கு எழுந்திருங்கள்.

எந்த நோய்க்காக எந்த டாக்டரிடம் போனாலும் 'நிறைய வாக்கிங் போங்கள்' என்று சொல்கிறார்கள்.

நடைப் பயிற்சிக்கு எதனால் அத்தனை முக்கியத்துவம்?

காரணம்: உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தேவையான சக்தியைப் பாதம்தான் தருகிறது. பாதத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்புக்கும் சக்தியை அனுப்புகிறது. நடக்கும் போது பாதத்தின் அந்த பாகத்துக்கு அழுத்தம் ஏற்படுகிறது. பாதத்தின் நடுப் பகுதிகள்தான் அப்படி என்றில்லை. கால் விரல்களுக்கும் அந்த சக்தி நிறையவே உண்டு. ஆகையால் நடந்தது போதும் என்று உட்கார்ந்திருக்கையில் காலின் சுண்டு விரல் முதல் கட்டை விரல் வரை ஒவ்வொன்றாக மசாஜ் செய்யுங்கள். குறிப்பாக விரல்களின் நுனிப் பகுதிகளை மசாஜ் பண்ணுங்கள். ஒரு புது உற்சாகம் உண்டாவதை உணர்வீர்கள்.

அடுத்த முக்கியத்துவம் தண்ணீருக்கு.

காலையில் கண் விழித்தவுடனே வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர்கள் தண்ணீர் குடிப்பதை ஜப்பானியர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் நாட்டு ஆராய்ச்சிக் கழகமொன்று எந்தெந்த நோய்களைத் தண்ணீர் குணப்படுத்தும் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தந்திருக்கிறது.

காலையில் பல் விளக்குவதற்கு முன்பே இரண்டு டம்ளர்கள் தண்ணீரை அருந்துங்கள். பிறகு பிரஷ் போட்டுப் பல் விளக்கலாம். ஆனால் அடுத்த 45 நிமிட நேரத்துக்கு எதையும் குடிக்கவோ உண்ணவோ கூடாது.

காலை சிற்றுண்டிக்கும் பகல் உணவுக்கும் இரவு சாப்பாட்டுக்கும் பின்னர் இரண்டு மணி நேரத்துக்கு எதையும் குடிக்கக் கூடாது. சாப்பிடக் கூடாது.

இந்தத் தண்ணீர் சிகிச்சை உயர் ரத்த அழுத்தத்தை (பி.பி) 30 நாட்களிலும், வாயுத் தொல்லையை 10 நாட்களிலும், நீரிழிவை 30 நாட்களிலும், மலச் சிக்கலைப் பத்து நாட்களிலும், காச நோயை 90 நாட்களிலும் அறவே ஒழிக்கும். அல்லது கட்டுப்படுத்தும்.

இந்த சிகிச்சையை மூட்டுவலி உள்ளவர்கள் முதலில் வாரம் மூன்று நாட்கள் கடைப்பிடிக்கலாம். இரண்டாவது வாரத்திலிருந்து தினந்தோறும் வழக்கப்படுத்தி கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அடிக்கடி பாத்ரூம் போகும்படி இருக்கும். பிறகு சரியாகிவிடும்.

சாப்பாட்டின் போது குளிர்ந்த நீரை அருந்துவது தவறு. ஏனெனில் குளிர்ந்த நீர் சாப்பிட்ட உணவின் எண்ணெய்ப் பகுதியை கெட்டிப்படுத்தி, ஜீரனத்தைத் தாமதப்படுத்துகிறது. சீனர்களும் ஜப்பானியர்களும் சாப்பிட்டவுடன் சூடான டீயைக் குடிக்கிறார்கள். இது ஒரு நல்ல பழக்கம்.

உடலில் ஓடும் ரத்தம் எந்த க்ரூப் என்பதைப் பொறுத்து மனிதனின் குணாதிசயம் அமையும் என்று கூட இந்த ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது.

இது மட்டுமல்ல. முகத்தில் சில பயிற்சிகளை செய்தால் மனத்தில் ஆரோக்கியம் பெறலாம் என்று தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக -

கண்களின் கீழ்ப்புறம் நான்கு விரல்களையும் வைத்து மசாஜ் செய்வது போல மேலே தூக்குங்கள். ஒன்று, இரண்டு, மூன்று என்று என்னிவிட்டுக் கையை எடுத்துவிட்டு, மறுபடி அவ்வாறே செய்யுங்கள். பிறகு அதே இடத்தில் விரல்களை வைத்துக் கீழே இழுங்கள். மூன்று வரை எண்ணிவிட்டு நிறுத்திக் கொண்டு மறுபடி செய்யுங்கள். இதன் மூலம் சிந்தனைகளில் தெளிவு பிறக்கும்.

இதே போல இரண்டு பொட்டிலும் நான்கு விரல்களை வைத்து இரண்டு பெரு விரல்களைத் தாடையின் கீழே வைத்து பொட்டை மெல்ல அழுத்துங்கள். பிரச்சனைகளில் தீர்மானமாக முடிவு எடுத்து செயலில் இறங்குவீர்கள்.

மூக்கின் இரு பக்கங்களிலும் ஆட்காட்டி விரல்களை வைத்து மசாஜ் செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கொடுங்கள். இருபத்து நான்கு முறைகள் இப்படி செய்தால் செய்யத்தக்கது எது, தகாதது எது என்ற தெளிவு ஏற்படும்.

பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே காதுமடலைப் பிடித்துக் கொண்டு தலையுடன் அழுத்தினாற்போல் மேலும் கீழுமாக மெதுவாக தேயுங்கள். யாரிடமேனும் எரிச்சல் ஏற்பட்டிருந்தால் அது நீங்கி நட்பு உணர்ச்சி உற்பத்தியாகும்.

ரா.கி.ரங்கராஜன்

இவற்றைப் போல மனதுக்கும் உடலுக்குமான ஆரோக்கியத்துக்கான அறிவுரைகள் ஆயிரக்கணக்கான அறிவுரைகள் ஆயிரக்கணக்கில் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன.

அதெல்லாம் கூட எதற்கு? 'எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்' என்ற கந்த சஷ்டி கவசத்தைப் படிப்போமாக.                          

உங்கள் நுரையீரல் நலமாக இருக்கிறதா?

பூமிக்கு வந்த முதல் கணத்தில் இருந்து, விடைபெறும் கடைசித் தருணம் வரை நமது உடல் உறுப்புகளுக்கு அதிஅத்தியாவசியமான ஆக்சிஜனை வழங்கிக் கொண்டேயிருப்பது நுரையீரல். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நுரையீரலைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாமா...

சுவாசக் காற்றே...

* சுவாசம் ஒரு தன்னிச்சையான செயல்பாடு. மூளையின் 'மெடுல்லா அப்லாங்கேட்டா' பகுதியால் இது கட்டுப்படுத்தப்படுத்தப்படுகிறது.

* நுரையீரலுக்குள் நுழையும் ஆக்சிஜன், அதன் சிற்றறைகளை அடைகிறது.

* மெல்லிய சிற்றறைச் சுவர் வழியாக ரத்தத் துந்துகிகளுக்குள் ஆக்சிஜன் நுழைகிறது.

* ஆக்சிஜனேற்றம் பெற்ற ரத்தம், 'பல்மோனரி' நரம்பு வழியாக இதயத்துக்குப் பயணிக்கிறது. அங்கிருந்து உடம்பின் பல பாகங்களுக்கு ரத்தம் 'பம்ப்' செய்யப்படுகிறது.

* பல்வேறு உறுப்புகளில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடு அடங்கிய ரத்தம், இதயத்துக்குத் திரும்புகிறது.

* அந்த ரத்தத்தை 'பல்மோனரி தமனி', நுரையீரலுக்குக் கொண்டு வருகிறது.

* ரத்தத் தந்துகிகளை விட்டு கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறி, சிற்றறைகளுக்குள் நுழைகிறது.

* நுரையீரலும், மூக்கும் உடம்பில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுகின்றன.

சுவாசப் பிரச்சினைகள்

பிளியூரிஸி- 'பிளியூரா' வில் ஏற்படும் வீக்கம்.

எம்பிசேமா- நுரையீரலில் காற்றிடங்களில் ஏற்படும் விரிவாக்கம்.

சிஸ்டிக் பைப்ரோசிஸ்- பாரம்பரிய வியாதி. சில சுரப்பிகளின் அசாதாரணமான சுரப்பு, நுரையீரலையும், செரிமானக் குழாயையும் பாதிக்கிறது.

அக்ïட் ரெஸ்பிரேட்டரி டிஸ்ட்ரஸ் சிண்ட்ரோம்- நுரையீரலில் திரவம் சேர்வது.

மூச்சிழைப்பு- காற்று வழியின் ஒரு பகுதி அடைபடுவதால் ஏற்படும் 'விசில்' ஓசை.

பல்மோனரி எம்பாலிசம்- ரத்தக்கட்டு, கொழுப்பு, காற்றுக்குமிழ், கட்டித் துணுக்கு அல்லது வேறு துணுக்கால் 'பல்மோனரி தமனி' அடைக்கப்படுவது.

பிராங்கைட்டீஸ்- மூச்சுக்கிளைக் குழல்களில் ஏற்படும் வீக்கம்.

ஏட்டிலெக்டாசிஸ்- நுரையீரலின் ஒரு பகுதிக்குக் காற்றுப் போகாமல் சீர்குலைவது.

ஆஸ்துமா- காற்றுவழி குறுகலாவது. அவ்வப்போது ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமையால் உண்டாகும்.

நிமோனியா- நுரையீரல், சிற்றறைகள் மற்றும் சுற்றுப்புறத் திசுக்களில் ஏற்படும் நோய்த்தொற்று.

நுரையீரல் புற்றுநோய்

புற்றுநோய்களிலேயே அதிக மரணத்தை ஏற்படுத்துவது. 90 சதவீத ஆண்களுக்கு சிகரெட் புகைப்பதாலே இது ஏற்படுகிறது. புகை பிடிப்போரின் நுரையீரல் திசுக்கள் கறுப்படை கின்றன. சிலநேரங்களில், புற்றுநோயைத் தூண்டும் பொருட்களைச் சுவாசிப்பதால், கதிரியக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோய், சுவாசத்தைப் பாதிக்கும். குறிப்பாக, முற்றிய நிலையில்.

80 வயதாகும் ஒரு நபர் தனது வாழ்நாளில் 60 கோடி முறை சுவாசித்திருப்பார்.

நுரையீரலுக்குச் சொந்தமாகத் தசை கிடையாது. உதரவிதானமும், மார்புக்கூட்டுக்கு இடையில் உள்ள 'இன்டர்கோஸ்டர்' தசைகளும் இணைந்து மூச்சை உள்ளிழுக்கின்றன.

மாற்று அறுவைச் சிகிச்சைக்காக நீக்கப்படும்போது, உடம்புக்கு வெளியே மற்ற உறுப்புகளை விட நுரையீரல் அதிக நேரம் செயல்படும்.

பிறந்த குழந்தை ஒரு நிமிடத்துக்கு 40 முதல் 60 முறை சுவாசிக்கிறது. ஐந்து வயதாகும் போது அது 25 முறையாகக் குறைகிறது.

பெண்களின் நுரையீரல் கொள்ளளவு ஆண்களை விட 20 சதவீதம் அதிகம்.

நுரையீரலில் 90 சதவீதம் காற்றால் நிரம்பியுள்ளது. வெறும் 10 சதவீதம்தான் கடினத்திசுவால் ஆகியிருக்கிறது.

Wednesday, December 22, 2010

முகத்திரை கிழிகிறது

"It's the establishment vs the web" -- John Naughton

"மேலை நாடுகளின் அரசியல் ஆளும் வர்க்கங்கள் குழப்புவார்கள்,
மூடிமறைப்பார்கள், பொய்யுரைப்பார்கள், - அவர்களது ரகசிய முகத்திரை
கிழியும்போது செய்தியை எடுத்துச் செல்லும் தூதரையே கொல்ல
முயல்வார்கள்..."

உலகம் முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட அமெரிக்கத் தூதரகங்கள், அமெரிக்க அரசாங்கத்துக்கு அனுப்பிய 2,51,287 ரகசியத் தந்திகளில் (கேபிள்கள்) அடங்கியுள்ள செய்திகளைக் கடந்த நவம்பர் 28-ஆம் தேதியில் இருந்து, 'விக்கிலீக்ஸ்' (WikiLeaks) புலனாய்வு இணையதளமும், அதனுடன் இணைந்து 'தி கார்டியன்', 'நியூயார்க் டைம்ஸ்', 'டெர் ஸ்பீகல்', 'லீ மாண்டே', 'எல் பைஸ்' ஆகிய உலகு தழுவிய 5 பெரும் நாளேடுகளும் நாள்தோறும் ரகசிய செய்திகள்  21 நாட்களாக தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. இது 'கேபிள்கேட்' என அழைக்கப்படுகிறது. அம்பலமாகி வரும் இந்த ரகசியத் தந்திகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகளின் ஆளும் வர்க்கங்களின்முகத்திரையைக் கிழித்து வருகின்றன.

அரசாங்கத்தின் பொய்களை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வகையில் ரகசிய ஆவணங்கள் அம்பலமாவது இதுவே முதல் தடவை அல்ல. அதுபோல இதுவே கடைசி தடவையாகவும் இருக்கப் போவதில்லை. ரகசியங்கள் அம்பலமாவதை தடுக்க ஆளும் வர்க்கங்கள் தாக்குதல் தொடுப்பதும் இதுவே முதல் முறையல்ல. அதுபோல, இதுவே கடைசி தடவையாகவும் இருக்கப் போவதில்லை. மக்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்காக ரகசியத்தகவல்களை ஆளும் வர்க்கங்கள் நெடுங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றன. சட்டவிரோதப் போர்களில் ஈடுபடுவதற்காக, மனித உரிமைகளை மீறுவதற்காக, மக்களைக் கொன்று குவிப்பதற்காக, பூமியை மாசுபடுத்துவதற்காக அரசாங்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் மக்களின் பெயரால் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றன. இதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்நிலையில், உண்மையை அறிந்து கொள்வது மக்களின் உரிமை. அந்த உரிமை இல்லாமல் ஜனநாயகம் நிலைத்துத் தழைக்க முடியாது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மீது இப்போது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல், ஜனநாயகத்தை வெறுக்கும் ஆளும்வர்க்கங்களின் நடவடிக்கைளுக்கு இன்னொரு உதாரணம்.

Monday, December 20, 2010

எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்!

நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது 'ஆஸ்டியோபோரசிஸை' (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
  
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார். மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது. வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார். அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்.

Saturday, December 18, 2010

வெறுப்பும் வீம்பும் அகல விடுதலை சாத்தியமே


“கனவு – மனசாட்சியின் குரல்” என்கிறார் ஸோக்கிரட்டீஸ். “உடல் அசதியினால் ஏற்படுகிற ஒரு வீண் காட்சி” என்கிறார் வோல்டேர். “உணர்வற்ற ஒரு நிலைக்கு அழைத்துச் செல்லும் ராஜபாட்டை” என்கிறார் ஃப்ரெய்ட். கனவுகள் மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் உண்டாம்!

மனம் என்பதை நனவுமனம், நனவிலிமனம் என இரண்டாகப் பிரிக்கிறார்கள். நம்முடைய எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், பயங்கள், சந்தேகங்கள் எல்லாம் உள்மனத்தில் – நனவிலி மனத்தில் பதிவாகின்றன. இந்த உள்மனதைத்தான் ளரடிஉழnஉழைரள என்கிறார்கள். உள்மனத்தில் பதிவான நினைவுகளில் சில, முன்பின் தொடர்பில்லாத சிறு பகுதிகளாக வெளிப்படும் அதுதான் கனவு என்கிறார்கள். நாம் விழித்திருக்கும்போது ஏற்படும் பலவித உணர்ச்சிகளும் உள்மனத்தில் பதிவாகி, இரவிலோ பகலிலோ தூங்கும்போது, கனவாகிய வடிகால் மூலமாக வெளிப்படுகிறது என்று விளக்குகிறார்கள். உடம்பில் நோய்க் குறைபாடுகள் இருக்கையில் கெட்ட கனவுகள் வருவதாகவும், உடம்பு ஆரோக்கியமாக இருக்கையில் நல்ல கனவுகள் வருவதாகவும் கூட சொல்கிறார்கள்.

விஞ்ஞான விளக்கங்கள் ஒருபுறமிருக்கட்டும். இலக்கியத்திலோ கனவுகள் அதிபுனைவு நவிற்சிகளாய் பரவசமூட்டுபவை. “கனவுகள் அழகானவை. கண்களில் பூக்கின்ற மலர்கள் அவை” என்கிறார் ஒரு புதுக்கவிஞர். அவை நமக்கு மட்டுமே சொந்தமானவை என்பதால் அவை நம் அந்தப்புரச் செடிகள் என்றும் சொல்கிறார்.

மனதுடன் ஒரு மல்யுத்தம்!

மாணவர்கள்...

சாதாரணமானவர்கள் அல்லர். இவர்கள் வித்தியாசமானவர்கள்.

பார்வையிலும் சரி, கேள்விக்கான பதிலைச் சொல்வதிலும் சரி, வித்தியாசத்தை விரும்புகிறவர்கள்.

வகுப்பறை...

ஒவ்வொரு வகுப்பறையும் மாணவர்களைக் கூர்மைப்படுத்துகிற பயிற்சிப் பட்டறை. அந்த வகுப்பறையில் ஒரு நாள். மாணவர்களின் மனநிலையைச் சோதிப்பதற்காக நடத்திய பயிற்சி.

5+2 7

6+3 9

9+2 11

8+4 13

இப்படி நான்கு சமன்பாடுகளை கரும்பலகையில் எழுதி விட்டு மாணவர்களிடம் கேள்விகளைப் பரிமாறினேன்.

"இந்தச் சமன்பாடுகளைப் பற்றி உங்கள் கருத்துகளைச் சொல்லலாம்'' என்றேன்.

"சார்... சார்... நான் சொல்கிறேன்!'' -இப்படியே பல குரல்களும், கைகளும் உயர்ந்தன. ஒரு மாணவனை எழுப்பி, "நீ சொல்'' என்றேன்.

"சார்... இந்த நான்கில் ஒண்ணு மட்டும் தப்பு சார். 8+4 12 என்று இருக்க வேண்டும். நீங்கள் 13 என்று தவறாக எழுதியிருக்கின்றீர்கள்'' என்றான் அம்மாணவன்.

அது அந்த மாணவனின் பார்வை மட்டுமல்ல, பெரும்பாலான மாணவர்களின் பார்வையும், பார்வையின் வழியாகக் கிடைத்த பதிலும் அதுவாகவே இருந்தது.

எழுதியது தவறுதான். ஆனால் அதற்கான காரணத்தை விளக்கினேன்.

மொத்தம் நான்கு சமன்பாடுகள். இதில் மூன்று சரியானது, ஒன்று மட்டும் தவறு என்று சொல்லவில்லை. காரணம் அந்தத் தவறுதான் அவர்களை உறுத்திக் கொண்டே இருக்கும். இதுதான் எதிர்மறை எண்ணங்களின் வலிமை என்பது.

மாணவர்களிடம், குறிப்பாக இளையோரிடம் இந்த எதிர்மறை எண்ணங்கள்தான் `சட்'டென்று தாக்கத்தை ஏற்படுத்தும். எங்கே குற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். எளிதில் யாரையும் குறை சொல்லலாம் என்று நினைக்கின்றார்கள். தம்மிடம் உள்ள குறைபாடுகளை மறந்து விடுகிறார்கள்.

இந்த எண்ணம், வாழ்க்கையைப் பற்றிய அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி விடுகிறது. காரணம் இளமையின் துடிப்பு. எதையாவது செய்ய வேண்டும் என்கிற வேகம். அதுவும் மின்னலைப் போன்ற வேகம்.

 
சர்ச்சில் சொன்ன ஒரு கதை...

ஒருநாள் ஒரு குழந்தை, குளத்தில் தவறி விழுந்து விட்டது. ஒரு மாலுமி அதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின் குழந்தையைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

மாலுமிக்குக் குழந்தையைக் காப்பாற்றியதில் மிகப் பெரிய மகிழ்ச்சி. சிறிதுநேரத்தில் அந்தக் குழந்தையின் தந்தையும் தகவலறிந்து வந்து சேர்ந்தார்.

"யார் என் குழந்தையைக் காப்பாற்றியது?'' என்று பரபரப்புடன் கேட்டார். தனக்கு வெகுமதி கிடைக்கப் போகிறது என்று நினைத்து அந்த மாலுமி, "நான்தான்'' என்று பெருமிதத்துடன் சொன்னார்.


"என் குழந்தை அணிந்திருந்த தொப்பி எங்கே?'' என்று கேட்டார், அந்த தந்தை.

மாலுமி திகைத்துப் போனார்.

சர்ச்சில் கூறிய இந்தக் கதையைப் போன்ற சம்பவம் நம்முடைய வாழ்விலும் சில நேரங்களில் நிகழ்ந்திருக்கும். நாம் ஒன்றை நினைத்திருப்போம். நடந்தது வேறு ஒன்றாக இருந்திருக்கும்.

பாராட்டை எதிர்பார்த்திருப்போம். அவமானம்தான் மிச்சமாக இருக்கும்.

நல்ல விருந்தை எதிர்பார்த்துப் போயிருப்போம், கடைசியில் பட்டினியோடு திரும்பியிருப்போம்.

வழக்கமாக எடுத்துச் செல்கிற குடையை ஒருநாள் வீட்டில் வைத்துவிட்டுப் போயிருப்போம். அன்றைக்குப் பார்த்து மழை கொட்டி இருக்கும்.

பேருந்துக்காக நாம் போகிற திசையை நோக்கிக் காத்திருப்போம். எதிர் திசையில் வரிசை வரிசையாய் பேருந்து வந்து கொண்டே இருக்கும்.

திருமண நிகழ்ச்சிக்காகப் போயிருப்போம். வரவேற்பில், `எங்க சார்... அவங்க வரவில்லையா?' என்று கேட்பார்கள். இத்தனை பேர் வந்திருப்பது அவர்களுக்குத் தெரியாது. வராதவர்களைத்தான் கேட்பார்கள்.

இப்படித்தான் பலநேரங்களில் எதிர்மறையான நிகழ்வுகளும், எண்ணங்களும் மனதில் சலனங்களை ஏற்படுத்தும். மனம், மற்றவர்களிடமிருந்து தான் வித்தியாசமானவன் என்ற உணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்த முயன்று கொண்டே இருக்கும். ஒருமுறை அத்தகைய உணர்வு ஒருவருடைய மனதில் புகுந்து விட்டால் அதன் பிறகு அவ்வளவு சுலபத்தில் அதிலிருந்து மீண்டு விட முடியாது. மனம் உடனே நம்மைச் சுற்றி ஒரு கோட்டையை எழுப்பிவிடும். பின்னர் அதைத் தாண்டி எதுவும் நம் உள்ளத்திற்குள் நுழைய முடியாது.

படிப்பு சில நேரங்களில் சிலருக்கு எதிர்மறை எண்ணங்களைக் கொண்டு வருகிறது, குறுக்கு வழிகளைத் தேடச் சொல்கிறது. இந்த மாதிரியான தருணங்களில்தான் மனதை சரியாக வைத்திருக்கப் பழக்கப்படுத்த வேண்டும்.

எதை எடுத்தாலும் குற்றம் காண்கிற மனப்போக்கு இன்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. மன அழுத்தம் அதிகமாவதற்கு இது காரணமாக அமைகின்றது. அடுத்தவன் நம்மை விட நன்றாக வாழ்கிறானே என்கிற எதிர்மறை எண்ணம்.

Friday, December 17, 2010

எல்லாவற்றுக்கும் எதிரியே காரணம்?

தன்னைப் புத்திசாலிச் சமூகங்களில் ஒன்றாக நம்பியிருந்த தமிழ்ச் சமூகம், பாரிய பாடழிவுகளில் போய் விழுந்து விடாமல் தன்னைக் காத்துக் கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு இங்ஙனம் வீம்புக்கு அழிவில் வீழ்ந்து தன்னைச் சிதைத்துக் கொண்டது ஏன் என்ற கேள்விக்குப் பல்வேறு விடைகள் இன்று பலரதும் கைவசம் இருக்கும். அது பற்றிய ஆய்வை நமது மனமாச்சரியங்களுக்கு அப்பால் நின்று ஒவ்வொருவரும் தமக்குத் தாமே நேர்மையுடன் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இன்றிருக்கிறது.

ரோச, வீராவேசங்களைச் சற்று விலக்கி வைத்துவிட்டு நிதானமுடன் யோசிப்பவர்களுக்கு நமது தவறுகள் பிடிபடக்கூடும். நிதானமும் யோசனையும் கைகூடாமல் தொடர்ந்து கொந்தளித்து அழிப்புவீறில் துடித்தாடுபவர்களுக்கு, ‘எல்லாவற்றுக்கும் எதிரியே காரணம்’ என்ற இலகு விடையுடன், கடைசி உயிர் வரை அழிக்க ஒரு பொற்கனவுப் புளுகுமிருக்கும்.

நமக்குள் மிகப்படித்தவர்கள், அறிஞர்கள் என்று சொல்லப்பட்ட நபர்களுக்கு, சமூகத்தை அழிவிலிருந்து தடுக்கும் அறிவார்ந்த எத்தனங்களை ஏன் எடுக்கமுடியாமல் போயிற்று என்பதை அறியவேண்டியதும் முக்கியமானதாகும். ஏனெனில், சமூகம் பாடழிவுக்குள் தள்ளப்பட்டதன் பின்னாலிருந்த காரணிகளைச் சரிவரப் பகுத்தாய்ந்து கொள்ளாவிட்டால், இனிமேலும் வெற்றுச் சவடால்களுக்கும் மாயைகளுக்குமே இழுபட்டுச் செல்ல நேர்ந்துவிடலாம். வைகோ, நெடுமாறன் வகையறாக்களினதும், புலம்பெயர் சொகுசுக்காரர்களின் ‘புலியிசப்’ பேத்தல்களினதும் உசாரேத்தல்களினால் மேலும் மேலும் மடையர்களாக்கப்பட்டு இன்னும் நாம் ‘ஆதிகாலத்’ தமிழர்களாகவே அடிபட்டுச் செத்துக்கொண்டிருக்க நேரலாம்.

ஹாலிவுட் டிரெய்லர்

 
இந்தப் படத்தை பார்க்காதீங்க...

லைப்பிலுள்ள வாசகத்தை சொல்லிச் சொல்லித்தான் மேற்கத்திய விமர்சகர்கள் ஒரு ஹாலிவுட் படத்தின் டிரவுசரை அக்கு வேறு ஆணி வேறாக கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் படம், 'தி வாரியர்ஸ் வே' பக்கா கொரியன் நேட்டிவிட்டி என்பது விமர்சகர்களின் வயிற்றில் அமிலம் சுரக்க காரணமென்றால், கொரியன் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ஜாங்டன் கண், இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது அவர்கள் பற்களை அழுத்தமாக கடிக்க மற்றொரு காரணம். போதும் போறாததற்கு ஸ்னக்மோ லீ என்ற கொரியன் இயக்குநரே இப்படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார். என்ன, தயாரிப்பாளர் மட்டும் எந்த சாங் சூன் லீ-யும் இல்லை. அதாவது கொரியன் இல்லை. பதிலாக, 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' படத்தை தயாரித்து கல்லாவை நிரப்பிக் கொண்ட அமெரிக்கரான பேரி.எம்.ஆஸ்போர்ன்.

இப்படி கிழக்கத்திய கலைஞர்களை வைத்து மேற்கத்திய தயாரிப்பாளர் ஒரு படத்தை தயாரித்திருப்பதே விமர்சகர்களின் புகைச்சலுக்கு காரணம் என செல்லுலாயிட் அம்மன் முன்னால் கற்பூரம் ஏற்றி சிலர் சத்தியம் செய்கிறார்கள். இதை ஏற்பதும், துறப்பதும் அவரவர் ரசனையை பொறுத்த விஷயம்.

ரைட். கதை?

கருவில் உருவாகும் சிசுவுக்கே தெரிந்த ஒரு கதையில், மகாபாரத இதிகாசத்தின் கிளைக் கதை ஒன்றை மிக்ஸ் செய்தால் வரும் ஒன்லைந்தான், 'தி வாரியர்ஸ் வே' படத்தின் ஒட்டுமொத்த கதையும்.

மார்ஷியல் ஆர்ட்ஸில் கரை கண்ட இரு குழுக்கள் கொரியாவில் மோதுகின்றன. ஒரு குழு ஜெயிக்கிறது. தோற்ற குழுவை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என வெற்றி பெற்ற குழுவின் தலைவர் கட்டளையிடுகிறார். ஆனால், இந்தக் கட்டளையை அக்குழுவின் தளபதி மீறுகிறான். காரணம், தோற்ற குழுவில் எஞ்சி நிற்பது ஒரேயொரு பச்சிளங் குழந்தைதான். அக்குழந்தையை கொல்ல அவனுக்கு மனமில்லை. அதற்காக குழந்தையை அப்படியே விட்டு விட்டாலோ, வேறு யாரவது கொன்று விடுவார்கள்.

எனவே குழந்தையுடன் தப்பித்து மேற்கு அமெரிக்காவுக்கு வருகிறான். அவன் வந்து சேர்ந்த கிராமம் சொல்ல முடியாத சோகத்தில் மிதந்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு வற்புறுத்தியும் யாரும் அவனிடம் சோகத்துக்கான காரணத்தை சொல்லவில்லை. அதே கிராமத்தில் கண்களில் வெறுமை வழிய வாழும் அழகான இளம் பெண்ணுடன் அவனுக்கு நட்பு ஏற்படுகிறது. அவளும் அவனிடம் தன் வெறுமைக்கான காரணத்தை பகிர்ந்து கொள்ளவில்லை. பதிலாக மார்ஷியல் ஆர்ட்ஸில் வித்தகனான அவனிடமிருந்து அக்கலையை கற்றுக் கொள்கிறாள். அவனும் தனது வித்தை எந்த வகையிலாவது அவளுக்கு பயன்பட்டால் சரிதான் என கசடற கற்றுத் தருகிறான்.

ஒன் ஃபைன் மார்னிங், அந்தக் கிராமமே ஏன் சோகத்தில் மிதக்கிறது என்ற காரணம் அவனுக்கு தெரிய வருகிறது. பக்கத்து கிராமத்தை சேர்ந்த வில்லன். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்தக் கிராமத்துக்கு வந்து வயதுக்கு வந்த இளம்பெண்களை தூக்கிச் சென்று வன்புணர்ச்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறான். அடுத்தமுறை வில்லன் வரும்போது உடன் செல்ல வேண்டியவள், அவன் மனம் கவர்ந்த இளம் பெண். அதனால்தான் அந்தப் பெண்ணின் கண்களில் வெறுமை.

இந்த 'கிழக்கத்திய' கதையைத்தான் 'மேற்கத்திய' விமர்சகர்கள் அடித்து, துவைத்து காயப்போடுகிறார்கள்.

ஆனால், லேட்டஸ்ட் டெக்னாலஜியில் சீட்டின் நுனியில் அமர வைக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக் காட்சிகளை பாராட்ட மட்டும் அதே விமர்சகர்கள் தவறவில்லை.

விமர்சகர்களின் பேச்சை மீறி ரசிகர்கள் திரையரங்கு செல்லவும் அதுவேதான் காரணம்!
கே.என்.சிவராமன்                              

Thursday, December 16, 2010

இன்றும் ஒரு தகவல்

சீட்டுக்கட்டு ராஜா  

சூதாட்ட விளையாட்டுகளில் முன்னணியில் இருப்பது. சீட்டு, விளையாட்டு. பழமையான சூதாட்டங்களில் இதுவும் ஒன்று. கி.பி.1300களில் எகிப்தில் இருந்து இங்கிலாந்துக்கு வந்தவைதான் தற்போதைய சீட்டுக்கட்டுகள்.

சீட்டுக்கட்டுகளில் நான்கு ராஜாக்கள் இருப்பார்கள். இதில் ஸ்பேட் ராஜா என்பது டேவிட்டை குறிக்கும், ஹார்ட் ராஜா, சார்லசை குறிக்கும், டயமண்ட் ராஜா, ஜூலியஸ் சீசரை குறிக்கும், கிளவர்  ராஜா, அலெக்சாண்டரை குறிக்கும். 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சீட்டு விளையாட்டில் ராஜாவுக்கே அதிகமாக மதிப்பு இருந்தது. பிரெஞ்சு புரட்சிக்குப்பிறகு ராஜாவைவிட அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்ற சிந்தனை அதிகமானது. அதன் விளைவாக ராஜாவை விட ஏஸ் என்று கூறப்படுகிற 'ஏ' என்ற ஆங்கில எழுத்துக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சீட்டுக் கட்டில் உள்ள கறுப்பு, சிவப்பு படங்கள் இரவையும், பகலையும் குறிக்கும். இதில் ஜோக்கரை கொண்டு வந்து நுழைத்தவர்கள் அமெரிக்கர்கள். 1870-ல் இது நடந்தது.

18,19 -ம் நூற்றாண்டுகளில் சீட்டுக்கட்டுகளின் பின்புறம் விளம்பரம் செய்வது பெரிய வியாபார தந்திரமாக இருந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான கேரிபேக்கர், தனது சொத்து முழுவதையும் சீட்டாட்டம் மூலமே சம்பாதித்தார். 1990-ல் லண்டனில் இருக்கும் மிகப்பெரிய கேசினோ ஒன்றில் நுழைந்தார். கேரிபேக்கர். 15 மில்லியன் பவுண்டுகளை பந்தயம் கட்டி விளையாடினார். ஒரே நேரத்தில் 4 மேஜைகளில் ஒற்றை ஆளாக கேரிபேக்கர் விளையாடி தோற்றுபோனார். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், சிரித்துக்கொண்டே வெளியேறினார். அவரது நடவடிக்கையைப் பார்த்த சூதாட்ட கிளப் அதிர்ச்சியில் உறைந்தது. ஏனென்றால் அன்று அவர் இழந்த பணம் இந்திய கணக்கிற்கு 105 கோடி ரூபாய் ஆகும்.

இதே போல் லாஸ்வேகாசில் உள்ள எம்.ஜி.எம். என்ற கேசினோவுக்கு கேரிபேக்கர் போயிருந்தார். விளையாடத் தொடங்கினார். வெற்றி மீது வெற்றி வந்து சேர தனக்கு மது ஊற்றிக்கொடுத்த ஒரு பெண்ணிற்கு மாளிகை வீட்டை பரிசாக கொடுத்தார். கதவை திறந்து விட்டவருக்கு அவர் கொடுத்த டிப்ஸ், 5 கோடி ரூபாய்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு லண்டனில் 3 வாரங்கள் சூதாடினார். இந்த முறை அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. தோல்விமேல் தோல்வி. 28 மில்லியன் டாலர் நஷ்டம். தனிநபர் ஒருவர் சூதாட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை இழந்தது உலக அளவில் அதிசயமானது. 2004ல் அவர் இறந்தபோது அவரது சொத்து மதிப்பு 5.4 மில்லியன் டாலர். தோற்றாலும் ஜெயித்தாலும் நிலைதடுமாறாத கேரிபேக்கர், சூட்ட உலகில் ஒரு மன்னராகவே வலம் வந்தார்.                             

மாதுளையின் மகத்துவம்!


உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது மாதுளம் பழம். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற பழமாக விளங்கும் மாதுளம் பழத்தின் சாறு சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாதுளம் பழச்சாறு தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக நோய் பெருமளவில் கட்டுப்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதய நோயாளிகளுக்கும் நல்லது என்றும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி மாதுளம்பழம், ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகவும் செயல்படுகிறது என்றும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது.

சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மாதுளம் பழச்சாறு கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில், மாதுளம் பழச்சாறு குடித்த நோயாளிகளுக்கு சிறுநீரகத்தில் மட்டுமின்றி, ஒட்டு மொத்த உடல் பாதுகாப்பு கிடைத்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, December 15, 2010

டாக்டர் ருத்ரன்

'காதல் கல்யாணங்கள் பல சமயங்களில் தோல்வியாக முடிகின்றனவே, ஏன்?' என்று புகழ்பெற்ற மனஇயல் நிபுணரான டாக்டர் ஆர்.கே.ருத்ரனிடம் கேட்டேன்.

'இரண்டு காரணங்கள்தான். பணம், ஜாதி' என்றார் சுருக்கமாக. 'பணம் என்பது புரிகிறது. பட்டண வாழ்கையில் இவனுடைய சம்பளம், அவளுடைய சம்பளம், இவனுடைய நட்புக்கள், அவளுடைய நட்புக்கள் என்று பல பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் ஜாதி எங்கே வந்தது? நகர்புற வாழ்க்கையில் ஜாதியையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுத்தானே காதல் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்? என்று கேட்டேன்.

'நீங்கள் நினைப்பது தப்பு. ஆரம்பத்தில் ஜாதி வித்தியாசங்கள் பெரிதாய்த் தெரியாது. மணந்துகொண்டு இல்லறம் தொடங்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி வித்தியாசங்கள் தோன்றும். பரம்பரை பரம்பரையாக மனசுக்குள் ஊறி வந்திருக்கும் யதார்த்தங்கள் முளைக்க ஆரம்பித்து விசுவரூபம் எடுக்கும். பெற்றோர்களும் உறவினர்களும் அந்த சிறிய தீயை ஊதிவிட்டுப் பெரிதாக்குவார்கள். பல பேர்களின் வாழ்க்கையில் இதைப் பார்த்திருக்கிறேன். ஒரே ஜாதியாக இருந்தால் ஓரளவு பிழைப்பார்கள். வேறு வேறு ஜாதியாக இருந்தால் பிரச்னைதான், என்று அழுத்தமாகச் சொன்னார் டாக்டர்.

பதினைந்து வருஷங்களுக்கு மேலாக டாக்டர் ருத்ரனை எனக்குத் தெரியும். பத்திரிக்கைகளில் ஏராளமாக எழுதியவர். டிவியில் பேட்டிகள் கொடுத்தவர். விவாத அரங்குகளில் பங்கேற்றவர். அவருடன் டெலிபோனில் சில முறைகள் பேசியிருக்கிறேன தவிர நேரடியாகப் பார்த்தது கிடையாது. (என்று நினைக்கிறேன்)

சில வருஷங்களுக்கு முன் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த 'அழகிய தமிழ் மகன்' படத்தில் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் பாத்திரத்தில் சைக்கியாரிஸ்டாகவே நடித்தார் ருத்ரன். விஜய்க்கு அதில் இரட்டை வேடங்கள். குறிப்பிட்ட சில சொப்பனங்கள் பின்னர் அசலாகவே நடக்கின்றன என்பது விஜய்யின் அனுபவம். அதனால் பயம் ஏற்பட்டு மனநல நிபுணரான டைரக்டர் ருத்ரனிடம் சென்று ஆலோசனை கேட்க, 'இஎஸ்பி' எனப்படும் அந்த மனநிலை உண்மையானதுதான் என்றும் கனவின்படி நடப்பது நிச்சயம் என்றும் அவர் விளக்குகிறார்.

தற்கொலைகள் ஏன் நடக்கின்றன என்று ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்திருப்பதைப் படித்ததும் அவரை சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. போனில் தொடர்பு கொண்டு, எப்போது வந்தால் அவருக்கு சௌகரியமாக இருக்கும் என்று கேட்டேன்.

அதிர்ச்சியுடன், 'நீங்கள் என்னைப் பார்க்க வருவதாவது! நானே உங்களைப் பார்க்க வருகிறேன்,' என்று கூறிய டாக்டர் ருத்ரன். இரண்டு வாரங்களுக்கு முன்பு என் இல்லத்துக்கு வருகை தந்தார். கூடவே உமா மகேஸ்வரி என்ற சைக்காலஜிஸ்ட் பெண்மணியும் வந்தார்.

மாலை ஐந்தரை மணி சுமாருக்கு வந்த டாக்டர் ருத்ரன் ஒன்பதரை மணி வரைப் பல விஷயங்களைப் பற்றி சரளமாகப் பேசிக் கொண்டிருந்தார். புராண காலத்து மகரிஷிகளைப் போல கம்பீரமான தாடி. இரு கைகளாலும் அடிக்கடி மாற்றி மாற்றி அதை உருவிக்கொண்டு பேசுகிறார். கண்களில் நல்ல தீட்சண்யம். கூர்மையாக நம்மைப் பார்த்தபடி உரையாடுகிறார். மனித உறவுகள் செம்மைப்பட வேண்டுமானால் eye - contact  மிக முக்கியம் என்பது அவர் வலியுறுத்தி சொல்லும் விஷயங்களில் ஒன்று. கண்ணுக்கு கண் நேரே பார்த்துப் பேசினால் உள்ளத்தில் உள்ளது உள்ளபடி வெளிப்படும் என்கிறார்.

சிறு வயது முதல் தன்னிடம் தனியான அன்பு செலுத்தி, டாக்டராகப் பட்டம் பெறும்படி வளர்த்தவர் தன் அத்தைதான் என்று நன்றி விசுவாசத்துடன் தெரிவித்த டாக்டர் ருத்ரன், தான் வழிபடும் தெய்வம் காமாட்சி அம்மன் என்கிறார். நெற்றியில் பளிச்சென்று துலங்கும் சிவப்புக் குங்குமம் அதற்கு சான்று கூறுகிறது. காலம் சென்ற டாக்டர் மாத்ருபூதம்தான் தனக்கு குரு என்றார். (மாத்ருபூதம் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் ருத்ரன் சீரியசான மனிதராக இருக்கிறார்).

பேசிக் கொண்டிருந்தபோதுதான் நான் முதலில் குறிப்பிட்ட காதல் கல்யாணப் பிரச்சனை வந்தது. குடும்பத்தில் எதிர்ப்பு இருப்பதே இவர்களில் பெரும்பாலோருக்குப் பிரச்சனை. பையனை வெளியே அனுப்பிவிட்டுப் பெண்ணிடம் தனியே விசாரிப்பேன். ஏன் அவர்களுக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று விவரத்தைக் கேட்டு வைத்துக் கொண்டு பிறகு பையனைக் கூப்பிட்டுப் பேசுவேன். சிக்கல் எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெளிவாகிவிடும்' என்றார் டாக்டர்.

ஆனால், வெறும் விரக்தி, தோல்வி மனப்பான்மை, கசப்புணர்ச்சி - இப்படிப் பல காரணங்களுக்காக ஆலோசனை கேட்பவர்களும் உண்டு. வெறுமென பேசி, விவாதித்து, ஆலோசனை கூறி அனுப்புவது பழைய நடைமுறை. இப்போது அப்படி இல்லை. ஒவ்வொரு விதமான மன நோய்க்கும் ஒவ்வொரு விதமான மாத்திரை மருந்துகள் வந்திருக்கின்றன. தக்கபடி ப்ரிஸ்கிருப்ஷன் தருகிறேன் என்கிறார் டாக்டர் ருத்ரன். ஆனால், அவற்றை சரியானபடி உட்கொள்ளாவிட்டால் பலன் இருக்காது என்றவர், தன் நெஞ்சைத் தொட்ட நிகழ்ச்சி ஒரு தாயைப் பற்றியது என்றார். வளர்த்து பெரியவனான மகனுக்கு மனச் சோர்வு ஏற்பட்டிருக்கிறது என்று இவரிடம் அழைத்து வந்தாராம் அந்தத் தாய். இவரும் மருந்துகளைத் தந்தாராம். ஆனால் அவன் சில நாட்களில் இறந்து விட்டான். பின்னர் அந்த அம்மா இவரைப் பார்க்க வந்தார். தகுந்த சிகிச்சை தரவில்லை என்று சண்டை பிடிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தவருக்கு ஆச்சர்யமான அனுபவம். என் பிள்ளை நீங்கள் கொடுத்த மருந்துகளை சரியாகவே சாப்பிடவில்லை. அதனால் தான் இறந்துவிட்டான். இப்போது எனக்கு அவனைப் போலவே மனச்சோர்வு ஏற்பட்டிருக்கிறது. மருந்து கொடுங்கள், ஒழுங்காக சாப்பிடுகிறேன்' என்றாராம் அந்தத் தாய்.

இந்தத் தலைமுறை இளைஞர்கள் எல்லாவற்றிலும் வேகமும் அவசரமும் காட்டுகிறார்கள் என்றும், அது தவறு என்றும் டாக்டர் ருத்ரன் அபிப்பிராயப்படுகிறார். 'உடனே படிப்பு, உடனே வேலை, உடனே வெளிநாடு, உடனே எக்கச்சக்க சம்பளம் என்று அவசரம் காட்டுவது, வாழ்க்கையைப் பற்றிய விரிவான, ஆழமான பார்வையைத் தடுக்கிறது' என்கிறார்.

நாலைந்து உறவினர்களுடன், சென்னை கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயன் நகரில் ஆலோசனை க்ளினிக் நடத்தி வருகிறார் ருத்ரன். (ஃபோன்: 24811140, 23727738). ஆனால் குறிப்பிட்ட சில கிழமைகளில் மட்டும்தான் அவரை சந்திக்க முடியும்.        
ரா.கி.ரங்கராஜன்                              

சாய்ந்த கோபுரம் நிமிர்ந்த கோபுரமாகியது

த்தாலி நாட்டில் உள்ள பைசா நகரத்து கோபுரம் சாய்ந்த கோபுரமாக இருந்தது. 183 அடி உயரம் உள்ள இந்த கோபுரம் ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து 1990-ம் ஆண்டு 15 அடிக்கு சாய்ந்தது. இதற்கு மேலும் சாய்ந்தால் இது இடிந்து விழுந்து விடும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதை நிமிர்த்துவதற்காக 143 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. 8 ஆண்டுகள் பழுது பார்க்கும் பணிகள் நடந்தன. இதன்பிறகு அந்த கோபுரம் 1838-ம் ஆண்டு இருந்த நிலைக்கு கொண்டுவரப்பட்டது. இன்னும் 200 ஆண்டுகளுக்கு இந்த கோபுரத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று இந்த கோபுரத்தை பராமரித்து வரும் ஒபரா பிரமாசியால் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Monday, December 13, 2010

உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி

மிழ் சினிமாக்களையே மிஞ்சும் அளவுக்கு இந்த புத்தகத்தில் ஏகப்பட்ட 'மெசேஜ்' கள் இருக்கின்றன!

பீர்பால் கதைகள் தெரியும்தானே? பீர்பால் கதைகளில் மதியூகம், விவேகத்துடன், அனுதினம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சமாளிக்கவல்ல வியூகங்களும் இருக்கின்றன. அதை அருமையாக உணர்த்துகிறது 'உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி' (Solve Your Problems - The Birbal Way) புத்தகம். ஒரு கதை சொல்லி, அதன் பிரச்சனை சொல்லி, அதை பீர்பால் தீர்க்கும் விதம் சொல்லி, அதில் இருந்து நமக்கான பாடம் சொல்லி... அடித்து இருக்கிறார்கள் ஆசிரியர்கள் அனிதா மற்றும் லூயிஸ் வாஸ்.

நூலாசிரியர்கள்  : அனிதா மற்றும் லூயிஸ் வாஸ்.
மொழி : தமிழ் மற்றும் ஆங்கிலம்
வெளியீடு : புஸ்தக் மஹால்
பக்கங்கள் : 200
விலை : ரூ. 88 /- (தமிழ்) , ரூ 110 /- (ஆங்கிலம்)
     

Saturday, December 11, 2010

வீரப் புளுகுகளை விலக்குதலும் வாழ்வின் வழிக்கு நகருதலும்

ஜெயமோகன் உரையொன்றில் சொல்லியிருக்கும் ஒரு சீனக் கதை.

கொடுமையே உருவான செங்கிஸ்கான் சீனா மீது படையெடுத்துச் சென்றான். குதிரைப் படையினர் துரத்த குழந்தைகளை அள்ளிக்கொண்டு ஓடும் பெண்களைக் கண்டான். இடையில் ஒரு குழந்தையைத் தூக்கி மூத்த குழந்தையை ஓடவிட்டு ஓடிய ஒரு தாயை அவன் கண்டான். ஓடிய குழந்தை காலிடறி விழுந்தது. இடையிலிருந்த குழந்தையைக் கைவிட்டு பெரிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் ஓடினாள்.
அவளை இழுத்துவரச் சொன்னான் செங்கிஸ்கான்.

“நீ விட்டுவிட்டு ஓடியது உன் பக்கத்துவீட்டுப் பெண்ணின் குழந்தையைத்தானே? உண்மையைச் சொல்” என்றான் மன்னன் கத்திமுனையில்.

“இல்லை அரசே! நான் விட்டுச் சென்றதுதான் என் குழந்தை. இது இறந்துபோன பக்கத்து வீட்டுக்காரியின் குழந்தை. அவளுக்கு நான் வாக்குறுதி அளித்திருந்தேன்” என்றாள் அப்பெண். “என் குழந்தை கடவுள் அளித்தது. இந்தக் குழந்தையை அளித்தது தர்மம். கடவுளை விடப் பெரியது தர்மம்.”

“தாயே” என்று செங்கிஸ்கான் தலைவணங்கினான். “இந்த மண்ணை நான் ஒருபோதும் வெல்ல முடியாது” என்று அவன் திரும்பிச் சென்றதாகக் கதை.

இந்த அறத்தை தர்மத்தை எங்கோ நாம் தவற விட்டிருக்கிறோம். மற்ற இனத்தவரை, நாம் நம்பிய விடுதலைக்கு தடையாக இருப்பார்கள் என்று கருதியவர்களை போட்டுத் தள்ளிவிட்டு நம் வாழ்வை ஏற்படுத்திக் கொள்வதில் முனைப்புடனிருந்தவர்கள் நாம். நமது விடுதலையின் பெயரால் சாதாரண சனங்களும் அப்பாவிகளும் கொல்லப்படுவதை எதிர்க்காதிருந்தவர்கள். அதற்குரிய நியாயமாக நம்முடைய இழப்புகளை இறப்புகளைச் சொல்லிச் சமாதானமடைந்து கொண்டவர்கள். நாம் எப்படி வெல்லப்பட முடியாதவர்கள் ஆகமுடியும்?

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உதயம்!

காலை நேரம்...
கண் விழித்ததும் தினசரி காலண்டரை பார்க்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் ஒருநாள் கழிந்து விட்டது. பலரும் காலண்டர் தாளை படக்கென்று கிழித்துக் கசக்கிப் போடுவார்கள். எனக்கோ கிழித்துப் போட மனமில்லை. காரணம் அந்த நாளை நான் அர்த்தத்தோடு வாழ்ந்திருக்கிறன். அந்த நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளையும் அர்த்தத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

காலண்டரில் புதிய நாளைப் பார்க்கிறேன்.

டிசம்பர் 11 மகாகவி பாரதியின் பிறந்தநாள் கண்ணில் படுகிறது. பாரதி... அந்த முண்டாசுக் கவிஞன்தான் முடங்கிக் கிடந்த தமிழ்ச் சொற்களுக்குப் புதிய ரத்த ஓட்டம் பாய்ச்சியவன். எழுத்துக்கும், பேச்சுக்கும் மத்தியில் சுவர் எழுப்பிக் கொள்ளாத சுத்தக் கவிஞனவன். சுயமரியாதைக் கவிஞனவன். தாலாட்டுப் பாடித் தூங்க வைக்காமல் திருப்பள்ளியெழுச்சி பாடி சோம்பல் மனிதர்களின் உறக்கம் போக்கியவன்.

'எண்ணுவது உயர்வு, ஏறுபோல் நட, நன்று கருது, நாளெல்லாம் வினை செய்' என்பன போன்ற தன்னம்பிக்கைச் சிந்தனைகளை புதிய ஆத்திச்சூடியில் பதிவு செய்த மகாகவியின் பிறந்த நாள் (இன்று).
ஒவ்வொரு தேதியும் இப்படி ஏதேனும் ஒரு சேதியை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு காலைப் பொழுதும் வாழ்க்கைக் கதவுகளைத் திறந்து வைத்து வரவேற்கிறது.

இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் ஒரு ரகசியம் மறைந்திருக்கின்றது. காலை உதயம் உன்னதமானது. அதுவும் அதிகாலை உதயம் ஆனந்தம் தருவது.

ஒரு காலை நேரம். திரைப்படத்தின் வழி திசைகளெல்லாம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் சத்யஜித்ரே. எட்டு வயதாக இருக்கும்போது தாகூரின் சாந்திநிகேதனத்தைப் பார்ப்பதற்காகத் தன் தாயாருடன் சென்றார் அவர். அப்போது ஒரு நோட்டு புத்தகத்தை தாகூரிடம் நீட்டி, "உங்களுக்குப் பிடித்த ஒன்றை எழுதிக் கொடுங்கள்'' என்று வேண்டினார்.

'நான் உலகம் முழுவதும் சுற்றி வந்தேன். நதிகளையும், மலைகளையும் கண்டு வந்தேன். அதற்காக மிகுதியான பணத்தைச் செலவழித்தேன். ஆனால் என் வீட்டு வாசலுக்கு அருகில் முளைத்திருக்கும் ஒரு புல்லின் நுனியில் படர்ந்திருக்கும் பனித்துளி ஒன்றில் உலகம் தெரிவதைக் காண மறந்தேன்' என்று எழுதிக் கொடுத்தார்.

ஆம்! உலகம் விடிகாலையின் பனித்துளியில் இருக்கின்றது என்பதை எத்தனைபேர் பார்த்திருப்போம்? அந்த அழகின் சிரிப்பில் எத்தனை பேர் மனதைப் பறிகொடுத்திருப்போம்? ஒவ்வோர் உதயத்திலும் ஓர் அழகு இருக்கிறது.

இன்னொரு உதய நேரம்... முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம். அவர் மனிதநேயத்தின் இருப்பிடம். அவர் சொன்ன ஒரு செய்தி-

ஒருநாள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தில் ஒரு மல்லிகைக் கொடியை நட்டு வைத்தேன். அது நன்றாக வளர்ந்து விட்டது. பூக்களும் பூக்கத் தொடங்கின. ஒருநாள் நான் நடந்து வந்தபோது அந்தச் செடி கீழே சாய்ந்து பாதையில் கிடந்தது. நான் அதன் மேல் கால் வைக்க இருந்தேன். நல்லவேளை கவனித்து விட்டேன். அப்படியே திரும்பி விட்டேன். அப்போது எனக்கு ஒரு கவிதை தோன்றியது...  

சிறிய பூ
பெரிய பூவிடம் கேட்டது
நாம் ஏன் மலர்கிறோம்
பெரிய பூ சொன்னது
சூரியன் உதிக்கிறது
மயில் ஆடுகிறது
குயில் பாடுகிறது
மழை பெய்கிறது
அதைப் போலத்தான்
நாமும் மலர்கிறோம்
இது இயற்கையின் விதி
நம்மைப் பார்த்து
மனிதன் மென்மை அடைகிறான்
அதற்காகத்தான்
நாம் மலர்கிறோம்.

ஆம்! இப்படித்தான் ஒவ்வொரு காலை உதயமும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவதற்கு ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது. உதயத்தில் மலரும் பூக்களிடமிருந்துகூட கற்றுக் கொள்வதற்கான ஓர் அருமையான பாடம் இருக்கின்றது. மென்மையாக இருப்பதற்கான பாடம் இருக்கிறது.
 பேராசிரியர் க.ராமச்சந்திரன்

Friday, December 10, 2010

ஹாலிவுட் டிரெய்லர்

கதையுலகின் பிரம்மா - ஷேக்ஸ்பியர்

ஒரு படைப்பை வாசித்தால் போதும். நெகிழ வைக்கும் காட்சி வேண்டுமா? ஷேக்ஸ்பியரை புரட்டினால் போதும். பஞ்ச் டயலாக் வேண்டுமா? ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளை மனப்பாடம் செய்தால் போதும்.

ஆனால், 'கொஞ்சூண்டு' சாமர்த்தியம் வேண்டும். ராஜா - ராணி காஸ்ட்யூமுக்கு பதில் ஜீன்ஸ் பேன்ட், ஃபராக் அணிவிக்க வேண்டும். ராஜ்ஜியங்களுக்கு பதில் எம்என்சி கம்பெனியை அட்டாச் பண்ண வேண்டும். கத்தி சண்டைக்கு பதில் நவீன ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும். மற்றபடி சூழல், உணர்வு, உணர்ச்சி... அனைத்தும் டிட்டோ.

ராயல்டி...? மூச். கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார். எனவே ராயல்டி கேட்க மட்டுமல்ல, கேஸ் போடவும் யாரும் இல்லை. தைரியமாக இன்ஸ்பையரும் ஆகலாம். காப்பியும் அடிக்கலாம்.

அதனால்தான் உலகெங்கும் அனைத்து மொழிகளுமாக சேர்த்து இதுவரை 420 திரைப்படங்கள் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை மட்டுமே மையமாக வைத்து வெளிவந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை அதிகாரபூர்வமாக ஷேக்ஸ்பியரிலிருந்து இன்ஸ்பியர் ஆகியிருக்கிறோம் என அறிவிக்கப்பட்டதிலிருந்து தொகுக்கப்பட்டவை. இதி தவிர பகிரங்கமாக அறிவிக்காமல் ஷேக்ஸ்பியரை களவாண்ட படைப்புகள் தனி. அது லட்ச்சத்தை தொடும்.

உலகில் வேறெந்த படைப்பாளிக்கும் கிடைக்காத அங்கிகாரம் இது. அதனால்தான் ஷேக்ஸ்பியர் அமுதசுரபி. அதனால்தான் அவர் கதையுலக பிரம்மா.

இந்த வரிசையில் லேடஸ்ட்டாக இணைந்திருப்பது 'தி டெம்பெஸ்ட்' ஹாலிவுட் திரைப்படம். உண்மையில். 'தி டெம்பெஸ்ட் 2010' என்று சொல்ல வேண்டும். காரணம், மவுனப் படங்கள் கோலோச்சிய காலத்தில், 1911ல், ஒரு 'தி டெம்பெஸ்ட்' படம் வெளி வந்திருக்கிறது. பிறகு, 1979ல் ஒன்று. அப்புறம் 1982 ல் மற்றொன்று. இவை அனைத்தின் பெயரும் 'தி டெம்பெஸ்ட்' தான். இவையனைத்துமே ஷேக்ஸ்பியர் எழுதிய 'தி டெம்பெஸ்ட்' நாடகத்தின் பிரதிபலிப்புதான்.

கதை? சகோதரியின் கணவனை கொன்றுவிட்டு நாட்டை அபகரிக்கிறான் கயவன். தன் குழந்தையுடன் தப்பித்துச் செல்லும் சகோதரி, மனித மாமிசத்தை புசிக்கும் மனிதர்கள் வாழும் தீவில் அடைக்கலமாகி, அவர்களை திருத்தி, தன் மகளை வளர்த்து ஆளாக்கி, சகோதரனை வீழ்த்தி இழந்த ராஜ்ஜியத்தை எப்படி கைப்பற்றுகிறாள் என்பதுதான் ஒன்லைன்.

இந்தாண்டு இறுதியில் வெளிவர இருக்கும் 'தி டெம்பெஸ்ட்' ஹாலிவுட் படத்தின் கதை இதிதான். ஆனால், ஒரிஜினலாக ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது தந்தை. அந்த கதாப்பத்திரத்தை மட்டும் தாயாக படத்தில் மாற்றியிருக்கிறார், திரைக்கதை எழுதி இயக்கம் ஜூலி டேமர். இதற்கு அவர் சொல்லும் காரணம் சுவாரஸ்யமானது. "அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை ஏற்று நடிக்கும் அளவுக்கு ஆண்கள் இப்போதில்லை. அதனால்தான் பெண்ணாக மாற்றி, பழம்பெரும் நடிகையான ஹெலன் மிர்ரனை நடிக்க வைத்தேன்" என்கிறார்.

இந்தப் படத்தை தயாரிக்கும் ஐவரில் ஜூலியும் ஒருவர். 57 வயதாகும் இவர், நாடகத்தை திரைப்படமாக்குவதில் கில்லாடி, சக்கைப் போடு போட்ட அனிமேஷன் படமான 'தி லயன் கிங்' படத்தை இயக்கியது இவர்தான். அதுமட்டுமல்ல, டோனி விருதை பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான்.

வாருங்கள், டேட்டஸ்ட் டெக்னாலஜியில் ஷேக்ஸ்பியரின் படைப்பை கண்டு களிப்போம்.

கே.என்.சிவராமன்