Monday, August 3, 2009

இன்றைய பத்திரிகைச் செய்திகள்

Justify Fullதமிழக 'சிலந்தி மனிதன்' சாதனை

செங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல், விறு, விறுவென ஏறியும், தலைகீழாக இறங்கியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார், தமிழகத்தை சேர்ந்த வாலிபர்.

அவரது பெயர் ஜோதிராஜூ. அவர் 300 அடி உயரம் வரையிலான செங்குத்தான சுவரில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் கைகளை ஊன்றியபடி சிலந்தி போல் மேலும், கீழும் ஏறி இறங்கி அனைவரது புருவத்தையும் உயர செய்கிறார்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள கோட்டைகளை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் இந்த சிலந்தி மனிதனின் சாகசத்தை பார்த்து அதிசயித்து போகிறார்கள். அவரது சாகசத்துக்கு சுற்றுலா பயணிகள் கொடுக்கும் பரிசுகளும், அன்பளிப்புகளும் ஏராளம். அவைதான் அவருக்கு ஊக்க மருந்து.

இந்த சிலந்தி மனிதன் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சித்ரதுர்காவில்.

இவரது சாதனைக்கு பின்னால் சோதனையும் புதைந்து இருக்கிறது. சிறுவனாக இருந்தபோது, ஜோதி ராஜூவுக்கு படிப்பு ஏறவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். பிறகு கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது விரக்தியின் உச்சத்துக்கு சென்று, தற்கொலை முடிவை தேடினார். அதில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவே இப்போது சாதனையாளராக உருவெடுத்து இருக்கிறார்.

கட்டிட தொழிலாளியாக இருந்த ஜோதிராஜூவுக்கு சிலந்தி மனிதன் ஆகும் வினோத ஆசை எப்படி ஏற்பட்டது என்று கேட்டால், 'நான் வேலை செய்து கொண்டிருக்கும்போது, குரங்குகள் வந்தால் அவற்றை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து விடுவேன். மரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும் அவற்றின் குறும்பு தனம் எனக்கு பிடிக்கும். அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நாமும் ஏன் அவ்வாறு சுவரில் ஏறி இறங்க முடியாது என்று. அதன் விளைவுதான் நான் சிலந்தி மனிதன் ஆன கதை' என்று சொல்லி முடித்தார், ஜோதிராஜூ

குரங்கிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ஜோதிராஜூவுக்கு அந்த பகுதி பொதுமக்கள் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? குரங்கு ராஜா.

அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம், குரங்கு ராஜா என்று கேட்டால்தான் தெரிகிறது. அந்த அளவுக்கு பிரபலமாகி விட்ட ஜோதிராஜூவிடம் வெற்றிக்கான ரகசியம் பற்றி கேட்டால், '4 ஆண்டுகளுக்கு முன்பு நான் சாதாரண மனிதன். அப்போது நான் சுவரில் ஏற பயிற்சி எடுத்தபோது ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் நான் சுவர் ஏறுவதை பார்த்ததும், இன்னொரு முறை ஏறுங்கள் என்று சொல்லி கை தட்டி என்னை உற்சாகப்படுத்துவார்கள். அந்த ஊக்கமும், கைதட்டலுமே எனது அவநம்பிக்கையை போக்கி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது' என்றார்.

அவரிடம் எதிர்கால லட்சியம் குறித்து கேட்டால், 'எனக்கு உலகளவில் சிறந்த சிலந்தி மனிதனாக உருவாக வேண்டும் என்பதே லட்சியம். இதற்காக தற்போது மும்பையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்' என்று கூறிய ஜோதிராஜூஅருகில் இருந்த சுவரில் விறு, விறுவென வேகமாக ஏறினார்.

***********************************************************************************************************************************

தமிழர்கள் முகாமில் சக்தி அம்மா நிவாரண உதவிகளை வழங்கினார்

லங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, ஹெலிகாப்டரில் சென்று சக்தி அம்மா உதவி பொருட்களை வழங்கினார்.

வேலூர் திருமலைக்கோடியில் உள்ள நாராயணிபீட சக்தி அம்மா ஆன்மிக பணியுடன் சமுதாய பணியையும் செய்து வருகிறார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சக்தி அம்மாவை தரிசனம் செய்ய வந்திருந்த சர்வதேச சேவை அமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் மேட் என்பவரிடம் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருந்து மற்றும் அத்தியாவசியமான உதவிகளை செய்யுமாறு சக்தி அம்மா கோரினார். அதன்படி அமெரிக்காவில் இருந்து 5 டன் மருந்து பொருட்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் நாராயணி பீடம் மூலமாக 10 ஆயிரம் லுங்கிகள், சேலைகள் சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அத்துடன் 30 டன் எடையுள்ள கோதுமை மாவு உள்பட உணவுப்பொருட்களும் இலங்கையிலேயே கொள்முதல் செய்து லாரிகள் மூலம் அங்குள்ள முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த உதவி பொருட்களை முகாம்களில் உள்ளவர்களுக்கு நேரடியாக வழங்க சக்தி அம்மாவுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியது.

அதன்பேரில் சக்தி அம்மாவுடன் நாராயணி பீட நிர்வாகிகள் கடந்த 30-ந் தேதி கொழும்பில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வவுனியா மாவட்டம் செட்டிக்குளத்தில் உள்ள முகாமிற்கு சென்றனர்.

பின்னர் முகாமில் இருந்தவர்களுக்கு சக்தி அம்மா, உதவிப்பொருட்களை வழங்கினார். தனது கையால் வழங்கிய உதவிப்பொருட்கள் போக மீதம் இருந்த பொருட்களை இலங்கை ரத்தினபுரா மாகாணத்தின் முதல்-மந்திரி மஹிபாலா ஹீரத் மற்றும் சுகாதார செயலாளர் அர்தூலக் கந்திலியே ஆகியோரிடம் சக்தி அம்மா ஒப்படைத்தார்.

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வேலூர் திரும்பிய சக்தி அம்மா நேற்றுமாலை நிருபர்களை சந்தித்தபோது, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தான் உதவி செய்தது பற்றியும், அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றியும் விளக்கிக் கூறினார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழர் முகாமில் எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் என்ன நிலையில் உள்ளனர். உங்களிடம் என்ன கூறினார்கள்?

பதில்:- சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் நல்ல நிலையில்தான் உள்ளனர். இலங்கையில் அவர்கள் எங்கெங்கு வசித்தார்களோ அங்கே செல்ல விருப்பப்படுகிறார்கள்.

கேள்வி:- முகாம்களில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா?

பதில்:- நன்றாகவே இருக்கின்றன.

கேள்வி:- பிரபாகரன் உயிருடன் இருக்கிராறா?

பதில்:- தெரியவில்லை.

கேள்வி:- இலங்கை அதிபரை ஏன் சந்திக்கவில்லை?

பதில்:- அரசியல் பயணமாக நாங்கள் செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சென்றோம். செய்தோம், திரும்பினோம்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.


No comments: